Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
170-க்கு 171 மதிப்பெண்கள் 'சாத்தியமே'- தந்தையின் ஆசையை நிறைவேற்றிய ஐஏஎஸ் அதிகாரி

அன்கூர் கார்க் | பட உதவி: அவரின் ஃபேஸ்புக் பக்கம்.
இந்திய ஐஏஎஸ் அதிகாரியான அன்கூர் கார்க், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 'மேக்ரோ எகனாமிக்ஸ்' படிப்பின் கடைசித் தேர்வில் 170-க்கு 171 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
டெல்லி ஐஐடியின் முன்னாள் மாணவரான கார்க், 2002-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆனார். ஆர்வத்தின் காரணமாக ஹார்வர்ட் பல்கலை.யில் 'மேக்ரோ எகனாமிக்ஸ்' படித்துவந்தார். அதில் 'மூலதன உருவாக்கம் மற்றும் வளர்ச்சி' என்னும் தேர்வில் 170-க்கு 171 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதுகுறித்துத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்க், ''என்னுடைய அப்பா, நான் பள்ளியில் படிக்கும்போது தேர்வில் 10-க்கு 10 மதிப்பெண்கள் பெற்றால் போதாது. எப்போதும் 10-க்கு 11 மதிப்பெண்கள் பெற முயற்சிக்க வேண்டும் என்பார்.
என்னுடைய மாணவப் பருவத்தின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன். கடைசிப் பரீட்சையில் 170-க்கு 171 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். உச்சகட்ட மகிழ்ச்சியாக ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜெஃப்ரி ஃப்ராங்கல் இதில் கையெழுத்து போட்டுள்ளார்.
இது உங்களுக்காகத்தான் அப்பா!'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கார்க் இணைத்துள்ள புகைப்படத்தில் 4 பாடங்களில் தனித்தனியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்தமாக 101 சதவீதம் என்றும், ஒட்டுமொத்தமாக சிறப்பான செயல்திறன் என்றும் ஜெஃப்ரி பாராட்டியுள்ளார்.

ஜெஃப்ரி ஃப்ராங்கல், ஹார்வர்டில் பணியாற்றும் சர்வதேச முன்னணிப் பொருளாதார பேராசிரியர் ஆவார்.
இளம் வயதிலேயே ஐஏஎஸ் ஆன அன்கூர் கார்க், 22 வயதில் ஐஏஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
170-க்கு 171 மதிப்பெண்கள் அளிப்பதும் பெறுவதும் எப்படி சாத்தியம் என்பது தெளிவாகக் குறிப்பிடவில்லை.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28

கிராமத்து சமையல், பாரம்பரிய சமையல் என வெவ்வேறு வகையான யூடியூப் வீடியோக்கள் பிரபலமாகிவரும் நிலையில், ஹேமா சுப்பிரமணியத்தின் சமையல் வீடியோக்கள் தனித்துக் கவனம் ஈர்க்கின்றன. சிலையைச் செதுக்கும் நேர்த்தியோடு கச்சிதமாகச் சமைக்கிறார் ஹேமா.
வீட்டில் உள்ள பொருட்களைக்கொண்டே எளிய முறையில் அற்புதச் சுவையில் உணவு வகைகளைச் சமைத்துவிடுவது ஹேமாவின் சிறப்புகளில் ஒன்று. இதுவரை 1500-க்கும் மேற்பட்ட இந்திய, அயல்நாட்டு உணவு வகைகளைச் செய்து ஃபேஸ்புக்கில் வீடியோவாகப் பதிவேற்றியிருக்கிறார். இவருக்கு முப்பது லட்சம் பார்வையாளர்கள் இருக்கின்றனர்!
சாப்பிட மட்டும்தான் தெரியும்
விதவிதமான உணவு வகைகளைச் சமைத்து அசத்தும் ஹேமா, திருமணத்துக்கு முன்புவரை சமையலறை பக்கமே சென்றதில்லையாம். “கல்யாணம் முடிந்த கையோடு கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன். அப்போதுகூட அம்மா எழுதிக்கொடுத்த சமையல் குறிப்பை வைத்து ஓரளவு சமாளித்துவிடுவேன்” என்று சொல்லும் ஹேமா, ஒரு முறை அம்மாவிடம் சமையல் குறிப்பு கேட்டு பிரியாணியைச் சமைத்து முடிக்கவே நாலு மணி நேரம் ஆகிவிட்டதாம்.
கணவரால் கிடைத்த வாய்ப்பு
வெளிநாட்டு சேனல்களில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகள்தாம் ஹேமாவின் கவனம் சமையல் மீது திரும்பக் காரணம். “சைவம், அசைவம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாவிதமான உணவையும் சாப்பிடுவேன். எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள உணவைச் சுவைத்துவிடுவேன். நட்சத்திர ஹோட்டல் முதல் சாலையோர உணவுக்கடைவரை எல்லா இடங்களிலும் சாப்பிடுவேன்.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி களைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். எப்படி அவர்களால் மட்டும் இவ்வளவு அருமையாகச் சமைக்க முடிகிறது என நினைப்பேன். பின்னர் சென்னைக்கு மீண்டும் வந்தபோது என் கணவர் அவரது மென்பொருள் நிறுவனத்தின் வீடியோவுக்காக என்னைச் சமைக்கச் சொன்னார். அந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதற்காக ஒப்புக்கொண்டேன்” என்று சொல்லும் ஹேமா, முதன்முதலில் பாவ்பாஜியைச் செய்திருக்கிறார்.
ஹேமா’ஸ் பிரவுனி
‘ஹேமா’ஸ் பிரவுனி’ என்ற பெயரில் சென்னையில் உள்ள பிரபல சூப்பர் மார்கெட், ஹோட்டல்களுக்கு வீட்டில் செய்த பிரவுனி கேக்குகளை விற்பனை செய்துவருகிறார். வீட்டின் மேல்தளத்தில் படப்பிடிப்பு நடக்கும் அறைக்குள் நுழைந்ததுமே கோக்கோவின் வாசம் நாசியை நிறைக்கிறது. “அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த பிறகு ஏதாவது சுயமாகத் தொழில் தொடங்க நினைத்திருந்தேன். அப்படித் தொடங்கியதுதான் பிரவுனி கேக் தயாரிப்பு.

இதற்காக சென்னையில் எங்கெல்லாம் பிரவுனி கேக் கிடைக்கிறது என ஒரு சின்ன சர்வே எடுத்தோம். பத்து வருஷத்துக்கு முன்னாடி பிரவுனி கேக் சென்னையில் பிரபலமாக இல்லை. இதனால் தைரியமாக இந்தத் தொழிலில் இறங்கினேன். கேக் தயாரிப்பில் உதவியாக இருந்தவர்கள் எல்லாம் வேலையைவிட்டு நின்றுவிட, ஆர்டர் எடுப்பது, பிரவுனி தயாரிப்பது, டெலிவரி கொடுப்பது எல்லா வேலைகளையும் நானே செய்தேன். அதுதான் நான் சுயமாகப் பலவற்றைக் கற்றுக்கொள்ளும் தருணமாக இருந்தது; என் தன்னம்பிக்கையும் அதிகரித்தது” என்கிறார் ஹேமா சுப்பிரமணியன்.
கடந்த பத்து வருடங்களாக ‘ஹோம் குக்கிங்’ என்ற பெயரில் சமையல் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். ஆனால், பேஸ்புக்கில் தனியாகப் பக்கம் தொடங்கிய பிறகே வீடியோக்கள் பிரபலமடையத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார். ஏராளமான சமையல் வீடியோக்களைப் பதிவேற்றியிருந்தாலும் ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி வீடியோதான் தன்னைப் பிரபலமாக்கியது என்கிறார் அவர்.
“அந்த வீடியோவை மட்டும் மூன்று லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதேபோல் பச்சைப் பயறு இட்லி, தானிய வகைகளில் செய்யப்படும் உணவு வகைகளும் பலரைச் சென்றடைந்துள்ளன. ஃபேஸ்புக் நிறுவனம் தங்களுடைய இணைய வீடியோவால் ஒருவரால் சாதிக்க முடியும் என்பதற்கு என்னை உதாரணமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தினமும் எல்லோரும் செய்கிற ஒரு வேலையை வீடியோவாக வெளியிட்டால் எடுபடுமா என யோசித்தேன். ஆனால், அதில் புதுமை, எளிமை, குறைந்த நேரம் ஆகியவற்றை அடித்தளமாகக்கொண்டு செயல்பட்டேன். அது எனக்கு வெற்றியைத் தந்திருக்கிறது” என்கிறார்.
செட்டிநாடு சிக்கன் குழம்பு, மீன் பிரியாணி, காளான் புலவ், பரோட்டா, மட்டன் பெப்பர் சுக்கா, பனீர் மிளகு கிரேவி, ஹோட்டல் சாம்பார், காலா ஜாமூன், பிரெட் ரவா கேசரி, மலாய் லட்டு என ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகளைச் செய்யக் கற்றுத்தரும் ஹேமா சுப்பிரமணியன் இதுவரை எந்தச் சமையல் கலைஞரிடமும் சமையல் கற்றுக்கொள்ளவில்லை!
“எல்லாவகையான சமையலையும் வீட்டிலேயே செய்ய முடியும் என்பதுதான் என் பாலிசி. ஒரு சமையலைப் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்வதைவிடப் பார்த்துவிட்டுச் செய்வது எளிது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தனியாகச் சமையல்செய்து கஷ்டப்படுகிறவர்களும், சமையல் கற்றுக்கொள்ளத் தொடங்கும் பெண்களும் என் சமையல் வீடியோக்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன என்கிறார்கள்.
ஒரு சிலர் சமையல் வீடியோக்களை எடுத்து இரண்டு, மூன்று வருடத்திலேயே நிறுத்திவிடுவார்கள். ஆனால், சாதிக்க வேண்டும் என்ற உந்துதல்தான் என்னால் இத்தனை வருடங்கள் கடந்தும் இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடிந்துள்ளது” என்கிறார் ஹேமா.
ஹேமா சுப்பிரமணியத்தின் சமையல் வீடியோக்களைக் காண இணையச் சுட்டி: http://bit.ly/2Q79Cac
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அரிசி ஓவியத்தில் அசத்தும் மாணவி


தானியத்தைத் தன் திறமையை வெளிப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்திவருகிறார் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி மதுராந்தகி.
கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் – ராஜேஸ்வரி தம்பதியின் மகள் மதுராந்தகி. பெற்றோர் இருவரும் ஓவியர்கள் என்பதால் தவழும் வயதிலேயே மகளுக்குத் தலைவர்களின் படங்களைக் காண்பித்து, அவர்களது பெயரைச் சொல்லிக்கொடுத்தனர். தாலாட்டுக்குப் பதிலாகத் திருக்குறளைக் கற்றுக்கொடுத்தனர். மதுராந்தகியும் திருக்குறள்களை மனத்தில் வாங்கி, திரும்பக் கூறியுள்ளார்.
தற்போது ப்ளஸ் 2 படித்துவரும் இவர், ஐந்தாம் வகுப்பு படித்தபோதே ஆயில் பெயின்டிங் வரையத் தொடங்கிவிட்டார். 2010-ல் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, 11, 000 அரிசியைக் கொண்டு திருவள்ளுவர் படத்தை உருவாக்கி, அந்த அரிசியின் மீது திருக்குறள்களை எழுதினார். பிறகு அரிசி ஓவியங்களில் கவனம் செலுத்திய மதுராந்தகி, 2011-ல் 5 ஆயிரம் அரிசிகளைக் கொண்டு காமராஜரின் உருவத்தை வரைந்து, அந்த அரிசிகளின் மீது ‘கல்வி கரையில’ என எழுதினார்.
அதேபோல, 7,500 அரிசிகளில் மகாத்மா காந்தியின் உருவத்தை வரைந்து, அதில் ‘ஜெய்ஹிந்த்’ எனவும் எழுதியுள்ளார். மாணவர்களிடையே தலைவர்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், விவேகானந்தர், சர்தார் வல்லபபாய்படேல் ஆகியோரின் படங்களையும் வரைந்து அவற்றைப் பல்வேறு பள்ளிகளில் காட்சிப்படுத்தியுள்ளார்.
குவியும் விருதுகள்
2015-ல் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வுக்காக, 2 லட்சம் அரிசிகளைக் கொண்டு குழந்தையின் வாயில் போலியோ சொட்டுமருந்து விடுவதுபோன்ற ஓவியத்தை உருவாக்கினார். அது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் பதிவாகியுள்ளது.
2006-ல் மதுராந்தகியின் திறமை குறித்து அறிந்த ஜனாதிபதி அப்துல்கலாம், கோவையில் தன்னை வரவழைத்துப் பாராட்டியதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் மதுராந்தகி. இவருக்கு 2016-ல் தமிழக அரசின் கலை இளமணி விருது வழங்கப்பட்டது. 2017-ல்
அடுத்த தலைமுறை கைவினைக் கலைஞர்களுக்கான விருது கிடைத்தது. இரண்டு வயது முதலே ஞானக்குழந்தை உள்ளிட்ட விருதுகளும், பட்டங்களும் மதுராந்தகியைத் தேடிவந்துள்ளன. படிப்பிலும் இவர் படுசுட்டி. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது தனது ஆசை எனச் சொல்கிறார். “ஏழை மக்களுக்கு உதவ வேண்டுமெனில், அதிகாரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் இப்போதிருந்தே ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகிவருகிறேன்.
லஞ்சத்துக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தும் ஓவியங்களையும் வரைந்துவருகிறேன்” என்று சொல்லும் மதுராந்தகி முன்பு செஸ் விளையாட்டில் தேசிய அளவில் 120-வது இடத்தில் இருந்தார். தற்போது பொதுத் தேர்வுக்குத் தயாராகிவருவதால் தொடர்ந்து விளையாட முடியவில்லை என்று சொல்லும் மதுராந்தகிக்கு அண்மையில் அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் ‘விஷன் 2020’ விருது வழங்கப்பட்டது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
மாயாஜால மிர்ஜானா


பொதுவாகப் பலர் தங்களை அழகுபடுத்திக்கொள்ள மேக்கப் போட்டுக்கொள்வார்கள். ஆனால், செர்பியாவில் வசிக்கும் அழகுக்கலை நிபுணரான மிர்ஜானா கிகா மிலோசெவிக் (36) போடும் மேக்கப் நம்மைப் பிரமிக்கவைக்கிறது. கறுப்புத் திரைக்கு முன்னால் சாதாரணப் பெண்ணாக நிற்கும் மிர்ஜானா, தன்னிடமுள்ள அழகுசாதனப் பொருட்களை வைத்தே திடீரெனத் தலையில்லாமல் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் பெண்ணாக மாறி நம்மை அச்சத்தில் ஆழ்த்துகிறார்.


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக யூடியூபில் பிரபலமாக உள்ளார் மிர்ஜானா. இவரின் உடலோவியங்கள் தத்ரூபமாகத் தெரிவதற்கு ஆப்டிகல் இல்யூஷன் முறையைப் பின்பற்றுகிறார்.
வறுமையிலிருந்து மீட்டெடுத்த கலை
அழகுசாதனப் பொருட்களைக்கொண்டு உடலையே ஓவியமாக மாற்றும் இவரது திறமை மெய்சிலிர்க்கவைக்கிறது. சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த மிர்ஜானா படித்து முடித்த பிறகு வேலை தேடி பல நிறுவனங்களுக்குச் சென்றிருக்கிறார். ஆனால், எங்கும் வேலை கிடைக்கவில்லை. குடும்ப வறுமை நெருக்கடி கொடுத்தபோது அவருக்கு உதவியாக இருந்தது அவரின் ஓவியத் திறமைதான்.


“நான் வசிக்கும் நகரத்தில் வேலை கிடைக்காத நிலையில்தான் சுவரோவியங்கள், குழந்தைகளின் முகத்தில் பொம்மைக் கதாபாத்திரங்கள் போன்றவற்றை வரைவதைத் தொழிலாகத் தொடங்கினேன். அப்போதுதான் என்னுள் இருந்த திறமை வெளிப்படத் தொடங்கியது. பிறகு அந்த வரைகலையை வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்ல நினைத்தேன். பெயிண்ட்டுக்குப் பதிலாக அழகுசாதனப் பொருட்களைக்கொண்டு என்னுடைய உடலில் ஓவியம் வரைத் தொடங்கினேன்” எனக் கூறுகிறார் மிர்ஜானா.


தற்போது செர்பியாவின் தலைசிறந்த ஓவியராக வலம் வந்துகொண்டிருக்கும் மிர்ஜானா, ‘கிகா’ என்ற பெயரில் ஸ்டுடியோ ஒன்றை வைத்துள்ளார். ஆப்டிகல் இல்யூஷன் தோற்றத்தைப் பயன்படுத்தி இவர் வரைந்த பொம்மலாட்ட உடலோவியத்தை எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை பார்த்துள்ளனர்.


மிர்ஜானாவின் இந்தப் பொம்மலாட்ட உடலோவியம் உலக அளவில் கவனம்பெற்றது மட்டுமல்லாமல், 2016-ல் NYX நிறுவனம் நடத்திய போட்டியில் ஆப்டிகல் இல்யூஷன் பிரிவில் முதல் பரிசையும் பெற்றுத்தந்தது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
தன்னம்பிக்கைதான் அழகு!

வெண்புள்ளி என்ற சொல்லைக் கேட்டாலோ, அந்தக் குறைபாடு கொண்டவர்களைப் பார்த்தாலோ சிலர் ஒதுங்கக்கூடும். ஆனால், அந்தக் குறைபாட்டை அனுபவிப்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? மன உளைச்சலும் சமூகத்தின் நிராகரிப்புமாகத் தினம் தினம் நெருப்பின் மேல் நிற்கிற வாழ்க்கையே பலருக்கும் வாய்த்துவிடுகிறது. ஆனால், இந்த சருமப் பிரச்சினையைத் தளராத தன்னம்பிக்கையால் எதிர்கொண்டு வருபவர் சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரம்யா ஜெ.கிறிஸ்டினா.
மாடல், உதவி இயக்குநர், விளம்பரங்களில் கண்டென்ட் எழுத்தாளர், விழிப்புணர்வுப் பேச்சாளர் என இவரைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த இடத்தை அடைவதற்கு முன் உடலளவிலும் மனதளவிலும் சமூகத்திலும் அவர் சந்தித்த அவமானங்கள் ஏராளம். 22 வயதுவரை எத்தனையோ கேலிப் பேச்சுகளையும் மனசாட்சியற்ற சாடல்களையும் சுமந்துகொண்டு உள்ளுக்குள்ளேயே குமைந்து கிடந்தவர், மனதைத் திடமாக்கிக் கொண்டது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“நான் பிறந்தப்போ ரொம்ப அழகா இருந்தேன்னு எல்லாரும் தூக்கிக் கொஞ்சுவார்களாம். ஐந்து வயதில் அசைவம் சாப்பிட்டபோது உடலில் கொப்புளம் வந்தது. அதற்காக டாக்டர் கொடுத்த மருந்து அலர்ஜியாகிவிட்டது. அதைத் தொடர்ந்து முடி கொட்டியது. உடலில் ஆங்காங்கே திட்டுத் திட்டாகக் கருமை நிறம் படிந்தது.
என்ன, ஏது என்று யோசிப்பதற்கு முன் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. உடல் முழுவதும் மெலனின் குறைபாட்டால் தோல் நிறம் மாறிவிட்டது. பிறந்தது முதல் கொண்டாடித் தீர்த்த குழந்தையைப் பெற்ற தந்தையே, என்ன பாவம் பண்ணியதால் இப்படி வந்து பிறந்தாளோ எனத் திட்டி புலம்பினார்” என வருந்தும் ரம்யாவுக்குப் பள்ளி வாழ்க்கை கொடுங்கனவாக இருந்திருக்கிறது.
பட்ட காயங்கள்
“எனக்குத் தலைமுடியும் உதிர்ந்துவிட்டதால் ரெட்டை ஜடை போட முடியாது. எலிவால் என்று கிண்டல் செய்வார்கள். யாரும் என் பக்கத்தில் உட்கார மாட்டர்கள்; பேச மாட்டார்கள். எனக்குத் தோழிகளும் கிடையாது. ஒரு டீச்சர் என்னிடம் தண்ணீர் வாங்கி குடித்தால் பாவம் என்றார். ஒன்பதாம் வகுப்பு படித்தபோது கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். பரிசு வாங்குவதற்காகச் சென்றபோது உனக்கெல்லாம் பரிசுதர முடியாது என மைக்கில் சொல்லி மூவாயிரம் மாணவர்கள் முன் அவமானப்படுத்தினர்.
அந்தக் கணம் அப்படியே காற்றில் கலந்து நாம் காணாமல் போய்விடக் கூடாதா என்று இருந்தது. வீட்டுக்கு வந்து அழுதேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என வேதனைப்பட்டேன். சில நேரம் மன அழுத்தம் தாங்க முடியாமல் மெழுகுவர்த்தியில் கைகளைச் சுட்டுக் கொள்வேன். என்னை நானே துன்புறுத்திக்கொள்வேன். இதற்கு நடுவில் சரும சிகிச்சைக்காக நிறைய மருந்து எடுத்துக்கொண்டிருந்தேன்.


அதன் பக்க விளைவுகளால் சாப்பிட முடியாது. எத்தனை நாள் தயிர் சாதம் மட்டும் சாப்பிட முடியும்? நான் நல்லா சாப்பிடுவேன். 22 வயதுவரை எடுத்த சிகிச்சை போதும். எந்த மாற்றமும் இல்லையே என என் அம்மாவுக்குப் புரியவைக்கப் போராட வேண்டியிருந்தது. அதன்பிறகு தான் என்னால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது” என்கிறார் ரம்யா.
பெரியப்பா பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் பார்க்க வரும்போது ரம்யாவை முன்னே வர வேண்டாம் என அவர்கள் வீட்டில் சொன்னது ரம்யாவின் அம்மாவைப் பாதித்தது. அதிலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட ரம்யா மீண்டுவந்தது ஒரு நட்பால்தான்.
நம்பிக்கை தந்த நட்பு
வாழ்க்கையில் பிடிமான மற்றுப் போகும்போது ஏதோ ஒரு மரக்கிளை கிடைப்பது போல் கல்லூரி வாழ்க்கை சில நம்பிக்கையை விதைத்திருக் கிறது. கல்லூரி, பள்ளியைப் போல இருக்கவில்லை. அங்கே யாரும் இவரை ஒதுக்கி வைக்கவில்லை. கூந்தலை வெட்டிக்கொண்டு, கேப் போட்டு கொஞ்சம் மார்டனாக உடை அணியத் தொடங்கியிருக்கிறார் ரம்யா. “பஸ்ஸில் என் அருகில் உட்காரத் தயங்குவார்கள். டிரெஸ்ஸைச் சரிசெய்து கொள்வார்கள். மாடர்ன் உடையில் என்னை யாரும் உதாசீனம் செய்யவில்லை.
அதுவே ஆறுதலாக இருந்தது. அப்போதுதான் புகைப்படக் கலைஞர் மாதுரி தேவியைச் சந்தித்தேன். அவர் என்னை அழகான சிறுத்தை என அழைத்தார். மாசற்ற தனித்துவமான அழகி எனச் சொல்லி பலவிதங்களில் போட்டோ எடுத்தார். அப்போதுதான் மாடலிங் செய்யலாம் எனத் தோன்றியது. நம்மிடம் எது அழகு என்று பார்க்கக் கற்றுக்கொண்டால் போதும் என அப்போது புரிந்தது.
பல விளம்பர நிறுவனங்கள் மாடலிங் செய்ய என்னை அணுகினர். அதன்பின்னர் நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட இயக்குநர்களிடம் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். இப்போது விளம்பரங்களுக்குக் கருத்துருவாக்கம் செய்கிறேன். இப்படி என்னை நானே செதுக்கிக்கொண்டேன்” என்பவர் சமீபத்தில் மணப்பெண் அலங்காரத்தில் முகநூலையே கலக்கிவிட்டார்.
புன்னகையுங்கள் போதும்
“என்னைப் போன்ற நிறமி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கும்போது அவர்களுக்கு என் கதையைச் சொல்லி தன்னம்பிக்கை வளர்க்கிறேன். பல நிறுவனங்களில் பேச அழைக்கிறார்கள். என்னைப் பார்த்து ஒதுங்குபவர்களையும் பரிதாபப்படுபவர்களையும் பார்த்தால் நான் புன்னகைப்பேன்.


ஆறுதல் சொல்பவர்களிடம், “என்னைப் போன்றவர்களை நீங்கள் சந்திக்க நேரிட்டால் அவர்களை உதாசீனம் செய்யாதீர்கள்; அவரிடம் என் கதையைச் சொல்லி என்னைப் போல் மாறச் சொல்லுங்கள்” என்று கூறி அமைதியாகக் கடந்து விடுகிறேன். இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து நீங்கள் பார்க்கும்போது படங்கள் இயக்குவதிலும், வெற்றிகரமான தொழில்முனைவோராகவும் நான் இருக்க வேண்டும். அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்” என்பவரின் புன்னகை நம்மையும் தொற்றிக்கொள்கிறது.