விமர்சனம்

Kripnythaa

Moderator
Mar 26, 2018
506
151
63
விமர்சனம்

கருமைநிற ஆடை உடுத்தி அதில் மின்னிடும் மின்மினிப் பூச்சிகளாக நட்சத்திரங்கள் ஜொலிக்க, என்றோ நிலாச்சோறு ஊட்டி கொண்டிருந்தவர்கள் அதனை இன்றும் தொடர்கிறார்களா என்று எட்டிப்பார்த்த வண்ணம் நிலாவும் தங்களின் இருப்பிடமான மேகத்தை அழகாக்கிக் கொண்டிருந்தன.

இந்த அழகிய தோற்றத்தை தான் கட்டியிருந்த அழகிய மாளிகையில் அமர்ந்து ரசிக்கும் எண்ணம் சிறிதுமின்றி, தன் வீட்டில் இருப்போரின் வேடிக்கை பார்க்கும் பார்வையை கண்டுகொள்ளாமல் காலை நேரத்தில் பீச்சில் நடக்க வேண்டியதற்கு பதிலாக வீட்டினுள்ளேயே நீள அகலங்களை அளந்து கொண்டிருந்தான் தியாகு.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடையுடன் வாயில் பலவித வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்த மகனை கண்ட தியாகுவின் அம்மா வள்ளியம்மை "ஏன்டா தியாகு! ஒன்னு ஒக்காந்து பேசு... இல்லன்னா நடக்க மட்டும் செய்... ரெண்டும் ஒன்னா செய்றப்ப நீ என்ன பேசுறன்னு எங்க காதுல சரியா விழமாட்டேங்குது. இல்லையா மருமகளே!", வம்பிழுக்க ஆரம்பித்தார்.

தாயின் கூற்றில் அவரைத் திரும்பிப் பார்த்தவன் "கொஞ்சமாச்சும் மகனோட ஆதங்கம் புரிஞ்சு பேசுறீங்களா? நீங்கல்லாம் எப்படிதான் டீச்சராக இருந்தீங்களோ?", என அவரையும் தாளித்துவிட்டு மீண்டும் நடைபயில ஆரம்பித்தான். அவனின் கூற்றில் தனது அருகில் அமர்ந்திருந்த மருமகளிடம் திரும்பிய வள்ளியம்மை "மருமகளே! மகனோட ஆதங்கம் தெரிந்தால் மட்டும்தான் டீச்சர் வேலைக்கு போக முடியும்னு எனக்கு இத்தனை நாள் தெரியாமல் போச்சே!", என சிரிப்புடனே வினவினார்.

மாமியாரின் பேச்சு புரிந்தாலும் அதற்காக வாய் விட்டு சிரிக்க முடியாத சூழ்நிலையில் இருந்த ரஞ்சனி "சும்மா இருங்கத்தை... ஏற்கனவே ஒரு புலம்பலை தாங்க முடியாமல் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறோம். இதுக்கும் ஆரம்பிப்பார்", என தன்னுடைய மாமியாரை பேசாமல் இருக்குமாறு கூறினாள். அப்படிங்கிற என மருமகளிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு மகனின் புறம் திரும்பிய வள்ளியம்மை "தியாகு! இங்க வந்து உட்கார்ந்து என்ன பிரச்சினைன்னு சொல்லு. உன் மூளைக்கு எட்டாதது எங்க எல்லார் மூளைக்கும் எட்டுதான்னு பார்க்கிறோம்", எனக் காரணமின்றி மூளையை சம்பந்தப்படுத்திப் பேசினார்.

அதில் கோபம் வந்தாலும் தன்னுடைய மனக்குமுறலை கொட்டும் விதமாக தாயின் அருகில் வந்து அமர்ந்த தியாகு தன் மக்கட் செல்வங்களை திரும்பிப் பார்த்தான். மகனும், மகளும் தந்தையின் பார்வையை உணர்ந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் கையில் இருந்த புத்தகத்தை நோக்கியவண்ணம் அமர்ந்திருந்தனர்.

மகனும்,மகளும் தன்னுடைய மனக்குமுறலை கேட்க தயாராக இல்லை என தனக்குத்தானே எண்ணிக்கொண்ட தியாகு வள்ளியம்மையின் பக்கம் திரும்பி "என்னோட புது படத்தோட ப்ரிவியூ இன்னிக்கி காலையில நடந்துச்சும்மா. அதுக்கு ஊரே பெரிய டைரக்டர்ன்னு சொல்ற ராஜனை நான் வரச் சொல்லியிருந்தேன். அவரும் வந்திருந்தார். ப்ரிவியூ ஷோக்கு வந்திருந்தா எல்லாருமே படத்தை ஆகா ஓகோ என்று பாராட்டுனாங்க. இவரை பெரிய ஆள் என்று சொல்லி நான் கூப்பிட்டதுக்கு ஒரு மரியாதைக்காகக் கூட கதை நல்லா இருக்கு, நீ நல்லா எடுத்து இருக்க அப்படின்னு எந்த வார்த்தையும் சொல்லாமல் கிளம்பி போயிட்டாரு. இதுதான் பெரிய மனுஷனுக்கான லட்சணமா?

இவர் இப்படி ஒண்ணுமே சொல்லாம போனதால நாளைக்கு பத்திரிகையில ஏடாகூடமா ஏதாவது எழுதி வைப்பாங்க", என தன் பொருமலை கூறிவிட்டு தாயின் முகம் பார்த்தான். இவ்வளவுதானா எனக்கூறிவிட்டு வள்ளியம்மை ரஞ்சனியின் புறம் திரும்பி "ரஞ்சனி! சாப்பாடு எடுத்து வை. ஒரு வழியா உன் புருஷன் நடைய நிப்பாட்டிட்டான். பேச வேண்டிய வார்த்தை எல்லாம் பேசி முடிச்சுட்டான். இப்ப நாம சாப்பிடுவோம்", என சாதாரணமாகக் கூறினார்.

தன் பொருமலை கேட்டதும் மகனுக்கு பரிந்து ராஜனை வறுத்தெடுப்பார் என எண்ணிக்கொண்டிருந்த தியாகுவிற்கு சப்பென்று ஆகிப் போனது. "என்னம்மா! உங்க பையனை அவமானப்படுத்திட்டுப் போயிருக்காரு. அந்தாளுப் பத்தி நீங்க ஒரு குறை கூடச் சொல்லாமல் சாப்பாடுதான் உலகத்திலேயே முக்கியம் அப்படின்னு சொல்லிட்டு போறீங்க?", என தியாகு கடுப்புடன் வினவினான்.

அதுவரை முகத்தில் இருந்த விளையாட்டுத்தனம் நீங்கி தியாகுவிடம் "ராஜன் என்ன சொல்லி இருக்கணும் அப்படின்னு நீ நினைக்கிற?", என வினா எழுப்பினார்."அவர் என்னுடைய கதைக்கான விமர்சனத்தை அந்த இடத்திலேயே சொல்லியிருக்கணும்", என தியாகு பதில் கூறியதும் "விமர்சனம் அப்படிங்கிறது நிறை குறை எதுவா இருந்தாலும் நீ ஏத்துப்பியா?", என மீண்டும் ஒரு வினா எழுப்பினார்.

"என்னுடைய கதையில குறையே கிடையாது. எல்லாருமே பாராட்ட அவர் எப்படிக் குறை சொல்ல முடியும்? அவர்கிட்ட வேலை செஞ்சுகிட்டு இருந்தேன்.இப்ப பெரிய டைரக்டர் ஆயிட்டேன் அப்படிங்கற பொறாமைதான் கதைக்கான பாராட்டை கொடுக்காமல் போயிட்டாரு.இவ்வளவு பொறாமைப்படுவாருன்னு தெரிஞ்சிருந்தா நான் கூப்பிட்டுருக்கவே மாட்டேன். மதித்து கூப்பிட்ட என்னைதான்", என நிறுத்திய தியாகுவின் வார்த்தையை "செருப்பால அடிக்கனும்", என வள்ளியம்மை முடித்து வைத்தார்.

வள்ளியம்மையின் வார்த்தையில் அதிர்ந்து நோக்கிய தியாகுவை தனக்கு எதிரே அமர சொன்னவர் மகனின் முகம் பார்த்து பேச ஆரம்பித்தார். "அசிஸ்டண்ட் டைரக்டரா அவா்கிட்ட சேர்வதற்காக எவ்வளவு கஷ்டப்பட்ட. உனக்கு ஞாபகம் இருக்கா?", எனப் கேட்டதும் தியாகு "அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு", எனக் கடுப்புடன் பதில் கூறினான்.

"அவ்வளவு கஷ்டப்பட்டு சேர்ந்து உனக்கு அவர் ஏதாவது கற்றுக் கொடுக்காமல் இருந்தாரா?", என அடுத்த வினா எழுப்பவும் தியாகுவின் வாயிலிருந்து "எல்லாமே என்னோட திறமையால் கத்துக்கிட்டேன்", என ஒரு அகங்கார பதில் வந்தது. அவனது பதிலில் தன்னுடைய கண்களை இறுக மூடி திறந்த வள்ளியம்மை "உனக்கு அந்த மனுஷன் எல்லாமே சொல்லிக் கொடுத்தாரு. உன்னை வாடா போடான்னு கூட சொன்னதுக் கிடையாது. மரியாதையா நடத்துனாரு. எனக்கு நல்லாவே தெரியும்.

அவர்கிட்ட இருந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டு நீ புது படம் டைரக்ட் பண்ணப் போறேன் அப்படின்னு சொல்லி முடிவாகி பூஜை போட்டதுக்கு அப்புறம்தான் அவருக்கு விஷயம் தெரியும். அந்த இடத்தில நானா இருந்தா உனக்கு அந்த பட வாய்ப்பே இல்லாம செஞ்சிருப்பேன். அவர் அதை செய்யலை. நீ அவருக்கு சொல்லாமல் இருந்தாலும் பூஜை முடிஞ்சதுக்கு அடுத்து உன்னை போன்ல கூப்பிட்டு வாழ்த்தினார். எந்த உதவியாக இருந்தாலும் கேளு அப்படின்னு சொன்னாரு. நீ அதுக்கு பதில் என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?", எனக் கேட்டவர் தியாகுவின் பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவரேத் தொடர்ந்தார். "நீ புதுப்படம் டைரக்ட் பண்ணுனதுல எங்க எல்லாருக்கும் சந்தோஷம்தான். ஆனால் இன்னிக்கு வரைக்கும் உனக்கு குருவாய் இருந்து, உனக்கு ஒரு வழியை காட்டி இதுதான் நீ போகவேண்டிய வழின்னு சொன்ன ஒருத்தருக்கு நீ சரியான மரியாதை செய்யலை. அவர் மூலமாதான் உன் பேரு அசிஸ்டன்ட் டைரக்டர் அப்படின்னு சொல்லியாவது வெளியில் தெரிய வந்துச்சு. உனக்கு முதல் படம் தயாரிக்க கொடுத்த ப்ரொடியூசர் நீ ராஜன்கிட்ட வேலை செஞ்ச அப்படிங்கற ஒரே காரணத்தினால் மட்டும்தான் உனக்கு அந்த வாய்ப்பு கொடுத்தார்.


அது உனக்கே நல்லாத் தெரியும். வழிகாட்டியை மறந்தவனும் பெற்ற தாயை மறந்தவனும் ஒன்னுதான். ரெண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது", என அழுத்தம் திருத்தமாக கூறிய வள்ளியம்மை பேரன்,பேத்தியை ஒருப் பார்வை பார்த்தார். அப் பார்வையிலேயே தங்கள் பாட்டிக் கூற வருவதை புரிந்து கொண்டு அவர்கள் இருவரும் நாங்க இந்த தப்பை எப்பவுமே செய்ய மாட்டோம் பாட்டி என ஒருமித்த குரலில் கூறினார்கள்.

அவர்கள் பதிலை கேட்ட வள்ளியம்மை மகனின் புறம் திரும்பி "முப்பத்தஞ்சு வருஷம் டீச்சரா வேலை பார்த்திருக்கேன். எத்தனையோ பேர் என்கிட்ட படிச்சிட்டு போயிருக்காங்க. இன்னைக்கும் எப்பவாது வெளியிலப் பார்த்தா டீச்சர் நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறார்கள். அந்த ஒரு வார்த்தை மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? என்னோட ஸ்டுடென்ட் அப்படிங்கிற பெருமையாகவும் இருக்கும். அந்தப் பெருமையை உனக்கு வாழ்க்கை வழிகாட்டியாக இருந்த ராஜனுக்கு நீ இன்னிக்கு வரைக்கும் கொடுக்கலை.

முதல் படத்துக்கு அப்புறம் எத்தனையோ படம் எடுத்துட்ட. அப்பல்லாம் அவரை கூப்பிட்டு நீ பேசினது கிடையாது. ஆனால் அவரே ஒவ்வொரு படத்துக்கும் கூப்பிட்டு வாழ்த்தி இருக்காரு.அதுதான் பெரிய மனசுங்கிறது", எனக் கூறியவர் மருமகள் கொண்டு வந்து கொடுத்த தண்ணீரை குடித்துவிட்டு மகனின் பதிலுக்காக காத்து இருந்தார். ஆனால் அப்போதும் தாயின் கூற்றை ஒத்துக் கொள்ளாத தியாகு "முடிந்து போனதை பற்றி எல்லாம் பேசாதீங்க. என்னோட படங்கள், என்னோட கதைகளில் என்ன தரக்குறைவு இருக்கு? அவர் எப்படி அதற்கான விமர்சனத்தை சொல்லாம போகலாம்? நீங்க சொல்ற மாதிரியே அவர்தான் எனக்கு வழிகாட்டுனாா்னா என்னோட வளர்ச்சியில் பெருமைதானப் படனும். ஏன் பொறாமைப்படுறாரு?", என ஆத்திரமாகக் கத்தினான்.

வாயைத் திறந்து பதில் கூற போன மாமியாரை பார்த்த ரஞ்சனி "விடுங்கத்தை! இவரெல்லாம் புரிஞ்சிக்காத ஜென்மம். மனுசனுக்கு கொஞ்சம் பேர் வாங்கினதும் தலை கால் புரியாத திமிரு ஏறிடுச்சு", என நேரிடையாகவேக் கணவனை இடித்துரைத்தாள். ரஞ்சனியின் பேச்சில் கொதித்தெழுந்த தியாகு "ஏன்? என் படத்துக்கு என்னக் குறைச்சல்? திறமை இருக்கும் எங்கிட்ட திமிர் இருந்தா என்ன தப்பு?", எனத் துள்ளினான்.

"ஏதோ திறமைன்னு சொல்றியே.வேறு மொழியில் வர்றப் படத்தை ஒரு நாலஞ்சு படத்தை சேர்த்து வைத்து மொத்தமாக ஒரு படமா எடுக்குறியே.அதுவா திறமை?", என பொட்டில் அடித்தது போல் கேட்ட தன்னுடைய தாயை அதிர்ந்து நோக்கினான்." வீட்ல உட்கார்ந்துகிட்டு தமிழை தவிர வேற என்ன தெரியப் போபுதுன்னு தப்பா நினைச்சுட்ட. போன வருஷம் படம் ஒன்னு எடுத்தியே! அந்த படம் மராத்தியில் வந்ததும், பிறகு ஒரு இங்கிலீஷ் படம் இரண்டையும் சேர்த்து தமிழ் படத்துல ஒரு நாலஞ்சு பாட்டு சேர்த்து மானே தேனே போட்டு முடிச்சு விட்டு பேர் வாங்கிட்ட.

இதுக்கு உனக்கு விமர்சனம் வேற கொடுக்கணுமா? அதையும் தாண்டி கொடுத்தவங்க எல்லாம் உன்னோட ஜால்ராக்கள்தான். தேவை இல்லாம என் வாயை பிடுங்காத ", என வள்ளியம்மை கடுப்புடன் கூறினார். பல பேரை நன்மாணவர்களாக உருவாக்கிய தன்னால் தன் மகனை ஒரு நல்லவனாக உருவாக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரது குரலில் நன்றாகவே தெரிந்தது.

தாயின் ஆதங்கத்தை புரிந்து கொள்ளாமல் "ஏதோ நான் மட்டும்தான் காப்பி அடிச்சி கதை எடுக்கிற மாதிரி சொல்றீங்க? 90% பேர் அப்படிதான் இருக்காங்க", என தன்னுடைய தவறையும் நியாயப்படுத்திய மகனை அற்பப் புழுவைப் பார்ப்பது போல் பார்த்து வைத்தார்.யாரின் பார்வைக்கும், வார்த்தைக்கும் அடங்காமல் அப்பொழுதும் ராஜன் தன்னுடைய கதைக்கான விமர்சனத்தை தரவில்லை என்பதிலேயே தியாகு நின்று இருந்தான்.

அவனது புலம்பலைக் கேட்டு தவித்த வீட்டினர் அனைவரும் வள்ளியம்மையை பாவமாக ஒருப் பார்வை பார்த்தவுடன் "தியாகு! திறமையான கதை அப்படிங்கிறது நல்ல கருத்துகள் எல்லாரையும் போய் சேர்ற மாதிரி இருக்கணும். நீ என்னோட மகன் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக நீ எடுக்குற எல்லா படமும் நல்லா இருக்கு அப்படின்னு நான் சொன்னா உன்னோட குறைகள் திருத்தப்படாது. உன்னோட திறமையும் வளராது. எடுத்த இந்த படத்தில் ராஜனுக்கு ஏதாவது குறை தெரிந்து இருக்கலாம். அதை எல்லார் முன்னாடியும் சொல்லாம உன்னை தனியாக கூப்பிட்டு சொல்லலாம். பொறுமையா இரு.

காலையில தான் பாா்த்துட்டுப் போயிருக்காரு. உனக்கு வேலை இருக்கிற மாதிரி அவருக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கலாம். அதுல உன்னோட வார்த்தையையும் மதிச்சு வந்ததுக்கு நீ சந்தோஷப்படனும். இவ்வளவு பேசுறியே! ஏதாவது ஒருப் படத்துல என்னை இந்த நிலைமைக்கு உயர்த்தின ராஜனுக்கு நன்றின்னு நீ சொல்லி இருக்கியா? குருதட்சனை கொடுக்கத் தேவையில்லை ஆனால் அதை மனசுல ஒரு ஓரத்திலாவது வச்சிருக்கணும். அது எதுவுமே இல்லாத நீ எப்படி ஒரு சிறந்த இயக்குனராக இருக்க முடியும்?",என வினா எழுப்பியவர் சாப்பாட்டு அறையை நோக்கி நகர ஆரம்பித்தவுடன் "அப்படின்னா நான் கஷ்டப்பட்டு எடுத்த கதைக்கு விமர்சனம் எதிர்பார்க்கிறது தப்பா?", என தியாகுக் கத்தினான்.


அவனது கத்தலில் திரும்பியவர் தன்னுடைய கண்ணாடியை ஏற்றி விட்டவாறு "விமர்சனம் இந்த வார்த்தைக்கான அர்த்தம் தெரியுமா? ஒவ்வொருத்தரோட ரசனைகள், எண்ணங்கள்,செயல்கள் வேறுபடும். அவரோட மனநிலையிலிருந்து நிறை குறைகள் எது வந்தாலும் அதுதான் உண்மையான விமர்சனம்.

உன்னோட நிறைகளை மட்டும் பாராட்டிப் பேசுறது உன்னை முடக்கிப் போடுவதற்கான இன்னொரு எளிய வழி. ஆணவமும்,அகங்காரமும் அணைந்து போற விளக்குக்கு சமம். நிறை குடம் கூத்தாடது.ஒரு கதையின் விமர்சனம் கதைக்காக இருக்க வேண்டுமே தவிர கதாசிரியருக்காக இருக்கக்கூடாது", என உண்மையை தன்னுடைய விமர்சனமாக உரைத்த வள்ளியம்மை திரும்பிப் பாராமல் சென்றார்.