லாக் டவுன் - கதை திரி

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்


ஆர்த்தி ரவி


அத்தியாயம் 03:


வினித் எதையாவது செய்ய நினைத்தாலே போதும். அந்த விசயம் நடைபெற்று விடும். அதற்கான முயற்சியை எளிதாகத் திட்டமிட்டு; தெளிவாக நடத்திக் கொள்வான். அவன் தன்மையான குணத்தைப் பெற்றவன் என்பது வினித்தை அறிந்தவர்களின் அபிப்பிராயம்.


வெளியே கூலாக இருந்தாலும் தான் நினைத்த விசயங்களைச் செயலாற்ற மறப்பதில்லை. சைந்தவியும் அவ்வரிசையில் வினித்தால் வைக்கப்பட்டாள். சைந்தவியை நட்பாக்கிக் கொள்வது என்பது வினித்திற்கு ஒரு வேலை திட்டம் போன்று ஆகிப் போனது.


முதலில் சைந்தவி எந்த அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள் என்பதில் ஆரம்பித்து, எந்த நேரத்தில் எங்குப் போய் சாப்பிடுவாள் என நீண்டு வினித்துடைய அலசல்கள் மினி ப்ராஜெக்ட் அளவில் ஓடிக் கொண்டிருந்தன.


இருவருக்கும் வெவ்வேறு அலுவலகங்களில் வேலை. ஒரே வளாகம் என்றாலும், அவ்விரண்டு அலுவலகங்களும் வெவ்வேறு கட்டிடங்களில் இயங்குகின்றன. அவ்வாளகத்தில் கேன்டீன்களும் வெவ்வேறு இடங்களில் இயங்கிக் கொண்டிருந்தன.


இருவருக்கும் பொதுவான புள்ளி என்று எதுவும் கிடையாது!


யோசித்துப் பார்த்த வினித். “தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறேனே!” சொல்லிச் சிரித்துக் கொண்டான்.


“எங்கே அவளை முதலில் பார்த்தேனோ, அங்கேயே போய்ப் பார்த்தால் தெரிஞ்சிட்டு போகுது.”


அடுத்து வரும் நாட்கள் வினித்தின் அட்டவணை நிரம்பித் தெரிந்தது. ஓரிரு வாரங்களுக்குப் பின்னர் சற்று வேலைகள் இலகுவாக இருக்கும் போது சைந்தவியை, தான் முதலில் சந்தித்த இடத்திலேயே போய்ப் பிடிப்பது உசித்தம் என்று முடிவு செய்து கொண்டான்.


இடைப்பட்ட நேரத்தில் எங்காவது எதேர்ச்சையாய் அவளைக் காண நேரிடுமா என்று எதிர்பார்த்தான். அலுவலகம் வரும் போதும், போகும் போதும் ஆவலாக அவனுடைய பார்வை நாலாபக்கமும் உலாவியது.


கேன்டீன் செல்ல அவ்வளவாக ஆவலைக் காட்டாதவன், புதிதாக ஆவலைக் காட்டினான். இப்படியே சென்ற ஒரு வாரத்தின் மூன்றாவது நாளில் வினித்தை அவனுடைய நண்பர்கள் கண்டு கொண்டார்கள். அடிக்கடி சம்பந்தமில்லாத இடத்தில் அவனைப் பார்க்க நேரிட்டதால் பிடித்துக் கேள்வி கேட்டார்கள்.


அன்று ஒரே நேரத்தில் கேன்டீனுக்கு மதிய உணவு சாப்பிட வந்ததால், ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். வினித்தும் அவர்களிடம் சைந்தவியைப் பற்றி மறைக்காமல் சொன்னான்.


“அவனவன் காதலுக்குத் தான் இப்படி அலைவான்.”


குறுகுறுப்பாகப் பார்த்துக் கொண்டே சொன்னான் தட்சி.


வினித் அவனைத் தோளில் தட்டி, “நட்புக்காக உன் நண்பன் அலைவான்டா”, சொல்லிப் புன்னகைத்தான்.


இருவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டு சோலே பூரியை லவட்டிக்கொண்டிருந்த முன்னீஸ், “மச்சி, பிரண்ட்ஷிப்க்கும் லவ்வுக்கும் நடுவுல எவ்வளவு கிலோ மீட்டரு?” கேட்டான்.


சீரியஸாக கேட்டுவிட்டுச் சாப்பிடுவதை தொடர்ந்தவனின் பக்கம் எட்டி ‘ஹை ஃபை’ கொடுத்தான் தட்சி. இருவருக்கும் வினித்தின் நடவடிக்கைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.


அலுவலகத்தில் எல்லோரிடம் நட்பாகப் பழகும் குணம் கொண்டிருந்தாலும், வேலையின் பொருட்டுப் பலருடன் பேசிப் பழகினாலும், பெரிய நெருக்கமான நட்பு வட்டத்தை அங்கு அவன் அமைத்துக் கொள்ளவில்லை.


இத்தனைக்கும் ஐந்தாறு வருடங்களாக அதே அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறான். ஓரளவு அவனுக்கு நெருங்கியவர்கள் என்றால் உடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முன்னீஸ் மற்றும் தட்சி மட்டும் தான்.


அதனாலேயே புதிதாய் உதித்திருக்கும் வினித்தின் இத்தகைய ஆவல் அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. தட்சியும் முன்னீஸும் நண்பனை கேள்வி கேட்டு ஓட்டிக் கொண்டிருந்தனர். கேலியாய் ஏறிட்ட இருவரையும் முறைத்தான் வினித்.


“போங்கடாங்! உங்களுக்கெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியுமா? நீங்களே பின்னால் புரிஞ்சிக்குவீங்க. அப்படி எதையும் புரிஞ்சிக்கலைன்னாலும் எனக்கு அதைப் பற்றி ஒரு கவலையும் இல்லை.”


தட்சி என்கிற தட்சிணாமூர்த்தியும் முன்னீஸ் என்கிற முனீஸ்வரனும் அர்த்தத்துடன் சிரித்துக்கொண்டனர்.


தட்சி சொன்னான்… “சரியா சொன்னே வினித். எதுவுமே பின்னால் தான் புரியும்.”


இரு பொருள்பட பேசும் நண்பர்களின் கண்ணோட்டம் வினித்திற்கு நன்றாகவே புரிந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து.


ஆண் பெண் நட்பு முன்பை விட இப்போதைய தலைமுறையில் பெரிதும் காணப்படுகிறது. இருந்தும் ஒருவரைத் தேடிப் போய் நட்பாக்கிக் கொள்ள நினைக்கும் எண்ணம் எக்காலத்திலும் சர்ச்சைக்குள்ளாவதும் சகஜம் தானே?


நண்பர்களின் கிண்டல் வினித்தைப் பாதிக்கவில்லை. அவனுடைய எண்ணத்தில் அவனுக்குத் தெளிவிருக்கிறது என்று நினைத்தான்.


மிகச் சில வருடங்களாகத் தனக்குப் பிடித்துப் போன சர்க்கரைப் பொங்கலைச் சப்புக்கொட்டி ருசித்தபடி நிமிர்ந்து நண்பர்களைப் பார்த்துச் சொன்னான்.


“How are relationships defined… imperfect understanding! (உறவுமுறையின் விளக்கங்களின் தவறான புரிதல்)”.


சொல்லிவிட்டுச் சிரித்தான் வினித். அவன் சொன்னதில் மற்ற இருவரும் அமைதியாகிவிட்டாலும்,


‘சொல்லித் தெரிவதில்லை காதல். தானாக உணரும் போது புரிந்து கொள்வான்.’ என்று உள்ளுக்குள்ளே ஒரே மாதிரி நினைத்துக் கொண்டார்கள். தாங்கள் நினைப்பதை வினித்திடம் காட்டிக் கொள்ளவில்லை.


சிறு கிண்ணத்தில் தரப்பட்ட பொங்கல் வினித்திற்குப் போதவில்லை. மீண்டும் சென்று இன்னொரு கிண்ணம் சர்க்கரைப் பொங்கலை வாங்கி வந்தான்.


“சாப்பிடுங்கடா… போய் நம்ம வேலையைப் பார்ப்போம். எல்லாம் போகிறபடி போகட்டும். முதலில் சைந்தவியை நான் பார்க்கணும். அப்புறமா பேசிப் பழகி, அவளுக்கும் நல்ல ஃபீல் வந்து… எவ்வளவோ நடக்கணும்.


நான் நினைச்சா மட்டும் போதுமா? சைந்தவிக்கும் அந்த நட்புணர்வு வரணுமில்லை. நாங்க ஃபிரண்ட்ஸ் ஆகறதும் ஆகாததும் என் பிரச்சனை. நீங்க எதுக்கு அதை அலசிப் போட்டு மண்டையை உடைச்சிக்கிறேங்க? கூல் கைஸ்!


உன் டெலிவரி டேட் எஸ்டிமேஷனை மெயில் பண்ணிட்டியா முன்னீஸ்? எத்தனை நாள் போட்டிருக்கே?


தட்சி, நீ அந்த ‘ஐடா ஜாப் சீக்குவென்ஸ்’ வெரிஃபை பண்ணியா? நல்லா சரி பார்த்து வச்சிடு. ரொம்ப க்ரிட்டிகல் இந்த டாஸ்க். வீக்கெண்ட் ரன் பண்ணிடு.


ஏதாவது சரியா போகலைன்னா என்னை உடனே ஃபோன்ல கூப்பிடு. வீக்கெண்ட் நான் மும்பைல இருப்பேன். வெள்ளி மதியமே இங்கே இருந்து கிளம்பிடுவேன். வெள்ளி இரவு உன் வேலையை ஆரம்பிக்கும் போது நான் ரீச்சபிள்ளா தான் இருப்பேன்.


சோ நோ வொரீஸ். ஆன்லைன்ல இல்லைன்னாலும் மொபைல்ல என்னைக் கூப்பிடு. உடனே லாக் இன் செஞ்சு பார்க்கிறேன். ஓகே?”


அதன் பிறகு சைந்தவியை மறந்துவிட்டு, தங்களின் வேலைகளைப் பற்றி அலசுவதில் மூவரும் மும்முரமானார்கள்.


அந்த வார மிச்சமும் வார விடுமுறையும் வினித்திற்கு பிஸியாக சென்றது. மும்பைக்குப் பெற்றோரை காணப் போனவன் மறு வாரமும் அங்கேயே இருந்துவிட்டு அப்புறம் தான் சென்னைக்குத் திரும்பி வந்தான்.


பத்து நாட்களுக்குப் பின்னர் வினித் அன்று அலுவலகத்திற்கு வந்திருந்தான். வசந்த காலத்தின் பசுமை படர்வாய் அவனுடைய நினைவில் சைந்தவியும் வந்தாள்.


அவளை நினைத்துக் கொண்டதும் அவனுடைய மனத்தில் இனிமை பரவியது. மனத்தின் இனிமை உற்சாகமாக அவனுடைய வேலையைப் பார்க்க உதவியது.


சைந்தவியை நட்பாக்கிக் கொள்ள வினித் எடுத்த முடிவைச் செயலாற்ற அவனுக்கு விரைவிலேயே நேரம் கிட்டியது. ஒரு மதிய வேளையைத் தேர்ந்தெடுத்து, இருவரும் முதன் முதலில் சந்திக்க நேரிட்ட அதே இடத்திற்குச் சென்றான்.


அன்று சைந்தவியைக் கண்ட அந்தத் திசையைப் பார்த்தவன், எந்தப்பக்கம் அவள் வரக்கூடும் என்று அனுமானித்துக் கொண்டான்.


அலுவலக ஊழியர்களின் வசதிக்காக வளாகத்திற்குள் நடைபாதை ஓரமாகவும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. வெகு சில என்று சொல்லக் கூடிய எண்ணிக்கையில், ஆங்காங்கே நிறைய இடைவெளிவிட்டு ஒற்றையாக, இருவர் மற்றும் மூவர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைந்திருந்தன.


ஒரு படர்ந்த மரத்தடியில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டான். சைந்தவி வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்க, அரை மணி நேரம் கடந்தது. இடையிடையே தன்னுடைய ஃபோனை நோண்டியபடி நேரத்தைக் கடத்தினான்.


அவள் அன்று அலுவலகத்திற்கு வரவில்லை. பிறகு எங்கே இவன் கண்ணில் படப் போகிறாள்? வினித் இதை அறியாதவனாய் ஏமாற்றம் கொண்டான்.


மறுநாளும் வினித் அதே இடத்திற்குப் போய் ஓர் இருக்கையில் காத்திருந்தான். சைந்தவி அந்த நாள் அலுவலகத்திற்கு வந்திருந்தாள். ஆனால், வாக்கிங் செல்லவில்லை. வினித்தின் காத்திருப்பு அப்போதும் தோல்வியைத் தழுவியது.


அவனுடைய சிறு வயதிலிருந்து அம்மா அடிக்கடி சொல்வது அவனின் ஞாபகத்தில் வந்தது.


‘நாம நினைக்கிறது எல்லாம் நினைத்த நேரத்திலே நடக்காது வினித். அப்படி நடந்திட்டா எல்லாமே எளிதுன்னு எல்லோருக்கும் ஒரு கர்வமும் திமிரும் வந்திரும்னு அந்த பகவான் நினைச்சாரோ என்னவோ.


ஆனால், ஒன்னு வேணும்னு தோணினா, நீ முயற்சி செய்யணும். அப்படி விடாமல் தீவிரமாக முயற்சி எடுத்திட்டே இருந்தால் அதற்கான நேரம் வரும் போது அந்தக் காரியம் நிச்சயமா நடக்கும். நம்ம கணபதி பப்பா நடத்தித் தருவாரு.’


நினைத்ததும் புன்னகைத்துக் கொண்டான். விடாமுயற்சியால் நடக்காத விசயங்களும் அவனுடைய வாழ்க்கையில் உண்டு. ஆனாலும், அவற்றை ஒதுக்கிவிட்டு, நேர்மறையைக் கடைப்பிடிப்பவன்… அதையே இப்போதும் பற்றிக் கொண்டான்.


‘இன்னும் எத்தனை தடவை இப்படி வந்து காத்திருக்கணுமோ! வந்து தானே ஆகணும். சைந்தவியின் நண்பனாகணும்னு முடிவு பண்ணிட்டேன். முன் வச்ச காலைப் பின் வைக்கலாமா? நோ வினித்!’


நினைத்துக்கொண்டதும் சிரிப்பு வந்தது. உதடுகளை ஆக்கிரமித்துக் கொண்ட சிரிப்பை அவசரமாக மென்று தடுத்தான்.


‘வெட்டவெளியிலே வெயிலில் நின்னுட்டு தனியா ஒருத்தன் சிரிச்சிட்டு இருக்கிறதை யாராவது பார்த்தா என்ன சொல்லுவாங்க?’


தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.


‘வேறென்ன, முத்திப் போச்சுன்னு தான் சொல்லுவாங்க. இல்லை, புதுசா டிரெண்டியா பைத்தியத்திற்கு ஏதாவது ஒரு கமெண்ட் வந்திருக்கலாம். வாட்டெவர்…’


அவனே பதிலையும் சொல்லிக் கொண்டான்.


மெல்லிய வெப்பத்திலும் வேர்த்து வழிந்த முகத்தைத் தன்னுடைய கைக்குட்டையால் துடைத்தபடி அலுவலகத்தை நோக்கி நடந்தான்.


பாதி வழியைக் கடந்து இருப்பான். தற்செயலாக இடது பக்கமாகத் திரும்பிப் பார்த்தான். கூட்டமாகச் சிலர் வந்து கொண்டிருந்தார்கள்.


அவர்களுடன் சைந்தவியும் தெரிந்தாள். அவளைக் கண்டதும் வினித்தின் முகம் மலர்ந்தது. உதடுகளில் இதம் பரப்பும் புன்னகை பளிச்சிட்டது.


அவனுடைய பார்வையை அவளிடமே வைத்துக்கொண்டு முன்னால் நடந்தான். சில வினாடிகளிலேயே சில விசயங்கள் தென்பட்டன. அந்த நேரம் அவன் நினைத்துக் கொண்டான்.


‘நான் நினைச்சதைப் போல் சைந்தவி வித்தியாசமானவள் தான். ஒட்டுதல் இல்லாத குணமா எனக்குத் தெரியுறா. கண்களில் கலகலப்பு மிஸ்ஸிங்.


முதல் முறை பார்த்ததை வச்சி சரியா முடிவுக்கு வர முடியலைன்றது உண்மை. இப்பவுமே என் நினைப்பு நூறு சதவிதம் சரியா, இல்லையான்னு தெரியலை. பட், இதுவரை எனக்கு இவளை மாதிரி ஒரு நபர் பழக்கமில்லை.


இப்படியும் இந்தக் காலத்திலே ரிமோட் நேச்சர்ட் குவாலிட்டியுடன் இருக்க முடியுமா? ஆச்சரியப்பட வைக்கிறா என்னை!’


தன்னுடைய அலுவலகப் பாதை வந்ததும் அப்பாதையில் பிரிந்து செல்லாமல் சைந்தவி அண்ட் கோ பக்கம் நடந்தான்.


அதே நேரம் வினித்தைச் சைந்தவியும் பார்த்தாள். புன்னகையுடன் தன்னை நோக்கி வந்தவனைப் பார்த்தவளின் உதடுகள் அவளையும் மீறிப் புன்னகைத்தன.


அன்றிலிருந்து இருவரின் நட்பு ஆரம்பமானது.


வினித் இத்தனை காலமாக நினைத்தது நட்பு. சைந்தவி நினைத்துக் கொண்டது வேறு என்று இன்று தான் அவனுக்குத் தெரிந்தது.


‘முதல்ல நட்பா இருந்து பிறகு லவ்வா மாறிச்சா? என்னன்னு அவள் தான் சொல்லணும். அவளுக்குத் தான் தெரியும். எதுக்கு இப்போ அதை ஆராய்ச்சி பண்ணிட்டு?’


வினித்திற்கு அன்றைய நாளை பிடிக்கவே இல்லை. முக்கியமாக சைந்தவி நடந்து கொண்ட விதம்.


மாலுக்கு அவ்வப்போது இருவரும் சேர்ந்து போவது வழக்கமான ஒன்று. முன்பே பேசி வைத்துச் சென்று வருவார்கள். இருவரும் ஒரே அலுவலக வளாகத்தில் வேலை செய்தாலும் வசிப்பது வெவ்வேறு ஏரியாவில்.


அதனாலேயே வெளியே போகும் நாளையும் நேரத்தையும் முன் கூட்டியே அட்டவணையில் குறித்து வைத்துக் கொண்டு அதன்படி செல்வது இருவருக்கும் வசதியானது.


ஷாப்பிங் மால் என்றில்லை, கோவில், கடற்கரை, ரெஸ்டாரண்ட் என்றும் கூட அவுட்டிங் போவது உண்டு.


இருவருக்கும் மற்றவரைப் பிடித்திருப்பதால் குறைந்த காலத்திலேயே நல்லுணர்வு உருவாகிவிட்டது. அந்த நல்லுணர்வை வினித் நட்பு நிலையில் வைத்திருக்க, சைந்தவியோ நட்பிலிருந்து காதல் எனும் நிலைக்கு எடுத்துச் சென்று விட்டாள்.


இன்று அந்நினைப்பு வெளி வந்தது ஒரு வகையில் நல்லது என்றே நினைத்துக் கொண்டான் வினித். யாருக்கு நல்லது என்பதில் தான் தெளிவில்லை.


இதுவரை சைந்தவி இப்படி நடந்து கொண்டதில்லை. அவளுடைய கோபமும் சரி, வருத்தமும் சரி மிகவும் புதிதாகத் தெரிந்தன. அவளுடைய எண்ணம் தெரிந்ததும் தான் அவளுக்கு விளக்கம் தந்த நிகழ்வு வினித்தின் கண் முன்னே விரிந்தது.


சில விசயங்களை அவசரகதியில் விளக்க முடியாது. விளங்கிக் கொள்ளவும் முடியாது. இதனைச் சொல்லியே வினித் அவளை அமைதிப்படுத்தியிருந்தான்.


“சைவி, பேசுவோம். நிதானமா பேசலாம் சரியா? நீ ரொம்ப யோசிக்காமல் காம் (calm) ஆகிக்கோ. மனசிலே எதையும் போட்டுக் குழப்பி வருத்தப்பட்டுக்காதே. இத்தோட எல்லாமும் முடிஞ்சி போயிடலை.”


தான் அவளுடைய கண்களுக்குள் பார்த்து; இரண்டு உள்ளங்கைகளையும் ஆதரவாக அழுத்திவிட்டுச் சொன்னதெல்லாம் அவளுக்கு எட்டவே இல்லையா?


வினித்திற்கு மனத்தில் மிகுந்த வருத்தம் எழுந்தது. அதை மிஞ்சும் அளவில் கோபமும் கொண்டான். சைந்தவியைப் பற்றி எண்ணமிட்டபடி வீட்டை அடைந்தான். சாவியைக் கொண்டு வாசல் கதவைத் திறந்து, வீட்டிற்குள் நுழைந்த உடனே இன்னொரு தடவை அவளுடைய எண்களை அழுத்தி, மொபைலை காதில் வைத்தான்.


இப்போதும் மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.


‘இன்னுமா? நாலு மணியிலிருந்து ஒரு நாற்பத்தி ரெண்டு தடவையாவது கூப்பிட்டுப் பார்த்திருப்பேன்.’


வினித்திற்குக் கோபத்தில் மூச்சுக்காற்று புசு புசுவென வெளியேறியது. அவனுடைய கையிலிருந்த ஐஃபோன் 13 தன் மதிப்பை இழந்தது போல் படுக்கையில் எங்கோ கிடக்க, அணிந்திருந்த அலுவலக உடையைக் களைந்தான். துவாலையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்.


வெதுவெதுப்பான நீர் உடலில் பட்டதும் சற்றுத் தளர்ந்தான். சைந்தவியை ஒதுக்கிவிட்டு ஒரு ஹிந்தி பாடலை ஹம் செய்யத் தொடங்கினான்.


Nashe Si Chadh Gayi Oye, Kudi Nashe Si Chadh Gayi

Patang Si Lad Gayi Oye, Kudi Patang Si Lad Gayi

Nashe Si Chadh Gayi Oye, Kudi Nashe Si Chadh Gayi

Patang Si Lad Gayi Oye, Kudi Patang Si Lad Gayi


Aise Khenche Dil Ke Penche, Gale Hi Pad Gayi Oye Hoye…


அவன் குளித்து முடிக்கும் போதே காலிங் பெல்லின் குக்கூ கூவியது.


அலெக்ஸ் வந்திருப்பான் என்று நினைத்து, “இவன் ஒருத்தன்… அலெக்ஸ் பராக் பராக்னு அவனே சொல்லிக்கிற மாதிரி பெல் அடிப்பான். உன் சாவியைப் போட்டு உள்ளே வந்து தொலைடா.” சலித்த குரலில் சொன்னான்.


சில வினாடிகளில் மீண்டும் கூவியது குக்கூ. வேற யாரோ வந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான். அலெக்ஸ் இவன் வருவதற்கு முன்பே வந்துவிட்டானா என்று தெரியவில்லை.


உடைகளை உடுத்தும் முன்னர் மீண்டும் குக்கூ குக்கூ… அவசரமாகத் தன்னுடைய ஷார்ட்ஸ் மற்றும் டிஷர்ட் ஒன்றை உருவி அணிந்து கொண்டு வாசலுக்கு விரைந்தான்.


கதவைத் திறந்தால் அங்கே பாண்டியன் காத்திருந்தார். இஸ்திரி செய்த துணிகளைக் கைகளில் ஏந்தியபடி நின்றவரை உள்ளே வரச் சொன்னான்.


“என்ன தம்பி இவ்வளவு நேரம். குளிச்சிட்டு இருந்தீங்களா?”


“ஆமாங்க… சாரி! ரொம்ப நேரமா நிக்க வச்சிட்டனா?”


“பரவாயில்லை தம்பி. கொஞ்சம் தண்ணி தர்றீங்களா? தாகமாயிருக்கு.”


“ஜூஸ் குடுக்கவா?”


“வேணாம்பா தண்ணி போதும்.”


ஒரு குவளையில் தண்ணீரை எடுத்து வந்து அவரிடம் நீட்டினான். வாங்கிக் குடித்தவர் துணிகளை எண்ணிக் காண்பிக்க, வினித் அவரைத் தடுத்துவிட்டு “எவ்வளவு பணம் கொடுக்கணும்னு மட்டும் சொல்லுங்க.” என்றான்.


அவனிருந்த மைண்ட் செட்டில் துணிகளை எண்ணி வைத்துச் சரி பார்க்கும் பொறுமையில்லை. அவரோ அவன் சொன்னதைக் கேட்கவில்லை. கணக்கு பார்த்துவிட்டுத் தான் பணம் வாங்கினார்.


பாண்டியனை அனுப்பிவிட்டு கதவைச் சாத்தினான். இஸ்திரி போட்டு வந்த துணிகளை எடுத்து அதனிடத்தில் அடுக்கி வைத்தான்.


பிறகு விட்டெறிந்த மொபைலை தேடி எடுத்தான். சைந்தவிக்கு குறுஞ்செய்தி ஒன்றை வாட்ஸ் அப்பில் டைப் செய்தான்.


அதை அவளுக்கு அனுப்பியதும் மடிகணினியை எடுத்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்து கொண்டான். தொலைகாட்சியில் செய்திகளை ஓடவிட்டு, மடிகணினியை உயிர்ப்பித்தான். நிமிடங்கள் விரைந்தன.


சற்று நேரத்தில் மொபைலில் குறுஞ்செய்தி வந்திருப்பதற்கான சமிஞ்சை ஒலித்தது.


“சைவியா?”


எதிர்பார்ப்புடன் எடுத்துப் பார்த்தான். அவளில்லை, குறுஞ்செய்தியை அலெக்ஸ் அனுப்பியிருந்தான். அலெக்ஸ் மற்றும் வினித் இருவரும் ஹவுஸ்மேட்ஸ். இன்றைக்கு வீட்டிற்கு வர இரவு தாமதமாகும் என்று தெரிவித்திருந்தான்.


சைவி இவனுடைய குறுஞ்செய்தியைப் பார்க்கவில்லை. இன்னும் ஆஃப் லைன் என்று காட்டியது அவளுடைய ஸ்டேடஸ்.


யோசனையுடன் அங்கிருந்து எழுந்தவன் சமையலறைக்குள் போனான். விரைவாகச் சமைக்கக் கூடியதாக ஏதோ ஒரு நூடில்ஸ் வகையை பெயருக்குச் சமைத்தான்.


கொஞ்சமாக எடுத்து ஒரு தட்டில் போட்டுக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தான். நல்ல பசி இருந்தும் அவனால் சாப்பிட முடியவில்லை.


எல்லாவற்றையும் எடுத்து வைத்து சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டுத் தூங்கச் சென்றான். களைப்பை உணர்ந்தாலும் கண்கள் மூட மறுத்தன.


மீண்டும் மொபைலை பார்த்தான். சைந்தவியின் அரவமில்லை. நேரம் செல்லச் செல்ல வினித்தின் கடுப்பும் கோபமும் குறைந்திருந்தது. வருத்தம் மட்டும் இப்போது மேலோங்கியது.


அவள் காதலை வெளிப்படுத்தியது ஒரு பக்கமிருக்க, இவனிடம் சொல்லாமல் கிளம்பியதும் இவ்வளவு நேரமாகியும் மொபைலில் வராததும் வருத்திக் கொண்டிருந்தது.


இப்படியொரு நிகழ்வை எதிர்கொள்வான் என வினித்திற்குத் தோன்றியதில்லை. அப்படி இருவருக்குள் வித்தியாசமாய் எதுவுமே இதுவரை நிகழ்ந்ததும் இல்லை.


‘இந்த விசயம் மிகவும் சென்சிடிவ். இனி தான் என்ன செய்ய வேண்டும்? எப்படி விசயத்தைக் கையாள்வது?’


வினித் யோசனையில் ஆழ்ந்தான்.
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்

ஆர்த்தி ரவி

அத்தியாயம் 04:

ஆதுரமாகத் தொட்டுத் தழுவி ஆறுதல் அளித்த உப்புக்காற்றின் அக்கறையை எண்ணிப் பார்த்ததும் சிரித்துக்கொண்டாள் சைந்தவி.

“பிசுபிசுன்னு ஆக்கிட்ட. இது ஒன்னும் பெரிய பாதிப்பு கிடையாது. உடலிலே தானே இந்தப் பிசுபிசுப்பு இருக்கு? மனசு பிசுபிசுத்துப் போறதுக்கு முன்னாடி நான் நிலைமையை உணர்ந்திட்டேனே.”

சொல்லிக்கொண்டாள் கசந்த முறுவலுடன். தனக்குத் தானே சொன்னாளா, இல்லை, அந்தக் காற்றிடமா?

மனத்திலே கொள்ளை வேதனை அடைத்து வைக்கப்பட்டு இருந்தாலும், அதிலேயே அமிழ்ந்து உருகி உருப்படாமல் போவதை விரும்பவில்லை அவள். சீக்கிரமே இவ்வேதனையில் இருந்து வெளி வர வேண்டும் என்று விரும்பினாள்.

‘நாட்கள்… வாரங்கள்… மாதங்கள்... இல்லை, வருடங்களாகுமா வினித்தை மறக்க? அப்படி மறந்துவிடக் கூடியவனா அவன்? என் காதல் பொய்யில்லை. என் நினைவில் இந்தக் காதல் இருக்கும். வினித்தும் இருப்பான்.

மனசு என்ன காத்தா? அப்படியே திசை மாறி, மாறி வீச? எல்லாத்தையும் மறப்பது ஒன்னும் அவ்வளவு ஈஸி இல்லை. எனக்குள்ள அவனுக்கு முக்கிய இடம் கொடுத்து வச்சிட்டேனே.’

கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டாள் தன்னுடைய துடிப்பை அடக்கும் முயற்சியாய். அதே நேரம் இப்பாடல் வரிகள் காற்றில் வந்து மனத்தை தொட்டுப் போயிற்று.

‘உயிர் கரையிலே உன் கால்தடம்
மனச் சுவரிலே உன் புகைப்படம்…’

படகருகே ஏதோ பழைய ரேடியோ பெட்டி போல்… அங்கிருந்து கசிந்து வந்த அந்த நல்ல பாடல் கர கரத்து இடையில் தேய்ந்து நின்று போய் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.

வினித்தும் தன் உயிரில் தடம் பதித்து விட்டானே… அவனை மறப்பது கடினமே. இக்காதல் அவளுக்குள் ஆழப் பதிந்து அழியாத்தடம் பதித்து விட்டதை அவளால் மறுக்க முடியாது. இதனை உணர்ந்தே இருந்தாள்.

‘வினித்தும் காதலும் எனக்குள்ள இருக்கட்டும். ஆனால், என்னை இம்சை படுத்திட்டு இருக்க வேணாம். மனசை அப்படியே ஏக்கம் பிடிச்சு புழுத்துப் போக வைக்கும் முட்டாளாக இருக்க மாட்டேன். தோல்வி என்னைச் சிதைத்துப் போட்டுடக் கூடாது!’

தன்னைத் தானே திடப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள்.

காதல் தோல்வி கொடிது. எத்தனை மனவுறுதி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களைத் தகர்த்து உருக்குலைய வைக்கும் சக்தி இத்தோல்விக்கு உண்டு. நினைவுப்படுத்திக் கொண்டாள்.

இந்நிலை துர்பாக்கியம்; ஏமாற்றம்; துன்பம் தான்! ஆனாலும் இதுவே வாழ்க்கையின் எல்லையல்லவே? அவளால் மட்டும் தான் அவளை மீட்க முடியும்.

அதைவிட்டு, மனத்திற்கு முக்காடு போட்டுக்கொண்டு, கண்களைத் தொலைத்த ஒரு குருடியாக, ஏமாற்றத்தை உடைத்து வெளி வர முயற்சிக்காமல்; துன்பத்திலேயே சிறைப்பட்டுக் கிடப்பது மேன்மையாகுமா?

இப்பிறப்பின் அர்த்தம் வினித் என்கிற ஒருவனால் சிதைந்து போவதா?

‘இதுவரை கஷ்டத்தை நான் அனுபவிச்சதில்லையா? எவ்வளவு சந்தோஷமா இருந்தேனோ அந்தளவு கஷ்டமும் பட்டுட்டேன்.

இந்த உலகத்தில் பல பொல்லாதவர்களுக்கு மத்தியிலே நல்லவனாகத்தான் வினித் என்னிடம் நடந்து கொண்டிருக்கிறான். அவனிடம் குற்றமில்லை. அவன் சொன்ன மாதிரி நண்பனாக தானே என்கிட்ட பேசிப் பழகி இருக்கான்.

அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கிப் போயிருந்த நான் தான் வினித்தோட நட்பைத் தாண்டி ரொம்ப தூரம் போயிட்டேன். அவன் மேலே பழி போட்டு வருத்தப்படுவது சரியாகுமா?’

சமாதானம் சொல்லிக்கொண்டது அவளுடைய மனது.

‘இந்த மாதிரி ஒருத்தன் வந்து அழுத்தமா மனசுல உட்கார்ந்துப்பான்னு கொஞ்ச காலத்துக்கு முன்னாடி எனக்கே தோணியிருக்கா? நடப்பது நடக்கும். நடத்தினது வினித்தா, இல்லை, நானான்னு யோசிச்சி என்னவாகப் போகுது? இனி என்ன செய்யப் போறேன்னு பார்க்க ஆரம்பிக்கணும்.’

எடுத்திருக்கும் முடிவின்படி, தான் இனி செய்யப் போவது என்ன என்பதை மனத்திலே ஓட்டிப் பார்த்துக் கொண்டாள் அவள்.

பிசு பிசுத்துக் கொண்டிருக்கும் கைகளைத் தடவி விட்டுக் கொண்டாள். மணிக்கட்டில் ஒளிர்ந்த டைட்டன் குவார்ட்ஸ், நேரம் எட்டு முப்பத்தி ஐந்து என்று காட்டி இருக்கும் சூழ்நிலையை எடுத்துரைத்தது.

‘நேரமாயிருச்சு சைந்து. ஹாஸ்டலுக்கு கிளம்பு.’ உள்ளே இருந்து ஒரு குரல் அவளுக்கு அறிவுறுத்தியது. அப்போது, கடலலைகளின் ஓசை பெரிதாகக் கேட்டது. கடலைத் திரும்பிப் பார்த்தாள் சைந்தவி.

“என்ன? ‘முடிவெடுத்திட்ட போகணும்னு. சொல்லிக்க மாட்டியா’ ன்னு கேட்கிறியாமா?”

கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஈரமணலில் கால் பட்டதும் வறண்டிருந்த பாதங்களை வருடிய நீரின் குளிர்மை மனத்தையும் எட்டியது. அடிகளை எட்டி வைக்க வைக்க உதடுகளின் ஓரம் கொஞ்சமாய் வழிந்திருந்த கசப்பான முறுவலும் அகன்றது.

“வினித், உன்னைப் பார்த்திட்டே பக்கத்தில் இருந்தா கண்டிப்பா உன்னை விலக்கி வைக்க என்னால் முடியாதுப்பா! உன்னைவிட்டு தூரப் போயிடணும். அது தான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது. ரொம்ப ரொம்ப தூரமாய்ப் போக ஏற்பாட்டைப் பண்ணிக்கப் போறேன்.”

அவள் சொன்னதும் சட்டென ஓர் அலை அவளுடைய பாதங்களில் அடித்துத் தெறித்தது. நீர்த்திவலைகளோடு பூத்த கண்ணீரையும் துடைத்துக்கொண்டாள்.

கடலன்னை அவளைக் கலக்கமாகப் பார்த்தது. அலைகள் கடலன்னையின் கலக்கத்தைக் காட்டிக் கொடுப்பதாய்!

அதை உணர்ந்தது போலவே சைந்தவி தெரிந்தாள். பட்டென ஈரமணலில் அமர்ந்துகொண்டாள்.

“நான் பிறந்த இந்தச் சென்னையை விட்டு, சின்ன வயசுல அப்பா; அம்மாவுடன் நான் குடும்பமாகக் கொண்டாடின இந்தக் கடற்கரையை விட்டு ரொம்ப தூரமாய்ப் போகப் போறேன்மா.

அம்மாவை வாரிக் கொடுத்திட்டு; அப்பாவின் பிரிவைத் தாங்க முடியாம என் தவிப்புக்கு ஆறுதல் தேடி உன்னைச் சரண்டைந்த மாதிரி, இப்பவும் என் கஷ்டமான நேரத்திலே உன்கிட்ட வந்தேன்.

இதோ, ‘வினித் இல்லாட்டி உன் உலகம் அஸ்தமிச்சிடுமா’ன்னு நீ கேட்டு கேட்டுக் கூப்பாடு போட்டதிலேயே கொஞ்சம் தெளிவாயிட்டேன். இனி என்னை நான் பார்த்துப்பேன்.

மனசுல ஒரு முடிவெடுத்திட்டு இங்கே இருந்து போறேன். என்னை பிளஸ் பண்ணும்மா. உலகத்தில் எந்தப் பகுதியிலே இருந்தாலும் நீ என் நினைவில் இருப்பே.”

கடலன்னையைப் பார்த்துக்கொண்டே அவளிடம் பேசினாள் சைந்தவி. இவள் பேசி முடித்த கணம் ஓர் அலை ஓடி வர, அதன் பின்னாடியே தொடர்ந்து வந்த துணை அலை தோழி இவளைத் தோள் வரை நீராட்டி கொஞ்சிச் சென்றது.

தன்னைத் தழுவி; வாழ்த்தி; போய் வா என்று சொல்லாமல் சொல்லி விடை கொடுத்த கடலை, நிர்மலமான பார்வையுடன் பார்த்தாள். அவளுடைய வேதனையைக் கடந்து உலர்ந்திருந்த உதடுகளை எட்டாமல் போக்கு காட்டியது புன்னகை.

சில நிமிடங்கள் மௌனத்தவமாய்க் கடந்தன. ஒரு பெருமூச்சு புறப்பட்டு வெளியே வர, தலையசைப்புடன் மெல்லிய முறுவலைச் சிந்திவிட்டே சைந்தவி அங்கிருந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி விடு விடுவென நடந்தாள்.

விளக்குகளின் ஒளி உபயத்தால் தங்க முலாம் பூசப்பட்ட மணலில் அவளுடைய பாதங்கள் வேக வேகமாகப் புதைந்தும் வெளி வந்தும் கொண்டிருந்தன.

எத்தனை விரைவாக நடந்து சென்றும் பிரயோசனமில்லாமல் போனது. சைந்தவியின் இருப்பிடம் செல்ல வேண்டிய பேருந்து வர நிமிடங்களாகி விட்டன. தங்கும் விடுதியை அடைந்த போது நேரம் இரவு பத்தரை ஆகிவிட்டிருந்தது.

“இன்னா பாப்பா இம்மாம் லேட்டு? ஆபீசாண்ட வேல மேல மாட்டிக்கிணியா?”

எதிரே கொட்டாவி விட்டபடி வந்த மெஸ் பணியாளர் ராணிமேரி சைந்தவியிடம் விசாரித்தாள்.

இது ஒரு வசதி. சிலர் கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கான பதிலையும் தாங்களே எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள். பொய் சொல்லத் தேவையுமில்லை. உண்மையைக் கூறும் அவசியமுமில்லை.

தன்னிடம் கேள்வி கேட்ட ராணிமேரிக்கு எல்லாப் பக்கமும் தலையாட்டி பொதுவான பதில் கொடுத்தாள் சைந்தவி.

நல்லவேளையாக வாயைத் திறந்து எப்போதும் சொல்லப் பிடிக்காத பொய்யைச் சொல்ல தேவையில்லாமல் போக, தப்பித்த ஆசுவாசம் சைந்தவிக்குள் அந்த நேரத்திலும் ஏற்பட தான் செய்தது.

“என்னமோ போ. இம்மாம் நேரஞ்செண்டு வர்றது சேப்டி இல்லைன்னு சொல்லிக்கினாலும் வேலை விடுதா? ராவு பகலுன்னு கண்டுக்காம இந்த கம்பூட்டர் கம்பெனிங்க இம்மாம் வேலை வாங்கிக்கிணு...

நீ சாப்பிட்டியா பாப்பா? பத்து மினிட் முன்னால வராம போயிட்டியே. டைனிங் ஹாலை பூட்டிக்கிணு இப்பால வர்றாங்காட்டி நீயும் எதுக்கால வந்துகிணுக்கீற. இன்னிக்கு மெனு டாலும் (dhal) புல்கா ரொட்டியும். கொஞ்சமா மீந்ததை எடுத்து வச்சிருக்கேன். களைப்பாக்கீற… ரூமாண்ட எடுத்தாந்து தர்றேன். சாப்பிடறியா பாப்பா?”

ஓங்குதாங்கான தோற்றம் ராணிமேரிக்கு. தோற்றத்திற்குச் சம்பந்தமில்லாத குணம் கொண்டவள்.

ஏதோ மூன்று வருடம் பார்த்ததில் உண்டான பாசம். முகத்தைப் பார்த்தே பசியைப் புரிந்து கொண்ட ராணிமேரியின் பாசமும் பரிவும் சைந்தவியை நெகிழ்த்தியது. பசியின் களைப்பு இருந்த போதும் சாப்பாடு தொண்டைக்குழியில் இறங்கும் என்று தோன்றவில்லை.

“இல்லக்கா வேணாம். தாங்க்ஸ்!”

கவனமாக வரவழைத்த புன்னகையுடன் சொன்னாள்.

சைந்தவி அதிகம் பேசுவதில்லை. ராணிமேரி அதை அறிந்தவளாக மேலே பேச்சை வளர்க்கவில்லை. அவளிடம் விடைபெற்றுக் கொண்டு நடையைக் கட்டினாள்.

மறுநாள் சைந்தவியை கடும் தலைவலி பிடித்துக் கொண்டது. படுக்கையைவிட்டு அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. கீற்றாக ஜன்னல் திரைச்சீலையின் ஓரமாய் ஊடுருவிய சூரியவொளி கண்களைக் கூசச் செய்தது.

விண் விண்ணெனத் தெறித்த வலியுடன் அலுவலகம் போக முடியாது. அத்துடன் வினித்தை வேறு எதிர்கொள்ள வேண்டும். இன்று முடியுமா? முடியாது என்று உறுதியாக உணர்ந்தாள்.

அதனால் காலையில் முதல் வேலையாக மொபைலை எடுத்து அலுவலகத்திற்கு விடுப்புச் சொல்லப் போனாள். அப்போது தான் கவனித்தாள்… நேற்றிலிருந்து வினித் பல முறை அழைத்து இருந்தான். ஏகப்பட்ட குறுஞ்செய்திகளையும் அனுப்பி வைத்து இருந்தான்.

முதலில் அலுவலக அழைப்பை ஏற்படுத்திப் பேசி முடித்தாள். பிறகு வேறு யார் யார் அழைத்திருக்கிறார்கள் எனப் பார்த்தாள். அலுவலகச் சம்பந்தமானவற்றை கவனித்துப் பதிலளித்தாள். பிறகே வினித்தின் குறுஞ்செய்திகளை வாசித்தாள்.

உடனே பதில் அனுப்பவில்லை. என்ன சொல்ல வேண்டும் என்று யோசித்தாள். என்ன தான் வினித்தைவிட்டு விலகிப் போக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாலும், மனது நிறைய வலி அவளுக்கு. இவ்வலியைச் சொல்லி ஆறுதல் தேடிக் கொள்ளவோ தோள் சாயவோ யாரும் அருகில் இல்லாத நிலை வேறு.

அப்படி ஆறுதல் அளிக்கக் கூடியவன் வினித் தான். ஆனால் வலியே அவனால் என்கிற போது சைந்தவி என்ன செய்வாள்?

இவ்வாறு நினைத்த வேளை அவளுடைய தலைவலி அதிகமாகியது. நெற்றிப்பொட்டைத் தேய்த்துவிட்டுக் கொண்டாள். உடனே மொபைலை வைத்துவிட்டு மெல்ல எழுந்தாள் அறைக்கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். முல்லை எதிரே தென்பட்டாள்.

“முல்லை…”

சைந்தவியின் குரல் கேட்டதும் பூந்தொட்டிச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த முல்லை திரும்பிப் பார்த்தாள்.

“இன்னாக்கா?”

தனக்குரிய வேலைகளுடன், நான்கு தளங்களைக் கொண்டு நெடுவாக்கிலே அமைந்திருக்கும் அந்த லேடீஸ் ஹாஸ்டலின் மக்களுக்கு எடுபிடி வேலைகளையும் பார்ப்பாள் முல்லை.

“காஃபி வேணும் முல்லை. தலைவலிக்குது… நீ போய் வாங்கிட்டு வந்து தர்றியா ப்ளீஸ்?”

“ரொம்ப வலிக்குதாக்கா? இதுக்கு இன்னாத்துக்கு ஒரு ப்ளீஸ் சொல்லிக்கிணுக்கீற? நீ பிளாஸ்க் வச்சிருக்கியே அத்த எடுத்தாந்து குடு. ஒன்னுக்கு ரெண்டா ஊத்திக்கிணு வாரேன்.”

“ஒரு காஃபி போதும் முல்லை.”

முல்லையிடம் பிளாஸ்க்கை தந்துவிட்டுச் சொன்னாள். அவள் போனதும் கதவைத் தாளிட்டுவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள் சைந்தவி. முல்லை வருவதற்குள் சைந்தவி முகம் கழுவி; பல் துலக்கி; காலை கடன்களை முடித்து வெளியே வந்தாள். பிளாக்ஸ் நிரம்ப காஃபியை ஊற்றி வந்திருந்தாள் முல்லை.

“ஒரு காஃபி போதும்னு சொன்னேனே முல்லை. எதுக்கு இவ்வளவு ஊத்திட்டு வந்த?”

“தலைவலிக்கு நல்லா இருக்கும்க்கா. வச்சி இன்னொரு தபா குடிச்சிக்கோ.”

“நீயும் கொஞ்சம் ஊத்தி குடிச்சிட்டுப் போ முல்லை.”

இருவரும் ஒன்றாக அமர்ந்து காஃபி குடித்தனர். முல்லை அங்கிருந்து போகும் முன்னர், “தலைவலிக்கு மாத்திரை வச்சிருக்கியாக்கா… இல்லாங்காட்டி மெடிக்கல்ல வாங்கியாறவா?” கேட்டாள்.

“என்கிட்ட மாத்திரை இருக்கு முல்லை. ரொம்ப தாங்க்ஸ்மா!”

“பரவாயில்லக்கா. நீ மாத்திரை போட்டுக்கிணு படுத்து எந்திரி. அப்பால மேரிக்கா டிபென்னு எடுத்தாறேன்னிச்சு. வரட்டாக்கா?”

“சரிம்மா…”

குரோசின் மாத்திரை ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டு கிளாஸ் நிறையத் தண்ணீரை ஊற்றி முழுங்கிவிட்டுப் படுத்தாள். தூக்கம் வரவில்லை. தூங்கும் எண்ணமும் அவளுக்கில்லை. தலைவலியைப் பொறுக்க மாட்டாமல் கண்களை மூடிக்கொண்டாள்.

சலனமற்று அவளால் இருக்க முடியவில்லை. மூடியிருந்த இமைகளுக்குள்ளே வினித் நுழைந்தான். சிறிது நேரம் அவனின் ஞாபகத்திலே மனது அலைபாய்ந்தது.

அதே நேரம் அலுவலகத்தை அடைந்திருந்தான் வினித். அன்று சற்று முன்னதாக வந்திருந்தான். சைந்தவி எங்கும் தென்படுகிறாளா என்று பார்த்துவிட்டே தன்னுடைய அலுவலகக் கட்டிடத்திற்குள்ளே சென்றான்.

இருக்கையில் அமர்ந்ததும் தான் மொபைலை கையில் எடுத்தான். அவசரமாக சைந்தவியுடைய வாட்ஸ் அப் ஸ்டேடஸ் என்னவென்று பார்த்தான்.

“என் மெஸ்ஸேஜஸ் பார்த்திட்டா சைவி. ஊப்ஸ்!”

இதுவரை மனத்திலிருந்த கலக்கம் அகன்று சற்றே நிம்மதி பிறந்தது வினித்திடம். அந்நிம்மதியுடன் தன்னுடைய வேலையைத் தொடங்கினான். இடையிடையே மொபைலை பார்த்துக் கொண்டான். நேற்றிரவு யோசித்ததில் அவளுடைய மனநிலை எப்படி இருக்கக்கூடும் என்பதும் புரிந்தது.

மதியம் தாங்கள் வாக்கிங் போகும் நேரத்திற்கு அவளைக் காணலாம் என்று நினைத்துக் கொண்டான். அப்படி நினைத்ததும் அவளுடைய அழைப்புக்காகக் காத்திருக்காமல், வினித்தே அவளை அழைத்தான்.

“ஹாய் சைவி!”

“சொல்லு வினித்…”

“நீ தான் சொல்லணும் சைவி.”

“என்ன சொல்லணும்?”

“ஏன் என்னை அவாய்ட் பண்றே?”

“உன்னை அவாய்ட் பண்றவ தான் இப்படி ஃபோனை எடுத்துப் பேசுறாளா?”

“நேத்து அவ்வளவு சொல்லியும் கண்டுக்காம போயிட்டயில்ல. நம்ம ரெண்டு பேரும் மாலுக்கு போகலாம்ன்னு பேசிட்டதும் உனக்கு மறந்து போச்சா?”

“மனசு சரியில்லைன்னு கிளம்பிட்டேன். மால் போறதா பேசினது என் ஞாபகத்தில் இல்லை.”

“சரி விடு. எத்தனை ஃபோன் கால் பண்ணேன். நீ ஏன் எடுக்கலை?”

“கவனிக்கலை…”

“ம்ம்… மேடமை இன்னைக்குப் பார்க்கலாமா? வாக்கிங் வர்றியா?”

“இல்லை வினித். நான் ஆஃபீஸ்ல இல்லை.”

“ஏன்? என்னாச்சு? பார்த்தியா நான் நினைச்ச மாதிரி அவாய்ட் பண்றே?”

“தலைவலி… அதான் வரலை.”

“அது மட்டுமே காரணம்னா என் மிஸ்ட் கால்ஸ், மெஸ்ஸேஜஸ் பார்த்ததும் நீ ஃபோன் பண்ணாட்டி கூட, ஒரு குட்டி மெஸ்ஸேஜ்ல சொல்லியிருப்ப சைவி. ஐ நோ யூ பெட்டர் (I know you better). சரி தானே?”

“...”

சைந்தவியின் அமைதியே அவளைக் காட்டிக் கொடுத்தது. தலைவலிக்காக மட்டும் அவள் விடுப்பு எடுக்கவில்லை. வினித்தை எதிர்கொள்ளும் மனநிலை இல்லாமலும் தானே?

சில வினாடிகளுக்குப் பின்னர் அவள் அவனிடம் கேட்டாள்…

“யூ நோ மீ பெட்டர்… யூ நோ மீ பெட்டர் வினித்! தென், ஹௌ டிட் யூ நாட் நோ தேட் ஐ’ம் இன் லவ் வித் யூ?”

(நீ என்னை நல்லாப் புரிஞ்சவன்… நீ என்னை நல்லாப் புரிஞ்சவன் வினித்! பின்ன எப்படி நீ, நான் உன்னைக் காதலிப்பதை உணரலை?)

‘இவள் கேட்பதும் சரி தானே?’

திகைத்துப் போனான் வினித்!
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்

ஆர்த்தி ரவி

அத்தியாயம் 05:

இரவு இரண்டு மணி கடந்து இருந்தது. அந்த நேரத்திலே அஜீரணம் காரணமாக அலெக்ஸ் விழித்துக் கொண்டான்.

“ம்ப்ச்… மணி ரெண்டரை தானா?”

படுக்கையில் இருந்து எட்டி மொபைலை கையில் எடுத்துப் பார்த்துவிட்டு அலுத்துக்கொண்டான்.

“நெஞ்சைக் கரிக்குதே! இதுக்குத் தான் சைனீஸ் சாப்பாட்டை அவாய்ட் பண்ணுறது. இன்னைக்கு வேற வழியில்லாம மாட்டிக்கிட்டேன்.”

மாலையில் அலுவலகத்தில் இருந்து அவனுடைய நண்பர்கள் சிலருடன் டின்னர் சாப்பிட போயிருந்தான். எல்லோரும் சைனீஸ் உணவகத்தைத் தேர்ந்தெடுக்க, வேறு வழியின்றி அலெக்ஸும் அதையே சாப்பிட்டான்.

அவனுக்குச் சில உணவகங்களில் சாப்பிடுவது ஒத்துக் கொள்வதில்லை. இப்போது அவதியில் ஏப்பம் ஏப்பமாக வந்து கொண்டிருந்தது. கட்டிலருகே இருந்த தண்ணீர் பாட்டிலில் பாதியைக் காலி செய்தான்.

சில நிமிடங்கள் கடந்து விரையமானது தான் மிச்சம். ஏப்பம் அடங்குவதாகத் தெரியவில்லை.

‘தண்ணி குடிச்சாலும் போக மாட்டேங்குது! பிரிட்ஜ்ல சோடா எதுவும் இருக்கான்னு பார்க்கலாம்.’

நொந்தபடி தன்னுடைய படுக்கையறையில் இருந்து அலெக்ஸ் வெளியே வந்தான்.

‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே…’

‘சந்திரபாபு இந்த நேரம் பாடிட்டு இருக்காரு?’

அவர்கள் வீட்டில் இவ்வளவு பழைய பாடலைப் பார்க்க யார் இருக்கிறார்கள்? அதுவும் தமிழில்?

‘போக்கிரி ராஜா போதுமே தாஜா
போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே…’

யாரோ ஹீரோயின் ஒருத்தி, சந்திரபாபுவின் காதைத் திருகுவதைப் பார்த்தபடி கூடத்தின் இருக்கைகள் அருகே வந்தான். வினித் தொலைக்காட்சிப் பெட்டியை அணைக்க மறந்திருப்பான் என்று தான் அலெக்ஸ் நினைத்தான்.

ஓடிக் கொண்டிருந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, அதை அணைக்க ரிமோட்டை எடுக்க எத்தனித்தான். அப்போது தான் மெல்லிய விளக்கொளியின் பின்னணியில், இருக்கையில் சாய்ந்திருந்த வினித் கண்களில் பட்டான்.

“என்னடா இந்த நேரத்திலே? அதுவும் இந்தப் பாட்டைப் பார்த்திட்டு?”

ஆச்சரியம் வெளிப்பட்டது அலெக்ஸின் குரலில். நண்பனின் அரவம் வினித்தை எட்டியது போலில்லை. அவனுடைய பேச்சும் காது துவாரத்தினுள் புகுந்த மாதிரி இல்லை.

தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பு உட்கார்ந்து இருந்தவனின் முகம் வேறு பக்கம் பார்த்திருக்க, அவனைப் பார்த்த அலெக்ஸ், ‘டிவி பார்த்திட்டே தூங்கிட்டானா என்ன?’ யோசித்தான்.

“இருக்காதே” சொல்லிக்கொண்டு வினித்தின் பக்கவாட்டில் நின்று பார்த்தான். அவனுடைய கண்ணிமைகள் பப்பரப்பா என்று திறந்திருக்க,

“அடப்பாவி! எங்கடா பார்த்திட்டு இருக்கே?” சத்தமாகக் கேட்டான்.

அலெக்ஸின் குரல் உயர்ந்து ஒலித்ததில் திடுக்கிடலுடன் தன் நிலை கலைந்தான் வினித்.

“என்ன அலெக்ஸ், என்ன கேட்டே? நீ இன்னும் தூங்கலையா?”

குரலின் கரகரப்பை சரி செய்துகொண்டு கேட்டான் வினித். கடைசி கேள்வியைக் கேட்டதும் கடுப்பான அலெக்ஸ் நண்பனை முறைத்துவிட்டு,

“அந்த வெற்றுச் சுவரையே வெறிச்சிட்டு இருக்கியா… அதான், நாளைக்கு அதிலே எதுவும் சித்திரம் வரைஞ்சு இண்டீரியர் பண்ணப் போறியான்னு கேட்டேன் மச்சி.” படு நக்கலாகப் பேசி வைக்க,

நக்கலுடன் பேசிய நண்பனைப் பார்த்தாலும் பதில் சொல்லாமல் வினித் அமைதியாக இருந்தான். ஏப்பம் வந்து கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல்,

“என்னைத் தூங்கலையான்னு கேட்கிற நீ, இந்த நேரத்தில எதுக்கு இப்படி பூதமாட்டம் உட்கார்ந்திருக்க?”, அலெக்ஸ் கேட்டதும் இப்போது வினித் சுரத்தையில்லாமல் பதில் சொன்னான்.

“ஒன்னுமில்லை அலெக்ஸ்.”

“ஒன்னுமில்லாம எதுக்கு நடுநிசியைத் தாண்டி உட்காரணும்? எந்திரிச்சி உள்ளே போய்த் தூங்கு.”

“தூக்கம் வரலை. அதான் சும்மா டிவி பார்த்திட்டு இருந்தேன்டா.”

“டிவி பார்த்திட்டா இருந்தே? அட, பம்பாய்காரனுக்குப் பழைய சந்திரபாபு பாட்டுல என்ன புது இன்டெரெஸ்ட்? நம்புற மாதிரி இல்லையே மச்சி!”

வினித் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அப்போது தான் கவனித்தான். உதட்டைப் பற்களால் அழுத்தியபடி டிவி ரிமோட்டை தேட, அது அலெக்ஸின் கையில் இருந்தது. வலது கையை நீட்டி, சற்று எட்டி அதனைப் பறித்தான்.

“நான் டிவியை ஆஃப் பண்ணிட்டு போறேன். நீ முதல்ல உன் ஏப்பத்தைப் போய் ஆஃப் பண்ணு போடா! உன் ஏப்பச் சத்தத்தைக் கேட்டு பயந்து வருது... ஏதோ மான்ஸ்டர் ஒன்னு கிட்டக்க வந்து மிரட்டிட்டு நிற்கிற மாதிரி.”

நண்பனுடைய தொடர் நக்கலுக்கும் கேள்விகளுக்கும் முறைப்புடன் திருப்பிக் கொடுத்தான்.

“என்ன சொன்ன என்ன சொன்ன? இந்த ஏப்பத்துக்கு நீ பயந்தவனா? அதுவும் எப்படி? மான்ஸ்டர் மிரட்டலா தெரியுதோ? என் வாயிலே வேற வந்திறப் போகுது… போ போ. போயி தூங்குற வழியைப் பாரு.”

அவன் சொன்ன கமெண்டில் காண்டான அலெக்ஸ், நண்பனின் முதுகில் கையை வைத்துத் தள்ளிவிட்டான்.

வினித் தன்னுடைய படுக்கையறையை நோக்கிப் போக, அலெக்ஸ் நண்பனின் முதுகை வெறித்தான்.

‘எப்பவும் கூலாக இருப்பான். என்னாச்சு இப்போ?’

என்ன தான் வினித் நார்மலாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், அலெக்ஸ் அந்தச் செய்கையை நம்பவில்லை. யோசனையுடனேயே போய்க் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தான்.

மறுநாள் வார விடுமுறையாக இருக்க, ஒன்பது மணிக்கு மேலே விழித்து எழுந்தான் வினித். எழுந்ததும் முதல் வேலையாக மொபைலில் அழைப்புகளை ஏற்படுத்திப் பேசினான்.

முதல் அழைப்பில் புன்சிரிப்புடன் கலகலப்பாகப் பேசினான்.

“அச்சா…”

அடிக்கடி சொல்லிச் சிரித்தான்.

“ஐஸாகை கியா?” (அப்படியா?) என வியந்த குரலில் கேட்டுக் கொண்டான்.

அவனுடைய முகத்தில் மென்மை குழைந்து பார்ப்பதற்கு நன்றாக இருந்தான். முன் தினத்தின் வருத்தம் மறைந்திருந்தது. எப்போதும் மகிழ்ச்சியுடன் அவன் பேசும் அழைப்பு. இன்றும் அப்படியே மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

முதல் அழைப்பில் பேசிவிட்டு வைத்தவன், அடுத்த அழைப்பில் கனிவும் சிந்தனையுமாகப் பேசினான். சில நிமிடங்களின் இறுதியில் சொன்னான்.

“ஆப் பீ அப்னா தப்பயத் மே தியான் ரக்கியே...” (நீங்களும் உங்க உடம்பை கவனமாகப் பார்த்துக்கோங்க.)

பேசி வைத்ததிற்கு அப்புறம் அவனுடைய முகம் சிறு கவலையைக் காட்டியது. ஆனால் அதிலேயே உழலாமல் தன்னுடைய வேலைகளில் இறங்கினான். தன்னுடைய அறையை ஒதுங்க வைத்துச் சுத்தம் செய்யத் தொடங்கினான்.

வினித் மொபைலில் கடைசியாகப் பேசியது சமையலறைக்குள் காஃபி போட்டுக்கொள்ளச் சென்ற அலெக்ஸின் காதுகளையும் எட்டியது.

சற்று நேரத்திற்குப் பின்னர் அழுக்குத் துணிகளுடன் வெளியே வந்த வினித்திடம், “எப்படி இருக்காங்க மச்சி. எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டான் அலெக்ஸ்.

“எப்பவும் போலத்தான். பிரச்சனை எல்லாம் எதுவுமில்லை” என முறுவலுடன் சொல்லிவிட்டு வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு, அதனை இயக்கிவிட்டு வந்தான்.

தனக்குப் பிடித்த மாதிரி தேநீர் தயாரிப்பில் இறங்கினான். காஃபியை உறிஞ்சியபடி சமையலறை மேடையில் சாய்ந்து நின்ற அலெக்ஸ் கூர்ந்து வினித்தைப் பார்த்து,

“நீ ஆள் சரியா இல்லையே. எதுவோ ஒன்னு உன்னை வருத்துற மாதிரி தெரியுது. என்ன மச்சி அது?” கேட்டான்.

சென்னைக்கு வேலை எடுத்து வந்த சில மாதங்களில் இருந்து வினித்திற்கு அலெக்ஸைத் தெரியும். கிட்டத்தட்ட ஐந்து வருடப் பழக்கம் இருவருக்கிடையில். அந்த உரிமையில் கேட்டுவிட்டான்.

நண்பர்களாக இருப்பினும் ஒரே வீட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தாலும் எப்போதும் அவரவர்க்கு உள்ள எல்லையை மதித்து நடந்து கொண்டார்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் விசயங்களில் மூக்கை நுழைப்பது, நோண்டுவது கிடையாது.

இருவரும் சில விசயங்களை மனம்விட்டும் பேசிக் கொள்வதும் உண்டு. இருவருக்குள் இருக்கும் இப்புரிதல் வினித்தைப் பதில் சொல்ல உந்தியது.

அடுப்பில் கொதிக்க ஆரம்பித்த தண்ணீரில் இஞ்சித்துண்டை நறுக்கிப் போட்டபடி வினித் பேசினான்.

“சைவி, என்னைப் பார்த்து ‘எப்போ கல்யாணம் செய்துக்கலாம்?’னு கேட்டா.”

மிகுந்த சங்கடம் தென்பட்டது அவனுடைய முகத்தில்.

“என்ன?!”

ஒன்றிரண்டு வினாடிகள் அதிர்ச்சியுடன் நின்றிருந்த அலெக்ஸ் மெதுவான குரலில், “எப்போ… எப்போ? இது எப்போ நடந்தது? நீ என்ன பதில் சொன்னே அவளுக்கு?” கேள்விகளை அடுக்கினான்.

“ஒரு வாரம் இருக்கும்டா. நான் என்ன சொல்லி இருப்பேன்னு உனக்குத் தெரியாதா?”

“...”

இருவரும் ஒன்றும் பேசாமல் நின்றிருந்தனர். ஒரு பெருமூச்சுடன் வினித் தேநீரில் கவனமானான். கொதித்து வந்த தேயிலைத் தண்ணீரை வடிகட்டி விட்டு, அதில் அலெக்ஸ் காய்ச்சி வைத்திருந்த பாலைக் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டான்.

பின்னர் சிறிதளவு சர்க்கரை சேர்த்துப் பருகிப் பார்த்து விட்டு, உணவுக் கூடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். அவனுக்கு எதிரே இருந்த ஓர் இருக்கையைப் பின்னுக்கு இழுத்துப் போட்டு, தானும் உட்கார்ந்து கொண்டான் அலெக்ஸ்.

நண்பனின் முகம் பார்த்து, “இது ரொம்ப சென்சிடிவ் விசயம் மச்சி” என்றான்.

“தெரியும் டா. அதான் ரொம்ப ஃபீல் பண்றேன். நான் ஒரு ஃபிரண்டா தான் சைவியை நினைச்சு பழகிட்டு வர்றேன். இந்த மாதிரி அவளுக்கு எப்படித் தோணிச்சுன்னு புரியலை. எந்த இடத்தில் தப்பாகிப் போச்சுன்னு யோசிச்சு யோசிச்சு தலை வெடிக்கிற அளவுக்குக் குழப்பமா இருக்குடா.”

“நீ ஃபிரண்டா நினைச்சு அவகிட்ட பேசிப் பழகுறேன்னு எனக்கும் தெரியும். ஆனால், அவ அதை வேற மாதிரி நினைச்சிட்டா. உன் அக்கறையும் அன்பும் அவளுக்குப் பிடிச்சிப் போய், அதுவே உன் மேலே ஈர்ப்பை வரவழைக்கக் காரணமாயிருக்கு. அவளையும் தப்பா நினைக்க முடியலை.”

“டேய் நான் அப்படி வித்தியாசமா நடந்துக்கலையே. அவ மத்தவங்க மாதிரி கலகலப்பா இல்லைன்னு நல்லா பேசிச் சிரிக்க வச்சேன். யார்கிட்டேயும் பழக யோசிச்சு தனியாவே இருந்தா. நான் ஃபிரண்டா பழக ஆரம்பிச்சதிலே இருந்து பெட்டரா தெரியுறா. நான் இப்படி நினைச்சுப் பழகினா… ம்ப்ச்… என் நினைப்பும் பிரண்ட்ஷிப்பும் எப்படித் தப்பா போச்சு?”

“ம்ம்… எனக்குப் புரியுது மச்சி. ஆனால் சைவி அப்படி எடுத்துக்கலையே? உங்களுக்கு இடையில் இருப்பது வெறும் நட்புன்னு அவ புரிஞ்சிக்காம போயிட்டாளே.”

“அதுக்கு நான் என்னடா செய்யட்டும்? ஏன்டா, இந்த கீதா, யாமினி, தான்வி, லூனா இப்படி மத்த எல்லா ஃபிரண்ட்ஸ் மாதிரி தானே எனக்கு சைவியும்?”

“அதை நீ தான் உறுதிப்படுத்திக்கிட்டு, சைவிக்கும் எடுத்துச் சொல்லணும்.”

“உறுதிப்படுத்திக்கணுமா? என்னடா சொல்ற? அப்போ உனக்கும் இதிலே சந்தேகமா?”

“இப்போ என் சந்தேகமா முக்கியம்? மச்சி யோசிடா. இது உணர்வு சம்பந்தப்பட்ட விசயம். உன்னதும் சைந்தவியோடதும்னு ரெண்டு பேர் என்ன உணர்றீங்கன்னு தான் பார்க்கணும். மத்தவங்க சொல்றதுக்கும் நினைக்கிறதுக்கும் என்ன இருக்கு?”

“என்ன உணரணும் நீ எதிர்பார்க்கிறே அலெக்ஸ்? இனிமேல் இதிலே நான் எவ்வளவு யோசிச்சாலும் என்ன மாறப் போகுது சொல்லு? ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கும் ஃபிரண்ட்ஷிப் வந்து, அதிலே இத்தனை பாண்டிங் (பிணைப்பு) தப்பா என்ன? எனக்கு இது புரியலை!”

“நல்ல ஃபிரண்ட்ஷிப்க்கு நடுவில் பிணைப்பு ஏற்படுறது தப்பில்லை. தப்பே கிடையாது! இது எல்லோருக்கும் பொதுவான கருத்து.

என் வரையிலே சைந்தவி விசயம் எனக்கும் இத்தனை நாள் தப்பா பட்டதில்லை. ஆனால், இப்போ அந்த டிராக் மாறுது. இந்த நேரத்திலே போயி இது சரியா தப்பாங்கிற ஆராய்ச்சி பண்ணுறது தப்பு வினித்.

உனக்குப் புரியும். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு யோசிச்சேன்னா கனெக்ட் பண்ணிப்பே. இந்த பாண்டிங்க நீ எப்படிப் போய் உருவாக்கின?”

“சரி சரி நானே தான் போய் அவகிட்ட ஃபிரண்டானேன். நல்லதனமா நினைச்சது எப்படித் தப்பா போச்சுன்னு நினைக்கிறே?”

“நீ அவகிட்ட ஒரு சாஃப்ட் கார்னரை உருவாக்கி இருக்க. அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏக்கம் பிடிச்சி போயிருந்தவளுக்கு உன் அன்பும், அக்கறையும் ரொம்ப பெருசா பட்டிருக்கு. உன்னை அவளை அரவணைக்கும் தோளா நினைச்சிட்டா.”

“அவ அப்படி வேற விதமா நினைச்சா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? லவ்வுங்கிற அர்த்தத்திலே தான் இதை எடுத்துக்கணுமா? ஏன் ஒரு நண்பனா ஆதரவா இருக்கக் கூடாதா? தோள் கொடுப்பான் தோழன்னு உங்க தமிழ் சேயிங் (பழமொழி) இருக்கில்ல. அது தப்பா?”

“இருந்தாலும் நீ இம்புட்டுத் தீவிரமா தமிழ் பேசக் கத்துக்கிட்டு இருக்கக் கூடாது மச்சி! எங்க பழமொழி எல்லாம் ரொம்ப தெளிவா தெரிஞ்சி வச்சிருக்கே?”

“ப்ளீஸ் டோண்ட் டீவியேட் தி டாப்பிக் மேன்! (பேச்சை மாத்தாதே டா)”.

தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது கிண்டல் செய்த நண்பனை முறைத்தான் வினித். நெற்றியில் பூத்திருந்த வியர்வையைத் துடைத்தபடி, “நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை” நண்பனிடம் கடு கடுவெனக் கேட்டான்.

“தோள் கொடுப்பான் தோழன்னு சொல்றது சரி. அதில் சந்தேகமில்லை. ஆனால், இங்க தோழனைத் தாண்டி எடுத்திட்டுப் போயிருக்கா சைந்தவி. நீ ஏதாவது ஒரு கட்டத்தில் இதை உணர்ந்து எப்படி என்னன்னு கவனிச்சிருக்கலாம்.”

“எப்படிடா இப்படி நீ, நான் என்னன்னு உணர்ந்து கவனிச்சிருக்கலாம்னு சொல்லுற. முடிவா என் மேலே தான் இப்ப தப்புங்கிறே?”

“என்னை முழுசா பேச விடு. சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சிடறேன்.”

“...”

‘சரி நீ கண்டின்யூ பண்ணு’ என்பதை போல் நண்பனைப் பார்த்திருந்தான் வினித்.

“நீ சொன்னியே அந்த லூனா, மத்த பொண்ணுங்க எல்லாம் மும்பை பொண்ணுங்க தானே?” அவனிடம் அலெக்ஸ் கேட்க,

‘ஆமாம்’ என்று தலையசைத்தான் வினித்.

“அவங்க எல்லாம் உங்க அக்கம் பக்கத்து வீடு, ஒரே பில்டிங்ல இருக்கிறவங்க, இல்லாட்டி உன் ஸ்கூல்மேட், காலேஜ்மேட்னு உனக்கு நல்லாப் பழக்கமானவங்க.

என்ன தான் சென்னையை மெட்ரோன்னு சொல்லிக்கிட்டாலும்; இப்போ இங்க கொஞ்சம் கல்சர்ல மாற்றம் வந்திருக்குன்னாலும்… தமிழ்ப் பொண்ணுங்க டிரடிஷனல் டைப்புங்கிறது தான் உண்மை.

உனக்கு எப்படி சைந்தவியைத் தெரியும்? உனக்கு ஒரு முறை உதவி செஞ்ச ஒருத்தியா மட்டுமே அவ அறிமுகமாகி இருக்கிறாள். உன் ஆஃபீஸ்ல அவ வேலை செய்யலை. உன் உறவோ இல்லை உன் கூடப் படிச்சவளோ கிடையாது.

உங்களுக்கு இடையில் பொது நண்பர்கள்னு சொல்லிட்டு யாரும் இல்லை. வேற எந்த விதத்திலும் நீங்க ரெண்டு பேரும் கனெக்டட் கிடையாது!

நீயே வலிய போயி அவகிட்ட பேசிப் பழகி இருக்கே. சைந்தவிக்கு உன் மேல் விருப்பம் வந்ததில் தப்பில்லை மச்சி. நீ ஃபிரெண்டுன்னு சொல்லிக்கிற லிமிட்லேயே நின்றிருந்தாலும், அவ அதைத் தாண்டி வந்து, அதுக்கு மேலே போய் லவ்னு நினைச்சிட்டா.”

“திரும்ப நீ முதல்ல சொன்ன விசயத்துக்கே வந்து நிறுத்திட்ட டா. நடந்ததை இனி மாத்த முடியாது. அவ அப்படி லவ்வுன்னு எடுத்திட்டதாலே தான் லவ் சொல்லாம நேரா கல்யாணம் பண்ணிக்கக் கேட்டிருக்கா.

ரொம்ப நல்லவ சைவி. இனி எங்க ஃபிரண்ட்ஷிப் எப்பவும் போல இருக்கப் போறதில்லைங்கிறது எனக்குப் பெரிய கவலையா இருக்கு. அவளுக்கும் இது பெரிய ஏமாற்றமா தானே இருக்கும். இப்ப இதை நினைச்சி எப்படி மனசுல கஷ்டப்பட்டிட்டு இருப்பா?”

நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது…

இஸ்திரி பாண்டியன் எஃப் எம்மை ஆவலாகக் கேட்டுக் கொண்டிருந்தார் போலும். வானொலிப் பெட்டியின் ஒலி மேலே இவர்கள் வீடு வரைக்கும் கேட்டது.

வேதனையால் கசங்கித் தெரிந்தான் வினித். அவனுடைய வருத்தமும் கவலையும் புரியாமல் இல்லை. அலெக்ஸ் நன்றாகவே புரிந்து கொண்டான்.

ஆனாலும், “இத்தனை நாளா நீ நட்பைத் தாண்டி வேற நினைச்சதில்லை சரி. இனி அப்படி ஒரு கோணத்தில் யோசிச்சு பாரேன் மச்சி. சைந்தவியின் அன்புக்காகவும் உன் மேல் அவ வச்சிட்ட பிரியத்துக்காகவும். அவளை உனக்கு ரொம்ப பிடிக்கும்ங்கிறதாலே இதைச் சொல்றேன்.” என்றான்.

இதைச் சொல்வது எளிதாக இல்லையென்றாலும் அலெக்ஸ் சொல்லிவிட்டான். ஒரு நண்பனாக அவனுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு நகர்ந்தான்.

ஆனால் இதைக் கேட்டதும் வினித்தின் மனது அத்தனை பாடுபட்டது. வேதனையுடன் மேஜை மேல் தலையைக் கவிழ்த்துக் கொண்டான். அவனுடைய கண்களில் வேதனை மட்டுமல்ல இயலாமையும் சேர்ந்து குடிகொண்டது.

ஒன்றிரண்டு நிமிடங்கள் சென்றிருக்கும். வினித் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து எழுந்து போனான். துவைத்த துணிகளை வாஷிங் மெஷினிலில் இருந்து எடுத்துக்கொண்டு பால்கனிக்கு சென்றான். துணிகளைக் கொடியில் காயப்போட்டு விட்டு வந்தவனை அலெக்ஸ் சாப்பிட அழைத்தான்.

“பசிக்கலை டா. நீ சாப்பிடு.”

நண்பனின் நிலையை அறிந்து கொண்டவனால் அதற்கு மேல் அவனை வற்புறுத்த முடியவில்லை. யோசிக்கட்டும் என்று விட்டு விட்டான்.

வினித் தன்னுடைய அறைக்குள்ளே சென்று கதவடைத்துவிட்டு, கொஞ்சம் தண்ணீரைப் பருகினான். பின்னர் அப்படியே கட்டிலில் படுத்துக் கொண்டான்.

இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையை அவன் வெறுத்தான். ‘எப்படி இப்படிச் சிக்கிக்கொண்டேன்?’ என்று நினைத்தபடி இமைகளை இறுக்கமாக மூடிக் கொண்டான். சில நிமிடங்களை அமைதியில் கழித்தான்.

அந்த நேரம் சைந்தவி தன்னிடம் கேட்டது வினித்தின் காதுகளுக்குள்ளே ஒலித்துக் கொண்டே இருக்க, அவனுடைய ஞாபகம் கிளறப்பட்டது.

“யூ நோ மீ பெட்டர்… யூ நோ மீ பெட்டர் வினித்! தென், ஹௌ டிட் யூ நாட் நோ தேட் ஐ’ம் இன் லவ் வித் யூ?”

(நீ என்னை நல்லாப் புரிஞ்சவன்… நீ என்னை நல்லாப் புரிஞ்சவன் வினித்! பின்ன எப்படி நீ, நான் உன்னைக் காதலிப்பதை உணரலை?)

‘இவள் கேட்பதும் சரி தானே?’ என்று வினித் அப்போது திகைத்துப் போனது சிறிது நேரம் மட்டுமே.

“எனக்கு உன்னைத் தெரியும். நல்லாத் தெரியும் சைவி!”

அவள் கேட்டதில் நியாயம் இல்லை என்று தோன்றியதால் கோபத்தில் அவனுடைய குரல் அழுத்தமாகவே ஒலித்தது.

“அப்புறம் எப்படி நான் உன் மேலே வச்சிருக்கும் காதல் உனக்குத் தெரியாம போச்சு? இத்தனை பெரிய விசயத்தை மிஸ் பண்ணி இருக்கியே!”

அவளும் அவனைக் கோபமாகவும் ஆதங்கமாகவும் திருப்பிக் கேட்டாள். தான் தவறு செய்யாத ஒன்றிற்கு எப்படிப் பொறுப்பாக முடியும்? வினித்தை அவளுடைய ஆதங்கம் பாதிக்கவில்லை. அவளிடம் மறுத்துப் பேசினான்.

“வெளிப்படையாக இல்லாட்டியும், மறைமுகமாக கூட இதுவரை நீ என்னை லவ் பண்றேன்னு எனக்குக் காட்டியதில்லை சைவி. நான் உன்கிட்ட பெருமையா நினைக்கிற ஒரு குணம் உன்னுடைய கண்ணியம்.

அதை எப்பவும் நீ நமக்கிடையில் கடைப்பிடிச்சிட்டு வர்ற. என்னுடைய தோழியாய் மட்டும் என் கண்ணுக்குத் தெரிஞ்ச. நீ, நமக்கிடையில் இருக்கும் நட்புங்கிற அந்த லைனை தாண்டி வந்த மாதிரி நான் எப்பவும் உணரவே இல்லை.

நம்ம பிரண்ட்ஷிப்பை தவிர வேற எதையும் நான் நமக்கிடையில் கொண்டு வந்ததில்லை. வேற மாதிரி… ம்ம் இப்ப நீ சொல்லுற உறவைப் பற்றி எப்பவும் நினைச்சதில்லை சைவி. அப்படி எந்த எண்ணமும் என் மனசுல இல்லைங்கிறதாலே நான் எதையும் உணராமல் போயிருக்கலாம்னு இப்போ தோணுது.

நீ இந்தளவு என்னை விரும்புறேன்னா, எனக்கு ஒரு தடவையாவது தெரியப்படுத்தி இருக்கலாமில்ல? என்கிட்ட நேரிடையா சொல்லணும்னு உனக்குத் தோணாம போச்சு. ஏன்மா?”

வேகமாகப் பேசத் தொடங்கியவனின் குரல் கடைசியில் உடைந்து கம்மி ஒலித்தது. அந்த, ‘ஏன்மா’ ஆதங்கமும் ஆற்றாமையுமாய் வெளி வந்து சைந்தவியைத் தாக்கியது.

அதில் உடைந்தே போனாள் அவள். அவளுடைய அழுகையைக் கேட்டதும் வினித் மௌனமாக நின்றான். அவனைப் பெரிதும் பாதித்தது அவளுடைய நிலை. ஆனாலும் முயன்று கேட்டான் அவளிடம்…

“நானும் கேட்கலாமில்லை” குரல் கரகரத்தது. தொண்டையைச் செருமிக்கொண்டு தொடர்ந்தான்.

“நீ எப்படி என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டமா?”

சைந்தவி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்க, “உனக்கு நல்லது பண்றதா நினைச்சி நட்புக்கரத்தை நீட்டினேன். இப்போ அதனாலேயே நீ வருத்தப்படும்படி ஆகியிருச்சு” வினித் வருத்தத்துடன் சொன்னான்.

அவள் அழுவதை நிறுத்தவில்லை.

“அழாதே சைவி! என்னை ரொம்ப ரொம்ப ஃபீல் பண்ண வைக்கிற நீ… ப்ளீஸ் காம் டௌன்!”

சில நிமிடங்கள் பிடித்தன. அவள் அழுது ஓய்ந்ததும், “நான் என்ன செய்யட்டும் சைவி, சொல்லு?” அவளிடமே விடையைத் தேடினான்.

துயரமும் ஆற்றாமையுமாக ஒலித்த, தான் நேசிப்பவனின் குரலில் சைந்தவியும் கலங்கிப் போனாள்.

சில வினாடிகள் கழித்து, “சில் வினித்! ஐ வில் பீ ஓகே!” என்றாள்.

‘நான் தேறிடுவேன்…’ எவ்வளவு சிரமப்பட்டு அவள் இதனைச் சொல்லியிருப்பாள் என்று வினித் இப்போதும் நினைத்துக் கொண்டான்.

ஆனால், அவள் கேட்ட, ‘என்னை நல்லா புரிஞ்சவன் எப்படி நான் உன்னைக் காதலிப்பதை உணரலை?’ அவனுடைய ஞாபகத்தில் நின்று இன்றும் மிகவும் வருத்திற்று.

“என்ன கேட்டுட்ட சைவி? எப்படி அப்படி என்கிட்ட உன்னாலே கேட்க முடிஞ்சது?” முணுமுணுத்துக் கொண்டான்.

சற்று முன்னர் அலெக்ஸுடன் பேசியதும் மனத்தில் வந்து நின்றது.

‘அலெக்ஸ் சொன்ன மாதிரி என்னாலே நினைத்துப் பார்க்க முடியுமா?’

‘முடியாது! முடியவே முடியாது!’

வேகமாக இடம் வலமாக வினித் தலையசைத்தான்.

‘நட்பு என்பது தனி. அதனுடன் காதல் இணைந்தால்? ஏற்றுக் கொள்ளவது எப்படிச் சாத்தியமாகும்?’

தன் மனதும் அதில் பொதிந்திருக்கும் விருப்பமும், சைந்தவியின் மனதும், விருப்பமும் இப்படிப் பல சிந்தனைகள் அவனுக்குள்ளே அலையலையாய்த் தோன்றி உயர்ந்தன.

வாழ்க்கைத் துணை என்கிற ரீதியில், இவ்விருவருக்கும் முன்னே விதியின் பயணம் ஆரம்பமானது!

நாட்கள் சில நகர்ந்திருந்தன.

இடைப்பட்ட காலத்தில் சைந்தவி, வினித் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்றில்லை. சந்தித்துக் கொண்டார்கள். பேசிக் கொண்டார்கள். ஆனால் அவர்களுடையே முன்னர் நிலவிய அந்த நட்பு நிலையில் எல்லாமும் குறைந்துவிட்டது.

தங்களுக்கு இடையில் ஏதோ திரை விழுந்தது போல் உயிர்ப்பில்லாத சந்திப்புகளாகின அவை. கலகலப்பில்லாத பேச்சுகளாக நிலவின அத்தருணங்கள் யாவும்.

யாருடைய நிலையையும் காலம் கண்டுகொள்வதில்லை. அனைவரின் இயக்கமும் காலத்தின் அசைவில் என்பதும் உண்மை. சைந்தவி தான் நினைத்தபடியே வேறு நிறுவனங்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தாள்.

வினித்தைப் பற்றிய வருத்தம் அவளுடைய மனத்திலே ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருந்தது. அவனைக் கடந்து போகும் மேகமாக இவளால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. வினித்திற்கும் சைந்தவி கலைந்து போகும் மேகம் இல்லை!

நட்போ காதலோ, அழுத்தமானதாக இருப்பின் எளிதில் கலைந்து விடுவது கிடையாது! அதனைக் கடந்தும் போய்விட முடியாது!

இது இருவருக்கும் தெரிந்தே. நடக்கும் நிகழ்வுகளால் உணர்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்

ஆர்த்தி ரவி

அத்தியாயம் 06:

சைந்தவிக்கு வினித்தை நினைவிலிருந்து ஒதுக்கி வைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அவன் மேல் கொண்ட காதல் அவளை பலவீனப்பட்டுப் போக வைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க இருக்க, வினித்தின் நினைவு அவளை வாட்டி எடுத்தது.

எப்பொழுதும் போலில்லாமல், அவனுடன் பேசியில் உரையாடுவது கூட மிகவும் கடினமாகத் தெரிந்தது. அவனை நேரில் சந்திப்பது அதைவிடவும் கொடுமையாகப்பட்டது.

அவனிடம் வார்த்தைகளை எண்ணி எண்ணிப் பேசினாள். தன்னையும் தன்னுடைய மனச் சங்கடத்தையும் மறைக்க நினைத்து, அவனைச் சந்திக்கும் தருணங்களில் அசாதாரணமாக நடந்து கொண்டாள்.

ஒரு நாள் இருவரும் மாலில் சந்தித்துக் கொண்டனர். சில நிமிடங்களை ஷாப்பிங் என்னும் பெயரில் நெட்டித் தள்ள வேண்டியதாக இருந்தது.

“இது ஒன்னும் வேலைக்காகாது” பெருமூச்சுடன் முனங்கினான் வினித்.

“ஃபுட் கோர்ட் போகலாமா சைவி?”

“சரி வினித்.”

இருவரும் அங்குச் சென்று ஓர் இடம் தேடி அமர்ந்தனர்.

“என்ன சாப்பிடறே? சொல்லு ஆர்டர் பண்ணிட்டு வர்றேன்.”

“நானே பண்ணிக்கிறேன். நீ உனக்கு வேண்டியதை மட்டும் போய் ஆர்டர் பண்ணு.”

அவளுடைய பதிலில் நிதானம் கெக்களித்து அவனைவிட்டு விலகப் போனது. அதை உணர்ந்து சடுதியில் அதனை இழக்காமல் லபக்கென்று பற்றிக் கொண்டு எதிரே அமர்ந்திருந்தவளிடம் சொன்னான்.

“இதென்ன புதுசா… உனக்குத் தனியா ஆர்டர் பண்ணிக்கிறது? சொல்லு என்ன வாங்கட்டும்?”

அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனுடைய கண்களில் கோபத்தின் விரிப்பு. அவன் அதனை அடக்கிக்கொள்ள உதடுகளை அழுத்திப் பிடித்திருந்ததைத் தாடையின் இறுக்கம் காட்டிக் கொடுத்தது. கன்னத்துத் தசைகளில் மெல்லிய துடிப்பு வேறு!

“கோபம் வந்தா பொங்கிடு. இந்த லுக் உனக்கு எடுப்பா இல்லைடா.”

கண் சிமிட்டிச் சிரித்தாள். அவனுக்கு அவளே வருத்தம் கொடுத்துவிட்டாள். வேண்டும் என்றே செய்கிறாள் என்று அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவளுடைய வருத்தத்தில் செய்து விடுகிறாள். அவனுக்கு அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அவளால் அவனைத் துன்பமாகவும் பார்க்க இயலவில்லை. தான் அவனுக்கு வருத்தம் கொடுப்பது, அவளுக்கு தன்னைத்தானே முள்ளால் கிள்ளி எடுக்கும் உணர்வைத் தந்து கொண்டிருப்பதும் உண்மை. இருந்தும் வருத்திக் கொண்டிருந்தாள். சற்றே மனது சமன் பட்டதும் அவனை இயல்பாக்க ஏதோ சின்னதொரு சகாயம் செய்ய முயன்றாள்.

சைந்தவி சொன்னதைக் கேட்ட வினாடியில் வினித் இறுக்கம் தளர்ந்தான். சற்றே இலகுவானவனின் தோள்கள் சரிந்தன. கண்களை மூடிக் கொண்டான் ஒரு நிமிடம் வரை. அவனுக்குள்ளே யோசனைகள் சரம் தொடுத்தன.

பின்னர் ஒரு முடிவுடன் அங்கிருந்து எழுந்து சென்றான். அரை மணி நேரம் சென்றே திரும்பி வந்தான். அவனுடைய கைகளில் அவளுக்குப் பிடித்த பீட்சா வகை ஒன்றும் பாவ் பாஜ்ஜியும் வீற்றிருந்தன.

“சாப்பிடு.”

சொல்லிவிட்டு, பாவ் பாஜ்ஜியை சாப்பிட ஆரம்பித்தான். அந்தப் பதார்த்தம் அவனுக்கு ருசிக்கவே இல்லை. இத்தனைக்கும் நல்ல மணத்துடன் சரியான மும்பை சுவையுடன் தயாரிக்கப்பட்டிருந்தது.

அவளும் பீட்சாவை சாப்பிட்டாள். அணில்பிள்ளை கொரிப்புடன். நெஞ்சம், தான் நேசம் வைத்திருப்பவனுக்காகத் துடித்தது. தன்னைத் தாக்கிய காதல் நோயின் வலி அவனுக்கும் தந்து விட்டாளே.

அவனுடைய அன்பாலும் அக்கறையாலும் தான் குழைந்து போய்; தற்போது அதனாலேயே தன்னுடைய இதயம் குலைந்து போய்!

தன்னுடைய சோகம் எல்லாமும் அவனையும் தாக்குகின்றன. தன்னால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நண்பனை விரைவில் விடுதலை செய்ய வேண்டும். எண்ணங்களின் வலை பின்னல் அவளை ஆக்கிரமித்துக் கொண்டன.

உருளாமல் உருண்டு கொண்டிருந்த நிமிடங்களுக்கு, அவர்களுடைய உண்ணும் உதட்டசைவுகளே மொழி தந்தன. சகிக்க இயலாத மௌனக் கவ்வல் அவனைப் பேச வைத்தது.

“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டு என்னை இம்சைப்படுத்தணும்னு தொடங்கி இருக்கேயில்ல?”

எப்பவும் மீசைக்குக் கீழே தவழும் வினித்தின் முறுவல் கசங்கி அடிவாங்கி இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே பேசினாள் சைந்தவி.

“நீ தான் எதையோ யோசிச்சு உளறிட்டு இருக்கடா.”

தோழியைக் கூர்ந்து பார்த்தான். உள்ளமும் உதடுகளும் வேறாகிப் போயிருந்த அவளுடைய தோற்றம் அவனுக்குத் துல்லியமாய்ப் புலப்பட்டது. அவளின் புதிய நடவடிக்கைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் வேதனை மிகவும் வாட்டியது.

அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வினித் வேகமாகப் பேச ஆரம்பித்தான்.

“எதுக்கு இப்படிச் சரியா பேசாம ஏதோ போல இருக்க சைவி? அன்னைக்கு என்னிடம் சரியாகிடுவேன்னு சொல்லிட்டு இப்போ என்னையும் வாட்டிட்டு இருக்க. எப்பவும் போல நாம பேசிப் பழகிட்டு நட்பா இருக்க முடியாதுன்னு நீ நினைக்கிறயா?

மொபைல்லயும் பேசுறதை குறைச்சிட்ட. அப்படியே பேசினாலும் சரியாவே பேசுறது கிடையாது. சரி நேரில் சந்திச்சு பேசலாம்னு கேட்டேன். ஆனா பாரு, இதுவும் சொதப்பலா தான் போயிட்டு இருக்கு.

இப்படி ஏனோ தானோன்னு நடந்துக்கத் தான் ஹாஸ்டல்ல இருந்து கிளம்பி இவ்வளவு தூரம் வந்தியா? வந்து என் முன்னால் இப்படிச் சங்கடப்பட்டு உட்கார்ந்து இருக்கிறதுக்கு, நீ வராமலேயே இருந்திருக்கலாம் சைவி. ஏன் சைவி என்னை இப்படிக் கொல்லுற?”

சலிப்பும் கோபமுமாய் அவன் பேச, “நான் நல்லா இருக்கேன் வினித். ஏதோ யோசிச்சிட்டு நீ சொன்னதை அப்போ கவனிக்காம விட்டுட்டேன். சாரி… மன்னிச்சுக்கோ ப்ளீஸ்!” நிதானமாகச் சொன்னாள்.

“இந்த மன்னிப்புக் கேட்கிற பழக்கம் எதுக்குப் புதுசா? ஒப்புக்குச் சொல்லிட்டு இருக்கிறயா? ம்ம்…”

தன்னுடைய பார்வையைத் தவிர்ப்பதிலேயே அவள் மனத்தை மறைக்கப் பிராயத்தனப்படுவது புரிய, வினித் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டுச் சொன்னான்…

“எதையும் நினைச்சிட்டு இருக்காம ஆர்டர் பண்ணின இந்த பீட்சாவையாவது ஒழுங்கா சாப்பிட்டு முடி. இனி கொஞ்ச நாளைக்கு நாம பார்த்துக்க வேண்டாம். ஓகே?

எனக்கு உன்னை இப்படி வருத்தத்துடன் பார்க்க என்னவோ போல இருக்கு. உள்ளே குத்திட்டே இருக்கிற இம்சை. வெளியே கொடுமையான இந்த அவஸ்தை. எதிலோ பெரிசா சிக்கிட்ட மாதிரி நெஞ்சில் ஒரு கலக்கம்.

எதுவுமே சரியாகிடும்னு உறுதியா நம்புற என்னை உன்… இந்த விசயம் ரொம்ப குழப்புது. உன்னை எப்படி ஹாண்டில் பண்ணன்னு புரியலை.”

ஆயாசம் தாக்க, பொறுத்துக்கொள்ள இயலாதவனாக உணர்ந்தான். இரண்டு கைகளையும் உயர்த்தி, தலைமுடிக்குள் விரல்களைச் சொருகி, தலையை அழுந்த பற்றிக் கொண்டான் வினித்.

ஆணும் பெண்ணும்
பழகிக்கிட்டா காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும்
தொடர்ந்தாலும் நட்பு மாறுமா…

நேரம் சரியா தவறா… உணவகத்தில் இவர்களருகே யாருடைய மொபைலோ… ரிங்கர் இசைக்க… பாடலின் வரிகள் ஆயாசத்திலும் அவனுக்குள்ளே மிதந்து தவித்தன.

அவன் பேசியதும் அவனுடைய அந்தக் குரலும் சைந்தவியை மேலும் வருத்தம் கொள்ளச் செய்தது. ஆனாலும் சொன்னாள்.

“சரி வினித். நீ ஃபீல் பண்ணாதே. கொஞ்ச நாளைக்கு நாம பார்த்துக்க வேண்டாம்.”

பிரிவு அவளை நிலைப்படுத்தும் என்று ஏற்கெனவே நினைத்து வைத்தது தானே? மனத்தில் துயரம் ஊற்றெடுத்துத் துவம்சம் செய்தாலும், அவளுடைய உறுதியான முடிவில் முதல் படி இது அல்லவா? அதுவும் அவள் பிரியம் வைத்திருப்பவனையே சொல்ல வைத்துவிட்டாள்.

பிரிந்து போன நட்பினைக் கேட்டால்
பசுமையான கதைகளைச் சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்த பின் ரணமாய்க் கொல்லும்...

அர்த்தமான… அழுத்தமான வரிகள் இல்லையா? அந்நேரம் இவ்வரிகளை உதாசீனம் செய்தவளாக சைந்தவி இருந்தாள்.

அடிபட்டுச் சிதைவுக்கு உள்ளான மனது துடித்தது அவனுக்குள். இமைகளைச் சிமிட்ட மறந்தவனாக அவளை ஆழ்ந்து பார்த்தபடியே வினாடிகளைக் கரைத்தான். பிறகு மெல்லிய குரலில் பேசினான்.

“அஸ் யூ விஷ்! நீ சொல்கிற வரை நான் உன்னைச் சந்திக்க வரலை சைவி.”

உள்ளத்தின் பரிதவிப்பை வார்த்தைகள் வடிக்கவில்லை. அவனுடைய பார்வை அத்தனையையும் காட்டிக் கொடுத்தது.

“வினித்…”

அப்பரிதவிப்பு தன்னைப் பாதித்தவளாக அவனை விளித்தாள்.

“நீ சாப்பிட்டு முடி சைவி. நாம போகலாம். நான் வாஷ் ரூம் போயிட்டு வர்றேன்.”

கலங்கிய கண்களை மறைக்க விலகிப் போகிறவனை வெறித்தாள். அவளுடைய கண்களும் கலங்கிப் போயின. கன்னம் தொட்ட கண்ணீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டாள். மூக்கை உறிஞ்சியபடியே சாப்பிட்டு முடித்தாள்.

உணர்வுகளை வெளிக்காட்டக் கூடாது என்பதில் கவனமாக இருந்து இருந்து, அவனிடம் தன்னுடைய இயல்பு குணம் சுருள்வதை உணர்ந்தாள் சைந்தவி.

‘இவ்வளவு ஆழமா உன்னை விரும்புறேன்னு இப்போ தான் புரிஞ்சது வினித். இந்த விருப்பம் சரியில்லை. இதுக்கு எந்த அர்த்தமும் இருக்கப் போறதில்லை… நினைக்க, நினைக்க வேதனை ஏறிட்டே இருக்குடா. நான் இப்போ என்ன செய்ய இந்த ஒரு தலைக்காதலை வச்சிட்டு!’

விரக்தியை அதிகமாகவே உணரத் தொடங்கினாள்.

‘வேற வேலை வாங்கிட்டுப் போயிடறேன்டா. உன்னையும் கஷ்டப்படுத்திட்டு, நம்ம ரெண்டு பேரோட நிம்மதியும் கெட்டு இந்த நட்பும், காதலும் வேண்டாம். வேண்டவே வேண்டாம்!’

வேறு வேலை மாற்றிப் போக முடிவு செய்திருப்பதை வினித்திடம் அவள் நேரிடையாக இன்னும் சொல்லவில்லை. அவளாகவே புலம்பிக் கொண்டிருந்தாள்.

இரண்டு பேருக்கும் நல்லது என்று முடிவெடுத்து விட்டாள். அவனுடைய மனதும் விருப்பமும் இதில் கணக்கெடுக்கப் படவில்லை. இவள் தன்னுடைய காதலை வேண்டாம் என்று முடிவு செய்யலாம். அது சரி.

வினித் தன்னுடைய நட்பை விட்டுவிட வேண்டுமாம். இதை இவளாகவே எப்படி முடிவு செய்ய முடியும்?

‘இந்த பிரண்ட்ஷிப் வேணாம்னு அவன்கிட்ட சொல்லிப் பாரேன்! நீ வேணாம்னு சொன்னா அழி ரப்பரை வச்சி அழிச்சிடலாம்னு நினைச்சியா? லூசு பொண்ணு! அவனுடைய பிரண்ட்ஷிப்பும் ஆழமானது.’

அவளுடைய மனமே அவளிடம் வினித்திற்காகத் தர்க்கம் செய்துகொண்டிருந்தது. முன்னும் பின்னும் யோசனை. எடுத்திருக்கும் முடிவைச் செயல்படுத்துவதில் முனைப்பு. அதனைத் தாங்கிக்கொண்டு நகர்வதில் நிரம்பத் தடுமாற்றம்.

ஆனாலும் சைந்தவி பின்வாங்கவில்லை. மனது ஒரு போக்கிலே பயணம் செய்ய முயன்றாலும், தன்னுடைய முயற்சியால் அதனைத் தோற்கடித்தாள்.

வினித்துடைய நிலை வேறாக நகர்ந்தது. சைந்தவி அவனுடைய நட்பு வட்டத்திலேயே தான் நிற்கிறாள். அலெக்ஸ் அவனிடம் சொன்ன மாதிரி ‘மாற்றி யோசி’ எண்ணத்தை அவனால் அணுக முடியவில்லை.

அணுக முடியவில்லை என்பதைவிட, அந்த எண்ணத்தில் அவனுக்கு உடன்பாடில்லை. விருப்பமில்லை. விருப்பமில்லாத ஒன்றை எக்காலமும் செய்ய மாட்டான் வினித்.

அதில் இது மனம் சார்ந்தது. மனம் வாழ்க்கை முழுக்க ஒன்றுபட வேண்டும். இல்லையென்றால் சித்திரவதை தான். அதைத் தானும் அனுபவித்து அவளுக்கும் கொடுக்க வேண்டுமா?

முடியாது முடியவே முடியாது என்பதே அவனுடைய திண்ணமான எண்ணம்.

சைந்தவி இப்போது போடுற சீன்களெல்லாம் அவனுக்குச் சகிக்கவில்லை. அவனுடைய கோபம் படை எடுத்தாலும், வருத்தம் அந்தக் கோபத்திற்கு அணை கட்டிக் கொண்டிருக்கிறது.

சென்ற சந்திப்பில் எடுத்திருக்கும் முடிவு இருவருக்கும் நல்லதாகப் பட்டது. அந்த முடிவு ஏதோ சிறிதளவு வினித்தை ஆசுவாசப்படுத்தியது. அதன் பின்னர்அவனுடைய வேலையில் அவன் ஒன்றிப் போனான். இருவரும் ஒன்றாகச் செல்லும் மதிய நேர நடைகள் நின்றுவிட்டன.

வினித்தின் உலகத்தில் சைந்தவி மட்டுமில்லையே? அவனுக்கு வேறு கடமைகளும் இருப்பதால் அவற்றின் ஆக்கிரமிப்பில் நாட்கள் அவனுக்கு நிமிடங்களாகிச் சென்று கொண்டிருந்தன. அடுத்தடுத்து இரண்டு தடவை மும்பைக்குப் போய் வந்தான்.

கோபம்; ஏமாற்றம்; இயலாமை என்றிருக்கும் போது மூளை வேகமாக யோசிக்கும். ஆனால், விவேகமாக யோசிக்காது. இதை நன்றாகவே சைந்தவி அறிந்திருந்தாலும், உணர்ச்சிப்பட்டிருந்த நேரத்தில் எல்லாவற்றையும் வேக வேகமாகத்தான் நடத்தினாள்.

வெவ்வேறு வேலைகளுக்கும் அதே வேகத்துடன் விண்ணப்பிக்கத் தொடங்கினாள். முதலில் விண்ணப்பித்த மூன்று வேலை வாய்ப்பும் அவளுடைய தகுதிகளுக்குத் தக்கதாக இருக்கவில்லை. அதை அவள் கவனிக்கவும் இல்லை.

அந்த மின்னஞ்சல் ஒன்று வரும் வரையில் அதை அவள் உணராமல் தான் இருந்தாள். அதில் குறிப்பிட்டிருந்த வேலைக்கான தலைப்பை பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டாள்.

“இதுக்குப் போயா ரெஸ்யூமே அனுப்பி வச்சிருக்கேன்!”

பர பரவென்று அவள் விண்ணப்பித்த மற்ற வேலைகளுக்கான தகுதிக் குறிப்புகளையும் பங்களிப்பு விபரங்களையும் ஆராய்ந்தாள். எதுவுமே உவப்பானதாக இருக்கவில்லை.

அதன் பிறகே சைந்தவி நிதானித்தாள். இனி பார்த்துச் செய்ய வேண்டும் என்று மண்டைக்குள் ஏற்றிக் கொண்டாள். அவளுடைய வேகமான செயல்கள் அப்பாவிடமிருந்து வந்த குணம் என்று தோன்றிற்று.

உதட்டைக் கடித்தபடியே ஜன்னல் அருகே சென்று தோட்டத்தைக் கடந்து சாலையை வெறித்தாள். சனிக்கிழமையின் இரவை வாகனப் போக்குவரத்து மிகவும் பிஸியாக வைத்திருந்தது. சிவப்பு மஞ்சள் விளக்கொளிகளின் அசைவையும் வேகத்தையும் அளந்தது பார்வை.

எண்ணங்கள் வேகத்துடன் அப்பாவைப் பற்றிக் கொண்டன. அவரிடம் நிதானம் இருந்திருந்தால் தன்னுடைய வாழ்க்கையில் தனிமை வந்திருக்கவே வந்திருக்காது என்று நினைத்தாள். நிச்சயமாகத் தெரிந்த ஒன்றை மீண்டும் நினைத்துக்கொண்டாள்.

‘இப்போ அதை எல்லாம் நினைச்சு என்ன ஆகப் போகுது? போனது திரும்ப வராது. அனுபவிச்சதும் இல்லைன்னு ஆகப் போகுதா? இனி வரப் போவதைப் பற்றி மட்டுமே சிந்திக்கணும்.’

முறுவலின் கசப்பு, நாவின் வறட்சியை உணர்த்தியது. மடமடவென்று தண்ணீரைத் தொண்டையில் சரித்துக்கொண்டாள். வினித்தினால் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையில் தானும் நிதானம் இழந்து போனது புரிந்தது.

அவளுடைய அலுவலகத்திலேயே உடனடி ஆன்சைட் தேவைகள் இருக்குமாயின், தான் வேலை மாற வேண்டாம் என்று நினைத்தாள் சைந்தவி.

அடுத்த அலுவலக நாளில் தன்னுடைய மேலதிகாரியைச் சந்தித்தாள். ஆன்சைட் போவதற்குத் தோதான வேறு பிராஜக்ட் தனக்கு அமையுமா என்று முதலில் விசாரித்துப் பார்த்தாள்.

அவர், ‘அதற்கான வாய்ப்பு இப்போது கிடையாது’ என்று சொல்லிவிட்டார். அதன் பின்னரே வெளியே தேடுவது தான் தன்னுடைய முடிவிற்குச் சரியாக வரும் என்று அவளுக்குத் தோன்றியது.

‘அடுத்து வேலை கிடைத்தாலும், அங்கே ஆன்சைட் வாய்ப்பு எப்போது அமையும் என்று உறுதியாகத் தெரியாது. அப்படி உடனே வருவது எல்லாம் அரிதான அதிர்ஷ்டம்’ நினைத்துக் கொண்டாள்.

தற்போதுள்ள அலுவலக வளாகத்தைவிட்டுத் தள்ளியிருக்கும் அலுவலகம் என்றால் கூட முதலில் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தாள். வினித்தை அடிக்கடி பார்க்க நேரிடுவதைத் தவிர்க்க நல்ல வழியாக இருக்கும் என்பதற்காகவே இப்படியொரு முடிவை எடுத்தாள்.

கனத்த மனதுடன் தான் வேறு வேலையைத் தேடுவதில் தீவிரமாக இறங்கியிருந்தாள். அதில் முதல் முக்கியத் தேவையாக ஆன்சைட் வாய்ப்பைத் தரக்கூடிய நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தே விண்ணப்பித்திருந்தாள்.

தற்போதுள்ள நிறுவனத்திலிருந்து ஒரு முறை ஆன்சைட் சென்று வந்த அனுபவத்துடன், குறிப்பிட்ட வகையில் வேறு சில சிறப்புத் தகுதிகளையும் பெற்றிருந்தாள்.

கூடவே வினித்தின் வழிக்காட்டலிலும் வலியுறுத்தலிலும் தனித்துவம் வாய்ந்ததொரு டெக்னிகல் தகுதியைச் சமீபத்தில் வளர்த்துக் கொண்டிருந்தாள்.

புதிய டெக்னாலஜி, நுண்ணியத் திறனுடன் ஆற்றக் கூடிய பணி அது. அதுவே அவளுக்குப் புதிய வேலையில் நியமனம் பெறக் காரணமாகியது. வெகு விரைவிலேயே புது வேலை கிடைத்துவிட்டது.

இத்தனை விரைவில் தன்னுடைய எதிர்பார்ப்பிற்குத் தக்க மாதிரி வேறு வேலை அமையும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. அதிலும் குறிப்பிடத்தக்க பெயருள்ள நல்ல நிறுவனத்தில்.

நான்கு கட்டங்களைக் கொண்ட நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அத்தனையையும் கடப்பது சைந்தவிக்கு எளிதாக இருந்திருக்கவில்லை. தன்னால் இயன்ற அளவு நன்றாகவே செய்திருந்த போதும், அவ்வேலை கிடைக்கும் என்று அவளுக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

நியமனக்கடிதத்தைப் பார்த்ததும் அவளுடைய மனத்தில் சந்தோஷம் பூத்தது. சந்தோஷத்தில் இரண்டு குதி குதித்தாள். தன்னுடைய சந்தோஷத்தை உடனே வினித்திடம் பகிர மனது பரபரத்தது. அவனைவிட்டுத் தூரப் போகவே இந்த வேலை என்பதை சைந்தவி அக்கணம் மறந்து போயிருந்தாள்.

இனி சில நாட்களில் புதிய வேலையில் சேர வேண்டும். வினித்தைவிட்டுப் போகும் வாய்ப்பு கிடைத்ததிற்கான மகிழ்வா? இதை உணராமல் குதூகலித்தாள். தன்னுடைய குதூகலத்தைக் கொண்டாட வினித்தையும் அழைத்தாள்.

சைந்தவி அழைத்த போது வினித் நீலிமாவுடன் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தான். யாருடைய அழைப்பு என்று பார்க்காமலேயே சைந்தவியின் அழைப்பை நிராகரித்தான். மூன்று நான்கு முறை முயன்று பார்த்து ஓய்ந்தாள் சைவி.

நீலிமாவைவிட வினித்திற்கு வேறு எதுவும் அந்த நேரம் பெரிதில்லை. அவளுடன் பேசி முடித்து அந்த ஞாபகத்துடன் சுற்றி வந்தான். நீண்ட நேரம் சென்றே மீண்டும் மொபைலை கையில் எடுத்தான்.

எடுத்துப் பார்த்ததும் தான் கவனித்தான், சைந்தவியிடம் இருந்து தொடர்ந்து சில அழைப்புகள் வந்திருந்தன.

‘இவ எதுக்கு இந்த நேரத்திலே கூப்பிட்டிருக்கா? அதுவும் இத்தனை நாளா பேசாமல் இருந்திட்டு?’ புருவச் சுருக்கங்களுடன் யோசனையானான்.
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்

ஆர்த்தி ரவி

அத்தியாயம் 07:

வினித்திடம் தன்னுடைய சந்தோஷத்தைப் பகிர விழைந்த சைந்தவிக்கு, அவன் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் ஏமாற்றமாகிப் போனது.

முன்னிரவில் அவனுடன் பேச முயன்றிருந்தாள். அவன் பேசியிருந்தால் கண்டிப்பாக அவனை அப்போதே சந்திக்கக் கேட்டிருப்பாள். இரவு உணவை இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டு இருக்கலாம்.

அவனுடைய வழிக்காட்டலால் கற்றது. அக்கூடுதல் தகுதியால் கிடைக்கப் பெற்ற வேலை. வெளிப்படையாகத் தான் நன்றி சொன்னால் முறைத்துக் கொண்டிருப்பான். வாயால் நன்றி சொல்லிட்டு இருக்காமல், நிச்சயம் அவனுக்கு ஒரு டின்னர் ட்ரீட் தர நினைத்தாள்.

ஆனால், சைந்தவி நினைத்தது எதுவும் நடக்கவில்லை. மனம் வாடிப் போயிற்று. முகத்திலும் சுணக்கம் வந்திருந்தது.

‘எப்போ என் மனசு போல நடந்திருக்கு? சந்தோஷமோ கஷ்டமோ பகிர்ந்துக்க பக்கத்தில் யாரு இருக்கா?’

உறவுகளற்ற தனிமையின் குவியம். கொஞ்சம் நேரம் உம்மென்று உட்கார்ந்திருந்தாள்.

‘இதென்ன உனக்குப் புதுசா சைவி? கமான் கெர்ல். சியர் அப் யுவர்செல்ஃப்.’ தன்னைத் தானே தேற்றி அதனைக் கடந்து விட்டாள்.

வினித், ஏன் தன்னுடைய அழைப்பை எடுத்துப் பேசவில்லை, மிஸ்ட் கால்களைப் பார்த்தும் இன்னும் ஏன் தன்னைக் கூப்பிடவில்லை என்று யோசனை வந்தது. அதனைப் பெரிதாக நினைத்துப் பிடித்து வைக்கவில்லை. அவனே எப்போது முடியுமோ கூப்பிடட்டும் என்று விட்டு விட்டாள்.

சில சமயங்களில் இவ்வாறு அழைப்புகள் ஏற்கப்படாமல் போகும் போது, அவனே எப்படியும் கூப்பிடுவான். இவளுடைய குறுஞ்செய்திகளைப் பார்த்தாலும் அப்படித்தான். அவசரம் என்று சொன்னால் மட்டும் நேரம் காலம் பார்க்க மாட்டான். உடனே பேசிவிடுவான் தான்.

இன்று ஒன்றும் அவசரமான விசயம் இல்லையே. சைந்தவி அவனுக்கு எந்தக் குறுஞ்செய்தியையும் அனுப்ப முனையவில்லை. நல்ல விசயத்தை நேரில் சொல்லவே விருப்பப்பட்டாள்.

வினித் அழைப்பை எடுத்துப் பேசினாலும் அவனிடம் ஃபோனில் விசயத்தை உடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

அவளுடைய விடுதி அறையிலிருந்தவள், அந்த அறையை நடையால் அளந்தாள். தனியறை என்பதால் தனக்கேற்ற வகையில் அதனை வசதிப்படுத்தி வைத்திருந்தாள். அதில் அவளுக்கு நெருக்கமான சில பொருட்கள் உண்டு.

குடும்பப் படங்கள், ஆல்பங்கள், அம்மாவுடைய சிறு ஞாபகங்கள் என்றுள்ள பொருட்கள் எல்லாமும் எப்பவும் பெட்டியில் உறங்கிற்று.

மொபைலில் சில புகைப்படங்களைப் பதிவேற்றி, அவற்றைத் தன்னுடைய மின்னஞ்சலிலே சேமித்து வைத்திருந்தாள். ஏனோ, அவற்றையும் அதிகம் எடுத்துப் பார்ப்பதற்கான ஆவல் அவளுக்குள்ளே ஓங்குவதில்லை.

எப்போதாவது அரிதாக மொக்குகளைப் பெற்றுப் பூக்கும் செடியைப் போல், ஆர்வ அடுக்கில் ஜனித்துக் குவியலாகும் ஞாபகங்கள். அவை உந்தித் தள்ளும் போது பார்ப்பதுடன் சரி.

காலத்தின் சிறப்பை எண்ணிப் பார்த்தால், சுகமும் துக்கமும்! அழகான கவிதை போன்று அமைந்திருந்த வாழ்வு. கலைந்து போனது. சிதறலாய் ஞாபகங்களுக்குள் பிம்பங்களின் பொதிவு!

இவள் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது, விபத்தில் பறி கொடுத்த அம்மா மதுமிதாவின் முகம் கூட நினைவில் மங்கலாகிவிட்டதாகத் தோன்றியது. அதே விபத்தில் ஆச்சியையும் (அம்மாவைப் பெற்ற பாட்டி) தாத்தாவையும் இழந்திருந்தாள்.

அம்மாவும் போய், அம்மா பக்கத்து உறவின் அரவணைப்பும் அற்றுப் போன கொடுமையைத் திருப்பிப் பார்க்கும் திராணியற்றே அவர்களின் ஞாபகங்களை இவள் தவிர்த்து வந்தாள்.

சைந்தவியின் அப்பா சரள்கண்ணன். அவர் இவ்வுலகத்தில் இருக்கிறார் தான். இருந்தும் என்ன? இவளுக்குத் தனிமையே துணை. அவருடன் சேர்ந்து இருக்க முடியாமல் தனிமைப்பட்டிருக்கிறாள்.

நிராயுதபாணி என்கிற நிலையை அவர் ஏற்படவிடவில்லை. ஆனால், அவர் தனிமையை அளித்துச் சென்றது மன்னிக்க முடியாத குற்றமாகிவிட்டது.

முன்பு ஏக்கத்துடன் அவரிடம் முறையிட்டவள் தான். தன்னுடைய ஏக்கம் மற்றும் விருப்பம் எதுவும் அப்பாவிடம் போய்ச் சேரவில்லையா, இல்லை, கண்டு கொள்ளப்படவில்லையா என்று புரியாமல் தத்தளித்த காலம் ஒரு புள்ளியில் முற்றுப் பெற்று இருந்தது.

அதிலிருந்து சில காலமாகக் கோபத்திலும் வெறுப்பிலும் தத்தளிக்கிறாள் சைந்தவி. முற்று முழுவதுமாக சரள்கண்ணனை மட்டுமே குற்றவாளியாக்கி அவரிடம் ஒட்டாமல் விலகிப் போய் கொண்டிருக்கிறாள்.

என்ன ஒன்று அக்குற்றத்திற்காக அவரைக் கூண்டில் ஏற்றவில்லை. அவ்வளவு தான். அவர் செய்ததெல்லாம் எங்கும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களுள் சேர்த்தி ஆகாதே!

அவருக்கும் இவளுக்குமான உறவு, விரிசல் விட்டு மட்டும் நிற்கவில்லை. பாளமாகப் பிளந்து கெக்கலித்தது. அவரிடம் இவளாகக் கூப்பிட்டுப் பேசுவது நின்றே விட்டது. அவர் கூப்பிடும் போது பேசுவதுடன் சரி.

அவரும் என்ன உணர்ந்து கொண்டாரோ? சீனச் சுவராய் ஒரு பனித்திரை இருவருக்கும் இடையில் உயர்ந்து நிற்க… யார், யாரிடம் முறையிடுவது?

இன்று, ஏனோ சைந்தவிக்குத் தன்னைப் பெற்றவர்களின் நினைவு எழுந்தது. அப்பாவை மனது அவசரமாகத் தவிர்த்தது. அம்மாவின் மடியில் படுத்துக் கொள்ள மிகவும் ஆவலாகியது.

அறையின் வலது மூலையில் உட்கார்ந்திருந்த நாற்காலி அருகே சென்றாள். அதுவும், அதன் முன்னாலிருக்கும் மேசையும் இவள் ஆறாம் வகுப்புப் போனதும் செய்யப்பட்டது. அம்மா சொல்லி, அப்பா ஒரு தச்சரை வீட்டிற்கு வரவழைத்து இருந்தார்.

“உனக்குத் தான் ராஜாத்தி… இந்தா, மாடல் பார்த்துச் சொல்லு.”

அம்மா நீட்டிய அந்த கேட்டலாக்கை பற்றியபடியே அப்போது கேட்டிருந்தாள்.

“ஐ! எனக்கே எனக்காக ஒரு டேபிளும் சேருமாம்மா? நான் உட்கார்ந்து ஹோம் வொர்க் பண்ணுறதுக்கா செய்யப் போறீங்க? அம்மாவும் நீங்களும் புதுசா இவங்க பண்ணப் போகிற டேபிளை யூஸ் பண்ண மாட்டீங்களாப்பா? இந்தப் புது சேரிலே உட்கார மாட்டீங்களாம்மா?”

கணவன் சரள்கண்ணனுடைய கையை அவசரமாகப் பிடித்துக் கொண்டாள் மதுமிதா. சரள்கண்ணனை மகளுக்குப் பதில் சொல்வதைத் தடுத்துவிட்டு, அவரை ஏறிட்டுக் கண் சிமிட்டிப் புன்னகைத்தாள்.

பின்னர், இன்னும் அகலப் புன்னகையைத் தாங்கியபடி, மகளின் மின்னிய கண்களைப் பார்த்துக்கொண்டு மதுமிதா சொல்லியிருந்தாள்.

“உனக்கே உனக்குத்தான்டா இந்தப் புது டேபிளும் சேரும். அப்பாவுக்கு ஏற்கெனவே ஒன்னு இருக்கே. ஆமா, எங்க மகளுக்காக வாங்குறதுல நாங்க உட்காரக் கூடாதாடா?”

மகளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவளுக்குப் பதிலாக,

“இல்லம்மா அப்படி இல்லம்மா…” வேகமாக உரைத்திருந்தாள் சைந்தவி.

“உனக்குத் தான்டா சவி. உங்க அம்மா செய்யச் சொல்லி ஐடியா கொடுத்திருக்கா.”

விரிந்த முறுவலும் கண்களில் ஒளிர்ந்த சந்தோஷமுமாகத் தன்னை உயரத் தூக்கிக் கன்னத்தில் முத்தம் வைத்த அப்பாவுக்கு முத்தம் தந்தவள், அம்மாவையும் அருகில் இழுத்து முத்தம் தந்திருந்தாள்.

குடும்பமாக மூவரும் சேர்ந்து மகிழ்ந்த கணங்களில் ஒன்று, இந்த நினைவு. இவளின் கண்களின் முன்னே ஒலியிழந்தக் காட்சியாய் ஓடியது!

வேகமாகத் தலையாட்டி அப்பாவை விரட்ட முயன்றாள். அவரா அப்படியே போவார்?

‘ஸ்டைல் லுக்குடன் இருந்த அப்பாவுக்குச் சரள்கண்ணன்னு பேரு!

கொழுப்பு பிடிச்ச அப்பத்தால்ல வேற எப்படிப் பேரு வைக்கும்? அப்புராணி புருசனைத் தலையாட்டிப் பொம்மையாயில்ல வச்சிருந்திச்சு…’

அப்பாவுடன் அவரைப் பெற்றவர்களைப் பற்றி நினைத்தாள்.

‘மதுமிதா பேருல ஸ்டைல்… லுக்கு ரொம்ப சாதாரணம். BMI (body mass index) எப்பவும் off நம்ம லேடி மதுமிதாவுக்கு. அந்த ஐந்தடி இரண்டு அங்குலத்துக்கு அவங்க ஏற்ற உடம்பில்லாமல் எப்பவும் கூடுதலான எடையிலே. உருண்டையான முகம்.’

அம்மாவின் நிழல் பிம்பம் அவளுடைய மனக்கண்ணில் வலம் வந்தது. மெல்லிய புன்னகை வந்து உதடுகளில் படர்ந்தது.

‘மகனைக் கைக்குள்ளேயே வச்சிக்கணும். மருமவப்புள்ள முந்தானையிலே மகன் சிக்கிக்கக் கூடாதுன்னு பிளான் போட்டு ம்ம்… மேட்சே இல்லாம ஒரு கல்யாணத்தை நடத்தி வச்சிருக்கு. அப்படியாப்பட்ட அப்பத்தாவுக்கே நோஸ்கட் தந்திட்டாங்களே அம்மாவும் அப்பாவும்!’

வாய்விட்டுச் சிரித்துக் கொண்டாள். சரள்கண்ணனும் மதுமிதாவும் வாழ்ந்த வாழ்க்கை அப்படியாப்பட்டது.

‘வீட்ல பார்த்து பெரியவங்க செஞ்சு வச்ச கல்யாணம் மாதிரி இல்லாம லவ் மேரேஜ் மாதிரி அவ்வளவு மேட்சிங்கா நல்ல மனப்பொருத்தத்துடன் வாழ்ந்த அப்பா அம்மாவை விதி எதுக்கு பிரிச்சதோ! கடவுள் எங்களை அப்படியே வாழ வச்சி விட்டிருக்கலாம்.’

எண்ணிக் கொண்டவளுக்குக் கண்கள் கலங்கிப் போயின. துடைத்தபடி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

‘அப்பானால அம்மா இல்லாத வாழ்க்கையைச் சமாளிக்கத் தெரியலையே!’

கடந்த காலத்தின் கருநிழல் சூழ்க்கை அவளைப் போர்த்திக் கொண்டது. அதனடியில் எழுந்த பெருமூச்சை அடக்க முடியவில்லை. வெளியேற்றிவிட்டு, புதுச் சுவாசக்காற்றில் புத்துணர்ச்சியைத் தேடினாள்.

‘அப்பாவைவிட்டு அம்மாவை யோசிச்சுக் கூடப் பார்க்க முடியலை. அப்பாவை விட்டுட்டு அம்மா எப்போ தனியா இருந்திருக்காங்க? அவங்களை மட்டுமே நான் நினைச்சுப் பார்க்க…’

மேசையில் தலையைச் சாய்த்துக் கொண்டாள். சில நிமிடங்களைக் கண்களை மூடி அமைதியில் கழித்தாள். அம்மாவின் குட்டி; குண்டு குண்டு விரல்கள் தன்னை வருடுவதாக நினைத்துக் கொண்டாள்.

ஆழ்ந்த அமைதியின் இறுதியிலே நிழல் மெல்ல மெல்ல விலகிப் போயிருந்தது. ரீ-சார்ஜ் பெற்று விட்டது மனது என்பதை உணர்ந்தாள். அதன் ஒளியைக் கண்களும் சிந்தின.

துக்கம்; சோகம்; ஏக்கம்; கவலை என்று கலங்கடிக்கும் பெற்றோர்களின் சில நினைவுகளைக் கடக்க அவளுடைய நெஞ்சம் நாடுவது வினித்தைத் தான். அவனைத் தவிர இன்னும் ஒருத்தி கூட இருக்கிறாள். அவளுடைய தோழி அருணா.

தற்போது அவளிருக்கும் தொலைவும் அவளைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளை நினைத்தும், சைந்தவி தன்னுடைய சோகங்களை அவளுடன் பகிருவதை நிறுத்திவிட்டாள். தன்னுடைய சங்கடங்களை மனக்கிடங்கில் ஒளித்து வைத்துக்கொண்டாள்.

ஆனால் புது வேலை கிடைத்திருப்பதை அருணாவிடம் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும் என்றே நினைத்தாள்.

தன்னுடைய உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி. படிபடியாக முன்னேற்றம் அடைந்திருக்கும் தன்னுடைய வாழ்க்கையின் பாதையில் அடுத்த சாதனை இப்புதிய வேலை.

வேறு எதுவும் நினைக்காமல், இந்த நிமிடம் வேலை நியமன அழைப்புக் கடிதத்தை மறுபடியும் பார்வையிட்டாள். சந்தோஷக்காற்று இதமாக்கியது. இறுக்கமும் சோகமும் இருந்த இடம் தெரியவில்லை.

மனத்தில் குமிழியிடும் ஆனந்த அலையால் உதடுகள் பாடல் வரிகளை முணு முணுத்துக்கொண்டு இருந்தன.

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே…

பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே…

வினித்தைத் தவிர இவள் நன்றாகப் பேசக் கூடிய, இவளிடம் அக்கறை செலுத்தும் அந்த நல்ல உள்ளம் அருணா. இருவரும் கல்லூரி தோழிகள். சென்னையில் ஒன்றாகப் பொறியியல் பட்டப் படிப்புப் பயின்றவர்கள்.

இப்போது சைந்தவிக்கு அருணாவை அழைத்துப் பேசத் தோன்றிற்று. தன்னுடைய சந்தோசத்தை இப்போதே அவளிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வம் மேலிட்டது.

“ஹலோ அருணா!

நீண்ட நாட்களுக்குப் பின்னர் சைந்தவியின் குரல் கேட்டதில் அருணாவும் குதூகலித்தாள்.

“ஹேய் சைந்தூ! எப்படிடீ இருக்கே? நம்ம பேசி எவ்வளவு நாளாச்சு. சோன்னு கொட்டுது போ!”

தோழி தானாக அழைத்துப் பேசியதைக் கிண்டலடித்து, சோவென்று வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினாள் அருணா.

“உங்க பெங்களூரூல இப்போ என்னால தான் மழை சோன்னு பெய்யப் போகுதாக்கும். போடி இவளே. நேத்தும் அங்கே மழை பேஞ்சதே.”

சிரிப்புடன் சைந்தவி பதில் பேசினாள்.

“இந்த மழைக்கணக்கை எல்லாம் சரியா சொல்லிடு.”

அருணா கோபத்தைக் காட்டினாள்.

வினித்தைப் பற்றிய நினைவில் உழன்றதில் நீண்ட நாட்களாகச் சைந்தவி அவளிடம் பேசி இருக்கவில்லை.

‘ஸ்ஸ்…’

நாக்கைக் கடித்துக் கொண்டாள் சைவி.

தன்னிடம் குறைபட்ட தோழியின் மனத்தில் உள்ளது தெரிந்தும், சைந்தவியும் தானிருக்கும் குதூகல மனத்தை விடாமல் பேச்சை அதன் மேலேயே வளர்த்தாள்.

“வேற என்ன கணக்கை மறந்தேனாம்? சொல்லுங்க மேடம் சொல்லுங்க. கேட்டுக்கிறேன்.”

சிரிப்புடன் கேட்டாள்.

“சரவணா பிறந்த நாளுக்கு ஏன்டீ விஷ் பண்ணலை? ஒரு மெஸேஜ் போட கூட வலியெடுத்துக்கிச்சோ அம்மணிக்கு…”

சரவணன் அருணாவின் கணவன். அருணாவிற்குப் படிப்பை முடிக்கும் முன்னரே திருமணத்தை நிச்சயித்து இருந்தனர். படிப்பை முடித்த ஒரே வாரத்திலே திருமணமும் முடிந்தது.

அதற்கு அப்புறம் அவள் முழுக்க முழுக்கப் பெங்களூருவாசி ஆகிவிட்டாள். சரவணனின் சொந்த ஊர் பெல்காம். அருணாவின் சொந்த ஊர் ஓசூர்.

சென்னைக்கு வருவதற்கு அவளுக்கு எந்தக் காரணமும் கிடைப்பதில்லை. தோழிகள் இருவருக்குள்ளும் கல்லூரி காலத்தின் மூன்றரை வருடத்தின் வசந்தம் மட்டுமாய்!

கல்லூரியில் பயின்ற அந்த நான்கு ஆண்டுகளில் கடைசி ஆறு மாதங்களும் அருணாவிற்கு, சரவணா சரவணா சரவணா தான். படிப்புடன் புராஜக்ட் வேலைகள் என்று இருந்தவர்களுக்கிடையே சரவணனும் புகுந்திருந்தான்.

அப்போதே சைந்தவி அருணாவை மிஸ் செய்ய ஆரம்பித்து இருந்தாள். படிப்பு முடிந்த பின்னர் அருணாவின் திருமணமும் முடிய அவளை சைந்தவி அவ்வளவாகத் தொந்தரவு செய்வது கிடையாது.

“ஓஹோ! உங்க வீட்டுக்காரரின் பிறந்தநாளுக்கு நான் விஷ் பண்ணாதது பெரிய குத்தம்ங்கிற? இதுக்கெல்லாமா வலியெடுக்கப் போகுது கைக்கும் வாய்க்கும்?”

“யாருக்குத் தெரியும்? உனக்கு எதுக்கு ஓரவஞ்சனைன்னு!”

“அடேயப்பா! அவருக்கு எம்புட்டு வக்காலத்து?”

“சொல்லுடி எதுக்கு நீ கூப்பிடலை?”

உரிமையுடன் கேள்வி கேட்டாள் அருணா. அந்த உரிமையில் சைந்தவி நெகிழ்ந்தவளாகச் சொன்னாள்.

“ஞாபகமே இல்லைடி எனக்கு. உன் பர்த் டேயையும், ஆர்ணவ் குட்டிப்பையா பர்த் டேயையும் மறந்தா என்னை என்னன்னு கேளு. சரவணன் பர்த் டே எல்லாம் நீ தானே எனக்கு எப்பவும் சொல்லுவ.

நம்ம பேசும் போது, ஒரு மாசத்துக்கு முன்னாலே இருந்து அதைப் பற்றி ஏதாவது சொல்லிட்டே இருப்பியா எனக்கும் ஞாபகத்திலே பதியும். இந்தத் தடவை, நம்ம தான் பேசியே ரொம்ப நாளாச்சே. சாரிடி! ப்ளீஸ் விட்டுடு என்னை!

இப்போ சரவணன் பக்கத்திலே இருந்தா மொபைலை அவர்கிட்டே தா. விஷ் பண்ணிடறேன். என்னைக்கு அவருக்கு பர்த் டே இருந்திச்சு? நான் எத்தனை நாள் லேட்டு?”

“ஓகே இப்போ பிழைச்சிப் போ பரதேவதை. அடுத்த வருசம் நீ என்ன பண்ணுறேன்னு பார்க்குறேன். பர்த் டே முந்தா நாள்டி. அவரு ஹால்ல இருக்காரு. நம்ம பேசி முடிச்சதுக்கு அப்புறமா அவர்கிட்ட தர்றேன். இனி மேலாவது அடிக்கடி பேசுடி. நான் தான் வேலை, வீடு, குடும்பம்னு பிஸியா இருக்கேன்னா, உனக்குமா நேரமில்லை?”

“சும்மா சும்மா உன்னைத் தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு தான் பேசலை. அதுவுமில்லாம ஆஃபீஸ்லேயும் எனக்கு இங்க டைட்டா போகுது.”

“நீ பேசுறது எனக்குத் தொந்தரவா சைந்து?”

“உனக்கில்ல…”

“புரிஞ்சதுடி… ‘உனக்கில்லடி உன் மாமிக்கு’ன்னு சொல்ல வர்றே?”

சங்கடமான மௌனம் அவசரமாய் வந்து சேர்ந்து தோழிகளைத் தழுவியது. அருணாவே ஒரு பெருமூச்சால் தங்களைச் சூழ்ந்திருந்த இறுக்கத்தையும் மௌனத்தையும் ஊதித் தள்ளினாள்.

“சைந்து… மாமிக்குப் பேசத் தெரியலை. வெடுக்குன்னு வாயிலே வார்த்தை வந்திடும். அப்புறமா தான் நினைப்பாங்க… ‘நான் நல்லதுக்குன்னு நினைச்சு சொல்லப் போக இப்படித் தப்பாயிடிச்சேன்னு.’

சரவணாவும் அடிக்கொரு தரம் அவங்களைக் கண்டிச்சு சொல்லுறான்… ‘நல்லதுன்னாலும் பார்த்துப் பேசுங்கம்மா. யாரையும் உங்க வார்த்தைகள் புண்படுத்தக் கூடாது!’ன்னு.

ரொம்ப பாசத்தைக் காண்பிக்கிறவங்க தான்டி. மாமியின் பேச்சு தான் அப்பப்போ குத்தும். நீ இருக்கும் போது பொரியுறவங்க, உனக்குப் பின்னால உன்னைப் பற்றிக் கவலைப்பட்டுப் பேசுறாங்க.”

அருணா வருத்தமும் ஆதங்கமுமாகத் தோழிக்கு விளக்கம் சொன்னாள்.

சைந்தவி சில தடவை அருணாவைப் பார்க்கப் பெங்களூரூவுக்குப் பயணித்திருக்கிறாள். அருணாவின் வளைகாப்பு, ஆர்ணவ் பிறந்து சில மாதங்களில், ஆர்ணவ்வின் முதல் பிறந்த நாள் இப்படிச் சென்றது போக, அலுவலக ரீதியாகச் சென்ற போது, அங்கும் சென்று எட்டிப் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள்.

அப்படிப் போகும் போது, சரவணனின் அம்மா இவள் புண்படும்படி இரண்டு மூன்று தரம் பேசவும், சைந்தவி அதற்குப் பிறகு அருணாவின் வீட்டிற்குப் போகவில்லை. அதிலிருந்து அருணாவுடன் பேச்சும் குறைந்து போனது.

“நீ இவ்வளவு ஃபீல் பண்ணி விளக்கம் சொல்ல வேண்டியதில்லைடி. அவங்க சரவணன் அம்மா. எனக்கும் அம்மா மாதிரி தான். சரி மாமா மாமி ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க? அவங்க ஹெல்த் ஓகே வா?”

இதற்கு மேலே இந்தப் பேச்சை விடு. வேறு பேசலாம் என்பதாக இருந்தது சைந்தவியின் பதிலும் அவளுடைய குரலும். அருணாவும் புரிந்து கொண்டாள்.

“ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. ஆனா பெங்களூரூ அவங்களுக்குச் செட்டாகலை. பெல்காமை ரொம்ப மிஸ் பண்றாங்க. ஆர்ணவ் தான் அவங்களை இங்கே பிடிச்சி வச்சிருக்கான்.”

“அவங்கவங்க இருப்பிடம் தான் அவங்களுக்குச் சொர்க்கம். பெரியவங்க ஒரு வயசைக் கடந்துட்ட பிறகு வேற சூழ்நிலையில் போய்த் தங்களைப் பொருத்திக் கொள்வது சிரமம் அருணா.”

“நீ சொல்றது ரொம்ப சரிடி. எங்க அப்பா அம்மாவை எங்களால ஒரு வாரம் கூட இங்கே சேர்ந்தாப்புல பிடிச்சு வைக்க முடியாது. ஆர்ணவ்காகன்னு சொன்னா, அவனை லீவுக்கு அங்கே கொண்டு வந்து விடுன்னு சொல்லிடுறாங்க.”

“ம்ம்… ஆர்ணவ் எங்கேடி சத்தத்தையே காணோம்? அவனுக்கு ஸ்கூல் எப்படிப் போகுது?”

“பிளே ஸ்கூல் தானே. நல்லா என்ஜாய் பண்ணுறான். பாடம் படிக்கிற மாதிரி நிறைய ஆக்டிவிட்டீஸ் நடத்துறாங்க. இப்போ அவங்க தாத்தா பாட்டியை இழுத்திட்டு வெளியே போயிருக்கான்.”

“என்னை ஞாபகம் வச்சிருக்கானாடி?”

“நல்லாக் கேட்ட போ! உன்னை எப்படிடீ மறப்பான்? நம்ம ஃபோட்டோவை எல்லாம் எடுத்து வச்சி அடிக்கடி பார்த்துப்பான். ஒரு நாள் நிதானமா உன்கிட்ட அவனைப் பேச வைக்கிறேன். சொல்லு வேற என்ன விசயம்?”

“ஒரு குட் நியூஸ் அருணா. அதைச் சொல்ல தான் உன்னைக் கூப்பிட்டேன். நம்ம பேச்சு மும்முரத்திலே அது பின்னுக்குப் போயிடுச்சு. எனக்கு வேற வேலை கிடைச்சிருக்குடீ.”

“ஏய் என்னடீ சொல்லுற? புது வேலையா? வேற கம்பெனிலேயாடி? நீ வேற வேலைக்கு டிரை பண்ணுறேன்னு சொல்லவே இல்லையே? எங்கே, என்ன பொசிஷன், எப்போ வேலையில் சேரணும்?”

அவளின் மகிழ்ச்சியால் ஏற்பட்டிருக்கும் எக்சைட்மெண்டில் தொடர்ந்து கேள்விகளை அடுக்கிய அருணாவிற்குப் பொறுமையாகப் பதில் சொன்னாள் சைந்தவி. மேலும் சில விபரங்களையும் பகிர்ந்து கொண்டாள்.

“ஐ’ம் வெரி ஹேப்பிடி சைந்து! நல்ல வேலை. ரொம்பவும் இம்ப்ரசிவ்வா தெரியுது. இப்படியொரு பாதையைக் காட்டிய அந்த வினித்துக்குப் பெரிய ட்ரீட் வைக்கிறே. ரைட்டு! எனக்குச் சின்னதாவேனும் ட்ரீட் தருவியா?”

“உனக்கு என்ன வேணும் சொல்லுடி. நாளைக்கே ஆர்டர் பண்ணுறேன். நேரிலே பார்க்கும் போது ட்ரீட் வச்சிக்கலாம்.”

மனதாரச் சொன்னாள் சைந்தவி. தோழிகளுக்கிடையே பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. இடையே சரவணனிடமும் சைந்தவி பேசினாள்.

அருணா, கடைசியில் சைந்தவியின் தந்தையைப் பற்றியும் விசாரித்தாள். பின்னர் தோழிக்கு நல்லது நினைத்து சிறிது அறிவுறுத்தினாள்.

“உன் மனசு எனக்குப் புரியுது. இனி எதை மாற்ற முடியும் சொல்லு? அவரைவிட்டு நீ ரொம்ப விலகிப் போறது நல்லதில்லைடி. புரிஞ்சிக்கோ சைந்து. அங்கிளுக்கு உன் மேலே பிரியம் அக்கறை எல்லாமும் இல்லாமையா என்னையும் அடிக்கடி கூப்பிட்டுப் பேசினாரு?

உங்க அப்பா நல்லவரு தான்டி. அவருடைய சூழ்நிலை… எப்படி வாய்ச்சுதோ. ம்ம்… உனக்கு ஒரு வாழ்க்கை அமையுற வரைக்குமாவது பொறுமையை விட்டுடாதே!”

“....”

அமைதிக்குள்ளே புதைந்து கொண்டாள் சைந்தவி. அவள் அப்பாவைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை என்பதை அருணா புரிந்து கொண்டாள்.

“சரி விடு. உன்னை நான் இப்ப வருத்தப்பட வைக்கலை. உன் மனசு போல இரு. நேரமாச்சுடி… நான் வச்சிடறேன். நீயும் போயி சாப்பிட்டுட்டுத் தூங்கு. உன் ஃபிரண்ட் வினித்துக்கு ஒரு ஹாய் சொல்லிடு. பைடி!”

அன்றிரவு சைந்தவி உறங்கும் வரை வினித் அவளை அழைக்கவில்லை. மொபைலை அருகே வைத்துக்கொண்டு படுத்தாள்.

அவளுடைய உற்சாகம் சற்று மட்டுப் பெற்றிருந்தது. மறுநாள் அலுவலகத்தில், தான் வேலையில் இருந்து விலகுவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி யோசித்தபடி உறக்கத்தைத் தழுவினாள்.

சைந்தவி நல்ல ஆழ்ந்தத் தூக்கத்தில் இருந்தாள். தொடர்ந்து யாரோ அறைக் கதவைத் தட்டும் சத்தத்தில் விழித்துக் கொண்டாள். தலைமாட்டில் இருந்த மொபைலில் மணியைப் பார்த்தாள். நள்ளிரவைத் தாண்டி சில நிமிடங்கள் ஆகியிருந்தன.

‘இந்த நேரத்துல கதவைத் தட்டுறாங்க?’

யோசனையும் சிறு கலவரமுமாகக் கதவருகே சென்றாள் சைந்தவி.

“யாரு?”

பயத்தை மறைத்த குரலில் கேட்டாள்.