லாக் டவுன் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
வசந்த் காரை நோக்கி நான்கு எட்டு வைத்திருப்பான், சரியாக அந்த நேரம் சர்ரென்று சத்தம் வந்தது. இவர்கள் நான்கு பேரும் நிமிர்ந்து என்னவெனப் பார்க்க, பாண்டி வினாடியில் செயல்பட்டிருந்தான்.

“சார் குவிக்… குனிங்க. இப்படி இந்தப் பக்கம் வாங்க. குனிஞ்சிக்கோங்க…”

சொல்லிவிட்டு வசந்தை அவசரமாக நகர்த்தி விட்டான். ஒரு ராக்கெட் வெடி எங்கிருந்தோ சீறிக்கொண்டு வந்து, இவர்களுக்கு வெகு அருகே போய் வெடித்து விழுந்தது.

நிமிடத்திலே அங்குச் சூழ்நிலை பதட்டமானது. வசந்த் பாதுகாப்பாக அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டான். மதுர பாண்டியும் இன்னொருவரும் நிலைமையைக் கையில் எடுத்துச் செயல்பட்டார்கள்.

பத்து நிமிடத்திற்குள் இரண்டு போலீஸ் வாகனங்கள் விரைந்து வந்துவிட, என்ன நிகழ்ந்தது என்று அலசி ஆராயப்பட்டது.

அஸிஸ்டண்ட் கமிஷ்னர் உதய்சரண் அரை மணி நேரத்தில் வசந்தின் முன்னால் வந்து உட்கார்ந்தான்.

“ஏன்டா ஒரு சாதாரணப் பட்டாசு வெடிக்கு இவ்வளவு அலப்பறை தேவையா?”

வசந்த் புன்னகையுடன் கேட்க, “எங்க கடமையை நாங்க செய்றோம் கலெக்டர் சாரே. நீங்க இனி நிம்மதியா வீட்டுக்குக் கிளம்புங்க. நாளைக்கு முழு ரிப்போர்ட் உங்க கையிலே இருக்கும்.” சொன்னான் உதய்சரண்.

சம்பவம் தொடர்பாகப் பதிமூன்று வயது பையனைப் பிடித்திருந்தனர்.

“அந்தப் பையனுடைய வயசு அப்படி. விபரீதமா எதுவும் இருக்காது உதய்.”

“விளையாட்டோ விபரீதமோ இவன் யாரு என்னன்னு பார்த்துரலாம். நாளைக்குப் பின்ன கலெக்டர் ஆஃபீஸ் மட்டுமில்லை இப்படி எந்த அரசு சம்மந்தப்பட்ட இடங்களிலும் பொது இடங்களிலும் யோசிக்காமல் எதையும் செய்யக் கூடாதில்ல. ஜஸ்ட் ஃபார் ஃபன்னு பப்ளிக் நியூசென்ஸ் நம்ம சிட்டில மட்டுமில்லை ஸ்டேட்ல பல இடங்களிலே இப்ப டிரண்டாயிட்டு இருக்கு வசந்த்.”

சீரியஸாகப் பேசிய உதய்சரண் வசந்திற்கு முன்பே பழக்கம். சம வயது என்பதால் நட்பு இழையோடித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“புரியுது உதய். நானும் சில செய்திகளைக் கவனிச்சேன். நீ உன் கடமையைப் பாரு. இந்தச் சம்பவத்தை நாளைக்கு மீடியா பெரிசுப்படுத்திப் போடாமல் பார்த்துக்கோ. அம்மாவும் அப்பாவும் வராங்க.”

“மெதுவா சொல்ற. மீடியா ஏற்கெனவே ஸ்மெல் பண்ணி வந்தாச்சு. முடிஞ்சளவு முயற்சி பண்ணுறேன். சரி எப்ப வர்றாங்க பேரெண்ட்ஸ்.”

“நாளைக்குக் காலையிலேடா.”

“குட் குட். என்ஜாய் தெயர் ஸ்டே! என்ன விசயம் வசந்த்? அம்மா அப்பா விசிட்டுக்குப் பின்னாடி உன்னை லாக் பண்ணி வைக்கச் சதி நடக்குதா?”

கண்ணடித்தபடிக் கேட்டவனுக்கு வசந்தின் முகமே வேண்டிய பதிலைத் தந்துவிட்டது.

“டேய் டேய்! நீ வேற!”

“எதுவானாலும் பெஸ்ட் விஷஸ் டு யூ!”

இருவரும் கை குலுக்கிக்கொண்டு விடைபெற்றார்கள்.

வசந்த் வீட்டை அடைந்த போதே தெரிந்துவிட்டது. சம்பவத்தைப் பற்றி வீடு வரைக்கும் செய்தி வந்துவிட்டது. அதற்குள்ளே தொலைக்காட்சியில் ஒளி பரப்பி விட்டார்களா? யோசனையுடன் வாகனத்தைவிட்டு இறங்கினான்.

சரள்கண்ணன், “என்னாச்சு வசந்த்? உனக்கு எதுவும் அடிபடலையே?” படபடப்பாக விசாரித்தார். அவருடன் காயத்ரியின் கணவர் பாலசந்தர், அவர்களுடைய புதல்வன் குணா, தென்னம்பாளை என்று அனைவரும் நின்றிருந்தார்கள்.

“எனக்கு ஒன்னுமில்லை அங்கிள். சாதாரண நிகழ்வு தான். அதுக்குள்ளே உங்க எல்லோருக்கும் எப்படித் தெரிஞ்சது?”

சிறு முறுவலுடன் கேட்க, மணிகண்டன் பாண்டிக்குப் பின்னால் மறைவாக நின்று கொண்டான். வசந்த் அவனைக் கண்டுகொண்டான். சில நிமிடங்கள் நின்று சரள்கண்ணன் மற்றும் பாலசந்தரிடம் பேசினான்.

“நீ எப்போ வந்தே குணா?”

சைந்தவியின் அத்தை மகன் குணசீலனிடம் விசாரித்துவிட்டு மாடிப்படிகளில் ஏறி மேலே சென்றான்.

வசந்திற்குக் கதவைத் திறந்துவிட்டான் சதீஷ்.

“நீங்க சேஃப் தானே ஜி? மணி ஃபோன் பண்ணிச் சொன்னதும் பயந்துட்டோம் ஜி.”

அவசரமாகத் தன்னை ஆராய்ந்தவனை நக்கலடித்தான் வசந்த்.

“என் பொண்டாட்டி தோத்தா போ! ஏன்டா இப்படி ஓவரா பாசத்தைப் பொழியுற?”

“போங்க ஜி!” வெட்கப்பட்ட சதீஷ் சொன்னான், “முதல்ல கல்யாணம் பண்ணி மேடம் ஜியை நம்ம வீட்ல பிடிச்சி வைங்க. இப்படிக் கவலைப்படுற பொறுப்பை அவங்க கிட்ட ஒப்படைச்சிருவேன்.”

“எப்படி? ‘என் கண்ணையே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்’ன்னு சினிமா வசனம் பேசியா?”

கேட்டுவிட்டு வசந்த் சிரித்தான். காலையில் சரள்கண்ணன் அழைத்ததில் இருந்து வந்திருந்த அழுத்தம்; தொடர்ந்த அலைச்சல்; மாலையில் நடந்த அசம்பாவிதம் என்று இருந்தவனுடைய மனத்தில் சதீஷுடன் பேசியது இலகுத்தன்மையை வர வைத்திருந்தது.

“என்னுடைய மேடம் யாருன்னு முடிவாகுற வரைக்கும் அடக்கி வாசி சதீஷ்.”

அவனிடம் சொல்லிவிட்டுக் கூடத்தில் பார்வையை வைத்த வசந்துடைய கண்கள் விரிந்தன. வினாடியில் மின்னல் பூக்கள் கோர்த்து முகம் பிரகாசித்தது.

“அதிசயம்! ஆனால் உண்மை! இது எப்போதிலிருந்து?”

அங்கே உட்கார்ந்து மடிக்கணினியில் ஆழ்ந்து இருந்த சைந்தவியைக் காட்டிக் கேட்டான்.

“காலையிலே நீங்க கிளம்பிப் போன கொஞ்ச நேரத்திலேயே வெளிய வந்து உட்கார்ந்தாங்க. இன்னைக்கி டைனிங் டேபிள்ள தான் சாப்பிட்டாங்க ஜி.”

“ஓகே குட்! டயர்டா இருக்கு சதீஷ். ஜின்ஜர் டீ ப்ளீஸ்.”

இந்த நேரம் வந்தால் டீ, டிஃபனைத் தவிர்த்துவிட்டு நேரிடையாக இரவு உணவு போதும் என்பவன் இன்று நேரத்தை வாங்கவே டீ கேட்டான்.

கூடத்தில் நுழைந்த வசந்தைச் சைந்தவி கவனிக்கவில்லை. தீவிரமாக வேலையில் மூழ்கி இருந்தவளைக் கடந்த வசந்த், “ஹலோ சைந்தவி!” சொன்னான்.

அவனுடைய குரலில் கவனம் கலைந்தாள்.

“ஹேய் வசந்த்! எப்போ வந்தீங்க? ஆர் யூ ஓகே?”

“உனக்கும் தெரிஞ்சிடுச்சா?”

‘ஆமாம்’ என்பதாகத் தலையாட்டினாள்.

“ஐ’ம் ஓகே பேபி!”

சொல்லிவிட்டு அறையை நோக்கிப் போக, “வாட்! பேபியா?” அதிர்ந்து போய்க் கேட்டாள்.

அதைத் திரும்பிப் பார்த்து இரசித்தவன், “தாங்க்ஸ், அக்கறையா விசாரிச்சதுக்கு!” முறுவலுடன் சொன்னான்.

“உன் கூடப் பேசணும். அரை மணி நேரம் ஒதுக்க முடியுமா?”

“கலெக்டர் கிட்ட நாங்க தான் அப்பாயின்மெண்ட் கேட்டு நிக்கணும்.”

“ஒரே நாளிலே என்ன மேஜிக் ஆச்சு?”

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்தாள் சைந்தவி.

“ஃப்ரெஷன் அப் அண்ட் கம். டின்னர் சாப்பிட்டுட்டு பேசலாம்.”

அரை மணி நேரம் கடந்திருந்தது. இருவரும் சாப்பாட்டு மேஜையில் இருந்தார்கள்.

குத்தரிசி சோறு, சாம்பார், பீட்ரூட் தூரன், மரவள்ளி வறுவல் என்று கேரளா வகையான பதார்த்தங்களுடன் சைந்தவிக்காக இட்லி, சட்னியும் வைக்கப்பட்டிருந்தன.

வசந்த் சாப்பிடுவதைக் கவனித்தவள் கேட்டாள்…

“நீங்க மதியம் லன்ச் சாப்பிடலையா வசந்த்?”

“நான் சாப்பிடுற வேகம் காட்டிக் கொடுத்திடுச்சா சைவிம்மா?”

விகசித்த முகமும் முறுவலும் கூடக் கேட்டுவிட்டு மரவள்ளி வறுவலைச் சுவைத்தான். வேக வேகமாகச் சாப்பிடுகிறவனை இமைகள் கூடாமல் பார்த்தாள்.

“என்னைச் சைவிம்மான்னு கூப்பிட வேண்டாம் வசந்த்!”

மனத்தில் சொன்னதாக நினைத்து வெளியே சொல்லிவிட்டாள். மெதுவாக என்றாலும் வசந்திற்குக் கேட்டுவிட்டது.

“ஏன் சைவிம்மா? வினித்தும் உன்னைச் சைவிம்மான்னு கூப்பிடுவாரோ?”

திடுக்கிட்டுப் போனாள் சைந்தவி.

அவளைக் கூர்மையாகப் பார்த்துவிட்டு, தன்னுடைய உணவைத் தொடர்ந்தான் வசந்த்.

இட்லியைச் சட்னியில் தோய்த்து விழுங்க முற்பட்டவளுடைய தொண்டை அடைத்துக்கொண்டது. விக்கலும் வர, வசந்த் சொன்னான்…

“விக்கல் வந்தா தண்ணி குடிக்கணும் சைந்தவி.”

டம்ளரை அவளுடைய கையில் தந்தான். சைந்தவிக்குத் தண்ணீர் குடிக்கக் குடிக்க, கண்களில் கண்ணீர் பொங்கியது.

“எதுக்கு இப்போ அழணும்? சாப்பிட்டுட்டு வா. பேசலாம். சதீஷ்… மேடமுக்கு முறுகலா தோசை ஊத்தி எடுத்திட்டு வா.”

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினைவினைக் கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களைத் துறந்துவிடு…

“ம்ம்… சாப்பிடுச் சைந்தவி. மறக்க வேண்டியதை மறந்து தான் ஆகணும். கண்ணீரும் மனசைப் போலத் தான்… ரொம்ப விலைமதிப்புள்ளது. பத்திரமா வச்சிக்க. உன் மனசுக்குப் போட்டு வச்சிருக்கும் பூட்டை எடுத்து வீசிடு.

கண்ணீரை லாக் டவுனுக்குக் கொண்டு வா. மாற்றங்கள் தானா வரும். நம்ம ஒவ்வொருவரும் நினைக்கிறது எல்லாம் நடந்திட்டா உலகத்தின் இயக்கம் என்னவாகும்? இதை மையமா வச்சி சினிமா எடுத்துக்காட்டி இருக்காங்களே.

படம் பேரு என்னன்னு ஞாபகத்திலே இல்லை. நான் ஹிந்தியிலே பார்த்தேன். நீயும் அந்தப்படத்தைப் பார்த்திருக்கியா என்ன?”

அவளுடன் சகஜமாகப் பேசினாலும், மனத்தில்…

‘காதல் தான் எத்தனை கீர்த்தி செய்துவிடுகிறது? இவள் என்ன பாவம் செய்துவிட்டாள்? இத்தனை மருகிப் போக? எல்லாம் எல்லாம்… எல்லாமே துன்பமாக அமையுமா என்ன?’

நினைத்துக்கொண்டான் வசந்த்.
 
Status
Not open for further replies.