லாக் டவுன் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
Precap...


வணக்கம்!

உங்களைக் காக்க வைத்துவிட்டேன். மன்னிக்கவும்! என்ன முயன்றும் எழுத முடியவில்லை. போக என்னுடைய பசங்களுடைய பள்ளி, கல்லூரி முன்னிட்டு சில வேலைகள் ஆக்கிரமித்துக் கொண்டன. இந்த வாரம் திரும்பிவிடுவேன்.
உங்களுக்காக அடுத்த பதிவிலிருந்து...
***
சதீஷ் வசந்திடம் முறுவலுடன் சொன்னான்.
“குட் ஈவ்னிங் ஜி!”

அவனுடைய வணக்கத்தை ஏற்று பதில் சொன்னான் வசந்த்.

“குட் ஈவ்னிங் சதீஷ்! என்ன இது இப்படி ஜொலிக்கிறே?”

சதீஷை ஆராய்ச்சியாகப் பார்த்துக்கொண்டே கேள்வியுடன் புருவத்தை உயர்த்திய வசந்த், காலணிகளைக் கலட்டி ரேக்கில் வைத்தான்.

“இரண்டு நாள் போரடிச்சுப் போயிருச்சு ஜி. இன்னைக்கு நீங்க சீக்கிரம் வந்திட்டீங்க. அதான் இந்தச் சதீஷ் ஹேப்பி ஆகிட்டான்.”

வாய்விட்டுச் சிரித்த வசந்த், அந்த வீட்டின் இரண்டாம் படுக்கை அறையை நோக்கி நடந்தபடி சொன்னான்…

“சதீஷ், என் கல்யாணத்துக்குப் பிறகு மிசஸ் வசந்த் கூட என் வருகையை எதிர்பார்த்து இந்தளவு சந்தோஷமாவாங்களான்னு தெரியலை.”

அவனையறியாமலேயே அவனுடைய பார்வை முதல் படுக்கை அறையின் மூடியிருந்த கதவைச் சில வினாடிகள் வெறித்தது. பின்னர்ச் சதீஷைப் பார்க்க, அவனோ மெல்லிய வெட்கம் படரச் சிரித்தான்.

“உங்க கம்பெனியை யாரும் விரும்பாமல் இருக்க முடியாது ஜி.”
சதீஷ் சொன்னதும் முறுவலித்த வசந்த் கேட்டான்…

“இரண்டு நாளா அந்த ரூமுக்குள்ளேயே லாக் டவுன்ல இருக்கிறவங்களைப் பார்த்துமா என் கம்பெனி எல்லோருக்கும் பிடிக்கும்ங்கிற சதீஷ்?”

“ஜி…” என்று திகைப்புடன் வசந்தைப் பார்த்த சதீஷிற்கு ஏதோ புலப்பட்டது.
‘அவ துக்கத்துலேயும் மனக் குழப்பத்துலேயும் இருக்காடா.’

வசந்த் நினைத்துக்கொண்டே சதீஷிடம் கேட்டான், “ஏதாவது சாப்பிட்டாங்களா? இல்லை இன்னைக்கும்…”

“வேளா வேளைக்குச் சமைச்சி வச்சதை நான் தான் சாப்பிட்டேன் ஜி. மேடமைக் கூப்பிட்டும் வரலை. கம்பல் பண்ணி சூப்பும் ஜூஸும் கொடுத்திட்டு வந்தேன். குடுச்சாங்களான்னு தெரியலை.”

“கீழே போனாங்களா?”

முகவாயைத் தடவிய வசந்த் யோசனையுடன் கேட்டான்.
***
என்ன தோணுது அப்படியே சொல்லுங்க.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
இனிய வணக்கம்!
எல்லோரும் எப்படி இருக்கீங்க? வர வர நீளமான எபியாகப் போஸ்ட் பண்ணிட்டு இருக்கேன். ஆனாலும் அதே மக்கள் தான் கமெண்ட்ஸ் தர்றீங்க. ரைட்டு!
ஒரு முயற்சி எடுத்துச் சீக்கிரம் கதையை முடிக்க நினைக்கிறேன். பார்ப்போம் எந்தளவு என் முயற்சி கை கொடுக்கும்ன்னு.
இப்போது எபிக்குள்ளே செல்வோம். வாசிச்சிட்டு வாங்க.

அன்புடன், ஆர்த்தி ரவி


அத்தியாயம் 14:

மாலை ஐந்தரை மணி அளவில் அந்த அரசு வாகனம் வீட்டு வாசலில் வந்து நின்றது. பின்னாலேயே வந்திருந்த வசந்தின் பிரத்யேகப் பாதுகாவலர்களில் ஒருவனான முபர் சயான் விரைந்து வந்து கார் கதவைத் திறந்தான்.

“நன்றி முபர்!”

புன்னகையுடன் கூறிவிட்டு மாடிப்படிகளில் ஏறினான் வசந்த்.

மணிகண்டன் முபரிடம் பேசியபடி வசந்துடைய மதிய உணவு மற்றும் அலுவலகப் பொருட்களைக் காரிலிருந்து திரட்டினான்.

முபர் மணிகண்டனுக்குப் பதில் சொல்லியபடி பார்வையைச் சுழலவிட்டான். பின்னர் வாயிற்காவலாளியிடம் சில கேள்விகளைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டான்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஓரளவு அந்த வீட்டின் அமைதி மீண்டதில் வசந்தைச் சுற்றிப் பணியாற்றும் அத்தனை நபர்களும் ஆசுவாசப்பட்டுக் கொண்டார்கள்.

பரிமளத்தின் இறுதி ஊர்வலத்திலிருந்து மூன்றாம் நாள் பால் ஊற்றும் வரைக்கும் அங்கே கூட்டமும் சலசலப்புமாக இருந்தது. அதற்குப் பின்பே, உறவினர்களும் தெரிந்தவர்களும் கலைந்து போயிருந்தார்கள்.

இன்னும் நெருங்கிய உறவுகள் பத்து இருபது பேர் வரை கீழ் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். பரிமளத்துடைய காரியம் முடியும் வரை அவர்கள் இருக்கக் கூடும். ஏழாம் நாள் ஈமக் காரியம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வசந்த், பரிமளம் இறந்து மறுநாள் அவருடைய இறுதி ஊர்வலம் முடியும் வரைக்கும் உடன் இருந்தான். சரள்கண்ணன் வந்ததுமே அவன் சற்று ஒதுங்கிக் கொண்டான். உறவுகளுக்கும் மற்றவர்களுக்கு நடுவே போகவில்லை. பரிமளத்தின் பழக்கத்திற்காக மட்டுமே இந்தளவு பங்களிப்பு.

மற்றபடி குடும்பத்தினர், அவர்களுடைய வழக்கம், சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரம் என்று போகையில் பார்வையாளனாக முக்கிய நிகழ்வுகளில் மட்டும் வசந்த் கலந்து கொண்டான்.

அதன் பின்னர் அவனுடைய வழமையில் ஆழ்ந்து போனான். வேலை அவனை இழுத்துக் கொண்டது. கடந்த இரண்டு நாட்களும் இரவு தாமதமாக வீடு திரும்பியிருந்தான்.

இன்று சைந்தவிக்காகவே முயன்று சீக்கிரமே அலுவலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருந்தான். இரவு ஏழு மணி அளவில் நடக்கவிருக்கும் விருந்தொன்றிற்கு அழைப்பு வந்திருந்தது. அதை நாசூக்காக மறுத்திருந்தான்.

அவனுடைய மனத்தில் சைந்தவி பற்றிய விசயங்கள் ஊடுருவி இருந்தன. அவள் அன்று அழுத அழுகையும், அத்தனை பேருக்கு நடுவில் தன்னுடைய நெஞ்சில் தலை சாய்த்துக் கதறிய கதறலும் இன்னும் நெஞ்சில் ஈரமாகவே!

அவளைத் துயரத்திலிருந்து மீட்கும் பொறுப்பு தன்னுடையது என்று வசந்த் புரிந்திருந்தான். அதற்கான நேரத்தை எதிர்பார்த்தே இருந்தான்.

 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
மேலும் பரிமளம் அவனிடம் விட்டுச் சென்றிருக்கும் கடமைகளை முன்னிட்டு அவனுக்குள் யோசனைகள் அணிவகுத்தன. தான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டும் இருந்தான்.

கார் சத்தம் கேட்டு வசந்திற்காக வீட்டுக் கதவைத் திறந்து வைத்த சதீஷ் முகம் மலர்ந்தான். வசந்தின் பின்னோடு வந்த மணிகண்டன் மதிய சாப்பாட்டுக் கூடை மற்றும் இதரப் பொருட்களை மேஜை மீது வைத்துவிட்டு கீழே சென்றுவிட்டான்.

சதீஷ் வசந்திடம் முறுவலுடன் சொன்னான்.

“குட் ஈவ்னிங் ஜி!”

அவனுடைய வணக்கத்தை ஏற்றுப் பதில் சொன்னான் வசந்த்.

“குட் ஈவ்னிங் சதீஷ்! என்ன இது இப்படி ஜொலிக்கிறே?”

சதீஷை ஆராய்ச்சியாகப் பார்த்துக்கொண்டே கேள்வியுடன் புருவத்தை உயர்த்திய வசந்த், காலணிகளைக் கழற்றி அதற்குரிய தாங்கியில் வைத்தான்.

“இரண்டு நாள் போரடிச்சுப் போயிருச்சு ஜி. இன்னைக்கு நீங்க சீக்கிரம் வந்திட்டீங்க. அதான் இந்தச் சதீஷ் ஹேப்பி ஆகிட்டான்.”

வாய்விட்டுச் சிரித்த வசந்த், அந்த வீட்டின் இரண்டாம் படுக்கை அறையை நோக்கி நடந்தபடி சொன்னான்…

“சதீஷ், என் கல்யாணத்துக்குப் பிறகு மிசஸ் வசந்த் கூட என் வருகையை எதிர்பார்த்து இந்தளவு சந்தோஷமாவாங்களான்னு தெரியலை.”

அவனையறியாமலேயே அவனுடைய பார்வை முதல் படுக்கை அறையின் மூடியிருந்த கதவைச் சில வினாடிகள் வெறித்தது. பின்னர்ச் சதீஷைப் பார்க்க, அவனோ மெல்லிய வெட்கம் படரச் சிரித்தான்.

“உங்க கம்பெனியை யாரும் விரும்பாமல் இருக்க முடியாது ஜி.”

சதீஷ் சொன்னதும் முறுவலித்த வசந்த் கேட்டான்…

“இரண்டு நாளா அந்த ரூமுக்குள்ளேயே லாக் டவுன்ல இருக்கிறவங்களைப் பார்த்துமா என் கம்பெனி எல்லோருக்கும் பிடிக்கும்ங்கிற சதீஷ்?”

“ஜி…” என்று திகைப்புடன் வசந்தைப் பார்த்த சதீஷிற்கு ஏதோ புலப்பட்டது.

‘அவ துக்கத்துலேயும் மனக் குழப்பத்துலேயும் இருக்காடா.’

வசந்த் தனக்குத் தானே காரணத்தை நினைத்துக்கொண்டே சதீஷிடம் கேட்டான், “ஏதாவது சாப்பிட்டாங்களா? இல்லை இன்னைக்கும்…”

“வேளா வேளைக்குச் சமைச்சி வச்சதை நான் தான் சாப்பிட்டேன் ஜி. மேடமைக் கூப்பிட்டும் வரலை. கம்பல் பண்ணி சூப்பும் ஜூஸும் கொடுத்திட்டு வந்தேன். குடிச்சாங்களான்னு தெரியலை.”

“கீழே போனாங்களா?”

முகவாயைத் தடவிய வசந்த் யோசனையுடன் கேட்டான்.

“இன்னைக்குப் போகவே இல்லை. அவங்க அப்பா நாலஞ்சு தடவை வந்து பார்த்தாரு.”

“சரி சதீஷ் நீ போ. எனக்குப் பசிக்குது. டீயும் டிஃபென்னும் எடுத்து வை. இதோ வர்றேன்.”

“ஓகே ஜி.” விருட்டென்று சதீஷ் சமையலறைக்குள் புகுந்து கொண்டான். வசந்தும் யோசனையுடன் இன்னொரு படுக்கையறையை நோக்கிச் சென்றான்.

சைந்தவி இரண்டு நாட்களாக உழன்று; மனத்தில் துக்கம் பொங்கக் கழித்திருந்தாள். முன் தினம் இரவே அவளுடைய அழுகை முற்றிலுமாக நின்றிருந்தது.

தன்னைச் சற்று மீட்க நினைத்து, மனத்தையும் மூளையையும் வேலையில் மட்டுமே செலுத்தி, அதில் வெற்றியும் பெற்றிருந்தாள்.

இரவு வெகு நேரம் வேலை செய்துவிட்டுப் படுத்திருந்தாள். காலை ஒன்பது மணி வரையிலும் நன்றாகத் தூங்கி எழுந்தவள் அப்புறம் தான் அந்த அறையை நன்றாக உணர்ந்தாள். அவளுடையதாக முன்பு இருந்த அறையில் இப்போது வித்தியாசம் தென்பட்டது.

முதலில், குளியலறையில் கண்களில் விழுந்திருந்த சோப்பு; ஷாம்பு; ஆஃப்டர் ஷேவ் வகையறாக்கள் அவளைக் குழப்பின. அவளுடைய அப்பா இரண்டு மூன்று நாட்களாக அறைக்குள் வந்து போயிருந்தார். சில சமயம் தரையில் விரித்துத் தூங்கினார் என்றாலும், அவர் அங்குக் குளிக்கவில்லை என்பது சைந்தவிக்கு உறுதி.

படுக்கை அறையில் எல்லாமும் மாறியிருந்தது. சைந்தவியுடைய பொருட்கள் எதுவும் அங்கில்லை. இந்தத் தடவை கொண்டு வந்திருக்கும் துணிமணிகள் பொருட்களைத் தவிர்த்து.

அங்கிருக்கும் பொருட்கள் யாவும் ஆண் ஒருவரின் அறை என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன. உன்னிப்பாக நோட்டமிடும் போது, வாசனைத் திரவியத்தின் நறுமணம் கூட நாசியைத் தொட்டதைப் போல உணர்ந்தாள்.

அதன் பின்னர் வசந்த் பற்றிய நினைவு வந்தது. அவனுக்கும் இந்த வீட்டிற்கும் என்ன சம்பந்தம்? கலெக்டர் ஏன் இங்குச் சுற்றிக் கொண்டிருந்தான் என்று யோசித்தாள்.

சதீஷ் தன்னை வந்து கவனித்துக்கொண்டது ஒரு விதச் சங்கடத்தைக் கொடுத்தது. சைந்தவி அப்பாவிடம் சரியாகப் பேசவில்லை என்றாலும் வசந்தின் வீட்டில் தான் தங்கியிருக்கிறார்கள் என்பதைக் கேட்டு அறிந்து கொண்டாள்.

வசந்த் வாடகைக்கு இருந்தாலும், அவன் அங்கிருக்கும் வரை இது அவனுடைய வீடு என்று மூளை சொன்னது. தான் அந்நியம்… அவனைத் தனக்குத் தெரியாது. அவனுக்கு விருந்தினர் என்றும் சொல்லிக்கொள்ள முடியாது.

அதனால், கீழ் வீட்டில் போய்த் தங்கிக்கொள்ள நினைத்தாள். வசந்திடம் சொல்லிவிட்டுச் செல்ல மூளை அறிவுறுத்தியது.

ஆனாலும், மூளை சொன்னதைச் சைந்தவியின் மனம் ஏற்கவில்லை. அதை எதிர்த்தது. காரணங்களைக் கூட்ட முயன்றது.

அன்று அப்பத்தாவைப் பார்த்து இவள் அழுதபோது நடந்துவிட்ட அசாதாரண நிகழ்வுகள்… அவற்றின் தாக்கத்தால் இப்போதும் இவள் உறவுகளைக் காண விரும்பவில்லை. அவர்களுக்கு மத்தியில் போய் இருக்க இவளுக்குப் பிடிக்கவில்லை.

சில நிமிடங்கள் சடங்குகளுக்காகக் கீழே சென்று வருவது வேறு. நாலைந்து நாட்கள் அவர்களுடன் ஒன்றாகப் புழங்க வேண்டும் என்றால் தன்னால் சகிக்க இயலாது என்றே தோன்றியது.

ஆளாளுக்கு இவளைக் குற்றம் சொல்லிப் பேசுகிறார்கள். ஒன்றரை வருடமாக அப்பத்தாவை வந்து பார்க்கவில்லை. அது தவறு என்றாலும் தன் பக்கமும் விளக்கங்கள் இருக்கின்றன. அவற்றை யாருக்கெல்லாம் விளக்கிச் சொல்லிக்கொண்டு இருக்க முடியும் என்கிற நினைவில் ஆயாசம் பிறந்தது.

‘இன்னொரு தடவை எல்லோருக்கும் நான் காட்சி பொருள் ஆக வேண்டுமா?’

நினைத்துக் கொண்டாள்.

மேலும், ‘இந்த வீடு என் வீடு! அப்பாவைத் தொலைத்து விட்டதே போதும். அப்பத்தாவும் போய்விட்ட நிலையில் எனக்கு இங்கே என்ன இடம்? நான் யாரு? எனக்கான பந்தம் மிச்சம் இருக்கா?’ குழப்பம் அடைந்தாள்.

‘எனக்குச் சொந்தமான வீட்டில் நான் எந்த ரூமில் இருந்தால் என்ன? வசந்த் வாடகைக்கு இருந்தாலும் நான் இங்கே இருப்பதைத் தொந்தரவாக நினைக்கவில்லை. அப்படி நினைத்தாலும் எனக்கு இப்போ கவலையில்லை. இன்னும் நாலு நாள் தானே? அட்ஜஸ்ட் பண்ணிக்குவான். பண்ணிக்கட்டும்.’

வீம்பும் அழுத்தமும் எழுந்ததில் முடிவு செய்து கொண்டாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
மனத்தில் தெளிவு வந்ததும், மற்ற விசயங்களில் சைந்தவியுடைய கவனம் போனது. மூன்று நாட்களுக்குப் பின்னர்ச் சைந்தவி இன்று அருணா மற்றும் வினித்தைக் கூப்பிட்டுப் பேசினாள். அப்பத்தாவின் காரியம் முடிந்ததும் சென்னைக்குத் திரும்புவதாகச் சொன்னாள்.

சரள்கண்ணன் அருணாவிடமும் வினித்திடமும் தனித் தனியாகக் கூப்பிட்டுப் பேசியிருந்தார். அதை அவர்கள் சைந்தவியிடம் சொல்லவில்லை.

சைந்தவிக்காகப் பரிமளம் வசந்தை மாப்பிள்ளையாகத் தேர்வு செய்திருப்பதைப் பற்றித் தென்னம்பாளை சரள்கண்ணனிடம் ஞாபகமாகச் சொன்னதும், வினித்தா வசந்தா என்கிற குழப்பம் சரள்கண்ணனைச் சூழ்ந்தது.

அம்மாவின் ஆசை என்பது மட்டுமில்லாமல், வசந்தும் மகளிடம் ஆர்வம் காட்டுவது வெளிப்படையாகவே தெரிந்தது.

‘அம்மா விசாரிக்காமல் எதையும் பேசியிருக்க மாட்டாங்க. வசந்தைப் பற்றி என்கிட்ட நிறையத் தடவை பேசியிருக்காங்க.

“நல்ல பையன் கண்ணா. சைந்தவிக்குப் பொறுத்தமா இருப்பான். அவ என்ன நினைப்பை வச்சிட்டு இருக்கான்னு தெரியலையே. இப்படி ஒரேடியா என்னை வந்து பார்க்காமலேயே ஒதுங்கிட்டாளே”.

நிறையப் புலம்பினாங்க. எப்ப வசந்த்கிட்ட இந்தக் கல்யாண விசயத்தைப் பேசினாங்கன்னு தெரியலை. கடைசியா பேசும் போது ஏதோ சொல்ல வந்து, “நேரில் பேசலாம். எப்ப வர்ற கண்ணா” கேட்டாங்க. ஆனா இப்படி உலகத்தைவிட்டே போயிட்டாங்க.’

கனமான மனத்துடன் மொட்டை மாடியில் உட்கார்ந்து இருந்தபோது, அங்கே தற்செயலாக வந்து நின்றான் வசந்த். அவருடைய முகம் வருத்தத்தைக் காட்டியது. அதைக் கண்டதும் புரிந்து கொண்டு, சரள்கண்ணனுடன் ஆறுதலாகப் பேசியிருந்தான் வசந்த்.

“தைரியமா இருங்க அங்கிள். நடந்ததை மாத்த முடியாது. இனி நடக்கப் போவது என்னன்னு பார்ப்போம். பரிமளம் பாட்டி என்கிட்ட பேசினாங்க. உங்க பொண்ணு பற்றி நிறையச் சொல்லியிருக்காங்க. அவங்க மேலே பாட்டிக்கு ரொம்ப பாசம். ரொம்ப கவலைப்பட்டாங்க. கடைசிச் சில நாட்களா உங்களைவிட, சைவிம்மா பற்றித் தான் அவங்க அதிகமா நினைச்சது.

என்கிட்ட உங்க மகளுடைய கல்யாணம் பற்றிப் பேசி, அவங்க கல்யாணம், சொத்து, உயில்ன்னு ரொம்ப பெரிய பொறுப்புகளை ஒப்படைச்சி இருக்காங்க. நீங்க கொஞ்சம் ஃப்ரீ ஆனதும் நம்ம அதைப் பற்றி உட்கார்ந்து பேசலாம்ன்னு நினைச்சிருக்கேன் அங்கிள். உங்க அக்கா காயத்ரிக்கும் சொல்லி, அதுவரை இருக்கச் சொல்லணும்.”

“சரிப்பா வசந்த். அக்காவும் மாமாவும் நான் மலேசியா போற வரைக்கும் இருப்பாங்க. ஏற்கெனவே சொல்லி வச்சிருக்கேன். சொத்து உயில்ன்னு நான் எதைப் பற்றியும் யோசிக்கலை. இப்ப என் கவலையும் நினைப்பும் என் மகள் சைந்தவியைப் பற்றித் தான் வசந்த்.”

கண்கள் கலங்க, கரகரத்த குரலில் சொன்னார். அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டு,

“கவலைப்படாதீங்க அங்கிள். அவங்களுக்கு எது நல்லதுன்னு பார்த்துச் செய்வோம்.”

வசந்த் சரள்கண்ணனிற்கு ஆறுதல் சொன்னான்.

“எனக்கு மனசே சரியில்லை வசந்த். என் பொண்ணுல ஒன்னு இப்படி வேதனைப்பட்டு, சந்தோஷத்தையே மறந்து இருக்கிறாள். இவளை நினைச்சே நானும் சந்தோஷமா இருக்கலை. என் மனசையும் வெளியே காட்டிக்கவும் முடியாத நிலைமை.

எப்படியும் சவியை மீட்டுடணும்ப்பா. இப்ப அம்மாவும் இல்லாமல் என்னாலே நினைச்சிப் பார்க்கவே முடியலை. அவளுக்குக் ஒரு கல்யாணம் காட்சின்னு எப்படிப் பார்க்கப் போறேன்?”

உணர்ச்சிவசப்பட்டுப் பேசியவரை வருத்தத்துடன் பார்த்தான் வசந்த்.

‘பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு எக்காலமும் இந்தக் கவலை இருந்துகொண்டே இருக்கும். அதுவும் அம்மாவை இழந்த பெண்களுக்கு நிரம்பவும் கஷ்டம். நம் குடும்ப அமைப்புகள் அந்த மாதிரியானவை. அவை பெண்களைக் கொண்டே நகர்ந்தாலும், பெண்கள் தான் அதிகமாகப் பாதிப்புகளுக்கு உள்ளாவதும்.’

அக்கா தங்கைகளுடன் பிறக்கவில்லை என்றாலும், அவன் அறிந்தது, பார்த்தது, இப்போது வேலையின் பொருட்டு எதிர்கொள்ள நேரிடுவது என்று பல சந்தர்ப்பங்களும் உணர்த்தியதை நினைத்துக் கொண்டான் வசந்த்.

பின்னர் மிகவும் உறுதியுடன் சொன்னான்…

“கண்டிப்பா சைவிம்மா சந்தோஷமா இருப்பாங்க. அதுக்கு நான் பொறுப்பு அங்கிள். என்னை நம்புங்க. இப்போ போய் வேற வேலைகள் ஏதாவது இருந்தா பாருங்க.”

“ம்ம்…”

வார்த்தைகள் இல்லாத கணத்தில் வசந்தின் கைகளைப் பற்றிக் கொண்டார் சரள்கண்ணன். அவனுடைய வார்த்தைகள் அவருக்குள் நம்பிக்கையை விதைத்தன.

“உங்க சொந்தங்களுடன் பேசிட்டு இருங்க அங்கிள். எந்த நாளும் திரும்பி வராது. பரிமளம் பாட்டியின் ஞாபகங்களை அவங்க சொல்லக் கேட்டுக்கிட்டு இருப்பதும், உங்களுக்கு நாளைய ஞாபகமா இருக்கும். சைந்தவியையே நினைச்சிட்டு மற்றதை மிஸ் பண்ணிடாதீங்க அங்கிள். காலத்துக்கிட்ட நிறையத் தீர்வுகள் உண்டு. நாம் அதைப் புரிஞ்சிக்கிட்டா போதும்.”

தனக்கு ஆறுதல் அளித்து; நம்பிக்கையூட்டி; அறிவுறுத்திச் சென்றவனையே வெறித்த சரள்கண்ணன் சொல்லிக் கொண்டார்…

“பொறுப்பும் பொறுமையும் நிறைஞ்ச பையன். நல்ல அறிவுப்பூர்வமாகவும் பேசுறான். இந்த அணுகுமுறை தான் அவனுக்குக் கலெக்டர்ங்கிற பதவியை வாங்கித் தந்திருக்கு. சவிம்மாவுக்கு நல்ல மாப்பிள்ளை வசந்த். இப்படி அம்மா நினைச்சதிலே எந்தச் சந்தேகமும் இல்லை.”

சரள்கண்ணனிற்குச் சில மணித்துளிகள் வசந்துடன் உரையாடியது மனத்திற்கு ஆறுதலாகயிருந்தது.

அவன் சொன்னதிற்கு அந்த நேரம் தலையசைப்பால் பதில் சொல்லியிருந்தாலும், சரள்கண்ணன் மகளுடைய திருமணப் பொறுப்பு என்று கேட்டதும் யோசனையானார்.

வசந்த் அகன்றதும் அவரிடம் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. வினித், வசந்த் என்று இருவரைப் பற்றி நினைத்துக் குழப்பிக் கொண்டார்.

வினித்தும் நல்ல பையனாகத் தெரிந்தான். அவனுக்கும் சவிம்மாவைப் பற்றி நன்றாகத் தெரியும். மகள் வினித்தை நண்பனாக மட்டும் நினைக்கிறது போலப்படவில்லை. மகளின் மனது வினித்திடம் சிக்கி இருக்கிறதா என்றும் தெரியவில்லை. இவரே அப்படி இருக்குமோ என்று ஊகித்தது தான்.

வினித்திற்கும் சவிம்மா மீது விருப்பம் இருக்கிறதா? அன்றைக்கு விமான நிலையத்தில் பார்த்த போது அப்படித் தெரியவில்லை. இல்லை அவன் அதனை வெளிக்காட்டாமலும் இருந்திருக்கலாம். தெரியவில்லை என்ன விபரம் என்று.

வினித் அன்பும் அக்கறையுமாக இருப்பதால் சைந்தவியைக் காதலிக்கிறான் என்று எப்படிச் சொல்ல முடியும் என்று நினைத்தார்.

சரள்கண்ணனிற்கு யோசித்தாலும் எதுவும் புலப்படவில்லை. மிகவும் குழப்பமாகத் தான் இருந்தது. மகளின் தற்போதைய விலகல் மனநிலையில் அவளிடம் எதைப் பற்றியும் பேச முடியாது.

அதிலும் இந்த விசயம் மிகவும் முக்கியமானது. அவளுடைய வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்கும் நிலை. எப்படிப் போகுமோ… தான் சொதப்பிவிட்டால் என்ன விளைவோ என்று மகளிடம் நேரிடையாகப் பேசத் தயங்கினார்.

வினித்தை இனி எப்போது சென்னைக்குப் போய்ப் பார்ப்பது? இங்கே வசந்த் தன்னிடம் பேசுவதற்கு முன்னர், வினித்திடம் தான் பேசுவது அவசியம் என்று சரள்கண்ணன் உணர்ந்தார்.

முதலில் வினித்திடம் பேசித் தெளிவுப்படுத்திக் கொண்டால், தக்க சமயம் அமையும் போது மகளிடம் பேச வசதியாக இருக்கும் என்று அவருடைய மனத்திற்குப்பட்டது. ஆனாலும், வினித்திடம் முதலில் பேசுவது சரியா என்கிற யோசனை தயக்கத்தைக் கொடுத்தது.

வினித்தைவிட அருணாவை அவருக்கு நிறைய வருடங்களாகத் தெரியும். நெருங்கிய தோழிகளுக்கு இடையே இப்படிப்பட்ட விசயங்கள் பரிமாறப்படுவது சகஜம். சைந்தவி காதலித்தால் தனக்கு முன்னர் அருணா அறிந்திருப்பாள்.

நினைத்ததும் அருணாவைக் கூப்பிட்டுக் கேட்டார். இவர் கேட்டதில் அருணா ஆச்சரியமானாள்.

“அப்படியா அங்கிள் நீங்க நினைக்கிறீங்க?”

“என்னம்மா இப்படி நீ ஆச்சரியமா கேட்கிற? உனக்கு இதைப் பற்றித் தெரியாதா? அப்ப சவி எதுவும் சொல்லலையா?”

“அவங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ் அங்கிள். எனக்கு அப்படித்தான் வினித்தைத் தெரியும். சைந்தவி வினித்தை லவ் பண்ணினால் எனக்குச் சொல்லியிருப்பாள். உங்க கண்ணுக்குத் தெரிஞ்சதுன்னு சொல்றது குழப்பமா இருக்கு.

அவளுக்குக் கல்யாணத்துல இண்ட்ரெஸ்ட் கிடையாது. நானும் பேசும் போதெல்லாம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லியிருக்கேனே. நீங்க என்கிட்ட சொன்னதை அவளுக்கு எடுத்துச் சொல்லும் போது காதிலே வாங்கிக்க மாட்டாள். அவள் லவ் பண்றது சந்தேகம் தான் அங்கிள்.

வினித் நல்லவன். நீங்க அவன்கிட்ட பேசுங்க அங்கிள். தப்பா எடுத்துக்க மாட்டான். அவனுக்குச் சைந்தவியின் நலனின் அக்கறை இருக்கு. சைந்தவியைவிட இப்ப நீங்க அவன்கிட்ட பேசுறது பெட்டர்ன்னு நினைக்கிறேன்.”

“சரிம்மா வினித்தைக் கூப்பிட்டுப் பேசுறேன்.”

ஒரு முறை தான் செய்துவிட்ட தவறு எத்தனை பாதிப்பைத் தந்திருக்கிறது. இனி ஒரு போதும் எதிலும் அவசரப்படக் கூடாது. அதனாலேயே முன்னெச்சரிக்கையுடன் விசயத்தை அணுகிக் கொண்டிருந்தார் சரள்கண்ணன்.

மகளின் வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்தார்.

எல்லாமும் நல்லபடியாக நடந்துவிட வேண்டும். மலேசியா, பத்து மலை (Batu caves) முருகப்பருக்குப் பால் குடம் எடுப்பதாக வேண்டியபடியே, தாமதிக்காமல் வினித்தை மொபைலிலேயே அழைத்துப் பேசினார்.

“நீயும் சைந்தவியும் ஒருத்தருக்கொருத்தர் விரும்புறேங்களா வினித்? நான் இதை நேரில் இரண்டு பேரையும் ஒன்னா வச்சிட்டு கேட்க நினைச்சேன். இப்ப இப்படி ஃபோனில் கேட்கும்படி ஆகிப் போச்சு. தப்பா நினைச்சிக்காம உன் மனசுல உள்ளதை அப்படியே சொல்லுப்பா.”

“அங்கிள், நீங்க இதைப் பற்றிப் பேசக் கூப்பிடுவீங்கன்னு நான் நினைக்கலை. ஐ’ம் க்லேட் யூ டிட்!

நானும் சைவியும் நல்ல பிரண்ட்ஸ் அங்கிள். அதைத் தவிர எனக்கு வேற எந்த எண்ணமும் கிடையாது. இதுவரை வேற எந்த நோக்கத்துடன் சைந்தவிகிட்ட நான் பழகலை. இனியும் அப்படித் தான். பிரண்ட்ஷிப் மட்டுமே எங்களுக்குள்ளே இருக்கு. இதுவரை தோன்றாத லவ், இனியும் எனக்குள்ளே வர வாய்ப்பில்லை.

இது தான் என் நிலை அங்கிள்.”

எந்த விதமான தயக்கமும் இல்லாமல் மிகவும் வெளிப்படையாகப் பேசினான் வினித். மழுப்பலாக இல்லாமல் கணீர் குரலில் தெளிவாகப் பேசியவனைப் பற்றிய மதிப்புச் சரள்கண்ணனிடம் உயர்ந்தது.

“ஓ… நான் தான் தப்பா புரிஞ்சிட்டேனா வினித். சாரிப்பா! நல்லவேளை உன்கிட்ட கேட்டேன்.”

“பொறுங்க அங்கிள். என் நிலையைத் தெளிவுப்படுத்திட்டேன். நீங்க சைவி பக்கமும் தெரிஞ்சிக்கணும். அவளுக்கு என் மேல் விருப்பம் உண்டு. அவள் என்கிட்ட லவ்ன்னு வெளிப்படுத்தியதும் நான் கோபமாக மறுத்திருந்தேன். அவளுக்கு எடுத்துச் சொன்னேன்.”

“என்ன வினித் சொல்றே?”

திகைப்புடன் சரள்கண்ணன் கேட்டார்.

“ஆமாம் அங்கிள். சைவி என்னை லவ் பண்ணுறதா சொன்னாள். நான் இல்லைன்னு சொன்னது அவளுக்கு வருத்தம் தான். அவளுக்காக நான் அவளை லவ் பண்ணுறேன்னு சொல்ல முடியுமா?

இப்போ நான் அவ மேலே இரக்கப்பட்டுக் கல்யாணம் செய்யுறதுக்கு ஓகே சொன்னால், பின்னாளில் எந்த முன்னேற்றமும் இல்லைன்னா எங்க ரெண்டு பேருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்?

அதுக்கு இப்பவே இந்த லவ் பாஸிபிள் இல்லைன்னு சைவிக்கு எடுத்துச் சொல்லுறது நல்லது இல்லையா? நானும் அதைத் தான் செஞ்சிருக்கேன். அவளுக்கு நான் சொன்னது புரிஞ்சிருக்கும். ஷீ இஸ் வெரி ஸ்மார்ட்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
போகப் போகச் சரியாகிடுவாள். அவளுக்கு ஆதரவாக ஒருத்தர் அமையும் போது எல்லாமும் மாறும். அவளுடைய நிலைமையில் நான் அன்பும் பரிவும் காட்டியதால் என் மேல் ஒரு சாஃப்ட் கார்னர் உருவாகி இருக்கு. இதே சப்போர்ட் அவளுக்கு வேற இடத்திலே கிடைக்கும் போது நான் அவளுடைய நினைவில் இருக்க மாட்டேன்.”

சரள்கண்ணன் வினித் சொன்னதைக் கேட்டு நொந்து போனார். மகளுக்காக அவருடைய மனது துடித்தது. படபடப்பில் பூத்த வியர்வையைத் துடைத்தபடியே வினித்திடம் சொன்னார்…

“என்னாலே தான் என் மகள் பாதிக்கப்பட்டிருக்கான்னு இருந்தேன். இப்ப உன்னாலேயும் அவளுக்கு மனக்கஷ்டமா? எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை வினித். உன்னையும் குற்றம் சொல்ல முடியாது. லவ், பிரண்ட்ஷிப் ரெண்டையும் குழப்பிக்கிட்ட சவி மேலேயும் பழி சொல்ல முடியலை. ஏன்னா, எல்லாத்துக்கும் அநாதரவான அவளுடைய நிலை தானே காரணம். அதுக்குக் காரணம் நான் தானேப்பா?”

துக்கமும் துயரமும் மண்டிய அக்குரல் வினித்தைத் தாக்கியது.

“அங்கிள்… ப்ளீஸ்… இப்படி உங்களை வருத்திக்காதீங்க. ஆல் வில் பீ வெல். நீங்க நம்பிக்கை வைங்க. சைவி நல்லா இருப்பாள். எப்பவும் என் நட்பு அவளுக்கு உண்டு.”

இணைப்பைத் துண்டித்ததும் சரள்கண்ணன் முடிவு செய்து கொண்டார். வசந்திற்கு மகளை எப்படியும் மணம் செய்து வைக்க வேண்டும். அவனைவிட வேற நல்ல மாப்பிள்ளையைத் தேட இயலாது. சைந்தவியுடைய சம்மதம் கிடைக்க வேண்டும். எப்படி அவளை அணுகுவது என்கிற யோசனை அவரை ஆட்கொண்டது.

வசந்த், தற்காலிகமாக இப்போது தான் உபயோகிக்கும் அறைக்குள் நுழைந்தான். டையைக் கழற்றிச் சட்டையின் பட்டன்களை விலக்கியவன் துவாலையுடன் குளியலறைக்குள் புகுந்தான்.

பத்து நிமிடங்களுக்குள் வெளிர் நீலத்தில் இலகுவான மெல்லிய காட்டன் கார்கோ பேண்டும், செங்கல் நிறத்தில் டி-ஷர்டும் அணிந்து வெளியே வந்தான்.

இவனுடைய படுக்கையறையைச் சட்டமாக ஆக்கிரமித்து இருந்தாள் சைந்தவி. அவளைப் பற்றிய சிந்தனையுடன் கூடத்தில் வந்து நின்றான். அவித்த வேர்க்கடலையின் மணம் நாசியை எட்டி மேலும் பசியைத் தூண்டியது.

சைந்தவியை இப்படியே லாக் டவுன் நிலையில் விட அவனுக்கு மனமில்லை.

தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு அவள் மேலும் தன்னை வருத்திக் கொள்கிறாள் என்று அங்கிருக்கும் அனைவருக்கும் புரிந்தாலும் யாருக்கும் அவளை அணுக முயற்சிக்கவில்லை, அவளுடைய அப்பாவைத் தவிர.

ஆனால், அவர் மீது அவள் கொண்டிருக்கும் கோபமும் ஏமாற்றமும் மூன்று நாட்களுக்கு முன்னர் வெடித்த பின்னால் வசந்திற்கு நன்றாகவே தெரிந்தது… அவளைச் சமாதானப்படுத்த அவரால் இயலாது.

அவளுடைய துன்பமும் அவரால் தான். அவள் எதிர்பார்க்கும் சமாதானத்தை அவரால் எப்போதும் கொடுக்கவே முடியாது. அவளுடைய இந்த நிலைமை மாற ஒரே சிறந்த வழி இருக்கிறது. அவளை ஆதரிக்கும் ஒரு குடும்பத்தில் அவள் இணைய வேண்டும்.

பரிமளத்தின் வாயிலாக வசந்த் அந்தக் குடும்ப உறுப்பினர்களை அறிந்திருந்தான். நேரில் காணும் போது மனது மிகவும் சங்கடப்பட்டது. சைந்தவியின் நிலைமை இருந்தும் இல்லை என்கிறதே.

ஒரேயடியாக எதுவும் இல்லாமலே போயிருந்தால் கூட இந்தளவு துன்பமும் ஏக்கமும் வந்திருக்காது என்று வசந்திற்குத் தோன்றியது. அவளுடைய நிலைமையும் மனத்தின் வேதனையும் வசந்தையும் வருத்தின.

அவளுடைய துன்பம், அவள் இப்படி லாக் டவுனில் இருப்பது என்று எல்லாமே ஒரு முடிவு வர வேண்டும் என்று நினைத்தான். தான் அவளின் பொருட்டு என்ன செய்யப் போகிறோம் என்றும் இனி அவள் எத்தனை நாட்கள் இங்கிருப்பாள் என்கிற யோசனையுடன் அந்த அறையின் முன்பு வசந்த் நின்றிருந்தான்.

“சைந்தவி…”

இரு விரல்களைக்கொண்டு மெலிதாகக் கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தான்.

அலுவலக வேலையில் ஆழ்ந்திருந்த சைந்தவி முதலில் கவனிக்கவில்லை. இரண்டாம் தடவையாகக் கதவு தட்டப்படவும் தான் கவனம் கலைந்தாள். வசந்த் வந்து நின்ற ஒரு நிமிடத்திற்குப் பின்னரே எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.

அப்போதும் கதவைப் பாதி வரையில் மட்டுமே திறந்தாள். திறந்ததும் வசந்த் உபயோகித்த சோப்பின் நறுமணம் நாசியைத் தொட்டது. அவனுடைய புத்துணர்ச்சியும் விரிந்த முறுவலும் அவளுடைய பார்வையில் பட்டன.

அவள் தன்னைக் கவனித்த அரை வினாடியை அவனும் கண்டு கொண்டான். கண்களில் குறுகுறுப்புடன் நின்றவனைப் பார்த்ததும் சைந்தவி சுதாரித்தாள்.

அப்பாவுடன் சென்னையிலிருந்து வந்த நாள் அவனுடைய ‘சைவிம்மா’ அழைப்பினால் இரண்டு மூன்று தடவை இவள் நெகிழ்ந்து போனது நினைவில் வந்தது.

அதிலும் இவள் உடைந்து அழுதபோது, இவளுடைய அத்தை இவளைக் கேள்வி கேட்டுக் குத்திக்காட்டிப் பேசியதில் ஆவேசமாகப் பொங்கிப் பதில் பேசி, அப்பாவையும் குற்றம் சாட்டியிருந்தாள்.

காளி அவதாரமா இல்லை இருத்திரதாண்டவமா என்று அனைவரும் வேடிக்கைப் பார்க்க, அந்த நேரம் வசந்த் அவளைச் சாந்தப்படுத்த முயன்றிருந்தான்.

வேதனையும் துக்கமும் அழுத்தியதில் உடைந்து போயிருந்த சைவி, மேலும் குலைந்து தவித்த போது, வசந்தின் சைவிம்மா என்கிற ஆறுதலான விளிப்பும் அந்நேர அக்கறையும் சேர்ந்து சைந்தவியை அவன் மீது சாய்ந்து அழத் தூண்டியிருந்தது.

அன்று, அந்த முதல் நாள் இரவின் களேபரத்தில் அவன் நெஞ்சை ஈரமாக்கியது இப்போது சைந்தவிக்கு ஞாபகத்தில் வந்தது.

‘நான் அப்படி நடந்து கொண்டது நல்லதில்லை. யாரோ ஒருவன் இந்த வசந்தன். நான் எப்படி இவன் மேலே ஆறுதல் தேடிச் சாய்ந்தேன்?’ நினைத்துக் கொண்டாள்.

சைந்தவிக்குத் தன் மீதே கோபம் பொங்கி வந்தது. அப்படியே அதை வசந்திடமும் காட்டினாள்.

“என்ன?” வெடுக்கென்று அவனிடம் கேட்டாள்.

“இதென்ன வரவேற்பு சைவி… வெற்றுத்தனமாய்? ஒருத்தன் உன்னைத் தேடி வந்திருக்கேன். மூனு நாளா கண்ணில் படாமல் ரூமுக்குள்ளேயே அடைபட்டிருக்க. என்னாச்சு உனக்கு? எப்படி இருக்கன்னு கேட்க வந்தவனுக்கு ஒரு ஹாய் ஹலோன்னு சொல்லி ஸ்மைல் பண்ணணும்.”

பாடம் எடுத்தவனை முறைத்துப் பார்த்தாள்.

“வேலை பார்த்திட்டு இருக்கேன் வசந்த். வாட் இஸ் தி மேட்டர்?”

‘மேட்டரா? உன்னைக் கல்யாணம் பண்ணா தான் உன்கிட்ட மேட்டரைப் பேச முடியும் சைவிம்மா.’

நினைத்துக் கொண்ட வசந்த் விரிந்த சிரிப்பை அடக்க முற்பட்டான். அதில் அவனுடைய உதடுகள் துடித்தன.

‘கலெக்டரே அடக்கி வாசி! நீ ஒன்னும் காதல் மன்னனில்லை.’

தனக்கே சொல்லிக் கொண்டான்.

அவனைப் புரியாமல் விநோதமாகச் சைந்தவி பார்க்க, வசந்த் சொன்னான்…

“இப்படி லாக் டவுனில் எத்தனை நாளா இருக்கப் போறே? ரூமைவிட்டு வெளியே வா சைவி. நீ வெளியே வந்ததும் நான் ஒன்னும் இந்த ரூமுக்குள்ளே புகுந்திற மாட்டேன். நீ இங்கே இருக்கும் வரைக்கும் இந்த ரூம் உன்னோடது.”

“ஓகோ! நான் சென்னைக்குக் கிளம்பிப் போனதும் இது உங்க ரூம் ஆகிடுமா?”

அவள் கேள்வியில் வசந்திற்குச் சிரிப்பு வந்தது.

“நீ விரும்பினால் எப்பவும் இந்த ரூம் உனக்குச் சொந்தமானதா இருக்கும். உரிமையுடன் இந்த ரூமுக்குள்ளே நீ வந்து போகலாம்.”

வசந்துடைய பேச்சு சைந்தவியைத் திடுக்கிடச் செய்தது. அவனுடைய கண்களில் சொட்டிய உணர்வு, அவன் மறைமுகமாகச் சொன்னதைத் துல்லியமாக அவளுக்குப் புரிய வைத்தது!

அழகே, பிரம்மனிடம் மனு கொடுக்கப் போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டுப் பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்...

என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லமா?
 
Status
Not open for further replies.