மனைவியே சரணம்-2

Kripnythaa

Moderator
Mar 26, 2018
445
117
63
மனைவியே சரணம்-2

ஹே சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
தாஜ் மஹால் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க

நாங்க சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
கம்மிட்டெடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த
சிக்னல் கொடுங்க

என்ற பாடல் வரிகள் அலறிக் கொண்டிருக்க அதற்கு இணையாக மற்றொரு அலறல் காதில் விழுந்து 8 மணி வரை சுகமான நித்திரையில் இருந்த அம்பிகாவை படுக்கையிலிருந்து எழச் செய்தது.

இவங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லை என இரண்டு அலறலையும் சற்றும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலைக்கு கிளம்பி தயாரானவள் தன் அறையில் இருந்து வெளியில் வந்தாள்.

வெளியில் வந்தவளை அவளது அறை வாயிலிலேயே எதிர்கொண்ட அவளின் அப்பா மூர்த்தி "ஏன்மா அம்பு! நம்ம அப்பாவோட குரல் ஆபத்துல இருக்கிற மாதிரி இருக்கே! போயி காப்பாத்துவோம்கிற எண்ணம் உனக்கு இருக்கா?", என மிகவும் பாவமாக வினவினார்.

"அது எதுக்கு? டெய்லி நீங்களும் வேற பாட்டு போட்டு அடி வாங்காம தப்பிக்கலாம் இல்லை. ஏதோ இப்போதான் 15 வயசு அப்படிங்கற மாதிரி நடந்துக்கோங்க. அம்மா இன்னைக்கு சப்பாத்தி கட்டையால அடிச்சாங்களா? இல்லைன்னா அம்மி குழவியால அடிச்சாங்களா?", என மிகவும் சாவதானமாக வினவிய மகளை பார்த்த ஆனந்தி

"எதை வச்சியும் அடிக்கலை. அடிக்கிறதுக்கு கையை ஓங்குறப்பவே மனுஷன் கத்தி ஏதோ இவரை கொடுமைப்படுத்துற மாதிரி சீன் போட்டுட்டாரு. மனுஷன் கேட்ட பாட்டை நீயும் கேட்டியா?", என கோபத்துடன் டைனிங் டேபிளில் மகளுக்கும் கணவருக்கும் தேவையான உணவை எடுத்து வைத்தவர் தானும் தனக்கு தேவையான உணவைத் தட்டில் இட்டுக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

அம்பிகா தனக்கான சேரை இழுத்துப் போட்டு அமர்வதற்கு முன்னர் வேகமாக ஓடி வந்து அமர்ந்த மூர்த்தி "விடு ஆனந்தி! அரசியல்ல இதெல்லாம் சகஜம். மனசு எப்பவும் இளமையா இருக்கணும். அதுக்கு இந்த மாதிரி பாட்டு தான் உதவோ உதவுன்னு உதவும். நீயும் இந்த மாதிரி பாட்டெல்லாம் கேட்டுப்பாரு", என மனைவிக்கு இலவசமாக அறிவுரை வழங்கி தனது தட்டில் இருந்த இட்லியை இரண்டை தானே குறையச் செய்து கொண்டார்.

"ஏன்பா தேவையில்லாம பேசி நாலு இட்லியை ரெண்டா குறைச்சுக்கிறீங்க? இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் இன்னிக்கு சோறு கிடையாது. பேசாம சாப்பிட்டுட்டு வேலைக்கு கிளம்புற வேலையைப் பாருங்க", என்ற அம்பிகா தன் தாய் ஏதோ கூற விழைவதை கண்டு என்ன விஷயம்மா எனக் கேட்டாள்."இல்லை, பொண்ணு பாா்க்க வர்றாங்களா இல்லையான்னு எதுவுமே சொல்லாம இருக்காங்",க என மொட்டையாக ஆனந்தி உரைத்ததும் என்னவென்று புரியாத அம்பிகா தன் புருவத்தை உயர்த்தினாள்.

"இல்லைடி, போனவாரம் உன்னோட ஜாதகத்தை வாங்கிட்டு போனாங்க. அவங்ககிட்ட இருந்து இதுவரைக்கும் எந்த தகவலும் இல்லை", என அவர் விளக்கியவுடன் "வர்றப்ப வரட்டும்மா. அவசரப் படாதீங்க", எனக் கூறிவிட்டு தன்னுடைய வேலைக்கு கிளம்பினாள்.

அம்பிகா சென்ற சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் பாட்டி ஒருவர் தனது வீட்டிலிருந்து இவர்கள் காம்பவுண்டை நோக்கி ஆனந்தி என கத்தினார். வந்துருச்சா நம்ம ஏரியா சிசிடிவி என முனங்கி கொண்டே வெளியில் வந்த ஆனந்தி "சொல்லுங்கம்மா, எப்படி இருக்கீங்க? சாப்பிடிங்களா?", என புன்னகை முகமாக வினவினார்.

"ஆச்சு! ஆச்சு! உன் மக வேலைக்கு கிளம்பிட்டாளா? இல்லை வீட்டுக்குள்ளதான் இன்னும் இருக்காளா?", என அவர் வினவியதற்கு "அவ கிளம்பி போய் அரை மணி நேரம் ஆச்சும்மா", என ஆனந்தி பதரிசாகவே பதிலளித்தார். "பாரேன், ஊர் உலகத்துல இருக்குற மத்த பிள்ளைங்க மாதிரி இல்லாம உன் மக வர்றதும் தெரியலை. போறதும் தெரியலை. பொம்பளப்புள்ளையை அடக்க ஒடுக்கமாய் இப்படிதான் வளர்த்து வைக்கனும். அந்த வகையில நீ ரொம்ப நல்லா வளர்த்திருக்க", என பாராட்டி விட்டு தன் வீட்டின் மற்ற பக்கம் இருக்கும் வீட்டை நோக்கி தன்னுடைய குரலை எழுப்ப ஆரம்பித்தார்.

ஆனந்தி பேசியதைக் கேட்ட மூர்த்தி "என்னவாம் இன்னைக்கு சிசிடிவிக்கு?", என வினவினார். "வழக்கம்போல அதே கேள்வி, அதே பதில்தான். அம்பிகாக்கு கல்யாணம் கட்டி முடிக்கிற வரைக்கும் இந்த அம்மாகிட்ட இருந்து இதே பதில் வந்துட்டா நிம்மதியா இருக்கும்" என புலம்பிய ஆனந்தி மூர்த்தியை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்.

மூர்த்தி சென்ற இரண்டு மணி நேரங்கள் கழித்து ஆனந்தியை அழைத்தவர் "ஆனந்தி! மாப்பிள்ளை வீட்டிலிருந்து போன் பண்ணுனாங்க. ஞாயித்துக்கிழமை பொண்ணு பார்க்க வர்றதா சொல்லிருக்காங்க", எனக் கூறினார். அவரது பேச்சினை கேட்ட ஆனந்திக்கு என்னடா இது ஒரு வார்த்தை வரட்டுமான்னு கேட்காம அவங்களே முடிவு பண்ணிட்டு சொல்றாங்களே! இது ஒத்து வருமா? என்ற எண்ணம் தோன்றியபோதும் "சரிங்க வர சொல்லுங்க... நான் இன்னைக்கு அம்பிகா சாயங்காலம் வந்தவுடனே சொல்லிடுறேன்", என உரைத்து ஞாயிற்றுக்கிழமைக்கு ஏதேனும் வாங்க வேண்டுமா என்று பட்டியலிட ஆரம்பித்தார்.

அம்பிகா வந்தவுடன் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு தாய் கொடுத்த சிற்றுண்டியை நிறுத்தி நிதானமாக உண்ண ஆரம்பித்திருந்தாள் அவள் உண்ணுவதைப் பார்த்த மூர்த்தி அம்புமமா என ராகம் இழுத்தார்.

"அப்பா! அம்பு கொம்புன்னுக் கூப்பிடாம முழு பேரை சொல்லிக் கூப்பிடுங்க.நாயேன்னு சொல்லி கூட கூப்பிடுங்க. இந்த அம்பு அப்படிங்கறது படு மொக்கையா இருக்கு", என அவருக்கு பதிலளித்த அம்பிகா "இப்ப எதுக்கு நீங்க ராகம் போட்டீங்க? அதையும் சொல்லிடுங்க", எனக்கேட்டாள்.

"நியாயமா பாா்த்தா இதெல்லாம் உன்னோட அம்மாதான் சொல்லணும். இங்க உன் அம்மாவுக்கு கொஞ்சம் பொறுப்பு கம்மியா இருக்கு. அதனால அந்த பொறுப்பை நானே என் கையில எடுத்து உனக்கு விம் போட்டு விளக்கப் போறேன்", என பெரும் உரையுடன் ஆரம்பித்த மூர்த்தி மகளின் முகத்தில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என பார்த்தால் அதற்கு அவளோ பேசுறதெல்லாம் பேசு எனக்கென்ன வந்துச்சு என கையிலிருந்த பணியாரத்தை வாயினுள் நுழைத்து கொண்டிருந்தாள்.

"இவ்வளவு பேசினதுக்கு ஏதாவது ரியாக்சன் காமிக்கிறாளா? எல்லாம் எங்க அம்மா மாதிரியே வந்து வாச்சிருக்கா", என மனதில் நினைத்த மூர்த்தி ஆனந்தியை பாவமாக ஒரு பார்வை பார்த்து வைத்தால்.

"என்ன உங்க அம்மா மாதிரியே இருக்கான்னு மைண்ட் வாய்ஸ்ல பேசு முடிச்சிட்டீங்களா?", என்று சிரித்தவாறு கேட்ட ஆனந்தி அம்பிகாவை நோக்கி "அம்பிகா! மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஞாயித்துக்கிழமை வர்றதா சொல்லியிருக்காங்க. நீ எங்கேயும் பிரெண்ட்ஸ் கூட வெளியில போற ப்ரோக்ராம் இருக்கா?", என வினவினார்.

"ஞாயித்துக் கிழமை காலையில வர்றாங்களா? சாயங்காலம் வர்றாங்களா?", என அம்பிகா கேட்ட பின்னர்தான் ஆனந்தியும் மூர்த்தியை பார்த்தார். "அது காலையிலேயே வர்றதா சொன்னாங்க", என அவர் தயங்கியவாறே உரைத்தார். அவர் தயக்கத்திலேயே என்ன கூற வருகிறார் என்பதை உணர்ந்து கொண்ட ஆனந்தி "காலைல வர்றதா இருந்தா டிபன் முடிச்சதுக்கப்புறம் வர சொல்லுங்க... மத்தியானத்துக்கு முன்னாடி கிளம்பிப் போயிடனும். சம்பந்தம் முடிவானா மட்டும்தான் காபியேக் கொடுப்பேன்.

இல்லைன்னா வெறும் பச்சை தண்ணிதான். இதையெல்லாம் நீங்களே சொல்லிடுங்க. நான் சொன்னா ஏதோ உங்களை மட்டம் தட்டி நான் அதிகாரம் பண்ற மாதிரி இருக்கும்", என கூடுதலாக ஒரு வார்த்தையும் சேர்த்துக் கூறிவிட்டு தன்னுடைய மகளைப் பார்த்துக் கண்ணடித்தார்.

மனைவிக்கு தானும் சற்றும் குறைந்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையாக "அதெல்லாம் சரி நான் சொல்லிடுறேன். நீயும் நம்ம பக்கத்து வீட்டு சிசிடிவியை கூப்பிடு. அப்பதான் உன்னை பத்தியும் நம்ம பொண்ணை பத்தியும் இவங்கள மாதிரி அடக்க ஒடுக்கமான பிள்ளைங்க இந்த ஊரு உலகத்திலேயே கிடையாதுன்னு நல்லதா நாலு வார்த்தை சொல்லும்", எனக் கூறியவர் வேகமாக சென்று மகளின் பின்னால் ஒளிந்து கொண்டார்.

அவர் பேசியதையும் அதற்கடுத்து அவர் செய்த செயலையும் பார்த்த ஆனந்தி தன் தலையில் அடித்துக் கொண்டு "இந்த கூறுகெட்ட மனுசனை வெச்சுகிட்டு ஒன்னும் சொல்றதுக்கு இல்லை", என முடித்துக் கொண்டவர் தன் மகளை பார்த்து "உனக்கு வரப்போற மாப்பிளையும் இதே மாதிரியே அமைஞ்சுட்டா எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும் அம்பிகா!", என மகளின் கன்னம் வழித்துச் சென்றார்.

ஆனந்தி நகா்ந்தவுடன் அம்பிகாவைப் பார்த்து "என்ன அம்பு? இந்த ஆனந்தி என் மண்டையில இரண்டு போடும் அப்படின்னு எதிர்பார்த்தா சென்டிமென்ட் சீன் பேசிட்டு போயிடுச்சே! வரவர வயசு ஆயிடுச்சு உங்க அம்மாவுக்கு", என தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவரை பார்த்து அம்பிகா சிரித்துக் கொண்டாள்.

அவளது வீட்டில் எப்பொழுதும் இப்படிதான். அவளின் அம்மாவோ,அப்பாவோ அதிகாரம் செலுத்துவது கிடையாது. அவள் செய்யும் சேட்டைகளுக்கும், அவளின் குறும்புத்தனங்களுக்கும் அடி உதை கிடைப்பதற்கு பதிலாக இந்த மாதிரி விளையாட்டாகவே பேசி இருவருமே அவளின் தவறை சுட்டிக்காட்டி விடுவர். தனக்கு கிடைக்கப்போகும் புகுந்த வீடும் இதே போன்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் அம்பிகாவின் மனதில் எப்பொழுதுமே உண்டு.

தன் எண்ணங்கள் இவ்வாறு சுழன்று கொண்டிருந்த பொழுதுதான் அம்பிகா வரப்போகும் மாப்பிள்ளை வீட்டை பற்றி எதுவும் கேட்கவில்லை என்பதை உணர்ந்தாள். உடனே தன்னுடைய அப்பாவை பார்த்து "அப்பா! வரப்போற மாப்பிள்ளை என்ன செய்றாரு! அவங்க குடும்ப என்ன பண்றாங்க? ஒன்னுமே நீங்க சொல்லலையே!", என வினவினாள்.

"அப்பாடி இப்பவாது கேட்டியே! எங்க நீ கேட்காமல் போயி, அதையும் நானே வந்து சொல்லி, என் பொண்ணு நான் என்ன சொன்னாலும் கேட்குறா. என்கிட்ட வந்து மாப்பிள்ளை வீட்டை விசாரிக்க கூட மாட்டேங்கிறான்னு பெருமைப்பட விட்டுருவியோன்னு ஒரு நிமிஷம் சந்தோசப்பட்டேன்.சந்தோசம் போனாலும் பரவாயில்லை நீ கேட்டதுக்கான பதிலை நான் சொல்லியே தீரணும்", என அதற்கும் பேசிய மூர்த்தி மகளிடம் மாப்பிள்ளை வீட்டினைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.

மாப்பிள்ளையோட அப்பா ரிடையா்ட் பேங்க் மேனேஜர். அம்மா வீட்டை நிர்வாகம் பண்றாங்க. ஒரே ஒரு அக்கா, கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு", எனக் கூறி சற்று இடைவெளி விட்டவர் "இனி நான் சொல்லப் போறவா்தான் முக்கியமானவா்", என ஏகப்பட்ட முஸ்தீபுகளுடன் தனது பேச்சை தொடர்ந்தார்.

"மாப்பிள்ளை இப்போதைக்கு காலேஜ்ல பலரது தூங்க வைக்கிற வாத்தியார் வேலை பார்த்துகிட்டு இருக்காரு. இங்க சொந்தமாக வீடு இருக்கு. கிராமத்தில் கொஞ்சம் நிலபுலன் இருக்குது. இதுவரைக்கும் விசாரிச்ச இடத்துலெல்லாம் ரொம்ப நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவர் அப்படின்னுதான் சர்டிபிகேட் கொடுத்துருக்காங்க", என மூர்த்தி ஏனைய விவரங்களை கூறி முடித்தார்.

அவர் கூறி முடித்தவுடன் "ஏம்பா நம்ம பக்கத்து வீட்டு சிசிடிவி என்னை அடக்க ஒடுக்கமான பொண்ணுன்னு சொல்ற மாதிரி மாப்பிள்ளை பத்தியும் தப்பான விஷயத்தை வெளியில பரப்பிவிட்டுருப்பாங்களோ?", என அம்பிகா வினவிய கேள்வியில் மூர்த்தி அரண்டு போனார். அப்படி தவறாக இருப்பின் திருமணம் நிகழ்ந்து விட்டால் அதற்குப் பின்னர் தன் மனைவியிடம் தான் தினம்தோறும் மொத்து வாங்க வேண்டுமே என்ற எண்ணமே அவரை மிரளச் செய்தது.

" அதெல்லாம் கிடையாது. மாப்பிள்ளையை நான் நேரா பாா்த்துருக்கேன். ரொம்ப அமைதியா, நல்லவனாதான் தெரியுறாா்",என வேகவேகமாக மகளிடம் சரணாகதி அடைந்தார். "சரி ஞாயித்துக்கிழமை வர்றப்ப பாா்த்துக்கலாம். ஒத்து வந்தா மாப்பிள்ளை, ஒத்து வரலைன்னா கருவேப்பிலை", எனக்கூறிவிட்டு அம்பிகா தன் மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்துவிட்டாள்.

ஞாயிற்றுக்கிழமை வரப்போகிறவன் மாப்பிள்ளை ஆகிடுவானா? கருவேப்பிலை ஆகிடுவானா?