வரமாய் வந்த வலிகள் - கதை திரி

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-18

சற்று நேரம் அவ்விடத்திலேயே நின்று பார்த்த சுஜாதாவும், கோபியும் சாவித்திரி மீண்டும் ஒருமுறை தேவியை அடிக்க கையை நீட்டும் பொழுது வேகமாக ஓடிவந்து அவரிடமிருந்து தேவியை இழுத்து தள்ளி நிறுத்தினர்.

தள்ளி நிறுத்தியவுடன் சுஜாதா "ராஜ்! இப்ப என்ன நடந்துச்சுன்னு தெரியாம இந்த அம்மா ரொம்ப துள்ளிகிட்டு இருக்காங்க", என்றதிலேயே ராஜீக்கு புரிந்துபோனது. பார்க்கக் கூடாதவர் பார்த்து விட்டார் இதன் பின்னர் நந்தனின் வழக்கில் தான் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று.

அதனால் சுதாரித்துக் கொண்டவராக "ஆகட்டும் மேடம்! இவங்களுக்கெல்லாம் எவ்வளவுதான் சொன்னாலும் புத்தியே வராது. எவ்வளவோ படிச்சு படிச்சு சொல்லி கூட்டிட்டு வந்தேன். இவங்க எல்லாம் பட்டாதான் திருந்துவாங்க", என பொரிந்தவர் "உங்க நேரம் வர்ற வரைக்கும் வெளியில பேசாம உட்கார்ந்து இருங்க", எனக் கூறிவிட்டு அந்த பக்கம் நகர்ந்து விட்டார்.

சுஜாதா தேவியிடம் "அனுசுயா! இப்படியே நேரா போனா கடைசில ரெஸ்ட் ரூம் இருக்கு. போய் கொஞ்சம் முகம் கழுவிட்டு வர்றீங்களா?", எனக் கேட்டார். அவர் கேட்டதற்கு பதிலாக இல்லையென்று தலையாட்டுயவள் இங்கேயே உட்கார்றேன் மேடம் என தன் புடவைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு தரையைப் பார்த்தவாறு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து விட்டாள்.

சுஜாதா ராஜூவிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கிருந்து நகா்ந்து சென்றிருந்த கோபி கையில் ஒரு குளிர்பான பாட்டிலுடன் வந்தவன் சீனியர் இந்தாங்க என அவரிடம் நீட்டினான்.அவனது செயலை பார்வையால் மெச்சியவா் "அனுசுயா! இதை கொஞ்சம் குடிச்சுட்டு ரிலாக்சாகுங்க. இன்னும் அரை மணி நேரத்துல நீங்க உள்ள வந்தா போதும். தைரியமா இருக்கணும்", என அவளுக்கு தைரியம் மூட்டிவிட்டு அவரும் நகர்ந்து விட்டார்.

இவர்களின் முறை வரும்பொழுது உள்ளே சென்றதும் அங்கே அமர்ந்திருந்த பெண் நீதிபதி அனுசுயாவை பார்த்த பார்வையில் பரிதாபம் நன்றாகவே தெரிந்தது. பின்னர் அந்த வழக்கின் சாராம்சத்தை படித்தவர் முதலில் சாவித்திரியிடமும் நந்தனிடமும் விசாரிக்குமாறுக் கூறினார்.

நந்தன் கூண்டில் ஏறிய உடன் அவனிடம் உறுதிமொழி பெற்றபின் சுஜாதா தன்னுடைய விசாரணையை ஆரம்பித்தார். "நந்தன்! நீங்க என்னுடைய கட்சிக்காரர் அனுசுயா தேவியை வார்த்தைகளாலும், உடல் ரீதியாகவும் உங்க அம்மா கூட சேர்ந்து கொடுமைப் படுத்தியிருக்கீங்க. உங்களோட குறையை மறைப்பதற்காக அவங்களை ஐவிஎஃப் டீாிட்மெண்ட்ல வேறு ஒரு டோனார் மூலம் குழந்தை பெத்துக்க சொல்லி நீங்க கட்டாயப்படுத்தியிருக்கீங்க. ஏன் அந்த மாதிரி செஞ்சீங்க?", என வினவினார்.

சுஜாதாவின் கேள்விகளில் உள்ளே கொதித்தாலும் அதனை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாத நந்தன் "நான் எப்பவுமே அவளை கொடுமை படுத்தியதுக் கிடையாது மேடம்! அவ ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்துகிட்டு எங்க மேல பழியை தூக்கிப் போடுறா. அவளுக்கு குழந்தை இல்லை. அதுல கொஞ்சம் மனநிலை சரியில்லாமப் போயிடுச்சு. அதனாலதான் இந்த மாதிரி எல்லாம் நடந்துக்குறா", என அபாண்டமாக பழி சுமத்தினான்.

ராஜ் தனக்குள்ளேயே சொதப்பிட்டான் என முனகிக் கொண்டபோது சுஜாதா சாவித்திரியை கூண்டில் ஏற்றினார். அவரிடம் உறுதிமொழி பெற்றபின்னர் சுஜாதா தனது கேள்விகளை தொடங்கும் முன்னரே சாவித்திரி "நான் பொதுவா ஒரு வார்த்தை அதிர்ந்து கூடப் பேச மாட்டேங்க. இவளை ஊரெல்லாம் பார்த்து பார்த்து என் மகனுக்கு கட்டி வச்சது இல்லாம இன்னிக்கு எங்களை நடுத்தெருவுல நிக்க வச்சு ஊரெல்லாம் கைகொட்டி சிரிக்கிற மாதிரி ஆக்கிட்டா.

என்னை பார்த்தாக் கொடுமைப் படுத்துற மாதிரியா இருக்கு?", என வராதப் கண்ணீரை தனது முந்தானையால் துடைத்துக் கொண்டதில் அம்மாடி என்ன நடிப்பு என சுஜாதாவே அசந்து போனார்.

சாவித்திரியின் வார்த்தைகளுக்கு சுஜாதா பதில் கேள்வி எழுப்பும் முன்னர் நீதிபதி "ஒரு வார்த்தை அதிர்ந்து கூட பேசாத நீங்க ஏன் கோா்ட்ல வச்சு அந்த பொண்ணை கை நீட்டி அடிச்சிங்க?", என வினவினார். சாவித்திரி தேவியை பேச ஆரம்பிக்கும்போதே அந்தப்பக்கமாக வந்திருந்த நீதிபதி என்ன சத்தம் என முதலில் ஆட்களை விட்டு அப்புறப்படுத்த தான் நினைத்தார்.

ஆனால் சாவித்திரியின் ஆங்காரத்தையும், அவர் தேவியை அறைவதையும் பார்த்ததில் இந்த லேடியை தூக்கி உள்ளே வைக்கனும் முதல்ல என்ற எண்ணமே அந்த நீதிபதிக்கு தோன்றியிருந்தது. நீதிபதி இந்த காட்சியை பார்ப்பதை பார்த்துதான் சுஜாதா கோபியையும் தடுத்து நிறுத்தி இருந்தார்.

ராஜூக்கும் வார்த்தைகளால் தெரியப்படுத்திவிட்டார். இப்போது நீதிபதி கேட்ட உடன் சாவித்திரி அவரே நேரில் பார்த்து உள்ளார் என்பதை புரிந்து கொள்ளாமல் அப்போதும் தனது வாயை விட்டார். "நீங்க வேறங்க, இந்த மூதேவி கண்ணீர்விட்டு எல்லாரையும் நம்ப வெச்சுகிட்டு இருக்கா.

இவ நீலிக்கண்ணீர்ல நீங்க மயங்கிடாதீங்க. இதுக்கு முன்னாடி வந்த ஜட்ஜ் தான் ஆம்பள ஜட்ஜு. பொம்பளைங்க நீலிக்கண்ணீரை பார்த்தவுடனே அதை நம்பி கேஸை தள்ளி வச்சுட்டாரு. உங்களுக்கு தெரியாதா? இந்த சனியனை வீட்டுல எப்படி எல்லாம் பார்த்துக்கிட்டேன் தெரியுமா? அந்த நன்றியெல்லாம் மறந்துட்டு திரியுறா...இவளுக்கு எல்லாம் நல்ல சாவா வரும்னு நினைக்கிறீங்க. நல்ல சாவே வராது மேடம்.

நீங்க பார்த்து இவ எங்க மேல பொய் கேஸ் போட்டு இருக்கான்னு சொல்லி தீர்ப்பு எழுதி இவளை சந்தி சிரிக்க வையுங்க", என தான் கோர்ட்டில் இருக்கிறோம் என்பதையும் மறந்து சாவித்திரி பேசியதில் சுஜாதா சிரிப்புடன் தன்னிடத்தில் வந்தமர்ந்துவிட்டார சுஜாதா கேட்க வேண்டிய கேள்வியை நீதிபதியே சாவித்திரியிடம் யாரை சனியன்னு சொல்றீங்க எனக் கேட்டார்.

"இந்தா உட்காா்ந்து இருக்காளே! இவ அப்பனும், ஆத்தாளும் அனுசுயாதேவினு நீட்டி ஒரு பேரு வச்சிருக்காங்க. அந்த காலத்துல புருஷனையே ஏமாத்துனாளாம் அனுசுயா தேவி. அவ பேரு வச்சா இவ மட்டும் எப்படிப்பட்டவளா இருப்பா?", என அப்பொழுதும் நீதிபதி கேட்ட கேள்வியின் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் சாவித்திரி தனது தொனியிலேயே பதில் கூறினார்.

"அவங்களைப் பெயர் சொல்லி நீங்க கூப்பிட்டது கிடையாதா?", என சாவித்திரியிடம் வினவிவிட்டு அவரின் பதிலை எதிர்பார்க்காமல் தேவியிடம் திரும்பி "உங்களை எப்பவும் இப்படி தான் கூப்பிடுவாங்களாமா?", என வினவினார்.

மறுபுறம் எழுந்துநின்ற தேவி ஆமாம் என தலையாட்டினாள். நீங்க அப்படி கூப்பிடாதீங்கன்னு சொன்னது கிடையாதா என தேவியிடம் வினவியதற்கு இல்லை மேடம் என்றாள். ஏன் அப்படி சொல்லலை உங்களோட உரிமையை நிலைநாட்டாம ஏன் விட்டீங்க எனக் கேட்டவுடன் "நான் எதாவது ஒரு வார்த்தை பதில் பேசினா எங்க அம்மா, அப்பாவை ரொம்ப திட்டுவாங்க மேடம்! அதனால நான் பதில் பேச மாட்டேன்", என அப்பொழுதும் தேவி அமைதியாகவே பதில் கூறினாள்.

இருபுறமும் பார்த்தவர் சுஜாதாவை நோக்கி வேறு ஏதேனும் சொல்லனுமா என்ற கேள்வியை வைத்தார். "எங்க சார்பா சாட்சிகள் இருக்காங்க மேடம்!கோா்ட்ல சப்மிட் பண்றதுக்கு அனுமதி கொடுங்க", என சுஜாதா பதில் கூறியவுடன் "அடுத்த மாசம் அஞ்சாம் தேதி வழக்கு ஒத்தி வைக்கிறேன்", என கூறிய நீதிபதி அடுத்த ஹியாிங்கில் வாதி சார்பாக சாட்சிகள் விசாரிக்கப் படுவர் என எழுதிவிட்டு அடுத்த வழக்கினை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

அடுத்த வழக்கிற்கானவர்கள் உள்ளே வர ஆரம்பித்த பொழுதும் சாவித்திரி அவ்விடத்தை விட்டு நகராமல் நந்தனிடமும், ராஜிடமும் "என்னது இந்த ஜட்ஜ் எதுவுமே சொல்லாம தேதியை மட்டும் ஒத்தி வச்சுக்கிட்டு இருக்காங்க. இதுக்கு எப்பதான் விடிவு காலம் தெரியறது? இந்த சனியன் மூஞ்ச நான் இன்னும் எத்தனை நாளைக்குதான் திரும்பத் திரும்ப பார்க்குறது?", என கத்திக் கொண்டிருந்தார்.

வேறு வழியின்றி நந்தன் தன்னுடைய தாயின் கையை பிடித்து இழுத்து வந்து வெளியே நிறுத்தினான். வெளியே வந்த பின்னரும் சாவித்திரியின் வாய் மூடுவதாக இல்லை. ராஜிடம் திரும்பி "காசு மட்டும் நீங்க கணக்கு வழக்கில்லாமல் வாங்குறீங்க... ஒத்த கேள்வியும் கேட்கலை.ஒரு வாா்த்தை பதிலும் பேசலை.அந்த ஜட்ஜு கேஸை தள்ளி வைக்கிறேன் அப்படின்னு சொல்றப்ப இன்னிக்கே முடிச்சுடுங்கன்னு சொல்லிருக்கலாம் இல்லை.

காசு எவ்வளவு கொடுக்குறோம்", எனக் கூறினார். நந்தனைப் பார்த்த ராஜ் "உங்க விவாகரத்து கேஸை மட்டும்தான் இனி நடத்துவேன். இனிமே அடுத்த ஹியரிங்ல இருந்து இந்த கேஸுக்கு நான் ஆஜராக முடியாது. உங்க அம்மா இன்னைக்கு செஞ்சி வச்ச வேலைக்கே உங்களை எத்தனை வருஷம் உள்ளே தூக்கி வைப்பாங்கன்னு தெரியாது. ரெடியா இருந்துக்கோங்க. விவாகரத்து கேஸ் விஷயமா ஏதாவது பேசணும் அப்படின்னா எனக்கு போன் பண்ணுங்க. இந்த கேஸ் விஷயமா என்னை தொந்தரவு பண்ணாதீங்க. நீங்க எக்கேடோ கெட்டு ஒழிங்க", எனப் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.

மீண்டும் வாயை திறக்க போன சாவித்திரியை வாயை மூடுமா என நந்தன் கோபத்துடன் கூறினான். அவன் கோபத்துடன் கூறிய பின்னர்தான் "நான் என்னடா பண்ணுனேன்? நான் உன் நல்லதுக்குதானே எல்லாமே பண்றேன்", என சாவித்திரி பதிலுரைத்தார். "எதுவா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்கலாம். நீ பேசாம என்கூட வா", என அவரை மீண்டும் தரதரவென கையை பிடித்தவாறு இழுத்துக்கொண்டே நந்தன் தன்னுடைய காருக்கு அழைத்துச் சென்றான்.

வரும் வழியில் தேவியைப் பார்த்து மீண்டும் வாயைத் திறக்க போன சாவித்திரியிடம் நந்தன் "வாயை திறந்த நீ யாருன்னே தெரியாதுன்னு விட்டுட்டு போயிடுவேன்.பேசாம வந்து சேரு", எனக் கூறியதில் சாவித்திரியும் அவளைப் பார்த்து முறைத்தவாறு காரில் ஏறி விட்டார்.

சாவித்திரியை மீண்டும் கண்ட தேவி சற்று நடுங்கி போய் இருந்தாள் அங்கே வந்த சுஜாதா சிரித்துக்கொண்டே "அனுசுயா! நீங்க கவலையேப்படாதீங்க. உங்க முன்னாள் மாமியாரும், உங்க முன்னாள் கணவரும் கம்பியை எண்ணுறது கன்ஃபார்ம். அதுல எந்தவித சந்தேகமும் கிடையாது. கஷ்டப்பட்டு சாட்சிக் கொண்டு வந்து என்ன நடக்குமோ ஏது நடக்குமோனு யோசிச்சிட்டு இருக்கனும்.

ஆனா இன்னைக்கு அவங்க உங்களை அடிச்சது ஒரு வகையில நம்மளுக்கு வலுவான சாட்சியமா மாறிடுச்சு. அதுவும் ஜட்ஜ் நேராவே பாா்த்துட்டாங்க. நீங்கள் வேற எதையும் யோசிக்காம கவலைப்படாம இருங்க. நீங்க போயிட்டு வந்த டாக்டர் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க. எப்ப ஸ்கேன் பண்ணப் போறீங்க?", என வினவினார்.

நாளைக்கு போகலாம்னு இருக்கேன் மேடம் என்றவள் அதனை எழுதி வைத்திருந்த பேப்பரை அவரிடம் காட்டினாள். அதனை பார்த்தவர் "சரிமா! பத்திரமா போயிட்டு வாங்க. கோபிகிட்ட சொல்லி உங்களுக்கு கேப் அரேஞ் பண்ண சொல்லி இருக்குறேன். வந்ததுக்கப்புறம் கிளம்புங்க", என நகரப் போனவர் அவளது முகத்தில் ஆங்காங்கு தோலுரிந்து இருப்பதை பார்த்து இது என்னது அனுசுயா என வினவினார்.

"அவங்க அடிச்சதுல காயம்பட்டுடுச்சா", என அவர் சந்தேகத்துடன் வினவிட "இல்லை மேடம்! எனக்கு ஒரு மாதிரி தோலெல்லாம் அரிக்குது. அதோட தோல் உறிஞ்சிகிட்டே வருது.உடனே அந்த இடமெல்லாம் கருப்பாகிடுது. உடம்பு முழுக்க இப்படிதான் இருக்கு மேடம்!", என தேவி பதில் கூறினாள். டாக்டரை பார்க்கலையா என சுஜாதா வினவியதற்கு தேவி "முதல்ல கைனகாலஜிஸ்ட் பார்த்துட்டு அதுக்கடுத்து பார்க்கலாம்னு இருந்தேன் மேடம்!ரொம்ப அரிக்குது. நாளைக்கு ஸ்கேன் பண்ணி முடிச்சுட்டு இதுக்கும் பார்க்க போறேன்", என்றாள்.

அவள் கூறிய விதமே ஐயோ பாவம் என்பது போல்தான் இருந்தது சுஜாதாவிற்கு ."சரி உடம்பை பத்திரமா பாா்த்துக்கோங்க. ஏதாவது உதவி வேணும் டாக்டரைப் பாக்கப் போறப்ப அப்படின்னா போன் பண்ணுங்க. யாரையாவது எனக்கு தெரிஞ்ச நம்பிக்கையான ஆட்களை உங்க கூட அனுப்பிவிடுறேன். தனியாக வருத்தப்படாதீங்க", என சுஜாதா ஆறுதல் அளித்து விட்டு உள்ளே நுழைந்துவிட்டார்.

கோபியும் புக் செய்திருந்த கேப் வந்தவுடன் அதில் தேவியை ஏற்றி அனுப்பிவிட்டு சுஜாதாவிடம் வந்த பொழுது அவர் ராஜிடம் பேசிக் கொண்டிருந்தார்.

கோபி அருகில் வரும்பொழுது ராஜ் சுஜாதாவிடம் "நான் சொன்னதை நல்லா யோசிங்க மேடம்! ரெண்டு பேருக்குமே இது லாபம்தான். யோசிச்சிட்டு கால் பண்ணுங்க", எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்

சுஜாதாவிடம் கோபி "இவர் என்ன மேடம் உங்ககிட்ட யோசிக்க சொல்லிட்டுப் போறாரு? அதுவும் ரெண்டு பேருக்கும் லாபம்னு சொல்றாரு. இவரு கூட சேர்ந்து நீங்க எப்ப பிசினஸ் ஆரம்பிச்சிங்க", என நக்கலாக வினவினான்.

"இந்த கேஸ்ல தோத்து போய்டுவாருனு நல்லா தெரிஞ்சு போயிருச்சு. அதனால நந்தன் பக்கம் என்ன நடக்குது அப்படிங்கிறதை சொல்றேன்.அனுசுயா தேவியோட நகைகள், பணம் எல்லாம் அவங்களுக்கு வாங்கித் தந்ததக்கு அப்புறம் அதுல 5% எனக்கு கொடுத்துடுங்க அப்படின்னு பேரம் பேசிட்டுப் போறாரு", என ராஜின் பேரத்தைப் பற்றி சுஜாதா கோபியிடம் கூறிக்கொண்டே தன்னுடைய அலுவலக அறைக்குள் நுழைந்தார்.

அதன் பின்னர் அப்பேச்சுவார்த்தையை பற்றி கோபியும் வினவிடவில்லை, சுஜாதாவும் எதுவும் கூறவில்லை. வீட்டிற்கு சென்ற நந்தன் சாவித்திரியிடம் "உன்னை யாரு கோர்ட்ல வச்சு அந்த மூதேவியை அடிக்கச் சொன்னது? அந்த வக்கீல் அவ்வளவு சொன்னான் இல்லையா? நானும் சொல்லிதானே கூட்டிட்டுப் போனேன். அங்க வந்து நீ ஏன் உன்னோட வாயைவிட்ட? நீ அடிச்சதை அந்த ஜட்ஜ் வேற பார்த்து தொலைச்சிட்டாங்க.

அவங்க அதை கேள்வியா கேட்கிறது புரியாம நீ திரும்ப திரும்ப அவளை திட்டிக்கிட்டு இருக்க. அவ பேரை சொல்லியாவது திட்டியிருக்கலாமே! அதை விட்டுட்டு சனியன், சனியன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்ற. இதெல்லாம் நமக்கு எதிராதான் திரும்பும்னு உனக்கு ஏன் தெரியலை. நீ இவ்வளவு சொத்து சேத்து வச்சு என்ன பிரயோஜனம்?

இத்தனை வருஷம் எனக்காக எல்லாம் செய்ற அப்படின்னு சொல்லி தான் நான் உனக்கு எதிரா பேசுனதே கிடையாது. நீ என்ன செஞ்சாலும் அது என்னோட நல்லதுக்கு மட்டும்தானு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இன்னைக்கு நீ செஞ்சிட்டு வந்த வேலையால என்ன நடக்கும்னு தெரியாது. உன்னை ஏன் கூட்டிட்டு போனேன்னு இருக்கு. உனக்கு கை கால் உடைஞ்சு போச்சுனு சொல்லி வீட்ல விட்டுட்டு போயிருக்கலாம்", என அத்தனை நாள் தாயிடம் காட்டியிராத தன் சுயரூபத்தைக் காட்ட சாவித்திரி நொந்து தான் போனார்.

"என்னடா இப்படி பேசுற! இப்போவும் உன்னோட நல்லதுக்காகதான்டா நான் எல்லாத்தையும் செஞ்சுகிட்டு இருக்கேன். நான் சரியாதான் பேசுனேன்", என சாவித்திரி அப்போதும் தான் பேசியதிலிருந்த தவறை உணரவில்லை.

"ஏன்டா! அந்த நகை, காசுக்காகதானடா இந்த கேசு. இப்ப அதை கொடுக்க தேவையில்லைதானே", என சற்று நேரம் பொருத்து நந்தனிடம் வினவிட அவனோ அவரை பார்வையாலேயே எரித்துக் கொண்டிருந்தான்.

"அது அந்த விவாகரத்துக்கு கேஸ்லதான் நகை, பணம் எல்லாமே கொடுக்கிறதை பத்தி வரும். இது குடும்ப வன் கொடுமைச் சட்டத்தின் கீழ அவளை நாம கொடுமைப்படுத்துறதா கேஸ் கொடுத்தாதா இல்லையா அதுக்குதான் இன்னைக்கு போனோம். நான் இன்னைக்கு உனக்கு படிச்சு படிச்சு சொன்னேன். அந்த வக்கீலும் சொல்லி தொலைச்சான், உங்க அம்மா வாயை திறக்கக்கூடாதுனு. எல்லாம் முடிஞ்சு போச்சு.

நீ செஞ்சதுல இப்ப நாம கொடுமைப்படுத்துனோம் அப்படிங்கறது ஏறத்தாழ உறுதியாகிடுச்சு.அந்த ஜட்ஜ் வேற அவ மூஞ்சை பார்த்துட்டு ஐயோ பாவமா இருக்குனு அவளை பார்த்து பரிதாபப்படுது. நீ அதையெல்லாம் கண்டுக்காம இஷ்டத்துக்கு பேசிகிட்டு இருக்க. இதுக்கு மட்டும் நமக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் இருக்கட்டும், அம்மான்னு கூட பாா்க்க மாட்டேன்", என நந்தன் தன் கையில் இருந்த போனை விசிறி அடித்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று விட்டான்.

சாவித்திரிக்கு தான் செய்தது தவறு என புரியவில்லை என்றாலும் இந்த வன்கொடுமை சட்டத்தில் ஏதாவது நடந்துவிட்டால் என நந்தன் கூறியதும், ராஜ் கோா்ட்டில் கம்பி எண்ணப் போவது உறுதி என்றுக் கூறியதும் அவாின் மனதில் அச்சத்தை விளைவிக்க ஆரம்பித்திருந்தன.

வெளியே சென்ற நந்தன் வேறு எங்கும் செல்லாமல் நேராக ராஜின் அலுவலகத்திற்கு சென்று அமர்ந்துகொண்டான். அவர் மாலை தான் வருவார் என தெரிந்தாலும் அங்கேயே அமர்ந்தவன் வேறு எங்கும் நகரவில்லை.

அவனின் மனம் பலவிதங்களில் அலைப்புற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுதும் தன்னுடைய நிலை என்ன ஆகுமோ என்று யோசித்தானே தவிர தேவிக்கு அவன் செய்த கொடுமைகள் அனைத்தும் தவறு என ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை. மனிதனாக பிறந்தவன் தான் செய்யும் தவறை நினைத்து ஒரு நொடியேனும் வருந்தவேண்டும். ஆனால் நந்தன் சாவித்திரி போன்றவா்கள் மனிதர்களுக்கு அப்பாற்பட்டவர்கள் போன்றே நடந்து கொள்வது இயற்கையின் நியதியன்றி வேறென்ன?

மாலை தனது அலுவலகத்திற்கு வந்த ராஜ் நந்தன் அமர்ந்திருப்பதைப் பார்த்து முதலில் நெற்றியை சுருக்கி யோசித்தவர் அவனின் ஓய்ந்த தோற்றத்தை கண்டு பல மணி நேரமாக அமர்ந்திருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்டார். அதனையே அலுவலகத்தில் இருக்கும் கிளாா்க் ஒருவரும் உரைத்திட இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டும் எனக் கூறிவிட்டு ஏறத்தாழ ஏழு மணி போல்தான் நந்தனை சந்தித்தார்.

"சொல்லுங்க நந்தன்! என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க?", எனக் கேட்டதும் "சார்! இன்னிக்கு நடந்தது நான் எதிர்பார்க்காதது. அம்மா இப்படி பண்ணுவாங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கைல. இப்ப தப்பு நடந்து போச்சு, அதை சரி பண்ணனும். அதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க. என்னால முடியாதுனு மட்டும் சொல்லிடாதீங்க. இப்போதைய நிலைமைக்கு நீங்க மட்டும்தான் எனக்கு உதவி பண்ண முடியும்", என நந்தன் பேசியதைக் கேட்டவர் அந்த அறையே அதிருமாறு சத்தமாக சிரித்தார்.

"உங்க அம்மா செஞ்சது திருத்திக்குற தப்புக் கிடையாது. நான் மட்டும் அந்த இடத்துல இருந்திருந்தா அப்படி ஒரு விஷயமே நடக்கலைனு என் கட்சிக்காரர் உங்களுக்காக சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேன். ஆனால் பார்த்தது ஜட்ஜ். அவங்ககிட்ட போய் நீங்க பொய் சாட்சி சொல்ல முடியுமான்னு கேட்டா என்ன நினைப்பாங்க? ஒண்ணுமே பண்ண முடியாது இந்த கேஸ்ல", என்று ராஜ் நந்தனுக்கு அவனுடைய அப்போதைய நிலைமையை விளக்கிட தன் தலையில் கைகளிரண்டையும் வைத்து தலையை குனிந்து கொண்டான்.

சிறிது நேரம் கழித்து தலைநிமிர்ந்தவன் "இந்த மாதிரி கேஸ்ல என்ன தண்டனை கொடுக்க வாய்ப்பிருக்கு சார்?", என வினவினான். "சாதாரணமா உங்களுக்கு அபராதத்தோட முடிச்சிடலாம்னு எதிர்பார்த்துட்டிருந்தேன். உங்க முன்னாள் மனைவியோட வக்கீல் வேற சாட்சி கொண்டு வர்றேனுச் சொல்லி இருக்காங்க. அந்த காட்சி யாருன்னு தெரியுமா உங்களுக்கு?", என ராஜ் கேட்டிட இல்லை என்று நந்தன் பதிலளித்தான்.

"உங்களுக்கு இந்த கேஸ்ல சிறை தண்டனை கிடைக்குறதுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கு உங்களுக்கு மட்டும் இல்லை, உங்க அம்மாவுக்கும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கு", என ராஜ் உரைத்ததும் " என்ன ஜெயிலா? சார்! ஜெயிலுக்குலாம் போனா என் வேலை சுத்தமா பறிபோய்டும். அதுக்கு அடுத்து நான் எங்கேயும் வேலைக்கு சேர முடியாது. இது என்னோட கேரியர்ல ஒரு பெரிய பிளாக் மார்க்", என நந்தன் பதறிப் போனான்.

அவனது வார்த்தைகளை கேட்டு சிரித்துக்கொண்டே "வாழ்க்கையேப் போய் ஜெயில் கம்பி எண்ண போறீங்கன்னு சொன்னா நீங்க பிசாத்து வேலையை பத்தி கவலைப்படுறீங்க. முதல்ல ஜெயிலுக்கு போகாம தடுக்குறதுக்கு வழி என்னன்னு கேட்டீங்கன்னா நீங்களும் கொஞ்சம் புத்திசாலினு நினைச்சிருப்பேன். உங்க அம்மாவை விட நீங்க பெரிய முட்டாளா இருக்கீங்களே", என ராஜ் கூறியதும் நந்தன் சற்று சிந்திக்க ஆரம்பித்தான்.

ராஜ் தன்னை முட்டாள் என்று கூறியதும் நந்தனுக்கு உள்ளே ஆத்திரம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "வருமானம் வழியாச்சே சார்! அதனால முதல்ல அதை பத்திதான் எண்ணம் போகுது. சரி விவாகரத்துக் கேஸ்ல அவ என்னை இம்பொட்டண்ட்னு சொன்னது பொய்னு நிரூபிக்க ஒரு டெஸ்ட் எடுக்கணும் சொன்னீங்க இல்லையா சார்! சொல்லுங்க எங்க டெஸ்ட் எடுக்கணும்? எப்படி எடுக்கணும்? சொல்லுங்க. நான் அதுக்கான டெஸ்ட் எடுத்துட்டு வந்துர்றேன். என்ன ஆனாலும் பரவாயில்லை சார்! இந்த கேஸ்ல வேறு ஏதாவது வாய்ப்பு இருக்கும் தப்பிக்கிறதுக்கு. உங்களுக்கு தெரியாம இருக்காது. அதையும் நீங்க சொல்லுங்க", என நந்தன் மிகத் தெளிவாக கூறியவுடன் ராஜ் இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் என மனதில் எண்ணி கொண்டவராக அவனிடம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தார்.

" நந்தன்! நீங்க டெஸ்ட் எடுக்க தேவையில்லை. டெஸ்ட் எடுக்காமலேயே எடுத்த மாதிரி நாம சர்டிபிகேட் வாங்கி கொடுத்துடலாம். அது ஒரு பெரிய பிரச்சினையே கிடையாது. ஆனா நம்ம சர்டிபிகேட் கொடுத்ததுக்கப்புறம் உங்க முன்னாள் மனைவியோட வக்கீல் அதில் எங்களுக்கு நம்பகத்தன்மை இல்லை அப்படின்னு சொல்லி ஆட்சேபிக்குற பட்சத்துல ஜட்ஜ் சொல்ற ஹாஸ்பிடல்லதான் நாம டெஸ்ட் பண்ணுற மாதிரி இருக்கும்.

அப்பவும் நாம காசு கொடுத்து நமக்கு சாதகமா மாத்திக்கலாம். இந்த கேஸ்ல உங்களுக்கு ஜெயிலுக்கு போகணும் இல்லைனா அதற்கான அபராதத் தொகையும் சொல்லி கட்ட சொல்லுவாங்க", என ராஜ் கூறிக்கொண்டிருக்கும் போதே நந்தன் இடையே புகுந்து தன்னுடைய கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தான்.

"ஏற்கனவே இதுல அபராதம் போடுவாங்கன்னு சொன்னீங்க இல்லையா? இப்ப சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் சொல்றீங்க. எது சார் வந்து தண்டனையாக இருக்கும்?", என வினவியதும் ராஜ் முகத்தை கடுப்பாக வைத்துக் கொண்டு "சொல்லி முடிக்கிற வரைக்கும் நீங்க எதுவுமே இடையில பேசாதீங்க", எனக் கூறினார்.

"இப்ப உதாரணமா உங்களுக்கு மூணு வருஷம் சிறை தண்டனை பிளஸ் ஒரு பத்து லட்ச ரூபா அபராதம் போடுறாங்க அப்படின்னா இன்னொரு வாய்ப்பா அதுல அந்த மூணு வருஷம் சிறை தண்டனைக்கு பதிலாக ஒரு தொகையை அபராதமா கட்ட சொல்லுவாங்க. அது சாதாரணமா நடக்கிறதுதான். வசதியானவங்க எல்லாம் ஜெயிலுக்கு போறதுக்கு பதிலா அதுக்கு ஒரு பைன் கட்டிட்டு வெளிய போய்கிட்டே இருப்பாங்க. ஆனா அதுக்கான ஆப்ஷன் ஜட்ஜ் குடுக்கணும். கொடுக்கலைன்னா ஒண்ணுமே பண்ண முடியாது. உங்க கேஸ்ல கொடுக்குறதுகடகான வாய்ப்புகள் ரொம்பவே கம்மி.

இனி அந்த சுஜாதா மேடம் யாரை கொண்டு வந்து சாட்சியமா நிறுத்தப் போறாங்கன்னு எனக்கு தெரியலை. உங்க முன்னாள் மனைவியோட சைடுல இருந்து யாராவது அவங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல வருவாங்களா?", என ராஜ் தண்டனை பற்றி விளக்கிகட கூறியதுடன் தன் வினாவினை அவனிடம் தொடுத்தார்.

அதற்கு நந்தன் " அவ சொந்த பந்தம் எல்லாம் எங்க அம்மா பேச்சைக் கேட்டுபிட்டு அவகிட்ட பேச்சுவார்த்தை வச்சுக்கிறதுக் கிடையாது. அப்படி இருக்க அவ பக்கத்திலிருந்து சாட்சி சொல்ல எவன் வருவான்? அவ வக்கீல் ஏதாவது சாட்சி விலை கொடுத்து வாங்குறாங்களானு பாருங்க சார்!", என அசால்ட்டாக பதில் கூறினான்.

ஆனால் ராஜூக்கு மிக நன்றாகவே தெரிந்திருந்தது சுஜாதா அந்த மாதிரி வேலைகளை செய்யக் கூடியவர் அல்ல என்பது. எனினும் அதனை பற்றி நந்தனிடம் ஏதும் கூறாமல் "அவங்க உங்க மேல பொய்யான கேசை போட்டுருக்காங்க .பொய்யான புகார் சுமத்தி உங்களோட மானத்தை வாங்கிவிட்டாங்கன்னு சொல்லி அவங்க கிட்ட இருந்து என்னால மான நஷ்ட ஈடு வாங்கித்தர முடியும்.

ஆனா அதுக்கு பதிலா உங்க முன்னாள் மனைவி போட்டுட்டு வந்த நகை, பணம் இது எதையுமே நீங்க திருப்பி கொடுக்க விடாமல் செஞ்சு தா்றேன். அதிலிருந்து எனக்கு 35% நீங்க கமிஷன் தருவதாய் இருந்தால் மட்டுமே நான் அப்படி செய்வேன். இல்லைனா அவர் சொன்னது பொய் அவ்வளவுதான் அப்படிங்கறதை நிரூபிச்சுட்டு நான் விலகிடுவேன்", என ராஜ் தன்னுடைய நிலைப்பாட்டை மிக்க கைதேர்ந்த வியாபாரியாக பேசி முடித்தார்.

35% ஆ என மனதினுள் கணக்கிட்ட நந்தன் மொத்தமாய் எல்லாமே அவ கைக்கு போறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என எண்ணியவனாக "சரி சார்! நீங்க அதற்கான ஏற்பாட்டை பாருங்க. இப்ப ஹாஸ்பிடல் சர்டிபிகேட் வாங்குறதுக்கு நான் உங்களுக்கு எவ்வளவு பணம் தரனும்னு சொல்லுங்க", என ராஜ் வினவும் முன்னரே நந்தன் அவரிடம் விலை பேசினான்.

தேறிட்டான் என மனதினுள் எண்ணியவராக அதற்கான ஒரு தொகையை அவனிடம் கூறி மறுநாள் கொண்டு வந்து கொடுத்த பின்னர் மருத்துவமனை அறிக்கை வாங்கி தருவதாக உறுதி அளித்தார். இதில் ராஜ் இருபக்கமும் லாபம் சம்பாதிப்பதற்காக மிக தேர்ந்த வியாபாரியாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை நந்தன் உணரவில்லை.

மெத்தப் படித்த மேதாவியாக இருந்தாலும் சில நேரங்களில் சறுக்கல் மனிதனை மேலிருந்து கீழாக சட்டென்று இழுத்து வரும் என்பதை உணராமல் இருப்பதற்கு நந்தனும் ஒரு உதாரணம்தான்.

நந்தனின் பணமும்,ராஜின் செல்வாக்கும் அவா்களுக்கு சாதகமான ஒரு மருத்துவ அறிக்கையை மருத்துவமனைக்கு செல்லாமலே பெற்றுத்தந்தது. 29ஆம் தேதி காலை நந்தன் கோர்ட்டுக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது சாவித்திரி அவனது முன்னாள் வந்தவர் நந்தா என ஆரம்பித்தார்.

"அம்மா! போதும். திரும்பத் திரும்ப என்னை கோபப்படுத்தாதே! இந்த கேஸ் முடியுற வரைக்கும் நீ ஒரு விஷயம் சொல்லி அதை நான் கேட்கவே வேண்டாம். முடிஞ்சா அந்த ரங்கம்மாகிட்ட பேசி அவ சார்பாக யார் சாட்சி சொல்ல வர்றாங்கன்னு தெரிஞ்சுக்க பாரு. அதுவுமே நாசுக்கா கேட்கணும். அதிகாரத்துலக் கேட்டு அந்த பொம்பளை எல்லாருக்கும் பரப்பிவிட்டா நமக்கு எதிர்ப்பதமாக திரும்பிடும். இன்னிக்கு கோர்ட்டுக்கு நான் மட்டும் தான் போறேன். நீ எதுலயுமே தலையிடாம இருமா", எனக் கூறிவிட்டு விறுவிறுவென்று சென்றுவிட்டான்.

கோர்ட்டுக்கு சென்று வந்த நாளிலிருந்து மகன் தன்னிடம் அடிக்கடி எதிர்த்துப் பேசுவதை தாங்க இயலாத சாவித்திரி அதற்கும் தேவியையே வசை பாடிக் கொண்டிருந்தார். இருந்தப்பவும் என் குடியை கெடுத்தா, ஓடிப் போயும் குடியை கெடுக்குறா என முனகிக்கொண்டேதான் திரிந்தார்.

இந்தமுறை அவர்களுக்கான வழக்கு நேரத்தில் ராஜ் நந்தனின் மருத்துவ சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பித்தார். அவர் எதிர்பார்த்தது போன்றே சுஜாதாவும் அதனை அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் உண்மை தன்மை இல்லை என ஆட்சேபித்தவா் மறு மருத்துவ பரிசோதனைக்கு வேண்டுதல் தெரிவித்தார்.

உடனடியாக அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரை குறிப்பிட்டு அங்கேதான் நந்தன் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அந்த அறிக்கை மருத்துவமனையிலிருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கூறியதோடு வழக்கினை மற்றொரு தேதிக்கு தள்ளிவைத்தார். இதனை ராஜ் எதிா்பார்த்திருந்தாலும் நந்தன் எதிர்பார்த்திடவில்லை. எப்படி வழக்கினை தள்ளி வைக்கலாம் என மருகினாலும் தன் மேலிருந்த நம்பிக்கையில் இந்த மருத்துவமனையிலும் சாதகமான சான்றிதழே அளிக்கப்படும் என முழுமையாக நம்பியவன் மிகவும் தெனாவட்டாகவே மருத்துவ பரிசோதனைக்கு சென்று வந்தான்.

எதிர்பார்ப்பதெல்லாம் நடந்துவிட்டால் எதிர்பார்ப்புகள் மட்டுமே வாழ்க்கையாகி விடுமே! அனைவருக்கும் அவர்கள் எதிர்பாராத விஷயங்களும் நடைபெறும் என்பதை நிரூபித்திட சுஜாதா கொண்டுவந்து நிறுத்திய சாட்சிகளை பார்த்து நந்தனின் வக்கீல் ராஜ் அசந்துதான் போனார்.

வழக்கின் தீா்ப்பு சாதகமாகுமோ,பாதகமாகுமோ அது முக்கியமில்லை.ஆனால் வீட்டிற்கு வந்தவளை வாழவிடாமல் செய்பவர் செல்ல வேண்டியது பாதாளமே என சுஜாதா முந்தைய உரையாடலில் குறிப்பிட்டது ராஜின் நினைவில் வந்து போனது.