ஷ்ஷ்!! மறுத்து பேசாதே காதலே இரண்டாம் அத்தியாயம்

கண்ணம்மா rvrv

Moderator
Staff member
Nov 22, 2020
7
0
1
அத்தியாயம் 2


என்னிடமிருந்து உனை அழைத்திட்டக்
காலனிடம் சொல்.

அவன் கர்வம் தொலையாட்டும்.


அவன் பாசக் கயிற் வீசி
பறித்தெடுத்துச் சென்றது
உனையல்ல எனையேன.

நீதான் பரிபூரணமாய் பரிமளிக்கத்
துவங்கிவிட்டாயே என்னுள்!!!


வந்திருந்த மக்கள் யாரும் காசு கொடுத்து அழைத்து வந்தவர்களல்ல. செய்தி கேட்டு பாசத்திற்காக சேர்ந்த கூட்டம். இன்னமும் வந்து கொண்டும் இருந்தனர் ஒவ்வொருவராக.


இறந்தவனும், அப்படியொன்றும் அந்த அட்டெண்டர் சொன்னது போல் வசதியில் பெரிய கை எல்லாம் இல்லை. ஆனால் மனித மனங்களை வென்றதில் பெரிய கை. எடுத்துக்கட்டி செய்வதில் உயர்ந்த கை. அவ்வூரில் அவனைத் தெரியாதோர் இல்லையெனச் சொல்லலாம். அத்தனை பெரிய கை அவன்.


ஊர் சம்பந்தப்பட்ட எல்லா முன்னெடுப்புகளுக்கும் வலிய முன் சென்று நின்று சரியாகவும் முடித்துக் கொடுப்பவன். நண்டு சிண்டிலிருந்து வயதான கிழடு கட்டை அனைவருக்கும் பரிட்சயம்.


உதவியென அவனிடம் கேட்டு நிற்க வேண்டாம். அவனுக்குத் தெரிந்தாலே போதும். தேடி வந்து உதவிடும் இடது கைக்குத் தெரியாது செய்யும் வலது கை அவன். அதற்குச் சாட்சி இதோ இங்குக் கேட்கும் அவ்வூர் மக்களின் குரல்கள். ஆரம்பத்தில் அழுது களைத்து இப்பொது நியாயத்திற்காய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.


தேடி வந்து உதவுபவன், இப்படி தேங்கி போய் அவனுக்காகத் தேடி வந்து தெருவில் இறங்கி போராட வைப்பான் என்று யாரும் நினைக்கவில்லை. இத்தனைக்கும் வயதும் ஒன்றும் பெரிதாக ஆகியிருக்க வில்லை.


இருபத்தியொன்பதை தொட்ட வாலிபன் அவன். அளவாயிருந்தாலும் திடகாத்திர தேகம். ஒருநாளும் சுணங்கியிருந்து யாரும் பார்த்ததில்லை. அப்படியொரு சுறுசுறுப்பு. எப்போதும் சிரிப்பொன்றை சிதற விட்டபடி இருக்கும், யாரையும் நட்பு கொள்ள வைக்கும் முகம். அவனிருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்ளும் குணம். எளிதாக நெருங்கும்படி இருக்கும் உடல்மொழி.


இப்படியொரு இறப்பு இவனுக்கு வருமென்று யாரும் நினைத்து பார்த்ததில்லை. அதுவும் அவனின் நல்லுள்ளத்திற்கு ஏற்பட்ட நிலை யாராலும் ஜீரணம் செய்துக் கொள்ள முடியவில்லை.


இந்தப் பிள்ளைக்கு இப்பிடியொரு கதியா? நினைத்து மாய்ந்து தான் போனர். அவ்வளவு ஏன் இப்படியொரு இறப்பையும் இதுவரை அவ்வூரில் கண்டதில்லை.


"உனக்கு இப்டியொரு சாவு வரும்னு கனவுலயும் நினைக்கலையே ராசா, நேத்து கூட உன்னைப் பார்த்தேனே கண்லயே நிக்கறியே டா அன்பா "


"இத்தனை வயசாகியும் குத்துக்கல்லு மாறி நானிருக்கேன். துள்ளி குதிக்கற வயசுல அந்த ஆண்டவன் உன்னை இட்டுக்கினானே டா அன்பா? உனக்குப் பதில் என்னிய கூட்டினிருக்கக் கூடாதா நிம்மதியா போயிருப்பேனே "


"உன்னைய தூக்கி போட நானிருக்கேன் எதுக்கு நீ கலங்குறன்னு கையைப் புடிச்சு ஆறுதல் சொன்னியே.. இப்ப உன்னைய படுக்க வெச்சு பாக்கற நிலைமைக்கு இட்டாந்துட்டியே டா அன்பா.. எப்பிடிடா மனசு வந்துச்சு உனக்கு. எங்களையெல்லாம் வுட்டுட்டு போவ "


“கண்ணாலமாகி ஒரு வருசம் முடிஞ்சு ஒரு நாள் கூட முயுசா ஆவலேயே.. யார் கண்ணு பட்டுச்சோ தெர்லயே.. பூட்டானே. நேத்து தானே குடியும் குடுத்னமுமா வாழுன்னு வாழ்த்திட்டு போனேன். சொல்லி ஒரு நாள் ஆவலையே ஒரேடியா பூட்டானே"


"டேய் அன்பா, வா டா.. உன் பொண்டாட்டி எப்புடி உருக்கொலைஞ்சு போயிருக்கா பாரு.. என்னன்னு வந்து கேக்க மாட்டியா? போவும் போது உம்பிள்ளை கூட உன் நியாபகத்த இட்டாறலையா "


"ஒத்தை சொல்லு கடிஞ்சு சொல்ல மாட்டியே இப்ப நீ பேசாம இருந்து எங்கள கலங்க வுட்றியே "


"அடியே ராஜாத்தி, என் வவுத்துல பொறக்காத மவளே, செப்பு செல போலக் கீறியே.. இந்த வயசுல உனக்கிந்த நிலைமையா? நேத்து தானே ஊருக்கெல்லாம் உன்கையால சோறு போட்ட.. தின்ன கையில ஈரம் காயலயே.. அதுக்குள்ள நீ அத்துட்டு நிக்கறியே.. ஏ ஆண்டவா உனக்குக் கண்ணில்லையா டா "


என்ன ஏதென்று விவரம் தெரியாதவர்களுக்கும், மனதை சுக்கு நூறாக நொறுக்கி போடும் குரல்கள். செய்தி கேள்விப்பட்டு இன்னமும் ஒன்றிரண்டாக வந்த வண்ணமிருந்த மக்களின் அழுகுரல்கள்.


முழக்கங்களோடு.. இப்படியான கல்நெஞ்சையும் கசிந்துருக வைக்கும் வார்த்தைகள், அங்கங்கு புலம்பல்களாக எழும்ப ஆரம்பிக்க.. இதெதுவும் என்னை அசைக்காதென.. கல்லாக இறுகி போய் விட்டாளோவெனச் சந்தேகம் கொள்ளும் படியாக, அங்கே ஒருத்தி சிலையாக அமர்ந்திருந்தாள்.


வண்ணமிழந்த புத்தகமாக வெளிறிய முகமும், சுருட்டி எறியப்பட்ட பக்கமாக.. செக்க செவேலெனச் சிவந்திருந்த கண்கள் வெறிக்க கசங்கி போயிருந்தாள் அவள். விக்கிக் கொண்டு வந்தது துக்கம், தொண்டை வலிக்க விழுங்கி.. உரமேற்றிய நெஞ்சோடு ஒரு முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள்.


அவள் இறந்தவனின் மனைவி.


குமுறிய எரிமலையின் தீப்பிழம்பென உள்ளம் தகித்துக்கொண்டிருந்தாலும், அசையாது வெறித்தபடி, மருத்துவமனை வாயில் தாண்டி.. வராண்டாவில் இருந்த ஸ்ட்ரக்ச்சரின் மேல், கிடத்தப்படிருந்த அந்த வெள்ளை துணியின் மீது பார்வையைப் பதித்திருந்தாள்.


விழிகள் சொட்டு கண்ணீரையும் சிந்தவில்லை. கருமணிகளையும் நகர்த்தவில்லை. மூச்சு முட்டிக் கொண்டு வந்தது. அவன் நிலையைப் பார்க்கப் பார்க்க.. இருந்தும் சமாளித்து வெறித்தது வெறித்த வண்ணமே.. வேரோடி போன மரமாய்ச் சமைந்திருந்தாள்.


"ஏ பொண்ணே ஏண்டி இப்புடி உக்காந்திருக்கவ? அழுதுருடி.. உள்ளேயே வெச்சினுருக்காத.. வெடிச்சு அழுதுரு, பச்சை உடம்புக்காரி, இப்பிடி நீ இறுகி போய் உக்காந்திருந்தா புள்ளைக்கு ஆவுமா.. பாரு புள்ள கத்தி கத்தி அதுவும் பசியில தூங்கினுருக்கு. அதுக்குவாண்டியாவது அழுதுருடி. மனசு கொஞ்சமாவது ஆறும் "


விதம் விதமாக எத்தனை எத்தனையோ வார்த்தைகள். யார் யாரோ வந்து.. அவள் நிலையைப் பார்த்து.. தலையிலடித்து அழுது.. பின் தேறி ஆறுதல் சொல்லியவாறு இருந்தாலும்.. எந்த வார்த்தையும் அவள் மனதை சென்று சேரவில்லை.


எப்படிச் சேரும்?


"புள்ளைய தூங்க வெக்கிறேன்னு நீயும் தூங்கிரதப்போவ்.. இப்ப வந்துருவேன் " கிறக்கமான குரலோடு, போட்டிக்கு கெஞ்சல் பார்வையையும் கொடுத்து, அவள் கணவன் தான் சொல்லி சென்றிருந்தானே. வெட்கமும் ஆசையும் போட்டி போட இவளும் தலையை ஆட்டி வைத்தாளே.


‘செல்லாதே’ மறுத்து பேசவில்லையா அவள்?

உண்மையில் பேச விடவில்லை அவன். ஆம் சொன்னதை செய்யுமாம் கிளிப்பிள்ளைக்கேற்ப அவன் சொன்ன அந்த வார்த்தைகளுக்கு மதிப்பளித்து மறுவார்த்தை பேசவில்லை அவள்..


தன் உள்ளம் கவர்ந்தவனின் ஒற்றை கண் சுருக்கி தவழவிட்ட கெஞ்சல் விழி பார்வைக்கு இணங்கி.. அவன் கள்ளம்கபடமில்லா இரக்க மனதிற்கு இசைந்து.. இதழ் மேல் விரல் வைத்து 'எதுவும் சொல்லிவிடாதே என் தங்கமே' வென இதழ் குவித்து விரைவில் வந்துவிடுவேனென்று தலையசைத்து.. அவன் சொல்லிய பாவனையில் லயித்து நின்றாளே ஒழிய..மறு மொழியென ஒரு வார்த்தை பேச வில்லை அவள்.


செங்காந்தள் நிறமொத்த இதழ் திறந்து மொழி பேசி இருந்தால்? அனைத்தும் நல்லவிதமாக இந்நேரம் வரை நடந்தபடி இருந்திருக்குமோ? என்னவோ..


அவள்,வாழ்வு!!!


அவளுக்கான,வாழ்வு!!!


அவனே வாழ்வென தனக்கு தானே அவள் வகுத்துகொண்ட வாழ்வு!!!


ஆனால் அவன் அந்த வார்த்தைகளை மலர்க்க விடவில்லையே..


அதோடுமா? அப்படியே கருகியும் விட்டதே..


வேண்டாமே இந்நிலை.


வந்திருக்காதே இவ் அவலம்.


பேச என்ன? பேச.. உடல் மொழியில் சிறு சுணக்கத்தை காட்டியிருந்தால் கூட போதுமே..


ம்ம்ஹும் அவ்வளவு ஏன்? மெனக்கெட,


வெண் ஆம்பல் மலர் ஒத்த விழிகளில் மறுப்பை மொழியவிட்டிருந்தால் கூட போதுமே செய்யவில்லை..


செய்ய நினைக்கவில்லை.. அப்படியொரு எண்ணமும் வராது. மாறாக விரியும் அவள் விழிகள்.ஆனால்,மறுக்கவல்ல ரசிக்க..ம்ம்ம்..பெண்மையின் கண்கள் தான் மொழி பேசுமா என்ன? இல்லை ஆண்மையின் விழிகளும் பேசும். அவன் விழிகள் பேசும் அத்தனை வசீகரமாய் வசமிழக்க செய்யும் படி பேசும்.


அதை அவளும் அழகாக படித்து விடுவாள். இப்பொது வாய்திறந்தே உதிர்த்திருக்க எவ்வாறு மறுப்பாள்? அது தான் அவளுக்கு இந்நிலையை வரவைத்து விட்டதோ?


அது மட்டும் தானே இப்பொது வரை ஒலித்து ஜீவ நாடியை பிடித்து வைத்திருக்கிறது.

ஆசை மின்னிய கண்களும் ஆர்வம் கலந்த முகமுமாக அவன் சொல்லி சென்றிருக்க.. அந்த வார்த்தையும், அவ்வார்த்தை தாங்கி இருந்த காதலும், உணர்வோடு கலந்துவிட்டிருக்க.. அதை விட்டு அவளால் எப்படி வெளிவர முடியும்.வாசற்படி தாண்டி கால்களை எடுத்து வைத்தவன் என்ன நினைத்தானோ? எட்டி தலையை மட்டும் உள் விட்டு.. கிசுகிசுப்பாக இவ்வார்த்தைகளைச் சொல்லி இருக்க.. சொல்லியது போலவே அவனும் வந்தான் தான். ஆனால் அசைவுகள் தான் இல்லை. இது தான் கடைசியெனத் தெரிந்ததோ?


காதல் மனைவியிடம் காதலாகப் பேசி சென்ற.. வார்த்தைகளும், பாவனைகளும் அப்போதே அடங்கி விட்டது போல். அதன் பிறகு ஒற்றை வார்த்தை வரவில்லை அவனிடமிருந்து. அசையாத கருமணிகளில் வெறித்த பார்வையோ? வலிதாங்கிய பார்வையோ? விதிக்கே வெளிச்சம் அதை மட்டுமே கண்டாள்."நீ சொன்னது போலவே உனக்காகக் கண்ணு முழிச்சு காத்திருக்கேன்டா மாமா, எழுந்து வந்துறேன் எங்கனயாவது போயிரலாம் "சென்றவன் மொத்தமாகச் சென்று விட்டத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், நம்பவும் முடியாமல், வலி மறந்து மரத்து போய் அமர்ந்திருக்க..

அவளென்ன கண்டாளா?உருகி உருகி காதலித்து, பிடிவாதமாக இருந்து மணந்து, தன்னைச் சிறிது சிறிதாக மாற்றி, அவன் நெசம் புரிய வைத்து, அந்நேசத்திற்குச் சாட்சியாக ஒரு நேசருவை கையில் கொடுத்து, இப்படி நிர்க்கதியாக நிற்கவைப்பான் தன்னையென?"என்னடி உம்புருஷன் வந்துட்டான். நீ என்ன உக்காஞ்சுட்டே கனவு காணுறியா"நடப்பவை அனைத்தும் கனவென்று யாராவது சொல்லி விட மாட்டார்களா?"என்னப்போவ் எனக்காகக் காத்திருக்கியா.. சொன்னப்போலவே வந்துட்டேன் பார்த்தியா "சென்றவன் வாஞ்சையாகச் சொல்லி தன்னிடம் ஓடி வந்து விட மாட்டானா?ஏதேதோ எண்ணங்கள் அலைக்கழித்துக் கொண்டிருந்தன அவளை.அவன் இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவளால். 'இல்ல.. இல்ல என் மாமா சாகல. இதெல்லா பொய். நீங்கள்லா பொய் சொல்றீங்கோ அவன் தூங்கறான் இப்போ ஏந்துருவான்' உள்ளம் ஊமையாய்த் துடித்தது.இதில் ஏதேதோ சொல்கிறார்களே? அதில் ஒரு உண்மை வேண்டாமா? நம்புபவையாகவே இல்லையே? ஊருக்கே உழைத்தவன் ஊருக்காகவே போய்ச் சேர்ந்தும் விட்டானா?ஆனால் நியாயம்?அதற்காகத் தான் கொட்டும் பனியையும், மிரட்டும் இருளையும் பொருட்படுத்தாது அமர்ந்திருக்கிறாள். அவள் கணவனுக்காக. நியாயம் கிடைத்து விட வேண்டுமென.'வந்துரு டா மாமா.. எழுந்து எங்கிட்ட வந்துரு டா மாமா' மனம் வலிக்க வலிக்க ஓயாமல் கூப்பாடு போட.. எப்படி அவனை வர வைப்பதென எண்ணம்.. குமுங்கி போய் தனக்குள் இறுகி கொண்டிருக்க.. அவளைக் கலைப்பது போல், மென்மையொத்த தன் குட்டி உடலை முறுக்கி வளைத்து.. லேசாகச் சிணுங்கியது அவள் மடி கிடத்திருந்த மழலை.முழிப்பு தட்டியதாலோ, என்னவோ.. வயிற்றில் கொஞ்ச நஞ்சமென ஒட்டியிருந்த பாலும், பிள்ளை எழுந்ததும் சுருட்டி கொணர்ந்திருந்த துண்டின் வழியெ வெளியேறிவிட.. ஈரம் உணர்ந்தது பிடிக்கவில்லையோ, பசியெடுத்ததோ.. மழலை வீறிடலை கொஞ்சம் அதிகமாக்கியது.'என்னைப் பட்டினி போட்டுட்டல்ல.. எவ்வளவு நேரம் இப்பிடியே இருக்கறது. பசிக்குது எனக்கு' வழிந்த கண்ணீரோடு பிஞ்சு பார்வையால் பெற்றவளை பார்த்தது. வாயிருந்தால் சொல்லியே விட்டிருக்கும். எப்போதும் மோதுவென்று பாலோடு நிரம்பி மேடிட்டிருக்கும் வயிறு இன்று ஒட்டிப்போய்க் கிடந்தது."இன்னும் எவ்வளவு நேரம் என்னை அழ விடப் போற" காய்ந்த உதடு பிதுங்க.. கருகுண்டு விழிகளில் கண்ணீர் முட்டி மோதி.. வெளி வந்து.. அரற்றி அழ ஆரம்பித்தது செல்வம்.மெத்தென்ற வெண்பஞ்சு மேக பாதங்களால் உதைத்து இருப்பை அந்தப் பிஞ்சு அறிவிக்க.. இரவு உறங்கும் போது குடித்த பால் அதன் பிறகு வயிற்றிற்குச் சொட்டு இறக்கவில்லை. ஜனம் போட்ட அழு சத்தத்தில் எழுந்தது.. இங்கு வந்த பிறகும் அழுதழுது ஓய்ந்து போய்த் தூங்கி விட்டிருந்தது."உனக்கென்ன மனசு கல்லாடி.. புள்ள அந்த அழுவை அழுது வெக்கிது அசைவேனான்னு இருக்க.. இருந்தவன் தான் இல்லாம பூட்டான்.. இருக்கறதையும் தொலைச்சிராத.. பாலை குடுத்து அது பசியையாவது ஆத்து.. ரொம்பப் பசிக்குது போலடி.. கத்துறான் டி, புள்ளைய பாருடி" அவளை உலுக்கினார் அன்னம். அவளது மாமியார்.அழுதழுது முகம் வீங்கி போய், தூக்கம் தொலைத்த சிவந்த கண்களுடன் இருந்தார் அவர். குடும்பத்திற்கு ஒற்றைத் தென்னங்குருத்தென ஒரு பிள்ளை மட்டுமே அவன். கணவனுக்குப் பிறகு அவருக்கென்று இருந்த ஒரே மரிக்கொழுந்து சொந்தம். மொத்தமாக வாரி பறி கொடுத்துவிட்டு அமர்ந்திருக்கிறார். வெடுக்கென்று ஒரு வார்த்தை பேச மாட்டார். அதட்டல் தான் வேலை செய்யுமெனக் குரலை உயர்த்த.. அது கூட அவளை அசைக்கவில்லை.மழலையும் விடாது, பாலேடு படிந்த நாவை வெளி நீட்டி.. தட்டி தட்டி.. ‘இங்கிருக்கிறதா அங்கிருக்கிறதா என் உணவு’ .. வாயை ஆஆ ஆவெனத் திறந்து கொண்டு.. வயிற்றின் மீது அலைந்தலைந்து.. தாய்ப்பாலுக்கென அலைபாய.. உமிழ்நீர் வெதுவெதுப்பெனப் பட்டதும் அது தந்த உணர்வோ?"புள்ளைய பசிக்கு அழவிடாதப்போவ்.. டைமுக்கு குடுத்துரு.. அவன் அழுதா எனக்கு என்னவோ பண்ணுது.. எந்நப்பாரு வயித்தை எப்போவும் வாட விடாதப்போவ்" பிள்ளையை அழவைத்து ரசிக்கும் நேரம் அவன் சொல்லும் வார்த்தைகள்.. அந்நேரம் செவிகளில் விழுந்தாலோ.. ஏதோ ஒன்றில் அவள் கவனம் கலைந்தாள்.இருவரின் மறுவுருவமாய் மடி சாய்ந்திருந்து தேம்பியபடியிருக்கும் தெய்வீகத்தைக் கூடக் காண விழையவில்லை அவள்.'எங்கே அவன்.. எங்கே அவன்.. இப்பொது தானே என்னிடம் பேசினான். நான் கேட்டேனே அவன் குரலை.. அதற்குள் சென்று விட்டானா' வெறித்திருந்த பார்வை பட்டென விலக்கி விழிகளை அலைமோத விட்டாள். எங்கே? அவன் உருவம். விழித்திரைக்குள் விழவே இல்லை. இருந்தால் தானே வர.. அவன் தான் மொத்தமாகச் சென்றிருந்தானே.‘வரவே மாட்டானா? அன்பு நிறைந்த அவன் முகத்தைக் காணவே மாட்டேனா?’ தொட்டாசிணுங்கியாகச் சுருண்டு போனாள் பெண். எல்லாமுமாய் இருந்தவனே போய் விட்டான். இனி எது இருந்தாலென்ன? இல்லையென்று போனாலென்ன? எல்லாவற்றையும் இழந்துவிட்ட ஓய்ந்த தோற்றத்திற்குப் போய்விட..இதையெல்லாம் பார்த்திருந்த அன்னம்.. யாரை முதலில் தேற்றுவதென்று புரியாமல்.. ஒரு மூச்சு அழுது முடித்து.. பின் தன் நிலைக்கு வந்து.. அவர் பக்கத்தில் இருந்த பெண்ணின் துணையோடு.. அவளின் புடவையை இழுத்து.. மாராப்பை சரி செய்து குழந்தையைப் பால் அருந்த வைத்தார்.குழந்தைக்கும் உண்ண கிடைத்த திருப்தியில் காய்ந்த குடலில் ஈரம் படப் பட.. உடலில் பட்ட ஈர உணர்வு தூரம் சென்று விட்டது போல.. அழுகையை நிறுத்தி..இப்பொது விட்டால் வேறெப்போது கொடுப்பாளோ? தாய் அறிந்த பிள்ளையாய்.. வாய் வலிக்க வலிக்க இழுத்து அமுதுன்ன.. அது கொடுத்த வலியை கூட அவளுடல் உணர வில்லை.சிறிது ஈரமிருக்க விட மாட்டான் பிள்ளைக்கான உடுப்புகளில்.. " நெஞ்சு வரைக்கும் ஈரம் போய்ற போவுதுப்போவ்.. புள்ளைக்குச் சளி வெச்சிக்கும் மாத்துப்போவ்" சொன்னதோடு அவள் எழுந்து செய்வதற்குள்.. அவளை அடக்கி அமரவைத்து.. இவன் குழந்தையின் உடலை துடைத்து வேறு துணி மாற்றியிருப்பான்."இதுக்கு எதுக்கு என்னாண்ட சொல்லணும்.. நீயே மாத்தியிருக்கலாமில்ல மாமா.. வர வர உம்புள்ளை மேல இருக்க கர்சன என்னாண்ட இல்ல உன்க்கு" அவள் குறைபட்டுக் கொள்ள"உன்னாண்ட சொன்னது நீ இப்ப செய்யதுக்கொசரம் இல்லப்போவ்.. நான் இல்லாத நேரம் நீ நம்மோ புள்ளைக்கு செய்னும் அதுக்குவாண்டி.. பொறுப்பாய் சொல்வான் அவன்."ம்ம்க்கும், உனக்கு இப்போல்லாம் அவந்தா ஒச்த்தியா போய்ட்டான்.. இங்க ஒருத்தி பச்ச ஒடம்புகாரியா இருக்காளே அவள கண்டுப்போம்னு இருக்கா " விடாது அவளும் சலுகையாகச் சலிப்பாள்.அவனும் விடாது " நானும் உன்னைக் கண்டுக்கோணும்னு தான் பாக்கறேன்ப்போவ்.. இப்ப சொன்னியே பச்சை ஒடம்புக்காரி அது தான் நிற்துது என்னை.. இல்லைனா எப்புடி வுழுந்து வுழுந்து கவனிப்பேன் தெரியுமில்ல அய்யாவை பத்தி" பளீரென ஒரு முத்துப் புன்னகையை உதிர்த்துக் கண்ணடித்துக் காலரை உயர்த்துவான்.“எப்புடியாம் முன்னுக்க ஒரு நாளு கால்ல உழ வந்தியே அப்புடியா”“தேவப்பட்டா வூந்துற வேண்டியது தான. செயலா முக்கியோ காரியமில்ல முக்கியோ” இரு பொருள்பட அவன் பேச அவள் வெட்கத்தில் பூப்பாள் செந்தாமரையாய்.அவர்கள் அன்யோன்யம் காண கண் கோடி வேண்டும். கொஞ்சியே கொல்லுவான் கள்வன். அவன் பேசியவை அவ்வளவும் மயக்கம் கொடுக்க வைக்கும் வார்த்தைகள். மயக்கி தான் கட்டிக்கொண்டான் அவளை மாயக்காரான்.அவனோடே அவள் சஞ்சரித்தபடியிருக்க.. பிள்ளையும் மனித முகங்களைப் பார்த்துப் பழகியிருக்க.. வேண்டிய மட்டும் குடித்து முடித்ததும்.. கோலி குண்டு கண்களை உருட்டி.. கால் கை உதைத்து அவளைப் பார்க்க.. அன்னை தன்னைக் கவனிக்கும் நிலையிலில்லையென உணர்ந்ததோ? இல்லை பெற்றவளை தொந்தரவு செய்யக் கூடாதெனத் தோன்றியதோ?பால் குடித்து முடித்ததும்.. தோள் மேல் போட்டு முதுகை தட்டி ஜீரணம் எடுக்கும் பெற்றவனின் அரவணைப்பை கூட மறந்து . மழலை செல்வம் கண்களை மூடி தானாக உறங்கியது.'இன்னும் எத்தனை துயரையெல்லாம் காண, இன்னமும் என்னை விட்டு வைத்திருக்கிறாய் ஆண்டவா' பொங்கி வந்த அழுகையை முந்தானை பொத்தி அடக்கினார் அன்னம்.
அதே நேரம் அந்த மக்களின் ஏரியா கவுன்சிலர், எவ்வித சஞ்சலங்களும் இன்றி அவன் வீட்டில் நல்ல உறக்கத்தில் இருந்தான்.

காதல் தொடரும் ...