வரமாய் வந்த வலிகள் - கதை திரி

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-9

காரில் ஏறியதில் இருந்து தேவி சுஜாதாவின் முகத்தை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு வருவதை கவனித்த கோபி "மேடம்! அவங்க உங்க முகத்தையே பார்த்துகிட்டு இருக்காங்க. கார் ஓட்டுற எனக்குதான் அதை பார்த்து எந்த இடத்துல போய் இடிப்பேனோனு தோணுது", எனக் கூறினான்.

" கோபி நீ என்ன அனுசுயாக்கு மவுத்பீஸா?அவங்களுக்கு ஏதாவது கேட்கணும்னா என்கிட்ட நேரடியாக கேட்பாங்க. அப்படித்தானே அனுசுயா?", என சுஜாதா சிரித்த முகமாகவே தேவியிடம் வினவினார். அவர் கேட்ட விதத்தில் என்ன பதில் கூறுவது என தெரியாமல் திகைத்து "எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும் மேடம்!", எனக் கூறினாள்.

"தாராளமா கேளுங்க... உங்க கேசை எடுத்து நடத்துற வக்கீலா என்கிட்ட சந்தேகங்கள் மட்டுமல்ல, உங்களுடைய கருத்துகளையும் நீங்கள் சொல்லலாம். அதற்கான முழு உரிமையும் உங்களுக்கு இருக்கு", என சுஜாதாக் கூறியவுடன் தலையாட்டிவிட்டு தன்னுடைய சந்தேகத்தை தேவி கேட்க ஆரம்பித்தாள்.

"மேடம்! அந்த வக்கீல் ஏதோ இன் கேமரா பிரஸிடிங்னு சொன்னாரு. நாம சொன்னதை நிரூபிக்க முடியாதுன்னும் சொன்னாரு. அப்படியெல்லாம் பண்ணா பொய்யான கேஸ் போட்டுருக்கேன்னு சொல்லி கோர்ட்ல எனக்கு தண்டனை கொடுப்பாங்களா மேடம்?", என வினவினாள். அவள் கேட்டதில் அவளது அறியாமையே வெளிப்பட்டது.

தேவி கேட்டதற்கு பதிலாக சுஜாதா "அனுசுயா! இன் கேமரா பிரொசிடிங் அப்படிங்கறது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது. ரொம்ப சென்சிட்டிவான கேஸ் எல்லாம் பிரைவேட்டா பொது மக்களும், பத்திரிக்கைகளும் இல்லாமல் நடத்துவதுதான் இன் கேமரா பிரொசிடிங்.

உங்களுடைய கேஸ்ல உங்கள் முன்னாள் கணவர் ஆண்மையற்றவர்ன்னு சொல்லி இருக்கிறோம் இல்லையா? இந்த மாதிரி கேஸ் எல்லாம் பிரைவேட்டா தான் விசாரிப்பாங்க. அவரோட அவர் வக்கீல் இருப்பார். உங்களோட நானிருப்பேன். அதைப் பத்தி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

அடுத்த கேள்வி நாம சொன்னதை நிரூபிக்க முடியலைன்னா உங்களுக்கு தண்டனை கிடைக்குமா அப்படின்னு கேட்டிங்க இல்லையா? அப்படி எல்லாம் கிடையாது. ஆண்மையற்றவர்ன்னு சொன்னது பொய்ன்னு நாங்க டாக்டர் சர்டிபிகேட் மூலம் நிரூபிக்குறோம் அப்படின்னு சொல்லி கேக்குற பட்சத்தில் கோா்ாட் மூலமா அவங்க சொல்ற கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல தான் அந்த டெஸ்ட் பண்ணனும்.

அப்படி பண்றப்ப டெஸ்ட் ரிசல்ட்டை நம்மளுக்கு சாதகமாக மாத்திக்கலாம். நீங்க அதை பத்தியும் கவலைப் படாம இருங்க. அந்த வேலை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம். இப்ப நீங்க உங்க வீட்ல தனியா தங்கி இருக்கறதுல ஏதும் பிரச்சனை இருந்தா ஏதாவது லேடீஸ் ஹாஸ்டல்ல நீங்க தங்கலாமே!", என சுஜாதா தன்னுடைய விளக்க உரையுடன் இறுதியாக தேவிக்கு ஒரு ஆலோசனையும் கூறினார்.

ஆனால் அவர் கூறியவற்றிலேயே தன் நினைவுகளில் உழன்று கொண்டிருந்த தேவி இறுதியாக அவர் கூறியதைக் கேட்டு "இல்லை மேடம்! நான் எங்க வீட்டுலயே தங்கிக்கிறேன். எனக்கு கொஞ்சம் யோசிக்கணும். தனியா இருக்கணும்னு தோணுது. ஹாஸ்டல்ல இருக்குறதுக்கு காரணம் கேட்கிறவங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியாது", எனக் கூறினாள்.

"ஓகே அனுசுயா! உங்க விருப்பம்தான்", என கூறியதன் பின்னர் கோபியுடன் வேறு வழக்குகளை பற்றி விவாதிக்க ஆரம்பித்து விட்டார். போலீஸ் ஸ்டேஷன் சென்று வந்த பின்னர் சாவித்திரியின் பேச்சுகள் நின்றபாடில்லை. வீட்டிற்கு வந்த பின்னர் நந்தனும் நொந்து போய்தான் இருந்தான்.

ஒருவகையில் தேவி கொடுத்திருந்த புகார் அவனை மனதளவில் சிறிது ஆட்டம் அடையச் செய்து இருந்தது. அத்துடன் அவனுடைய வக்கீல் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பணம் பறிக்கும் ஒரு ஆளாகவே இருந்தார். இவை அனைத்தும் சேர்ந்து அவனை குழப்பத்தில் ஆழ்த்தி கொண்டிருந்ததுடன் மனதினுள் வக்கிரத்தையும் புகுத்தி கொண்டிருந்தது.

சாவித்திரி இடைவிடாமல் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டவன் "அம்மா பேசாம இரு! என்ன ஆனாலும் சரி அவளை நாறடிச்சிட்டுதான் நான் உட்காருவேன். நீ எதுவும் பேசாத... நீ பேச பேச நம்மளுக்கு தான் பிரச்சனை ஜாஸ்தியாகும்னு அந்த வக்கீல் சொல்லிட்டுப் போறான்", என்று சாவித்திரியை அடக்குவதற்கான வழியை பார்த்தான்.

ஆனால் அவன் வக்கீலைப் பற்றிக் கூறிய உடன் அவனிடம் திரும்பிய சாவித்திரி "ஏன்டா அறிவு கெட்டவனே! உன்னை சின்ன வயசுல இருந்து என் புத்தி வர மாதிரி தானே சொல்லி சொல்லி வளர்த்தேன். எல்லாமே நேரா தானே போய்கிட்டு இருந்துச்சு. எவனோ ஒரு பரதேசி சொன்னான்னு சொல்லிட்டு இந்த வக்கீலை பிடிச்சிருக்க.. அவன் இருக்க சொத்து மொத்தத்தையும் உருவிட்டுதான் விடுவான் போல இருக்கு. வேற வக்கீலை மாத்துறதுக்கு பாருடா இவன் இருந்தா இருக்குற சொத்து எல்லாத்தையும் பிடுங்கிடுவான். நாளைக்கு நீ நடுத்தெருவுல தான் நிக்கணும்", என மகனை பிடிபிடின்னு பிடித்து விட்டார்.

"இந்த ஆளுதான் இந்த மாதிரி கேஸ்லாம் ஈஸியா ஜெயிச்சு கொடுப்பான்னு என் ஃபிரண்டு சொல்றான். நான் மட்டும் நடுத்தெருவுல நிக்கணும்னு சொல்ற.. நான் நடுத்தெருவுக்கு போனா நீயும் தானே நடுத்தெருவுக்கு போகணும். அவ ஏற்கனவே கேட்ட ஜீவனாம்சத்துக்கே நாம ஏதாவது வித்து கொடுக்கணும்மா.

அவளோட நகைகளை வேற கேட்டுருக்கா. அதை எல்லாம் நீ அடகு வச்சு அங்கங்க வட்டிக்கு விட்டுகிட்டு இருக்க. அதெல்லாம் எப்ப திருப்புறது? அதனாலதான் இந்த வக்கீலுக்கு கூட கொஞ்சம் காசு கொடுத்தாலும் பரவாயில்லைன்னு ஒத்துக்கிட்டேன். நான் நடுத்தெருவுக்கு போனா நீயும்தான் என் கூட நிக்கனும்", என நந்தனும் பதிலுக்கு பதில் எகிறினான்.

"கூறு கெட்டவனே! என் போ்ல இருக்க சொத்தை உன்னை விக்க விடுவேன்கு நினைச்சுகிட்டுருக்கியா? அந்த நாயை அன்னிக்கே விஷத்தை வச்சோ,சிலிண்டரை வெடிக்க வச்சோ கொன்னுருக்கனும்.அதை செய்யாம துப்புக்கெட்டதனமா விட்டுட்டு இருக்கிற... என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ என் காசு ஒத்த ரூபா உனக்கு வராது, அப்படி அவளுக்கு காசு தர வேண்டிய சூழ்நிலை வந்துச்சுன்னா பையன்னு கூட பாக்க மாட்டேன்... உன்னை தலைமுழுகிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பேன்", என சாவித்திரி தனக்கு இருந்த ஆத்திரத்தை எல்லாம் நந்தனிடம் காட்டி விட்டுச் சென்றதில் அவன் திகைத்துப் போய் நின்றான்.

தன் தாய் தேவிக்கு கொடுமை செய்வதைப் பார்த்து என்றுமே அவர் மோசமாக நடந்து கொள்கிறார் என நினைக்காதவன் இப்பொழுது தன்னிடம் பேசியதை கேட்டவுடன் அம்மாவுக்கு என்ன புத்தி குழம்பிக் போச்சா எப்பவுமே என் மேல பாசமாதானே இருக்கும்... இன்னிக்கு என்ன ஆச்சு? என அதிா்ந்தவாறு நின்று கொண்டிருந்தான்.

அவனது அதிா்வினைப் போக்குவதற்கு மற்றொரு பெரும் அதிர்வு தரவேண்டும் என எண்ணியோ என்னவோ அவனுடைய வக்கீல் அவனை அழைத்திருந்தார். பேயை நினைச்சா பிசாசு வருது என நொந்துகொண்டே அழைப்பை ஏற்று சொல்லுங்க சார் என்றான்.

"நந்தன் இப்ப நீங்க என்ன பண்றீங்கன்னா உங்களோட முன்னாள் மனைவிக்கு ட்ரீட்மென்ட் தந்தாங்க இல்லையா! அந்த ரிப்போர்ட் எல்லாத்தையும் எடுத்துகிட்டு ஆபீஸ்க்கு வாங்க. வரப்போ ஒரு 30 ஆயிரம் கையோடு கொண்டு வந்திடுங்க", எனக் கூறிவிட்டு இவனது பதில் எதையும் எதிர்பாராமல் அழைப்பினை துண்டித்து விட்டார்.

அவர் காசு கேட்பதற்காக தான் அழைத்து உள்ளார் என்பதை உணர்ந்து இருந்தவன் தேவியின் மருத்துவ அறிக்கைகளை கேட்ட பின்னர்தான் அது எங்கே இருக்குன்னு தெரியலையே என தேட ஆரம்பித்தான். அவன் தேடிக் கொண்டிருக்கும் பொழுதே சாவித்திரியும் என்னடா தேடுற என்றவுடன் "அந்த வக்கீல் போன் பண்ணி தேவியோட எல்லா ரிப்போர்ட்டையும் எடுத்து வரச் சொல்றான்", என்பதை மட்டும் கூறிவிட்டு பணம் கேட்டதை மறைத்து விட்டான்.

"ரிப்போர்ட்டா? அந்தக் கருமத்தை எல்லாம் அவதானே வச்சிக்கிட்டே இருந்தா. ஒவ்வொரு தடவையும் ஹாஸ்பிடல் போறப்ப எல்லாம் எல்லாத்தையும் பெரிய மூட்டையா தூக்கிட்டுப் போகுமே அந்த நாயி... அங்கதான் இருக்கும் தேடு", எனக் கூறிவிட்டு அவரும் அனைத்தையும் இழுத்துப்போட்டு தேட ஆரம்பித்தார்.

ஆனால் இவர்கள் தேடுவது வீண் என்பது போல் தன்னிடமிருந்த மருத்துவ அறிக்கைகள் அனைத்தையும் தேவி சுஜாதாவிடம் சமர்ப்பித்து கொண்டிருந்தாள். "மேடம் இதெல்லாம் எனக்கு ட்ரீட்மென்ட் பார்க்கிறப்ப வாங்குன பில்ஸ். இதுல அவங்க எழுதிக் கொடுத்த மருந்துக்கு மட்டும்தான் பில் இருக்கு. நாங்க மொத்தம் மொத்தமா கட்டின காசுக்கு இல்லை மேடம்! இது போதுமா உங்களுக்கு?", என அவள் கொடுத்தவற்றை பார்த்த சுஜாதா,

"எங்களுக்கும் தெரியும் அனுசுயா! கோர்ட்டுல நிறைய கேஸ் இந்த மாதிரி பெண்டிங்ல இருக்கு... ஐவிஎஃப் பண்றவங்களுக்கு எந்தவிதமான அறிக்கையும் முழுமையாகக் கிடைக்கிறது கிடையாது. ஆனா இப்ப உங்க கணவர்கிட்ட நாம இதை வாங்கிடலாம்.

உங்க அப்பா அம்மா உங்களுக்கு பணம் தந்தப்ப ஒவ்வொரு தடவையும் வீட்ல வந்து கொடுத்தாங்களா? இல்லை பேங்க் மூலம் மாத்திவிட்டாங்களா?", எனக் கேட்டார். "வீட்ல வந்துதான் மேடம் கொடுத்துட்டு போவாங்க. பணமா தான் வேணும்னு சொல்லிடுவாங்க. பேங்க்ல மாத்திவிடவா அப்படின்னா ஒத்துக்க மாட்டாங்க அவரும், அவரோட அம்மாவும்", என தேவிப் கூறியதை கேட்ட சுஜாதாவிற்கு தெளிவாகவே புரிந்தது சாவித்திரியும் நந்தனும் பிறப்பிலேயே கிரிமினல்கள் என்று.

"சரி விடுங்க... நாம அதை பாா்த்துக்கலாம். அதை நம்மால் நிரூபிக்க முடியாது. இருந்தாலும் வாதாடி பார்ப்போம்", என அவளுக்கு ஆறுதல் அளித்தவர் அவளை அவளின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

சாவித்திரியும், நந்தனும் வீடு முழுவதும் தேடிப்பார்த்தும் தேவியின் மருத்துவ அறிக்கைகளை கண்டுபிடிக்க இயலவில்லை. " ஏன்டா அந்த சனியன் அதையும் சேர்த்து எடுத்துட்டுப் போய்ட்டாளா? அது முக்கியமா இருக்க போய்தானே அந்த வக்கீலும் கேட்டு தொலைக்கிறான். வேற ஏதாவது வழி இருக்கான்னு பாரு. அந்த ஹாஸ்பிடல்ல போய் திரும்ப வாங்க முடியுமான்னு கேட்டுப் பாரு இல்லைன்னா அந்த வக்கீல்கிட்டே சொல்லி அதுக்கு ஒரு காசு கொடுத்துட்டு அவனை ஏதாவது செய்ய சொல்லு... அவன் ஏற்பாடு பண்ணிடுவான்", என சாவித்திரி கேள்வியும் பதிலுமாக தானே பேசி நந்தனை வக்கீலை காண அனுப்பி வைத்தார்.

அங்கே சென்றவன் முதலில் எடுத்து சென்று இருந்த பணத்தை அவர் முன்னே வைத்து விட்டுதான் பேசவே ஆரம்பித்தான். அவன் பணத்தை எடுத்து வைத்தவுடன் தன் பற்கள் அத்தனையும் காட்டிய வக்கீல் "பரவாயில்லையே ஒரே நாளுல தேறீட்டிங்களே! எப்படி போனா வேலை நடக்குமுன்னு நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க", எனப் பாராட்டியவர் அந்த பணத்தை எடுத்து தன்னுடைய மேஜை டிராயரில் வைத்துவிட்டு "சரி நான் கேட்ட ரிப்போா்ட்ஸ் எங்க?", என வினவினார்.

அதற்கு "எல்லாமே அவதான் வச்சிருப்பா. நானும் எங்க அம்மாவும் ஹாஸ்பிடலுக்கு கூட போவோமே தவிர அதெல்லாம் வாங்கி வைக்க மாட்டோம். இப்ப அந்த ரிப்போர்ட்டை வீடு முழுக்கத் தேடியும் கிடைக்கலை", என நந்தன் சாதாரணமாகவேக் கூறினான்.

அதனைக் கேட்ட ராஜ் "அதாவது காசு உங்க கையில, காகிதம் அவங்க கையில அப்படித்தானே!", எனக் கூறி தான் ஏதோ பெரிய ஜோக் அடித்தது போன்று பலமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டார். "சார்! நீங்க ஜோக்கடிக்கிறதையோ, என்னை குத்திக்காட்டி பேசுறதையோ கேட்கிறதுக்கு நான் இங்க வரலை. அடுத்து என்ன செய்யலாம்னு சொல்லுங்க. அதுக்கு ஏத்த மாதிரி உங்க ஃபீஸ் சொல்லுங்க.அவளுக்கு ஒரு ரூபாய் கூட என்னால தர முடியாது.

அது போக என்னை ஆம்பளையே இல்லைன்னு சொல்லி இருக்கா. அதை எதிர்த்து மான நஷ்ட ஈடு கேட்டு அவ பெயரில் இருக்கும் அந்த வீட்டையும், கடையையும் என் பெயருக்கு மாற்றிக் கொடுத்துட்டா உங்களுக்கு என்ன கமிஷன் வேணுமோ அதை நானே தர்றேன்", என பேரம் பேசுவது போன்ற வக்கீலிடமும் நந்தன் பேசியதை பார்த்து ராஜ் சற்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்.

ஏனெனில் வழக்கமாக கொடுக்கல் வாங்கல் இருக்கும் வழக்குகளில் வழக்கறிஞர்கள்தான் தங்களுக்கு தேவையான சதவிகிதத்தை பற்றி பேசுவார்கள். ஆனால் இவனோ அனைத்தும் தெரிந்தது போல் கமிஷன் தருகிறேன் எனக் கூறுகிறான். இவன் சரிப்பட்டு வருவானா? இவனுக்கு வழக்கை வெற்றிகரமாக முடித்து தர வேண்டுமா என சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே நந்தன் டேபிளில் தட்டி அவரது தவத்தை கலைத்தான்.

"என்ன சார்! நான் கேட்டதுக்கு நீங்க எதுவுமே பதில் சொல்லாம இருக்கீங்க?", என அவரது முகத்தை எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்." நந்தன் நீங்க சொல்றதெல்லாம் சரிதான். இப்ப உங்க முன்னாள் மனைவி ஒரு கோடி ரூபா உங்ககிட்ட ஜீவனாம்சம் கேட்டுருக்காங்க. அந்த ஜீவனாம்சம் நீங்க தரவே வேண்டாம் அப்படின்னு முடிவு ஆயிடுச்சின்னா அதுல 15% என்னுடைய பீஸ்.

உங்களை ஆண்மையற்றவருன்னு சொல்லியிருக்காங்க. அது நிஜம் இல்லை அப்படின்னு நான் நிரூபிச்சுட்டா அதுக்கு தனியா 5 லட்ச ரூபாய் எனக்கு நீங்க கொடுத்துடனும். ஒரு நேரம் அவங்க சொன்னது உண்மையா இருந்தா உங்களோட ரிப்போர்ட்டை மாத்தி எழுத வைக்க வேண்டியதா இருக்கும். அதுக்கு அங்கங்க கொடுக்க வேண்டிய காசையும் நீங்கதான் கொடுக்கணும்.

மான நஷ்ட ஈடு வழக்கு இந்த வழக்கு முடிஞ்சதுக்கு அப்புறம் நாம பேசிக்கலாம். அதுவரைக்கும் பொண்ணு பாா்க்குறது, வேற கல்யாணம் பண்றது இந்த மாதிரி விவகாரம் எதுவும் இருந்தா கொஞ்சம் தள்ளி வையுங்க", என அவனிடம் பதமாகவேக் கூறினார்.

"என்ன சார் நிரூபிக்கனும்? அவங்க சொன்னது நெஜமாவா இருந்ததுன்னா அப்படின்னு ஒரு க்கன்னா வைக்கிறீங்க... அவ பொய் சொல்றா. அப்படி எல்லாம் கிடையவே கிடையாது. அது எப்படி பொய்யான அறிக்கை தர முடியும்? உண்மையான ரிசல்ட்தானே தருவாங்க. அதுக்கெல்லாம் ஏன் சார் காசு செலவழிக்கனும்?", என நந்தன் தன்னுடைய குரலை உயர்த்தி அவரிடம் பேசினான்.

அவன் பேசிய விதமே நான் காசு தரேன் எனக்காக நீ எல்லாம் செய் என்று அதிகாரம் செய்வது போன்றே அவனது வக்கீலுக்கு தெரிந்தது. "சரி! நீங்க சொல்ற மாதிரி கோர்ட்டுல உங்களை அவங்க சொன்னது பொய்,நாங்க மெடிக்கல் டெஸ்ட் எடுத்து நிரூபிக்கிறோமுன்னு சொன்னா கோர்ட்டுல உங்களை ஒரு கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிதான் டெஸ்ட் எடுத்துட்டு வர சொல்லுவாங்க.

எந்த வேலையும் செய்யாமல் அந்த டெஸ்ட் ரிப்போர்ட் கோர்ட்டுக்கு வர்றப்ப மட்டுமே நானும் ரிஸல்ட் தெரிஞ்சிக்கிறேன். உங்க முன்னாள் மனைவியோட வக்கீல் சாதாரண ஆள் கிடையாது. அவங்க சொன்னது பொய்ன்னு தெரிஞ்சாலும் அதை நிஜமாக்கிட்டுத தான் அடுத்த வேலை பாா்ப்பாங்க. ரிப்போர்ட்டை அவங்க எப்படி மாத்தினாலும் நான் அதுல கவலைப்பட மாட்டேன்", என எங்கே அடித்தால் அவனுக்கு பயம் பிடிக்குமோ அந்த வார்த்தைகளை உபயோகித்து ராஜ் கூறியவுடன் நந்தன் யோசிக்க ஆரம்பித்து விட்டான்.

சிறிது நேரம் யோசித்தவன் "சரி சார் என்ன பண்ணணுமோ பண்ணுங்க... இப்ப அடுத்து என்ன பண்ணப் போறீங்க?", என வினவினான். "அவங்க உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க. அதுல எத்தனாம் தேதி கோர்ட்டுக்கு வரணும்னு சொல்லி இருக்காங்க. அந்த தேதியில நாம ஆஜராகலாம்.

இதில் இன் கேமரா பிரஸிடிங் அதாவது தனியாக கூப்பிட்டு வச்சு விசாரிப்பாங்க. வேற யாரும் வெளி ஆட்கள் இருக்க மாட்டார்கள். அது ஒரு வகையில் நமக்கு உபயோகமாக இருக்கும்", என ராஜ் கூறியதும் "எல்லாருக்கும் முன்னாடி விசாரிச்சா புருஷனை எப்படி அசிங்கப்படுத்திருக்கான்னு சொல்லி அவளை நான் நாறடிக்க முடியும். அவளை பொய்காரின்னு சொல்லி ஊர் உலகத்துக்கு காமிக்க முடியும். தனியா நடத்துறதுல என்ன சார் பிரயோஜனம்?", என நந்தன் எழுந்து நின்றவாறு தன் கைகளை ஆட்டி ஆட்டி வினவினான்.

"நந்தன் இந்த வெட்டிப்பேச்சு, வெட்டி சவடால் எல்லாம் என் கிட்ட பேசிகிட்டு இருக்காதிங்க. அப்படி எல்லாருக்கும் தெரிகிற மாதிரி நடக்கணும் அப்படின்னா உங்க மானம்தான் நாறிப்போகும். நீங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டதா உங்க ஃபிரண்டு சொன்னாரு. அந்த குடும்பத்துக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா அந்த குடும்பம் இல்லை, ஊர் உலகத்துல இருக்குற எவனும் உங்களுக்கு பொண்ணு தர மாட்டான். அது ஓகேவான்னு சொல்லுங்க. நானே சுஜாதா மேடமுக்கு கால் பண்ணி பேசறேன் அவங்க சகல மரியாதையோட உங்க மானத்தை நாறடிச்சுடுவாங்க", என அதட்டி பேசிய ராஜ்

"இப்ப நீங்க வெளியில கிளம்பலாம். ஏதாவது தேவைன்னா போன் பண்றேன். நான் கேட்கிற டீடெயில்ஸ் மொத்தமா கொண்டுவந்து கொடுங்க. டீடெயில்ஸ் கொடுக்க முடியலை அப்படின்னா அதுக்கு தனி வேலை. அதை ஞாபகம் வச்சுக்கிட்டு நீங்க என்கிட்ட பேசறது உங்களுக்கு நல்லது", எனக் கூறிவிட்டு தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

வெளியே வந்தவனின் மனம் சற்றும் இருப்பு கொள்ளவில்லை. சமுதாயத்தில் மிகவும் மதிப்பு மரியாதையுடன் நடமாடிக் கொண்டிருக்கும் தன்னை இவள் எப்படி அசிங்கப்படுத்தலாம். ஏதேனும் ஆள் வைத்து அடித்து கொன்னுடலாமா என்று கூட நந்தன் யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.

நந்தன் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் சாவித்திரி தனக்கு தெரிந்த அனைவருக்கும் அழைப்பு விடுத்து "தேவியோட நடவடிக்கை எதுவும் சரியில்லை. யார் யார் கூடவோ பேசுறா, யாரோ யாரையோ போய் பாத்துட்டு வா்றா. அதனால நான்தான் அவளை வீட்டை விட்டு விரட்டிட்டேன்", என அவளைப் பற்றி தவறுதலாக சித்தரித்து கொண்டிருந்தார்.
 
  • Like
Reactions: Sumathi mathi

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-10


வாழ்வென்பது அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப மட்டுமே அமையும் எனக் கூறுவர். ஆனால் எண்ணங்கள் சரியாக இருந்தாலும் ஏறுக்குமாறான வாழ்வென்பது அமைவதை யாராலும் மாற்ற இயலாது என்பது தேவியின் வாழ்வில் பொருந்திப் போனது.

போலீஸ் ஸ்டேஷன் சென்று வந்த பின்னர் அவளது சொந்தங்கள் ஒருவர் மாற்றி ஒருவா் வந்து இவளிடம் மட்டுமே அறிவுரை கூறத் தொடங்கினர். அதிலும் ஓரிருவர் "பொம்பளப் பிள்ளை பொறுத்துதான் போகணும்.உன் இஷ்டத்துக்கு செஞ்சுகிட்டு இருந்தா எங்களுக்கு தான் அசிங்கமா இருக்கு.

உன் அம்மா அப்பா என்னதான் உன்னை வளர்த்து தொலைச்சாங்களோ! நல்ல வசதியான சம்பந்தம், வீட்ல நாத்தனார், கொழுந்தனாருன்னு வேறு எந்த பிக்கல், பிடுங்கல் கிடையாது. மாமியாரும் வயசானவங்க... இத்தனை வருஷமா பிள்ளை இல்லாம இருந்தும் உன்னை இத்தனை தண்டிக்கு( எடை) வளர்த்து விட்டிருக்காங்க.

இதெல்லாம் அவங்க நல்லா பாா்த்துக்காமலயா இவ்வளவு தடியா இருக்க.எங்களை பாரு, ஒரு நிம்மதியா ஆடி அசைஞ்சு உட்கார கூட முடியாத நிலையில இருக்கோம். ஒழுங்கு மரியாதையா கேசி போடுறது, அவங்க மேல பொய் புகார் கொடுக்கிறது இதை எல்லாம் விட்டுட்டு எல்லாத்தையும் வாபஸ் வாங்கிடு.

உன் மாமியா காலுலையும், புருஷன் காலுலையும் போய் விழுந்துடு... கூட வேணா நாங்க வந்து நிற்கிறோம். அவங்க மன்னிச்சு உன்னை ஏத்துக்கிட்டா காலத்துக்கும் நீ நிம்மதியா இருக்கலாம். எங்களோட உறவு உனக்கு என்னைக்கும் இருக்கும். இல்லை உன் இஷ்டத்துக்கு தலைவிரிச்சு ஆடுனா சொந்தபந்தம் அப்படின்னு சொல்லி யார்கிட்டயும் எங்களை காட்டிடாதே... நல்லது கெட்டதுக்கு எதுக்குமே நாங்க வந்து நிற்க மாட்டோம்", என இவளை தூற்றியும் மிரட்டியும் சென்றனர்.

அவர்கள் பேசி சென்ற வார்த்தைகள் மனதை ரணமாக்கினாலும் ஏனோ தன்னுடைய முடிவிலிருந்து மாற்றிக்கொள்ள தேவி விழையவில்லை.

தாய் தந்தை வீட்டில் வந்து இருந்தாலும் மற்ற செலவுகளுக்கு தேவிக்கு சற்று சிரமமாகவே இருந்தது. அவளது அம்மா அப்பாவின் இறப்பிற்குப் பின்னர் வந்த இன்சூரன்ஸ் பணத்தில் சாவித்திரி மொத்தமாக வாங்கிட நினைத்தாலும் அந்த நேரத்தில் அவளது தந்தையின் நண்பர் சாமர்த்தியமாக மொத்தப் பணத்தையும் தர விடாமல் செய்து இருந்தார்.

அதில் ஒதுக்கி வைத்த பணமே தேவியின் இன்றைய செலவுகளுக்கும், அவளது வழக்கினை எடுத்து நடத்த தேவையான கட்டணத்திற்கும் உதவிக் கொண்டிருந்தது. தேவி முதல் முறை சுஜாதாவை சந்தித்து வந்த பின்னர் "உங்களுடைய பீஸ் என்ன மேடம்?", எனக் கேட்டதற்கு அவர் வழக்கமாக வாங்கும் தொகையை அவளிடம் குறிப்பிட்டிருந்தாலும் இறுதியாக மற்றொன்றும் கூறியிருந்தார்.

"பொதுவா ஜீவனாம்சம் வாங்கித்தர கேசாகட்டும், உங்களோட நகைகள், பணத்தை அவங்ககிட்ட இருந்து மீட்டுத் தர்றதாகட்டும் அதுல ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஃபீஸாக வாங்குவோம். மத்தவங்ககிட்ட 15% வாங்கினா உங்ககிட்ட 10% வாங்குறேன். உங்களால் கொடுக்க முடியுமா?", என அவரும் அதில் ஒரு வக்கீல் ஆகவே நடந்துகொண்டார்.

என்னால இப்போதைக்கு உங்களுடைய ஃபீஸ் மட்டும்தான் மேடம் கொடுக்க முடியும். மீதி பணமும், நகையும் வந்ததுக்கு அப்புறம் நான் கண்டிப்பா கொடுத்துடுறேன்", என தேவி ஒப்புதல் அளித்த பின்னரே மற்ற ஏற்பாடுகளை தொடங்கியிருந்தார். இதில் அவருக்கும் ராஜீக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.

என்ன சுஜாதா தேவியின் நிலையை உணர்ந்து விவாகரத்து செய்வதற்கான கட்டண தொகையை மட்டும் வசூல் செய்திருந்தார். ஆனால் நந்தனின் வக்கீல் அவனது ஒட்டுமொத்த சொத்தையும் வசூல் செய்து விடுவது என்ற முடிவில் அமர்ந்திருந்தார். அது மட்டுமே வித்தியாசம்.

உறவினர்கள் வந்து பேசி சென்ற பின்னர் தேவி செய்த முதல் வேலை சுஜாதாவிற்கு அழைத்து "மேடம்! அவங்க எங்க சொந்தகாரங்க எல்லாருக்கும் போன் பண்ணி தேவையில்லாம தூண்டி விடுறாங்க. அதனால சொந்தக்காரங்க எல்லாம் வீட்டுக்கு வந்து என்னை கண்டபடி பேசிட்டு போறாங்க. இதுக்கு நான் என்ன பண்றது?", என வினவினாள்.

சுஜாதா அதற்கு பதிலாக "அனுசுயா! இது வரைக்கும் உங்க முன்னாள் மாமியாரோ, முன்னாள் கணவரோ உங்களுக்கு போன் பண்ணி ஏதாவது தொந்தரவு கொடுத்தாங்களா?", என வினவினார். இல்லை மேடம் என்றதற்கு "அப்படியே விட்டுடுங்க... சொந்தகாரங்க பேசிட்டேதான் இருப்பாங்க. தேவையில்லாததை பேசாம இருந்தா அவங்க சொந்தக்காரங்க கிடையாது.

நீங்க நல்ல படியா வாழ்ந்தாலும் உனக்கு என்ன நல்லா வாழுற அப்படின்னு பேசுவாங்க. நீங்க நல்லா வாழலைன்னா நீ நல்லாவே இல்லை அப்படின்னு உங்களை தாழ்த்திப் பேசுவாங்க.இது எதையுமே மனசுல எடுக்காம நீங்க அடுத்து என்ன பண்றது அப்படின்னு யோசிங்க", எனக் கூறியவர் வழக்கு நடக்கும் தினத்தன்று அவளை சற்று முன்னதாகவே கோர்ட்டுக்கு வந்து விடக் கூறினார்.

"எத்தனை மணிக்கு உங்களுடைய ஹியாிங் வருமுன்னு தெரியாது. அதனால நீங்க கொஞ்சம் முன்னாடியே வந்துடுங்க. இடையில உங்க முன்னாள் கணவரோ, முன்னாள் மாமியாரோ யாராவது போன் பண்ணுனாங்கன்னா போலீஸ் ஸ்டேஷன்ல அந்த இன்ஸ்பெக்டர் உங்களுக்கு நம்பர் குடுத்தாங்க இல்லையா? அவங்களுக்கு கால் பண்ணி சொல்லுங்க. அவங்க மீதியை பாா்த்துப்பாங்க", எனக் கூறி அழைப்பைத் துண்டித்தார்.

தேவியும் அவர் வினவியதற்கு பின்னர்தான் "பரவாயில்லை அந்த வீணாப்போனவனும், அவனோட அம்மாவும் போன் பண்ணாம இருக்கிற வரைக்கும் நிம்மதி. இவங்களாவது பேசிட்டு போயிடுவாங்க. அவங்க பேசுறதை காது கொடுத்து கேட்க முடியாது", என தன்னுடைய துக்கத்திலும் ஒரு நேர்மறையான கருத்தை கண்டுபிடித்து சிரித்து மகிழ்ந்து கொண்டாள்.

அவ்வாறெல்லாம் இருக்க விட்டு விடுவோமா என கங்கனம் கட்டிக்கொண்டு சாவித்திரியும், நந்தனும் தேவியை பற்றி அனைத்து இடங்களிலும் தவறாகவே சித்தரித்துக் கொண்டிருந்தனர். அது மற்றவர்களின் மூலமாக அவளின் காதுக்கு வந்தாலும் தான் அனுபவித்த மரணவலிக்கு முன்னர் இந்த வார்த்தைகளின் வலி ஒன்றுமில்லை என தேவி தன்னை தானே தேற்றிக் கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

எப்பொழுதுமே ஒருவர் குட்டக்குட்ட குனிந்தால் மட்டுமே அவர்களால் குட்ட முடியும்.நாம் நிமிர்ந்து நின்றால் அதற்கான வாய்ப்பே அவர்களுக்கு கிட்டாது. அதுதான் தேவியின் விஷயத்திலும் நடந்தது. இத்தனை நாட்கள் இருந்த அந்த பயம், அந்த வலிகள் அனைத்தும் மறைந்து தன்னைப் பற்றியும் தேவி சிறிது சிந்திக்க ஆரம்பித்து இருந்தாள்.

சுஜாதா கேட்ட அடுத்து என்ன செய்யப் போறீங்க என்ற வார்த்தைகள் அவள் அடுத்து என்ன செய்வது என திட்டமிட வைத்தது.

தேவியின் செயலினால் நந்தன் நாள்தோறும் தனது வக்கீலுக்கு ஏதோ ஒரு வகையில் பணத்தை அள்ளி தர வேண்டிய சூழ்நிலையே நிலவியது. அதில் மிகவும் கடுப்பானவன் ஒருநாள் இரவில் அவளின் அலைபேசிக்கு வேறு ஒரு புது எண்ணில் இருந்து விடாமல் அழைத்து தொல்லை செய்ய ஆரம்பித்திருந்தான்.

நல்ல தூக்கத்தில் இருந்த தேவி நடு இரவில் யார் தன்னை அழைப்பது என தெரியாமல் அதுவும் எண் புதிதாக இருப்பதை பார்த்து சற்றே மிரண்டாளும் அந்த அழைப்பை அழைப்பை ஏற்ற உடன் வாயில் வந்த கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தி கண்டபடி பேச ஆரம்பித்தான். அவனது குரல் காதில் விழுந்தவுடன் அழைப்பை துண்டித்த தேவி தன்னுடைய மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டாள்.

மீண்டும் மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தவன் அவளது மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்தவுடன் நேரடியாக அவளது வீட்டிற்கு கிளம்பிவிட்டான். அவள் வீடு இருக்கும் இடத்திற்கு வந்தவன் நள்ளிரவில் தேவியின் வீட்டு காம்பவுண்ட்டினுள் கற்களால் வீசியும், வெளியில் இருந்தபடியே அவளை திட்டியவாறும் கத்திக் கொண்டே இருந்தான்.

முழித்திருந்தாலும் தேவி எந்தவிதமான இருப்பையும் காட்டிக்கொள்ளவில்லை. சற்றும் வந்திருந்த தைரியமும் அவன் செய்த செயலினால் "ஐயோ! நாளைக்கு காலையில எந்திரிச்ச உடனே பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் என்ன நினைப்பாங்க? ஏன் இவ்வளவு அசிங்கமா பேசிக்கிட்டு இருக்கான்? என் மானம் போச்சே! எப்படி மத்தவங்க மூஞ்சியில முழிக்கிறது?", என்று பலவித எண்ணங்களினால் மீண்டும் பயத்தினுள் சுருண்டு கொண்டாள்.

தானாக தனது தொண்டை வற்றும் வரை கத்திய நந்தன் இறுதியாக "வெளியில வாடி! உனக்கு இருக்கு சாவு! நீ எந்நேரம் வெளியில வந்தாலும் என் கையாலதான் உனக்கு சாவு", என அறைகூவல் விடுத்துச் சென்றான். அவன் சென்ற பின்னர் விடியும் வரை அழுதுகொண்டே இருந்த தேவி விடிந்த உடன் முதல் வேலையாக சுஜாதாவிற்கு தான் அழைத்தாள்.

எழுந்தவுடன் தனக்கு வந்த அழைப்பை பாா்த்த சுஜாதா அழைப்பை ஏற்று " என்ன அனுசுயா!இவ்வளவு சீக்கிரமா கால் பண்ணி இருக்கீங்க. என்ன விஷயம்?", என வினவினார். அழுததில் மாறிப் போயிருந்த தேவியின் குரலில் வந்த வார்த்தைகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.எனவே "என்ன சொல்றீங்கன்னு தெளிவா சொல்லுங்க. நீங்க சொல்ற எதுவுமே புரிய மாட்டேங்குது", என்றவுடன் ஒரு பத்து நிமிஷத்துல கூப்பிடுறேன் மேடம் என்று அழைப்பை துண்டித்து விட்டு தனது முகம் அனைத்தையும் சரி பண்ணி கொண்டு வந்தவள் சிறிது தண்ணீரை குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"மேடம்! ராத்திரியெல்லாம் இங்க வந்து நந்தன் ரொம்ப அசிங்க அசிங்கமாக திட்டிட்டுப் போயிட்டாரு. வெளியில் தலை காட்டவே முடியாத அளவுக்கு பேசிட்டு போயிட்டாரு. எனக்கு பயமா இருக்கு மேடம்! நான் இனி விவாகரத்து கேசை தொடர்ந்து நடத்தினா இதே மாதிரி கத்தினா என்ன மேடம் செய்றது?", என அழுகுரலில் வினவினாள்.

ஏற்கனவே சுஜாதா அவளுக்கு தேவையான புத்திமதிகளை கூறியிருந்தாலும் மீண்டும் அதே மாதிரி பேசியதில் இவளை என்ன செய்வது என்ற வருத்தத்தில் அவரும் "அனுசுயா! இதை நீங்க வந்து கேஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே நான் சொன்னேன். அப்ப நான் இருந்தடுவேன், சமாளிச்சுடுவேன்னு சொன்னீங்க... இப்போ அதே மாதிரி தைரியமா இருங்க.

பக்கத்து வீட்டுக்காரங்க உங்களோட கஷ்டத்தை அனுபவிக்க மாட்டாங்க. நீங்க மட்டும்தான் உங்களோட கஷ்டத்தை அனுபவிக்கனும். எங்கிட்ட அன்னைக்கு சொன்னீங்க இல்லையா ஐவிஃஎப் பண்ணுனப்ப அந்த வலி செத்துப் போற மாதிரி இருந்ததுன்னு. உங்ககிட்ட வந்து யாராவது ஏன் உன் புருஷன் இப்படி பேசுனான் அப்படின்னு கேட்டா இது உனக்கு தெரிஞ்சே ஆகனுமா அப்படின்னு ஒரு கேள்வியைக் கேளுங்க. வேற எதுவும் பேசாதீங்க.

நீங்க எனக்கு போன் பண்ணுனதுக்கு பதிலா அந்த இன்ஸ்பெக்டருக்கு போன் பண்ணி இருக்க வேண்டியதுதானே! உங்களுக்கு அதுக்குதான் அவங்க நம்பர் குடுத்தாங்க. இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் உட்கார்ந்து அழுதுகிட்டு காலையிலேயே போன் போடாதீங்க. நீங்க இன்ஸ்பெக்டருக்கு கால் பண்ணி பேசுங்க. இல்லைன்னா நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்க. அழுதால் வேலைக்காகது. இது மாதிரி இன்னும் நிறைய நிறைய எதிர் கொள்ள வேண்டியது இருக்கும். அதுக்கு எல்லாம் தயாரா இருங்க.

அப்படி இல்லைன்னா கேஸை வித்ட்ரா பண்ணிட்டு நீங்க பாட்டுக்கு காலம் பூரா உங்க மாமியார் வீட்ல உக்காந்து வடிச்சு கொட்டுங்க", எனக் கோபமாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

சுஜாதா அழைப்பை துண்டித்த உடன் தேவி அவர் கூறியவற்றை ஒவ்வொன்றாக யோசிக்க ஆரம்பித்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அளித்திருந்த எண்ணுக்கு அழைத்தாள். இரண்டு மூன்று முறை அழைத்த பின்னரே தேவியின் அழைப்பு ஏற்கப்பட்டது. எடுத்தவுடன் "யார் பேசுறீங்க?", என அவர் கேட்டதும் "மேடம்! நான் போன வாரம் ஸ்டேஷனுக்கு வந்து இருந்தேன்", என தேவிக் கூறினாள்.

தேவியின் பேச்சில் "எனக்கு தெரியலை. ஒரு நாளைக்கு 100 பேருக்கு மேல ஸ்டேஷனுக்கு வந்துட்டு போறாங்க. அதுல நீங்க யாரு? மொதல்ல தெளிவா பேசுங்க", என தன்னுடைய வழக்கமான அதட்டல் குரலில் இன்ஸ்பெக்டர் வினா எழுப்பினார்.அதற்கு பதிலாக தேவி "வக்கீல் சுஜாதா மேடம் கூட வந்திருந்தேன். வன்கொடுமை குடும்ப சட்டத்தில் நந்தன் அப்படிங்கிறவா் மேல கம்ப்ளையன்ட் கொடுத்திருந்தோம்", என்றாள்.

"15 வருஷம் கொடுமை அனுபவிச்சுட்டு இப்ப வந்து புகாா் கொடுத்தீங்களே! அந்த கேசா?", என்றவர் " என்னம்மா படிச்சிருக்கதானே! அறிவு இல்லையா? கல்யாணமாகி ஏழு வருஷத்துக்குள்ள இதே கம்ப்ளையன்ட் கொண்டு வந்து கொடுத்துருந்தா நான் அன்னைக்கு அவனைக் கூப்பிட்டு வச்சு உட்கார வச்சி பேசுன மாதிரி எல்லாம் பேசிட்டு இருக்க மாட்டேன். தூக்கி உள்ள வச்சுட்டுதான் அடுத்த வேலையே செஞ்சுருப்போம்.

ஏன்தான் இந்த பொம்பளைங்க நம்ம நாட்டுல இப்படி இருக்கிற சட்டத்தை உபயோகப்படுத்தாமல் இருக்கதங்களோ! புரிய மாட்டேங்குது.போன வேலையை விட்டுத் தள்ளு... இப்ப என்ன விஷயத்துக்கு போன் பண்ணுன?", என இன்ஸ்பெக்டா் அவளிடம் வினவினார்.

"நேத்திக்கு ராத்திரி அவரு போன் பண்ணி ரொம்ப அசிங்க அசிங்கமா பேசினாரு. அதனால நான் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிட்டேன். அதுக்கு அடுத்து நேரா வீட்டுக்கு முன்னாடி வந்து ராத்திரி எல்லாம் கத்திக்கிட்டே அசிங்க அசிங்கமா திட்டிட்டு போயிருக்காரு. என்னோட சொந்தக்காரங்க எல்லாருக்கும் அவரோட அம்மா போன் பண்ணி தப்பு தப்பா பேசிட்டு இருக்காங்க. நான் இப்ப என்ன செய்யட்டும் மேடம்?", என தேவி அவரிடமே தன்னுடைய குறைகளை கூறி ஆலோசனையும் கேட்டாள்.

நீ உங்க வக்கீல்கிட்ட பேசுனியா? எனக் கேட்டதற்கு அவங்கதான் உங்களுக்கு கூப்பிட சொன்னாங்க மேடம் என தேவி பதிலுரைத்தாள். அந்தப் பக்கம் இருந்த இன்ஸ்பெக்டர் நொந்துகொண்டார்." ஏன்மா உன்கிட்ட எதுக்கு நம்பரை கொடுத்தேன்?ஏதாவது ஒன்னுனா உடனே அந்நேரமே நீ எங்களுக்கு போன் பண்ணி இருந்தா வந்தவனை நாலு தட்டு தட்டி உள்ள தூக்கி வச்சுருப்போம். எல்லாத்தையும் லேட்டாவே செஞ்சுட்டு அழுது வடி! சரி விடு! நான் கூப்பிட்டு கண்டிக்கிறேன்", என்று அழைப்பை துண்டித்தவர் செய்த மறு வேலை இரண்டு கான்ஸ்டபிள்களை அழைத்து "அந்த நந்தன், சாவித்திரி வீட்டுக்கு போய் அம்மா, பையன் ரெண்டு பேரையுமே ஸ்டேஷனுக்கு கையோட இழுத்திட்டு வாங்க", என அனுப்பி வைத்தார்.
 
  • Like
Reactions: Sumathi mathi

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-11


தேவி சென்ற நாள் முதல் சாவித்திரியின் வேலைப்பாடுகள் கூடிவிட்டன. அவள் இருந்தவரை ஒரு சிறு துரும்பையும் அசைக்காமல் குற்றம் குறை கூறிக் கொண்டு சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தவர் என்று அவள் வீட்டை விட்டு வெளியேறினாளோ அன்று முதல் இருவருக்குமான சமையல், வீட்டினை சுத்தம் செய்வது என உடலளவில் நொந்து போனார்.


ஆனால் மனதளவில் வக்கிரம் மட்டும் கூடிக்கொண்டே இருந்தது. அதைப்போன்றே அன்று காலை எழுந்து வீட்டின் வெளியே இருந்தவற்றை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது இரண்டு கான்ஸ்டபிள்கள் தேடி வந்ததை பார்த்து முதலில் கண்கள் சுருக்கியவர் அவர்கள் பேசும் முன்னரே காலங்காத்தால காசு வாங்க வந்துட்டீங்களா என தன் தொண்டை கிழியக் கத்தினார்.


அதில் கடுப்பான இருவரும் "என்னம்மா இன்ஸ்பெக்டர் உங்களையும், உங்க பையனையும் இழுத்துட்டு வரச் சொன்னாங்கன்னு வந்தா கண்டபடி பேசுறீங்க... இதுக்காகவே உங்களை ஸ்டேஷனில் உள்ள வச்சு தட்டனும். கொஞ்சமாச்சும் யோசிச்சு பேசுங்க.


வீட்டுக்கு போலீஸ்காரங்க வந்தாலே உங்ககிட்ட பிச்சை எடுக்க வர்றாங்கன்னு உங்க மனசுக்குள்ள நினைப்பா? உங்க மாதிரி மோசமான ஆட்களால் தான் எங்க பேரு நாறிப் போகுது. உழைக்கிறதுக்கு நாங்க கவர்மெண்ட்ல இருந்து சம்பளம் வாங்குறோம். அதுலதான் வாழ்றோம். கண்டபடி பேசினா மரியாதை இருக்காது. உங்க பையனை கூப்பிட்டுட்டு கையோட ஸ்டேஷனுக்கு கிளம்புங்க", என அவர்கள் இருவரும் சத்தம் போட்டனர்.


அவர்கள் இருவரும் பேசியதைக் கேட்ட பின்னர்தான் தான் பேசியது தவறு என்று சாவித்திரிக்கு உரைத்தது. இருந்தாலும் அதனை ஒத்துக் கொண்டால் அவர் சாவித்திரி இல்லையே! "அது என்னமா இழுத்துட்டு வர்ற சொன்னாங்கனு சொல்றீங்க... நானும்,என் பையனும் என்ன ஆடா? மாடா? உயிரோட இருக்கிற மனுஷங்க. நீங்க போலீஸ் வேலையில இருந்தா அது உங்களோட... வயசுல பெரியவங்கிறதுக்காக கொஞ்சமாச்சும் மட்டும் மரியாதையோட நடந்துக்கோங்க", என அப்பொழுதும் அவர் கத்தவே செய்தார்.


வந்திருந்த கான்ஸ்டபிள்களில் ஒரு பெண் "இந்த அம்மாகிட்ட இருந்து இதோட மருமக 15 வருஷம் காலம் தள்ளி இருக்குன்னா அது எப்பேற்பட்ட அப்பாவியா இருந்திருக்கும்", என மற்றொருவரிடம் சற்று தணிந்த குரலில் கூறினார். அதனை ஒத்துக் கொண்டதாக தலையாட்டிய மற்றொரு பெண்ணும் சாவித்திரியிடம் "எங்களுக்கு அதெல்லாம் தெரியாதுங்க. உங்க பையகை கூப்பிட்டுட்டு ஸ்டேஷனுக்கு உடனே கிளம்புங்க.


நீங்களா வர்றீங்களா இல்லை, நான் ரெண்டு தட்டு தட்டி ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு போகவா?நீங்க பேசுறதை கேட்கிறதுக்கு எல்லாம் நாங்க இங்க வரலை. கிளம்புங்க", என விரட்டி கொண்டிருக்கும்போதே சத்தம் கேட்டு வெளியே வந்த நந்தன் யாா்கிட்டம்மா சதஇதம் போட்டுக்கிட்டு இருக்க என கேட்டுக்கொண்டே வந்தான்.


பின் வாசலில் நின்ற கான்ஸ்டபிள்கள் இருவரையும் பார்த்து இவங்க எதுக்கு இந்நேரம் வந்துருக்காங்க என எண்ணியவாறு "சொல்லுங்க மேடம்! என்ன விஷயம்?", என வினவினான்.


அவர்கள் பதில் கூறுவதற்கு முன்னரே முந்திக்கொண்ட சாவித்திரி "அந்த இன்ஸ்பெக்டர் உன்னையும், என்னையும் இழுத்துட்டு வரச் சொல்லிருக்குறாளாம", என மகனுக்கு பதிலுரைத்தார். அவரது பேச்சில் நந்தனுக்கே தன் தாய் பேசியது சற்று அதிகப்படி என தெரிந்தது.


"சொல்லுங்க மேடம்!", என தன் தாயின் பேச்சினை கண்டு கொள்ளாதவாறு அவர்களிடம் மீண்டும் வினவினான். "சார்! நீங்களும், உங்க அம்மாவும் ஸ்டேஷனுக்கு வருவீங்களாம். இன்ஸ்பெக்டர் கையோட கூட்டிட்டு வர சொன்னாங்க. அதை சொல்றதுக்கு வந்தா உங்க அம்மா ஏதோ நாங்க காசு வாங்க வந்தவங்க மாதிரி எங்களை தரக்குறைவா பேசுறாங்க. இது எதுவும் உங்களோட நல்லதுக்கு கிடையாது. இன்ஸ்பெக்டரையும் தரக்குறைவா பேசுறாங்க. ஒழுங்கா எங்களோட ஸ்டேஷனுக்கு கிளம்புற வழியைப் பாருங்க", எனக் கூறி விட்டு சற்று தள்ளி சென்று நின்றுகொண்டனர்.


தன்னுடைய தாய் எப்படி பேசுவார் என நந்தன் அறிவான் என்பதால் அவரிடம் என்ன பேசினார் என்பதை பற்றி வினவவில்லை. ஆனால் சாவித்திரியை உள்ளே இழுத்துக்கொண்டு சென்றவன் "எதுவா இருந்தாலும் இப்போதைக்கு பேசாதம்மா! இதுங்கெல்லாம் இப்படித்தான். கெளம்பு போய் என்னன்னு பார்த்து கண்டுகழிச்சுட்டு வருவோம்.


அந்த வக்கீலுக்கு நான் ஒரு போனை போடுறேன்",என கூறிக்கொண்டே சாவித்திரி மேலும் பேசப் போனதை கேட்காமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டான். வேறு வழி இன்றி சாவித்திரியும் முணுமுணுத்துக்கொண்டே போலீஸ் ஸ்டேஷன் செல்வதற்கு தயாரானார்.


தன் அறைக்குள் சென்ற நந்தன் அவனுடைய வக்கீலுக்கு அழைத்தவுடன் அவரோ " என்ன நந்தன் காலையிலேயே போனை போட்டு என்ன பேசப் போறீங்க? ஹாஸ்பிடல் விஷயமா பேசுனோமே அந்த ரிப்போர்ட் எல்லாம் கிடைச்சிருச்சா?", என வினவினார்.


அதற்கு பதிலாக "சார்! அதெல்லாம் எதுவும் கிடைக்கலை. இப்ப போலீஸ் ஸ்டேஷனிலிருந்து என்னையும், எங்க அம்மாவையும் வரச் சொல்லி இருக்காங்க. நீங்க கொஞ்சம் வர முடியுமா?", என நந்தன் வினவினான். அடுத்ததாக என்ன வரும் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது அதற்கு தயாரான நிலையிலேயே வினவினான்.


"காலையிலேயே போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வர சொல்லி இருக்காங்கன்னா நீங்க என்ன பண்ணுனீங்க?", என மறுபுறம் இருந்தவர்தான் வக்கீல் என்பதை நிரூபித்தார். "நான் எதுவுமே பண்ணலை. எதையாவது பண்ணி இருந்தாதானே என்னைக்கோ நான் உருப்பட்டுருப்பேனே", என தன்னைத்தானே நொந்து கொண்டவன் அப்போதும் தான் செய்த செயலை பற்றி அவரிடம் மூச்சு விடவில்லை.


" எதுவுமே பண்ணாம காலங்காத்தால போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கூப்பிட வரமாட்டாங்க நந்தன்!", எனக் கூறிய வக்கீல்"கிளம்பி போயிட்டு வாங்க! போயிட்டு வந்ததுக்கு அப்புறம் நான் தேவைப்பட்டா மட்டுமே வருவேன். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் என்னை போன் பண்ணி கூப்பிட்டுக்கிட்டு இருக்காதீங்க.


உங்களோட விவாதத்துக்கு கேசை மட்டும்தான் நான் எடுத்து நடத்துறேன். அதை மனசுல வச்சுக்கோங்க. அதுல ஜெயிச்சு தர வேண்டியது மட்டும்தான் என் வேலை", எனக் கூறிவிட்டு தன்னுடைய அழைப்பை துண்டித்துவிட்டார்.


எல்லாம் என் நேரம், காலம் என புலம்பிக்கொண்டே அவனும் சாவித்திரி உடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றான். ஸ்டேஷனுக்கு சென்றவுடன் அந்த கான்ஸ்டபிள்கள் இருவரும் நேராக இன்ஸ்பெக்டரிடம் சென்று சாவித்திரி பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறிவிட்டார்கள்.


ஏற்கனவே நந்தனின் மேல் மிகவும் கடுப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் சாவித்திரி பேசிய பேச்சினை கேட்டு அங்கிருந்தவர்களிடம் "மத்தியானம் வரைக்கும் அம்மா,பையன் ரெண்டு பேரையும் அப்படியே உட்கார விடுங்க. இருக்குற மத்த வேலையெல்லாம் கவனிங்க. என்ன கேட்டாலும் இன்ஸ்பெக்டர் வேலையா இருக்காங்க அப்படின்னு மட்டுமே சொல்லிடுங்க", எனக் கூறி விட்டு மற்ற வேலைகளையும் மற்ற வழக்குகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.


வந்து இரண்டு மணி நேரம் கடந்தும் தங்களை அழைக்காததால் சாவித்திரியும், நந்தனும் தங்களின் பொறுமையை இழக்க தொடங்கியிருந்தனர். ஒவ்வொரு முறையும் நந்தன் எழுந்து சென்று அங்கிருந்த ரைட்டரிடம் "இன்ஸ்பெக்டர் எப்ப வருவாங்க? வந்து ரொம்ப நேரமா காத்திருக்கோம். வேற வேலை இருக்கு. அதை எப்பப் பாா்க்குறது?", என கேட்கும் பொழுதெல்லாம் அவர்களின் ஒரே பதில்,


"இன்ஸ்பெக்டர் வேற ஒரு கேஸ்ல பிசியா இருக்காங்க. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. அவங்களே உங்களை கூப்பிடுவாங்க. எங்களுக்கும் தான் வேலை இருக்கு. நீங்க ஒருத்தர் மட்டும் கிடையாது..இது மாதிரி நிறைய பேர் வந்து காத்துக்கிட்டு இருக்காங்க நீங்களும் பார்க்கிறீங்க இல்லையா?", என பதில் கூறினர்.


ஆனால் அவர்கள் கூறியது போல் பலர் வந்து சென்றாலும் அவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் அரைமணி நேரத்தில் உள்ளே அழைக்கப்பட்டனர். சாவித்திரி மேலும் தன் பொறுமையை இழந்து பேச ஆரம்பித்த பொழுது அங்கே நின்றிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் "இங்க பாருங்கம்மா! என்ன காரணம்னு தெரியலை. உங்களை காக்க வச்சுக்கிட்டு இருக்காங்க. இதுக்கு மேலே நீங்க ஏதாவது பேசினா இன்னிக்கு நாள் முழுக்க காத்திருந்தாலும் பார்க்க முடியாம திரும்பவும் நாளைக்கு வர மாதிரி இருக்கும். அதுக்கு சம்மதம்னா உங்க வாயை திறந்து பேசுங்க. இல்லைன்னா வாய மூடிட்டு உட்காருங்க", என அதட்டினாா்.


அவர் கூறிய பின்னர்தான் நந்தனுக்கு இது தன் தாயார் காலையில் பேசியதற்கான விளைவு என புரிந்தது. அதன் பின்னர் சாவித்திரியை எதுவும் பேச விடவில்லை. அவனும் எழுந்து சென்று இன்ஸ்பெக்டர் எப்ப கூப்பிடுவாங்க என்ற கேள்வியை கேட்கவுமில்லை.


நேரம் கடந்து சென்று இன்ஸ்பெக்டரும் அவர்களை கண்டுகொள்ளாமல் தன்னுடைய மதிய உணவிற்கு சென்றுவிட்டு மூன்று மணியளவில்தான் ஸ்டேஷனுக்கு திரும்பினார். திரும்பியவுடன் அந்த அம்மா பையன் ரெண்டு பேரையும் வர சொல்லுங்க என தனது அறைக்கு வரவழைத்தார்.


அவா்கள் வந்தவுடன் இருவரையும் அமர கூட சொல்லாமல் "சொல்லுங்க நந்தன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங் போன தடவையே நீங்களும், உங்க அம்மாவும் தேவை இல்லாம அனுசுயா தேவிகிட்ட பிரச்சனை பண்ணக் கூடாதுன்னு சொல்லிதான் அனுப்புனோம். அப்படி இருந்தும் நேத்து ராத்திரி அவங்க வீட்டு முன்னாடி நின்னு அசிங்க அசிங்கமா கத்தியிருக்கீங்க.


அதைக் கேட்டுட்டு உங்க மேல நடவடிக்கை எடுக்க சொல்லி பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க. நீங்க இதுக்கு என்ன பதில் சொல்றீங்க?", என எடுத்த எடுப்பிலேயே எடுப்பிலேயே அதட்டலுடன் வினவினார்.


இன்ஸ்பெக்டர் கூறிய பின்னர்தான் சாவித்ரிக்கு நந்தன் முதல் நாள் செய்த செயல் தெரிந்தது. மகன் செய்துவிட்டு வந்த செயல் மனதிற்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் இப்பொழுது அதற்காக ஸ்டேஷன் வரவழைத்து விட்டனரே என்ற பயமும் அவருக்கு இருந்தது. இன்ஸ்பெக்டர் தான் கேட்ட கேள்விக்கு நந்தன் எதுவும் பதில் கூறாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்த இன்ஸ்பெக்டா்


"என்ன நந்தன் கேட்ட கேள்விக்கு இபதில் சொல்ல முடியுமா? சொல்ல முடியாதா?", என்றார். அவாின் கேள்விக்கு "மேடம்! நான் அவ வீட்டு பக்கம் போகவே இல்லை", என நந்தன் மிகவும் ஆணித்தரமாக ஒரு பொய்யை கூறினான்.


"போகவே இல்லையா? உங்களை பாா்த்ததுக்கு அத்தனை சாட்சிங்க இருக்காங்க. தப்பு செஞ்சதும் இல்லாம போலீஸ் ஸ்டேஷன்ல வந்து பொய் சொல்லிட்டு இருக்கீங்க. இதெல்லாம் சரிப்பட்டு வராது. உங்களை உள்ள வச்சா மட்டும்தான் நீங்க சரி வருவீங்க", என்றவாறு தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்தவரை பார்த்த நந்தன் "நான் போகவே இல்லை மேடம்!", என மீண்டும் அதே பொய்யை உரைத்தான்.


"நீங்க போகவே இல்லைன்னு பொய் சொல்றீங்க. நீங்க செய்ய தப்புக்கெல்லாம் உடந்தையா இருக்குற உங்க அம்மா வீட்டுக்கு வர்ற கான்ஸ்டபிளுக்கு காசு தவாங்க வந்துட்டீங்களான்னு எங்களை கேவலமாக பேசுறாங்க. என்னதான் நெனச்சிட்டு இருக்கீங்க அம்மாவும், மகனும்?


ஏற்கனவே குடும்ப வன்கொடுமை சட்டத்தில் உங்க மேல கம்ப்ளைன்ட் இருக்கு. இதுவும் சேர்ந்துச்சுன்னா நீங்க விவாகரத்துக்கு அப்ளை பண்ணி இருக்கீங்க இல்லையா? அதுல உங்க முன்னாள் மனைவிக்கு தான் கூடுதல் பலம் சேர்க்கும். இன்னொரு தடவை இதே மாதிரி கம்ப்ளையன்ட் வந்தது நான் கூப்பிட்டு வச்சு பேசிட்டு எல்லாம் இருக்க மாட்டேன். அரஸ்ட் பண்ணி உள்ள தள்ளிடுவேன். ஞாபகம் வச்சுக்கோங்க. இப்ப கிளம்புங்க", என இருவரையும் விரட்டாத குறையாக விரட்டிவிட்டார்.


இதுவும் அந்த தேவிதான் கம்ப்ளைன்ட் செய்திருப்பா என நினைத்த நந்தன் மனதிற்குள் கருவிக் கொண்டே வெளியே வந்தவன் தன்னுடைய தாய் தன்னுடைய கைகளை இறுகப் பிடித்த பின்னர் தன் அவர் புறம் திரும்பினான்.


அவரோ ஏண்டா நந்தா போனதுதான் போன என்னையும் கூட கூட்டிட்டு போய் இருக்க வேண்டியதுதானே! அந்த சனியனை இன்னும் நல்ல கிழிச்சிட்டு வந்திருப்பேனே! பொட்டச்சி எவ்வளவு தைரியம் இருந்தா உன் மேல திரும்பவும் கம்ப்ளையன்ட் போட்டு அந்த இன்ஸ்பெக்டரை வேற ஏவி விடுவா.


அந்த வக்கீலுக்கு போன் போட்டு நாம் அவனை பார்க்க வரோமுன்னு சொல்லுடா. இன்னிக்கு போய் பேசி அவ மேல இல்லாத கேஸ் எல்லாம் போட்டு அவளை உள்ளே தள்ளுறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண சொல்லு. எவ்வளவு காசு கேட்டாலும் அவனுக்கு கொடுத்துடலாம். அந்த சனியன் உள்ள போனதுக்கப்புறம் சொத்து முழுக்க நமக்குதானே வந்து சேரும்", என மகனுக்கு தன்னால் முடிந்த தூபத்தை போட்டுக் கொண்டிருந்தார்.
 
  • Like
Reactions: Sumathi mathi