ஷ்ஷ்!! மறுத்து பேசாதே காதலே நான்காம் அத்தியாயம்

கண்ணம்மா rvrv

Moderator
Staff member
Nov 22, 2020
7
0
1
ஷ்ஷ்!! மறுத்து பேசாதே காதலே

அத்தியாயம் 4


எனை விட்டுச் சென்ற நாழிகையில்
உன் நாமமதில் எனை சேர்க்கிறேன்.


ஏதாவதெனை உனதான பூரணத்துவமாகச்

செய்துவிடாதாவெனும் நப்பாசையில்.நீ வெற்றி பெற உனையே

தோற்கடித்திருக்க வேண்டாம் நீ!!!

அவர் சொன்னதை அவனோடு பழகியிருந்த அங்கிருந்தோர் யாருமே நம்ப மாட்டார்கள். இதில் அவனை அணுவணுவாய் புரிந்து குடும்பம் நடத்தியவள் எவ்வாறு நம்புவாள். இவ்வளவு நேரம் பித்துப் பிடித்தவள் போல் நின்றிருந்தவள்.. அதிரடியாய் முன் வந்து நின்று கேள்வி கேட்பாளேன யாரும் எதிர்பார்க்கவில்லை.
"இன்னாம்மா இன்னா சொல்ற" கனகவேல் அவள் முன் வர..
"ண்ணா எதானாலும் அங்கருந்தே பேசுண்ணா " அவளுக்கு முன் வந்து அவனை இடைமறித்தான் அருண்."சரிப்பா அது இன்னா பேசுது.. பிரியறாப்ல சொல்ல சொல்லு "
"அவங்கோ யாரையும் கூட்டிகினு எங்கயும் போவல.. இதோ நிக்குறாங்களே, இவங்க ரெண்டு பேருந்தான் லீவுல வூட்ல இருந்தவங்கள வந்து.. வுடாப்பிடியா ‘நீ வந்தா தான் அன்பா ஆச்சின்னு கூட்டினு’ போனானுங்க" சண்முகம் தனபால் இருவரின் முன் கையை நீட்டி சொன்னாள் அவள்.
"இன்னாது நாங்களா? இன்னாம்மா ஒளர்ர? புருசன் போனதுல புத்தி கித்தி பேசகி பூட்ச்சா உனக்கு? உம்புருசன் தாம்மா எங்கள வூட்டுக்கு வர சொன்னான். தோ கீறானே இளங்கோ இவன்தான் எங்கள உங்க ஊட்டுக்கு கூட்டினு வந்தான். அன்பா இட்டார சொன்னான்னு. வோணும்னா அவன கேளு "
தனபால் சொன்னதும்.. அனைவரும் பார்வையும் இப்பொது இளங்கோவை பார்க்க.. அவன் முத்துமுத்தாக அரும்பிய வியர்வையை.. சட்டையை இழுத்து துடைத்துக் கொண்டான்.
"இன்னா இளங்கோ.. தனபால் சொல்றது மெய்யாலுமா"
"ஆமா அருணு.. அன்பா தான் இட்டார சொன்னான். இவுங்கோ கூடச் சொன்னாங்கோ.. வேல கீதுப்பான்னு. நான் தான் அன்பா விருந்து தரான் துன்னுட்டு போவலாம்னு கூட்டினு வந்தேன். முடிஞ்சதும் நானும் கூட வரேன்னு வந்துட்டான். ஒன்னும் சொல்ல முடியல. அதான் அன்பா இருக்கானேன்னு எனக்கும் ஒடம்பு ஜொரமாருக்கவும் வூட்டுக்குப் போய்ட்டேன்"

கண்கள் ஒரு நிலையில்லாமல் சுழல.. வராத வார்த்தைகளை இளங்கோ வம்படியாக இழுத்துக் கோர்வையாகச் சொல்லி முடிக்க.. அத்தனை மக்களும் கேட்டு நின்றிருந்தனர். அவன் சொன்னதை அசை போட்டு.

"நீ தான் போவலையே அப்றம் எப்பிடி இங்க வந்து நிக்கற ""அ.. அ.. அது.. அன்பாவ அனுப்பினாலும் ஏ மன்சு கேக்கலபா.. ஆபிசர் வேற திட்டுவாரு தெரிஞ்சா.. அதா அவன அனுப்பிட்டு.. நாம வேலையை முடிச்சி குடுப்போம்னு போயிருந்தேன் " கழுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

"இன்னாம்மா அல்லா டவுட்டும் தீந்துச்சா? அல்லாம் தெளிவாக்கீதா? இப்போ இன்னா சொல்ற? " எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்ததில் கனகவேல் தைரியமாகப் பேச..

"இருண்ணா ஏன் துள்ற.. இப்போ எனக்குக் கேக்கணும்" பார்வையைத் திருப்பி நிதானமாகவே சொன்னாள் அன்பாவின் இல்லாள்.

"சம்முகண்ணே நீங்க சொன்னாப்லயே அவர் வுழுந்தார்ண்ணே வெச்சிக்குவோம்.. அடிபட்டவுங்கள ஆஸ்பித்திரி தான கூட்டினு போனும். நீங்களும் தனபாலண்ணனும் எதுக்கு ஏ வூட்டுக்கு கூட்டினு வந்து உடனும் " கண்களைச் சுருக்கி அவள் கேள்வியைச் சந்தேகமாகத் தொடுக்க..

"இன்னாம்மா? நாங்க அட்ச்சி கொன்னு வூட்டாண்ட போட்டோம் சொல்றியா" ஆதங்கமாகச் சொன்னார் சண்முகம்

இவ்வார்த்தைகளை கேட்பவர் யாருக்கும் கதி கலங்கும். அன்னம் கூட வாய்பொத்தி அழுதார். ஆனால் அவள்.."இல்லண்ணே நான் அந்த அர்த்தத்துல கேக்கல.. அப்பிடி நான் நென்ச்சிருந்தா ஆஸ்பித்திரி முன்ன எம்புருசன் உடம்பப் போட்டுட்டு.. இங்க கேள்வி கேட்டுட்டு நின்னுட்டு இருக்க மாட்டேன். போலீசுக்கு போய் நின்னுருப்பேன். எனக்கு வோணுங்கறதெல்லாம் எம்புருசன் சாவுல இருக்க உண்மை அவ்ளோதான்"ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாகச் சொல்லி.. ஒரே போடாகப் போட.. அங்கே ஒரே நிசப்தம். அன்னம் கூடக் கிறுகிறுத்து இருந்தார் நடப்பதை பார்த்து நின்றதில். அவருக்கு இவ்வளவு யோசித்து நடந்துக்கொள்ளத் தெரியாது.

'தேவையில்லாம தலையை விட்டுட்டோமோ.. இது இப்போதைக்கு முடியாது போலயே' மருத்துவமனை டீன் விழித்து நிற்க..

'இந்தப் பொண்ணு வேற குறுக்குக் கேள்வியா கேக்குது.. இந்தாளு ஒளறிடுவானோ "மின்துறை அதிகாரி பேயறைந்தது போல் நிற்க..

"எங்ககூடவே இருந்தவன்ம்மா அன்பா.. அவனுக்குப் போய்த் துரோகம் பண்ணுவோமா.. அவன் உழும் போது எங்களுக்கெல்லா உசுரே இல்ல. ஆனா அவன் தான் எனக்கு ஒண்ணுமில்ல. பின்னந்தல தான் லேசா வலிக்கிது. நாளைக்கு ஆஸ்பித்திரி போய்ப் பாத்துக்கறேன். என்னை வூட்ல உட்ருங்கன்னு சொன்னான். தலைல ரத்தம் எதுவும் வரலங்காவும்.. நாங்களும் பெருசா அடி படல போலன்னு விட்டுட்டோம். கூடவே அவன் பேசி நடக்கவும்.. வண்டில கூட்டினு வந்து உட்டுட்டு போய்ட்டோம். தோ அன்னம் கூடக் கதவத் தொறந்து வுடும்போது பாத்துச்சே "

பேச்சு அத்தனையும் உண்மை போல் சொல்லி அவர் அன்னத்தைக் கைகாட்ட.. மருமகள் உட்படக் கூட்டமனைத்தும் இப்பொது அவரைப் பார்க்க.. நடந்த நிகழ்வுகளில் நேற்றிரவு என்ன நடந்தது என்பதையே அவரால் யோசிக்க முடியவில்லை.

கரகரவெனக் கண்களில் நீர் வழிய.. கைகளைத் தெரியவில்லை போல் அவர் செய்கை செய்து காட்ட.. அவருக்கே அவரைப் பிடிக்கவில்லை. எந்தத் தாய்க்கும் வரக்கூடாத நிலை. பெற்ற பிள்ளைக்கு என்ன நடந்ததென்று கூடப் புரிந்துகொள்ள முடியா நிலை. தள்ளாடியவரை பக்கத்திலிருந்த பெண் தாங்கி கொள்ள.. பேரனை கெட்டியாகப் பிடித்து நின்று நிலைநிறுத்தி கொண்டவர் குறுகி போனார்.

அவரே இப்படி நிற்க,, என்ன சொல்லுவாள் மருமகள் இவ்வளவு குழப்பமாகச் சொல்லும் போது. நடந்த அனைத்தும் சுற்றி முற்றி நின்ற இடத்திலேயே வந்து நிற்க.. அப்போதும் தெளிவாக இருந்தாள் பெண்.

அவள் உள்ளங்கையில் காய்ந்திருந்த.. கணவனின் காய்ந்த குருதி.. அறுதியிட்டு சொன்னது அப்படியில்லை. ஏதோவொன்று இடர்ந்து இருக்கிறதென்று. இறுக்க மூடி கொண்டாள். உள் மனம் அனைத்தையும் மீறி அடித்துச் சொன்னதில் தானாக நிமிர்வு வந்திருந்தது உடல் மொழியில்.

கனகவேலுவே அசந்து நின்றான் இவளின் நிமிர்வில். கட்டினவனைப் பறிகொடுத்து கலங்கி போய் நிற்பாள். மக்களை ஏதேனும் சொல்லி திசை திருப்பி விடலாம். இவன் தைரியமாக வந்திருக்க.. வில்லிலிருந்து வெளிப்பட்ட அம்பாய்.. நேர்கோடாக வந்து குத்தி கிழிப்பாளென நினைக்கவில்லை. அன்பாவின் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படும் அவனின் மனையாள்.

"இப்பதா அல்லாம் கிளியர் ஆயிட்ச்சே பா.. கையெழுத்து போட்டுட்டு பாடி வாங்கில்லாமில்ல " ஈவு இரக்கமின்றிக் கனகவேல் அங்கிருந்தோரை பார்த்து கேட்க.. கூட்டத்திற்குள் சலசலப்பு.எல்லாம் ஆதாரத்தோடு சொல்லும் போது.. என்ன சொல்ல முடியும். யாரோடும் அன்பவிற்கு விரோதம் கிடையாது. வைத்துக்கொள்ளவும் மாட்டான்.

"நமக்குள்ள இன்னாண்ணா.. இப்போ இன்னா நடந்து போச்சு.. நா உன் தம்பி இல்லியா நா சொன்னா பொறுத்துக்க மாட்டியா " சுமூகமாகக் கொண்டு சென்று விடுவான் பிரச்னையை. அதனாலே யாருக்கும் அங்கு ஆட்சேபனையோ, சந்தேகமோ வரவில்லை. இருந்தால் தானே அறிவிக்க. தோன்றவில்லை. அமைதியாக இருந்தனர் ஒப்புக்கொள்வது போல்.

"அப்றம் இன்னாப்பா அருணு.. அந்தப் பொண்ணான்ட சொல்லி கையெழுத்து போட்டு அவன வாங்கிக்கச் சொல்லு " அவளிடம் பேச துணிவில்லை போல அவனுக்கு. பார்வையைக் கூட அவள் பக்கம் செலுத்தவில்லை. ஆனால் அவளுக்கு அப்படியொன்றும் எண்ணமில்லை போல்."இல்லண்ணா நான் வாங்க மாட்டேன். இன்னொன்னும் கேக்கணும் எனக்கு "அசராமல் நின்றாள் அவள்.

"அதான் அல்லாம் பளிச்சுனு கீதே அருணு. இன்னும் யாராண்ட கேக்கணுமாம் "

"உங்களாண்டண்ணா "

"என்னாண்டவா.. இ.. இ.. இன்னா.. இன்னா கேக்கணும்" பகீரென்று ஆனது கனகவேலுவிற்கு. திருத் திருத்தான். ஆனாலும் அதை மறைத்து நிற்க.

"இருண்ணா கேக்கலாம்.. இன்னாம்மா தங்கச்சி.. இன்னா கேக்கணும். கேளு" இது அருண் அவனுக்குமே புரியவில்லை இன்னும் என்னவென்று.

"அவர் லீவுன்னுட்டு போனதென்னவோ தப்பு தான்ண்ணா.. ஆனா அவர் இன்னும் வேலைல தானே கீறாரு அதனால " மேலும் அவள் ஏதோ சொல்ல வர..

"இன்னாம்மா காம்பன்சேசன் எதனா வோணுமா" உன்ன மாறி எத்தன பேர பாத்திருப்பேன் ரீதியில் சந்தோஷமாக இடைமறித்துக் கேட்டான் கனகவேல்.

"இல்லண்ணா வேல போட்டு குடுக்கணும்" மிகத் தெள்ள தெளிவாகத் திருத்தமாக விழுந்தது சொற்கள் அவளிடமிருந்து.

அன்னம் உட்பட இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தது அன்பாவின் இறப்பில் ஏதேனும் மர்மம் இருக்கிறதோவென அறிய. எல்லாம் ஒன்றோடு ஒன்று கூட்ட இரண்டு கணக்காக.. எல்லாம் தெளிவாக இருக்க.. அதில்லை என்றதும் அமைதியாகி விட்டனர்.

இதில் ஒன்றை மறந்தனர். வந்திருப்பவர்கள் அனைவருமே சாட்சிகள் தான். அவர்கள் சொல்வது தான் உண்மை. அது பொய்யாக இருந்தாலும். திரித்துக் கூறினாலும். ஒன்றும் சொல்ல இயலாது நம்பித்தான் ஆகவேண்டுமென.

ஆனால் அவள் அப்படி நம்புபவள் இல்லையே. நம்பித்தான் ஆக வேண்டிய அவசியமுமில்லையே. ஒன்றோடு ஒன்று கூட்ட வந்த விடை இரண்டல்ல, ஒன்றுமேயில்லையென அவள் புத்தி அடித்து சொன்னது.

"இன்னா இந்தப் பொண்ணு இப்பிடி பேசுது புருசன் செத்தது கொஞ்சங்கூடக் கவல இல்லாம"

"என்னப்பவே சந்தேகம். இன்னாடா இந்தப் பொண்ணு புருசன பறிகொட்த்துட்டு.. இத்தன பேர் மத்தில நெஞ்ச நிமித்தி பேசுதேன்னு "

"அட ஆமக்கா புருசன் போய்ட்டான் ஒரு சொட்டு கண்ணுதண்ணி வரல.. அவ்ளோ நேரம் எம்மா ஆறுதல் சொன்னோம் வாய மூட்டு இருந்துட்டு.. இப்போ இன்னா பேச்சு பேசுது "

"பாத்தியா புருசனை வுட இவளுக்கு வேல முக்கியமா பூட்ச்சி.. இவளுக்கோசரம் பாவப்பட்டு வந்தோம் பாரு நம்மள சொல்லோணும் எல்லாம் கலிகாலம் "

இப்படியாகக் குத்தி கிழிக்கும் வார்த்தைகள் அங்கங்கு. எல்லாம் அவளைச் சுற்றி. பெண் நிமிர்வை யாரும் விரும்பவில்லை. அவள் எண்ணங்களும் புரியவில்லை. ஆனால் அருணுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. உவர்ப்பாயில்லை.

இது சரி வருமா அவன் வழியே விடாமல் பார்க்க.. அவளும் எதற்குமே அசரவில்லை. தீர்க்கம்மான முடிவுடன் உரமிட்டவள் போல் நின்றிருந்தாள். நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசிக்கொள்ளுங்கள். எனக்கு வேண்டியது ஒன்று தான். அது எனக்குப் பதில் நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டுமென்பது தான் போல.

அவள் நின்றிருந்த விதமும், மன திடமுமே சொன்னது. இவள் இரண்டில் ஒன்று முடிவு தெரியாமல் போக மாட்டாளென. கனகவேலுவும் ஒரு முடிவுக்கு வந்தவன்.. பக்கமாக நின்றிருந்த உயர் அதிகாரியை பார்க்க.. அவரும் சம்மதமாகத் தலையசைத்தார். ‘எப்பிடியாவது முடிச்சு விடு இதுல இருந்து வெளியே போகலாமேனும்’ ரீதியில்.

"சரிம்மா பேசிக்கலாம்.. நீ இப்போ சம்மதம் சொல்லு "

இதொன்று போதுமே அவளுக்கு.. எவ்வித வாக்குவாதமோ, மறுப்போ இல்லாது ஒத்துக்கொண்டதே சொல்கிறதே.. ஏதோ ஒன்று மறைந்து கிடக்கிறதென்று அவன் கணவனின் இறப்பில்.அதில் அவள் முடிவு மேலும் உறுதியாகியது. இறுதியாகக் கூர்மையாக அவளும் சொன்னாள்."சரிங்கண்ணே.. இத்தனை பேரை சாட்சியா வெச்சு நீங்க சொல்றதுனால.. நானும் தான் என்ன சொல்லிர போறேன் "

அதில் என் இலக்கை அடைந்தே தீருவேன் என்ற தோனி தொக்கி இருக்க“சரிம்மா பாத்துக்கோ” இவளென்ன செய்துவிடுவாள். பார்த்துக் கொள்ளலாம். நானில்லாமல் எதுவும் செய்யாது இவ்விஷயத்திலென.. மிகுந்த அலட்சியமிருந்தது கனகவேலின் தொனியில்.“தங்கச்சி ஓசன பண்ணி தா பேசறியா” அருண் மெலிதான குரலில் கேள்வியெழுப்ப..“உ எல்பு இர்ந்தா என்க்கு போதுண்ணா” திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தாள். நீ எனக்கு செய்துதான் ஆக வேண்டுமென்பது போல்.“சரி இத்த அப்றம் கண்டுக்குவோம்” அவனும் அமைதி காத்தான்.பிறகென்ன, மளமளவென நின்றிருந்தவைகள் எல்லாம் முறைப்படி நடக்க ஆரம்பிக்க.. வந்திருந்தவர்களும் சிறப்பாக நினைத்ததை முடித்து விட்டோமென நடையை கட்ட, இப்பொது அவளுடன் சேர்ந்து ஊர் மக்கள் காத்திருப்பது.. உடற்கூறாய்வு முடித்து வரும் அன்பாவின் உடலுக்காக.

அதற்காகப் பேப்பர் ஒன்றில் கையெழுத்து வாங்க வயதில் மூத்த அட்டெண்டர் ஒருவர் அவளருகில் வர.. இவளும் என்னவெனப் பார்த்தாள்.

"உன்பேர போடு தாயி.. எங்க வேலைய ஆரம்பிக்கோணும் "

எத்தனையோ இறப்புகளைப் பார்த்தவர் தான். ஆனால் இரவிலிருந்து அவள் அமர்ந்திருந்த விதம். பேசிய நிமிர்வு உலுக்கியிருந்தது அவரை. அதற்காகவே வேலை நேரம் முடிந்தும் இருந்தார். நல்லபடியாக இவளுக்கு இவள் கணவனை கொடுக்க வேண்டுமென. அவருக்கு இருபத்தியைந்து ஆண்டு அனுபவம் இதில். அவளைப் பார்க்கும் போது நெகிழ்ந்து வந்தது வார்த்தைகள்.

"கொண்டாங்க " கை நீட்டி வாங்கி இட்டாள். அவள் தலையெழுத்தை மாற்றியவனின் பெயரையும் தன் பெயரின் பின்னால் இட்டு.

"அருள்மொழி அன்பானந்தம்" எழுத்திற்கும் வலித்திருக்காது.

"நீ ஜெயிச்சிட்ட மாமா.. உன் பேரை என் பேரோட சேர்த்துட்டேன் " விக்கின தொண்டை குழி ஏறி இறங்க.. எவ்வளவு நேரம் எழுத்தை தடவி கொடுத்தாளோ?

"குடு தாயி " கண் கொண்டு பார்க்க முடியாமல் கிட்டத்தட்ட வெடுக்கென்று பேப்பரை பறித்து.. பெரியவர் நடையைக் கட்ட.. என்ன நினைத்தாரோ?"எதனா என்ட சொல்லனுமா தாயி " திரும்பி நின்று கேட்டார்..“ஆமாம்” இவள் தலை ஆட்டின்னாலும் இதை அவள் அவரிடம் சொல்லும் முன்னமே கண்கள் யாசித்தது. சரியென்று சொல்லி விட வேண்டுமேயென."அவங்களுக்கு வலிக்காம செய்றீங்களா "

என்ன சொல்லுவார்? அவர் தலை அவர் சம்மதமில்லாமல் சரியென்றது. திரும்பி ஒரு எட்டெடுத்து வைக்க.."ஐயா " அவளே தான்."என்னம்மா "எழுந்து சென்றவள் "இந்தச் சேலைய மொத அவங்க மேல போட்டு போத்தி தச்சி தரீங்களா? என் வாசம் இல்லாம அவங்க நிம்மதியாவே தூங்க மாட்டாங்க"எத்தகைய அழுத்தம் தாங்கிய வார்த்தைகள். அப்பப்பா..இதை அவள் அணியும் சேலை ஒன்றை அவர் கையில் திணித்துக்கொண்டே.. துடி துடித்த உதட்டை அழுந்த கடித்து அவள் சொல்ல.."அடிப்பாதகத்தி உனக்கிந்த நிலைமையா டி.. நாப்பேத்த மவனே பாத்தியாடா உம்பொஞ்சாதிய " அன்னம் வயிற்றில் அடித்துக் கொண்டு அழ..

ஊரே ஓஓஓஓ வென்று கதறி கத்த.. பழுக்க அனலில் இட்டு அடித்து வடிவமைக்கும் இரும்பாய் உறுதியாக நின்றிருந்தாள். தனக்கு பதிலாக தலையாட்டி போகிறவரை பார்த்து.உள்ளே சத்தமில்லாத யுத்தமொன்று நடந்துக் கொண்டிருந்தது.அவள் அருள்மொழி அன்பானந்தம்.
காதல் பேசும்...