Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Kothai suresh

Member
Jan 26, 2022
52
12
8
அத்தை முடிச்சு போட்டுட்டா வாலில்லா குரங்கு க்கும், சொர்ணாக்காக்கும்
 
  • Love
Reactions: Shenba

lakshmi

Active member
May 9, 2018
405
58
43
இரண்டு பேரும் சண்டை போட்டு கொண்டார்கள் இல்லையா? அப்போ வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
 
  • Love
Reactions: Shenba

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
143
491
63
அத்தை முடிச்சு போட்டுட்டா வாலில்லா குரங்கு க்கும், சொர்ணாக்காக்கும்
அது ரெண்டுக்கும் தான் சரிபட்டு வரும்.
 
  • Love
Reactions: Kothai suresh

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
143
491
63
இரண்டு பேரும் சண்டை போட்டு கொண்டார்கள் இல்லையா? அப்போ வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
மோதல் வந்தால் காதல்... காதலோ காதல்
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
143
491
63
அத்தியாயம் - 7

ஏழு மணிக்கு பரிமளம் வீட்டினுள் நுழைந்த போது ஒரு கையில் காஃபியும், மறுகையில் பேப்பருமாக வெளி வராண்டாவில் அமர்ந்திருந்த ஸ்ரீராம், நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன அத்தை? காலைல கோயிலுக்குப் போயிட்டு வந்திருக்கீங்க? நடந்தா போனீங்க?” எனக் கேட்டான்.

“போகணும் போலயிருந்தது போய்ட்டு வந்தேன்” பதில் சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார்.

அவனும் தோளைக் குலுக்கிக் கொண்டு பேப்பரில் மூழ்கினான்.

அர்ச்சனைக் கூடையைப் பூஜையறையில் வைத்துவிட்டு, கண்களை மூடி ஏதோ பிரார்த்தித்தார்.

“என்ன அண்ணி காலைல நான் எழுந்து வர்றதுக்குள்ள, எழுதி வச்சிட்டு கோயிலுக்குக் கிளம்பிட்டீங்க. என்கிட்ட ஒரு வார்த்தை நேத்தே சொல்லியிருக்கலாமே… நான் முதல்ல பயந்தே போயிட்டேன்” என்றார் சுகுணா.

“போகணும் போல இருந்தது. போய்ட்டு வந்தேன்…” என்றவர் காலைச் சமையலுக்கு உதவ ஆரம்பித்தார்.

காலை உணவிற்குப் பின்னர், முன்தினம் டிராவல் ஏஜென்சியிலிருந்து வாங்கி வந்திருந்த கவரை பிரபுவிடம் கொடுத்தான் ஸ்ரீராம்.

“என்ன ஸ்ரீ இது?” - பிரபு.

“பிரிச்சிப் பார்த்தா தெரிஞ்சிடப் போகுது” என்று அவன் பதிலளிக்க, மனைவியை ஒரு பார்வை பார்த்த பிரபு கவரைப் பிரித்தான்.

“எதுக்கு ஸ்ரீ இந்த ஃபார்மாலிட்டீஸ்லாம்…” எனச் சிரித்துக்கொண்டே கேட்ட பிரபு, சஹானாவிடம் கொடுத்தான்.

“பிரபு! ஓபனா ஒண்ணு சொல்லட்டுமா? என் தங்கைங்க ரெண்டு பேரும் எனக்கு உயிர். அவங்க எங்க வீட்ல ஒரு இளவரசி மாதிரி இருந்தாங்க. எங்களுக்குப் பெரிதா வசதி வாய்ப்பு இல்லன்னாலும், எங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் தான் எங்க வீட்ல வளர்த்தாங்க.

பொண்ணுங்களைப் பொறுத்தவரைக்கும் பிறந்த வீட்லதான் அவங்களோட சந்தோஷத்தை, முழுமையா பார்க்க முடியும். கல்யாணத்துக்குப் பின்னால அவங்களோட சந்தோஷம், நிம்மதி எல்லாமே தொடர்றது அவங்களுக்கு அமையற துணையைப் பொறுத்துத்தான்.

அந்த வகைல என் தங்கைங்க ரெண்டு பேருமே கல்யாணத்துக்குப் பின்னால, மகாராணியாதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அதிலயும், சஹானாவை உங்களுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கணும்னு, வீட்ல எல்லோரையும் வற்புறுத்தினது நான்தான். உங்களைப் பார்த்தபோதே என் தங்கையை நீங்க நல்லபடியா பார்த்துப்பீங்கன்னு தோணுச்சி.

இவ்ளோ பெரிய பணக்கார சம்மந்தம். நம்ம தங்கச்சி அங்கே சந்தோஷமா இருப்பாளான்னு மனசுக்குள்ள ஒரு சின்ன நெருடல் வந்திருந்தாகூட, என் தங்கையை நான் உங்களுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க சம்மதிச்சிருக்கமாட்டேன். என்னோட நினைப்பு வீண் போகலன்னு நினைக்கும் போது, ரொம்பச் சந்தோஷமா இருக்கு. தேங்க்ஸ் பிரபு” என்று அவனது கரத்தைப் பற்றியவன் அவனை நெஞ்சாரத் தழுவிக்கொண்டான்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த சஹானாவின் விழிகள் பெருமிதத்தில் கசிய, பெரியவர்கள் அவர்களது அன்பில் நெகிழ்ந்து போயினர்.

“சஹிம்மா! மதியானம் ரெண்டு மணிக்கு நீங்க கிளம்பினா சரியா இருக்கும். அதுக்குள்ள தேவையான திங்க்ஸைப் பேக் பண்ணிக்க. முடிஞ்சா நான் பர்மிஷன் போட்டுட்டு வரேன். சப்போஸ் மீட்டிங் இருந்தா வரமுடியாது. நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க” என்றான்.

“ரொம்பத் தேங்க்ஸ்ண்ணா!” என்ற தங்கையின் தலையைப் பிடித்துப் பாசத்துடன் ஆட்டிவிட்டுக் கிளம்பினான்.

மதியம் பிரபுவும், சஹானாவும் குமரகம் கிளம்பிச் சென்றபின், ஆசுவாசமாக பரிமளத்தின் அருகில் வந்து அமர்ந்தார் சுகுணா.

“இட்லிக்கு ஊறப்போட்டுட்டியா சுகுணா?”

“ம், முடிஞ்சது அண்ணி!” என்றவர், “காலைல கிளம்பிச் சொல்லாம கொள்ளாம கோயிலுக்குப் போயிட்டு வந்திருக்கீங்க? அப்படி என்ன விஷயம் உங்க மனசை அரிச்சிட்டிருக்கு” என கேட்டார்.

இவ்வளவு நேரமும் அதைப் பற்றிப் பேசத்தானே அவரும் காத்திருந்தார். கேட்டவுடன் மளமளவென தன் மனத்திலிருந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, சுகுணாவும், கணேசனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“பேசின வரைக்கும் வைதேகி நல்லவங்களாதான் தெரியறாங்க. எதையும் பார்க்காம சரியா பழகாம எப்படி அண்ணி? அதுவும் பொண்ணோட அப்பா…” என தயக்கத்துடன் நிறுத்தினார் சுகுணா.

“அவன் கிடக்கறான்... பெத்த பொண்ணையும், கட்டுன பொண்டாட்டியையும் வச்சிக் காப்பாத்த துப்பில்லாதவனைப் பத்தி நமக்கென்ன? நமக்கு முக்கியம் பொண்ணு. எவ்வளவு பொறுப்பா இருக்கா தெரியுமா! பிறந்ததுலயிருந்து தனக்குன்னு எந்தச் சந்தோஷத்தையுமே என் பொண்ணு பார்த்ததில்லன்னு வைதேகி அழுதப்போ, என்னாலயும் தாங்கவே முடியல சுகுணா!

நம்ம வீட்டுப் பொண்ணுங்களை நாம எப்படியெல்லாம் வளர்த்தோம். அவங்க இப்படிப் பொறுப்பா இருக்காங்கன்னா, அதுக்கு நம்ம வளர்ப்புதானே காரணம். அவ்வளவு கஷ்டத்துலயும் தான் பெறாத பொண்ணை வைதேகி இவ்வளவு பாசமா, பொறுப்பா வளர்த்திருக்கான்னா... எவ்ளோ பெரிய விஷயம்.

கூடவே, அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு நல்ல மனசு இருக்கணும். தன்னைப் பொண்ணா நினைச்சி வளர்த்தவளோட சுயமரியாதையைக் காப்பாத்த, தன்கூடவே கூட்டிட்டு இப்படி ஊரைவிட்டு வந்து வேலை செய்யறா. அவளைப் பத்தி வைதேகி சொன்னப்போ, எனக்கே பெருமையா இருந்தது.

எனக்கு, அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு சுகுணா! நம்ம ஸ்ரீக்குப் பொறுத்தமாயிருப்பா. எந்தப் பிரச்சனையும் வராது. கணேசா! நீ என்ன சொல்ற? நீ உன் முடிவைச் சொன்னாதான் சுகுணா ஒரு முடிவுக்கு வருவா” என்றார் பரிமளம்.

“அதெல்லாம் சரிக்கா! ஆனா, கல்யாணம்னு வந்தா… பொண்ணோட அப்பாவைப் பத்திப் பேச்சு வருமே. எத்தனைப் பேரோட வாயை நாம அடைக்கமுடியும்?” எனச் சங்கடத்துடன் கேட்டார்.

“ஊர்லயிருக்க எல்லா வாயும் நல்லது நடந்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும்; கெட்டது நடந்தாலும் குறை சொல்லும். நமக்கு ஒரு சந்தோஷமான விஷயம் நடந்தா, கூடச் சேர்ந்துச் சிரிச்சிட்டு, பின்னால போய்ப் புரணி பேசுற சமூகம் தானே இது! ஊர் வாயை அடைக்கணும்னா, நடக்காது. நாமதான் காதை மூடிக்கணும். உண்மை என்னன்னு நமக்குத் தெரியும். அதை எல்லோருக்கும் தண்டோரா போட்டுச் சொல்லணும்னு இருக்கா என்ன?

இவ்ளோ எதுக்கு? நம்ம சஹியோட கல்யாணத்துல பேசாத பேச்சா? என் காதுபடவே பணக்காரச் சம்மந்தம்… எத்தனை நாளைக்குப் பளபளக்குதுன்னு பார்ப்போம்னு, பேசினாங்க தானே. அவங்களுக்கு நாம எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்?

நம்ம பொண்ணு, அந்தப் பெரிய இடத்துல எல்லோரையும் அனுசரிச்சிட்டு இருக்கலயா? இல்ல, பிரபுதான், நம்மகூட இயல்பா பழகலயா? நாம யாருக்கும் கெடுதல் நினைக்கல. கடவுள், நமக்கு எந்தக் குறையையும் வைக்க மாட்டான்” என்றார் தீர்மானமாக.

“இருந்தாலும், நம்ம சஹி மாமியார் வீட்ல பேசணும்க்கா! அவங்க என்ன நினைக்கறாங்கன்னும் நாம தெரிஞ்சிக்கணுமில்ல…”

“கண்டிப்பா! அவங்களோட விருப்பத்துக்கும், நாம மதிப்பு கொடுக்கணும் கணேசா! முதல்ல, நம்ம பக்கம் பேசி தெளிவு படுத்திக்கிட்டு, அவங்ககிட்ட நாளைக்கே பேசிடலாம். எனக்கென்னவோ, அவங்க யாரும் மறுக்க மாட்டாங்கன்னு தோணுது” என்றார்.

“அண்ணி! கல்யாணம் செய்துக்கப் போறவனைக் கேட்க வேணாமா?”

“ஏன் சுகுணா! உன் பிள்ளை காலைல பிரபுகிட்டப் பேசினதைக் கேட்டதுக்குப் பின்னாலயும், இவ்வளவு தயக்கமா? சொல்லப் போனா அதைக் கேட்ட பின்னதான், இந்தக் கல்யாணம் கட்டாயம் நடக்கும்னு உறுதியா நான் நம்ப ஆரம்பிச்சேன். கூடப் பொறந்த பிறப்புக்காக இவ்ளோ பாக்கறவன், நிச்சயமா தன்னோட மனைவியைக் கண்கலங்காம சந்தோஷமா வச்சிப்பான். இதுக்காக நீ எனக்கு ஒரு நாள் நிச்சயமா நன்றி சொல்வ” என்று புன்னகைத்தவரை புரியாமல் பார்த்தார் சுகுணா.

ஆயிரம் இருந்தாலும் பெற்ற மனம் அல்லவா! ‘மகனின் வாழ்க்கையில் நடக்கும் முதல் மங்கள நிகழ்ச்சி. அது எவ்வித தடங்கலும் இல்லாமல், சந்தோஷமாக நடக்கவேண்டுமே. இது சாத்தியமா!’ என்ற சிறு கலக்கம், சுகுணாவின் அடிமனத்திற்குள் விதைவிட ஆரம்பித்தது.

“சரி, நீங்க இவ்வளவு சொல்றீங்க. இதுக்கு மேல நான் என்ன சொல்லப் போறேன்? உங்க பிள்ளைங்களுக்கு எதைச் செய்தா நல்லாயிருப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியாததா!” எனப் பெரிய பனிக்கட்டியைத் தூக்கி நாத்தனாரின் தலையில் வைத்த சுகுணாவை, முகம் விகசிக்க பெருமையுடன் பார்த்தார் பரிமளம்.

அன்றே நாள் நன்றாக இருந்ததால் சென்னையிலிருந்த பிரபுவின் பெற்றோரிடம், திவ்யாவைப் பற்றியும் அவளது குடும்பத்தைப் பற்றியும் விளக்கமாகச் சொன்னார் பரிமளம். அனைத்தையும் இடையில் தலையிடாமல் கேட்டுக்கொண்ட சஹானாவின் மாமனார், தாங்கள் இதைப் பற்றிச் சற்று ஆலோசித்து விட்டுப் பேசுவதாகக் கூறி போனை வைத்தார்.

அந்த இடைப்பட்ட நேரத்தைக் கடத்துவதற்குள் திண்டாடிப் போனார் பரிமளம். ‘தான், ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறோம்!’ என்று அவருக்கே புரியவில்லை. பிரபுவின் பெற்றோர், ‘தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை’ என்ற நல்ல செய்தியைச் சொன்ன பின்பே, அவரது மனம் நிம்மதியடைந்தது.

“சஹானா வீட்லயும் பிரச்சனை இல்ல. இனி, ஸ்ரீ மட்டும்தான் சரின்னு சொல்லணும். ஆனா, அதுக்கு முன்னால வைதேகியோட மனசுல என்ன இருக்குன்னு நான் தெரிஞ்சிக்கிறேன்” என்றார் பரிமளம்.

“ஆமாம் அண்ணி! முதல்ல அதைச் செய்ங்க. நாம எல்லோரும் பேசி முடிவெடுத்துட்டு அவங்ககிட்ட பேசறதுக்கு முன்னால, நீங்க ஒருமுறை பேசிடுங்க. அவங்களோட விருப்பம் தெரிஞ்ச பின்னால, ஸ்ரீகிட்ட பேசலாம்” என்றார் சுகுணா.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, வைதேகி தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் ஸ்ரீராமிற்கு கல்யாணப் பேச்சைத் துவக்கியிருப்பதை மெல்லச் சொன்னார் பரிமளம்.

“அப்படியா நல்ல விஷயம். அவனுக்கென்ன பொண்ணா கிடைக்காது?”

“ஏன் கிடைக்காம? ஆனா, நம்ம குடும்பத்தை அனுசரிச்சிப் போறவளா இருக்கணுமேங்கற கவலைதான். அதுலயும், இங்கே நானும் என் தம்பி வீட்லயே இருக்கேன். என் பிள்ளையும், அதே வீட்டுக்கு மருமகனா ஆகிட்டான். இன்னைக்கு அவன் பாரின்ல இருக்கான் பிரச்சனை இல்ல. ஆனா, திரும்பி வந்த பின்னாலயும், நாங்க ஒரே குடும்பமா இதே வீட்ல தானே இருக்கணும். வர்றவ எங்களையும் அனுசரிச்சிக்கணும்… நாங்களும் அவளை அனுசரிக்கணும்…” என்று பெருமூச்சுவிட்டார் பரிமளம்.

“இதேமாதிரி தான் வைதேகியும் ரெண்டு நாளைக்கு முன்னால என்கிட்ட புலம்பினாங்க. பொண்ணுக்கு, மாப்பிள்ளை பார்க்கணுமாம். என் மருமகன் தான் இந்த வீட்டுக்குப் பிள்ளை. என் பொண்ணை சௌக்கியமா பார்த்துக்கிட்டா போதும்னு புலம்பித் தள்ளிட்டாங்க” என்றார் அவர்.

‘அட! நாம எதுவும் சொல்லவேணாம் போலிருக்கே. அதுவே கூடி வந்திடுமாயிருக்கு’ என எண்ணிக்கொண்டு, “ஓ! திவ்யாவுக்கும் மாப்பிள்ளை பார்க்கறாங்களா? நல்ல விஷயம்தான். நல்ல பொண்ணு… நல்ல இடமா அமையட்டும்” என்றார் பரிமளம்.

அந்த வீட்டுக்காரப் பெண்மணிக்கு என்ன தோன்றியதோ, “பரிமளம்! நீ ஏன் அந்தப் பொண்ணை நம்ம ஸ்ரீக்குப் பார்க்கக்கூடாது?” எனக் கேட்டார்.

‘இதுதானே எனக்கும் வேணும்’ என மனத்திற்குள் வெற்றிச் சிரிப்புச் சிரித்த பரிமளம், சற்று யோசிப்பதைப் போல, “நல்ல யோசனைதான். ஆனா, நானா எப்படி…?” என இழுத்தார்.

“உனக்குச் சம்மதம்னா சொல்லு. வைதேகிகிட்ட, நான் பேசறேன்” என்றார்.

உடனே சம்மதம் சொல்லாமல், “நான் வீட்ல பேசிட்டு, நைட் போன் பண்றேன்” என்றவர் வழக்கத்தைவிட விரைவாக வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

காதல் வளரும்...
 
  • Love
Reactions: Kothai suresh