Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மனைவியே சரணம்-8 | SudhaRaviNovels

மனைவியே சரணம்-8

Kripnythaa

Moderator
Mar 26, 2018
462
150
63
மனைவியே சரணம்-8

ஷ்யாம் தன் வீட்டில் வந்து தன் சொல் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்ட அம்பிகா அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் கூறாமல் தன் கையில் இருந்த மொபைலை நோண்ட ஆரம்பித்து விட்டாள்.

"நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு", என அவன் மீண்டும் கேட்டவுடன் "அது நீங்க என் வீட்ல எப்படி நடந்துக்கிறீங்க அப்படிங்கறதை பொறுத்து நான் யோசிக்கணும். இப்போதைக்கு சொல்றதுக்கு எனக்கு மூட் இல்லை. அது மட்டும் இல்லாம இந்த மாதிரி கேள்வி கேட்க உங்களுக்கு நான் எந்த பெர்மிஷனும் தரலையே!

அதுக்கு என்னோட பெர்மிஷன் வேணும் உங்களுக்கு. உட்காருறதுக்கே என் பெர்மிஷன் இருக்கணும் அப்படின்னா பேசுறதுக்கு நான் பர்மிஷன் தந்தால் மட்டும்தானே நீங்க பேசணும்.அனுமதி வாங்காம எந்த தைரியத்துல கேள்வி கேக்குறீங்க", என அம்பிகா சிலிர்த்துக்கொண்டு கேட்டவுடன் ஷ்யாம் நாம கேட்டதுதான் தப்பா என்னும் முகபாவனையை காட்டினான்.

அவனது முக பாவனையை பார்த்து சிரிப்பு வந்தாலும் அதனை வெளிக்காட்டிடாத அம்பிகா "ஹாலுல உட்காா்ந்து எங்க அப்பா கூட பேசிகிட்டு இருங்க. பேசறப்ப அவருக்கு என்ன பாட்டு எல்லாம் பிடிக்கும்னு கேட்டு வச்சுக்கோங்க. அதெல்லாம் எனக்கும் பிடிச்ச பாட்டு. உங்க வீட்டுக்கு வந்ததும் காலையில எந்திரிச்ச உடனே எனக்கு அந்த பாட்டு எல்லாம் போட்டாகனும்.இப்ப எனக்கு ஃபேஸ்புக் பார்க்க வேண்டிய வேலை இருக்கு.நீங்க கிளம்புங்க", கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என அவனை அறையிலிருந்து அடிக்காத குறையாக விரட்டியடித்தாள்.

இதை சுந்தரியிடம் எப்படி சொல்வது என ஷ்யாம் தனக்குள்ளேயே குழம்பிக் கொண்டிருந்த பொழுது அவனை கையை பிடித்து இழுத்து வந்த மூர்த்தி சோபாவில் அமரவைத்து எதை எதையோ பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசுகிறார் என புரிந்தாலும் என்ன பேசுகிறார் என ஷ்யாம் அறிந்துகொள்ள இயலவில்லை. அவன் கேட்கிறானா இல்லையா என்று கவனிக்காமலேயே பேசிக்கொண்டிருந்த மூர்த்தி ஒரு கட்டத்தில் "எனக்கு பிடிச்ச பாட்டு கலெக்ஷன் எல்லாம் உங்களுக்கு போட்டுக் காண்பிக்கட்டுமா?", என்றவுடன் அவ கேட்க சொன்னாளே என்னும் நினைவில் அந்த கேள்விக்கு மட்டும் சரி மாமா என்ற பதிலை கொடுத்தான்.

ஷ்யாம் வாயிலிருந்து சரி என்ற வார்த்தை வந்தவுடன் மூர்த்தி வேக வேகமாக தன் வீட்டிலிருந்த ஸ்டீரியோவை அலறவிட்டதில் முதல் பாடலிலேயே

இவன எல்லாம்
போட்டு மொத்தனும்டா
என்ன கெஞ்சுனாலும்
பகுல்ல குத்தனும்டா

நடு வீதியிலே
நேக்கா வெட்டனும்டா
போலீஸ் இவன எல்லாம்
சுட்டு தள்ளனும்டா

நல்லா மாட்டிக்கிட்டான்
வசமா வந்து மாட்டிகிட்டான்
நல்லா மாட்டிக்கிட்டான்
வசமா வசமா மாட்டிகிட்டான்

பொண்ணுகிட்ட சிக்கிட்டான்
சின்னா பின்னம் ஆகிப்புட்டான்
சும்மா இருந்த சங்க
இவனே ஊதி தட்டிவுட்டான்

என்ற வரிகளைக் கேட்டு ஷ்யாம் "மனுஷன் பொண்ணோட மனசை நமக்கு அப்படியே பாட்டா போட்டு காமிக்குறாரோ? இதை நேரடியா இவர் சொல்லி தொலைச்சுருக்கலாமே", என்றுதான் எண்ணினான்.

பாட்டு சத்தத்தை கேட்டு வெளியில் வந்த அம்பிகாவும், ஆனந்தியும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். பாட்டு போட்டதுடன் இல்லாமல் தன் கைகளை இஷ்டத்திற்கு ஆட்டிக் கொண்டிருந்த மூர்த்தியை பார்த்த ஷ்யாம் இப்பவே சுந்தரிக்கு போன் பண்ணிடலாமா என்ற எண்ணத்தில் தன்னுடைய மொபைலை எடுத்தான்.

அவன் மொபைலை எடுத்தவுடன் அவ்விடத்திற்கு வேகவேகமாக வந்த அம்பிகா "என்ன பண்ணப் போறீங்க?", என வினவினாள். "இல்லை அம்மாவுக்கு ஒரு போன் பண்ணலாம்னு போன் எடுத்தேன்", என்றவனிடம் "போன் பண்றதுக்கு முன்னாடி என்கிட்ட பொ்மிஷன் கேட்டீங்களா?", என தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்தவாறு முறைத்தாள்.

அம்பிகா பேசியதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தி அவளை தனியாக இழுத்துச் சென்று "என்னடி பண்ணிக்கிட்டு இருக்க? மாப்பிள்ளை அவங்க அம்மாகிட்ட பேசுறதுக்குக் கூடவா உன்கிட்ட பெர்மிஷன் கேக்கனும். இந்த சூதுவாது எல்லாம் எனக்கு தெரியாம வளர்ந்துட்டேனே! தெரிஞ்சிருந்தா உங்க அப்பாவை அவா் அம்மாகிட்ட பேசவே விட்டிருக்க மாட்டேன்", என மகளிடம் வினவியதுடன் தன்னுடைய புலம்பலையும் கூறி முடித்தார்.

"அதெல்லாம் சும்மாம்மா. எனக்கும் ஒரு என்டர்டைன்மென்ட் வேண்டாமா? கல்யாணம் பண்ணியும் எப்பவும் போல உப்புச் சப்பில்லாத வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருந்தா போர் அடிச்சிடும் இல்லையா? அப்பப்போ இந்த மாதிரி என்டர்டைன்மென்ட் இருந்தா மட்டும்தான் வாழ்க்கை சுவாரசியமா போகும். இதெல்லாம் கத்துக்காம விட்டது உன் தப்பு", என சிரித்துக்கொண்டே பதில் கூறியதுடன் ஆனந்திக்கு உதவியாக சாப்பிட தேவையானவற்றை எல்லாம் டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தாள்.

அம்பிகா மிரட்டிச் சென்றவுடன் பாவமாக அமர்ந்திருந்த ஷ்யாமை பார்த்த மூர்த்தி மாப்பிள்ளை என ரகசிய குரலில் அழைத்தார். என்னவென்று திரும்பியவனிடம் " எல்லாரோட வீட்லயும் இந்த கதைதான் நடக்கும். நீங்க உங்க அம்மாக்கு போன் பண்றதுன்னா ஆபீஸ் போறப்ப வீட்டை விட்டு வெளியேறின உடனே பண்ணிடனும். அதே மாதிரி வீட்டுக்குள்ள வர்றதுக்கு முன்னாடி அம்மாவுக்கு போன் பண்ணி பேசிட்டு வரணும். வீட்டுக்கு வந்துட்டா போனை கையிலேயே தொடக்கூடாது", என அறிவுரைக் கூறினார்.

அவரது அறிவுரையில் அதிா்ந்தவன் "இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் மாமா?", என வினவினான். "இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் தெரிஞ்சு வெச்சுக்காம இருந்தா நம்மளோட வாழ்க்கையில ரெண்டு பக்கமும் இடிபட்டு நிம்மதி இல்லாம கஷ்டப்பட்டு சாகணும். இதை புரிஞ்சி வச்சுகிட்டு ஒரு பக்கத்துக்கு தெரியாமல் இன்னொரு பக்கம் பேசி, முக்கியமா அம்மா, பொண்டாட்டி ரெண்டு பேருக்குமே அடிமையா வாழ்ந்தா வாழ்க்கை ஜெகஜோதியா இருக்கும்.

இது எனக்கு மட்டும் இல்லை. இந்த உலகத்துல வாழுற அத்தனை ஆம்பளைங்களுக்குமே தெரிஞ்ச விஷயம். இப்பதானே சம்சார வாழ்க்கையில காலடி எடுத்து வச்சு இருக்கீங்க. போகப்போக பிராக்டிஸ் ஆயிடும். உங்க அப்பாகிட்டயும், உங்க அக்கா வீட்டுக்காரர்கிட்டயும் கேளுங்க. இன்னும் நிறைய சொல்லித் தருவாங்க. அதையெல்லாம் விட்டுட்டு உங்க இஷ்டத்துக்கு ஏதாவது செஞ்சு அநியாயமா பலியாடு ஆகிடாதீங்க", என மேலும் அவனுக்கு நல்ல விதமாக அறிவுரை வழங்கிய மூர்த்தி ஷ்யாம் கேட்ட உங்களுக்கு எப்படி தெரியும் என்ற கேள்விக்கான பதிலை மட்டும் இறுதிவரை கூறவில்லை.

அதனை உணர்ந்தவன் மீண்டும் அதேக் கேள்வியை கேட்டவுடன் "எனக்கு கல்யாண ஆன நாளுல இருந்து வித்தையைதான் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். அதான் என் வாழ்க்கை நிம்மதியா சப்பாத்தி, பூரிக்கட்டையால் அடி வாங்காமல் குத்துப்பாட்டு ஓட குதுகலமாப் போகுது. நீங்களும் இதையே பாலோ பண்ணுங்க, வாழ்க்கையில அடி வாங்காம வாழுங்க", என விளம்பர பாணியில் அவர் கூறிய உடன் ஷ்யாமின் மனதில் மீண்டும் ஒரு குழப்பம் ஏற்பட்டது.

அவனது குழப்பம் சூழ்ந்த முகத்தைப் பார்த்தவர் "என்ன மாப்பிள்ளை திரும்பவும் குழப்பமா?", என்றவுடன் "காலேஜுல ஏறத்தாழ இருநூறு பிள்ளைகளுக்கு மேல வகுப்பு எடுக்குறேன். இந்த மாதிரி ஒரு குழப்பம் எனக்கு வந்ததேக் கிடையாது மாமா! ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி எங்க அம்மா அறிவுரை சொன்ன விதத்துக்கும்,கல்யாணமான ஒரே நாள்ல நீங்க புத்திமதி சொல்ற விதத்துக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது. இதுல நான் எதை கடை பிடிக்குறது?", என மிகவும் வருத்தத்துடன் கூறியவனைப் பார்த்து மூர்த்திக்கு குதூகலமாக இருந்தது.

அவனது வருத்தத்தில் வாய்விட்டு சிரித்தவர் "மாப்பிள்ளை! இதெல்லாம் ஒரு பெரிய விஷயமேப் கிடையாது. எல்லா அம்மாக்களும் பையன் தன் பேச்சை கேக்கனும் அப்படின்னு சொல்லிட்டுதான் சொல்லுவாங்க. எல்லாம் பொண்டாட்டியும் புருஷன் தான் பேசுறதை மட்டும்தான் கேட்கணும்னு சொல்லுவாங்க. ஆனால் இந்த ஆண் வர்க்கம் என்ன பண்ணனும்னு தெரியுமா?", என ஒரு இடைவெளிவிட்டு அவர் மீண்டும் தன்னுடைய அனுபவ பாடத்தை மருமகனுக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தார்.

" நான் உங்க பேச்சை மட்டும்தான் கேட்குறேன் அப்படிங்கற மாதிரி ரெண்டு பக்கமும் தலையாட்டிட்டு ரெண்டு பேரோட பேச்சையும் சுத்தமா கேட்கக்கூடாது. எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க. உங்க அப்பா இப்பன்னு இல்லை, நீங்க சின்ன வயசு இருக்குறப்போ இருந்து பேப்பர் படிக்க ஆரம்பிச்சா குறைஞ்சது ஒரு ஒன்னரை மணி நேரத்துக்குப் படிப்பாரா?", என ஒரு வினாவினை எழுப்பினார்.

மூர்த்தியின் வினாவில் "அது எப்படி மாமா! இவ்வளவு கரெக்டா சொல்றீங்க. ஒரு எழுத்து விடாமல் வாசிப்பார். அதுவும் தமிழ், இங்கிலீஷ் ரெண்டுமே வாங்குவோம். ரெண்டு பேப்பர்லயும் ஒரே நியூஸ் வந்தாலும் திரும்பப் படிச்சிட்டுதான் அடுத்த வேலையைப் பார்ப்பார்", என்று ஷ்யாம் பதிலளித்தான்.

"அது எதுக்கு தெரியுமா? பேப்பரை படிக்கிறது, பேப்பர்ல வந்திருக்கிற விஷயத்தை தெரிஞ்சுகிறதுக்காக பேப்பர்ல தலையை நுழைக்கிறதுக் கிடையாது. வீட்ல பொண்டாட்டி பேசுற பேச்சில் இருந்தும், அம்மா பேசுற பேச்சுல இருந்தும் தப்பிப்பதற்காக ஆம்பளைங்க கண்டுபிடிச்ச ஒரே வழிமுறைதான் பேப்பர் படிக்கிறது. நானும் ஆரம்ப காலத்துல பேப்பர்தான் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா அது தூக்கம் தூக்கமா வந்துச்சு.

அதுக்கடுத்து பேப்பர் வாங்குறதை நிறுத்திடுவேன்னு பயமுறுத்த ஆரம்பிச்சிட்டாங்க. எதுக்கு வம்புன்னுதான் குத்துப்பாட்டா போட்டு குதூகலமா கேட்க ஆரம்பிச்சுட்டேன். உங்க அத்தை சமையல்கட்டுல இருந்து பேசினாலும், என்னோட அம்மா என் பக்கத்துல உட்கார்ந்து பேசினாலும் அதெல்லாம் என் காதுல விழாமல் இருப்பதற்காக பாட்டு சத்தத்தை ரொம்ப ஜாஸ்தியா வச்சு கேட்க ஆரம்பிச்சு இப்ப அதுவே பழகிடுச்சு", என அவர் கூறி முடித்ததும் "பாட்டு சத்தத்தை மீறி அவங்க சத்தம் இருக்காதா?", என்ற ஒரு சந்தேகத்தை ஷ்யாம் எழுப்பினான்.

"உங்ககிட்ட படிக்கிற பிள்ளைங்க சந்தேகம் கேட்குற மாதிரியே நீங்களும் கேட்கிறீங்க பாருங்க! நீங்க இன்னும் தேறுறதுக்கு ரொம்ப காலம் ஆகும். மூணு பக்கமும் இருந்து சத்தம் வர்றப்ப எந்த சத்தமும் நம்ம மண்டைக்குள்ள போகாது. ஐயோ இது என்ன ஒரே காட்டு கூச்சலா இருக்கு அப்படிங்கிற எண்ணம் இருக்குமே தவிர எந்த வார்த்தைகளும் நம்ம மனசுக்குள்ளயும் போகாது. மண்டைக்குள்ளேயும் போகாது. ரொம்ப சிம்பிள்.

நீங்க பேப்பரா,பாட்டா இல்லை உங்களுக்கு வேற ஏதாவது ஒரு வழி இருக்கா அப்படிங்கறதை கூடிய சீக்கிரம் முடிவு பண்ணிடுங்க. முடிவு பண்ணாம இருக்கிற காலம் லேட் ஆச்சுன்னா உங்களோட நிலைமை ரொம்ப பாவம்", என மூா்த்தி தன் இரு கைகளை விரித்தவாறு கூறி முடித்த பொழுது ஆனந்தியும்,அம்பிகாவும் இருவரையும் சாப்பிட அழைத்திருந்தனர்.

அம்பிகாவினட வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு மீண்டும் ஷ்யாமின் வீட்டிற்கே பயணித்தனர். மறு வீட்டு விருந்துக்கு சென்ற தன்னுடைய மகன் தான் அழைத்த பொழுது மட்டுமே பேசியதில் ஏற்கனவே மன வருத்தத்தில் இருந்த சுந்தரி வீட்டுக்கு வந்த பின்னர் தன்னிடம் நின்று பேசாமல் நேரடியாக அறைக்குள் நுழைந்து கொண்டவனைப் பார்த்து விக்கித்துப் போய் நின்றார்.

அவரது பார்வையை பார்த்த அம்பிகா "என்னத்தை பாா்க்குறீங்க?", எனக் கேட்டவுடன் "ஷ்யாமுக்க என்னாச்சு? என் கன்னுக்குட்டி என்னை பாா்த்து பேசாம இப்படி போகமாட்டானே! ஏன் இப்படிப் போறான்? என்றதும் அம்பிகா அவரின் புறம் திரும்பி "இதற்கான பதிலை நீங்க மாமாகிட்டயும், அரவிந்த் அண்ணாகிட்டயும் போய் கேட்டா உங்களுக்கு இன்னும் தெளிவாகவே தெரியும்", எனக் கூறியதுடன் அவளும் தங்களின் அறைக்கு சென்றுவிட்டாள்.

அம்பிகா பேசி சென்றதில் சுந்தரி அதிர்ந்துபோய் தன் கணவரை பார்த்தார். சுந்தரி கேட்டதையும், அம்பிகா கூறிய பதிலையும் ஏற்கனவே கேட்டிருந்த சுதாகர் தன் மனைவி தன் புறம் திரும்பிய உடன் சுந்தரிக்கு சற்றும் விருப்பம் இல்லாத ஒரு செயலை செய்து வைத்தார்.

அச்செயல்தான் என்னவோ?அச்செயலினால் சுதாகருக்கு ஏற்படப்போகும் பின் விளைவுகள்தான் என்னவோ?
 
Need a gift idea? How about some novelty socks?
Buy it!

Latest