Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
143
491
63
அத்தியாயம் - 4

இறுக்கமான முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்த ஸ்ரீராம் ஏதோ யோசனையுடனேயே ஹாலில் இருந்தவர்களை கவனிக்காமல், நேராக மாடிப்படியை நோக்கி நடந்தான்.

“இதோ ஸ்ரீயே வந்துட்டானே!” என்ற பரிமளம், அவனை அழைக்க, தனது யோசனையைக் களைந்து திரும்பிப் பார்த்தான்.

அம்மாவும், அத்தையும் புதிதாக ஒரு பெண்மணியுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவன் வரவேற்பாக சிறுபுன்னகையொன்றை அவரிடம் வீசினான்.

“என்ன அத்தை?” என்றான்.

“வைதேகி! நான் சொன்னேன்ல... என் தம்பி பையன், ஸ்ரீராம். ஒரு ப்ரைவேட் கம்பெனியில ஹெச்.ஆர் மேனேஜரா இருக்கான். பெருமைக்குச் சொல்லல, ரொம்பத் தங்கமான பையன். பெரியவங்ககிட்ட ரொம்ப மரியாதை உள்ளவன்” முகமெல்லாம் பூரிக்க, பெருமையுடன் சொன்னார் பரிமளம்.

‘ஆஹா! இந்த ஹிட்லர் நம்மள வச்சி காமெடி சீனுக்குப் பிளான் போடுறாங்க போலிருக்கே. மாட்டிக்காதே ஸ்ரீராம் பிச்சிக்கோ!’ என்று நினைத்துக் கொண்டவன், கேள்வியுடன் அன்னையைப் பார்த்தான்.

“வணக்கம் தம்பி!” என்ற வைதேகிக்கு, அவனும் பதில் வணக்கம் செய்தான்.

“இவங்க ஊருக்குப் புதுசு. கோயில்ல பார்த்துப் பழக்கம். நாலு பேரைப் பழகிக்கட்டுமேன்னு, நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன்” என்று தம்பி மகனிடம் விளக்கமாகச் சொன்னார்.

அவனும் பயபக்தியுடன் கேட்டுக் கொள்வதைப் போல பாவனை செய்து கொண்டிருந்தான். மகனின் பார்வையிலிருந்த கிண்டலை உணர்ந்த சுகுணாவிற்கு, சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது. இருந்தும் தன்னைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார்.

“அப்போ, நான் ரூமுக்குப் போகட்டுமா அத்தை!” – பவ்யமாக கேட்டான்.

“ஆமா, ஆஃபிஸ்லயிருந்து வந்த உன்னை நிற்க வச்சிப் பேசிட்டிருக்கேன். நீ போப்பா...” – பரிமளம்.

“வரேங்க” என்று வைதேகியிடம் சொல்லிவிட்டுத் தனது அறைக்குச் சென்றான்.

“சரிங்கக்கா! அப்போ நான் கிளம்பறேன். டியூட்டி முடிஞ்சி என் பொண்ணு வர்ற நேரமாச்சு” என்றபடி எழுந்தார் அவர்.

“ஒரு நிமிஷம்!” என்ற சுகுணா, பூஜையறையிலிருந்து குங்குமத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.

“அடுத்த முறை, உங்க பொண்ணையும் கூட்டிட்டு வாங்க. புது ஊரா இருந்தாலும், நாம பழகினாதான் அடுத்தவங்களும் மனசு விட்டுப் பழகுவாங்க” என்றார் சுகுணா.

“கட்டாயம் கூட்டிட்டு வரேங்க. அவளும் டியூட்டி, படிப்புன்னு கொஞ்சம் பிஸியாயிருக்கா. நீங்களும், நம்ம வீட்டுக்கு வாங்க” என்ற வரவேற்பையும் முன் வைத்தார் வைதேகி.

அறைக்கு வந்த ஸ்ரீராம், ‘வரவர இந்த ஹிட்லரோட அராஜகம் தாங்கலை. ஆஃபிஸ்லயிருந்து வர்ற மனுஷன் ஆயிரத்தெட்டு பிரச்சனையோட வருவான். அதெல்லாம் தெரியுதா? இப்போ என்னைக் கூப்பிட்டு அறிமுகப்படுத்தலைனு யார் அழுதா? இதுல வீண் பெருமை வேற’ என்று நினைத்துக் கொண்டே சட்டையைக் கழற்றி தாங்கியில் மாட்டினான்.

‘எல்லாம் தலையெழுத்து காலங்கார்த்தால அந்தச் சிடுமூஞ்சிகிட்ட வாயைக் கொடுத்து... தேவையா தேவையா… பொண்ணா அது பிசாசு! இதையெல்லாம் பெத்தாங்களா, இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா? அதைக் கட்டிக்கப் போற புண்ணியவான் யாரோ? அவனுக்குக் கோயில் கட்டிக் கும்பிடணும்’ மனத்திற்குள் புலம்பிக் கொண்டே கண்ணாடி எதிரில் வந்து நின்றான்.

கண்ணாடியில் தனது முகத்தை இப்படியும் அப்படியுமாக பார்த்துக் கொண்டவன், “இந்த மூஞ்சிக்கு என்ன ஓட்டை? இன்னைக்கு ஹீரோ சான்ஸ் கேட்டு ப்ரொட்யூசர் முன்னால போய் நின்னா, கண்ணை மூடிகிட்டு செக்கைத் தூக்கி நீட்டுவானுங்க... போனா போகுது, இப்போயிருக்க ஹீரோக்கள் வயத்துல புளியைக் கரைக்க வேணாம்னு ஒதுங்கி இருக்கேன்.

அது தெரியாம அந்தப் பஜாரி, உன் மூஞ்சியை நீ கண்ணாடியில பார்த்ததில்லையான்னு கேட்குது. அதுகிட்ட வாயைக் கொடுத்துட்டு, இன்னைக்கு ஆஃபிஸ்ல எல்லோரையும் காய்ச்சி எடுக்கறா மாதிரி ஆகிப்போச்சு. இந்தப் பியூன் என்னடான்னா, இன்னா சார் எப்பவும் சிரிச்சிக்கினே இருப்ப... இன்னைக்கு இப்படிக் கடுப்படிக்கிறன்னு அவனோட சென்னை பாஷைல நம்மல கலாய்க்கிறான்.

ஆக மொத்தத்துல வீட்லயும் சரி; வெளியிலயும் சரி, நம்மளைக் காமெடி பீஸ் ரேஞ்சுக்குத்தான் வச்சிருக்காங்க. இனி, நாமளும் ஹீரோதான்னு இவங்களுக்குப் ப்ரூவ் பண்ணணும் போலயிருக்கே. என்ன பொழப்புடா இது?’ அலுவலகத்தில் நடந்த கலாட்டாவை நினைத்து மனத்திற்குள் திட்டிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

காலையில் நடந்த நிகழ்வு மீண்டும் அவனது கண்முன்னே நிழலாடியது.

அலுவலகத்தில் தேநீர் இடைவேளையில் போன் பேசிக்கொண்டே கேண்டீனுக்கு வந்தவன், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். போனை அணைத்துவிட்டுப் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

காலையில் அலுவலகம் கிளம்பும்போது ரேடியோவில் ஒலித்த அந்தப் பாடலின் மெட்டு அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இரண்டு வரிகளை முணுமுணுத்தவன், மீண்டும் சற்று சப்தமாகப் பாடியபடி கையிலிருந்த மொபைலில் ஏதோ செய்து கொண்டிருந்தான்.

தனது வேலையில் கவனமாக இருந்தவன், பக்கத்து டேபிளிலில் அமர்ந்திருந்த பெண் தன்னையே முறைத்துக் கொண்டிருந்ததைக் கவனிக்கவில்லை. அந்தப் பெண் எழுந்து சென்று வரிசையில் நின்றாள். இவனும், எதேச்சையாக அவளுக்குப் பின்னால் சென்று நின்றவன், அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.

முன்னால் நின்றிருந்தவள், திரும்பி அவனைப் பார்த்தாள். அதேநேரம் போனை பாக்கெட்டில் வைத்தபடி நிமிர்ந்தவன், அவளது பார்வையை எதிர்கொண்டான். விழிகளில் கடுமையுடன் அவள் திரும்பிக் கொள்ள, இவன் புரியாமல் தோளைக் குலுக்கிக் கொண்டான்.

தனது ஆர்டருடன் டேபிளுக்கு வந்தவனை நோக்கி அவனது நண்பன் வரவும், சற்றுநேரம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தவன், விடை பெற்று அலுவலக அறைக்கு வந்தான். காலையிலேயே தொழிலாளர்களுக்காக, இலவச மருத்துவ கேம்பிற்கு ஏற்பாடு செய்வதைப் பற்றிப் பேச, டாக்டர்கள் வருவார்கள் என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததால், அவர்களுக்காகக் காத்திருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் அவனைப் பார்க்க, இரண்டு ஜூனியர் டாக்டர்கள் வந்திருப்பதாக பியூன் தெரிவிக்க, அவர்களை வரச்சொன்னான். உள்ளே வந்தவளைப் பார்த்தவனது புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன.

வந்தவளுக்கும் தன்னைக் கண்டதும் லேசான அதிர்ச்சி என்பதை, அவளது முகத்தைப் பார்த்ததுமே புரிந்து கொண்டான். ஆனால், காரணம் தான் புரியவில்லை.

உடன் வந்த மற்றொருத்தி, “ஹலோ சார்! நான் கல்பனா. இவங்க டாக்டர் திவ்யா!” என்று அறிமுகப்படுத்திக் கொண்ட போதுகூட, அவனுக்கு எதுவுமே விகல்பமாகத் தோன்றவில்லை.

கல்பனாவே பேசி க்கொண்டிருக்க, “இவங்க எதுவும் பேசமாட்டாங்களா? மௌன விரதமா?” எப்போதும் போல இவன் தனது வாய் ஜாலத்தைக் காட்ட, அவளுக்கு வந்ததே கோபம்.

‘ஏன்டா கேட்டோம்’ என்று அவன் நினைக்கும் அளவிற்கு, அவனைப் பற்றித் தாறுமாறாகப் பேசிப் பொரிந்து தள்ளினாள் திவ்யா.

ஆரம்பத்தில் புரியாமல் பார்த்தவன், தனது பெயரைச் சொல்லிக் கேலி செய்து பாடியதாக அவள் கூறியதும் தான் விவரமே புரிந்தது.

“சாரி! நான் ஏதோ எதார்த்தமா பாடப் போய் இப்படி ஆகிடுச்சி” என்று அவன் தன்மையாகவே சொன்னான்.

ஆனால், அவள் விட்டால்தானே… “இப்படி ஒரு கௌரவமான போஸ்ட்ல இருந்துகிட்டு ரோட் சைட் ரோமியோ மாதிரி சீப்பா பிஹேவ் பண்றியே வெட்கமா இல்ல” என்றாள்.

“எக்ஸ்க்யூஸ்மீ! நான் பாடினேன். இல்லன்னு சொல்லல. உன் பேர் திவ்யான்னு என்னக்கென்ன ஜோசியமா தெரியும்” என்று அவனும் ஏகவசனத்தில் எகிறினான்.

“எதார்த்தமா பாடினேன், பதார்த்தமா ஆடினேன்னு கதையா விடுற? மேலிடத்துல சொல்லி உன் வேலைக்கு வேட்டு வைக்கல, என் பேர் திவ்யா இல்ல…”

“நீயெல்லாம் டாக்டரா? விளங்கிடும். பொறுமையா இருக்க வேண்டிய இடத்துல, பஜாரி மாதிரி ரியாக்ட் பண்ற” என்று சீறினான்.

“உன் முகரைக்கு நீ இவ்வளவு பொறுப்பான பதவியில இருக்கும்போது, நான் டாக்டராயிருந்தா தப்பா” அவளும் பதிலுக்குக் கடுப்படித்தாள்.

உடன் வந்தவள் என்ன செய்வதென்று தெரியாமல், இருவரையும் மாறி மாறி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவருக்குமே, வேறு என்ன சொல்லித் திட்டிக் கொள்வது என்று தெரியவில்லை போலும், அமைதியாக இருந்தனர். ஆனால், இருவரது பார்வையும் உஷ்ணத்துடன் உரசிக் கொண்டது.

“வாடி போகலாம்” என்றாள் திவ்யா.

“நாம வந்த விஷயத்தை இன்னும் அவங்களுக்குக் கிளாரிஃபை பண்ணவேயில்லையே…” என்றாள்.

“நீயே பேசிட்டு வா. நான் கிளம்பறேன்” சொல்லிக் கொண்டே விடுவிடுவென அறையிலிருந்து வெளியேறினாள்.

ஸ்ரீராமின் பக்கமாகத் திரும்பியவள், “சார்! வெரி சாரி. அவளுக்குக் கொஞ்சம் முன்கோபம் அதிகம். உங்களை என்னால புரிஞ்சிக்க முடியுது” என்றாள்.

“இட்ஸ் ஓகே மேடம். ஒண்ணுமில்லாத விஷயத்தை அவங்கதான் பிரச்சனையாக்கிட்டாங்க” என்றான்.

“எனக்காக கொஞ்சம் எக்ஸ்கியூஸ் பண்ணிக்கோங்க. ப்ளீஸ்!” என்றாள்.

அவள் அத்தனைத் தூரம் தன்மையாக கேட்கவும், அவனால் மறுக்க முடியவில்லை. கூடவே அவனுக்கும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.

“ஓகே மேடம்! உட்காருங்க” என்று அவளை அமர வைத்துவிட்டு, வெளியில் வந்தவன் இரண்டு நிமிடம் கழித்து உள்ளே சென்றான்.

நடந்ததை நினைத்தபடி பால்கனியில் வந்து நின்றான். குளுகுளுவென்ற பொதிகைத் தென்றல் அவனது உடலைத் தழுவிச் சென்றது. கேண்டீனின் உள்ளே செல்லும் போது அந்தத் திவ்யா, தோழியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த காட்சி கண்முன்னே நிழலாடியது.

‘சிரிச்சா, அந்தச் சிடுமூஞ்சியும் நல்லாத்தான் இருக்கு’ என்று நினைத்துக் கொண்டவன், ‘இதுவும், எதேச்சையா அவளைப் பார்த்ததுதான்னு சொன்னா நம்பவா போறா?’ என நினைத்துக் கொண்டான்.