அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

தினம் ஒரு தகவல்

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

இந்த திரியில் நமக்கு தான் படித்த கேட்ட சுவரசியசமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள் செல்வி பாண்டியன். அவர்களிடம் இருந்து நிறைய சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்வோம்.
 
#2
உலகிலேயே முதல் முறை: செய்தி வாசிப்பாளர் ஆன ரோபோக்கள்; சீனா அறிமுகம்
1542195315672.png

உலகத்திலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
செய்திகள் வாசிக்கும் ஏஐ (artificial intelligence) ரோபாக்களை சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சீன செய்தி வாசிப்பாளர்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏஐ ரோபோக்கள், திரையில் ஓடும் எழுத்துகளைப் படிக்கும். செய்திகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து அவற்றின் வாய் அசையும் வகையில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலம் மற்றும் சீன மொழி என இரு மொழிகளில் செய்திகளை வாசிக்க தனித்தனியாக இரண்டு ஏஐ ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேடுதல் பொறிகள் மற்றும் குரலைக் கண்டுணர்தல் தொழில்நுட்பங்களின் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளது.
''இந்த ஏஐ ரோபோக்கள் 24 மணி நேரமும் அயர்வின்றித் தொடர்ந்து வேலை செய்யும். முக்கியச் செய்திகளை விரைந்து தடுமாற்றமில்லாமல் வாசிக்கும். இவை நிஜ ஏஐ ரோபோக்களைப் போல சுயமான சிந்தித்து முடிவெடுக்காமல், செய்தியைப் படிக்க மட்டுமே செய்யும்'' என்று சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ.

நவ.7 அன்று சீனா நடத்திய உலக இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோக்கள் எப்போது தினசரிப் பயன்பாட்டுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயரிய தொழில்நுட்பங்களில் உலகளாவிய அளவில் முதலிடத்தைப் பிடிக்கத் துடிக்கிறது சீனா. அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஏற்கெனவே அமெரிக்கத் தொழில்நுட்பங்களைச் சீனா திருடுவதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
 
Last edited by a moderator:
#3
உலகைச் சுற்றிவரப்போகும் டைட்டானிக்- 2
1542195499543.png

டைட்டானிக்-2 கப்பல் தனது பயணத்தை எப்போது தொடங்கும் என்று உலகமெங்கும் எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், 2022-ல் அந்தப் பிரம்மாண்ட கப்பல் இயங்கத் தொடங்கும் என்று அறிவித்திருக்கிறது ஆஸ்திரேலிய நிறுவனமான ப்ளூ ஸ்டார் லைன்.
1912-ல் இரண்டாயிரம் பயணிகளோடு சவுத்தாம்ப்டனிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியே நியூயார்க் செல்லும் வழியில் பனிப்பாறைகளில் மோதி மூழ்கியது டைட்டானிக். பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதே வடிவத்தில் அந்தக் கப்பலைக் கட்டும் முயற்சியில் இறங்கியது ப்ளூ ஸ்டார் லைன். ஒன்பது அடுக்குகள், 835 கேபின்களோடு 2,435 பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் இந்தக் கப்பல் தயாராகிவருகிறது. முதல் பயணம்: சவுத்தாம்ப்டன் டு நியூயார்க் தான்!
டைட்டானிக்-1-க்கு ஏற்பட்ட கதியைத் தவிர்க்கும் வகையில், ரேடார் உள்ளிட்ட சகலவிதமான நவீன வசதிகளோடு அதிகளவில் உயிர் காக்கும் படகுகளும் இணைக்கப்பட்டுள்ளன!
 
#4
ஏமன் போரில் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமி: உலகத்தின் கவனத்தை ஈர்த்து கண்கலங்க வைத்த புகைப்படம்
1542195578925.png
ஏமன் போரில் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமியின் புகைப்படம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏமனில் உள் நாட்டுப் போர் நடைபெற்ற இரண்டு வருடங்களில் சுமார் 3 லட்சத்துக்கு அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பசி, வன்முறை தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர். 5,000க்கும் மேற்பட்டோர் இந்த போர் காலங்களில் இறந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம். ஏமனின் ஒட்டுமொத்த இளம் தலைமுறையும் வறுமையிலும், வன்முறையிலும் வளர்கின்றனர் என்று ஐ.நா. வேதனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அகதிகள் முகாமில் இருந்த அமல் ஹுசேன் என்னும் 7 வயது சிறுமி பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, எலும்பும் தோலுமாய் ஒட்டிக்கிடக்கும் சருமத்தோடு இருக்கும் அமலின் புகைப்படத்தை வெளியிட்டது. அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. ஏமனில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.
இந்நிலையில் அமல் ஹுசேன் பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தார். சத்துக் குறைபாட்டின் காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தாய் மரியம் அலி, ''என் இதயத்தைக் கூறுபோட்டதைப் போல் உணர்கிறேன். அமல் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். இப்போது என்னுடைய மற்ற குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது'' என்றார்.
 
#5
அபுதாபி லாட்டரியில் இந்தியருக்கு ரூ. 20 கோடி பரிசு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த லாட்டரி குலுக்கலில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 20 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் பிரிட்டி மார்க்கோஸ். துபாயில் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மற்றும் இரு மகன்கள் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர். இவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரசித்தி பெற்ற ‘அபுதாபி பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
இந்த லாட்டரி குலுக்கல் நடந்த நிலையில் அதில் மார்க்கோஸுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 20 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டி மார்கோஸ் கூறுகையில் ‘‘இந்த பரிசுத்தொகை மூலம் எனது கடன்களை அடைப்பேன். எனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்ட முடிவு செய்துள்ளேன்’’ எனக் கூறியுள்ளார்.
‘பிக் டிக்கெட் அபுதாபி’ லாட்டரி குலுக்கலில் கேரள மாநிலத்தை சேர்ந்த பலர் பலமுறை பரிசுத்தொகையை வென்றது குறிப்பிடத்தக்கது.
1542195679574.png
 
#6
இத்தாலியில் மூன்று குழந்தை பெற்றால் இலவச நிலம்
இத்தாலியில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அர்சு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள், “இத்தாலி உள்ளிட்ட மேலை நாடுகளில் மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான முதியோர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்கள் தொகையை உயர்த்தவும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி இத்தாலியில் மூன்றாவது குழந்தை பெறுபவர்களுக்கு இலவச மகா நிலம் அளிக்கப்படும்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலியில் சமீபத்தில் எடுத்த புள்ளி விவரத்தின்படி, சுமார் மூன்று லட்சம் குடும்பத்தினர் இரண்டு குழந்தைகளுடன் உள்ளனர். மேலும் இவர்கள் இனி குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று முடிவு செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டின் பிறப்பு விகிதத்தின் படி இத்தாலியில் கடந்த ஆண்டு 4 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2016 ஆம் ஆண்டை விட 2% குறைவு.
எனவே குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
#7
காதலுக்காக அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய இளவரசி
சாமானியக் குடிமகனான தனது காதலரைக் கரம் பிடிக்க அரச குடும்பத்திலிருந்து வெளியேறியிருக்கிறார் ஜப்பான் இளவரசி அயாகோ. ஜப்பான் பேரரசர் அகிடோவின் உறவினரான டகாமாடோவின் மூன்றாவது மகளான அயாகோ, நிப்பான் யூசென் கப்பல் நிறுவனத்தில் பணிபுரியும் கேய் மோரியாவைக் காதலித்தார். ஜப்பான் அரச குடும்பத்தின் விதிமுறைகளின்படி, சாமானியக் குடிமகனைத் திருமணம் செய்துகொள்ள இளவரசிகள் விரும்பினால் அவர்கள் அரச குடும்பத்திலிருந்து வெளியேறியாக வேண்டும். தன் காதலில் உறுதியாக நின்ற அயாகோ, விதிமுறையைப் பின்பற்றி அரச குடும்பத்திலிருந்து வெளியேறியிருக்கிறார். டோக்கியோவில் உள்ள மெய்ஜி புனிதத்தலத்தில் திங்கள் கிழமை நடந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்
1542195825314.png
 
#8
20 ஆவிகளுடன் வாழ்ந்தேன்... ஆவியைத்தான் திருமணம் செய்து கொள்வேன்: பிரிட்டன் பெண்மணியின் வெலவெலத்துப் போகச்செய்யும் அடம்
பிரிட்டனைச் சேர்ந்த அமீதிஸ்ட் ரெல்ம் என்ற 30 வயது பெண்மணி தான் இதுவரை 20 ஆவிகளுடன் உறவு வைத்து கொண்டுள்ளதாகவும் அதில் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் சந்தித்த ஆவியைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தன் ‘பேய் ஆசை’யை வெளியிட்டது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 20 ஆவிகளுடன் தான் உடலுறவு கொண்டதாக இந்தப் பெண் கூறியதும் பலருக்கும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. கடந்த ஆண்டு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இவர் தன் எதிர்காலக் கணவருக்குத் தெரியாமல் 20 ஆவிகளுடன் தான் உறவு கொண்டதாகத் தெரிவித்தது பலருக்கும் தூக்கிவாரிப்போட்டது.
இதில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சந்தித்தா ஆவியுடன் தான் விமானத்தில் உறவு கொண்டதாகவும் அவர் சமீபத்தில் தன்னிடம் பேசியதாகவும் அப்போது திருமண ஆசையை அந்த ஆவி வெளிப்படுத்தியது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் அமீதிஸ்ட் ரெல்ம் கூறியதில் பலரும் வெலவெலத்துப் போயுள்ளனர்.
பிரிட்டன் டேப்லாய்ட் ஒன்றுக்கு அவர் கூறும்போது, “இந்த ஆவிக்கு முழங்கால்கள் இல்லை, ஆனால் முதல் முறையாக அவர் என்னிடம் பேசினார், அவர் குரல் அழகானது, ஆழமானது, செக்சியானது” என்று தெரிவித்த போது இவர் விளையாடுகிறாரா, சீரியஸகாப் பேசுகிறாரா என்ற குழப்பமே பலருக்கும் எஞ்சியுள்ளது.
இவர்களது இந்த உறவை குடும்பத்தினரும் நண்பர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனராம். இதனையடுத்து கிறித்துவ முறைப்படி அல்லாத பழங்குடி முறையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.
சாதாரண மனிதர்களை விட இவ்வகை ஆவிகளினுடனான தொடர்பு தனக்கு உண்மையான உற்சாகத்தை அளிப்பதாக அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.
1542195920210.png
 
#9
கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்
நத்தையை உண்பது - குறிப்பாக மூல வியாதிக்காரர்கள் மருந்தாக உண்பது - நம்மூரில் உள்ள வழக்கம். ஆனால், முறையாகச் சமைக்காமல் இறைச்சியை உட்கொண்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதற்கு உதாரணம் ஆகியிருக்கிறார் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர்.
தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட சாம் பல்லார்டு ஏராளமான பாதிப்புக்குள்ளாகி 8 வருடங்களுக்குப் பின் இறந்திருக்கிறார். அப்போதே, அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொஞ்சம் சரியானவர் பின்னர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நீண்ட போராட்டத்துக்குப் பின் சமீபத்தில் காலமானார். நத்தையின் உடலில் இருந்த நுரையீரல் புழுதான் இதற்குக் காரணம் என்று தெரியவந்திருக்கிறது!
1542196051725.png
 
#10
அடடா என்ன திறமை; போலீஸாரே வியந்த ’டிப்டாப்’ திருடன்: ஏடிஎம்மில் இப்படியும் உங்கள் பணம் பறிபோகலாம்
ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க வருபவர்களின் கவனத்தை திசைத்திருப்பி பணத்தை அபேஸ் செய்துவந்த திருடனை பிடித்த போலீஸார், அந்த நபர் திருடிய விதத்தைப் பார்த்து வியந்துபோயுள்ளனர்.
சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பபவர்களின் பணம் திருடப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வங்கியிலிருந்தும், வாடிக்கையாளர்கள் சார்பாகவும், சென்ட்ரல் ரயில்வே போலீஸுக்கும், அருகில் உள்ள பெரியமேடு காவல் நிலையத்திற்கும் அதிக அளவு புகார்கள் வந்தது.
இதையடுத்து போலீஸார் புகார் கூறியவர்கள் பணம் எடுத்த நாட்களில் அந்தந்த ஏடிஎம் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்து சோதனையிட்டனர். அப்போது அனைத்து சம்பவங்களில் ஒரு நபர் இருப்பது தெரியவந்தது. அனைத்து சம்பவங்களிலும் இந்த இளைஞர் எப்படி அங்கு இருக்கிறார் என்று குழப்பமடைந்த போலீஸார் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் இளைஞர் புகைப்படத்தை காட்டி விசாரணை நடத்தினர்.
சிலர் எங்களுக்கு தெரியவில்லை, ஞாபகமில்லை என்று தெரிவித்தனர், சிலர் ஆமாம் சார் இவர்தான் அந்த நேரத்தில் அங்கு இருந்தார் என்று தெரிவித்தனர். சிலர் இவர்தான் சார் பணம் எடுக்கும்போது ஏடிஎம் மெஷின் வேலை செய்யவில்லை என்று கூறி பக்கத்து மெஷினில் எடுக்கச்சொன்னார் என்று தெரிவித்தனர்.
போலீஸார் அந்த இளைஞர் மீது சந்தேகமடைந்து சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். அப்போது அந்த இளைஞர் சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் எடுக்கும்போது ஏதோ கூறுவதும், பின்னர் அவர் ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டுச் செல்வதும் தெரியவந்தது.
போலீஸார் அந்த இளைஞரை பிடிக்க வலைவிரித்து காத்திருந்தனர். வழக்கம்போல் ஏடிஎம்மில் தனது கைவரிசையை காட்ட வந்த அவர் ரயில்வே போலீஸாரிடம் சிக்கினார். அவரைப்பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் பெயர் கோபி கிருஷ்ணா என்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் கூறியது போலீஸாரை திடுக்கிட வைத்தது. இப்படி எல்லாம் கூடவா ஏமாற்றுவார்கள் என்று சிரித்துக்கொண்டனர். ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை அவர்கள் அறியாமலே நூதன முறையில் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் எடுத்த அந்த நபர் குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் விமானத்தில் சொந்த ஊருக்கு பறந்து விடுவாராம்.
எப்படி பணத்தை நூதன முறையில் ஏமாற்றி எடுப்பேன் என்பதை அந்த நபர் நடித்து காட்டியுள்ளார். டிப்டாப்பாக உடையணிந்து இரண்டு எந்திரங்கள் உள்ள ஏடிஎம்மில் சென்று நின்றுக்கொள்வார். பணம் எடுக்க வருபவர்கள் ஒரு எந்திரத்தில் கார்டை சொருகி வெளியே எடுத்தவுடன் இவர் அவசரமாக குறுக்கிட்டு சார் இந்த மெஷின் வேலை செய்யவில்லை அந்த மெஷினில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவார்.
பணம் எடுக்க வந்தவர் நன்றி கூறிவிட்டு அடுத்த எந்திரத்தில் கார்டை நுழைத்து பணம் எடுப்பார். இவர் அவர்கள் பதிவு செய்யும் சீக்ரெட் நம்பரை கவனித்து வைத்துக்கொண்டு டக்கென்று அந்த நம்பரை முதலில் கார்டை நுழைத்த எந்திரத்தில் அந்த ரகசிய எண்ணை பதிவு செய்து பணத்தை எடுத்துவிடுவார். இதில் பல நேரம் அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். கணக்கில் கணிசமாக பணம் வைத்துள்ளவர்கள் பணத்தை அழகாக சுருட்டிவிடுவார்.
இப்படி செண்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பல ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு பல வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் எடுப்பார். இப்படி கணிசமாக சேரும் பணத்தில் சொந்த ஊருக்கு விமானத்தில் சென்று வருவார். நூதனமான முறையில் ஏமாற்றும் இதுபோன்ற நபர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டுக்கொள்ளவேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
பணம் எடுக்கும்போது அருகில் யாரையும் நிற்க அனுமதிக்கக்கூடாது என்றும் அப்படி அனுமதித்தால் பணம் பறிபோக வாய்ப்புண்டு என்றும் எச்சரித்துள்ளனர். நூதனமான முறையில் பணத்தை திருடிவந்த நபர் பெரியமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
1542196166844.png
 
#11
காருக்குள் புகுந்து பீதி ஏற்படுத்திய நாகப் பாம்பு
திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரின் காரின் முன்பக்க இயந்திரப் பகுதியில் புகுந்த நாகப்பாம்பு மீட்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
திருப்பூர் மாநகர் கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் விக்னேஸ்ராஜ். இவர், பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 8-ம் தேதி உறவினர்களுடன் திருப்பூரில் இருந்து பிஎம்டபிள்யு கார் மூலமாக மதுரைக்கு சென்றுள்ளார்.
வெள்ளகோவில் அருகே முத்தூர் வட்டக்கரை பகுதியில், காரின் முன்பக்கமாக இயந்திரப் பகுதியை ஒட்டி பாம்பின் தலை காணப்பட்டது. இதனை கவனித்த விக்னேஸ்ராஜ், வட்டக்கரையில் காரை நிறுத்திவிட்டு முன்பக்க இயந்திரப் பகுதியை திறந்துபார்த்தார். அப்போது, பாம்பு எதுவும் தென்படவில்லை.
இதையடுத்து, வெள்ளகோவில் தீயணைப்புத் துறையினர் காரை சோதனையிட்டு பாம்பு இல்லை என தெரிவித்து சென்றுவிட்டனர். இதற்கிடையே, கடந்த 9-ம் தேதி கோவை பிஎம்டபுள்யு கார் சர்வீஸ் ஸ்டேசனுக்கு சென்று விக்னேஸ்ராஜ் பார்த்துள்ளார்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் அவர் கூறிய தாவது:
பாம்பு எங்கு ஏறியது என்று தெரியவில்லை. காரின் இயந்திரப் பகுதியில் மழை நீர் வடிவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ஃபில்டர் வழியாக பாம்பு உள்ளே புகுந்துள்ளது. கார் ஓடியதால் இயந்திரப் பகுதியில் ஏற்பட்ட சூட்டின் காரணமாக தலையை மட்டும் காண்பித்துள்ளது. ஆனால், உடலை முழுமையாக வெளியே எடுக்க முடியவில்லை. அதனை பார்த்த பின்புதான் இயந்திரப் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
கடந்த 9-ம் தேதி காலை கோவை யில் உள்ள பிஎம்டபிள்யு சர்வீஸ் ஸ்டேசனுக்கு காரை எடுத்துச் சென்றேன். அங்கு காரை இயக்கிய போது இயந்திரப் பகுதி சூடாகத் தொடங்கியதும் பாம்பின் இருப்பிடமும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து இயந்திரப் பகுதியின் ஒவ்வொரு பாகமாக பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக பாம்பு பிடிக்கும் சஞ்சய் என்பவர் வரவழைக் கப்பட்டார். அவரும் லாவகமாக பாம்பை பிடித்தார். சுமார் இரண் டரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின், பாம்பை பிடித்து வனப்பகுதி யில் விடுவித்தனர். அதற்குள் காரில் இருந்து பாம்பு அப்புறப் படுத்தப்படும் வீடியோ வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் வைரலாக பரவிவிட்டது' என்றார்.
‘இருக்கை பகுதிக்குள் எதுவும் புகாது’
கார் நிறுவனத்தினர் கூறும்போது, ‘காரின் இயந்திரப் பகுதியில் நாகப்பாம்பு புகுந்ததை அகற்றிவிட்டோம். ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை கார் வாங்கினாலும், காருக்குள் பாம்போ மற்றவையோ புகாத வண்ணம் தான் பொதுவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. காருக்குள் உள்ள இருக்கை பகுதிக்குள் எதுவும் புகாது. காரை நிறுத்தியிருந்த இடத்தில் எங்காவது பாம்பு ஏறி இருக்கலாம். அனைத்து வகை கார் ஓட்டுபவர்களும், கார் வைத்திருப்பவர்களும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை' என்றார்.
1542196269470.png
 
#12
12 நாள் குழந்தையை தாயிடமிருந்து பறித்துச் சென்ற குரங்கு: கடித்துக் கொன்றதால் அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் பாலூட்டிக்கொண்டிருந்த தாயிடம் இருந்து பிறந்து 12 நாட்கள் மட்டுமே நிறைந்த பச்சிளங்குழந்தையை பறித்துச் சென்ற குரங்கு, அவர் முன்பு கடித்துக் கொன்றது.
ஆக்ரா நகர் விஜய நகர் பகுதி மொஹல்லா கச்சேரா பகுதியில் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் குரங்குகள் தொல்லை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இதனால், வீடுகளில் ஜன்னல் வழியாகப் புகும் குரங்குகள் வீட்டில் இருக்கும் பொருட்களை உணவுப்பொருட்களை எடுத்துச் சென்று விடுகின்றன. துணிகள் பொருட்களையும் சேதப்படுத்தி விடுகின்றன. இதனால், குரங்குகளுக்குப் பயந்து வீட்டு ஜன்னல்களில் மக்கள் இரும்பு வளையடித்து வைத்துள்ளனர்.
அதிலும் இப்பகுதியில் உள்ள குரங்குகள், பெண்களையும், குழந்தைகளையும் குறிவைத்து தாக்கியும், கடித்தும் வருவதால், பெண்களும், குழந்தைகளும் வீட்டு மாடிக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த சன்னி என்ற பெண் நேற்றுமாலை வீட்டுவாசலில் அமர்ந்து தனது பச்சிளங் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்தார். இந்தக் குழந்தை பிறந்து 12 நாட்களே ஆகி இருந்தது.
அப்போது திடீரென வந்த குரங்கு ஒன்று, சன்னியிடம் இருந்து அவரின் பச்சிளங்குழந்தையை பறித்துக்கொண்டு ஓடியது. தன் கைகளில் இருந்து குழந்தையை பறித்துக்கொண்டு குரங்கு ஓடியதால், செய்வதறியாது சன்னி திகைத்து கூச்சலிட்டார்.
இதைப்பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து, அந்தக் குரங்கை துரத்திச் சென்றனர். ஆனால், யாருடைய கைகளிலும் சிக்காமல் குழந்தையைக் தூக்கிக்கொண்டு ஓடிய குரங்கு பல்வேறு இடங்களுக்குத் தாவியது. இதனால், சன்னியும், அவரின் குடும்பத்தினரும் செய்வதறியாது திகைத்து கண்ணீர் விட்டனர்.
இந்நிலையில், சன்னியின் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டின் மாடியின் ரத்தக்கறையுடன் குழந்தை கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால், குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தையைக் குரங்கு கடித்ததால், ரத்தம் அதிகமாக வெளியேறி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், மருத்துவரின் வார்த்தையை ஏற்காத குடும்பத்தினர் மற்றொரு மருத்துவமனைக்குக் குழந்தையை தூக்கிச் சென்று பரிசோதித்தனர். ஆனால், குழந்தை இறந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து சன்னியும், அவரின் குடும்பத்தினரும் கண்ணீர்விட்டுக் கதறினார்கள்.
இதையடுத்து, விஜயநகர் பகுதியில் மிக அதிக அளவில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சூழல் ஆர்வலர் ஷர்வன் குமார் கூறுகையில், ‘‘குரங்குகள் தற்போது மிகவும் ஆவேசமாக மக்களிடம் நடக்கத் தொடங்கியுள்ளன. குரங்குகளின் இயற்கையான குணம் மறைந்துவிட்டது. மரங்கள், செடிகளையும் சேதப்படுத்தி வருகின்றன. மக்கள் குரங்குகளை பார்த்தால் அச்சப்பட்டு வெளியே செல்ல முடியாமல் இருக்கிறார்கள். குறிப்பாகப் பெண்களும், குழந்தைகளும் வீட்டின் மாடிக்கு வருவதற்கு அஞ்சுகிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.
 
#13
'மிதக்கும் குடிசைகளில்'' நெசவாலைகள்: மணிப்பூர் ஏரியில் ஒரு வித்தியாசமான முயற்சி
1542196493371.png


வடகிழக்கு மாநிலங்களிலேயே முதன்முறையாக வித்தியாசமான ஒரு முயற்சியாக மணிப்பூர் மாநிலத்தில் ''தண்ணீரில் மிதக்கும் கைத்தறி குடிசைகள்'' தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான விழா இன்று பிஷ்னபூர் அருகிலுள்ள லோக்தாக் ஏரியில் கோலாகலமாக நடைபெற்றது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 மிதக்கும் குடிசைகளை திரிபுரா மாநில வனம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மேவார் குமார் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து ஜவுளி மற்றும் கைத்தறி இயக்குநரகத்தின் இயக்குநர் கே.லாம்லி காமேய் தெரிவிக்கையில்,
'' ஏரிகளில் நெசவுலைகளுக்கான குடிசைகள் அமைத்துள்ளோம். இது ஒரு பரிசோதனை முயற்சிதான். மிதக்கும் இக்குடிசைகளில் பெண்கள் ஈடுபடக்கூடிய கைத்தறி நெசவுப்பணிகளை செயல்படுத்தி பார்க்க உள்ளோம்.
இம்முயற்சி வெற்றிபெற்றால் மேலும் பெரிய அளவில் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கவும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிப்பதும்தான் இச் சோதனை முயற்சிகளுக்கு பின்னால் உள்ள நோக்கங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
#14
கவனம்...துப்பினால் துடைக்கணும்; புனே நகராட்சி புதிய எச்சரிக்கை
1542196569847.png

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படுவது மட்டுமல்லாமல், துப்பியவர் அந்த இடத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று புனே நகராட்சி உத்தரவிட்டுள்ளது.
புனே நகராட்சியின் இந்த உத்தரவால் புனே நகரவாசிகள் புகையிலை, பான்மசாலாவை வாயில்போட்டு கண்ட இடங்களில் எச்சிலை துப்பமுடியாமல் திணறி, உரிய இடங்களில் தேடி துப்புகின்றனர்.
வடமாநிலங்களில் அரசு அலுவலக சுவர்கள் மட்டுமின்றி பொது இடங்கள் அனைத்திலும் மக்கள் பான்மசாலா, பாக்கு, புகையிலை ஆகியவற்றை வாயில் மென்று கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் சுகாதாரக்கேடு உருவாகி புனே நகராட்சிக்குச் சுத்தம் செய்வது பெரும் தலைவலியை ஏற்படுத்த வந்தது.
இதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 31-ம் தேதி முதல் பொது இடங்களிலும், சுவர்களிலும் எச்சில் துப்பி அசுத்தம் செய்பவர்களுக்கு 150 ரூபாய் உடனடி அபராதமும், குப்பைத் தொட்டியில் குப்பைகளைப் போடாமல் சாலையில் வீசுபவர்களுக்கு ரூ.180 அபராதமும், பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையில், கடந்த 3-ம் தேதி முதல் 156 பேர் வரை சிக்கினார்கள். அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனாலும், அபராதம் மட்டும் வசூலித்தால் போதாது, துப்பியவர்களே சுத்தம் செய்யும் நடவடிக்கையை புனே நகராட்சி நிர்வாகம் கடந்த 5-ம் தேதி முதல் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இது குறித்து புனே நகராட்சி அதிகாரி தியானேஸ்வர் மோலக் நிருபர்களிடம் கூறியதாவது:
புனே நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதை குறைக்கும் முயற்சியில் இறங்க அபராதம் விதித்தோம். ஆனால், அபராதம் விதிப்பதைக் காட்டிலும், இன்னும் கடுமையாக்க எச்சில் துப்புபவர்களே அந்த இடத்தைச் சுத்தம் செய்யவும் உத்தரவிட்டுள்ளோம்.
அதுமட்டுமல்லாமல், சுத்தம் செய்பவர்களை புகைப்படம் எடுத்து பொது இடங்களிலும் ஒட்டுவதற்கு முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்பி அசுத்தம் செய்வதை தவிர்ப்பார்கள்.
முதல்கட்டமாக பீபிவாடி, அனுத், ஏரேவாடா, கசாபா, கோலே சாலை ஆகிய பகுதிகளில் அமல்படுத்தி இருந்தோம், இனிமேல் இந்த விதிமுறை 15 வார்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் 15 சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
கடந்த 8 நாட்களில் 156 பேர் பொது இடங்களில் எச்சில் துப்பி சிக்கிக்கொண்டார்கள். அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. புனே நகரைச் சுத்தமாக வைத்து ஸ்வச் சர்வேயில் முதலிடத்தைப் பிடிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
#15
பொருள் பழசு சித்திரம் புதுசு


வீட்டுப் பாடத்தை எழுதிக்கொண்டிருக்க பக்கத்தில் அமர்ந்து புள்ளிக்கோலம் போட்டுப் பழகிக்கொண்டிருக்கிறார் எண்பது வயதான ஸ்ரீரங்கா. சென்னை பெரம்பூரில் உள்ள செம்பியம் பகுதியில் வசித்துவரும் இவர், தள்ளாத வயதிலும் நுணுக்கமான அப்லிக் கலையைச் சிறப்பாகச் செய்துவருகிறார்.
புத்தாண்டு பிறந்துவிட்டால் மதிப்பிழக்கும் பொருட்களில் காலண்டருக்கு முதலிடம். ஆனால், கடவுள் உருவங்கள் அச்சிடப்பட்டிருக்கும் பழைய காலண்டர்கள்தாம் ஸ்ரீரங்காவின் அப்லிக் வேலைக்கு ஆதாரமாக உள்ளன. அப்லிக் கலைக்குத் தேவையான பொருட்களைப் பலரும் கடைகளில் தேடித் தேடி வாங்குவார்கள்.
ஆனால், இவரோ இதுவரை எந்தப் பொருளையும் கடைகளில் வாங்கியது கிடையாது. வீட்டில் வீணாகும் கிஃப்ட் கவர், அறுந்த மணிகள், குழந்தைகளுடைய பழைய துணியில் உள்ள பட்டன்கள், லேஸ், ரிப்பன், கம்பளித் துணி, பழைய புடவைகளின் ஜரிகை ஆகியவற்றைக் கொண்டு கைவினைக் கலையில் அசத்துகிறார்.
“நான் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த பெண்ணு. இப்போ மாதிரி அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கேட்டதையெல்லாம் வாங்கித்தரும் பழக்கமில்லை. அதனால் வீட்டுல என்ன பொருள் கிடைக்குமோ அதைவைத்தே கைவேலைப்பாடுகளைச் செய்வேன். கைவினைக் கலை மீது எனக்கு ஆர்வம் ஏற்பட என்னுடைய அம்மாதான் காரணம். அவங்ககிட்ட இருந்துதான் புள்ளிக் கோலம் போடக் கத்துக்கிட்டேன்.
பிறகு ரங்கோலி, சமையல், நாட்டு மருந்து, ஓவியம் வரைவது, கைவினைப் பொருட்களைச் செய்வதுன்னு படிப்படியா பலவற்றைக் கற்றுக்கொண்டேன். அதேபோல் எனக்கு எதையும் வீணாக்கப் பிடிக்காது. பிள்ளைகளுக்குப் பரிசாக வரும் பொருட்களைச் சுற்றியிருக்கும் காகிதங்களைக்கூடப் பத்திரமாக எடுத்துவைத்து பின்னர் அப்லிக் வொர்க் செய்யும்போது பயன்படுத்திக்கொள்வேன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களில் அப்லிக் வொர்க் செய்திருக்கேன்” என நினைவுகூர்கிறார் ஸ்ரீரங்கா.
தற்போது ஸ்ரீரங்காவைப் பின்பற்றி அவருடைய பேத்திகளும் ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்வது போன்றவற்றில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். மறுசுழற்சி பற்றி இன்றைக்கு நாம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அது குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாத காலத்திலிருந்தே வீணாகும் பொருட்களைக் கொண்டு வியப்பான சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார் ஸ்ரீரங்கா. அதை அடுத்த தலைமுறைக்கும் அவர் பயிற்றுவிப்பது பாராட்டுக்குரியது தானே!
 
#16
முடக்கப்படும் முன்னேற்றம்
1542197097750.png

முடக்கப்படும் முன்னேற்றம்
அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து, ‘ஷிரோஸ் ஹேங்அவுட்’ எனும் காபி ஷாப்பை புதுடெல்லியில் நடத்திவருகின்றனர். உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியின்போது அந்தக் கடையின் கிளை லக்னோவில் தொடங்கப்பட்டது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் இந்த வகைக் கடைகளைத் திறக்குமாறு அவர் கூறினார். அதற்குள் அவரது ஆட்சி முடிந்துவிட்டது.
இந்த நிலையில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்தக் கடைகளை மூடும்படி கூறியுள்ளார். மேலும், “இப்படி காபி ஷாப் திறப்பதாலேயே, பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னேற முடியாது. அவர்களுக்கு எப்படி மறுவாழ்வு அளிப்பது என எங்களுக்குத் தெரியும். இப்படி காபி ஷாப் நடத்துவது அவசியமற்றது” என்று சொல்லியிருக்கிறார். இது அங்கு வேலை பார்க்கும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. சொந்தக் காலில் நிற்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அவர்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளனர்.


அடிமைகளை மீட்டெடுத்தவர்
பெர்முடாவில் 1788 செப்டம்பர் 1-ம் தேதி கறுப்பினக் குடும்பத்தில் பிறந்தவர் மேரி பிரின்ஸ். அவருக்குச் சுதந்திரம் என்பது கனவிலும் சாத்தியமற்றது. 1826-ல் டேனியல் ஜேம்ஸ் எனும் முன்னாள் அடிமையை மணந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். கணவரிடமிருந்து மேரி பிரிக்கப்பட்டார்.

1808-ல் இங்கிலாந்தில் அடிமை விற்பனை தடை செய்யப்பட்டிருந்ததால் முதன்முறையாகச் சுதந்திர காற்றைச் சுவாசித்தார். அங்குப் பிழைப்புக்கு வழியில்லை. வறுமையை மீறித் தன்னைப் போன்ற அடிமைகளின் விடுதலைக்காக மேரி போராடினார்.
‘சுதந்திரம் மனிதனின் அடிப்படை உரிமை’ என அவர் முன்னெடுத்த விவாதம் பேசுபொருளானது. ‘மேரி பிரின்ஸ் எனும் மேற்கிந்திய அடிமையின் வரலாறு’ என்ற அவரது சுயசரிதை அடிமைகள் குறித்த இங்கிலாந்தின் பொதுப்புத்தியை மாற்றியமைத்தது. அதுவே எட்டு லட்சத்துக்கும் மேலான அடிமைகளை விடுவிக்கவும் வழியமைத்தது. “ஆடு, மாடுகளைப் போல நானும் என் சகோதரிகளும் அடிமைகளாக விற்கப்பட்டோம்.
அது துயரமான பிரிவு. ஒருவர் பின் ஒருவராக நாங்கள் சென்றோம். என் தாய் வெறுங்கையோடு வீடு திரும்பினார்” என்ற வரிகள் அடிமை வாழ்வின் வலிக்கும் வேதனைக்கும் சாட்சியாக இன்றும் உள்ளன. அவரது 230-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக அக்டோபர் 1-ம் தேதி சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
நம்பிக்கை தந்த நோபல் பரிசு
இயற்பியலில் பெண்களுக்குப் பெரிய அளவுக்கு அங்கீகாரம் கிடைத்ததில்லை. 2017 வரை இரண்டு பெண்களே இயற்பியலில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். முதல் நோபல் பரிசை மேரி கியூரி பெற்றார். இரண்டாவதாக 1963-ல் மரியா மேயர் பெற்றார். பெண்கள் இயற்பியலில் நோபல் வென்று 55 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்த நிலையில், இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை டோனா ஸ்ட்ரிக்லேண்டு பெற்றுள்ளார். அதுவும், “இயற்பியல் துறை என்பது ஆண்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது” என்று விஞ்ஞானி செர்ன் அறிவித்த மறுநாளே நோபல் பரிசை வென்று பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்துள்ளார்.

“இயற்பியல் துறையில் இருக்கும் பெண்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய தருணம் இது. இதுவரை இயற்பியலிலிருந்து நாம் விலக்கி வைக்கப்பட்டிருந்தோம். நமது பங்களிப்பு அங்கீகாரமற்றதாக இருந்தது.
இயற்பியலைப் பெண்கள் இனி வேகமாக, மிக வேகமாக முன்னெடுத்துச் செல்வார்கள்” எனப் பேராசிரியை டோனா நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசை ஃபிரான்செஸ் அர்னால்ட் வென்றிருக்கிறார்.
இந்த வெற்றி, அறிவியலில் பெண்களின் பங்களிப்பைக் கேள்விக்கு அப்பாற்பட்டதாக ஆக்கியிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராகப் போராடிவரும் ஈராக்கைச் சேர்ந்த நாதீயே மூராத்துக்கு (23 வயது) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காவு வாங்கும் கடன் தொல்லை
ஈழப் போரால் ஏற்பட்ட காயத்தின் வடுவும் குருதியின் நெடியும் இன்றும் மறையவில்லை. உறவுகளையும் உடைமையையும் இழந்த மக்கள் இயல்பு வாழ்வுக்கு மெல்லத் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக 37 பெண்கள் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி அங்கு நடைபெற்ற விழாவில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் இதைத் தெரிவித்தார்.


மேலும், அவர் பேசும்போது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் கடன் தொல்லையால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பெண்கள் ஏமாற்றாமல் எப்படியாவது கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்திவிடுவார்கள் என்பதால், அவர்களை இலக்காகக்கொண்டே கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அங்கு இயங்குகின்றன. இந்த ஆண்டு 37 பெண்கள் இந்த மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 163 குடும்பங்கள் நீதிமன்றம் சென்று பிரிந்துள்ளன. 300-க்கும் அதிகமான பெண்கள் தமது பிள்ளைகளைப் பிரிந்து வெளிநாடுகளுக்குப் பிழைப்புக்காகச் சென்றுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.
சமையலறையை விட்டு வராதீர்கள்?
ஆனந்திபென் பட்டேல், குஜராத்தின் முன்னாள் முதல்வர். தற்போது மத்திய பிரதேசத்தின் ஆளுநராக உள்ளார். அவ்வப்போது ஒழுக்கம், அறிவுரை, தத்துவம் என ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது அவரது வாடிக்கை.

அந்த வகையில், மாணவிகளுக்கு அவர் அளித்த அறிவுரை, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜ்கார்க் மாவட்டத்தில் ஒரு விழாவில் பங்கேற்றபோது கஸ்தூர்பா மகளிர் விடுதி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, “நீங்கள் படிப்பில் பல சாதனைகளைப் புரிந்துவருகிறீர்கள். அதே நேரத்தில் சமையலறையை விட்டு நீங்கள் வெளியே வந்து விடாதீர்கள்.
நன்றாகச் சமையுங்கள். நன்றாகச் சமைக்கக்கூடிய பெண்களுக்கு எதிர்காலத்தில் மாமியாருடன் நல்ல உறவு ஏற்பட வாய்ப்பு அதிகம். பெண்கள் தலைமுடியை வெட்டக் கூடாது.
நீளமான தலைமுடியே பெண்களுக்குக் கவுரவத்தை அளிக்கும்” என அவர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
 
#19
20 லட்சம் ரூபாய் தாலி... இத்தாலி லில்லி மலர்கள்... தீப்வீர் ஜோடி திருமண விசேஷங்கள்! #Deepveer
பாலிவுட் திரையுலகம் மட்டுமல்ல, வடஇந்தியா முழுவதும் `டாக் ஆஃப் தி டவுனாக' இருப்பது `தீப்வீர்' திருமணம்தான். பாலிவுட்டின் டாப் ஸ்டார்ஸ் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஜோடிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்தக் காதல் ஜோடியின் திருமணம் நவம்பர் 14-ம் தேதி இத்தாலியில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. அவர்களின் `டெஸ்டினேஷன் வெட்டிங்' பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்...வெனீஸ் நகரம், பைசா கோபுரம் போன்ற அதிசயங்கள், லியோனார்டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ போன்றோரின் ஓவியங்கள், பியானோ மற்றும் வயலின் கருவிகளின் பிறப்பிடம், பீட்சா, பாஸ்தா, எஸ்ப்ரெஸ்ஸோ போன்ற உணவுகளின் தலைநகரம், ஃபேஷன் புரட்சி உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்களை ஏந்தியபடி உலக மக்கள் அனைவரையும் கவர்ந்த ரொமான்டிக் டெஸ்டினேஷன்தான் `இத்தாலி'. இங்கு, இயற்கை வளங்களோடு காதலும் பெரியளவில் மதிக்கப்படுகிறது. அதனால்தான் என்னவோ திருமணத்துக்காகப் பலரும் இத்தாலியைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் `கோமோ' ஏரிதான் பிரபலங்களின் `நம்பர் 1' சாய்ஸ். `தீப்வீர்' ஜோடியும் தங்களின் திருமணத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் `லேக் கோமோ'. பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பாடகர் டேவிட் பவ்வி, சின்னத்திரை நாயகி கிம் கார்தர்ஷியன் போன்றோரின் திருமணமும் இந்த ஏரியில்தான் நடைபெற்றன. விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் அம்பானியின் மகள் இஷாவின் நிச்சயதார்த்தமும் இந்த ஏரியில்தான் நடைபெற்றது.இவர்களின் திருமணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் உட்பட மொத்தம் 30 பேரைதான் அழைத்திருக்கிறார்கள். அதில் பாலிவுட்டிலிருந்து ஷாரூக்கான், `பத்மாவத்' இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரபல நடன இயக்குநர் ஃபரா கான் உள்ளிட்டோரை மட்டுமே திருமணத்துக்கு அழைத்திருக்கிறார்கள். மற்றவர்கள், நவம்பர் 21-ம் தேதி பெங்களூரிலும், 28-ம் தேதி மும்பையிலும் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.பாலிவுட் வரலாற்றிலேயே `தீப்வீர்' திருமண பட்ஜெட்தான் மிகவும் அதிகமாம்! தீபிகாவின் தாலி மட்டும் 20 லட்சம் ரூபாயாம்! இவர்களின் திருமணம், இரண்டு வெவ்வேறு பாரம்பர்ய முறைப்படி நடக்கவிருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா, அவர்களின் பாரம்பர்ய முறைப்படி `கொங்கனி திருமணமும்', மும்பையைச் சேர்ந்த ரன்வீரின் பாரம்பர்ய முறைப்படி சிந்தி திருமணமும் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

திருமணத்துக்கு வருபவர்களுக்கு `ஸ்ட்ரிக்ட் ரூல்' ஒன்றை உருவாக்கியுள்ளனர் தீப்வீர் ஜோடி. நிகழ்விடத்தில் மொபைல்போன் உபயோகிக்கக் கூடாது என்பதுதான் அந்த ரூல்! அங்கு வந்திருப்பவர்கள் முழுக்க முழுக்க இவர்களோடு ஒன்றிணைந்து கொண்டாடவேண்டும் என்பதற்காகவே இந்த விதிமுறையை அறிவித்திருக்கிறார்களாம். ``மொபைல்களோடு, மீடியாவுக்கும் தடை'' என்று அன்புக்கட்டளையிட்டவர் தீபிகாதானாம்!

இந்நிலையில், நேற்று உறவினர்கள் சூழ மெஹெந்தி திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு இருவரும் ஒரே நிற ஆடை அணிந்திருந்தனர். இவர்களுக்கான பிரத்தியேக ஆடைகளை வடிவமைத்தவர், `விருஷ்கா'வுக்கு ஆடைகள் வடிவமைத்த சபியாசச்சி முகர்ஜி. இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும், `தீப்வீர்' ஜோடி கைப்பட எழுதிய குறுஞ்செய்தியைக் கொடுத்திருக்கின்றனர். மெஹெந்தி விழாவைத் தொடர்ந்து, மிகவும் எமோஷனலாகிப்போன ரன்வீர், தீபிகாவையும் தன் உரையாடலால் நெகிழவைத்துள்ளார்.

மணமேடையை அலங்கரிக்க, Florence நகரத்திலிருந்து பன்னிரண்டு பேரை வரவழைத்துள்ளனர். தீபிகாவின் ஃபேவரிட் மலரான `லில்லி' மலர்களைக்கொண்டே மேடையை அலங்கரித்துள்ளனர். பாலிவுட் மட்டுமல்லாது, உலக ரசிகர்கள் அனைவரும் `தீபிகாவுக்கு, ரன்வீர் என்ன மாதிரியான சர்ப்ரைஸ் வைத்திருப்பாரோ!' என்றபடி வெயிட்டிங்!
 
#20
1980-களின் நடிகர்கள் சந்திப்பு: நடிப்பு, நடனம் என அசத்திய நடிகர்கள்
1980-களில் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகர்கள் கூட்டணி, ஆண்டுதோறும் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கூட்டணியில் உள்ள நடிகர்களில் ஒருவர் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வார். நடிகர்கள் ஒன்றுகூடி தங்களுடைய நட்பு, பழங்கால நினைவுகள் ஆகியவற்றைப் பேசி மகிழ்வர்.
2018-ம் ஆண்டுக்கான 80-களின் நடிகர்கள் சந்திப்பு நவம்பர் 10-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் 22 நடிகர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வோர் ஆண்டும் இந்தச் சந்திப்புக்கான வடிவமொன்று உருவாக்கப்படும். அதற்கேற்ப நடிகர்கள் ஆடை அணிகலன் அணிந்து வருவர். இந்த ஆண்டு டெனிம் மற்றும் டைமண்ட்ஸ் (வைரங்கள்) எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
சவேரா ஹோட்டலின் நீனா ரெட்டி, சுஜாதா முந்த்ரா, நிவேதிதா ஆகியோர் நிகழ்ச்சி நடந்த இடத்தை அலங்கரித்திருந்தனர். சோஃபா, பூக்கள், விரிப்புகள், ஜன்னல் திரைச்சீலைகள் எல்லாமே டெனிம் துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. டெனிம் ஆடையில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன.
முதலில், நடிகர்கள் 12 பேரும் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். வெள்ளை சட்டை, ப்ளூ ஜீன்ஸ் சகிதமாகவும், சிலர் டெனிம் ஜாக்கட்டுகளுடனும் வந்து சேர்ந்தனர். ஜாக்கி ஷெராஃப், ட்ரெண்டியான டெனிம் ஜாக்கெட்டில் வந்து கவனம் ஈர்த்தார். பின்னர் மோகன்லால் வந்தார். இந்த நிகழ்ச்சிக்காகவே போர்ச்சுகலில் இருந்து சென்னை வந்திருக்கிறார். அவரது பிரத்யேக சட்டையின் பின்னால் 80 என எழுதப்பட்டிருந்தது.
ஜீன்ஸ், குர்தி, டிசைனர் சேலைகள் என டெனிம் ரக ஆடைகளில் அணிவகுத்தனர் பெண்கள். பூனம் திலான், மும்பையில் இருந்து அனைவருக்கும் பரிசுப்பொருள் கொண்டு வந்திருந்தார். ஒவ்வொரு நடிகரின் புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக செல்போன் கூடு ஒன்றை அனைவருக்கும் கொடுத்தார்.
பின்னர் நடிகர்கள் அனைவரும் டம்ப் சராட்ஸ் விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்பட்டது. நரேஷ், சத்யராஜ், ஜெயராம் ஆகியோர் சிவாஜி கணேசனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முக்கியமான தருணங்களை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆர்., கமல்ஹாசனுக்கு மரியாதை செய்யும் வகையில் சில காட்சிகள் நடித்தனர்.
‘விஸ்வரூபம்’ படத்திலிருந்து ஒரு காட்சியை ஜெயராம் நடித்துக்காட்டி கைதட்டு வாங்கினார். பெண்கள் ‘கீதா கோவிந்தம்’ படத்திலிருந்து ‘இன்கம் இன்கம்’ பாடலுக்கு ஆடினர். மோகன்லால், கேரள படகுப்போட்டி போல் பாரம்பரிய பாடலுக்கு ஏற்ப படகுப்போட்டி மாதிரியை நடத்தினார்.
ராஜ்குமார் சேதுபதி, சுஹாசினி மணிரத்னம், குஷ்பூ சுந்தர், பூர்ணிமா, லிஸி லக்‌ஷ்மி ஆகியோர் நிகழ்ச்சிக்கு மெருகு சேர்த்தனர். பின்னிரவில் கேக் வெட்டிக் கொண்டாடினர். 2019-ல் 10-வது ரீயூனியன் நடைபெறவிருக்கிறது.

1542208874441.png