Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
135
484
63
அத்தியாயம் - 9

அடுத்த இரண்டு மணி நேரத்தைக் கலக்கமும், வேண்டுதலுமாக அவர்கள் நகர்த்திக் கொண்டிருக்க, ஒரு வழியாக வர்ஷா இருந்த அறையிலிருந்து வெளியே வந்தார் சீஃப் டாக்டர். அழுது சிவந்திருந்த சுகுணாவின் முகத்தைப் பார்த்தவர், ஆறுதலுடன் புன்னகைத்தார்.

“நத்திங் டூ வொர்ரி சுகுணாம்மா! அம்மாவும், வயத்துல இருக்கற பேபியும் நல்லா இருக்காங்க. விழுந்த அதிர்ச்சியில யூட்ரஸ் ஓபன் ஆகிடுச்சி. ஆனா, இப்போ குழந்தை பிறந்தா ப்ரீ மெச்சூராக இருக்கும். அப்புறம் ரொம்பச் சிரமம். பெயின் வராம இருக்க மெடிசின்ஸ் கொடுத்திருக்கோம். ஒரு வாரமாவது ஹாஸ்பிட்டல்ல இருந்தே ஆகணும். போய்ப் பாருங்க…” என்றார்.

மயக்கத்தில் இருந்தவளைக் கண்ணீர் மல்க பார்த்துவிட்டு, அனைவரும் வெளியே வந்தனர்.

“சஹிக்கு போன் பண்ணிட்டியா ஸ்ரீ?” எனக் கேட்டார் கணேசன்.

“அவளுக்கு எதுக்குப்பா போன் பண்ணணும்? நாமல்லாம் இருக்கோமே பார்த்துக்கமாட்டோமா?” எனக் கேட்டான்.

“அது நல்லாயிருக்காது ஸ்ரீ! நீ தகவல் சொல்லிடு” என்றார் பரிமளம்.

“இல்லத்தை... அவங்க...” என்றவனை இடைமறித்தார் சுகுணா.

“அத்தை சொல்றது சரிதான் கண்ணா! ஏன் எனக்குச் சொல்லலைன்னு சஹி கேட்டா, தேவையில்லாம சமாளிக்கணும். மாப்பிள்ளைக்குச் சொல்லிடுப்பா...” என்றார்.

வேண்டாவெறுப்பாக கைப்பேசியில் பிரபுவின் எண்ணுக்கு அழைத்தான். விஷயத்தை அறிந்தவுடனே பிரபு, சஹானாவுடன் கிளம்பியவன் அதிகாலையில் நேராக மருத்துவமனைக்கே வந்துவிட்டனர். தன்னைக் கண்டதும் அழுத அன்னையை, ஆதரவுடன் அணைத்துக்கொண்டாள் சஹானா.

“பாபா இருக்காரும்மா! அக்காவுக்கும், பாப்பாவுக்கும் எதுவும் ஆகாது” என்று பெரியவர்களுக்கு ஆறுதல் சொன்னாள் சஹானா.

விஷயமறிந்தது முதல் வாய்விட்டு அழாவிட்டாலும், கண்களில் கண்ணீர் வழிந்தபடியே தான் இருந்தது சஹானாவிற்கு. பிரபு எவ்வளவோ ஆறுதல் சொல்லியும், அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

“எதுவும் ஆகாது பிரபு! ஆனா, அக்கா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க” என்றவள் மீண்டும் கண்களைக் கசக்கினாள்.

ஆனால், இங்கே வந்தபின் பெரியவர்களை அவள் சமாதானப்படுத்துவதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஸ்ரீராமின் பக்கமாகத் திரும்பியவள், “சரி, எல்லோரும் எதுக்கு இங்கே இருக்கீங்க? வீட்டுக்குப் போகலாமில்ல” எனக் கேட்டாள்.

“சொன்னா எங்கே கேட்கறாங்க? வர்ஷா மயக்கத்துலதானே இருக்கா. நீங்கள்லாம் வீட்டுக்குப் போங்கன்னு சொன்னா கேட்டாதானே” என்று சலித்துக்கொண்டான் ஸ்ரீராம்.

“அப்பா! ஏற்கெனவே உங்களுக்குப் பிபி. டேப்லெட் போட்டீங்களா இல்லையா? என்று விசாரித்தவள், “அம்மா! நீங்க எல்லோரும் கிளம்புங்க. அண்ணன் வேற காலைல ஆஃபிஸ் கிளம்பணும். மூணு மணி நேரமாவது தூங்கட்டும். நானும், அத்தையும் இங்கே இருக்கோம். காலைல டிஃபனை அண்ணாகிட்ட கொடுத்துவிடுங்க. நீங்க பதினோரு மணிக்கெல்லாம் வந்துடுங்க. நாங்க வீட்டுக்குப் போய்க் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கறோம்” என மளமளவென பேசி முடித்தாள்.

மறுத்த சுகுணாவைக் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.

“பிரபு! நீங்களும் கிளம்புங்க. நான் இங்கேயே தங்கிக்கிறேன்…” என்றவள், அன்னையிடன் ஏதோ சொல்லி அனுப்பினாள்.

மறுநாள் மாலையில் வர்ஷாவைத் தனி அறைக்கு மாற்றிவிட்டனர். ஆனாலும், டிரிப் ஏறிக்கொண்டே இருந்தது. அவளும் மயக்கத்திலேயே இருந்தாள். மூன்றாவது நாள் காலையில் அவள் கண்விழித்த பின்பே, அனைவராலும் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.

தனக்காக தங்கை போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டாள் என்று அறிந்து நெக்குறுகிப் போனாள்.

“எனக்காகவா சஹி பாதியிலேயே திரும்பி வந்துட்டீங்க?” ஆதூரத்துடன் கேட்டபடி, தங்கையின் கரத்தைப் பற்றிக் கொண்டாள் வர்ஷா.

“நீங்க இந்த நிலைமைல இருக்கன்னு தெரிஞ்சும், எப்படிக்கா என்னால அங்கேயிருக்க முடியும்?” என்றவள், “நீங்க படியில நின்னு எதுக்குப் போன் பேசறீங்க? ஏதோ கடவுளோட அருள், தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு. இல்லன்னா என்ன ஆகியிருக்கும்?” கவலையும், அக்கறையுமாக கேட்ட சஹானாவின் உடலில் சிறுநடுக்கம் ஓடி மறைந்தது.

“நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல சஹி!” என்றபடி எழுந்து அமர முயன்றாள்.

“இருங்கக்கா! ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க” என்றபடி தமக்கையை எழுப்பி அமர வைத்தாள்.

“காலைல, அத்தைக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னேன்க்கா! உடனே, கிளம்பி வரேன்னு சொன்னாங்க. பிரபுதான் நாங்க இருக்கோமே பார்த்துக்கறோம். அவங்க வீட்டுக்கு வந்ததும், நீங்க வந்து பாருங்கன்னு சொல்லிட்டார்” என்றாள்.

“உன் வீட்டுக்காரர், பார்க்கத்தான் ரஃப் அண்ட் டஃபா தெரியறார். ஆனா, ரொம்ப அட்ஜஸ்டபிள் இல்ல சஹி!” என்ற தமக்கையைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள்.

“பத்து நாள் உன்னை இங்கே விட்டுட்டுப் போயிருக்காரே… அதுக்கே தேங்க்ஸ் சொல்லணும். உன் அத்தான், என்னை டெலிவரிக்கு விட்டுட்டுப் போகறதுக்கே மூக்கால அழுதார் தெரியுமா?”

“இவர் மட்டும் என்னவாம்? வெளியூர் போறதால என்னை விட்டுட்டுப் போயிருக்கார். இல்லனா, அனுப்புவாரா?”

பெண்கள் இருவருமே சலிப்போடு சொல்லிக் கொண்டாலும், அவர்களது வார்த்தையில் கணவன் தங்கள் மீது வைத்திருக்கும் நேசத்தால் விளைந்த பெருமைதான் தெரிந்தது.

“அப்பப்பா! என்ன டிராஃபிக்?” சொல்லிக் கொண்டே கட்டிலருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான் ஸ்ரீராம்.

“ராத்திரி எட்டு மணிக்கு, நம்ம ஊர்ல எங்கேண்ணா டிராஃபிக் ஜாம் இருக்கும்?” கேட்டுக் கொண்டே அவன் கையிலிருந்த பேகை வாங்கிக் கொண்டாள் சஹானா.

“ரோடு காலியாத்தான் இருக்கு. ஹாஸ்பிட்டலுக்குள்ள தான் இப்படி அப்படி நகர முடியாம, கூட்டம் அலை மோதுது” என்ற அண்ணனைப் பார்த்துச் சகோதரிகள் இருவரும் புன்னகைத்தனர்.

“ம்க்கும்… இப்போ சிரி. முழுசா முப்பத்தாறு மணிநேரம் மயக்கத்திலேயே இருந்த… பார்க்கவே ஐயோ பாவமா இருந்தது. இதுல போதாக்குறைக்கு உன் வீட்டுக்காரன் வேற, அரை மணிநேரத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி, வர்ஷி கண் விழிச்சிட்டாளான்னு கேட்டு என்னை டார்ச்சர் பண்ணிட்டான்.

பொறுக்க முடியாம ஹிட்லரே போனைப் பிடுங்கி, உனக்கு மட்டும்தான் கவலையா எங்களுக்கெல்லாம் இல்லயா? அவள் கண்விழிச்சா உனக்குத்தான்டா முதல்ல போன் செய்து சொல்வான். போனை வைன்னு ஒரு போடு போட்டதுக்குப் பின்னாலதான் போனையே வச்சான்” என்றான்.

“பாவம் அத்தான்!” என்று கணவனுக்காக அவள் உருக, சஹானாவைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

“அப்புறம், சொல்ல மறந்துட்டேன். இந்நேரம் உன் வீட்டுக்காரன் ப்ளைட் ஏறியிருப்பான். அம்மாகிட்ட சொல்லாத. நான் வந்து சமாளிச்சிக்கிறேன்னு சொன்னான். நானும் சொல்லலை. உன்கிட்ட சொல்லச் சொன்னான். சொல்லிட்டேன்” என்றான் ஸ்ரீராம்.

“அத்தான் வராங்களா?” ஆர்வத்துடன் கேட்டவளது முகம் சட்டென சோர்ந்து போனது.

“என்னால எல்லோருக்கும் கஷ்டம் இல்ல” என்றவளுக்குக் கண்கள் கலங்கின.

“என்னக்கா இது?” சஹானா ஆதரவுடன் அக்காவின் கையைப் பற்றிக் கொள்ள, ஸ்ரீராம் தங்கையின் அருகில் கட்டிலில் அமர்ந்தான்.

“இப்படி எடுத்ததுக்கெல்லாம் அழறதை விடு! கண்ணைத் துடை. உனக்குச் செய்யறதை நாங்க சிரமமா நினைப்போமா? கஷ்டத்துல பங்கெடுத்துக்கறதுக்குத் தானே சொந்தங்கள். சிரிக்கும் போது சிரிச்சிட்டு, அழும்போது ஒதுங்கிப் போறதுக்கா!? உன்னால யாருக்கும் எந்தக் கஷ்டமும் இல்ல. புரிஞ்சிதா?” அதட்டலும், உரிமையுமாகச் சொல்லிக்கொண்டே தங்கையின் கண்களைத் துடைத்துவிட்டான்.

இரவுப் பணிக்காக மருத்துவமனைக்கு வந்ததுமே, டீன் அழைப்பதாக செய்தி வர, அவரது அறையை நோக்கி வந்து கொண்டிருந்தாள் திவ்யா.

‘யாருக்கும் எந்தக் கஷ்டமுமில்ல… புரிஞ்சிதா?’ என்ற குரலில் சற்று நிதானித்தவள், சப்தம் வந்த திசையைப் பார்த்தாள்.

திறந்திருந்த கதவின் வழியாக ஸ்ரீராம் ஒரு பெண்ணின் கண்களைத் துடைப்பதையும், அந்தப் பெண், அவனது தோளில் சாய்ந்து கொள்வதையும் பார்த்துத் திகைத்துப் போனாள்.

“அடப்பாவி!” என்று வாய்விட்டே முனகினாள் அவள்.

************

வழக்கமாக இரவுப் பணியை முடித்துவிட்டு வந்தால், குளித்து முடித்து அன்னை சமைத்து வைத்திருக்கும் டிஃபனைச் சாப்பிட்டு விட்டுப் படுத்தால், மதியம் இரண்டு மணிவரை அடித்துப் போட்டது போல உறங்குவாள்.

ஆனால், இன்று எல்லாமே ஏனோதானோவென்று நடந்தது. அரைகுறைக் குளியலும், இரண்டு இட்லியையும் விழுங்கிவிட்டு படுத்தவளுக்கு உறக்கம் மட்டும் வரவில்லை.

வைதேகி மதிய சமையலில் ஈடுபட்டிருக்க, கதவை மூடிவிட்டு வந்தவள், மொபைலில் கல்பனாவிற்கு அழைத்தாள். இரண்டு மூன்று முழு அழைப்பும் சென்று நின்றது தான் மிச்சம். கல்பனா மொபைலை எடுக்கவேயில்லை.

“கும்பகர்ணனுக்குத் தங்கச்சி” திட்டிக்கொண்டே மீண்டும் அவளது மொபைலுக்கு அழைத்தாள்.

தூக்கக் கலக்கத்துடன் போனை எடுத்த கல்பனா, “ஹ..லோ..!” என்றாள்.

“ஏன்டி! எத்தனைத் தடவை போன் பண்னேன். நேத்தும் டியூட்டிக்கு வரலை. ராத்திரியெல்லாம் நல்லாத் தூங்கித் தானே இருப்ப. அப்படியும் உனக்குப் போனை எடுக்க இவ்வளவு நேரமா?” கோபத்தில் சிடுசிடுத்தாள் திவ்யா.

“ஹாஸ்பிட்டல்லதான் என் உயிரை எடுக்கறன்னா, வீட்லகூட என்னை நிம்மதியா தூங்க விடமாட்டியா?” எரிச்சலுடன் கேட்டாள் கல்பனா.

“நீ போன ஜென்மத்துல கும்பகர்ணனுக்குத் தங்கச்சியா பிறந்திருப்பா போல” என்றாள் கடுப்புடன்.

“அப்போ, என்னைச் சூர்ப்பனகைன்னு சொல்றியா?” தோழியின் பேச்சில் உறக்கம் தெளிந்து போனது கல்பனாவிற்கு.

“எனக்கு வர்ற கோபத்துக்கு, உன் மூக்கை அறுக்கப் போறேன் பாரு” – திவ்யா.

“போதும்டியம்மா! இன்னைக்கு ஸ்ரீராம் சாரைப் பத்தி என்ன புலம்பணுமோ புலம்பு. வழக்கம் போலக் கேட்டுத் தொலைக்கறேன்” என்றாள் கடுப்புடன்.

அவள் சொன்னதைக் கேட்ட திவ்யாவே சற்று ஆச்சரியப்பட்டுப் போனாள்.

“நான் அவரைப் பத்திப் பேசப் போறேன்னு உனக்கெப்படித் தெரியும்?”

“இதுக்கு ஜோசியம் வேற பார்க்கணுமா? கொஞ்ச நாளா நீ வாயைத் திறந்தாலே, அவரைப் பத்தித் தானே பேசற” என்றவளுக்கு மறுமுனையில் பதிலில்லை என்றதும் சிரித்துக்கொண்டே, “என்னடி சப்தமே இல்ல. உண்மையைச் சொல்லிட்டேனோ?” எனக் கேட்டாள் கல்பனா.

“உன் மூஞ்சி. அவன் என்ன என் லவ்வரா? எப்பவும் அவனையே நினைச்சிட்டு இருக்க?”

இரகசியக் குரலில், “எனக்குக் கொஞ்ச நாளாவே இந்த டௌட் இருக்கு” என்று தனது எண்ணத்தைப் போட்டு உடைத்தாள்.

பற்களைக் கடித்துக் கொண்டு, “எருமை! நீ கவிழ்ந்தடிச்சி தூங்கு. நான் போனை வைக்கிறேன்” எனக் கடுகடுத்தாள் திவ்யா.

“ரொம்பச் சீன் போடாதே. எப்படியும் திரும்ப எனக்குப் போன் பண்ணத்தான் போற. அதுக்குச் சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சிட்டு, அப்புறமா போனை வை” என்றாள்.

“உனக்கு ரொம்ப ஏத்தம்டீ.”

“அது ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டும். விஷயத்துக்கு வா” என்று தனது பிடியிலேயே நின்றாள் கல்பனா.

மருத்துவமனையில் தான் கண்ட காட்சியை விளக்கியவள், “நீ என்ன நினைக்கிற கல்பூ?” என்றாள் பரிதாபமாக.

தோழியின் வார்த்தைகளிலிருந்த ஏமாற்றத்தை, கல்பனா கவனிக்காமல் இல்லை.

‘வர்ஷா, அவனது தங்கை’ என்று தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லிவிடலாமா, என்று நினைத்தவள் உடனே மனத்தை மாற்றிக் கொண்டாள்.

“நீ நினைக்கிறா மாதிரியும் இருக்கலாம்” என்று பட்டும் படாமலும் பதிலளித்தாள்.

“என்னடி இப்படிச் சொல்ற?”

“நான் என்ன சொல்லணும்னு நினைக்கிற?” கறாராகக் கேட்டாள் கல்பனா.

திவ்யாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாமல் போக, அவளே தொடர்ந்தாள்.

“கைநிறைய சம்பாதிக்கிறார். பார்க்க ஹேண்ட்ஸமா இருக்கார். இவ்ளோ நாள் கல்யாணம் ஆகாமலா இருக்கும்?”

தோழியின் ஒவ்வொரு வார்த்தையும் மனத்தை வண்டாகக் குடைய, எதுவுமே பேசாமல் போனை அணைத்தாள். ஏனோ, அழ வேண்டும் போலிருந்தது.

‘நான், ஸ்ரீராமைக் காதலிக்கிறேனா?’ மீண்டும் மீண்டும் தன்னிடமே கேட்டுக் கொண்டவளுக்கு, ‘ஆம்’ என்பதைத் தவிர வேறு பதில் கிடைக்கவில்லை.

‘எப்படி? முதன்முறை பார்த்தபோதே அவனுடன் சுமுகமான ஒர் உறவு இல்லையே. தடாலடியான ஒரு நிகழ்வு தானே நிகழ்ந்தது. பின் எப்படி இவ்வளவு தூரம் என்னையறியாமலேயே என் மனத்தைக் கவர்ந்தான்?’

திவ்யாவிற்குப் புரியவே இல்லை. எப்போதும், எதையும் தைரியத்துடன் திடமாக எதிர்கொண்டவளுக்கு, வாழ்க்கையில் முதன்முறையாக இந்த விஷயத்தில் குழப்பம் ஏற்பட்டது. இருக்கையில் அமர்ந்தவள், தங்களது முதல் சந்திப்பை நினைத்துப் பார்த்தாள்.

கல்பனாவுடன் பேசிக் கொண்டே திரும்பியவள், தங்களது டேபிளின் அருகில் வந்தமர்ந்த ஸ்ரீராமை எதேச்சையாகப் பார்த்தாள். அவன் ஏதோ முணுமுணுப்பது தெரிய மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.

நிச்சயமாக அதில் காதல் இல்லை என்றபோதும், வழக்கமாக ஒரு ஆணிடம் தோன்றும் ஈர்ப்பு, அவன்மீது அவளுக்குத் தோன்றியதே காரணம். ஆனால், வரிசையில் நிற்கும் போது அவன் பாடிய பாடலைக் கேட்டவள், தன்னைக் கிண்டல் செய்கிறானோ என்ற எண்ணம் எழுந்தபோதும், அவனை அவ்வாறு நினைக்கவும் முடியவில்லை.

இரண்டு மூன்று முறை இது தொடரவும், அவளால் தாள முடியவில்லை. அதனால் தான் அவனது அறையில் முடிந்தவரை வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருந்தாள். அவன் அவளைச் சீண்டுவதைப் போல, ‘இவங்க பேசமாட்டாங்களா!’ என்று கேட்டதுமே கோபம் சுறுசுறுவென ஏறியது அவளுக்கு.

வாயில் வந்ததையெல்லாம் பேசிவிட்டு, வேகமாக அங்கிருந்து வெளியேறினாள். இது ஏதோ கோபத்தில் விளைந்தது என்று இதுவரை நினைத்திருக்க, இது அத்தனையும் அவன்மீது தனக்குத் தோன்றியிருக்கும் ஈர்ப்பு என்பது, இப்போதுதான் புரிந்தது. சற்றுநேரம் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தவள், எழுந்து ஹாலுக்கு வந்தாள்.

தலையணை உறையில் பூ வேலை செய்து கொண்டிருந்த வைதேகி, நிமிர்ந்து மகளை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

“என்னடாம்மா! தூங்கலையா?” என்றார்.

அவரருகில் அமர்ந்தவள், “உன் மடியில படுத்துக்கட்டுமாம்மா!” கெஞ்சுவதைப் போலக் கேட்டாள்.

மகளது இந்தச் செயல்களெல்லாம், வைதேகிக்குப் புதிதாக இருந்தது. ஆனாலும், அந்த வயதைக் கடந்து வந்தவருக்குப் புரியாமலும் இல்லை. மடியில் தலைசாய்த்துக் கொண்ட மகளின் முகத்தையே பார்த்தார்.

மனத்தில் புதைந்திருந்த காதலால் விளைந்த ஏமாற்றமும், அன்னையின் மடி தந்த கதகதப்பான சுகத்திலும், அவளது இமைகள் ஈரத்தை கசியவிட்டன.

அழுகையில் தனது புடவை ஈரமானதை உணர்ந்த வைதேகியின் மனம் தவித்தது. ஆனால், என்னவென்று கேட்டால் எந்தப் பதிலும் நிச்சயம் வரப்போவதில்லை என்று உணர்ந்திருந்தார்.

இருந்தாலும், “என்னடாம்மா? வேலைல ஏதாவது பிரச்சனையா? நீ இப்படி சோர்ந்து இருக்க மாட்டியே?” என்று கேட்டார்.

“அதெல்லாம் இல்லம்மா” என்றவளது குரல் கம்மியது.

“கல்பனாவோட ஏதாவது…” என்று இழுத்தவருக்கு, கண்களை மூடியபடியே இல்லையென்பதைப் போலத் தலையசைத்தாள்.

எதற்குமே கலங்காத மகளின் நிலையைப் பார்த்த வைதேகியின் உள்ளம் பரிதவித்தது. அன்னையின் வலக்கரத்தை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

“திவிம்மா!” என்ற அன்னையின் கனிவானக் குரலில் கரைந்தவளாக, “அம்மா! ப்ளீஸ் என்னை எதுவும் கேட்காதே…” என்றவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரை வேகமாகத் துடைத்துக் கொண்டாள்.

மகளின் மனத்தை ஓரளவிற்குப் படித்துவிட்ட வைதேகியின் கண்களும் கசிந்தன.

‘கடவுளே! என் வேண்டுதலுக்கு செவி சாய்ச்சிட்டியா?’ என்ற ஆர்வமும், ஆவலுமாக கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அதேநேரம், பரிமளத்தின் நினைவும் மனத்தில் வராமல் இல்லை. இருந்தாலும், மகளின் எண்ணம் போல வாழ்க்கை அமைந்தால் போதும்’ என்று தன்னைத் தேற்றிக்கொண்டார்.

‘என் மகளோட மனசுக்கேத்த மாதிரி எல்லாத்தையும் நல்லபடியா நடத்திவைப்பா! அவளுக்காவது நல்ல ஒரு வாழ்க்கை அமையட்டும்’ தனக்கே தாயுமானவளாக இருக்கும் மகளுக்காக, அந்தத் தாயுள்ளம் வேண்டிக் கொண்டது.

காதல் வளரும்...