வேடதாரி - முழுக் கதை

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,425
939
113
அத்தியாயம்- 10

அடுத்து வந்த நாட்களில் மெல்ல மதி அவன் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள முயற்சி செய்தாள். அதன் நடுவே அவனது வீட்டின் பிரச்சனையும் மதியின் உதவியுடனே தீர்க்கப்பட்டது.

கிரிஜாவும் சும்மா இல்லாமல் அவனது அலைபேசிக்கு அழைத்து பேசலானாள். அவளது கம்பனியை பற்றியும், அவளது வேலையைப் பற்றியும், அவளுக்கு கிடைக்கும் சம்பள விவரங்கள் என்றும் ஒன்று விடாமல் அவனிடம் ஒப்பிக்க ஆரம்பித்தாள்.

அவற்றை கேட்க-கேட்க,அவன் அவளை நழுவ விட்டு விடக் கூடாது என்பதில் உறுதியானான்.தன்னுடைய கெத்தை விடாமல் அவர்களாகவே தன்னை நெருங்கும் படி செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அவனைப் பற்றி முழுவதுமாக அறிந்திருந்த மதி, தங்கையிடம் கலந்தாலோசித்து விட்டு அவனிடம் பேச முடிவெடுத்தாள்.

“பிரகாஷ்! உங்க கிட்ட பேசனும் காண்டீன் போகலாமா?”

அவள் பேசவேண்டும் என்று சொன்னதுமே அவனது மனம் குத்தாட்டம் போட்டது.நாம நினைச்ச மாதிரி நடக்குதே என்றெண்ணிக் கொண்டு அவளுடன் காண்டீனிற்குச் சென்றான்.
எதிர் எதிரே அமர்ந்ததும் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்து “நான் சொன்ன விஷயத்தைப் பற்றி யோசிச்சீங்களா சார்?” என்றாள்.

அவள் கேட்டதை புரிந்து கொண்டாலும் புரியாத மாதிரியே ஒரு பாவனையுடன் “எதை சொல்றீங்க மதி?” என்றான்.

அவளோ உள்ளுக்குள் கடுப்புடன் “கிரிஜா பத்தி தான் சார்” என்றாள்.

லேசாக நெற்றியை சுருக்கி யோசித்தவன் “ஒ..எனக்கும் பிடிச்சிருக்கு ஆனா எங்க வீட்டில் ஒத்துக்கனுமே” என்றான்.

அதைக் கேட்டதும் மனதிற்குள் ‘நீ எந்த அளவுக்கு நல்லவன்னு எனக்கு தெரியும்-டா...என்னம்மா சீன் போடுறான்’ என்று தாளித்தபடி “அதனாலென்ன சார். ஆரம்பத்தில் எதிர்ப்பவங்க கொஞ்ச நாள் போனா மாறிட மாட்டாங்களா” என்றாள் செயற்கையான சிரிப்புடன்.

சற்று நேரம் அமைதியாக யோசிப்பவன் அமர்ந்திருந்தவன் “ம்ம்..அப்போ கல்யாணத்தை நடத்திடலாமா?” என்றான்.

அவனது உடனடி தாக்குதலில் அதிர்ந்து போய் “நீங்க உங்க வீட்டில் பேச வேண்டாமா சார்?” என்றாள்.

“அது என்ன தேவைக்கு? அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல. கல்யாணத்தைக் கூட ரொம்ப சிம்பிளா கோவிலில் முடிச்சுக்கலாம்” என்றான்.

அவன் பேசப் பேச அவளுக்கு ரத்தம் அழுத்தம் கூடிக் கொண்டே போனது. அவனைப் பற்றித் தெரியும் என்றாலும் இது சற்று அதிகமாகத் தோன்றியது.

“அப்போ உங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணத்தை பண்ணலாம்னு சொல்றீங்களா?”

“ஆமாம்! கல்யாணம்னு சொன்னவுடனே எல்லோருக்கும் ஜவுளி எடு...நகையை வாங்கு, மண்டபத்தைப் பிடின்னு தேவை இல்லாத செலவை எல்லாம் இழுத்து விடுவாங்க” என்றான் எரிச்சலுடன்.

அவனது பேச்சைக் கேட்டு அவளது இதழில் மலரத் துடித்த சிரிப்பை அடக்கிக் கொண்டு மனதினுள் ‘வாடி வா! வந்து வகையா தான் சிக்குற’ என்று நகைத்துக் கொண்டாள்.

“சரி சார்! நான் கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் பார்த்திடவா?” என்று கேட்டாள்.

“பண்ணிடுங்க மதி...எனக்கு டிரஸ் எல்லாம் நீங்க எடுக்க வேண்டாம். காசை என் கிட்ட கொடுத்திடுங்க. நானே வாங்கிக்கிறேன்” என்றான்.

“சரி சார்! ஆனா முஹுர்த்தப் புடவையும், தாலியும் நீங்க வாங்கனும் சார்” என்றவளை வித்தியாசமாகப் பார்த்து “புடவையை கட்டப் போறது அவ, தாலியை போட்டுக்கப் போறது அவ...இதை ஏன் நான் வாங்கிக் கொடுக்கனும்? அவ தான் சம்பாதிக்கிறாளே அவளையே வாங்கிக்க சொல்லுங்க” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு ‘அம்மாடி! என் வாழ்க்கையில் இப்படியொரு கஞ்சனை பார்த்ததே இல்லை...என்னமா இருக்கான்’ என்று யோசித்துவிட்டு “அப்புறம் ஒரு விஷயம் சார்...” என்று இழுத்தாள்.

“சொல்லுங்க” என்றான் யோசனையுடன்.

“கல்யாணத்துக்குப் பிறகு நீங்க எங்க வீட்டோட வந்துட்டா நல்லது. உடம்பு சரியில்லாத அப்பாவை வச்சுகிட்டு நாங்க கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம். நீங்க எங்களோட இருந்துட்டா உதவியா இருக்கும்” என்றாள்.

இதை எதிர்பார்க்காதவன் “என்ன சொல்றீங்க? உங்க வீட்டில் இருந்தா எனக்கு மரியாதையா இருக்காது” என்றான்.

“உங்க மரியாதை போகும் வகையில் யாரும் நடந்துக்க மாட்டோம் சார்...நீங்க உங்க வீட்டில் எப்படி இருந்தீங்களோ அப்படியே இருக்கலாம்” என்று அழகாக வலையை வீசினாள்.

அவர்களது வீடு கண்முன்னே தோன்றி மறைய “ம்ம்..சரி. நீங்க சொன்னதை மறக்காம ஞாபகம் வச்சுக்கோங்க. எங்க வீட்டில் நான் என் செலவுக்கு மட்டும் தான் பணம் கொடுப்பேன். அதே மாதிரி தான் உங்க வீட்டிலேயும். உங்க தங்கச்சிக்கு ஆகுற செலவை அவ தான் கொடுக்கனும்” என்றான்.

அவன் சொன்னவற்றுக்கெல்லாம் தலையசைத்து சம்மதத்தை தெரிவித்தாள்.

அதன்பின்னர் இருவரும் எப்போது, எங்கே திருமணத்தை நடத்த வேண்டும் என்று பேசிவிட்டு எழுந்தனர். பிரகாசம் காண்டீனை விட்டு வெளியேறும் வரை பார்த்திருந்தவள் போனை எடுத்து தங்கையை அழைத்தாள்.

“கிரி! என்னடி இவன்! மகா கேவலமா இருக்கான்” என்றாள் எரிச்சலுடன்.

அவளோ அசராமல் “நீ என்ன புதுசா பார்க்கிறியா என்ன?” என்றாள்.

மதியோ சந்தேகத்துடன் “இவன் நமக்கு சரியா வருவானான்னு தெரியல. துரை நம்ம வீட்டில் தங்கிக்கிட்டு அவர் செலவுக்கு மட்டும் தான் பணம் கொடுப்பாராம்” என்றாள் கடுப்புடன்.

அதைக் கேட்டு சத்தமாக சிரித்த கிரிஜா “விடுக்கா! கழுதை வந்து என் கையில் சிக்கிடுச்சு. இனி, என் ஆட்டத்துக்கு தாளம் போட்டே ஆகனும். நான் பார்த்துகிறேன்” என்றாள்.

அவளோ சலித்துக் கொண்டு “இவன் பேன்ட பீயில் பொரி அரிசி பொறுக்கிறவன். இவன் கிட்டே இருந்து எப்படி காசை உருவப் போறேன்னு தான் தெரியல” என்றாள்.\

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு” என்று கூறி போனை அனைத்தாள்.

சீதாவிற்கு, பரிமளம் தனது தையல் மிஷினை கொடுக்க, அவள் அதை வைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தைத்து கொடுக்க ஆரம்பித்திருந்தாள். அதோடு விடாது ரகுவின் அண்ணன்களுடனான நல்லுறவை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டாள்.

பிரகாசம் தனது கல்யாணத்தைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்ததால் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை கண்டு கொள்ள இயலாமல் போனது. பத்மாவிற்கும் அவளது மாமியார் வழியில் சில பிரச்சனைகள் ஏற்பட, அவளும் பிறந்த வீட்டிற்கு வருவது தற்காலிகமாக நின்று போனது..

அதனால் அதுவரை பிரிந்திருந்த பெரியவர்கள் இருவரும் பெற்றவர்களிடம் அவ்வப்போது போனில் பேசவும், வேலை முடிந்து போகும் போது வந்து எட்டிப் பார்த்துவிட்டு செல்ல ஆரம்பித்தார்கள். அதனால் பரிமளத்தின் முகத்திலும், நாகராஜனின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது. காவ்யாவிற்கோ கேட்கவே வேண்டாம். சீதா அவளது ஹீரோயினாக மாறினாள்.

ரகுவும் தனது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும், பார்ட் டைமாக தனது கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் முயற்சித்துக் கொண்டிருந்தான். பிரகாசம் ஒருவன் தனது இயல்பைத் தொலைத்திருந்ததால்... வீட்டில் அமைதியும் நிம்மதியும் பெருகிக் கொண்டிருந்தது.

பிரகாசம் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. இரு வீட்டுப் பெரியவர்களும் இல்லாது, மதிக்குத் தெரிந்த நண்பர்கள் இருவருடனும், மதி மட்டுமே குடும்பத்தினராக இருக்க கோவிலில் சென்று கிரிஜாவின் கழுத்தில் தாலி கட்டினான்.

அதே கையோடு கிரிஜாவை அழைத்துக் கொண்டு மாலையும் கையுமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

மதிய சமையலுக்காக மாமியாரும், மருமகளும் காய் அறிந்து கொண்டிருக்க, வீட்டு வாயிலில் வந்து நின்ற காரில் இருந்து இறங்கியவர்களைக் கண்டு அதிர்ந்து நின்றனர்.

கூடை நாற்காலியில் அமர்ந்துபடி அரை உறக்கத்தில் இருந்த நாகராஜன் மாலையும் கழுத்துமாக வந்து நின்ற மகனைக் கண்டதும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றார்.

ஒருநிமிடம் மட்டுமே உறைந்து நின்ற பரிமளம் தன்னை சமாளித்துக் கொண்டு கசந்த முறுவலுடன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார். சீதாவோ என்ன செய்வது என்று புரியாமல் தவித்தவள், அவர்களிடம் “ஒருநிமிஷம் இருங்க ஆரத்தி கரைச்சு எடுத்திட்டு வந்துடுறேன்” என்று உள்ளே ஓடினாள்.

நாகராஜனோ “என்ன-டா இப்படி பண்ணிட்ட” என்றார் பதட்டத்துடன்.

அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ஏன் உங்களுக்கு கெளரவம் குறைஞ்சு போச்சா?” என்றான் நக்கலாக.

அதற்குள் சீதா ஆரத்தி தட்டை எடுத்து வந்துவிட, பேசாமல் அமைதியாக நின்று கொண்டான்.
கிரிஜா வீட்டினுள் நுழைந்ததுமே ஆராய்ச்சி பார்வையாக பார்த்து கைகளால் விசிறி விட்டுக் கொண்டே “என்ன பிரகாஷ் இது! ஏழைங்க வீடு மாதிரியிருக்கு” என்றாள் முகத்தை சுளித்தபடி.
“இதோ இவர் தான் இதற்க்கெல்லாம் காரணம் கிரிஜா. குசேலர் மாதிரி வீடு நிமிர பிள்ளை குட்டியை பெத்து வச்சிருக்கார்” என்றான் இகழ்ச்சியாக.

அவன் சொன்னதைக் கேட்ட சீதா அதிர்ந்து போய் மாமனாரைப் பார்க்க, அவர் முகம் கருத்துப் போய் நின்றிருந்தார். புதிதாக வந்திருக்கும் மருமகளின் முன்பு தான் பெற்ற மகனே கேவலமாக பேசுவதை நினைத்து அருவெறுத்து நின்றார்.

அவர்களின் முகபாவங்களை எல்லாம் கவனிக்காது அவளது கையைப் பற்றி தனதறைக்கு அழைத்துச் சென்றவன் “இது என்னோட ரூம் கிரிஜா. வீட்டில் உள்ளவங்க யாரையும் நான் உள்ளே விட மாட்டேன். எனக்கு வேணுங்கிற வசதி எல்லாம் பண்ணி வச்சிருக்கேன்” என்றான்.

அவளோ அந்த அறையையும் சாதரணமாக பார்த்துவிட்டு “நல்லவேளை எங்க வீட்டுக்கு வர ஒத்துக்கிட்டீங்க. என்னால இந்த வீட்டில் எல்லாம் இருக்க முடியாது” என்றாள் முகச் சுளிப்புடன்.
அப்போது அவர்களின் அறைக் கதவு தட்டப்பட எழுந்து சென்று திறந்தவன் அங்கு ஒரு ட்ரேயில் சிறிது பலகாரங்களும், காப்பியும் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்த சீதாவைப் பார்த்தான்.

அவன் கையில் ட்ரேயை கொடுத்தவள் “மதியத்துக்கு வடை பாயசத்தோட சமைச்சிடவா?” என்றாள்.

அதைக் கேட்டுக் கொண்டே எழுந்து வந்த கிரிஜா “அதெல்லாம் வேண்டாம். நாங்க எங்க வீட்டுக்கு கிளம்பிடுவோம்” என்றாள் அவளை ஏளனமாக பார்த்துக் கொண்டே.
அதைக் கேட்டதும் முகம் சுருங்க அங்கிருந்து சென்றாள்.

கதவை மூடிவிட்டு தனது சாமான்களை பெட்டியில் அடுக்கத் தொடங்கிய பிரகாசம் “மதியானம் சாப்பிட்டிட்டு போயிருக்கலாம் கிரிஜா. இந்த வீட்டில் இவங்க எல்லாம் நமக்கு கிடைச்ச அடிமைகள்” என்றான்.

அவளோ “எனக்கு இதெல்லாம் ஒத்துவராது பிரகாஷ். நான் மதியத்துக்கு ஸ்டார் ஹோட்டலில் இருந்து காண்டினெண்டல் பூட் ஆர்டர் பண்ண சொல்லி இருக்கேன்” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு மலைத்துப் போய் நின்றவன் ‘ஸ்டார் ஹோட்டலில் காண்டினெண்டல் பூட்டா? மெல்ல இவளை கரைச்சு இவ சம்பளத்தை எல்லாம் வாங்கிடனும்.

அப்போ தான் இவளை கட்டுப்படுத்த முடியும்’ என்று நினைத்துக் கொண்டான்.

பிரகாசம் திருமணம் செய்து கொண்டு வந்ததை சீதா ரகுவிற்கு தெரிவிக்க, அவன் லீவ் போட்டுவிட்டு வீட்டிற்கு ஓடி வந்தான். அப்போது பிரகாசம் தனது பொருட்களுடன் அறையை விட்டு வெளியே வந்தான்.

அவன் அருகே சென்ற ரகு “என்னடா நீ! அம்மா அப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா?” என்றான் கோபத்துடன்.

அவனை சாதரணமாக பார்த்து “நான் என்ன உன்னை மாதிரியா ரகு. உன் சம்பாத்தியத்துக்கு உனக்கு வீட்டில் பொண்ணு பார்த்தாலே பொண்ணு கிடைக்கிறது கஷ்டம். இதில் லவ் பண்ண பொண்ணு எப்படி கிடைக்கும். உன் நிலைமை வேற, என் நிலைமை வேற...நான் கை நிறைய சம்பாதிக்கிறவன் எனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை வேணும்னு நான் தான் முடிவு பண்ணனும்” என்றான் திமிராக.

அவனது திமிரான பதிலில் அவமானப்பட்ட ரகு, வேறு எதுவும் பேசாமல் ஒதுங்கி அவன் போவதற்கு வழி விட்டான். சீதாவிற்கு கணவனின் முகத்தைக் கண்டு கண்கள் கலங்கியது.

கோபமே வராத அவளுக்குக் கூட அவனது நடத்தையில் கோபம் வந்தது. ‘என்ன மனிதன் இவன்! பெற்றவர்களையும் மதிக்கவில்லை, கூடப் பிறந்த உறவுகளையும் மதிக்கவில்லை...அனைவரையும் எடுத்தெறிந்து பேசி எதை சாதிக்கப் போகிறான்?’ என்று எண்ணிக் கொண்டாள்.

மனைவியுடன் வாயிலுக்குச் சென்றவன் உள்ளே திரும்பி பார்த்து “இனி, நான் கிரிஜா வீட்டில் தான் இருக்கப் போறேன். அதனால நான் மாசா மாசம் கொடுக்கிற பணத்தை கொடுக்க மாட்டேன். என்னோட வாஷிங் மெஷினை நாளைக்கு வண்டி புக் பண்ணி வந்து எடுத்திட்டு போறேன்” என்று கூறியபடி காருக்குள் ஏறி அமர்ந்தான்.

அப்போது அறைக் கதவை படாரென்று திறந்து கொண்டு வந்த பரிமளம் “இனிமே மறந்து கூட இந்தப் பக்கம் வந்துடாதே...இதை நீ கல்யாணம் பண்ணிகிட்டதுக்காக சொல்லல. இங்கே இருந்தப்பவும் நீ தனியா தான் வாழ்ந்த. ஆனா, உறவுகளுக்குள்ள இல்லாத திருகு தாளம் எல்லாம் பண்ணி வச்சு எங்க நிம்மதியைக் கெடுத்த. இனியாவது உன்னோட சகுனித்தனம் இல்லாம நாங்க நிம்மதியா இருக்கோம்” என்றவர் சீதாவின் பக்கம் திரும்பி “இன்னைக்கு கண்டிப்பா வடை, பாயசத்தோட சாப்பாடு பண்ணனும் மா. நம்மை பிடிச்ச பீடை ஒழிஞ்சுது” என்றார்.

அவள் அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு “அத்தை” எனவும் கலங்கிய தனது கண்களை துடைத்துக் கொண்டே “பின்ன என்னம்மா? எங்களுக்கு எல்லா பிள்ளையும் ஒரே மாதிரி தானே. இவனுக்கு ஏன் இந்த புத்தி? ஏழு பிள்ளைகளை பெத்துகிட்டது தப்பு தான். ஆனா, எங்களால முடிஞ்ச அளவுக்கு எல்லோருக்கும் நல்லா தானே வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்திருக்கோம். ஆரம்பத்தில் இருந்தே வீட்டில் ஒட்டாம வளர்ந்து, சம்பாதிக்க ஆரம்பிச்சதும் ரொம்ப மட்டமா நடந்துக்க ஆரம்பிச்சிட்டானே. இவன் என் வயிற்றில் தான் பிறந்தானான்னு எனக்கே சந்தேகமா இருக்கு” என்றவர் “ஏதோ நல்லாயிருந்தா சரி தான்” என்றார் அன்னையாக.
 
  • Like
Reactions: lakshmi

lakshmi

Active member
Staff member
May 9, 2018
308
73
43
அருமையான கதை, பிரகாஷ் மாதிரியான ஆட்களிடம் எல்லாம் எப்படி தான் கிரிஜா குடும்பம் நடத்த போகிறாளோ?
 
  • Love
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,425
939
113
அத்தியாயம் – 11

புதுமண தம்பதிகள் கிரிஜாவின் வீட்டில் சென்று இறங்க, அங்கே மீண்டும் மதியே அவர்களை வரவேற்க நின்றிருந்தாள். அவர்களது அன்னையோ இளம் வயது பெண்மணிகள் போல அலங்கரித்துக் கொண்டு ஆரத்தி எடுப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

அவன் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அவளது அறையில் கொண்டு வைக்க உதவினாள். அவளது அறையைக் கண்டவன் மலைத்து நின்றான். ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் அறை போன்றிருந்தது.

இருவரும் ஹாலில் வந்து அமரவும், அங்கு அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த கிரிஜாவின் அன்னை படக்கென்று எழுந்து தனதறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார்.

அவரது அறைக்கு பக்கத்து அறையில் இருந்து மெல்லிய இருமல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மதி பிரிட்ஜில் இருந்து இருவருக்கும் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும் போது, இருமல் சத்தம் வந்த அறையிலிருந்து ஏதோ ஒரு பொருள் வேகமாக விழுந்து உடைந்தது. அதைக் கேட்டதும் அவசரமாக எழுந்து சென்று பார்த்துவிட்டு வந்து அமர்ந்து கொண்டாள்.

அவளிடம் கிரிஜா “என்னவாம்? எதுக்கு பொருளை எல்லாம் தள்ளி விடுறார்?” என்றாள் கடுப்பான குரலில்.

மதி ஒருவித அவஸ்த்தையுடன் “மாப்பிள்ளையை பார்க்கனுமாம்” என்றாள்.

அதைக் கேட்டதும் ஜூஸ் கிளாசை நங்கென்று டீபாயின் மீது வைத்தவள் கோபத்துடன் தரை அதிர அந்த அறை வாயிலுக்குச் சென்று “நீ தான் எதுக்கும் லாயகில்லாம படுத்திருக்கியே...அப்புறம் நீ எதுக்கு அவரை பார்க்கனும்?” என்று கத்தினாள் ஆத்திரமாக.

அவளதுசெயலைக் கண்டு விழி பிதுங்கிப் போய் அமர்ந்திருந்தவனை மதியின் குரல் கலைத்தது.

“அப்பா தான் படுத்துறார். நர்ஸ் போட்டு பார்த்துக்கிறோம். அதுக்கு மேல இவருக்கு என்ன வேணும். அந்த ரூமில் போய் உட்கார்து பேசிகிட்டு இருக்க முடியுமா? அதுக்கு தான் கத்துறா” என்றாள் தங்கைக்கு அதரவாக.

“உங்க அம்மா போய் பார்க்க மாட்டாங்களா?”

“அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. பினாயில் வாடையே ஆகாது அவங்களுக்கு”.

தந்தையிடம் கத்திவிட்டு வந்தவள் மதியிடம் “நானும் அவரும் போய் ரெஸ்ட் எடுக்கிறோம். சாப்பாடு வந்ததும் சொல்லு” என்று அவனை இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.

பிரகாசத்தின் திருமண வாழ்க்கை... மிகவும் பிரகாசமாக சென்று கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அவர்களது குடும்பத்தின் நடைமுறைகளை அட்ஜஸ்ட் செய்ய முடியாது தவித்தவன் பின்னர் பழகிக் கொண்டான். வீட்டினர் அனைவருமே தனித்தனி தீவாக இருந்தனர். அதிலும் கிரிஜா நினைத்ததை செய்து முடித்தே ஆக வேண்டும் என்கிற பிடிவாத குணத்தோடு இருந்தாள்.

அவளது செலவுகளைக் கண்டு மலைத்து போயிருந்தான் பிரகாசம்.

ஆடம்பரத்தின் உச்சத்தில் இருந்தாள். தினமும் ஏசி இல்லாமல் உறங்குவதில்லை. அவள் ஏசி போட்டதுமே இவன் கணக்கு போட்டுக் கொண்டே உறங்காமல் படுத்திருப்பான். அவள் தான் இப்படி என்றால் அவளது அன்னைக்கு ஒரே பொழுது போக்கு ஷாப்பிங் செல்வது மட்டுமே.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பிரகாசம்,யார் எப்படிபோனால் எனக்கென்ன... யாரும் என்னிடம் இருந்து பணம் கறக்காமல் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தான்.

ஒரு மாதம் கடந்த நிலையில் காலை ஆறு மணிக்கே கிரிஜா கிளம்பி இருக்க, காலைக்கடன்களை முடித்துக் கொண்டு ஹாலிற்கு வந்தவன், அங்கு சோபாவில் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்த மதியைக் கண்டதும் “எனக்கும் ஒரு கப் காப்பி மதி” என்றான்.

கையிருந்த பேப்பரில் இருந்து தலையை நிமிர்த்தியவள் அவனை ஏளனமாகப் பார்த்து விட்டு “நானென்ன உனக்கு வேலைக்காரியா? நீயே போய் போட்டுக்கோ” என்று ஒருமையில் பேசினாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவன் “என்ன மதி இது? இப்படி பேசுற?” என்றான்.

அவனைப் பார்க்காமலே “வேற எப்படி பேச? இந்த வீட்டில் அவங்க அவங்களுக்கு வேணுன்றதை அவங்களே தான் செஞ்சுக்கணும்” என்றாள்.

அவளை முறைத்து விட்டு பிரிட்ஜிலிருந்து பாலை எடுக்கச் சென்றவனை தடுத்து நிறுத்தியது கிரிஜாவின் அன்னையின் குரல்.

“அது நான் வாங்கி வச்ச பால்”

அவனோ மாமியாரை திரும்பிப் பார்த்து “அதனாலென்ன? நம்ம வீடு தானே” என்றான்.

அவரோ அவனை இகழ்ச்சியாகப் பார்த்து “உனக்கு வேணும்னா போய் வாங்கிட்டு வந்து பிரிட்ஜ்ல வச்சுக்கோ. மத்தவங்க பொருளில் கையை வைக்காதே” என்றார்.

அதைக் கேட்டவன் கடுப்பாகி “இதென்ன குடும்பமா ஹாஸ்டலா? தனித்தனியா சாமான்களை வாங்கி வச்சுக்க?” என்றான் கடுப்பாக.

அப்போது பேப்பரை மூடி வைத்துவிட்டு எழுந்த மதி கிண்டலாக அவனைப் பார்த்து “என்ன மிஸ்டர் பிரகாஷ்...நீங்க உங்க வீட்டில் எப்படி இருந்தீங்கன்னு மறந்து போச்சா?” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டதும் கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

அவனை நக்கலாக பார்த்துக் கொண்டே அம்மாவும் பெண்ணு தங்களது அறைக்குள் சென்றனர்.

வெறுத்து போய் தன்னறைக்குள் நுழைந்தவன் ‘ஒரு காப்பிக்கே இந்த கதையா இருக்கே’ என்றெண்ணிக் கொண்டு சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே சென்றான்.

பதினைந்து நிமிடத்தில் காப்பி குடித்து விட்டு வந்தவன் ஹாலில் அலங்காரத்துடன் அமர்ந்திருந்த மாமியாரை கண்டு கொள்ளாமல் அறைக்குள் நுழைய சென்றவனை நிறுத்தியது அவர் குரல்.

“நான் ஷாப்பிங் போகணும். எனக்கொரு பத்தாயிரம் கொடு” என்றார் அதட்டலாக.

அவர் அப்படிக் கேட்டதும் “என்னய்யா கேட்டீங்க?” என்றான் சந்தேகத்துடன்.

“உன்னைத் தான்! சீக்கிரம் கொடு நான் கிளம்பனும்” என்றார்.

அவனோ குழப்பத்துடன் “நான் எதுக்கு உங்களுக்கு கொடுக்கணும்?” என்றான்.

அவனை ஒரு மாதிரி பார்த்து “என் பொண்ணை கட்டியிருக்க இல்ல. அப்போ கொடு” என்றார்.

அவனோ எரிச்சலுடன் “அதெல்லாம் கொடுக்க முடியாது. காசு, பணமெல்லாம் என்கிட்டே எதிர்பார்க்காதீங்க” எண்டு கூறி கதவடைத்துக் கொண்டான்.

அவன் முடியாதென்றதுமே ஆங்காரத்துடன் எதிரே இருந்த டீப்பாயை ஒரு உதைத்துவிட்டு தனதறைக்குள் புகுந்து படாரென்று அடித்து சாத்தினார்.

அவனோ எதுவுமே நடக்காத மாதிரி குளித்து முடித்து ஆபிசிற்கு கிளம்பிச் சென்றான். போகும் வழியிலேயே ஒரு டீக்கடையில் உணவை முடித்துக் கொண்டான்.

மாலை இருள் கவிய தொடங்கும் நேரம் வீட்டிற்கு வந்தவனுக்கு அங்கிருந்த அசாதாரண சூழ்நிலையே ஏதோ பிரச்சனை என்று உணர்த்தியது.

அம்மாவும் இரு பெண்களும் சோபாவில் அமர்ந்தபடி அவனது வரவிற்காக காத்திருந்தனர்.

அவனைக் கண்டதும் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு கொலைவெறியுடன் அவனைப் பார்த்தாள் கிரிஜா.

அவனோ அவர்களை கண்டு கொள்ளாது அறைக்குள் செல்ல “நில்லுங்க!” என்று அதட்டினாள் கிரிஜா.

மெதுவே நின்று அவளை திரும்பி என்ன என்பது போல் பார்த்து வைத்தான்.

அதற்குள் கிரிஜாவின் அன்னை “நீ கேளு கிரி...நான் கேட்டு பணம் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான். இவனால என் ப்ரோக்ராமே கெட்டுப் போச்சு” என்று குதித்தார்.

“எங்கம்மாவுக்கு ஏன் பணம் கொடுக்கல?” என்றாள் மிரட்டலாக.

“எதுக்கு கொடுக்கணும்? நான் எங்கம்மாவுக்கே கொடுக்க மாட்டேன்” என்றான் திமிராக.

“கொடுக்கணும்,,,நீ கண்டிப்பா பணம் கொடுத்து தான் ஆகணும்” என்றாள் அழுத்தமாக.

அவளை விட அழுத்தமாக நின்று “அது என்ன தேவைக்கு” என்றான்.

அவனை கிண்டலாக ஒரு பார்வை பார்த்து “அப்படியா? அப்போ நீ கொடுக்க மாட்ட?” என்று கேட்டவள் படக்கென்று தனது சட்டையை ஒரு கிழி கிழித்து சமயலறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து வந்து உதட்டோரம், கைகள், கன்னங்கள் என்று கீறிக் கொண்டவள் “இப்படியே நான் போய் ஒரு சத்தம் போட்டா உன்னைப் பிடிச்சு உள்ளே வச்சிடுவாங்க. நீ என்னை கொடுமைப்படுத்துறதா நினைச்சு ” என்றாள்.

அவளது செயலை எதிர்பாராதவனின் தைரியம் ஆட்டம் காண நின்றான்.

அதற்கு அடுத்து வந்த இருவாரங்கள் அமைதியாக சென்றது. ஞாயிற்றுக் கிழமை காலை மெதுவாக எழுந்து வரவேற்பறைக்கு வந்தவனிடம் “நர்சுக்கு சம்பளம் கொடுக்கணும்.

பதினைந்தாயிரம் எடுத்திட்டு வந்து கொடு” என்றாள் மதி எங்கோ பார்த்தபடி.

“உங்க அப்பாவுக்கு பண்ற செலவுக்கெல்லாம் நான் கொடுக்க முடியாது’ என்றான் கறாராக.

அதைக் கேட்டதும் இகழ்ச்சியாக “கிரி! கிரி! இங்கே பாரு! இந்த ஆள் நர்ஸ் சம்பளத்தைக் கொடுக்க மாட்டாராம்” என்று கத்தினாள்.

அவள் சத்தம் போட்டதுமே பதறி போன பிரகாசம் அவசரமாக திரும்பிப் பார்க்க அங்கே கைகளைக் கட்டிக் கொண்டு அவனை பார்த்தபடியே நின்றிருந்தாள் கிரிஜா.

போன முறை நடந்த சம்பவங்கள் அவன் நினைவிற்கு வர, ஒன்றும் சொல்லாமல் கையாலாகாத தன்மையுடன் அறைக்குள் சென்று ஏ.டி.எம் கார்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

அவன் சென்றதும் அக்கா, தங்கை இருவரும் சிரித்துக் கொண்டனர்.

இப்படியே ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஆபிசில் இருந்தவனுக்கு ஒரு கடித உறை வந்தது.

அதை பிரித்து பார்த்தவனுக்கு அதிலிருந்த தொகையைக் கண்டதும் அதிர்ச்சியில் இதயம் நின்று போனது. பின்னர் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு இது தனக்கானதாக இருக்காது என்றெண்ணி மீண்டும் கடித உறையின் மீதிருந்த பெயரைப் பார்த்தான். அதில் தெளிவாக அவனது பெயரே இருந்தது.

அந்த உறை கிரெடிட் கார்டில் செலவு செய்த பணத்தை கட்ட சொல்லி வந்திருந்தது. ‘என் கிட்ட தான் கார்டே இல்லையே அப்புறம் எப்படி செலவு பண்ணுவேன்?’ என்று சிரித்துக் கொண்டு அந்த கம்பனிக்கு போன் செய்து சத்தம் போட, அவர்கள் அவனது பெயரில் உள்ள தகவல்களை எல்லாம் எடுத்துக் கூறி இது உங்களுடையது என்றே கூறினர்.

நம்ப முடியாத குழப்பத்துடன் வீட்டிற்கு வந்தவனுக்கு தங்களது அறையில் வைக்கப்பட்டிருந்த புதிய பொருட்களின் மீது கவனம் சென்றது. அதைப் பார்த்ததும் மனைவி மீது சந்தேகம் எழ “கிரிஜா நீ என் பேர்ல கிரெடிட் கார்ட் வாங்கினியா?” என்றான்.

படுக்கையில் சாய்ந்தமர்ந்து கொண்டிருந்தவள் மொபைலில் இருந்து கண்களை விலக்காமலே “ஆமாம் பிரகாஷ்...அதில தான் இவ்வளவு பொருளை பர்சேஸ் பண்ணினேன்” என்று குண்டை தூக்கிப் போட்டாள்.

அதைக் கேட்டு அதிர்ச்சியும் கோபமும் கலந்த குரலில் “என்ன சொல்ற? என் சைன் இல்லாம..என்னோட அனுமதி இல்லாம எப்படி வாங்க முடியும்?” என்றான்.

அப்போதும் அவனை நிமிர்ந்து பார்க்காது “எவ்வளவோ பண்றோம் இதை பண்ண மாட்டமா பிரகாஷ்” என்றாள் அசால்ட்டான குரலில்.

பணம் செலவான அதிர்ச்சியில் இருந்தவன் பாய்ந்து சென்று அவள் கழுத்தைப் பிடித்து “ஏய்! உனக்கு எதுக்கு நான் செலவு பண்ணனும்?” என்றான்.

மொபைலை தூக்கி கட்டிலில் போட்டவள் “இந்த ரெண்டு மாசமா நல்லா விதம் விதமா ஸ்டார் ஹோட்டலில் மூக்குப் பிடிக்க தின்னியே...அப்போ தெரியல உனக்கு நான் ஏன் செலவு பண்ணனும்னு” என்றாள் கேலியாக.

அவளது பதிலைக் கேட்டு கொலைவெறியாகிப் போனவன் “நான் கட்ட மாட்டேன்டி இந்தப் பணத்தை. என்னை ஏமாற்றி நீ கையெழுத்து வாங்கி இந்த கார்டை வாங்கினதா சொல்லி உன் மேல கேசை போடுவேன்” என்றான்.

அவளோ இதற்க்கெல்லாம் அசைவேனா என்றபடி பார்த்து “அப்படியா..அப்போ இதை கேட்டுக்கோ...நீ அப்படி ஏதாவது முயற்சி பண்ணினா என் சாவுக்கு நீ தான் காரணமுன்னு எழுதி வச்சிட்டு செத்துப் போயிடுவேன்” என்றாள்.

அவள் அப்படி சொன்னதும் பயந்து போய் கையை எடுத்தவனைக் கண்டு “சும்மா சொல்றேன்னு நினைச்சுக்காதே. உண்மையா செய்வேன். இப்போ கூட நீ என் அக்கா கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினேன்னு சொல்லுவேன்” என்றவளைக் கண்டு நடுங்கிப் போய் அமர்ந்திருந்தான்.

அவனை கேவலமாக ஒரு லுக் கொடுத்து “இனிமே எதுவும் கேட்ப? ஒழுங்கா உன் சம்பளத்தை என்கிட்டே கொடுத்திட்டு ஒரு ஓரமா உட்காரு. அனாவசியமா என் சம்பாத்தியம் அது இதுன்னு துள்ளுனே அப்புறம் நான் சொன்னதை செய்ய வேண்டி வரும்” என்று மிரட்டிவிட்டு சென்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு இடிந்து போய் அமர்ந்திருந்தவனை விட்டு-விட்டு கதவருகே சென்றவள் நின்று அவனை திரும்பிப் பார்த்து “அப்புறம் அந்த பிளாட்டை விலை பேசிட்டேன். ஒழுங்கா வந்து கையெழுத்துப் போட்டு பணத்தை வாங்கி என் கையில் கொடு” என்று மிகப் பெரிய இடியை அவன் தலையில் இறக்கி விட்டு சென்றாள்.

சிறிது நேரம் அவள் தந்த அதிர்ச்சியில் உறைந்திருந்தவன் மெல்ல தன்னை தேற்றிக் கொண்டான். அவனால் ஜீரணிக்க முடியவில்லை. எப்படி வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சம்பாதித்த காசு. அதை எளிதாக இவளிடம் தூக்கிக் கொடுத்து விடுவதா? என்றெண்ணி மாய்ந்து போனான். தான் ஒரு ஏமாற்றுக் கும்பலிடம் சிக்கிக் கொண்டதை உணர்ந்தவனுக்கு அதிலிருந்து எப்படி மீள்வதென்று புரியவில்லை. அவளை எப்படியாவது மடக்கி விடலாம் என்று பார்த்தால் அவளின் மிரட்டலைக் கண்டு பயமாக இருந்தது. அவனது சிந்தனையைக் கலைப்பதுப் போல வெளியே கேட்ட சத்தத்தைக் கேட்டு மெல்ல எட்டிப் பார்த்தான்.

அங்கே டைனிங்கில் அமர்ந்து சாப்பாட்டை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தனர் மூவரும். அதைக் கண்டதும் ‘என் காசெல்லாம் தின்னே ஒழிச்சிடுவாளுங்கப் போல இருக்கே’ என்று வயிற்றெரிச்சல் தாளாமல் ‘நம்ம காசில் அவளுங்க மட்டும் திங்க விடலாமா...நாமும் போய் திம்போம்’ என்று அவர்களின் பக்கத்தில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தான்.

அவனது மனமோ எப்படியாவது அவளிடமிருந்து கழட்டிக் கொள் என்று கணக்குப் போட ஆரம்பித்தது.

அவன் அருகில் குனிந்து “என்ன என்கிட்டே இருந்து கழண்டுக்கலாம்னு நினைக்கிறியா? நான் சொன்னதை நியாபகம் வச்சுக்கோ. எப்பபோ இருந்தாலும் என்னை விட்டுப் போனா நீ களி தான் திங்க வேண்டி இருக்கும்” என்று கூறி விட்டு சாப்பாட்டில் கவனம் வைத்தாள்.

அதன் பின்னர் வந்த நாட்களில் அவனால் அந்த சுழலலிருந்து மீள முடியவில்லை. எந்த சம்பாத்தியத்தை காரணம் காட்டி பெற்றவர்களையும், கூடப் பிறந்தவர்களையும் ஒதுக்கி வைத்தானோ அந்த சம்பாத்தியமே அவனுக்கு எதிரியாகிப் போனது.

சம்பளம் வருவது மட்டும் தான் அவனுக்கு தெரியும். அவன் கையில் ஒரு பைசா கூட விடாமல் துடைத்து எடுத்தனர் கிரிஜாவின் குடும்பத்தினர். கிரிஜாவின் தந்தையோ உடல்நிலை காரணமாய் முடங்கி போய் படுத்திருந்தார் என்றால், பிரகாசமோ பணத்தை பிடிங்கிக் கொண்டு முடக்கி வைக்கப்பட்டான்.

கூடப் பிறந்தவர்களுக்கிடையேயும், பெற்றவர்களிடமும் சகுனித்தனம் செய்தவன் இன்று ஏமாற்றுக் கூட்டதுக்கிடையே சிக்கி சின்னாபின்னமாகி நின்றான்.

************தெய்வம் நின்று கொல்லும்!**************
 
  • Like
Reactions: lakshmi

lakshmi

Active member
Staff member
May 9, 2018
308
73
43
பிரகாஷ் இப்படியா ஒரு படுகுழியில் போய் விழுவான்.
 
Need a gift idea? How about a tea mug?
Buy it!