துளசிதளம் - வித்யா சுப்பிரமணியம்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
துளசிதளம் – வித்யா சுப்பிரமணியம்

ராணி முத்து புத்தாண்டு சிறப்பிதழில் இடம் பெற்றிருக்கும் கதை. சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் பாலியல் அத்துமீறல்களை படம் பிடித்து காட்டும் கதை.

அதிலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலில் இத்தகைய அத்துமீறல்கள் அதிகம். அவற்றோடு போராடி தங்களின் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்குள் அந்தப் பெண்கள் நிலை குலைந்து போவதையும் அழகாக காட்டி இருக்கிறார்.

அஞ்சலை ஒரு தாயாய் இவளின் தவிப்பை நமக்குள்ளும் கடத்தி விடுகிறார் ஆசிரியர். தனது பெண் துளசியை சுற்றி இருக்கும் வல்லூறுகளிடம் இருந்து காப்பாற்ற அவர் தவிக்கும் தவிப்பு நம் மனதை அதிகமாக பாதிக்க செய்கிறது.

தன்னுடைய வாழ்வு போலல்லாமால் பெண்ணாவது படித்து நல்ல வேலையில் சேர்ந்து நல்ல பிழைப்பு பிழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
மகளிடம் படிப்பை எக்காரணம் கொண்டு விட்டு விடாதே என்று சொல்லி-சொல்லி வளர்க்கிறார். பாதுகாப்பின்றி இருக்கும் ஓலைக் குடிசையில் இரவில் ஒருவன் உறங்கும் மகளின் மீது கை வைத்துச் செல்கிறான். மறுநாளிரவு அவனது கையை அஞ்சலை கத்தியால் கீறி விடுகிறார்.

தங்களை தாண்டிச் செல்லும் ஒவ்வொரு மனிதனும் துளசியின் சதையை ருசிக்கவே விரும்புகின்றான். வெகு தூரம் தனிமையில் நடந்து பள்ளிக்குச் செல்லும் மகள் வயதுக்கு வந்ததும் இதற்கு மேலும் வீட்டில் வைத்துக் கொண்டாள் மிருகங்களிடம் இருந்து காப்பாற்றுவது கஷ்டம் என்றெண்ணி விடுதியில் சேர்கிறார்.

அஞ்சலை ஏன் தன் மகளை இத்தனை காபந்து செய்கிறார் என்று தெரியும் போது மனம் கனத்து போகிறது. ஆனால் தனக்கு ஏற்பட்ட அநீதி கண்டு உடைந்து போய் விடாமல் கணவனை அவர் தாக்கும் இடம் இவள் தான் பாரதி கண்ட புதுமை பெண் என்று பாராட்டத் தோன்றியது.

துளசியை மீண்டும் கருவாக தனது வயிற்றிலேயே வைத்து பாதுகாத்து விட மாட்டோமா என்று அவர் துடிப்பது கண்முன்னே வந்து போகிறது. பெண்ணாய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று சொன்ன காலம் போய், வக்கிரம் பிடித்த மிருகங்களிடம் இருந்து ஒவ்வொரு நாளும் நம் மகள்களை எப்படி காக்கப் போகிறோம் என்ற பயமே எழுகிறது.

அஞ்சலை பயந்தபடியே துளசியின் கற்புக்கு பங்கம் வரும் போது உக்கிர காளியாக மாறி அவர்களை வதம் செய்து மகளை காப்பாற்றுகிறாள். அந்த இடத்தில் ‘திருடனே குற்ற உணர்வு இல்லாம நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் போது, பறி கொடுத்தவங்க எதுக்கு கூனி குறுகி நடக்கணும்?’ என்று கேட்கும் கேள்வி அந்த வக்கிரம் பிடித்த மிருகங்களை சாட்டையால் அடித்தது போலிருந்தது. அஞ்சலை தான் இன்னும் கற்போடு இருப்பதாகவே கூறுமிடம் சபாஷ் போட வைக்கிறது.

இந்நாவல் இன்றைய சூழலில் நாம் தினமும் எதிர் கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகளையும், ஒரு தாய் எந்த அளவு தனது பெண் குழந்தையை பாதுக்காக்க போராடுகிறாள் என்பதையும் மிக அழகாக சொல்லி இருக்காங்க.......வாழ்த்துக்கள் மேம்! அருமையான கதையை கொடுத்ததற்கு...