Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

lakshmi

Active member
May 9, 2018
402
56
43
பரிமளம் நிதானமாக யோசித்து செய்கிறார்.
 
  • Love
Reactions: Shenba

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
135
484
63
பரிமளம் நிதானமாக யோசித்து செய்கிறார்.
நன்றிப்பா!
குடும்பத்தில் யாராவது ஒருவர் நிதானமா இருக்கணுமில்லயா!
 
  • Like
Reactions: lakshmi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
135
484
63

அத்தியாயம் – 8

“என்ன வைதேகி இவ்ளோ யோசிக்கிற? அருமையான பையன். அந்தக் குடும்பத்தைப் பத்திச் சொல்லவே வேணாம். உன் பொண்ணு எப்படியெல்லாம் வாழணும்னு ஆசைப்படுறியோ, அப்படியே நடக்கும். நீ சொல்ற பதிலை வச்சித்தான் நான், பரிமளத்துகிட்ட பேச முடியும். கோயில்ல பார்த்தப்போ அவனுக்கு வரன் பார்த்துட்டு இருக்கறதா சொன்னாங்க. எனக்கு, உன் பொண்ணுதான் நினைவுக்கு வந்தா” என்றார் வீட்டின் உரிமையாளர்.

தயங்கிய வைதேகி, “அதுக்கில்லம்மா… என் பொண்ணையும் ஒரு வார்த்தைக் கேட்கணும். அவளோட விருப்பம் இல்லாம, என்னால எதுவும் செய்யbமுடியாது” என்றார்.

“நம்ம பிள்ளைகளுக்கு, நாம கெடுதலா நினைக்கப் போறோம். அவளுக்கும் இருபத்தி நாலு வயசாகிடுச்சின்னு அன்னைக்கு எவ்ளோ கவலைப்பட்ட. நாம எடுத்துச் சொல்றதுலதான் எல்லாம் இருக்கு. ஆம்பள புள்ளையாயிருந்தா, முப்பது வயசு வரைக்கும் கூட நாம அக்கடான்னு இருக்கலாம்.

பொம்பள பிள்ளையை அப்படி வச்சிட்டிருக்க முடியுமா? ஆயிரத்தெட்டு வக்கணை பேசினாலும், காலாகாலத்துல நடக்க வேண்டியது நடந்தாதான் நமக்கும் நல்லது; புள்ளைங்களுக்கும் நல்லது. உன் பொண்ணுகிட்டப் பதமா பேசிப் புரியவை. நான் நாளைக்குப் போன் பண்றேன்” என்றவர் விடைபெற்றுக் கிளம்பினார்.

கதவை மூடிவிட்டு வந்த வைதேகிக்கு, மனம் ஒரு நிலையில் இல்லை.

ஸ்ரீராமின் முகம் நினைவிற்கு வர, ‘நிச்சயம் என் மகளுக்கு ஏற்ற வரன்’ என்பதில் அவருக்குத் துளிகூட சந்தேகமில்லை. ‘அவன் மட்டுமல்ல, அவனது அன்னையும்கூட எவ்வளவு அருமையாகப் பேசினார். இப்படியொரு அழகான குடும்பத்தில், என் மகளுக்கும் இடமிருக்குமா கடவுளே!’ என நினைத்துக் கொண்டார்.

கூடவே, ‘தங்களது குடும்பத்தைப் பற்றி அனைத்தும் அறிந்த பரிமளம், இந்தச் சம்மந்தம் பற்றிப் பேசும்போது என்ன நினைப்பார்?’ என்ற கவலையும் தோன்றாமலில்லை.

இரவு பணிக்குச் செல்லவேண்டி இருந்ததால், உள்ளறையில் உறங்கிக் கொண்டிருந்த மகளின் அருகில் அமர்ந்தார். அமைதியான முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்தவளது தலையை வருடிக் கொடுத்தார்.

லேசாக உறக்கம் கலைந்து புரண்டவள், “டைம் என்னம்மா?” என்றாள்.

“அஞ்சாச்சும்மா” என்றார்.

“இன்னும் ஒரு அரைமணிநேரம் கழிச்சி எழுப்பும்மா” என்றவள், அன்னையின் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டாள்.

கண்களைத் திறக்காமலேயே, “நீ தூங்கலையாம்மா?” எனக் கேட்டாள் திவ்யா.

“இல்லம்மா! வீட்டுக்காரம்மா வந்திருந்தாங்க…”

“என்னவாம்?”

“ம், சும்மாதான் வந்தாங்க…” என்றார்.

கண்களைத் திறந்தவள், “இல்லயே, உன் முகத்தைப் பார்த்தா ஏதோ, விஷயமிருக்குன்னு சொல்லுதே” என்றாள்.

“ஆராய்ச்சி போதும். கொஞ்சநேரம் தூங்கு. வேலையைப் பாதியில விட்டுட்டு வந்துட்டேன் முடிச்சிட்டு வரேன்” என்றபடி எழுந்தார்.

திவ்யாவும் எழுந்து அமர்ந்தாள்.

“அப்போ, ஏதோ இருக்குல்ல” என்ற மகளை ஆழ்ந்து நோக்கியவர், ஒரு முடிவுக்கு வந்தவராக அவளெதிரில் அமர்ந்தவர், “ஒண்ணு சொன்னா கேட்பியா?” என்றார்.

கலைந்திருந்த கூந்தலை அவிழ்த்துக் கொண்டையிட்டவள், “கல்யாண விஷயம் தவிர, வேற எதுவாயிருந்தாலும் சொல்லு. கேட்கறேன்” என்றாள் அழுத்தமாக.

“திவ்யா! நான் சொல்றத புரிஞ்சிக்க. மனசுல இருக்கற வெறுப்பைத் தூக்கித் தூரப் போடு. என்னைப் பத்தியும் கொஞ்சம் நினைச்சிப் பாரும்மா! நான் நல்லாயிருக்கும் போதே, நீ சந்தோஷமா இருக்கறதைப் பார்க்க வேணாமா?” என்றார்.

அவரை ஆழ்ந்து பார்த்தவள், “மனசு நிறைய அழுக்கும், வக்கரத்தையும் வச்சிட்டு இருக்கவங்களே நல்லாயிருக்கும் போது, யாருக்கும் மனசார கெடுதல் நினைக்காத நீ, நிச்சயமா நல்லாதாம்மா இருப்ப” என்றாள் அன்புடன்.

“ஐயோ! நான் அதைச் சொல்லல… உன் கல்யாணம்…” என்றவரை இடைமறித்தாள்.

“அம்மா! நான், கல்யாணத்தை வெறுக்கல. இப்போதைக்கு, ஒரு ஆம்பளையை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைக்கிற அளவுக்குப் பக்குவம் வரல. கூடவே, நம்பிக்கையும் இல்ல. நிச்சயமா, நான் கல்யாணம் செய்துக்குவேன். அதுக்கு அந்த ஆள் மேல முதல்ல எனக்கு மதிப்பும், மரியாதையும் வரணும். மனசுக்குப் பிடிக்கணும். அப்புறம் தான், கல்யாணம்” என்றாள்.

“நிச்சயமா திவி! உன் மனசுக்குப் பிடிச்சா மட்டும்தான் கல்யாணம். நீ நினைக்குற அத்தனையும் இந்தப் பையனைப் பார்த்தா உனக்கு வரலாமில்ல. நீ சரின்னு சொன்னா, அவங்களை வரச்சொல்லி பேசலாம். மாப்பிள்ளையைப் பாரு… பேசணுமா பேசு. உனக்கு முழுச் சம்மதம்னா, மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பார்க்கலாம். என்ன சொல்ற?”

ஆவலும் எதிர்பார்ப்புமாகக் கேட்ட அன்னையை, ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்பது போலப் பார்த்து விட்டுக் கட்டிலிலிருந்து இறங்கினாள்.

“திவி! அவங்களுக்கு என்ன பதில் சொல்லட்டும்?” எதிர்பார்ப்புடன் கெஞ்சும் குரலில் கேட்டார்.

வேகமாக மூச்சை விட்டவள் சலிப்புடன், “ஏம்மா! என்னை இப்படிப் படுத்தற? எனக்குக் கல்யாணம் செய்துவைன்னு கேட்டேனா?” என்று சிடுசிடுத்தாள்.

“உனக்கு இருபத்தி நாலு வயசாகுது திவி! இன்னும்…” என்றவரை வேகமாக இடைமறித்தாள்.

“போதும்மா! இருபத்தி நாலு வயசானா, கல்யாணம் செய்துக்கணும்னு கட்டாயமா?” எரிச்சலுடன் சொன்னவள், “ஆனாலும், உனக்கு ரொம்பத் தைரியம்மா! எங்க அப்பா மாதிரி ஒரு ஆளைக் கல்யாணம் செய்து இத்தனை வருஷம் அவஸ்தைப்பட்டும், எனக்குக் கல்யாணம் செய்து வைக்கணும்னு நினைக்கிற பாரு… நீ ரொம்பக் கிரேட்!” என்றாள் கிண்டலாக.

“எல்லோருமே கெட்டவங்க இல்லை திவிம்மா! நல்லவங்களும் இருக்காங்க.”

“நானும், எல்லோரும் அப்படின்னு சொல்லலை. ஊர்ல நிறைய பேர் அப்படித்தான் இருக்கானுங்க” என்றவளுக்குத் தேவையில்லாமல் ஸ்ரீராமின் முகம் நினைவில் வர, வாய்க்குள்ளேயே ஏதோ முனகினாள்.

“இருக்கட்டுமே. ஆனா, இந்தப் பையனைப் பார்த்தா ரொம்ப டீசண்டா, பொறுப்பானவனா தெரியறான்” சொல்லிக்கொண்டே சென்ற வைதேகி, திவ்யாவின் முறைப்பில் அப்படியே அடங்கினார்.

“இப்பல்லாம், டிப்டாப்பா டிரெஸ் பண்ணிட்டு வர்றவனுங்க தான் ஒண்ணாம் நம்பர் ஃப்ராடா இருக்கானுங்க” இலகுவாக ஆரம்பித்து, கடுப்புடன் முடித்தாள்.

வைதேகிக்கு போதும் போதும் என்றிருந்தது.

“கடைசியா என்னதான் சொல்ற?” கவலையும், எரிச்சலுமாகக் கேட்டார்.

“என்னைக் கொஞ்ச நாளைக்கு, நிம்மதியா இருக்கவிடுன்னு சொல்றேன். முகத்தைக் கழுவிட்டு வரேன் சூடா ஃபில்டர் காஃபி போட்டுக் குடு” என்ற மகளை ஆயாசத்துடன் பார்த்தார் வைதேகி.

**************

“சே! இந்த சிக்னல் வேற சரியாவே வரமாட்டேன்னுது” செல்போனுடன் வீட்டில் அங்கும் இங்குமாக சுற்றியபடி புலம்பிக்கொண்டிருந்தாள் வர்ஷா.

“ஏய்! வர்ஷா! ஒழுங்கா ஒரு இடமா உட்காரு. எங்கேயோ மேலேயே பார்த்துகிட்டு நடக்கற” என்று அதட்டலாகச் சொன்னார் பரிமளம்.

“இருங்க அத்தை! அத்தான், போன் பண்ணாங்க. பேசிட்டிருக்கும் போதே கால் கட்டாகிடுச்சி” என்று வருத்தத்துடன் சொன்னாலும், செல்லை உயர்த்திப் பிடித்தபடி சிக்னல் வருகிறதா என்று பார்வை கைப்பேசியிலேயே இருந்தது.

“ஒரு நாளைக்கு நாலு தடவை பேசத்தான் செய்றீங்க. அப்படி என்னடி விஷயமிருக்கு பேச?” என்றார் பரிமளம்.

வேகமாக, “அதெல்லாம் உங்களுக்குப் புரியாது அத்தை!” என்றாள் மருமகள்.

“ஆமாம்டி! எங்களுக்கெல்லாம் ஒண்ணும் புரியாமதான், நாங்கள்லாம் குடும்பம் நடத்தினோமா…” என்று அவளுக்குச் சரிக்குச் சரியாகப் பேசிக்கொண்டிருந்தார் பரிமளம்.

“ஏன்க்கா! அவதான் சின்னப் பொண்ணு. விடேன்” என்றார் கணேசன்.

“ஏன்டா! உனக்குப் புரியாதுன்னா… அப்படி எதைப் பத்திப் பேசறா? இல்ல எனக்குப் புரியாத பாஷைல பேசுவாளா” என்றவரை எப்படிச் சமாளிப்பதென்று தெரியாமல் வாயை மூடிக்கொண்டார் கணேசன்.

ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராம், இவர்களது பேச்சில் கடுப்பானான்.

“ஏன் அத்தை இன்னைக்குக் கோயிலுக்குப் போகலையா?” என்றான்.

“ஏன்டா! என்னவோ, என்னை உன் தோள்ள சுமந்துட்டு இருக்கறது மாதிரி சலிச்சிக்கிற?” எனக் கேட்டார்.

ஸ்ரீராமிற்கே கண்ணைக் கட்டியது.

“ஒரு புக்கைக்கூட ஒழுங்காப் படிக்க முடியல” என்றவன் புத்தகத்தை டீபாயின் மீது போட்டான்.

சற்றுநேரம் தனது மொபைலை நோண்டிக்கொண்டிருந்தவன், “ஏன் அத்தை? உங்க காலத்துல மொபைல் போன் இருந்திருந்தா எவ்ளோ நல்லாயிருந்திருக்கும் இல்ல” என்றான்.

அவனை மேலும், கீழுமாகப் பார்த்தவர், “அப்படியே இருந்துட்டாலும், உன் மாமா என்கிட்ட பேசிட்டுத்தான் மறுவேலை பாப்பார். எங்க காலத்துலலாம் இப்படியா? மாமியார், நாத்தனார் முன்னாடி கட்டின புருஷன பார்க்கக்கூட முடியாது. அவ்ளோ ஸ்ட்ரிக்ட்” என்றார் பரிமளம்.

“இப்போ நீங்க வர்ஷாகிட்ட இருக்கா மாதிரியா?”

“ஏன்டா! உன் தங்கச்சியை நான் என்ன கொடுமையா படுத்திட்டேன்? என்னை மாதிரி ஒரு மாமியார் உன் தங்கச்சிக்குக் கிடைக்குமான்னு கேளு” என்றார்.

“ஆஹ், பெரிசா அலட்டிக்காதீங்க அத்தை! சஹி மாமியார் இல்லயா?” என்றான் வேண்டுமென்றே.

“நாம் ரெண்டு பேர் தானேடா பேசிட்டு இருக்கோம். எதுக்கு நீ அவங்களை இழுக்கற?” என்றார் கோபத்துடன்.

“ஆஹ், அப்போ நீங்க மட்டும் இல்ல, சஹி மாமியாரும் நல்ல மாமியார் தானே” என்றான்.

“டேய்! மாமியாரா இருக்கறது எவ்ளோ பெரிய வேலை தெரியுமா? எவ்வளவு தான் நல்ல மாமியாரா இருந்தாலும், அந்த வீட்டு மருமகளும், என் மாமியார் நல்லவங்கன்னு சொல்லமாட்டா தெரியுமா! உன் பொண்டாட்டி வந்தா இல்ல தெரியப் போகுது இந்த வீட்டுக் கதை” என்று சுகுணாவைப் பார்த்து கண்களைச் சிமிட்டினார் பரிமளம்.

சுகுணாவும் சிரித்துக் கொண்டே அமைதியாக இருக்க, ஸ்ரீராம் இருவரையும் பார்த்தான்.

“ஆக மொத்தத்துல… எந்த வீட்டு மருமகளும், நாத்தனார்கிட்ட நல்ல பேரே வாங்க முடியாது அப்படித்தானே” என்றதும் வர்ஷாவும், கணேசனும் வாய்விட்டு நகைத்தனர்.

அனைவரையும் பார்த்த பரிமளம், “இப்போ திருப்தியாடா உனக்கு. நேரம் ஓடுச்சா…” என்றார்.

“இதுக்கெல்லாம் கோச்சிக்கலாமா அத்தை!” என்று அவரை கலாய்க்க, அங்கே மகிழ்ச்சி கரைபுரண்டு கொண்டிருந்தது.

மாடிப்படியில் சாய்ந்து நின்றிருந்த வர்ஷாவின் மொபைல் ஒலிக்க, “அத்தானோட போன்…” என்றபடி வேகமாக படியேறியவளது கால் இடற, “அம்மா!” என்ற அலறலுடன் படிகளில் உருண்டாள்.

************

மருத்துவமனை வராண்டாவில் கணேசன் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்க, பரிமளத்தின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தார் சுகுணா.

“நாம யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யல சுகுணா. அவளுக்கு எதுவும் ஆகாது” தேற்றிக் கொண்டிருந்த பரிமளத்தின் கண்களும் கசிந்து கொண்டிருந்தன.

இவற்றையெல்லாம் பார்த்தபடி இறுக்கமான முகத்துடன் சுவரில் சாய்ந்து நின்றிருந்தான் ஸ்ரீராம்.

அவசரமாக வெளியே வந்த நர்ஸ், “சார்! இந்த மெடிசன்ஸ் வேணும்… சீக்கிரம் வாங்கிட்டு வாங்க என்று பிரிஸ்கிரிப்ஷனை நீட்டினார்.

வெடுக்கென அதைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக அந்த வராண்டாவில் திரும்பிய ஸ்ரீராம், எதிரில் வந்த டியூட்டி டாக்டரின் மீது மோதிக் கொண்டான்.

அவனுக்கிருந்த அவசரத்தில், “சாரி டாக்டர்!” என்றவன், திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

ஆனால், தன் மீது மோதியவனை, அடையாளம் கண்டுகொண்டாள் திவ்யா.

“இவன் எங்கே இங்கே வந்தான்? ஹாஸ்பிட்டலுக்கு வந்தாலும், என் மேலயே இடிச்சிட்டுப் போகணும்னு வேண்டுதல் போல இவனுக்கு” முணுமுணுத்துக் கொண்டே வலித்த தோள்பட்டையைத் தடவியபடி அவனைப் பின்தொடர்ந்தாள்.

அவன் பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாகச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய் திவி! ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன்னு வெளியே வந்து தெருவை வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க. என்ன விஷயம்?” என்று கேட்டாள் அவளது தோழி கல்பனா.

“ம், அந்த ரோமியோ வந்திருந்தான்” என்றாள் சலிப்புடன்.

“இந்த ஜுலியட்டைத் தேடியா?” – கல்பனா.

சிரித்துக்கொண்டே கேட்ட தோழியின் கையை, நறுக்கென கிள்ளினாள்.

“நீ சொன்னதுக்குத் தானே கிண்டல் பண்ணேன். அதுக்கு இப்படியா கிள்ளுவ? யாருடி அந்த ரோமியோ?” கையைத் தடவிக் கொண்டே கேட்டாள்.

“அதான் அந்த ஹெச்.ஆர் மேனேஜர் ஸ்ரீராம்” என்றாள் கோபத்துடன்.

“பார்த்துடி பல்லு சுளுக்கிக்கப் போகுது. கோபம் வார்த்தைல மட்டும்தான் தெரியுது. மத்தபடி…” என்றவளை பற்களைக் கடித்துக் கொண்டு பார்த்துவிட்டு, விறுவிறுவென முன்னால் நடந்தாள் திவ்யா.

“எதுக்குடி கோச்சிக்கிற? எனக்குத் தோணினதைச் சொன்னேன். அவரை ரெண்டு முறை பார்த்துப் பேசின எனக்கே, அவரோட பேர் நினைவில்ல. நீ ஒரே ஒரு முறை தான் பார்த்த… அதுவும் சண்டையோட பாதியில் எழுந்து வந்துட்ட. ஆனாலும், அவரோட பேரை மறக்காம ஞாபகம் வச்சிருக்கயே… அதான் சொன்னேன்…”

மேலோட்டமாக கல்பனா அவளுக்கு விளக்கம் சொல்வது போலிருந்தாலும், முழுக்க முழுக்க அதில் கேலிதான் தெரிந்தது.

“ம், சின்ன வயசுல எங்கம்மா எனக்கு, நிறைய வல்லாரைக் கீரை கொடுத்தாங்க. அதான்…” எரிச்சலுடன் சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தாள்.

“அப்படியே கொஞ்சம் காரத்தைச் சாப்பாட்டில் கம்மி பண்ணி கொடுத்திருக்கலாம். இவ்வளவு கோபம் உடம்புக்கு நல்லதில்ல.”

“போதும்… அடங்கு!” என்றவள், டேபிள் மீதிருந்த பேஷண்டின் கேஸ் ஃபைலை எடுத்துப் புரட்டிய போதும், ‘அவ்வளவு அவசரமாகச் சென்றானே, யாருக்கு என்ன?’ என்று அவளது மனம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.

அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் கல்பனா.

“நீதான் திவி அவரைத் தப்பா நினைச்சிட்டு இருக்க. அவர்கூட பேசின வரைக்கும், ரொம்பக் கண்ணியமா தான் நடந்துகிட்டார். கோணல் புத்தி இருக்கறவனா இருந்தா, ஒரு நேரமில்லனாலும் ஒருநேரம், அவன் கண்ணே காட்டிக் கொடுத்திடும். என்னைப் பொறுத்த வரைக்கும் ஸ்ரீராம் சார் ஜெம்!” என்று மென்குரலில் எடுத்துச் சொன்னாள் கல்பனா.

திவ்யா இதற்குப் பதிலே சொல்லவில்லை.

காதல் வளரும்...