லாக் டவுன் - கதை திரி

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்

ஆர்த்தி ரவி

அத்தியாயம் 08:

சைந்தவி தங்கியிருக்கும் பெண்கள் விடுதி நிரம்பப் பாதுகாப்பானது. வெளியாட்கள் யாரும் தங்கும் அறைகளின் பக்கம் வர அனுமதியில்லை. பகலில் பழுது பார்க்க பிளம்பர், எலக்ட்ரிசியன் இப்படி யாராவது வருவதுண்டு.

ஹாஸ்டல் வார்டன் மிகவும் கண்டிப்பான பெண்மணி என்பதை அங்கு வேலையில் இருப்பவர்களும் சரி, வெளியே இருந்து வேலைக்காக வருபவர்களும் சரி அறிந்ததால் மரியாதையுடன் நடந்து கொண்டார்கள்.

‘இந்த ஹாஸ்டல் ரொம்ப சேஃப் தான். இருந்தாலும் எப்பவும் அப்படியே இருக்கும்னு நினைக்க முடியுமா? திடீர்னு ஏதாவது சம்பவம் நடக்கலாமில்ல…’

இதுவரை பயந்து கொள்ளத் தேவையின்றி இருந்திருக்கலாம். எதற்கும் முதல் முறை உண்டல்லவா என்று நினைத்து சைந்தவி பயந்து போனாள்.

சைந்தவி முதலில் சென்னைக்குப் படிக்க வந்த போதும், மகள் என்ன படிக்க விரும்புகிறாள் என்று அவளுடைய விருப்பத்தைக் கேட்டு அறிந்து கொண்ட சரள்கண்ணன், அதற்கான கல்லூரிகளைத் தேர்வு செய்யும் முன்னர், கல்லூரியின் தங்கும் விடுதிகளின் சுத்தம்; சுகாதாரம்; பாதுகாப்பு என்று அனைத்தையும் அலசி ஆராய்ந்தார். அதன் பின்னரே எந்தக் கல்லூரியில் சேர்த்து விடலாம் என்று முடிவு செய்து சேர்த்துவிட்டார்.

சைந்தவி நல்ல முறையில் படித்து முடித்து வேலையை கேம்பஸ் தேர்வில் வாங்கினாள் என்றாலும், எங்கே தங்க வேண்டும் என்கிற முடிவை அவரின் கைகளிலேயே விட்டுவிட்டாள். அவரும் அதில் கண்டிப்புடன் இருந்தார்.

சைந்தவிக்கு, அப்பா தன்னைப் பாதுகாப்பான இடத்தில் தான் விட்டிருக்கிறார் என்பதில் எப்போதும் எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை.

நல்ல அரவணைப்பை அப்பத்தாவிடம் உணராத போதும், அங்கே பாதுகாப்பிற்குப் பஞ்சம் இருந்தது இல்லை. அதைத் தன்னுடைய அந்த ரெண்டுங்கெட்டான் வயதிலே உணர்ந்திருந்தாள் சைந்தவி.

சென்னைக்கு வந்ததிலிருந்து சைந்தவிக்கு இதுவரை பாதுகாப்பு பற்றிய பயம் அண்டியதில்லை. இந்த ஹாஸ்டலில் அவளுடைய பிரைவசிக்கு பாதிப்பும் இருக்கவில்லை. இதுவரை இரவில் இப்படி வந்து யாரும் கதவைத் தட்டிப் பயமுறுத்தியதும் இல்லை.

யோசனையும் சிறு கலவரமுமாகக் கதவருகே சென்றாள் சைந்தவி. மனம் என்னும் குரங்கு வேறு, இந்தத் தூக்கம் கெட்ட வேளையிலும் சொடுக்கிடும் வினாடிகளிலேயே தத்தித் தாவி பலவற்றையும் நினைத்துக் கொண்டிருந்தது.

சைந்தவி இந்தளவு யோசித்துப் பயந்து கொள்ளக் காரணம் இருந்தது.

“இப்ப கொஞ்ச நாளா அந்த நேபாளி வாட்ச்மேனை காணோம்டி.”

“உனக்குத் தெரியாதா விசயம். அந்த ஆளு வேலையைவிட்டுப் போயி ஒரு மாசத்துக்கு மேலேயே ஆகுது. ஒரு வாட்ச்மேனே போதும்னு மேடமின் முடிவாம்.”

“அச்சச்சோ! அப்ப இந்த ராமு தாத்தா மட்டும் தான் இருக்காராடீ? இவருக்கு ராத்திரியான, நம்மளைக் கூடச் சரியா அடையாளம் தெரியாதே!”

தற்செயலாக சென்ற வாரம் டைனிங் ஹாலில் காதில் விழுந்திருந்த உரையாடல்கள் எல்லாம் அப்போது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது ஞாபகத்தில் வந்து சைந்தவியைக் கலவரப்படுத்தியது.

“யாரு?”

கதவிற்கு ஓரடி பின்னால் நின்று கொண்டே கேட்டாள். கரகரத்துப் போய் மெதுவாக வெளி வந்த குரல் கதவைத் தாண்டியதோ இல்லையோ. பதிலில்லாமல் கதவு மீண்டும் தட்டப்பட்டது.

அவசரமாகச் சென்று மொபைலை துழாவி எடுத்துக்கொண்டாள். அதைக் கையில் பிடித்தபடியே மின் விளக்கைப் போட்டுவிட்டு, குரலை உயர்த்தி யாரெனக் கேட்கும் முன்னர்,

“யக்கா… யக்கா” என்று கிசுகிசுப்பாக ஒலித்தது ஒரு பெண் குரல்.

சைந்தவிக்கு அந்தக் குரல் பிடிபடவில்லை. தூக்கக் கலக்கம் மட்டுமில்லை, யோசனையால் விளைந்த பயமும் சிந்தனையைத் தடை செய்திருந்தது. குளிரூட்டப்பட்ட அறையிலும் வேர்வை பிசுபிசுக்கத் தொடங்கியது.

இந்த நேரங்கெட்ட நேரத்தில் என்ன இப்படியொரு தொந்தரவு? ஒரு வினாடியில் எரிச்சலாக, “யாருன்னு பேரு சொல்லுங்க!” சற்றுக் குரலை உயர்த்தியே கேட்டாள்.

“யக்கா முல்லை வந்திருக்கேன். கதவ தொறக்கா.”

ஆசுவாசம் பெற்றவளாகக் கதவருகில் சென்று தாழை நீக்கினாள். கொஞ்சமாகத் திறந்து, தலையை மட்டும் வெளியே நீட்டி, “என்ன முல்லை இந்நேரத்திலே வந்து நிக்கிறே?” கேட்டாள்.

“அப்படிகா ஒத்துக்கா…”

பதட்டம் தெரிந்தது முல்லையிடம். கதவை விரியத் திறந்து அவள் உள்ளே வர வழிவிட்டாள் சைந்தவி. முல்லை இவளைக் கடக்கும் போது மூக்கைத் தொட்டும் தொடாமல் வீசிய நெடியும், அவளுடைய பின்புறம் உடையில் தெரிந்த உதிரமும் சைந்தவிக்கு நிலைமையைச் சொல்லாமலேயே உணர்த்தின.

கதவைத் தாழ் போட்டுவிட்டு அலமாரியை நோக்கிப் போனாள்.

“உன்னாண்ட கேர்பிரீ இல்லேன்னா வேற பேட் இருக்கும்னு நம்பிக்கை வச்சிக்கிணு ஓடியாந்தேன். இருக்கில்லக்கா?”

இருக்குமா, இருக்காதா என்கிற கவலையில் கலக்கமாகக் கேட்டவளுக்கு, தூக்கம் கலைந்து போன சோர்ந்த புன்னகையுடன் ஆமாம் என்பதாகத் தலையசைத்து, “விஸ்பர் ஓகே வா முல்லை?” கேட்டாள்.

“குடுக்கா குடுக்கா… நாள் மூச்சுடும் வேலைக்கீது. ராவுல அக்கடான்னு படுத்தா இது வேற நேரங்கெட்ட நேரத்தில வந்துக்கிணு… ச்சைய் ஒரே பேஜாராக்கீது!”

“இது வர்றது பேஜாரா உனக்கு? வரலைன்னா தான் பேஜாரு. டைம்மோட வந்ததுக்கு எதுக்கு வருத்தப்படுறே? இந்தா பிடி. இங்கேயே போய் மாத்திக்க.”

முல்லைக்கு, சேனிடரி நாப்கினுடன் தன்னுடைய நைட்டி ஒன்றையும் தந்து, அறைக்குள்ளே அமைந்திருக்கும் குளியலறையைக் கை காட்டினாள் சைந்தவி. சேனிடரி நாப்கினை பெற்றுக் கொண்ட முல்லை நைட்டியை வாங்கிக் கொள்ள மறுத்தாள்.

“இன்னாத்துக்கு நைட்டீ? வேணா வேணா. இத்த மட்டும் தா. மென்சஸ் டேட்டுக்கு ஆறு நாளு இருக்கங்காட்டி வந்து தொலைச்ச எரிச்சல்க்கா. நீ ராங்கா எடுத்துக்காத. நாள மறுநாளுக்கு மெடிக்கலாண்ட போயி வாங்கியாற இருந்தேன்.”

பேசிக்கொண்டே குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.

“இந்த அர்த்த ராத்திரில அதே நைட்டியை அலசிட்டு ஈரத்தோட படுக்கப் போறியா? பதில் பேசாம இந்த நைட்டியை வாங்கிக்க. இதைப் போட்டுட்டு, உன்னதை இந்த பேப்பர்ல சுத்தி வைச்சிடு முல்லை. இப்போ வெளியே போகாத. இங்கேயே படுத்துத் தூங்கு. விடியக்காலைலே எந்திரிச்சு போய் உன் வேலையைப் பாரு.”

தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்த முல்லைக்கு ஒரு விரிப்பையும் சின்னத் தலையணையையும் கொடுத்தாள்.

“இந்தப் பேக்கை இங்கே வைக்கிறேன். அஞ்சு நேப்கின் இருக்கு. நாளைக்குப் போதுமில்ல?”

சம்பளப் பணத்தைக் கணக்கிட்டுக் கடைக்குப் போகயிருந்த முல்லைக்குச் சைந்தவியின் முன் யோசனையும் கரிசனமும் கண்களைக் கரிக்க, “டாங்க்ஸ்க்கா... ரொம்ப டாங்க்ஸ்க்கா!” மனதார நன்றி சொல்லிவிட்டுப் படுத்துக் கொண்டாள்.

தரையில் படுத்திருந்த முல்லையைக் கருதி, மிதமாக இயங்கிய குளிரூட்டியை அணைத்துவிட்டு, தோட்டத்துப் பக்க ஜன்னல் ஒன்றைப் பாதியாகத் திறந்து வைத்தாள் சைந்தவி.

பின்னர் காற்றாடியைச் சற்று அதிகப்படுத்திவிட்டு, தானும் படுத்துக் கொண்டாள். இரவு தூக்கம் கெட்டதால் மறுநாள் வழக்கத்தைவிட தாமதமாகவே வேலைக்குச் செல்லலாம் என்று எண்ணிக் கொண்டே மொபைலை மியூட்டில் வைத்தாள் சைந்தவி.

கண்களை மூடிப் படுத்ததும் முல்லை கேட்டாள்…

“இம்மாம் ராத்திரில வந்து கதவ தட்டங்காட்டி, நீ பேயின்னு நினைச்சி பயந்துக்கிணியாக்கா?”

முல்லை என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தும் வேண்டும் என்றே சைவி பதிலுக்குக் கேட்டாள்…

“என்னது நானு பேயா?”

அவளுக்குச் சிரிப்புடன் பதிலைச் சொன்னாள் முல்லை...

“இல்லக்கா… உன்னைப் பேயுங்கல. பேய் வந்து கதவ தட்டிக்கிணு நிக்கிதுன்னு நினைச்சித் தயங்கினாங்காட்டிக்க…”

இருட்டிலும் பூத்த முறுவலுடன் சைந்தவி சொன்னாள்…

“பேய் வந்தால் ஏன் கதவைத் தட்டிட்டு வெளியே நிக்கப் போகுது முல்லை? கதவைத் தாண்டி அதுபாட்டுக்கு உள்ளே வரும் போகும்.”

சிரிப்பை அடக்கப் பெரும்பாடாக இருந்தது அவளுக்கு. அவள் சொன்னதில் படக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் முல்லை.

“இன்னாக்கா பயங்காட்ற… மெய்யாலுமே பேயி வருமா? என்னமோ பேயி ஒந்தோஸ்து கணக்கா சொல்லிக்கிணுக்கீற!”

இன்ஸ்டண்ட்டாக வேர்த்து ஊற்றியது முல்லைக்கு. விடி விளக்கொளியில் தெரிந்த அவளுடைய மருண்ட பார்வையும், அவளுடைய குரலில் அப்பிக்கொண்டிருந்த கலவரமும் சைந்தவிக்குத் தப்பவில்லை. முல்லையை நோக்கித் திரும்பிப் படுத்தவள் கலகலத்துச் சிரித்தாள்.

“பயப்படாம தூங்கு முல்லை. அப்படிப் பேய் கீய்னு இங்கே எதுவும் வராது.”

“நீ இப்படிச் சிரிச்சிக்கிணு கெட தப்பி வர்ற பேயும் தலை தெறிக்க ஓடப் போகுது.”

தன்னுடைய ஜோக்குக்கு சைந்தவியுடன் சேர்ந்து சிரித்தாள் முல்லை.

“உனக்குத் தெரிஞ்ச பேய்க்குத் தலை இருக்கோ முல்லை?”

வம்பு வளர்த்தாள் சைந்தவி. இருவருக்கும் பொதுவான புள்ளி இந்த விடுதியைத் தவிர எதுவுமில்லை. இருந்தும், நீண்ட நாட்களாகப் பழகியவர்கள் போல நட்பு வலை பின்னலினுள்ளே அவர்கள் இருவரும்.

எந்தப் பொருத்தமும் இல்லாத இடத்திலும் அன்பு வெளிப்படுகிறது. உறவற்ற உறவான அரவணைப்பும் அக்கறையும் மனித நேயம். பிரியம் வைக்க, மனம் மட்டும் போதும். காலத்துடன் ஒருவரிடம் அன்பு செலுத்த தெரியாவிட்டால் பணம்; கல்வி; தகுதி; உறவு என்று அனைத்துமே அர்த்தமற்றவை.

பெண்கள் இருவரும் கலகலத்துச் சிரித்தபடி இன்னும் சில நிமிடங்களைக் கரைத்துவிட்டே தூக்கத்தைத் தழுவினார்கள். மறுநாள் என்ன வைத்துக்கொண்டு வருகிறது என்பதை அறியாமலேயே சைந்தவி!

இரவில் முல்லையால் தூக்கம் கலைந்து, பின்னரும் நெடு நேரம் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்ததால், காலையில் சைந்தவி, நேரம் எட்டு மணியைத் தொடவிருந்த போது தான் விழித்தாள்.

முல்லை அதிகாலையிலேயே தன்னுடைய கடமையை எண்ணிச் சென்றிருந்தாள் போல். அவள் இரவை அங்கே கழித்த சுவடே இல்லாமல் ஒதுங்கச் செய்துவிட்டுப் போயிருந்தாள்.

சோம்பலாக கண்ணிமைகளைப் பிரித்த சைந்தவிக்கு, என்றைக்கும் இல்லாத நாளாய் இன்று உற்சாகம் குமிழிட்டது.

முல்லையுடன் கழிந்திருந்த சில மணித்துளிகள் தனிமையைப் போக்கியிருந்தது. அட்லீஸ்ட், அந்த மணித்துளியில் சைந்தவிக்கு மனவுளைச்சலைத் தந்து கொண்டிருந்த விசயங்கள் ஓரளவு மறைந்திருந்தன.

அழகிய நாள் என்பது இது தானா? மனத்தின் உணர்வு தானோ சுற்றுப்புறமும்? சைந்தவிக்குள்ளே தோன்றி இருக்கும் குதூகல மனநிலை, சுற்றுப்புறத்தை இரசிக்கச் சொன்னது.

முல்லை, அறையைவிட்டு வெளியே போகும் முன்னர் இரவு திறந்து வைத்த பாதி ஜன்னலையும் மூடிவிட்டுப் போயிருந்தாள். சைந்தவி அந்த ஜன்னலுடன் மற்றொன்றையும் விரியத் திறந்து வைத்து, வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

அந்த நேரத்திலேயே வெயில் சுள்ளென்று முகத்திலடித்தது. கூசும் கண்களைச் சுருக்கி, பார்வையைச் சுழலவிட்டாள். தூரத்துச் சாலையில் தெரிந்த வாகனங்கள் மட்டுமல்ல, மக்களும் சுறுசுறுப்புடன் தெரிந்தார்கள்.

“எங்கே தான் போவாங்களோ இவ்வளவு பரபரப்புடன்?”

வியப்பாகப் புருவங்களை உயர்த்தினாள்.

‘நீயும் தான் நேற்று வரை, பரபரன்னு பறந்திட்டு இருந்த. இன்றைக்கு இப்படி வித்தியாசமா தெரியுற…’

மனது எடுத்துரைத்ததில் அவளுடைய உதடுகளில் முறுவல் பூ மலர்ந்தது. விடுதியின் பின் பக்கம் அமைந்துள்ள பூங்காவில் இருக்கும் சரக்கொன்றை மரப்பூக்கள், தாங்களும் முறுவல் பூத்து இருந்ததில் பூமித்தாய் மஞ்சள் குளித்திருந்தாள்.

ஒரு பாத்தி டேலியாக்களும் மறு பாத்தி ரோஜாக்களும் கமுக்கமாகச் சண்டையிட்டதில் வண்ண வண்ண மலர்வுகள்… பசுமையால் சைந்தவிக்குக் கண்கள் குளிர்ந்து போயின.

வார நாளாக இருப்பினும் தலைக்குக் குளிக்கத் தோன்றியது அவளுக்கு. குளிர்ந்த நீரில் நிதானமாகக் குளித்துவிட்டு, நீர் சொட்டும் கூந்தலைத் துவாலையில் முடிந்தாள். பெரிய கட்டங்களிட்ட மற்றொரு துவாலைக்கு உடலின் செழுமையைத் தாரை வார்த்துவிட்டு, குளியலறையைவிட்டு வெளியே வந்தாள்.

அலமாரியை விரியத் திறந்து வைத்துத் துணிகளைப் பார்வையிட்டாள். புதிதாக வாங்கி வைத்து, சீண்டப்படாமல் கிடந்ததால் சிணுங்கலுடன் ஒதுங்கிப் போயிருந்த அந்த ஆடை அவளுடைய கண்களில் பட்டது.

முத்துக்கள் பளிச்சிட்ட முறுவலுடனேயே துணிகளுக்கிடையே விரல்களை நுழைத்து, அதனை உருவி வெளியே எடுத்தாள்.

வெண் நிற கிராப்ட் பேண்ட். அதன் கால்களின் வெளிப் பக்கவாட்டின் இரு பக்கமும் பச்சை நிற லேஸ் துணியால் தைக்கப்பட்ட பருத்தி அடைப்பட்ட மணிகள்... இராணுவ வீரர்களின் விரைப்பு மாறாத சீர் நிலையில்.

வலது ஆள்காட்டி விரலை மணிகளில் ஓட்டினாள். வினித்துடன் மாலுக்கு சென்றிருந்த போது, ப்ரோகேட் பொடீக்கில் வாங்கியது.

சிவப்பும் பச்சையும் கலந்த பூக்களுடன் கொடி இலைகள் ஓடிய வெண்ணிற டாப்பிற்கு தோதாய் மட்டுமில்லை, அதற்கும் உயர்வாய்!

டாப்பை எடுத்து அணிந்து கொண்டவளுக்கு இவற்றை ஷாப்பிங் செய்த நாளின் ஞாபகக் கிளறல்!

“சைவி அங்க பாரு, அந்த பேண்ட் இதுக்கு ரொம்ப மேட்சாகும்.” இவளிடம் காட்டிக்கொண்டே விற்பனைப் பெண்ணை அழைத்தான் வினித்.

“இந்த கிரீன் பலாஸோவுக்கு பதிலா, அந்த வொயிட் பேண்டை தாங்க. அது… அந்த கிரீன் பால்ஸ் (balls) வச்சிருக்கே… ம்ம் அது தான். அதே தான். எங்க… இங்க கொண்டு வாங்க பார்க்கலாம்.”

“இந்த பேண்ட்டை பாரு சைவி, இந்த டாப்புக்கு ரொம்ப மேட்சாகுதில்ல?”

“ஆமாம் டா. எப்படி இப்படி நல்லா…”

இவள் முடிக்கும் முன்னரே சொன்னான்…

“ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தான்.”

இதமாகச் சிரித்த அச்சிரிப்புடன் வினித், கண்மணிகளுக்குள்ளே வந்து சிரித்தான். அன்றும் இப்படித் தான், இந்தக் குட்டி குட்டித் துணிப்பந்து மணிகளை வருடிக் கொண்டிருந்தாள்.

பச்சை நிற பலாஸோவை மட்டும் மாற்றித் தரச் சொல்லிக் கேட்ட வினித்தை வினோதமாக அளவிட்டபடி அந்தப் பெண், “ஜோடியைப் பிரிக்க முடியாது சார். வேணும்னா ரெண்டு செட்டையும் வாங்கிக்கோங்க. மேடமுக்கு அழகாயிருக்கும்.”, விற்பனை யுக்தியுடன் சொல்லியிருந்தாள்.

எப்படியோ அங்கே அந்தச் சமயம் வந்திருந்த டிசைனரிடமே பேசி, தான் நினைத்ததையே ஜோடி சேர்த்து, பிடிவாதமாக வாங்கி இருந்தான் வினித்.

உடையை அணிந்து முடித்ததும் கண்ணாடி முன்பு நின்று தலையைத் துவட்டியபடியே பேசினாள்.

“உன்னை எப்படி நான் மறக்குறதுடா? மறக்க வேண்டாம் எனக்கு… உள்ளுக்குள்ளே புதைச்சு வச்சுக்கவா?”

அங்கு இல்லாதவனிடம் ஆசையுடன் கேட்டாள்… கண்களில் பூக்க முயன்ற நீர்த் திவலைகளைத் தோற்கடித்து அடக்கியபடியே.

என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே…

தன்னுடைய உயிரின் உயிரானவனின் நினைவில் கரைந்து நின்றாள்.

நேரத்தை உணர்ந்த சைந்தவி பரபரவென்று கிளம்ப ஆரம்பித்தாள். மிதமான ஒப்பனையை முடித்து, நெற்றியில் பொட்டிட்டுக் கொண்டாள். பச்சை நிறத்தில் சூரிய வடிவில் சின்னப் பொட்டு. அதன் மேலே சிறு கீற்றாகத் திருநீரு.

கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தைக் கண்டு மலர்ந்தாள். அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது அந்த உடை. வெண் புறாவோ, பச்சைக்கிளியோ… பளிச்சென்று தெரிந்தாள்.

இன்று கண்டிப்பாக வினித்தைப் பார்க்க வேண்டும், தன்னுடைய சீனியர் மேனேஜரிடம் புது வேலையைப் பற்றிப் பேசிவிட்டு, மனிதவளப் பிரிவில் தெரிவிக்க வேண்டும்.

இந்த வேலையில் இருந்து ரிலீவ் ஆக என்னென்ன மேற்கொள்ள வேண்டுமோ? அன்றைய நாளின் அட்டவணையுடன் புது வேலையைப் பற்றிய சிந்தனையும் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது.

சிந்தனைகளுடனேயே அலுவலகப் பையில் மடிக்கணினி, மொபைல், சார்ஜர் மற்றும் பர்ஸ் என்று சரி பார்த்து எடுத்து வைத்தவள், அறைக் கதவைப் பூட்டிக்கொண்டு நிமிர்ந்த போது அவளைத் தேடிக்கொண்டு ஒரு பெண் வந்தாள்.

“உங்க பேரு சைந்தவியா?”

“ஆமாம்…”

“உங்களைப் பார்க்க ஒருத்தவங்க வந்திருக்காங்க. விசிட்டர் ரூம் முன்னாடி நிக்கிறாங்க.”

“விசிட்டரா? என்னைப் பார்க்க வந்திருக்காங்களா?”

“ஆமாங்க சைந்தவின்னு தான் சொல்லி அனுப்பினாங்க.”

“தாங்க் யூ மா, என்னைத் தேடி வந்து சொன்னதுக்கு!”

வந்திருப்பது யாராக இருக்கும் என்கிற யோசனையுடன் சைந்தவி கீழே வந்தாள். வெளி கேட்டருகில் தான் பார்வையாளர்கள் அறை இருக்கிறது. ஐந்து நிமிட நடைக்கும் மேலேயே இருக்கும் தூரம்.

இவள் நடையைத் துரிதப்படுத்தி அதனை நோக்கிச் செல்ல, தூரத்தில் இருந்தே வந்திருப்பவனைக் கண்டு கொண்டாள்.

‘வினித்!’

சந்தோஷம் தானாக வந்து ஒட்டிக்கொண்டது. ஆனாலும், “ஹாஸ்டலுக்கு வந்து பார்க்கிற அளவுக்கு என்ன விசயம்?” யோசனையுடன் முணுமுணுத்துக் கொண்டே முன்னேறினாள்.

அதே சமயம் வினித்தின் பார்வை வட்டத்திற்குள் சைந்தவியும் வந்திருந்தாள். கூர்மையாகப் பார்த்தபடி வேகமாக அவளருகே வந்திருந்தான்.

“ஆர் யூ ஓகே… ஆர் யூ ஓகே சைவி?”

தன்னுடைய பதட்டத்தை மறைத்தபடி அவசரமாக அவளை ஆராய முற்பட்டான். இமைகள் படபடத்ததில் தேய்த்துவிட்டுக் கொண்டான். வேர்த்துப் போய் நின்றிருந்தவனிடம் பரபரப்பும் தெரிந்தது. ஏற்கெனவே சிவந்த நிறத்தைக் கொண்டவன் மேலும் சிவந்திருந்தான்.

“ஹாய் வினித்! நான் நல்லா இருக்கேன். ஏன் பதட்டப்படுற? என்னாச்சு… இந்த நேரத்திலே வந்திருக்கே, ஆஃபீஸ் போகலை?”

ஆச்சரியம் கலந்த குரலில் கேள்விகளைக் கேட்டவளைக் கோபத்துடன் முறைத்தான்.

“அறிவில்லை உனக்கு?”

குரலை உயர்த்தாமலேயே கோபத்தைக் காட்டினான். அவனுடைய கோபத்தால் பாதித்தவளாக அதே இடத்தில் வேரோடி நின்றிருந்தாள் சைந்தவி.

தன்னை வெறித்தபடி நின்றிருந்தவளை இன்னும் நெருங்கி வந்தவன், தோளோடு சேர்த்து அணைத்து நின்றான். அவளுடைய இதயத்துடிப்பின் வேகத்தை உணர்ந்தவன், பிடியை அழுத்திக்கொடுத்தான்.
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்

ஆர்த்தி ரவி

அத்தியாயம் 09:

சென்னை விமான நிலையத்தின் வெளியே உட்கார்ந்து இருந்தார்கள் சைந்தவி, வினித் மற்றும் அலெக்ஸ். மூவரும் அன்றைய எதிர்பாராத அலைச்சலில் களைத்துப் போயிருந்தார்கள்.

“இப்படி பிளைட் டிலே ஆகும்ன்னு தெரிஞ்சிருந்தா சாப்பிட்டுட்டே வந்திருக்கலாம்.”

சோர்வாகச் சொன்னான் அலெக்ஸ். அலெக்ஸின் பசியை உணர்ந்த வினித், “வாடா, இங்க ஏதாவது சாப்பிட இருக்கும். பார்த்து வாங்கிட்டு வரலாம் வா.” சொல்லியபடி அவனைத் தன்னுடன் கூட்டிப் போனான்.

இரண்டு பேரும் அந்த இடத்திலிருந்து அகன்று செல்வதைப் பார்த்தபடி இருந்த சைந்தவி, ‘நான் நினைச்சது என்ன, இப்போ நடந்துகிட்டு இருக்கிறது என்ன?’ என்கிற சிந்தனையில் இருந்தாள்.

யாரோ இருவர் அவள் பக்கத்தில் நடந்து வர, தன்னுடைய டிராவல் பேக்கை நகர்த்தி வைத்துக் கொண்டவள் சில மணி நேரத்திற்கு முன்னர் நடந்த நிகழ்வுக்ளின் நினைவுகளில் சுழன்றாள்.

‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை…’

இந்தப் பழைய பாடலை யாரும் மறுக்க முடியுமா என்று சைந்தவியின் மனத்தில் ஓடியது.

காலையில் திடீரென வந்து நின்ற வினித்தைப் பார்த்த உடனே அவளுடைய மனது அத்தனை சந்தோஷம் அடைந்திருந்தாலும், ஹாஸ்டல் வரை ஏன் தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்ற ஆராய்ச்சியும், ஒருவிதமான எதிர்பார்ப்பும் அப்போது அவளுக்குள் கூடி இருந்தது.

பெண்கள் தங்கும் விடுதி என்பதாலும், அப்படி என்ன காத்திருக்க முடியாத அவசரம்… தேவையில்லாமல் எதுக்கு விடுதி வரை வருவது? அப்படி என்ன உடனடியான அவசியம் என்று வினித் அங்கெல்லாம் சைந்தவியைப் பார்க்க வருவதே இல்லை.

அவள் யோசனையுடன் அவனைப் பார்க்க, அவனோ பதட்டத்தைக் கொட்டினான்.

“உனக்கு என்ன ஆச்சோ ஏதோன்னு பதறிப் போய் பரபரன்னு கிளம்பி அலெக்ஸையும் பிடிச்சு இழுத்திட்டு உன்னைத் தேடி வந்தால், நீ எந்தப் பாதிப்பும் இல்லாமல் இப்படிப் பளிச்சுன்னு வந்து நிக்கிற.”

“எதுக்குப் பரபரன்னு கிளம்பி வரணும்? ஏன்… என்னாச்சு வினித்?”

தான் வந்த காரணத்தை, ஒரு நிமிடம் கடந்து வினித் அமைதியும் ஆதுரமும் கலந்த குரலில் சொல்லி முடித்தான். அதைக் கேட்டவள் அந்த நேரம் எப்படி உணர்ந்தாள் என்று கேட்டால், உண்மையில் அத்தனை கலவையான உணர்வுகள் அவளை வினாடிகளில் அழுத்தின என்பதே சரியாக இருக்கும். அத்தனை உணர்வுகளின் தாக்கத்திலும் அவளைப் பெரிதும் பாதித்தது ஏமாற்றமே!

“வா போகலாம்…”

வினித் அவளைக் கை பிடித்து வெளியே அழைத்து வந்ததை உணர்ந்தும் எங்கே என்று கூட கேட்கத் தோன்றவில்லை அவளுக்கு. ஹாஸ்டலுக்கு வெளியே பைக்கருகே இவர்களுக்காகக் காத்திருந்தான் அலெக்ஸ்.

அவளை அழைத்துக்கொண்டு நண்பர்கள் இருவரும் அருகே இருந்த ஓர் உணவகத்திற்குச் சென்றார்கள். அலெக்ஸ் உணவத்திற்குள்ளே நுழைய, “எங்களுக்குப் பசிக்குது சைவி. நீ சாப்பிட்டியா?” அவளை நோக்கிக் கேட்டான் வினித்.

“தெரியலை…” என்று பதில் கொடுத்தாள்.

“ஆமாம் இல்லைன்னு சொல்லுறதை விட்டுட்டு இதென்ன பதில் சைவி?” கடிந்தான். அவளுடைய மனநிலையை மனத்தில் கொண்டு வந்து, உடனே, “சாரிமா சைவி! சரி வா சாப்பிட்டுட்டே பேசலாம்.” தன்மையாகப் பேசினான்.

அவளுடைய மனத்தில் என்ன ஓடுகிறது? அடுத்து என்ன செய்வாள்? அவளின் எண்ணங்களைக் கணிக்க முயன்றபடி அலெக்ஸை பின் தொடர்ந்து, சைந்தவியை உணவகத்துக்கு உள்ளே அழைத்துச் சென்றான் வினித்.

அங்கே ஆண்கள் இருவரும் என்ன வரவழைத்தார்கள், தான் சாப்பிட்டது என்ன என்று எதையும் கவனிக்கும் நிலையில் அவளில்லை. அவளுடைய யோசனை ஓரிடத்தில். யோசனையுடனே உணவைத் தொண்டைக்குள் அடைத்தாள்.

வினித்திற்கு அவளுடைய எண்ணப்போக்கு புரிபடவில்லை. அதைப் பற்றிய யோசனையை விட்டுவிட்டு, இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலெக்ஸுடன் பேசிக் கொண்டிருந்தான்.

அவர்களின் பேச்சின் நடுவே இடையிட்ட சைந்தவி, “எனக்கு ஆஃபீஸ்ல வேலை இருக்கு. நான் போகணும்.” என்றாள்.

அதைக் கேட்ட வினித் எரிச்சலானான். “என்ன சொன்ன நீ இப்போ ஆஃபீஸ் போகணுமா? என்ன விளையாடறியா சைவி? எங்களைப் பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு? வெட்டிப் பயலுங்கன்னு நினைச்சியா? எங்களுக்கு ஆஃபீஸ் வேலைன்னு எதுவும் இல்லையா என்ன?” என்று கோபத்துடன் கேட்க, அலெக்ஸ் அவன் கைகளில் தட்டி நிலைப்படுத்தினான்.

கண்களை மூடி ஒரு வினாடி அமைதியாக இருந்தான்.

“இன்னைக்கும் சேர்த்து ஃபோன்லயே லீவ் சொல்லிடு. அங்க போயிட்டு பெர்மிஷன் போட்டுட்டு, அப்புறம் பிளைட் டைம்முக்கு ஏர்போர்ட் போகணும்னா ரிஸ்க். வீணா அலையணுமா ஜர்னி டைம்ல?”

அக்கறையுடன் அவளைப் பார்த்துச் சொன்னான். சைந்தவி எதுவும் சொல்லாமல் மேஜையை வெறித்தபடி இருக்க, நண்பர்கள் இருவருக்கும் அவள் ஏன் தற்போது அலுவலகத்திற்குப் போக நினைக்கிறாள் என்று புரியவில்லை.

தான் சொல்லப் போகும் தகவல் அவளுக்கு எவ்வகை பாதிப்பைத் தரும் என்பதை ஊகிக்க முடியாத நிலையில் தான் அவளைத் தேடி வந்திருந்தான் வினித். ஆனாலும் தன்னுடைய தோழி எந்நிலைமையும் சமாளித்துவிடுவாள் என்கிற நம்பிக்கை இருந்தது.

தகவலை அறிந்தும் அடுத்து என்ன என்பதைப் பற்றிப் பேசாமல், அவள் அலுவலகம் செல்ல வேண்டும் என்றதும் வினித்திற்குச் சட்டெனக் கோபம் வந்துவிட்டது. குழப்பமாக அவளைப் பார்த்தான். அமைதியாக ஒன்றிரண்டு நிமிடங்கள் கடந்தன.

வினித் ஒரு பெருமூச்சுடன் அவளிடம் பேச ஆரம்பித்தான். அவள் இஷ்டப்படி எப்படியும் போகட்டும் என்று விட முடியாதே. சூழ்நிலையை மனத்தில் கொண்டு ஒரு நண்பனாக என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொன்னான்.

“எது எப்படி நடந்திருந்தாலும், நீ உன் கடமையை விட்டுத் தவற மாட்டேன்னு நினைச்சிட்டேன் சைவி. மனசு எல்லோருக்கும் விசாலமா தான் வச்சு விட்டுருக்காரு நம்ம பிரம்மா காட் (god). சிலரை போல் நீயும் உன் குணத்தை மாத்திட்டு, அதைச் சுருக்கிக்காதே!”

கண்டிப்பான குரலில் சொன்னவனை வெறித்தாள் சைந்தவி. தனக்கு வேலை கிடைத்த விசயத்தை அப்போது அவனிடம் வெளியிட விருப்பம் இல்லாது போனது.

‘எந்தச் சந்தோஷத்தையும் முழுமையா அனுபவிக்கக் கொடுத்து வச்சிருக்கணும்.’ நினைத்துக்கொண்டாள் கசப்பாக.

“நீ நினைக்கிற மாதிரி இல்லை வினித். நான் நானாத்தான் இருக்கேன். இனியும் அப்படித்தான் இருக்கப் போறேன். நீ நல்லவள்னு நினைச்சு என்னைப் பிரண்டாக்கிக்கிட்டது எப்படி மாறும்? அதே நல்லவள் தான்டா நான்.”

அளவாகப் புன்னகைத்தவள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்ற போதும், ஏதோ தீவிரச் சிந்தனையில் இருக்கிறாள் என்பதை வினித் யூகித்தான்.

“அப்போ நீ பிளான்படி கிளம்பிப் போகப் போறது உறுதி இல்லையா… அப்படின்னா உன் டிராவலுக்கு ரெடி ஆக வேண்டாமா? இப்ப எதுக்கு ஆஃபீஸ் போகணும்ங்கிற?”

கூர்மையான பார்வையுடன் கேட்டான். அவனுடைய குரலில் உள்ள சந்தேகத்தைத் துடைத்தாள், அவளுடைய பதிலால்.

“நீங்க எல்லாம் போட்ட பிளான்படியா?”

நக்கலாக அவள் கேட்க, “இந்தப் பிளானை போட்டது அருணா, நான், அலெக்ஸ் தான். இப்போ என்ன செய்யணும்னு உனக்கு வேற ஐடியா எதுவும் இருக்கா? சொல்லு. உன் ஐடியா பெட்டர்னு தோணினா அஸ் யூ விஷ் ப்ளான் பண்ணிக்கலாம் சைவி.” அவளுடைய விருப்பத்தைக் கேட்டான்.

“இல்லை வினித். இது தான் பெஸ்ட் ஆப்ஷன்.”

“அப்புறம் என்ன… இப்படியே கிளம்பாம எதுக்கு ஆஃபீஸ் போகணும்ங்கிற சைவி?” அவளுடைய மனத்தில் என்ன ஓடுகிறது என்பது புரிபடாமல் கேள்வி கேட்டான்.

“வினித் ப்ளீஸ் லெட் மீ கோ நௌ! எனக்கு முதல்ல ஆஃபீஸ் போகணும். ஆஃபீஸ்ல இன்னைக்கே செய்ய வேண்டிய வேலை இது. தள்ளிப் போட முடியாது. நான் அங்க போயிட்டுத் திரும்ப வர்றது எப்போன்னு உறுதியா தெரியலைங்கிற போது, இந்த முக்கியமான ஆஃபீஸ் வேலையை முடிச்சிட்டே போயிடறேன்.”

தன்னுடைய மேலாளரை நேரில் பார்த்து விசயத்தைச் சொல்லிவிட்டு, இன்றே மனிதவளப் பிரிவிலும் போய் உரியவரைச் சந்தித்துப் பேசிவிட்டால் தான் நல்லது. ஒரு மாதத்திற்குள்ளே ரிலீவிங் ஆர்டரை பெற வேண்டும்.

புதுப் பணியில் சேருவதைக் குறித்து சைந்தவி தீவிரமாக இருந்தாள். ஆனால் வினித்திடம் என்ன விசயம் என்று சொல்லவில்லை. வேறு நல்ல சந்தர்ப்பத்தில் சொல்லிக்கொள்ளலாம் என்கிற நினைப்பில் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டாள்.

அவளின் பிடிவாதத்தைப் பார்த்து வினித்தும் வாதாடவில்லை. என்ன விசயம் என்று தோண்டித் துருவ முயலவில்லை. முக்கியமான வேலை இருக்கும். விடுமுறையில் போவதால் அதற்கான ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டே போகட்டும். எப்படியோ அவள் கிளம்பினால் சரி தான் என்று அவளுடன் இசைந்தான்.

“சரி வா நானே கூப்பிட்டுப் போறேன். அங்க ரொம்ப லேட் பண்ணிடாதே. ஆஃபீஸ் உள்ளே போனதும் என்ன முக்கியமா செய்யணுமோ அதை மட்டும் பாரு. பார்த்து முடிச்சதும் உடனே பகிளம்பிடணும்.”

“சரி சரி. ஆனா இப்ப முதல்ல ஹாஸ்டலுக்கு போகணும். கொஞ்சம் பேக்கிங் செய்யணும். ரெண்டு மூனு செட் டிரஸ்ஸாவது எனக்கு அங்க தேவைப்படும்.”

“சரி சைவி முதல்ல ஹாஸ்டலுக்கு போயிட்டே நம்ம ஆஃபீஸ்கு போகலாம். திரும்ப இந்தப் பக்கம் வர முடியாது. அலெக்ஸ் நீ உன் வேலையை முடிச்சிட்டு ஏர்போர்டுக்கு வந்திர்றியாடா?”

இவர்கள் இருவரும் பேசி முடியட்டும் என்று மொபைலிடம் தஞ்சம் அடைந்திருந்த அலெக்ஸ் வாயைத் திறந்தான்.

“நான் வந்திர்றேன் மச்சி. நீங்க கிளம்புங்க. இந்தா பைக் சாவி. நீ என் வண்டியையே எடுத்திட்டுப் போ.”

இருவரும் ஒரே வண்டியில் தான் சைந்தவியைப் பார்க்க வந்திருந்தனர். காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு, அப்படியே அலெக்ஸ் உணவகத்தில் இருந்து பிரிந்து செல்ல, வினித்துடன் சைந்தவி ஹாஸ்டலுக்கு போனாள்.

மூன்று செட் உடைகளுடன் டிராவல் பேக்கை ரெடி செய்தவள், தான் அணிந்திருந்த அந்தப் புது உடையைக் களைந்து வேறு சாதாரணப் பருத்தி குர்தி அணிந்து வேறு லெக்கிங்ஸ்க்குள் பொருந்திக் கொண்டாள்.

“வேண்டியதை எடுத்திட்டியா? ஹாஸ்டல் வார்டன்கிட்டயும் தகவல் சொல்லிட்டு வா.”

சைவி அறையிலிருந்து வெளியேறும் போது மொபைலில் அழைத்து ஞாபகப்படுத்தினான் வினித். காலையிலேயே அவன் சத்தம் போட்டதை அடுத்து மியூட் மோடிலிருந்து நார்மல் ரிங்கர் மோடிற்கு வந்திருந்தது அவளுடைய மொபைல்.

“கிளம்பலாம் வினித்”. அதிக நேரத்தை விடுதியில் விரயம் செய்யாமல், சில நிமிடங்களிலேயே வந்து பைக்கில் ஏறிக்கொண்டாள். அவளை மெச்சியபடி வண்டியைக் கிளப்பினான். ரியர் வியூவில் கண் பதித்தவன்,

“முதல்ல போட்டிருந்த அந்த வொயிட் டிரெஸ் உனக்கு ரொம்ப நல்லாப் பொருத்தமா இருந்தது சைவி. நம்ம சேர்ந்து போனப்ப ஷாப்பிங் செஞ்சது தானேமா?” என்று கேட்டான்.

“தாங்க் யூ டா! ஆமாம், அதே டிரஸ் தான். பரவாயில்லையே! அதை இன்னும் ஞாபகத்தில் வச்சிருக்கே?” ஆச்சரியமாக சைந்தவி கேட்க,

“நமக்குப் பிடிச்சி அடம் பண்ணி வாங்கினது. எப்படி மறக்கும்… யு லுக்ட் கார்ஜியஸ் இன் இட் சைவி!” முகம் மலர்ந்து சிரிப்புடன் சொன்னான் வினித்.

அப்போது சைந்தவி கேட்டாள், “அதான் பார்த்த உடனேயே எனக்கு அறிவில்லைன்னு பட்டம் கொடுத்தியா?”.

“சாரி சைவி! அப்போ எவ்வளவு டென்ஷன்ல வந்தேன்னு தெரியுமில்லே?”

“போடா… எதாவது இப்போ பதில் சொல்லிராதே கடுப்பாகிடுவேன்! ஏற்கெனவே மூட் அவுட்ல இருக்கேன். நான் இப்போ ஆஃபீஸ் போறது ரொம்ப முக்கியமான வேலைக்கு. இருக்கிற கொஞ்சநஞ்ச மைண்ட் செட்டும் கெடாம இருக்கட்டும். இன்னும் கொஞ்ச நேரத்துக்காவது.”.

அவள் சொன்னதைக் கேட்ட வினித்திற்கு மனது சங்கடப்பட்டது. அவளுடைய வார்த்தைகள் அவனுக்குள் வலியை உண்டாக்கிய போதும், அவளுக்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். பதிலுக்குப் பேசாமல் அமைதியாகவே இருந்தான்.

இருவரும் அலுவலக வளாகத்தை அடையும் வரையில் பேசிக்கொள்ளவில்லை. தத்தம் யோசனையில் இருந்தார்கள்.

“உன் வேலை முடிஞ்சதும் கூப்பிடு சைவி. நானும் ஆஃபீஸ்ல தலையைக் காட்டிட்டு வர்றேன். அருணாவுக்கும் கால் பண்ணிடு. நான் உன்னைப் பார்த்ததும் மெசேஜ் பண்ணிட்டேன். பிஸியா இருந்ததிலே பேசலை.”

“அருணாகிட்ட ஈவ்னிங் பேசிக்கிறேன் வினித். இப்போ முடியாது. சரி நீ போ. நான் வேலையைச் சீக்கிரம் முடிச்சிட்டு, உனக்கு கால் பண்றேன்.”

சைந்தவி அலுவலகத்திற்குள்ளே போன பிறகு வேற நினைப்போ சோர்வோ தன்னிரக்கமோ எதுவுமே அவளருகில் வரவில்லை. தான் பாட்டுக்கு வேலைகளைத் திட்டமிட்டபடி அதே வரிசையில் செய்தாள். நேரே போய் மேலாளரைச் சந்தித்து அவருடன் பேசினாள்.

“ஐ’ம் சாரி ஃபார் யுவர் லாஸ் சைந்தவி!”

மேலாளர் முதலில் அவளுடைய இழப்புக்கு இரங்கலைத் தெரிவித்தார்.

“ஒன் ஆர் டூ டேஸ் மட்டும் லீவ் எடுத்துக்கங்க சைந்தவி. இல்லைன்னா நீங்க சொல்ற டேட்டுக்கு ரிலீவ் பண்ண மாட்டாங்க. பார்த்துக்கோங்க. முடிஞ்ச வரையில் உங்க அசைன்மெண்டை முடிச்சி அனுப்பிடுங்க. வொர்க் ஃப்ரம் ஹோம் மாதிரி பண்ணிட்டு ஒரு வாரத்திலே வந்துருங்க. நானும் ஹெச் ஆர் கிட்ட பேசறேன்.”

“சரி சார். கண்டிப்பா அங்க இருந்தே லாக் இன் பண்ணுறேன். தாங்க் யூ!”

“கங்கிராட்ஸ் ஆன் யுவர் நியூ ஜாப் சைந்தவி!” (உங்க புதிய வேலைக்கு வாழ்த்துகள் சைந்தவி!)

சைந்தவி, அதன் பின்னர் மனிதவளப் பிரிவிலும் போய்ப் பேசினாள். அவள் பேசிவிட்டு வரும் போது நினைத்ததைவிட கூடுதல் நேரமாகிவிட்டது. வினித் வண்டியை விரட்டிக்கொண்டு வந்ததால் நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வர முடிந்திருந்தது. அங்கே வந்து பார்த்தால் பிளைட் டிலே. அப்போது அலெக்ஸும் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

மதிய வெயில், வெப்பத்தைக் கொட்டி அனைவருக்கும் உடல் அலுப்பைத் தோற்றுவிக்க, ‘என்னைத் தொட்டுப் போ, தொட்டுப் போ’ என்று ஏங்கிய மனங்களை, ‘தெரியாத்தனமா நினைச்சிட்டேன்’ என்னும் அளவிற்குக் காற்றும் தொட்டும் உரசியும் பிசுபிசுப்பை உண்டாக்கியது.

சமோசாக்களையும் குளிர்பானங்களையும் வாங்கிக் கொண்டு வினித்தும் அலெக்ஸும் வந்து சேர, மூவரும் இருந்த பசிக்குச் சற்று நேரம் அவர்களுக்குள் பேச்சே எழவில்லை.

நிமிடங்கள் கடந்தும் இவர்கள் எதிர்பார்த்த அந்த விமானம் வந்து சேர்ந்ததற்கான அறிகுறியே தென்படவில்லை. சைந்தவி மிக்க யோசனையால் ரொம்ப அமைதியாக இருந்தாள்.

‘வார்த்தைகளை வட்டிக்கு விட்டிருக்கிறாளா என்ன?’ அவளைப் பற்றி நினைத்தபடி வினித் பக்கவாட்டில் தலை சாய்த்து, சைந்தவியைப் பார்த்தான். அவளுடைய உதடுகளை மட்டும் இறுகிக் கொள்ளவில்லை, முகமும் ஒரு மாதிரி தெரிந்தது.

“சைவி…” அவளை மெல்லக் கூப்பிட்டுப் பார்த்தான். பதிலில்லை.

தாயோடும் சிறு பிணக்குகள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே…

சூழ்நிலைக்கு ஏற்ற பாடல் போல, ஸ்நாக்ஸ் கடையருகே ஒருத்தரின் மொபைலில் இப்பாடல் பலமாக ஒலித்து இங்கே வரை எட்டியது.

“சைவீ…”

இப்போது சற்றுக் குரலை உயர்த்தி அவளை அழுத்திக் கூப்பிட்டுப் பார்த்தான் வினித்.

“சைந்தவி, உன்னை வினித் கூப்பிடுறான் மா…”

அவனுடைய மொபைலை நோண்டியபடி, பக்கத்தில் சீன் போடுறவளைக் கண்டும் காணாததைப் போல் ஓரக் கண்ணால் பார்த்து வேண்டும் என்றே சொன்னான் அலெக்ஸ். அவளுடைய மனத்தில் என்னவோ அந்த இரண்டு ஆண்களுக்கும் புரியவில்லை.

“அப்படியா அலெக்ஸ்… சரி…”

பக்கத்தில் உட்கார்ந்திருந்த வினித்தைக் கடந்து, அவனுக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த அலெக்ஸிடம் பேசினாள்.

அலெக்ஸ் புன்னகையை அடக்கிக்கொள்ளச் சிரமப்பட்டான்.

“கொழுப்புடா இவளுக்கு… விட்டுடு!”

வினித் பல்லைக் கடித்துக்கொண்டு கோபப்படவும், “சும்மா இருடா… நீயும் சேர்ந்திட்டு” அலெக்ஸ் அவனை அடக்கி வைத்தான்.

“அறிவில்லையான்னு கேட்ட ஒரு வார்த்தை உன்னை ஹர்ட் பண்ணிடுச்சா என்ன? இல்லை உன் மனசு விசாலமா இல்லையான்னு டவுட் பண்ணதுக்கா இந்தக் கோபம்? சொல்லு சைவீ!”

வினித் சைந்தவியைக் கூர்ந்து பார்த்தபடி கேட்க, அலெக்ஸ், “மச்சி, கார் டிரைவர் நம்பர் வந்திருக்கு. கூப்பிட்டுப் பேசிட்டு வர்றேன்டா.” சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து தள்ளிப் போனான்.

சரி என்று நண்பனுக்குத் தலையசைத்துவிட்டு மீண்டும் சைந்தவியிடம் திரும்பினான் வினித்.

“எனக்குக் கோபமில்லை வினித். இப்போ எனக்கு இருக்கிற மனநிலையிலே எதுவும் பேசப் பிடிக்கலை. என்னை விட்டுடு.”

தன்னைப் பார்த்தபடி அமைதியாகச் சொன்னவளைப் பார்த்துப் பெருமூச்சை வெளியேற்றியபடி சொன்னான்...

“காலைல ஒரு பதினாலு பதினைஞ்சு தடவை உனக்கு கால் பண்ணியிருப்பேன் சைவி. முதல்ல நீ கால் அட்டெண்ட் பண்ணலை. அப்புறமா சுவிட்ச்ட் ஆஃப்ன்னு சொல்லுது. நான் என்னன்னு நினைக்க… சொல்லு?

நைட்டு வேற ரெண்டு மூணு தடவை உன் கால் வந்திருக்கு. அந்த நேரத்திலே நான் நீலிமாட்ட பேசிட்டு இருந்ததால உன்கிட்ட பேச முடியாமல் போச்சு. அந்த கால் முடிஞ்சதும் டைம் பார்க்க, ரொம்ப லேட் ஆகியிருந்திச்சு.

ஏதாச்சும் அவசரம் இல்லை முக்கியம்னு இருந்திருந்தா உன் மெசேஜ் வந்திருக்கும். அப்படி எதுவும் நைட் வரலை. சரி நார்மல் கால் தானேன்னு நினைச்சு, காலைல பேசிக்கலாம்னு தூங்கப் போனேன்.”

“எதுக்கு இந்த விளக்கம் சொல்லிட்டு இருக்க? நீ நைட்டே கால் ரிடர்ன் பண்ணுவன்னு நானும் காத்திட்டே இருக்கலையே!”

“நான் சொல்ல வந்ததைச் சொல்லிடறேனே… காலைல எந்திரிச்சு முதல்ல உனக்குத்தான் கால் பண்ணினேன். ரெண்டு தடவை விட்டுவிட்டு அடிச்சேன். நீ எடுக்கலை. சரி நைட் நான் பேசாதது உனக்குக் கோபம் போலன்னு நினைச்சேன். ஆனாலும், அந்த மாதிரி இருக்காதுன்னும் தோணிச்சு.

ஏன்னா நமக்குள்ளே இந்த ஃபோன் கால்ஸ் பற்றி எப்பவும் பிரச்சனை வந்தது இல்லை. அப்படிக் கோபப்படுகிறவ கிடையாது நீ!

சமீபத்துல வந்த அந்த ஒரு நாளை தவிர்த்து, என்னுடைய மெசேஜ்ஜுக்கும் நீ ரிப்ளை பண்ணாம இருந்ததே இல்லை. எந்த ஃபோன் கால்ஸையும் நீ உதாசீனப்படுத்தியது இல்லை…”

அவனைப் பேசவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அந்த நாள் எது என்று நன்றாகத் தெரிந்தது. அமைதியாகத் தலையசைத்துப் புரிதலை வெளிப்படுத்தினாள். அதே சமயம், அவன் குறிப்பிட்ட அந்த நீலிமா என்கிற பெயர் அவளை நிரடிக் கொண்டிருந்தது.

“நான் மட்டுமில்லை, உன் அப்பா, அருணான்னு யாரும் உன்னைத் தொடர்பு கொள்ள முடியலை. போதாததுக்கு இன்னைக்குப் பார்த்து உங்க ஹாஸ்டல் லேண்ட்லைன் வேற அவுட் ஆஃப் ஆர்டர்.

நல்லவேளை உங்க அப்பா அருணாவைக் கூப்பிட்டுச் சொல்லிட்டு ப்ளைட்டை பிடிக்கக் கிளம்பிட்டாரு. ஏற்கெனவே என்ன நிலையிலே வர்றாரோ… உன்னைப் பற்றிய குழப்பமும் பதட்டமும் அவருக்குச் சேராம உன் பிரெண்ட் அருணா பார்த்துக்கிட்டா.

என் நம்பரை அருணாகிட்ட எப்பவோ நீ சேர் பண்ணிக்கிட்டது நல்லதா போச்சு. இல்லைன்னா இன்னைக்கு அவள் பாடு தான் திண்டாட்டமா போயிருக்கும்.”

வினித் சற்று இடைவெளி விட, “நான் எங்க தந்தேன்? அருணா தான் ஒரு நாள் நாங்க பேசிட்டு இருக்கிறப்ப உன் நம்பரை சேர் பண்ணச் சொல்லிக் கேட்டு வாங்கினா.” சைந்தவி சொன்னாள்.

“உனக்கு நல்ல பிரண்ட்ஸ் சைவி. என்னையும் சேர்த்து! இல்லையா?”

பெருமையுடன் கேட்டுக் கண் சிமிட்டலுடன் புன்னகைத்தான்.

“ரொம்ப பெருமைப்பட்டுக்கிற மாதிரி தெரியுது. எனக்கு யாரு நல்ல பிரண்ட்ஸ்னு நான் சொல்லணும் வினித்…”

“நீ சொல்லாட்டி போகுது. நானே சொல்லிக்கிறேன் விடு!”

வினித் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த சைவி, அவன் பேசி முடிக்கவும் கேட்டாள்…

“சொல்லிக்கோ போ போ… ஆமா நீ சொன்னியே நீலிமா… யாரு அது, அந்த நீலிமா?”

புருவங்களின் சுளிப்புடன் ஆராய்ச்சியாகக் கேள்வி கேட்டவளை முறைத்தபடி சொன்னான், “அதுவா இப்போ முக்கியம்?”.

தன்னை முறைத்தவனைக் கண்டுகொள்ளாமல் அவள் பேசினாள்.

“நீ இதுவரைக்கும் இந்தப் பேரைச் சொன்னதில்லையா. அதான் ஒரு க்யூரியாசிட்டல கேட்டேன். அதுவும் போக நான் உன்கிட்ட என்னைப் பற்றிச் சொன்ன அளவுக்கு உன்னைப் பற்றி நீ சொன்னதில்லை வினித்.”

தன்னைக் குற்றம் சாட்டிக் கேள்வி கேட்கிறவளைக் குறுகுறுவெனப் பார்த்தான்.

“நீ எப்பவாச்சும் என்னைப் பற்றிக் கேட்டு நான் அதுக்குப் பதில் சொல்லலையா சைவி?”

அந்தக் கேள்வி சைந்தவியைச் சிந்திக்கச் சொன்னது. சிந்தனையுடன் உட்கார்ந்து இருந்தவளை வருத்தமாகப் பார்த்துவிட்டு, அவளை உணர்ந்தவனாக ஆழ்ந்து மெல்லிய குரலில் சொன்னான்…

“உனக்கு என்னைப் பற்றித் தெரியணும்னு நீ நினைச்சா, ஊருக்குப் போயிட்டு வந்து கேளு. சரியா? உனக்குத் தெரிய வேண்டியதை எல்லாம் சொல்றேன். இப்போ ஒன்னு மட்டும் சொல்லுறேன் கேட்டுக்கோ. இந்த நீலிமா எனக்கு ரொம்ப முக்கியமானவள். உன்னைப் பற்றி அவளுக்குச் சொல்லியிருக்கேன். உனக்கும் அவளை ஒரு நாள் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். ஓகே? இப்போ என்னைப் பற்றிய யோசனையை ஒதுக்கிட்டுக் கிளம்பு. பிளைட் வந்துருச்சு.”

“உன்னைப் பற்றி நான் நிறைய கேட்டுத் தெரிஞ்சுக்கலை. ஏன்னு நீ கேட்டா எனக்குத் தெரியலை. இது வரைக்கும் நான் இதை ரியலைஸ் பண்ணலை வினித். வருத்தமா இருக்கு இப்போ. சாரி டா!”

தான் பிரியம் வைத்திருப்பவனைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை என்கிற குற்றவுணர்வு வந்து சூழ்ந்தது. அதனை உணர்ந்து, அவனிடம் தன் வருத்தத்தைக் காண்பித்தாள்.

“ஹே சைவி! என்ன நீ… சாரி எல்லாம் சொல்லிட்டு ம்ம். புதுப் பழக்கம் எதையும் நமக்கிடையே கொண்டு வராத. ஓகே? நம்ம விசயத்தை அப்புறம் பேசிக்கலாம்.”

“நீயும் தான் இன்னைக்கு என்கிட்ட சாரி கேட்ட. அதுவும் இந்த சாரியும் நல்லிஃபை ஆகிடுச்சு.” கண் சிமிட்டிவிட்டு, “ஐ ஃபீல் வெரி பேட் டா வினித்!” உணர்ந்து சொன்னாள்.

“ஹே டோண்ட் யா! விடு… விட்டுடு! ப்ரண்ட்ஷிப் இஸ் பிரசியஸ்… அது நம்மள வருத்தப்பட வைக்காது. கூல் சைவி! நம்ம சாரியும் இனி வேண்டாம்.”

நனையாத காலுக்கெல்லாம், கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பெயரில்லை...

இந்தப் பாடல் வரிகளுக்கேற்ப ஒரு நண்பனாக வினித் எத்தனை பொருந்திப் போயிருக்கிறான் என்பதை எண்ணிப் பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை அவளால். அவனுடைய அன்பு சைந்தவியை நெகிழ்த்தியது.

“இப்போ, உங்க அப்பாவைப் பார்க்க ரெடியா இரு. லுக், இது உன் கோபத்தையும் முறைப்பையும் காட்டுற நேரமில்லை. பார்த்துக்கோ.”

“சரி…”

அவனுக்குத் தலையாட்டும் போது, தூரத்தில் தெரிந்தார் சரள்கண்ணன். அலெக்ஸ் அந்தப் பக்கம் நின்றிருக்க, அவனைக் கை தட்டி அழைத்த வினித், அவனுக்கு அவரை அடையாளம் காட்டினான். அசையாமல் நின்று கொண்டிருந்த சைந்தவியைக் கண்டு எரிச்சலானான்.

அவளுடைய தோளில் இரண்டு தட்டுத் தட்டி, அவளுடைய அப்பா வந்து கொண்டிருந்த திசையை நோக்கிக் கூப்பிட்டுப் போனான்.

அதே நேரத்தில்…

‘எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது!’ என்று பக்கத்தில் நின்றிருந்த காரிலிருந்து ஒரு பாடல் காற்றில் கசிந்து வந்தது.
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்

ஆர்த்தி ரவி

அத்தியாயம் 10:

‘இப்படியும் இருப்பார்களா அப்பாவும் மகளும்?’ என்று வினித்தும் அலெக்ஸும் நினைக்கும் வண்ணம் அந்தச் சந்திப்பும் தொடங்கியது.

“எத்தனை மாசங் கழிச்சு பார்த்துக்கிறாங்க மச்சி ரெண்டு பேரும்?”

அலெக்ஸ், வினித்தின் காதைக் கடித்தான்.

“ஒரு வருசத்துக்கும் மேலேன்னு நினைக்கிறேன். எனக்கு அவள் பழக்கமானதுக்கு அப்புறம் இவரு இங்க வந்த மாதிரி தெரியலை. வரலைன்னு தான் சொன்னாடா.”

சைந்தவியைப் பற்றி அலெக்ஸுக்குத் தெரியும் என்றாலும், எல்லாமும் அப்படியே தெரியாது. அவளைப் பாதிக்கும் விசயங்களைச் சில சந்தர்ப்பத்தில் வினித் நண்பனிடம் மேலோட்டமாகச் சொல்லியிருந்தான்.

வினித் தான் அவளைப் பற்றி ஓரளவு நன்றாகத் தெரிந்தவன். அவளுடைய உறவுகளைப் பற்றியும் உணர்வுகளைப் பற்றியும் அறிந்தவன்.

இப்போதும் நண்பனிடம் அவளைப் பற்றிய தகவல்களைச் சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக் கொண்டான். அலெக்ஸும் தோண்டித் துருவவில்லை. பார்வையாளனாக நின்றிருந்தான்.

அவர்கள் இருவரும், இப்போது சரள்கண்ணன் ஏன் இந்தியாவிற்கு வருகிறார், அவருடைய அவசரம் அவசியம் உணர்ந்தவர்களாக, அவர் வந்து இறங்கியதும் தந்தையும் மகளும் கால தாமதமின்றி அவர்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளைத் தயாராக வைத்திருந்தனர்.

அவருக்கு இவர்களைத் தெரியாது. தங்களைப் பற்றி சைந்தவியாவது அவரிடம் சொல்லி இருப்பதாவது என்கிற எண்ணத்துடன் அவரை எதிர்கொள்ளத் தயாராக நின்றிருந்தனர்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அப்பாவையும் அவரைக் கண்ட மகளையும் நோட்டம் விட, சைந்தவியிடம் விலகல் தன்மை அப்பட்டமாகத் தெரிந்தது.

அலெக்ஸ் வியந்ததைப் போல, அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த வினித்திற்குமே இப்படிப்பட்ட காட்சி எல்லாம் புதிதாகத் தெரிந்தது. தான் இருவரையும் சேர்ந்து முதல் முதலாகப் பார்ப்பதால் அப்படித் தெரிகிறதோ என்று நினைத்துக் கொண்டான்.

அவனுடைய உலகத்தில், அவன் அப்பா மடியில் படுத்துக் கொள்வதும்; அம்மாவைத் தோளோடு கட்டிக்கொள்வதும் சாதாரணம். நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள் என்றால், அந்தக் கணங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

என்ன தான் சைந்தவியைப் பற்றியும் அவளுடைய குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தாலும், இப்படி நேரில் பார்க்கவும் வித்தியாசமாகத் தெரிந்தது.

அவனுடன் பழகும் சைந்தவி என்பவள் வேறு. இப்போது கண் முன்னால் இருப்பவள் வேறாகத் தெரிகிறாள். எத்தனை தடவை அவளிடம் சொல்லி, அவளுக்கு அறிவுறுத்தி இருக்கிறான். அப்படிச் சொல்லியிருந்தும் என்ன இப்படி என்கிற உணர்வில் ஆயாசமும் பிடித்தமின்மையும் உறுத்த, வினித்தின் ஞாபக அடுக்கில் பழைய கணங்களின் எழுச்சி!

“நடந்தது தப்பு இல்லை சைந்தவி. உனக்குச் சொல்லிப் புரிய வைக்காம அவர் நடத்திகிட்டது நிச்சயம் தப்பு தான். அதுக்காக இப்படியா? உன் கோபத்தையும் வீம்பையும் வருசக் கணக்கா பிடிச்சு வச்சுக்கிட்டு இருப்ப?”

ஒரு நாள் இருவரும் சந்தித்துக் கொண்ட போது, சைந்தவியின் அப்பாவைப் பற்றிய பேச்சு எழுந்திருந்தது. அப்போது வினித் அவளைக் கண்டித்தான்.

“வருசக் கணக்கா எனக்குத் தெரியாம இருந்தது எப்போ தெரிய வந்ததோ அப்போ இருந்து டா. இந்த வருசக் கணக்கு அவர் எனக்குக் காட்டியதைவிட குறைச்சல் தான்.”

கண்ணடித்துப் புன்னகைக்க முயன்றபடி இருந்தவளைக் கண்டனத்துடன் பார்த்துக்கொண்டே கேட்டிருந்தான்...

“இப்ப அந்தக் கணக்கை விட்டுடு சைவி. இன்னும் எவ்வளவு காலம் இப்படியே நீ இருக்கப் போறே? ஹ்ம்… நீயும் அதையே நினைச்சு நினைச்சு இப்படி நிம்மதியில்லாம தவிக்கிற. உங்க அப்பாவையும் சங்கடப்பட வச்சு தவிக்க விடற. ஆக மொத்தம் ரெண்டு பேரும் எங்கிருந்து உங்க வாழ்க்கையை நிம்மதியா வாழ்றது?”

ஆயாசத்துடன் தலையைக் கோதிக்கொண்டு தோழியுடன் பேசி, அவளுக்குப் புரிய வைக்க முனைந்து இருந்தான்.

அவனைப் பேசவிட்டு, பின்னர் அவளும் கேட்டிருந்தாள், “உன் ஆண் இனத்துக்கு சப்போர்டா?”. அவளுடைய பார்வையில் துயரமும் கோபமும் முட்டிக்கொள்ள, உதட்டில் இகழ்ச்சி முறுவல்!

“அவருக்கு நான் சப்போர்ட் பண்ணிப் பேசலை. சரி தப்புன்னு விவாதம் பண்ணி முடிவு எடுகிற காலம் கடந்து போச்சு. இனி என்ன மாறப் போகுது சொல்லு? நடந்ததை ரிவர்ஸ் எடுத்து; ரீடேக் எடுக்க இது என்ன ரோட் டிரிப்பா, இல்லை, மூவி மேக்கிங்ஆ? வாழ்க்கையின் நிஜம்.”

அவளுடைய நன்மை ஒன்றே அவனுக்குப் பிரதானமாய்ப் பட்டது. தனி ஒருத்தியாய் நின்று சாதிக்கத் துடிக்கும் அவளுடைய முயற்சியும் உழைப்பும் பாராட்டிற்குரியது. அதே சமயம், உலகில் நிலவும் பயங்கரங்களை எண்ணியே உறவற்று நின்று கொண்டிருக்கும் அவளை உறவுடன் இணைத்து வைக்க நினைத்து முயற்சி எடுத்திருந்தான்.

‘இவளைச் சமாதானப்படுத்தி, அப்புறம் இவ அப்பாகிட்ட பேசுவோம்’ நினைத்திருந்தான். நினைத்தது இன்றுவரை நடக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் அவனுக்கு வாய்க்கவில்லை. அவரை அவன் இதுவரை சந்திக்கவில்லை.

“உனக்கென்னடா தெரியும்… வெளியே இருந்து இப்படிச் சொல்லுறது ரொம்ப ஈஸியில்ல. அனுபவிச்ச வலி, வேதனை, தனிமை எல்லாம் எனக்குத் தானே? நான் பிடிவாதமா இருக்கேன். இல்லாம போறேன். நீ கண்டுக்காதே. விட்டுடு.”

அவள் தன்னை எடுத்தெறிந்து பேசுவது போலப்பட்டாலும், அவனாலும் அவளுடைய மன நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“அப்படிக் கண்டுக்காம போறது தானே நல்ல ஃபிரண்ட்ஷிப்… போடி போ… எனக்குத் தெரியும் உன்னைப் பற்றி. உன் நல்லதுக்குன்னு நினைச்சி நான் சொல்லுறதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளு… இப்ப என்னை முழுசா பேச விடு!”

அவன் பிடியில் நின்று அவளுடைய மனத்தைக் கரைக்க முயன்று தொடர்ந்தான்.

“சரி சொல்லு.”

கையைக் கட்டிக்கொண்டு ஆழமாகப் பார்வையை அவனிடம் செலுத்தி நின்றாள்.

“உன் வலியோ வேதனையோ தெரியாம இல்லை சைவி. நீ அனுபவிச்சிட்டு இருக்கிற அந்தத் தனிமை ஏக்கம் எல்லாத்தையும் உன்கிட்ட நான் பார்த்ததில்லையா? சொல்லேன்?”

தோழியை நிதானமாகப் பார்த்துக்கொண்டே கேட்டிருந்தான். அவனுடைய கனிவும்; ஆத்மார்த்தமான அன்பும்; ஆதுரமும் பின்னி வெளி வந்து, அவளைக் கட்டிப் போட்டிருந்தது. பதில் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

அந்த நேர மௌனத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு வினித் மேலும் அவளுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முயன்றிருந்தான்.

“நம்ம போலவங்க எல்லாம் உலகத்தைப் பார்த்ததும் உணர்ந்து கொண்டதும் கம்மி. துக்கடா போல. நாம பார்க்காததும் உணராததும் உலகத்தில் நிறைய உண்டு சைவிமா. சில விசயங்களை நாம பார்க்கிறது என்ன, கேட்டுக் கூட இருக்க மாட்டோம்.

அதிலே சில விசயங்களைக் கேள்விபட்டு நம்ம தெரிஞ்சிக்கிற போது, அதிர்ச்சியா, நம்மால நம்பவே முடியாததா இருக்கும். நம்ம நம்ப முடியாத விசயங்களை வாழ்க்கையா சிலர் வாழ்ந்திட்டு இருக்காங்க. அந்த வாழ்வு அவங்க சாய்ஸா இருக்காது.

வேற வழி கிடையவே கிடையாதுன்னு, தங்களுக்கு இடப்பட்டது இது தான்ங்கிறதொரு உலகத்தில் வாழ்கிறவங்க அனுபவிக்கிறதை நீயும் நானும் அனுபவிக்கலை… நம்ம யோசனையிலே கூட அந்த விசயங்கள் வராது.

ஒரு சாங்… ஆக்ட்ரஸ் சிநேகா பாடுறதா வருமே…

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

இந்த வரிகளில் வர்றது தான் பலரின் வாழ்க்கை. Life is a battle ground for many Saivi!”

வினித்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு தெளிவாய் வந்தன. அவன் சொன்ன விசயம் கேட்கிற யாரையும் சிந்திக்க வைக்க வல்லது.

வாழ்க்கை என்பது பல விதம். யாருக்கு என்ன அமைப்போ அப்படி… ஒருவரின் அமைப்பு மற்றவர்களுக்குக் கிடையாது. ஒரே வீட்டிலேயே ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான வாழ்க்கை அமைப்பு கிட்டுகிறது.

இதிலே சிலர் தங்களுக்கு வாய்த்திருக்கும் நல்வாழ்வை உணராமல் கோட்டை விடுகின்றார்கள்; அதனை வாழத் தெரியாமல் வாழ்ந்து அழித்துக் கொள்கிறார்கள். சிலருக்கு நல்ல வாழ்க்கை என்ன, சாதாரண வாழ்க்கை கூட அமைவதில்லை!

அனுபவமோ படிப்போ, வினித் உணர்ந்து தன்னுடைய தோழிக்கு விளக்கிச் சொல்லி இருந்தான். கண்களை மூடிக்கொண்டு வினாடிகள் சில கடந்ததும் சைவி கேட்டிருந்தாள்...

“ஏன் வினித், எனக்கு விதிச்சது இது தான்னு நினைச்சு நான் இதுவரை வாழலை?”

அமைதியாக நின்றிருந்தவன், அவள் சொன்னதைக் கேட்டதும் கடகடவென உரத்துச் சிரித்தான். பின்னர் கேட்டிருந்தான்…

“உனக்கு விதிக்கப்பட்டதுன்னு சொல்றே… ரைட்டு! அதை நீ ஏத்துக்கிட்டியா சைவிமா?”

அவனுடைய குரலும் கேள்வியும்… அந்தப் பார்வையும்…

ஹோவெனச் சூழ்ந்து அவளை முழுங்கி அடைத்துக் கொண்டிருந்தன. வினாடிகளில் அதனை உடைத்து எறிந்தவளுடைய முகம் தணலாய்த் தகிக்க… வார்த்தைக் கங்குகள் புகைந்து ஜுவாலையாய் அவனுடன் மோதின.

“எப்படி ஏத்துக்க வினித் சொல்லு? எப்படிடா ஏத்துக்கறது? நான் அவருக்கு யாருடா? மகள் தானே?

என்னைப் பெத்தது அவரு… அருமை பெருமையா வளர்த்து விட்டதும் அவரு… அம்மா போனதுக்கு அப்புறம், அப்பான்னு அந்த உயிரை நினைச்சே பெரிய இழப்பில் இருந்து வெளியே வந்தேன். நான் வாழ ஆசைப்பட்டது அப்பாவுடன். அவருக்காக மட்டுமே.

அவரும் அப்படித்தானே? சவிம்மா சவிம்மான்னு உயிரா இருந்தாரு. அவரு மனசு வருத்தப்படக் கூடாதுன்னு, அப்பத்தா திட்டினாலும் என்ன மாதிரி நடத்தினாலும் பொறுத்துக்கிட்டுப் பதில் பேசாம அமைதியா போனேன்.

கெட்டது எதையுமே அவர் காதுக்குக் கொண்டு போகலை. மனசு வருத்தத்தையும் ஏக்கத்தையும் அவர்கிட்ட காட்டிக்க மாட்டேன்.”

கண்கள் ஞாபகங்களின் சுவடுகளைத் திருப்பிப் பார்த்த வேகத்தில் கலங்கிச் சிவந்திருந்தன. மெல்லிய கோடாகக் கன்னங்களைத் தொட்டிருந்த கண்ணீரை அலட்சியப்படுத்திவிட்டு உட்கார்ந்து இருந்தாள்.

அந்த நிலை… அவளுடைய கண்ணீர் எல்லாமும் வினித்தை வேதனைப்படுத்தி இருந்தது. ஆனாலும் தொடர்ந்து பேசி இருந்தான்.

“உன் அம்மா உங்களைவிட்டுப் போனப்ப உனக்கு ஒரு பன்னிரெண்டு வயசிருந்திருக்குமா?”

“...”

தொலைவில் வெறித்துக் கொண்டு இருந்தவளைப் பேச வைக்க முயன்றான்.

“சொல்லேன்?”

“ம்ம்…”

தலையாட்டினாள்.

“அந்த வயசுல நீ எவ்வளவு மெச்சூரிட்டியோட நடந்து இருக்க சைவிமா. ரியலி யு ஆர் வெரி கிரேட்!”

மென்மையுடன் உளமார்ந்து சொன்னான். அவளுடைய விரல் நுனிகளைப் பற்றியபடி கேட்டான், “அப்படி இருந்த சைவிக்கு இப்போ இருக்கும் இந்த இருபத்தி மூனு இருபத்தி நாலுல புரிஞ்சிக்க முடியலையா?”

நிதானமாக வந்த அந்தக் கேள்வியின் அர்த்தத்தை அவள் சரியாக உணர்ந்து கொள்வாள் என்று நினைத்தே கேட்டான்.

ஆனால்…

“என்… என்னை ஒரு பொருட்டா மதிக்காம… என்னைக் கேட்க வேண்டாம். ஆனா சொல்லணும்ல? சொல்லவே சொல்லாம அந்த வாழ்க்கைல சிக்கி இருக்காரு. எப்படி முடிஞ்சது அவருக்கு? நாள் கணக்கா மாசக் கணக்கா… எத்தனை வருசம்? சொல்லவே இல்லையே! அது தப்பில்லை? என்னை இப்படி முட்டாளாக்கி வாழ்ந்திட்டு இருந்திருக்காரு. இதிலே என்னத்தை நான் புரிஞ்சுக்க முடியலையான்னு கேள்வி கேட்கிற?”

விலுக்கென்று திரும்பி அவனுடைய கண்களைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே கோபத்துடன் கேட்டாள். அவன் பொறுமையாகச் சொன்னான்…

“கூல் கூல் சைவி! உன் கோபம்; வேதனை; வருத்தம் எல்லாத்தையும் என்னாலே புரிஞ்சிக்க முடியுது. அதைத் தப்புன்னு நான் சொல்லலை. ரொம்ப காலமா பிடிச்சு வச்சிட்ட. விட்டுடு. விட்டுட்டு யூ மூவ் ஆன் மா.

யூ மூவ் ஆன். பீ மெச்சூர்ட். அவர்கிட்ட பேசு. உன் உணர்வுகளைக் கொட்டிடு. அவருக்கு உன் உணர்வுகளை அப்பப்போ தெரியப்படுத்து. உனக்குள்ளே வச்சிட்டு இருந்தா அவருக்கு எப்படித் தெரியும்?

சொல்லணும் நீ… உன் சந்தோஷம் மட்டுமில்லை உன் கஷ்டத்தையும் சொல்லியிருக்கணும். இப்போ பழசைப் பேசி என்னவாகப் போகுது? உன்கிட்ட இதைச் சொன்னதும் நான் தான்.

இருந்தாலும் இதையும் உன்கிட்ட சொல்லத் தோணுது. சொல்றேன் கேட்டுக்கோ. கேட்டுட்டு சரியா யோசி. என்ன?

மகள் கஷ்டப்படுறான்னு தெரிஞ்சிருந்தா, ஒரு வேளை அவருக்கு மலேசியா போகும் எண்ணம் வந்து இருக்காது. உன்னைத் தனியா உன் தாதிகிட்ட விட்டுட்டு அவர் மட்டும் போயிருக்க மாட்டார்.

நாம இப்படியும் யோசிக்கலாம் இல்ல?”

அவன் கேட்டுக் கொண்ட மாதிரி நிதானமாக எங்கே யோசித்தாள்? யோசிக்காமல் பட்டென்று வெடித்தாள் அவனிடம்.

“வினித்! முட்டாள்தனமா நீ அவருக்கு சப்போர்ட் பண்ணிப் பேசிட்டு இருக்கேடா.”

“சப்போர்ட்டும் இல்லை. முட்டாள்தனமும் இல்லை. ஒரு விசயம் விவாதிக்கப்பட்டா, அந்த விவாதமும் அதற்குரிய தீர்மானமும் எந்தப் பக்கமும் போகலாம். விவாதிக்கும் திறமையைப் பொருத்து முடிவு மாறுது.

நான் கொஞ்சம் முன்னாலே சொன்னது இதை உனக்குப் புரிய வைக்க தான். ஒரு சாம்பிள். அவ்வளவு தான். இப்ப நம்ம பேசிட்டு இருக்கிற டாபிக்குக்கு வர்றேன்.

‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. இனி நடக்கப் போவதும் சிறப்பாகவே நடக்கும்.’

இந்த லைன்ஸ் உனக்குத் தெரியுமில்லை… பகவத் கீதா வரிகள்.”

சொல்லிவிட்டு, தன்னையே வெறித்துக் கொண்டிருந்தவளை மென்மையாகப் பார்த்தான்.

“...”

“என்னடா இந்த வினித் எப்படி எப்படியோ பேசுறான். இந்த கீதா உபதேசம் எல்லாம் எதுக்குன்னு நினைக்கிறே இல்லை?”

சிரித்தபடி கேட்டவனுக்குப் பதில் கொடுத்தாள். அவளுடைய குரல் கரகரத்துப் போய்த் தணிந்தே வந்தது.

“இல்லைடா. என்கிட்ட இப்படி எல்லாம் பேச ஆள் இருக்கே… அதுவரைக்கு ரொம்ப சந்தோஷம்.”

வெளியே இப்படிச் சொன்னவளோ உள்ளுக்குள்ளே தெளிவில்லாமல் தான் கிடந்தாள். அவளுடைய முகமே மனத்தின் குழப்பத்தை வெளியே காட்டிக் கொடுத்தது அவனுக்கு.

“சைவி… நடக்கிறது நடந்திட்டு தான் இருக்கும். உன்னாலே எதுவும் தப்பாகலை. உங்க அப்பாவும் தப்பில்லை. நடந்ததுக்கு யாரும் காரணம் இல்லைன்னு மனசுல பதிய வச்சிக்கோ. உன் நிம்மதிக்காகவும் இனி வருங்காலத்தை யோசிச்சு நீ இதைச் செய்யணும்.

அவர்கிட்ட பேசு. அந்தப் பக்கம் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கோ. உன் மனசுக்கு ஒரு தெளிவு கிடைக்கணும் தான் இதை நான் இவ்வளவு நேரமா திரும்ப திரும்ப அழுத்திச் சொல்லிட்டு இருக்கேன்.

உன் அப்போதைய வயசு, உங்க அப்பாவை உன்கிட்ட கலந்து பேச விடாமல் தடுத்து இருக்கலாம். அதுக்கு அப்புறம் தயக்கத்திலே அவர் உன்கிட்ட சொல்லாமல் இருந்து இருக்கலாம். எதுவும் நமக்குத் தெரியாது.”

அவளை யோசிக்கவிட்டான்.

“குழப்பமா இருக்கா சைவி?”

இதமான நண்பனின் குரல் அவளை வருடியது. என்றாலும் இந்தப் பேச்சு முழுமையும் அவளை வேதனைப்பட வைத்தது. மௌனமாக உட்கார்ந்து இருந்தாள்.

“என்ன சூழ்நிலை, என்ன நடந்ததுன்னு உன் திருப்திக்காக இனி உன் அப்பாகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்னு வச்சிப்போம். இதுவரை கடந்த போன காலம் திரும்ப வந்திடுமா? இல்லை, வராது இல்லையா?”

“எப்படி வரும்? வராது. காலமும் திரும்ப வராது… நான் இழந்ததும் இழந்தது தானே?”

“ம்ம்… ரெண்டும் போனது தான். அதை நினைக்காதே! சரியா?”

“முயற்சி பண்ணுறேன். எனக்காக இல்லை. நீ இவ்வளவு பேசி எனர்ஜியை கரைச்சிருக்கே இல்லை. அது வீணா போகக் கூடாது பாரு? நீ மெனக்கெட்டதுக்காக முயற்சி பண்ணுறேங்கிறேன்.”

சைந்தவி கிண்டலாகச் சொன்னாலும் முகம் கசங்கியே இருந்தது. சிறு முறுவல் கூட அவளிடம் தென்படவில்லை. அதை உள்வாங்கிக் கொண்டே வினித் தொடர்ந்தான்.

“எதையும் மனசு வச்சு விரும்பி செய்யணும் சைவி. அப்ப தான் அந்தக் காரியம் வெற்றி பெறும். நிலைக்கவும் செய்யும்.”

கண்டிப்புடன் அறிவுறுத்தினான்.

“ஓகே!”

‘போதும் என்னை விடு’ என்கிற தொனி அவளிடம் தெரிய, பெருமூச்சுடன் முடித்தான்.

“உன் நல்ல முயற்சியாலே இனி மாறப் போவது இது தான். நீயும் உன் அப்பாவும் இனி மேலாவது நிம்மதியா இருக்கலாம். சாதாரணமா பேசிக்கலாம். அவருக்கும் தப்பு செய்திட்ட உறுத்தல் போகும். அவரை ரணமாக்குற உன் வேதனையும் குறையும்.

உனக்கு அவருடைய அன்பும் அரவணைப்பும் எப்பவும் கிடைக்கணும் சைவி. அவருக்கு உன் மேல பாசம் இருக்கு. இல்லைன்னு சொல்ல முடியாது. ஒரு முக்கியமான முடிவை எடுத்த உங்க அப்பா அதைச் சரியா ஹேண்டில் பண்ணாம விட்டதாலே, ஒரு பெரிய சூழ்நிலை உருவாகக் காரணமாகிட்டாரு.

நீயாவது சரியா யோசி சைவிமா. இருவருக்குள்ளே இருக்கும் உறவுங்கிறது ஒரு தடவை தான். அதைத் தவற விடுறதோ தக்க வச்சிக்கிறதோ உன் கைல தான் இருக்கு.”

அவளுக்கு வெளியே அறிவுறுத்தியவன் மனத்திற்குள்ளே நினைத்தான்…

‘உங்க அப்பா கிட்டேயும் எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேசுவேன் சைவிமா. உனக்காகப் பேசுவேன்.’

கிரீச்செனக் கேட்ட வண்டி சத்தம் அவனைப் பழைய நினைவில் இருந்து மீட்டது.

“நம்ம அப்ப பேசினது வேஸ்டா போச்சா சைந்தவி?”

முணுமுணுப்புடன் கேட்டுக் கொண்ட வினித்தைப் புஜத்தில் இடித்து, சுட்டிக் காட்டினான் அலெக்ஸ்.

சரள்கண்ணன் சோர்வாகத் தான் வந்து இறங்கி இருந்தார். மகளை எதிரே பார்த்ததும் அவருடைய கண்களில் வெளிச்சம் வந்திருந்தது. அவர் கண்களுக்கு அணிந்திருந்த ரிம்லெஸ் வழியே அது நன்றாகவே மற்றவர்களுக்குத் தெரிந்தது.

சைந்தவி உணர்வுகள் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல், யாரோ ஒருவரைப் பார்க்க வந்ததைப் போல நின்றிருந்தது அவரை உலுக்கியது. அவளுடைய ஒட்டாத தன்மைக்கான காரணம் சடாரென வந்து சுட்டது.

வருத்தமும் குற்றவுணர்வும் சேர்ந்து சரள்கண்ணனைச் சுழற்றிப் போட்டது. வேதனையைத் தாங்கிய அவருடைய முகம், வினித்தையும் அலெக்ஸையும் இரக்கம் கொள்ளச் செய்தது.

ஆனால் சைந்தவிக்கு எந்தப் பாதிப்பும் இல்லாதது மாதிரி தெரிந்தது. அவளுடைய உதடுகளில் சோழி அளவில் புன்னகை வந்தது. வந்ததும் வினாடிகளில் மறைந்தும் இருந்தது.

“இவளை…”

வினித் அவளை முறைக்க, “சும்மா இருடா.” அலெக்ஸ் நண்பனை அடக்கினான்.

சரள்கண்ணன் தொண்டையைச் செருமி தன்னை மீட்டுக் கொண்டார்.

“சவிம்மா! எப்படி இருக்கடா?”

சரள்கண்ணன், மகளின் கழுத்தைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு தன் தோளோடு அணைத்துக்கொள்ள முனைய, சைந்தவி சட்டென விலகிவிட்டாள்.

வினாடியில் எதிர்பாராமல் அவள் தள்ளி நின்றதில் அப்பா சற்றுத் தடுமாற, அலெக்ஸ் அந்த வினாடியில் சுதாரித்தான்.

அங்கு நடந்த நிகழ்வைக் கண்ட மாதிரி காட்டிக் கொள்ளாமல், ஏதோ தட்டி அவர் தடுமாறிவிட்டதைப் போல, “பார்த்து நடங்க சார்” சொல்லி அவருடைய கையைப் பிடித்து விழாமல் நிறுத்தி இருந்தான்.

“சைவீ!” வினித் கடித்த பற்களின் நடுவே மெல்லிய குரலில் கூப்பிட்டுக் கண்டித்தான். கண்டனம் தெரிவித்தது அவனுடைய பார்வை. அவளுமே அப்பா தடுமாறி விழப் போவார் என்று எதிர்பார்க்கவில்லை.

திகைப்பில், “ப்பா” என்று முணுமுணுத்தாள். யாருக்கும் அது கேட்டிருக்கவில்லை.

சரள்கண்ணனின் கை நழுவி, மறுபடியும் மகளின் ஒரு தோளில் அழுத்தமாகப் படிந்தது. அந்தக் கையில் உள்ள நடுக்கம் மற்ற மூவரின் பார்வையில் பட்டது.

முன் ஐம்பதுகளில் இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடியாது. அந்த வயதிற்கு இளமையாகத் தெரிந்தார். அதற்கேற்றார் போல உடுத்தி இருந்தார்.

பயணக் களைப்பு; மகளைக் கண்டதும் தளும்பி வரும் பாசம்; ஏற்கெனவே அழுத்திக் கொண்டிருக்கும் துக்கம்; ஏதோ காலத்தின் துயரம் என்று கலந்ததில் சற்றுத் தளர்ந்திருந்தார்.

சில நிமிடங்களில் மகளின் செய்கையைக் கிரகித்து நிதானத்துக்கு வந்திருந்தார். அவளை எப்படியும் இந்தத் தடவை தன்னிடம் பழையபடி நன்றாகப் பேச வைக்க வேண்டும் என்று வரும் போதே நினைத்துக் கொண்டு வந்தவருக்குள் இன்னும் உறுதி எழுந்தது.

சரள்கண்ணன் மகளின் தோளைப் பிடித்தபடி பக்கவாட்டில் பார்க்க, வினித்தும் அலெக்ஸும் பார்வை வட்டத்திற்குள் விழுந்தனர். வினித்தைக் கண்டு புன்னகைத்தார்.

அவருடைய பார்வை தங்களைத் தொட்டதும் அவரருகே வந்து நின்றார்கள் இருவரும்.

“வினித்?” கேள்வியுடன் புருவம் உயர்த்தினாலும், சரியாக அவனை நோக்கி கையை நீட்டினார்.

அவருக்குத் தன்னைத் தெரிந்து இருக்கிறதே, வியப்பும் ஆனந்தமுமாக நீட்டிய கையைப் பற்றிக்கொண்டான்.

“ஹலோ அங்கிள்!” என்று கையைக் குலுக்கிக் கொண்டு, அதைப் பற்றியபடியே தன் நண்பனை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“இவன் அலெக்ஸ்… என் ஃபிரெண்ட்.”

“ஹலோ சார்” தானும் கை குலுக்கிக் கொண்டான்.

அலெக்ஸுக்குக் கை கொடுத்தவர் மகளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “அருணா சொன்னாப்பா. நீங்க ரெண்டு பேரும் சவி கூட இங்க வருவீங்கன்னு. ரொம்ப நன்றி!” என்றார்.

“நன்றியை விடுங்க அங்கிள். சாரி ஃபார் யுவர் லாஸ்!”

அவரை அணைத்து விடுவித்தான் வினித்.

“ஆழ்ந்த இரங்கல்கள் சார்!”

அலெக்ஸ் அவருடைய கைகளைப் பற்றி அழுத்திக் கொடுக்க, அவருடைய கண்களில் நீர்ப்படலம்.

வினித் சைந்தவியிடம் கண் காட்டினான். அவரிடம் பேசும்படி. அதற்குள் சரள்கண்ணன் தானே சுதாரித்துக் கொண்டார்.

சைந்தவியிடமும் இளக்கம் வந்திருந்தது. அப்பாவின் ஒரு பெரிய பெட்டியைத் தானே பற்றியபடி கேட்டாள், “அலெக்ஸ் கார் வந்திடுச்சா? டிரைவர் நம்பர் எல்லாம் வாட்ஸ் அப்ல அனுப்பி விடுங்க.”.

“வந்திடுச்சு மா. லக்கேஜை இங்க விட்டுட்டு, அப்பாவும் நீயும் போயி கார்ல ஏறுங்க. வா வினித்.”

“போகலாமா அங்கிள்?” கேட்டுக் கொண்டே வினித் பெட்டியுடன் காரை நோக்கி நடந்தான்.

வாகன ஓட்டுநரிடம், “பத்திரமா கூட்டிட்டுப் போங்க. ரொம்ப வேகமா ஓட்ட வேணாம். பார்த்து… மைலேஜ் குறிச்சிக்கறேன்.” சொல்லிவிட்டு, குறித்ததை சைந்தவி, வினித்திற்கும் அனுப்பி வைத்தான் அலெக்ஸ்.

அத்துடன் ஓட்டுநரின் நம்பர், டிராவல்ஸ் நம்பர் எல்லாமும் பகிர்ந்து கொண்டான். கார் ஏற்பாடு செய்தது அலெக்ஸ் தான். அந்த விபரங்களைச் சரள்கண்ணனிடம் சொன்னான்.

“இது ஒன்வே டிராப் டாக்சி. இங்கே இருந்து போறதுக்கு மட்டும் பணம் தந்தா போதும். மைலேஜ்… கிலோ மீட்டருக்கு… டிரைவர் பேட்டா…”

சைந்தவி மொபைலில் பதிய முற்பட, “விவரமா மெசேஜ் பண்ணிட்டேன் சைந்தவி” சொன்னவனை நன்றி பெருக்குடன் பார்த்து, “தாங்க்ஸ் அலெக்ஸ்!” நன்றி உரைத்தாள் சைந்தவி.

“எதுக்கு நன்றி சொல்லிட்டு… பத்திரமா போயிட்டு வா. அப்பாவுக்கு ஆறுதலா இரும்மா. பார்த்துக்கோ.”

அலெக்ஸ் அவளிடம் சொன்னான்.

பெட்டியை டிக்கியில் வைத்துவிட்டு முன்னே வந்து அவனும் ஓட்டுநரிடம், “சிட்டிக்குள்ளேயே டாங் ஃபில் பண்ணிடுங்க. பார்த்து, பத்திரம்.” சொல்லிவிட்டு, “போய்ச் சேர்ந்ததும் மெசேஜ் பண்ணிடு சைவி.” தோழியிடம் சொன்னான்.

“வினித், உங்க ரெண்டு பேர் நம்பரும் எனக்கு வேணும். தர்றீங்களா?”

சரள்கண்ணன் கேட்கவும் குறித்துக் கொடுத்தான். அவர் தன்னுடைய விசிட்டிங் கார்டை இருவரிடம் தந்துவிட்டு, “திரும்ப மலேசியா போகும் போது கூப்பிடுறேன். வினித், உன்கிட்ட கண்டிப்பா பேசணும்பா. மீட் பண்ணுவோம்.” சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டார்.

வினித் மகளைக் கண்டித்துப் பார்த்தது, வினித்தைக் காணும் போது அவளுடைய கண்களில் தென்பட்ட உணர்வு என்று எதுவுமே அந்த மகளைப் பெற்ற அப்பாவின் கண்களுக்குத் தப்பவில்லை. அவர் இருக்கும் சோக மனநிலையிலும் மகளின் நல்வாழ்வை எண்ணியே வினித்திடம் பேச வேண்டும் என்றிருந்தார்.

இவர் நினைப்பதும், மனத்தில் போடும் மணக் கணக்கும் அப்படியே நடக்குமா?

சைந்தவி கண்களாலேயே வினித்திடம் விடைபெற்று இருந்தாள்.

பயணத்தின் போது அப்பாவும் மகளும் அருகருகே உட்கார்ந்து இருந்தாலும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. பேசாமலும் இல்லை. சரள்கண்ணன் கேட்கும் கேள்விகளுக்கு சைந்தவி பதில் சொன்னாள். அவை அவளுடைய வேலை, உடல்நிலை பற்றியே இருந்தன.

இடையே அருணா கூப்பிட, இருவரும் பேசினார்கள். ஓரிடத்தில் ஓட்டுநர் தேநீருக்காக நிறுத்த, சரள்கண்ணனும் இறங்கினார். சைந்தவி, “ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்பா” சொல்லிவிட்டுச் சென்றாள்.

அவள் திரும்பி வந்ததும் அவளைக் கேட்டுவிட்டே அவளுக்கு டீயும், ‘குட் டே’ பிஸ்கெட் பாக்கெட்டும் வாங்கிக் கொண்டு வந்து தந்தார்.

அவள் தேநீரைக் குடித்து முடித்ததும் பயணம் தொடங்கியது. இப்போது சரள்கண்ணன் முன்னால் ஏறிக் கொண்டார். இருவரும் சில நிமிடங்கள் பொது விசயங்களைப் பேசியபடி வந்தார்கள்.

சைந்தவியின் மொபைல் ஒலி எழுப்பியது. கைப்பையை விரித்து வெளியே எடுத்துப் பார்க்க, வினித் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.

‘நடந்ததை விட்டிட்டு இனி வரப் போவதைப் பாரு. வருங்காலத்தை நல்லதாக மாற்றிக் கொள்ளும் சக்தி உன்கிட்ட இருக்கு. முயற்சி பண்ணு சைவி. திரும்பி வரும் போது புது சைந்தவியா வா!’

வாசித்தவளுடைய உதடுகளில் சின்ன முறுவல்.

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சைப் போலச் சுவாசிப்போம்…

அவளையும் அவளுடைய அப்பாவையும் நினைத்து, அவர்களுக்கு இடையே நல் உறவு நிலவ வேண்டும் என்பதற்காகவே வினித் சைந்தவிக்குக் குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான். குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு நினைத்தான்…

‘அன்னைக்கு ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றிப் பேசி, உன் அப்பாவும் நீயும்னு உனக்கு எடுத்துச் சொன்ன போதே நீலிமா பற்றி உன்கிட்ட சொல்லி இருக்கணும்.’

வினித்தும் சைந்தவியும் எதிர்பார்த்திராத மாற்றம் ஒன்று சைந்தவிக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்

ஆர்த்தி ரவி

அத்தியாயம் 11:

என்ன தான் பார்த்துப் போங்கள் என்று வினித் மற்றும் அலெக்ஸ் சொல்லி இருந்தாலும், ஓட்டுநர் ஓர் அழுத்து அழுத்தி விரைவாகவே சென்று கொண்டிருந்தார். அவருக்கு விசயம் சொல்லப்பட்டிருந்தது. தேநீருக்காக நிறுத்தி இருந்த போது சரள்கண்ணனிடம் பேசி இருந்தார்.

“எனக்குப் பழக்கமான ரூட் தானுங்க. முயற்சி பண்ணிப் பார்க்கட்டுங்களா?”

“ஆறு மணிக்குள்ள போக முடியாதுப்பா. பரவாயில்லை விடு. நீ பார்த்து ஸ்பீட் லிமிட்லேயே போ. சென்னைக்கு வர எனக்கு ஃபளைட் லேட்டாகிடுச்சு. இல்லைன்னா எப்படியும் அங்க நேரத்துக்குப் போற மாதிரி இருந்திருக்கும். இப்ப நான் வந்து இறங்க தாமதமானதுல மாற்று ஏற்பாடும் செஞ்சி வச்சிருப்பாங்க. ஏற்கெனவே வீட்ல கூப்பிட்டுச் சொல்லிட்டேன்.”

“ஒரு சான்ஸ் எடுக்கலாம்ங்க.”

அவருக்கு இன்றே காரியம் நடக்கும் என்று சுத்தமாக நம்பிக்கையில்லை. மகளை உடன் அழைத்துப் போகவே சென்னைக்கு டிக்கெட் போட்டிருந்தார். இல்லை என்றால் பெங்களூருவில் இறங்கிப் போயிருப்பார். அங்கே இருந்து போறது அவருக்குக் கொஞ்சம் சுளுவாக இருந்திருக்கும்.

மகளைப் பார்த்துப் பேசி, கூடக் கூட்டிக்கொண்டு சென்னையிலிருந்து இன்னொரு விமானம் எடுத்துப் பெங்களூரு செல்லலாம் என்றாலும் செக் இன், செக் அவுட், ஃபிளைட் டைம், டிராவல் டைம் என்று எல்லாம் கணக்குப் போட, காரில் போவது நல்லது என்று முடிவு செய்யப்பட்டது.

அருணா சொல்லி வினித் அனைத்தையும் பார்த்துக் கொண்டது நல்லதாகப் போய்விட்டது. இவர் சைந்தவியைப் பற்றி எண்ணிக்கொண்டது போலில்லாமல் அவனே சைந்தவியைச் சரிக்கட்டி இருந்தான்.

அப்படித்தான் சரள்கண்ணன் நினைத்தார். அவன் அலெக்ஸை உடன் வைத்துக் கொண்டு எல்லாமும் பார்த்து ஏற்பாடுகளைச் செய்தது வரை சரியே. ஆனால், சைந்தவியாகவே கிளம்பி இருந்தாள் என்பது தானே உண்மை.

புதிய வேலையின் நியமனம் பற்றிய குழப்பம் தவிர, ஊருக்குப் போகாமல் இருந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணமே இல்லை. இந்த மாதிரி என்று சொல்லப்பட்டதும் எப்படி அவளால் பின் தங்க முடியும்?

“ஒரு சான்ஸ் எடுக்கலாம்ங்க.” ஓட்டுநர் மீண்டும் சொன்னதும், சரள்கண்ணன் யோசித்து இருந்தாலும் அதற்குச் சம்மதித்துத் தலையாட்டினார்.

இப்போது ஓட்டுநர் விரைய, “பார்த்துப்பா…” சரள்கண்ணன் பத்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். சைந்தவி எல்லாம் பார்வையாளராய் உள்வாங்கிக் கொண்டிருந்தாள். மனத்திற்குள்ளே நினைத்துக் கொண்டாள்…

‘வெளிநாட்டுக்கு எதுக்குப் போக? போகாம இங்கேயே இருந்திருந்தா இப்போ இப்படித் துடிக்க வேண்டாம்ல.’

அப்பாவிடம் தென்பட்டக் களைப்பையும் தாண்டி முகத்தில் சோகமே அதிகமாகத் தெரிய, அவரைப் பார்த்தவளுக்குள் இரக்கம் சுரக்கவில்லை. என்னவென்று வரையறுக்க முடியாத ஓர் உணர்வலை தான் அந்த நிமிடத்தில் அவளை ஆட்கொண்டது.

அவளால் அவரை இப்படி ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இப்போதும் அவர் மலேசியா சென்றதை முற்று முழுவதுமாக வெறுத்தாள்.

அவரைப் பிரிந்து தனியே இருந்த அவளுடைய சிறு வயது பிராயத்தில் கூட, அப்பாவைப் பிரிந்து இருக்கிறோம் என்கிற ஏக்கமும் கவலையும் தான் இருந்தன. அவரை வெறுத்தது இல்லை.

‘தன்னை இப்படியொரு இக்கட்டில் நிறுத்தி இருப்பது இவர் தானே? பெத்த அப்பாவையே வெறுக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏன் கொடுக்கணும்?’ தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரத்திலேயே அவளுக்குத் தோன்றியது, ‘இவ்வளவு கொடுமைக்காரியா நான்?’. உதட்டைக் கடித்து உணர்ச்சிகளைக் குடித்தாள். சுய அலசல் பிடித்து வைத்த அந்தச் சில நிமிடங்களில் கண்ணெதிரே திரை ஒன்றைக் கட்டிவிட்டது போலப் பல காட்சிகள் வலம் வந்து கொண்டிருந்தன.

அம்பாரியாய் ஏற்றிக்கொண்டு
அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே
கிடந்ததும் ஓர் சுகம்...

வளர்ந்ததுமே யாவரும்
தீவாய்ப் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை
எங்கே காண்கிறோம்…
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே…

ஞாபகங்களில் இருந்து மீண்டு நினைப்பு வந்ததும் அப்பாவின் பக்கம் பார்த்தாள். பக்கவாட்டுத் தோற்றத்திலேயே அவருடைய அலைப்புறுதல் கண்களுக்குப்பட்டது.

கையைத் திருப்பிக் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்ப்பதும், பின்னர் வெளியே பார்ப்பதுமாக இருந்தார். இவள் அவருடைய பார்வையைத் தொடர்ந்த போது, கிலோ மீட்டர் குறிப்புகளைப் பார்த்துவிட்டு நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.

அவரையே வெறுப்பாகப் பார்க்கும் போது அவரைச் சார்ந்த எல்லாமும் அவளுக்கு ஒன்றுமில்லை தான். இருந்தாலும் மனத்திலே ஒட்டிக் கொண்டிருக்கும் ஈரம் அன்பினால் தோய்ந்துள்ளது ஆயிற்றே? பிசுபிசுத்து மனத்தை உசுப்பியது.

மொபைலை எடுத்து, மடமடவெனக் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

‘வினித், சேலம் பிளைட்டுக்கு ஏன் எங்களை புக் பண்ணலை?’

‘ரொம்ப சீக்கிரம் இந்தக் கேள்வியைக் கேட்டுட்டியே?’

உடனே பதில் தந்தான்.

‘ப்ச் நீ வேற… ஏன்னு சொல்லு!’

‘எதுக்கு இப்போ இந்தக் கேள்வி… இங்க திருப்பி வந்து அந்தப் ஃபிளைட்டை பிடிக்கப் போறியா என்ன?’

‘என்னன்னு கேட்டா பதிலை ஒழுங்கா சொல்லணும்! அதைவிட்டுட்டு… என்னாச்சு உனக்கு இந்த நேரத்தில் நக்கல் பண்ணிட்டு இருக்க?’

‘உங்க அப்பாவை நீ ரிசீவ் பண்ண லட்சணத்தைப் பார்த்துட்டு வந்த கடுப்பு. வேறென்ன?

🙄🙄🙄🙄🙄🙄

கண்ணை உருட்டிப் பார்க்கும் எமோஜிகளைத் தட்டிவிட்டாள்.

‘நீ திருந்த மாட்டேயில்ல?’

அவன் கேட்டான்.

🙃🙃🙃🙃🙃🙃

அதற்கு அவளிடம் இருந்த வரிசைகட்டிக் கொண்டு தலைகீழ் ஸ்மைலிக்கள் பறந்தன.

‘நான் தலைகீழா நின்னு பார்த்தாலும் மாட்டேன்ற? ரைட்டு! நான் இனி மேல் பேசுறதுக்கு ஒன்னுமில்லை. அந்த ஃபிளைட் ஈவ்னிங் அஞ்சு மணிக்கப்புறம் தான் டைமிங். தெரியுமில்ல? அதுவும் போக இன்னைக்கு அதுவும் இல்லையாம். கேன்சல் பண்ணி வச்சிருக்காங்க.

உங்கப்பா வந்து இறங்க லேட்டாகும்னு தெரிஞ்சதும் அலெக்ஸ், நீங்க சீக்கிரம் போக வேற எதுவும் வழியிருக்கான்னு எல்லாத்தையும் பார்த்திட்டான். உங்கப்பாவுக்கும் தெரியும். உங்க வீட்டுக்குத் தகவல் தெரிவிச்சிட்டாரு.

நீ இதையெல்லாம் வெட்டியா யோசிச்சது போதும். இப்போ உருப்படியா யோசிச்சு கொஞ்சம் படா (பெரிய) மனசு பண்ணி அவருக்குத் துணையா நில்லு.

ஏற்கெனவே நொந்து போயிருக்கும் மனுசனை மேலும் வருத்தப்பட வச்சு தொலைக்காதே. இப்ப எனக்கு மெசேஜ் பண்ணுறதை நிறுத்து. நான் ஆஃபீஸ்ல இருக்கேன். ரொம்ப முக்கியமான வேலை போயிட்டு இருக்கு.’

‘Ttylbye!’

அப்புறம் பேசலாம் என்று சைந்தவியும் வினித்திற்கு ‘பை’ சொன்னாள்.

அவன் முக்கியமான வேலை போயிட்டு இருக்கு என்று சொன்னதும் புரிந்து கொண்டாள். அவளுக்குள்ளே இருக்கும் மனிதாபிமானம் எட்டிப் பார்த்ததில், அப்பாவிற்காக இப்போதும் சப்போர்ட் பண்ணிப் பேசுகிறான் என்று அவனிடம் எகிறவில்லை.

காரை சற்றே வேகத்துடன் தான் அந்த ஓட்டுநர் செலுத்திக் கொண்டிருந்தான். ஒரே ‘டீ பிரேக்’ எடுத்ததுடன் சரி. வேறு எங்கும் அவர்கள் காரை நிறுத்தவில்லை.

அவ்வளவு விரைந்த போதும் உபயோகமில்லாமல் போனது. முக்கால்வாசி தூரத்தைக் கடக்கும் போதே நேரம் ஐந்தரையைக் கடந்து இருந்தது.

சென்னையைவிட்டு அவர்கள் கிளம்பிய நேரக்கணக்கின்படி நாற்பது நிமிடங்களுக்கு முன்னரே அவர்களுடைய ஊரான தர்மபுரிக்கு வந்திருப்பார்கள். ஆனால், தர்மபுரி வரும் முன்னரே வானம் இருட்டிக் கொண்டு வந்தது. அவர்களைத் துரத்திக்கொண்டு வந்த மழை மேகங்கள் முந்திச் சென்று இறங்கி இருந்தன.

ஊருக்குள் நுழைய பத்துக் கிலோ மீட்டர் இருக்கும் போதே மழை பிடித்துக் கொண்டது. கொஞ்சம் நஞ்சமில்லை… சரசரவென இறங்கி இடி முழக்கங்களுடன் அடித்துச் சாய்க்க முயன்றது.

“திடீர்னு இப்படிப் பிடிச்சிக்கிடுச்சே!”

ஓட்டுநர் வருத்தத்தை வெளியிட்டபடியே சாலையில் கவனமானான். இருட்டும் மழையும் எனச் சேர்ந்து பார்வைக்குப் பாதையை மங்கலாக்கி இருந்தன.

“பார்த்துப்பா… நீ சூதானமா ஓட்டு. இந்த மழைக்காக எத்தனை ஜனங்க காத்திட்டு இருந்தாங்களோ. பெய்யட்டும் பெய்யட்டும். எல்லாத்துக்கும் ஒரு நேரத்தைக் குறிச்சி வச்சிருக்கு. அது அது அப்ப தானே நடக்கும். நீயும் எங்களுக்காக வேகமாக வந்த. இந்தளவு நீ முயற்சி செஞ்சது ரொம்ப பெரிய விசயம்ப்பா.”

சரள்கண்ணன் ஓட்டுநரிடம் பேசியபடி தனக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டார். சோவெனக் கொட்டும் மழையைக் கண்டதும், ‘இனி எந்த நேரம் போய் இறங்கினால் என்ன?’ என்று நினைத்தவராக உட்கார்ந்திருந்தார்.

வெளியே சொல்லிவிட்டார் தான். அமைதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றாலும், அவரின் மனத்தில் துக்கத்தின் பந்தாட்டம்.

கூடைப்பந்து கூடைக்குள் விழுவது போலவே, துக்கப்பந்து உருண்டையும் மனச்சுவற்றில் முட்டி முட்டி கீழே இறங்கி உருண்டு, வயிற்றைக் கவ்வி பிடித்துக் கொண்டிருந்தது.

அப்பாவின் நிலையைக் கவனித்த சைந்தவி, எட்டி அவருடைய தோளில் கை வைத்து அழுத்தினாள். கண் மூடி அதனைக் கிரகித்தவர், திரும்பி மகளைப் பார்த்தார். அவருடைய கண்கள் கலங்கியிருந்தன.

அவளுக்கு, உள்ளுக்குள் வேதனை சுருண்டு வந்தது. ஆனால், அதனை அவரிடம் வார்த்தைகளாகப் பகிர்ந்து கொள்ளவில்லை. அவருக்கும் பேச்சில்லா மௌனம் ஆட்சி செய்த அக்கணங்களில் மகளின் செய்கையால் பொங்கி வந்தது. அவளின் கையின் அழுத்தம் பலம் தந்தது.

அப்படியே இருவரும் ஊர் போய்ச் சேர்ந்திருக்கலாம். ஆனால், அவரை வேறொரு கடமை அழைத்தது. மழை இன்னும் பெய்தாலும் வேகம் சற்றுத் தணிந்து இருந்தது. காருக்குள் நிலவிய அமைதியில் சரள்கண்ணன் நேரத்தைப் பார்க்க...

‘தாமினி… மினிக்குச் சொல்ல வேண்டும்.’ நினைத்தார்.

நினைத்த உடனேயே தன்னுடைய மொபைலை எடுத்துப் பார்த்தார். எப்போதும் எடுத்து வரும் இந்திய சிம் கார்ட்டை அவசரத்தில் கொண்டு வரவில்லை என்கிற ஞாபகம் மீண்டும் வந்தது.

சென்னையிலேயே அதனைக் கவனித்து இருந்தார். விமானத்தைவிட்டு வெளியே வந்ததும், அங்கேயே விமான நிலையத்திலிருக்கும் பொதுத் தொலைபேசி வழியே தாமினியைக் கூப்பிட்டுப் பேசியிருந்தார்.

இப்போது நேரத்தைப் பார்த்தவருக்கு அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டால் நல்லது என்று பட்டது. இந்திய நேரத்தைவிட மலேசிய நேரம் இரண்டரை மணி நேரம் முன்னே நகர்கிறது.

இன்னும் இருபது நிமிடத்திற்குள் வீட்டைச் சென்றடையும் போது சூழ்நிலை மாறிவிடும். அப்புறம் எப்போது நேரம் அமையுமோ. இப்பவே மலேசியாவில் தூங்கும் நேரம். நினைத்துக் கொண்டே பக்கவாட்டில் திரும்பி மகளைக் கூப்பிட்டார்.

“சவிம்மா…”

“என்னப்பா…”

“உன் மொபைல்ல ஹாட் ஸ்பாட் ஆன் பண்ணி விடுறியாடா? வீட்டுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிடுறேன். அவசர அவசரமா கிளம்பினதுல நம்ம ஊரு சிம் கார்ட்டை எடுத்திட்டு வராம விட்டுட்டேன்.”

“அதுக்கென்னப்பா இதோ ஆன் பண்ணறேன். ஆமா எதுக்கு இப்போ போயி அவங்களுக்கு மெசேஜ் பண்ணிக்கிட்டு? நாம இன்னும் பதினைஞ்சு நிமிசத்துக்குள்ள வீட்டுக்குப் போயிடலாம்ப்பா.

வேணும்னா என் மொபைல்ல இருந்து கால் பண்ணி தகவல் சொல்லுங்க. யாருக்குக் கூப்பிட… நம்பர் சொல்லுங்க.”

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்பாவுடன் நல்ல மாதிரி உரையாடத் தொடங்கினாள். அவளுடைய மனத்தில் தோன்றியிருக்கும் சிறிதளவு இளக்கமும் வினித்தின் அறிவுரைகளும் சேர்ந்து வேலை செய்யத் தொடங்கின.

ஆனால், இந்தச் சுமூக நிலைமை நீடிக்கக் கூடாது என்பது விதியின் சதி போல். தனக்குத் தானே செல்ஃப் ஆப்பு வைத்துக்கொள்ளத் தொடங்கி இருந்தார் சரள்கண்ணன். இடைப்பட்ட காலத்தில் மகள் தன்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டது நிமிடத்தில் மறைந்து போயிருந்தது.

“இல்லடா இது இங்க நம்ம வீட்டுக்கில்ல. மலேசியாவுக்கு… ஊரு வந்து சேர்ந்துட்டேன்னு சொல்லிட்டேன்னா நிம்மதியா போயிரும்.”

சரள்கண்ணன் எந்தத் தயக்கமும் இல்லாமல் மகளிடம் பேசி விசயத்தைப் பகிர்ந்தார். சைந்தவியின் முகம் வினாடியில் சுண்டிப் போனது. சுர்ரென்று கோபம் உச்சிக்கு ஏற, பல்லைக் கடித்துக் கொண்டாள்.

“ஓ… அப்போ உங்க வீட்டுக்குன்னு தெளிவா சொல்லுறது!”

முணுமுணுத்துக் கொண்டாள். அவளுடைய உதடுகள் உணர்ச்சி வேகத்தில் துடித்தன.

சரள்கண்ணன் மகளின் முகமாற்றத்தைக் கவனிக்கவில்லை. மொபைலில் கவனமாக இருந்தார். சைந்தவி, அப்பா கேட்டதுமே ஹாட் ஸ்பாட் (டேட்டா சேரிங்) ஆப்ஷனை ஆன் செய்து கொண்டே தான் அவருக்குப் பதில் சொல்லியிருந்தாள்.

உடனே அவரும் வாட்ஸ்ஆப்பில் மும்முரமாகி விட்டார். இதில் மகளின் நிலைமை அவருடைய கண்களுக்குப் படாமல் போனது.

அவர் வரவை அந்த ஆப்பில் பார்த்தவுடன் தாமினி அழைத்துவிட்டாள். கொஞ்சம் பொறுத்து இருந்தால் கணவருடைய குறுஞ்செய்தியைப் பார்த்து, அதற்குத் தக்கன நடந்திருப்பாள்.

இரண்டு வருடங்களாகச் சரள்கண்ணன் பட்டுக் கொண்டிருக்கும் வேதனை அவளையும் பாதிப்புக்குள்ளாக்கி இருப்பது உண்மை. தங்கள் வீட்டுச் சூழ்நிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவளுக்கு நிரம்ப முக்கியம். அதன் பொருட்டே பக்குவமாக நடந்து கொள்வாள். தன்னுடைய வயிற்றிலே பிறந்த இரண்டு குழந்தைகளின் மனத்தை அவள் வருந்தவிட்டதே இல்லை.

“இன்னும் பத்து நிமிசத்துல ஊர்ல இருப்போம். இன்னைக்குச் சடங்கு செய்ய முடியாது. இங்க ஏழு மணி தாண்டிடுச்சு. நாளைக்குக் காலைல தான் அம்மாவை அனுப்பி வைக்க முடியும். வீட்டுக்குப் போனதும் நிலைமை என்னன்னு பார்த்திட்டு அப்புறமா உனக்கு என்ன ஏதுன்னு தகவல் அனுப்பி வைக்கிறேன் மினி.

குழந்தைகளைப் பத்திரமா பார்த்துக்க. நாளைக்குப் பேசுறேன்னு அவங்களுக்குச் சொல்லிடு. நீயும் படுத்துத் தூங்கும்மா. வெயிட் பண்ணாதே. என்னால உடனே கால் பண்ண முடியாது.”

சரள்கண்ணன், மனைவியின் புரிதலுக்காக இத்தனை விளக்கமான குறுஞ்செய்தியை அடித்து, அனுப்புப் பொத்தானை அமுக்கி முடித்த வினாடியே தாமினி அவரை அழைத்துவிட்டாள். அவள் கணவருடைய குறுஞ்செய்தியைப் பார்த்திருக்கவில்லை.

மொபைலை உள்ளே வைக்கப் போனார் சரள்கண்ணன். அதே நேரத்திலே அது ஒளிர்ந்து ஒலித்தது. மனைவியின் அழைப்பைக் கண்டதும் சரள்கண்ணன் அதனை ஏற்றுப் பேசத் தொடங்கினார்.

“சொல்லு மினி. இப்ப தானே மெசேஜ் அனுப்பிவிட்டேன். நீ பார்க்கலையா?”

“இல்லைங்க உங்களை ஆன்லைன்ல பார்த்ததும் கால் பண்ணிட்டேன்.”

“சரி சரி. குழந்தைங்க சாப்பிட்டுட்டு படுத்துட்டாங்களாம்மா? நீ என்ன செய்றே?”

“எல்லாம் சாப்பிட்டாச்சுங்க. உங்க போன்காலுக்காக தான் காத்திட்டு இருந்தோம். பக்கத்துல உட்கார்ந்து நச்சு பண்ணிட்டு இருக்கா உங்க பொண்ணு. முதல்ல அவ தான் உங்கட்ட பேசணுமாம். இருடி. பேசிட்டு இருக்கேன்ல? நான் உங்கப்பாட்ட பேசி முடிச்சதும் உங்கக்கிட்ட தர மாட்டேனா என்ன? இரு இரு. மொபைலை பிடுங்கிறா. நீங்க உங்க பொண்ணுட்டயே பேசுங்கங்க. அப்புறம் நாம பேசலாம்.”

‘உங்க பொண்ணு… உங்க பொண்ணு’ என்று தாமினி அழுத்திச் சொன்னதை அந்த நேரத்திலும் சரள்கண்ணன் கவனிக்கவே செய்தார்.

‘நான் இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு தடவையும் இவளுக்கு இந்த நிலையில்லாத தவிப்பு எதுக்கு வருது?’

தன்னுடைய இரண்டாம் மனைவியான தாமினியின் பாதுகாப்பற்ற உணர்வு கொடுக்கும் நிலையில்லாத தவிப்பும் பரபரப்பும் அவருக்கு முன்னர் எல்லாம் வருத்தத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், தங்களுக்குத் திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் மாறாமல் இன்னும் அவள் இப்படித் தொடர்வது எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

அதுவும், இப்போது தான் பெரிய இழப்பிற்கு ஆளாகி இங்கே துக்கக் காரியத்துக்கு வந்திருக்கும் போதுமா என்கிற யோசனையால் சற்றுக் கோபம் கூட அவருக்கு.

“மினி மினி பொறு. நா…”

இப்போது தன்னால் பேச இயலாது என்று சொல்வதற்குள்ளே அந்தப்பக்கம் மொபைல் கை மாறி இருந்தது.

“அப்பாஆ…”

அந்த இனிய குரல் அவரைச் சுண்டி இழுத்துப் பிடித்து வைக்க…

“அம்மாடி… சனா… என்னடா பண்ணுறீங்க இன்னும் தூங்காம? நாளைக்கு ஸ்கூல் டே தானே?”

“உங்க பக்கத்துல படுக்காம தூக்கம் வரலைப்பா… பத்து நாள்ல வந்திர்வீங்க தானேப்பா? நான் நீங்க வந்திர்வீங்க சொல்றேன். பட் சரத் இல்லை நாளாகும் சொல்லுறான்.”

“சனா… சனா…”

நெகிழ்ந்து உருகிப் போயிருந்தார் சரள்கண்ணன். இந்தப் பெண் தாமினியின் வயிற்றிலிருந்து பிறக்காததற்கு முன்னரே அவரை இழுத்துக் கொண்டவள். இப்போதோ, இந்தக் குரலும் நேரில் காணும் இவளுடைய பாவனையும் அவரைக் கட்டிப்போடுகின்றன என்பது மிகையல்ல.

“அப்பா… அப்பா… ஐ மிஸ் யூப்பா!”

“மீ டூ மிஸ் யூ சனா கண்ணம்மா! அப்பா இரண்டு வாரத்துக்குள்ள கண்டிப்பா வந்திர்றேன். நீ தம்பி பக்கத்திலே படுத்துத் தூங்குடா. பிக் கேர்ளா சரத்தை நீ தானே கேர் பண்ணனும்.”

குழைந்து போய் ஒலித்த அப்பாவின் குரல், அவருடைய இரண்டு மகள்களை வெவ்வேறு விதமாகச் சென்றடைந்தது.

தூரத்திலே, மலேசியாவில் இருக்கும் மகள் ஷானவியைச் சாந்தப்படுத்தியது என்றால், அவர் அருகே உட்கார்ந்திருக்கும் மகள் சைந்தவியைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தது.

‘மினியாம் மினி! குண்டோதரி அந்தம்மா… அவளைப் போயி இப்படி பேபி ரேஜுக்கு மினி மினின்னு கூப்பிட்டுத் தொலைக்கிறாரு. சைய்! அய்யோன்னு வருது எனக்கு… கத்தணும் போல இருக்கே!’

சைந்தவி தலையைப் பிடித்தபடி குனிந்திருந்தாள். அலை அலையாய் உணர்வுகள் கிளம்பி எம்பி, எம்பி ஆட்டம்‍ போட்டு, அவளை ஆட்டுவித்துக் கொண்டிருந்தன.

இதிலே அவர் ‘சனா சனா’ என்று உருகிக் குழைந்ததும் அதிகமான வேதனை முட்கள் வினாடியில் நெஞ்சை பதம் பார்த்துப் பொத்தல் ஆக்கத் தொடங்கின.

“சபாஷ்! எப்பேர்ப்பட்ட அப்பா இவரு? உசுரோட இவர் இரத்தத்திலே உருவான நான் பக்கத்திலே இவ்வளவு துடிச்சிட்டு இருக்கேன். என்னையும் என்னை நிலைமையையும் புரிஞ்சுக்க முடியலை இவருக்கு.

தனக்கு இரத்த சம்மந்தம் இல்லாத, தான் பெறாத அந்த ஜீவன் மேலே இம்புட்டுப் பாசமா? கொடுத்து வச்சிருக்கு அந்தப் பொண்ணுக்கு. என் அப்பாவை எனக்கு இல்லாம ஆகினது அவளா, இல்லை, அந்த ஆண்டவனா?”

முணுமுணுப்பாகப் பேசிக் கொண்டவள் சத்தம் எழும்பாமல் அழுது கொண்டிருந்தாள். அப்போது அவள் காதில் ஒரு குரல் விழுந்தது…

“அக்காவைப் பார்த்திட்டீங்களாப்பா… அவங்க எப்படி இருக்காங்க? நல்லா இருக்காங்கள்ள. இப்ப உங்க பக்கத்தில் இருந்தா நான் பேசட்டுமா?”

சரத் அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருப்பது சைந்தவியுடைய காதில் விழுந்தது. கேட்டதும் இவள் நினைத்துக் கொண்டாள்…

‘ஹ்ம்… அப்பா பெத்த ரெண்டாவது… இரத்த பாசம் பொங்குது போல இவனுக்கு. என்னை ரொம்ப அக்கறையா விசாரிக்கிறானே!’

அவர்களின் குடும்பக் கூட்டில் தான் இல்லை. தான் என்றும் தனி!

அப்போது கார் அந்தப் பெரிய மதில் சுவர் வைத்த வீட்டின் முன்னால் வந்து சர்ரென்று மழைத் தண்ணீரை இரைத்து நின்றது.

“சரத் வீடு வந்திருச்சு கண்ணா. அப்புறமா நான் ஃப்ரீ ஆகிட்டு உங்களைக் கூப்பிடுறேன். உன் பெரியக்காகிட்ட பேசுவியாம். இப்ப வச்சிர்றேன். அம்மாட்ட சொல்லிடு. அவளை என் மெசேஜ் பார்த்துக்கச் சொல்லு. பைடா!”

மொபைல் அழைப்பைத் துண்டித்துவிட்டு ஓட்டுநர் பக்கம் திரும்பி, “எவ்வளவு ஆச்சுன்னு கணக்கு பார்த்திட்டு உள்ளே வந்து சொல்லுப்பா.”, சொல்லிவிட்டு இறங்குவதில் மும்முரமானார் சரள்கண்ணன்.

அவருடைய வீட்டைப் பார்த்ததும், எப்போதும் வாசலுக்கு ஓடி வந்து தன்னை வரவேற்கும் அம்மா இன்றும் கண் முன்னே தோன்றிப் புன்னகைக்க, அதுவரை அவரிடம் ஒட்டி இருந்த தணிந்திருந்த மனநிலை விடைபெற்றுக் கொண்டது.

மனம் கனத்துப் போனது. கண்கள் சரம் கோர்க்கத் தொடங்கின. அவர் அவருடைய உணர்வுக் குவியலில் அடைபட்டுக் கொண்டார். சைந்தவியோ மோசமான மனநிலையில் சிக்கித் துடித்துக் கொண்டிருந்தாள்.

விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு...

‘இதுவரை எனக்குச் சொந்தமெனச் சொல்லிக்கொள்ள இருந்த அப்பத்தாவும் அவுட். விதி, என்னை மட்டையால் அடிக்காமலேயே தவிக்க வைக்க நினைச்சு இன்னொரு விக்கெட்டை எடுத்திடுச்சு.’

திட்டிக்கொண்டே இருந்தாலும் நல்ல பாதுகாப்புத் தந்து, உலகத்தை ஒரு பெண்ணாக எதிர்கொள்வது எப்படி என்று அவளுக்குக் கற்றுத் தந்தவர். சின்ன வயதில் தாயை இழந்து, இங்கே வந்து புதுச் சூழ்நிலையில் பொருந்திக் கொள்ள முடியாமல், தடுமாறி நின்றவளைக் கடுமையாக எதிர்கொண்டார் என்றே சைந்தவி நினைத்திருந்தாள்.

ஆனால், அப்படி அவர் கடுமையைக் காட்டி, உடலை வணக்கி வேலை செய்ய வைத்தது அவளுடைய நன்மையைக் கருதி என்று காலம் சென்றே உணர்ந்தாள். உணர்ந்தவளுக்கு இதுவரை ஏற்றுக்கொள்ள மனது வரவில்லை.

‘இப்போ அந்தக் கோவக்காரி அப்பத்தாவும் என்னைவிட்டுடுப் போயிடுச்சு!’

ஏற்கெனவே அப்பா… சனா… மினி என்று நொந்து உடைந்திருந்தவளுக்கு, இப்போது இந்த வீட்டைப் பார்த்ததும் அப்பத்தாவின் மறைவும் தாக்க, கேவல்கள் புறப்பட்டன. அடக்கிக் கொள்ள முயன்றாள்.

மழை பலம் கொண்டு பெய்ததால் யாரும் வீட்டிற்கு வெளியே இருக்கவில்லை. நெருங்கிய உறவினர்களும் வீட்டினருமாகச் சிலர் வீட்டிற்குள்ளே இருந்தார்கள்.

வெளி மதில் சுவருக்கும் வீட்டிற்கும் இருபது முப்பது அடிக்கும் மேலேயே தூரம். உள் அமைப்பில் இருந்த வீட்டுக்குள்ளே இருந்தவர்கள் மழையின் இரைச்சலால் இவர்களுடைய வரவை அறியவில்லை.

ஆனால், முதல் மாடியில் இருந்த வசந்தன் கார் வந்ததைக் கவனித்துவிட்டான். ஜன்னல் அருகே உட்கார்ந்து முக்கியமான பைலை பார்வையிட்டுக் கொண்டு இருந்தான். காரின் ஹெட்லைட் வெளிச்சம் வந்து விழ, வெளியே எட்டிப் பார்த்ததும் கண்டு கொண்டான்.

வந்துள்ளது யார் என்று உணர்ந்ததும் பார்த்துக் கொண்டிருந்த பைலை மூடி பத்திரப்படுத்திவிட்டு எழுந்தான். மேல் சட்டையை அணிந்தபடி குடையை எடுத்துக்கொண்டு, படிகளில் விறுவிறுவென இறங்கினான்.

கடைசிப் படியை வந்தடையும் முன்னர், “மணீ… மணீ” குரல் கொடுத்தான்.

“சார்…”

மாடிப்படி அருகே, கீழே அமைந்திருக்கும் அந்த அறையிலிருந்து வசந்தனுடைய உதவியாளர் மணிகண்டன் அவசரமாக வெளியே வந்தான்.

“அவங்க வந்துட்டாங்க மணி. குடை எடுத்திட்டு வாங்க. சீக்கிரம்!”

“அவங்களா... யாரு சார்?”

அப்போது தான் அறைக்குள்ளே நுழைந்து அக்கடா என்று உட்கார்ந்து இருந்தான் மணிகண்டன். வசந்தன் மீண்டும் கூப்பிட, அவனுக்கு இருந்த அலுப்பில் குழப்பம் வந்துவிட்டது.

“உங்களுக்கு இப்ப விளக்கம் சொல்லிட்டு இங்கேயே நிக்கவா? இல்லை, வெளியே வந்திருப்பவங்களை ரெண்டு பேரும் போய் மழையில் நனையாமல் உள்ளே கூப்பிட்டு வரலாமா?”

கேட்டுக்கொண்டே வசந்தன் முன்னால் விரைய, “குடையை எடுத்திட்டு இதோ வர்றேன் சார்.” மணிகண்டனும் வசந்தனைத் தொடர்ந்து வெளி வாசலை நோக்கிப் போனான்.

வெளியே அரவத்தை உணர்ந்து தென்னம்பாளையும் வந்துவிட்டார்.

“கண்ணைய்யா வந்துட்டாரு” உள்நோக்கிக் குரல் கொடுத்துவிட்டு அவரும் ஒரு குடையை விரித்துக்கொண்டு வெளி கேட்டைப் பார்த்துப் போக, அங்கே நிலைமை பரபரப்பாகி இருந்தது.

வெளியே வந்த வசந்தன் முதலில் பார்த்தது சைந்தவியைத் தான். மழைச்சாரல்களுக்கு இடையே ஊடுருவிய அவனுடைய பார்வையில் கலங்கிய கண்களுடன் சோகச் சித்திரமாய் அவள்!

அவளைச் சந்தித்த பார்வை, விழி வழியே இதயத்திற்கு அனுப்பி வைத்த உணர்வில் அவனுடைய சின்ன இதயம் அவளுக்காக வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது!
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்


ஆர்த்தி ரவி


அத்தியாயம் 12:


“வசந்த்…”


சரள்கண்ணன் காரிலிருந்து இறங்கும் போதே வசந்த் அவரின் அருகே வந்துவிட்டான். முன்னால் கையை நீட்டி அவர் நனையாமல் குடையைப் பிடித்து நின்றான். அவரின் தழுதழுத்த விளிப்பில், மற்ற கையால் அவரைப் பற்றிக்கொண்டு தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்தான்.


அந்த மனக் கனத்தை என்ன பேசி தகர்ப்பது? வார்த்தைகளைத் தொண்டைக்குழிக்குள்ளே ஓய்வெடுக்கத் தள்ளினான். மௌனமும் கைப்பற்றல் வழியே மொழியாய்… மழைச்சாரலின் ஊடே கனமான கணங்கள்!


வசந்த் இன்று தான் சரள்கண்ணனை முதல் தடவை நேரில் சந்திக்கிறான். அவரை இதற்கு முன் நேரில் சந்தித்ததே இல்லை என்றாலும், கடந்த நான்கு மாத பழக்கத்தில் நன்றாகவே அவரை அறிவான். இருவரும் தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள்.


“வசந்த்… அம்மா?”


தன்னுடைய இழப்பை முதல் முறை இன்னொருத்தரிடம் காட்டி, என்ன. எப்படி என்று கேட்காமலேயே கேட்டு அங்கே சரள்கண்ணன் நிற்க, வசந்திற்கு அவரின் பரிதவிப்பும் கேள்விகளும் பேசாமலேயே புரிந்தன. அவருடைய தவிப்பும் கலங்கிய முகமும் இவனையும் பாதித்தன.


என்ன தான் இரத்தக் கலப்பும் உறவும் இல்லையென்றாலும், பரிமளம் பாட்டியின் எதிர்பார்த்திராத இறப்பு வசந்தை மிகவும் வருத்தப்பட வைத்தது. குறைந்த காலத்திலேயே இருவருக்குள்ளும் நல்ல பழக்கம் ஏற்பட்டிருந்தது. அன்பும் பாசமும் உருவாகி அவர்களை ஒரு வகையில் பிணைத்து இருந்தது.


முந்தைய இரவில் தன்னைக் கூப்பிட்டு வைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தவரின் உயிர், காலையில் மண்ணுலகை விட்டுப் பிரிந்திருந்ததை அவனால் ஜீரணிக்க முடியாமல் போனது. இன்றைய பொழுது முழுவதும் துக்கத்துடன் கடந்து இருந்தது.


இரவில் தாங்கள் பேசிய பேச்சின் கனம் தாளாமல் மட்டுமில்லை, சில காலமாக பரிமளம் அனுபவித்து வந்த மனத்தின் கனம் தாளாமல் இப்படியொரு திடீர் மரணம் நிகழ்ந்திருக்கிறது என்று வசந்த் நினைத்தான்.


அவனுக்குள் கலவையான உணர்வுகள் ஆக்கிரமிப்பைச் செலுத்த தொடங்கி இருந்தன. அவனாலும் அவற்றை உணர முடிந்தது. ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்பை மனத்தில் நிறுத்திக் கொண்டான்.


தான் கற்றுத் தேர்ந்திருக்கும் பாடங்களும் அவற்றைச் செயல்படுத்தும் அனுபவம் கொடுத்திருக்கும் ஞானமும் பலவற்றிற்கு உதவி செய்கிறது. ஆனால் இந்தப் பொறுப்புக்கு அந்த ஞானம் அவனுக்கு உதவுமா?


“அம்மா…”


சரள்கண்ணனின் கேள்வியைப் புரிந்தவனாய் பதில் சொன்னான் வசந்த்.


“நம்ம காலைல பேசினதும் ஐஸ் பாக்ஸ்க்கு (குளிர் சாதனச் சவப்பெட்டி) ஏற்பாடு பண்ணிட்டேன் அங்கிள். ரெண்டு மணி நேரத்துக்குள்ளேயே வச்சிட்டோம். உங்க அக்காவும் வந்திட்டாங்க. நாளைக்கு என்ன செய்யணுமோ அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து வச்சிருக்கு. மழையிலே நனையாம இப்ப நீங்க உள்ளே போங்க.”


“ம்ம் சரிப்பா.”


வசந்திற்குத் தலையாட்டியவர் மகளைக் காண, இன்னும் காருக்குள்ளேயே இருந்தாள்.


“சவிம்மா… சவீ… கீழே இறங்கி வாடா.”


சைந்தவிக்கு அவருடைய குரல் எட்டவில்லை. அவள் சுற்றுப்புறத்தையே உணராத போது, அப்பா கூப்பிட்டது எங்கே கேட்டிருக்கும்?


வசந்தின் பார்வையில் துல்லியமாக அவளுடைய கோலம் விழுந்திருக்க, ‘இவருக்கு மகளுடைய நிலைமை கண்ணில் படவில்லையா?’ நினைத்துக் கொண்டு சரள்கண்ணனுக்குப் பதில் தந்தான்.


“நான் அவங்களை உள்ளே கூப்பிட்டுட்டு வர்றேன். நீங்க முன்னால போங்க அங்கிள்.”


மகளின் பக்கம் அவர் பார்க்க, கீழே குனிந்திருந்தாள். ஏதோ உடைமைகளைச் சேகரித்துக்கொண்டிருக்கிறாள்… பொருட்களை எடுத்துக்கொண்டு வருவாள் என்றே அவர் நினைத்தார்.


அவளுடைய நிலைமை அவருடைய கருத்தில் பட்டிருக்கவில்லை. தன்னால் மகள் மீண்டும் தவிப்பிற்குள்ளாகி அழுது கரைந்தது அவருக்குத் தெரியாமலே போனது அவருடைய துரதிஷ்டம்.


இங்கே வந்து சேர்ந்ததும் மகளுக்கும் அம்மாவின் இழப்பை நினைத்து ஒரு பாதிப்பு இருக்குமே என்கிற கலக்கம் அவரிடம் ஒட்டிக் கொண்டது. தயக்கத்துடனே “சரிப்பா… ரொம்ப சென்சிடிவ் சவிம்மா… பார்த்து வசந்த்.” என்றார்.


“ஐ வில் டேக் கேர் அங்கிள்.”


அழுத்திச் சொன்னான் வசந்த். சரள்கண்ணன் அந்த அழுத்தத்தைக் கவனிக்கவில்லை.


“மணீ…”


“சார்!”


வசந்த் குரல் கொடுத்ததும் அவசரமாக வந்த மணிகண்டன் பணிவுடன் எதிரே நின்றான்.


“அங்கிளை உள்ளே அழைச்சிட்டுப் போங்க மணி. அவரை உள்ளே விட்டுட்டு நீங்க திரும்ப இங்கே வாங்க.”


“சரி சார்.”


வசந்திற்குப் பதில் தந்துவிட்டு மணிகண்டன் சரள்கண்ணனுக்குக் குடை பிடிக்க நகர்ந்தான். அதுவரை தள்ளி நின்றிருந்த தென்னம்பாளை வேகமாக வந்து அந்த வேலையைத் தனதாக்கிக் கொண்டார். இவ்வளவு நேரம் வசந்த் சரள்கண்ணனின் அருகே இருக்கவும் மரியாதையின் பொருட்டுத் தள்ளியே நின்றிருந்தார் தென்னம்பாளை.


“ஐயா…”


சரள்கண்ணனை அருகே பார்த்ததும் தழு தழுப்புடன் விளித்தார் தென்னம்பாளை. அவருக்குப் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது.


பரிமளத்துடன் அதிகமாகத் தங்கிவிட்டது தென்னம்பாளை ஒருவர் மட்டுமே. ‘அம்மா’ என்கிற நிலையில் வைத்துப் பார்த்துக் கொண்டவர். எடுபிடி, வேலைக்காரன், தோட்டக்காரன், கணக்குப்பிள்ளை என்று எல்லா விதமான பாத்திரத்தில் பொருந்தி வந்தவர்.


சரள்கண்ணனின் துவண்டிருக்கும் தோற்றமும் மெல்லிய நடுக்கமும் கருத்தில் பட, தென்னம்பாளை துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு தங்களுடைய கண்ணைய்யனை முகப்பு வாசலைத் தாண்டி உள்ளே அழைத்துப் போனார்.


இப்போது மழையும் மெல்லிய தூரலாக மாறியிருந்தது.


அவர்கள் இருவரும் உள்ளே போக, வசந்த் பின் சீட்டில் உட்கார்ந்திருக்கும் சைந்தவியைப் பார்த்தபடி அவளருகே வந்தான். அந்தச் சமயத்தில் தான் கார் ஓட்டுநர் அவனை முழுமையாகப் பார்க்க முடிந்தது.


வசந்தின் முகவடிவம் அவனுடைய மண்டைக்குள் டார்ச் லைட்டால் லைட்டாக தட்டி ஒளி பரப்ப, அந்த வெளிச்சம் கண்கள் வரை நீண்டது.


‘அவரா இவரு?’ நினைத்தவனின் நினைப்பு உறுதிபடவும் அவனருகே சென்று, “வணக்கம் சார்!” பணிவு காட்டி நின்றான்.


ஒரு தலை அசைப்புடன் ஓட்டுநருக்குப் பதில் கொடுத்துவிட்டு, “மணி, இவருக்கு எவ்வளவு செட்டில்மெண்ட்ன்னு பார்த்திட்டு அப்படியே லக்கேஜ் எல்லாம் உள்ளார கொண்டு போய் வச்சிடுங்க. மேலே வந்து என்கிட்ட பணத்தை வாங்கிக்குங்க மணி.” என்றான்.


சைந்தவியின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவள் இவனைக் கவனித்த அறிகுறியே இல்லை.


“சைவி…”


அவள் உட்கார்ந்திருந்த பக்கம் காரின் கதவைத் திறந்து தலையை உள்ளேவிட்டு கூப்பிட, சைந்தவி அழுகையின் மிச்சத்தில் இருந்தாள்.


“சைவி மா.”


வசந்த் அறியாமலேயே ஆதுரமாக விளித்திருந்தான். விழுக்கென்று சைந்தவி நிமிர்ந்து பார்த்தாள். அம்மா மதுமிதாவிற்குப் பின்னர் அவளை சைவிம்மா என்று கூப்பிடுவது வினித் ஒருவனே.


வினித் தன்னை முன்னே அனுப்பி வைத்துவிட்டு, பின்னர் மனம் கேளாமல் அவனும் பின்தொடர்ந்து வந்துவிட்டானோ என்று நினைத்து குழப்பம் அடைந்தாள். துயரத்தில் சாய்ந்து கொள்ளத் தோள் தேடி பரிதவித்தது அவளுடைய மனது.


நிமிர்ந்து யார் சைவிம்மா சொன்னது என்று பார்க்க வேறு ஒருவன் நின்றிருந்தான்.


‘கண்ணெதிரே நிற்பது வினித் இல்லை… நெடு நெடுவென வளர்ந்து நிற்கும் இந்த நெட்டுவாங்கி யாரு?’


எதிரே நிற்பது வினித் இல்லை!


வசந்தைப் பார்த்ததும் வினித்தை எதிர்பார்த்த சைந்தவியின் நெஞ்சம் ஏமாற்றம் அடைந்தது. ஏமாற்றம் இன்னும் கொஞ்சம் கண்ணீரை இரைத்துப் பாத்திகள் எனக் கன்னங்களில் பாய்த்தது!


மனத்தில் துக்கமும் அநாதரவான நிலையின் அழுத்தமும் துன்புறுத்த, அலைபாய்தலும் கண்ணீருமாய்க் கருமணிகள்!


அவளுடைய கண்ணீரையும் துக்கத்தையும் பார்த்த வசந்த் ஒரு வினாடி வியப்பில் நின்றான்!


‘எப்படி இந்தளவுக்குத் துக்கம் சாத்தியம்? அப்பத்தாவை இவளுக்குப் பிடிக்குமோ?’


குழம்பி நின்றிருந்தாலும், ‘ரொம்ப அழுறா. அழுகையை நிறுத்துன்னு இப்போ சொல்லவும் முடியாது.’ நினைத்துக்கொண்டான்.


அவளைப் பார்த்ததில் இருந்து அவனுடைய உள்ளத்தில் ஒரு தவிப்பு உண்டாகி இருந்தது. அத்தவிப்பு ஏன், எப்படி என்றெல்லாம் புரிபடவில்லை. ஆனால், அவளைச் சமாதானப்படுத்தி அவளுடைய அழுகையை நிறுத்திவிட நெஞ்சம் சொன்னது.


முதன் முதலாய் அவனுடைய குணவியல்பு மாறியது… அவளுக்காக… அவளிடம் மட்டுமே!


அவளை உற்றுப் பார்த்து, “பெரியவங்க… வயசாச்சில்ல? நல்ல முறையிலே உயிர் பிரிஞ்சிருக்கு. அவங்க உடம்பளவுல எந்தக் கஷ்டமும் படலை சைவி. அழாதீங்க…” பரிவுடன் சொன்னான்.


அவனுக்கு சைந்தவியின் அழுகையைக் காண காண நெஞ்சம் பரிதவித்தது. உள்ளுக்குள்ளே கசக்கிப் பிழியும் உணர்வு. அத்துணை வேதனை எங்கிருந்து வந்ததாம்? தெரியவில்லை… அழுத்தம் அடர் பாசி போல் உள்ளமெங்கும் படரத் தொடங்கியது.


காலையிலிருந்து யார் யாரோ வந்து அழுதிருந்தார்கள் தான். அதைப் பார்த்து, துக்க அனுஷ்டிப்பு என்று தான் இருந்தான். ஒப்பாரியும் அழுகையும் மரணத்தை மனிதன் எதிர்கொள்ளும் முறை என்று இத்தனை காலமும் சாதாரணமாகக் கடந்து வந்தவன் தானே?


இப்போது மட்டும் ஏன்? ஏனென்று தெரியாமலேயே மனது துடித்தது. சைந்தவியின் அழுகை அவனுடைய சின்ன இதயத்தின் கனத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தது.


“சைவி அழாதீங்க… சைவி… சைவிம்மா…”


அழுத்திக் கூப்பிட்டு அவளுடைய கவனத்தைத் தன்னுடைய பக்கம் திருப்ப, அவள் முகத்தின் முன்னே கையை நீட்டியபடி பேசினான்.


மீண்டும் சைவிம்மா… அந்தக் குரலில் சைந்தவி தன் நிலை குலைந்தாள். கேவல் ஒன்று புறப்பட, சட்டெனக் கண்களின் முன்னே நீண்டிருக்கும் கையிலே அவளுடைய முகம் புதைந்தது.


கரகரவெனக் கண்ணீர் சுரக்க, கேவலை அடக்க முயன்று தோற்றுப் போய், பொங்கிய அழுகையை வசந்தின் கைகளில் வழிய விட்டாள்.


அவனுக்கு அவள் அப்படி உடைந்து போகக் கூடும் என்று தோன்றி இருக்கவில்லை. கையில் முழுதாக வட்ட நிலவு புதைந்துள்ளது போலவே!


வெண்ணிலவு எங்கே கண்ணீர் சிந்தும்? கரு மேகங்கள் சூழ வானம் பொழிவது போலவே!


தான் ஸ்பரிசித்துக் கொண்டிருக்கும் முகவடிவை விட, கையை நனைக்கும் சூடான கண்ணீர் பரபரவென்று அவனுக்குள் ஊடுருவியது. முதலில் அவளின் செய்கையை எதிர்பாராத திடுக்கிடலுடன் திகைத்து நின்றான். வினாடிகளிலேயே சுதாரித்தும் கொண்டான்.


“சைவிம்மா… என்ன… என்ன இது? இவ்வளவு அழுதா உங்க அப்பத்தாவின் ஆத்மா எப்படி இங்க இருந்து நிம்மதியா கிளம்ப முடியும்? நீங்க அவங்களுக்கு முட்டுக்கட்டையா நிக்கலாமா? நல்லவிதமா நாளைக்கு அனுப்பி வைக்கத் தயாராகிக்கணும்.


அவங்களோட கடைசி நேர மூச்சுல நீங்க மட்டும் தான் நிறைஞ்சி இருந்தீங்க. உங்களைப் பற்றித் தான் அவங்க பேச்செல்லாம் இருந்தது. மனசைத் தேத்திட்டு முதல்ல வீட்டுக்குள்ள போங்க. இப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்கப் போறீங்க? ஹ்ம்…”


வசந்த் சைந்தவியைத் தேற்ற முயன்றான். அவனுடைய வார்த்தைகள் மென்மையாக இதத்துடன் ஒலித்தன. சைந்தவிக்குள் அவன் பேசியது இறங்கியது. மனவலிக்கு மருந்தாய் அவனுடைய அக்கறை!


நிலவு பந்தைக் கையில் ஏந்தி இருக்கிற மாதிரி மென்மையுடன் அவளுடைய முகத்தைத் தன்னுடைய கையிலே தாங்கி நின்றிருந்தான் வசந்த்.


அவளுடைய சூடான கண்ணீர் வசந்தின் கையை நிறைத்தது. நெஞ்சிலும் அச்சூட்டை உணர்ந்தான். மற்ற கையை அவளுடைய தலையில் வைத்து அழுத்திவிட்டு, சில வினாடிகளை அவளுக்குக் கொடுத்தான்.


“சைவிம்மா…”


மனத்துடிப்பால் கரகரத்துப் போயிருந்த தொண்டையைச் சரி செய்துவிட்டு, சற்றுக் குரலை உயர்த்திச் சொன்னான்.


“போதும் சைவி…”


கண்களைத் துடைத்தபடி அவனை நிமிர்ந்து பார்த்து அவள் சொன்னாள்…


“தேங்க்ஸ்! உங்க அக்கறையாலே இந்த அநாதையைக் கொஞ்ச நேரம் தாங்கிப் பிடிச்சிக்கிட்டதுக்கு.”


திடுக்கிட்டான் வசந்த். அவளுடைய வார்த்தைகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவளின் கண்ணீர் அப்படியே நின்றுவிட்டது. குரலில் அத்தனை வெறுமை நிறைந்து இருந்தாலும், நிமிடத்தில் கட்டுப்படுத்திக் கொண்டது வசந்தைக் கவர்ந்தது.


ஆனாலும், அவள் நன்றி சொன்னவிதம் அவனை, ‘எட்ட நில்’ என்று குறிப்புக் காட்டியதால் வருத்தம் கொண்டான். ‘அநாதை’ சொன்னது சகிக்கவில்லை.


“சைவிம்மா என்ன இது அநாதைன்னு சொல்லிட்டு?” கண்டித்தான் வசந்த்.


“சாரி நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது! நீங்க சொன்ன…” ‘க்கூம்’ தொண்டையின் இளக்கத்தை இறுக்கிக்கொண்டு தொடர்ந்து பேசினாள் சைந்தவி… “உங்க சைவிம்மால கொஞ்சம் தடுமாறிட்டேன். அதை விட்டுடுங்க. சைந்தவி… கால் மீ ஒன்லி சைந்தவி!”


‘இவள் தான் சில நிமிசங்களுக்கு முன்னால ஆறுதல் தேடி தவித்ததா? என்னா அழுகை? இப்ப எப்படி இந்த மாதிரி பேசுறா? இந்த முரண்பாட்டை நம்ப முடியலையே!’


சட்டென்று மாறிய வானிலை போல அந்த அழுகாச்சி சீனும் மாறிப் போனது, வசந்திற்கு நம்ப முடியாத ஒன்றாகப்பட்டது.


‘எனக்கே ஆர்டர் போடுற நீ?’ வியப்புடன் கேட்டுக்கொண்டான் வசந்த். அந்த நேரம் சூழ்நிலை மறந்தவனாய் முறுவலித்தான். இவன் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க, அவள் இப்படி ஓர் ஆள் அங்கே கண் முன்னால் இல்லாத மாதிரி நடந்து கொண்டாள்.


அவளுடைய டிராவல் பேக், கைப்பை, மடிகணினி சகிதம் காரைவிட்டு கீழே இறங்கினாள். வழியில் நிற்பவனை இடித்துக்கொண்டு உள்ளே சென்றாள். இடித்துவிட்டோமே என்று தயங்கவும் இல்லை… இத்தனை நேரம் தனக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னவனைப் பொருட்படுத்தவும் இல்லை.


‘பாட்டி சொன்னது சரி தான்… ரொம்ப கஷ்டம்டா!’


தனக்குள் சொல்லிக் கொண்ட வசந்தும் உள்ளே வர, சைந்தவி தடதடவென மாடிப்படிகளைக் கடந்து மேலே போய்க் கொண்டிருந்தாள்.


“பாப்பா… பாப்பா எங்க போறீங்க? கீழ வாங்க.”


தென்னம்பாளை பதற்றத்துடன் சைந்தவியைப் பார்த்துச் சொல்ல, “எதுக்கு இப்படிப் பதட்டப்படுறீங்க பாளை? அவள் போகட்டும் விடுங்க.” வசந்த் அவளைப் பார்த்தபடி அவரிடம் நிதானமாகச் சொன்னான்.


“இல்லங்கைய்யா… பாப்பாவுக்குத் தெரியுமோ என்னவோ. நீங்க… மேல... நான் வேணும்னா மேல போயி சொல்லிக் கூப்பிட்டுட்டு வர்றேனுங்க?” பணிவும் தயக்கமுமாக கேட்டு நின்றார்.


“அவங்க தான் இப்பக்குள்ள இந்தப்பக்கம் வரவே இல்லையே. அவங்களுக்குத் தெரிஞ்சு இருக்காது. இருக்கட்டும் விட்டுடுங்க. நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க. வேற வேலை இருந்தா பாருங்க. இங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாம் சாப்பிட்டாச்சான்னு கேட்டுக்கங்க. உங்க கண்ணைய்யா, சைவிம்மாவுக்கு எதாவது ஏற்பாடு பண்ணி இருக்கீங்களா? இல்லை நான் வாங்கிட்டு வரச் சொல்லி விடவா?”


சாப்பாட்டு ஏற்பாட்டைப் பற்றித் தென்னம்பாளையிடம் பேசிவிட்டு, வசந்த் மேலே போகாமல் கீழ் வீட்டிற்குள் நுழைந்தான்.


அங்கே பரிமளத்தை வைத்திருக்கும் பெட்டி அருகே, சரள்கண்ணனைக் கட்டிக்கொண்டு அவருடைய அக்கா காயத்ரி அழுது கரைந்து கொண்டிருந்தார். சுற்றி இருந்த சொந்தங்களும் கண்ணீரும் புலம்பலுமாக இருந்தனர்.


இவனைப் பார்த்ததும் அங்கிருந்த சிலர் எழுந்து நிற்க, இவனுக்கு அங்கே நிற்கச் சங்கடமாக இருந்தது. காலையிலிருந்து சில தடவை சொல்லிவிட்டான். இந்த மரியாதை எல்லாம் இங்கே காட்ட வேண்டாம் என்று. ஆனாலும் அவர்கள் கேட்பதாகத் தெரியவில்லை.


சரள்கண்ணனுடன் சில நிமிடங்கள் நின்று இருந்தான். அவனுடைய பார்வை பரிமளம் பாட்டியிடம் நின்றது. மீளாத்துயிலில் சென்று விட்டவரின் உடலை இமைக்காமல் பார்த்தான்.


‘நீங்க கேட்டப்ப வராத உங்க பேத்தி இப்ப வந்திருக்கா பாட்டி. அவகிட்ட என்னென்னமோ பேசணும்னு சொன்னீங்கள்ள… ஆனா, இப்படியா? உங்க மனசுல நினைச்சதைச் சொல்லாமலே போயிட்டீங்க. இவ்வளவு அவசரமா எதுக்குப் பாட்டி? அவளைத் தெரிஞ்சும் தனியா விட்டுட்டுப் போயிட்டீங்க.’


இப்படி ஆகும் என்று ஓர் அறிகுறி கூட இருக்கவில்லை. திடீர் நிகழ்வுகளுக்கு யாரும் பொறுப்பாக முடியாது. இருந்தாலும் பரிமளத்திற்காக இவன் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிக்கொண்டு சைந்தவியை நேரில் சென்று சந்தித்து இருக்கலாம் என்று இப்போது தோன்றியது.


‘அவளுக்கு உங்க மேல பிரியம் இருக்கு பாட்டி. வந்ததிலிருந்து அழுதிட்டே இருக்கா. உங்க மாதிரியே அவளும் சிடுசிடுன்னு இருக்கிற மாதிரி தெரியுறா. நீங்க என்கிட்ட சிடுசிடுத்தது இல்லைல. சைவிம்மா என்கிட்ட பேசின முதல் பேச்சே பொறிஞ்சது.’


மனத்தில் தோன்றியிருப்பதை அவரிடம் உதடுகளைப் பிரிக்காமல் சொல்லிக்கொண்டு இருந்தான்.


பயமற்ற திடமான பெண்மணி. சிடுசிடுத்திட்டே இருந்தாலும், அவருக்குள்ளே அன்பு ஊற்று உண்டு என்பதை வசந்த் புரிந்திருந்தான். அவரிடம் எஞ்சியிருந்த கம்பீரம் வசந்தை இன்னும் கவர்ந்தது. சரள்கண்ணன் பக்கத்தில் அமைதியாக நின்றுவிட்டு வெளியே வந்தான்.


மணிகண்டன் இவனை எதிர்பார்த்து நிற்க, “என்ன மணி… கணக்கு பார்த்தாச்சா?” கேட்டுக்கொண்டே அவன் தந்த காகிதத்தை வாங்கிக்கொண்டான்.


அப்போது புயல் திரண்டது போல சைந்தவி வேக வேகமாக மேலே இருந்து தடதடவென இறங்கி வந்தாள். அவளுடைய கையில் பணமும் மொபைலும் இருக்க, “டிரைவர் எங்கே?” வசந்தைப் பார்த்துக் கேட்டாள்.


மணிகண்டன் ‘என்ன இவங்க… சார் கிட்ட இப்படிப் பேசுறாங்க?’ என்று நினைத்துக் கொண்டே, “மேடம்…” ஏதோ சொல்லப் போனான்.


“மணீ…”


வசந்த் அவனைப் பேசவிடாமல் தடுத்தான். அவனுடைய பார்வையை உணர்ந்து மணிகண்டன் பத்தடி தள்ளிப் போய் நின்று கொண்டான்.


“சொல்லுங்க சைவி…”


“நாங்க வந்த காருக்கு பணம் செட்டில் பண்ணனும். இந்தாங்க பணம். செட்டில் பண்ணிடுங்க.”


படித்தவர்கள், படிக்காதவர்கள், வசதி படைத்தவர்கள், இல்லாதவர்கள் என்று பாகுபாடின்றி பலரும் வசந்திடம் பணிவு காட்டி நிற்பது சகஜம். அவனைக் காண பொது மக்கள் நித்தம் நித்தம் காத்துக் கிடக்க… சைந்தவி அசால்டாக வந்து அவனைப் பார்த்து ஏவிக் கொண்டிருந்தாள்.


வசந்த் அவள் பேசியதில் அதிர்ந்து போகவில்லை. ஆச்சரியமாகப் பார்த்து நின்றான். அவனுடைய இமைகள் விரிந்து புருவங்கள் உயர்ந்தன. அவள் கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு, “சரி பண்ணிடறேன். ஆனா பேலன்ஸ் பணம் என் டிப்ஸ். ஓகே?” முறுவலை அடக்க மாட்டாமல் கேட்டான்.


“இத்துனூண்டு மிச்ச சில்லறையை வச்சிட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க? ஒரு வேளை இப்படி டிப்ஸ் காசைச் சேர்த்து வச்சி தான் நீங்க பெரிய கோட்டையையோ இல்லை சின்ன கொட்டகையையோ கட்ட நினைச்சிருக்கீங்களா?”


அவனுடைய முறுவல் சைந்தவியை எரிச்சல் படுத்திவிட, அதில் நக்கலாகக் கேட்டுவிட்டு வீட்டிற்குள் போகப் போனாள்.


“ஒத்த ரூபாயால எத்தனை பேரோட வாழ்க்கை மாறிச்சு…” வசந்த் சொல்லிவிட்டு முறுவலிக்க, “அது சினிமால. நிஜத்திலே நடக்க வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.” அவனை முறைவிட்டுப் போனாள்.


சைந்தவி சொன்னதைக் கேட்பது போல அந்த கார் ஓட்டுநரைக் காண வசந்த் வெளி வாசலுக்குப் போக, மணிகண்டன் அவனுடன் செல்லவா வேண்டாமா என்று புரியாமல் நின்றான்.


சைந்தவியும் வசந்தும் பேசிக் கொண்டிருக்க, தென்னம்பாளை வராண்டாவில் இருந்து படிகளில் இறங்கி வந்தார். மணிகண்டன் அவர் அருகில் சென்று, “உங்க பாப்பா எப்பவும் இப்படித்தானா?” என்று கேட்டு முறைத்தான்.


“என்ன மணி… என்னப்பா என்ன ஆச்சி?”


“என்ன ஆச்சின்னு வந்து நிதானமா இப்ப கேளுங்க. இன்னும் என்ன ஆகணும். அதான் யோசிக்காம கொள்ளாம உங்க பாப்பா பேசியாச்சே. சார் யாரு என்ன எவருன்னு அவங்க கிட்ட சொல்லலையா? அவர் யாருன்னு தெரிஞ்சிக்காம வந்து கொஞ்சம் கூட மரியாதையில்லாம அவரையே வேலை ஏவுது? இதை மனசுல வச்சிட்டு எங்க சார் எங்களை வச்சி செய்யாம இருக்கணும்!”


சைந்தவி வசந்தின் மனத்தைப் பாதிக்கிறாள் என்று மணிகண்டனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அந்த வீட்டின் பெண் குட்டி இப்படி வெளிப்படையாக மட்டுமில்லை, அவனுக்குள்ளும் இருந்துகொண்டு அவனை வச்சி செய்யப் போகிறாள் என்றும் மணிகண்டன் நினைத்திருக்க மாட்டான்.


“இந்தாப்பா மணி… கொஞ்சம் மருவாதையா பேசு! எங்க பாப்பா என்ன செஞ்சாங்க? சொல்லுறதைப் புரியும்படி சொல்லுவியா?”


“மரியாதை எனக்குத் தெரியுறதால தானே இந்தப் பயமே. நீங்க நம்ம சாரை பற்றிச் சொல்லி, உங்க பாப்பாவுக்கு மருவாதையைச் சொல்லித் தாங்க.”


தென்னம்பாளையிடம் அழுத்திச் சொன்ன மணிகண்டனுக்கு உள்ளுக்குள்ளே சங்கடமாக இருந்தது. அவனுடைய பார்வை வசந்திடம் போனது. வசந்த் ஓட்டுநரைக் காணச் சென்றிருக்க, தான் அங்கே செல்லவா வேண்டாமா என்று தயங்கி, பின்னர் தானும் அங்கே போனான்.


“பாப்பா என்னம்மா நடந்திச்சி… அந்தத் தம்பிக்கிட்ட என்ன சொன்னீங்க?” தென்னம்பாளை சைந்தவியிடம் வந்து கேட்டார்.


“எதுக்கு நீங்க இப்படிப் படபடப்பா இருக்கீங்க பாளை? அவர்கிட்ட பணத்தைத் தந்திட்டு நாங்க வந்த கார் டிரைவருக்கு செட்டில் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன். அதான் டிரைவரை பார்க்கப் போயிருக்காரு. நீங்க பதட்டப்படுற அளவுக்கு நான் அவரை எதுவும் பேசலை. இப்ப எனக்கு அப்பத்தாவைப் பார்க்கணும். உள்ள வந்து என் கூடவே இருங்க.”


‘ஏன் இவருடைய உடல்மொழி இவ்வளவு மாறியிருக்கு?’ சைந்தவி நினைத்தாலும் அதைப் பொருட்படுத்தும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. தன்னுடைய அப்பத்தாவை எதிர்கொள்ள வேண்டும். தன்னால் தனியாக உள்ளே போக முடியுமா?


உள்ளே இருப்பது அவளுடைய குடும்பம். அப்பா, அத்தை மற்றும் நெருங்கிய உறவினர்கள். இருந்தும் அங்குப் போகத் தயங்கி, துணைக்கு வேலையாளை உடன் வரச் சொல்லிக் கூப்பிட்டாள். சொந்த வீட்டிலே அந்நியமான உணர்வு… என்ன மாதிரி நிலைமை இது என்கிற சிந்தனையுடன் நின்றாள்.


தென்னம்பாளைக்கு சைந்தவிடம் பாசம் உண்டு. ஆனால் அவளுடைய மனவுணர்வுகள் அவருக்குத் தெரியாது. அந்தளவு சிந்திக்கக் கூடிய ஆளில்லை அவர். அதுவும் போக தற்போது அவருடைய நினைப்பில் மணிகண்டன் சொன்ன விசயம் சிக்கியிருந்தது.


“பாப்பா வசந்த் தம்பிய உங்களுக்குத் தெரியுமா? அவரு யாருன்னு…”


“யாரு வசந்த்? ஓ… இப்ப நான் பேசிட்டு இருந்தவரைப் பற்றியா கேட்கிறேங்க? எனக்கு அவரைத் தெரியாது. அவர் யாரு நம்ம அப்பத்தாவுக்கு வேண்டியவரா பாளை… இல்ல, எங்களுக்குச் சொந்தமா?”


“அவரு கலெக்டரு பாப்பா. அம்மாவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு. அவருகிட்ட போயி நீங்க வேலை சொல்லி அனுப்பி வச்சிருக்கீங்களே!” பெரிதும் கலக்கம் கொண்டவராகச் சொன்னார்.


“ஒரு பில் கலெக்டருக்குப் போயி இந்தப் பில்டப்பா? போங்க பாளை நீங்க…”


காருக்கு பணம் தந்துவிட்டு வந்த வசந்த் அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்தான். சைந்தவி சொன்னதையும் கேட்டுவிட்டான். அவன் வந்ததை சைந்தவியும் பாளையும் கவனிக்கவில்லை.


“ஐயோ பாப்பா என்ன நீங்க இப்படிப் பேசுறீங்க? நல்லவேளை வேற யாரு காதுலயும் விழுகலை. அவரு நம்ம ஜில்லா கலெக்டருங்க பாப்பா. பார்த்துப் பேசுங்க.” பதற்றத்துடன் சொன்னார்.


‘என்னது யாரும் கேட்கலையா? கேட்க வேண்டியவனுக்கு நல்லாவே காதுல விழுந்திருச்சு!’ ஒரு சின்ன சிரிப்பு வசந்திடம்.


‘சைவிம்மா… என்னைப் பார்த்தா உனக்கு பில் கலெக்டர் போலவா தெரியுது? எம்புட்டு கஷ்டப்பட்டுப் படிச்சி, முதல் அட்டெம்ப்ட்லயே பாஸ் பண்ணி டிரைனிங் போயி போஸ்டிங் வாங்கினேன். நீ என்னடான்னா என்னை பில் கலெக்டருன்னு சொல்லி ஒரே வினாடியிலே என் இமேஜை டேமேஜ் பண்ணிட்ட!


என் அம்மே தெய்வநாயகி மட்டும் இதைக் கேட்டு இருக்கணும். ஒன் மினிட்ல வெந்து… சேச்சே வெந்து இல்லை ரொம்ப நொந்து போயி மேகி ஆகியிருப்பாங்க.’


ஒரு கலெக்டர் வாய்விட்டுப் பேச வழியில்லாமல், உள்ளுக்குள்ளே புலம்பினான்.


இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து

இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து

துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை

இன்பம் பாதி துன்பம் பாதி

இரண்டும் வாழ்வின் அங்கம்

நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்

நகையாய் மாறும் தங்கம்

தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி

வெற்றிக்கு அதுவே ஏணியடி!