Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காதலாகி நின்றேன் - ஷெண்பா | SudhaRaviNovels

காதலாகி நின்றேன் - ஷெண்பா

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
134
484
63
அத்தியாயம் - 11

“சஹி! நாம கிளம்பிட்டோம்னு அண்ணிகிட்ட சொல்லிட்டியா?” அறைக்குள் நுழைந்த தங்கையிடம் கேட்டாள் வர்ஷா.

“அண்ணி ஆப்பரேஷன் தியேட்டர்ல இருக்காங்களாம். அவங்க ஃப்ரெண்ட்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன். சொல்லிடுவாங்க” என்றாள் சஹானா.

“அண்ணியா? யாரை அண்ணிங்கற?” பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்த சுகுணா சந்தேகத்துடன் கேட்டார்.

“ஸ், அம்மா இருக்கறது மறந்தே போச்சு” மெல்ல முணுமுணுத்த வர்ஷா, “ம், நம்ம திவ்யா அண்ணியைச் சொன்னேம்மா!” என்றாள் மெதுவாக.

“ரெண்டு பேரும் முடிவே பண்ணியாச்சா? இன்னும், உன் அண்ணனுக்கு விஷயமே தெரியாது. அவன் சம்மதிக்கணும். அந்தப் பொண்ணு சம்மதிக்கணும். அப்புறம்தான் மத்ததெல்லாம். அதுவரைக்கும் ரெண்டு பேரும் கொஞ்சம் வாயை மூடிட்டு இருங்க” என்றார் அதட்டலுடன்.

“எங்க எல்லோருக்கும் அண்ணியைப் பிடிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிச்சிருக்கு. அப்புறம் என்ன? அண்ணனுக்கும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். தினம் அண்ணியைத் தரிசிக்கும் பாக்கியமாவது கிடைச்சிருக்கும்” என்ற மூத்தவளை முறைத்தார் சுகுணா.

“வரவர உனக்கு வாய் அதிகமாகிடுச்சி. இன்னும் சஹி வீட்டுக்காரருக்கு விஷயத்தைச் சொல்லவேயில்ல. அவரும் சரின்னு சொல்லிக் கல்யாணத்தைப் பேசி முடிக்கிற வரைக்கும், எதுவும் சாஸ்வதம் கிடையாது. எல்லாம் கூடி வரட்டும், அப்புறம் முறையெல்லாம் வச்சிக் கூப்பிடலாம்” என்றார் கறாராக.

“அத்தையும், மாமாவும் ஓகே சொல்லிட்டங்க. அவரும் அதையே தான் சொல்லப் போறார். அதனால பிரச்சனையில்லம்மா. நாங்க அண்ணின்னே கூப்பிட்டுக்கறோம்” என்றாள் இளையவள்.

“எப்படியோ செய்ங்க. திவ்யா, எதிர்ல மட்டும் அப்படிக் கூப்பிட்டு வைக்காதீங்க.”

“சேச்சே! அப்படியெல்லாம் செய்யமாட்டோம்மா” சகோதரிகள் இருவரும் ஒருசேர சொல்லிவிட்டுச் சிரித்தனர்.

“என்னமோ போ. எல்லாத்தையும் எடுத்தாச்சு இல்ல” என்றவர், அறையை மீண்டும் ஒருமுறை சுற்றிப் பார்த்த பின்பே திருப்தியானார்.

“வர்ஷாம்மா! மெதுவா நடந்து வா” பெரியவளிடம் அக்கறையுடன் சொன்னவர், “சஹி! ஸ்ரீக்குப் போன் பண்ணிட்ட இல்ல” என்று கேட்டார்.

“பண்ணிட்டேம்மா. நம்மள கிளம்பச் சொல்லிட்டாங்க. ஆஃபிஸ் முடிஞ்சதும் ஹாஸ்பிட்டல் வந்து டீனைப் பார்க்கறேன்னு சொல்லிட்டாங்க. அத்தான் கேப் எடுத்துட்டு வந்திடுறாங்களாம். நம்மள வெளியே வந்துட சொன்னாங்க” பதில் சொல்லிக்கொண்டே வெளியில் வந்தாள் சஹானா.

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த வர்ஷா, “ஹப்பா! ஒரு வாரம் இந்த ஹாஸ்பிட்டல்ல அடைஞ்சி இருந்தேன். இன்னைக்குத் தான் வெளி உலகத்தைத் திரும்பப் பார்க்கறேன்” என்று பெருமூச்சு விட்டாள்.

“நமக்கே இப்படியிருக்கு. தினம் ஹாஸ்பிட்டல் வர்ற அண்ணிக்கு எப்படியிருக்கும்?” என்ற தங்கையுடன் சேர்ந்து கதையளந்தாள் பெரியவள்.

“ஆரம்பிச்சாச்சா! முதல்ல கிளம்புங்க. மீதியை வீட்ல போய்ப் பார்த்துக்கலாம்” என்ற சுகுணாவிற்கு, மகள்களின் ஆர்வத்தை எண்ணிச் சிரிப்பு வந்தது.

அவர்கள் பிரபாகருக்காக காத்திருந்த நேரத்தில், திவ்யா அவர்களை நோக்கி ஓடிவந்தாள்.

“அம்மா! அண்ணிம்மா” என்றாள் இளையவள்.

“சஹி” என்று முறைத்தார் சுகுணா.

அதற்குள் திவ்யா அவர்களை நெருங்கி வந்திருந்தாள்.

“கிளம்பியாச்சா. திடீர்னு அவசர கேஸ்…” என்றவளுக்கு மேல் மூச்சு வாங்கியது.

“புரியுதும்மா! அதுக்காக நீ இப்படி ஓடிவரணுமா!” என்றார் சுகுணா.

“நீங்க வீட்டுக்குக் கிளம்பிட்டா அப்புறம், என்னால எப்படிப் பார்க்க முடியும்?”

“ஏன்? வீட்டுக்கு வரலாமே” என்றாள் வர்ஷா.

“வரலாம்… கண்டிப்பா வரேன்…” எனத் திணறியவளை, தமக்கைகள் இருவரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு பார்த்தனர்.

“உடம்பைப் பார்த்துக்குங்க வர்ஷா. டேப்லெட்ஸ் கரெக்டா எடுத்துக்கோங்க. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க” என்றாள்.

“அதெல்லாம் எங்க அத்தான் பார்த்துக்குவாங்க. அக்காவுக்கு இனி, பெட் ரெஸ்ட்தான்” எனச் சிரித்தாள் சஹானா.

அதற்குள் பிரபாகர் டாக்ஸியுடன் வந்துவிட, அனைவரும் விடைபெற்றுக் கிளம்பினர்.

********

“இன்னுமா நீங்க சமாதானம் ஆகல திவ்யா?” எனக் கேட்டார் டீன்.

“மூணு வயசுக் குழந்தை! இந்த வயசுல ஹார்ட் பிராப்ளம்… ஆப்பரேஷன்… அது செட் ஆகாம ஃபிட்ஸ்ன்னு… என்ன கொடுமை டாக்டர்? இந்தக் கடவுளுக்குக் கொஞ்சங்கூட இரக்கமே இல்ல! அயோக்கியத்தனம் பண்றவங்கள்லாம் நல்லாதானே இருக்காங்க. இந்தப் பிஞ்சிக்கு ஏன் சார் இப்படி ஒரு கொடூரம்?” என்ற திவ்யாவை ஆறுதலுடன் பார்த்தார்.

“திவ்யா! நீங்க ஒரு டாக்டர்! இன்னும் எவ்வளவோ கேஸஸ் பார்க்க வேண்டியிருக்கு. நம்ம மனசையும் கல்லாக்கிக்கிட்டுத் தான் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கு. இங்கே எமோஷன்ஸுக்கு இடமே இல்லை. அதனால தான் நம்மள கடவுளுக்குச் சமமா நினைக்கறாங்க.

இப்போதான் அந்தக் குழந்தைக்கு பல்ஸ் கொஞ்சம் கொஞ்சமா நார்மலாகிட்டு இருக்கே. ஒருகட்டத்துக்கு மேல நாம என்ன நினைச்சாலும் முடியாது. எல்லாத்தையும் மேலே இருக்கறவன் சரியா நடத்தணும். அவன் மனசு வைக்கணும். போங்க போய் வேலையைப் பாருங்க” என்றார்.

“ஓகே சார்!” என்றவள், கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தாள்.

மாலையில் அலுவலகம் முடிந்து மருத்துவமனைக்கு வந்த ஸ்ரீராம், வழக்கமான வேக நடையுடன் டீனின் அறைக்கு முன்பாக வந்து நின்றான்.

கதவைத் தட்ட முயன்றவன், உள்ளே அவர் யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டதும், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டதும் எழுந்தவன், கண்களைத் துடைத்துக் கொண்டே வெளியில் வந்த திவ்யாவை, வியப்புடன் பார்த்தான்.

கண்களைத் துடைத்துக் கொண்டு பாக்கெட்டிலிருந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டு நிமிர்ந்தவள், அங்கே நின்றிருந்த ஸ்ரீராமைப் பார்த்தாள்.

இருவருக்குமே அடுத்த அடி எடுத்து வைக்கும் எண்ணமே இல்லை என்பது போல, ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்தனர். திகைத்தாலும் இருவருக்குள்ளும் வெவ்வேறு எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.

‘இன்னைக்கெல்லாம் தேடினேன். அப்போதெல்லாம் வராமல், இப்படி அழுது கொண்டிருக்கும் நேரத்திற்கு வரணுமா? கடவுளே! இப்படியே போய் எப்படிச் சாரி கேட்பது?’ என்று மனத்திற்குள் புலம்பிக் கொண்டாள்.

‘ஏதாவது பிரச்சனையா? வேலையில் ஏதேனும் தவறு செய்து மாட்டிக் கொண்டாளா?’ என்றவனது மனமே, ‘சேச்சே இருக்காது. இவளைப் பார்த்தால் ஸ்ட்ரெய்ட் பார்வார்ட் போல் இருக்கிறது. ம்ம், இவளோட வாயால தான் மாட்டியிருப்பா. அப்படி என்னவாக இருக்கும்?’ என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான்.

“ஹலோ சார்! எப்படியிருக்கீங்க?” என்ற கல்பனாவின் குரலைக் கேட்ட பின்பே, இருவரும் சுயநினைவிற்கு வந்தனர்.

“நல்லாயிருக்கேன் மேடம்! டீனைப் பார்க்க வந்தேன். வரேன்” என்றவன், கல்பனா மேற்கொண்டு பேசும் முன்பாக அங்கிருந்து நகர்ந்தான்.

எதிரெதிராக வந்த இருவரது பார்வையும், ஒருவரையொருவர் கடக்கும் வரை உரசிக் கொண்டே வந்தது.

அவளது விழிகளில் தெரிந்த தயக்கத்தை அவனும், அவனது கண்களில் தென்பட்ட குழப்பத்தை அவளும், புரிந்து கொள்ளத்தான் செய்தனர். ஆனால், அதைப் பேசித் தீர்த்துக் கொள்ளத்தான் அவர்களுக்குச் சமயம் வாய்க்கவில்லை.

டீனின் அறைக்கதவைத் தட்டுவதற்கு முன்பாகத் திரும்பி, அவளைப் பார்த்தான். கல்பனாவுடன் பேசிக்கொண்டே நடந்தவளும், தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள்.

அந்தப் பார்வை… அவனது இதயத்தை ஊடுறுவ, அந்தநொடி அவளது அழுகை, தன்னைப் பாதித்ததற்கான காரணத்தை அறிந்து கொண்ட ஸ்ரீராமிற்கு, திடுக்கிடலுடன் கூடிய ஆச்சரியம்தான் எழுந்தது.

‘இது எப்படிச் சாத்தியம்?’ காரணம் மட்டும் அவனுக்குப் புரியவேயில்லை.

“ஹலோ ஸ்ரீராம்! வாங்க… நியாயமா ஹாஸ்பிட்டலுக்கு வாங்கன்னு கூப்பிடக்கூடாது” எனச் சிரித்த டீனிற்கு எப்படியும் அறுபத்தைந்து வயதிருக்கும்.

“ஹா ஹா ஹா… இப்போ இருக்குற ஸ்டேஜ்ல வருஷத்துக்கு ஒரு முறையாவது மாஸ்டர் செக்அப் பண்ணிக்கோங்கன்னு எல்லோருக்கும் அட்வைஸ் பண்ண வேண்டியிருக்கு சார்!” என்று சிரித்தான் ஸ்ரீ.

“உங்க ஆஃபிஸ் ஸ்டாஃப்ஸுக்கு ஆன்வல் செக் அப் கேம்புக்கு, நம்ம ஹாஸ்பிட்டலை சஜஸ்ட் பண்ணதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்!” என்றார்.

“நீங்க தெரிஞ்சவர்ங்கறதுக்காக செய்யல சார்! உங்க தொழில்ல நீங்க நியாயமா இருக்கீங்க. உங்க ஹாஸ்பிட்டலையும் அப்படித்தான் நடத்திட்டு இருக்கீங்க. இதைக் கூடச் செய்யலன்னா எப்படி? நானும் நல்லாருக்கணும், அடுத்தவங்களும் நல்லாயிருக்கணும்னு எத்தனைப் பேர் நினைப்பாங்க?” என்றான்.

“மனுஷன்னா, மனுஷத்தன்மை வேணுமில்லையா ஸ்ரீ! நம்ம காலத்துக்குப் பிறகு, நல்லவிதமா பேசறாங்களோ இல்லையோ அட்லீஸ்ட், நினைச்சாவது பார்க்க வைக்கலாமில்ல.”

“எக்சாட்லி சார்! ஒகே சார்… நான் கிளம்பறேன். தேங்க்ஸ்” என்று விடைபெற்றான்.

“என்னடி! ஸ்ரீ சார்கிட்ட பேசனியா?” மெல்லத் தோழியின் காதைக் கடித்தாள் கல்பனா.

“இல்லடி… இப்படி அழுத முகத்தோட அவர்கிட்ட எப்படி மன்னிப்புக் கேட்கறது” என்றவளை முறைத்தாள் கல்பனா.

“முறைக்காதேடீ… என்னோட ஃபீலிங்ஸைப் புரிஞ்சிக்கவே மாட்டேன்ற” என்றாள்.

“கொன்னுடுவேன் உன்னை. ஃபுல் மேக் அப் போட்டுட்டுப் போய்த் தான் மன்னிப்பு கேட்பியாக்கும். எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு…” என்றவள் கடுப்புடன் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

“இப்போ என்னடி பண்ணட்டும்?” அப்பாவியாகக் கேட்டாள் திவ்யா.

கோபத்துடன், “நல்ல சான்ஸ் அதைக் கோட்டைவிட்டுட்டு, இப்போ கேளு… என்ன பண்ண? நொன்ன பண்ணன்ணு” என்றாள்.

பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு, அமர்ந்திருந்த தோழியின் முகத்தைப் பார்க்க கல்பனாவிற்கே பரிதாபமாக இருந்தது.

“சரிவிடு. வேற சான்ஸ் வரும்…”

“வருமா…?” எனக் கேட்டவளைப் பார்த்துத் தலையிலடித்துக் கொண்டாள்.

“அதுவா வருமா… நீதான் உருவாக்கிக்கணும்” என்றவள், இதற்குமேல் முடியாது என்பதைப் போல எழுந்து வெளியே சென்றாள்.

**********

இரவெல்லாம் ஓயாமல் பெய்த மழையால் சாலையெங்கும் குட்டைகளாக மாறிப் போயிருந்தது. ஆங்காங்கே சேறும் சகதியுமாக, காலை கீழே வைக்கவே எரிச்சலாக இருந்தது திவ்யாவிற்கு. போதாக்குறைக்கு அரசியல் பேரணி ஒன்றால், வாகனங்கள் வேறு வழியாகத் திருப்பி விடப்பட, போக்குவரத்து நெரிசல் வேறு அவளை மேலும் கடுப்பாக்கிக் கொண்டிருந்தது.

சூப்பர் மார்க்கெட்டிலிருந்து இருபது நிமிடத்தில் செல்ல வேண்டிய வீட்டிற்கு, ஒரு மணி நேரமாகியும் பாதி வழியைக்கூட கடந்த பாடில்லை. இருட்டிக் கொண்டுவர மழை வருவதற்குள் வீட்டிற்குச் சென்று விடும் அவசரம் அவளுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த அத்தனைப் பேருக்குமே இருந்தது.

கிடைத்த இடைவெளியில் புகுந்து மேலும் போக்குவரத்து நெரிசலை அதிகமாக்கிக் கொண்டிருந்தனரே தவிர, யாராலும் பத்தடி தூரம்கூட நகரமுடியவில்லை. ஆங்காங்கே கிடைத்த சிறு தெருக்களில் வாகனங்களின் ஆக்ரமிப்பு நடந்து கொண்டிருந்தன.

நடைபாதைகள், இருசக்கர வாகனங்களின் அவசரத் தேவைக்குப் பாதையாக மாறிக் கொண்டிருந்தன.

கிடைத்த வழியில் முன்னேறி ஒரு சிறு தெருவிற்குள் புகுந்தாள் திவ்யா. நெரிசலிலிருந்து தப்பித்து வந்தவளுக்குத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக்கூட நேரமில்லாமல், பின்னாலிருந்த வாகனங்களின் ஹாரன் ஒலி காதுகளைக் கிழித்தன.

அந்தத் தெருவைக் கடந்து வந்தவளுக்கு, அங்கிருந்து எந்தப் பக்கமாக வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்று தெரியவில்லை. தென்காசிக்கு வந்து இரண்டு மாதங்களாகிய போதும், மருத்துவமனை, வீடு, சூப்பர் மார்க்கெட் என்று சில இடங்கள் மட்டுமே பரிச்சயமாகியிருக்க, வழி தெரியாமல் தடுமாறினாள்.

சுற்றும் முற்றும் பார்த்தவள், குனிந்து பைக்கில் என்னவோ செய்து கொண்டிருந்தவன் அருகில் சென்று, “எக்ஸ்கியூஸ்மீ சார்!” என அவள் அழைத்ததுமே, நிமிர்ந்து பார்த்தவனைக் கண்டதும் அவளுக்குப் பகீரென்றது.

‘அச்சச்சோ இவரா!’ என்று எண்ணியவளுக்குத் தொண்டை வறண்டது.

பெட்ரோல் டாங்கில் தண்ணீர் இறங்கிவிட்டதால் கிளம்பாத பைக்கைச் சரி செய்து கொண்டிருந்த ஸ்ரீராம், திவ்யாவின் குரலைக் கேட்டதும் சட்டெனத் திரும்பிப் பார்த்தான். தன்னைக் கண்டதும் திணறிக் கொண்டு நின்றிருப்பவளைக் காண, அவனுக்குச் சிரிப்பாக வந்தது.

‘நம்மை மரியாதையாகச் சார்ன்னு கூப்பிட்டது, மேடத்துக்குச் ஷாக்கா இருக்கும். இந்த நேரத்தில் இவளைக் கடுப்படிப்பது போல எதுவும் பேச வேண்டாம்’ என்று நினைத்துக் கொண்டவன், “சொல்லுங்க மேடம்!” என்றான்.

பழையபடி இருந்திருந்தால், அவனைக் கண்டதுமே வாயில் வந்ததைப் பேசியிருப்பாள். இப்போதுதான் அவளது உள்ளம் கவர் கள்வனாகி விட்டானே!

“காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எந்தப் பக்கமா போகணும்?” என்றாள் மென்குரலில்.

‘அடடா! மேடம் இன்னைக்கு இவ்ளோ பவ்யமா பேசுவாங்கன்னு முன்னமே தெரிஞ்சிதான், வருண பகவான் நான் - ஸ்டாப்பா நைட்டெல்லாம் வந்து விசிட் அடிச்சிட்டுப் போயிருக்காரு போல’ என எண்ணிக் கொண்டான்.

என் பின்னாலேயே வா. நானும் அவ்வழியாகத் தான் போகிறேன் என்று அவனும் சொல்லியிருப்பான். அப்படிக் கூறினால், புதிதாக முளைத்திருக்கும் மரியாதை எந்த நேரத்திலும் காணாமல் போகும் என்ற அச்சத்தில், அவளுக்கு வழி சொல்லத் துவங்கினான்.

“ஓகே. தேங்க்ஸ்…” என்று அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்களைக் கடந்து சென்ற கார் சாலையிலிருந்த சேற்றை, அவள் மீது வாரி அடித்துவிட்டுச் சென்றது.

“சே!” என்றபடி தன்னை மொத்தமாக நனைத்து விட்டுச் சென்ற கார்க்காரனை மனத்திற்குள் திட்டினாள்.

“மை காட்!” என்றவன், “இந்தாங்க முகத்தைக் கழுவிக்கோங்க” என்று பைக்கிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தான்.

முகத்தையும், தன் மீது படிந்திருந்த சேற்றையும் ஓரளவிற்குக் கழுவிக் கொண்டவள், அவன் நீட்டிய சிறிய டவல் ஒன்றை வாங்கித் துடைத்துக் கொண்டாள்.

“வேற ஏதாவது?” அவன் தயக்கத்துடன் வினவ, “நோ தேங்க்ஸ்” என்றாள்.

அதற்கு மேல் என்ன கேட்பதெனப் புரியாமல், “ஓகே, பத்திரமா வீட்டுக்குப் போங்க” என்று சொல்லிவிட்டு பைக்கைக் கிளப்பிக் கொண்டு செல்ல, அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

காதல் பூக்கும்...
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
134
484
63
அத்தியாயம் - 12


வீட்டிற்கு வந்த ஸ்ரீராம், காலை நீட்டி சோஃபாவில் சாய்ந்து கீழே அமர்ந்திருக்க, எதிரிலிருந்த சோஃபாவில் பரிமளமும், சுகுணாவும் அமர்ந்திருந்தனர்.

“அப்பா எங்கேம்மா?” எனக் கேட்டான் ஸ்ரீராம்.

“அப்பாவோட வேலை செய்தவங்க யாரோ ரெண்டு மூணு பேர் வந்தாங்க. அவங்களோட கிளம்பிப் போயிருக்கார்” என்றார் சுகுணா.

“அப்போ நைட் பத்து மணிக்குத் தான் அப்பா வருவாங்க. சரி சஹி எங்கே?”

“மாப்பிள்ளையோட போன்ல பேசிட்டுருக்கா…”

“வர்ஷா படுத்துட்டிருக்கா… இந்தப் பிரபா எங்கே?” என்றவன், “டேய் பிரபா! என்னடா பண்ற?” குரல் கொடுத்துக் கொண்டே, அங்கிருந்தே பிரபாகரின் அறையை எட்டிப் பார்த்தான்.

“வர்ஷிக்கு கால் வலிக்குதாம்…”

“ஆஹ்… அதுக்கு…”

“தைலம் தேச்சி விட்டுட்டு இருக்கேன் மச்சான்!” என்ற கணவனைப் பார்த்துத் தலையிலேயே அடித்துக் கொண்டாள் வர்ஷா.

பரிமளமும், சுகுணாவும் இது எதுவும் காதில் விழாதது போல கீரையை ஆய்ந்து கொண்டிருக்க, ஸ்ரீராம் அவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்ந்தான். கவனிக்காதது போலயிருந்தாலும், மகனின் முகத்தைக் கண்ட சுகுணாவினால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

“அவனே முறைச்சிட்டு இருக்கான். நீ வேற சிரிக்கிற… இப்போ ஆரம்பிக்கப் போறான் பாரு உன் புள்ள…” என்று தம்பி மனைவியிடம் முணுமுணுத்தார் பரிமளம்.

“எக்ஸ்க்யூஸ்மீ ஹிட்லர்! அங்கே என்ன எங்க அம்மாவோட காதைக் கடிக்கிறீங்க. கொஞ்சம் என்னைப் பாருங்க” என்றான்.

நிமிர்ந்தவர், “என்னடா!” என்றார்.

“முதல்ல வால்யூமை குறைங்க. இவ்ளோ ஓரவஞ்சனை பண்றது, ஏதாவது கேட்டா குரலை உயர்த்த வேண்டியது” என்றான்.

“இப்போ என்ன? உனக்குக் கல்யாணம் பண்றதைப் பத்திப் பேசல அதானே…”

“என்ன அதானே… எனக்கும், உங்க பையனுக்கும் ஒரே வயசுதான். அவனுக்கு மட்டும் காலாகாலத்துல கல்யாணத்தைப் பண்ணிவச்சிட்டு. என்னை டீல்ல விட்டாச்சு” என்றான்.

அவன் வேண்டுமென்றே பேசுகிறான் என்று தெரிந்திருந்ததால், பரிமளமும் அவனுக்கு எதிராகவே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

மாடியிலிருந்து இறங்கிவந்த சஹானா, “என்னண்ணா! இன்னைக்குப் பொழுதை இப்படியே ஓட்டப் போறீங்களா?” என்று சிரித்தாள்.

“எல்லோருக்கும் என்னைப் பார்த்தா ஜோக்கர் மாதிரி இருக்கு போல…” என்றான்.

“என்னண்ணா இப்படிச் சொல்றீங்க? உங்களை மாதிரி ஒரு அண்ணன் யாருக்குக் கிடைக்கும். என் நாத்தனார் தேவி எப்பவும் ஸ்ரீ அத்தான் மாதிரி ஒரு அண்ணன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்னு சொல்லிட்டே இருப்பா தெரியுமா…” என்றபடி அவனருகில் வந்து அமர்ந்தாள்.

“ஹேய் நான் சும்மா சொன்னேன்டா! உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? பிரபுகிட்ட பேசிட்டியா…?” எனக் கேட்டான்.

“ம், பேசிட்டேன்” என்று புன்னகைத்தாள்.

“பார்த்தியா வீட்டுகாரர்கிட்ட பேசினதும், முகமெல்லாம் பூரிச்சிப் போயிடுது…” என்று தங்கையைக் கிண்டல் செய்தான்.

“ம்ம், அண்ணி வரட்டும் அப்புறம் தெரியும் விஷயம்” என்றாள்.

“ஹும்! உங்க அண்ணி எங்கே இருக்காளோ?” என்று பெருமூச்சு விட்டான்.

சிரித்தவள், “அம்மா! நான் அவர்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன். அவரும் சம்மதம்னு சொல்லிட்டார்” என்றாள்.

“என்ன விஷயம்? எனி சீக்ரெட்” என்றான்.

“அது ஒண்ணுமில்லன்னா… இப்போ நீ புலம்பிட்டு இருந்தியே அந்த விஷயம்” என்று அறைக்குள்ளிருந்தபடியே குரல் கொடுத்தாள் வர்ஷா.

அவன் புரியாமல் பார்க்க, “உங்க கல்யாண விஷயம்தாண்ணா!” என்றாள் சஹானா.

“கல்யாணமா!” வியப்புடன் கேட்டான் ஸ்ரீ.

“அதுக்குத் தானே இவ்ளோ நேரமா மூச்சைப் பிடிச்சிகிட்டு பக்கம் பக்கமா பேசின” என்ற அத்தையைப் பார்த்துச் சிரித்தான்.

சுகுணா அனைத்து விஷயத்தையும் சொல்ல, அமைதியாகக் கேட்டுக் கொண்டான். இவ்வளவு நேரம் வம்பளந்த போது இருந்த மனநிலை, இப்போது சுத்தமாக இல்லை. கண்முன்னால் திவ்யாவின் முகம் மின்னி மறைந்தது.

“பொண்ணு யாரு தெரியுமா?” எனக் கேட்டார் பரிமளம்.

அவன் மௌனமாக இருக்க, “அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்களே வைதேகி… அவங்களோட பொண்ணு” என்றார்.

எந்த பாவனையையும் வெளிப்படுத்தாமல் அவன் அமர்ந்திருக்க, அனைவரும் புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“எங்க எல்லோருக்கும் சம்மதம்டா. நீதான் முடிவைச் சொல்லணும்” என்றார் சுகுணா.

யோசனையுடன் காலில் தட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவன், “அந்தப் பொண்ணு வீட்ல பேசியாச்சா?” எனக் கேட்டான்.

“உன்னைக் கேட்காம எப்படிப் பேசறது?” என்றார் பரிமளம்.

“எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க” என்றவன் எழுந்து செல்ல, அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

***************

வரவேற்பறையில் அமர்ந்திருந்த திவ்யாவிற்கு வியர்த்து வழிந்தது. தைரியமாக ஸ்ரீராமைச் சந்திக்கக் கிளம்பி வந்தாயிற்று. ஆனாலும், இப்போது பதட்டத்தில் கைகாலெல்லாம் உதறியது.

‘இருந்தாலும் தனக்கு இத்தனைக் கோபம் வரக்கூடாது’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

“மேடம்! சார் உங்களை வரச்சொல்றார்” பியூன் தகவல் சொல்ல, ஒருமுறை முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு, அறைக் கதவைத் தட்டினாள்.

“ஹலோ டாக்டர்!” என்றபடி எழுந்த ஸ்ரீராம், திவ்யாவைக் கண்டதும் வியப்பு மேலிட பார்த்தான்.

ஹாஸ்பிட்டல் கார்டைக் கொடுத்து ஜுனியர் டாக்டர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்று பியூன் சொன்னதும், அவன் கல்பனாவைத் தான் எதிர்பார்த்தான். நிச்சயமாக திவ்யா வருவாளென்று, அவன் கனவிலும் நினைக்கவில்லை.

“ஹ…லோ சார்!” என்றவளுக்கு, கால்கள் பின்னியதைப் போல நாவும் குழறியது.

சில நொடிகள் அங்கே அமைதி நிலவ, ஸ்ரீராமே அதைக் கலைத்து, “உட்காருங்க” என்று இருக்கையைக் காட்டினான்.

அமர்ந்தபடி, “தேங்க்யூ!” என்றாள்.

பஸ்சரை அழுத்தியவன், “நான் கல்பனா மேடம்கிட்ட டீடெயிலா பேசிட்டேனே. அப்புறம்…” என்று இழுத்தான்.

“நா..ன்.. அந்த விஷயமா வரல” என்று தொண்டையைச் சொருமிக் கொண்டவள், “உங்ககிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்” என்றாள்.

அவளையே பார்த்தவன், “சாரி மேடம்! ஆஃபிஸ் டைம்ல நான் பர்சனல் விஷயங்கள் பேசறது இல்ல” என்றான்.

“இன்னும் அஞ்சு நிமிஷத்தில் மணி பதினொன்று ஆகிடும். அப்போ உங்களுக்கு டீ டைம் தானே… அதைக் கணக்குப் பண்ணித்தான் வந்தேன்” என்றாள்.

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “அப்போ நீங்க கணக்குப் பண்றதுல கில்லாடின்னு சொல்லுங்க…” என்றான்.

“என்னது?” என்றாள்.

“ஐ மீன், டைம் கால்குலேட் பண்ணி வந்தேன்னு சொன்னீங்களே, அதைச் சொன்னேன்” என்றான்.

‘சரியான அராத்து’ என்று மனத்திற்குள் சிரித்துக் கொண்டாள்.

“சரி சொல்லுங்க. அப்படி என்ன பர்சனலான விஷயம் பேசணும்?” என்று கேட்டான்.

இமைகளைப் படபடவென கொட்டியவள், “சாரி கேட்கணும்” என்றாள் மென்குரலில்.

“என்ன சாரி கேட்கணுமா? நான் எதுக்குங்க, உங்ககிட்ட சாரி கேட்கணும்?” என்று வேண்டுமென்றே குரலை உயர்த்தினான்.

“ஹய்யோ! நீங்க இல்லங்க. நான், உங்ககிட்ட சாரி கேட்க வந்தேன். அன்னைக்குத் தெரியாம உங்களை வாய்க்கு வந்தபடி பேசிட்டேன்.”

“என்ன திடீர்னு என்மேல உங்களுக்குக் கருணை பிறந்திருக்கு?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான்.

“அப்படியெல்லாம் இல்ல. நான் தப்பு பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சா, சாரி கேட்டுடுவேன். உங்க மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சிது… அதான் சாரி கேட்க வந்திருக்கேன். உங்களை ரெண்டு முறை பார்த்தும் கேட்க முடியாத சூழ்நிலை” என்று இழுத்தாள்.

“ம். அன்னைக்கு அத்தனைத் தடவை சொன்னேன். நீங்க நம்பல. இப்போ திடீர்ன்னு என் மேல தப்பிருக்காதுன்னு எப்படி ஃபீல் பண்ணீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“உங்க சிஸ்டர்ஸ் மேலயும், உங்க ஃபேமலி மேலயும் நீங்க வச்சிருக்க அன்பும், அக்கறையும் தான் காரணம்” என்றாள்.

“அது வெறும் நடிப்பாயிருந்தா?”

“பாசத்துக்கும், நடிப்புக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. உண்மையான அன்பு எல்லாத்தையும் விட்டுக் கொடுக்கும். உங்க அன்பு அப்படிப்பட்டது. அதை என் கண்ணால பார்த்தேன்.”

சொல்லும் போதே அவளது முகம் திடீரென இறுகிவிட, ஸ்ரீராம் என்னவென்று புரியாமல் குழம்பிப் போனான். அதற்குள் இருவருக்குமாக பியூன் காஃபி கொண்டுவந்து வைத்துவிட்டு வெளியேறும் வரை, பேச்சு தடைபட்டது.

“டாக்டர்! சீரியஸ் ஆகிடாதீங்க. நான் ஒரு தமாஷுக்காகக் கேட்டேன்.”

“இட்ஸ் ஓகே சார்! ஏதோ பழைய நினைப்பு” என்றவள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் கவரை அவனிடம் நீட்டினாள்.

“என்ன இது?”

“நேத்து மார்க்கெட்டில் எனக்காக கொடுத்தீங்களே டவல்… அழுக்கா இருந்ததேன்னு நேத்து கொடுக்கல. வாஷ் பண்ணி கொண்டு வந்திருக்கேன்” என்றாள்.

இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டே, “சாரிங்க, ஒருத்தருக்குக் கொடுத்த பொருளை, நான் திரும்ப வாங்கிக்கறது இல்ல” என்றான் முறுவலுடன்.

அவளும் விடாப்பிடியாக, “அதேபோல, நானும் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படுறவ இல்ல” என்றாள்.

“பரவாயில்லை மேடம்! அந்த டவல்ல உங்க பேர் எழுதியிருக்குப் போல. நேத்து தான் வாங்கினேன். உடனே, உங்களுக்கு யூஸ் ஆச்சு. நான் உங்களுக்குக் கொடுத்ததா இருக்கட்டும். இதைப் பார்க்கும் போதெல்லாம் என் ஞாபகம் வரும் இல்ல” என்றான்.

சட்டென விழிகளை உயர்த்திப் பார்த்த திவ்யாவிற்கு அவனது குறுஞ்சிரிப்பு, சொல்லாமல் ஒரு உவப்பான செய்தியைச் சொன்னது.

சற்றுநேரம் மறைந்திருந்த படபடப்பு மீண்டும் தொற்றிக் கொள்ள, “இதைப் பார்க்கும் போதுதான் உங்க நினைவு வரும்னு நினைச்சா, நான் என்ன சொல்றது?” என்று முணுமுணுத்தாள்.

அவள் சொன்ன வார்த்தைகள், அவனுக்குத் தெளிவாகக் கேட்ட போதும், “என்ன மேடம் சொல்றீங்க?” என்று கேட்டான்.

அவன் வேண்டுமென்றே கேட்கிறான் என்று புரிந்து கொண்டவள், “ம், உங்க நினைவு எனக்கு எதுக்கு வரணும்னு கேட்டேன்” என்றாள்.

“அப்போ, என் நினைப்பு உங்களுக்கு வரவே வராதுன்னு சொல்றீங்க…”

சந்தோஷத்தில் ஆர்ப்பரித்த மனத்தை அடக்கியபடி, “ரொம்பத் தேங்க்ஸ்! உங்க காஃபிக்கும், டவலுக்கும். நான் கிளம்பறேன்” என்றபடி எழுந்தாள்.

“டாக்டர் மேடம்! என் கேள்விக்குப் பதிலே சொல்லாம கிளம்பிட்டீங்களே” என்றவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவனது கண்களைச் சந்திக்கும் தைரியம்மில்லாமல், “சில கேள்விகளுக்கு உடனே பதில் தெரிஞ்சிக்கறதைவிட, நிதானமா தெரிஞ்சிக்கறது தான் பெட்டர்” என்றாள்.

அவளருகில் வந்தவன், “அந்த நாள் என்னைக்குன்னாவது சொல்வீங்களா?” என்றான் முறுவலுடன்.

பின்னால் நகர்ந்தபடி, “அதை அடுத்தமுறை நாம காஃபி சாப்பிடும் போது சொல்றேன்” என்றவள் சிரிப்புடன் அங்கிருந்து வெளியேறினாள்.

தனது காதல் இத்தனைச் சீக்கிரம் கைகூடும் என்று எதிர்பார்க்காதவனுக்கு, அவளது பதில் தீஞ்சுவையாய் தித்தித்தது.

முன்தினம் அவளை மருத்துவமனையில் அழுத விழிகளுடன் சந்தித்த போதே, அவனுக்குச் சங்கடமாக இருந்தது. டீனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரே எதேச்சையாக அவளைப் பற்றிப் பேசினார்.

மூன்று வயது குழந்தைக்கு இதய அடைப்பு. அந்த அறுவை சிகிச்சையில் குழந்தையின் நிலை மேலும் கவலைக்கிடமாகிப் போக, அதை அவளால் தாங்க முடியவில்லை. அதுக்குத்தான் தைரியம் சொல்லி அனுப்பினேன். வெரி பிரில்லியண்ட் கேர்ள். பட் சென்டிமெண்ட் அதிகம்.”

டீன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டபோதே அவள் மீது ஒரு மரியாதைத் தோன்றத் தான் செய்தது. அன்று, தானும் அவளிடம் அப்படி பேசியிருக்க வேண்டாம் என்று நினைத்த போதே, அவளைச் சந்தித்துப் பேச வேண்டுமென்று நினைத்திருந்தான்.

மீண்டும் அன்று மாலையே, எதிர்பாராத சந்திப்பில் அவளிடம் பேச இயலவில்லை. ஆனால், இப்படி திடுதிப்பென அலுவலகத்திற்கு வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

அடுத்தமுறை அவளைச் சந்திக்கும் போது, தனது மனத்தை திறந்துவிட வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டவன், மந்தகாசப் புன்னகை புரிந்தான்.

************

கையிலிருந்த புத்தகத்தையும், பொழிந்து கொண்டிருந்த மழையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவிற்கு கவலையாக இருந்தது.

“இந்த மழையில வெளியே போகலைன்னு இந்த அம்மாவை யார் திட்டினாங்க? மழை கொட்ட ஆரம்பிச்சாச்சு… இது எப்போ விடுறது? எத்தனை முறை படுத்து எழுந்தாலும் இந்த அம்மா அடங்கப் போறதில்ல” வாய்விட்டுப் புலம்பியவள், அன்னையின் மொபைலுக்கு முயன்றாள்.

அது சமையலறையிலிருந்து குரலெழுப்ப, எரிச்சலுடன் இணைப்பைத் துண்டித்தாள்.

“ஒரு அவசரத்துக்கு எடுத்துட்டுப் போகத் தானே மொபைல் வாங்கிக் கொடுத்தது. இப்படி வீட்டில் வச்சிட்டுப் போனா என்ன அர்த்தம்? இன்னைக்கு அம்மா வரட்டும்!” கோபத்துடன் புத்தகத்தை மூடிவைத்தவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.

அரைமணி நேரமாக கொட்டிக் கொண்டிருந்த மழையும் விட்டபாடில்லை. வீட்டிற்குள்ளே இருக்கப் பிடிக்காமல் வெளியே வந்தவள், இரண்டு வீடுகள் தள்ளி மழைக்கு ஒதுங்கி நின்றிருந்த ஸ்ரீராமைக் கண்டுவிட்டாள்.

“ராம்!” என்று அவனது பெயரை உச்சரித்தவள், உள்ளே சென்று குடையுடன் வந்தாள்.

“ஹலோ சார்!” என்ற அழைப்பைக் கேட்ட ஸ்ரீராம், சட்டெனத் திரும்பிப் பார்த்தான்.

“என்னங்க நீங்க எங்கே இந்தப் பக்கம்?” என்றான்.

“அதை நான் கேட்கணும். இதுதான் எங்க வீடு. மழை இப்போதைக்கு விடாதுன்னு நினைக்கிறேன். வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் இருங்க. சூடா காஃபி சாப்பிடலாம். மழைக்கு இதமா இருக்கும்” என்றாள்.

எப்படியும் மறுப்பான் என அவள் நினைத்துக் கொண்டிருக்க, அடிக்கும் பேய் மழையிலிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்தவன், “நீங்க கூப்பிட்டு வராமல் இருப்பேனா?” என்றான்.

“நான் என்ன உங்களைக் காட்டுக்கா கூப்பிட்டேன்? நீங்க வராமலிருக்க. எங்க வீட்டுக்குத் தானே கூப்பிட்டேன்” சொல்லிக் கொண்டே அவனுக்கும் சேர்த்துக் குடை பிடித்தாள்.

மழைக் கோட்டை கழற்றி வராண்டாவிலிருந்த ஆணியில் மாட்டியவன், கால்களைக் கழுவிக் கொண்டு உள்ளே வந்தான். அதற்குள் உள்ளேயிருந்து டவல் ஒன்றைக் கொண்டு வந்தாள் அவள்.

மறுக்காமல் வாங்கி தலையைத் துவட்டிக் கொண்டான். ஜில்லிட்டிருந்த கரங்களை பரபரவென தேய்த்துக் கொண்டான்.

“நீங்க உட்காருங்க…” என இருக்கையைக் காட்டிவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்தாள்.

“என்னங்க வீட்ல யாரையுமே காணோம்?” என்றான்.

“இருக்கறது நானும், எங்க அம்மாவும். அம்மா வெளியே போயிருக்காங்க” என்றாள்.

“அச்சச்சோ! வீட்ல யாரும் இல்லையா? அப்போ நான் கிளம்பறேங்க” என்று எழுந்தான்.

அடுப்பில் டிக்காஷன் கொதித்துக் கொண்டிருக்க, சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தவள், “சார்! கவலைப்படாதீங்க… உங்க மேல எனக்கு நல்ல அபிப்ராயம் தான் இருக்கு” என்றாள்.

“நீங்க வேறங்க… வீட்ல பெரியவங்க யாரும் இல்ல. உங்ககிட்ட தனியா மாட்டிகிட்டேனேன்னு நானே டென்ஷன்ல இருக்கேன். நீங்க ஜோக் அடிக்கிறீங்க” என்றான் தீவிர பாவத்துடன்.

சமையலறை வாசலில் நின்று முறைத்தவள், “சார்! திஸ் இஸ் டூ மச்” என்றாள்.

“ஏங்க இப்படி மிரட்டறீங்க. இதுக்குத்தான் சொன்னேன்…” என்று அவன் சொல்ல, அதற்குமேல் அவளால் முறைக்க முடியாமல் கலகலவென நகைத்தாள்.

“நீங்க எப்பவுமே இப்படித் தானா?”

“பின்னே, வேளைக்கு ஒரு முகத்தையும், குணத்தையுமா வச்சிக்க முடியும். நான் இப்படித் தான். கொஞ்சம் கலாய்ப்பேன். நீங்க தப்பா நினைச்சிக்கக்கூடாது” என்றான்.

சிரித்தவள், “சாரி ராம்!” என்றாள்.

அவளது பெயர் சுருக்கத்தை இரசித்தவன், “எதுக்கு?” என்றான்.

“உங்களை நான் ரொம்பவே இன்சல்ட் பண்ணியிருக்கேன்” என்றாள் வருத்தத்துடன்.

“இட்ஸ் ஓகே திவ்யா! நீ என்னைப் பத்தித் தெரியாமல் தானே செய்த. தெரிந்து செய்யும் தப்புக்குத் தான் மன்னிப்பு கிடையாது” என்றான்.

இருவரது பார்வையும் காதலுடன் உரசிக் கொள்ள, அதை விலக்கிக் கொள்ள முடியாமல் தவித்தனர்.

அதேநேரம் திவ்யாவின் மொபைலில் வைத்திருந்த அலாரம் பாடியது.

விட்டுவிட்டு மின்னல் வெட்டும்; சப்தமின்றி இடிஇடிக்கும்,
இருவர் மட்டும் நனையும் மழையடிக்கும்… இது கால மழையல்ல, காதல் மழை!


ஸ்ரீராமின் கரங்கள் அவளது கரத்தைத் தன்னுடன் பிணைத்துக் கொள்ள, சுயநினைவிற்கு வந்த திவ்யா, வேகமாக அவனிடமிருந்து விலகினாள்.

ஒவ்வொன்றாய் திருடுகிறாய், திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்…
முதலில் என் கண்களை, இரண்டாவது இதயத்தை,

மூன்றாவது மொத்தத்தை…

அலாரம் நிற்காமல் பாடிக்கொண்டிருக்க, அவனது பார்வையின் வீச்சைத் தாள முடியாமல் தவித்துப் போனாள்.

அவளை நெருங்கிய ஸ்ரீராம், டேபிள் மீதிருந்த மொபைலை எடுத்து அலாரத்தை நிறுத்தி விட்டு, சோஃபாவில் வந்தமர்ந்தான்.

அங்கே நிற்க முடியாமல் சமையலறைக்குச் சென்றவள், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு டீயுடன் வந்தாள். டீயைக் குடித்து முடிக்கும் வரை இருவருமே பேசிக் கொள்ளவில்லை.

“ராம்! வாழ்க்கைல ஒரு முக்கியமான முடிவெடுக்க வேண்டிய கட்டத்துல நாம இருக்கோம். அவசரப்பட்டு எதுவும் பேசிட வேணாம். நான் சொல்றதைக் கேட்டுட்டு, நிதானமா யோசிச்சி சொல்லுங்க” என்றாள்.

“தியா! நம்ம ரெண்டு பேர் மனசுல என்ன இருக்குன்னு சொல்லாமலேயே புரிஞ்சிகிட்டோம். இதுக்குமேல என்ன வேணும்னு நான் கேட்கப் போறதில்ல. உன் மனசுல இருக்கற விஷயத்தை தயக்கமில்லாமல் என்னிடம் சொல்லலாம். நிச்சயமா அது நமக்குப் பாதகமா இருக்காதுன்னு நான் நம்பறேன். உனக்கு எல்லாமே உன் அம்மாதான். கல்யாணத்துக்குப் பின்னால அவங்க நம்ம கூட இருக்கணும்னு கேட்கப் போற அதானே” என்றான்.

“ம், ஆமாம். அதோட, இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. நிச்சயம் அதை நீங்க தெரிஞ்சிக்கணும். எங்க அப்பா இன்னும் உயிரோட தான் இருக்கார். சென்னையில் என் பாட்டியோட…” என்றாள்.

அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான். அதேநேரம் வாசலில் அசைவு தெரிய, திரும்பிப் பார்த்தாள் திவ்யா.

ஹாலில் யாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணியபடி வந்த வைதேகி, அங்கே ஸ்ரீராமைக் கண்டதும் ஒரு நொடி திகைத்துப் போனார். அவர்கள் இருவரும் கையைப் பற்றியபடி அமர்ந்திருந்ததிலிருந்தே விஷயத்தை முழுவதுமாக யூகித்துவிட்டவருக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.

வேகமாக எழுந்தவள், “ராம்! எங்க அம்மா” என்றாள்.

அவனுக்குமே அது திகைப்பான நிமிடமாக இருந்தது.

“எப்படியிருக்கீங்க தம்பி?” என்று பூரிப்புடன் விசாரித்தார் வைதேகி.

“நல்லாயிருக்கேன்… நீங்க எப்படியிருக்கீங்க?” என்றான்.

இருவரும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்று அறிந்து கொண்டவளுக்கு, வியப்பாக இருந்தது.

“அம்மா! உனக்கு இவரையும் தெரியுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“நான்தான் அவங்க வீட்டுக்குப் போயிருக்கேனே. அப்போ பார்த்திருக்கேன். அன்னைக்கு ஹாஸ்பிட்டலுக்கு வந்தேனே… அப்போகூட தம்பி என்கிட்ட பேசிட்டுத் தான் போனார்” என்றார்.

பெண்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஸ்ரீராம் மௌனமாகச் சிரித்துக் கொண்டான்.

வீட்டில் சொன்ன பெண்ணும், திவ்யாவும் ஒருத்தியே என்று அறிந்து கொண்டவனுக்கு மனம் சற்று இலகுவாக ஆனது. அதிலும், ஒற்றை மனுஷியாக நேர்மையாக நின்று, தான் பெறாத மகளை வளர்த்த வைதேகியை, அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. வைதேகியின் மீது பெரும் மரியாதை தோன்றியது.

இங்கே இவன் தனது நினைவுகளில் நீந்திக் கொண்டிருக்க, அதற்குள் தாயும், மகளும் பேசி முடித்திருந்தனர்.

“உட்காருங்க தம்பி!” என்றார் வைதேகி.

“இல்லங்கத்தை! மழை கொஞ்சம் விட்டிருக்கு கிளம்பறேன். இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்” என்றவன், “வரேன் தியா!” எனச் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

“அம்மா! அவரை, அனுப்பிட்டு வரேன்” என்று அவன் பின்னாலேயே வந்தாள்.

ரெயின் கோட்டை மாட்டிக் கொண்டிருந்தவனிடம், “என்ன திடுதிப்புன்னு அத்தைன்னு கூப்பிட்டுட்டீங்க. இப்போ, நான் என்ன சொல்லிச் சமாளிக்கிறது?” என்றாள்.

சிரித்தவன், “அதுக்கு அவசியம் இருக்காது” என்றான்.

“என்ன சொல்றீங்க? எனக்குப் புரியல” என்றாள்.

“உன் அம்மாகிட்டயே கேளு. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றவன் உற்சாகத்துடன் கிளம்பினான்.

புரியாமல் விழித்தவள், “அம்மா!” என்றபடி உள்ளே சென்றாள்.

காதல் பூக்கும்...
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
134
484
63
747


அத்தியாயம் - 13


கோவில் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வெளியில் வந்த ஸ்ரீராமும், திவ்யாவும் குளக்கரை படித்துறையில் வந்து அமர்ந்தனர். மலைகள் சூழ்ந்த அந்த இடமும், அந்தி நேரத்தில் சிலுசிலுவென வீசிய தென்றல் காற்றையும் கைகளைக் கட்டியபடி இரசித்துக் கொண்டிருந்தாள் திவ்யா.

புல்லினங்களின் கொஞ்சல் மொழியுடன், அருவியின் இறைச்சலின் பின்னணியிலும் தனது மனம் கவர்ந்தவனின் அருகாமையும் சேர்ந்து மனத்திலிருந்த உற்சாகம் புன்னகையாக அவளது இதழ்களை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

“கடவுளோட படைப்புல எல்லாமே அழகுன்னு சொல்வாங்க. இந்த நேரத்துல அதை ஆமாம்னு என் மனசு ஒத்துக்குது ராம்!” என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“சிரிச்சா என்ன அர்த்தம்?” என்றாள் சிணுங்கலுடன்.

“நீ சொல்றது உண்மைன்னு அர்த்தம்” என்றான்.

“ம்ஹும்!” என்று தலையைச் சாய்த்து இமைகள் விரிய சொன்னாள்.

அவளைப் போலவே, “ம்ம்…” என்றான்.

“ராம்…” என்று கெஞ்சலும், கொஞ்சலுமாக அழைத்தவளைப் பார்த்துச் சிரித்தான்.

அன்புடன் அவனைப் பார்த்தவள், “எங்கேயோ இருந்த என்னை இங்கே வரவச்சி, நம்மள சந்திக்கவச்சி, இப்போ ஒண்ணா சேர்த்தும் வச்ச இந்தக் கடவுளோட செயலை என்னன்னு சொல்றது?” என்றாள் பூரிப்புடன்.

“உனக்கும், எனக்கும் கொடுத்துவச்சது அவ்வளவுதான்” என்று தீவிர பாவனையுடன் சொன்னான்.

சட்டென நிமிர்ந்தவள், “நான் எவ்ளோ சீரியஸா சொல்லிட்டு இருக்கேன். நீங்க கிண்டல் பண்ணிட்டிருக்கீங்க” என்றாள்.

“இப்போ என்ன? நீ சொன்னதை ஆமாம்ன்னு ஒத்துக்கணும். அதானே…” என்றவன், “நீ சொன்னது உண்மைதான் தியா!” என்று இரசித்துச் சொன்னவனை முறைத்தாள்.

“நான்தான் ஆமாம் சாமி போட்டுட்டேனே, இன்னும் எதுக்கு முறைக்கற?” என்று கேட்டான்.

அவளுக்கு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

“எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுது. இன்னும் காலத்துக்கும் உங்களை எப்படிச் சமாளிக்கப் போறேனோ தெரியலையே…”

“ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டம்தான். போகப் போகச் சமாளிச்சிடுவ” என்றான்.

கடுப்புடன், “எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு…” என்றவளைப் பார்த்துக் கடகடவெனச் சிரித்தான்.

கோபத்தில் அவளுக்கு மேல்மூச்சு வாங்கியது.

“ஹேய்… ப்ளீஸ்! ப்ளீஸ்! உன்னைத் திரும்பக் கோபமா பார்க்கணும்னு நினைச்சித்தான் விளையாட்டுக்குச் சொன்னேன்” என்றான்.

“கோபமா பார்க்கணும் அவ்வளவு தானே. பத்து நாளைக்கு என்கிட்டப் பேசாதீங்க” என்றபடி வேகமாக எழுந்தாள்.

“எல்லாத்துக்கும் முறுக்கிகிட்டு. உட்காரு!” என்று அவளது கரத்தைப் பிடித்து இழுத்து அமர வைத்தான்.

அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்க, அவன் அவளது நடவடிக்கைகளை இரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

“லவ் பண்ணா நல்லாத்தான் இருக்கு. என்னவோ இந்த உலகமே நம்ம கைல இருக்கா மாதிரி எப்பவும் மனசு பரபரன்னு ஒரு மார்க்கமாவே இருக்கு” என்றான்.

சிரிப்பை மறைத்துக் கொண்டு, “இருக்கும் இருக்கும்” என்றாள்.

“ஏன்? உனக்கு இல்லையா?” என்று கேட்க, அவள் அமைதியாக இருந்தாள்.

“ம், மௌனம் சம்மதம்” என்றவன், “ஆனா, எனக்கு இன்னமுமே டௌட் தான்…” என்றவனை, என்ன என்பதைப் போலப் பார்த்தாள்.

“இல்ல… உனக்கு, என்னைப் பிடிச்சிருக்குன்னா… என் பர்சனாலிட்டி அப்படி. ஆனா, உன்னை, எனக்கு எப்படிப் பிடிச்சிதுன்னு அன்னைலயிருந்து என் மண்டையைக் குடைஞ்சிட்டிருக்கேன். விளங்கவே மாட்டேன்னுது. உனக்காவது தெரியுமா” எனத் தீவிரமான பாவனையுடன் கேட்டவனைக் கிண்டலாகப் பார்த்தாள்.

“ம், ஓவர் கான்ஃபிடென்ஸ் உடம்புக்கு ஆகாது” என்றாள்.

“அதைத் தானே நானும் சொல்றேன். உனக்கு ஓவர் கான்ஃபிடென்ஸ் வந்துடக்கூடாதுன்னு தானே எனக்குக் கவலை” என்றவனைத் திகைப்புடன் பார்த்தாள்.

“நீங்க, சிரிக்கச் சிரிக்கப் பேசுவீங்கன்னு மட்டும்தான் நினைச்சேன். இப்படி என் காதுல இரத்தம் வரவைப்பீங்கன்னு நினைக்கவே இல்ல. ப்ளீஸ் ராம்! என்னால தாங்க முடியல. உங்களைப் பார்க்கணும் மனசுவிட்டுப் பேசணும்னு ஆசையோட வந்தேன். இப்போ, ஏன்டா வந்தோம்னு நினைக்க வச்சிடாதீங்க” என்று பரிதாபமாகச் சொன்னவளைச் சிரிப்புடன் பார்த்தான்.

“ச்சே இப்படிச் சென்டிமென்டா என்னைத் தாக்கிட்ட… என்னைப் பார்க்க ஆசையா வந்தேன்னு சொன்ன இல்ல, அதுக்காக கொஞ்சமே கொஞ்சம் சீரியஸா பேசுவோம். ஓகே சொல்லு என்ன பேசணும்?”

“என்ன பேசணுமா? நாம லவ் பண்றோம். நம்ம வாழ்க்கையைப் பத்திப் பேசலாம். நம்ம விருப்பு, வெறுப்புப் பத்திப் பேசலாம். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கலாம்… முக்கியமா, நீங்க என்னைப் பத்தித் தெரிஞ்சிக்கணும் இல்லயா?” என்றாள்.

“சுத்தம். காலம்பூரா நாம சேர்ந்து இருக்கப் போறோம். அப்போ எவ்வளவோ நேரம் இருக்கு. லவ் பண்ண ஆரம்பிச்ச ரெண்டாவது நாளே இப்படி ஒரு இடியை இறக்காதீங்க டாக்டரம்மா!” என்றவன், “உன்னைப் பத்தி நான் தெரிஞ்சிக்கணும்னு சொல்றியே, என்னைப் பத்தி நீ என்ன புரிஞ்சிட்டு இருக்க?” எனக் கேட்டான்.

“ரொம்ப இல்ல. ஆனா, ஓரளவுக்குத் தெரியும்” என்றாள்.

“எங்கே… ஒன்று இரண்டு மூன்று என்று எம்மை வரிசைப்படுத்திப் பாடு” என்றவனது தோளிலேயே தட்டினாள்.

“சரியான அரட்டை நீங்க…” என்று சிரித்தவள், “உங்களுக்கு உங்க குடும்பம்னா, ரொம்பப் பிடிக்கும். உங்க அத்தையை ஹிட்லர்னு கூப்பிட்டாலும், அவங்க மேல உயிரையே வச்சிருக்கீங்க. நீங்க அத்தையை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து விட்டுட்டு, திரும்பக் கூட்டிட்டுப் போனதுல தெரிஞ்சிகிட்டேன்.

அடுத்து, உங்க சிஸ்டர்ஸ் ரெண்டு பேர் மேலேயும் பிரியம் அதிகம். அன்னைக்கு ஹாஸ்பிட்டல உங்க சிஸ்டர்ஸ் கூடப் பேசிட்டு இருந்ததைப் பார்த்தேன். உங்களுக்குப் புளூ கலர்னா ரொம்பப் பிடிக்கும். நாம முதன்முதல்ல மீட் பண்ணதுலயிருந்து இதுவரைக்கும் அதிகமா புளூ கலர் ஷர்ட்ல தான் பார்த்திருக்கேன்.

சேஃப்ட்டி கான்ஷியஸ் அதிகம். எவ்ளோ அவசரமா இருந்தாலும், ஹெல்மெட் போட மறக்கமாட்டீங்க. சிரிக்கச் சிரிக்கப் பேசினாலும், நீங்க கொஞ்சம் சீரியஸான ஆளு. எல்லோரையும் கலகலன்னு வச்சிக்கிட்டாலும், கோபம் வந்தா உங்க எதிர்ல நிற்க முடியாது” என்றவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

“ஹேய்! கலக்கற போ. மத்ததெல்லாம் ஓகே… கடைசியா சொன்ன ரெண்டு பாயிண்ட்டை எப்படிக் கண்டுபிடிச்ச?”

“உங்க ஆஃபீஸுக்கு ரெண்டு முறை வந்திருக்கேன் இல்ல…” என்றவளுடன் சேர்ந்துச் சிரித்தான்.

“உண்மைலயே இந்த லேடீஸ் கண்ணாலயே எங்களைக் கணிச்சிடுறீங்க. வர்ஷா கொஞ்சம் சைலண்ட் டைப். சஹியும், ஏறக்குறைய உன்னை மாதிரிதான்” என்றவன், “நீ சொன்னது போல, உன்னைப் பத்தி என்னால லிஸ்ட் போட முடியாதும்மா. உனக்கு, உங்க அம்மாவைப் பிடிக்கும். அப்பாவையும், பாட்டியையும் பிடிக்காதுன்னு மட்டும்தான் தெரியும்” என்றான்.

அதுவரை சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தவள், அப்பா, பாட்டி என்றது முகம் சிறுத்துப் போனாள்.

“ஹேய்! மூட் அவுட்டா…” என்றவன் அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டான்.

“இங்கே பாரு தியா! நீ மெச்சூர்ட்னு நினைச்சிட்டு இருக்கேன். இப்படி அவங்களைப் பத்திப் பேசினா மூட் அவுட் ஆகற. எதுவாயிருந்தாலும், டைரக்டா ஃபேஸ் பண்ணு. உனக்கு எப்பவுமே நான் ஆதரவா இருப்பேன். புரிஞ்சிதா” என்றான்.

“ம், என்றவள் அவனது தோளில் சாய்ந்துகொண்டாள்.

“ராம்! சில விஷயங்களை மறக்கணும்னு நினைப்போம். ஆனா, அதை மறக்கவே முடியாது. இது குப்பை தூக்கி எறியணும்னு நினைக்கறேன். ஆனா, அதுவும் முடியல. ஏன்னா, அந்த ஆள் என்னோட அப்பாவா போயிட்டாரே” என்றவளது இமைகள் ஈரத்தில் மின்னின.

“இதெல்லாம் சரி வராது. நீ முதல்ல நிமிர்ந்து உட்காரு” என்றவன், “முகத்தைக் கழுவிகிட்டு வா. நாம ஒரு முக்கியமான இடத்துக்குப் போறோம்” என்று அவளது கரத்தைப் பற்றி எழுப்பினான்.

வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தியவன், “தியா, இறங்கு!” என்றான்.

“முக்கியமான இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு, உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்று பதறினாள்.

“அப்போ, எங்க வீடு முக்கியமான இடம் இல்லயா?” என்றான் கிண்டலாக.

“என்னோட பதட்டம் புரியாம விளையாடாதீங்க ராம்!” என்றாள்.

“நான் சீரியஸாதான் இருக்கேன். சரி, நீ உள்ளே போ” என்றான்.

“என்னது? தனியாவா?” என்று வாயைப் பிளந்தாள்.

“ம், நீ போ! ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சி நான் வரேன்” என்றான்.

“இல்ல இல்ல… இந்த விளையாட்டுக்கு நான் வரல” என்று நகர முயன்றவளது கையைப் பிடித்தான்.

“ஒண்ணும் பயமில்ல. எங்க வீட்ல எல்லோரும் பார்க்கவும், பேசற டோணும் தான் டெரரா இருக்கும். பட், ஹார்ம் லெஸ்” என்றான்.

“எனக்கென்ன அவங்களையெல்லாம் பார்த்தா பயமா?”

“அதானே, நீதான் வாயாலயே வடை சுடுவியே” என்றான்.

“என்னது?” என்று முறைத்தாள்.

“சரிம்மா… இதே தைரியத்தை மெயிண்டெயின் பண்ணிக்க. உள்ளே போ” என்று அவன் சமாதானம் செய்து கொண்டிருக்க, “டேய்! என்னடா நடக்குது இங்கே?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் பிரபாகர்.

“ஹய்யோ!” என்றபடி திவ்யா வேறு பக்கமாகத் திரும்பிக் கொள்ள, “ஆங்… இப்போ நீதான்டா இந்த தெருவுல நடந்துட்டு இருக்க” என்றான் ஸ்ரீராம்.

“ஒண்ணும் தெரியாதவன் மாதிரி இருந்துட்டு, மாட்டினியாடா மச்சான்” என்று சிரித்தான் பிரபா.

“எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு, லூசு மாதிரி நீ நினைச்சா நான் என்னடா பண்ணுவேன்” என்றவன் செய்வதறியாமல் நின்றிருந்த திவ்யாவைப் பார்த்தான். “தியா! நீ டென்ஷன் ஆகிடாதே. அவன் பேசறது தான் பெரிசா இருக்கும். மத்தபடி, எனக்காக என்ன வேணாலும் செய்வான்” என்றபடி தங்கையின் கணவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“என் நேரம்டா!” என்றான் அவன்.

“அதுக்கென்ன சூப்பரா இருக்கு உனக்கு நேரம். இப்போ, நீ என்ன பண்றன்னா உன் சிஸ்டரைக் கூட்டிட்டு வீட்டுக்குள்ள போ” என்றான் ஸ்ரீ.

“டேய்! இவங்க டாக்டர் தானே… சிஸ்டர்ங்கற” என்று கடித்தான் பிரபா.

“இந்த நூற்றாண்டுலயே பெரிய ஜோக்டா இது. பாரு, தியா கூடச் சிரிக்கிறா” என்றதும் அவளும் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

“மகனே! நீ தனியா மாட்டுவ இல்ல. அப்போ இருக்கு உனக்கு. சிஸ்டருக்காகத் தான் செய்றேன்” என்றான்.

“அவ டாக்டர்டா…” என்று இவன் இப்போது கலாய்க்க, முறைத்துக்கொண்டே திவ்யாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான் பிரபாகர்.

“அம்மா! யார் வந்திருக்காங்கன்னு பாருங்க” என்றபடி உள்ளே சென்றான்.

அறையிலிருந்து வெளியே வந்த சுகுணா, திவ்யாவைக் கண்டதும் சற்று திகைத்துப் போனார்.

“அண்ணி!” என்று குரல் கொடுத்துவிட்டு, “வாம்மா திவ்யா!” என்றபடி அவளருகில் சென்றார்.

”ஹலோ ஆன்ட்டி! எப்படியிருக்கீங்க?” என்றவளுக்குப் படபடவென வந்தது.

“அடடே! திவ்யாவா வாம்மா. என்ன இந்தப் பக்கம்? நீ வர்றன்னு சொல்லவே இல்லையே” என்றவருக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் விழித்தாள்.

அவளுக்குக் கைகொடுப்பதைப் போல, “அவங்க இந்தப் பக்கமா வந்துட்டு இருந்தாங்கம்மா! நான்தான் நம்ம வீடு இங்கேதான்னு கூட்டிட்டு வந்தேன்” என்றான் பிரபாகர்.

“அப்படியா! உட்காரும்மா நின்னுட்டே இருக்கியே” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விசிலடித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் ஸ்ரீராம்.

“ஸ்ரீராம்!” என்று அழைத்தார் பரிமளம்.

“என்ன அத்தை?” என்றபடி அவரருகில் வந்து நின்றான்.

“இவள் தான் திவ்யா! நம்ம வீட்டுக்கு வந்தாங்களே வைதேகி அவங்க பொண்ணு. பேரு திவ்யா! டாக்டரா இருக்கா” என்று அறிமுகப்படுத்தினார்.

“ஓஹ்! க்ளாட் டூ மீட் யூ டாக்டர். பாருங்க ஒரு வாரம் ஹாஸ்பிட்டலுக்கு நான் வந்தேன் உங்களை மீட் பண்ணவே முடியலை. எனிவே, வெல்கம் டூ அவர் ஹோம்” என்று அவளிடம் கையை நீட்டினான்.

‘புளுகுமூட்டை’ என்று மனத்திற்குள் நினைத்தபடி, அவனுடன் கைகுலுக்கினாள்.

“நான் டாக்டர்னு தான் சொன்னேன். எந்த ஹாஸ்பிட்டல்னு சொல்லலையே… அப்புறம் எப்படி வர்ஷா இருந்த ஹாஸ்பிட்டல்னு கண்டுபிடிச்ச?” என்று கூர்ந்து பார்த்தபடி கேட்டார் பரிமளம்.

‘ஐயையோ! பிரபா எஸ்கேப்’ என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்ட பிரபாகர் அங்கிருந்து நழுவ முயல, “நில்லுடா!” என்றார் பரிமளம்.

“அம்மா! உண்மையா எனக்கு எதுவுமே தெரியாது. எல்லாமே இந்த ஜகதலபிரதாபனோட வேலை. என்னை விட்டுடுங்க” என்றபடி அறையை நோக்கி ஓடினான்.

“என்னடா! வாயையே திறக்க மாட்டேன்ற” என்று மிரட்டலாகக் கேட்டார் பரிமளம்.

“அதான் எல்லாம் தெரிஞ்சி போச்சே… அப்புறம் என்ன?” என்றவன் திவ்யாவின் தோளில் கையைப் போட்டான்.

“ராம்!” என்று அவள் கூச்சத்தில் தடுமாறினாள்.

“ஒரு வாரம் நீ டைம் கேட்டப்பவே தெரியும். ஏதோ இருக்குன்னு. ஆனா, திவ்யான்னு எங்களுக்குத் தெரியல” என்றார் சுகுணா.

“எனக்குக் கூடத்தான் தெரியாது. நேத்துத் தான் எல்லாம் கன்ஃபார்ம் ஆச்சு. அத்தை தான் இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கணும்” என்றான்.

“நான் இல்லடா… வைதேகிதான் காலைல போன் பண்ணி சொன்னா” என்றார் பரிமளம்.

“ஹலோ ஹிட்லர் அத்தை! நான் அத்தைன்னு சொன்னது என் வருங்கால மாமியாரை” என்றான்.

“பார்த்தியா இவனுக்குக் கொழுப்பை. இந்த அத்தைதான்டா உனக்கு எல்லாம் செய்யணும். இப்படி ஒரு தங்கத்தை உனக்குக் கட்டணும்னு சொன்னதும் நான்தான். அதைத் தெரிஞ்சிக்க முதல்ல…” என்றார் பரிமளம்.

“இப்போ எதுக்கு டென்ஷன். அதான் நீங்க சொன்ன இந்தத் தங்கத்தையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் போதுமா” என்று பரிமளம் செய்ததைப் போலவே அவளது கன்னத்தைக் கிள்ளினான்.

சுகுணா சிரித்துக் கொண்டே பூஜையறையை நோக்கி நடக்க, பரிமளம் திகைப்பும், சிரிப்புமாக அவனைப் பார்த்தார். வெளியே சென்றிருந்த கணேசனும் வந்துவிட, வீடே களைகட்டியது.

வீட்டிற்கு மூத்தவரான பரிமளத்தின் காலில் விழுந்து வணங்கிய திவ்யாவின் நெற்றியில் குங்குமத்தை வைத்து, “இன்னைக்குப் போலவே என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்” என்று ஆசீர்வதித்தார்.

“அத்தை! எனக்கு…” என்றபடி அவளருகில் வந்து நின்றவனின் தோளில் பட்டென தட்டியவர், “உன்னை நம்பி வர்றவளை, மனசு நோகாம வச்சிக்க. சந்தோஷமாயிரு” என்று வாழ்த்த, அங்கிருந்த அனைவரின் இதயமும் பூரிப்பிலும், கண்கள் ஆனந்தக் கண்ணீரிலும் நிறைந்திருந்தது.

காதல் வளரும்...
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
134
484
63
748

அத்தியாயம் - 14

“ஷ், ஹப்பா!” என்றபடி இருக்கையில் வந்தார்ந்தாள் திவ்யா.

“இந்த ஜூஸைக் குடி!” என்றபடி அவளது கரத்தில் டம்ளரைக் கொடுத்தாள் கல்பனா.

“தேங்க்யூ கல்பூ! நாலுமணி நேரம் நின்னுட்டே இருந்ததுல காலெல்லாம் கடுக்குது” என்று கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டாள்.

“மேஜர் ஆப்பரேஷன்னா சும்மாவா! ஆனா, ஒரு விஷயம் சொன்னா, உன் கால் வலியெல்லாம் ஓடிப் போயிடும்” என்றாள்.

“என்ன?” என்று நெற்றியைச் சுருக்கியவள் சட்டென கண்கள் மின்ன, “ராம் வந்தாரா?” எனக் கேட்டாள்.

“ம்ம், பரவாயில்லையே… லேடி ஷெர்லக் ஹோம்ஸ்!” எனக் கிண்டலடித்தாள்.

“என்னை ஓட்டிகிட்டே இருக்கணும்டீ உனக்கு” என்றவள் மொபைலுடன் நகர்ந்தாள்.

ஆஃபிஸ் ஃபைல்களைச் சரிபார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருந்த ஸ்ரீராம், மொபைலின் சப்தத்தில் திரும்பிப் பார்த்தான். டிஸ்ப்ளே ஸ்கிரீனில் அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தாள் திவ்யா. புன்னகையுடன் போனை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.

“ஹலோ மேடம்! ஃப்ரீ ஆகிட்டீங்களா?” என்றான்.

“ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் தான் ஆச்சு ராம்! நீங்க வந்துட்டுப் போனீங்கன்னு கல்பூ சொன்னா. என்ன திடீர்னு இந்த நேரத்துல வந்திருக்கீங்க?”

“இல்லமா… திடீர்னு சென்னைக்கு கிளம்பச் சொல்லிட்டாங்க. ரெண்டு நாளைக்கு கான்ஃபரென்ஸ் அட்டெண்ட் பண்ண வேண்டியிருக்கு” என்றான்.

“ஓஹ்! மூணு நாள் ஆகிடும் நீங்க வர…”

“ம் ஆகிடும். இன்னும் பத்து நாள்ல வர்ஷிக்கு வளைகாப்பு வச்சிருக்கு இல்லயா! அப்பாவும், அம்மாவும் இன்விடேஷன் வைக்க, சஹி வீட்டுக்குப் போகணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. நான்தான் போறேனே, நானே வச்சிடுறேன்னு சொல்லிட்டேன்.

ஆஃபிஸ்லயிருந்து வரும்போது தான் இன்விடேஷனையும் பிரிண்ட் பண்ணிக் கையோட வாங்கிட்டு வந்துட்டேன். சரி உன்னையும் பார்த்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். தேவி தரிசனம் தான் கிடைக்காம போச்சு” என்று விளக்கமாகச் சொன்னான்.

“சாரி ராம்! எத்தனை மணிக்குக் கிளம்பறீங்க?”

“பொதிகைல கிளம்பறேன்” என்றான்.

“ஓஹ்!” என்றவள் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.

மணி நாலரை ஆகியிருந்தது.

“ஹேய்! லைன்ல இருக்கியா…” எனக் கேட்டான்.

“ஆங்.. இருக்கேன். சரி நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க” என்றவள் புன்னகையுடன் போனை அணைத்தாள்.

“கல்பு! பொதிகை ரைட் டைமான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லேன். நான் சீஃபை பார்த்துட்டு வந்துடுறேன்” என்றவள் பேசிக்கொண்டே அங்கிருந்து சென்றாள்.

இரயில் நிலையத்தில் இறங்கிய ஸ்ரீராம், “ஓகேடா பிரபா! நான் சென்னை போய்ச் சேர்ந்ததும், போன் பண்றேன். நீ கிளம்பு” என்றான்.

“இன்னும் டைம் இருக்கேடா! கொஞ்சநேரம் இருந்துட்டுப் போறேன்” எனச் சொல்லிக்கொண்டே திரும்பியவன், “நான் கிளம்பியே ஆகணும் போலிருக்கே” என்று சிரித்தான்.

டிக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ, “என்னடா சொல்ற?” எனக் கேட்டான்.

வண்டியைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த திவ்யாவைச் சுட்டிக்காட்டி, “என்னோட சிஸ்டர் அதான், உன்னோட டாக்டர் அம்மா வராங்க” என்றான்.

அவளைப் பார்த்தவன், பளிச்சென சிரித்தான்.

“டேய்! கண்ணு கூசுதுடா” என்ற பிரபாவை, “அடங்குறியா” என்று கிசுகிசுத்தான்.

“வா தியா! என்ன இப்படிச் சர்ப்ரைஸ்லாம் கொடுக்கற” என்றான்.

“என் ஃப்ரெண்ட் ஹைட்ராபேட் போயிருந்தாங்க. அவங்ககிட்ட முத்து வளையல்கள் வாங்கிட்டு வரச்சொல்லியிருந்தேன். நேத்துதான் கொண்டுவந்து கொடுத்தாங்க. வர்ஷாவுக்கும், சஹிக்கும் வாங்கினதை, நீங்க வரும்போது கொடுக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள நீங்க ஊருக்குக் கிளம்பிட்டீங்க. சரி, சஹிக்கு வாங்கினதைக் கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன்” என்றவள், ஒரு கவரை அவனிடம் கொடுத்தாள்.

“அண்ணா! இதை வர்ஷாகிட்ட கொடுத்திடுங்க” என்று பிரபாகரிடமும் ஒரு கவரைக் கொடுத்தாள்.

“எதுக்குமா இதெல்லாம்? நீயே வீட்டுக்கு வரும்போது கொடுத்திடேன்” என்றான் பிரபாகர்.

“இவரை டிராப் பண்ண நீங்கதான் வருவீங்கன்னு கெஸ் பண்ணேன். சஹிக்குக் கொடுக்கும் போது, வர்ஷாவுக்கும் சேர்த்துக் கொடுத்திடலாம்னு கொண்டு வந்தேன்” என்றாள்.

கனிவுடன், “சரிம்மா கொடுத்திடுறேன்” என்றவன், “நான் கிளம்பறேன் மச்சான்! பத்திரமா போய்ட்டு வா” என்று அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

“வா, அப்படி உட்காரலாம்” என்றவன், இருவருக்கும் எக்ஸ்பிரஸோ காஃபியை வாங்கிக் கொண்டான்.

காஃபியை ஒரு மிடறு விழுங்கியவள், “அந்தக் கவர்ல ஒரு ஃபேன்சி இயர் ரிங் இருக்கும். அதை சஹியோட நாத்தனாருக்குக் கொடுத்திடுங்க” என்றவளை, கண்கள் இடுங்கப் பார்த்தான்.

“எதுக்கு நீ தேவையில்லாத வேலை பார்க்கற?” எனக் கேட்டான்.

“இல்ல ராம்! அன்னைக்கு நான் வீட்டுக்கு வந்திருந்தப்போ வர்ஷா எல்லோரைப் பத்தியும் சொன்னாங்க. அப்போ, சஹியோட நாத்தனார் தேவிக்கு, ஸ்ரீ அண்ணா மாதிரி ஒரு அண்ணன் வேணுமாம். அடுத்த ஜென்மத்துலயாவது நான் ஸ்ரீக்குத் தங்கையா பிறக்கணும்னு சொன்னாள்னு சொன்னாங்க.

ஒரு பொண்ணு அப்படி நினைக்கணும்னா நீங்க, அவகிட்ட எவ்ளோ பாசமா நடந்துகிட்டு இருக்கணும்னு. ஆக்சுவலி, இதை வாங்கும்போது எனக்குத் தேவியைப் பத்தித் தெரியாது. அதான், எனக்காக வாங்கின இயர் ரிங்கை கொடுத்தேன். ஒருத்தருக்குக் கொடுத்து இன்னொருத்தருக்குக் கொடுக்கலன்னா, நல்லாயிருக்காதில்ல” என்றவளைக் காதலுடன் பார்த்தான்.

“அன்னைக்கு உன்னை எப்படி நான் காதலிச்சேன்னு கேட்டேன் இல்ல… இப்போ அதை மாத்திக்கிறேன். உன்னை முதன்முதல்ல பார்த்தப்போ ராட்சஷின்னு தான் தோணுச்சி. அதுக்கு அப்புறமும், உன்னை எப்படி நான் லவ் பண்ணேன்னு என்னையே கேட்டுக்குவேன்.

ஆனா, பார்க்கறது எல்லாமே உண்மை இல்ல. எல்லோருக்குள்ளயும் நல்ல மனசுன்னு ஒண்ணு இருக்கு. சூழ்நிலையும், சந்தர்ப்பமும் தான் ஒருத்தரை அவங்க அவங்க நேரத்துக்கு ஏத்தமாதிரி மாத்துதுன்னு இப்போ புரியுது” என்றான் நெகிழ்ச்சியுடன்.

“சார் பிலசஃபி பேசினது போதும். எனக்குப் புல்லரிக்குது. உங்களோட ஒரு வாக்கியத்தை நான் முழுசா ஏத்துக்கமாட்டேன். சூழ்நிலைக்கு ஏத்தது மாதிரி மாத்திக்க நாம பச்சோந்தி இல்ல. மனுஷங்கன்னா, எப்பவும் ஒரே மாதிரி இருக்கணும். நம்ம சூழ்நிலை வேற. ஆரம்பமே மோதல். ஆனா, பல பிரச்சனைகள்ள மனுஷங்க தன்னோட மூளைக்கு வேலை கொடுக்கறதில்ல. உணர்வுகளுக்கு மொத்தமா அடிமையாகி, உணர்ச்சிவசப்பட்டு எடுக்குற முடிவு தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்” என்றாள்.

“ஹப்பா! என்னை ஃபிலாசஃபி பேச வேணாம்னு சொல்லிட்டு, இப்போ யாரு பேசறாங்க?” எனச் சிரிக்க, அவளும் இணைந்துகொண்டாள்.

“காஃபி ஆறிடப்போகுது குடி” என்றான்.

அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஆயிரம் இருந்தாலும், இரயிலின் வருகை அவர்களது பேச்சிற்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்தது.

“ஓகே தியா! பை. பத்திரமா வீட்டுக்குப் போய்ட்டு எனக்கு ஒரு கால் பண்ணு. இல்லன்னா, மெசேஜ் அனுப்பு. ட்ரெயின்ல சிக்னல் எப்படியிருக்கும்னு தெரியாது. நான் கிளம்பறேன்” என்று எழுந்தான்.

“பத்திரமா போய்ட்டு வாங்க. சஹி வீட்ல எல்லோரையும் விசாரிச்சேன்னு சொல்லுங்க” என்றாள்.

“ம்ம்” என்று தலையை அசைத்தவன், “வரேன்” என்றபடி அவளது கரத்தை அழுத்தமாகப் பற்றி விடுவித்தான்.

இரயில் புறப்படும்வரை நின்றிருந்தவள், தூர விலகிச் செல்லும் இரயிலைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நகர்ந்தாள்.

*************

காலையில் இரயில் நிலையத்தில் இறங்கியவன், அருகிலேயே இருந்த தங்களது கம்பெனி கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்று குளித்துத் தயாரானான். காலை உணவையும் அங்கேயே முடித்துக்கொண்டு, சஹானாவிற்குப் போன் செய்தான்.

“நம்ம வீடு இருக்கும்போது நீங்க வெளியே தங்கறது நல்லாவாயிருக்கு. சரி கான்ஃப்ரென்ஸ் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்திடணும்” என்றாள்.

“சரிம்மா வந்துடுறேன்” எனச் சிரித்தான்.

“நான் ஒரு ரெண்டு மணிக்கெல்லாம் வந்திடுவேன். அத்தையும், நீயும் ரெடியா இருங்க புடவைக் கடைக்குப் போய்ட்டு வந்திடலாம்.”

“சரிண்ணா! அம்மா பேசும்போதே அத்தைகிட்ட சொல்லிட்டாங்க. முடிஞ்சா லஞ்சுக்கு வந்திடுங்க” என்றாள்.

“இல்லம்மா! இங்கேயே லஞ்ச் முடிச்சிட்டுத் தான் கிளம்புவேன்” என்றவன் சஹானாவின் மாமியாரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வைத்தவன், பிரபுவிற்கு அழைத்தான்.

“சொல்லுப்பா வருங்கால மாப்பிள்ளை! எப்போ வந்த? எப்படியிருக்க?” என்று உற்சாகத்துடன் கேட்டான் பிரபு.

“நல்லாயிருக்கேன் புதுமாப்பிள்ளை! நீ எப்படியிருக்க?” என்றவன், “உன்னை இந்தக் கேள்வியைக் கேட்கவேகூடாது. என் தங்கச்சி உன்னை நல்லாவே கவனிச்சிக்குவா” என்றவனது பேச்சு, பிரபுவிற்கு ஒருவித சலிப்பைக் கொடுத்தது.

“அதான் நீயே சொல்லிட்டியே… அதுக்கு அப்பீல் ஏது?” என்றவனது குரல் இறங்கியிருந்தது.

“என்ன பிரபு திடீர்னு டல்லா பேசறா மாதிரியிருக்கு” எனக் கேட்டான்.

சுதாரித்துக்கொண்ட பிரபு, “இல்லப்பா இங்கே ஒரு க்ளையண்ட்…” என்றவன், “சரி ஸ்ரீ அப்போ நீ நேரா நம்ம ஆஃபிஸுக்கு வந்துடு. ரெண்டு காரும் ஆஃபிஸ்ல தான் இருக்கு. நீ ஒரு கார் எடுத்துட்டுப் போ. ஈவ்னிங் நானும், அப்பாவும் ஒண்ணா வீட்டுக்கு வந்திடுறோம்” என்றான்.

“ஓகேடா! நான் கிளம்பும்போது உனக்குப் போன் பண்றேன். பை” எனப் போனை அணைத்தான்.

சொன்னபடி, பிரபுவின் அலுவலகத்திற்குச் சென்றவன் காரை எடுத்துக் கொண்டு தங்கையின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்திருந்த தேவி, அவனுடன் பேச்சுக்குப் பேச்சு மல்லுகட்டிக் கொண்டிருந்தாள்.

“அம்மா தாயே கொஞ்ச நேரம் சும்மா இருக்கறியா” என்றவன், திவ்யா கொடுத்த கவரை சஹானாவிடம் கொடுத்தான்.

“உனக்கு திவ்யாவோட ப்ரெசண்ட்” என்று அவள் கொடுத்த காதணியை தேவியிடம் கொடுத்தான்.

“சூப்பரா இருக்கு அத்தான். உங்க ஆளு, ரொம்பத் தெளிவு. இப்பவே எல்லோரையும் எப்படிக் கைக்குள்ள வச்சிக்கிறாங்க பாருங்க” என்றவள், காதணியுடன் தனது அறைக்கு ஓடினாள்.

“ரொம்ப அழகா இருக்குண்ணா! அண்ணிக்கு தேங்க்ஸ் சொல்லணுமே” என்றாள் சஹி.

“அதுக்கென்ன சொல்லிடலாம். இன்னைக்கு அவளுக்கு ஆஃப் டியூட்டிதான். வீட்லதான் இருப்பா” என்றவன் திவ்யாவின் எண்ணுக்கு அழைத்து சஹானாவிடம் கொடுத்தான்.

இருவருமே பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த தேவி, “அத்தான்! எப்படியிருக்கு?” என்று இரு காதுகளையும் பற்றிக் கொண்டு கேட்டாள்.

“அதுக்கென்ன அழகாத்தான் இருக்கு. உனக்கு கம்மல் வாங்கிட்டு வந்ததுக்குப் பதிலா, ஒரு பூட்டு வாங்கிட்டு வந்திருக்கலாம்” என்றான் கிண்டலாக.

“பூட்டா எதுக்கு?”

“வேற எதுக்கு! உன் வாய்க்குத் தான். பாவம் உன்னைக் கட்டிக்கப் போறவன்… தினம் காதுல பஞ்சுதான் வச்சிக்கணும்” என்றான்.

“இந்தக் கிண்டல் தானே வேணாங்கறது. போன்ல யாரு? உங்க ஆளா!” எனக் கேட்டாள்.

“அவகிட்ட போய் ஆளு கீளுன்னு சொல்லிடாதே, பல்லை உடைச்சிக் கைல கொடுத்திடுவா” என்றான்.

“அவ்ளோ பெரிய ஆளா உங்க டாக்டரம்மா!” என்றவள், “அண்ணி! அண்ணி! நான்…” என்று சஹானாவிடம் கேட்டாள்.

“இருங்க அண்ணி! என் நாத்தனார் பேசணுமாம்” என்று போனை அவளிடம் கொடுத்தாள்.

“ஹலோ அக்கா! உங்க ஃப்ரெசண்டுக்கு ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ். நானும், அண்ணியும் உங்களுக்கு செல்ஃபி எடுத்து அனுப்பறோம்” என்றவள் சிறிதுநேரம் அவளிடம் வளவளக்க, ஸ்ரீராம் போனை வாங்கினான்.

“போதும் நேரமாகுது. கிளம்புங்க போய்ட்டு வந்திடலாம்” என்று அவளை அனுப்பியவன், திவ்யாவிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு வைத்தான்.

அந்தப் பெரிய ஜவுளிக் கடைக்குள் நுழைந்தவர்கள், புடவைகள் சிலவற்றை தனியாக எடுத்து வைத்தனர்.

“இதுல ஏதாவது ஒண்ணை எடுத்துக்கலாம் அத்தை!” என்ற சஹானா, தனது மாமியாருடன் புடவைத் தேர்வில் அமர்ந்துவிட்டாள்.

“சஹி நீங்க செலக்ட் பண்ணுங்க. முடிச்சிட்டா கால் பண்ணுங்க. நான் கடையைச் சுத்திப் பார்த்துட்டு வரேன்” என்றவன், ரெடிமேட் செக்‌ஷனுக்குள் நுழைந்தான்.

சற்றுநேரம் கழித்து ரெடிமேட் செக்‌ஷனுக்குள் நுழைந்த தேவி, ஸ்ரீராம் சில குர்த்திகளை எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள், மெதுவாக அவனுக்குப் பின்னால் சென்று நின்றாள்.

தொண்டையைச் செருமிக் கொண்டு, “எக்ஸ்க்யூஸ்மீ சார், கேன் ஐ ஹெல்ப் யூ!” சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

“யா…” என்றபடித் திரும்பியவன், அடக்கமட்டாமல் சிரித்த தேவியைப் பார்த்து, ‘ஸ்’ என்று முகத்தைச் சுளித்தான்.

“ஹேய்! ரொம்ப ஓட்டாதே” என்றான்.

“எப்படி எப்படி? நீங்கல்லாம் புடவை சூஸ் பண்ணுங்க. நான் கடையைச் சுத்திப் பார்த்துட்டு வரேன்” என்று அவனைப் போலவே பேசிக்காட்டினாள்.

“தெரியாத்தனமா சொல்லிட்டேன் தாயே! தயவு செய்து உன் திருவாயைக் கொஞ்சம் மூடு” என்றான்.

“ம், அப்போ ஒரு கண்டிஷன். நான்தான் உங்க டாக்டர் மேடத்துக்குக் குர்த்தி செலக்ட் பண்ணுவேன்” என்றாள் சிரித்துக் கொண்டே.

“நல்லவேளை, எங்கே நீ, எனக்கும் நாலு வேணும்னு கேட்டுடுவியோன்னு பயந்துட்டேன்” என்று பயப்படுவது போல நடித்தான்.

“அடடா! நானு… அதுவும் உங்ககிட்ட, அப்படியே கேட்டுட்டாலும்…” அவளும் வேண்டுமென்றே அவனது காலை வாரினாள்.

“சரி விடு. நாம ஒரு சமரசத்துக்கு வருவோம். இந்த விஷயத்தை நீ யார்கிட்டயும் சொல்லாமல் இருந்தா, உனக்கு மட்டும் ஒரு கிலோ திருநெல்வேலி அல்வா வாங்கிப் பார்சல் அனுப்பறேன். சந்தோஷமா!” என்றான்.

அவனைக் கிண்டலாகப் பார்த்தவள், “அப்போகூட எனக்கு அல்வாதான் கொடுப்பீங்களா?” என்றாள்.

“எல்லாருக்கும் என்ன கொடுப்பேனோ, அதைத் தானே உனக்கும் கொடுக்கறேன்…”

“பார்த்து, டாக்டரம்மாவுக்கும் அல்வா கொடுத்திடப் போறீங்க” என்று சிரித்தாள்.

“ஏம்மா! நான் நல்லாயிருக்கறது உனக்குப் பிடிக்கலையா? நீ குர்த்தியை செலக்ட் பண்ணுமா” என்றான்.

“ஓகே… ஓகே…” என்று சிரித்துக்கொண்டே உடைகளைத் தேர்வு செய்வதில் மும்முரமானாள்.

“ஏன் அத்தான்! கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கு, முதன்முதல்ல புடவை வாங்கிக் கொடுப்பாங்க. நீங்க என்னடான்னா குர்த்தி வாங்கிக் கொடுக்கறீங்க?”

“அதுதான் தியாவோட வேலைக்குச் சூட் ஆகும். அங்கே இங்கே ஓட இதுதான் வசதி” என்றான்.

“ம், உங்க தியா டாக்டர் தானே? என்னவோ அதலெட் மீட்ல ஓடுறவங்க மாதிரி பேசறீங்க” என்றாள்.

“ரொம்பப் பேசாதே அறுந்த வாலு… வேலையை முடி” என்றான்.

“ம், துர்வாசருக்குக் கோபம் வந்தாச்சு… இனி, வாயை மூடிக்க வேண்டியது தான்.”

“துர்வாசரா… இந்தப் பேரை யார் சொன்னது? சஹியா…”

“பின்ன அவங்கதான் சொல்வாங்க, பாசம் காட்டுறதுல எங்க அண்ணன் மாதிரி யாரும் இருக்கமாட்டாங்க. அதேபோல கோபம் வந்தாலும், துர்வாசர்ன்னு உங்க பெருமையை எப்பவோ பாடிட்டாங்க” என்றாள் குறும்புடன்.

“இந்தப் பொண்ணுங்களுக்குப் பேச விஷயமா இல்ல. இதெல்லாம் ஒரு கதைன்னு பேச வேண்டியது” என்று சிடுசிடுத்தான்.

‘ஆஹா! இதோட வாயை மூடலனா நாம தீர்ந்தோம்’ என எண்ணிக் கொண்டு வேலையைப் பார்க்கலானாள்.

திவ்யாவிற்கு சில உடைகளை எடுத்துக் கொண்டு பில்லுக்குப் பணம் செலுத்தும் நேரம் சஹானாவிடமிருந்து போன் வர, கட் செய்துவிட்டு அவர்கள் இருந்த இடத்திற்குச் சென்றான்.

அண்ணன் கை நிறைய பைகளை எடுத்து வருவதைப் பார்த்த சஹானா முறுவலுடன் அதைக் கண்டு கொள்ளாமல் நின்றிருந்தாள்.

புடவைக்குப் பணத்தைச் செலுத்திவிட்டுக் கிளம்பும் நேரம், “அம்மா அம்மா! இந்த ரெடிமேட் லெஹங்கா பாருங்களேன்” என்று தனது அன்னையை இழுத்துச் சென்றாள் தேவி.

“சஹி! நீயும் கூடப் போ… நான் பார்க்கிங்ல இருக்கேன்” என்று அவளிடமிருந்த பையையும் வாங்கிக் கொண்டு சென்றான்.

காரின் பின் கதவைத் திறந்து வாங்கி வந்திருந்த பைகளை உள்ளே வைத்தவன், “ஹலோ பிரபு! பொண்டாட்டியை கூல் பண்ண, கடைக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்களா?” என்ற குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தவன், முகமறியா அந்தப் பெண்ணைப் பார்த்ததும்
நெற்றியைச் சுருக்கினான்.

காதல் வளரும்...