லாக் டவுன் - கதை திரி

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்


ஆர்த்தி ரவி


அத்தியாயம் 27:


அடுத்த நாள் திங்கட்கிழமை. சைந்தவி அலுவலகத்தினுள் நுழையவும் அவளுக்காக ஒரு செய்தி காத்திருந்தது… அந்த கிளையண்டில் அவளுடைய வேலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு விட்டிருந்தது என்பதாய்.


அதனால் அவள் ஆண்ட்வெர்பில் இருந்து சென்னைக்குத் திரும்பும் நாளும் தள்ளிப் போனது. சைந்தவி மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை. காண்டிராக்ட்படி அவள் இருந்து தான் ஆக வேண்டும்.


கணவனுடன் இச்செய்தியைப் பகிர ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தாள். அப்படியே சென்னை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பேசினாள்.


தான் வருங்காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்புவதாகச் சொல்லி, அதற்கான வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டு வைத்தாள். அங்கு செட்டாகவில்லை என்று சொன்னால் வேறு வேலை தேடிக்கொள்ள முடியும் என்கிற தெம்பை வளர்த்துக் கொண்டாள்.


அவளின் வேலை ஒரு பக்கமிருக்க, சைந்தவி ஒரு மருத்துவரைப் பார்க்கவும் நேரம் குறித்துக் கொண்டாள். நாலாவது நாள் தான் அவளுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது. எடுத்துக் கொண்டாள்.


அன்று அலுவலகத்திற்கு சென்றவள் நான்கு மணியளவில் அந்த மகப்பேறு மருத்துவரைக் காணச் சென்றாள். அவளுடைய கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது.


அதன் பின்னரே சைந்தவிக்குச் சற்று நிம்மதியானது. அதுவரை தான் ஏதாவது கவனக் குறைவாக இருந்துவிட்டதாக மனத்தை உறுத்திக் கொண்டிருந்தது.


அங்கு இரத்தப் பரிசோதனையில் அவளுக்கு இரும்புச்சத்துக் குறைவு எனத் தெரிய, அதற்குத்தக்கன ஒரு ப்ரீநேட்டல் மாத்திரையைப் பரிந்துரை செய்தார் அந்த மகப்பேறு மருத்துவர்.


ஊருக்குச் செல்ல மேலும் ஐந்து வாரங்கள் ஆகும் என்பதால் நாலு வாரங்களில் இன்னொரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டாள். விமானப்பயணம் செய்வது பற்றியும் கேட்டுக் கொண்டாள்.


அவளுக்கு அது செகண்ட் ட்ரைமெஸ்டர் என்பதால் ஒன்றும் பிரச்சனையில்லை என்று விட, மனது ஆசுவாசுமானது. இதெல்லாம் அவளுக்குப் புதுசு தானே?


என்ன தான் உலகம் கை அடக்கத்தில் என்று சொல்லிக் கொண்டாலும், ரியாலிட்டி என்பது வெறும் இன்ஃபர்மேஷன் மட்டுமல்லவே… எமோஷன்ஸ் பல குவிந்துள்ளதாயிற்றே?


சில உணர்வு சம்பந்தப்பட்ட விசயங்கள் என்று வரும் போது தனியாகத் தடுமாறத்தான் செய்தாள்.


அதிலும் இன்று மருத்துவமனையில் பேபியை ஸ்கேனில் காட்டிய நேரம் பிரித்தறிய முடியாத ஓர் உணர்வு பந்து உருண்டு கொண்டிருந்தது. குழந்தையின் அந்த லப்டப் எதையோ உள்ளுக்குள் கடத்தியது. அதில் ஏற்பட்ட ஒரு சிலிர்ப்பு உடல் முழுவதும் வியாபித்தது.


அந்தக்குட்டி குட்டிப்படங்களுடன் வீட்டிற்கு வந்தவள் அப்படியொரு மோனநிலையிலே உட்கார்ந்து விட்டாள்!


உடம்பு வேறு அத்தனை அசதியாக இருந்தது. கூடவே வசந்திடம் பேச வேண்டும் என்கிற நினைவு. இருந்தாலும் அவற்றையும் தாண்டி வேறொரு உணர்வு அவளை ஆட்கொண்டது.


காலைத் தூக்கி சென்டர் டேபிளில் வைத்துப் பின்னுக்குச் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். சற்று நேரம் யோசனையிலேயே இருந்தாள். பின்னர் மொபைலில் பழைய புகைப்படங்களைத் தேடி எடுத்துப் பார்க்க, அம்மா மதுமிதாவுடன் அவளிருந்த படங்கள்…


வயிற்றில் கை வைத்தபடி அப்படங்களை வெறித்தாள். கூடவே அப்பாவின் படங்களும் நிறைய இருந்தன.


இவளை ஏந்தியபடி அப்பா… இவள் கை பிடித்துக் கடற்கரையில் நடக்கும் அப்பா… முதல் நாள் பள்ளியில் விடும் அப்பா அம்மா… தர்மபுரி வந்த பிறகு எடுத்த பிறந்தநாள் படங்களில் அப்பாவுடன்… அப்படங்களில் இருவரும் சிரித்துக் கொண்டிருந்தாலும், கண்களில் ஒரு சோகம் தெரியவே செய்தது. அம்மா இல்லாமல் அவர்கள் கொண்டாடிய முதல் பிறந்தநாள் அது!


மூவரும் குடும்பமாக இருந்ததில் பார்வை நிலைத்தது… அவளுடைய விரல்கள் நிழலுருவங்களை வருடிக்கொண்டே இருக்க, விழிகள் தன்னைப் போல் கலங்கின.


ஓர் உறவை முழுவதாக வெட்டி விடுவது சாத்தியமா? கட்டையில் ஏறிய பின்னரும் எந்த உறவும் செத்துப் போவதில்லை. உயிர் தான் போகும். உறவு விடுவதில்லை. இது தான் ஒரு பிறப்பின் நியதி!


தன்னிடமிருந்து பெற்றவரை விலக்கி வைக்கத்தான் அவளால் முடிந்தது. அதுவும் எப்படி? அவரை வெறுத்து அல்ல… சகிக்க முடியாமல்…


‘என்னால் என்னைப் பார்த்துக்க முடியும்… நீ வேண்டாம் போ!’ என்கிற எண்ணத்தைக் கொண்டு… அவ்வளவு வைராக்கியம் அவள் மனதளவில்!


இப்போதும் அவரை மறக்கவில்லை. இனியும் மறக்க முடியும் என்றும் தோன்றவில்லை. தனக்குள் ஒரு மகவு என்று தெரியவும் பெற்றோரைத் தேடியது மனது!


உடன் இல்லாதவர்களுக்கு எங்கே போக? இவள் ஒரே ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள் போதும்… அப்பா உடனே பேசுவார். பறந்து கூட அடுத்த விமானத்திலேயே வந்திறங்கக்கூடும். மகளைப் பற்றி வசந்திடமோ சூரியிடமோ விசாரித்துக் கொண்டு தானே இருக்கிறார்?


வசந்த் அவரிடம் அதிகம் வைத்துக் கொள்வதில்லை என்றாலும், அவசியத்திற்கு பேசுவது இவளுக்குமே தெரியும்.


எத்தனை நினைத்து இனி என்ன ஆகப் போகுது? மனத்திற்கு சடவு தான் மிச்சம்.


சைந்தவி பல்வேறு சிந்தனைகளுடன் ஒன்றி இருக்கலாம்… ஆனால் அந்த இன்னொரு ஜீவன் சும்மா இருக்குமா?


வயிற்றிலிருந்து, “என்னைக் கொஞ்சம் கவனிம்மா” என்று சொல்வது போல் சுள்ளெனப் பசிக்கவும் அவளுடைய சிந்தனை கலைந்தது. வயிற்றில் கை வைத்து மெல்லிய வருடலில் அதனை சாந்தப்படுத்த முனைந்தாள்.


பின்னரே தன் யோசனையைவிட்டு சைந்தவியும் உணவுக்கு என்ன வழி எனப் பார்க்கப் போனாள்.


இந்தியாவில் நள்ளிரவைத் தொடும் நேரம் வசந்த் மனைவியை அழைத்துப் பேசினான்.


“என்னாசும்மா ஏன் மெசேஜ் பண்ணலை? ஃபோன் காலும் வரலை. என் வேலை இப்போ தான் முடிஞ்சது… வீட்டுக்குப் போய்க்கிட்டிருக்கேன். உடம்புக்கு ஒன்னும் இல்லியே? டின்னர் சாப்பிட்டியா? இன்னைக்கி டாக்டர் செக் அப்ல என்ன சொன்னாங்க? கன்பர்ம்ட்? ஆல் ஓகே?”


“எஸ் கன்பர்ம்ட் ப்ரெக்நென்ஸி தான்னு சொல்லிட்டாங்க. ஐயர்ன் லெவல் குறைவா இருக்காம். ப்ரீநேட்டல் டேப்லெட்ஸ் அதுக்குத் தகுந்த மாதிரி சாப்பிடணுமாம். மற்றபடி எல்லாம் குட். ஸ்கேன் பண்ணிப் பார்த்ததிலே பேபி ஃபார்மேஷன், ஹார்ட் பீட் எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க.


ஈவ்னிங் வீட்டுக்கு வந்தப்போ எனக்கு ரொம்ப டயர்டா இருந்திச்சு. அதான் உன்னைக் கூப்பிடலை. சாப்பிட்டேன் டா. நீ என்ன இவ்வளவு நேரம் ஆகி வீட்டுக்குக் கிளம்பியிருக்க? சாப்பிட்டியா வசந்த்?”


“ஓஹ்… இப்ப டயர்ட்நெஸ் போயிடுச்சா? எனக்கு இங்க ஹோட்டல் தாஜ்ல ஒரு மீட். அங்கேயே சாப்பாடும் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. டின்னர் புஃப்பே. நீ என்ன சாப்பிட்ட?”


“ம்ம் கொஞ்சம் பரவாயில்லை. சாதமும் பருப்பும் வச்சி சாப்பிட்டேன். ஹ்ம் நீ என்ஜாய் பண்ணு. மதுரை சாப்பாடு வேற. ருசிக்குச் சொல்லவா வேணும்!”


“நான் ருசியா சாப்பிடறது இருக்கட்டும். நீ என்ன வெறும் பருப்பு மட்டுமா வச்சி சாப்பிட்ட? இரண்டு முட்டையோ ஒரு காயோ வச்சி சேர்த்துச் சாப்பிடறதுக்கு என்ன?” அக்கறையில் அங்கிருந்து வசந்த் பொரிய…


“ஏன் கேட்க மாட்ட… வா நீ! இங்க வந்து எனக்குச் சமைச்சுப் போடு!” அதைப் பிடித்தே அவனை அதிகாரம் செய்தாள்.


“என் சமையல் கேவலமா இருக்கப் போகுது. பரவாயில்லையா?” கிண்டலாக அவன் கேட்க…


“நான் பரவாயில்லைன்னு சொன்னா அடுத்த பிளைட் ஏறி வர்ற ஆள் தானே நீ?” பதிலுக்கு இவள் நக்கலாகக் கேட்டாள். அவனால் அப்படி வர முடியாது என்று இவளுக்குத் தெரியும் தானே?


“எனக்கு ஒரு வெந்நீர் கூட வச்சிப் பழக்கமில்லைடி. எங்கிருந்து உனக்குச் சமைச்சுப் போட?” பாவம் போல் குரலை இறக்கிக் கேட்டான்.


உண்மையும் அது தான். வேலைக்குச் சேரும் முன்னர் டிரெயினிங்கில் இருந்த மாதங்களில் ஏதோ கையைச் சுட்டுக்கிட்ட அனுபவம் மட்டும் தான் வசந்திற்கு. மற்றபடி அதற்கான அவசியம் அவனுக்கு எங்கே?


“வெந்நீர் வைக்கத் தெரியாதுன்னு சும்மா கதை சொல்லாத. சோறு கூட பொங்கத் தெரியாதுன்னு சொல்லு ஒத்துக்கிறேன்.”


அவன் அந்தப்பக்கம் சிரித்தான் மனைவியின் கடுப்பைக் கொட்டிக்கொண்டு.


“மச்சக்காரன் டா நீ! உன் அம்மே… செஃப் சதீஷ்… இப்ப யாரு சமைக்கிறான்னு சொன்ன? ஆங் காரைக்குடியில் இருந்து வந்து இருக்கிற புது குக்! செம போ! நீயெல்லாம் நான் ஆக்கித் திங்கிறதைப் பற்றிப் பேசுன… ***!” அவனைக் கெட்ட வார்த்தையால் வைதாள்.


“நான் உனக்காகப் பேசினேன் பாரு… போடி! ஒரு அக்கறையிலே சொன்னா சீரியஸா கேட்டு நடப்பியா… வம்புக்காகவே சும்மா பொங்கிக்கிட்டு! என்னை நீ என்ன டாஷுன்னு வேணும்னாலும் சொல்லித் திட்டிக்கோ. பட் ஒழுங்கா சாப்பிடு. சரியா?”


“அதானே என் திட்டெல்லாம் எந்த மூலைக்கு? ஓகே ஓகே ஓகே நீ சொல்லுற மாதிரி வச்சி சாப்பிடுறேன். இப்ப ஆளை விடு!” சிடு சிடுப்பாகச் சொன்னாள்.


அவளின் சிடு சிடுப்பை வசந்த் கண்டு கொள்ளாமல் அவளுக்கு எடுத்துச் சொல்வது கடமை என்பது போல் தொடர்ந்தான்.


“இங்க வந்ததும் உன் டயட்ல மீட் எல்லாம் ரெகுலரா சேர்த்துத் தரச் சொல்றேன். உன்னாலே அங்க என்ன சாப்பிட முடியுதோ சாப்பிடு. சாலட், பழங்கள் வாங்கி வச்சிக்கோ. என் மனசெல்லாம் உன்னைப் பற்றிய நினைப்பு தான். நான் வேலையிலே இருக்கும் போது உன்னைக் கூப்பிட்டு விசாரிச்சிட்டே இருக்க முடியாது. ப்ளீஸ் உன்னை டேக் கேர் பண்ணிக்கோடி!”


கணவனின் கவலையும் அக்கறையும் சைந்தவியைத் தொட, சில நிமிடச் சண்டையை அப்படியே நிறுத்திக் கொண்டாள்.


“நான் பார்த்துப்பேன் வசந்த். நீ கவலைப்படாம உன் வேலையைப் பாருடா. இன்னைக்கு ஏதோ அலுப்பு. உன்னைப் பிடிச்சிக் கத்திட்டேன். சாரி!”


மலையிறங்கி வந்தவளைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டான் வசந்த். அப்படியே, “உன் சாரி எல்லாத்தையும் சேர்த்து வச்சி இங்க கொண்டு வா. நான் வேற விதத்துல அதை எடுத்துக்கிறேன் பொண்டாட்டி! புரிஞ்சதா?” எனவும்,


“உனக்குப் பொண்டாட்டியா இருக்கிறவளுக்கு இது கூட புரியாதா?” அவள் பதில் சொன்ன மாடுலேஷனில் சத்தமாகச் சிரித்தான்.


“பார்த்து நடு ராத்திரில தனியா சிரிக்கிற!” அவள் வார்னிங் வைக்க…


“நான் எங்கிட்டுத் தனியா சிரிக்க… என் கூட எந்நேரமும் ஒரு ராட்சஷி இருக்கால்ல!” அவளுக்கு கௌண்டர் கொடுத்தான்.


“உன்னை… திமிர்டா உனக்கு!”


“ஒரு திமிர் பிடிச்சவளைக் காத்திருந்து கட்டியிருக்கேன்ல. அப்ப அவ திமிர் எனக்கும் ஒட்டியிருக்காது?”


“திமிர் பிடிச்சவள்னு தெரிஞ்சதில்ல? அப்புறமும் ஏன் விடாம வந்து கட்டிக்கிட்ட?”


“கட்டிக்கிட்டு ஒட்டிக்கத்தான்… ஒட்டிக்கிட்டுக் கொஞ்சி…”


“ச்சீ நிறுத்து!” திட்டினாலும் முகம் சிவந்தவளை இரசனையுடன் உள்வாங்கிக் கொண்டான்.


“சைந்தவி நிஜமா டயர்டா இருந்ததினாலே என்னைக் கூப்பிடலையா? இல்லை வேற ஏதாவது காரணமா?” அவ்வளவு நேரமிருந்த விளையாட்டும்‍ கேலியும் மறைந்து ஆழ்ந்த குரலில் வசந்த் அவளை ஆதுரமாக விசாரிக்க…


கணவனுடைய பரிவில் சைந்தவி நெகிழ்ந்து போனாள். தன்னைக் கண்டு கொண்டானே? கண்கள் மின்ன அவனையே பார்த்தாள். புறங்கையால் இரண்டையும் துடைத்துக் கொண்டாள்.


“ஓய்… எதுக்கு இப்ப அழகான அந்த ரெண்டு திராட்சையை இந்தப் பாடுபடுத்திற? அதுங்க என்னை மட்டும் பார்த்தா போதும்! சும்மா சும்மா அதுங்களைக் கசக்கிட்டு இருக்காத!” கண்ணடித்துச் சொன்னவனைப் பார்த்து முறுவலித்தாள் சைந்தவி.


“ம்ம் இது சரி. இப்படியே இரு. இது நம்ம வாழ்க்கை சிந்தும்மா. நல்லாப் போகும்னு நம்பிக்கை வைடி. பழசை விட்டுடு. அதை நினைச்சு மனசைப் போட்டு அலட்டிக்கிற. எதுக்கு?


நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியாதாடி? உனக்குன்னு நா ஒருத்தன் இருக்கேன்னு அடிக்கடி ஞாபகப்படுத்தணுமா என்ன? இங்க உனக்கு அம்மே அப்பாவும் இருக்காங்க. வேற என்ன… யாரு வேணும்?


உனக்கு அப்பப்ப ஒரு பயம் வந்திடுது. இல்லே?” யோசனையுடன் கேட்டான். அவளிடம் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவனுக்கு ஓர் உந்துதல்!


“…”


அவள் பதில் சொல்ல முடியாத ஒரு தவிப்புடன் அவனைப் பார்க்க… பெருமூச்சுடன் தான் சொல்ல நினைப்பதை அப்படியே மனம் விட்டுப் பேசினான்.


“உன் பயம் ஏக்கம் தவிப்பு எல்லாம் உன் அப்பான்னா… அது க்ளோஸ்ட் சேப்டர். அவர் விசயத்திலே நீ என்ன சொல்றியோ அதை உனக்காக நான் செஞ்சு தர்றேன். அவர் கூட உறவாட பிடிக்கலைன்னு ஒதுங்கிட்ட. சரின்னேன். இப்ப பார்க்கணும்னு தோணுதா சொல்லு… இட் இஸ் பாஸிபில்.


இல்லை உன் அப்பாவைக் கொண்டு உன் பயம் என் மேலேயா சொல்லு? அது தேவையில்லாத ஆணி… புரிஞ்சிக்கோ!” கடைசி வரியைச் சொல்லும் போது ஓர் இயலாமை மற்றும் கோபம் அவனிடம்.


“நா உன் கிட்ட சொன்னேனா எனக்குப் பயமா இருக்கு… ஏக்கமா இருக்கு… நான் இப்படித் தவிக்கிறேன்னு?” வெடுக்கென அவள் கேட்டாள். ஏனோ இந்த டாபிக் வந்தாலே அவளுக்குப் பொறுமையோ தன்மையோ நழுவி விடுகிறது.


“சும்மா சும்மா கத்திட்டு இருக்காத. எனக்குத் தெரியும்டி என் பொண்டாட்டி எப்ப என்ன நினைப்பான்னு!” அவனும் அப்படியே விடவில்லை. சில விசயங்களை அப்போதே பேசித் தீர்த்துக் கொள்வதே சிறப்பு என்று நினைத்தான்.


அவளோ, “இதுக்கும் படிச்சிருக்கியா நீ? ஐ.ஏ.எஸ் மாதிரி ஐ.டபில்யூ.எஸ்.?” எனக் கிண்டலாகக் கேட்டாள்.


முதலில்… “அதென்ன ஐ.டபில்யூ.எஸ்.?” என்று புருவம் சுறுங்க சைந்தவியைப் பார்த்தான்.


ஒன்றிரண்டு வினாடிகளில் அவள் சொன்னதைப் புரிந்தவனாக, “உதைக்கணும்டி உன்னை! இந்தியன் வைஃப் சர்வீஸா? இதை எல்லாமா புக் போட்டுப் படிப்பாங்க? ஃபீல்ட் ஒர்க் அண்ட் பிராக்டிகல்ஸ் தான் இதுக்கு தி பெஸ்ட்! தியரி எல்லாம் எந்த டாஷுக்கு பத்தும்?” எனச் சொல்லி அவன் ஒரு மாதிரி மோகப் பார்வை கொண்டு உதடுகளில் ஒரு சிரிப்பை விரித்தான்.


அவளுடைய உடம்பில் இளமைத் தழும்பல்… உயிர் வரை எட்டி இம்சையைக் கூட்ட… அதை அவனுக்குக் காட்டக்கூடாது என உடனே வேறு பக்கமாக முகத்தைத் திருப்பியவள், “ஐய்ய…” ஒரு சுழிப்புடன் தலையில் அடித்துக் கொண்டாள்.


“ஏய் என்னடி?”


“கிடைக்கிற கேப்பில எல்லாம் நீ நூல் விடுவன்னு தெரிஞ்சும் வாய் விட்டேன் பாரு!” தன்னையே நொந்து கொள்ள,


“ஓய் உனக்கு டிரெயினிங் பத்தலைடி.” என வசந்த் சிரித்தான்.


“உன்னை மாதிரி ஐ.ஏ.எஸ். மூளையா எனக்கு?”


“இதுக்குப் போய் என் ஐ.ஏ.எஸ். மூளை உன் ஐ.டி. மூளை எல்லாம் தேவையா? இந்த டிரெயினிங் *** …” அவன் கணவன் பேச்சைத் தன் மனைவியிடம் வெக்கமில்லாமல் பேச… அந்தப்பக்கம் அதைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்குத் தான் வெக்கம் வந்து தொலைத்தது!


முகம் சிவந்து போயிருந்தவளை அப்படியே அள்ளிக்கொள்ள வேண்டும் போல் கைகள் பர பரத்தன வசந்திற்கு… இருவருமே காதலில் கசிந்துருகிய நிமிடமது!


தன்னை மீட்டெடுத்தவன் அவளிடம் சீரியஸ் குரலில் சொன்னான்…


“சைந்தவி உன் கிட்ட இதைச் சொல்லணும்னு தோணுது.”


“என்னடா சொல்லணும்?”


“இப்ப நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ. ஐ வில் நாட் ரிபீட் திஸ் அகெயின்!”


“பீடிகை பலமா இருக்கே… ம்ம் சொல்லு வசந்த்.” அக்கணம் விளையாட்டை விட்டு அவனைக் கூர்ந்து பார்த்தாள்.


“நான் ஒரு நல்ல அப்பாவா இருப்பேனான்னு எந்தக் காலத்திலேயும் சந்தேகப் பட்டுடாத! நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா இருந்து தான் நம்ம குழந்தைகளை வளர்க்கப் போறோம். அவங்க வளர்ந்ததுக்கு அப்புறமாவும் நம்ம சேர்ந்து இருக்கத்தான் போறோம்.


இனி எத்தனை குழந்தைங்க பெத்துக்கப் போறேங்கிறது உன் கையிலே தான் இருக்கு. ஒன்னா ரெண்டா… எதுவும் நீ உடம்பை நல்லாப் பார்த்துக்கிட்டா தான் ஆரோக்கியமா பெத்துக்க முடியும் சைந்தவி. குழந்தையை ஹெல்தியா பெத்துக் கொடு. நீ நான் நம்ம பசங்க… இதை மட்டும் மனசிலே வச்சிக்கோ.


எனக்குத் தெரியும் நீ இன்னைக்கு டாக்டர் கிட்ட போயிட்டு வந்ததில் ரொம்ப எமோஷனல் ஆகியிருக்க. சரியா?”


“ம்ம்… எப்படியோ என் மூட் உனக்கு ரீச் ஆயிடுது!” புன்னகைத்தாள் முதல் பிறையளவில்.


“ரொம்ப சிம்பிள்… நீ டயர்ட் மட்டும்னா கண்டிப்பா எனக்கு மெசேஜ் பண்ணியிருப்ப. என் மாமனார் மாமியாரை நினைச்சிட்டு இருந்திருப்ப. ரைட்?


மனசை நிம்மதியா வச்சிக்க. நீ எந்தளவு சந்தோஷமா உன்னை வச்சிருக்கியோ அந்தளவு நம்ம பேபியும் ஆரோக்கியமா வளரும். நான் வேற இங்க இருக்கேன்… உன்னை நம்பி தன்னந்தனியா. அதாவது உன் மண்டைல இருக்கா?”


“ஏய் சந்தடி சாக்குல என் மேல் மண்டை காலி போல பேசிட்டிருக்க?” நேரில் அவன் இருந்திருந்தால் கண்டிப்பாகக் கடித்து வைத்திருப்பாள் என்று அவள் செய்கையால் கண்டு கொண்டான்.


“ஹஹ்ஹ ஹா… கண்டுபிடிச்சிட்டா கள்ளி. ஐ லவ் யூ டி! வில் கீப் லவ்விங் யூ மோர் அண்ட் மோர் சிந்தும்மா!”


“உஸ்… ரொம்ப பேசி களைச்சிட்டார் என் ஹஸ்… இந்தா பிடி ஒரு ஃப்ளையிங் கிஸ்! இந்த ஐ லவ் யூ எல்லாம் நான் சொல்றதில்லை!” காற்றில் இவள் ஊதிய முத்தத்தை வசந்த் எட்டிப் பிடிப்பதைப் போன்று பாவனை செய்ய, அந்தப்பக்கம் சைந்தவி கலகலத்துச் சிரித்தாள்.


“ஐ லவ் யூவை நீயே வச்சிக்க. எனக்கு உன் முத்தங்கள் மதி (போதும்)!” அவளிடம் சொன்னவன், தனக்குள்ளே, “நீ என்னை லவ் பண்றடி! எந்தளவுன்னு உனக்குப் புரியலை. நீ ஓபனா சொல்லாட்டியும் நம்ம ரெண்டு பேருக்குமே உன் லவ்வை உணர முடியுதே!” எனச் சொல்லி மந்தகாசமாய்ச் சிரித்தான்.


அதைப் பார்க்கப் பார்க்க அவ்வளவு வசீகரமாய் இருந்தது!