Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript வரலாறு முக்கியம் அமைச்சரே! | SudhaRaviNovels

வரலாறு முக்கியம் அமைச்சரே!

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
கண்களை மூடி கடவுளின் முன் நின்றவரின் மனம் மகனுக்காக வேண்டுதலை முன் வைத்துக் கொண்டிருந்தது. எப்படியாவது இந்த வருடமாவது தன் மகனுக்கு திருமணம் முடிந்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தார்.

படத்திலிருந்த முருகனோ “வாய்ப்பில்லை கனகா வாய்ப்பில்லை! உன் பையனுக்கு கல்யாணம் பண்றதுக்கு நான் மறுபடியும் ஆண்டியா போயிடலாம்” என்று சொல்லிக் கொண்டார்.

அப்போது டைனிங் டேபிளில் வந்தமர்ந்த அறிவழகன் “மா! எனக்கு ஆஸ்பிட்டல் போக நேரமாச்சு” என்றான் சத்தமாக.

அவனது குரல் கேட்டதும் அவசரமாக முருகனிடம் ஒரு கும்பிடை போட்டு விட்டு திரும்பியவர் “வந்துட்டியா? இரு வரேன்” என்றவர் வேகமாக சமையலறைக்குள் சென்றார்.

மருத்துவனான அறிவழகன் அமைதியாக அவர் வரும் வரை அமர்ந்திருந்தான். உணவை எடுத்து அவன் தட்டில் பரிமாறியவர் “அறிவு! கலா சித்தி உனக்கு ஒரு வரன் கொண்டு வந்திருக்கா. என்ன சொல்ற? பார்க்கலாமா?” என்றார் தயங்கி தயங்கி.

அன்னையை நிமிர்ந்து பார்த்தவன் “வேண்டாம்மா! என்னை இப்படியே விட்டுடுங்களேன். நீங்களும் நிம்மதியா இருக்கலாம் நானும் நிம்மதியா இருப்பேன்” என்றான்.

அதுவரை அமைதியாக பேசிக் கொண்டிருந்தவர் “உனக்கே வெட்கமா இல்லையா அறிவு? எந்த வீட்டில் பிரச்சனை இல்ல? நானும் உங்கப்பாவும் எவ்வளவு சண்டை போட்டிருப்போம் அதுக்காக நாங்க நல்லாயில்லாமையா போயிட்டோம்?” என்றார் கோபமாக.

அவரை நிமிர்ந்து பார்த்தவன் “கல்யாண பேச்சை எடுத்த உடனேயே உங்களுக்கு எப்படி கோபம் வருது பாருங்க. இதுக்கு தான் சொல்றேன்” என்றான் அசராமல்.

“டேய்! கல்யாணம் பண்ண இப்படி பயப்படலாமா?”

“நான் பயப்படலையே! நீங்களும் நானும் பேசினா நமக்குள்ள சண்டை வராது. ஆனா புதுசா வரவளுக்கும் எனக்கும் நிச்சயமா பேசினா சண்டை வர வாய்ப்பிருக்கு. நாமலே தேடி போய் ஒரு ஆளை கூட்டிட்டு வந்து சண்டை போடலாமா?” என்றவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டவர் “அப்போ நம்ம பரம்பரை உன்னோட முடியட்டும்னு சொல்றியா?” என்றார் கோவமாக.

அவரை நிமிர்ந்து பார்த்தவன் “பெரிய இந்த பரம்பரை. அது முடியப் போகுதுன்னு கவலை வேற. விடும்மா!”.

“ஏண்டா! நீ அவ்வளவு ஒன்னும் அமைதியானவன் கிடையாது. அப்புறம் என்ன சண்டைக்கு பயந்தவன் மாதிரி பேசுற?”

கையை கழுவிக் கொண்டு எழுந்தவன் “வெளில ஒரு வாக்குவாதம் வந்தா அது அங்கேயே முடிஞ்சு போயிடும். ஆனா வீட்டில் சண்டை போட்டுக்கிட்டு நிம்மதியை இழந்து நிற்கிறது எனக்குப் பிடிக்காது”.

“சரி உன் வழிக்கே வரேன். நான் பார்க்கிற பொண்ணு கூட தான் உனக்கு பிரச்சனை வரும். நீயா பேசி பழகி கல்யாணம் பண்ணிக்கோ”.

“வெளில பழகுகிற கொஞ்ச நேரத்தில் எல்லாம் நல்லா தான் இருக்கும். கல்யாணம் பண்ணிகிட்ட பிறகு பிரச்சனை வரும்”.

மகனை பார்த்து நொந்து போனவர் “ஒரு பிரச்சனையையே பிள்ளையா பெத்து வச்சிருக்கேன்னு இப்போ தாண்டா தெரிஞ்சுகிட்டேன்” என்றார் அலுப்பாக.

அவனோ கண்டு கொள்ளாமல் வாசலை நோக்கி நடந்தவன் “ரொம்ப யோசிக்காம மாத்திரையை போட்டுக்கிட்டு நிம்மதியா படுங்க” என்று விட்டு வெளியேறினான்.

கனகாவின் பார்வை பூஜை அறையை நோக்க, அங்கே முருகன் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

“என்னை சிக்க வைக்க முயற்சி பண்ணின இல்ல. இப்போ தெரியுதா உன் பிள்ளையோட பவுசு. நான் உஷாராகிட்டேன்” என்று கை கொட்டி சிரித்தார்.

தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டார் கனகா.

அறிவோ அன்னையுடன் நடந்த பேச்சு வார்த்தையை மறந்து விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டான். ஓபி நோயாளிகளை பார்ப்பதற்காக தன்னரைக்குச் சென்றமர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.

அன்று நிறைய பேர் வந்திருந்தனர். அவன் ஒரு ஆர்த்தோ டாக்டர் என்பதால் வயதானவர்கள் வந்து காத்திருந்தனர். ஒவ்வொருவரையும் பொறுமையாக பார்த்து அவர்களுக்கு வேண்டிய தீர்வை அளித்துக் கொண்டிருந்தான்.

அதுவொரு தனியார் மருத்துவமனை. அங்கு அவனைப் போன்று நிறைய மருத்துவர்கள் பல துறையை சார்ந்தவர்கள் வந்து நோயாளிகளை பார்ப்பார்கள். காலை நேரமாதலால் மிக பிசியாக இருந்தது. அப்போது மருத்துவமனை வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து நிர்மலா நொண்டிக் கொண்டே இறங்கினார். அவரின் பின்னே பர்சை கையில் எடுத்தபடி இறங்கினாள் மாயா.

இருநூறு ரூபாயை எடுத்து ஆட்டோக்காரரிடம் கொடுக்க “இன்னா கொடுக்கிற? மேல ஒரு நூறு குடு”.

அவ்வளவு தான் காலையில் வண்டியை பிடித்ததில் இருந்து அவன் சொன்னவை தான் பேசியவை என்று ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து பேச ஆரம்பித்தாள். அவனும் விடாது கத்த, கால் வலியுடன் நின்று கொண்டிருந்த நிர்மலா “நான் போறேன் நீ முடிச்சிட்டு வா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மருத்துவமனைக்குள் சென்றார்.

ரிஷப்நிஷ்டிடம் “மூட்டு வலி டாக்டரை பார்க்கணும்?” என்றார்.

“புரியல மேடம்”

“அதான் மா மூட்டு வலிக்கு பார்க்கிறவர். அவரை பார்க்கணும்”.

“ஒ...அறிவு சாரை பார்க்கனுமா? அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கீங்களா?”

“ஏன்மா அறிவு இருக்கான்னு பார்க்கிறதுக்கு எல்லாம் அப்பாயின்மென்ட் வாங்கனுமா என்ன? நானே சொல்லிடுவேனே?”

“மேடம்!” என்று பல்லைக் கடித்தவள் “நான் டாக்டர் அறிவை சொன்னேன்? நீங்க அப்பாயின்மென்ட் வாங்கி இருந்தா பேரை சொல்லுங்க”.

அந்த பெண்ணை ஒரு மாதிரியாக பார்த்து “நான் எதுக்கு சொல்லணும்? அது தான் நீயே அவர் பேரு அறிவுன்னு சொல்லிட்டியே”.

ஓய்ந்து போனவள் “உங்க பேர் என்னன்னு கேட்டேன் மேடம்” என்றாள்.

“ஒ...சரியான மந்தமான பொண்ணா இருக்கம்மா. இதை முதலிலேயே சொல்றதுக்கென்ன.என் பேரு நிர்மலா”.

அவசரமாக தேடி அவரின் டோக்கன் நம்பரை கொடுத்து “இங்கே இருந்து நேரா போய் வலது பக்கம் திரும்பினா ரெண்டாவது ரூம். உங்க நம்பர் முப்பத்து ஒன்பது”.

“வழி சரியா தானே சொல்லி இருக்க? அப்புறம் இந்த முப்பத்து ஒன்பது நம்பர் எனக்கு ராசியில்லை. வேற நம்பர் கொடும்மா”.

மனதுக்குள் ‘ஆத்தாடி! என்ன இப்படி ஒரு கேசுகிட்ட சிக்கி இருக்க’ என்றெண்ணிக் கொண்டு “மேடம்! நம்பரெல்லாம் மாத்த முடியாது. சீக்கிரம் போங்க டாக்டர் பேஷண்டை பார்த்திட்டு கிளம்பிடுவார்” என்று விரட்டினாள்.

அவள் அப்படி சொன்னதும் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு வாசலை ஒரு பார்வை பார்க்க, அங்கே மாயாவோ இன்னமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அதை பார்த்து தலையசைத்துக் கொண்டே “இவ இப்போதைக்கு வர மாட்டா” என்று சொல்லியபடி டாக்டரை பார்க்க அவரின் அறையை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.

அங்கே சென்று பார்த்ததும் அவருக்கு முன்னே பத்து பேர் அமர்ந்திருந்தனர். எரிச்சலுடன் வரிசையில் சென்றமர்ந்து கொண்டார். ஒவ்வொருவராக உள்ளே சென்று வரவும் வாசலை பார்ப்பதும், டாக்டரின் அறையை பார்ப்பதுமாக இருந்தார்.

சற்று நேரத்திற்கு பிறகு மாயா அவர் அருகே வந்தமர்ந்தாள்.

“என்னடி ஆச்சு?”

“உன் காசும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டான் மா”.

அவளை பார்த்து முறைத்தவர் “எப்படித்தான் இப்படியொரு வாயோ?” என்றவர் மனதிற்குள் ‘இவளை கட்டிக்கப் போறவன் சாதுவா இருக்கணும். இல்லேன்னா அவன் பாடு திண்டாட்டம் தான்’ என்றெண்ணிக் கொண்டார்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அந்நேரம் அவரை டாக்டர் அழைப்பதாக சொல்ல இருவரும் உள்ளே சென்றனர்.

“சொல்லுங்கம்மா என்ன பிரச்சனை?”

“ஆட்டோக்காரன் கிட்ட சண்டை போட்டு அவனுக்கு காசு கொடுக்காம வந்திருக்கா டாக்டர்”.

அவர் அப்படி சொன்னதும் அதிர்ந்த முகத்துடன் “நான் அதை கேட்கலம்மா. உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்டேன்?”

மாயாவோ அன்னையை முறைத்துக் கொண்டே “கீழே ரெண்டு தடவை விழுந்ததில் இருந்து மூட்டு வலியால அவஸ்தை படுறாங்க டாக்டர்”.

அவரை அழைத்துச் சென்று அங்கிருந்த படுக்கையில் அமர வைத்து காலை பரிசோதித்துக் கொண்டே “எப்போ விழுந்தீங்க?” என்றான்.

“அது ஆச்சு ஒரு இருபத்தாறு வருஷம் டாக்டர்” என்றதும் மீண்டும் ஷாக்காகி அவரை பார்த்தான்.

மாயாவோ பல்லைக் கடித்துக் கொண்டு “மா!” என்றாள்.

“அந்த மனுஷனை கட்டிக்கிட்டதை சொன்னேன். நாலு நாள் முன்னாடி பாத்ரூமில் விழுந்துட்டேன்”.

மீண்டும் கால்களை அழுத்திப் பார்த்துக் கொண்டே “இரெண்டாவது தடவை எப்போ விழுந்தீங்க?” என்றான்.

“இதோ இவளை பெத்தப்ப தான்” என்றதும் கையை எடுத்துக் கொண்டவன் மாயாவை பார்க்க, அவளோ கடுப்புடன் “மா! அவர் நேத்து விழுந்ததை கேட்கிறார்” என்றாள் பல்லை கடித்தபடி.

அதற்கு மேல் அவரிடம் கேள்விகள் கேட்காமல் பரிசோதித்து என்னென்ன மருந்து கொடுக்க வேண்டும் என்று எழுத ஆரம்பித்தான். தாயும், மகளும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அப்போது படாரென்று கதவை திறந்து கொண்டு வந்த ஒருவன் அறிவை பார்த்து சத்தம் போட ஆரம்பித்தான்.

அவனது அன்னைக்கு கொடுத்த மருந்தில் அவருக்கு மேலும் உடல்நலம் கெட்டு விட்டது என்று அவனை திட்டி, அடிக்கப் பாய்ந்தான். அறிவோ அமைதியாகவே அவனிடம் பேசினான். மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அங்கு வந்துவிட, கத்திக் கொண்டிருந்தவனை குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர். அறிவோ முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது மிக இயல்பாக இருந்தான்.

அதைக் கண்ட தாய், மகள் இருவரும் வெவ்வேறு நிலையில் யோசித்தனர். நிர்மலாவோ இவனை மாதிரி ஒருத்தன் தான் இவளுக்கு லாயக்கு என்றும், அவளோ இவன் என்ன இப்படி எல்லாத்தையும் வாங்கிட்டு இருக்கான் என்றும் யோசித்தனர்.

அவருக்கு தேவையான மருந்து மாத்திரை எல்லாம் எழுதி கொடுத்துவிட்டு அவர்கள் அறையை விட்டு சென்றதும் தானும் வெளியேறினான். நிர்மலாவும், மாயாவும் மருந்துகளை வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்துவிட்டு ஆட்டோ பிடிக்க, சற்று முன்னே சென்றாள்.

அங்கே ஒரு மர நிழலில் நின்று பிரச்சனை செய்தவனுடன் பேசிக் கொண்டிருந்த அறிவை கண்டாள் மாயா. மருத்துவமனையில் அவன் அமைதியாக இருந்ததுக்கும், இங்கே அவனிடம் பேசிக் கொண்டிருந்த அறிவின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை வைத்து சண்டை போடுகிறான் என்பதை புரிந்து கொண்டவள் மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டாள்.

அதே நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த நிர்மலாவை கடந்து சென்ற செவிலிப் பெண்ணை அழைத்தவர் “சிஸ்டர்! உங்க டாக்டருக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்றார்.

அவர் அப்படி கேட்டதும் அவரைப் பற்றி தெரியாமல் “ஏம்மா கேட்குறீங்க? அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல” என்றாள் சிரித்தபடி.

“என் பெண்ணை அவருக்கு பேசலாம்னு தான் கேட்டேன்” என்று குண்டை தூக்கிப் போட்டார்.

அந்தப் பெண்ணோ “என்ன மேடம்?” என்றாள் அதிர்ச்சியுடன்.

“அடடா! என்னவொரு பொறுமை பவ்யம். இவர் தான் என் பொண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை” என்றவர் “அவர் வீட்டு அட்ரஸ் இருந்தா கொடும்மா” என்றதும் பதறி போய் அங்கிருந்து ஓடியே விட்டது.

அந்நேரம் ஆட்டோவுடன் வந்த மாயாவோ “என்னம்மா சொன்ன அந்த சிஸ்டர் அப்படி ஓடுறாங்க” என்று கேட்டுக் கொண்டே அன்னையை ஆட்டோவில் ஏற்றினாள்.

“அந்த டாக்டர் இருக்காரில்ல அவர் வீட்டு அட்ரஸ் கேட்டேன். மாப்பிள்ளை கேட்டுப் போக, அது என்னவோ பயந்து போய் ஓடிடுச்சு”.

அன்னையை பார்த்து “மா! நானும் அதை தானம்மா நினைச்சேன். எப்படியாவது அட்ரெஸ் கண்டுபிடிச்சு கட்டி வச்சிடும்மா”.

அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருந்த ஆட்டோக்காரர் “சீக்கிரம் இதுகளை இறக்கி விட்டுட்டு ஓடிடணும். எனக்கும் கல்யாணம் ஆகலேன்னு தெரிஞ்சா என் வீட்டுக்கு வந்து மாப்பிள்ளை கேட்டாலும் கேட்பாங்க போல” என்றெண்ணிக் கொண்டான்.

பதினைந்து நாட்கள் கழிந்திருந்தது. அன்று காதலர் தினம். கையில் பூங்கொத்துடன் அறிவழகனை காண மருத்துவமனைக்கு வந்திருந்தாள் மாயா. அவனது முகவரியை கண்டுபிடிக்க முயன்று முடியாமல் போக, மருத்துவமனையிலேயே வைத்து தனது காதலை சொல்ல முடிவு செய்திருந்தாள்.

அவனது அறை முன்பு கையில் சிகப்பு ரோஜாவுடன் வந்து நின்றவளை பீதியுடன் பார்த்தபடியே உள்ளே சென்று அவனிடம் சொன்னது அந்த சிஸ்டர்.

அதை கேட்டு புரியாமல் “அவங்களை உள்ளே அனுப்புங்க” என்றான்.

மலர்ந்த முகத்துடன் உள்ளே நுழைந்தவள் கையிலிருந்த பூங்கொத்தை அவனிடம் நீட்டி “ஐ லவ் யூ. வில் யூ மேரி மீ” என்று விட்டாள்.

“தப்பான அறைக்கு வந்துட்டீங்களா மிஸ்? உங்களுக்கு பார்க்க வேண்டிய டாக்டர் அறை எண் எட்டில் இருக்கார். அவரு தான் மூளை கோளாறு எல்லாம் பார்ப்பார்” என்று விட்டான்.

அவன் அப்படி சொன்னதும் உள்ளுக்குள் பல்லைக் கடித்துக் கொண்டவள் “அறிவு உங்களை நான் சின்சியரா காதலிக்கிறேன். இந்த ஜென்மத்தில் நீங்க தான் எனக்கு கணவரா வரணும்”.

அவள் பேசியதில் எரிச்சலடைந்தவன் மெல்லிய குரலில் “லூசா நீ! மரியாதையா இதெல்லாம் எடுத்துகிட்டு கிளம்பு” என்று விரட்டினான்.

அவளோ அவனை வைத்த கண் வாங்காது பார்த்தவள் “நீங்க தான் என் கணவர். எனக்கேத்த ஜோடி நீங்க தான்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

எரிச்சலுடன் சிஸ்டரிடம் பேஷண்டை அனுப்ப சொல்லிவிட்டு பார்க்க ஆரம்பித்தான். அவள் விட்டு சென்ற ரோஜா பூங்கொத்து அறையின் ஓரமாக கிடந்தது. அனைவரையும் பார்த்து முடித்த பின் அந்த பூக்களின் மீது பார்வை விழ, மனதிற்குள் சில்லென்ற உணர்வு. ஏனோ அவளது முகம் நினைவிற்கு வர, இதழில் தன்னையறியாமலே புன்னகை எழுந்தது. அது நாள் வரை யாரும் அசைத்து பார்க்க முடியாத மனதை அவள் அசைத்திருந்தாள். அறைக்குள் காலெண்டரில் அமர்ந்திருந்த முருகனோ “என்னை இத்தனை நாள் வச்சு செஞ்சேல இப்போ இருக்குடி உனக்கு” என்று மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டார்.

அதே நேரம் நிர்மலா அறிவின் வீட்டில் கனகாவின் முன் அமர்ந்திருந்தார். கனகாவிற்கு அத்தனை சந்தோஷம் தன் மகனை மாப்பிள்ளை கேட்டு ஒருவர் வந்திருக்கிறார் என்கிற உற்சாகத்துடன் காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தார்.

காப்பியை ரசித்துக் கொண்டே “மூட்டு வலி பிரச்சனைக்காக உங்க பையனை பார்க்க போனேன் சம்மந்தி. என்னவொரு அருமையான பையன். அப்படியொரு அமைதியான பையனை பார்த்ததே இல்ல. அதனால அப்போவே முடிவு பண்ணிட்டேன். என் பொண்ணுக்கு உங்க பையன் தான் மாப்பிள்ளைன்னு” என்றார்.

அதைக் கேட்டு உற்சாகம் அடைந்த கனகா “எனக்கு நீங்க சொல்றதை கேட்டு சந்தோஷமா இருக்குங்க. ஆனா கட்டிக்க போறவங்களுக்கு விருப்பம் இருக்கனுமேங்க” என்றார் மகனை எண்ணியபடியே.

“அதெல்லாம் சரியா வரும் பாருங்க. கடவுள் இவங்க ரெண்டு பேருக்கும் தான் முடிச்சு போட்டிருக்கான்” என்றார் அழுத்தமாக.

அதன்பிறகு இருவரும் சற்று நேரம் மற்ற விஷயங்களை பேசிவிட்டு, தங்களின் பிள்ளைகளின் சம்மதம் கிடைத்ததும் மேற்கொண்டு பேசலாம் என்று முடிவெடுத்துக் கொண்டனர்.

அன்று வீட்டிற்கு வந்த அறிவின் சிந்தனை அவளை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. தான் அவளை கடிந்து பேசியும் கோவித்துக் கொண்டு சண்டை போடாமல் அமைதியாக சென்ற அவளது நடத்தையே அவன் மனதை பிராண்டியது. இப்படியொரு அமைதியான பொண்ணு நம்ம வாழ்க்கையில் இருந்தால் நிச்சயமாக வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அவனது பூஜை அறையிலிருந்த முருகனோ “குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்” என்று ஆட ஆரம்பித்திருந்தார்.

அடுத்த பத்து தினங்களில் சம்மந்தப்பட்ட இருவரும் தங்களின் சம்மதத்தை தெரிவித்து விட, திருமண வேலைகள் ஜரூராக நடந்தது. வடபழனி முருகன் கோவிலில் வைத்து ஒரு நல்ல நாளில் அவள் கழுத்தில் தாலியை கட்டினான்.

காதல் தேவனின் மலர்கனைளால் ஒரு மாதம் வரை அமைதியாகவே சென்றது. அன்று காலை அறிவு மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருக்க, தானும் ஆபிஸ் செல்ல வேண்டும் என்று கிளம்பி நின்றாள் மாயா.

“நீ இன்னைக்கு ஆட்டோ பிடிச்சு போயிடு மாயா”.

“முடியாது அறிவு. நீங்க தான் என்னை டிராப் பண்ணனும்”.

“இல்லம்மா எனக்கு சர்ஜரி ஒன்னு இருக்கு. நான் சீக்கிரம் போகணும்” என்றவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்த கனகா இருவரையும் மாறி மாறி பார்த்தார். அவர் எதிர்பார்த்த அந்த நாளாக இன்று இருக்குமா என்று கவனித்துக் கொண்டிருந்தார்.

“நீங்க தான் அறிவு கொண்டு விடனும். என்னால ஆட்டோவில் போக முடியாது” என்றாள் கடுப்போடு.

அப்போதும் அமைதியான முகத்துடனே “இல்லம்மா சொன்னா புரிஞ்சுக்கோ. என்னால இன்னைக்கு கொண்டு விட முடியாது” என்றவன் எழுந்து கொண்டான்.

அவனை வழி மறிப்பது போல நின்றவள் “நானும் சொல்லிகிட்டே இருக்கேன் முடியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்” என்றாள் கோபமாக.

அவள் மீது கையை வைத்து லேசாக நகர்த்தி விட்டு செல்லவும் கடுப்பாகி போனவள் “என்ன அறிவு? எனக்கு பதில் சொல்லக் கூட உங்களால முடியலையா?” என்று பாய்ந்தாள்.

அப்போதும் கோபப்படாமல் “ஒரு நாள் போயிட்டு வந்துடு” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.

அவன் சண்டை போடுவான் அதை வைத்து தனக்கு வேண்டியவற்றை எல்லாம் ப்ளான் செய்து கொள்ளலாம் என்றிருக்க, அனைத்தும் புஸ்வானமாக போனதை எண்ணி உள்ளக் குமுறலுடன் ஆபிசிற்கு கிளம்பிச் சென்றாள்.

அதை பார்த்த கனகா “பரவாயில்ல மருமக சமாளிச்சிடுவா. என் மகன் வாழ்க்கை அவன் நினைச்சது போல அமைதியாக தான் போகும்” என்று மகிழ்ந்து கொண்டார்.

அவனும் அதைப் பற்றி தான் நினைத்துக் கொண்டே சென்றான். எந்தவொரு பிரச்சனையிலும் இப்படி அமைதியை கடைபிடித்தா நம்ம வாழ்க்கை சண்டை இல்லாம போயிடும் என்று தன்னை தானே பாராட்டிக் கொண்டான்.

அதைக் கேட்டு காரிலிருந்த முருகனோ “அப்படி எல்லாம் தப்புக் கணக்கு போடாத ராசா. ரோடு எப்படி வேணும்னாலும் போகும். நீ வண்டியில ஏறிட்ட இனி உனக்கு ரோலர் கோஸ்டர் ரைட் தாண்டி” என்று சிரித்துக் கொண்டார்.

மற்றுமொரு மாதம் கடந்திருக்க, சில பல வாக்குவாதம் எழுந்திருக்க அவன் வழக்கம் போல அனைத்தையும் அமைதியாகவே கையாண்டிருக்க மாயா கொலைவெறியாகி போனாள். எதற்குமே அதிகமாக ஒற்றை வார்த்தை கூட பேசாதவனை கண்டு கடுப்பாகி போனது. அவ்வளவு நல்லவனா இவன் என்று கடுப்பானாள்.

அன்றும் அப்படித்தான் அவள் வீட்டு சொந்தத்தில் ஒரு திருமணம் இருக்க, நிர்மலா வந்து கண்டிப்பாக இருவரும் வர வேண்டும் என்று அழைப்பு வைத்துவிட்டு சென்றிருந்தார். மாயாவிற்கு அங்கு செல்வதில் விருப்பம் இல்லை. அவனோ அங்கு செல்வதற்கு தயாராகி இருந்தான்.

“எனக்கு பிடிக்கல நான் வரல”.

அவளை திரும்பி பார்த்தவன் “உங்க வீட்டு விசேஷம் மாயா. நீ போகாம இருந்தா நல்லா இருக்காது”.

“முடியாது!”

அவள் சொன்னதை பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “சரி நீ ரெஸ்ட் எடு. நான் மட்டும் போயிட்டு வந்துடுறேன்” என்று கிளம்பினான்.

“நீங்களும் போக கூடாது”.

அவள் சண்டை போட தயாராகிறாள் என்பதை உணர்ந்தவன் “சரி” என்று சொல்லிவிட்டு சோபாவில் சென்றமர்ந்து விட்டான்.

அதைக் கண்டு கடுப்பானவள் “தெரியாம தான் கேட்குறேன். நீங்க என்ன அவ்வளவு நல்லவரா? கோவமே வராதா? நானும் இந்த ரெண்டு மாசமா பார்க்கிறேன் எதுக்குமே சண்டை போடுறது இல்லை. வெளியில எல்லாம் பேசத் தெரியுது. என்கிட்ட மண்ணாங்கட்டி மாதிரி இருக்க?” என்றாள் கோபமாக.

அவளது பேச்சில் அதிர்ந்தவன் “இல்லம்மா” என்று ஆரம்பிக்கவும் “இந்த அம்மா ஆட்டுக்குட்டி எல்லாம் தூக்கி ஓரமா வை. உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு என்கிட்டே சண்டை போட மாட்டேன்ற?”

“எதுக்கு சண்டை போடணும்? விட்டுக் கொடுத்தா நிம்மதியா இருக்கலாம்”.

“அப்போ நான் உன் நிம்மதியை கெடுக்கிறேனா?”

“அப்படி சொல்லலையே”

“வெளில ஒரு பிரச்சனைன்னா பாயிண்டு பாயிண்ட்டா பேச தெரியுதில்ல? இங்கே மட்டும் ஏன் பேச மாட்டேன்ற?”

அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த கனகாவிற்கு மகனது நிலைமையைக் கண்டு சிரிப்பு தான் வந்தது.

“உன்கிட்ட சண்டை போட்டா வீட்டில் நிம்மதியா இருக்க முடியாதும்மா. அதுக்கு தான் நான் எதுவுமே பேசுறது இல்ல”.

“அப்போ என்கிட்டே பேசுறதுனால உனக்கு நிம்மதி இல்ல?”

“நான் அப்படி சொல்லலையே”.

“வேற எப்படி சொல்ற?”

“இங்கே பாரு மாயா! விட்டுக் கொடுத்தா தான் வாழ்க்கை அமைதியா போகும். அதுக்கு தான் நான் உன் இஷ்டத்திற்கு விட்டுக் கொடுத்திடுறேன்”.

“ஓஹோ! அப்போ நான் உனக்காக விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொல்ற. நான் சண்டை போடுறவ. நீ விட்டுக் கொடுத்து நம்ம உறவை காப்பாத்துற”.

“அப்படி சொல்லல...” என்று இழுத்தவனை “வேற எப்படி சொல்லு? நானும் பார்க்கிறேன் மளிகை கடைக்கு போனா அங்கே சண்டை போடுற. பால் வாங்க போனா அங்கே ஒரு சண்டை. ஆனா என்கிட்டே மட்டும் அப்படியே என்னவோ அவதார புருஷன் மாதிரி ஒரு வேஷம். எதுக்கு இந்த நடிப்பு?”

“என்னது நடிப்பா?”

“ஆமாம் நடிப்பு தான்! என் பொண்டாட்டின்னு உரிமையோட நினைச்சிருந்தா சண்டை போட்டிருப்ப. உனக்கு விருப்பம் இல்லாம என்னை கட்டி இருக்க. அதுனால தான் சண்டை போட மாட்டேன்ற”.

அவள் பேசியதை கேட்டதும் அன்னையின் பக்கம் திரும்பியவனின் பார்வை பரிதாபமாக இருந்தது.

மகன் அருகில் சென்றவர் மெல்லிய குரலில் “குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்டா மகனே. உன்னுடைய கொள்கையை தூக்கி குப்பையில் போட்டுட்டு பதிலுக்கு நீயும் ரெண்டு எகிறு எகிறு அப்புறம் பார் வாழ்க்கை ஜெகஜோதியா இருக்கும்” என்றார்.

அன்னை சொன்னதும் அதை முயற்ச்சித்து பார்ப்போம் என்கிற யோசனையுடன் “ஓவரா பேசுற மாயா. இதுக்கு மேல பேசினா ஓங்கி அறைஞ்சிடுவேன்” என்று அவன் சொல்லி முடிக்கும் நேரம் உள்ளே வந்த நிர்மலா மருமகனை பார்த்து “உங்களை போய் நல்லவர்ன்னு நினைச்சு என் மகளை கட்டிக் கொடுத்தேனே” என்று அழ ஆரம்பித்தார்.

அவனது பேச்சில் மாயா மகிழ்ந்திருக்க, நிர்மலா பேசியதை கேட்டு அவன் நொந்து போய் அமர்ந்து விட்டான்.

குடும்ப வாழ்க்கையில் சண்டையும், சமாதானமும் இல்லாத வாழ்க்கை எது? சண்டையே போட மாட்டேன் என்றாலும் அதை வைத்து ஒரு சண்டை உருவாகும் என்பதை அறியாமல் போனது அறிவின் மதி.

இனி அறிவின் வாழக்கை ஜெகஜோதியாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் கிளம்புவோம்....

வரலாறு முக்கியம் அமைச்சரே!