வரமாய் வந்த வலிகள் - கதை திரி

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-7


தன் கையிலிருந்த விவாகரத்து கோரிய பத்திரத்தை பார்த்தும் அலைபேசியில் வந்த செய்தியை கேட்டும் அதிர்ந்து போயிருந்த நந்தன் மீண்டும் இதற்கு முன்னர் அழைத்த எண்ணிலிருந்து தன் அலைபேசி அதிர்வதை கண்டு அதனை ஏற்றுக் காதில் வைத்தான்.


நந்தன் காதில் வைத்தவுடன் "நந்தன் நாங்க மகளிா் காவல் நிலையத்துல இருந்து பேசுறோம். நீங்க வர்றப்ப உங்க அம்மாவையும் சேர்த்து கூட்டிட்டு வாங்க. அவங்க மேலயும் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க", எனக் கூறிவிட்டு இவன் என்ன ஏது என்று வினவுவதற்கு முன்னரே அழைப்பை துண்டித்து விட்டார்கள்.


வெளியே சென்ற மகன் நீண்ட நேரமாக உள்ளே வராமல் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்க்க வந்த சாவித்திரி அவனின் நின்ற நிலையை பார்த்து விட்டு "ஏன்டா உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா? கையில் ஏதோ பேப்பரை வச்சுகிட்டு அதையும், போனையும் மாத்தி மாத்தி பாாடத்துக்கிட்டு இருக்க. உள்ள வாடா!", என நந்தனை அதட்டியதில் தெளிந்தவன் இதனை வெளியில் வைத்து பேசினால் தன் தாய் ஊருக்கே தம்பட்டம் அடித்து விடுவார் என்று எண்ணிக்கொண்டு எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தான்.


அவன் உள்ளே வந்தவுடன் "என்னத்த திரும்ப திரும்ப பாா்த்துகிட்டு இருந்த? என்ன விஷயம்? அந்த வீட்டை விக்கிறதுக்கு எதுவும் வழி தெரிஞ்சிருச்சா", என சாவித்திரி வினவியதும் "கொஞ்சம் உக்காரும்மா! உன்கிட்ட பேசணும்", என அவரையும் அமர வைத்துவிட்டு அவரது அருகில் நந்தன் தானும் அமர்ந்தான்.


மகனின் முஸ்தீபுகளை கண்டவள் அவனை யோசனையுடன் கண்டிட நந்தன் தன்னுடைய வாயை திறந்து "அம்மா! நீயும், நானும் நினைச்ச மாதிரி இந்த தேவி லேசுப்பட்டவ இல்லை. பெரிய பெரிய வேலை எல்லாம் பார்த்து வச்சிருக்கா", எனக் கூறினான்.


"அந்த ஊமச்சியால என்னடா பண்ண முடியும்? நான் ஒரு சவுண்ட் விட்டா மூலையில் முடங்கி உட்கார்ந்திருப்பா. நீ ஏன் கவலைப் படுற? அவளே கையெழுத்தைப் போட்டு நம்மகிட்ட குடுத்துடுவா", என சாவித்திரி அப்போதும் தன்னுடைய கெத்துக் குறையாமல் பேசிக்கொண்டிருந்தார்.


"கையெழுத்துப் போட்டு தான் கொடுத்துட்டா. ஆனா நீயும், நானும் நினைச்ச மாதிரி இன்னொரு கல்யாணம் பண்றதுக்கு கையெழுத்து போடலை. விவாகரத்து கேட்டு கையெழுத்து போட்டுருக்கா. அது மட்டும் கிடையாது. உன் மேலயும்,என் மேலயும் போலீஸ்ல குடும்ப வன் கொடுமை சட்டத்தின் கீழ புகார் கொடுத்திருக்கா. நாளைக்கு காலைல நாம ரெண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகணும்", என நந்தன் கூறியதை கேட்டவுடன்


"என்னது விவாகரத்து கேட்டு இருக்காளா அந்த சண்டாளி?", என்று சாவித்திரி பெருங்குரலெடுத்துக் கத்த அவரை "அமைதியா இரு இன்னும் முழுசா படிக்கலை", எனக்கூறிவிட்டு தன் கையில் இருந்த விவாகரத்து கோரிய நோட்டீசை நந்தன் படிக்க ஆரம்பித்தான்.


அதில் ஒவ்வொரு வரியும் படிக்கப் படிக்க அவனது உள்ளமும், மூளையும் பெருமளவில் சூடாக ஆரம்பித்தது. அமர்ந்த நிலையில் அதனைப் படித்துக் கொண்டிருந்தவன் உடனடியாக எழுந்து நின்று "இவளையெல்லாம் வெட்டிப் போட்டாலும் ஆத்திரம் தீராது. எக்க வார்த்தை யூஸ் பண்ணி இருக்கான்னு பாரு", என தன் தாய்க்கு இணையாக நந்தனும் கத்த ஆரம்பித்திருந்தான்.


" என்னடா பண்ணி வச்சிருக்கா? என்கிட்ட தா", என அவர் பிடுங்குவதற்கு முன்னர் அவனே கூற ஆரம்பித்தான் "நான் ஆம்பளையே இல்லை, அதனால விவாகரத்து குடுங்க அப்படின்னு சொல்லி கேட்டுருக்கா. அதுமட்டுமில்லாம இத்தனை வருஷமா அவ வாழ்க்கையை நாம வீணடிச்சதுக்கு குறைஞ்சது ஒரு கோடி ரூபாவாச்சும் ஜீவனாம்சம் வேணும்னு கேட்டுருக்கா.


வேலை இல்லாம இருக்காளாம். வாழ்நாள் முழுவதும் அந்த காச வச்சு தான் சமாளிக்கணும்னு கேட்டிருக்கா.ஒத்துகிட்டு கொடுத்துடுவோமா", என அவன் கோபத்தில் கத்த சாவித்திரியும் யோசனையில் ஆழ்ந்தார்.


"இந்த முட்டாக் கழுதைக்கு யார்டா இதெல்லாம் சொல்லிக் கொடுக்குறாங்க?", என அவர் யோசனையுடன் கேட்டிட நந்தனும் அதே யோசனையில் ஆழ்ந்தான்." சனியன் வீட்டை விட்டு வெளிய போகாது, அந்த டப்பா போன்ல அவளோட அம்மா, அப்பா இருந்த வரைக்கும் பேசுனா,அவங்க மண்டைய போட்டதுக்கப்புறம் அதுக்கும் பிரயோஜனம் கிடையாது. வேற எவன் கூடவாதுபழக்கம் இருக்குமோ! நாம அதை சரியாக கவனிக்காம இருந்துட்டோமா?", என சாவித்திரி தன்னுடைய சந்தேகங்களை ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே போக நந்தனுக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை.


அவன் அறிந்தவரை தேவி வெளியில் தனியாக எங்கும் செல்வதில்லை. மருத்துவமனைக்கு செல்லும் பொழுது கூட அவளது அப்பா அம்மாவின் பணத்தில் சாவித்திரியோ நந்தனோ யாரோ ஒருவர் சென்று வருவர். அதுவும் அந்தப் பணத்திற்கு செலவு கணக்கு காண்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே!


தேவிக்கு எங்கிருந்து இந்த தைரியம் வந்தது என அம்மாவும்,மகனும் மாத்தி மாத்தி சிந்தித்துக் கொண்டிருந்தனரே தவிர அவர்களால் அவர்களின் மேல் இருந்த தவறை உணர முடியவில்லை.


அந்த நேரத்தில் சாவித்திரியின் அலைபேசிக்கு வந்த அழைப்பினால் தங்கள் சிந்தனை களைந்தவர்கள் அழைப்பது யார் என்று பார்த்தால் அதில் முன்பின் தெரியாத எண் ஒன்று தென்பட்டது. சாவித்திரி அதனை எடுக்கும் முன்னர் நந்தன் அதனைத் துண்டித்திருந்தான்.


"ஏன்டா என்னை போன் எடுக்க விடாம பண்ணுன? நான் யாருன்னு பார்த்திருப்பேன்ல", என சாவித்திரி வினவியதற்கு "இப்போதைக்கு யார் போன் பண்ணுனாலும் எடுக்க வேண்டாம்மா. நாளைக்கு போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்து என்ன பண்ணலாம்னு பார்ப்போம்", எனக் கூறிய நந்தன் யாரேனும் தனக்கு தெரிந்த வக்கீலை அழைத்துச் செல்லலாமா என சிந்திக்க ஆரம்பித்து இருந்தான்.


தன்னுடைய சிந்தனையை சாவித்திரியிடம் கூறியதற்கு "அதெல்லாம் வேண்டான்டா... எனக்கு தெரியும், அந்த சனியனை போலீஸ்காரங்க கையில ஒரு நூறு ரூபாய் வச்சு ரெண்டு தட்டு தட்டி நம்ம கூட அனுப்ப சொன்னா அனுப்பிடுவாங்க. நீ ஒன்னும் கவலைப்படாத. அம்மாவுக்கு தெரியாதது எதுவும் கிடையாது. நீ தைரியமா இரு", என தன்னைப்போல மற்றவர்களும் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் கூறிய சாவித்திரி அதன் பின்னர் மறுநாள் தேவியை இழுத்து வந்த பின்னர் எவ்வாறு எல்லாம் அவளை கொடுமைப்படுத்த வேண்டும் என பட்டியலிட ஆரம்பித்திருந்தார்.


இவர்களின் மன நிலைக்கு மாறாக அங்கு அனுசுயா தேவி தெளிவுடன் அமர்ந்திருந்தாள்.என்று சாவித்திரி தன் மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்வதை பற்றி பேசினாரோ அன்றைய இரவில் தங்களது அறையில் இருந்த கணினியின் மூலமாக யாரெல்லாம் வழக்கறிஞர்கள் உள்ளார்கள் என ஜஸ்ட் டயல்( Just dial) மூலமாக கண்டறிந்திருந்தாள். ஒருமுறை மருத்துவமனை சென்று இருந்த பொழுது அங்கிருந்த இருவர் எதையாவது கண்டுபிடிக்கணும் நெட்டில ஜஸ்ட் டயல் மூலமாக கண்டுபிடிக்கலாம் என கூறியது தேவியின் ஞாபகத்தில் வந்ததே அவள் கணினி உபயோகிப்பதற்கு காரணமாக இருந்தது. அதில் நிறைய பெயர்கள் இருந்திட யாரிடம் தன் வழக்கினை கொண்டு போவது என அவளுக்கு தெரியவில்லை.


வரிசையாக ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டே வந்தவள் அதில் இருந்த சுஜாதா என்ற பெயரில் சற்று ஈர்க்கப்பட்டு இவரும் பெண்தானே அவரிடமே கேட்கலாம் என அவரின் எண்ணையும் குறித்து வைத்துக்கொண்டு மறுநாள் சாவித்திரி வெளியில் சென்றிருந்த நேரத்தில் அவருக்கு அழைத்து அவரை கண்டிட வேண்டும் எனக் கேட்டாள்.


மறுமுனையில் இருந்தவரும் அவளது பதட்டத்தை புரிந்து கொண்டாரோ, இல்லை அனைவரிடமும் கூறுவதுபோல எதுவா இருந்தாலும் கோர்ட்ல வந்து பேசுங்க இத்தனை மணிக்கு வாங்க என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். என்னது கோா்ட்டுக்கா என முதலில் திகைத்தவள் வேறு வழியின்றி சாவித்திரியிடம் இல்லாத காரணங்களை எல்லாம் கூறிவிட்டு அவரை சென்று கோர்ட்டில் சந்தித்தாள்.


அங்கு சென்றவளிடம் சுஜாதா அவளுக்காக மறுநாள் வீட்டிற்கு வந்து சந்தியுங்கள் எனக் கூறியவுடன் அதற்கும் ஒரு காரணத்தை கூறிவிட்டு மறுநாள் அவரை சென்று சந்தித்த பொழுது தேவி ஒரு தெளிவான முடிவிற்கு வந்திருந்தாள். அதன்படியே அவரிடம் "மேடம் எனக்கு விவாகரத்து வேண்டும்", என முதலில் கூறினாள்.


இதனை எதிர்பார்த்தேன் என்பது போல அவர் மேலே கூறுமாறு கூறியவுடன் "எனக்கு விவாகரத்து கிடைக்கிறது மட்டும் முக்கியம் கிடையாது. ஆனா அதுக்கு பின்னாடி என்னோட புருஷன், அவங்க அம்மா எந்த ஜென்மத்திலும் அவருக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கிறதைப் பத்தி நினைக்கவே முடியாதபடி ஏதாவது செஞ்சு கொடுங்க", எனக் கூறினாள்.


முதலில் தேவியின் விவாகரத்து கோரிக்கையை சாதாரணமாக ஏற்றுக்கொண்டவர், இரண்டாவது அவள் வைத்த கோரிக்கையை இவள் பழிவாங்குவதற்காக கூறுகிறாளோ என்று எண்ணினார். அவரது ஜூனியரான கோபியும் அவ்வாறே எண்ணினான் என்பதை விட அவ்வாறு தான் என முடிவு கட்டியவன் இதனை சுஜாதா எடுத்துக்கொள்ள வேண்டாம் என சைகையில் கூறிக் கொண்டிருந்தான்.


ஆனால் அவரோ எத்தனை பேரை வழக்கிற்காகப் பார்த்துள்ளார். தேவியை பார்த்தால் எதுவும் பழிவாங்கும் குணம் படைத்தவள் போன்ற தெரியவில்லை. அவள் இவ்வாறு கூற வேண்டும் என்றால் வேறு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என தெளிந்து அவளிடமே சிறுசிறு கேள்விகளாக கேட்டு அவளையும் அறியாமல் அனைத்து உண்மைகளையும் வாங்கியிருந்தார்.


அவள் கூறியவற்றிலேயே மனம் கனத்துப் போனவர் அன்றைய தினம் என்ன செய்தால் அவள் கோாிக்கை நிறைவேறும் என்பதை அவளிடம் கூறவில்லை. அவள் முதலில் இந்த முடிவில் தெளிவாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவருக்கு அப்பொழுது இருந்தது. எங்கே அந்தப் பெண் இப்போது இவ்வாறுக் கூறி விட்டு வீட்டுக்கு சென்றவுடன் மாறி விடுவாளோ என்று தான் எண்ணினார்.


அதனால்தான் அவள் கேட்ட ஒரு வாரத்தை தனக்குமான நேரமாக எடுத்துக்கொண்டு அந்த வாரத்தில் அழைக்குமாறு கூறிவிட்டு தன்னுடைய பணியை தொடர ஆரம்பித்து இருந்தார். தேவியும் அவள் சொல்லிவிட்டு சென்றிருந்த ஒரு வாரத்திலேயே சுஜாதாவை மீண்டும் அழைத்து "மேடம்! நீங்க எனக்கு எப்ப அப்ளை பண்ணி டைவர்ஸ் வாங்கி தருவீங்க?", எனக் கேட்டாள்.


அவள் கேட்டவுடன் "நீங்க நாளைக்கு நேரா வாங்க அனுசுயா!", எனக் கூறியபொழுது "மேடம்! நான் அவங்க வீட்டை விட்டு வெளியில் வந்துட்டு உங்களை பார்க்குறேன். இப்ப இங்க இருந்து பார்க்க முடியாது", எனக் கூறினாள். எப்ப வீட்டை விட்டு போறீங்க? எங்கே போறீங்க? என அவளிடம் விவரங்களைக் கேட்டு அறிந்தவர் "நீங்க கிளம்பறதுக்கு முன்னாடி போன் பண்ணி சொல்லுங்க. உங்களை பிக்கப் பண்றதுக்கு நான் ஹெல்ப் பண்றேன். நீங்க ஏதும் புக் பண்ண வேண்டாம்", என தேவியிடம் கூறியிருந்தார்.


அதன்படியே தேவியும் கூறிட அவள் கிளம்பிய நேரத்திற்கு சரியாக தங்களுடைய ஆள் ஒருவருடன் அவள் செல்வதற்கான வண்டியையும் சுஜாதா அனுப்பி வைத்திருந்தார். சுஜாதாவின் ஜூனியரான கோபி "இதெல்லாம் ஏன் மேடம் நமக்கு வேண்டாத வேலை. கேஸ் வந்தா விவாகரத்து மட்டும் வாங்கிக் கொடுத்துட்டு போகாம நீங்க சமூகசேவை பண்ணிக்கிட்டு இருக்கீங்க... இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வருமா?", என புலம்பிக் கொண்டிருந்தான்.


ஆனால் தேவியின் கதையை கேட்ட பின்னர் சுஜாதா தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்திருந்தார். அதனால்தான் அவளுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொண்டே அவளிடம் அவ்வப்பொழுது பேசவும் செய்தார். வீட்டை விட்டு வெளியேறியவள் நேராக தன்னுடைய பொருட்களை தன் தாய், தந்தையர் வசித்த வீட்டில் சென்று வைத்துவிட்டு சுஜாதாவை காண சென்றிருந்தாள்.


சுஜாதா அதன்பின்னர்தான் அவளுக்கு என்ன செய்யப் போகின்றாா் என்பதை விளக்கமாக கூறினார். "இங்கப் பாருங்க அனுசுயா! நீங்க சொன்னதிலிருந்து ஒரு விஷயம் நல்லா புரியுது. இப்ப இந்த விவாகரத்து விஷயமா உங்க முன்னால் கணவருக்கும், மாமியாருக்கும் அதிர்ச்சி தர மாதிரி சில விஷயங்களை செஞ்சா உங்களுக்கு எந்த விதத்திலும் ஏதாவது பிரச்சனை தந்துட்டுதான் இருப்பாங்க. அதை உங்களால் சமாளிக்க முடியுமா?", எனக் கேட்டார்.


"15 வருஷமா தொடர்ந்து கேட்காத வார்த்தை எல்லாம் கேட்டு அமைதியா மட்டுமே வாழ்ந்து இருக்கேன் மேடம்! இப்பவும் அதே மாதிரி கடந்து போய்டுவேன் மேடம்!", என தேவி கூறினாள். தேவியின் பதிலைக் கேட்ட சுஜாதா " நான் அந்தப் பேச்சுகளை பத்தி பேசல அனுசுயா! உங்க மாமியாரோ, கணவரோ உங்களோட நடத்தையை பற்றி தவறான கருத்துக்களைப் பரப்பி விட்டு அதனாலதான் நீங்க விவாகரத்து வாங்கிட்டீங்கன்னு சொல்லி சமுதாயத்திலே உங்களை பல விதமா பேசுவங்க .அப்படி சமுதாயத்தில் பேசுறப்ப உங்களால தாங்க முடியுமானு அர்த்தத்தில் தான் கேட்கிறேன்", என சுஜாதா தன்னுடைய உரையை தெளிவாக விளக்கினார்.


"எனக்கு நல்லாவே புரியுது மேடம்! இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வர திட்டம் போடுற அந்த வீட்டுல இன்னும் அடிமையாக வாழ்ந்து செத்துப் போறதை விட இந்த மாதிரி சமுதாயத்தில் இருக்கிற ஆட்களோட பேச்சைக் கேட்பது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது", என வெறுத்து போன குரலில் அனுசுயாக் கூறியதை கேட்டு சுஜாதாவிற்கு பாவமாகிவிட்டது.


"சரி நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடலாம். விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்புறதுக்கு முன்னாடி ஒரு வேலை பண்ணுங்க. அனைத்து மகளிர் காவல் நிலையத்துல போய் உங்க முன்னாள் கணவர் மேலேயும், அவங்க அம்மா மேலேயும் குடும்ப வன்கொடுமை சட்டத்தின் கீழ புகார் கொடுங்க", என சுஜாதாக் கூறினார்.


அவர் கூறியதைக் கேட்டவுடன் அனுசுயா "மேடம்! போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் போகனுமா", என வினவினாள். "சாதாரணமா அப்படின்னா போகத் தேவையில்லை. ஆனா உங்களோட கேஸ்ல நீங்க கண்டிப்பா ஒரு கம்ப்ளைன்ட் குடுத்துடுங்க. அவங்க கூப்பிட்டு ஒரு தடவை விசாரிச்சு வாா்னிங் கொடுத்தா மட்டுமே இந்த விவாதத்துக்கு கேஸ் முடியிற வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் உங்களை தொந்தரவு பண்ணாம இருப்பாங்க. இல்லைன்னா ஏதோ ஒரு வகையில தொந்தரவு பண்ணிக்கிட்டு இருப்பாங்க. இது ஒருவகையான மறைமுக மிரட்டல்ன்னு கூட வச்சிக்கோங்க", என அனுசுயாவிற்கு எடுத்துரைத்த சுஜாதா அதன் பின்னர்தான் கூறப்போகும் விஷயத்திற்கு அவள் எவ்வாறு வினை ஆற்றுவாள் என யோசித்து விட்டு தன்னுடைய பேச்சை தொடர்ந்தார்.


"அனுசுயா! உங்களுக்கு குழந்தை இல்லை அதனால உங்க முன்னாள் கணவா் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க உங்களை கட்டாயப்படுத்துறாங்க அப்படின்னுக் கேட்டா ஏதோ ஒரு வகையில கேஸ் இழுத்துட்டுப் போகும். அதற்கு சரியான ஆதாரங்களையும் நம்மளால காமிக்க முடியாது. நீங்க கேட்ட மாதிரி உங்க முன்னாள் கணவருக்கு இன்னொரு கல்யாணம் நடக்காமல் தடுக்கவும், உங்களையும் அந்த விவாக பந்தத்துல இருந்து வெளியில கூட்டிட்டு வரவும் ஒரே ஒரு காரணம் சொன்னா மட்டும் தான் விவாகரத்து ரொம்ப ஈசியா கிடைக்கும்", எனக் கூறி சற்று நிறுத்தியவர் அவளின் முக மாற்றங்களை குறித்துக் கொண்டே தன் பேச்சைத் தொடர்ந்தார்.


"நாம விவாகரத்து கேட்கிறது உங்க முன்னாள் கணவர் ஆண்மையற்றவர்(Impotent)அப்படின்னு சொல்லிதான் கேட்க போறோம்", என்றவுடன் அனுசுயா சட்டென்று எழுந்துவிட்டாள். "மேடம்! அப்படியெல்லாம் சொன்னா அது அது பொய் சொல்றதுக்கு சமம் ஆச்சே. பெரிய பிரச்சனையாக மாறிடாதா?",என தட்டுத்தடுமாறி தன்னுடைய வார்த்தைகளை வெளியிட்டவளை பாவமாக பார்த்தவர் "கோர்ட்ல ஒரு நாளைக்கு நாங்க எவ்வளவோ வழக்குகளை பார்த்துகிட்டு இருக்கோம். எல்லா வழக்குலயும் உண்மை மட்டுமே இருக்கும்ன்னு சொல்ல முடியாது. சில தேவைப்படுற இடங்கள்ல நமக்கு சாதகமான வார்த்தைகளை நாம உபயோகிச்சுதான் ஆகணும்.


இப்ப ஆண்மைக்குறைபாடு(Infertility) அப்படின்னு சொன்னா அதனால பெருசா எந்த பாதிப்போ, சாதகமோ நமக்கு இருக்காது. அதுவே ஆண்மையற்றவர் அப்படின்னு சொல்லிட்டா ஈஸியா கேஸ் முடிஞ்சிடும். இதுக்கு டாக்டர்கிட்ட செக் பண்ணனும் அப்படின்னு சொன்னாலும் நம்மளால நமக்கு சாதகமான ரிப்போர்ட் வாங்க முடியும். அதை நாங்க பார்த்துப்போம். உங்ககிட்ட சொல்றதுக்கு காரணம் இந்த காரணத்தை சொல்லிதான் நாம அனுப்பப் போகிறோம். அது சம்பந்தமாக ஏதாவது பேச்சு பேசினாலும் நீங்க அதுக்கு ரெடியா இருக்கணும்", என சுஜாதா கூறிய பின்னர் சற்று நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த அனுசுயா இறுதியாக அவர் கூறியவைக்கெல்லாம் ஒத்துக் கொண்டு தன்னுடைய கையெழுத்தினை இட்டாள்.
 
  • Like
Reactions: Sumathi mathi

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-8

தேவி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டவுடன் சுஜாதா அதன் பின்னர் அவளிடம் " ஜீவனாம்சம் நீங்க எவ்வளவு எதிர் பாா்க்குறீங்க அனுசுயா?", என்ற வினாவினை எழுப்பினார்.

ஜீவனாம்சம் என்றதற்கும் அதிர்ந்தவள் "எனக்கு அதெல்லாம் வேண்டாம் மேடம்! என் அப்பா, அம்மா போட்ட நகை, அவங்க கொடுத்த பணம் அதை மட்டும் அவங்க கொடுத்துட்டா போதும். வேற எதுவும் எனக்கு வேண்டாம்", என மறுத்துக் கூறினாள். "அனுசுயா! பிராக்டிகலா பேசுங்க... வாழ்க்கையில பணம் கண்டிப்பா தேவை. அந்த நகையும் பணமும் உங்களுக்கு எத்தனை நாளைக்கு சரிவரும்.

உங்க வாழ்நாள் முழுமைக்கும் தேவையான பணத்தை கொடுக்க வேண்டியது உங்க முன்னாள் கணவருடைய கடமை. நீங்க ஒரு தொகை சொல்லுங்க. அதுக்கு ஏத்த மாதிரி நாம கேட்டு அனுப்பலாம். அதுல அவங்க எவ்வளவு தர முடியும்னு அவங்க வக்கீல் மூலமா நம்மகிட்ட பேசுவாங்க. அப்ப நாம பாா்த்துக்கலாம்", என சுஜாதா அவளுக்கு மீண்டும் வலியுறுத்தினார்.

எனக்கு வாழ்நாளுக்கு வேண்டாம் மேடம்! என்னோட வலிக்கு அவங்க கொடுக்க முடியுமா?", என அனுசுயா தேவி கேட்டவுடன் "கண்டிப்பா... இந்த 15 வருஷமா நீங்க அனுபவிச்ச கொடுமைக்கு அவங்க கொடுத்துதான் ஆகணும்", என சுஜாதா தேவியின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் கூறினார்.

"நான் சொல்றது 15 வருஷமா அனுப்பிச்ச கொடுமையை இல்லை மேடம்! ஐவிஎஃப் ட்ரீட்மென்ட் போறப்ப அந்த முட்டையை வெளியில் எடுக்கறது ஒருவகை வலி. திரும்ப கரு வளர்ந்ததுக்கு அப்புறம் கர்ப்பப்பையில் வைப்பாங்க. அப்படி வைக்கிறதை எப்படி வைப்பாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?", என சுஜாதாவை பார்த்து கேட்டவள் அவரின் பதிலை எதிர்பார்க்காமல் பேச ஆரம்பித்தாள்.

" வளா்நத கருவை கர்ப்பப்பையில் வைக்கணும்னு சொன்னப்ப ஏதோ ஆப்ரேஷன் மாதிரி பண்ணிதான் வைப்பாங்கன்னு எதிர்பார்த்து போனேன். ஆனா அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது பிறப்புறுப்பு வழியாக ஒருவகையான ஊசியை வைத்து அந்த கர்ப்பப்பையை இழுத்து அதுக்குள்ள கருவை வச்சாங்க. அதுக்கு பிறப்புறுப்பை கொஞ்சம் கிழிக்க வேற செஞ்சாங்க, அது வேற விஷயம். கருவை வச்சதுக்கப்புறம் நடந்தது என்னன்னு தெரியுமா?", எனக் கேட்ட தேவியின் இதற்கடையில் விரக்தி புன்னகை தெரிந்தது.

" இடுப்புக்கு கீழே தலகாணியை வைச்சுடுவாங்க. அந்த தலகாணில நம்ம இடுப்பு,முதுகு பகுதி படுற மாதிரி படுத்ததும் என்னோட கால் ரெண்டையும் தூக்கி செங்குத்தா கட்டிவிட்டுடுவாங்க. அந்த விட்டத்தை நோக்கி என் கால் இருக்கணும். அதை கொஞ்சம் கூட நான் அசைக்கக் கூடாது. அரை மணி நேரத்துல இருந்து முக்கால் மணி நேரம் அப்படி வைக்கணும்னு சொல்லிட்டு முதல் தடவை எனக்கு ஒரு மணி நேரம் அதே மாதிரி வைக்க சொன்னாங்க.

வலி உயிர் போய் உயிர் வந்தது ஒருபக்கம். இன்னொரு பக்கம் அவமானமாக இருந்தது. எல்லாரும் முன்னாடி இப்படி இருக்க வேண்டியது இருக்கேன்னு அவமானமா இருந்துச்சு. இந்த வலியை நான் ஒரு தடவை மட்டும் அனுபவிக்கலை. பல தடவை அனுபவிச்சிருக்கேன். இந்த வலிக்கு ஏத்தமாதிரி உங்களால் என்ன வாங்கி தர முடியும் மேடம்?", என தேவி சுஜாதாவைப் பார்த்து எழுப்பிய கேள்வியில் அவர் மட்டுமல்ல அவரது அருகில் இருந்த கோபியும் அதிர்ந்துபோய் இருந்தான்.

சிறிது நேரம் எதுவுமே பேசாதவர் "அனுசுயா! பொதுவாக ஐவிஎஃப் பத்தி எங்களுக்கு ரொம்ப விவரம் தெரியாது. இந்த மாதிரி ட்ரீட்மென்ட் போறவங்களுக்கு சரியான மெடிக்கல் ரிப்போர்ட் தர்றது கிடையாது. என்ன பிரொசிஜர் பண்ணுனாங்க அப்படிங்கறதை எந்த ஒரு ஹாஸ்பிடலும் தர மாட்டாங்க. இந்த மாதிரி பல கேஸ் நிலுவையில இருக்கு. ஆனா உங்க விஷயத்துல நீங்க சொல்றது மட்டும் தான் ஆதாரமாக இருக்கும். இதை நாம கோர்ட்ல நிரூபிக்க முடியாது. இதுக்காக நான் உங்ககிட்ட சாரி கேட்டுக்குறேன். நீங்க அனுபவிச்ச வலியை அவங்களையும் அனுபவிக்க வைக்க என்னால முடியாது.

ஆனால் அதற்கு நஷ்ட ஈடா கேட்டு அந்தவகையில் அவங்களை கஷ்டப்பட வைக்க முடியும். நீங்க இந்த விஷயத்துல எல்லாம் யோசிக்காம ஒரு குறிப்பிட்ட தொகையை அவங்ககிட்ட கேட்டுதான் ஆகணும். நல்லவங்களா இருக்கலாம், ஆனா எல்லா இடத்திலேயும் நல்லவங்களாவே நாம வாழனும்னு அவசியம் கிடையாது. எதிர்ல இருக்குறவங்க நம்மகிட்ட மரியாதையா நடந்துகிட்டா நாமும் அதே மரியாதையை தரனும்.

எதிருல இருக்கிறவங்க நம்மகிட்ட அடாவடியா இருந்தா அந்த அடாவடித்தனத்தை 5% நாம காமிச்சா மட்டும்தான் இந்த மோசமான உலகத்துல நிலைக்க முடியும் அனுசுயா!", என பலவிதமாக தேவிக்கு வலியுறுத்தி ஜீவனாம்சத்திற்கும் அவளிடம் கையெழுத்து வாங்கி கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

தேவி அனுப்பியிருந்த இரு பத்திரங்களையும் எடுத்துக்கொண்டு நந்தன் தன் நண்பன் மூலமாக தெரிந்த வக்கீல் ஒருவரை பார்ப்பதற்கு சென்றுகொண்டிருந்தான். முதலில் போலீஸ் ஸ்டேஷன் சென்று வந்த பின்னர் வக்கீலை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தவன் சாவித்திரியின் இடைவிடாத தொந்தரவால் தன் நண்பனுக்கு அழைத்து வக்கீலை பார்க்க வேண்டும் எனக் கூறினான்.

அவனது நண்பனோ என்ன ஏது என்று தன் கேள்விக் கணைகளால் நோண்டி எடுத்து விட்டான். அதற்கு பதிலாக "போயிட்டு வந்து சொல்றேன்... நீ தெரிஞ்சவர் இருந்தா அவருக்கு போன் போட்டு நான் வர்றேன்னு மட்டும் சொல்லு", எனக் கூறி அழைப்பை துண்டித்து தனக்கான வக்கீலின் எண்ணையும் வாங்கி கொண்டு கிளம்பி விட்டான்.

இவன் பார்க்க சென்ற வக்கீலோ இருபக்கமும் ஆதாயம் தேடுபவர். எத்தனுக்கு எத்தன் வையகத்தில் உண்டல்லவா? அந்த இனத்தை சேர்ந்தவர்தான் இவனுடைய வக்கீல் ராஜ். நந்தன் அங்கு சென்று தான் வந்த காரணத்தை கூறியவுடன் "இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது. நீங்க பதிலுக்கு நோட்டீஸ் அனுப்புங்க.

விவாகரத்து தர முடியாது, ஜீவனாம்சம் தர முடியாதுன்னு சொல்லி போடலாம். அந்த பொண்ணுக்கு ஐவிஎஃப் பார்க்கிறதுக்கு நீங்கதானே காசு செலவழிச்சுருக்கனும். எல்லாமே நீங்க செலவழிச்சு, இப்ப உங்களை அவங்க அசிங்கப்படுத்திட்டாங்கன்னு சொல்லி மானநஷ்ட வழக்கு கூட போடலாம். அதை பத்தி நீங்க கவலையேப்படாதீங்க.

நாளைக்கு போலீஸ் ஸ்டேஷன் போறப்ப நான் வேணும்னா சொல்லுங்க கூட வந்துடுறேன்", என பேசிக்கொண்டே ஒரு தாளில் வரிசையாக ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என எழுதி அதனை நந்தனின் புறம் நீட்டினார். அது என்ன என்று பார்த்தவன் அதிலிருந்த எண்களையும், அவரையும் மாறி மாறி பார்த்தான்.

"அது ஒன்னுமில்லை. ஒவ்வொன்னுக்கும் ஒரு விலை இருக்கத்தானே செய்யுது. இப்ப நான் வாதாடி உங்களுக்கு ஜெயிச்சு கொடுத்துட்டா மொத கல்யாணத்து மூலமா வந்த நகை, பணம் எல்லாம் உங்களுக்கு மட்டும்தான்... அடுத்து வரப்போற கல்யாணத்துல வர பணம், நகை எல்லாம் உங்களுக்குதான். அதனால எனக்கு என்ன லாபம்? அதனாலதான் இது... இப்ப கன்சல்டேஷன் எனக்கு ஒரு பத்தாயிரம் கொடுத்திட்டு போயிடுங்க. அடுத்து நோட்டீஸ் அனுப்புறதுக்கு முப்பதாயிரம் ரூபாய் கொடுத்துடுங்க. நாளைக்கு காலைல போலீஸ் ஸ்டேஷன் வந்து உங்க சார்பா நானே பேசுறேன். நீங்க எதுவும் பதிலே பேச வேண்டாம்.

அதற்கான பீஸா ஒரு அம்பதாயிரம் ரூபா மாத்திடுங்க", என நந்தன் அங்கே அமர்ந்திருந்த ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ ஒரு லட்ச ரூபாய் பில்லை நீட்டிய வக்கீலை பார்த்து நொந்துதான் போனான்.

ஆனால் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு அவரிடம் பத்தாயிரம் மட்டும் கொடுத்துவிட்டு "மீதியை நாளைக்கு போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்து கொடுக்கிறேன்", என பேசியவன் அருகில் இருந்த ஏடிஎம்க்கு சென்று பணத்தை எடுத்து வந்து அவரிடம் ஒப்படைத்தான். அப்புறம் பாா்த்துக்கலாம் என முதலில் ஆரவாரத்துடன் பேசிய அந்த வக்கீலோ கொடுத்த பணத்தை வாங்கியதன் பின்னர் எதுவும் பேசவில்லை.

நந்தனிடம் பத்தாயிரம் ரூபாய் வாங்கிய வக்கீல் அடுத்து செய்த காரியம் தன்னிடம் அவனை அனுப்பி வைத்த நந்தனினட நண்பனுக்கு போன் செய்து "யோவ் என்னய்யா! உன் பிரண்டுன்னு சொல்லிட்டு வந்தவன் எமகாதகனா இருப்பான் போல இருக்கு... கல்யாணமாகி குழந்தை இல்லையாமே! இவன் மேலதான் தப்புன்னு சொல்லி அந்த பொண்ணு நோட்டீஸ் அனுப்பிருக்கு.

உண்மை இல்லாமலா அனுப்பி இருக்க போகுது.நீ உண்மையை சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி வாதாடி உன் ஃபிரண்டுங்கற காரணத்துக்காக ஜெயிச்சு தர்றேன்", என நந்தன் தன்னை பார்க்க வந்த காரணத்தை கூறியதோடு அவனது மானத்தையும் கப்பலேற்றிக் கொண்டிருந்தார்.

அந்தப் பக்கமிருந்த நண்பனும் "இருக்கும் சார்! இருக்கும், பதினஞ்சு வருஷமா சும்மாவா இருக்கும்? இவனோட பொண்டாட்டியை நான் வெளியில ரொம்ப பார்த்ததே கிடையாது. ஏதாவது விசேஷ வீட்டுக்கு கூட இவனும் இவனோட அம்மாவும்தான் வருவாங்க. அந்த பொண்ணு வந்ததே இல்லை. ஏதோ பார்த்து பண்ணி விடுங்க சார்!

ஆனா நல்ல வசதியான ஆள். ஏகப்பட்ட சொத்து சேர்த்து வச்சிருக்காங்க அவங்க அம்மா. அதோட இவனும் நல்லா சம்பாதிச்சு சேர்த்து வச்சிருக்கான். பார்த்து பண்ணி விடுங்க", என அவனும் தன் பங்கிற்கு உரையாற்றிவிட்டு வைத்தான்.

தன் கொடுத்து விட்டு சென்ற ஃபீஸ் பற்றி சாவித்திரியிடம் கூறியதற்கு நந்தன் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தான். "சனியன் புடிச்சவ, இவளால இருந்தப்பவும் நிம்மதியில்லை,இப்ப வீட்டை விட்டு தொலைஞ்சும் நிம்மதியில்லை. இருக்கட்டும் கேஸ் முடிஞ்சதுக்கு அப்பறம் இவளை நான் உண்டு இல்லைன்னு பண்றேன்.

எந்த நேரத்துல இந்த நாய் வீட்டுக்கு வந்தாளோ அன்னையிலிருந்து எனக்கு நிம்மதியே போச்சு... ஏன்டா காசை கொடுக்கிறதுக்கு முன்னாடி ஒத்த வார்த்தை என்கிட்ட கேக்க மாட்டியா? அந்த வக்கீல் ஏதோ சொல்லி ஏமாத்திட்டான். இதுக்கு தான் நானும் வரேன்னு சொன்னேன்", என சாவித்திரி கத்தி கொண்டு இருக்க நந்தனும் அதே தொனியில்தான் யோசிக்க ஆரம்பித்திருந்தான்.

ஆனால் இவர்கள் இருவரும் அறியாதது, அந்த பத்தாயிரம் என்பது இவன் அமர்ந்து பேசிவிட்டு வந்த ஒரு மணி நேரத்திற்கான தொகை மட்டும்தான். அதை மறுநாள் காலையில் நந்தனும், சாவித்திரியும் போலீஸ் ஸ்டேஷன் சென்ற பின்னர்தான் உணர்ந்தனர். இவர்கள் செல்வதற்கு முன்னரே அங்கு அனுசுயா தேவி தன்னுடைய வக்கீலான சுஜாதாவுடன் அமர்ந்திருந்தாள்.

அவளை பார்த்த உடன் சாவித்திரி எடுத்த எடுப்பிலேயே "ஏன்டி சனியனே! உன்னை வீட்டுல வச்சு இத்தனை நாளும் நான் சோறு போட்டு வளர்த்ததுக்கு என் மகன் மேல அபாண்டமா பழியை சுமத்தி எங்க மேல கம்ப்ளையன்ட் கொடுக்குறியா?", என பாய்ந்தார். அவரது சத்தத்திலேயே அவர் பேசியதில் மிரண்டு போனவள் கண்களில் கண்ணீர் தளும்ப சுஜாதாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

அங்கிருந்த இன்ஸ்பெக்டர் இதனை பார்த்தவுடன் "என்னம்மா உங்களை பேச தான் வர சொல்லி இருக்கு. வந்த உடனே உங்க அதிகாரத்தை காமிக்குறதுக்கு இது உங்க வீடு கிடையாது, போலீஸ் ஸ்டேஷன். மரியாதையா அந்த ஓரமா போய் உங்க பையனோட உட்காருங்க. நாங்க கூப்பிடுறப்ப வந்தா போதும்", என ஒரு அதட்டல் இட்டார்.

நந்தன் தன் தாயை அடக்க முயன்றிட அவரோ "விடுடா! அந்த அம்மாகிட்ட போய் நான் என்னன்னு பேசிட்டு வரேன்", என அப்போதும் துள்ளதான் செய்தார். "பேசாம வந்து உட்காரும்மா. அவங்க கூப்பிடுறப்ப நாம பேசிக்கலாம். இந்தம்மாவை பார்த்தா இது அடங்குற மாதிரி தெரியலை. நீ போய் பேசி பிரச்சனையை பெரிசாக்கிடாத", என இழுத்துக் கொண்டு சென்று அமர்ந்தான்.

மேலும் சிறிது நேரம் கழிந்த பின்னரே முதலில் தேவியை அழைத்தவர்கள் அவளிடம் என்ன ஏது என்று விசாரித்தார்கள். தனக்கு நேர்ந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறிய தேவி இறுதியாக "என் பெயர் எனக்கு மறந்து போச்சு மேடம்! என்னோட அப்பா அம்மா அனுசுயா தேவின்னு பேர் வச்சு தேவின்னுதான் கடைசிவரைக்கும் கூப்பிட்டாங்க. ஆனா என்னைக்கு கல்யாணம் பண்ணி வந்தேனோ அன்னையிலிருந்து சனியன்,பீ டை, மலடி இந்த மாதிரி வார்த்தைகள் தான் எ கேட்டுட்டு இருக்கேன்", என விரக்தியுடன் உரைத்தாள்.

அதன்பின்னரே நந்தனையும் சாவித்திரியையும் அழைத்தனர். வக்கீல் யாரும் வந்திருக்காங்களா என அவர்கள் கேட்டதற்கு எங்க வக்கீல் இப்ப வருவார் என நந்தன் பதில் கூறுவதற்கு முன்னரே சாவித்திரி முந்திக்கொண்டு கூறினார்.

"அப்ப அவா் வரவும பேசுறீங்களா? இல்லை நீங்களே பேசுறீங்களா?", என இன்ஸ்பெக்டர் வினவியதற்கு அவா் வந்துரட்டும் எனக் கூறிய சாவித்திரி "அவர் எங்க வந்துட்டு இருக்காருன்னு கேளுடா", என மகனை ஏவினார். அவனுடைய அலைபேசி எடுத்துக் கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்த நந்தன் ராஜீக்கு அழைத்து "சார்! எங்க வந்திருக்கீங்க?", எனக் கேட்டான்.

" நான் எங்கே வரணும்?", என எதிர்முனையில் கேள்வி கேட்டவுடனே "நானும் என் அம்மாவும் போலீஸ் ஸ்டேஷன் வந்துருக்கோம். நீங்க ஏன் இன்னும் வராம இருக்கீங்க? உங்ககிட்ட நான் போலீஸ் ஸ்டேஷன் டீடையில் சொல்லிதானே வந்தேன்", என நந்தன் தன்னுடைய குரல் உயர்த்தியதில் எதிர்பக்கம் இருந்த ராஜ் சத்தமாக சிரித்தார்.

"என்ன நந்தன் என்கிட்ட ஏதோ கட்டு கட்டா காசு கொடுத்து வச்சி உங்களுக்காக வாதாட வர சொல்ற மாதிரி சொல்றீங்க?", என சிரித்தவர் "எல்லாத்துக்குமே ஒரு விலை இருக்கு. நேத்திக்கு சொன்னேன். நீங்க அதை மறந்திட்டு பேசுறீங்கன்னு நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாக ஒரு லட்ச ரூபா நீங்க இப்ப ட்ரான்ஸ்பர் பண்ணிவிட்டா மட்டுமே நான் வந்து உங்களுக்காக நிற்பேன். இல்லைன்னா நீங்க வேற வக்கீலை பார்த்து போய்க்கிட்டே இருக்கலாம். எனக்கு அதுல எந்த பிரச்சனையும் கிடையாது", என நந்தன் பதில் பேசுவதற்கு இடமளிக்காமல் அழைப்பை துண்டித்துவிட்டார்.

தன் வாயினுள் பல வித கெட்ட வார்த்தைகளில் அவரை அர்ச்சனை செய்தவன் மீண்டும் அழைத்து "உங்களோட அக்கவுண்ட்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணி விட்றேன். அக்கவுண்ட் டீடைய்ல் சொல்லுங்க. நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துடுங்க", என கூறிவிட்டு கூறியது போன்றே செய்தான். நந்தன் பணம் அனுப்பிய ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே அவனது வக்கீல் வந்து சேர்ந்தார்.

அதற்கு முன்னர் இன்ஸ்பெக்டர் பலமுறை இவர்களை அழைத்ததற்கு இருங்க மேடம் என்று மட்டுமே நேரத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தனர். இடையிடையே சாவித்திரி தேவியை அடிக்கப் பாய்ந்ததற்கு அவரை போலீசார் கட்டுப்படுத்தப்பட்டிக் கொண்டிருந்தனர். தன்னுடைய வக்கீல் வந்த பின்னர் உள்ளே சென்றவர்கள் முதலில் இன்ஸ்பெக்டரிடம் என்ன பிரச்சனை என கேட்டார்கள்.

இவர்களிடம் பேசியதுபோன்ற வக்கீலிடம் பேச விரும்பாததால் இன்ஸ்பெக்டரும் "சார் இவங்க இந்த பொண்ணை கொடுமைப்படுத்திருக்காங்க. அதுமட்டுமில்லாம அடிதடியில் இறங்கி இருக்காங்க", என அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே "என்ன மேடம் இதெல்லாம் புதுசா என்ன? பொண்ணுங்க வந்து ஆனா ஊனா புருஷன் வீட்டு மேல வரதட்சணை கொடுமைன்னு சொல்லி புகாா் கொடுப்பாங்க. உங்களுக்கு தெரியாததா?

நந்தனையும், அவரோட அம்மாவையும் எனக்கு பல வருஷமா தெரியும். ரெண்டு பேருமே தங்கமான மனுசங்க.ரெண்டு பேர் மேலயும் ஒரு குத்தம் குறை சொல்ல முடியாது", என வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் ராஜ் பேசியதைக் கேட்டு தேவியின் அருகில் அமர்ந்து இருந்த சுஜாதா நக்கலாக சிரித்துக்கொண்டார்.

அவர் சிரித்ததை பார்த்த பின்னர்தான் ராஜ் "அட சுஜாதா மேடம்! என்ன மேடம் நீங்க தான் போயும் போயும் இந்த பொய் கேஸ் எடுத்ததா? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா இந்த பொண்ணு சொல்றதெல்லாம் பொய்ன்னு சொல்லியிருப்பேனே", என அவரிடமும் பேசியதற்கு அவர் "ராஜ்! போதும் நிறுத்துங்க... நீங்க யாருன்னு எனக்கு தெரியும். நான் யாருன்னு உங்களுக்கு தெரியும். நாம தேவையில்லாத வெட்டி கதையை பேச வேண்டாம்", என ராஜிடம் கூறிவிட்டு இன்ஸ்பெக்டரிடம் திரும்பினார்.

"மேடம்! இப்ப விவாகரத்துக்கு கேஸ் போட்டிருக்கு. அது முடிகிற வரைக்கும் இவங்க என்னோட கட்சிக்காரர் அனுசுயாதேவியை எந்த விதத்திலும் மிரட்டக் கூடாது. நீங்களே பாருங்க, வந்த உடனே அந்த அம்மா என்ன வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணி இந்த பொண்ண திட்டினாங்கன்னு. சூடு சொரணை இருக்கிற மனுசங்க யாராயிருந்தாலும் இதெல்லாம் கேட்டு கோபம் தான் வரும். அப்ப கூட அனுசுயா தேவிக்கு கோபம் வராம பயந்துபோய் மிரண்டு போனாங்க.

அதை நீங்களே பார்த்தீங்க. கொஞ்சம் இவங்களை நீங்க கண்டிச்சு வையுங்க மேடம்! அது மட்டும் எனக்கு போதும். கோர்ட்ல என்ன பண்ணனும்கறத நான் பார்த்துக்கிறேன்", எனக் கூறினாா்.

மேலும் சிறிது நேரம் சாவித்திரி திட்டுவதையும் அதற்கு தேவி தன் வாய்க்குள்ளேயே இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு பதில் கூறியதையும் பார்த்த ராஜீக்கு இந்த கேஸை ஒன்னுமில்லாம உடைச்சுட்டு போயிடலாமே,அதை வச்சு நாலஞ்சு லட்சம் தேத்திடலாம் என்கிற எண்ணம்தான் தோன்றியது. அனைத்தும் முடிந்து இன்ஸ்பெக்டர் நந்தனையும், சாவித்திரியையும் எச்சரிக்கை செய்து வெளியே அனுப்பினார்.

தேவியிடமும் ஆறுதலாக "இப்படி தொட்டதுக்கெல்லாம் அழுதுக்கிட்டே இருந்தா ஏறி மிதிக்க தான் செய்வாங்க. பேச வேண்டிய இடத்துல வாயைத்திறந்து பேசணும். தைரியமா போ", எனக் கூறி அனுப்பி வைத்தார்.

இவர்கள் வெளியில் வரும் வரை காத்திருந்த ராஜ் சுஜாதாவிடம்"என்ன மேடம்! என்னோட கட்சிக்காரரை இம்பொட்டண்ட்ன்கு போட்டு அனுப்பி இருக்கீங்க.இன் கேமரா பிரஸிடிங்ல(In camera proceeding)என்ன நடக்குமுன்னு உங்களுக்கு தெரியாதா? யாரோ ஒரு பொண்ணு வந்து உதவி கேட்டான்னு சொன்னவுடனே என்ன வேணும்னாலும் எழுத முடியுமா?

இத்தனை வருஷம் வக்கீலா இருந்து இருக்கீங்க. உங்களுக்கு இது தெரியாம இருக்கும்ன்னு நினைக்கிறப்ப எனக்கு வருத்தமாதான் இருக்கு. ஏதோ பல வருஷமா பார்த்து பழகுற ஒரு ஃபிரண்டா நெனச்சு சொல்றேன். அந்த பொண்ணை பேசாமல் காம்ப்ரமைஸ் போக சொல்லுங்க. நந்தன்கிட்ட நான் சொன்னா ஏதோ பார்த்து அஞ்சு, பத்து போட்டு தருவாரு. அதை வாங்கிட்டு ஒதுங்கிட சொல்லுங்க. இது எதுக்கு கோர்ட்டு கேஸ்ன்னு தேவையில்லாம நேரத்தை வீணடிக்கனும்", என போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே பேரம்பேசியவரை பார்த்த சுஜாதா,

"நல்லாவே பேரம் பேசுறீங்க ராஜ்! இதையே கண்டின்யூ பண்ணுங்க. வாழ்க்கை வளமாக இருக்கும். எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கலாம்.இன் கேமரா பிரஸிடிங் எப்படி இருக்குமுன்னு சொல்லிட்டு உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். எது உண்மைன்னுஎநிரூபிக்க இங்கே உங்ககிட்ட நான் பேச விரும்பல", எனக் கூறவிட்டு தன்னுடைய காரிலேயே தேவியை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
 
  • Like
Reactions: Sumathi mathi