வேடதாரி - முழுக் கதை

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,425
939
113
அத்தியாயம் - 1

‘ பிறரின் நம்பிக்கையை
உடன்பிறந்தோரின் பாசத்தை
மனைவியின் காதலை
மகளின் அன்பை சுயநலமென்னும்
வேஷத்தால் அழித்தொழிப்பவன்
வேடதாரி!
‘நாடக மேடையில்
வாழ்க்கைக்காக நடிப்பவன் நடிகன்!’
‘வாழ்க்கை முழுவதும் தன்னலத்திற்காக
நடிப்பவன் வேடதாரி!’


காவ்யா..அடியே!..உங்கக்கா வராளாம்..அந்த அறையை கொஞ்சம் சுத்தம் பண்ணேன்” என்று தனது சின்ன மகளுக்கு குரல் கொடுத்தார் பரிமளம்.


புத்தகங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த காவ்யா அன்னையின் குரலில் எரிச்சலடைந்து ‘என்னவோ வெளியூரில் இருந்து வர மாதிரி அலம்பல் பண்ணுது இந்த அம்மா.அவ வாரா வாரம் வந்து போய் கிட்டு இருக்கிறவ தானே!’ என்று முணுமுணுத்துக் கொண்டே புத்தகங்களை ஓரமாக எடுத்து வைத்து விட்டு அன்னை சொன்ன வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.


தனது அறையிலிருந்து அலுவலகத்துக்கு கிளம்பி வெளியே வந்த பிரகாசம் “அம்மா! எனக்கு நேரமாகுது! டிபன் எடுத்து வச்சியா?” என்று கேட்டபடி சாப்பாடு மேஜையில் சென்றமர்ந்தான்.


அடுப்படியில் புழுக்கத்தில் வியர்த்து வழிய தோசை ஊற்றிக் கொண்டிருந்த பரிமளம்..அவசரமாக ஒரு தட்டில் இரண்டு தோசைகளை எடுத்து வைத்து ஒரு கிண்ணத்தில் சட்டினியும், மற்றொரு கிண்ணத்தில் சாம்பரையும் ஊற்றி எடுத்து வந்து அவன் முன்னே வைத்தார்.


அன்னையை நிமிர்ந்து பார்க்காது தோசையை சாம்பாரில் ஒரு முக்கு முக்கி, சட்னியில் தோய்த்து வாய்க்குள் அடைத்துக் கொண்டான். பரிமளம் அவன் நிமிர்ந்து பார்ப்பான்..அவனிடம் தனது தேவைகளை சொல்லி விடலாம் என்று அவனை பார்த்தபடியே நின்றார்.


அதற்குள் அடுத்த தோசை ஊற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் அவசரமாக சமயலறைக்கு அவர் சென்றதும்...தனது தட்டிலிருந்த தோசையை கடகடவென்று சாப்பிட்டுவிட்டு தட்டிலேயே கையை கழுவிக் கொண்டான்.


“எனக்கு தோசை போதும்மா.நான் கிளம்புறேன்” என்று கூறி வேகம் வேகமாக தனது பையை எடுத்துக் கொண்டு வாயிலை நோக்கிச் சென்றான்.


அவன் சட்டென்று கிளம்பியதை கண்டு அடுப்பை அணைத்துவிட்டு அவசரமாக அவன் பின்னே ஓடி வந்தார் பரிமளம்.


அவர் விடாது தன்னை தொடரவும் வேறு வழியில்லாது “என்னமா?” என்றான் சிறு கடுப்புடன்.


“பத்மாவும், மாப்பிள்ளையும் வராங்க பிரகாசு. மளிகை சாமான் கொஞ்சம் வாங்கனும். ஒரு ஆயிரம் ரூபா குடுப்பா” என்றார்.


அதுவரை பொறுமையாக நின்றிருந்தவன் பணம் கேட்டதும் பொங்கியெழுந்து “இங்க பாரும்மா! அவ வாராவாரம் வந்து திங்கிறதுக்கு எல்லாம் நான் சம்பாதிக்கல. என்னால நூறு ரூபா தான் கொடுக்க முடியும்.


அடுத்த வாரமும் அவ வந்தா இது கூட கொடுக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்றவன் சட்டை பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவர் கையில் வைத்துவிட்டு அகன்றான்.


அவனது செயலில் விக்கித்து நின்றவர்..ஆயிரம் கேட்டதற்கு வெறும் நூறு கொடுத்துவிட்டு போகும் மகனை கண்டு மனம் புழுங்கியபடி சோர்வான நடையுடன் உள்ளே சென்றார்.


நடந்தவைகளை பார்த்துக் கொண்டே வந்த ரகு தனது பர்சிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அன்னையிடம் கொடுத்து “என் கிட்ட இவ்வளவு தான்மா இருக்கு. முடிஞ்சா என் பிரெண்ட்ஸ் கிட்ட கேட்டு வாங்கிட்டு வரேன்” என்றான்.


நாகராஜன், பரிமளம் தம்பதிகளுக்கு ஏழு பிள்ளைகள். நாகராஜன் வங்கியில் கிளை மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.அவர் நல்ல வேலையில் இருந்திருந்தாலும்.. குடும்பத்தினரின் எண்ணிக்கை அதிகமானதால் அவ்வப்போது பணத்திற்கு தட்டுபாடு ஏற்படும். அப்படி இருந்தும் தாங்கள் கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தனர்.


வீட்டின் மூத்த மகன் கிருஷ்ணமூர்த்தி. சி.ஏ படித்துவிட்டு நல்ல உத்தியோகத்தில் இருப்பவன். அவனது படிப்பின் காரணமாக நல்ல இடத்தில் பெண் கிட்ட, திருமணம் முடிந்ததும் மாமனார் வீட்டருகே வீடேடுத்துக் கொண்டு சென்று விட்டான்.


அடுத்தவன் சுப்பிரமணி...இன்ஜினியரிங் படித்துவிட்டு அரசாங்கத்தில் நல்ல உத்தியோகத்தில் இருப்பவன். அண்ணன் காட்டிய வழியை பின்பற்றி திருமணம் முடிந்ததும் மனைவியின் பின்னே சென்று விட்டான்.


பெண்களில் மூத்தவளான பத்மாவிற்கு அதிகம் படிப்பு ஏறாத காரணத்தினால் மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுத்தனர். மாப்பிள்ளை வீரராகவன் ஒரு கம்பனியில் கிளார்க் வேலையில் மிதமான சம்பாத்தியத்தில் இருப்பவர். மிகவும் அமைதியானவர். மனைவியின் மீது அதிக அன்பு வைத்திருப்பவர். மனைவி சொல்லை தட்டாதவர். பத்மா தனது பிறந்த வீட்டில் தனது உரிமையை நிலைநாட்ட நினைப்பவள். உள்ளூரிலேயே இருப்பதால் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுகளில் வந்து டேரா போட்டு தனது அதிகாரத்தை செலுத்துவாள்.

அடுத்து ஹேமா...இவளை வெளியூரில் கட்டிக் கொடுத்திருந்தனர். பத்மாவிற்கு நேர்மறையான குணத்தை கொண்டவள். மிக அமைதியான குணத்தைக் கொண்டவள். பிறந்த வீட்டிற்கு வந்தால் கூட, வந்த சுவடு தெரியாமல் இருந்துவிட்டு செல்பவள். இவள் கணவன் பத்மாவின் குணத்தை கொண்டவன். மாமனார் வீட்டிற்கு வரும் போது மாப்பிள்ளை முறுக்கை காண்பித்து காரியங்களை சாதித்துக் கொள்வான்.


அடுத்து ரகு..பரிமளம் பெற்ற பிள்ளைகளிலேயே மிகமிக நல்ல குணத்தை கொண்டவன். எதற்கும் அலட்டிக் கொள்ளாதவன். வாழ்க்கையில் தனக்கென்று இது தான் வேண்டும், இது வேண்டாம் என்கிற கொள்கை இல்லாதவன். எது கிடைக்கிறதோ அதை நிறைவுடன் ஏற்றுக் கொள்பவன். வீட்டினர் அனைவரும் அவனை சாமியார் என்றே அழைப்பார்கள். பி.காம் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக இருக்கிறான். தனது சம்பள பணம் முழுவதையும் அன்னையிடம் கொடுத்து விட்டு தனது செலவுகளுக்கு அவரிடம் வாங்கி செல்வான்.


பிரகாசம்...இவனை பெற்றபோது பரிமளத்திற்கு தங்களது வாழ்வு இவனால் பிரகாசமாக போகிறது என்கிற எண்ணத்தினால் அவனுக்கு இப்பெயரை சூட்டினார். எம்.ஏ படித்துவிட்டு ஒரு மல்டிநேஷனல் கம்பனியில் மேலாளராக இருப்பவன். கை நிறைய சம்பாதித்தாலும், தனது செலவுகளுக்கான பணத்தை மட்டுமே அன்னையிடம் கொடுப்பான். அதை மீறி அவனிடம் எதுவும் வாங்கிவிட முடியாது. தந்தை கட்டிய மூன்று அறைகள் கொண்ட வீட்டில் தனக்கென்று ஒரு அறையை எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்லும் முன்பு அதை பூட்டிவிட்டு செல்லுவான்.

ரகுவோ..அன்னை,தந்தைக்கு ஒரு அறையை கொடுத்து, சிறியவளான தங்கைக்கு மற்றொரு அறையை கொடுத்துவிட்டு அவன் ஹாலில் உறங்குவான். அதிலும் பத்மா வரும்போது காவ்யாவின் அறையும் பறி போகும். அப்போது அவளை தங்களது அறையில் படுக்க வைத்துவிட்டு நாகராஜன் ரகுவுடன் ஹாலில் வந்து படுத்துக் கொள்வார்.

வீட்டினர் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் நிலைமையை அனுசரித்துக் கொள்வார்களே தவிர..பிரகாசம் இதை எல்லாம் கண்டு கொள்ள மாட்டான். தனது அறைக்குள் சுத்தம் செய்யக் கூட அன்னையை விட மாட்டான்.காவ்யா தான் சிறு வயதிற்கே உரிய ஆர்வத்துடன் உள்ளே சென்றுவிட்டு அன்று முழுவதும் அவனிடம் வாங்கி கட்டிக் கொள்வாள்.


நாகராஜன்,பரிமளம் தம்பதியின் கடைக்குட்டி காவ்யா. பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் அவள் துறுதுறுப்பானவள். அதே சமயம் வீட்டின் நிலை தெரிந்து தனது ஆசைகளை கட்டுபடுத்திக் கொண்டு வாழ்பவள்.

அன்னை சொன்னபடி தனது அறையை பெருக்கி சுத்தம் செய்து...படுக்கை விரிப்புகளை மாற்றி முடித்து அயர்ந்து போய் ஹாலில் வந்தமர்ந்தாள்.

அந்தநேரம் வாசலில் ஸ்கூட்டர் வந்து நிற்கும் சத்தம் கேட்க எழுந்து போக மனமில்லாமல் அமர்ந்திருந்தாள்.


வாஷிங் மெசினில் துணியை போட்டுக் கொண்டிருந்த பரிமளம் “அக்கா வந்துட்டா போலருக்கு காவ்யா..எழுந்து போய் வாங்கன்னு சொல்லு” என்றார்.


அவளோ வேலை செய்த அலுப்பில் “போம்மா! அவளுக்கு வர தெரியாதா என்ன?” என்றாள்.


மகளின் மனதில் ஓடும் எண்ணங்களை புரிந்து கொண்டவர் அவள் தலையை வருடி “போடா! போய் கூப்பிடு! இல்லேன்னா அதுக்கு சேர்த்து வச்சு பேசி தலைவலியை உண்டாக்கிடுவா” என்றார்.


அவர் சொன்னதின் அர்த்தம் புரிந்தவள் அவசரமாக எழுந்து “ஐயோ! ஆமாம்! பேசிபேசியே கொன்னுடுவா! நான் வேற நிறைய படிக்கனும்” என்று வேகமாக வாசலுக்குச் சென்றாள்.


மகளை அனுப்பிவிட்டு வாஷிங் மெஷினை போடும் போது பிரகாசம் சொன்னது ஞாபகத்துக்கு வர நெஞ்சு கசந்து போனது.


“அம்மா! நாளையில் இருந்து என் துணியை மட்டும் மெஷின்ல போடுங்க. உங்க துணியெல்லாம் கையால துவைங்க. எனக்காக தான் மெஷின் வாங்கினேன். என் துணி துவைக்கிறதுக்கு ஆகிற கரென்ட் செலவை நான் கொடுத்திடுறேன்” என்று கூறிவிட்டு சென்றிருந்தான்.


இதுதான் பிரகாசம்...ஒவ்வொன்றிற்கும் குடும்பத்தினர் என்று கூட பாராமல் கணக்கு பார்ப்பான்.


இனி,ஒவ்வொரு அத்தியாயத்திலும் பிரகாசத்தின் பலமுகங்களை பார்க்கலாம்...
 
  • Like
  • Wow
Reactions: Anuya and lakshmi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,425
939
113
அத்தியாயம் –2


ஸ்கூட்டரில் இருந்து இறங்கி ஐந்து வயது மகளை கைகளில் பற்றிக் கொண்டு வீட்டின் வாசலுக்கு வந்த பத்மாவிற்கு பயங்கர கோபம் வந்தது. வீட்டு மாப்பிள்ளையும், பேத்தியும் வராங்க யாருமே ‘வா’ என்றழைக்க வராமல் வீட்டினுள்ளேயே இருக்கிறார்களே என்று காய்ந்தாள்.


அப்போது அங்கு வந்த காவ்யா வீரராகவனை பார்த்து தலையசைத்து “வாங்க மாமா” என்று அழைத்துவிட்டு அக்காவின் கைப்பிடியில் இருந்த குழந்தையை “தர்ஷி குட்டி வாங்க..வாங்க” என்று தூக்கிக் கொண்டு பத்மாவின் புறம் திரும்பாது உள்ளே சென்றாள்.


அதை கண்டு ஆத்திரம் பொங்க வேக நடையுடன் உள்ளே சென்று “அம்மா! அம்மா!” என்று ஆத்திரத்துடன் அழைத்தாள்.


மகளின் கோப குரலில் அவசரமாக கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு வெளியே வந்த பரிமளம் “வா பத்மா..இப்போ தான் வந்தியா?” என்றவர் மாப்பிள்ளையை பார்த்து “வாங்க மாப்பிள்ளை” என்றார்.


அதை கண்டு மேலும் எரிச்சல் எழ “உனக்கு நாங்க இங்கே வரது பிடிக்கலேன்னா சொல்லிடும்மா..அதுக்காக இப்படி எங்களை அவமானப்படுத்த வேண்டாம். வீட்டு மாப்பிள்ளை வந்திருக்காறேன்னு கொஞ்சமாவது மரியாதை இருக்கா? இவ என்னமோ அவரை மட்டும் பார்த்து வாங்கன்னு சொல்றா..நீ என்னவோ உள்ளே உட்கார்ந்துகிட்டு மெதுவா வந்து வாங்கன்னு சொல்ற” என்று எரிமலையாக குமுறினாள்.


அவள் பேசியதை கேட்ட காவ்யா ‘வரவேண்டாம்-னு சொல்லிட்டா மட்டும் வராம இருந்துருவாளா?’ என்று முணுமுணுத்தாள்.


அவள் முணுமுணுத்தது பத்மாவின் காதில் விழ காவ்யாவின் அருகில் சென்று குழந்தையை அவள் கையிலிருந்து வெடுகென்று இழுத்து தன் இடுப்பில் வைத்துக் கொண்டு “அடியே சின்ன சிறுக்கி! இன்னைக்கு அம்மா வீட்டில் இருக்கோம்-னு எகத்தாளமா பேசுறியா? நாளைக்கு உனக்கும் இதே நிலைமை தான்” என்று கண்ணீர் வழிய துடைத்துக் கொண்டே ஒரு பத்து நிமிடங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை எல்லாம் வசை பாட ஆரம்பித்தாள்.


காலையில் இருந்து ஒற்றை காப்பியை மட்டுமே குடித்து விட்டு வேலை செய்த களைப்பில் இருந்த பரிமளத்திற்கு மகளின் பேச்சை கேட்டு தலைவலி வந்தது. காவ்யாவை ‘தேவையில்லாமல் அவளை சீண்டிவிட்டு தலைவலியை வரவழைத்து விட்டாயே’ என்று குற்றம்சாட்டும் விதமாக பார்த்தார்.


அன்னையின் பார்வையில் தலைகுனிந்த சின்னவளின் மனம் ‘நாம கல்யாணம் பண்ணி போன பிறகு பெத்தவங்களையும், கூட பிறந்தவங்களையும் இப்படி தொந்திரவு பண்ண கூடாது’ என்று உறுதி எடுத்துக் கொண்டது.


மகளின் வாயை அடக்க என்ன வழி என்று யோசித்தவருக்கு இரண்டு

நாட்கள் முன்பு ரகு தனக்கு எடுத்து வந்திருந்த புது புடவை ஞாபகம் வந்தது.


“காவ்யா மாமாவுக்கு கேசரியும், முறுக்கும் எடுத்து கொண்டு வந்து வச்சிட்டு காப்பி போட்டு கொடு” என்றவர் “பத்மா வா! நேத்து ரகுவோட கடைக்கு போனேன். நீ ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கியே சில்க் காட்டன் புடவை எடுத்திட்டு வந்திருக்கேன். கலர் உனக்கு பிடிச்சிருக்கான்னு பாரு” என்றார்.


அதுவரை ஓட்டை டேப் ரெக்கார்டர் மாதிரி சொன்னதையே சொல்லி ஆர்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தவள்...புடவை என்றதும் “ஏம்மா நான் தான் இன்னைக்கு வருவேன்னு தெரியுமில்ல. என்னை கூட்டிட்டு போய் வாங்கியிருக்கலாம் இல்ல” என்று கேட்டபடி அன்னையின் பின்னே சென்றாள்.


எதுவுமே நடக்காத மாதிரி செல்லும் அக்காவை வெறுப்பாக பார்த்துக் கொண்டே சமையலறைக்கு சென்றவளை வீரராகவனின் குரல் தடுத்தது.

“காவ்யா! நாங்க சாப்பிட்டிட்டு தான் வந்தோம்மா. எனக்கு வெளில கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சிட்டு சாயங்காலம் தான் வருவேன்”என்று கூறி கிளம்பினார்.


அவர் ஒவ்வொரு வாரம் வரும்போதும் இப்படி ஏதாவது வேலையை காரணம் காட்டி இரவு சாப்பாட்டிற்கு மட்டுமே வீட்டிற்கு வருவார்.

அவர் செல்லும் திசையை பார்த்து பெருமூச்சு எழ ‘அக்காவுக்கு இப்படியொரு கணவர்’ என்று எண்ணிக் கொண்டு தனது புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க அமர்ந்தாள்.


வேலைக்கு சென்றிருந்த பிரகாசம் தன் நண்பனிடம் கணபதி ஹோமம் செய்து கொடுக்க ஐயரை பரிந்துரை செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தான்.


பிரகாசத்தை அறிந்த நண்பனோ அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள பல காரணங்களை கூறியும் அவனிடமிருந்து விடுபட முடியாமல் “சரிடா! நான்

ஒருத்தர் நம்பர் தரேன் பேசி பாரு” என்றான்.


அலுவலகத்தில் லோன் எடுத்து இரு படுக்கை அறைகள் கொண்ட அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கியிருந்தான் பிரகாசம். ஆனால் அதை வீட்டினர் எவருக்கும் தெரியப்படுத்தாமல் மறைத்தே வைத்திருந்தான். அதற்கு கணபதி ஹோமம் செய்யத் தான் ஆள் தேடிக் கொண்டிருந்தான்.

நண்பன் கொடுத்த நம்பருக்கு போன் செய்து பேசத் தொடங்கினான்.

“நான் பெரிய அளவில செய்யல ஐயரே! அதனால கம்மியான அளவில் செஞ்சு கொடுக்கனும். எவ்வளவு ஆகும் சொல்லுங்க?” என்றான்.


சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு “பூஜை சாமான்களோட சேர்த்து ரெண்டாயிரத்தி ஐநூறு ஆகும் சார்” என்றார்.


அவர் சொன்னதை கேட்டு மனதிற்குள் ஒரு கணக்கு போட்டு “சரி! ஐநூறு ரூபா கொடுத்திடுறேன்..என்னைக்கு பண்ணனும்-னு சொல்லுங்க” என்றான்.


அவரோ அவன் சொன்னது புரியாமல் “என்ன சொல்றேள்? பூஜை சாமான்கள் முன்னாடியே வாங்கனும். அதனால ஆயிரத்தி ஐநூறா கொடுத்திடுங்க...மீதியை பூஜை முடிச்சிட்டு வாங்கிக்கிறேன்” என்றார்.


அதற்கு பிரகாசமா “இல்ல ஐயரே! மொத்தமா ஐநூறு கொடுக்குறேன். நாள் பார்த்து செஞ்சு கொடுங்க” என்றான்.


அதை கேட்டு கடுப்பானவர் “என்ன ஒய்! எந்த காலத்தில இருக்கேள். விலைவாசி ராக்கெட் வேகத்தில் போயிண்டு இருக்கிறப்ப வெறும் ஐநூறு ரூபாவில் கணபதி ஹோமம் எப்படி ஒய் பண்றது?” என்றார் கோபமாக.


அதற்கு கொஞ்சமும் அசராது “இங்க பாருங்க ஐயரே உங்க வீட்டுக்கு வாங்க வேண்டிய சாமான்களுக்கு எல்லாம் நான் பணம் கொடுக்க முடியாது. பூஜைக்கு இதுக்கு மேல எதுக்கு” என்றான் நக்கலாக.


கொலைவெறியானவர் “இங்கே பாரும் ஒய்! என்னை பார்த்தா வேலை

வெட்டி இல்லாதவன் போலவா தெரியுது. உண்மையாகவே நீர் கணபதி

ஹோமம் பண்ண போறீரா என்ன? என்னால ஐநூறு ரூபாய்க்கு எல்லாம் பண்ண முடியாது. என்னால மட்டுமில்ல எவனும் பண்ண மாட்டான்” என்று கூறி போனை வைத்தார்.


அவர் சொன்னதில் கடுப்பானபிரகாசம் ‘ஐநூறு ரூபாய்க்கு ஆளை பிடிச்சு கணபதி ஹோமம் பண்றேண்டா’ என்று மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டு ஆபிசில் பியுனாக வேலை பார்க்கும் ராமானுஜத்திடம் சென்றான்.


ராமானுஜம் பொதுவாக மிக நெருங்கியவர்கள் தவிர வேறு யாருக்கும் ப்ரோகிதம் செய்வதில்லை. அவனது ஜீவனமோ கஷ்ட ஜீவனம். அதிலும் அவனது குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். அதனால் வாங்கும் சம்பளத்தில் பாதி அதற்கே போய்விடும். அதனால் ஆபிசில் உள்ளவர்கள் கேட்கும் போது தேவையிருந்தால் ஒத்துக் கொள்வான்.


“ராமு வர ஞாயிற்று கிழமை உனக்கு எதுவும் வேலை இருக்கா?” என்றான்.

“எனக்கென்ன வேலை..வீட்டுல இருந்தா பொண்டாட்டி புடவையை துவைச்சு கொடும்பா” என்றான்.


“அப்போ சரி! உனக்கு இந்த பூஜை பண்ண தெரியுமா? வீடுகட்டி புதுசா போகும்போது பண்ணுவாங்களே..அது பண்ண தெரியுமா?”


பிரகாசத்தை பற்றி தெரிந்தவனான ராமு ‘இவன் எச்சகையால காக்கா ஓட்ட மாட்டான்.நம்ம கிட்ட எதுக்கு வந்திருக்கான்’ என்று யோசித்துக் கொண்டே “தெரியும் சார்” என்றான்.


“அப்போ நான் சொல்ற வீட்டுக்கு வந்து பண்ணி கொடு..உனக்கு தர வேண்டியதை தந்திடுறேன்” என்றான்.


“சரி சார்! நான் லிஸ்ட் போட்டுட்டு சொல்றேன்” என்றவனை இடைமறித்து “நீ என்ன வேணும்னு மட்டும் சொல்லு..நானே அதை

எல்லாம் ஏற்பாடு பண்ணிடுறேன்” என்றான்.


குழப்பமாக “சரி சார்” என்று தலையசைத்தவனிடம் “பூஜைக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் நான் கொடுத்திடுறேன். பூஜை பண்றதுக்கு உனக்கு இருநூறு ரூபா கொடுக்கிறேன்” என்றான் பெருமையாக.


அதை கேட்டதும் தான் பிரகாசத்தின் ப்ளான் புரிய ‘ஒ..அதுதான் இந்த கஞ்ச பிசுநாறி என் கிட்ட வந்தானா? வெளில போனா ரெண்டாயிரமாவது ஆகும். எனக்கு இருநூறு ரூபா கொடுத்து முடிச்சிடலாம்னு பார்க்கிறான் போல’ என்று அவனை இகழ்ச்சியாக பார்த்து வைத்தான்.


அதை கண்டு கொள்ளாமல் “அப்புறம் இன்னொன்னு நீ இதை ஆபிஸில் இருக்கும் யார் கிட்டேயும் சொல்ல கூடாது. எல்லா பயலுங்களும் சோத்துக்கு வந்து நின்னுடுவானுங்க’ என்றான்.


“சரி சார்!” என்றவன் “மனையில் உட்கார போறவங்களுக்கு புது துணி எடுத்தா நல்லது சார். முதன்முதலா வீடு வாங்கி பூஜை செய்றீங்க” என்றான்.


அதை கேட்டு பெருமையுடன் “அதுக்கென்ன எடுத்திட்டா போச்சு. நான் தானே உட்கார போறேன்” என்றான்.


அதை கேட்டவன் “இல்ல சார் தனியா உட்காரப்படாது. தம்பதியராக தான் உட்காரனும்” என்றான்.


“அதுக்கு பொண்டாடிக்கு நான் எங்கேயா போவேன்.அதெல்லாம் நானே பண்றேன்” என்றான்.


“அதில்ல சார் உங்க அம்மா, அப்பா இருக்காங்க இல்ல..அவங்களை உட்கார வச்சிடலாம்” என்றான்.


அவனை முறைத்து “காசு போட்டு வாங்கினது நான். அவங்களை எதுக்கு உட்கார வைக்கனும்? அவங்களுக்கு சொல்லவே இல்ல வீடு வாங்கினதை. அதனால நான் தான் உட்காருவேன்” என்றான் பிடிவாதமாக.


அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியுடன் பார்த்து ‘இவனெல்லாம் ஒரு

மனுஷன். சொந்த அப்பா, அம்மாவுக்கு சொல்லாம என்ன இழவுக்கு பூஜை பண்றான். இந்த பாவம் என்னையும் சேரும்..வேண்டாம் நான் பண்ணக்கூடாது’ என்று முடிவெடுத்துக் கொண்டு “இல்ல சார்! என்னால முடியாது” என்றான்.


பிரகாசம் மனித உணர்வுகளை படிப்பதில் வல்லவன். எதிரே இருப்பவனின் முகத்தை வைத்தே அவன் என்ன நினைக்கிறான் என்பதை புரிந்து கொள்வான். இப்போதும் ராமு தன்னை பற்றி மிக கேவலமாக நினைக்கிறான் என்பதை புரிந்து கொண்டான். அவனை எங்கே அடித்தால் வீழ்வான் என்று புரிந்து கொண்டு “இதோ பாரு ராமு! உனக்கு இப்போ பணத்தேவை இருக்குன்னு எனக்கு தெரியும். நேத்து நீ நம்ம கணேஷ் கிட்ட கேட்டுட்டு இருந்ததை பார்த்தேன்.அதனால உனக்காக இன்னொரு நூறு ரூபா மேல போட்டு முன்னூறு ரூபாயாக கொடுக்கிறேன்...வந்து செஞ்சு கொடுத்துடு” என்றான்.


அதுவரை தனது தேவையை மறந்திருந்த ராமுவோ பிரகாசம் சொன்னவுடன்..யாரிடமும் கடனாக கேட்காமல் வருகின்ற வருமானத்தை ஏன் விட வேண்டும் என்கிற எண்ணத்தில் ஒத்துக் கொண்டான்.

அதன்படி பூஜைக்கு வேண்டிய சாமான்கள் லிஸ்ட் போட்டு கொடுக்க..அதை வாங்கியவன் அலுவலகத்திற்கு மதியம் விடுமுறை எழுதி கொடுத்துவிட்டு ராமுவுடன் சென்று வாங்கலானான். எவற்றை எல்லாம் நண்பர்களிடம் இருந்து கடனாக வாங்கிக் கொள்ளலாம் என்று ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து செய்ய வேண்டியவற்றை முடிவெடுத்துக் கொண்டான்.


பூஜைக்கு வேண்டிய பூக்களை நண்பனின் நண்பன் இல்லத்திற்கு சென்று பறித்து வந்தான். மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக மலிவான விலையில் வாங்கிக் கொண்டான். தனக்கும் மலிவான விலையில் புது துணி எடுத்துக் கொண்டான். பூஜைக்கு வேண்டி தயார் செய்த பொருட்கள் அனைத்தையும் ராமுவிடம் கொடுத்து அடுத்தநாள் வரும் போது எடுத்து வருமாறு கூறினான்.


பூவை மட்டும் எடுத்துக் கொண்டான். மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் நுழைந்தவனை வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் வாயை பிளந்து கொண்டு பார்த்தனர். பொதுவாக பத்மா வந்திருக்கும் நாட்களில் ஒருவித கடுகடுப்புடனே இருப்பான்.ஆனால், இன்றோ இத்தனை மகிழ்ச்சியுடன் வந்தவனை மியூசியத்தில் வைத்து பார்ப்பது போல் பார்த்தனர்.

பத்மாவை பார்த்து “என்னக்கா மதியம் தூங்கலையா ரொம்ப டையர்டா இருக்கிற மாதிரி இருக்கு” என்றதும் பத்மாவிற்கு மயக்கமே வரும் போல் இருந்தது.


காவ்யாவோ ‘என்னடா நடக்குது’ என்று பிரகாசத்தை அதிசயமாக பார்த்தாள்.


கையிலிருந்த பூ பையையும், வாங்கி வந்திருந்த இனிப்பையும் அம்மா கையில் கொடுத்து “அக்கா வந்திருக்காலேன்னு ஸ்வீட் வாங்கிட்டு வந்தேன்ம்மா” என்றவனை வெற்று பார்வை பார்த்துவிட்டு திரும்பியவரை அவனது குரல் நிறுத்தியது “அம்மா! அதுல கொஞ்சம் பூ இருக்கு.

நாளைக்கு என் பிரெண்ட் வீட்டில் ஒரு பங்க்ஷன். உங்களுக்கெல்லாம் கொஞ்சம் எடுத்துகிட்டு மீதியை கட்டி கொடுத்திடுங்க” என்றான்.


பரிமளம் கையிலிருந்த ஸ்வீட் பெட்டியையும், பூ பையையும் மாறி மாறி பார்த்தவர் பிரகசாத்தை பார்த்து கேலியாக சிரித்துவிட்டு சென்றார்.

மனமோ “பூ கட்டி கொடுக்க கூலி தான் இனிப்பா” என்று நினைத்தவரின் மனம் கசந்தது.

தளர்ந்த நடையுடன் சமயலறைக்கு செல்பவரை பின்தொடர்ந்து சென்றவன் “அம்மா! அவனுக்கு யாருமில்லை அதனால நாளைக்கு ரெண்டு பேருக்கு நல்ல வடை, பாயசத்தோட சமைச்சு டிபன் கேரியர்ல போட்டு கொடுத்திடுங்க” என்றான்.


அவனை நிமிர்ந்து பார்த்த பரிமளம் ‘அதானே என் மகனாவது பூ கட்ட இவ்வளவு செலவு பண்ணி ஸ்வீட் வாங்கிட்டு வருவானான்னு நினைச்சேன். சமையலுக்கு கூலியா?’ என்று நினைத்துக் கொண்டார்.


அதோடு விடாமல் “பாயசத்தில் முந்திரி பருப்பு, திராட்சை எல்லாம் நிறைய போடுங்கம்மா” என்றான்.


அவர்களின் பின்னே வந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த காவ்யா “ஏன் அண்ணே! நீ எத்தனை கிலோ முந்திரி பருப்பு திராட்சை எல்லாம் வாங்கி கொடுத்த? ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட நீ செலவு பண்றது இல்ல” என்றாள் கடுப்புடன்.

இதை எல்லாம் கேட்டு அசந்துவிட்டால் அவன் பிரகாசம் அல்லவே!

அவள் தலையில் கொட்டி “மக்கு! அம்மா, அப்பா வீட்டில் எதுக்கு காசு கொடுத்து சாப்பிடனும். அதுக்கு ஹோட்டலில் போய் சாப்பிடலாமே” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.


அவன் சொன்னதை கேட்டு “ஹான்...அம்மா இது நடிக்குதா? இல்ல தெரியாம பேசுதா? எப்படிம்மா இந்த அண்ணன் இப்படி இருக்கு?” என்றாள் எரிச்சலுடன்.
 
  • Like
Reactions: lakshmi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,425
939
113
அத்தியாயம் –3

மகனை பற்றி எண்ணிக் கொண்டே இரவு சமையலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்தார் பரிமளம். அந்நேரம் உள்ளே வந்த நாகராஜன் “பரிமளம்! அடையும் அவியலும் செய்றியா? பத்மாவுக்கு பிடிக்கும்” என்று கூறி அவரின் எரிச்சலை கொட்டிக் கொண்டார்.


காலையில் இருந்து நடந்த சம்பவங்களின் தாக்கத்தில் இருந்த பரிமளம் தனது இயலாமையை யாரிடம் காண்பிக்க முடியாமல் கணவரிடம் பாய்ந்தார்.


“ஏங்க இப்படி இருக்கீங்க? கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம. உங்களை சுத்தி என்ன நடக்குதுன்னு பாருங்க. வீட்டு நிலைமை என்ன? யாருக்கு என்ன தேவை? அதுக்குண்டானவை எல்லாம் இருக்கா இல்லையா என்றெல்லாம் பார்க்கவே மாட்டீங்களா?”


‘நாம இப்போ என்ன சொல்லிட்டோம்...அடை செய்ய சொன்னது அவ்வளவு பெரிய தப்பான செயலா?’..என்று புரியாமல் பாவமாக பார்த்து வைத்தார்.


கணவரின் பரிதாபமான முகத்தை பார்த்து தன் மனதை மாற்றிக் கொண்ட பரிமளம்... “டிபன் என்ன செய்யனும்-னு நான் பார்த்துகிறேன்...நீங்க போய் பேத்தியோட விளையாடுங்க” என்று அனுப்பி வைத்தார்.


அவரது மனமோ தனது மாமியாரை கரித்து கொட்டி கொண்டிருந்தது.... ‘பரப்பிரும்மம்-மா வளர்த்து வச்சிருக்காங்க. இத்தனை வயசாச்சு இன்னமும் வீட்டின் நிதிநிலைமை என்னன்னு தெரிஞ்சுக்காம இருக்கார். நீண்டேழுந்த பெருமூச்சுடன்...ஏதோ ரகு இருக்கிறதுனால என்னால சமாளிக்க முடியுது. எல்லா பிள்ளையையும் நல்லா தானே வளர்த்தேன். பெரியவனுங்க ரெண்டு பேரும் தங்களோட குடும்பத்தோட ஒதுங்கி போயிட்டாங்க. ஹேமா பொறந்த வயிற்றில் தானே இவளும் பொறந்தா...அவ அம்மா வீட்டோட நிலைமையை புரிஞ்சுகிட்டு நடந்துகிறா...சின்ன குட்டிக்கு இருக்கிற பொறுப்பு கூட பத்மாவுக்கு இல்லையே...சின்ன குட்டி அவ வயசு பொண்ணுங்களை பார்த்து அது வேணும், இது வேணும்-னு கேட்காம வீட்டு நிலைமையை புரிஞ்சு நடந்துகிறா...பசங்களை சொல்லி என்ன பண்றது? அப்போவே நான் இதை எல்லாம் யோசிச்சிருந்திருக்கனும்’ என்று தன்னை தானே நொந்து கொண்டார்.


தந்தையுடன் ஹாலில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்த பத்மாவை வேலையில் இருந்து திரும்பிய ரகு “வாக்கா! எப்போ வந்த?” என்றான்.


அதுவரை தந்தையிடம் தனது புகுந்த வீட்டினரின் அட்டுழியங்களை பற்றி அளந்து கொண்டிருந்தவள் “வாடா! நீயாவது வா-ன்னு கூப்பிட்டியே. உனக்காவது வா-ன்னு கூப்பிட மனசிருக்கே” என்று காலையில் விட்டதை தொடர ஆரம்பித்தாள்.


மகள் மீண்டும் விட்ட கதையை தொடர தொடங்கியதை கண்டு
சமையலறையில் இருந்து வேகமாக வெளியே வந்தவர் “ரகு! போய் முகம் கழுவிட்டு வாப்பா..காப்பி போட்டு தரேன்” என்றார்.


தான் பேச நினைத்ததை பேச விடாமல் செய்த அன்னையின் மீது கோபம் எழ... “என்னமா இது! நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன்...என் கூட உட்கார்ந்து பேசாமல் உள்ளேயே நின்னுட்டு இருக்க...இதுல தம்பி என்கிட்டே பேசுறதையும் தடுக்கிற...உனக்கு நான்னா இளக்காரம்...ஹேமா வந்தா அவ கூட உட்கார்ந்து நல்லா பேசுவ...அவ தான் உனக்கு ஒசத்தி” என்று பொருமினாள்.


அதை கேட்டு கொண்டிருந்த காவ்யா கடுப்பாகி “அம்மா என்ன பண்ணுவாங்க அக்கா...உனக்கு வேண்டியதை சமைச்சு போடலேன்னாலும் ஆடுவ...அப்படியாவது எழுந்து போய் உதவி பண்ணினா பரவாயில்ல...ஹேமாக்காவந்தா… அம்மாவை வேலை செய்ய விடாம தானே எல்லோருக்கும் செஞ்சு போடுவாங்க...அதனால அம்மா நிம்மதியா பேசிட்டு இருப்பாங்க” என்றாள்.


அவ்வளவு தான் ரயில் எஞ்சின் மாதிரி புசுபுசுவென்று மூச்சுக்களை விட்டு “ அப்போ நான் இங்கே உட்கார்ந்து திங்க வரேன்னு சொல்றியா? என் தலையெழுத்து இப்படியொரு வீட்டில் வந்து பிறக்கனும்னு. ஒவ்வொருத்தியும் பிறந்த வீட்டில் எப்படி சீராடிட்டு வரா...ஆனா எனக்கு சோறு போடுறதை கூட சொல்லி காட்டுற குடும்பம்” என்று கூறி வராத கண்ணீரை முந்தானையில் துடைத்துக் கொண்டு “நல்லாயிருங்க! நான் மட்டும் எக்கேடோ கெட்டு போறேன்” என்று கத்தினாள்.

அதுவரை பேசாமல் இருந்த நாகராஜன் “என்ன பத்மா இது! வீட்டு பொண்ணு இப்படி எல்லாம் பேசலாமா? நீ வரது எப்படி எங்களுக்கு பிடிக்காம போகும். இதோ இப்போ கூட அம்மா கிட்ட போய் உனக்கு பிடிச்ச அடையும், அவியலும் பண்ண சொல்லிட்டு தான் வந்தேன்” என்று சமாதானபடுத்துகிறேன் என்று பரிமளத்திற்கு பிரச்னையை ஏற்படுத்தினார்.

ரகுவிற்கோ தலைவலி விண்-விண் என்று போட்டது. அதை
வெளிக்காட்டவும் முடியாது. அப்படி காட்டிவிட்டால் அவ்வளவு தான் நான் வந்ததனால் தான் நீ முகத்தை சுளிக்கிறாய் என்று அதற்கு ஒரு ஏழரையை கூட்டுவாள். அமைதியாக அங்கிருந்து எழுந்து அறைக்குள் சென்றவன் பின்னே சென்றார் பரிமளம்.


“தலைவலிக்குதா ரகு” என்று மகனின் முகம் பார்த்தே அவன் மனதை புரிந்து கொண்டவராக கேட்டார்.


“ஆமாம்ம்மா!” என்றவன் “நான் சமாளிச்சுப்பேன்...நீங்க போய் சமையலை பாருங்கம்மா. லேட் ஆச்சுன்னா அதுக்கு ஒரு ஆட்டம் ஆடுவா” என்று கூறியபடி குளியலறைக்குள் நுழைந்தான்.


சோர்வாக சென்ற மகனை பார்த்து மனம் குமுறியபடி சென்று சுடசுட காபியை தயாரித்து எடுத்து வந்தார். அந்தநேரம் தனது அறையிலிருந்து வெளியே வந்த பிரகாசம் அன்னையின் கையிலிருந்த காப்பி கப்பை பார்த்துவிட்டு “பால் விக்கிற விலைக்கு எதுக்கும்மா அவனுக்கு ரெண்டு காப்பி கொடுக்குறீங்க? நம்ம வீட்டு நிலைமை தெரிஞ்சும் ரெண்டு காப்பி சாப்பிடுறானே ரகு...அவனை சொல்லனும்” என்றான்.


அவனை நின்று கோபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குள் சென்றவரின் மனம் பிரகாசத்தை தாளித்தது. தன்னோட சம்பாத்தியம் மொத்தத்தையும் குடும்பத்துக்கு கொடுக்கிறவன் ஒரு வார்த்தை பேசாம இருக்கான்...வாங்குற சம்பளம் மொத்தத்தையும் தன்னோட அக்கௌன்ட்ல போட்டுக்கிறவன் குடும்ப நிலைமையை பத்தி பேசுறான்’.


முகத்தை கழுவிகொண்டு வந்தவன் காபியோடு நிற்கும் அன்னையை பார்த்து..அவர் முகத்தில் தெரிந்த களைப்பும், சோர்வும் வேதனையை ஏற்ப்படுத்த…அவர் கையிலிருந்த காபியை வாங்கி கொண்டு..சமயலறைக்குச் சென்று மற்றொரு டம்ளரில் பாதியை ஊற்றி கொடுத்து “குடிங்கம்மா! கொஞ்ச நேரம் இப்படி உட்காருங்க. நானும் காபியை குடிச்சிட்டு வந்து உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். தனியா கிடந்து அல்லாடிட்டு இருக்கீங்க” என்றான் பரிவுடன்.


மகனது அன்பான பேச்சில் கண்கள் கலங்க “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா. நீயே களைச்சு போய் வந்திருக்க...நான்
பார்த்துக்குவேன். ஒன்னே ஒன்னு செய்...கடைக்கு போய் கடலைபருப்பு வாங்கிட்டு வந்து கொடுப்பா. வீட்டுல என்ன இருக்கு,இல்லேன்னு தெரியாம உங்கப்பா வேற படுத்துறார்” என்றார்.


காபியை குடித்துவிட்டு சட்டையை மாட்டிக் கொண்டு பர்சில் மிச்சம் இருந்த தாள்களை எடுத்து கொண்டு வெளியே வந்தான்.


எதுவுமே நடக்காத பாணியில் மீண்டும் விட்ட கதையை தொடர்ந்து கொண்டிருந்தாள் பத்மா. காவ்யா சமையலறைக்குள் புத்தகங்களோடு அடைந்திருந்தாள். சனி, ஞாயிறுகளில் அவளால் நிம்மதியாக படிக்க முடியாது. தொடர்ந்தார் போல் ஒரு மணி நேரம் புத்தகம் கையிளிருந்தாலே பத்மாவுக்கு கோபம் வந்துவிடும். ஏதாவது குத்தலாக பேசி அவளை படிக்க விடாமல் செய்து விடுவாள்.


ரகு கடைக்கு கிளம்பியதும் சமயலறைக்கு சென்று காய்கறிகளை நறுக்க தொடங்கினார் பரிமளம். அப்போது அங்கே வந்த பிரகாசம் “அம்மா! நாளைக்கு சமையல் ஜோரா பண்ணி கொடுங்க. அதோட காய்ச்சாத பால் ஒரு டம்ளர் வச்சு அனுப்புங்கம்மா” என்றான்.


அவன் சொன்னதை உணர்வுகளை அற்ற முகத்துடன் பார்த்து “சரிப்பா” என்றார்.


அதோடு தன் வேலை முடிந்தது என்பது போல் அங்கிருந்து ஹாலிற்கு சென்றான்.


“என்ன பத்மா? அத்தான் எங்க? பகலில் போனா இரவு தான் வராங்க ரொம்ப பிஸியா?” என்றான்.


“அவர் என்ன உங்களை மாதிரியாடா...ஏகப்பட்ட வேலை இருக்கும்” என்றாள் நக்கலாக.


அவளது கேலியை காதில் வாங்காது “ஏன் பத்மா...ஹேமா புதுசா இடம் வாங்கியிருக்கிறதா அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாளே...உனக்கு தெரியுமா?’ என்று தனது நாரதர் வேலையை ஆரம்பித்து வைத்தான்.


அதுவரை இயல்பாக பேசிக் கொண்டிருந்தவள் அவன் சொன்ன செய்தியில் “என்னது இடம் வாங்கியிருக்காளா? அவளுக்கு ஏது அவ்வளவு காசு? இந்த அம்மா என்கிட்ட இதை சொல்லாம மூடி மறைச்சிட்டாங்க பாரேன் பிரகாசம்.
ஏதோ நீயாவது என்னை இந்த வீட்டு மனுஷியா நினைக்கிறியே” என்றாள் கடுப்புடன்.

ஹாலில் நடப்பது எதுவும் தெரியாமல் தனது வேலையில் மூழ்கி இருந்தார் பரிமளம். நாகராஜன் பேத்தியோடு தோட்டத்தில் அமர்ந்திருந்தார்.


பத்மா சொல்வதை கேட்டு மெல்லிய குரலில் “நீ மட்டுமில்லை பத்மா. எனக்கும் இதே நிலைமை தான். அம்மாவுக்கு ரகு தான் ஸ்பெஷல். நீ வேணா கவனிச்சு பாரேன். அவனுக்கு பார்த்து-பார்த்து செய்வாங்க” என்றான்.


அவளோ ஹேமா தன்னை விட ஒருபடி உயர்ந்துவிட்டாள் இடம் வாங்கியதன் மூலமாக என்ற எண்ணத்திலேயே உழன்று கொண்டிருந்தாள். அவளுடைய சிந்தனையை தடை செய்தவன் “நீ பேச்சு கொடுத்து பாரு பத்மா. அம்மா உன்கிட்ட சொல்றாங்களான்னு பார்ப்போம்” என்றான்.


“ஆமாம் பிரகாசு! நான் கேட்கிறேன். என்கிட்டே சொல்லாம மட்டும் இருக்கட்டும். அப்புறம் வச்சிக்கிறேன் கச்சேரியை” என்றாள் எரிச்சலுடன்.
அவன் சாம்பிராணியை தூவி விட்டு தன் வேலை முடிந்ததென்று அங்கிருந்து நகர்ந்தான்.


பேசுவதில் இருந்த மும்மரத்தில் ரகு தங்களை கடந்து சென்றதையோ, அவர்கள் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை அறிந்து முகம் சுளித்ததையோ கவனிக்கவில்லை.


கடையிலிருந்து வாங்கி வந்த பருப்பை அன்னையிடம் கொடுத்தவன் “அம்மா! ஹேமா இடம் வாங்கினதை பத்மா கிட்ட சொல்லலையா?” என்றான்.


மிக்ஸியில் தேங்காயை அரைத்துக் கொண்டிருந்தவர்..நிறுத்துவிட்டு “இல்ல ரகு! அதை கேட்டா வயிறு எரிஞ்சு அந்த மனுஷனை போட்டு படுத்துவா. அதுதான் சொல்லல” என்றார்.


பருப்பை அளந்து பாத்திரத்தில் கொட்டிவிட்டு நிமிர்ந்தவன் “உங்க சீமந்த புத்திரன் அவ கிட்ட போட்டு கொடுத்தாச்சு. அதனால நீங்களே சொல்ற மாதிரி சொல்லிடுங்க. இல்லேன்னா அதுக்கு ஒரு ஏழரையை கூட்டுவா” என்றான் சலிப்புடன் கூடிய குரலில்.


அதை கேட்டவர் கடுப்பாகி “இவன் ஏன்டா இப்படி இருக்கான்.அக்கா தங்கச்சிக்குள்ள மூட்டிகொடுத்துகிட்டு இருக்கான். குடும்பத்துல தான் ஒட்டுதல் இல்லாம இருக்கான்னா இது வேறயா?” என்று புலம்ப ஆரம்பித்தார்.


அடைக்கு தேவையான வெங்காயத்தை நறுக்கி கொண்டிருந்த ரகு கத்தியை கீழே வைத்துவிட்டு வேகமாக அம்மாவின் அருகில் சென்று “அம்மா! அவன் பண்றது என்ன புதுசா? விடுங்கம்மா...இப்போ சாப்பிடும் போது நீங்களே பத்மா கிட்ட சொல்லிடுங்க. அப்போ தான் மேற்கொண்டு பிரச்சனை எதுவும் வராம இருக்கும்” என்றான்.


கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு “ம்ம்..சரி! என்ன பண்றது என் தலையெழுத்து. நான் பெத்தது எதுவும் சரியில்லை” என்றார் சோர்வாக.


அன்னைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துவிட்டு வெளியில் வந்த ரகு...பத்மாவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். எட்டு மணி வாக்கில் வீடு திரும்பிய வீரராகவன் மாமனாரிடமும், மச்சினனிடமும் இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தார்.


பிரகாசமும் அவர்களுடன் இணைந்து கொள்ள, அதுவரை இருந்து வந்த இறுக்கமான மனநிலை மாறி நல்லதொரு சூழல் ஏற்பட்டது. பரிமளம் இரவு உணவை தயாரித்துவிட்டு அவர்களை எல்லாம் சாப்பிட அழைத்தார்.


அவர் அடுப்படியில் நின்று அடை ஊற்ற,பத்மா கணவருக்கும், தம்பிகளுக்கும் எடுத்துச் சென்று பரிமாறினாள். அவளின் மனநிலையை கணித்துக் கொண்ட பரிமளம் “பத்மா! நம்ம ஹேமா அவ இருக்கிற இடத்துகிட்டேயே சின்னதா ஒரு இடம் வாங்கி இருக்காளாம்” என்றார்.


அவளோ விஷயமே தெரியாத மாதிரி “அப்படியா? எப்படிம்மா? அவ வீட்டுகாரர் சாதாரண சம்பளம் வாங்குறவர்...அவர் வாங்குற சம்பளத்துக்கு தினமும் நல்லா சாப்பிடுறதே பெருசு...அப்புறம் எப்படி நிலம் வாங்குறா?” என்றாள் பொறாமையுடன் கூடிய குரலில்.


அதை கேட்ட பரிமளம் கடுப்பாகி அவளை பார்த்து “இந்த பாரு பத்மா...நீ இப்படி பேசுறது நல்லாயில்லை சொல்லிட்டேன். அவங்க அவங்க வாழ்க்கையை வாழ பாருங்க. அனாவசியமா அடுத்தவங்க வாழ்க்கையை பார்த்து அதை போல வாழனும்-னு ஆசைப்படாதே” என்றார் கோபமாக.


அவளோ அதை காதில் வாங்காமல் “யார் யாருக்கு என்ன கொடுப்பினை இருக்கோ அதுதானே நடக்கும். நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி.’ என்று கூறிக் கொண்டே தட்டிலிருந்த அடையை வீரராகவனுக்கு பரிமாறினாள்.


அவளது முணுமுணுப்பை கேட்ட வீரராகவன் “என்ன பது! என்ன ஆச்சு?” என்றார் பதட்டமாக.


“ஹேமா இடம் வாங்கியிருக்கா தெரியுமா? அவர் வாங்குற சம்பளத்துக்கு அவங்க எல்லாம் வாங்குறாங்க. நாம அவளை விட நல்லா தானே இருக்கோம். எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்”. என்றாள் பெருமூச்சுடன்.


அவளை பாவமாக பார்த்த வீரராகவன் “போன மாசம் தானே கர்வ் டிவி லோன் எடுத்து வாங்கியிருக்கோம். அதுக்கே மாசா மாசம் நிறைய கட்டனுமே பத்மா” என்றார்.


அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த பிரகாசம் “என்னது கர்வ்
டிவியா? பத்மா சொல்லவேயில்லை. மேட்ச் பார்த்தா அதில பார்க்கனும். மாமா அடுத்த வாரம் உங்க வீட்டில் தான். மேட்ச் பெரிய டிவில பார்த்த மாதிரியும் ஆச்சு...புது டிவி-க்கு நீங்க ட்ரீட் கொடுத்த மாதிரியும் ஆச்சு” என்றான்.


அவன் சொன்னதை கேட்ட பத்மா கடுப்பாகி கணவனை முறைக்க..அவரோ தலையை தட்டிற்குள் புதைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்.


அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டதும், பத்மா குடும்பம் அறைக்கு சென்றவுடன்..ரகுவும், நாகராஜனும் ஹாலில் தங்களது படுக்கையை விரிக்க..காவ்யா சமையலறையை ஒட்டி இருந்த இடத்தில் படுத்தாள். பிரகாசம் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டான்.


பரிமளம் அடுப்பங்கரையை ஒதுங்க வைத்துவிட்டு பிரகாசத்திற்கு மறுநாள் செய்ய வேண்டிய சமையலுக்கான கறிகாய்களை நறுக்க ஆரம்பித்தார்.


விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்த ரகு, அடுக்களையில் தெரிந்த வெளிச்சத்தை கண்டு “என்னம்மா பண்றீங்க? இன்னும் படுக்கலையா?” என்றான்.


“இல்லப்பா! நாளைக்கு பிரகாசு சமைச்சு கொடுத்து விட சொன்னானே. அதுக்காக காய் நறுக்கி வச்சிட்டு இருக்கேன்” என்றார்.


அதை கேட்டு அவசரமாக எழுந்தவன் “என்னமா நீங்க! என்கிட்ட ஒருவார்த்தை சொல்ல கூடாதா? குடுங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம். காலையில் நீங்க எழுந்திரிக்கும் போது சொல்லுங்க...நானும் ஹெல்ப் பண்றேன். ஒத்தை ஆளா எவ்வளவு பண்ணுவீங்க” என்றான்.


இருவரும் பேசிக் கொண்டே விறுவிறுவென்று நறுக்கி வைத்துவிட்டு படுத்தனர். மறுநாள் காலை ரெண்டரை மணிக்கு அவர் எழும்போதே அவனும் எழுந்து கூடமாட உதவினான். உதவிக்கு வந்த காவ்யாவை
படிக்க சொல்லிவிட்டு அன்னைக்கு கைகாரியத்தில் முழுமையாக உதவினான்.


நாலுமணிக்குள் காலை உணவும் தயாரித்து, பிரகாசம் கேட்டு கொண்டபடி வடை, பாயசத்துடன், தேங்காய் சேர்க்காத மதிய உணவும் தயாரித்து வைத்தார்...நாலரை மணிக்கு தனது அறையில் இருந்து வெளியே வந்த பிரகாசம்...புது வேட்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போன்று வந்து நின்றான்.


அவனது தோற்றத்தைக் கண்டு சந்தேகமாக பார்த்தான் ரகு. அவன் மனதில் ஏதோ சந்தேகம் எழுந்தது. அதை வெளிக் காட்டிகொள்ளாது பார்த்துக் கொண்டிருந்தான்.


அன்னை தயாரித்து வைத்த உணவு வகைகளை சரி பார்த்துவிட்டு தனது பைக்கில் புது வீடு நோக்கி கிளம்பினான்.


இவனுக்கு முன்பே அங்கே வந்து காத்திருந்தான் ராமானுஜம். உள்ளே சென்றதும் பூஜைக்கு வேண்டிய ஆயத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்தான். அவன் கேட்ட பொருட்களில் கால் பாகம் கூட இல்லாது, ஏனோ தானோ என்று வாங்கி கொடுத்திருந்தான் பிரகாசம். அதை பார்த்து மனம் வெறுத்து போய் பிரகாசத்தை அமர வைத்து பேருக்கென்று பூஜையை செய்து முடித்தான்.


பூஜை முடிந்ததும் அவனை பால் காய்ச்ச கூறினான். முதல்நாளே நண்பனின் வீட்டிலிருந்து கடன் வாங்கி வைத்திருந்த இண்டக்ஷன் அடுப்பில் அம்மாவிடமிருந்து வாங்கி வந்திருந்த ஒரு டம்பளர் பாலை காய்ச்சினான்.


வெறும் ஒரு டம்பளர் பாலை காய்ச்சுபவனை பார்த்து மலைத்து போய் ‘எத்தனையோ கஞ்சபயலுகளை பார்த்து இருக்கேன். இவனை மாதிரி ஒருத்தனை ஜென்மத்துல பார்த்ததில்லை. நமக்கென்ன பேசுன காசை கொடுத்தா வாங்கிட்டு ஓடிடலாம்” என்று நினைத்துக் கொண்டான்.


காய்ச்சிய பாலை சாமி படத்துக்கு முன் வைத்து கும்பிட்டவன்...எதிரே ஒருவன் நிற்கிறான் என்ற எண்ணம் கூட இல்லாமல்..அதை எடுத்து மடமடவென்று குடித்தான்.


பின்பு ராமனுஜத்தை பார்த்து “ரொம்ப நன்றி ராமு! நல்லா செஞ்சு கொடுத்திட்ட ரொம்ப திருப்தியா இருக்கு” என்றவன் சட்டை பையிலிருந்து நூற்று ஐம்பது ரூபாயை எடுத்து கொடுத்தான்.


அதை பார்த்த ராமனுஜமோ “சார்! இருநூற்று ஐம்பது பேசுனீங்க. இப்போ வெறும் நூற்று ஐம்பது தரீங்க?” என்றான் எரிச்சலுடன்.


அதற்கு கொஞ்சமும் அசராது “நீயே சொல்லு ராமு ஒரு முக்கால் மணி நேரம் செஞ்சிருப்பியா இந்த பூஜையை. நூற்று ஐம்பதே அதிகம் தான். நீ என்னோட வேலை செய்றவன். உனக்கு ஒரு பொழைப்பு கொடுக்கனுமேன்னு தான் போனா போகுதுன்னு கூட ஒரு ஐம்பது சேர்த்து தரேன்” என்றான்.


அவன் சொன்னதை கேட்டு முற்றிலுமாக வெறுத்து போனவன் “அந்த காசையும் நீயே வச்சுக்க சார். நான் உனக்கு உதவி பண்ணினதா இருக்கும்” என்று கூறிவிட்டு நடந்தான்.


அவன் பணம் வேண்டாம் என்று சொன்னதும் மகிழ்ந்து போய் அதை சட்டை பைக்குள் வைத்து கொண்டு கதவை சாத்திவிட்டு....அம்மா சமைத்து கொடுத்திருந்த உணவை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.


‘பிளானிங்ல உன்னை மிஞ்ச ஆளே கிடையாதுடா பிரகாசு. பூஜை பண்ணின காசு கூட மிச்சம் ஆயிடுச்சு. அம்மா கையால வடை, பாயசத்தோட சாப்பாடு. தேங்காய் போடாம செய்ய சொன்னதினால ராத்திரி கூட சாப்பாடு வாங்க வேண்டியது இல்ல’ என்று தன்னை தானே பாராட்டிக் கொண்டான்.
 
  • Like
Reactions: lakshmi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,425
939
113
அத்தியாயம் 4


திங்கள் அன்று காலை வீடு பரபரப்பாக இருந்தது. பத்மா முதல்நாள் இரவே கிளம்பி போயிருக்க, அன்றாட வேலையை சற்று ஆசுவாசத்துடன் செய்து கொண்டிருந்தார் பரிமளம். நாகராஜன் வழக்கம் போல் எந்த கவலையும் இல்லாது வாசலில் அமர்ந்து பேப்பரை படித்துக் கொண்டிருக்க, காவ்யா பள்ளிக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள். பிரகாசம் காலை தான் புதிய வீட்டிலிருந்து வந்திருந்தான். தனது வீட்டின் கிரகப்ரவேசத்தை நிறைவாக செய்துவிட்டதாக உணர்ந்தான்.

அதனால் எழுந்த உற்சாகத்தில் சீட்டியடித்தபடி உற்சாகமாய் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான். ரகுவும் அவ்வப்போது அன்னைக்கு உதவியபடி கிளம்பிக் கொண்டிருந்தான்.


பள்ளிச் சீருடையை அணிந்துகொண்டு, புத்தகப்பையை சுமந்து கொண்டு வந்தவளிடம் மதிய உணவை கொடுத்த பரிமளம் கவிம்மா நேரமாச்சு ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிட்டிட்டு போஎன்றார்.


அவளோ அன்றைய கிளாஸ் டெஸ்டை நினைத்துக் கொண்டே, பாடங்களை மனதில் ஒருபுறம் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தவள்...அம்மா தட்டில் வைத்த இட்லியை லேசாக மிளகாய் பொடியில் தோய்த்து நின்றபடியே சாப்பிட்டாள். இரண்டு இட்லிக்களையும் அவ்வாறே சாப்பிட்டு விட்டு வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்றாள்.


அவள் போவதை பெருமூச்சு எழ பார்த்தவர், லீவ் நாளில் நிம்மதியா வீட்டில் உட்கார்ந்து படிக்கத்தான் முடியல, நிம்மதியா சாப்பிடக் கூட நேரமில்லாமல் ஓடுறா. என் வயிற்றில் பிறந்த பாவத்துக்கு இந்த பொண்ணு கஷ்டப்படுது என்று எண்ணிக் கொண்டார்.


ஒருவர் பின் ஒருவராக அனைவரும் கிளம்பிய பின் ஆய்ந்து ஓய்ந்து ஹாலில் வந்தமர்ந்தார். அதுவரை பேப்பரின் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை ஒரு எழுத்து விடாமல் படித்து முடித்த நாகராஜன் மெல்ல எழுந்து வந்து மனைவியின் அருகில் அமர்ந்து பரி! ஒரு கப் காப்பி தரியா?” என்றார்.


உடல் களைப்பு ஒருபுறம், மனதில் எழுந்த சோர்வு ஒருபுறம் இருக்க அவர் கேட்டதும்...அவ்வளவு நேரம் அவருக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை என்றறிந்ததும் பதறி போய் வேலையில உங்களுக்கு காபி கொடுக்கவே

மறந்து போயிட்டேன் பாருங்கஎன்று சமையலறை நோக்கி சென்றார்.


நாகராஜனும் அவருடனே சென்றவர் பரவாயில்லை பரி...உனக்கு ஏகப்பட்ட வேலை நீயும் தான் என்ன செய்வஎன்றார்.


பாலை காய்ச்சி காபியை கலந்து கொண்டிருந்தவர் என்னங்க பெரியவனும், சின்னவனும் இந்த பக்கமே எட்டி கூட பார்க்க மாட்டேன்றானுங்க. நாமளாவது போய் பேரப் பிள்ளைகளை பார்த்திட்டு வருவோமா?” என்றார் ஏக்கத்துடன்.


மனைவியின் முகத்தில் தெரிந்த கவலையை புரிந்து கொண்டவர் நான் போன் பண்ணி கேட்டுகிறேன் வீட்டில் தான் இருக்காங்களான்னு. சாயங்காலமா போய் பார்த்திட்டு வருவோம்என்றார்.


ம்ம்.சரிங்கஎன்றவர் காபியை அவர் கையில் கொடுத்துவிட்டு மற்ற வேலைகளை பார்க்க சென்றார்.


ஆபிசிற்கு சென்ற பிரகாசம் ஒரு ரெண்டு மணி நேரம் வேலையில் மூழ்கி இருந்தவன்...சற்று ஓய்வெடுக்க பைலை மூடி வைத்துவிட்டு போனை எடுத்து மூத்த அண்ணனிற்கு அழைத்தான்.


அண்ணா எப்படியிருக்க?”.


ம்ம்..சொல்லு..நாங்க நல்லாயிருக்கோம். அம்மாவும், அப்பாவும் எப்படியிருக்காங்க?”


அவங்களுக்கு என்ன? நல்லா இருக்காங்க. பையனுங்க நம்மளை விட பொண்ணுங்களை தான் அதிகம் பிடிக்கும். ஆனா காசு பணம்ன்னா மட்டும் பையனுங்க வேணும்என்றான்.


அதை கேட்டவன் நானோ, சின்னவனோ குடும்பத்துக்கு ஒன்னும் கொடுக்கிறதில்லையே பிரகாஷ்என்றான்.


கொடுக்க வேண்டாம் அண்ணா. எதுக்கு கொடுக்கனும் சொல்லு? வாரத்துக்கு ஒருதடவை வந்து பொறந்து வீட்டுல பீறாஞ்சிட்டு போறா பத்மா. ரெண்டு மூனு மாசத்துக்கு ஒரு தடவை வந்து மாப்பிள்ளை கெத்தை காண்பிச்சு மிச்சம் இருக்கிறதை உருவிட்டு போறான் ஹேமா புருஷன். இவங்களுக்காகவா நாம சம்பாதிக்கிறோம்?” என்றான் கடுப்புடன்.


சற்று யோசனையுடன் இருந்தாலும் அப்பா பென்ஷன்ல எப்படி சமாளிக்க முடியும் பிரகாஷ். காவ்யா வேற இருக்கா. அவ கல்யாணத்துக்கு வேற செய்யனும்என்று இழுத்தான்.


நான் சொல்றதை சொல்லிட்டேன். உனக்கு சம்மதமாபடலேன்னா அண்ணி கிட்ட பேசி பாரு நிலைமை புரியும்என்று கூறி அவன் மனதை கலைத்துவிட்டு போனை வைத்தான்.


போனை அனைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவன் இவனுங்க பாட்டுக்கு அம்மாவுக்கு செய்றேன் ஆட்டுகுட்டிக்கு செய்றேன்னு பழக்கி வச்சிட்டு...என்கிட்டேயும் அவங்க அதையே எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்கு தான் அங்கங்கே ஒவ்வொரு தடையை போட்டு வைக்கனும்என்று நினைத்துக் கொண்டான்.


பிரகாசத்திடம் பேசி முடித்து போனை வைத்ததும்...மீண்டும் கிருஷ்ணமூர்த்தியின் போன் அடிக்க...எடுத்து பார்த்தவனின் முகத்தில் யோசனை படர்ந்தது.


என்ன இந்தநேரத்துக்கு அப்பா அடிக்கிறாங்க? பணம் கேட்க போன் பண்றாங்களோ? அதுக்கு தான் பிரகாஷ் பேசினானோ...அப்படிதான் இருக்கும். இல்லேன்னா பிரகாஷ் காசு செலவு பண்ணி பேசுவானா என்ன..நாம உஷாரா இருக்கனும்என்ற முன்யோசனையுடனே போனை எடுத்தான்.


சொல்லுங்கப்பா? என்ன இந்த நேரத்துக்கு கூப்பிட்டு இருக்கீங்க?” என்றான்.


எப்படிப்பா இருக்கீங்க எல்லோரும்? மருமக பேரப் பிள்ளைங்க எல்லாம்

நல்லா இருக்காங்களா?” என்றார் நாகராஜன்.


நல்லாயிருக்கோம் பா...நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க?”


ம்ம்..நல்லாயிருக்கோம்.உங்க அம்மா பேரப்பிள்ளைகளை பார்க்கனும்ன்னு ஆசைப்படுறா... அதுதான் சாயங்காலம் வரலாமான்னு கேட்க தான் போன் பண்ணினேன்என்றார்.


அவர் சொன்னதை கேட்டதுமே உஷாரனவன் இன்னைக்காப்பா? சுலோ அவங்க அத்தை பொண்ணு கல்யாணத்துக்கு மதுரைக்கு போயிருக்கா. அவ ஊர்லேயிருந்து வந்ததும் சொல்றேன். அப்போ வாங்கஎன்றான்.


அதை கேட்டு ஏமாற்றத்துடன் கூடிய குரலில் ...மருமக ஊரில் இல்லையாப்பா. சரி! வந்ததும் சொல்லுஎன்றவர் நீ நம்ம வீட்டுக்கு வந்து நாள் ஆகுதுப்பா...இப்போ ப்ரீயா தானே இருக்க...ஒரு எட்டு வந்து பார்த்திட்டு போக கூடாதா?” என்றார் ஏக்கத்துடன்.


ஆஹா கிழம் பணத்துக்கு தான் அடிபோடுது போலிருக்கே...இத்தனை நாள் கண்டுக்காம இப்போ வந்து பார்க்கனுமாம் என்று நினைத்தவன் எங்கேப்பா எனக்கே ஆபிஸ்ல வேலை பெண்டு கழலுது. வீட்டுக்கு போறதுக்கே எட்டு ஒன்பது மணி ஆகிடுதுஎன்று போலியாக சலித்துக் கொண்டான்.


அதை கேட்டதும் தந்தை மனம் பரிதவித்து அப்படியா கிருஷ்ணா.உன்னோட உடம்பையும் கொஞ்சம் கவனமா பார்த்துக்கோப்பா. மருமக, பேரப்பிள்ளைகள் வந்ததும் நாங்க வந்து பார்க்கிறோம்என்று கூறி வைத்தார்.


மகனிடம் பேசியதை பரிமளத்திடம் கூறினார். நாகரஜனுக்கு மகன் பேசியதில் எந்த விகல்பமும் தெரியவில்லை. ஆனால் பரிமளம் மகனின் மனதை படித்துவிட்டார். தாங்கள் வருவதை விரும்பாமல் பொய் சொல்கிறான் என்பதையும் உணர்ந்து கொண்டார். அதற்காக மகன் மீது கோபம் வரவில்லை என்றாலும் வருத்தம் நெஞ்சை அடைத்தது. ஏழு பிள்ளைகளை பெற்றுக் கொண்டது தவறு தான் என்றாலும்...அவர்களை எல்லாம் படிக்க வைத்து நல்ல நிலைமையில் தானே வைத்திருக்கிறோம். இவர்களை விட காவ்யா தானே கடைசி பிள்ளையா பிறந்து இந்த வீட்டின் கஷ்டகாலத்தை முழுவதுமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறா.ஆனா அவ ஒரு நாளும் எங்ககிட்ட சலித்துக் கொள்ளவில்லை.


தந்தை சம்பாதித்துக் கொண்டிருந்த காலத்தில் நல்ல பள்ளியில் படித்து, நல்ல வேலை கிடைத்து தனக்கென்று அழகான குடும்பம் அமைந்த பிறகு அன்னை, தந்தையை வெறுத்து ஒதுக்கும் இவர்களை என்ன சொல்வது என்று நினைத்து மனம் நொந்து போனார்.


நாட்கள் யாருக்கும் நில்லாமல் வேகமாக ஓடியது. தான் வாங்கிய வீட்டை வாடகைக்கு விட தனக்கிருந்த ஒன்றிரண்டு நண்பர்களிடம் பேசி ஏற்பாடு செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான் பிரகாசம்.


அவன் வீடு வாங்கிய ஏரியாவில் வாடகை கம்மியாக தான் கிடைக்கும் என்று நண்பர்கள் கூறினர். பிரகாசத்தை போலவே சிந்திக்கும் அவன் நண்பன் ஒருவன் ஒரு குடும்பமாக வீட்டை வாடகைக்கு விடாமல்...தனியாக தங்கியிருக்கும் நாலைந்து இளைஞர்களுக்கு விட்டால் நல்ல வருமானம் வரும் என்று கூற அதன்படியே செய்தான்.


வீட்டிற்காக வாங்கிய கடனுக்கு கட்டியது போக கையில் நல்ல காசு சேர ஆரம்பித்தது. அதற்காகவெல்லாம் அவன் குடும்பத்திற்கு செலவு செய்து விடவில்லை. வழக்கம் போலவே தன்னுடைய செலவுக்கு ஆகும் காசை மட்டுமே கொடுத்து வந்தான். அதிலும் அவன் வாஷிங் மெஷினுக்கு கணக்கு பண்ணி கொடுப்பதை ரகுவும், காவ்யாவும் திறந்த வாய் மூடாமல் பார்த்தார்கள்.


பழைய ஈபி பில்லை எடுத்து வைத்துக் கொண்டு அன்னை, தந்தையின் முன்பு அமர்ந்து அப்பா! இது வாஷிங் மெஷின் வாங்குறதுக்கு முன்னாடி வந்த பில். அதுல நான் ஒரு பேன், ஒரு லைட்டுக்கு கணக்கு பண்ணி இவ்வளவு கொடுத்தேன். இப்போ வாஷிங் மெஷின் வந்த பிறகு போன முறையில் இருந்து எவ்வளவு யூனிட் கூடியிருக்கோ அதை என்னோட கணக்கோட கொடுத்திடுறேன்என்று ஒவ்வொரு பைசாவையும் கணக்கு பண்ணி கொடுத்தான்.


அவன் சொல்வதை பார்த்துக் கொண்டிருக்கும் காவ்யா அவனுடைய குணத்தை கண்டு அசந்து போய் ரகுவின் காதில் அண்ணே! இது என்ன டிசைன். பாவம் இதை கட்டிக்க போறவங்கஎன்று கிசுகிசுத்தாள்.


சும்மாயிரு கவி!” என்று கண்டித்தான் ரகு.


ரகுவிற்குமே பிரகாசத்தை பார்த்து அதிசயமாக இருந்தது. பெற்றவர்களிடமே இத்தனை கணக்கு பார்க்கிறானே...இவனெல்லாம் எப்படி குடும்ப வாழ்க்கையை எதிர்கொள்ள போகிறான்? என்று யோசித்தான்.


அந்தவார கடைசியில் மறக்காமல் பத்மா வீட்டிற்கு சென்று டிவி வாங்கியதற்காக விருந்து சமைக்கச் சொல்லி பத்மாவின் எரிச்சலைக் கொட்டிக் கொண்டான்.


ஏன் பிரகாசு...நம்ம ரகுவுக்கு வயசு ஏறிகிட்டே போகுதே..அவனுக்கு கல்யாணம் பண்ண வேண்டாமா?” என்றாள் பத்மா.


அதை கேட்டு பரிகாசமாக சிரித்த பிரகாசம் அவன் வாங்குற சம்பளத்துக்கு கல்யாணமா? ஏன் பத்மா உனக்கு இந்த ஆசை?” என்றான்.


என்னடா சொல்றா? அதுக்காக அவனுக்கு கல்யாணம் பண்ணாம விட முடியுமா?”


உனக்கு புரியல பத்மா...அவன் வாங்குற சம்பளத்துக்கு வாடகைக்கு வீடு கூட பிடிக்க முடியாதுஎன்றான்.


தேவையில்லையே பிரகாசு. அவன் இங்கேயே இருந்திட்டு போகட்டுமே...எதுக்கு தனியா போகனும்?”


தலையை மறுப்பாக அசைத்து நீ இவ்வளவு வெகுளியா இருக்க வேண்டாம் பத்மா. அவனுக்கு கல்யாணம் ஆகிட்டா உன்னால வாரா வாரம் அங்கே


வர முடியுமா சொல்லு?”


நான் அம்மா வீட்டுக்கு போறதுக்கும் அவனுக்கு கல்யாணம் பண்றதுக்கும் என்ன சம்மந்தம்? என்றாள் குழப்பத்துடன்.


அவளை பார்த்து கேலியாக சிரித்தவன் அப்பாவுக்கு வர பென்ஷனில் குடும்பம் ஓடுறதே பெரிய விஷயம் பத்மா. இதில் நீ வாரா வாரம் சீராட வர, அதுக்கு ரகுவோட சம்பளம் அவசியம்என்றான்.


அவளோ முகத்தை தோளில் இடித்துக் கொண்டு சீராடிட்டாலும்...ஏன் வரேன்னு தான் பார்க்கிறாங்க பிரகாசு. அதிலேயும் அந்த சின்ன குட்டி இருக்காளே...அவ என்னை மதிக்கிறதே இல்லைஎன்றாள்.


அதுக்கு தான் சொல்றேன் பத்மா...இப்போ ரகு தன்னோட சம்பளத்தை முழுக்க அம்மாகிட்ட கொடுக்குறான். கல்யாணம் பண்ணிட்டா கொடுக்க முடியுமா சொல்லு? அப்புறம் நீ அங்கே வந்தா பழைய சோறு தான் கிடைக்கும்என்றான் நக்கலாக.


தாவங்கட்டையில் கையை வைத்தபடி யோசித்தவள் ஆமாம்! நீ சொல்றதும் சரிதான்டா தம்பி! ஆனா, ரகு பாவமில்லையா?” என்றாள்.


அவள் சொல்வதை கேட்டுக் கொண்டே எழுந்தவன் என்ன பாவம்? ஒரு குடும்பம் நல்லாயிருக்கனும்னா ஒருத்தனை பலி கொடுப்பதில் தப்பில்லை. அவன் மட்டும் என்ன கஷ்டப்படவா போறான். அம்மா, அப்பாவோட, அண்ணன்,தம்பிகளோட நல்லா தானே இருப்பான். அதனால நீயா போய் அம்மா, அப்பா கிட்ட எதையாவது கிளப்பி விடாதேஎன்று கூறி கிளம்பிச் சென்றான்.

தனது சுயநலத்திற்காக அடுத்தவரின்

வாழ்வில் நஞ்சை அள்ளித் தெளிப்பது

மனநலம் குன்றிய மனிதனின் செயல்
..
 
  • Like
Reactions: lakshmi
Need a gift idea? How about a tea mug?
Buy it!