ஷ்ஷ்!! மறுத்து பேசாதே காதலே ஆறாம் அத்தியாயம்

கண்ணம்மா rvrv

Moderator
Staff member
Nov 22, 2020
7
0
1
அத்தியாயம் 6


காலத்தின் பிழர்வில் உனைப்
பிரிய நேர்ந்திருக்கலாம்

உன் நினைவில் என்றென்றும்
உன்னுடனே என் நடப்பு

ஏதேனுமொன்றாக உன்னோடு
காலம் கழிக்கவே எண்ணம்
கொண்டலைகிறது பெண் மனம்!!!


கண்ணீர் தன்னாலே பெருக்கெடுக்க.. முந்தானையில் மூக்கை சிந்தி.. கண்ணைத் துடைத்து.. அதைப் பார்த்தது பார்த்த வண்ணமே இருந்தார்.

‘இத்தா பாசம் வெச்சிருக்கவளை இன்னான்னா வார்த்தைலா பேசிட்டேன்.. எப்புடி தாங்குனாளோ எம்மருமவ’ அவர் பார்வை அந்தக் காலணியின் மேலிருந்து அகலவே இல்லை. மறுபடியும் கண்ணில் நீர் தளும்ப ஆரம்பித்தது.

ஆம் மொழி அவசரமாகக் கழட்டி போட்டு விட்டுப் போன செருப்பு மேலே இருந்தது அன்னத்தின் பார்வை. அது அன்பாவினது. அவன் உயிரோடு இருக்கும் போது உபயோகித்தது. அவன் சென்ற பிறகு அவன் பொருட்கள் எதையும் ஒழித்தெடுக்க விடவில்லை அருள்மொழி. அவனோடு வாழ்ந்தவள்.. இப்பொது அவன் உபயோகித்த பொருட்களோடு வாழ தொடங்கியிருந்தாள்.

“இத்தல்லாம் பாக்க சொல்லோ என்னால முடில டி.. மூச்சு முட்டிக்கினு வர்து தெர்மா? எம்புள்ள நடமாட்ற மாறியேக்கீது டி.. நெஞ்சட்ச்சிகினு வர்து.. புருசனும் போய், புள்ளையும் போய் எம்பேரப்புள்ள தான் ஆதாரன்னுக்கீறேன்.. போனவன் பொருளு எதுவும் வெச்சிர்க்க கூடாது டி, கைபுள்ளைய வேற வெச்சிற்கோம் புரிஞ்சிக்கோ டி”

எப்படி எப்படியோ அன்னம் மன்றாடியும் கேட்கவில்லை அருள்மொழி.

“அப்டி பார்த்தா நானும், உம்பேர புள்ளியும்.. எம்புருசன் பொருளுதா அத்த, அப்போ நாங்களு வோணாமா உனக்கு.. எங்களையவும் தூக்கி கடாசிர போறியா” போட்டாளே ஒரு போடு மிரண்டு போனார் அன்னம்.

“ஏண்டி, ஏண்டி இப்புடிலா அபசகுனமா பேசற.. இப்போ தா ஒருத்தன மொத்தமா வாரி குத்துட்டு உக்காஞ்சினுக்கீறேன். நீயும் ஏண்டி”
“பின்னன்னா உம்புருசன் பொருள்லா மட்டு நீ எட்த்து வெச்சிகினு இர்க்கலாம். எம்புருஷன்து மட்டும் இர்க்க கூடாதா இன்னா நியாயோ” மொழி சரியாய் வாயை அடைக்க.. அதான் பிறகு ஏன் வாயை திறக்கிறார் அன்னம்.

“தோ பாரு அத்த, நெசத்த ஏத்துக்கோ.. இதான் இனிமே நமக்கு. பழகிக்கோ, உம்புள்ள வொணா என்னிய வுட்டு போய் இர்க்கலாம். ஆனா என்னோட இர்க்குறதா தா நான் நென்ச்சிக்கிணு கீறேன். இர்கோ சொல்லோ அவுங்ளோட இர்ந்துட்டேன். இப்போ அவன் பொளங்குன பொர்ளோட குடும்பம் நடத்தினுக்கீறேன். அவுங்ள கடந்தன்னா நான் கரஞ்சி பூடுவேன் அத்த.. புர்ஞ்சிக்கோத்த” கை பிடித்துக் கரகரத்த குரலில் சொல்ல.. அதன் பிறகு ஒன்றும் சொல்வதில்லை.

இதையெல்லாம் நினைத்தபடியே அமர்ந்திருக்க.. “அத்தே அங்கன்னா செய்ற.. இங்க வந்து இவன புடியேன்” மருமகளின் குரல் கேட்டு.. வீட்டினுள் பார்த்தார். அங்கே அருள் கையில் மழலையோடு நிற்க..

“இன்னாடி, பால குடுக்காம எம்மூஞ்சி பாத்துனு நின்னுகிற” எழுந்து போக.. தலையிலடித்துக் கொண்டவள்,

“ஒரு புள்ளைய பெத்து வளத்து இன்னா ப்ரோஜனம்.. உன் மவன் உன்னிய திட்றதுல தப்பே இல்ல.. வா இவன புடி வந்துர்றேன்” குளியலறை நோக்கி மொழி செல்ல..

புரிந்தவர் “சர்தா போடி ரொம்பச் செய்துக்கற” பிள்ளையை வாங்கியபடி.. முகம் கசங்க மருமகள் பின்னால் பார்வை வைத்த அன்னத்திற்கும்.. மகனின் நினைப்பு தான்.

தாய் மகன் போல் பேச பழக மாட்டார்கள் இருவரும். மாமியார் மருமகள் போல் எப்போதும் ஏட்டிக்கு போட்டி தான். ஒன்று அவன் வாறுவான்.. இல்லை அன்னம் வாரி விடுவார் இவனை. ஆனால் மகனை எங்கும் விட்டுக் கொடுக்காதவர். தாய், மகன் பாசத்தையும் மீறியதொரு தகப்பன், மகள் பிணைப்பு இருவருக்கும்.

திட உணவை கொடுக்கப் பழகியிருந்தாலும், தாய்ப்பாலும் பிள்ளைக்குக் கொடுப்பதைத் தொடர்ந்து தான் இருந்தாள் அருள்மொழி இப்போதும். பகலில் காலை ஒரு வேளையும், இரவில் தாய்ப்பாலையும் பழக்க படுத்தியிருந்தாள். பிறந்த புதிதில் பால் வராமல் கஷ்டப்பட, அன்பா தான் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தான்.

ஏற்கனவே ஒன்பது மாதத்தில் பிறந்திருந்தது குழந்தை. குறை பிரசவம். மிகவும் ஜாக்கிரதையாகக் கண்ணின் மணி போல் தான் பார்த்துக் கொண்டிருந்தான் மொழியை. எதிர்பாரா ஒரு நிகழ்வில் இடுப்பு வலி எடுத்திட, பிரசவமாகி இருந்தது.

மொழி பிள்ளை பெற வலியில் துடிக்க.. இவன் மனைவியின் வலியோடு, தவிப்பின் வலியோடும் போராடிக் கொண்டிருந்தான். நல்ல செய்தி காதில் விழும் வரைக்கும், டாக்டரையும் நர்ஸுகளையும் ஒரு வழி செய்திருந்தான்.
மறக்கவே மாட்டார்கள் இவன் செய்த அலப்பறையையும், இவனையும். இப்போதிருக்கும் காலகட்டமில்லை. கணவன் மனைவி பிரசவிக்கும் போது அருகிலிருப்பது போல்.

எக் கணவன்மாரும் பிரசவத்திற்கு வர மாட்டார்கள். வீட்டுப் பெண்கள், இல்லையென்றால் பக்கத்தில் வசிக்கும் பெண்கள், சொந்தக்கார பெண்கள் துணைக்கு வந்து பார்த்து கொள்வர். ஆண்களைப் பொறுத்தவரையில் அதுவொரு நிகழ்வு அவ்வளவே. அதனால் குழந்தை பிறந்த பிறகே வருவர்.

ஆனால் இவன் நேருக்கு மாற். மாத பரிசோதனை தொடங்கி, பிரசவம் வரை அழைத்து வந்து சேர்த்து விட்டதிலிருந்து செய்ததெல்லாம் அதீதம் தான். விட்டால் கதவை உடைத்துக்கொண்டு சென்று விடுவான் போல். நிமிடத்திற்கு ஒரு முறை தட்டி, நிலவரத்தை கேட்டு.. அவர்கள் ஓயாமல் சொல்லி.. பின் முடியாமல் “சார் பேசாம நீங்க உள்ள வந்துருங்க. அவங்களோட மல்லுகட்றதை விட, உங்களோட தான் முடியல எங்களுக்கு” அலுத்துக்கொள்ள..

அதன் பிறகு தான் “இல்லல்ல நர்சம்மா.. நீங்கோ அவுங்கள கவனிங்கோ. நான் இங்கயே இருந்துக்குறேன்” பதறி போய்க் கொஞ்சம் அடங்கினான்.

இப்படி அருள் மொழி குறித்து எல்லாவற்றிலும் இவன் மிகுதி தான் அன்பா. அப்படியிருக்க இதில் விடுவானா? நேராக மருத்துவரிடம் கூட்டிச்சென்ற பிறகு தான் நிதானித்தான்.
“டேய் மாமா என் மானமே போவுது டா உன்னால.. உசுர வாங்கற டா நீ.. இதுக்கோசாரம் ஆராவது டாக்டர போய்க் கண்டுக்குவாங்களா? அத்தைகிட்ட சொன்னா? இன்னா ஏதுன்னு விசாரிச்சுக் கை வைத்தியம் பத்தியமெல்லாம் செஞ்சுட போறாங்கோ” வரமாட்டேனென மொழி அடம் பண்ண..

“யாரு என்னிய பெத்ததா, சர்யா போச்சு.. நீ வேற யார சொல்லியிருந்தாலும் நம்பிருப்பேன்ப்போவ். போயும் போயும் இத்த சொன்ன பாத்தியா.. தோ பாரு, உன் விசயத்துலயும் சரி, புள்ள விசயத்துலயும் சரி, நான் ஆரையும் நம்பறதால்ல.. அதுலயும் எங்கம்மாவை நம்பவே மாட்டேன். கெளம்புப்போவ் ஒரு நடை போய்ட்டு வந்திடலாம்” அவனும் வம்படி செய்ய..

“தோ பார்டா, எத்த சொல்றதாருந்தாலும் உன் பொண்டாட்டியோட நிறுத்திக்க.. என்னை இழுத்து வுடாத தேவல்லாம புர்ஞ்சிதா. உன்னையே அருமை பெருமையா பெத்து.. ஒத்த பனைமரம் கணக்கா வளத்தினவ நானு.. கேட்டுச்சா ம்ம்க்கும்” கேட்ட அன்னம் தாவாங்கட்டையால் தோளில் இடித்து நொடிக்க..

“அத்த என்னருந்தாலும், அவுங்ள நீங்கோ அப்புடி சொல்லிருக்கக் கூடாது” பரிந்து பேசுவது போல் சொன்னதோடு அன்பாவிடம் நெருங்கிய மொழி

“கரண்ட் கம்பம்ன்னு வோணா சொல்லிருக்கலாம். இல்லடா மாமா.. நா வோணும்னா அத்தைக்குச் சொல்லி தர்வா” காது கடித்துக் கணவனுக்கு மட்டும் கேட்பது போல், இவள் அழைக்கும் பெயரை நுழைத்து விட்டு சொல்ல.. அவன் முறைத்ததில் சிரிப்பு வந்தே விட்டிருந்தது அருள்மொழிக்கு.

வாய் பொத்தி சிரிக்க.. அவளை முறைப்பதை விடுத்து, இப்பொது அன்னத்தை முறைத்தான் எல்லாம் இவராலென்று. ஏற்கனவே சிரிக்கிறாள், எதிர்வினை ஆற்றினால் போட்டு உடைத்தே விடுவாளென அவனுக்குப் பயம்.

“ம்மோவ், இன்னுமின்னா வேடிக்க இங்க.. போ, போய் ஆஸ்பித்திரி போவ இன்னா வோணுமோ எட்த்து வையி” எங்கே சொல்லி விடுவாளோவென நினைத்து அவரை விரட்ட சொல்ல..

“மவன் எதுக்குத் திடுக்குன்னு டென்சன் ஆவுறான்.. பிரிலியே” யோசித்ததோடு..

“இன்னாடா, இன்னா பிரச்ன உனுக்கு.. இன்னாத்துக்கு இப்போ கோவம் வர்து.. உன் பொண்டாட்டிக்கு மிடிலனா என்னிய போட்டுப் பாடா படுத்துவியா நீ” சண்டையோன்றுக்கு கிளம்ப..

“பின்னன்னா, ஏ கவல கூடோ உன்க்கு இருக்குறா மாரி தெர்ல. இதுல என்னைய வளத்து வுட்டேன்னு பெரும வேற. ரொம்பப் பேசாதேம்மா.. ஒரு வயசுக்கு மேல எனக்கு அல்லாமே நியாபகம் இர்க்கு” அவனும் அன்னத்தைப் பேச..

“இன்ன டா ன்னா நியாபகம் இர்க்கு உனக்கு” விடுவேனாவென்று எகிறினார். அவர் கவனிக்கவில்லை. மொழி அன்பாவிடம் சொன்னதை. அன்பா மருத்துவமனை செல்லலாமெனக் குதிக்க ஆரம்பித்ததிலிருந்து.. என்னென்ன வைத்திய முறைகள் இருக்கிறதென யோசனைக்குப் போய்விட்டார். ஊசி போட்டு வரவைத்தால் பிறகு நான் எதற்கு இருக்கிறேனென்ற எண்ணத்தில்.

“வோணாம்மா, என் வாயை கெளறி தேரை இழுத்து தெருவுல நீயே வுட்டுக்காத.. உன் மருமக வேற இருக்கா சொல்டேன். அப்றம் மானம் பூட்சி, மறுவாத பூட்சின்னு குய்யோ முய்யோன்னு கத்தி பிரோஜனமில்லை” என்றானே பார்ப்போம். அப்படியே வாயை மூடிக்கொண்டார் அன்னம்.

ஏனென்றால் அன்பா பிறந்து முதல், அனைத்தும் செய்து.. ஒத்தாசையாய் இருந்து பார்த்தவர் அன்னத்தின் கணவர் சாமிநாதனே. கட்டிட மேஸ்திரியானா அவரிடம் கூலித்தொழிலாளியாக வந்த அன்னத்தை.. பார்த்து, பேசி, பழக.. இருவர் மனமும் ஒத்துப் போனது. திருமணமும் ஆனது. இருவருக்குமே பெரிதாகச் சொந்தபந்தமென்று யாருமில்லையாகவே.. அவர் தான் எல்லாமே அன்னத்திற்கு.

“டேய் மவ்னே, உங்காத்தா பெத்து போட்டதோட கடமை முடிஞ்சிட்ச்சுன்னு, இந்தா உம்புள்ளைய வளத்துக்கோ ன்னு, எங்கிட்ட உன்னைக் குட்த்துட்டா.. ஊட்டி வுடுறதுல இர்ந்து சகலமும் இந்த அப்பன்தான். மற்ந்துராத நியாபகம் வெச்சிக்க. கடைசிக் காலத்துல எனக்கு நீ தான் கஞ்சி ஊத்தணும் டா” வென்று சொல்லி அன்னத்தை வெறுப்பேத்துவார். இப்பொது உயிரோடு இல்லை. அன்பாவிற்குப் பத்தொன்பது வயதிருக்கும் பொழுது, தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருந்தது.

அதைக் கொண்டே அன்பா, அவரை மடக்க.. அன்னம் மருமகளைப் பார்த்திருந்தார். ‘ஆஸ்பித்திரிக்கு வோணாம் உம்புருசன்ட்ட சொல்லு’ பார்வையால் உணர்த்தி.

“ரெண்டுபேரும் கூட்டு சேர்ந்து என்னைச் செய்யிரீங்களா எப்படிப் பேசியும் என்னிய தெச திர்ப்ப முடியாது.. போக வோணுமே வோணும்” அன்பானந்தம் சொன்னதைச் செய்து முடித்தே இருந்தான்.

“நெனச்சதை சாதிச்சே ஆவணும் இவனுக்கு அப்பனுக்குள்ள பிடிவாதம் அப்டியே” சொன்னாலும்.. தன்பங்கிற்கு அன்னமும் உணவு பத்தியம் செய்ய.. அருள் ஈடிற்குப் பிள்ளை பெற்ற பெண்களுக்கெல்லாம் தாய்ப்பால் நின்றிருக்க.. அவளுக்கு மட்டும் நன்றாகவே இப்ப மட்டும்.

கதவு திறக்கும் சத்தத்தில் அன்னம் கவனம் கலைய.. அருள் மொழி சோர்ந்து போய் வெளி வருவது தெரிந்தது. வேதனை தாங்கிய முகம் வேர்த்து வடிந்திருந்தது.

அவள் வலியை வாங்க முடியுமென்றால், மொத்தத்தையும் வாங்கி இருப்பார் அன்னம். இது அவள் பொருத்தாகவேண்டிய ஒன்றாகிற்றே.

‘இவ தலையெழுத்து இப்பிடியா ஆவணும். ஆண்டவா” நடப்பதை கையாலாகாத்தனத்துடன் பார்த்து நின்றிருக்க..

“பாரு த்தை உம்பேரப்புள்ள இப்ப சிரிக்கிறத.. என்னை நீ திட்றது அவனுக்கே பிடிக்கல போல.. அழுது உங்கோவத்த மலையிறக்கிட்டான். இனிமே என்னை நீ ஒரு வார்த்த சொல்ல முடியுன்ற” அருகில் வந்தவள் குழந்தையைக் கையில் வாங்கிப் பெருமையாகச் சொல்ல..

“இவன் மட்டுமா டி” பேரனை தந்தவரும் பெருமூச்சோடு பதில் சொல்ல.. மொழி அப்படியே அமைதியாகி விட, அங்கே அப்படியொரு இறுக்கமான சூழல் ஒன்று குடிகொண்டது.

அன்னத்தை இலகு நிலைக்குக் கொண்டு வரும் பொருட்டே அவள் பேச.. அதுவே அவளுக்கு வினையாகி போனது. அவரும் வேண்டுமென்றே சொல்லவில்லை. அன்பா இருக்கும் வரை அப்படிதான் அவளைப் பார்த்துக் கொண்டான்.

அதை மனதில் வைத்தே ஆதங்கத்தோடு சொல்ல.. அவன் நினைவோடு திரும்பி அறைக்குச் செல்ல அடியெடுத்து வைத்தவளுக்கு, அவ்வளவு தான் அவளது கட்டுப்பாடு எல்லாம் தளர.. “அத்தை” நிலை தடுமாறி பின் அவளே சுதாரித்தாள்.

கனமேறி கிடந்ததில் நெடு நேரம் வலி பொறுத்தது, இப்போதும் கட்டின பாலை வெளி கொணர அனுபவித்த வலி, எப்போதும் ஆறாமல் ரணமாய்க் கிடக்கும் வலியெல்லாம் சேர்ந்து.. ஆளை தள்ள..

“அருளு, ன்னாடி.. இன்னாடி பண்ணுது” தாங்கிய அன்னம் “அய்யோ நானே வார்த்தையை வுட்டு.. எம் புள்ள மனசை நோவடிச்சிட்டேனே” தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

“அச்சோ, த்த.. ஒன்னுமில்லத்த.. எனக்கு ஒண்ணுமில்ல தோ பாரு நல்லாக்கறேன்” அவள் தான் தேற்றவேண்டியிருந்தது அவரை.

கண்ணீரை துடைத்துக் கொண்டவர் “மத்தியோ சாப்டியா இல்லியா டி” அவர் நாடி பிடித்துக் கேட்க..

“இல்ல.. த்தை, டீயும் பன்னு ந்தான் உள்ள தள்ளிகினேன்” பதில் சொன்னபடியே மொழி அறைக்குப் போக..

“இன்னா பொண்ணுடி நீ.. இம்மா நேரம் பட்னியாக்கீற.. சொவருருர்ந்தா தான் சித்திரம் புர்தா.. மொதோ சாப்புடு அப்றமேட்டு பால் தர்லாம். குடு புள்ளைய நா பெராக்கு காமிச்சிக்கினு கீறேன். நீ துன்ட்டு வா” குழந்தையை வாங்க வந்தார் அன்னம்.

பேரப்பிள்ளையின் பசிக்காகச் சண்டையிட்டவருக்கு.. இப்பொது மருமகளின் பசி பெரிதாகத் தெரிந்தது.

“அவ்ளோ சுளுவா எனக்கொண்ணும் ஆவாதுத்த.. இன்னும் எவ்ளோ செய்னும் நானு” ஒரு மாதிரியான குரலில் தீவிரமாகச் சொன்னவள்.. அன்னம் திகைத்து பார்ப்பதை பார்த்து.. சகஜமாகி “இல்ல த்தை இவன் பால குட்ச்சா தான் எனக்கு வலி குறையுத்த.. அத சொன்னேன் வந்து துன்னுக்கறேன்னு” அவள் விடுவிடுவென்று உள்ளே சென்று விட்டாள்.

மகன் விஷயத்தில் இவள் எதையோ மறுக்கிறாள். ஏதோ உணர்ந்திருக்கிறாள். உதவி செய்ய முடியவில்லையென்றாலும்.. இனி இவ்வாறு நடந்துகொள்ளக் கூடாதென முடிவெடுத்தவர்.. அவளுக்குத் தட்டில் சாப்பிட எடுத்துக் கொண்டு அறையினுள்ளே சென்றார்.

அவர் வருவதைப் பார்த்து “இன்னாத்த நாந்தான் வந்துக்கறேன் சொன்னேன்ல.. நீ எதுக்குச் சிரமப்பட்ற.. நாள் புல்லா புள்ளைய பார்த்து ரெஸ்டில்லாம கீற.. ஒரு எடமா இரேன்” மொழி சொன்னாலும்..

“உம்புள்ளைக்கு நீ பசியாத்து.. எம்புள்ளைக்கு நா பசியாத்துறேன்” சொன்னதோடு பெரிய பெரிய கவளமாக உருட்டி ஊட்ட.. இருவரும் பார்க்க அவரின் பார்வையில் அவள் களங்கவில்லை. அவள் பார்வையில் கலங்கி விட்டார் அன்னம்.

கணவன் இறந்த போதே களங்காதவள்.. தன் மேல் கரை விழும் போதா கலங்குவாள். இதுவரை ஒரு சொட்டு நீரை விழி பார்க்க விடவில்லை. எதற்குப் புதைத்து வைத்திருக்கிறாளோ விதிக்கே வெளிச்சம்.

“நடக்குறது அல்லாம் பாத்திருந்தும் என்னல்லாம் பேசிட்டேண்டி உன்ன.. அத்தைய மன்னிச்சிருடி மருமவளே” அன்னம் உணர்ந்து வருத்தத்தை முன் வைக்க..

“இன்னாத்த நீ உன் மருமவள பேசற.. உனக்கில்லாத உர்மையா? ஆனா ஒன்னு யோசி த்த.. நம்மோ வாழ்க்கயை நாம தான் தீர்மானிச்சி வாழனும்.. அதுவும் நமக்காக வாழனும்.. ஊரான்காரன் இப்புடி பேசறான், அப்புடி பேசறான்னு பய்ந்து பய்ந்து வாழ்ந்தா.. கடைசி வரைக்கும் கண்டவனுக்கெல்லாம் பய்ந்து சாவணும்.

நானு ஒன்னும் சால்ஜாப்பு செய்லத்த.. நியாயத்துக்குவாண்டி போராட்றேன். அதுல சில சறுக்கு வருந்தான். அத்துகுவாண்டி லா உட்ற முடியுமா சொல்லு. சொல்றவன் எம்மாங்காலம் சொல்லுவான். இத்த வுட பெர்சா விசயம் கேட்சின்னா.. அத்த பேச ஆரம்பிச்சிருவானுவ.. ஆனா நாம அங்கேயே தேங்கிருவோம்.

கொஞ்சம் புர்ஞ்சிக்கோ அத்த. இன்னும் ஒரு வாரந்தான் ஓரளவு எல்லாத்தையும் முட்ச்சிருவேன்” நீளமாகப் பேசி அன்னம் முகம் பார்க்க.. மொழி பேசியதற்கு வருத்தமெல்லாம் தெரியவில்லை. புரிந்துகொண்ட பாவனை மட்டுமே இருந்தது.

‘இன்னிக்கி சரிகட்டிட்டோம் போல’ மொழிக்கு தன்னாலே பெரு மூச்சு வந்தாலும், குடும்பத்தில் கலகம் செய்யும் அவர்களெல்லாம் என்ன ஜென்மத்தில் சேர்த்தியென்றே தோன்றி விட்டது.

ஒரு பெண் நீதிக்காக நியாயம் கேட்டு நின்றால் பொறுக்காதமா? அவர்களுக்கு.. கணவன் சென்றுவிட்டால் இவளும் மூலையில் முடங்கி அமர வேண்டுமா?

எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு சரி சரியென்று செல்ல.. நடந்தவை ஒன்றும் சாதாரண விஷயமில்லையே. கூர்ந்து யோசித்துப் பார்த்தால், கச்சிதமாகக் கணக்குப் போட்டல்லவா காரியம் செய்திருக்கிறார்கள். எப்படிச் சாதாரணமாக விடுவது.

முடிந்த மட்டும் முயன்று சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும். முடியாவிட்டாலும் கட்டியவனுக்கு என்ன நேர்ந்ததென்று தெரிந்து.. செய்தவர்களுக்குத் தண்டனை தர வேண்டும்.

இவர்களெல்லாம் சந்தோஷமாக இருக்க.. நான் மட்டும் கணவனைப் பறி கொடுத்து நிற்க வேண்டுமா?

அப்படியென்றால் இவர்கள் வாழலாம் நான் வாழ கூடாது அப்படித்தானே? எப்பேர்ப்பட்ட எண்ணம். தவறு செய்தவர்கள் நிமிர்ந்து நிற்க.. நான் தணிந்து போக வேண்டுமா? முடியாது.

குடிகாரன், பொறுப்பில்லாதவன் எத்தனையெத்தனை பேச்சுகள் அவனைப் பற்றி. சிங்கம் நின்று தீர்ப்பு சொன்ன இடத்தில்.. நரியின் நாட்டாமை செலுத்துவதா? கணவன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, களங்கம் கலைந்தே ஆக வேண்டும். வெறியொன்று கிளம்பியது.

அப்போது பார்த்து “பெரியத்த.. அத்த எங்ககீற.. கொழம்பு இர்ந்தா கொஞ்சங்குடேன்” அழைத்தபடியே உள்ளே வந்திருந்த, ஆனந்தியின் கண்கள் அப்படியே விரிந்தது.

மாமியார் மருமகளின் அன்யோன்யத்திலென்று நினைத்தால் சத்தியமாக இல்லை.. இப்பிடியொரு காட்சியைக் காண்போமென்று நினைத்திருக்கவில்லை ஆனந்தி. ஆகவே இவ்வதிர்ச்சி.

இருட்டில் ஓருருவமாக நின்றிருந்தவளுக்கு, இவர்கள் பேசுவது நன்றாகக் கேட்கவில்லையென்றாலும்.. அன்னம் மருமகளைக் கேள்வி கேட்டதில், இன்னைக்கொரு வேடிக்கை இருக்கிறதென்றே நினைத்தாள்.

அதன் பிறகு மாமியார், மருமகளை உள்ளே அழைத்துப் போவதும்.. இவள் கையை உதறி உள்ளே ஓடுவதும் குழப்பமாக இருந்தாலும்.. மொழி திட்டு வாங்குவது நிச்சயம்.

கண் குளிர பார்த்து, காது குளிர கேட்க வேண்டுமென்று தோன்ற.. அதற்கு ஏதோ ஒரு சாக்கு வேண்டுமே? குழம்பு கிண்ணத்தைத் தூக்கி கொண்டு வந்தாள்.

இப்படி வருவது புதிதில்லையாகவே உரிமையாய் வந்திருக்க.. இங்கே அவள் நினைத்ததா நடந்தது? பாவம் நொந்து விட்டாள். இத்தனை நாள் அன்னம் ஊர் வாய்க்கு பயந்து திட்டி இருக்கலாம். ஆனால் இன்று மொழியை நிற்கவைத்துக் கேள்வி கேட்டதற்குக் காரணம் ஆனந்தி.

“இன்னா பெரியத்தை, உம்மருமவ எங்க பூட்டா? கொய்ந்த கத்தினே இர்ந்துச்சு போல? தோ பாரு, அத்த நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. உம்மருவ செய்றதெல்லாம் நல்லாவா இருக்கு. புருசன் பூட்டா எல்லாப் பொண்டாட்டிங்களும் இப்பிடியா வரிஞ்சி கட்டினு கெளம்புறாளுங்க.

உம்மருமவளுக்கு இன்னா கொற? இப்ப எதுக்கு வேல வேலன்னு அலஞ்சிக்கினு கீறா? ஏற்கனவே ஊர் முழுக்க அவ பேச்சு தான் பேசினு கடக்குதுங்க. அருணு கூடச் சுத்தறா. அவங்கூடத் தான் எந்நேரமும் பழியா கெடக்குறான்னு.

அன்பா சாவன்னிக்கே இன்னான்னா பிரிச்சின நடந்துச்சு. அவ்ளோ ஏன் அருளு அப்பாவே எம்மாம்பேச்சு பேசினாரு. இதெல்லா தேவையா சொல்லு. அந்தக் கவுன்சலராண்ட சொல்லி பணம் எதனா வாங்கினு ஒதுங்கிக்கச் சொல்லு. இல்ல உன் கௌரவதையே குழி தோண்டி பொதச்சிருவா பாத்துக்கோ”

பிள்ளை அழுது, போராடி சமாதானமிட்டு தூங்கவைத்து வந்தவரிடத்தில்.. ஆனந்தி இவ்வளவும் பேசி இருக்க.. இவர் கோபமெல்லாம் மருமகளின் மேல் திரும்பியது.
‘இவ இடங்குடுக்கவும் தான அல்லாரும் பேசறாங்கோ’ கோபம் துளிர்த்தது. ஊரார் போல் சந்தேகப்பட்டோ.. நம்பிக்கையில்லாமலோ அல்ல. இப்படி இவர்களைப் பேச இடம் கொடுத்துவிட்டாளே, அந்த ஆத்திரம் மொழியிடம் பேச வைத்தது.

அப்போதும் அன்னம் ஆனந்திக்குப் பதில் தராமலில்லை. “எம்மருமவள பத்தி எனக்குத் தெரியும்டி, எவளும் எனக்குச் சொல்ல வோணாம். அவ என்ன எனக்குத் தெரியாம ஒளிஞ்சோளிஞ்சா செய்றா. அவ தைரியோ ஆருக்கு வரும். அவோ மனசுல ஏதோவொரு நெருப்பு எரிஞ்சிக்கினு கீது. அத்த அணைக்க முடியாம தவிச்சினுக்கீறா.

அம்மாவா நா செய்ய வேண்டியதை, பொண்ணா இருந்து அவ எனுக்குச் செஞ்சினுக்கிறா. எலும்பில்லா நாக்கு, என்ன வொணா பேசலாம்னு பேசினு இருக்காத புர்ஞ்சிதா. ஒரு நேரம்போல ஒர்நேரம் இர்க்க மாட்டேன்”

“அய்யே இப்போ இன்னா சொல்ட்டேன்னு என்னாண்ட எகிறிக்கினு வர.. ஏதோ ஊர் சொல்தெ, உன்னாண்ட சொன்னா நீ கண்டிச்சி வெப்பியேன்னு சொன்னே.. கேட்டா கேளு கேக்காட்டி போ” தாவங்கட்டையில் இடித்து நொடித்துக் கொண்டு அவள் சென்று விட்டாலும், அவர் முகத்திலிருந்த கோபம் அவளுக்குத் தெரிந்தது. இதைப் பற்றிக் கேட்பாரென.

இப்படியாகக் கற்பனை ஆயிரம் கண்டு.. அதை நேரிலும் காண வந்திருக்க.. இங்கேயோ நடப்பது? அனைத்தும் தலைகீழல்லவா. உறைந்து நின்றாள்.

“இன்னா ஆனந்திக்கா, அங்கேயே நின்னுட்ட, கைல இன்னா கிண்ணமா? கொழம்பு வோணுமா”

நக்கல் தொனித்ததோ மொழியின் குரலில். கவனிக்கும் நிலையிலில்லை ஆனந்தி.

“ல்ல, அது.. வந்து.. இல்ல நான் அப்பறமேட்டுக்கு வறெ” நகர்ந்தவள் விட்டிருந்தால் அடித்துப் பிடித்தாவது ஓடியே விட்டிருப்பாள். எங்கே விட்டாள் அருள்மொழி.

“அட இன்னாக்கா பேயறைஞ்சா போலப் பூட்சு உம்மொவம். நீ நென்ச்சி வந்தது ஒன்னு நடக்கலையா அதா மெரண்ட்டியா” என்றவள் “த்த உம்பெரனுக்கு ஏப்பம் எடுத்துவுடேன்” குழந்தையை அன்னம் கையில் கொடுத்து.. ஆனந்தியருகில் வந்துவிட்டாள்.

“ல்ல, அதுக்கில்ல.. புள்ளைய வூட்ல தனியா வுட்டு வண்டேன் அதா” எச்சில் விழுங்கினாள்.

“அட, வந்துட்டு நீ வாங்கினு போவாம போனா.. எம்மன்சு நோவுமில்லை. வன்டல்ல வாங்கினு போறது”

“என்ன, இன்னா குடுக்கப் போற” ஒரடி பின் எட்டு வைத்தபடியே திருதிருவென விழித்தாள்.

“புருசனுக்குப் பொண்டாட்டிக்கும் எதுல ஒத்துப்போவுதோ.. இல்லியோ.. திர்ட்டு முழில நல்லா ஒத்துப்போவுது” முணுமுணுத்தவள்..

“அட நானென்ன பொலேர்ன்னு கன்னதுலையா குடுக்கப் போறேன். இன்னான்னு கேக்கற? கிண்ணத்துல கொழம்பக் குடுக்கபோறே” ஒன்றுமே தெரியாதது போல் வாங்கி மொழி சமையலறை புக..

‘பூடவமாவே பேசறப்போலவே படுதே’ யோசனையோடு ஆனந்தி நின்று பார்த்திருந்தாள்.

“இந்தாக்கா நீ கேட்டது” அருகே வந்த மொழி “க்கா ஒன்னு சொன்னா கோச்சிக்க மாட்டியே”

அவள் சொன்னதில்.. என்ன சொல்ல போகிறாளோவெனப் பார்க்க..

“ஊரார் சோத்துல உடம்ப வளக்லாம் தப்பில்ல. ஏன்னா? உங்ளுக்குப் புருசன் சரி இல்ல. நல்லா சம்பாரிச்சும் குடும்பத்த நடத்த துப்பு இல்ல. அதனால நீங்கோ அப்பிடித்தா நடந்துக்குவீங்க. ஆனா, ஊரார் குடும்பத்த கலச்சி உடம்ப வளக்க நினைக்காத ன்னா.

இது தா உனக்கு நாந்தரக் கட்ச்சி வார்னிங்கு. இதுக்கு மேல தேவ இல்லாம, நல்லது சொல்றேன்னு.. எங்குடும்ப விசயத்துல மூக்க நுழைச்சே? உன்குடும்ப மானத்த சந்தி சிரிக்க வெச்ருவேன். இன்னா பிர்லையா? நான் இப்டி சொன்னேன்னு போய் உம்புருசன்ட்ட சொல்லு. அந்தாளு விம் போட்டு விளக்குவான்” அன்னத்திற்குக் கேட்கா வண்ணம், சத்தமில்லாமல் சொன்னாலும்.. கண்டிப்புடன் சொன்னாள். பார்வையை ஆழ்ந்து, அவள்மேல் நிலைக்க விட்டு.

அது சொன்ன செய்தி உனக்கும், உன் புருஷனுக்கும் நான் வாழ்க்கை பிச்சை போட்டுள்ளேன். தேவையில்லாமல் சீண்டி கெடுத்து கொள்ளாதேயென்று.

ஆனால் ஆனந்தியால் தான்.. அவள் பார்வையில் என்ன இருந்ததென்று, புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் போல ஒதுங்கியே போவளென்று நினைத்திருக்க.. இப்படிப் படம் எடுத்து ஆடுவாளென்று ஜோசியமா கண்டாள்?

“இல்ல அருளு, எல்லா உங்குடும்ப நல்லதுக்கோசரந்தான்”

அருளின் முகம் கோபத்தைத் தத்தெடுக்கவும்.. விட்டால் போதுமென்று கிளம்ப..

“எங்க போறக்கா, இந்தா என் மாமியார் நல்லா நல்லெண்ணெய் விட்டு.. சுருள சுருள வத்தவிட்டு எட்த்த.. எண்ணெய் கத்திரிக்கா கொழம்பு” ஆனந்தி கை பிடித்து அதில் திணிக்க..

‘அதான் நல்லா குடுத்யே.. நானுந்தான் வாங்கிக் கட்டிகிட்டேனே. இப்ப இதுவா “ நினைத்தாலும் கை தானாகக் கிண்ணத்தைப் பற்றியது.

‘இதெல்லாம் என்ன பொழப்போ’ கேவலமாக அருள்மொழி பார்த்து நிற்க.. தப்பித்தோம் பிழைத்தோமென்று ஆனந்தி வீட்டிற்குள் வந்து விட்டாலும்.. என்ன முயன்றும் மொழியின் வார்த்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

தட்டில் சோற்றோடு, இவளுக்காகக் காத்திருந்த இளங்கோ முன் சென்று.. நங்கென்று கிண்ணத்திலிருந்த குழம்பு சிதறுவது போல் வைத்தவள்..

“யோவ், அந்தப் புள்ள ஏய்யா என்னிய பார்த்து அப்டி சொன்னுச்சி” கணவனிடம் சண்டைக்குப் போக.. அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

“இன்னா டி கொழம்பு வாங்கியாறேன்னு போய்ட்டு.. திடுதிப்புன்னு வந்து இன்னான்னமோ சொல்ற.. இன்னா பொண்ணு? யார் பொண்ணு? இன்னா சொன்னா?

“ம்ம்ம் அவ தா, ஊருக்கே ராணி கணக்கா ஒர்த்தி இர்க்காளே.. அருளு.. அவ தா”

“அருளா” பெயரை கேட்டதுமே உள்ளே இவனுக்குக் கிலி பிடித்தது. விக்கின தொண்டை குழியைத் தண்ணீர் குடித்துச் சரி செய்தவன்.. “அது.. அது.. அதின்னா சொன்னுச்சின்னு எனக்கெப்பிடி டி தெர்யும். என்னாண்ட வந்து கேள்வி கேட்டு நின்னுனுக்கீற” சமாளித்தான்.

“அவ உன்னாண்ட தான கேக்க சொன்னா”

“இன்னான்னு”

“நம்ம குடும்ப மானத்த சந்தி சிரிக்க வெச்சிருவாளாம் அவோ. இன்னாத்துக்கு அப்டி சொல்லணும்? நீ வேறோ அவ பேர சொன்னதுமே திகில் ஆவுற. இன்னாயா? என்க்கு தெர்யாம எதுலனா சிக்கினு கீறியா?”

“நான் இன்னாடி செஞ்சிருக்கப் போறேன். நீயா கனா காணாத. அவோ பேசனத்துக்கு என்னாண்ட வந்து குதிச்சினுக்கீற. நீ இன்னா வார்த்தைய வுட்டியோ. அவோ உன்ன கொழப்பி அமிச்சிக்கிறா”

“ஆமாய்யா எனக்கு வேற பொழப்பில்ல பாரு.. உன்ன கட்டிகினு இன்னா சொகத்த கண்டேன். வெளங்காத புருசன கட்டிகினு, கண்டவ வாய்ல அரப்படறேன்” ஒரு பாடு அழுது புலம்ப..

“உன்னோட ரோதனையா பூட்சுடி.. எந்நேரமும் ஒப்பாரி வெச்சிகினு.. மனுசன் இருப்பானா இந்த வூட்ல. எனக்குச் சோறும் வாணாம் ஒன்னியும் வாணாம். நீயே தின்னு” சோற்றோடு தட்டை தூக்கி சுவற்றில் ஓங்கி அடித்தவன்..

யோவ் சோத்த விசிறியட்சிட்டு போறியே வேலன்குவியா ஆனந்தி கத்த கத்த காதில் வாங்காது பீடி ஒன்றை பத்தவைத்து இளங்கோ வெளி வர.. இங்கே வீட்டிற்கு வெளி நின்று, கையைக் கட்டி.. அவர்கள் வீட்டை தான் பார்த்து நின்றிருந்தாள் அருள்மொழி. இருவரும் பக்கத்து வீடு.

பார்த்தவன்.. ஒரு நொடி ஸ்தம்பித்து நின்று பின் பார்க்காதது போல அகலபோக “இளங்கொண்ணா எப்பிடி எங்க வூட்டுக் கொழம்பு நல்லாருந்துச்சா” அவள் தான் குரல் கொடுத்தாள்.

“ஆங் ஆஆஆங்” முனங்கினான். வேறென்ன சொல்லுவான். நொடியும் நிற்காமல் ஒரே ஓட்டமாக ஓடியே விட்டான். இவள் திசைக்கு ஒரு கும்பிடை போட்டுவிட்டு.

‘ஓடுறியா, ஓடு.. ஓடு.. எவ்ளோ தூரங்காட்டியும் ஓடிற போற. எங்க ஓடனாலும் நியாயம் உன்ன தொரத்தும். அது தொரத்துதோ இல்லையோ.. நா உன்ன தொரத்துவேன். எம்புருசனுக்கு ஒரு நியாயம் கெடைக்கற வரைக்கும் தொர்த்துவேன்’

அவன் சென்ற திசையையே வெறித்திருந்தவளின் கண்களில்.. வெறி மின்னும் பார்வை.. தீர்க்கமாக அந்த இருட்டிலும் ஜொலித்தது.

காதல் பேசும்...