Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம்- 22 | SudhaRaviNovels

அத்தியாயம்- 22

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம்- 22

அன்று அவளோடு பேசிச் சென்றவன் தான். அதன்பின்னர் வந்த இரு நாட்களும் அவனை பார்க்க முடியவில்லை. தான்யா பாட்டியோடு தங்கிக் கொள்ள, வர்ஷினியை அந்த அறையில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார் தாதி. அவளிடம் யாரையும் நெருங்க விடாது பார்த்துக் கொண்டார். தான்யாவை தவிர அவளருகே யாராலும் செல்ல முடியவில்லை.

அவளுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. அதிலும் கடைசியாக அவன் பேசிச் சென்றது அவளது மனதை வெகுவாக தாக்கி இருந்தது. தாதியை தவிர அவனைச் சுற்றி இருக்கும் அனைவருமே ஏதோ ஒன்றிற்காக அவனை துரத்துகிறார்கள் என்பதை அவளால் இந்த இரு நாட்களில் புரிந்து கொள்ள முடிந்தது.

அவனது காதல் பொய்யில்லை என்பதை உணர முடிந்தது. ஆனாலும் நடந்து முடிந்து விட்ட நிகழ்வுகளில் இழப்புகளை யார் சரி செய்வது? அது காலம் முழுவதும் தங்களை துரத்துமே என்று யோசித்தாள். அதே சமயம் அவனுக்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக தாதி சொன்னவை எல்லாம் நினைவிற்கு வந்தது.

இருநாட்களும் அறையை விட்டு வெளியே வராமல் அங்கிருந்தபடியே யோசித்துக் கொண்டிருந்தவளை கலைத்தது தான்யாவின் குரல்.

“அக்கா! இன்னும் எத்தனை நாளைக்கு அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தது யோசிக்கப் போற? என்னைப் பொறுத்தவரை மாமா மேல எந்த தப்பும் இல்லேன்னு புரியுது. தாதி சொன்னதை வைத்தும் பார்த்தா நிறைய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்காங்கன்னு தெரியுது. அதனால நடந்தவற்றை எல்லாம் மறந்திட்டு மாமாவுக்கு ஆதரவா நின்னு உன் வாழ்க்கையை காப்பற்றிக்கோ”.

தங்கையை நிமிர்ந்து பார்த்தவள் “நீ சொல்றது எல்லாம் சரி தான். என் மனசுக்கும் நல்லாவே புரியுது. ஆனா நம்ம அம்மா அப்பாவை எப்படி மறக்க சொல்ற? அவங்களுக்கு நடந்தது எல்லாம் இல்லேன்னு ஆகிடுமா? என்னதான் நான் எல்லாம் சரியாகி சித்து கூட வாழ்ந்தாலும் கடைசி வரை என்னுடைய இந்த காதலால தான் அவங்க இழப்புன்னு மனசு உறுத்துமே?”

இரு கைகளையும் கட்டிக் கொண்டு அக்காவை கூர்மையாக பார்த்து “நான் உன்னை விட சின்னவ தான். என்னடா இப்படி பேசுறாலேன்னு நீ நினைச்சாலும் பரவாயில்லை. உன்னுடைய இந்த நினைப்பு எல்லாம் காலம் கடந்த ஒன்று. இதெல்லாம் காதலிக்க ஆரம்பிக்கும் போது யோசிச்சிருக்கணும். எல்லாமே கைமீறி போன பிறகு நடந்தவற்றை நினைத்து மறுபடியும் உன் வாழ்கையை கெடுத்துக்கப் போறியா?”.

“அப்போ சித்துவோட காதலை ஏத்துகிட்டா அம்மா அப்பாவுக்கு துரோகம் பண்ணினதா ஆகாதா?” என்றாள் கண்ணீருடன்.

“நிச்சயமா ஆகாதும்மா! எந்த தாயும், தந்தையும் தன மகள் கெட்டுப் போகணும்னு நினைக்க மாட்டாங்க. நீ நல்லா வாழ்ந்தா அவங்க ஆத்மா சாந்தியடையும்” என்றார் சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே அறைக்குள் நுழைந்தார்.

அவரைக் கண்டதும் எழுந்து நின்றவளை “உட்காரும்மா! நீ நிறைய குழப்பங்களோட இருக்க அது சித்துவோட நிலைக்கு நல்லதில்லை. நீ தைரியமா உறுதியா இருந்தா தான் அவனால எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும்”.

“எ...எனக்கு நடந்ததை நினைத்து அவர் மேல அவரின் காதல் மேல நம்பிக்கை குறைஞ்சிருச்சு பாட்டி”.

அவளை ஆழ்ந்து பார்த்தவர் “இப்பவுமா வர்ஷினி? இங்கே வந்த பிறகு நிறைய விஷயங்களை தெரிஞ்சுகிட்டு இருப்ப. அதன் பிறகும் அவன் மேல நம்பிக்கை இல்லேன்னு சொன்னா நானே உன்னையும், தான்யாவையும் ஊருக்கு அனுப்பி வச்சிடுறேன்” என்றார்.

அவரின் இந்த பதிலில் சற்றே அதிர்ந்து நோக்கி “எனக்கு என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியல பாட்டி”.

அவள் அருகே நெருங்கி சென்று “உனக்கு அவன் மேல இன்னமும் காதல் இருக்கா?”

தலையை குனிந்தபடி “ம்ம்...” என்றவளின் கைகளை அழுந்த பற்றி “அவனை நம்பும்மா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்” என்றார்.

கன்னங்களில் கண்ணீர் வழிய லேசான செருமலுடன் குனிந்து தாதியின் தோள்களில் முகம் பதிந்து விட்டாள். அவளுக்கு அவரின் பதில் வேண்டியதை தந்துவிட, இத்தனை நாள் மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் குறைய அழுது தீர்த்தாள். அவரும் தன் மனதிலிருந்த பாரம் நீங்கும் வரை அழுது ஓயட்டும் என்று விட்டு விட்டார். சற்று நேரம் கழித்து மீண்டவள் கண்களைத் துடைத்துக் கொண்டு “சொல்லுங்க தாதி நான் என்ன செய்யணும்?” என்றால்.

இருவரையும் கட்டிலில் அமர வைத்தவர் வர்ஷினியிடம் “முதல்ல நீ அவனோட அன்பை புரிஞ்சுக்கணும். அடுத்து அவன் இப்போ எடுக்கிற முயற்சிகளுக்கு தடை செய்யாம அவனுக்கு உறுதுணையா நிற்கணும். முக்கியமா உரிமையான மனைவியா நிமிர்ந்து நிற்கணும். நீ தான் இந்த வம்சத்தோட வாரிசை சுமக்கப் போகிறவள். அதனால இத்தனை நாள் எப்படி இருந்தாலும் இனி எதையும் எதிர்கொள்கிற பெண்ணா இருக்கணும். அவன் மேல எந்த குற்றச்சாட்டுகள் வந்தாலும் நீ அவனை நம்பனும். அது போதும் அவன் எல்லாவற்றையும் முறியடிச்சிடுவான்” என்றார்.

“நிச்சயாமா தாதி!” என்றாள் மெல்லிய குரலில்.

“அந்த கேஷ்விக்கும் உன் கணவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நீ தான் அவனுடைய சட்டபூர்வமான மனைவி. அதனால அவள் உன்கிட்ட பிரச்சனை செய்தால் தைரியமாக திருப்பிக் கொடு. உனக்காக நானும் என் பேரனும் இருக்கிறோம்”.

அதுவரை இருந்த மனக் குழப்பங்கள் எல்லாம் தீர சற்றே தெளிந்து அவள் முகத்தில் தெளிவு பிறந்திருந்தது. அந்நேரம் கதவை படாரென்று திறந்து கொண்டு உள்ளே வந்தார் பிமலா தேவி. அவரை பார்த்ததும் எழ இருந்தவளின் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டார் தாதி.

அவரை பார்த்து லேசாக கண்களை சுருக்கி விட்டு வர்ஷினியின் பக்கம் திரும்பியவர் சொடக்கு போட்டு அவளை அழைத்து “நீ இங்கே இருக்க கூடாது. கிச்சனில் வேலை செய்றவங்களுக்காக ஒரு இடம் இருக்கு அங்கே தான் இருக்கணும். அவுட்” என்று அறையின் வாயிலை நோக்கி கையை காட்டினார்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
விழிகளில் பயத்துடன் அவரை பார்த்தவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சற்று நேரம் முன்பு தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார் தாதி. ஆனால் அவளுக்கோ பிம்லாவை கண்டதும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அதனால் அமைதியாக இருக்க, அதைக் கண்டு கடுப்பான பிம்லா “சொன்னது காதில் விழலையா? வெளியே போ” என்றார்.

அப்போது உள்ளே நுழைந்த சித்தார்த் “அவள் என் மனைவி என் அறையில் தான் இருப்பாள்” என்றான் அழுத்தமாக.

அவனை முறைத்தவர் “உனக்கே இந்த மாளிகையில் அதிகாரமில்லை என்பது நினைவு இருக்கா சித்தார்த்?”

அவன் பதில் சொல்லும் முன்னே முந்திக் கொண்ட தாதி “அதை நீ சொல்லக் கூடாது பிம்லா. அவன் இந்த வம்சத்தின் வாரிசு” என்றார் கோபமாக.

அவர்கள் இருவரையும் முறைத்தவர் “கூடிய சீக்கிரம் உங்க எல்லோரையும் இங்கிருந்து துரத்துறேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

சித்தார்த்தின் பார்வை முழுவதும் வர்ஷிணியின் மீது தான் இருந்தது. அவளது பயந்த தோற்றம் அவன் மனதை தாக்கியது. எப்படி புள்ளிமான் போல சுற்றிக் கொண்டிருந்தவள் தன் காதலால் தனது இயல்பான குணத்தை கூட மறந்து பயந்து போய் நிற்கிறாளே என்றெண்ணிக் கொண்டான்.

“நீ போன விஷயம் என்னாச்சு சித்து?”

“என்னால அவரை மீட் பண்ண முடியல தாதி. அவருக்கு திடீர் என்று வேலை வந்துடுச்சு. எப்படியும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் மீட் பண்ணிடுவோம்”.

“அந்த போலீஸ்காரன் நம்பகமானவனா?”

“தாதி அவருக்கு நல்ல பேர் இருக்கு. மிகவும் திறமையானவர்”.

“ம்ம்..அப்போ சரி” என்றவர் தான்யாவை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

அவர்கள் இருவர் மட்டும் அந்த அறையில் தனித்திருக்க, அவள் அவனை நிமிர்ந்தும் பார்க்காது வேறுபுறம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

லேசாக தொண்டையை செருமியவன் “சோட்டி! நாம கொஞ்ச நேரம் தோட்டத்திற்கு போயிட்டு வருவோமா?” என்றான்.

அவனது அன்பை உணர ஆரம்பித்திருந்த உள்ளம் அந்த அழைப்பில் லேசாக இளக தொடங்கி இருந்தது.

“ம்ம்..”

அவன் முன்னே நடக்க எதுவும் பேசாமல் அவனை தொடர்ந்தாள். அந்த மாளிகையை அவள் இதுவரை சரியாக பார்த்திருக்கவில்லை. இப்போது தான் முதன்முறையாக பார்க்க ஆரம்பித்தாள். அந்த கால அரண்மனைகள் போல பல அறைக் கதவுகள் வழியெங்கும் இருந்தது. கதவுகள் எல்லாம் வேலைபாடு நிறைந்திருக்க, ஒவ்வொரு அறையும் ஒரு சிறு வீடு போல அத்தனை பெரிதாக இருந்தது. வழியெங்கும் வேலை ஆட்கள் அங்கிருக்கும் பொருட்களை துடைத்துக் கொண்டோ ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டோ இருந்தனர். அவர்கள் அனைவரும் அவன் அவர்களை கடக்கும் போது லேசாக குனிந்து வணக்கம் வைத்தனர். யாரும் முகத்தை நிமிர்ந்து பார்க்க துணியவில்லை. இதை எல்லாம் பார்த்தவளுக்கு மிரட்சியாகி போனது.

இதென்ன அரசர் காலத்தை போன்று இருக்கிறது. இவன் அரச பரம்பரையை சேர்ந்தவனோ என்றெண்ணி நா வறண்டு போனது. இத்தனை பாரம்பரிய மிக்க குடும்பத்தில் வந்தவனா? தன்னிடம் எத்தனை அன்புடனும், பண்புடனும் நடந்து கொண்டான் என்றெண்ணி பார்த்துக் கொண்டாள்.

அந்த தோட்டத்தை பார்த்து அதன் அழகை பார்த்து வியந்து நின்றாள். அவள் இது போன்ற மாளிகையை பெரிய வீடுகளை பார்த்ததே இல்லை. அதிலும் இது அரண்மனை போன்று இருக்க, தோட்டத்தில் ஒரு ஊரையே குடி வைக்கும் அளவிற்கு இருந்தது. அத்தனை அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆச்சர்யமாக பார்த்தபடி நின்றிருந்தவளின் கையைப் பற்றி அழைத்துச் சென்றவன் அங்கிருந்த மண்டபம் போன்ற ஒன்றிற்கு அழைத்துச் சென்று அமர வைத்தான். தானும் அருகில் அமர்ந்து கொண்டவன் அவள்ளது அருகாமையை ரசித்தான்.

“உன்னை முதன் முதலாக பார்த்த அந்த நிமிடத்தில் இருந்து நீ தான் எனக்கானவள் என்று பிக்ஸ் பண்ணிட்டேன் மது. என் மனதில் பல கனவுகள். உன்னை எப்படி எல்லாம் பார்த்துக்கணும்னு சிந்தனைகள். நீ பலமுறை என்னிடம் கேட்டப்ப கூட என் பக்கமிருந்து நம்ம காதலுக்கு பிரச்சனை வராதுன்னு தான் நினைத்தேன். ஆனா என் தந்தையை தவிர என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சுயநலப் பிசாசுங்கனு அப்போ தான் தெரிஞ்சுகிட்டேன். அதிலும் உயிரை கூட எடுக்க கூடியவங்கன்னு பட்ட பிறகே தெரிந்தது. நம்ம காதல் எனக்கு நிறைய பாடங்களை கத்து கொடுத்திருக்கு. யார் நல்லவங்க யார் கெட்டவங்கநு அறிமுகப்படுத்தி இருக்கு. உன்னை எக்காரணம் கொண்டும் என் வாழ்வில்லிருந்து போக விட மாட்டேன் மது”.

அவன் பேசுவதை கேட்டபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“இதெல்லாம் இப்போ எதுக்கு சொல்றான்னு பார்க்குறியா? நாம நிறைய போராட வேண்டி இருக்கு. என் போராட்டம் எனக்கான உரிமையை பெறவும், என் மனைவி என்கிற அந்தஸ்தை வெளியுலகிற்கு பறைசாற்றவும் தான். உன்னுடைய உயிருக்கு ஆபத்தும் இருக்கு. நான் உன்னோடு இருந்து பாதுகாக்க கூடிய நிலையில் இல்லை. உனக்கான ஏற்ப்பாட்டை செஞ்சிருக்கேன். என்னை சில நாட்கள் பார்க்க முடியாது கூட போகலாம். அதானால இவன் மறுபடியும் நம்மை ஏமாற்றிட்டு போயிட்டான்னு நினைக்காம நிச்சயம் உன்னுடைய சித்தார்த்தாக திரும்பி வருவான்னு நம்பிக்கையோட இருக்கணும்” என்றவன் அவள் கையில் ஒரு மொபைலை கொடுத்து “இதை யாருக்கும் தெரியாம மறைத்து வச்சுக்கோ. சிக்கல் எதுவும் வரும்போது உபயோகமா இருக்கும்’ என்றான்.

அவன் பேசிய அனைத்தும் மனதை அழுத்த தன்னை மீறி அவனது கைகளைப் பற்றிக் கொண்டவள் “சித்து! ஜாக்கிரதையா இருங்க” என்றாள் கலங்கிய கண்களுடன்.

அவளது உள்ளத்தின் வேதனை புரிய “நல்லா இருப்பேன் சோட்டி. நல்லா இருப்போம்” என்றான் அவளை தோளோடு சேர்த்தணைத்து.

“என்னை மன்னிச்சிடுங்க சித்து. நடந்தவைகள் எல்லாம் உங்களை தவறாக காட்டும் சூழ்நிலை. என்னால வேற எதையுமே சிந்திக்க முடியாத நிலை. இனி யார் என்ன சொன்னாலும் என்ன நடந்தாலும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறி அவன் நெஞ்சில் சாய்ந்து விட்டாள்.

அவனும் அவளை இறுக தழுவிக் கொள்ள “இது போதும் சோட்டி. யார் எதிர்த்து நின்றாலும் ஜெயிச்சிடலாம்” என்று சொல்லி முடிக்கும் நேரம் அவனது மொபைலில் மெச்செஜ் வந்ததற்கான அறிகுறி வந்தது. அதை எடுத்து பார்த்தவனின் விழிகளில் சிந்தனை. சிவதாசிடம் இருந்து தான் உடனே சந்திக்க வரும்படி அழைப்பு வந்திருந்தது.

அடுத்த நிமிடம் அவளிடம் மெல்லிய குரலில் சிலவற்றை சொன்னவன், அவளை அழைத்துக் கொண்டு தாதியின் அறைக்குச் சென்றான். அங்கு அவளை விட்டுவிட்டு அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சரி பார்த்து விட்டு சிவதாசை சந்திக்க சென்றான்.

அவன் சொன்ன இடத்திற்கு சென்றவன் தனக்காக காத்திருந்தவன் முன் சென்று அமர்ந்தான்.

முகம் இறுக அமர்ந்திருந்த சிவதாஸ் “நான் நினைத்ததை விட விஷயம் பெருசு சித்தார்த். உங்க நானாஜியும், மாமாவும் சாதாரண ஆட்கள் இல்லை. தோண்ட தோண்ட நிறைய வருது”.

“என்ன சொல்றீங்க?

“இங்கே பிஸ்னெஸ் சாம்ராஜ்யத்தை கையில் வைத்துக் கொள்ள அவர்கள் செய்திருக்கும் விஷயங்கள் பெரிது. அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். அதற்கு அவர்கள் கொடுத்த விலையும் அதிகம்”.

“ஒ...ஆதாரங்களை திரட்டி அவர்களை என்ன செய்யணுமோ செய்ங்க” என்றான் கடுப்பாக.

“அது அவ்வளவு ஈசி இல்ல சித்தார்த். இன்னொரு முக்கியமான பிரச்னையும் இருக்கு. உங்க பிஸ்னெசையும், உங்கப்பாவையும் ஒரு சில விஷயங்களில் சிக்க வச்சிருக்காங்க”.

வாட்!”

“ம்ம்...ஆனா உங்கப்பாவுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கணும். அவர் முழுக்க ஈடுபடாம கொஞ்சம் சேப்பாக தான் ஹாண்டில் பண்ணி இருக்கார். அவருக்கு நினைவு திரும்பினா அவரிடம் நிறைய தெரிஞ்சுக்க வாய்ப்பிருக்கு”.

“எங்கம்மா ஐ மீன் பிம்லா தேவி அவங்களோட பங்கு எந்தளவிற்கு இருக்கு?”

“முழு பங்கு அவங்களுக்கும் இருக்கு. உங்கப்பாவை ஆள் வைத்து தாக்கினது கூட அவங்க தான்”.
 
  • Like
Reactions: Sumathi mathi