ஷ்ஷ்!! மறுத்து பேசாதே காதலே மூன்றாம் அத்தியாயம்

கண்ணம்மா rvrv

Moderator
Staff member
Nov 22, 2020
7
0
1
அத்தியாயம் 3


உயிர்க் கூட்டை வெறித்துக்
கிடக்கும் நேரங்களில்..
உனை ரசித்துக் கிடந்த நாழிகைகள்
பரிகாசிக்கிறதெனை அறிவாயா???


அவைகளுக்கு தெரியவில்லை போல்.
கூடு மட்டுமே போர்த்திக்
கிடத்தப்பட்டுக் கிடக்கிறதங்கென்று!!!அன்பா விஷயமாக.. ஊர் மக்கள் சார்பில் நான்கைந்து இளைஞர்கள் வந்து, விஷயம் இப்படியெனக் கலங்கி போய்ச் சொல்ல..


"அப்பிடியா சங்கதி, ம்ம்ம்.. இப்ப தான் டவுனுக்குப் போய்ட்டு வந்தேன்.. நீங்க போங்க நான் ஆஸ்பித்திரிக்கு போன் போட்டு இன்னான்னு கேட்டுட்டு.. யார் யாரை கூட்டிகினு வரணுமோ எல்லாரையும் இட்டாறேன். அங்க போய் நீங்க ஆவ வேண்டியதை கவனிங்கோ. நான் இங்க கவனிச்சிக்கிறேன்”


சொன்ன கவுன்சிலர் கனகவேலின் குரலில் பேருக்கேனும் ஒரு பதட்டமோ, முகத்தில் ஒரு வருத்தமோ, கண்களில் ஒரு சொட்டு கண்ணீரோ இல்லை. யாருக்கோ, என்னவோ ரீதியில் தான் இருந்தது.


இத்தனைக்கும் அன்பா தோளில் கை போட்டு " இன்னா அன்பா.. எப்பிடி போவுது வேல.. எதனா யாருக்குனாலும் வேல ஆவணும்னா சொல்லு முடிச்சிட்லாம். கூச்சப்படாத இன்னா " இப்படிப் பேசும் அளவிற்கு அவனோடு மிக நெருக்கம்.


'இன்னாடா நாம சரியாதான் சொன்னோமா.. இந்தாளு ஒரு ரியாக்ஷனும் காட்டாம நிக்கறான்' வந்தவர்கள் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்து நின்றனர். அதில் ஒருவன்..


"ண்ணா இன்னாண்ணா இப்பிடி பேசற.. போனது நம்ம அன்பாண்ணா.. யாரோன்னு நென்ச்சிக்கினியா " மீண்டும் சொல்ல..


"அட அதான் நீ அப்போவே சொல்டியேடா. எனக்கென்ன காது செவுடா.. எல்லாக் கேட்டுக்கினு தான இருந்தேன். நான் வரேன் போ. எல்லாம் நான் வந்து பாத்துக்கலாம். அது வரைக்கும் அமைதியா இருக்கணும் இன்னா. போ நான் சொன்னதா சொல்லு ஜனங்களாண்ட " அப்போதும் அவர்களை விரட்டுவதிலேயே தான் நின்றான் அந்தக் கவுன்சிலர் கனகவேல்.


அவர்களால் மட்டும் என்ன சொல்லிவிட முடியும். இல்லை என்ன கேட்டு விட முடியும். ஊருக்குள் பெரிய மனிதன். அவர் கலங்கினால் இருப்பவர்களும் கலங்குவர் அல்லவா? அதனாலும் இருக்கலாமல்லவா? அவனைத் தவறாகக் கணித்தனர்.


"சர்ண்ணா சுளுவா வந்துருன்னா.. அன்பாண்ணே தான் எதுன்னாலும் முன்ன நின்னு எடுத்து செய்யும். இப்போ அதுக்கே ஒன்னுன்னவும்.. எங்களுக்குலாம் அங்க கையும் ஓடல, காலும் ஓடல.. அல்லாம் நீ வந்து தான் பாக்கோணும் " சொன்னதோடு சைக்கிளில் பறந்தனர் இளைஞர்கள் மருத்துவமனை நோக்கி.


'இவனுங்கள சமாளிக்கவே போதும் போதும்னு இருக்குது.. அவனுங்கள எப்பிடி சமாளிக்குறது ' அவர்கள் சொன்ன விஷயமாக.. என்னென்ன செய்வது, எப்படிக் காய் நகர்த்துவது, எப்படிச் சமாளித்துப் பேசுவது, கவுன்சிலர் கணக்குப் போட்டு.. வாசலில் நின்றது நின்றபடியே தாடையைத் தடவி யோசிக்க..


"ண்ணா.. இன்னாண்ணா.. இன்னும் ஓசைனையிலே கீற.. சீக்கிரம் பேச வேண்டியவங்கட்ட பேசுண்ணா.. போலாம்" அவனது கையாள் ஒருவன் பரபரப்பாக முன்னுக்கு வர..


"இன்னா பண்ணனும் பண்ணகூடாதுன்னு எனுக்கு நீ சொல்றியா? உனக்கே தெர்யும் போது தெரியாதா? உன் ஓசனைய உனக்குள்ளே வெச்சிக்க இன்னா. மணிய பாத்தல்ல மூணாவுது. இந்நேரத்துக்கு எவனாண்ட போய் இன்னான்னு பேச. வண்ட வண்டையா கேப்பானுங்க. என்க்கு தா இந்தக் கனகவேலுக்குத் தா தலையெழுத்து, இவனுங்களோட மாரடிக்கணும்னு.. அவனுங்களுக்கு இன்னா.. அல்லாம் காலைல பேசிக்லாம். நீ போய்ப் படு. என்னையும் தூங்க வுடு "


காட்டமாகச் சொல்லியவன்.. வீட்டிற்குள் சென்றான். பின் என்ன நினைத்தானோ திரும்பி வந்து..


"இத்தான் என்க்கு ஓசன சொல்றதுல லாஸ்ட்டா இருக்கணும் உன்க்கு. இன்னொரு முற இத்த செய், அத்த செய் ஓசன சொன்ன? அப்பாலிக்கா என் வாய் பேசாது. கை தான் பேசும் புர்தா "ஆள் காட்டி விரல் கொண்டு மிரட்டியவன் முறைத்து பார்த்து விட்டு..


"பொண்டாட்டிக்கு சொந்தக்காரன்னு கூட வெச்சா.. இவனுவ நம்மளுக்கே ஒசன சொல்றானுவ " வாசற்கதவை அடித்துச் சாத்திவிட்டு செல்ல..


"இன்னாடா இப்ப நான் இன்னா சொல்ட்டேன்னு.. அண்ணாத்த இந்த ராவு ராவிட்டு போவுது என்னை " திட்டு வாங்கினவன் பக்கத்தில் இருந்த கூட்டாளியிடம் விழித்துப் புலம்பினான். ஏனென்று புரியாமல்.

"பின்ன நீ அண்ணாத்தைக்கே ஓசன சொன்னா? உன்ன நிக்க வெச்சு மாலை மருவாதி பண்ணுவாங்களா? பெரிய இடம்னா அப்பிடித்தான் டா. காரியம் ஆவணும்னா அடங்கித்தான் போவணும். அவனுங்க தான் இப்போவேன்னு சுடுதண்ணி கால்ல ஊத்துறானுங்கன்னா.. நீயும் சேந்து ஊத்துற? கன்னத்துல ஓங்கி ஒன்னு இறக்காம வுட்டாரே. அது வரைக்கும் பாரு "


"இன்னாடா நீயும் அந்தாளு மாறியே பேசற.. போனது ஆரோல்ல டா.. அன்பா.. நம்ம அன்பா டா " சொல்லும் போதே அவனுக்குக் கண்கள் கலங்கியது கேட்ட விஷயத்தை ஜீரணிக்க முடியாமல்.


"சர் ரா.. உனக்குத் தெர்து, எனக்குத் தெர்து, தெரியவேண்டிய அண்ணாத்தைக்குத் தெர்லயே. ஏதோ பெரிய சமாச்சாரம் போல டா. நீ கொஞ்சம் அடக்கி வாசி. அதான் உன்க்கு நல்லது. வா அப்பிடியே அங்க ஒரு எட்டு பார்த்துட்டு வூட்டுக்கு பூடுவோம்" சரியாகக் கணித்து ஆறுதல் சொன்னவன்.. சொன்ன கையோடு கலங்கியவனையும் அழைத்துக் கொண்டு நடையைக் கட்ட..


இப்போது அவர்களே.. இவன் இரவு நம்மிடம் எகிறிக்கொண்டு பேசியது என்ன? இப்பொது பம்மிக்கொண்டு செய்வது என்ன? என்னயிருந்தாலும் அரசியல்வாதி இல்லையா? மானசீகமாக வாயில் கை வைத்து ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


கவுன்சிலர் கனகவேல் மருத்துவமனை முன் கூச்சலிட்டுக் கொண்டிருந்த மக்களின் முன் நின்று.. கலங்கி பேசிய விதத்தில்.


அவ்வளவு ஏன்? அவன் வந்தால் நாக்கை பிடிங்கி கொள்வதைப் போல், மானம் கெட கேட்க வேண்டும் என்று நினைத்த மக்களே.. இவன் பேசிய விதத்தில் கண்களில் நீர் வைத்துக்கொண்டனர்.


அவ்வளவு உருக்கமாய் நேரத்திற்கு வராததற்குக் காரணம் சொல்லி.. நன்றி மறவாதவன் போல் அன்பா மீது பாசம் வைத்து கனகவேல் பேச..


"இவன் நல்லவன்டா நாம தான் தப்பா நென்ச்சிக்கினோம் போல டா " அமைதியாகி கேட்டு இருந்தனர். கூடவே இப்போதைய நிலைக்கு இவனை விட்டால்.. முடித்துக் கொடுப்போர் யாரும் இல்லையென்ற நிதர்சனமும் புரிந்தது.


ஆம். கவுன்சிலர் கனகவேல் சொன்னபடியே.. அந்த அரசு மருத்துவமனை டீன்.. அன்பா வேலை செய்த மின் துறை அலுவலகத்தின் அந்த ஏரியா துணை பொறியாளர்.. மற்றும் அன்று இரவு அன்பாவுடன் வேலையில் இருந்தவர்களென.. அனைவரையும் கையோடு அழைத்து வந்திருந்தான். ஒன்பதரை மணியளவில் ஆற அமர.


அங்கே இவ்வளவும் நடக்க.. இப்போதும் இறந்தவனின் மனைவி அப்படியே தான் இருந்தாள். குழந்தை மீண்டுமொரு முறை விழித்து.. முன்பு போலவே பாலை அருந்திவிட்டு உறங்கி விட்டிருந்தது.


இப்பொது இவர்கள் பேச்சுச் சத்தம் கேட்டு விழிக்க.. அன்னம் பக்கத்திலிருந்த ஒரு பெண்ணிடம் சொல்லி.. மருமகளுக்கு மாத்துக்கு ஒரு சேலையும், குழந்தைக்கு மாற்றுடையும், இன்ன பிறவும் எடுத்து வர சொல்ல..


“ஹால்ல, அவுங்க படுத்திருந்தோ சொல்லோ.. போட்ருந்த சேலைய எடுத்துன்னு வா க்கா” இடை வெட்டினாள் அவள்.


இங்கு வந்ததிலிருந்து, அவள் பேசிய முதல் வார்த்தைகள்.


அன்னமும் அந்த பெண்மணியும் ஆராய்ச்சியாக பார்த்தாலும்.. ‘சொல்வதை சொல்லிவிட்டேன் அவ்வளவு தானென’ அவள் தலையை திருப்பி வெறித்து அமர்ந்திருக்க..


“அவோ சொன்னத எட்த்தா” சொன்னதோடு பிள்ளைக்குரியது எங்கெங்கு இருக்குமென்றும் சொல்லி.. அப்பெண்மணியும் விரைந்து எடுத்து வந்து தந்திருக்க.. பிள்ளையைத் துடைத்து உடை மாற்றி அன்னம் தூக்கி கொண்டார் தோள்களில்.


யாரிடம் என்ன பேசுவதென கூட புரியாமல் இருந்தார். அதை விட தெம்பில்லை அவருக்கு. நடந்ததை கரகிக்கவே சிரமமாய் இருந்தது.


அவளுக்கு கவுன்சிலர் பேசியது அனைத்தும் கேட்டு உள்ளே காந்திக் கொண்டிருந்தது. இங்கே எதற்கு வந்து நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். இவர்களெல்லாம் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்களென்று.


இருந்தும் ஒரு வார்த்தை கேட்கவில்லை. அவளுக்கு வேண்டியது ஆறுதல் அல்லைவே.. தீர்வாகிற்றே. அதைப் பற்றிப் பேச்சு வரும் போது பேசி கொள்ளலாமென மெளனமாக இருக்க..


"இப்ப என்னதான் சொல்ல வரீங்க? இப்பிடி சத்தம் போட்டுட்டே இருந்தா எல்லாம் சரியாகிருமா? ஒரு முடிவா சொல்லுங்க? உடம்பை வாங்குவீங்களா? மாட்டிங்களா? தலைமை மருத்துவர் நேராக விஷயத்திற்கு வந்தார்.


கனகவேலின் வள வள பேச்சு அவருக்குப் பிடிக்கவில்லை. மருத்துவமனை ஸ்தம்பித்து இருந்தது கூட்டத்தினால். நோயாளிகள் வர போக மிகுந்த சிரமமாக இருக்க.. விஷயம் பெரிதானால் இவர் தலையில் தான் விடியும். விஷயத்தை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இப்படி எல்லாம் யோசித்து பொறுத்து பார்த்தவர், ' இவன் விஷயத்தைப் பேசற போலயே தெரியலையே ' அவராகவே யோசித்து.. தேங்காய் உடைப்பது போல் பட்டென்று கேட்டுவிட,


"நீங்களும் அவங்களும் உண்மைய சொல்லுங்கோ சார்.. எங்க அன்பா எப்பிடி செத்தான்ன்னு.. அப்பறம் அவன வாங்கறதா வேணாமா நாங்க சொல்றோம்" கூட்டத்திலிருந்து ஒருவன், அதாவது அன்பாவின் நண்பன் அருண் வந்து முன் நின்றான்.


“வெயிட், வாட்? நான் எதுக்கு மேன் உனக்கு பதில் சொல்லணும்?”அவருக்கு புரியவில்லை.


“உங்க ஆஸ்பித்திரிக்கு தான இட்டாந்தோம். டுட்டி டாக்டர் தான செக் பண்ணாரு. அப்போ நீங்கோ தான் சொல்ணும்”


“ஆமாப்பா வந்த பெஷன்ட் என்ன நிலைமைல இருந்தாங்களோ அதைதான சொல்ல முடியும்”


“அப்ப எங்க அன்பாவ குடிகாரன்றிங்களா” நாலைந்து பேர் எகிறிக்கொண்டு வர..


அந்த கேள்விக்கு பதிலுரைக்காமல் “யோவ் கவுன்சிலர் என்னையா நீ வந்தா அடங்குவாங்க பார்த்தா இன்னும் துள்ளறாங்க” காதை கடித்தார் டீன்.


“இருங்க சார் பார்த்துக்கலாம்” கவுன்சிலர் சாவகாசமாக பதில் சொல்ல.. அவருக்கு டென்ஷன் ஏறியது.


“என்னத்த பாத்துக்க போறியோ? என் பேரு கெடாம இருந்தா சரிதான்” சலிப்போடு முகத்தை திருப்பி கொள்ள..


“அட அப்பிடிலா உட்ற மாட்ட சார் பயப்படாதீங்கோ”


பதிலுக்கு அவர் ‘சொல்லாத செய்யென’ பார்க்க.. அவனும் எங்கிருந்து ஆரம்பித்து, எப்படி சமாளிப்பது யோசிக்க ஆரம்பித்தான்.


அதற்க்கு தக்கன “இன்னா கவுன்சிலரே டாக்டர் இன்னாத்துக்கு உன் காத கடிக்கிராரு? எங்க கேள்விக்கு இன்னா பதிலு” கூட்டத்தில் ஒரு குரல் வர..


“இப்புடி ஆளாளுக்கு கத்திகினு கேள்வி கேட்டுகினு இர்ந்தா இன்னாயா அர்த்தம்.. அவுருக்கு மட்டுமில்ல அல்லாத்துக்கும் பதில் சொல்லோ தா தோ சம்பந்தபட்டவங்கோ அல்லாரையும் இட்டாந்துக்கறேன். ஒவ்வொன்னால்லாம அல்லாத்தையும் கேட்ருங்கோ” கவுன்சிலர் வாய் திறந்தான்.


“இன்னா கேக்க சொல்ற கவுன்சிலரே..மொத கேட்டதுக்கே ஒரு பதிலையும் காணோம்” என்றாலும்..


“ஆமா அந்நேரத்துக்கு எங்க இன்னா வேல.. எங்க அன்பாவ வந்து எதுக்குக் கூட்டினு போனும்.. கேட்டு சொல்ல சொல்லுயா" ஒருவன் கேள்வியோடு வந்து நிற்க..


"ஆமா அவன் குடிச்சதா வேற டாக்டர் சொல்றாரு.. அவனுக்குக் குடிக்ற பயக்கமெல்லா இல்லியே.. அப்றம் எப்டி குட்ச்சிருப்பான் " அடுத்து ஒரு பெண்மணி வந்து முன் நிற்க..


“தலைல இர்ந்து ரவ ரத்தம் வர்ல.. ஆளு பாக்கோ மயக்கமா கீரா போல தா இர்ந்துச்சு நாங்கல்லா பாக்கசொல்லோ.. ஆனா ஆளு அவுட்டுன்றாங்கோ. நெசமாவே வுழுந்து தா அடிபட்டுதா அவுனுக்கு” இப்படியாக கேள்விகள் அங்கங்கிருந்து வர..


"என்ன சொல்ல சொல்றீங்க? அன்பா செத்தது ஆக்சிடென்ட் தான். வேறென்ன இருக்கு இதுல? எனக்குப் புரியல? குடிச்சிட்டுக் கரண்ட் கம்பம் ஏறினதுல தடுமாறி.. பிடிமானம் இல்லாம கீழ விழுந்து இறந்துட்டாரு, நீங்கல்லாம் என்ன சொல்ல வரீங்க? அங்கிருந்து யாரவது தள்ளி விட்டுட்டாங்கன்னா?"


இதைச் சொல்லி அவர்களை இடைமறித்தது. அவர்கள் ஏரியா மின் துறை துணை பொறியாளர் சேகரன்.


இன்ஸ்பெக்ட்டர் இவரிடம் தான் பேசியிருந்தார். “இறந்தது உங்களுக்கு கீழ வேல செஞ்ச ஆளு சார், நீங்க போனா தான் சமாதானம் ஆவாங்க.. யாரை கூட்டிட்டு போனா அமைதியாவாங்களோ அவங்கள கூட்டிட்டு போய் பேசுங்க”


‘இதென்ன டா தொந்தரவென’ நினைத்தாலும்.. அவருக்கு அவசியமே போக வேண்டுமென்பது. அதை கொண்டே குடும்பத்தினரும் சொந்தக்காரர்களும் தான் வந்திருப்பர். எதையாவது பேசி சமாளித்துக் கலைத்து விடலாமென்பது அவர் எண்ணம்.


அதை நினைத்து தான் வந்திருந்தார். ஆனால் இங்கே இருக்கும் கூட்டம் அவர் எதிர்பார்க்காத ஒன்று. ஒவ்வொருவர் முகத்திலும் இருக்கும் உணர்வு.. அவரைப் பீதிக்குள்ளாக்கியது. அதில் அவர் உளற..


"யோவ் நீ ஒரு ஆளு போதும் யா.. அவனுங்க செத்ததுக்குக் காரணம் கேட்டா? நீ சம்பந்தா சம்பந்தமில்லாம ஒளறிட்டு இருக்க" காதை கடித்துக் கடிந்து கொண்ட கனகவேல்..


"எப்பா அல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்கப்பா.. எதாருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். கத்திக்கினே இருந்தா முடிவு கெட்ச்சிருமா? அதுவும் அன்பாவ இந்த நெலமைல வெச்சிகினு.. ஆஸ்பித்திரி உள்ள கீற ஜனங்களையும் கண்டுக்கணுமா இல்லையா? சமாதானம் பேசினான்.


"அப்ப உண்மயா இன்னா நடந்தது சொல்ல சொல்லு கவுன்சிலரே.. எங்க டவுட்டு தீராம, உண்ம தெரியாம யாரும் ஒரு இன்ச்சு நவுற மாட்டோம்" அவரிடம் தீர்மானமாகச் சொன்ன அருண்,


"இன்னாபா சொல்றீங்கோ.. ஆமாந்தான? " ஜனங்களையும் பார்த்து கேட்க..


"ஆமா இன்னா நடந்துச்சின்னு தெரிஞ்சிக்காம போவ மாட்டோம் " வந்திருந்தவர்களும் அதிலேயே விடாப்பிடியாக நின்று பேசினர்.


"அருணு நீ சொல்றதெல்லா சர்தாப்பா.. உன் டவுட்டெல்லாம் நாயந்தா.. ஆனா தப்பு மொத்தம் நம்ப அன்பா மேல கீதே அதுக்கின்னா சொல்ற " சமாதானம் வேலைக்காகாதெனக் கனகவேல் பாயிண்டிற்கு வந்து நின்றான்.


"இன்னாண்ணா சொல்ற.. அன்பா பத்தி தெர்ஞ்ச நீயே இப்டி சொல்லலாமா”


"தெரியு அருணு ஆனா நடந்ததெல்லா பாக்க சொல்லோ அப்டித்தான யோசிக்கமிடிது.. அட ஆமா அருணு.. அந்தா இருக்கானுங்களே.. சம்முகம், தனபாலு, இளங்கோ, இவனுங்க மூணு பேருந்தான் விசயம் நடக்கச் சொல்லோ அன்பா கூட இருந்திருக்கானுங்கோ" அவன் பக்கத்தில் இருந்த மூவரை கைகாட்டியவன்..


"நான் விசாரிச்சிட்டேன் அருணு.. நாலு அடி அட்சி கூட விசாரிச்சிட்டேன்.. அன்பா மேல தான் எல்லாத் தப்பும்னு சொன்னதே தான் சொல்றானுங்க. கண்ணால நாளுன்னு அவன் தான் இவனுங்களுக்குச் சரக்கு வாங்கிக் குட்த்திருக்கான். அவனும் குட்ச்சிருக்கான். இன்னிக்கு என் கல்யாண நாளு நான் ரொம்பச் சந்தோசமா இருக்கேன்னு.


இவனுங்களும் சொல்லி இருக்கானுங்கோ.. அன்பா குடிச்சிட்டுக் கரண்ட் கம்பம் ஏற வேணாம். நாங்க பாத்துக்கறோம்னு. அவன் தான் வம்படியா மேல ஏறி இருக்கான். குடிக்கு புட்சு இல்லியா? தடுமாறி வுழுந்திருக்கான். இவனுங்க மேல எந்தத் தப்பும் இல்லை அருணு"


கனகவேல் சொல்ல.. அம்மூவரும் கலங்கி போய் நின்றிருந்தனர். இவர்கள் குற்றம் சுமத்தியதற்காக கலங்கி நிற்கின்றனரா? இல்லை தங்களுள் ஒருவன் இறந்து விட்டதை நினைத்து வருந்தி நின்றனரா? தெரிந்து கொள்ள முடியவில்லை முகங்களை பார்த்து. அப்போது அதில் ஒருவரான சண்முகம் முன் வந்து..


"நாங்க எவ்வளவோ சொன்னோம்ப்பா.. கேக்கவே மாட்டேன்னு அடமா நின்னுட்டான். நான்தான உங்கள கூட்டிகினு வந்தேன்னு, சொல்ல கேக்காம ஏறிட்டான்ப்பா. இப்பிடி ஆவும்னு நெனைக்கவே இல்ல.


கண்ண மூடி கண்ண தொறக்குறதுக்குள்ள வுழுந்துட்டான். அப்போவும் எங்களோட பேசினான் அருணு. தலை மட்டுந்தான் வலிக்கிது. மத்தபடி நல்லாருக்கேன்னு" படபடவென அடித்த மனதை அடக்கி தயக்கத்தோடு சொல்ல..


"உண்மைய சொல்லோ வேண்டியவரு சொல்லோ முடியாமர்ந்தா.. உங்க இஸ்டத்துக்கு இன்னா வேணா பேசுவீங்ளா? பட்துக்கினு கடக்கறவங்கோ எயுந்தா வர போறாங்கோ நென்ப்பு தான உங்களுக்குலாம்”
முந்தானையை உதறிச் சொருகிக் கொண்டு.. திடமாக அவர்கள் முன் வந்து நின்று.. நறுக்கு தெறித்தார் போல் தீர்க்கமாகக் கேட்டது. வேறு யாரும் இல்லை இறந்த அன்பாவின் மனைவி தான்.

காதல் தொடரும்...