Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 1 | SudhaRaviNovels

அத்தியாயம் - 1

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம்- 1

சில கனவுகள் நனவாகின்றன

பல கனவுகள் கனவாகவே செல்கின்றது!

கோயம்புத்தூரின் நடுத்தர மக்கள் வாழும் பகுதியான ஜெயந்தி நகரில் ஒரு சிறிய வீட்டில் காலை பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது.

கல்லூரிக்கு செல்லும் மகள் ஒருபுறமும், பள்ளிக்குச் செல்லும் மகள் ஒருபுறம் அன்னையின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்க, மோட்டரை நிறுத்தச் சென்ற கணவரோ பக்கத்து வீட்டுக்காரருடன் நின்று கதை பேசி கனன்று கொண்டிருந்த எரிமலையை வெடிக்க வைக்கும் வேலையை செய்து கொண்டிருந்தார்.

புதிய சல்வாரை அணிந்து கழுத்தைச் சுற்றி துப்பட்டாவை போட்டுக் கொண்டு அன்னையின் முன்பு வந்து நின்ற வர்ஷினி “மா! இது நல்லாயிருக்காம்மா?” என்றாள் அன்னையின் முகத்தில் தெரிந்த கோபச் சாயலை கவனிக்காமலே.

“ம்ம்...கடுப்பேத்தாம முதல்ல போய் உங்கப்பாவை வர சொல்லு வர்ஷு. பொண்ணுங்க ரெண்டும் காலேஜ், ஸ்கூலுக்குப் போகணுமேன்னு பொறுப்பிருக்கா பாரு. வெளியே நின்னு கதையடிசிட்டு இருக்காங்க”.

அன்னையின் தோள்களில் கையைப் போட்டு “டென்ஷன் ஆகாதீங்கம்மா! அப்பா கிளம்பிடுவாங்க” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள்.

அதன்பின்னர் பரபரப்புடன் அனைவரும் தயாராகிவிட, தேவேந்திரன் காரை எடுத்து கேட்டிற்கு வெளியே விட்டு மகள்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். அன்னை கையைசைத்து வழியனுப்ப, வர்ஷிணியும், தான்யாவும் தந்தையுடன் சென்றனர்.

இரெண்டாவது வருடம் பொறியியல் கல்லூரியில் படிக்கும் வர்ஷினிக்கு கல்லூரியை நெருங்க நெருங்க மனம் படபடக்க ஆரம்பித்தது. விடுமுறைக்குப் பிறகு முதல்நாள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் அவளது மனது அவனைக் காண வேண்டும் என்று ஏங்கியது.

அவளது முகத்தில் தெரிந்த பதட்டத்தை வேறுவிதமாக உணர்ந்து கொண்ட தேவேந்திரன் “என்னடா டென்ஷனா இருக்க? இந்த வருஷம் உனக்கு ராகிங் இருக்காதே” என்றார் பரிவுடன்.

தந்தையின் கேள்வியை கண்டு மென்மையாக சிரித்தவள் “அதில்லைப்பா ரெண்டு மாசம் கழிச்சு பிரெண்ட்ஸ் எல்லாம் பார்க்க போறேன் இல்லையா அது தான்” என்றாள்.

அவளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை நிறைவுடன் பார்த்துக் கொண்டவர் எல்லா தகப்பனைப் போல பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தித்துக் கொண்டார்.

கல்லூரி வந்துவிட தந்தையிடம் சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்தவளின் பார்வை அவனை மட்டுமே தேடியது. கல்லூரி வாயிலில் இருந்து வகுப்புகள் இருக்கும் கட்டிடம் வரை நடந்து வந்தவளின் பார்வையில் எங்குமே அவன் விழவில்லை. ஒருவேளை அவன் இன்னும் வரவில்லையோ என்றெண்ணி மனம் சோர்ந்து போனது.

எதிரே வந்து அவளை சேர்த்தணைத்துக் கொண்ட தோழிகளிடம் மனம் செல்லாமல் இல்லாதவனிடமே சரணடைந்தது. அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகளில் இருந்தே காரணத்தைப் புரிந்து கொண்ட தோழிகள் “ம்ம்...கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என்று பாடி கேலி செய்தனர்.

அவளது மனமோ அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. அவன் ஏன் முதல்நாளே வரவில்லை? எதுவும் பிரச்சனையோ? உடல்நலம் சரியில்லையோ? என்று பல்வேறு சிந்தனைகளோடு தோழிகளுடன் வகுப்பை நோக்கி நடந்தாள்.

அவளது சிந்தனைக்கு காரணமானவனோ மறைந்திருந்து அவளது முகத்தில் தெரிந்த உணர்வு போராட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தான். தன்னை அவள் தேடுகிறான் என்பதில், அவள் மனதில் தன் மீதிருக்கும் காதலை எண்ணி பெருமிதம் அடைந்தான்.

“டேய் சித்! இதெல்லாம் நல்லாயில்ல. பாவம் வர்ஷினி. உன்னை பார்க்க முடியாம ரொம்ப தவிக்கிறா. நீ எதுக்குடா இப்படி பண்ற?”

சரவணன் தோளில் ஒரு தட்டுதட்டி “உனக்கு இதெல்லாம் புரியாது-டா. காதலிக்கும் போது தான் இந்த உணர்வுகளின் பாஷை புரியும்”.

அவனை திரும்பி பார்த்து முறைத்த சரவணன் “எங்கூர் பெண்ணை டைம்பாசுக்கு காதலிச்சு விட்டுட்டு போயிடலாம்னு மட்டும் நினைக்காதடா. ஒவ்வொரு நிமிஷமும் உன்னை மனசில சுமந்துகிட்டு வாழ ஆரம்பிச்சிடுச்சு. அதனால நாங்களே விட மாட்டோம்” என்றான் மிரட்டலாக.

தோழனின் தோளில் அடித்து “என்னைப் பார்த்தா அப்படியா இருக்கு? எந்த காலத்திலும் அவளை நான் விட மாட்டேன் சரவணா. இப்போ வா அவளை போய் பார்த்திட்டு வருவோம்”.

அவனது கைகளை தட்டிவிட்டு “நான் எதுக்கு? நீ போய் பார்த்திட்டு கிளாசுக்கு வந்து சேரு. ரெண்டு பேரும் படிக்கனும்டா. இந்த காதலை ஓரம்கட்டி வைங்க” என்று மிரட்டிவிட்டு நகர்ந்தான்.

சித்தார்த் மல்ஹோத்ரா பாரம்பரிய மிக்க ஜமீன் குடும்பத்தில் இருந்து வந்தவன். குஜராத்தை சேர்ந்த பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன். வெளிநாட்டில் படிக்க சொல்லி வற்புறுத்திய தாய், தந்தையிடம் போராடி அனுமதி பெற்று தமிழ்நாட்டில் படிக்கிறான். அவனது குடும்பத்தைப் பற்றியோ, பாரம்பரியத்தைப் பற்றியோ அறியாதவர்கள் அவனது நண்பர்கள். வடஇந்தியாவிலிருந்து ஒருவன் என்கிற எண்ணத்தில் மட்டுமே இருந்தனர். வர்ஷினிக்கும் அவனது முழு விபரங்கள் தெரியாது.

அவனது பாரம்பரியத்தை அறிந்திருந்தால் அவனிடம் பழக பயந்து ஒதுங்கி இருப்பாள். அதை அறிந்தே அவன் எவரிடமும் தனது செல்வநிலையை கூட கூறாமல் இருந்தான். அப்படி இருந்துமே வர்ஷினிக்கு தங்கள் காதல் ஜெயிக்குமா என்பதில் ஆயிரம் சந்தேகங்கள் உண்டு.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
வர்ஷினியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை எண்ணியபடியே அவளது வகுப்பிருக்கும் பகுதிக்குச் சென்றான். ஆறடி உயரமும், காஷ்மீர் ஆப்பிள் போன்ற நிறத்தோடும் கட்டுமஸ்த்தான ஹீரோ போன்று இருப்பவனை அந்த கல்லூரியே காதலித்தது. அவனது பார்வை திரும்பாதா என்கிற ஏக்கத்தோடு பல விழிகள் தாண்டிச் சென்றது.

கல்லூரியில் பலருக்கு வர்ஷினியின் மீது அத்தனை பொறாமை. ஒற்றை பார்வைக்காக தாங்கள் காத்திருக்க. அவளின் பார்வைக்காக அவன் காத்திருப்பதை எண்ணி புகைந்தே போனார்கள்.

அவளது வகுப்பறை வாசலில் சென்று நின்றவனின் பார்வை தன்னவளை மொய்த்து. இரண்டு மாதங்களுக்குப் பிறகு பார்க்கும் அவளை தன் கைவளைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது. தோழிகளின் நடுவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவளின் மனம் அவர்களின் பேச்சில் முழுவதுமாக கவனம் வைக்கவில்லை.

அவளுக்காக வாசலில் வந்து நின்றவனை கவனிக்காமல் சிந்தனையுடனே இருந்தவளைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அப்போது அவளது தோழி ஒருத்தி அவனை கண்டுவிட்டு “ஹேய் வர்ஷு அங்கே பார்” என்று கத்தினாள்.

அவனது பார்வையோ அவள் காலில் உரசிக் கொண்டிருந்த கொலுசை வருடிக் கொண்டிருந்தது. அவளிடம் பழக ஆரம்பித்த நொடியிலிருந்து அந்த கொலுசின் ஓசை தான் அவனுக்கு தேசிய கீதமாகவே தோன்றியது. எங்கேனும் கொலுசின் ஒலி கேட்டால் உடலிலுள்ள நாளங்கள் தன்னையும் மீறி துடிக்க ஆரம்பித்து விடும்.

அதிலும் இரண்டு மாதங்களாக அவளின் கொலுசொலி கேட்காமல் சோர்ந்து போயிருந்தவனின் விழிகள் அவளது பாதத்தின் மீதே படிந்திருந்தது. அவனை அங்கு பார்த்ததும் அதிர்ந்து, கண்களில் ஒரு மலர்ச்சியுடன் அவனை நோக்கி முன்னேறினாள்.

மெல்ல அடியெடுத்து நடந்து தங்கமயிலென வருபவளை அப்படியே அள்ளிக் கொள்ள, மனம் துடிதுடித்தது. இருவரின் முகத்திலும் தெரிந்த காதலை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு கவிதையான காதலை கண்டு கொண்டிருக்கும் உணர்வு.

அவனது முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே “எப்போ வந்தீங்க? நான் பார்க்கவே இல்லையே” என்றாள் மெல்லிய குரலில்.

அவள் முன்னே கையை நீட்டி அவளது கைகளைப் பற்றிக் கொண்டவன் “வா!” என்றழைத்துக் கொண்டு மரங்களடர்ந்த விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றான்.

அங்கிருந்த கல்லில் அமர்ந்த இருவருக்கும் பேச மனமில்லை. இரு மாத பிரிவிற்க்கே இப்படி இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டார்கள். அடுத்தவரின் அருகாமையை ரசித்தபடியே அமர்ந்திருந்தனர். இன்று விட்டால் இந்த வாய்ப்பு நழுவிவிடுமோ என்கிற பயத்தோடு இருந்தார்கள்.

அவன் தான் முதலில் தன்னை சுதாரித்துக் கொண்டு “எப்படி இருக்க சோட்டி? என்னை ரொம்ப தேடினியா?”

அவனது விரல்களை அழுந்தப் பற்றிக் கொண்டவள் “என் மனசுக்குள்ள இருக்கிற உங்களை வெளில எப்படித் தேடுவேன். இரண்டு மாசமும் இங்கேயே வச்சு பத்திரமா பார்த்துகிட்டேன்” என்று தனது இதயம் இருக்கும் பகுதியை காண்பித்தாள்.

அவளின் வார்த்தைகளை கேட்டு உள்ளம் நெகிழுந்து போய் அமர்ந்திருந்தான். என்ன மாதிரியான உணர்விது? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த இருவருக்கும் ஏற்பட்டிருக்கும் இந்தக் காதலை என்ன சொல்வது?

“நேரமாச்சு சித்...கிளாஸ் ஆரம்பிச்சிடுவாங்க”.

“எனக்கு மனசே இல்ல சோட்டி. படிப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்னு இப்போவே என்னோட கூட்டிட்டு போயிடணும்னு இருக்கு”.

அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் “எனக்கும் காலம் காலமா உங்களோட வாழணும்னு ஆசை இருக்கு. ஆனா அதை மீறி நம்ம எதிர்காலத்துக்கு தேவையான கல்வியை சம்பாதிச்சுக்கணும். வாங்க போகலாம்”.

அவளின் பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் ‘எத்தனை தலைமுறைக்கு வேண்டுமானாலும் நாம உட்கார்ந்து சாப்பிட நம்ம கிட்ட சொத்து இருக்கு சோட்டி. அதை சொன்னா நீ என்னை விட்டு விலகிப் போகவும் சான்ஸ் இருக்கு’ என்று எண்ணியபடி அவளது கைகளை இருக்க கோர்த்துக் கொண்டு நடந்தான்.

இருவரும் கைகோர்த்து நடந்து கொண்டிருக்க, அவர்களின் எதிரே வந்த சித்தார்த்தின் எதிரி லோகேஷ் வேண்டுமென்றே வர்ஷினியின் மீது மோதி நின்றான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத சித்தார்த் அவனது சட்டையை கொத்தாகப் பற்றி “என்ன-டா?” என்று முறைக்க, வர்ஷினியோ அவனது கைகளைப் பற்றி “விடு சித்! எதுக்கு லோகேஷ் இப்படி இடிச்ச? நீ ஒன்னும் பார்க்காம இடிக்கலேன்னும் தெரியும்”

அவனோ அவளை கிண்டலாகப் பார்த்து “ஒருத்தன் கலரா வந்துட்டா அவன் பின்னாடியே சுத்த ஆரம்பிச்சிடுவீங்களே. உன் பின்னாடி ஒரு வருஷமா நாயா அலைஞ்சேன் திரும்பி பார்த்தியா நீ. இவனைப் பார்த்ததும் என்னவோ அட்டைப் பூச்சி மாதிரி ஓட்டிகிட்ட”.

கண்களை அழுந்த மூடித் திறந்தவள் “இங்கே பார் லோகேஷ். எல்லோருக்கும் எல்லோரையும் பிடிச்சிடாது. நீ சொல்கிற மாதிரி நான் இவர் நிறத்தைப் பார்த்தோ, தோற்றத்தைப் பார்த்தோ பழகல. என் மனசு சொல்லுச்சு இவர் தான் உனக்குன்னு. அந்த மனசு சொல்றதுக்கு ஒரு வருஷமோ, ஒரு வாரமோ தேவையில்லை ஒரு நொடி போதும்”.

அவனோ அப்போதும் எகிறி குதித்து “உங்களை எல்லாம் எங்களுக்குத் தெரியாதா? போடி போ! சுத்துகிற வரைக்கும் அவனோட சுத்திட்டு கழட்டிவிடுகிற ஆள் தானே நீயெல்லாம்” என்று அவன் முடிக்கும் முன்னே அவனது முகம் ரத்தத்தை பூசிக் கொண்டது.

சித்தார்த் அவனது மூக்கில் குத்தி, தூக்கி போட்டு மிதித்திருந்தான். அவர்களுக்குள் நடந்த சண்டையில் மைதானம் எங்கும் புழுதி பறக்க, அங்கிருந்த மாணவர்கள் மூலமாக செய்தி பிரின்சிபால் அறையை எட்டியது. அடுத்த நிமிடம் இருவரும் அவரின் முன்பு நிற்க வைக்கப்பட்டனர். சித்தார்த் அவளை வகுப்பிற்கு போகும்படி கூறி விட்டான். ஆனால் லோகேஷ் அதை விரும்பவில்லை.

இருவரையும் முறைத்த முதல்வர் சித்தார்த்திடம் “என்ன சித்தார்த் உன்கிட்ட இருந்து இப்படியொரு பீகேவியரை எதிர்பார்க்கல” என்றார் அதிருப்தியுடன்.

“சாரி சார்” என்று கூறி தலையை குனிந்து கொண்டான்.

லோகேஷிடம் திரும்பியவர் “என்ன பிரச்சனை? எதுக்கு சண்டை போட்டீங்க?”

சித்தார்த்தை கிண்டலாகப் பார்த்துவிட்டு “அது வந்து சார்..” என்று ஆரம்பிக்கும் முன்னே “சார் இவன் கிரவுண்டை க்ராஸ் பண்ணின பொண்ணுகிட்ட வம்பு பண்ணினான். அது தான் அடிச்சேன்” என்றான் சித்தார்த்.

அப்படியா என்பது போல அவனைப் பார்க்க அவனோ “இல்ல சார் அவன் பொய் சொல்றான்” என்று கோபத்தில் கத்தினான்.

அதற்குள் மைதானத்தில் இருத்த மாணவர்கள் அழைக்கப்பட, அவர்கள் அனைவரும் லோகேஷிற்கு எதிராக சாட்சி சொல்ல, முதல்வர் ஒரு வார்னிங் கொடுத்து அவனை வெளியே அனுப்பினார்.

முதல்வர் அறையிலிருந்து வெளியே வந்த சித்தார்த்தை சூழ்ந்து கொண்ட நண்பர்கள் “இதுக்கு தான் சொன்னோம். இனிமே வர்ஷினியோட பேசுறதா இருந்தா வெளியே போயிடு. தேவையில்லாம ப்ளாக் மார்க் வாங்காதே” என்று கடிந்து கொண்டு இழுத்துச் சென்றனர்.

வர்ஷினியோ வகுப்பை கவனிக்காமல் சித்தார்த்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள். தன்னால் தானே அவனுக்கு தண்டனை என்று மனம் வருந்திக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் குஜராத்தின் எஸ்எம் அலுவலக தளத்தில் தனது இருக்கையில் அமர்ந்திருந்த நீரஜ் மல்ஹோத்ராவின் முகம் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது. அவருக்கு அலைப்பேசியில் வந்த தகவல் மனதிற்கு பிடித்தமானதாக இல்லை. அதிலும் சித்தார்த்தைப் பற்றி சமீபகாலமாக வரும் செய்திகள் மனதிற்கு உவப்பானதாக இல்லை. அவனை தமிழ்நாட்டிற்கு படிக்க அனுப்பி வைத்தது தவறோ என்று எண்ண ஆரம்பித்திருந்தார்.

தன் முன்னே நின்றிருந்த மேனேஜரிடம் “கேஷவ்! எனக்கு லாஸ்ட் இயர் சித்தார்த் அந்த காலேஜில் ஜாயின் செய்ததிலிருந்து நடந்தவை ரிப்போர்ட் வேணும். முக்கியமா அந்த பெண்ணைப் பற்றி அனைத்தும் இன்னும் ரெண்டு நாளைக்குள்ள வேணும்” என்றார்.

“ஷ்யூர் சார்” என்று கூறிவிட்டு நகர்ந்ததும் இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்திருவரின் கண்களில் அவரின் அன்னையின் முகம் வந்து போனது.

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவர் “சீக்கிரம் சித்துவை இங்கே கொண்டு வந்தாகணும்” என்று முடிவெடுத்துக் கொண்டார்.