Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மனைவியே சரணம்-6 | SudhaRaviNovels

மனைவியே சரணம்-6

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
மனைவியே சரணம்-6

அம்பிகா அறையினுள் வந்ததும் ஷ்யாமுக்கும் தன் மனைவியின் அழகில்
என்ன என்னவோ எண்ணங்கள் தோன்றின. ஆனால் அவை அனைத்தையும் மறக்கடிக்கும் விதமாக தன் அறையினுள் முதலிரவிற்கு நுழையும் முன்னர் தன்னுடைய அம்மா சுந்தரி அவனின் காதில் ஓதிய

"உன் பொண்டாட்டியை இன்னைக்கே அடக்கி வச்சிடு.நீ சொன்ன பேச்சை இன்னைக்கு இருந்து அவ கேட்டுத்தான் ஆகணும். இல்லைன்னா காலத்துக்கும் அடங்காமல் திரிவா. உன் நல்லதுக்காகதான் அம்மா எப்பவுமே சொல்லுவேன் கன்னுகுட்டி", என்ற வார்த்தைகள் அவனது காதில் ரீங்காரமிட்டு அம்பிகா தனது அருகில் வந்தவுடன் எழுந்து நிற்கச் செய்தது.

ஷ்யாம் எழுந்து நின்றவுடன் நமக்கு மரியாதை தர்றானோ என்ற தோரணையில் அம்பிகாவும் அவனைப் பார்த்து வைத்தாள். ஆனால் அவனோ தான் எழுந்து நின்றதுடன் "எழுந்து நில்லு!", என ஒரு வாத்தியாரின் தோரணையில் கூறினான்.

இவன் லூசா என அம்பிகா எண்ணிக்கொண்டே எழாமல் அதே இடத்திலேயே அமர்ந்திருந்தாள். மீண்டும் ஷ்யாம் "நான் உன்னைதான் சொல்றேன். உன்னை எந்திரிச்சு நிக்கச் சொன்னா நீ எந்திரிச்சு நிக்கணும். நான் உட்கார சொன்னாதான் நீ உட்காரனும்.

நான் சொல்லாமா நீ எப்படி உட்காரலாம்? என சிறு குழந்தையை மிரட்டுவது போல் பேசினான். "நீங்க லூசான்னு நெனச்சேன். ஆனா இப்ப லூசுதான் அப்படிங்கறதை நிரூபிச்சுட்டீங்க. இவ்வளவு வயசு ஆகியும் எனக்கு நானாகவே உட்காரவும், நிக்கவும் தெரியாதா?

காலேஜ்ல வாத்தியாரா இருந்தா உங்களோட இந்த அதிகாரத்துக்கு படிக்கிற பிள்ளைங்க கூட யாரும் கட்டுப்பட மாட்டார்ங்க. இங்க பொண்டாட்டியை எப்படி அதிகாரம் பண்றீங்களே! உங்களுக்கு எவ்வளவு தெனாவட்டு இருக்கனும்?", என அம்பிகா ஆரம்பத்திலேயே எகிற ஆரம்பித்து விட்டாள்.

அவளது எகிறலில் சற்று நடுக்கம் ஏற்பட்டாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாத ஷ்யாம் "அதெல்லாம் கிடையாது. நான் என்ன சொல்றேனோ அதைதான் நீ செய்யணும். அதை மாத்தி செய்யவேக் கூடாது", என தன் வார்த்தைகளிலேயே பிடிவாதமாக நின்றான்.

"எவன்டா இவன் 16 வயதில் சப்பாணி மாதிரியே ஆத்தா வையும், சந்தைக்கு போகனும், காசு கொடுன்னு சொல்லிக்கிட்டு நிக்குறான் என தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே அம்பிகா "சரி! நீங்க சொல்றபடி கேக்கணும் அப்படிதானே! அதுக்கு முன்னாடி நான் சொல்றதை நீங்க கேளுங்க.

இப்படி என் பக்கத்துல உட்காருங்க .உங்க கிட்ட கொஞ்சம் பேச்சுவார்த்தை நடத்தனும்", என அவனிடம் கூறினாள். "ஆனால் நீ நிக்கலையே?", என ஷ்யாம் குழம்பிப்போய் கேட்டதற்கு " நிப்போம்! நிப்போம்! இப்போதைக்கு உட்காருங்க. உட்கார்ந்து பேசி முடிச்சுட்டு அதுக்கடுத்து உங்க பேச்சை நான் கேட்பேன். சரியா?", என சிறு குழந்தைக்குக் கூறுவது போல் பேசி அவனை தன் அருகில் அமர வைத்தாள்.

அவன் அமர்ந்தவுடன் பிளாஸ்கில் இருந்த பாலினை எடுத்து சரிபாதியாக ஊற்றியவள் அவனுக்கு ஒரு டம்ளரை கொடுத்துவிட்டு தானும் பாலினை அருந்த தொடங்கினால். அவளின் செயல்களை பார்த்தவன் "அம்மா இந்த மாதிரி பேச சொல்லலையே", என தன் மண்டையினுள் யோசித்துக் கொண்டிருந்தான்.

"என்ன இன்னும் பால் குடிக்கலையா?", என்ற அம்பிகாவின் குரலில் தன்னுணர்வு பெற்றவன் ஒரே மடக்கில் குடித்து முடித்துவிட்டு இப்ப பேசு என அம்பிகாவின் புறம் திரும்பி அமர்ந்தான். "எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க. பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு உங்க அம்மா வந்து உட்காரும்மான்னு சொன்னவுடனே நான் உட்கார்ந்துட்டேன்.

நீங்க என்ன பண்ணி இருக்கணும். அம்மா! அம்மா! அவளை நான்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். நான் சொன்னா மட்டும்தான் உட்காரனும்,நிக்கனும். மொத்தத்துல காலேஜ் பிள்ளைங்க என் பேச்சுல கேட்காதது எல்லாத்தையும் இவளை அதிகாரம் பண்ணிதான் நான் நிறைவேத்திக்கனும் அப்படின்னு எல்லாருக்கும் முன்னாடி சொல்லி இருக்கலாமே! ஏன் அன்னைக்கு நீங்க சொல்லலை?", என்ற ஒரு வினாவினை எழுப்பினாள்.

அம்பிகா கேட்ட கேள்விக்கு ஷ்யாம் சிறிது நேரம் எதுவும் பதில் சொல்லவில்லை. நீ சொல்லும் போது சொல்லிக்கோ என்ற எண்ணத்தில் அமர்ந்திருந்த அம்பிகா அவனது கையில் இருந்த மொபைலை பிடுங்கியவள் "இதுக்கு பாஸ்வேர்டு சொல்லுங்க", எனக் கேட்டாள்.

அம்பிகாவிற்கு என்ன பதில் கூறலாம் என்ற சிந்தனையில் இருந்தவன் சுந்தரி எனக் கூறியதும் அம்பிகா தன் தலையை நிமிர்ந்துப் பார்த்து "நான் உங்க அம்மா பேரு கேட்கலை. மொபைலோட பாஸ்வேர்டு கேட்டேன்", என அழுத்தம் திருத்தமாகக் கூறினாள்.

அவளின் குரல் அழுத்தத்தில் தன் சிந்தனையிலிருந்து தொலைந்தவன் "மொபைலுக்கு மட்டும் இல்லை. எல்லாத்துக்குமே எங்க அம்மாவோட பேர்தான் பாஸ்வேர்டா வெச்சிருப்பேன்", என மிகவும் பெருமையான குரலில் கூறினான்.அட அம்மாஞ்சி என மனதினுள் நிலைத்தவள் "சரி! சரி! உங்க மொபைல் பார்த்து முடிக்கிறதுக்கு முன்னாடி நீங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிடனும் சரியா? அப்படி இல்லைன்னா இப்பவே ரூமை விட்டு வெளியில் அனுப்பிடுவேன்", எனக் கூறிவிட்டு அவனது மொபைலை நோண்ட ஆரம்பித்துவிட்டாள்.

என்னாது ரூமை விட்டு வெளியில அனுப்புவாளா? என அதிா்ச்சி அடைந்த ஷ்யாம் வேகவேகமாக "அன்னைக்கு அம்மா அங்க வந்து எதுவும் பேசக்கூடாது. அந்த பெண்ணை பாா்த்து சிரிக்கக்கூடாது அப்படின்னு சொல்லிதான் கூட்டிட்டு வந்தாங்க. என்ன இருந்தாலும் நானும் மாப்பிள்ளை அப்படிங்கிற கெத்து காமிக்கணும் இல்லையா? அதுக்காகதான் அப்படி அமைதியா இருந்தேன்", என தன்னுடைய பதிலைக் கூறினான்.

"ஓ அப்படியா! ஆனா என்னோட அம்மா இந்த மாதிரி எதுவுமே சொல்லலையே! ரொம்ப மோசம் பாருங்களேன். அத்தைகிட்டதான் இனிமே எல்லாத்தையும் கத்துக்க போறேன்", என அம்பிகாக் கூறியவுடன் ஷ்யாம் மிகவும் மகிழ்ந்து போனான். "நிஜமா அம்பிகா! எங்க அம்மா மாதிரி புத்திசாலி யாருமே கிடையாது.அவங்க சொல்ற மாதிரி நீ நடந்துக்கிட்டேனா நீயும் வாழ்க்கையில ரொம்ப பெரிய இடத்துக்கு போய்டுவ", எனக் கூறிய ஷ்யாம் அவளின் கைகளை எடுத்து தன் கைகளினுள் பொதித்துக் கொண்டான்.

இதெல்லாம் உங்க அம்மா சொல்லி அனுப்புனாங்களா என கேட்பதற்கு வாயில் வந்த வார்த்தைகளை அப்படியே தொண்டைக்குள் விழுங்கியவள் "ஆனா நான் வந்த உடனே நீங்க சொன்ன வார்த்தை எல்லாம் தெரிஞ்சா அத்தை மனசு எவ்வளவு கஷ்டப்படும்?", என வராத கண்ணீரை அவன் தன் கைகளை பிடித்து இருந்ததால் திரும்பி தன் தோளில் துடைப்பது போன்ற பாவனை செய்தாள்.

" அச்சச்சோ! அதெல்லாம் அம்மாதான் சொன்னாங்க அம்பிகா!", என தன் தாயின் பெருமையை மேலும் நிலைநாட்ட ஷ்யாம் உண்மையைக் கூறியிருந்தான். ஓ அப்படியா என்றவள் "நீங்க எப்படி காலேஜ்ல வாத்தியாரா இருக்கீங்க?", என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பினாள்.

"ஏன் அப்படி கேட்குற? நான் ரொம்ப நல்லா படிப்பேன்.யூனிவா்சிட்டி டாப்பர், பி.ஹெச்டி பண்ணினதுலயும் நான் பெஸ்ட்", என ஷ்யாம் தன்னுடைய பெருமைகளை கூறியவுடன் "அதெல்லாம் சரி! நீங்க அத்தை பேச்சு மட்டும்தானே கேக்குறீங்க. வெளி உலகத்துக்கு போறீங்களே, அங்க உங்களால அத்தையோட அறிவுரை இல்லாமல் சுயமாக நடக்க முடியுதா", என அம்பிகா தன்னுடைய சந்தேகத்தை மிகவும் துல்லியமாக வினவினாள்.

"என்னை கஷ்டப்பட்டு வலி தாங்கி பெத்து, எனக்காக பார்த்து பார்த்து செஞ்சி வளர்த்துவிட்ட என் அம்மாவோட வழிகாட்டுதலை விடவா என்னுடைய சுய புத்தி வேலை செஞ்சிடப்போகுது. அம்மா எப்பவுமே பிள்ளைக்கு தப்பான விஷயத்தை சொல்லி தர மாட்டாங்க அம்பிகா! அதனால நீயும் நாளையிலிருந்து என் அம்மா பேச்சை மட்டுமேக் கேளு", என்று பழங்கால தமிழ் சினிமா எல்லாம் தோற்றுப் போய்விடும் போல இருக்கே இவனோட அம்மா சென்டிமென்ட் என அம்பிகா எண்ணுமளவிற்கு ஷ்யாம் தன் தாயின் பெருமைகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தான்.

"இவனோட அம்மா கஷ்டப்பட்டு பெத்துருக்காங்க. என்னோட அம்மா என்னை சந்தையில விலைக்கு வாங்கிட்டு வந்துருக்காங்க. எல்லாம் காலக்கொடுமை. கல்யாணமான முத ராத்திரியிலேயே இந்த கொடுமையெல்லாம் என்னை பாா்க்க வச்சுட்டியே கடவுளே", என தன் மனதிற்குள் நினைத்த அம்பிகா ஆமா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் என்று தலையை ஆட்டி வைத்தால்.

அவளின் தலையாட்டலிலேயே மகிழ்ந்து போன ஷ்யாம் அதற்குப் பின்னர் தன்னுடைய சுய புத்தியுடன் இல் வாழ்க்கையையும் ஆரம்பித்து வைத்தான்.

மறு நாளைய விடியலில் தான் எழும் பொழுதே தன் வீட்டு மாப்பிள்ளைக்கும் அலைபேசியில் இருந்து அழைத்து எழுப்பிவிட்ட சுதாகர் "மாப்பிள்ளை வெளியில வாங்க", என அவசரகதியில் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.

நல்ல நித்திரையில் இருந்த அரவிந்த் சுதாகர் அழைத்தவுடன் அடித்துப் பிடித்து வெளியே வந்தவன் "என்ன மாமா! ஏன் அவசரமா வரச் சொன்னீங்க? என்ன ஆச்சு? ஷ்யாம் ஏதாவது அவங்க அம்மா பேச்சைக் கேட்டு ஏடாகூடமா பண்ணி வச்சுட்டானா?", என பதட்டத்துடன் வினவினான்.

"அதெல்லாம் இல்லை மாப்பிள்ளை. வீட்ல இன்னும் கொஞ்சம் சொந்தக்காரங்க இருக்காங்க இல்லையா? அதனால அவங்களுக்கு காபி தா்றப்ப நாம அங்க இருந்தா ஆளுக்கு ஒரு டம்ளர் கிடைக்கும். கூட்டத்தோட இருந்தால்தான் அது கிடைக்கும். இல்லைன்னா பச்சைத்தண்ணி கூட கிடைக்காது. என்ன இருந்தாலும் என் மகளை கட்டிக்கிட்ட மாப்பிள்ளை நீங்க. உங்களை விட்டுட்டு நான் சாப்பிட முடியுமா? அதுக்காக தான் வரச் சொன்னேன்", என அவனை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்த சில பல உறவினர்களுடன் சென்று அமர்ந்து கொண்டார்.

சுதாகர் அரவிந்தனுடன் சென்று அமர்ந்ததை பார்த்த சுந்தரி "ஏங்க கொஞ்சம் இங்க வந்துட்டு போங்க", என அவரை சமையல் அறைக்கு அழைத்தார். "சொக்கநாதா! என் பொண்டாட்டி எனக்கு தனியா கூப்பிட்டு வச்சு காப்பி தர்றப் போறா போல இருக்கே. நான் உனக்கு நிறைய நன்றி சொல்லனுமே!", என தன் மனதுக்குள் மகிழ்ந்து கொண்டவராக சமையலறையை நோக்கி சென்ற சுதாகர் அங்கே காபிப் போட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லாமல் போக என்ன சுந்தரி என பாசமாக வினவி வைத்தார்.

"உங்க அருமை மருமக வந்து காபி போட்டுக் கொடுத்தாதான் இன்னைக்கு காபி. அதனால நீங்க தெரு முக்கு வரைக்கும் ஒரு நாலு தடவை நடந்துட்டு வாங்க.கூடவே மாப்பிள்ளையையும் கூட்டிட்டு போங்க", என அவரின் காப்பி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சுந்தரியை எந்த பார்வை பார்த்து வைக்கலாமென சுதாகர் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

சுதாகர் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே தங்களின் அறையில் இருந்து வெளியில் வந்த அம்பிகா நேராக சுந்தரியின் முன்னால் வந்து நின்று கொண்டு பேசிய வார்த்தைகளில் ஹாலில் இருந்த அரவிந்துக்கு மயக்கம் வந்துவிட்டது.

அரவிந்தை மயக்கத்தில் ஆழ்த்திய வார்த்தைகள்தான் என்னவோ? ஷ்யாம் முதல் நாள் கூறிய வார்த்தைகளை அம்பிகா கடைபிடித்திடுவாளா?
 
  • Like
Reactions: Rithi