Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Kothai suresh

Member
Jan 26, 2022
51
11
8
சூப்பர் 👌👌👌👌👌. இப்போ அவளை சமாதானப் படுத்த வேண்டியது ஸ்ரீ யோடு டர்ன்
 
  • Like
Reactions: Shenba

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
139
486
63
சூப்பர் 👌👌👌👌👌. இப்போ அவளை சமாதானப் படுத்த வேண்டியது ஸ்ரீ யோடு டர்ன்
வேற வழி செய்து தானே ஆகணும்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
139
486
63
752

அத்தியாயம் - 17

இருவரது மௌனத்தையும் சுமந்து கொண்டு, வளைகாப்பு நாளும் வந்து சேர்ந்தது. தான் அவ்வளவு தூரம் சென்று பார்த்துவிட்டு வந்தும், பெயருக்கு ஒரு போன் கூடச் செய்யவில்லையே என்ற ஆதங்கம், திவ்யாவிற்கு அதிகமாகவே இருந்தது. வளைகாப்பு விழாவிற்குச் செல்ல வேண்டுமா! என்ற எண்ணம் கூட எழுந்தது.

‘அதேநேரம் இது என் வீட்டு விழா. நான் இல்லாமல் எப்படி? அனைவருமே என்னை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். ஸ்ரீயும் தான். ஆனால், இந்த மௌனத் தவத்தை என்றைக்குக் கலைப்பாரோ!’ என்ற ஆதங்கத்துடன் கிளம்பினாள்.

திவ்யாவின் ஸ்கூட்டி, ஸ்ரீராமின் வீட்டு வாசலில் வந்து நிற்கவும், கையில் பூப்பந்துடன் சஹானா வெளியே வரவும் சரியாக இருந்தது.

“அண்ணி!” என்று உற்சாகமாக குரலெழுப்பிய சஹானா, சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். ‘நல்லவேளை யாரும் இங்கே இல்லை. முக்கியமாக அம்மா’ என்ற நிம்மதியுடன் வைதேகியையும் வரவேற்றாள்.

பரஸ்பரம் நலம் விசாரிப்பு, பேச்சு என்று பெரியவர்கள் இருக்க, “நீங்க வாங்கண்ணி!” என்று திவ்யாவை அழைத்துக் கொண்டு வர்ஷா இருக்குமிடத்திற்குச் சென்றாள்.

திவ்யாவைக் கண்டதும் வர்ஷாவும் சந்தோஷிக்க, அவளோ ஒரு மருத்துவராக வருங்கால நாத்தனாரின் நலத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினாள்.

“ஹய்யோ! அண்ணி! இப்போ நீங்க டாக்டர் இல்ல. எங்க அண்ணி… இதெல்லாம் ஹாஸ்பிட்டலோட இருக்கட்டுமே ப்ளீஸ்!” என்றாள் வர்ஷா.

“ஓகே. பேசல” என்றாள் சிரிப்புடன்

“ம்” என்றவள், “அண்ணி! இவதான் தேவி. நம்ம சகியோட நாத்தனார்” என்று அங்கே நின்றிருந்தவளை அறிமுகப்படுத்தினாள்.

“உங்க அண்ணாவோட தீவிர ரசிகைதானே” என்று புன்னகையுடன் கேட்டாள் திவ்யா.

தேவி, “அத்தான் மாதிரியே நீங்களும் ரொம்ப ஸ்வீட்! இதோ பார்த்தீங்களா, நீங்க வாங்கிக் கொடுத்த இயர் ரிங்கைத்தான் போட்டுட்டிருக்கேன்” என்று ஆசையுடன் கட்டினாள்.

“நல்லாயிருக்கு. வர்ஷா மூலமா உங்க எல்லோரைப் பத்தியும் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ நேரிலும் பார்த்துட்டேன். நான் இன்னும் மீட் பண்ணாத ஒரே ஆள், மிஸ்டர்.சஹானாதான். எங்கே அவர்?” என்று அவளும் இயல்பாக பேசினாள்.

“நீங்க, சஹியோட வீட்டுக்காரரைத் தேடுறீங்களா? இல்லை, உங்க வருங்கால அத்தான் எங்கேன்னு கேட்காம கேட்கறீங்களா?” என்று திவ்யாவிற்கே கொக்கிப் போட்டாள் வர்ஷா.

“ஸ்ரீராம் எங்கேன்னு நான் நேராவே கேட்பேன். எனக்கென்ன பயம்?” எனக் கிண்டலாகச் சொன்னவள், “சஹி! உன் ஹஸ்பெண்டை எங்க கண்ணுல கொஞ்சம் காட்டலாமில்ல” என்றாள்.

“அவருக்கு ஆஃபில கொஞ்சம் வேலை. அதனால, வரல” சொல்லும்போதே சஹானாவின் முகம் சற்று வாட்டமானது.

அந்தநேரத்தில் திவ்யாவிற்கு, ஸ்ரீராம் சொன்னதெல்லாம் நினைவிற்கு வந்தது.

“பிஸ்னஸ்ல இருக்கவங்களுக்கு, இதெல்லாம் சகஜம். லேடீஸ் நமக்குத்தான் கஷ்டமாயிருக்கும். நேர்ல வரலன்னா என்ன? இப்போதான் லைவா பார்த்துக்கற அளவுக்கு வசதி வந்தாச்சே. இல்லனா, இருக்கவே இருக்கு சி.டி” என்றவள், “ஆமாம். வீட்ல சொந்தக்காரங்க யாரையும் காணோம்…” என்றாள்.

“வந்தவங்க எல்லோரையும் ஹோட்டலுக்கே கூட்டிட்டுப் போயாச்சு அண்ணி” என்றாள் சஹானா.

“தெரிஞ்சிருந்தா நானும் நேரா ஹோட்டலுக்கே வந்திருப்பேன்” – திவ்யா.

“அம்மா உங்களை வீட்டுக்குத்தானே வரச்சொன்னாங்க. நீங்க என்ன வெளியாளா?” என்றாள் வர்ஷா.

“உங்களை பார்க்கும் போது எனக்குச் சென்னைல இருக்க என் ஃப்ரெண்ட்ஸ் அண்ட் மயூரி அண்ணிதான் ஞாபகத்துக்கு வராங்க. அவங்களையெல்லாம் மிஸ் பண்றேன்னு நினைச்சேன். பட் எனக்கு ரெண்டு நாத்தனார், ஒரு குட்டி சிஸ்டர் எல்லாம் கிடைச்சிருக்கீங்க” என்ற திவ்யாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள் தேவி.

“வாவ்! நீங்களும், அத்தானும் சூப்பர் பேர் (pair). அத்தானை மாதிரியே நீங்களும் ரொம்ப அட்டாச்மெண்ட். எதுக்குமே டென்ஷன் ஆகமாட்டீங்க போலிருக்கே” என்று வியந்தாள் தேவி.

“யாரு? உங்க அத்தானா? அவர் டென்ஷன் ஆனா, என்ன பண்ணுவாருன்னு எனக்கில்ல தெரியும்” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “வர்ஷி! நீ கேட்டதெல்லாம் இதிலிருக்கு” சொல்லிக் கொண்டே உள்ளே வந்த பிரபாகர், அங்கே அமர்ந்திருந்த திவ்யாவைப் பார்த்தான்.

அவளிடம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, “டேய்! போனா போன இடம்னு இருப்பியா? வேலையிருக்கு வாடா…” என்று பேசிக்கொண்டே உள்ளே வந்தான் ஸ்ரீராம்.

திவ்யாவைக் கண்டதும் மனத்திற்குள் சந்தோஷமாக இருந்தபோதும் அதைப் பிரதிபலிக்காதபடி, முகத்தை இறுக வைத்துக் கொண்டிருந்தான். பரிமளம் அத்தைகூட அவர்களை விழாவிற்கு அழைத்துவிட்டு வந்திருப்பதாகச் சொன்னார். ஆனால், அவள் வரமாட்டாள் என்று நினைத்தான்.

அவள் வந்திருப்பது தனக்காக என்று புரிந்தாலும், பிடிவாதத்துடன் கோபத்தை விடாமல் பற்றிக் கொண்டிருந்தான். இருவரது பார்வையும் சங்கமித்துக் கொள்ள, சுற்றியிருந்தவர்கள் அவர்களது நிலையைக் கண்டதும், நமுட்டுச் சிரிப்புச் சிரித்தனர்.

‘உன் மனத்திற்குள் பொங்கும் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருந்தால், உனக்கு என் மீது கோபம் என்று தப்புக் கணக்கு போட்டுவிடுவேன் என்று நினைத்தாயா? உன்னை எனக்கு நன்றாகவே தெரியும்’ மனத்திற்குள் அவனுடன் பேசிக் கொண்டாள் திவ்யா. ‘இவனைத் தான் பார்க்க வந்திருக்கிறேன் என்று தெரிந்தும், குத்துக்கல் போல நிற்கிறான் பார்… சிடுமூஞ்சி!’ செல்லமாக மனத்திற்குள் அவனை வைதாள்.

அவனைப் போல மனத்தை அடக்கவும் நினைக்கவில்லை. அடக்கவும் முடியவில்லை. காதல் கொண்ட நெஞ்சம் அவனிடம் பேச விழைந்தது.

“எப்படியிருக்கீங்க?” மென்குரலில் கேட்டாள்.

“ம்…” என்று தலையசைத்தவன், பிரபாவிடம் திரும்பினான்.

“என்னடா உன் வேலை முடிஞ்சிதா? கிளம்பலாமா?” என்றான் எரிச்சலுடன்.

“இது நல்ல கதையா இருக்கே. இவ்ளோ நேரம் கனவுல மிதந்தது நீயா, நானா?” தான் சொல்வதைக் காதில் வாங்காமல் சென்றவனின் பின்னால், பேசிக்கொண்டே விரைந்தான் பிரபாகர்.

திவ்யாவின் மனம் சோர்வடையாவிட்டாலும், முகம் சற்று ஏமாற்றத்தைத் தாங்கி நின்றது. ‘அவனது தங்கைகள் எதிரிலாவது தன்னிடம் இரண்டு வார்த்தை சாதாரணமாகப் பேசிவிட்டுச் சென்றிருக்கலாம்’ என்று தோன்றியது.

மற்ற மூவரும் ஒருவரையொருவர் சங்கடத்துடன் பார்த்துக் கொண்டனர். ஆனால், திவ்யாவிடம் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. அவர்களது மனம் சமாதானமடைவதற்குள், திவ்யா இயல்பிற்குத் திரும்பியிருந்தாள்.

“அதான் ஜடை பின்னியாச்சே… பூ அலங்காரம் நான் செய்துவிடட்டுமா சஹி!” என்று கேட்க, அவளும் சந்தோஷமாக ஆமோதித்தாள்.

திவ்யாவைப் பார்க்க பாவமாக இருந்தது சஹானாவிற்கு.

“அண்ணன் ஏன் அண்ணியிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை’ என்று நினைத்துக் கொண்டே நின்றிருந்தாள்.

“வந்ததுலயிருந்து பார்க்கறேன் ஏன் சஹி டல்லாயிருக்க?” என்று கேட்டாள்.

“நைட்லாம் சரியா தூக்கமில்ல அண்ணி!” என்றாள் சமாளிப்பாக.

“அவளோட வீட்டுக்காரர் இருந்தாலும், இப்படித்தான் இருப்பா. அவர் இங்கே இல்லைனாலும் இப்படித்தான் இருப்பா” சொல்லிவிட்டு வர்ஷா கலகலவென நகைக்க, “கடவுளே!” என்று சஹானா சலித்துக் கொண்டாலும், அவளும் சிரிக்காமல் இல்லை.

“ஹேய்! இங்கே ரெண்டு குழந்தை பிள்ளைங்க இருக்கோம். என்ன பேசறீங்க நீங்க…” என்று போலியாக அதட்டினாள் திவ்யா.

அவர்களது கலகலப்பைக் கண்டு சிரித்தபடி அங்கே வந்தார் சுகுணா.

“இந்தாங்க நாலு பேரும் இந்தக் காஃபியைக் குடிங்க. மணி பதினென்னரை ஆகப் போகுது. நாங்க முன்னால கிளம்பிப் போறோம். அரை மணி நேரத்துல தயாராகிடுங்க. ஸ்ரீ வந்து உங்களைக் கூட்டிட்டு வருவான். சஹானா வீட்டையெல்லாம் பத்திரமா பூட்டிட்டு வா” என்றவர் திவ்யாவின் பக்கமாகத் திரும்பினார்.

“திவி! நீயும் இவங்களோட வாம்மா. நான் அம்மாவைக் கூட்டிட்டுக் கிளம்பறேன்” என்றார்.

“சரிங்கத்தை!” என்றாள்.

அனைவரும் கிளம்பிச் சென்றபின், கதவை மூடிவிட்டு வந்து அமர்ந்தாள் திவ்யா.

“அண்ணி நான் ரூமையெல்லாம் பூட்டிட்டு வரேன்” என்று மேலே சென்றாள் சஹானா.

போன் வந்ததென்று தேவி தோட்டத்திற்குச் சென்றுவிட, உடல் அசதியாக இருப்பதாகக் கூறி வர்ஷா கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

திடீரென காலிங் பெல் ஒலிக்கும் சப்தம் கேட்கவும், ஸ்ரீ வந்துவிட்டானோ என்ற நினைப்புடன் கதவைத் திறந்தவள், அங்கே நின்றிருந்த புதியவனைக் கண்டதும் விழித்தாள்.

“சஹானா இல்லையா?” எனக் கேட்டான்.

“இருக்காங்க. நீங்க?”

“நான், அவளோட ஹஸ்பண்ட் பிரபு!” என்றான்.

“வாங்க வாங்க. நான் திவ்யா” என்றாள் வேகமாக.

“ஓகே ஓகே… புரியுது” என்று சிரித்தவன், “சஹி ரூம்ல தானே இருக்கா” என்று கேட்டான்.

“ஆமாம்” என்றாள்.

அதற்குள் தேவி அங்கே வர, தங்கையுடன் பேசிவிட்டு, தங்களது அறைக்குச் சென்றான்.

“அச்சச்சோ… என்னோட நெயில்ஸ் ஏன் இப்படி உடையுது” என்று சிணுங்கிய தேவி, “அக்கா! அத்தான் வர்றதுக்குள்ள நான் நெயில் ஷேப் பண்ணி பாலிஷ் போட்டுட்டு வரேன்” என்று அறைக்குள் ஓடினாள்.

உள்ளறையில் வர்ஷா ஓய்வெடுத்துக்கொண்டிருக்க, அவளைத் தொந்தரவு செய்யாமல், ஹாலில் அமர்ந்து மேகஸின் ஒன்றைப் புரட்டிக்கொண்டிருந்தவள், கதவு திறக்கும் சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்தான் ஸ்ரீராம்.

அவனைக் கண்டதும் மெல்ல எழுந்து நின்றாள். அவளை ஒருபார்வை பார்த்துவிட்டு அவன் உள்ளே செல்ல, அவனைப் பின்தொடர்ந்தாள் திவ்யா.

“வர்ஷி!” என்றழைத்தான்.

“அத்தையோட ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க” என்றாள் திவ்யா.

“சஹி எங்கே?” என்றான்.

“அவங்க கொஞ்சம் பிஸியா இருக்காங்க” என்றாள்.

மாடிப்படியை அண்ணார்ந்து பார்த்துவிட்டுத் திரும்பியவன், அவள் மீது மோதிக்கொள்ள இருந்தவன், சமாளித்து நின்றான்.

இருவரும் ஒரே நேரத்தில் “சாரி” என்றனர்.

பேசுவதற்கு ஆசையிருந்தாலும், என்ன பேசுவதென்றே இருவருக்கும் பிடிபடவில்லை. ஃபேனை போட்டுவிட்டு ஸ்ரீராம் ஹாலில் சென்று அமர, தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டினாள் திவ்யா.

நிமிர்ந்து பார்த்தவன், “தேங்க்ஸ்!” என்று வாங்கிக் கொண்டான்.

காலையில் அவளைக் கண்டதுமே மனத்திற்குள் சந்தோஷமிருந்தாலும், ‘அவளிடம் இயல்பாக பேசுவதற்கு, தயக்கமாக இருந்தது. அவளும் ஒரு முடிவுடன் இருந்ததைப் போல உள்ளே செல்லாமல், படிக்கட்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

“தேவி எங்கே?” என்றான்.

“ரூம்ல இருக்கா” என்றாள்.

அவர்கள் இருந்த அறைக்கதவு மூடியிருப்பதை உறுதி செய்துகொண்டு, அவளருகில் வந்தான்.

“சாரி திவ்யா! அன்னைக்கு நான் அப்படிப் பேசியிருக்கக்கூடாது” என்றான்.

அதுவரை அவனது பார்வைக்காக ஏங்கிக்கொண்டிருந்தவள் அவன் பேசியதும், அவளறியாமல் கண்ணீரை வெளியேற்றியது அவளது விழிகள்.

”தியா! ப்ளீஸ்… அழாதே…” எனக் கெஞ்சலாகச் சொன்னான்.

கண்களைத் துடைத்துக் கொண்டவள், “என்கிட்ட பேசப் பிடிக்கலன்னா நேரா சொல்லிடுங்க ராம்! உங்களோட உதாசீனத்தை என்னால தாங்கமுடியாது” என்றவளது கரத்தை இறுகப் பற்றினான்.

“கையை விடுங்க” என உதறியவள், சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“ஏய்! சும்மா இரு” என்றவன், கரங்களால் அவளைச் சுற்றி வளைத்தான்.

“ராம்! திஸ் இஸ் டூ மச்! நான் இன்னும் சமாதானமாகல” என்றாள்.

“அப்போ, எதுக்குடி இந்த அழுகை?” என்று கிசுகிசுத்தவன், விரல்களால் அவளது கன்னத்தில் கோலமிட்டான்.

“என்ன ரொம்ப ஓவரா போறீங்க? யாராவது வரப்போறாங்க” என்றாள்.

“வர்ஷி ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா. தேவி இப்போதைக்கு இந்தப் பக்கம் வரமாட்டா” என்றான்.

“சஹானா வருவாங்க” என்றாள்.

“எப்படி வருவா? அவதான் பிரபுவைக் கவனிச்சிட்டு இருக்காளே” என்று சிரித்தான்.

“அப்போ, எல்லாம் தெரிஞ்சிதான் வந்திருக்கீங்க” என்றாள் காட்டமாக.

“அவன் நேரா ஹோட்டலுக்கு வந்தான். நான்தான் பார்க்கிங்லயே பார்த்துட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்” என்றான்.

“சரி முதல்ல என்னை விடுங்க” என்றாள்.

“எதுக்கு?” என்றான்.

“எனக்குக் காரணம் தெரியணும்.”

“எதைப் பத்தி?”

“நீங்க மௌனவிரதம் இருந்தீங்களே, அதைப் பத்தி.”

“அதை அப்புறமா சொல்றேனே” என்றவனைப் பிடித்துத் தள்ளினாள்.

“முதல்ல கிளாரிஃபிகேஷன்.”

“அதுக்கு அப்புறம்…” என்று புருவத்தை உயர்த்தினான்.

“கை மேலே பட்டா, உதைதான் விழும்” மிரட்டலாகச் சொன்னாள்.

“நீ மட்டும் கையைப் பிடிச்சிக்கலாம், தோள்ல சாஞ்சிக்கலாம்” என்றான் புகாராக.

”உங்களுக்கும், அதெல்லாம் அலௌட். ஆனா, விஷயத்தைச் சொன்னா மட்டும்” என்றாள் கறாராக.

“பெருசா எதுவும் இல்லம்மா! உன்கிட்ட அநாவசியமா கோச்சிகிட்டேன். தப்பு என்மேலன்னு நல்லா தெரியுது. சாரி கேட்டுட்டு திரும்ப அதேமாதிரி எதாவது பேச்சு தடிச்சிப் போச்சுன்னா என்ன பண்றதுன்னு ஒரு தயக்கம்.

சஹி பத்தி ரொம்ப யோசனையா இருந்தது. அதுல, உன்னோட ஃபீலிங்கை நான் புரிஞ்சிக்கவே இல்ல. ஃபங்க்‌ஷன் நல்லபடியா முடியட்டும். அப்புறம் பேசலாம்னு இருந்தேன். நீ அன்னைக்கு அந்த டிரெஸ்ஸைக் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போனியா… அது வேற கடுப்பு.

தப்பை என்மேல வச்சிகிட்டு, மன்னிப்புக் கேட்கவும் கொஞ்சமே கொஞ்சம் ஈகோ தடுத்துடுச்சி. இப்போதைக்கு உன்கிட்ட பேசறதைவிட, சஹானாவோட விஷயம்தான் எனக்குப் பெரிசா தெரிஞ்சது. இப்போ, பிரபு வந்ததைப் பார்த்த பின்னால, எனக்குக் கொஞ்சம் நிம்மதி ஆச்சு” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.

“அதனாலதான் என்கிட்ட பேசறியான்னு கேட்காதே. ஏன்னா, நான் என்ன நினைச்சேன், இப்போ என்ன நினைக்கிறேன்னு எனக்கே தெரியல. சப்போஸ் என்னோட இடத்துல நீ இருந்திருந்தா, என்ன செய்திருப்ப?” எனக் கேட்டான்.

தோளைக் குலுக்கியவள், “நான் வெளிப்படையா உங்ககிட்ட பேசியிருப்பேன்” என்றவளை ஆழ்ந்து பார்த்தான்.

“உன்னை ஒண்ணு கேட்கட்டுமா? கோச்சிக்கக்கூடாது” என்றான்.

“கேளுங்க” என்றாள்.

“சப்போஸ்… நாளைக்கே உன் அப்பா திருந்தி வந்தா, உங்க அம்மா என்ன செய்வாங்க? நீ என்ன செய்வ?” என்று கேட்டான்.

“அந்த ஆளைப் பத்தி இப்போ எதுக்கு?” என்றாள் எரிச்சலுடன்.

“ஜஸ்ட், நடந்தால்…” என்றான்.

சலிப்புடன் தலையை அசைத்தவள், “அப்படியொரு நிலை வந்தால், அதில் முடிவெடுக்க வேண்டியது எங்க அம்மா மட்டும்தான். ஒருவேளை, அவங்க என்னுடைய விருப்பப்படித்தான் நடந்துப்பேன்னு சொன்னா மட்டுமே, என்னோட தலையீடு அதில் இருக்கும்” என்றாள்.

“சொல்றது ஈஸி. ஆனா, செய்றது ரொம்ப ரொம்பக் கஷ்டம்…”

“எனக்கும் புரியாமல் இல்ல ராம்! ஒருவேளை உண்மையிலேயே எங்க அப்பா திருந்தி வந்தா, எங்க அம்மாவும் அவரை ஏத்துகிட்டா, எனக்குச் சந்தோஷம்தான். எங்க அம்மாவுக்கு இனியாவது ஒரு சந்தோஷமான வாழ்க்கை அமையட்டுமே. அதை, நான் ஏன் தடுக்கப் போறேன்?” என்றவளது இமைகள் ஈரமாகின.

“ஹேய் ரிலாக்ஸ்! யாருக்குத் தெரியும். இப்போ நாம பேசினதுக்கு தேவர்கள்லாம் ததாஸ்து கூட சொல்லியிருக்கலாம்” என்று சிரித்தான்.

“எல்லாமே உங்களுக்கு விளையாட்டுதான்” என்று அவனுடன் இணைந்து புன்னகைத்தாள்.

“கிளாரிஃபை பண்ணியாச்சு. இப்போ…” என்றபடி அவன் அவள் பக்கமாகத் திரும்ப, சற்றும் எதிர்பாராத நேரத்தில், அவனது கன்னத்தில் தனது முத்திரையைப் பதித்தாள் அவள்.

காதல் வளரும்...
 
  • Like
Reactions: lakshmi and saru