லாக் டவுன் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
“போதும் சைவி…”

கண்களைத் துடைத்தபடி அவனை நிமிர்ந்து பார்த்து அவள் சொன்னாள்…

“தேங்க்ஸ்! உங்க அக்கறையாலே இந்த அநாதையைக் கொஞ்ச நேரம் தாங்கிப் பிடிச்சிக்கிட்டதுக்கு.”

முழுதாகக் கண்ணீர் நின்றுவிட்டது. குரலில் வெறுமை. நன்றி சொன்னவிதம், ‘எட்ட நில்’ என்றது.

“சைவிம்மா என்ன இது அநாதைன்னு சொல்லிட்டு?”

கண்டித்தான் வசந்த்.

“சாரி நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது! நீங்க சொன்ன…” ‘க்கூம்’ தொண்டையின் இளக்கத்தை இறுக்கிக்கொண்டு தொடர்ந்து பேசினாள் சைந்தவி… “உங்க சைவிம்மால கொஞ்சம் தடுமாறிட்டேன். அதை விட்டுடுங்க. சைந்தவி… கால் மீ ஒன்லி சைந்தவி!”

‘இவள் தான் சில நிமிசங்களுக்கு முன்னால ஆறுதல் தேடி தவித்ததா? என்னா அழுகை… இப்ப எப்படி இந்த மாதிரி பேசுறா. இந்த முரண்பாட்டை நம்ப முடியலையே!’

சட்டென்று மாறிய வானிலை போல அந்த அழுகாச்சி சீனும் மாறிப் போனது, வசந்திற்கு நம்ப முடியாத ஒன்றாகப்பட்டது.

‘எனக்கே ஆர்டர் போடுற நீ?’ வியப்புடன் கேட்டுக்கொண்டான் வசந்த். அந்த நேரம் சூழ்நிலை மறந்தவனாய் முறுவலித்தான்.

இவன் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க, அவள் இப்படி ஓர் ஆள் அங்கே கண் முன்னால் இல்லாத மாதிரி நடந்து கொண்டாள்.

அவளுடைய டிராவல் பேக், கைப்பை, மடிகணினி சகிதம் காரைவிட்டு கீழே இறங்கினாள். வழியில் நிற்பவனை இடித்துக்கொண்டு உள்ளே சென்றாள். இடித்துவிட்டோமே என்று தயங்கவும் இல்லை… இத்தனை நேரம் தனக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னவனைப் பொருட்படுத்தவும் இல்லை.

‘பாட்டி சொன்னது சரி தான்… ரொம்ப கஷ்டம்டா!’

நினைத்துக்கொண்டு வசந்தும் உள்ளே வர, சைந்தவி தடதடவென மாடிப்படிகளைக் கடந்து மேலே போய்க் கொண்டிருந்தாள்.

“பாப்பா… பாப்பா எங்க போறீங்க… கீழ வாங்க.”

தென்னம்பாளை பதற்றத்துடன் சைந்தவியைப் பார்த்துச் சொல்ல, “எதுக்கு இப்படிப் பதற்றப்படுறீங்க? போகட்டும் விடுங்க.” வசந்த் அவளைப் பார்த்தபடி அவரிடம் நிதானமாகச் சொன்னான்.

“இல்லங்கைய்யா… பாப்பாவுக்குத் தெரியுமோ என்னவோ. நீங்க… மேல... நான் வேணும்னா மேல போயி சொல்லிக் கூப்பிட்டுட்டு வர்றேனுங்க?”

பணிவும் தயக்கமுமாக அவர் கேட்டு நிற்க,

“அவங்க தான் இங்க வரலையே. தெரிஞ்சு இருக்காது. இருக்கட்டும் விட்டுடுங்க. நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க. வேற வேலை இருந்தா பாருங்க. இங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாம் சாப்பிட்டாச்சான்னு கேட்டுக்கங்க. உங்க கண்ணைய்யா, சைவிம்மாவுக்கு எதாவது ஏற்பாடு பண்ணி இருக்கீங்களா? இல்லை நான் வாங்கச் சொல்லி விடவா?”

சாப்பாட்டு ஏற்பாட்டைப் பற்றித் தென்னம்பாளையிடம் பேசிவிட்டு, வசந்த் மேலே போகாமல் கீழ் வீட்டிற்குள் நுழைந்தான்.

அங்கே பரிமளத்தை வைத்திருக்கும் பெட்டி அருகே, சரள்கண்ணனைக் கட்டிக்கொண்டு அவருடைய அக்கா காயத்ரி அழுது கரைந்து கொண்டிருந்தார். சுற்றி இருந்த சொந்தங்களும் கண்ணீரும் புலம்பலுமாக இருந்தனர்.

இவனைப் பார்த்ததும் அங்கிருந்த சிலர் எழுந்து நிற்க, இவனுக்கு அங்கே நிற்கச் சங்கடமாக இருந்தது. காலையிலிருந்து சில தடவை சொல்லிவிட்டான். இந்த மரியாதை எல்லாம் இங்கே காட்ட வேண்டாம் என்று. ஆனாலும் அவர்கள் கேட்பதாகத் தெரியவில்லை.

சரள்கண்ணனுடன் சில நிமிடங்கள் நின்று இருந்தான். அவனுடைய பார்வை பரிமளம் பாட்டியிடம் நின்றது. மீளாத்துயிலில் சென்று விட்டவரின் உடலை இமைக்காமல் பார்த்தான்.

‘நீங்க கேட்டப்ப வராத உங்க பேத்தி இப்ப வந்திருக்கா பாட்டி. அவகிட்ட என்னென்னமோ பேசணும்னு சொன்னீங்கள்ள… ஆனா, இப்படியா… உங்க மனசுல நினைச்சதைச் சொல்லாமலே போயிட்டீங்க. இவ்வளவு அவசரமா எதுக்குப் பாட்டி? அவளைத் தெரிஞ்சும் தனியா விட்டுட்டுப் போயிட்டீங்க.’

அவனுக்கு, தான் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, சைந்தவியை நேரில் சென்று சந்தித்து இருக்கலாம் என்று தோன்றியது இப்போது.

‘அவளுக்கு உங்க மேல பிரியம் இருக்குப் பாட்டி. வந்ததிலிருந்து அழுதிட்டே இருக்கா. உங்க மாதிரியே அவளும் சிடுசிடுன்னு இருக்கிற மாதிரி தெரியுறா. நீங்க என்கிட்ட சிடுசிடுத்தது இல்லைல. சைவிம்மா என்கிட்ட பேசின முதல் பேச்சே பொறிஞ்சது.’

மனத்தில் தோன்றியிருப்பதை அவரிடம் உதடுகளைப் பிரிக்காமல் சொல்லிக்கொண்டு இருந்தான்.

பயமற்ற திடமான பெண்மணி. சிடுசிடுத்திட்டே இருந்தாலும், அவருக்குள்ளே அன்பு ஊற்று உண்டு என்பதை வசந்த் புரிந்திருந்தான்.

அவரிடம் எஞ்சியிருந்த கம்பீரம் வசந்தை இன்னும் கவர்ந்தது. சரள்கண்ணன் பக்கத்தில் அமைதியாக நின்றுவிட்டு வெளியே வந்தான்.

மணிகண்டன் இவனை எதிர்பார்த்து நிற்க, “என்ன மணி… கணக்குப் பார்த்தாச்சா?” கேட்டுக்கொண்டே அவன் தந்த காகிதத்தை வாங்கிக்கொண்டான்.

அப்போது புயல் திரண்டது போலச் சைந்தவி வேக வேகமாக மேலே இருந்து வந்தாள். அவளுடைய கையில் பணமும் மொபைலும் இருக்க, “டிரைவர் எங்கே?” வசந்தைப் பார்த்துக் கேட்டாள்.

மணிகண்டன் ‘என்ன இவங்க… சார் கிட்ட இப்படிப் பேசுறாங்க?’ என்று நினைத்துக்கொண்டே, “மேடம்…” ஏதோ சொல்லப் போனான்.

“மணீ…”

வசந்த் அவனைப் பேசவிடாமல் தடுத்தான். அவனுடைய பார்வையை உணர்ந்து மணிகண்டன் பத்தடி தள்ளிப் போய் நின்று கொண்டான்.

“சொல்லுங்க சைவி…”

“நாங்க வந்த காருக்குப் பணம் செட்டில் பண்ணனும். இந்தாங்க பணம். செட்டில் பண்ணிடுங்க.”

பலர் வசந்திடம் பணிவு காட்டி நிற்க, இவனைக் காண மக்கள் நித்தம் நித்தம் காத்துக் கிடக்க… சைந்தவி அசால்டாக வந்து இவனைப் பார்த்து ஏவிக் கொண்டிருந்தாள்.

வசந்த் அவள் பேசியதில் அதிர்ந்து போகவில்லை. ஆச்சரியமாகப் பார்த்து நின்றான். அவனுடைய இமைகள் விரிந்து புருவங்கள் உயர்ந்தன.

அவள் கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு, “சரி பண்ணிடறேன். ஆனா பேலன்ஸ் பணம் என் டிப்ஸ். ஓகே?” முறுவலை அடக்க மாட்டாமல் காட்டிக்கொண்டே கேட்டான்.

“இத்துனூண்டு மிச்ச சில்லறையை வச்சிட்டு என்ன பண்ணப் போறீங்க? ஒரு வேளை இப்படி டிப்ஸ் காசைச் சேர்த்து வச்சி பெரிய கோட்டையைக் கட்ட உத்தேசமோ?”

அவனுடைய முறுவல் சைந்தவியை எரிச்சல் படுத்திவிட, அதில் நக்கலாகக் கேட்டுவிட்டு வீட்டிற்குள் போகப் போனாள்.

“ஒத்த ரூபாயால எத்தனை பேரோட வாழ்க்கை மாறிச்சு…” வசந்த் சொல்லிவிட்டு முறுவலிக்க, “அது சினிமாங்க. நிஜமில்லை.” அவனை முறைவிட்டுப் போனாள்.

வசந்த், சைந்தவி ஏவியது போல அந்தக் கார் ஓட்டுநரைக் காண வாசலுக்குப் போக, மணிகண்டன் அவனுடன் செல்லவா வேண்டாமா என்று புரியாமல் நின்றான்.

சைந்தவியும் வசந்தும் பேச ஆரம்பிக்கும் போதே தென்னம்பாளை வராண்டாவில் இருந்து படிகளில் இறங்கி வர, மணிகண்டன் முறைத்துக்கொண்டே அவரைப் பார்த்துப் பேசினான்.

“உங்க பாப்பா எப்பவும் இப்படித்தானா?”

“என்ன மணி என்னப்பா… என்ன ஆச்சி?”

“என்ன ஆச்சின்னு வந்து நிதானமா இப்ப கேளுங்க. இன்னும் என்ன ஆகணும். அதான் யோசிக்காம கொள்ளாம உங்க பாப்பா பேசி வச்சிருச்சே. சார் யாரு என்ன எவருன்னு தெரிஞ்சிக்காம அவரை ஏவுது. இதுக்காக நாளைக்கு சார் என்னை வச்சி செய்யாம இருந்தா சரி.”

மணிகண்டனுக்கு எங்கே தெரியப் போகுது, சைந்தவி வசந்தின் மனத்தைப் பாதிக்கிறாள்… இப்படி வெளிப்படையாக மட்டுமில்லை, அவனுக்குள்ளும் இருந்துகொண்டு அவனை வச்சி செய்யப் போகிறாள்.

“இந்தாப்பா மணி… கொஞ்சம் மருவாதையா பேசு! எங்க பாப்பா என்ன செஞ்சாங்க? சொல்லுறதைப் புரியும்படி சொல்லுவியா…”

“மரியாதை எனக்குத் தெரியுறதால தானே இந்தப் பயமே. நீங்க நம்ம சாரைப் பற்றிச் சொல்லி, உங்க பாப்பாவுக்கு மருவாதையைச் சொல்லித் தாங்க.”

தென்னம்பாளையிடம் அழுத்திச் சொன்ன மணிகண்டனுக்கு உள்ளுக்குள்ளே சங்கடமாக இருந்தது. அவனுடைய பார்வை வசந்திடம் போனது. அவன் ஓட்டுநரைக் காணப் போகிறான் என்று தெரிந்தது. தான் அங்கே செல்லவா வேண்டாமா என்று தயங்கியவன், பின்னர் வெளி வாயிலை நோக்கிப் போனான்.

“பாப்பா என்னம்மா நடந்திச்சி… அந்தத் தம்பிக்கிட்ட என்ன சொன்னீங்க?”

தென்னம்பாளை சைந்தவியிடம் வந்து கேட்டார்.

“எதுக்கு இப்ப நீங்க இப்படிப் படபடக்கிறீங்க பாளை? அவரு நாங்க வந்த காருக்குப் பணத்தைச் செட்டில் பண்ணப் போயிருக்காரு. அவர்கிட்ட பணத்தைத் தந்திட்டு இருந்தேன். என்ன இப்ப? அதுக்கா நீங்க பதட்டப்படுறீங்க? உள்ள வாங்க. எனக்கு அப்பத்தாவைப் பார்க்கணும். என் கூட இருங்க.”

‘ஏன் இவருடைய உடல்மொழி இவ்வளவு மாறியிருக்கு?’ சைந்தவி நினைத்துக் கொண்டாள்.

ஆனால், அதைப் பொருட்படுத்தும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. தன்னுடைய அப்பத்தாவை எதிர்கொள்ள வேண்டும். தன்னால் தனியாக உள்ளே போக முடியுமா?

உள்ளே இருப்பது அவளுடைய குடும்பம். தன்னுடைய அப்பா, அத்தை மற்றும் நெருங்கிய உறவினர்கள். இருந்தும் அங்கே அந்நியமாக உணர்கிறாள். தன்னுடைய துணைக்கு வேலையாளை உடன் வரச் சொல்லிக் கூப்பிடுகிறாள்.

என்ன மாதிரி நிலைமை இது என்கிற சிந்தனையுடன் நின்றாள். தென்னம்பாளைக்கு இவளிடம் பாசம் உண்டு. ஆனால், இந்த நிமிடம் அவளுடைய மனவுணர்வுகள் அவருக்குத் தெரியவில்லை. அந்தளவு சிந்திக்கக் கூடிய ஆளில்லை அவர்.

மணிகண்டன் சொன்ன விசயத்திலேயே சிக்கியிருந்தது அவருடைய நினைப்பு.

“பாப்பா வசந்த் தம்பிய உங்களுக்குத் தெரியுமா? அவரு யாருன்னு…”

“யாரு வசந்த்? ஓ… இப்ப நான் பேசிட்டு இருந்தவரா? நம்ம அப்பத்தாவுக்கு வேண்டியவரா பாளை… இல்ல எங்க சொந்தக்காரர்?”

“அவரு கலெக்டரு பாப்பா. அம்மாவுக்கு வேண்டப்பட்டவராகிட்டாரு. அவருகிட்ட போயி நீங்க வேலை ஏவி இருக்கீங்க?”

கவலைப்பட்டார் தென்னம்பாளை.

“ஒரு பில் கலெக்டருக்குப் போயி இந்தப் பில்டப்பா? போங்க பாளை நீங்க…”

அப்போது வசந்த் அவர்களுக்குப் பின்னால் வந்திருந்தான். சைந்தவி சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டே இருந்தான்.

“ஐயோ பாப்பா என்ன நீங்க இப்படிப் பேசுறீங்க. நல்லவேளை வேற யாரு காதுலயும் விழுகலை. அவரு நம்ம ஜில்லா கலெக்டருங்க பாப்பா. பார்த்துப் பேசுங்க.”

அதிகமான பதற்றத்தை வெளிகாட்டிக் கொண்டே சொன்னார் தென்னம்பாளை.

‘என்னது யாரும் கேட்கலையா? கேட்க வேண்டியவனுக்கு நல்லாவே காதுல விழுந்திருச்சு!’

புன்சிரிப்புடன் நினைத்துக் கொண்டான். அப்போது அவனுக்குத் தோன்றியது…

‘சைவிம்மா… என்னைப் பார்த்தா உனக்குப் பில் கலெக்டர் போலவா தெரியுது? எம்புட்டு கஷ்டப்பட்டுப் படிச்சி, முதல் அட்டெம்ப்ட்லயே பாஸ் பண்ணி போஸ்டிங் வாங்கினேன். நீ என்னடான்னா என்னைய பில் கலெக்டருன்னு சொல்லி ஒரே வினாடியிலே சரிச்சுப்புட்டியே!

என்னைய பெத்த தெய்வநாயகி மட்டும் இதைக் கேட்டு இருக்கணும். ஒன் மினிட்ல வெந்து… சேச்சே வெந்து இல்லை.ரொம்ப நொந்து போயி மேகி ஆகியிருப்பாங்க.’

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி! 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
அத்தியாயம் 13:

அப்பத்தாவைக் காணப் போகும் அந்தக் கணத்தை எதிர்கொள்ளும் சிந்தனை சைந்தவியிடம் குடிபுகுந்திருந்தது. அதிலேயே ஒன்றியிருந்தாள். ஒருவிதமான உணர்வு வயிற்றில் புரண்டது. மனத்தில் துயரமா; பயமா; தயக்கமா என்று புரியாத உணர்வு சூள் கொண்டது.

நல்லவேளையாக அந்த நேரம் அங்கே ஒப்பாரியோ நெஞ்சைப் பிழியும் அழுகுரல்களோ கேட்கவில்லை. ஓரளவு சாதாரணமான சூழ்நிலை போன்ற வெளித்தோற்றம் சைந்தவிக்கு உபயம் செய்தது.

வசந்தைப் பற்றித் தென்னம்பாளை சொன்னதைக் கேட்டும் அதற்குரிய எதிரொலி எதுவும் பெரிதாக இவளிடம் தென்படவில்லை. சாதாரணமாக அந்த விசயத்தை எடுத்துக்கொண்டது போலத் தெரிந்தாள்.

வசந்த் அவளுடைய செய்கையை எளிதாக எடுத்துக் கொண்டான். அவனுக்குச் சைந்தவி, அவனை அந்த மாதிரி சாதாரணமாக நடத்துவது பிடித்துவிட்டது. பலரைப் போல அவளும் மரியாதை காட்டுவதை அவனுடைய மனது விரும்பவில்லை.

ஆனால், தென்னம்பாளைக்கு அப்படியில்லை. முற்றிலும் வேறு மனநிலை. உரிய நபர்களுக்கு மரியாதையையும் பணிவையும் சரியான முறையில் செலுத்த வேண்டும் என்று நினைக்கும் சந்ததியைச் சார்ந்தவர்.

தென்னம்பாளை, “ஐயோ பாப்பா என்ன நீங்க இப்படிப் பேசுறீங்க. நல்லவேளை வேற யாரு காதுலயும் விழுகலை. அவரு நம்ம ஜில்லா கலெக்டருங்க பாப்பா. பார்த்துப் பேசுங்க.” பதறிப் போய்ச் சொன்னதும்…

சைந்தவி உடனே கேட்டாள்…

“ஓ… அப்படியா பாளை?”

பக்கவாட்டில் திரும்பி சைந்தவி தென்னம்பாளையிடம் கேட்டபோது, வசந்த் பார்த்தே இருந்தான்.

அவளுடைய குவிந்த உதடுகளைப் பார்த்தபடி நின்று கேட்டவன், உடனே முறுவலித்தான். அரை வினாடி மட்டுமே என்றாலும், அவளுடைய உதடுகள் குவிந்த விதம் அவனை ஈர்த்து, இமைகளைச் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டது.

மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா…

தொடர்ந்து அவள் தென்னம்பாளையிடம் கேட்டாள்…

“டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் கார் டிரைவருக்குக் கணக்குப் பார்த்துப் பணம் தரக் கூடாதா? உங்க கலெக்டரை நான் கண்டக்டர் வேலை பார்க்க வச்சிட்ட மாதிரி எதுக்கு இந்தப் பதட்டம்? அவரே அதைப் பெரிசா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியலை. நல்ல மனுசன் போல. நீங்க தான் அதைப் பெரிசுபடுத்தி, இப்ப பில்டப் கொடுத்திட்டு நிக்கிறீங்க பாளை…”

அழுத்தமான குரலில் நிதானம் மாறாமல் சொன்னாள். வசந்த் தள்ளி நின்று இருந்தாலும், அவனுக்கும் சைந்தவி சொன்னது காதில் விழுந்தது.

“அம்மே கண்டக்டரா! நீ செஞ்சாலும் செய்வ.”

முணுமுணுத்தபடி அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான். அவள் சொன்ன விதம் அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது. அதற்குப் பயந்தே விலகிப் போனான்.

‘இப்ப சிரிச்சு வச்சா ஜில்லா கலெக்டரு காமெடி கலெக்டராகிடுவேன். உங்க அப்பத்தா காரியத்தை முடிச்சிட்டு உன்னைக் கவனிச்சிக்கிறேன்.’

நினைத்துக் கொண்டான்.

சைந்தவியை ஒட்டியே தென்னம்பாளையும் வீட்டிற்குள்ளே செல்ல, வசந்த் அங்குச் செல்லவில்லை. மேலே, மாடி வீட்டிற்குப் போய் விட்டான். வேலைகளைப் பார்க்கவும், இன்னும் சில ஏற்பாடுகளையும் செய்ய நினைத்துப் போனான்.

அவனுடைய தற்காலிக குடியிருப்பு பரிமளத்தின் மேல் வீடு.

மாவட்ட ஆட்சியருக்குக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பங்களாவில் நீண்ட காலமாகப் புதுப்பித்தல் வேலைகள் தடைபட்டுக் கொண்டிருந்தன. அதனைச் செய்து முடிக்கும் வரை வசந்த் தற்காலிகமாக வெளியே தங்கியுள்ளான்.

அதே பகுதியில் தனி வீடாக எடுத்திருக்கலாம். இந்த வீடு அவனைக் கவர்ந்ததால், பரிமளமும் அங்கே கீழ் வீட்டிலிருப்பதைப் பொருட்படுத்தாது இதனையே தேர்ந்தெடுத்திருந்தான்.

“என்னங்க பாப்பா நீங்க… அவரை இம்புட்டுச் சாதாரணமா பேசுறீங்க?”

தென்னம்பாளை நொந்து போனவராகக் கேட்டார்.

“பாளை ப்ளீஸ் இதை விடுங்க. எனக்கு அப்பத்தாவைப் பார்க்கணும். திடீர்ன்னு என்னாச்சு அவங்களுக்கு... நல்லா தானே இருந்தாங்க?”

மெல்லிய குரலில் கேட்டபடி உள்ளே சென்றாள்.

“என்னன்னு சொல்லுறது பாப்பா… நல்லா இருந்தவங்க தான். இப்படித் திடீர்ன்னு…”

தென்னம்பாளைக்குத் தொண்டை கமறியது. கண்கள் குளம் கட்ட முயல, தோளில் தொங்கிய துண்டை எடுத்துத் துடைத்துக் கொண்டார். பின்னர், அழுகை வரப் பார்க்க, வாயருகே அதனை வைத்துப் பொத்திக்கொண்டார்.

சைந்தவி அந்தப் பெரிய கூடத்திற்குள்ளே நுழைந்ததும் சொல்லி வைத்தது போல அங்கே ஒருவரும் பேசவில்லை. இவள் என்ன செய்யப் போகிறாள் என்பதை எதிர்பார்த்து அமைதியாக இருந்ததைப் போலப்பட்டது இவளுக்கு.

‘நான் அதிகமா கற்பனை பண்ணிக்கிறேனா… சாதாரணமா தான் பார்க்கிறாங்களா… அப்பா எங்கே? அத்தை தானா அங்கே உட்கார்ந்து இருக்கிறது? அடையாளமே தெரியலை. எதாவது நோய் வந்திடுச்சா… என்ன இப்படி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கு…’

சைந்தவி நினைத்துக் கொண்டாள்.

கூடத்தின் ஒரு பகுதியில் அந்தக் குளிரூட்டப்பட்டிருக்கும் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. நடுக்கூடத்தில் எதிரே இல்லாமல் சற்றுத் தள்ளி உள் அமைப்பில் இருந்தது. எல்லோரும் நன்றாகப் பார்க்கும் வண்ணம் பார்வை படுத்தியிருந்தார்கள்.

பரிமளத்தின் உடல் நன்றாகக் கண்களுக்குத் தெரிந்தது. அந்தப் பக்கம் தவிர்த்து, மற்ற எல்லாப் பக்கமும் சைந்தவியுடைய பார்வை போனது.

அங்கு இவளை எல்லோரும் எதிர்பார்த்தே இருந்தனர்.

சரள்கண்ணன் வீட்டிற்குள்ளே வந்ததுமே சிலர் சைந்தவியைக் கேட்க, சிலர் அவள் வரவே இல்லை என்று முடிவு கட்டி விமர்சிக்கத் தொடங்கி இருந்தார்கள்.

சரள்கண்ணன் அம்மாவைக் கண்டு அலமலந்து போயிருந்தாலும், மகளைப் பற்றிய வீணான சலசலப்புக் காதில் விழுந்த வினாடியே அவர்களுடைய வாயை அடைத்திருந்தார்.

“சவிம்மா வந்திருக்கா. வெளியே இருக்கா. ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கா. அதையும் இதையும் பேசி எம் பொண்ணு மனசை நோகடிக்காம இருங்க.”

மிகவும் நெருக்கமான உறவினர்கள். அவர்களைப் பற்றித் தெரிந்தே சொல்லியிருந்தார்.

அதனால், இப்போது உள்ளே வரும் போது யாரும் வியப்பாக இவளைப் பார்க்கவில்லை.

சைந்தவியின் மனது படபடத்துக் கொண்டிருந்தது. உடலில் நடுக்கம் தோன்றியது. ஒன்றரை வருடமாக இந்தத் திசை பக்கம் எட்டியே பார்க்காமல் இருந்துவிட்டாள்.

அப்பத்தா, தன்னுடைய மகனுக்கும் பேத்திக்கும் இடையே சின்னாபின்னாமான உறவுப் பாலத்தைச் சீரமைக்க முயன்றதில் பெரிய வாக்குவாதம் வந்திருந்தது.

சைந்தவிக்கு அதில் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அப்பத்தாவை வெட்டி விட்டிருந்தாள். அவரிடம் பேசவுமில்லை. நேரில் வந்து பார்க்கவுமில்லை.

அதற்கு முன்பாவது, ஒரு வருடத்திற்கு இரண்டு மூன்று தடவை வந்து தங்கிச் செல்வாள். அப்போது பாட்டியும் பேத்தியும் பாசத்தைப் பொழிந்ததோ கொஞ்சிக் கொண்டதோ இல்லை தான்.

ஆனாலும், என்னுடைய கூடு என்கிற உரிமை உணர்வு இவளுக்கு உண்டு. பேத்தியுடைய குணங்களைக் கண்டும் காணாதது மாதிரி அவரும் உள்வாங்கிக் கொண்டிருந்தார்.

சைந்தவியின் துணிவும், வேறு யாரையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய எதிர்காலத்தைச் செதுக்கிக்கொள்ளக் கொடுக்கும் உழைப்பும் அவரைக் கவர்ந்தது உண்மை. அதனை ஒரு போதும் அவர் பேத்தியிடம் சொன்னதில்லை.

அவ்வப்போது அவருடைய உணர்வுகளை வெளியிட்டு இருக்கலாம். அவளுக்கும் தன்னைப் பாராட்ட, ஆதரிக்க ஆள் இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். அவசியத்தின் போது அவரை நாடி வந்திருப்பாள். தனிமையில் சிக்கித் தவித்திருக்க மாட்டாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
அப்பத்தாவின் குணம் அப்படி… ஆளுமையையும் சிடுசிடுப்பையும் காட்டுபவரால் பாசத்தையும் அரவணைப்பையும் காட்ட முடியவில்லை.

சண்டை சச்சரவுகளுடன் தான் பலருடைய வாழ்க்கைப் பயணம். ஒற்றுமையில் வேற்றுமை பெரிதாகத் தெரிவதில்லை. ஒட்டாத உறவில் ஒரு கருத்து வேற்றுமை போதும், பள்ளத்தைக் கிணறாக்கிவிடும். சைந்தவிக்கு அப்பத்தாவிடம் அப்படித்தான் ஆகிப் போனது.

மதுமிதா இறந்த பின்னர் ஆறாம் வகுப்பை மட்டும் சென்னையில் படித்து முடித்தாள் சைந்தவி. அதற்கு மேல் சரள்கண்ணனால் தனியாகச் சமாளிக்க முடியாது போனது. மனைவி, மகள், தான் என்று மூவரும் ஒன்றாக வாழ்ந்த கூடு.

கூட்டுப் பறவை ஒன்று மாண்டதில் அக்கூடும் கலைந்து போனது!

சரள்கண்ணன் மகளுடன் சொந்த ஊரான தர்மபுரிக்கே திரும்பி வந்துவிட்டார்.

தன்னுடைய வேலை, மகளின் படிப்பு, விருப்பம், அடுத்துத் தான் என்ன செய்யப் போகிறோம் என்கிற எந்தத் தெளிவும் இல்லாமல் இவர் எடுத்த முடிவு, மகளுக்கும் அப்பாவிற்குமான வாழ்வைப் புரட்டிப் போட்டிருந்தது.

மகளும் அப்பாவும் சில மாதங்கள் அங்கு ஒன்றாக இருந்தார்கள். அதன் பின்னர் அம்மாவிடம் மகளை விட்டுவிட்டு, சரள்கண்ணன் பெங்களூருவில் வேலைக்குப் போனார்.

அங்கே இருந்த போது அவருக்கு நல்ல வாய்ப்புக் கிட்டியது. அதை ஏற்று மலேசியா நாடிற்குச் சென்றார்.

அவ்வளவு தான்… எல்லாமும் முடிந்தது. அப்பாவும் மகளும் அவர்களுக்குள்ளே நிகழ்ந்தது தற்காலிகப் பிரிவு என்று நினைத்து இருந்தார்கள். ஆனால், ஐந்து வருட ஒப்பந்தம் என்பது நிரந்திரப் பிரிவானது துயரமே!

சைந்தவி, ஏழாவது வகுப்பு முதல் பள்ளி இறுதி வரை தான் தர்மபுரியில் படித்தாள். அப்பத்தாவைக் கண்டு பயப்பட்டது, அவருக்குப் பணிவு காட்டியது, வேலை கற்றது எல்லாமும் அந்தக் காலகட்டதில் தான்.

அவள் சென்னை கல்லூரியில் பயிலப் போனதிலிருந்து அவருடைய அதிகாரத்தை இவள் மதிக்கவில்லை.

அப்பத்தாவும் வயது தந்திருந்த பக்குவம் மற்றும் தனிமை ஏற்படுத்தியிருந்த கொடுமையில், பேத்தியிடம் இழையவில்லை என்றாலும் அதிகாரத்தைக் காட்டவில்லை. பேத்தி தனியாக வந்தாலும் சரி, மகனுடன் வந்தாலும் சரி அனுசரணையாக நடந்து கொள்ளத் தொடங்கினார்.

வெற்றிலை சுண்ணாம்பாக உரசிக் கொள்ளவில்லை… பாக்காக உருண்டு பிரண்டு ஒன்று சேரவில்லை. முள்ளில் ரோஜா போன்றொரு பந்தம் இருவருக்கிடையே நிலவியது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு…

சரள்கண்ணனின் வருகைக்காகச் சைந்தவி விமான நிலையத்தில் காத்திருந்தாள். அவள் வேலையில் சேர்ந்து ஒரு வருடம் பக்கம் ஆகியிருந்த காலம் அப்போது.

‘வருசத்துக்கு வருசம் அப்பா இந்தியா வர்றது குறைஞ்சு போச்சு. நான் ஸ்கூல் படிக்கும் போது எப்படியும் ஒவ்வொரு வருசமும் ரெண்டு மாசம் சேர்ந்து இருக்கிற மாதிரி இருக்கும். இப்பவும் மூனு தடவை வந்திர்றார். ஆனா ஒரு வாரம் பத்து நாளுக்கு மேல தங்குறதில்லை. கிளம்பிப் போயிடறார்.’

நினைத்துக் கொண்டாள். தனிமை பழக்கமாகிவிட்ட போதும், தந்தையின் அருகாமைக்காக ஏங்கித் தவித்தது அவளுடைய மனது.

முதல் சில வருடங்கள் எல்லாம் சரள்கண்ணன் மகளைக் காண வரும் நாட்கள் அதிகமாக இருந்தன. வருடத்தில் இரண்டு மூன்று தடவை வந்து போனார். ஒவ்வொரு தடவையும் பதினைந்து இருபது நாட்கள் என்கிற கணக்கில் உடன் இருப்பார். அதற்கே சைந்தவி வருத்தப்பட்டது உண்டு.

“இன்னும் கொஞ்ச நாள் இருக்க முடியாதாப்பா? ப்ளீஸ் ப்பா…”

“வேலை இருக்குடா சவி. அப்பா என்ன செய்யட்டும்? மூனு மாசங் கழிச்சு லீவ் போட்டுட்டு திரும்ப வர்றேன்டா கண்ணம்மா.”

“முன்ன மாதிரி இங்கே சென்னையிலேயே வேலை பாருங்கப்பா. நம்ம ரெண்டு பேரும் எப்பவும் சேர்ந்து இருக்கலாம்.”

ஏக்கத்துடன் கேட்டாள் மகள். அதைக் கண்டு அவருக்கும் மனது துடித்தது.

“அப்பாவால இப்ப உடனே அப்படித் திரும்பி வர முடியாதே சவிம்மா. அஞ்சு வருசத்துக்குப் பெங்களூரு கம்பெனிக்குக் காண்டிராக்ட் எழுதிக் கொடுத்திருக்கேன் கண்ணம்மா. மலேசியாவுக்குப் போயி தான் ஆகணும். இடையிலே விட்டுட்டு வர அனுமதிக்க மாட்டாங்கடா.”

அப்பா சொன்ன விசயத்தைக் கேட்டு மகள் வருத்தம் கொண்டாள். கண்கள் கலங்கிப் போய்க் கேட்டிருந்தாள்.

“ஓ அப்படியாப்பா! நீங்க ஏம்ப்பா அஞ்சு வருசத்துக்கு ஒப்புக்கிட்டீங்க? என்னைத் தனியா இங்க விட்டுட்டு… நீங்க அவ்வளவு தூரத்தில இருக்கிறது நல்லாவே இல்லைப்பா. எனக்குப் பிடிக்கவே இல்லைப்பா. அம்மாவையும் உங்களையும் ரொம்ப மிஸ் பண்ணுறேன்ப்பா. அம்மா இனி நமக்கு இல்லை. ஆனா நீங்களும் நானும்… நம்ம எதுக்குப்பா இப்படிப் பிரிஞ்சு இருக்கணும்?”

அறிவு மிக்கக் குழந்தை கேள்வி கேட்டாள்.

‘சென்னையும் தர்மபுரியும் உங்கம்மாவை நினைவு படுத்தித் தவிக்க வச்சதுன்னு பெங்களூருக்குப் போனேன். அப்ப இருந்த என் மனநிலைக்கு மலேசியா வாய்ப்பு நல்லதாகப்பட்டது. யோசிக்காம எடுத்திட்டேன். ஆனா இப்ப உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் சவிம்மா.’

வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் நெஞ்சுக்குள்ளே மருகினார். மகளை அணைத்துக்கொண்டு இரண்டு கன்னங்களிலும் முத்தம் வைத்தார்.

முகம் கசங்கிப் போன மகளைப் பார்த்துச் சொல்லியிருந்தார்…

“இதோ ஒரு வருசம் ஓடிடுச்சே கண்ணம்மா. இன்னும் நாலு வருசம் பாக்கி இருக்கு. அதுவும் சீக்கிரம் போயிரும். நீ ப்ளஸ் டூ படிச்சு முடிக்கிறதுக்குள்ள அப்பா கண்டிப்பா வந்திர்றேன்டா. மொத்தமா இங்கேயே வந்திர்றேன்.”

உறுதியாகச் சொல்லிவிட்டுப் போனார் அந்த முறை.

மகளை ஆரத்தழுவி முத்தமிட்டுப் பிரிகையில் சரள்கண்ணனுக்கு எப்போதும் கண் கலங்கிவிடும். அந்த முறை மிகுந்த தழும்பலில் தான் சென்றிருந்தார்.

ஆனால், அவருடைய வாழ்க்கை அதன் பின்னர் மாறிப் போனது. தாமினியை அவர் சந்தித்தது எதிர்பாராத விசயம். மகளிடம் சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்ற முடியாமல் போனதிற்குத் தாமினி காரணமாகி இருக்கலாம்.

ஆனால், எல்லாம் அவருடைய தவறே! தெளிவாக யோசித்து முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் போனது எத்தனை வருடத் துன்பத்தைத் தந்துவிட்டது!

ஐந்து வருடப் பணி ஒப்பந்தம் முடிந்ததும் மொத்தமாகத் திரும்பி விடுகிறேன் என்று சொன்ன அப்பா அப்படி வரவில்லை என்கிற கோபமும் ஆதங்கமும் சைந்தவிக்குள் பதிந்து இருந்தன. போகப் போக அவற்றைக் கடக்கக் கற்றுக் கொண்டாள்.

ஆனால், அவர் முன்பைவிடக் குறைந்த நாட்களைத் தன்னுடன் செலவிடுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சண்டை போட்டிருந்தாள்.

அந்த முறை சரள்கண்ணன் அதிக நாட்கள் அவளுடன் சேர்ந்து இருப்பதாகச் சொல்லி, திரும்பிப் போகும் போது அவளையும் கூட வருமாறு கேட்டிருந்தார்.

“நீங்க நாலு வாரத்துக்கு இந்தியா வர்றது சந்தோசம்ப்பா. என்னால இப்ப உங்க கூட வர முடியாது. புது வேலை. நிறையக் கத்துக்க கிடைக்குது. அடுத்த வருசம் முடிவு செய்யலாம். சரியாப்பா?”

அவளுக்கு அப்பா ஒரு மாதம் வரைக்கும் அவளுடன் இருக்கப் போகும் சந்தோசம்… ‘நீயும் கூட வந்திடு’ என்று சொன்னது உருக வைத்திருந்தது.

ஆனாலும் தன்னுடைய வேலை, வாழ்க்கை பாதை என்ற யோசனை பொறுமை காக்கச் சொன்னது. அப்பாவைப் போலத் தானும் அவசரமாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்கிற அனுபவம் சைந்தவியின் உணர்வுகளுக்கு அணை போட்டிருந்தது.

“நீ எப்படிச் சொல்றியோ அப்படியே செய்யலாம் சவிம்மா… உன் பிரியம்டா. இந்தத் தடவை ஏர்போர்ட்டுக்கு வர்றியாடா?”

“ஆமாம் ப்பா… வர்றேன் வர்றேன்.”

சந்தோஷம் தளும்பச் சொல்லியிருந்தாள்.

அப்பாவிடம் சொன்னபடியே விமான நிலையத்தில், அவருடைய வருகைக்காக ஆவலாகக் காத்திருந்தாள். அப்பா பூகம்பத்தை உடன் கொண்டு வந்து இறக்கப் போவதை அவள் அறிந்திருக்கவில்லை.

சரள்கண்ணன் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தார். மகளைக் கட்டிப்பிடித்து, “சவிம்மா… ரொம்ப இளைச்சுட்ட கண்ணம்மா. வேலை ஜாஸ்தியாடா?” ஆதுரமாகக் கேட்டார்.

“வேலை என்னப்பா வேலை… நாள் முழுக்க உட்கார்ந்திட்டே வேலை பார்க்கிறேன். அது பாட்டுக்கு நல்லா போகுதுப்பா. டயட் எக்சர்சைஸ்னு கொஞ்சம் பார்க்கிறேன். உங்க மதும்மா போல நானும் புசுபுசுன்னு வந்திட்டா?”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
மகள் சொன்ன மதும்மா அவரைத் திடுக்கிட வைத்தது. ஏனென்றால், அவருக்குப் பின்னால் சிறிது இடைவெளி விட்டு, தாமினி, ஷானவி மற்றும் சரண் நின்றிருந்தார்கள்.

அப்பாவின் முக மாற்றம் மகளின் கண்களில் விழுந்தது.

“என்னப்பா அம்மாவைப் பற்றிச் சொன்னதும் ஷாக்காயிட்டீங்க?”

சைந்தவி யோசனையுடன் கேட்டாள்.

“இல்லைடா அப்படியில்லைடா… சவிம்மா…”

ஏதோ சொல்ல நினைக்கிறார். அவருடைய முகப் பாவனையும் தவிப்புடன் துடித்த உதடுகளும் அவளுக்கு உணர்த்தின.

“என்னப்பா சொல்லுங்க?”

அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னாள். சரள்கண்ணன் தயங்கி நின்றிருந்தார்.

அப்பாவின் தயக்கத்தைக் கண்டு யோசனையானாள் சைந்தவி. அவருடைய பார்வைப் போன திசையைத் தொடர்ந்து இவளும் பார்த்தாள்.

அங்கே மூன்று பேர் நின்றிருந்தார்கள். இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் புரியாமல் பார்த்தாள். சரள்கண்ணனைத் திரும்பிப் பார்த்தாள். அவர் இவளை இறுக பற்றிக் கொண்டார்.

அந்த மூவரின் பக்கம் அழைத்துப் போனார். குழப்பத்துடன் உடன் சென்றாள். முதலில் தாமினி சைந்தவியைப் பார்த்து நட்புடன் புன்னகைத்தாள். தொடர்ந்து ஷானவி, “ஹாய் அக்கா” சொல்லிப் புன்னகைத்தாள்.

சரண் அவசரமாக அருகே வந்து, “சவிக்கா” சொன்னான். கட்டிப் பிடித்து, இவளைக் குனியச் சொல்லி முத்தம் வைத்தான்.

சரணைப் பார்த்த வினாடியே சைந்தவிக்குப் புரிந்து போனது. அப்பத்தா வீட்டில் மாட்டி வைத்திருக்கும் அப்பாவின் படம்… அந்தப் படத்தில் தான் பார்த்திருக்கும் சிறுவன் சரள்கண்ணன், இப்போது கண்களின் முன்னால் நின்று கொண்டிருக்கிறான்.

சரண் அப்படியே சரள்கண்ணனுடைய வார்ப்பு!

இமைகளை அகல விரித்து, அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த மகளைப் பார்த்து சரள்கண்ணனின் இதயத் துடிப்பு அதிகமானது.

சட்டை கிழிஞ்சிருந்தா
தைச்சி முடிச்சிரலாம்
நெஞ்சு கிழிஞ்சிருச்சே
எங்கே முறையிடலாம்
காவிரி கங்கை ஆறுகள் போல
கண்களும் இங்கே நீராட...

அந்த ஒரு நாள் இருவருக்கும் மறக்க முடியாத ஞாபகம். அன்று சைந்தவி எப்படி உணர்ந்தாள் என்று அவள் மட்டுமே அறிவாள்!

இரண்டாவது திருமணம் செய்து கொள்ளச் சரள்கண்ணன் நினைத்ததே இல்லை. தாமினியை ஒரு விழாக் கொண்டாட்டத்தில் முதல் முதலாகப் பார்த்திருந்தார். அப்போது, அவள் கணவனை இழந்த பெண் என்று அவருக்குத் தெரிய வந்தது.

அத்தனை கூட்டத்தில் ஒதுங்கித் தனியாக உட்கார்ந்து இருந்தவளுடைய தோற்றம் அவருடைய மனத்தில் பதிந்தது. அவள் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டார்.

அடுத்து ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின்னர்த் தற்செயலாக அவளைப் பார்க்க நேர்ந்தது. ஏற்கெனவே அறிமுகமாகி இருந்ததால் புன்னகை செய்து வணக்கம் சொல்லிக்கொண்டார்கள்.

அந்த முறை இந்தியா வந்த போது மகள் அவரை மலேசியாவை விட்டு மொத்தமாக வந்து விடும்படி கேட்டாள். அவரும் அப்படித்தான் நினைத்துக்கொண்டார்.

‘நாலு வருசத்தை எப்படியாவது கடந்திட்டா சவிம்மா பக்கம் போயிரலாம். கண்ணம்மாவைச் சென்னையில் நல்ல காலேஜ்ல சேர்த்து விட்டிரணும். எனக்கும் அங்கே நல்ல வேலை கிடைச்சால் நல்லது. கிடைக்கா விட்டாலும் ஓகே. ஆன்லைன் வேலை, பிஸ்நெஸ்னு அமைச்சிக்கலாம்.’

இப்படி ஒரு முடிவுடன் வேலையில் ஆழ்ந்து இருந்தார். தாமினியோ அவளுடைய முகமோ ஞாபகத்தில் வரவில்லை.

ஆனால், அதற்கும் ஒரு முடிவு வந்தது.

அடுத்து ஒரு முறை, சரள்கண்ணன் நண்பரின் வீட்டில் தாமினியைச் சந்திக்க நேர்ந்தது. அப்படிப் பார்க்கும் போது அவளுடைய வயிறு நிலையைக் காட்டியது.

அன்று இரவில் அவருக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. தாமினி அவரை மிகவும் பாதித்தாள். அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றி நினைத்தார்.

சில நாட்கள் நிறைய யோசனை செய்து குழம்பிப் போயிருந்தார். நினைக்கக் கூடாது என்று நினைத்தாலும் தாமினி ஞாபகத்தில் வந்து நின்றாள்.

மதுமிதாவின் முகமும் கூடவே வந்தது. சைந்தவி, ‘அப்பாஆ’ என்று சொல்வது ஒலித்தது. பிறந்த நிலையில் முகம் தெரியாத ஒரு குழந்தையின், ‘ங்ஞா’ என்று அழுகுரல் ஒலித்தது.

மதுமிதாவிற்குப் பின்னர் எந்தப் பெண்ணும் அவரைப் பாதித்தது இல்லை. தாமினி மீது இரக்கமா காதலா? யோசிக்கையில் அவருக்குத் தோன்றியது…

‘தாமினி மேலே இரக்கமும் இல்லை காதலும் இல்லை. அவளும் என்னைப் போலத் துணையை இழந்திட்டு நிக்கிறா. என் மகளைப் போல அவ வயிற்று பிள்ளையின் நிலை. நாங்க கல்யாணம் செய்துகிட்டால், நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணை. எங்க பிள்ளைங்களுக்கும் அம்மா அப்பான்னு குடும்பமா வாழ ஒரு கூடு கிடைக்கும்.’

சரள்கண்ணன் தான் யோசித்ததை அந்த நண்பனிடம் பகிர்ந்து கொள்ள, அதன் பின்னர் எல்லாம் இயந்திர கதியில் நடந்து முடிந்தது. அவராகவே போய் ஒரு வலையில் மாட்டிக் கொண்டதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

தாமினிக்கும் சரள்கண்ணனுக்கும் வயது வித்தியாசம் ஆறேழு வருடங்களுக்குள் இருக்க… தாமினியின் பெற்றோர் ஆர்வமாகியிருந்தார்கள்.

சரள்கண்ணன், ஆள் பார்க்கவும் தோற்றத்தில் தாமினியைவிட நல்ல நிறம், கம்பீரம். தாமினியின் பெற்றோர் விரைவாகச் செயல்பட்டிருந்தார்கள்.

அவரைப் பற்றி விசாரித்ததில் பழக்கவழக்கங்கள்; நிதி நிலைமை; படிப்பு; வேலை; குடும்பம் என எல்லாமும் அவர்களை வெகுவாகக் கவர்ந்து திருப்திபடுத்தின. சைந்தவியைப் பொருட்படுத்தாது, சரள்கண்ணனை அதிகம் யோசிக்க விடாமல் நிறுத்தி வைத்து, திருமணத்தை முடித்த பின்னர்த் தான் ஓய்ந்தார்கள்.

திருமணத்தின் முன்னர்த் தனி நபர் சரள்கண்ணன். அப்போதே சைந்தவியிடம் பேசியிருக்க வேண்டும். அதற்குப் பின்னர்த் தாமினி, சனா, சரண் அவரைச் சுருட்டிக் கொண்டார்கள்.

சைந்தவி அவரைவிட்டு அகலவில்லை. அவர் சைந்தவியை விடவில்லை. எப்போதும் போல அக்கறையையும் அன்பையும் அவளிடம் காட்டுவதில் உறுதியாக இருந்தார். தாமினியிடம் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

தாமினியின் பெற்றோரை நினைத்தே சைந்தவியை உடன் அழைத்துப் போய் வைத்திருக்கவில்லை. அவர்கள் அவருக்கு இக்கட்டைத் தருவித்துக் கொண்டிருந்தார்கள்.

இதோ, அவர்களுடைய மறைவிற்குப் பின்னர், தனக்கும் தன்னுடைய மூத்த மகளுக்கும் விடிவு காலம் என்று நினைத்து வந்திருக்கிறார்.

தாமினிக்குச் சரள்கண்ணனுடன் குடும்பம் நடத்தியதில், சைந்தவிக்குக் கணவர் மனத்தில் உள்ள உணர்வுகள் நன்றாகப் புரிந்தே இருந்தது.

ஷானவிடம் அவர் வேற்றுமை காட்டக் கூடாது என்று பயந்தே தன்னுடைய பெற்றோர் நடத்திய வழி போயிருந்தாள். ஆனால், என்றுமே சரள்கண்ணனிற்கு இளைய மகள் தான் பெற்றிருக்கும் ஷானவி தான் என்பதைக் கவனிக்கத் தவறியிருந்தாள்.

அவருடைய சனாவிற்கான உணர்வுகளைச் சந்தேகித்தாள். இப்போதும் சரணினால் தான் இந்தியா வந்திருக்கிறாள். சைந்தவியைப் பார்த்துவிட்டு, அவளை அவர்களுடன் வருமாறு கேட்க ஒத்துக் கொண்டிருக்கிறாள்.

சரள்கண்ணன் ஷானவி, சரண் இருவரிடமும் சைந்தவியைப் பற்றிச் சொல்லியே வளர்த்திருந்தார். ஷானவியைவிடச் சரணே சைந்தவியிடம் பாசம் வைத்தான். அவருடைய அக்கறையையும் பிரதிபலித்தான்.

எதிர்பார்த்திராத பரிமளத்துடைய மரணம், அப்பா மகள் இருவருக்கும் பல ஞாபகங்களைத் தூண்டி மனத்தின் துன்பத்தைக் கிளறி விட்டிருந்தது.

சைந்தவிக்குக் கண்கள் விழித்திருந்தாலும் நிலைமை ஒரு மாதிரியாகச் சுழன்று அவளை மலங்கச் செய்து கொண்டிருந்தது. அப்பாவைத் தேடினாள். அவர் இவளுடைய கண்களுக்குப் படவில்லை.

சரள்கண்ணன் முதல் சுற்றுக் கண்ணீர் விட்டுவிட்டு, உடன் பிறப்புடன் அம்மாவின் பிரிவின் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டதும் உள்ளறைக்குள் சென்றுவிட்டார்.

மலேசியாவின் அதிகாலை நேரத்திலேயே வசந்த் சரள்கண்ணனை அழைத்திருந்தான். அவன் மரணச் செய்தியைத் தெரிவித்ததிலிருந்து தவித்துப் போயிருந்தார். முழு நாளும் அலைந்ததில் அவருடைய உடம்புக்கு என்னவோ செய்தது.

பெரிய மகளைப் பற்றிய மனவுளைச்சல் வேறு குத்திக்கொண்டே இருந்ததால் நிரம்பவும் தளர்ந்து இருந்தார்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
காரில் வரும் போது அவள் சற்று மனம் இரங்கி கரிசனம் காட்டியது இவருக்கு ஆறுதல் அளித்தது.

ஆனாலும், ‘இனி அம்மா இல்லை. மகளின் நிலை?’ நினைத்து நினைத்து மருகினார். அவள் இப்போது இளகியிருப்பது நிரந்திரமில்லை என்றே நினைத்தார்.

தான் அவளுடைய வெறுப்பைச் சம்பாதித்துவிட்டோம். இனி மேல் தன்னிடம் ஒட்டுவாளா?

நிதர்சனம் முகத்தில் அறைந்ததில் உள்ளுக்குள்ளே உடைந்து கொண்டிருந்தார். இவருக்கும் மகளுக்கும் இடையே எழும்பி உள்ளது கண்ணுக்குத் தெரியாத அந்நியத்தன்மை. அதை முழுதாகப் போக்கிக்கொள்ள முடியுமா? எப்படி?

விடை தெரியாத குழப்பம் மூளையின் அணுக்களைத் தெரிக்கவிட்டது. அம்மாவைச் சவப்பெட்டியில் கண்டதிலிருந்து வேதனை பெரிதும் படுத்திக் கொண்டிருந்தது.

குளிர்ந்த நீர் மனத்தையும் உடலையும் தெளிய வைக்கும் என்று நினைத்து, தன்னுடன் பின்னால் வந்து நின்ற அக்கா காயத்ரியின் கணவர் பாலசந்தரிடம் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவைச் சார்த்திக்கொண்டார்.

மகள் அங்கே வந்து தன்னைத் தேடிக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியாமல் போனது!

சைந்தவி அங்கே இருந்தவர்களைப் பார்த்தாள். அத்தையைத் தவிர யாரும் அவளுடைய மனத்தில் பதியவில்லை. அப்பா கண்களில் படவில்லை என்றதும் மனது வாடியது.

“பாப்பா இப்படி வாங்க…”

தென்னம்பாளை இழுத்த இழுப்பிற்குச் சென்றாள். அப்பத்தாவுடைய உடலை அருகே பார்த்ததும் படபடவென்று இதயம் அடித்துக் கொண்டது. உள்ளுக்குள் பிசைந்தது.

சைந்தவிக்கு அழுகை வரவில்லை. கண்களில் கண்ணீர் சுரக்கவில்லை. பரிமளத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஒருவேளை இவங்க சாகலை. நல்லா இருக்காங்கன்னு இப்ப சொன்னா, என்ன பண்ணுவ நீ?’

தன்னையே கேட்டுக் கொண்டாள்.

‘கட்டிப் பிடிச்சிப்பேன்… போய்க் கட்டிக்கிட்டு முத்தம் கூட வைக்கலாம்.’

நினைத்துக் கொண்டாள்.

‘எனக்கு அப்பத்தா எதிரி இல்லை. என் நல்லதுக்குன்னு நினைச்சி அப்பா கூடச் சமாதானமாகப் போகச் சொன்னது எனக்குப் பிடிக்கலை.

அப்பா அவங்க கூட இனி எனக்கு ஒட்டாது. தான் தனி தான். எனக்குன்னு குடும்பமில்லைன்னு சொன்னேன். இந்த நிதர்சனம் அப்பத்தாவுக்கும் புரிஞ்சது. ஆனாலும் என்னைத் தனியா இருக்க விடாம ஒரே நச்சுப் பண்ணாங்களே!

அதனாலே தானே இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கலை. வெறுத்துப் போய் ஒதுங்கிட்டேன்.’

யோசனை ஓடியது. ஒன்றரை வருடம் ஊர் பக்கம் வராமல் இருந்தது குற்றக் குறுகுறுப்பைத் தர, மனத்தைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

இருவருக்குள்ளும் வாக்குவாதம் வந்தபோது அப்பத்தா பேசியது ஞாபகத்தில் வந்து நின்றது.

“உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணுற வரைக்கும் அப்பா கூடப் போயி இருடி. உன் மேலே உயிரையே வச்சிருக்கான். நமக்குச் சொல்லாம கல்யாணம் பண்ணிட்டான் தப்பு தான். அதுக்காக எம் மவனை நீ வெட்டி விடுவியா?

நீ இப்படியே திருப்பிட்டு இரு. அவனும் மனசு வெறுத்து உன்னை அம்போன்னு அப்படியே விட்டுட்டுப் போகப் போறான். அவன் அப்படிப் போயிட்டா உனக்குத் தான் நட்டம். அவன் தனியா இல்லை இப்ப. புரிஞ்சிக்க…

எனக்கப்புறம் நீ தனியா தவிக்கக் கூடாது, அநாதையா நிக்கக் கூடாதுன்னு தான் இம்புட்டுப் பேசுறேன். உங்கத்தை உன்னை வச்சிப் பார்க்க மாட்டா. அவ சூழ்நிலை அப்படி. உன்னை அவட்ட ஒப்படைச்சிட்டு நான் நிம்மதியா போகவும் வழியில்லை.

சரி உங்கப்பன் வேண்டாம்னா விடு. நான் நல்லா இருக்கும் போதே உனக்குக் கல்யாணத்தைப் பண்ணிட்டுப் போறேன். நல்ல வரன் நாலஞ்சு பார்த்து வச்சிருக்கேன். உனக்கு யாரைப் பிடிக்குதுன்னு சொல்லு. கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு உன் குடும்பத்தைப் பார்த்துட்டுப் போ.”

அப்போது அவர் சொன்னது இவளுக்குப் பிடிக்காமல் போனது. இப்போது இத்தனை பேச, திட்ட, அக்கறை காட்ட அவர் இல்லாமல் போய்விட்டார். மனது வலித்தது.

‘இந்த ஒரு ஜீவனும் எனக்கு இல்லாம இருந்திருந்தா இன்னும் கஷ்டப்பட்டிருப்பேன்.’

நினைத்த மாத்திரத்தில் உடைத்துக்கொண்டு வந்தது. ஓவென்று அலறினாள். அவ்வளவு ஓங்கி ஒலித்த சைந்தவியுடைய அழுகை ஓலம் மதில் சுவர் வரைக்கும் எட்டியது.

சரள்கண்ணன் அறையிலிருந்து பதட்டத்துடன் வேக வேகமாக வெளியே வந்தார்.

வசந்தும் படிகளில் விரைந்து வர, அவனுடைய வேகம் பார்த்து இரண்டு பாதுகாவலர்கள் அவனைச் சூழ்ந்து நடந்தார்கள்.

வசந்தின் நெஞ்சு துடிப்பு அதிகமாகி இருந்தது. சைந்தவியின் அழுகை இவனுக்குப் பதை பதைப்பைக் கொடுத்தது.

தொட்டிலில் நாம் கிடந்தா
சோகம் வந்து சேர்வதில்லை
தோளிலே வாழும் வரை
துன்பமுன்னு ஒண்ணுமில்லை…


 
Status
Not open for further replies.