ஷ்ஷ்!!மறுத்து பேசாதே காதலே - முதல் அத்தியாயம்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,470
1,032
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

கண்ணம்மா அவர்கள் தனது "மறுத்து பேசாதே காதலே" கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்.
 

கண்ணம்மா rvrv

Moderator
Staff member
Nov 22, 2020
4
0
1
ஷ்ஷ்!! மறுத்துப் பேசாதே காதலே

கண்ணம்மா rvrv
அத்தியாயம் 1 :


எதை ஈந்து உனைப் பெறவென
அறியாதுத் தவிக்கிறேன்.

எனைப் பார்க்காதுத் துயில்க் கொண்டிருக்கும்
நயனங்களில் உயிரைக் காண.

உனதான ஊண் வினாத் தொடுக்கிறது.
எனதான உயிர் எங்கேயென.


கேட்கிறதா???


இவ்வுலகில் நடக்கும் எல்லா நிகழ்விற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கவே செய்யும். அதில் பல பொதுவாகவும், போகிற போக்கில் நடந்து, ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டவையாகவும்.. சில விதியின் செயலாகவும், வாய்த்தது அவ்வளவு தான் எனச் செய்த ஊழ்வினை பயனாகவும், இருக்கும்.


நடந்தவை நடந்தவை தான். மாறாது. மாற்றவும் இயலாது. ஆனால் சபை ஏறாத நியாங்களை, சில மனிதர்களின் சூழ்ச்சியின் காரணமாக மறைக்கப்பட்ட சம்பவங்களை, சட்டத்தின் பால் மேடையேற்றாமல் இருக்கவும் கூடாது அல்லவா?


அப்படியொரு நிகழ்வு தான். யாரும் எதிர்பாரா ஒரு நிகழ்வும் கூட .. இன்றிரவு நடந்து விட்டிருக்க, அதில் ஒரு அப்பாவி உயிரும் சென்றிருக்க, அதன் பொருட்டு நீதி வேண்டியே இப்போராட்டம்.


நிகழ்வு நடப்பது 1995 ஆம் ஆண்டு காலகட்டம். இப்பொது இருப்பது போல ம்ம் என்றால்.. கேமிராவும், கையுமாக பத்திரிக்கை ஆட்களும்.. மைக்கும், தொகுத்து வழங்குபவருமாக தொலைகாட்சி சேனல்களும் சூழாத.. ஒரு அகிம்சை ஆர்பாட்டம் நடந்துக் கொண்டிருந்தது அங்கு.


நியாயம் வேண்டும்! நியாயம் வேண்டும்!

அன்பாவிற்கு, நியாயம் வேண்டும்!நீதி வேண்டும்! நீதி வேண்டும்!

அன்பாவிற்கு, நீதி வேண்டும்!வர சொல்லு, வர சொல்லு!

கவுன்சிலரை, இங்க வர சொல்லு!தர சொல்லு, தர சொல்லு!

எங்களுக்கு நியாயத்தைத் தர சொல்லு!ஆவேசமான உரக்க குரல்கள் அந்த அமைதியான இரவை கிழித்து, அந்தக் கணத்த சூழ்நிலையைத் தோரணம் கட்டி தொங்க போட்டுக் கொண்டிருந்தது.


கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், எங்கும் சிறு பிசுறு தட்டாமல், இடிமின்னல் போல.. மனிதர்களின் சத்தம் ஓங்கி ஒலித்த படியிருக்க, கறுத்துத் திரண்டிருந்த கார்மேகமாய் இறுக்கமாக மனங்கள்.. ஆவேசத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.


எல்லோர் முகங்களிலும், சுழன்று கொண்டிருக்கும் சூறாவளி காற்றை அடக்கின ப்ராத்யனங்கள், ஆதங்கமாய் வீசிக் கொண்டிருக்க.. அந்த இடமே ஜனத்திரளில் ஒடுங்கி போயிருந்தது.


இதை விடப் பெரிய சம்பவங்களெல்லாம் பார்த்திருக்கிறேன் அற்ப பதர்களே! இங்கு நீங்கள் பிறந்தாலும் நான் தான் முதல் சாட்சி. இறந்தாலும் நானே முதல் சாட்சி. சொல்லாமல் சொல்லி.. கம்பீரமாக வீற்றிருக்கும் காஞ்சிபுரம் மாநகராட்சி அரசு மருத்துவமனை கட்டிடம்.


அதிகாலை இரண்டரை மணியளவில்.. அழுகையும், ஒப்பாரியுமாக ஆரம்பித்த இந்தக் குரல்கள், இப்பொது இடி முழக்கத்தைக் கையில் எடுத்திருந்தது.


மருந்து வாடையையும் தாண்டி, ஐந்து மணியைத் தொட்டும்.. வீரியம் குறையாமல் ஒலித்துக் கொண்டிருக்க.. பொட்டு உறக்கம் இன்றி, சோகமான முகங்கள் தாங்கி, மருத்துவமனை வெளியே அமர்ந்திருந்த அங்கிருந்தோர் அனைவருக்கும் மட்டுமல்ல.. மருத்துவமனையின் உள்ளே சிகிச்சைக்காக வந்து தங்கி இருந்தவர்களுக்கும்.. அந்தக் கூக்குரல்களோடு தான் விடிந்துக் கொண்டிருந்தது அந்நாளின் காலை பொழுது.


"எப்பா உள்ள இருக்கவுங்களும் பேஷன்ட் தான, இப்டி சத்தம் போட்டா எப்பிடி அவங்களெல்லாம் தூங்கறது? என்ன ஏதுன்னு கேக்கப்டாதா? இவங்களால எல்லாருக்கும் தூங்க முடியாம எவ்வளவு தொந்தரவு. கொஞ்சம் என்னன்னு கேளேன்"


இருந்திருந்து பார்த்து.. மருத்துவமனையில் அனுமதித்திருந்த மனைவியின் அரைத் தூக்கத்தோடு.. அவர் தூக்கமும் கெடவே.. கோவத்தோடு ஒருவர் சென்று வெளியே போய்ப் பார்த்துவிட்டு.. வந்து ரிசப்ஷனில் இருந்த அட்டெண்டர் முன்பு சண்டையிட,


'வாய்யா.. வா.. நீ ஏத்தினாவது ஆளோ.. இன்னும் எத்தனை பேரு வரப் போறானுங்களோ, நானும் வித விதமா எத்தனை பதில் சொல்ல போறேனோ. என் பொண்டாட்டி அப்போவே சொன்னா, தெக்கே சூலம் உனக்கு ஆவாது, டூட்டி ஆள மாத்தி போட்டுட்டு வீட்லயே இருன்னு, கேட்டனா? இப்போ அனுபவிக்கிறேன் '


வந்திருந்தவர் கேள்விக்குப் பதில் சொல்லாமல், அந்த அட்டெண்டராகப் பட்டவன் மைண்ட் வாய்ஸ் இது.


"யோவ் உன்னைத்தான் யா.. என்ன? கண்ணைத் தொறந்துட்டே தூங்கறியா" அவன் முன் சொடுக்கு போட்டார் வந்தவர்.


'இவனுங்க போடுற கூச்சல்ல தூங்கற மாதிரியா இருக்கு.. இந்தாளு வேற கடுப்ப கெளப்புறானே' மனதில் சலித்த வார்த்தைகள்..


"உங்களுக்கு இப்ப என்ன சாமி வேணும். அத சொல்லுங்க" வெளிப்படையாகவும் அவரிடம் வந்தது சலித்து.


'நாம கேள்வி கேட்டா இவன் என்ன நம்மளை கேள்வி கேக்கறான்' நினைத்ததைக் கேட்காமல்..


"இல்லப்பா வெளிய ஒரே சத்தமா இருக்கே.. என்னன்னு கேட்டு அவங்கள அனுப்ப கூடாதா? எல்லார் தூக்கமும் கெடுதா இல்லையா அதான் " தயங்கிய குரலால் அவர் இழுக்க..


"சும்மா போங்க சாமி, பார்த்தீங்கல்ல எவ்வளவு பேருன்னு.. எவன் தலையைக் குடுத்து மாட்டிக்கிறது. நாங்களே எப்பொ பெரிய டாக்டர் வருவாருன்னு வெயிட் செய்துட்டு இருக்கோம் " அவன் குரலில் லேசாகப் பயம் எட்டிப்பார்த்தது.


"ஏப்பா நீயே இந்தப் பயம் பயந்தா நாங்கல்லாம் எந்த மூலைக்கு.. நீ அட்டெண்டர் தான இங்க.. இதெல்லாம் உங்க வேலை தான.. பேசி கொஞ்சம் அமைதி படுத்த கூடாதா"


எப்படியாவது கூட்டத்தை அமைதி படுத்தி.. ஒரு குட்டி தூக்கத்தையாவது போட்டு விட வேண்டுமென்று எண்ணத்தில், விடாது வந்தவர் கேட்க..


அவரின் நியாயம் புரிந்தாலும், அவனால் மட்டும் என்ன செய்துவிட முடியும்.


"எவனும் பேசறத கேக்கற நிலமைல இல்ல சாமி. கேட்டல்ல சத்தத்தை இங்க வரைக்கும் காது ஜவ்வு கிழியுது. வெளிய போனேன் சிக்கி சின்னாபின்னம் தான் "


' உன் எண்ணம் பலிக்காது ராசா' ரீதியில் பதிலளித்தான் அட்டெண்டர்.


"அப்ப விடியுற வரைக்கும் நிலைமை இதானா.. நல்ல நேரத்துல ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தேன் பாரு" புலம்பலோடு வேலைக்காகாது போலயே வந்தவர் நடையைக் கட்டும் நேரம்.. என்ன நினைத்தானோ அந்த அட்டெண்டர்.


"பேஷன்ட்டு மூச்சு பேச்சு இல்லாம இருக்கான்னு கூட்டிட்டு வந்தானுங்க சாமி.. ஆனா வர வழியிலேயே ஆள் அவுட்டு போல.. டூட்டி டாக்டர் செக் செய்து பார்த்துட்டு சொல்லும் போது என்னமோ.. ஒரு குடும்பமா தான் தெரிஞ்சது. இவர் சொன்ன அடுத்த நிமிஷம். அவ்ளோ பேர் புத்துல ல இருந்து கெளம்பி வந்தாப்ல படையெடுத்து வந்துட்டானுங்க. டாக்டரே என்ன செய்யறதுன்னு தெரியாம பதுங்கிட்டாருன்னா பார்த்துக்க. நாங்களே எப்பிடி சமாளிக்கிறது திணறி போயிருக்கோம். ஏன் இவ்ளோ பேசறியே நீ போய்ப் பேசுறது? "


போகாததன் காரணத்தை நீளமாகச் சொல்லி கூடவே நக்கலும் விட,


"ஏய்யா போலீஸ்க்கு சொல்லாம.. தொந்தரவா இருக்குன்னு சொன்ன என்னைய போவ சொல்லுவியா நீ " எகிறினார் வந்தவர்.


"போலீஸ் தானே அதெல்லாம் அப்போவே சொல்லியாச்சு. அதோ பாரு அவங்களே பாதுகாப்புக்கு நிக்கிறத" அட்டெண்டர் கைகாட்ட,


அங்கே வெளியே கூட்டத்தை ஒட்டினாற் போல் மூன்று போலீஸ் கான்ஸ்டபிள் காக்கி உடையில் நின்று கொண்டிருந்தனர்.


"என்னையா இது அநியாயமாவுல்ல இருக்கு" இவ்வளவு நேரம் சண்டை போட்டதை மறந்து வந்தவர் ஆச்சர்யப்பட,


"அதான் எங்களுக்கும் தெர்ல.. வந்தப்ப ஒடம்ப வாங்கமாடோம்னு சொல்லி பிரச்சன பண்ணும் போது ஹாஸ்பிடல்க்குச் சாதகமா தான் பேசினாங்க. யாருன்னு தெரிஞ்சதும் அப்பிடியே அந்தப் பக்கம் ஜகா அடிச்சிட்டாங்க.


‘யோவ் உசுருக்கு உத்தரவாதம் வேணும்னா அமைதியா இரு, சொல்ல வேண்டிய இடத்துல சொல்றேன், அவங்க சமாதானம் செய்வாங்க அது வரைக்கும் அமைதியா இருங்கன்னு’ சொல்லிட்டாங்க. போனது பெரிய கை போல " அட்டெண்டர் அவனுக்குத் தெரிந்ததை வைத்துச் சொன்னான்.


"ஓஹ் அவ்ளோ பெரிய ஆளா.. என்ன ஆக்சிடெண்ட் கேஸா" வந்தவரின் குரலில் அறிந்து கொள்ளும் ஆவல் மிகுந்திருக்க..


"அப்பிடித்தான் போல.. எப்பிடி? எங்கிருந்து விழுந்தான் தெரியல. நல்ல உயரத்துல இருந்து விழுந்திருக்கான். பின்னந்தலைல நல்ல காயம். குடிச்சு வேற இருந்திருப்பான் போல. இவனுங்ககிட்ட சொன்னா எகிறிட்டு வரானுங்க. என்னையா ஆளை காப்பாத்தாம விட்டுட்டு பழியைப் போட்டு தப்பிக்கலாம்னு பாக்கறியான்னு.. அதான் போலீசை வர வெச்சோம். பார்த்தா அவங்களுக்குப் பந்தோபஸ்துக்கு நிக்கிறாங்க என்னத்த சொல்ல "


"அது சரி, எல்லாம் கலிகாலம். நல்ல விஷயத்தை விடக் கெட்ட விஷயத்துக்குத் தான் போலீஸ் தொண போவுது " புலம்பியதோடு வந்தவர் மறுபடியும் வெளியே சென்று பார்த்துவிட்டு வர.. அதற்குள்


"சார் உங்க வீட்டம்மா உங்கள கூப்பிடுறாங்க.. வருவீங்களாம்" டூட்டி நர்ஸ் வந்து சொல்லிவிட்டு போக..


'இவ வேற எழுந்துட்டாளா இனி நான் தூங்கினாப்ல தான்'


"இதோ வந்துட்டேன் நர்சம்மா " மனைவியைக் கவனிக்க அவர் ஒரே ஓட்டமாக ஓடினார்


இப்பொது காலை பொழுதும் நன்றாகப் புலர்ந்து விட்டிருந்ததாலோ, இவர்களது ஓயாத சத்தம் கொடுத்த தொந்தரவாலோ, ஏதோ ஒன்றில்.. மருத்துவமனையில் இருந்த மனிதர்களும், ஒன்றிரண்டாக எழுந்து நடமாட ஆரம்பிக்க.. இதெதுவும் வந்திருந்த கும்பலையும் அசைக்கவில்லை. குரலையும் நிறுத்தவில்லை. முழக்கம் தொடர்ந்த படிதான் இருந்தது.


அந்நேரம் அந்தக் கும்பலில் இருந்த ஒருவன் அக்கூட்டத்தினுள்ளே நுழைந்து, அங்கு அமர்ந்திருந்த பெண்மணி ஒருவர் முன் டீ கப்பை தட்டுடன் நீட்ட..


"ஏண்டா டேய் இங்க இன்னா விருந்து துன்னவா வந்தின்னுகிறோம், மூஞ்சி முன்னாடி டீயை எடுத்துனு வந்து நீட்ற, அப்பாலிக்கா போடா.. இல்ல சப்புன்னு வெச்சுருவேன்" எகிறிக் கொண்டிருந்தார் அப்பெண்மணி.


"அய்யே இன்னா இப்ப பண்ட்டாங்க, சொம்மா கத்தினேக்கறோமே, இத்த குடிச்சிட்டுத் தெம்பா கத்தட்டுமேன்னு எத்துன்னு வந்தா? ரொம்பத்தான் பண்ற, இன்னிக்கு முழுக்க இங்க தான். எட்த்தா எடு எடுக்காகாட்டி போ" அவன் முறுக்கி கொண்டு திரும்ப..


"சர்ரா சர்ரா கொச்சிக்காத.. ஏதோ நம்ம அன்பா மேலேயிருந்த ஆதங்கத்துல சொல்டேன். கொண்டா கொடல்ல சரிச்சிக்குவோம்" அவன் சொன்னது புரிந்து, சமாதானமாய் அந்தப் பெண்மணியும் கப்பை எடுத்துக்கொண்டாலும்..


"தோடா உனக்கு மட்டுந்தான் இருக்கா? எங்களுக்கெல்லாம் இல்லையா? அன்பாண்ணே போனதயே இன்னும் ஜீரணிக்க முடியல. ‘இன்னா ரமேஸு’ ன்னு கூடவே தோளு மேல கை போட்டு நிக்கறாப்ல இருக்கு. இதுல அந்தாளு அதான் நம்ம கவுன்சிலருக்கு சொல்லி இன்னும் வர காணோம். வரோ மணி ஒம்போதுக்கா ஆனாலும் ஆவும் போல.


விசயம் சொன்னாப்போ கூட ஒன்னும் ரியாக்சனும் தர்லையாம். நம்ம பசங்க போய்ப் பாத்துட்டு வந்தானுங்க. ஒன்னும் வெவரம் ஆப்டல. அதுக்காண்டி வரைக்கும் அல்லாருக்கும் தெம்பு வோணாம்? அத யோசிச்சு கொண்ணாந்தா என்னம்மோ திட்ற " அவன் அப்போதும் முறுக்கினான்.


அவனின் கோபத்தைக் கிடப்பில் போட்டவர்..


"ஏ இப்போ வர இன்னாவாம் அவனுக்கு.. எலெக்சன்க்கா வர சொல்லோ மட்டும் காலங்காத்தால வூட்டு வாசல்க்கா வந்து நின்னு கோலம் போட்ட கைய புட்சி ஓட்டு கேக்க தெர்ஞ்சிது.. ஒரு அர்ஜண்டுன்னா எந்நேரமானாலும் சர்தான்னு வர சவுகர்யப்படலயாமா அந்தக் கவுன்சிலர் கம்னாட்டினால.. இங்க மட்டும் அவன் வரட்டும் ஆஞ்சிபுடுறேன் ஆஞ்சி. ஒரு ஆபத்துக்கு வராத நாய் என்னாத்துக்குப் பதவி வாங்கி இருக்குதுன்னேன் "


அந்தப் பெண்மணி வசவ.. இது அவர் ஒருவரின் ஆத்திரம் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரின் கோபமும் அது தான்.


இப்படியொரு நிகழ்வு, இன்னதென இன்னாருக்கு ஆகி விட்டதென அவர்கள் ஊர் கவுன்சிலருக்கு சொல்லியனுப்பி.. இரண்டு மணி நேரம் கடந்து விட்டது. இன்னமும் அவரின் வருகை இருப்பதாய் தெரியவில்லை.


இத்தனைக்கும் ஒரு வருடம் முன் நடந்த கவுன்சிலர் தேர்தலுக்குக் கூட அன்பா தான் கூட நின்று எல்லா வேலையும் செய்து கொடுத்தான்.


"நீ நில்லுண்ணே, அல்லாரும் நம்ம ஜன்ங்கோ.. அவங்கள்ல ஒருத்தன் நீ , உன்க்கு ஓட்டு போடாம வுட்ருவாங்களா.. இல்ல நான் தான் வுட்ருவேனா வா பாத்துக்கலாம் " அவன் தான் ஊக்கமளித்து நிற்க வைத்தான்.


மக்களும் " எங்க அன்பாவே சொல்றான் உன்னைப் பத்தி.. இதுக்கு மேல இன்னா வோணும் எங்ளுக்கு. நீ நில்லு கண்ணு. நாங்கக்கீறோம். அவ்ளோ இன்னாத்துக்கு நீ ஜெயிச்சிட்டேன்னே நென்ச்சிக்கோ " சொன்னதோடு சொல் மாறாமல் அவரை வெற்றியடைய வைத்திருந்தனர் தேர்தலில்.


அப்படியிருக்க அடித்துப் பிடித்து வர வேண்டாம். மனசாட்சியோடு சிறிது நேரத்திலாவது வந்திருக்கலாமல்லவா? இன்னமும் வரவில்லை. ஓடி ஓடி செய்தவன் ஓட்டத்தை நிறுத்தி இருக்க.. சொன்னவை நம்ப முடியாமல் இருக்கவே.. அதற்கான காரணமும் குழப்பத்தை விதைத்திருந்தது.


அதன் பொருட்டு அடுத்த அடி எப்படி எடுத்து வைக்கவெனப் புரியாமல்.. முடிவெடுக்கும் பொருட்டும்.. தீர்விற்காகவும் வர சொல்லி ஆள் அனுப்ப.. " நீ போ இதோ பின்னாலே நான் வரேன்" சொல்லி அனுப்பியவன் இன்னமும் வர வில்லை. வருவானெனப் பார்த்து, பார்த்த கண்கள் பூத்து, அங்கிருந்தோருக்கு அழுகையும், வருத்தமும் இப்பொது கோபமாக உருப்பெற்றிருந்தது.


அதனாலேயே அந்தத் தடித்த பெண்மணி வார்த்தையை விட, அவர் அருகில் இருந்த இன்னொரு பெண்மணி..


"இந்தாடி வாய அடக்கு, பக்கத்துல யாரை வெச்சிருக்கோம்னு மொதல்ல பார்த்துட்டு வார்த்தையை விடு. இது இப்ப இருக்க நிலைமைக்கு, இந்தப் புள்ளைய பக்கத்துல வெச்சிக்கிட்டு இப்டி பேசலாமா? எங்க வந்து இன்னா பேச்சு பேசுர நீ " பேசியவரை அடக்கினவர்..


"டேய் நீ டீ குடுக்கதான வந்த.. குடுத்துட்டல்ல கெளம்பு. அப்பாலிக்கா குந்தினு இருக்கவங்கள கவனி" தட்டோடு வாங்கிக் கொண்டார்.


அவருக்கொன்று எடுத்து.. பின் இன்னொன்றும் எடுத்துக் கொண்டு..


"ஏய் இந்தாங்கடி.. அல்லாரும் ஆளுக்கு ஒண்ணா எடுங்க. குடிச்சிப்புட்டுத் தெம்பா கத்துங்க. இங்க குடுக்கற சத்தம் அந்தாளு சம்பந்தப்பட்டவங்க அல்லாரையும் கூட்டின்னு இங்க ஓடியாரானும்"


டீ தட்டை அடுத்தடுத்து இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளுமாறு அனுப்பிவிட.. இருப்பவர்களும் மறு பேச்சுப் பேசாமல் எடுத்து குடிக்க ஆரம்பிக்க.. அது பாட்டிற்கு டீ விநியோகம் அரைமணி நேரத்திற்கு மேல் பிடித்தது.


ஆம், இருந்து போராட்டத்தை முன்னெடுத்து.. கையிலெடுத்தது.. பத்து பேரோ இருபது பேரோ இல்லை. வந்திருப்பது ஒட்டுமொத்த ஒரு ஊர் மக்களும். எண்ணிக்கை மட்டும் இருநூற்றைம்பதுக்கு மேல்.


காதல் தொடரும்...