ஷ்ஷ்!! மறுத்து பேசாதே காதலே ஐந்தாம் அத்தியாயம்

கண்ணம்மா rvrv

Moderator
Staff member
Nov 22, 2020
7
0
1
அத்தியாயம் 5 :

காலத்தின் பிழர்வில் உனை
பிரிய நேர்ந்திருக்கலாம்.
ஆனாலும் உன்னுடனே என் நடப்பு

ஏதேனும் ஒன்றாக உன்னோடு
காலம் கழிக்கவே
எண்ணம் கொண்டலைகிறது
பெண் மனம்
நானுமுன் பொருளன்றோ!!!


எத்தனை இரைச்சல்களுக்கு மத்தியில் இருந்தாலும் மனதில் பொங்கி பிரவாகமெடுக்கும் கற்பனை ஊற்றைத் தடுக்காது.. செவ்வெனக் கரைபுரள விடும் எழுத்தாளினியின் மனநிலை போல.. எங்கு? யாருக்கு? என்ன நடந்தாலும்.. மனித வாழ்க்கை ஓரிடத்தில் தேங்கி நிற்காமல் நீரோட்டமாகச் செல்லுமே அதுபோல் ஒரு நாள் இன்றும்.

காஞ்சிபுரத்தை அடுத்து, செங்கல்பட்டுச் செல்லும் வழியில்.. வாலாஜாபாத்திலிருந்து கிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அந்தப் பழைய சீவரம் கிராமம். பத்மகிரியென மக்களால் அழைக்கப்படும், சிறிய மலையானதன் உச்சியில் அமர்ந்து, அருள்பாலிக்கும் ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவில் அங்கு வெகு பிரசித்தம்.

குடும்பச் சகிதமாக வருபவர்களுக்குச் சுற்றுலா தலமாகவும், காதலர்களுக்குப் பொழுதுபோக்கு தலமாகவும் விளங்குகிறது. சுற்றிலும் பாறைகளும், அமர்ந்து பேச கூடிய அளவிற்கு அங்குமிங்குமாய்ச் செடி, புதர்கள் மறைத்த இடங்களுமாய், மூலிகைகளும் விரவி இருக்கும் அவ்விடம்.

அது மட்டுமா? அங்கிருந்து பார்க்க, காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்கள் அத்தனைக்கும்.. தாகம் தீர்க்கும் பாலாறு கரை புரண்டோடுவதை ஆசை தீர காணலாம்.

அதோடு, அத்தலத்தின் அருகில் ஆற்றின் மறு கரையில்.. அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலும் வீற்றிருக்க.. மிக முக்கியமாகப் பாலாறோடு சேர்ந்து செய்யாறு, வேகவதி ஆறும் சங்கமித்துக் கலக்கும் இடமாக இருக்க.. திருமுக்கூடல் சங்கமம் என்றும் கூடச் சொல்வர்.

கண் போதாது. அவ்விடத்தில் பெருமழை பெய்து.. வெள்ளை வெளேரென்று பால் பொங்கி ஓடுவதைப் போல, புது வெள்ளமாக ஓடும் ஆற்றைக் காண..

இத்தனை பெருமைகளை உள்ளடக்கிய பழைய சீவரத்தை ஒட்டியுள்ள சிறு கிராமம் அது.

ஆழ்துளை கிணறுகள் தோண்டும் நிலை வராது, சாதாரணக் கிணறுகளிலே நீர் கிடைக்கும் பொன்னான காலம். நிலத்தடி நீருக்கு பஞ்சமில்லாது போகவே.. அங்கங்கு பம்புசெட் விவசாயமும் வானம் பார்த்த விவசாயமும் நடந்து கொண்டிருந்தது . கூடவே பக்கத்து கிராமங்களின் வயல் வேலைகளுக்குச் செல்லும் மனிதர்களும், கைத்தறி சேலைகள் உருவாக்கும் நெசவாளர்களும் அதிகம் அங்கே.

உழைக்கும் மக்கள் அதிகம் இருக்கவே.. எத்தனை வெகு வேகமாக அதிகாலை புலருகிறதோ, உழைத்த களைப்பை அயர்த்திட அதே வெகு வேகத்தில் பொழுதும் அமிழ்ந்துவிடும்.

பேருந்து பேருக்கெனக் காலை வேளையில் மட்டுமே எட்டிப்பார்க்க.. வேறெந்த நடமாட்டமும் இல்லாது மாலை மங்கிய பொழுது.. அவரவர் வாழ்க்கை முறைக்கேற்ப அமைதியாகப் போக.. இருள் தொடங்கி ஒன்பது மணி வாக்கிலே ஊரே அடங்கிவிடும் அமைதியாய்.

எப்பொழுதாவது நகரிற்குச் சென்று வருபவர்கள் வரும் வண்டிகளைத் தவிர்த்து.. ஆழ்ந்த அமைதியாக இருக்கும் அந்தக் கிராமத்தின் ஒரு தெருவில்.. வரிசையாக அத்தனை வீடுகளிலும் விளக்கெறிய, ஆள் நடமாட்டங்களும் இருக்க.. அதில் ஒரு வீடு மட்டும் அமைதியாய் இருளில் மூழ்கியிருந்தது.
“இன்னாச்சு இந்த த்தைக்கு, வாசல்ல லைட்ட கூடப் போடாம வூட்ட இருட்டுல வெச்சினுக்கிது.. இன்னா தான் செய்து இது.. தூங்கிடுச்சோ? அதுக்குள்ளயுமா? இல்ல வேற எதனாவா? அய்யோ எம்பிள்ள”

இருபதடி தூரத்தில் வீட்டை பார்த்த மாத்திரத்திலேயே, இத்தனையும் மனதில் அவளுக்கு ஓடியிருக்க.. இரு சக்கர வாகனம் நிற்க முன்னமே வண்டியிலிருந்து இறங்கியவள் ஓடி வந்து, கம்பி கேட்டை திறக்க கையை வைக்க..

“இன்னும் ஒரு அடி எட்த்து வூட்டுக்குள்ளார காலை வெச்ச? நான் மனிசியாவே இருக்க மாட்டேன். நில்லு டி அந்தாண்டையே” சீற்றமாக விழுந்தது அந்தக் கணீர் குரல்.

வந்தவளுக்கு.. கேட்ட அந்தக் குரலில் படபடப்பு லேசாக அடங்கி.. ஆசுவாசம் எட்டிப்பார்க்கவே தன்னைச் சட்டென மறைத்தாள். நிமிர்ந்து, குரல் வந்த திசை திரும்பியவளுக்கு.. அவர் கண்ணிற்குப் புலப்படாமல்,

“த்த மொதோ வாச விளக்கை போடு, உன்க்குப் பதில் சொல்லோ கூட நீ எங்கருக்கத் தெர்ல” அவர் பேசியதை காதில் வாங்காதவள் போல் சொன்னாள் அருள் மொழி.

சொன்ன வார்த்தைகளன்னவோ, அலட்சிய குரலை தாங்கி வந்ததாகவே தோன்றியது அவருக்கு. அவள் பேச்சின் தொனியே அப்படித்தானென அறிவார் தான். ஏனோ கோபம் புத்தியை மழுங்கடித்திருந்தது.

“நான் இன்னா சொல்றேன்? இவ இன்னா பேசறா பாரு? காதுல வாங்கறாளா எங்கனா. திமுறு புடிச்சவ. இந்தச் சவுண்டுக்கு ஒன்னியும் கொற்ச்சல் இல்ல. வந்ததுமே எனக்கு ஆர்டர் போடுறா” முனங்கினாலும்.. கோபத்தில் அதை மறந்து அமர்ந்திருந்ததை உணர்ந்து.. அவள் சொன்னதைச் செய்தார் அன்னம். அவளது மாமியார்.

அதற்குள் அவள் சில அடிகள் வைத்து உள்ளே வந்துவிட்டிருக்க..

“நான் சொன்து உன்க்கு கேட்டுச்சா? இல்லியாடி? மாமியார் சொல்லுக்கு ஒரு மற்வாத வோணாம். நில்லுன்னா நில்லு டி” மீண்டும் அவளைத் தேக்கும் படியான தொனியில் சொல்ல..

“இன்னா, த்த.. ன்னா நடந்துச்சு இப்ப.. ஏன் இப்டி பேசினுக்கீற நீ. இன்னா பேசறன்னு ஓசிச்சு தான் பேசறியா” அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, நின்று விட்டாலும் சிறிதும் பாதிக்கவில்லை அவளை.

சொல்லிய வார்த்தைகளும் சரி, சொல்லிய விதத்திலும் சரி.. சொல்லிய குரலிலும் அத்தனை இதம் தான். அன்னம் விளக்கை போட்டதுமே அவருக்கும் குழந்தைக்கும் ஒன்றுமில்லையெனப் புரிய.. நிதானம் வந்திருந்தது. அக்கணீர் குரலுக்கு எதிரான மென்னிதம் தவழ்ந்தது. குரலில் சிறு பதட்டம் எட்டிப் பார்க்க வில்லை.

அந்தப் பாவனையில், அவளைப் புரிந்து கொண்டவரின் உள்ளம் உருகினாலும், சுதாரித்து..

“ஆமண்டி தவ்லூண்டு தவ்லூண்டா தெரிஞ்சிக்கினது.. இப்போ தான் முன்னைக்கி ரொம்ப விலாவாரியா தெர்ஞ்சிகினேன் அத்தா பேசறேன்” என்றார் இன்னும் கடுமையாக.

“ஓஹ் அப்பிடியா சங்கதி, சர்தான்” ஒரு கணம் கண்கள் சுருக்கி யோசித்தவள்.. வலப்பக்கமாகப் பார்வையை ஓட்டி நிலைக்க விட்டு, எல்லாம் புரிந்த விதமாகத் தலையாட்டி “ சர்தான் புரிஞ்சிட்சி அல்லாம், உள்ற போய்ப் பேசிக்லாம் நீ உள்ளுக்கப் போ த்த நான் வரேன்” ஒன்றுமே நடவாதது போல் சொல்ல..

“நா இன்னா பேசறேன்? நீ என்ன சொல்ற? உன்ன உள்ற வராத அப்டியே இரு சொல்றேன். நீ இன்னடான்னா வூட்டுக்குள்ள போய்ப் பேசிக்கலாம் சொல்ற. இன்னாடி என்னைப் பார்த்தா எப்டி டி தெர்து உனுக்கு?” வாசலை விட்டு வரவுமில்லை. மொழியை நுழைய விடவுமில்லை அன்னம்.

“ம்ம்ம் என் மாமியார்ன்னு தெர்து” நிறுத்தி நிதானமாகச் சொல்லியவள் அவர் அருகில் வந்து கையைப் பிடித்து “த்த ப்ளீஸ் சாரின்னா.. போனோ இட்த்துல கொஞ்சோ லேட்டா பூட்ச்சு.. எதிர்பார்க்கல. ஆனாலும் நீ தேடுவன்னு சேதுண்ணா வூட்டுக்கு போன் செய்ஞ்சேன். நீ தான் பேச மாட்டேன் சொல்டியாம். சொன்னாங்கோ. அப்றம் என்னிய நீ குத்தம் சொன்னா எப்புடியாம்”

“நானும் அதுக்கோசரம் தாண்டி இத்தன நாளு கம்முனு இருந்தே.. ஆனா, இப்ப தோண்து அப்டி இல்லியோன்னு” உறுத்து விழித்தவரின் பார்வை சென்ற திசை சொன்னது. நீ செய்த காரியம் துளியும் சரி இல்லையென்று, நீயே ஊர் வாய்க்கு அவல் தருகிறாயென்று.

கூடவே “வுடு டி கைய, உன் சால்ஜாப்புக்குல்லாம் இந்த அன்னம் மயங்க மாட்டா” அவளிடமிருந்து கையை உதறியும் தன்னை விடுவித்துக் கொண்டார்.

ஏற்கனவே மருமகள் நிலை, அதைத் தொடர்ந்து எடுத்திருந்த முடிவு.. அண்மையினருக்கு நாக்கின் மேல் பல் போட்டு பேச வழி செய்திருக்க.. இப்பொது முன் பின் யோசனை இல்லாமல் இவள் செய்திருக்கும் காரியமென்ன? மகளாகப் பார்த்தது தவறோ? மருமகளாக நடத்தி இருக்க வேண்டுமோ? நினைக்க வைத்தது.

சற்று நேரத்திற்கு முன், இவளுக்காகப் பரிந்து பேசி அவர்களிடம் சண்டைக்குப் போனது தவறோ எண்ணம் போக..

அருள்மொழிக்கு, இக்கட்டான சூழ்நிலையிலெல்லாம் புரிந்து உடனிருந்தவர், இப்பொது இப்படிப் பேசுகிறாரே.. என்ன சால்ஜாப்புச் செய்துவிட்டேன்? இவரே புரிந்து கொள்ள வில்லையென்றால் எப்பிடி? இவரை விட்டால் பிள்ளைக்கும் எனக்கும் தான் யார் உளர்? எல்லாம் தெரிந்து இவரே இப்படிப் பேசலாமா? அதுவும் வெளியில் வைத்து? இது மட்டும் ஊர் வாய்க்கு அவல் ஆகாதா?” அவர் செய்கையில் எண்ணம் போனாலும் சிறிது நேரத்தில் சுதாரித்திருந்தாள்.

ஆதங்கமிருந்தாலும் பிறர் எண்ணங்களைப் புரிந்து கொள்பவள் அவள். அதற்குத் தக்கன நடந்து.. அதன் பிறகு ஆதங்கத்தைத் தூக்கி நிறுத்தி கொடி பிடிப்பாள். வார்த்தை வாயாடவே முடியாத படிக்கு இருக்கும் அவள் கேள்விகள். பின் எங்கிருந்து சண்டை பிடிப்பர். சண்டையிட்டு நின்றால் கூடச் சண்டையிடலாம். சரியாகப் பாயிண்ட் பிடித்துப் பேசுகையில் எங்கனம் வாய் திறப்பர். கையிரைண்டையும் தூக்கி சரணடைவர் வேறு வழியின்றி.

அவர் மனம் புரிந்ததில்.. கோபம் எதனால் ஸ்பஷ்டமாக விளங்க.. கலங்கிய தோற்றம் எதைக்கொண்டென்று புரிய.. மென்னகை ஒன்றை லேசாக விரவ விட்டாள்.

அவளுக்குத் தெரியும் அவர் குணம் எப்பிடியென.. இப்பொது ஏன் இப்படியென.. இதொன்றும் புதிதாக நடக்கவில்லை. தினம் நடப்பது தான். இவளும் அப்போது அடங்கி, பின் எடுத்து சொல்லி வழிக்கு கொணர்வது தான். அதன் பொருட்டே இந்த இதம் குடிகொண்டிருந்தது வதனத்தில். இல்லையென்றால் அத்தனை எளிதில் உணர்வை பிரதிபலிக்க விட மாட்டாள் அழுத்தக்காரி.

கணம் தாங்கிய ஒற்றைக் கூர் நோக்கில் ‘நீயெல்லாம் எனக்கொரு ஆளா? எனக்கு ஈடா உனக்கு நான் நின்னு பதில் சொல்லணுமா? இந்தப் பாவனை மட்டுமேயிருக்கும். அது எதிரிலிருப்பவர் வாயை கப்பென்று மூட வைத்து விடும்.

“வேற வழி தெர்லத்த, எப்போடா வூட்டுக்கு போவோம்னு இர்க்கவே” சொல்லிக் கொண்டிருந்தவள்.. அவளைக் கவனிக்காது, அன்னம் பார்வை.. மொழியைத் தாண்டி நிலைக்க.. பேச்சை நிறுத்தி அவளும் பின்புறமாகத் திரும்பினாள்.

அங்கே பாவமாக நடப்பதை ஒருவித கையாலாகா தனத்துடன்.. இருசக்கர வாகனத்தைப் பிடித்தபடி நின்றிருந்தான் அருண்.

எதுவும் பேச வில்லை.

என்ன பேசுவான்? அவனால் தானே. இப்படியெல்லாம் நடக்குமென்று தான் மறுத்தாளோ? செவி சாய்ந்திருக்க வேண்டுமோ?

அவனல்லவா அருளை வற்புறுத்தியது. இப்பொது அவள் வசை வாங்கிக் கட்டிக் கொள்கிறாளே? என்ன சொல்வது? சொன்னாலும் எடுபடுமா?

'அறிவே இல்ல டா உனக்கு எல்லாத்தையும் உன் பக்கம் வெச்சே யோசிப்பியா இப்ப பாரு என்ன ஆச்சுன்னு ' உள்ளே மனக் குரல் அவனை அர்ச்சித்தபடி இருக்க.. சிலை போல் நின்றிருந்தான் அருண்.

இருவரும் ஒரு வேலை விஷயமாக டவுனிற்குச் சென்றிருக்க.. “அங்கே இருப்பேன் வாங்க இன்னைக்கு முடிச்சிடலாம்” நம்பிக்கை தந்த ஏஜென்ட், நேரத்திற்கு அங்கில்லாமல் சொதப்பியிருந்தான். பிறகு அவனைப் போனில் பிடித்து.. வர வைத்து வேலையை முடித்து வர இருட்டி விட்டது.

மறுநாள் கூட முடித்திருக்கலாம். ஆனால் அடுத்தடுத்து தொடர் அரசு விடுமுறையாக வரவே.. தள்ளி போகும். அதோடு இதுபோலவே மீண்டும் அலைய வேண்டும். அவளால் முடியாது. தலையால் தண்ணீர் குடிக்கும் பாடாகத் தான் எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருக்கிறாள். இதில் ஒரே விஷயத்திற்கு ஓராயிரம் முறை அலைய முடியாது. எனவே இன்றைக்கு ஒரேபிடியாக இருந்து.. முடித்து விட்டே விடுவதெனப் பிடிவாதமாக இருந்திருந்தாள்.

காலை பஸ்ஸில் இருவரும் சென்றிருக்க.. இப்பொது இருட்டி விட, வேறு வழியில்லாமல் அவன் நண்பனிற்கு அழைத்து.. வண்டி கேட்டு நிற்க....

“ண்ணா பைக் லாம் வோணாண்ணா, ஆட்டோ இருந்தா புடிண்ணா போயிட்லாம்.. இல்னா இத்த திருப்பித் தர்வே நீ டவுன்க்கு இன்னொர் தபா வர்ணும்.. இல்ல உன் பிரென்டு ஊருக்கு வரணும்.. எதுக்குத் தேவல்லாத அல்ச்சலு வோணாண்ணா” கவனித்த அருள் மறுத்தாள்.

“அதெல்லா இல்ல அருளு.. இந்நேரம் எந்த ஆட்டோவும் அவ்ளோ கிலோ மீட்டர் தொல்வுல இர்க்க ஊருக்கு வர மாட்டானுங்க.. அப்டியே வந்தாலும் ரிடர்ன்க்கு சேர்த்து வெச்சி கேப்பானுவோ.. பைக் னா பெட்ரோல் போட்டு ஒர்ரே மிதி ஊருக்குப் பூடலாம்.. வா ஏறு” அருண் அவன் நண்பன் எடுத்து வந்த வண்டியில் அழைத்து வந்திருக்க.. அதுவே இப்பொது பிரச்சனையாகவும் ஆகிவிட்டிருந்தது.

‘அய்யோடா இந்த அண்ண இர்க்க சொல்வே இன்ன பேச்சு பேசுது மாமியார்’ மொழிக்கு ஒரு மாதிரியாகி விட்டிருக்க..

“ண்ணா நீ கிளம்பு, டைம் ஆயிட்ச்சு. வூட்ல அம்மா தேட போவுது” அவள் நிலையே கவலைக்கிடமாக இருக்கயில்.. நடக்கும் கலவரத்தை பொருட்படுத்தாது. அவனுக்காகச் சொல்ல..

இப்பொது அவனுக்கு ‘அய்யோடா இந்தப் பெண்ணைப் பாரேனென்று’ ஆகிவிட அவளைக் கவனியாது அன்னத்தைப் பார்த்தவன்..

“ம்மா, அருளு மேல தப்பில்லம்மா.. அது வோணாந்தா சொன்னுச்சி. தப்பு ஏ மேல தா.. நாந்தா அத்த இத்த சொல்லி அத பைக்ல இட்டாந்தேன்” நடந்ததைச் சொல்ல முற்பட்ட..

“ண்ணா நாந்தா பாத்துக்கறேன்ட்டல்ல, ப்ளீஸ் கெளம்பு ண்ணா” இடை மறித்தாள் அருள்மொழி.

“இல்ல அருளு அது நானே அம்மான்ட சொல்லி” அவன் விடா பிடியாகவே நிற்க.. அக்கம் பக்கத்தினர் ஏற்கனவே ஓரிருவர் நின்று பார்த்திருக்க.. அருண் விளக்கம் செல்கிறேனென, பிரச்சனை திசை திரும்பும் அபாயம் இருக்க.. கூடவே வீட்டுப் பிரச்சனை தேவை இல்லாமல் ஊரில் பேசப்பட்டிருக்க.. இதுவும் ஊருக்கே படம் காட்டுவது போல ஆகிவிடும் வாய்ப்புமிருக்க..

“அருண்ணா போதும் நிறுத்து. உங்கிட்ட உதவி கேட்டேங்கறதுக்கோசரம் உன் லிமிட் தாண்டி வராத ன்னா.. அவுங்க ஏ அத்த என்ன பேச அல்லா உரிமையும் இர்க்கு.. நீங்கோ சொல்லி தெரிஞ்சிக்கத் தேவல்ல.. நான் பேசிக்றேன். நீ இதுல எங்கயும் வர்ல. நீங்கோ கெள்ம்புங்கோ” காட்டமாகச் சொல்லியிருந்தாள்.

இதென்ன? நான் பேசிக்கொண்டிருக்கும் போதே மதிப்பின்றி அவனிடம் பேசுகிறாள் இவள். என் மீதான மரியாதையை இவ்வளவு தானா? கோபமாக அருளை முறைத்து நின்றிருந்த அன்னத்திற்கு.. அவள் அவனிடம் சண்டைக்குப் போகவும்.. அவர் உண்மை குணம் வெளியே வர..

“எம்மேல இருக்கக் கோபத்துக்காண்டி ஏண்டி அந்தப் புள்ளைய காச்சுற?, உனக்கு உதவி செஞ்சதுக்கு இதா உன் நன்றியா? உம்மேல நான் கொச்சிட்டதுக்கு.. அது நெசத்த சொல்லுது. இதுவொரு குத்தமா? எம்முன்னாடியே இப்டி பேசற.. பாருடி புள்ள மொவம் சிற்த்து போச்சு.. இன்னா பொண்ணுடி நீ” அன்னம் அவனுக்காகப் பரிந்து வந்தார்.

இவ்வளவு நேரம் வரை இவர் பேசிய பேச்சேன்ன? இப்பொது பேசுவதென்ன? ‘ம்மா உன்னிய இன்னா செய்லாம்’ உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டாள் அருள்மொழி.

“அவுரு ஏ அண்ணே, நான் இன்னாவொணா பேசுவேன் உனுக்கின்னா? உள்ற வேலை இர்ந்தா பாரு ன்னா.. அண்ண தங்கச்சி விசயமெல்லாம் உனக்குப் புர்யாது” அன்னத்திடம் சாகசம் பேசியவள் “இன்னண்ணா நான் சொன்னது சர்தானே” அவனையும் இழுத்தாள் துணைக்கு.

“இன்னங்கடா நட்க்குது இங்க.. அப்ப நாந்தா காமெடி பீஸா பூட்டனா இவங்கட்ட” ங்கேவென்று பார்த்த அருண்.. ‘இதுக்கு மேல இங்கருந்தோம்.. என்னை நென்ச்சு நானே பாவ பட வெச்சிருவாங்கோ.. இவுங்க ரெண்டு பேரும் கெளம்பிருடா அருணு கிளம்பு’ தனக்குள்ளே நினைத்துச் சரியெனத் தலையை மட்டும் அசைத்துப் பைக்கை கிளப்ப..

“அருண் ண்ணா ஒன் நிமிட்ண்ணா” நிறுத்தியவளிடம் இப்பொழுதென்னவோ பார்க்க..

“ண்ணா நாளைக்கு வர்ரோ கொஞ்சம் லேட் ஆவும். ஆள் வுட்றேன். கிரௌண்ட்க்கு அப்போ வந்தா போதும் சரியா” என்றாள். என்னமோ அவன் உதவி கேட்டு.. இவள் போனால் போகிறதெனச் செய்வதைப் போல் ஒரு தோற்றத்தை கொண்டு.

‘ஆங் அல்லாம் எந்நேரந்தான்’ நினைத்தவன் அதைச் சொல்லாமல் “சர்தாம்மா வந்துட்றேன்” கிளம்பிவிட அன்னம் இன்னும் மலை இறங்கினார் இல்லை. அங்கேயே தான் நின்றிருந்தார். அருள்மொழியை மறித்தார் போல்.

‘இன்னுமென்ன?’ பார்த்தவள் “த்த வா த்த போவணும்” கைபிடித்து இழுக்க..

“நீ இத்தினி நாளு செய்யப் போறேன் சொன்னதுல்லாம் நிப்பாட்டு அருளு.. எதுவும் வோணாம் தெர்தா.. இன்னியோட வுட்டுடு.. அல்லாத்தையும் தூக்கி தூர கடாசு.. மூணு மாசமாச்சி அவன் போயி.. போன மவராசன் போனது தான். அதுக்காண்டி நீ இன்னா பண்ணாலும் திர்ம்ப வரபோவறதில்ல.. அப்றம் இன்னாத்துக்கு இதெல்லாம்? ஊரார் வாய்ல உழுந்துக்குனு”

அழுத்தமாய் அவளைப் பார்த்து சொல்லியவர் “இப்ப சொன்னதுங்கட்டியும் அல்லாத்தையும் தலமுங்கிட்டு.. வர்தா இர்ந்தா மட்டும் உள்ற வா.. இல்லைனாங்காட்டியும் இப்பிடியே உ ஊட்டுக்கே பூடு.. புள்ளைய நான் பாத்துக்கறே” அன்னமும் விடாப்பிடியாய் நிற்க..

“இன்னா பேசற அத்த நீ.. அல்லாம் தெர்ஞ்சு தான் பேசறியா.. உம் பிள்ள என்னாண்ட வாழ்ந்த வாழ்க்கைய நீயே கொச்சை படுத்தாத.. உம் புள்ளையே அத” மேலும் ஏதோ சொல்ல எத்தனித்து.. பின் நிதானித்து “அத்த எனக்குப் போவணும் வலிக்குது ப்ளீஸ்” அவள் கை சென்ற திசை அவரை உலுக்கியது.

அந்த நேரம் பார்த்துச் சரியாகத் தன் பசி தீர்க்க தாய் வருவதை அறிந்தோ? இல்லை பெற்றவளை அன்னத்தின் கோபத்திலிருந்து காப்பாற்றவோ? அருள்மொழி பெற்ற பால் குடி மாறா ஆறு மாத மழலை வீறிட்டு அழுதது. தன் இருப்பை உணர்த்தி.

பிள்ளையின் அழுவை சத்தத்தில், வீட்டினுள்ளே பார்த்துப் பின் இருவரும் பார்த்துக் கொள்ள.. இன்னும் வலி எடுத்தது போல். ஆடை நனைத்து தாய் பால் கசிய ஆரம்பித்திருந்தது அவளுக்கு.

அதுவரை முகம் சுருக்கி பொறுத்திருந்த அருள்மொழி, அவ்விடத்தை இன்னமும் இறுக்கமாக அழுத்தி பிடித்துக் கொண்டாள். கனம் அதிகரிப்பதன் காரணமாக. முகம் ஜிவுஜிவென்று சிவக்க ஆரம்பித்தது.

அவள் செய்து கொண்டிருக்கும் வேலைகள் பிடிக்காததன் காரணத்தோடு, பிள்ளையின் விஷயமும் சேர்ந்து தான் அன்னத்தின் கோபத்துக்கு அடித்தளமாகியிருந்தது. நாள் பொழுதில் எப்படியோ? இரவு உறங்க நேரத்தில் தாயை மிகவும் தேடும் பிள்ளை. இன்றும் அதுபோலவே தேட, அருள் மொழி தான் இங்கு இல்லையே.

அவசரத்திற்கு டின் பாலை கலக்கி அன்னம் கொடுக்க.. அதையும் எடுக்கவில்லை. அப்படியொரு அடம். பாலாடையில் ஊற்றி மல்லுக்கட்டி தர. அழுததோ? தாளாத பசி மிகுதியோ? வயிற்று பசி அடங்குவது மாறியாகக் குடித்துவிட்டு.. களைத்து உறங்கியது பிள்ளை.

இப்பொது பிள்ளையும் கத்த.. இவளும் கிடந்து துடிப்பதை பார்த்து அதுவும் சேர்ந்து கொள்ள.. இவ்வளவு நேரம் அடமாக இருந்தவரால் சும்மாயிருக்க முடியவில்லை. அவளும் ஒன்றும் வேண்டுமென்று செய்யவில்லையே. தாமதமாய்ப் புரிந்தது.
“புத்தி இர்க்காடி உனக்கு?.. வூடு வந்துங்காட்டியும் என்னாண்ட சொல்றதுக்குன்னா? வாடி வூட்டுள்ள அறிவு கெட்டவளே.. மத்ததுக்கெல்லாம் மட்டும் வாய் கிழிய பேச தெர்து. இத்த சொல்ல தெர்யாதா?” தரதரவென அவள் கைப்பற்றி அன்னம் உள்ளே இழுத்து போக..

‘எப்புடிலா துட்ச்சாலோ தெர்லயே.. இதுல நானும் வேற நிக்க வெச்சு திட்டிட்டேனே.. அன்னம் மருமவள நல்லா தெர்ஞ்ச நீயே இப்டி நடந்துக்லாமா? அட்த்தவங்கோ ஆயிரம் சொல்வாங்கோ? உனக்கு எங்கடி பூட்சு அற்வு? வரோ வரோ புத்தியே வேல செய்யமாட்டன்னுது உனக்கு? வாசலிலிருந்து வீட்டினுள் வருவதற்குள் ஆயிரம் முறை அவரையே திட்டிக்கொண்டார் அன்னம்.

சொல்ல வேண்டிய இடத்தில் ஒன்றிற்கு இரண்டாகச் சொல்லியாயிற்று. இன்றையோடு இவள் ஆட்டம் முடிந்ததென.. நடப்பதை அல்பத்தனமாகப் பார்த்திருந்த ஒரு உருவம்.. அன்னம் செய்த செயலில்.. ங்கேவென விழித்து நின்றிருக்க..

மொழி திரும்பி ‘எப்புடி பாத்தியா எங்கத்தைய’ அவ்வுருவத்தைப் பார்த்துச் சிரித்துத் திரும்பிக் கொள்ள.. அதற்கு மேல் அது ஏன் அங்கிருக்கிறது. நகர்ந்து சென்றுவிட்டது.

‘இதா அத்த நீயி.. உன்ன பத்தி எனக்குத் தெர்யாதா’ பிகு செய்யாமல் மொழியும் பின் செல்ல போனவள்..

“அத்த இரு த்த, சப்பல் கூட அவுக்கவுடாம இஸ்துகினு போற” காலிலிருக்கும் செருப்பை வேகமாகக் கழட்டிவிட்டு.. அன்னம் கையை உருவி கொண்டு ஓடின அருள்மொழி அங்குக் கண்டது. தொட்டிலில் கைக் கால்களை உதைத்து.. அடுத்தொரு அழுகைக்குத் தயாரான பிள்ளையைத் தான்.

முகம் ரத்தமெனச் சிவந்து.. அலைபாயும் கருமணி கண்களிரண்டும் கலங்கி.. கண்ணீர் இரு பக்கம் கோடாக வழிந்தோட.. மூக்கு விடைத்து.. உதடு பிதுக்கி அழவிருந்தவனை.. பார்த்த கண்கள் பார்த்த படியே, நிலைகுத்தி நின்றது அருள்மொழிக்கு.

அவளுக்குள் என்னென்னமோ எண்ணங்கள் முட்டிமோதி அலைக் கழிக்க ஆரம்பித்தது. எத்தனையெத்தனை கனவுகள் குழந்தையைக் கொண்டு அவனுக்கு. என்னென்ன கற்பனைகள் வைத்து எப்படியெப்படி கதை பேசுவான். அத்தனையும் ஒரு நொடியில் சிதறுமா? பிள்ளையைத் தூக்கி.. சமாதானமிட வேண்டிய எண்ணம் கூடப் பின்னுக்குப் போயிற்று.

‘எப்புடி மனசு வந்துச்சுடா பாவி உனக்கு.. எங்களை விட்டு போக’ நினைத்தவளுக்கு, சர்வ நிச்சயமாக அவர்களுக்கான.. அவன் போராட்டம் அதிகமாக இருந்திருக்குமென்றே தோன்றியது. எப்படியெல்லாம் வலி பொறுத்தானோ? என்னவெல்லாம் நினைத்து மருகினானோ? நினைத்தவளுக்கு இறுக்கம் தன்னாலே வந்து ஒட்டிக்கொண்டது.

வைராக்கியத்தின் பிடியில் மற்றுமோர் முடிச்சு இன்னுமின்னும் இறுக.. திரண்ட கண்ணீரை வீம்பாய் உள்ளுக்கிழுத்து.. இமைத்தட்டி வைராக்கியத்திற்க்கு உரமாக்கி.. அதில் தன்னை ஒளித்துக் கொண்டாள்.

தாய் முகம் தொட்டிலுருகே கண்டதுமே.. பிள்ளைக்கும் அழுகை நின்று தேம்பலோடு கூடிய சிரிப்பு வந்திருந்தது.

பொக்கை வாய் திறந்து.. விரலை உள்ளே வைத்து குதப்பி.. உமிழ் நீர் வழிய.. தங்கரதம் குஷியில் துள்ளி குதிக்க.. அருளிற்கும் அச்சிரிப்பு தொத்திக் கொண்டது.

“அச்சச்சோ எம்மாங்கண்ணீரு எந்தங்கத்துக்கு” கண்களைத் துடைத்து விட்டவள் “அம்மா வந்துட்டண்டா எஞ்சாமி.. எம்புள்ள எதுக்கு அழுதுச்சு? பசிச்சிருச்சா? அச்சோ இப்ப சிரிக்கிறீங்கோ.. என் செல்லத்துக்கு அம்மா பால் குடுக்க வந்திட்டான்னு தெரிஞ்சிட்ச்சா? கார்த்திகுட்டி வாங்கோ, வாங்கோ அம்மாட்ட வாங்கோ” அங்கே மொழி வாரி அனைத்து பிள்ளையைத் தூக்க.. வெளியே அன்னம் தெம்பில்லாமல் அந்த இடத்திலே மடிந்து அமர்ந்து விட்டிருந்தார்.


காதல் பேசும் ...