வரமாய் வந்த வலிகள் - கதை திரி

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-3

சாவித்திரி தன்னருகே கைகட்டி நின்ற தேவியை ஏற இறங்க பார்த்ததிலேயே அடுத்து அவர் என்னக் கூறப் போகிறார் என தேவி உணர்ந்துகொண்டாள்.பல வருடங்களாக மறைமுகமாகக் கூறி வந்த செய்தியை இன்று நேரடியாக கூறப்போகிறார்.

அதற்கு காரணம் இனிமேல் தன்னால் வருமானம் என்பது அவருக்கு சிறிதும் கிடைக்கப் போவதில்லை என்பதே என தேவி எண்ணிக்கொண்டிருந்த வேளையில் சாவித்திரி தன் தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

"இங்க பாரு சனியனே! உன்னை கட்டிட்டு வந்ததுல இருந்து எங்க குடும்பத்துல சுத்தமா நிம்மதியே கிடையாது.என்னையும், என் மகனையும் ஒரு விசேஷத்துக்கு போற இடத்துல எப்படி எல்லாம் பேசுறாங்கன்னு தெரியுமா? உங்க அப்பனும், ஆத்தாளும் உசுரோட இருந்தவரைக்கும் உனக்கு போக்கிடமுன்னு ஒன்னு இருந்துச்சு. இன்னைக்கு அதுகளும் கிடையாது. அதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன்.

என் அம்மா வழி சொந்தத்துல என் மகனுக்கு ரெண்டாந்தாரமா இருந்தாலும் பரவாயில்லைன்னு நூறு பவுன் நகை போட்டு, ஒரு கார் வாங்கி கொடுத்து பொண்ணு தரேன்னு தூது மேல தூதுவிட்டுகிட்டே இருக்காங்க. நானும் உனக்கு இன்னைக்கு பிள்ளை பிறந்துடும், நாளைக்கு பிள்ளை பிறந்துடும்,என் வம்சமும் தழைஞ்சிடும் அப்படின்னு சொல்லி பகல் கனவு கண்டுட்டு இருந்தேன்.

அது எதுவும் இன்னிக்கு வரைக்கும் நிறைவேறலை. நீ ஹாஸ்பிடலுக்கு செஞ்ச செலவுல நான் பத்து தலைமுறைக்கு தேவையான அளவுக்கு சொத்து சேர்த்துருப்பேன். போனது போய் தொலைஞ்சுடுச்சு. அதைப் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. இப்ப என்ன நடக்கனுமோ அதை சொல்றேன். கவனமா கேட்டுக்கோ.

இப்ப என் பையனுக்கு அவங்க பொண்ணு கொடுக்கிறேன் சொன்னதுல வேற எந்த பிரச்சினையும் கிடையாது. ஒரே ஒரு பிரச்சனைன்னு சொன்னா நீ மட்டும்தான். என்ன இருந்தாலும் 15 வருஷத்துக்கு முன்னாடி என் வீட்டுக்கு வந்தவ நீ!ஐயோ பாவமுன்னு பரிதாபம் பார்த்து உன்னை இந்த வீட்டோட வச்சுக்க ஒத்துக்குறேன். அதுக்கு பதிலா என் மகன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நீதான் வற்புறுத்துன மாதிரி எழுதி கொடுத்து கையெழுத்துப் போட்டுடு.

உன் அம்மா அப்பா விட்டுட்டு போயிருக்குற அந்த வீட்டையும், கடையையும் வித்து காசை என் கையில் கொடுத்துட்டா நீ உயிரோட இருக்கிற வரைக்கும் உனக்கு கால் வயிறு கஞ்சியாவது ஊத்தி செத்ததுக்கு அப்புறம் உன்னை முறையா அடக்கம் பண்ணிடுறேன். இது எதுவும் என்னால செய்ய முடியாது, நான் விட்டுட்டு போக மாட்டேன், காசு தர மாட்டேன் அப்படின்னு நீ ஏதாவது ஏடாகூடம் பண்ணிக்கிட்டு இருந்த வேற வழியே இல்லை.

என் வீட்டு சிலிண்டர் வெடிக்கிறதோட இலலாம புருஷன் ரெணடாவது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன காரணத்துக்காக தேவி தற்கொலை பண்ணிட்டாங்கிற தியாக பட்டமும் உனக்கு கிடைக்கும் எப்படி வசதின்னு பாா்த்துக்கோ", என தன்னுடைய பேச்சினை முடித்த சாவித்திரி தேவியின் பதில் எதனையும் எதிா்பாராமல் தன்னுடைய அறையினுள் மகனுடன் நுழைந்து கொண்டார்.

சாவித்திரியை தொடர்ந்து உள்ளே வந்த நந்தன் "என்னம்மா இப்படி பட்டுனு போட்டு உடைச்சுட்ட!இன்னும் பொறுமையா பேசி இருக்கலாமே?",என வினவினான். "நான் பெத்த மகனே! அவகிட்ட இதுவே நிதானமா பேசிட்டு வந்து இருக்கேன்கு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். என்ன பொண்டாட்டி மேல பாசம் உனக்கு பொங்குதோ! அப்படின்னா அந்த பொண்ணு வீட்டுக்காரங்களை வரவேண்டாம்னு சொல்லிடட்டுமா?", என தன் இடுப்பில் கைவைத்தவாறு சாவித்திரி கேட்ட தோரணை செய்தாலும் செய்து விடுவார் என்பதை உணர்த்தியதில் நந்தன்

"இல்லைம்மா. அவ இப்ப எதுவும் பேசாம இருக்கா. நீ வேற வீட்டையும், கடையையும் வித்து காசு வாங்கி தான்னு சொல்லியிருக்குற. அதை செய்ய மாட்டேன்னு சொல்லிட்டா என்ன செய்றது அப்படிங்கற ஒரு காரணத்துக்காகதான் உன்கிட்ட கேட்டேன். மத்தபடி என்னை பெத்து வளர்த்த உனக்கு தெரியாதா எனக்கு எது நல்லது, எது கெட்டதுன்னு. நீ பார்த்து மலை உச்சியிலிருந்து குதிக்க சொன்னா கண்ணை மூடிட்டு குதிப்பேன்மா", என வசனங்களை அள்ளி வீச ஆரம்பித்து இருந்தான்.

அது என்ற பார்வை பார்த்த சாவித்திரி அந்த பெண்ணின் வீட்டிற்கு அழைத்து எப்பொழுது திருமணம் வைத்துக்கொள்ளலாம் எனப் பேச ஆரம்பித்திருந்தார். அவர் பேசி முடிக்கும் வரை யோசனையில் இருந்த நந்தன் சாவித்திரியிடம் "ஏன்மா அந்த கடையையும், வீட்டையும் ஏன் விக்கச் சொன்ன? பேசாம மாச வாடகைக்கு விட்டா வருமானம் வந்துகிட்டே இருக்குமே!", என வினவினான்.

"அட கூறு கெட்டவனே! மாச வாடகைக்கு விட்டா கொஞ்ச காசுதான் நம்ம கைக்கு வரும். இப்ப அடங்கியிருக்கிறவ என்னைக்காவது தெனவெடுத்து போய் வெளியே போய்ட்டான்னு வச்சுக்கோ அதுவும் நம்ம கைக்கு கிடைக்காது. அதோட அந்த வீட்டையும், கடையையும் வித்து மொத்த பணத்தை வட்டிக்கு விட்டேன்னு வச்சுக்கோ அதே மாதிரி மூணு மடங்கா அம்மா உனக்கு ஒரே வருஷத்துல பெருக்கி கொடுத்துடுவேன்.

அந்த ஒரு காரணத்துக்காக தான் அவளோட அப்பனும், ஆத்தாளும் செத்தபிறகு அந்த கடையையும் வீட்டையும் வாடகைக்கு விடுறதுக்கு நான் விடலை. ரெண்டுமே நல்ல மெயினான இடத்துல் இருக்கு. கூட்டிக் குறைச்சு வித்தாலும் இன்னைக்கு நிலைமைக்கு கோடி ரூபாய்க்கு குறையாம போகும்.

இந்த மாதிரி தத்துபித்துன்னு உளராம அந்த பொண்ணோட நம்பரை வாங்கி இருக்கேன். உனக்கு அதை வாட்ஸ்அப்ல அனுப்புறேன். போய் பேசிட்டே இரு.நான் இந்த சனியனோட சொத்தை விக்குற விஷயமா நாலஞ்சு பேருக்கு பேச வேண்டியதிருக்கு.", என தன்னுடைய வில்லி தனத்துடன் மகனுக்கு கூறக்கூடாத புத்திமதியையும் கூறி அனுப்பி வைத்த சாவித்திரி தேவியின் மன வேதனையை மறந்தும் கூட நினைவில் கொள்ளவில்லை.

சாவித்திரி பேசி சென்றதைக் கேட்டதிலும், இப்பொழுது அம்மாவும் மகனும் பேசியதைக் கேட்டதிலும் தேவியின் மனம் நொந்து போனது. என்றாலும் ஏற்கனவே கிடைக்கப் பெற்ற பேச்சுகள், எதிர்பார்த்திருந்த விஷயம் என்பதினால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நேராக அவர்களை நோக்கி சென்றவள் தயங்கியே அவ்விடத்தில் நின்றாள்.

தேவி வந்து நின்றவுடன் "என்ன கையெழுத்துப் போட்டு தர்றயா", என வினவிய சாவித்திரி தன் மகனிடம் கண்ணை காட்ட அவனோ வேகமாக பேப்பர் பேனா எடுத்து வர ஓடினான்.வாழ்வில் முதல் முறையாக தேவி வாய் திறந்து "எனக்கு ஒரு ஒரு வாரம் டைம் கொடுங்க. நீங்க சொன்ன எல்லாமே செஞ்சுடுறேன். இப்ப ராத்திரிக்கு சமைக்கிறதுக்கு எனக்கு மனசு சரியில்லை. நீங்க வெளியில வாங்கி சாப்பிட்டுக்குங்க. இல்லைன்னா நீங்களே செஞ்சி சாப்பிட்டுக்கோங்க", என வார்த்தைகள் தந்தியடிக்க கூறி முடித்தவள் அவர்களின் பதிலை எதிர்பாராமல் தான் எப்போழுதும் தங்கியிருக்கும் அறையினுள் நுழைந்து கொண்டாள்.

ஓராண்டுக்கு முன்னர் வரை நந்தனும் அதே அறையில்தான் தங்கி இருந்தான். திடீரென இவளோட முகத்தை பார்த்தாலே எனக்கு குமட்டுது, பன்னி மாதிரி இருக்கா, எனக்கு ரூமுக்குள்ள இடமே இல்லை, இவ வந்து நின்னா எனக்கு மூச்சு முட்டுது என பலக் காரணங்களை கூறி அவன் மாடியில் புதிதாக கட்டி இருந்த அறைக்கு மாறிவிட்டான்.

தேவிக்கு அந்த வீட்டில் இருந்த ஒரே ஒரு வசதி வாய்ப்பு என்னவென்றால் இல்லை இல்லை ஒன்று இல்லை இரண்டு வசதி வாய்ப்புகள் அவளுக்கு அவர்களையும் அறியாமல் அந்த வீட்டில் செய்திருந்தனர்.ஒன்று சாதாரண பட்டன் மாடலில் இருக்கும் நோக்கியா அலைபேசி, மற்றொன்று நந்தன் முன்னர் உபயோகித்துக் கொண்டிருந்த கணினி.

ஆனால் அவளுக்கு அதனுடைய பயன்களைப் பற்றி எந்த அளவும் யோசிக்க நேரம் இருந்ததில்லை. அவளுடைய தாய் தந்தை இருவரும் ஓராண்டுக்கு முன்னர் ஒரே நேரத்தில் மரணிக்கும் வரை அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதற்கு மட்டுமே அந்த அலைபேசி உபயோகப்படுத்தப் பட்டிருந்தது. கணினி என்பதனை கல்லூரியில் படிக்கும் பொழுது தொட்டுப் பார்த்ததுடன் சரி.அதன் பின்னர் நந்தன் அதில் ஏதேனும் பார்க்கும்பொழுது எட்டி நின்று வேடிக்கை பார்த்தவள் பெரிதாக அதில் ஈடுபாடு காட்டியதில்லை. இதில் மட்டுமின்றி எதிலும் ஈடுபாடு காட்டாமல் தன்னுடைய காலத்தினை கடத்தி விட்டாள்.

அறையினுள் வந்த தேவி என்றுமில்லாதவாறு இன்று அறையினை உட்பக்கமாக தாழிட்டு விட்டு அமர்ந்தாள்.அமர்ந்தவளின் எண்ணங்கள் கட்டுக்குள் அடங்காத குதிரையாக அவளையுமறியாமல் பின்னோக்கிச் சென்றன.

கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டில் இருக்கும்பொழுதே அவளுக்கு வரன் பாா்க்க ஆரம்பித்திருந்த அவளது தாய் தந்தை தேவியை செல்லமாக வளர்க்கவில்லை என்றாலும் வேதனைப் படுத்துமாறு வளர்க்கவில்லை. அவர்கள் செய்த ஒரே தவறு யார் என்ன கூறினாலும் சரி என்று கூறுமாறு வளர்த்து விட்டதுதான்.

படிக்கும் காலத்தில் பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி என்று அனைத்திலும் அவர்களது விருப்பத்தை ஏற்றுக்கொண்டவள் திருமணத்திலும் அவர்களது விருப்பமே தன்னுடைய விருப்பமாக இருக்கும் என்ற முடிவிற்கு வந்து இருந்தாள். தெரிந்தவர் ஒருவரின் மூலமாக இவளைப் பெண் பார்க்க வந்த நந்தனும், சாவித்திரியும் அன்றே தங்களது சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்திருந்தனர்.

இப்பொழுது யோசிக்கும் பொழுது அவர்கள் பேசிய பேச்சுக்களில் இருந்த உள்குத்தை அன்று புரிந்து கொள்ளும் நிலையில் தேவியும் இல்லை, அவளது பெற்றோரும் இல்லை. பெண் பார்க்க வந்த பொழுதே சாவித்திரி "ஒத்த பொண்ணு இருக்குற இடத்துலதான் பொண்ணு எடுக்கணும்னு நானும் ஊரெல்லாம் தேடிகிட்டு இருந்தேன். உங்க பொண்ணு நல்லா மூக்கும் முழியுமா அம்சமா இருக்கா. நீங்களும் வச்சிருக்குற அத்தனையும் உங்க மகளுக்குதானே செய்யப் போறீங்க.அதனால் நான் எதுவும் கேட்கப் போறதில்லை.நீங்களே செய்றதை சபை நிறைய வச்சு கொடுத்துடுங்க", எனக் கூறியவர் இவர்களின் விருப்பத்தை கேட்டாரோ இல்லையோ நந்தனின் பெருமைகளை கூறியதில் அவளது தாய்க்கும், தந்தைக்கும் பிடித்துப்போனது.

மகள் பிக்கல், பிடுங்கல் இல்லாத இடத்திற்கு வாழ்க்கைப்பட்டு செல்கிறாள் என்ற சந்தோசத்தில் அவர்கள் அதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த நகை பணம் என்று சற்றும் அளவு பாராமல் அள்ளி தெளித்தே திருமணத்தை முடித்து வைத்தனர். இந்த வீட்டில் கால் வயிறு கஞ்சியாவது ஊத்தி அடக்கம் செய்வோம் என்று கூறும் இதே வீட்டிற்கு கழுத்துகொள்ளாதளவு நகையுடன் வீட்டை அடைக்கும் சீர் வரிசையுடன்தான் தேவி வந்தாள்.

திருமணமான முதல் மாதம் மட்டுமே எந்த வித பிரச்சனைகளையும் தேவி சந்திக்கவில்லை. திருமணம் முடிந்த முதல் மாதவிடாயின் பொழுது ஆரம்பித்த குளிச்சிட்டியா என்ற வார்த்தைகள் ஒவ்வொரு மாதத்தின் பொழுதும் நீண்டு கொண்டே சென்று ஆறாவது மாதம் முடிவிலேயே ஒன்னத்துக்கும் உதவாதவளை என் மகனுக்கு கட்டி வச்சு நானே அவன் வாழ்க்கையை பாழாக்கிட்டேனே என்ற வார்த்தைகளில் வந்து முடிந்தது.

பின்னர் வருவோர் போவோரிடம் எல்லாம் கூறியதின் பலனாக அவர்களின் ஆலோசனையின் பேரில் திருமணம் முடிந்த ஆறே மாதங்களில் மருத்துவரைப் பார்த்து வர தேவி அனுப்பப்பட்டாள். ஆம் அனுப்பப்பட்டாள்தான். அவளின் அம்மா வீட்டிற்கு சென்று அவர்கள் தான் அவளுக்கு தேவையான மருத்துவ செலவுகளை செய்ய வேண்டும் என சாவித்திரி போனில் கத்தியதில் அவர்களும் தங்கள் மகளின் வாழ்க்கை என்ற எண்ணத்தில் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்த மருத்துவரோ "என்னம்மா இவ சின்னப்பிள்ளை. இப்பதான் 21 வயசு ஆகுது. அதுக்குள்ள என்ன அவசரம்? கல்யாணம் ஆகி ஆறு மாசம்தான் முடிஞ்சிருக்கு. ஒரு வருஷம் போகட்டும். எல்லாம் நார்மலாதான் இருக்கு", எனக் கூறி அனுப்பிவிட்டார். பிழைக்கத் தெரியாத மருத்துவர் போல.

மருத்துவரின் ரிப்போர்ட்டையும் தங்கள் காடுகளில் விளைந்த விளை பொருட்களையும், அத்துடன் நில்லாமல் தேவிக்கு 10 பவுன் நகையுமாக அவளின் பெற்றோர் கொண்டு வந்து விட்ட பொழுது சாவித்திரி "நான் என்ன எனக்காகவா இதெல்லாம் பேசுறேன். உங்க மகளையே நாளைக்கு யாரும் ஒரு வார்த்தை சொல்ல கூடாதுன்ற வருத்தத்துலதான் இந்த மாதிரி எல்லாம் பேசுறேன் பாா்த்துக்கோங்க", எனக் கூறி அவர்களுக்கு தண்ணீர் கூட தராமல் அனுப்பி வைத்தார்.

மருத்துவர்தான் இப்படிக் கூறி விட்டாரே இனி அத்தை திட்ட மாட்டாங்க என தேவி தவறாக எண்ணிக் கொண்டிருந்த பொழுது மாதம் ஒருமுறை பேசிய குத்தல் பேச்சுகள் தினம்தோறும் என்றானது. ஒரு வருடம் முடிந்த நிலையில் நிமிடத்திற்கு ஒருமுறை என பேச்சுக்கள் அதிகரித்தது.

மீண்டும் அவளின் அம்மா வீட்டிற்கு சென்று அதே மருத்துவரை பார்த்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் சாவித்திரி தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக வேறு ஒரு மருத்துவமனைக்கு தேவியை அனுப்பி வைத்தாள். ஆனால் அதற்கு முன்னர் தேவியிடம் கூறி அவள் அப்பா அம்மாவிடம் இருந்து காசு வாங்க வேண்டும் எனப் கூறிவிட்டாள்.


தேவியும் தனக்கு அளிக்கப்பட்டு இருந்த அந்த மொபைலில் இருந்து அப்பா அம்மாவை அழைத்து "அத்தை இப்படியே சொல்றாங்க. அம்மா நீங்கதான் எனக்கு காசு கொடுக்கணும்", என சிறுபிள்ளைத்தனமாக அவர்களிடம் கேட்டு மருத்துவமனைக்கு சென்று வந்த ஆட்டோ செலவு முதல் கொண்டு தன் பெற்றோரிடம் வாங்கினாள்.

தேவியின் தந்தை மிகவும் வசதியானவர் ஆக இல்லை என்றாலும் அவர்கள் ஊரில் விவசாயத்தில் நல்ல வருமானம் பார்த்து வந்தார். கிராமத்தில் விவசாய நிலங்களை பார்த்துக்கொண்டே டவுனில் தான் இருந்த வீட்டின் அருகில் ஒரு கடையையும் கட்டி அதில் பலசரக்கு வியாபாரம் செய்து வந்தார்.

அதனால் அவர்களிடம் பணம் என்பது சற்று தாராளமாகவே புழங்கியது. தேவி பணம் கேட்கும் பொழுதெல்லாம் நேரில் வந்து வீடு நிறைய பொருட்களை வாங்கி வைத்துவிட்டு பணத்தையும் கொடுத்து விட்டு சென்றனர் அந்த பாவப்பட்ட பெற்றோர்.

அவர்களிடம் காசு வாங்கி செய்த பாவமோ என்னமோ அதன் பின்னர் வந்த நாட்கள் தேவிக்கு மட்டுமின்றி அவளை பெற்றவர்களுக்கும் நரகம் ஆனது.

அவர்கள் மனதளவில் நரகத்தை அனுபவித்தனர் என்றால் தேவியோ உடலளவில் நரகத்தை நாள்தோறும் எதிர்நோக்க ஆரம்பித்திருந்தாள். அதன் விளைவாக ஒரு நாள் தேவி தான் இத்தனை நாள் வளர்ந்து வந்த நிலையில் இருந்து சற்று மாறி நந்தனிடம் பேசியதில் அவன் செய்த செயலில் தேவி மரப்பாச்சியாகிவிட்டாள்.

நந்தன் செய்த செயல்தான் என்னவோ?
 
  • Like
Reactions: Sumathi mathi

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-4

தேவி முதன்முறையாக தன் மாமியார் கூறிய மருத்துவமனைக்கு சென்ற பொழுது ஒரு ஒவ்வாத தன்மையை உணர்ந்தாள். ஆனால் அதனை தன் அருகில் இருந்த கணவனிடம் கூறுவதற்கு கூட பயந்து தன் வாயை மூடிக் கொண்டாள்.

ஏனோ இந்த முறை நந்தன் அவளுடன் வந்ததில் அவளுக்கு சற்று மனதளவில் மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. திருமணமான புதிதில் இருந்து நந்தனுடன் காரிலோ, அவனது இரண்டு சக்கர வாகனத்திலோ செல்ல வேண்டும் என்பது தேவியின் உள்மனது ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் எப்பொழுதும் அவளுக்கு கிட்டியதில்லை. இன்றும் அந்த ஆசை நிறைவேறவில்லை.

ஏனெனில் அவளது வீட்டில் இருந்து வாங்கிய பணத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்பதால் ஆட்டோவில்தான் நந்தன் அழைத்து வந்திருந்தான். ஏற்கனவே சாவித்திரி தெரிந்தவர் மூலமாக அந்த மருத்துவமனையில் அப்பாயின்மென்ட் வாங்கி வைத்து இருந்த காரணத்தினால் இவர்கள் வந்தவுடன் தங்கள் பெயரை மட்டும் ரிசப்ஷனில் ரெஜிஸ்டா் செய்தார்கள்.

பெயரை எழுதுவதற்கு ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டச் சொன்னவுடன் தேவிதான் அதிர்ந்துப் போனாள். ஆனால் நந்தனோ மாமியார், மாமனாரிடம் இருந்து வாங்கிய 20 ஆயிரம் பணத்திலிருந்து தாராளமாகவே எடுத்துக் கட்டினான். அதன்பின்னர் எந்தவித பேச்சுவார்த்தையும் இன்றி அமர்ந்திருக்க இவர்களின் முறை வந்தவுடன் மருத்துவரின் அறைக்குள் நுழைந்தனர்.

இவர்கள் அமர்ந்தவுடன் திருமணமாகி எத்தனை மாதங்கள் ஆகியுள்ளன என வினவியவர் அதன் பின்னர் வேறு எந்த விதமான கேள்விகளை கேட்காமல் நேரடியாக பேரத்தில் புகுந்தார். "எங்ககிட்ட வந்தவங்க ஏமாந்ததே கிடையாது. கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும். முதல் தவணையா நாலு லட்ச ரூபாய் கட்டிடுங்க. அதுக்கு அடுத்த பத்து நாளைக்கு ஹார்மோன் இன்ஜெக்ஷன் போட்டு ஹார்மோனை தூண்டி விடுவோம்.

பிறகு ஒவ்வொரு ப்ரொஷிஜா் செய்யப்போகும் போது உங்களுக்கு சொல்லிட்டு தான் செய்வோம். வேற எதை பத்தியும் நீங்க பயப்பட வேண்டாம். இந்த ஏரியால இருக்கிற எல்லா கருத்தரிப்பு மையத்தையும் விட நம்ம ஹாஸ்பிடல் தான் பேர்போனது. அதே நேரத்தில் இங்க மட்டும்தான் கம்மியான அளவுக்கு காசு வாங்குறோம்.

சேவை செய்ய வந்ததுக்கு அப்புறம் வர நோயாளிங்ககிட்ட அளவுக்கு அதிகமான காசு வாங்கக்கூடாதுங்குற எண்ணத்தோடதான் நான் இந்த கருத்தரிப்பு மையத்தை ஆரம்பிச்சேன்", என அவர் பேசிய பேச்சில் தேவிக்கு தலையே சுற்றிவிட்டது.

வேறு ஏதேதோ பேப்பர்களில் அவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. தன் கணவன் படித்துப் பார்த்து கையெழுத்திடுவான் என்று தேவி எண்ணியிருக்க அவனோ வாயெல்லாம் பல்லாக அது என்னவென்று கூட பாராமல் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தான்.

கையெழுத்திட்ட உடன் "எப்ப மேடம் ட்ரீட்மெண்ட் ஆரம்பிப்பீங்க?", என ஒருக் கேள்வியை வேறு எழுப்பி வைத்தான். "நீங்க பணம் கட்டிடுங்க முதல்ல. முதல் தவணை கட்டிட்டு அதுக்கு அடுத்த ஒரு வாரத்தில் உங்களுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பித்து விடும்", என அவனிடம் கூறிக் கொண்டு வந்தவர் அப்பொழுதுதான் தேவியை நோக்கி கடைசியாக எப்ப தலைக்கு குளிச்ச என்ற வினாவினை வினவினார்.

முதலில் சென்ற மருத்துவர் வினவிய முதல் கேள்வியே உங்களுக்கு மாதந்தோறும் சரியாக மாதவிடாய் ஆகுமா என்பதுதான். அதன்பின்னர்தான் அவர் மற்ற கேள்விகளை வினவினார். இங்கே அனைத்துமே தலைகீழாக இருப்பதைப் பார்த்து தேவிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் மருத்துவருக்கு தெரியாததா தனக்கு தெரியப் போகிறது என்ற எண்ணத்தில் வேறு எதுவும் பதில் கூறாமல் அவர் கேட்டதற்கு மட்டுமான பதிலைக் கூறினார்.

"ஓ அப்படியா! அப்ப நீங்க நாளைக்கு பணத்தை கட்டிடுங்க. பணத்தைக் கட்டுன உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுடலாம்", என அந்தர் பல்டி அடித்தார். முன்னுக்கு பின் முரணான பேச்சுகளை இது போன்ற வியாபார சந்தையில் தான் கேட்க முடியும் என்பது படித்திருந்த நந்தனுக்கு புரியவில்லை. அவனுடன் சென்ற பதுமை தேவிக்கும் புரியவில்லை.

20, 25 வருடங்களுக்கு முன்னர் எங்கோ ஒரு மூலையில் இருந்த கருத்தரிப்பு மையமும், சோதனைக்குழாய் குழந்தை என்று கூறப்பட்ட அதிசயமும் மங்கிப்போய் இன்றைய காலகட்டத்தில் தெருவிற்கு ஐந்து கருத்தரிப்பு மையங்கள் குறைந்த அளவில் பெருகி விட்டதன் காரணம் இதுபோன்ற புரிந்துணர்வு இல்லாத மக்கள் தான் என்று கூறிவிட முடியுமா நம்மால்? இல்லை அனைத்தையும் வியாபார நோக்கத்தில் மட்டுமே காண வேண்டுமென என்ற சமுதாய கூற்றுகள் தான் காரணமோ? கலியுகத்தில் கருவும் காசு வாங்கிக்கொண்டு கருப்பையில் உதிக்கும் இந்த கொடுமையை என்னவென்று தான் கூறுவதோ?

நலமுடன் விளங்கும் கருமுட்டை, கருக்கட்டும் திறன் கொண்ட விந்து, மேலும் கருத்தரிப்பை ஆரோக்கியமாக ஏற்கக்கூடிய கருப்பை என்பன செயற்கை முறை கருத்தரித்தல் வெற்றியளிப்பதற்கான தேவைகள்.

ஆனால் இம்மூன்று முறைகளைப் பற்றியும் சிறிதும் கவலை கொள்ளாமல் எடுத்த எடுப்பிலேயே சோதனை எலிகளை விட மோசமாக பெண்கள் ஐவிஎஃப் முறையில் கையாளப்படுவது பல இடங்களில் நடந்திடும் உண்மை. அதே நிலைதான் தேவிக்கும் ஏற்பட்டது.

தேவிக்கு தான் இதற்கு முன்னர் சென்ற மருத்துவர் கூறியவற்றை இவரிடம் கூற வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும் அவர் பேசிய பேச்சுக்களும் அருகிலிருந்த நந்தன் மேல் இருந்த பயமும் அதனை கூற விடாமல் செய்து விட்டன. ஒருவழியாக மருத்துவமனையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அவர்கள் கொண்டு சென்ற 20 ஆயிரமும் தீர்ந்து இருந்தது.

வீட்டுக்கு வந்த பின்னர் சாவித்திரியிடம் அங்கே நடந்தவற்றையெல்லாம் கூறிய நந்தன் "நாளைக்கே நாலு லட்ச ரூபா கட்ட சொல்லிருக்காங்க. காசுக்கு என்ன செய்றது?", என வினவினான். நந்தன் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த சாவித்திரி தேவியை பார்த்த பார்வையில் அவள் எதுவும் பேசாமல் தன்னுடைய மொபைலை எடுத்து தன் பெற்றோருக்கு அழைக்கத் துவங்கினாள்.

ஆனால் அவர்களிடம் சென்று தனியாக பேசுவதற்கான வாய்ப்பை சாவித்திரியும், நந்தனும் தரவில்லை. அவ்விடத்திலேயே அவளை நின்றவாறே பேச வைத்தனர். தன் பெற்றோருக்கு அழைத்த தேவி தான் மருத்துவமனைக்கு சென்று வந்ததைப் பற்றியும், அங்கு உடனே பணம் கட்ட வேண்டும் என்றும் இந்த முறையை மேற்கொண்டால் தனக்கு குழந்தை கிடைப்பது உறுதி என்றும் அவர்கள் கூறியதை அப்படியே ஒப்பித்தாள்.

மறுமுனையில் இருந்த தேவியின் அம்மாவிற்கு இது எதுவும் சரியாக தெரியாத பட்சத்தில் "உடனே கட்டணுமா தேவிமா? கொஞ்சம் பொறுத்து நாம வேற டாக்டரையும் பார்த்துட்டு செய்வோமே! நாம போன தடவை போயிட்டு வந்த டாக்டர்கிட்டயே போவோமே! அவங்க கொஞ்சம் வயசானவங்களா இருக்காங்க. நல்லா கைராசியான டாக்டர் வேற", என தன் மனதில் பட்டதை கூறினார்.

அவர் பேசுவது இங்கே சாவித்திரியின் காதில் மெலிதாக விழுந்தவுடன் தன் மருமகளின் கையிலிருந்த போனை பிடுங்கிய சாவித்திரி "என்ன சம்பந்தியம்மா உங்க மக இந்த வீட்டுல இருந்து வாழனும்னு நினைக்கிறீங்களா? இல்லையா? ஊருக்குள்ள நான் தாரேன், நீ தாரேன்னு போட்டி போட்டுட்டு வந்த பொண்ணு வீட்டுக்காரங்களை எல்லாம் விரட்டி அடிச்சிட்டு உங்க மகளை கட்டிக்கிட்டு வந்த பாவத்துக்கு எனக்கு ஒரு பேரப்பிள்ளை இல்லாம நான் வேதனைபட்டுகிட்டு இருக்கேன்.

ஏதோ கடவுள் புண்ணியத்துல இந்த டாக்டரோட அறிமுகம் கிடைச்சிருக்கு. அவங்க சொல்றபடி செய்றதுக்கு என்ன வந்துச்சு? எனக்கு ஒன்னும் இல்லை. உங்க மகளை தான் ஊரெல்லாம் மலடின்னு சொல்லுவாங்க", என்று சரியான இடத்தில் சரியான வார்த்தை பிரயோகங்களை வீசியதில் பயந்துபோன தேவியின் அம்மா "சரிங்க சம்பந்தி! அவர் வந்த உடனே காசை கொண்டு வந்து கொடுக்கச் சொல்றேன்", என பவ்யமாகவேக் கூறினார்.

"கொடுக்குறது கொடுத்து அனுப்புறீங்க. ஒரு 6,7 லட்சமாக குடுத்து அனுப்புங்க .அப்படி இருந்தாதான் மேச்செலவுக்கு எல்லாம் சரியாப் போகும். எச்ச கையால காக்கா விரட்டாத குடும்பத்துல பொண்ணு எடுத்த எனக்கு இன்னும் என்ன எல்லாம் பட வேண்டியது இருக்கோ", என புலம்பிக்கொண்டே அழைப்பை துண்டித்த சாவித்திரி தன் வம்சத்தை தழைக்கச் செய்ய மருமகள் வீட்டில் பிச்சை எடுப்பதை நாளைய சரித்திரம் புகழ்ந்திடுமோ?

அன்றைய இரவில் சாவித்திரி தேவியின் தந்தை சாவித்திரிக்கு அழைத்து "சம்பந்தியம்மா நீங்க சொன்ன நேரத்துக்கு நான் பேங்க்ல போய் காசை எடுக்க முடியலை. நாளைக்கு ஒரு நாளைக்கு டைம் கொடுங்க. காலையில முதல் வேலையாக போய் காசு எடுத்துட்டு நேராக வந்துடுறேன்.

நாளைக்கு மறுநாள் போய் காசு கட்டிக்கலாம்", என்றவுடன் சாவித்திரி எதுவும் பேசாமல் போனை வைத்து விட்டார். அவர் கோபித்துக் கொண்டாரோ என்னவோ என்று பயந்து போய் திரும்ப திரும்ப அழைத்தவரின் அழைப்புகளை ஏற்காமல் சாவித்திரி அங்கு தேவியை நடு வீட்டில் நிற்க வைத்து "ஒருநாலு லட்ச பிச்சைகாசு கொண்டுவந்து குடுக்குறதுக்கு துப்பு இல்லை. உங்க அப்பனுக்கும், ஆத்தாளுக்கும் என்ன பேச்சு வேண்டி கிடக்கு?போனை போட்டு நாளைக்கு காலைல 11 மணிக்கு காசு வந்து சேரணும்னு சொல்லிடு.

ஏறுபொழுதுல போய் காசு கட்டிடனும்.12 மணிக்கு மேல நேரமும் சரி இல்லை", என அவளை அழ வைத்து அவளின் வீட்டிற்கு அழைத்து அவள் பேசி முடிக்கும் வரை தன்னுடைய அர்ச்சனையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே இருந்தார்.

மறு நாள் வேர்க்க விறுவிறுக்க 11மணிக்கு பணத்தை கொண்டு வந்த தேவியின் தந்தைக்கு மரியாதை என்பது மருந்துக்குக் கூட கிடைக்கவில்லை. அந்த பணத்தை பிடுங்கிக்கொண்டு ஆம் அதனை அவர் பையிலிருந்து எடுத்து எண்ணி வைப்பதற்குள் அந்த பையுடன் சாவித்திரி பிடுங்கி விட்டார்.

"நீங்க கிளம்பலாம். நாங்க நல்ல நேரம் முடியறதுக்கு முன்னாடியே ஹாஸ்பிடலுக்கு போகணும்", என பாரபட்சம் இன்றி அவரையும் வீட்டைவிட்டு துரத்திவிட்டார். அவர் வெளியேறியவுடன் மூவரும் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்று அங்கே பணத்தை கட்டியவுடன் இப்ப போய் டாக்டர பாருங்க என சிரித்த முகமாக கூறினர்.

மருத்துவரும் இன்று சாவித்திரியை பார்த்தவுடன் வாயெல்லாம் பல்லாக "வாங்கம்மா வாங்க! உங்களுக்கு எண்ணி பத்து மாசத்தில பேரப்பிள்ளை பொறக்குறதுக்கு நான் கேரண்டி", என வீட்டில் புழங்கும் சாமான்களுக்கு கடையில் கொடுக்கும் கேரண்டியை போல பேசி வைத்தார்.

அதனைக் கேட்ட சாவித்திரியும் "உங்களை தான் நம்பி வந்திருக்கோம் டாக்டர்! நீங்க தான் பார்த்து செய்யணும்", என தன் பற்களை காட்டினார். அதன்பின்னர் தேவியை அழைத்து சென்ற மருத்துவர் அவளிடம் "உனக்கு இப்ப ஹார்மோன் இன்ஜெக்ஷன் போட போறோம். இது பத்து நாளைக்கு தொடர்ந்து போடணும். இந்த இன்ஜெக்ஷன் போட்டாதான் கருமுட்டை நிறைய உன்னோட கர்ப்பப்பையில் உற்பத்தி ஆகும். அந்த முட்டையை எடுத்து உங்க வீட்டுக்காரரோட விந்தணுவோட சேர்த்து நாங்க கருவை உருவாக்குவோம்.

திரும்ப அந்தக் கருவை உன்னோட கர்ப்பப்பையில் வச்சி உனக்கே உனக்குன்னு ஒரு அழகான குழந்தையை தந்துடுவோம்", என தேர்ந்த வியாபாரியாகப் பேசினார். ஹார்மோன் இன்ஜெக்ஷன் போடுவோம் என்றவர் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தேவிக்கு கூறி இருக்கவில்லை.

அவளும் அதனை பற்றி எல்லாம் அறிந்திருக்கவில்லை. ஐவிஎஃப்சி ஊசி உடன் FSH(follicle stimulating hormone) ஊசியும் சேர்த்து தேவிக்கு செலுத்தப்பட்டது. அதை செலுத்தியவுடன் அவளுக்கு வலி உயிர் போனது. ஆனால் அந்த வலியை பற்றி மாமியாரிடமோ, நந்தனிடமோ கூற முடியாமல் தன்னை அலைபேசியில் அழைத்து மருத்துவமனையில் என்ன நடந்தது என வினவிய தாயிடம் கூறி அழுதாள்.

அவரும் "பொறுத்துக்கோ தேவிமா! இதெல்லாம் உனக்கு குழந்தை பிறக்குறதுக்குதானே! இந்த வலிக்கு இப்படி அழுதா நாளைக்கு பிள்ளை பெத்துக்குற வலியெல்லாம் எப்படித் தாங்குவ?", என பழையகாலத்து மனுஷியாக அறிவுரை கூறி வைத்து விட்டார்.

அவரவர் எண்ணங்களில் சுழன்று கொண்டிருக்க தேவியின் உடல் நிலையில் பலவித மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. ஒவ்வொரு முறையும் ஊசி போட்டுக் கொண்டு வர வர வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், படுக்கையை விட்டு எழ முடியாமல் போவது என அடுக்கடுக்காக உடல்நிலையில் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பித்தன.

உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சினைகளை தவிர்த்து மனதளவிலும் மிகவும் சோர்வு ஏற்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனமாற்றங்கள், சூழ்நிலை மாற்றங்கள் ஏற்படும். அனைவருக்கும் கோபம் என்பது ஹார்மோன்களினால் மிகவும் எளிதாக வரும். ஆனால் தேவிக்கோ எதற்கெடுத்தாலும் பயம் என்ற நிலை தோன்ற ஆரம்பித்தது.

அவள் சிகிச்சையில் இருக்கிறாள் என்ற காரணத்தினால் அவளுடைய வீட்டு வேலைகள் எதுவும் குறையவில்லை.வீட்டு வேலைகளுடன் சாவித்திரியின் பேச்சுகளும் சேர்ந்துகொண்டன. "நல்ல மருமக கிடைச்சிருந்தா இந்த காசுக்கு ஒரு நிலத்தை வாங்கி போட்டிருக்கலாம். இந்த சனியனால தேவையில்லாத செலவு வேற", என அவரது பணத்தை செலவழித்தது போல் பேசிக் கொண்டே இருந்தார்.

வீட்டில் பேசுவது ஒரு விதமாக இருந்தால் யாரேனும் சொந்தக்காரர், பக்கத்து வீட்டினர் என வரும்பொழுது "அவ ஆசைப்படுறா, அதான் காசை காசுன்னு பார்க்காம செலவழிக்கிறேன்", என்பன போன்ற வசனங்களை நடிகை சாவித்திரியை மிஞ்சும் அளவிற்கு வீசிக் கொண்டிருந்தார். தேவியின் பார்வையும் சற்று தடுமாற ஆரம்பித்தது(blur vision). அதனால் செய்யும் வேலையில் தாமதங்கள் ஏற்பட ஆரம்பித்தன.

மனதளவில் ஒவ்வொரு எண்ணங்களும் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் மாற்றி மாற்றி சுழற்றி அடித்தன.அதன் விளைவாக தேவி தன்னுடைய சாப்பாட்டை தானே அறியாமல் அளவுக்கு அதிகமாக உண்ண ஆரம்பித்திருந்தாள். பத்து நாட்கள் ஊசி போடும் முறை முடிந்து அதன் பின்னர் அவளது கர்ப்பப் பையில் இருக்கும் கருமுட்டையில் நன்கு வளர்ச்சியடைந்த கருமுட்டையை வெளியே எடுக்கும் செய்முறை நாளன்று தேவி அனுபவத்த வலியானது வார்த்தைகளில் அடக்க இயலாதவை.

அவளது சூலகத்திலேயே கருவை வளரச்செய்யும் வாய்ப்பு இல்லாத நிலையில்தான் கருமுட்டையை வெளியிலெடுத்து விந்தணுவுடன் சேர்த்து கருவை வளர வைக்க வேண்டும். ஆனால் தேவியின் மருத்துவரோ வெளியில் தான் வளர வைக்க முடியும் என அவளிடம் தகவலை கூறிவிட்டு கருமுட்டை எடுக்கும் செயல்முறையை ஆரம்பித்தார்.

அதன் வலியில், அவர்களது செய்முறையில் கதறியவள் அன்றைய தினம் என்றும் இல்லாதவாறு நந்தனிடம் "என்னங்க எனக்கு இந்த IVF முறையே பிடிக்கலை. என்னால வலி தாங்க முடியலை. உயிர் போற மாதிரி இருக்கு. நாம இதை ட்ரை பண்ணவே வேண்டாம். கடவுள் எப்போ கொடுக்கணும்னு நினைக்கிறாரோ அப்ப கொடுக்கட்டும். எனக்கு இது வேண்டவே வேண்டாம்", என கதறி அழுததில் நந்தன் கூறிய வார்த்தைகளை தேவி சற்றும் எதிர்பார்த்திடவில்லை.

நந்தன் கூறிய வார்த்தைகள் தான் என்னவோ?
 
  • Like
Reactions: Sumathi mathi

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-5

தன்னுடைய வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் கணவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் அதுவும் நூலியிழையிலிருந்த நம்பிக்கையில் தேவி நந்தனிடம் கேட்டிட அவன் கூறிய வார்த்தைகள் அவளை உயிருடன் மரணிக்கச் செய்திருந்தன.

தேவி கூறியவற்றை கேட்டவுடன் சிலநிமிடங்கள் அவளை வெறித்து பார்த்தவன் "எங்க அம்மா நீ அழகா இருக்க, வசதியா இருக்க அப்படின்னு சொன்ன ஒரே காரணத்திற்காக மட்டும்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மத்தபடி உன் மேல அப்படியே இந்த சினிமால, கதையில வர்ற மாதிரி காதலாகி கசிந்துருகி எல்லாம் உன் கூட நான் குடும்பம் நடத்திட்டு இருக்கலை.

எங்க தகுதிக்கு ஏத்த குடும்பம் உங்க குடும்பம். அதே மாதிரி என் அளவுக்கு இல்லைனாலும் நீயும் சுமாரா இருக்க. அதை நான் ஒத்துக்குறேன். வெளில போற இடத்துல என்னடா உனக்கு இன்னுமா குழந்தை இல்லைன்னு என்னை பார்த்துதான் கேட்குறாங்க. முடிஞ்ச அளவுக்கு இந்த ட்ரீட்மென்ட்ல குழந்தையை பெத்துக்குறதுக்கு வழியை பாரு.

அப்படி முடியாதுன்னா நீ உங்க அம்மா வீட்டுக்குப் போயிடு. இல்லை வேற எங்கேயாவது யார்கிட்டயும் சொல்லாமல் கண்காணாத இடத்துக்குப் போயிடு. நீ உனக்கு பிடிச்சவனோட ஓடிப் போயிட்டேன்னு சொல்லிட்டு நான் இங்க என்னோட அடுத்த வாழ்க்கையை பார்க்க ஆரம்பிச்சுடுவேன். பொண்டாட்டியா இல்லை எங்க அம்மாவோட பேச்சா அப்படின்னு வர்ற பட்சத்துல நான் எங்க அம்மாவோட பேச்சுக்கு மட்டும்தான் மரியாதை கொடுப்பேன்.

பொண்டாட்டி எத்தனை வேணாலும் வாழ்க்கையில கட்டிக்கலாம்.ஆனா பெத்த அம்மா ஒன்னு மட்டும்தான் இருக்க முடியும். இதுக்கு மேல உன்னோட முடிவு", எனக் கூறியவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் இவள் கூறியவற்றை தன் தாயிடம் ஒப்பிக்க ஓடிவிட்டான்.

இருபத்தோரு வயது முழுமையடைந்த பெண்ணிடம் குழந்தை பெற்று தர விருப்பம் இல்லாவிட்டால் வேறு எங்காவது சென்று விடு அடுத்தவனுடன் மனைவி ஓடிவிட்டாள் எனக் கதை கட்டுவேன் எனக் கூறுபவனிடம் எதிர்த்துப் பேசுவதற்கும் துணிவின்றி, அவன் கூறிய வார்த்தைகளை தன் தாய் தந்தையரிடம் கூறவும் பயந்து கொண்டு வாழ்ந்த தேவியின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.

எங்கே கணவன் சொன்னபடி செய்து விடுவானோ என்ற பயத்திலேயே அதற்கு அடுத்து வந்த நாட்களிலும் தேவி மனவுளைச்சல் உடனேயே தன்னுடைய ட்ரீட்மென்ட்டுக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள்.


சூலகத்தில் முட்டைகள் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும், பொதுவாக லூட்டினைசிங் இயக்குநீரின் செயலொத்த மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி [HCG] எனப்படும் இயக்குநீரை ஊசிமூலம் செலுத்தி இறுதி முதிர்நிலையைத் தூண்டுவர். இந்த ஊசியை செலுத்திய பின்னர் தேவி அளவுக்கு அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளானாள்.

இந்த ஊசி ஏற்றப்பட்டு 38-40 மணித்தியாலங்களில் பொதுவாக முட்டைகள் சூலகத்திலிருந்து வெளியேறும்.ஆனால் அவ்வாறு முட்டைகள் தாமாகச் சூலகத்திலிருந்து பாலோப்பியன் குழாயினூடாக வெளியேறுவதற்கு முன்னமே, மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி ஊசியேற்றப்பட்டு 34-36 மணித்தியாலங்களில் முட்டைகளைச் செயற்கையாகச் சூலகத்திலிருந்து அகற்றி வெளியே எடுப்பாா்கள்.

தேவிக்கு சூலகத்திலிருந்து முட்டைகளை பிரித்து எடுக்கும் பொழுது தான் அதற்கான வலிகளும், பக்க விளைவுகளும் அளவுக்கதிகமான வேதனையை தர ஆரம்பித்தன. சூலகத்திலிருந்து முட்டை பெண்ணுறுப்பின் வழியாகவே 17 gauge catheter( 17 gauge catheter என்பது 1.473 mm விட்ட அளவை கொண்டது) மூலமாகவே பிரித்தெடுக்கப்படும். பிரித்தெடுக்கப்பட்ட முட்டைகளை இன்குபேட்டரில் வைத்து அதன் பின்னரே விந்தணுவுடன் இதற்கென்று ஒரு தேதியை நிர்ணயித்து இணைப்பார்கள்.

தேவிக்கு மீயொலி(Ultrasound probe)வழிகாட்டியுடன், பிறப்பிறுப்பினுள் ஊசியொன்றைச் செலுத்தி, அங்கிருந்து பிற்ப்புறுப்புச் சுவரினூடாகச் சூலகத்தை நோக்கி ஊசியைச் செலுத்தி, அங்கிருக்கும் முதிர்ந்த முட்டைகளைப் பெறும் பொழுது அதற்கெனத் தரப்பட்ட மயக்க ஊக்கி அதன் வேலையை செய்தாலும் மனதில் இருந்த குழப்பங்கள் மற்றும் பயங்களின் விளைவாக அவள் அந்த வலியை உணரவேச்செய்தாள்.

இவ்வாறு செய்யும் முறையில் 10 முதல் 30 வரையான முதிர்ந்த முட்டைகளை பிரித்து எடுப்பார்கள். ஆனால் செயல்முறை முடிந்தபின்னர் தேவிக்கு மருத்துவம் பார்த்த அந்த மருத்துவரோ "வழக்கமா எல்லோருக்கும் 30 முட்டை எடுப்போம். ஆனா உங்களுக்கு என்னமோ 5 முதிர்ந்த முட்டைதான் எடுக்க முடிஞ்சது. எங்களால முடிஞ்ச அளவுக்கு நாங்க ட்ரை பண்றோம். அதுக்கு மேல கடவுள் விட்ட வழி", எனக் கூறி அப்பொழுதே தேவியின் ஆழ் மனதில் ஒரு பயத்தை விதைத்ததுடன் நேர்மறையான பதில் ஏதும் கூறாமல் நழுவினார்.

5 முட்டைகள் எடுத்தனரா 30 முட்டைகள் எடுத்தனரா என்பது அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம். ஆனால் அந்த ரகசியத்தை பற்றி சற்றும் அறிந்திடாத நந்தனும், சாவித்திரியும் தங்களின் குத்தல் பேச்சுகளை குறைவின்றி அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த செய்முறைக்கு பின்னரான மறுநாளில் காலையில் எழும்போதே தேவிக்கு ஆங்காங்கே நரம்புகள் இழுத்துப் பிடிப்பது போன்று தோன்ற ஆரம்பித்தன. அத்துடன் இல்லாமல் வயிறு ஒரு மாதிரி உப்புசமாகவே(Bloating) இருந்தது. உப்பிய நிலையில் இருந்த வயிற்றினை கண்ட சாவித்திரி "நல்லா தின்னு தின்னு தொந்தியும், தொப்பையுமா இருக்கா பாரு! பிள்ளை பெத்துக்குறதுக்காக தொந்தியும் தொப்பையுமாக இருந்தா சந்தோசப்படுவேன்.

இங்கே அதுக்கான வழியை தான் காணோமே! அந்த மகராசியால ஊருல இருக்குறவளுக்கெல்லாம் வயித்துல புள்ள தங்குது. நான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்த சனியனுக்கு அதுக்கும் வாய்ப்பு இல்ல. அந்த அம்மா அப்படி இருந்தா நம்பிக்கையா சொல்லி இருக்குமே!", என வார்த்தையால் வதைத்த வண்ணமே இருந்தார்.

வேலைகள் செய்வதுடன் இந்த வலிகளையும் அனுபவித்தவளாள் ஒரு வாய் உணவு கூட உருப்படியாக உண்ண முடியவில்லை. எதனை உண்டாலும் வாந்தி எடுப்பது போன்ற உணர்வே மேலோங்கியது.

அடுத்து வந்த ஒரு வாரமும் இந்ந நிலையே இருந்ததில் தேவி உடலளவில் மிகவும் சோர்ந்து விட்டாள். அந்த ஒரு வாரமும் தன் தாய் வீட்டிற்கு சென்று சீராட மனம் விரும்பினாலும் உன் அம்மா வீட்டிற்கு சென்று ஓய்வு எடு என்று கூறாத மாமியாரும், நம் வீட்டில் வந்து ஓய்வெடு, சரியான பின்னர் உன் வீட்டிற்கு செல் என்று கூறாது அம்மாவும் அவளது மன உளைச்சலில் பெரும்பங்கு வகித்தனர்.

தேவியின் தந்தையோ அவளின் அம்மாவிடம் "இங்க பாரு பாக்கியா! நம்ம பொண்ணு இப்ப ட்ரீட்மென்டல இருக்கா. சம்மந்தி அம்மா வீட்ல இருக்கிறதை விட உன்கிட்ட இருந்தா இன்னும் கொஞ்சம் உரிமையா சாப்பிட்டு செஞ்சு, தூங்கி எழுந்துருப்பா. நீயும், நானும் போய் கூட்டிட்டு வரலாம்", என பலமுறை மன்றாடி விட்டார்.

அதற்கு தேவியின் அம்மா "நீங்க சும்மா இருங்க. ஏற்கனவே சம்பந்தியம்மா நம்ம பிள்ளையை எப்ப வீட்டை விட்டு விரட்டலாம் அப்படின்னு நாளு பார்த்துக்கிட்டு இருக்காங்க. இந்த நிலைமையில நாங்க கூட்டிட்டு போயி சீராட்டி அனுப்புறோமுன்னு சொன்னா ஒரேடியாக் கூட்டிட்டு போய்டுங்கன்னு சொல்லுவாங்க.

அப்படிக் கூட்டிட்டு வந்தப்புறம் நாளப் பின்ன ஊருக்குள்ள நம்மளால தலைநிமிர்ந்து நடக்க முடியாது. கஷ்டமோ, நஷ்டமோ புகுந்த வீட்டிலேயே இருக்கட்டும். நாம நம்மளால முடிஞ்சதை நம்ம பிள்ளைக்கு செஞ்சுக்கிட்டு தான் இருக்கப் போறோம்.நீங்க அடிக்கடி அவளுக்கு போன் பண்ணி என்னடா ராசாத்தி பண்ணுதுன்னு கொஞ்சுறதை நிப்பாட்டுங்க. நாம தாங்க, தாங்க அம்மா வீட்டுக்குப் போகலாம் அப்படிங்கிற எண்ணம் வந்துடும்.

ஒத்த பிள்ளைய பெத்து வச்சிருக்கோம். நம்ம காலத்துக்கு அடுத்து அவ புருஷன்தான் அவளை பாத்துக்கணும். நீங்களும் நானும் இந்த உலகத்துல சாஷ்வதமா இருக்கப் போறது கிடையாது", என தன் கணவரை அதட்டி ஓர் எல்லையில் நிற்க வைத்துவிட்டார்.

ஒரு வாரத்திற்குப் பின்னர் தேவியின் வயிற்று உப்புசம் குறைந்து சாதாரணமாக தோற்றமளித்த நிலையில் அதற்கும் சாவித்திரி "இப்ப ஒரு வாரமா கொஞ்சம் தீனியை குறைச்சதனால அந்த வயிறு பழைய நிலைமைக்கு வந்துடுச்சு. இதே மாதிரி கம்மியா தின்னு தொலைக்க வேண்டியதுதானே!", என அதற்கும் தன் பேச்சுகளை பேசி வைத்தார்.

ஆனால் சூலகத்திலிருந்து கருமுட்டையை எடுத்த பின்னர் ஒரு வாரத்திற்கு இந்த பக்க விளைவுகள் இருக்கும் என்பதை தேவியின் மருத்துவர் விலக்காதது அவருக்கு எங்கே தெரியப்போகிறது? தெரிந்திருந்தாலும் தேவியை திட்டாமல் தான் அவரால் இருக்க முடியுமா?

இந்த மாதிரி பக்கவிளைவுகள் அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவரவர் உடல்நிலையை பொறுத்து மாறுபடும். இங்கு உடல் நிலையுடன் மனநிலையும் முக்கியமாக கருதப்பட வேண்டியவை.

கணவர்,மற்றும் குடும்பத்தவர்களின் துணை இருந்தால் மட்டுமே இது போன்ற வலி மிகுந்த மருத்துவ முறைகளை எளிதாக கடந்திட முடியும். ஆனால் தேவிக்கோ அவளின் வலிகளை பகிா்ந்துக் கொள்ளக் கூட ஆட்கள் என்பது கிட்டவில்லை.

பெற்ற தாயிடம் போன் பேசும் பொழுது அம்மா ரொம்ப வலிக்குது, தூக்கம் தூக்கமா வருது,தலை சுத்திகிட்டே இருக்கு, என்னால எந்திரிச்சு நிக்கவே முடியலை இது போன்ற சினுங்கினால் சும்மா இரு தேவி! பிள்ளை பெத்துப்கிறதுன்னா சும்மாவா? நாங்கல்லாம் அந்த காலத்துல எந்த நோவும் இல்லாமலா பெத்துக்கிட்டோம்? இப்ப நீ அனுபவிக்கிற வலியெல்லாம் ஒரு பிள்ளை வந்து அம்மான்னு கூப்பிடுறப்ப சந்தோஷமா மாறி டு ம். அதை மட்டும் மனசுல வச்சிக்கோ...

வேற கண்ட கருமத்தை நினைக்காம உன் மாமியாரும், புருஷனும் என்ன சொன்னாலும் அவங்க பேச்சை ஒழுங்காக் கேளு. உனக்கு செலவுக்கு அப்பாவை கொண்டுவந்து இந்த வார கடைசியில் காசு தர சொல்றேன். நல்லா தின்னு உடம்பை தெம்பாக வச்சுக்கோ", என அறிவுரைகள் மட்டுமேக் கூறினார்.

தேவி எடுத்துக்கொண்ட மருந்துகளின் விளைவாக உணவு உண்பது என்பது பெரும் பிரயத்தனம் ஆகி போய் இருந்தது என்பதை அவருக்கு யார் புரிய வைப்பது. ஆரம்பத்தில் பசித்தது முட்டைகளை வெளியே எடுத்த பின்னர் பசி என்பதை மரத்துப்போனது என்னதான் வியப்பான மருந்துகளோ என தேவி தன்னுள்ளேயே யோசித்து யோசித்து குழம்பிப் போயிருந்தாள்.

அதன்பின்னர் நந்தனிடம் சேகரிக்கப்பட்ட விந்துக்களையும் தேவியிடமிருந்து பெறப்பட்ட முட்டைகளையும் 75,000:1 என்ற விகிதத்தில் கலந்து 18 மணி நேரங்களுக்கு விட்டனா். இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் பொதுவாகக் கருக்கட்டல் நிகழ்ந்திருக்கும்.

ஆனால் இந்தக் கருக்கட்டல் சரியான முறையில் நிகழ்ந்ததா, இல்லையா என்பதனை மருத்துவரால் மட்டுமே கணிக்க முடியும். மருத்துவர் பார்த்து உண்மையை கூறினால் அவர்களுக்கு நல்ல மருத்துவர் கிடைத்து இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம் .கருக்கட்டல் நிகழவில்லை இதனை மறுபடியும் செய்ய வேண்டும் எனக் கூறினால் சிகிச்சைக்கு சென்றவர்களால் வேறு ஏதேனும் பேசவும் இயலாது, என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியவும் இயலாது.

தேவியின் சிகிச்சையில் கருக்கட்டல் நிகழ்ந்துள்ளது என்றுக் கூறிய மருத்துவர் அதனை அவளுடைய கருப்பையில் வைப்பதற்கான நாளினையும் குறித்து அவர்களை மருத்துவமனைக்கு வரச்சொன்னார்.

ஆனால் இந்த செய்முறையில் தேவி இழந்திடப் போவதை மருத்துவராலும் கணிக்க முடியாமல் போனது விதியின் விந்தையோ?
 
  • Like
Reactions: Sumathi mathi

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-6

வலிகள் முட்களாக குத்திக்கொண்டே இருந்தாலும் தனக்கு ஒரு குழந்தை கிடைக்கப்போகிறது என்ற எண்ணத்தில் தேவி மிதந்து கொண்டிருக்க கருவை அவளது கருப்பையில் செலுத்திய அந்த நொடிகளில் இறந்து பிறந்தாலும் தன் எதிர்பார்ப்பில் சற்றும் குறை வைக்கவில்லை.

எதிர்பார்ப்புகள், நாம் நினைப்பது என அனைத்துமே நடந்துவிட்டால் வாழ்வில் சுவாரசியம் ஏது? ஆம் தேவியின் எதிர்பார்ப்பு, மருத்துவரின் நம்பிக்கை வார்த்தைகள் அனைத்தும் அவளுக்கு வந்த மாதவிடாயில் தகர்ந்து போயின.

வடித்த சாதம் கொட்டினால் அதனால் என்ன மறுபடியும் ஆக்கிக்கலாம் என்ற மனப்பான்மை பலருக்கும் இருப்பதில்லை. கொட்டிய சாதத்திற்காகவே வருந்தி, வருத்தப்பட வைப்பது போன்று தான் தேவியின் சூழ்நிலையும் அமைந்தது. ஏன் தனக்கு இவ்வாறு ஆனது என தேவி மனதளவில் வருந்திக் கொண்டிருக்க அதுவரை வாய் வார்த்தையில் மட்டுமே சாடி கொண்டிருந்த நந்தன் அவளது உடல் வலி, மன வலி இரண்டையும் புரிந்து கொள்ளாமல் தன் தாய் பேசும் பொழுதெல்லாம் தேவியை கைநீட்டி அடிக்க ஆரம்பித்திருந்தான்.


பிறந்த வீட்டிற்கு சென்று ஆறுதல் தேடலாம் என அங்கே சென்றால் தேவியின் அம்மா பாக்கியம் பக்கத்து வீட்டில் அவங்க அந்த மாதிரி சொன்னாங்க, இந்த மருந்தை சொன்னாங்க, இப்படி இருக்க சொன்னாங்க என கவனிக்கிறேன் என்ற பெயரில் அவளை மேலும் படுத்தி எடுத்து கொண்டிருந்தார்.

அங்கேயும் ஒரு வாரத்திற்கு மேல் அவளால் தங்க முடியவில்லை. வேறுவழியின்றி புக்ககம் திரும்பியவள் நடமாடும் பிணம் ஆகிப் போனாள். செய் என்றால் செய்து, தூங்கு என்றால் தூங்கி அவர்கள் ஆட்டுவிக்கும் கைப்பாவையாக மட்டுமே மாறியவள் அதன் பின்னர் பலமுறை ஐவிஎஃப் சிகிச்சைக்கு சென்று வந்து விட்டாள்.

ஒவ்வொரு முறையும் ஏற்றப்பட்ட மருந்துகளின் விளைவாக அவளது உடல் நிலையில் பலவித மாற்றங்கள் வெளிப்படையாக ஏற்பட ஆரம்பித்தன.தேவி கொடி போன்ற இடை கொண்டவள் இல்லை என்றாலும் ஆரோக்கியமான உடல் வாகை கொண்ட தேவி 35 வயதில் உட்கார்ந்தால் எதையும் பிடிக்காமல் எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில் அவளது உடல் எடை பலமடங்கு அதிகம் ஆகிவிட்டது.

முதல் முறை தனக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் சிகிச்சைக்கு சென்ற தேவி, இரண்டாவது முறை இந்த முறை கண்டிப்பாக பிறந்து விட வேண்டும் என்ற வேண்டுதலுடன் சென்றிட, மூன்றாவது முறையோ எனக்கு இந்த முறை பிறக்குமா என ஊசலாடிய நம்பிக்கையுடன் சென்றாள்.

அதற்கு அடுத்து வந்த ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புகள் இன்றி ஏமாற்றங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் மனதளவில் சுமந்து கொண்டுதான் சிகிச்சைக்கு சென்று வந்தாள். மருத்துவ அறிக்கையில் இருவருக்கும் எவ்வித குறைபாடும் இல்லை என்று கூறினாலும் ஏனோ ஐவிஎஃப் சிகிச்சை முறை தேவிக்கு பலனளிக்கவில்லை.

மருந்துகளும் மாத்திரைகளும் மட்டுமா அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட முடியும்? மனதளவில் அவளுக்கு ஏற்பட்ட அழுத்தம் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும் அல்லவா? ஆனால் அதனை யாரும் புரிந்து கொள்ளவில்லை. பொதுவாக ஐவிஎஃப் செய்ய செல்பவர்களுக்கு தேவைப்பட்டால் மன நல ஆலோசனையும் வழங்கப்படும்.

ஆனால் தேவியின் மருத்துவரோ அவளை மனநல ஆலோசகரிடம் அனுப்புவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனை பற்றி அறியாதவர்களுக்கு கூற வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு இருந்ததில்லை. இறுதியாக "நாங்க செய்ற சிகிச்சையில எவ்வளவோ பேருக்கு பலன் கிடைக்குது. ஆனா உங்க மருமகளுக்கு அதற்கான பிராப்தம் இல்லை", என தேவியின் மேல் பழி சுமத்தி விட்டு ஒதுங்கி விட்டார்.

இடைப்பட்ட காலங்களில் எடுத்துக்கொண்ட நாட்டு மருந்துகள், வேண்டுதல்கள், விரதங்கள்,ஆங்கில மருந்துகள் இவற்றினால் ஏற்பட்ட விளைவுகள் உடலளவில் வெளிப்படையாக தெரிந்ததில் அவளை கருவிய சாவித்திரி, அவளது அக்கம்பக்கத்தார், பெற்ற வீடு என அனைவரும் அவளது மனதில் ஏற்பட்ட மாற்றங்களை சிறிதளவும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் அறிந்து கொள்ளாவிட்டாலும் அதனை வெளியில் கூறுவதற்கு தேவியும் முயலவில்லை. முயன்றாலும் பலன் கிடைக்காது என அவள் அறிந்திருந்தாளோ?

இந்நிலையில் தேவியின் தந்தையும், தாயும் ஒரு விபத்தில் ஒன்றாக பலியாகிட கேட்கும்போதெல்லாம் பணம் காய்ச்சி மரமாக இருந்த தேவி அதன் பின்னர் செல்லாக்காசாகி போனாள். ஏனெனில் அவளது மருத்துவ செலவிற்காக கடந்த 14 ஆண்டுகளில் அவர்களது பூர்வீக நிலங்களை எல்லாம் விற்றுதான் அவளது தந்தை பணம் கொடுத்திருந்தார்.

அவர்கள் இறுதி யாத்திரைக்கு செலவழிப்பதற்கு சாவித்திரியும், நந்தனும் தங்கள் கையிலிருந்து ஒரு ரூபாய் கூட நகட்டிடவில்லை. வீட்டில் இருந்த பணத்தை வைத்துதான் அதனையும் முடித்தார்கள். முடித்த கையுடன் தேவியின் வீட்டையும், அவர்கள் நடத்திவந்த கடையையும் விற்பதற்கு முயன்றார்கள். தேவியின் தந்தை இறுதியாக இவை அனைத்தும் தேவி இறுதி காலம் வரைக்கும் அவள் அனுபவிக்கலாம், ஆனால் அதனை எந்த நிலையிலும் விற்க முடியாது என உயில் எழுதி வைத்து இருந்த காரணத்தினால் விற்க முடியாமல் போனது.

இப்பொழுது சாவித்திரி அதனை விற்றுதா எனக் கூறுவது கூட மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தால் தேவி தானே தற்கொலை செய்து கொள்வாள். அதன் பின்னர் அவளின் கணவன் என்ற முறையில் நந்தன் அந்த சொத்தை விற்கலாம் என்ற எண்ணத்தினால்தான் தேவியிடம் மகனின் இரண்டாம் திருமணத்தைப் பற்றி பேச்சு எடுத்தாள்.

என்றேனும் ஒரு நாள் இந்த பேச்சு வரும் என தேவி பல வருடங்களாக இதனை எதிர்பார்த்த நிலையிலேயே இருந்தாள். ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து இப்போது திடீரென ஏன் கூறுகிறார்கள் என அவளுக்கு சற்றும் புரியவில்லை. அதனை அவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வதாலும் எந்த பிரயோஜனமும் இல்லை என உணர்ந்த தேவி தனது அறையில் மூழ்கியிருந்த சிந்தனைகளிலிருந்து மீண்டு இனி என்ன செய்யலாமென சற்று சிந்திக்க ஆரம்பித்தாள்.

அதன் பின்னர் அன்றைய இரவு முழுவதும் தூங்காமல் தான் செய்யப்போகும் வேலை சரியா இல்லையா என பல வித யோசனைகளில் உழன்று ஒரு முடிவுக்கு வந்தவள் மறுநாள் விடியலில் மிகவும் தெளிவான முகத்துடன் அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

வெளியே வந்தவள் நேராக சாவித்திரியிடம் சென்று "அத்தை எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க. நான் உங்க மனசு சந்தோஷப படுற மாதிரி ஒரு நல்ல முடிவை மட்டும்தான் சொல்லுவேன்", எனக்கூறிவிட்டு வேறு எந்த பதிலையும் எதிர்பாராமல் தன்னுடைய வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

அந்த ஒரு வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் தேவி எப்பொழுதும் இல்லாமல் தானே மார்க்கெட் சென்று வருகிறேன் என சாவித்திரியிடம் கேட்டதில் சாவித்திரி அவளை சந்தேகமாக பார்த்தாலும் சரி ஏதோ செஞ்சு தொலை என விட்டுவிட்டார். அவருக்கு தேவை தேவியின் இறப்பு, அதன் பின்னர் கிடைக்கும் அவளது சொத்துகள் மட்டுமே!

தேவி அவருக்கு சாதகமான பதிலை கூறாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் தேவியின் உயிர் போய்விட வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே சாவித்திரி தெளிவாக இருந்தார். ஆனால் அவருக்கு முன்னரே தேவி தெளிவான முடிவை எடுத்துவிட்டாள் என சாவித்திரி அறிந்திருக்கவில்லை. அறியும் பொழுதில் அனைத்தும் தகர்ந்திடுமா இல்லை மீண்டும் தேவியை ஆட்டிப்படைத்திட சாவித்திரி புது வழிமுறையை கண்டுபிடித்திடுவாரா?

ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் தேவி அமைதி காத்திட சாவித்திரிக்கும், நந்தனுக்கும் இருப்புக் கொள்ளவில்லை. அதனால் அன்றைய காலை முதல் வேலையாக தேவியிடம் என்ன முடிவு எடுத்திருக்க? எப்பக் கையெழுத்துப் போடுற என விதவிதமாக கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர்.

அதற்கெல்லாம் எதுவும் பதில் கூறிடாத தேவி தான் தங்கியிருந்த அறையினுள் சென்று அவள் ஏற்கனவே தன்னுடைய துணிகளை பாக் செய்து வைத்திருந்த இரண்டு சூட்கேஸ் மற்றும் 2 பேக் என ஒவ்வொன்றாக எடுத்து வந்து ஹாலில் வைத்துவிட்டு "நான் இந்த வீட்டை விட்டுப் போறேன். நீங்க என்ன செய்யனுமோ செஞ்சுக்கோங்க. எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

ஆனா நீங்க கேட்ட மாதிரி உங்க பையன் ரெண்டாவது கல்யாணம் செஞ்சுக்க நான் அடம்பிடிச்ச மாதிரி கையெழுத்து போட்டு தர முடியாது. என்னோட வீடும், கடையும் நான் உயிரோட இருக்கிற வரைக்கும் விக்க முடியாதுன்னு சொல்லி எங்க அப்பா எழுதி வச்ச விஷயம் உங்களுக்கு நல்லாவே தெரியும்.அப்படி இருக்குறப்ப வீடு வித்து பணம் வேணும் அப்படின்னு கேட்டா நீங்க என்னை கொலை செய்ய முயற்சி பண்றதா அர்த்தம்.

பிறந்ததுல இருந்து உங்க பையனை கல்யாணம் பண்ணி வர வரைக்கும் நான் நிம்மதியாதான் இருந்தேன். வந்ததுக்கு அப்புறம் என்னோட நிம்மதி குறைஞ்சாலும் இதுவரைக்கும் உங்களை நான் எதிர்த்து பேசினது கிடையாது. இப்பவும் உங்களை நான் எதிர்த்துப் பேசலை.

என்னோட முடிவை சொல்லிட்டு ஒதுங்கிப் போறேன். என்னோட அப்பா அம்மா எனக்கு வச்சுட்டு போன வீட்லதான் நான் தங்கப் போறேன். உங்களுக்கு அதனால காசு கொடுக்க முடியாது. நான் இந்த வீட்டுக்கு வர்றப்ப எனக்கு எங்க அப்பா 80 பவுன் நகை போட்டு அனுப்பினார். உங்க பையனுக்குன்னு தனியா 10 பவுன் நகை செஞ்சாரு. அதுபோக ரொக்கப்பணம் 10 லட்ச ரூபாய் கொடுத்தார். அதை எல்லாத்தையும் நீங்க எனக்கு எப்ப திருப்பிக் கொடுக்கிறீங்கன்னு என் நம்பருக்கு போன் பண்ணி சொல்லுங்க. நான் அதை எல்லாத்தையும் வாங்கிட்டு உங்களுக்கு கையெழுத்து போட்டு தர்றேன்" எனக் கூறியவள் எதையும் அவர்கள் பேசுவதற்கு முன்னரே மீண்டும் தன்னுடைய பெட்டிகளையும், பையையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வர ஆரம்பித்து விட்டாள்.

அவள் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டிருந்த நிலையில் அவள் அதுவரை பேசியதில் அதிர்ந்து போயிருந்த சாவித்திரி சட்டென்று நினைவு வந்தவராக"டேய்! அந்த சிறுக்கியை இழுத்து உள்ளே போட்டு கதவை பூட்டு. என்ன தைரியத்துல இந்த வேலை செஞ்சுகிட்டு இருக்கா. ரெண்டு நாளு இவ வெளியே போயிட்டு வந்தப்பவே சந்தேகப்பட்டேன். எவனையோ போய் பார்த்துட்டு வந்துருக்காடா. இழுத்து உள்ளப் போடுடா", என தன் பெரும் குரலெடுத்துக் கத்தினார்.

ஆனால் அதற்கு முன்னரே தேவி ஏற்கனவே வர சொல்லி இருந்த கேப் வாசலில் வந்து நின்றிருந்தது.கேப் புக் பண்றதெல்லாம் இவளுக்கு தெரியுமா என அவளை கையை பிடித்து இழுத்து வரச் சென்ற நந்தன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே கேப் டிரைவருடன் "வக்கீல்தான் என்னையும் அனுப்புனாங்க.நீங்க பத்திரமா வீடு போய்ச் சேர்ற வரைக்கும் உங்க கூடவே இருக்க சொல்லியிருக்காங்க", என மற்றுமொருவரும் கேப்பிலிருந்து இறங்கினார்.

வக்கீலா என நந்தனும், சாவித்திரியும் திகைத்துக் கொண்டிருக்கும்போதே தேவி காரில் ஏறி சென்றிருந்தாள். அவள் சென்ற பின்னர்தான் "இவ என்னத்த பண்ணி வச்சிருக்காம்மா?", என நந்தன் தன் தாயிடம் வினவினான்.

"நம்ம முன்னாடி சீன் போடுறாடா. எவன் கூடவோ இவளுக்கு பழக்கம் இருக்கு. அதனாலதான் இத்தனை நாளு வாய மூடிக்கிட்டு இருந்தவ இப்ப துள்ளுறா. இவளை சந்தி சிரிக்க வைக்கிறேன் பாரு. நீ ஒண்ணத்துக்கும் கவலைப்படாதே. அந்த பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு போனை போட்டு எவனோடயோ ஓடிப்போயிட்டா அப்படின்னு சொல்லி நாளைக்கே உனக்கு நான் கல்யாண நாளை முடிவெடுக்குறேன்.

பணம் வேணுமா? சனியன் யார் கிட்ட வந்து கேட்குறா? இவ அப்பன் நகை போட்டதுக்கும், பணம் கொடுத்ததுக்கும் யாரும் சாட்சி இருக்காங்களா என்ன? யாரும் கிடையாது. அம்மா நான் இருக்கேன். நீ கவலைப்படாதே!", என சாவித்திரி தன் மகனை தேற்றிவிட்டு பலவித திட்டங்களை தன் மனதினுள் போட ஆரம்பித்திருந்தார்.

அவரது திட்டத்தை எல்லாம் பொடியாக்கும் வகையில் தேவி அந்த வீட்டை விட்டுச் சென்ற பத்து நாட்களில் நந்தனுக்கு அனுசுயா தேவியின் வக்கீல் சுஜாதாவின் மூலம் கோா்ட்டிலிருந்து விவாகரத்து நோட்டீஸ் மற்றும் ஜீவனாம்சம் கோாிய நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

அதனையே வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்த நந்தனுக்கு அந்நேரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. அழைப்பையேற்றவனிடம் "மிஸ்டர் நந்தன் உங்க மேல குடும்ப வன்கொடுமை சட்டம்(Domestic violence Act)சம்பந்தமா ஒரு வழக்கு பதிவாகி இருக்கு. நீங்க நாளைக்கு காலைல எங்க ஸ்டேஷனுக்கு வந்துடுங்க", எனக் கூறி அடுத்த இடியை இறக்கினர்.

விவாகரத்தும், குடும்ப வன்கொடுமை வழக்கும் நந்னை மாற்றி யோசித்திட செய்யுமா? இல்லை இதனை எதிர்கொள்ள செய்த மனைவியை இல்லாமல் செய்திட செய்யுமா?
 
  • Like
Reactions: Sumathi mathi