யாயும் ஞாயும் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,546
1,114
113
யாயும் ஞாயும் – ஷெண்பா

“என்ன…?” என்று விழிகள் தெறித்து விடுவதைப் போலப் பார்த்தாள் நந்தினி.

“இந்தக் குழந்தையைக் கலைச்சிடலாம் நந்து” என்று மீண்டும் அழுத்தமாகச் சொன்ன மாதேஷை தயக்கமும், அச்சமுமாக நோக்கினாள்.

அவளது உடல் மெலிதாக நடுக்கியது. கண்ணோரங்களில் நீர் கோர்க்க அமர்ந்திருந்தவளை, மாதேஷ் இமைக்காமல் பார்த்தான்.

‘பொது இடம் என்பதை மறந்து, தன்னை மீறி அழுதுவிடுவோம்’ என்று அவளுக்குத் தோன்ற கண்களைச் சிமிட்டி, மூக்கை உறிஞ்சி தன்னைச் சமாளித்தாள். ஹோட்டலின் பணியாளன் பில்லைக் கொண்டுவந்து வைக்கும் வரை, இருவருக்கிடையிலும் கனத்த மௌனம் நிலவியது.

“நந்து! கிளம்பலாம்” என்று அவன் உரைக்க, இயந்திரப் பாவையாக அவனைத் தொடர்ந்தாள். செல்லும் வழியிலும், இருவரிடமும் ஆழ்ந்த அமைதி. காலையில் இருந்த சந்தோஷமெல்லாம் இப்போது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. ‘மாதேஷ் சொன்னதை அறிந்தால், இரு குடும்பத்தினரின் சந்தோஷமும் என்னவாகும்? தங்களது வாழ்க்கையைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கும் அவர்களது நிம்மதியையும், ஆசைகளையும் சுக்கு நூறாக உடைத்துப் போடுமல்லவா!’ என்று எண்ணியவளுக்கு தலை வலித்தது. வீட்டு வாசலில் அவன் பைக்கை நிறுத்த, சாவி கொடுத்த பொம்மையைப் போல கைப்பையிலிருந்த சாவியை எடுத்துக் கதவைத் திறந்தாள். வீடு வெறிச்சென்றிருந்தது.

பெரியவர்கள் இருவரும் ஒரு திருமணத்திற்காக ஊருக்குச் சென்றிருந்தனர். கஷ்டத்திலும் ஒரு நல்லதாக, அவர்கள் இல்லாததே இந்த நேரத்திற்குச் சற்று ஆறுதலாக இருந்தது அவளுக்கு. உடையை மாற்றிக் கொண்டு வந்தவள் சோஃபாவில் அமர, மாதேஷ் குளியலறைக்குள் நுழைந்தான். அவன் திரும்பி வந்தபோது அவள் கட்டிலில் சாய்ந்திருந்தாள்.

அவளருகில் அமர்ந்து தலையை வருடிக் கொடுத்தவன், “குழம்பிக்காதே நந்து! லைஃப்ல நல்ல சான்ஸ் எப்போதும் கிடைக்காது” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, “எதையும் யோசிக்காம தூங்கு. காலைல பேசிக்குவோம்” என்று மென்மையாக உரைத்தவன், தனது லேப்டாப்புடன் சோஃபாவில் சென்று அமர்ந்தான்.

மாதேஷ் தனது முடிவில் உறுதியாக இருந்தானென்றால்; ‘இது சரியா?’ என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள் நந்தினி.

நந்தினி, மாதேஷ் இருவருமே வீட்டிற்கு ஒரே வாரிசு. இரண்டு குடும்பங்களுமே வசதியிலும் குறைவில்லை. இளையவர்களும் படிப்பு, நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்று அனைத்திலுமே சமமாகவே இருந்தனர். நந்தினியின் தூரத்து உறவினர் ஒருவரின் மூலமாகத் தான், மாதேஷின் ஜாதகம் அவர்கள் கைக்கு வந்தது. ஒன்பது பொருத்தங்கள் இருந்தன. அவர்களது குடும்பத்தைப் பற்றிய தகவல்களும் உவப்பானதாகவே இருக்க, அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. திருமண நாள் நிச்சயமானதுமே, “திருமணத்தை ஆடம்பரமில்லாமல் எளிமையாக கோவிலில் நடத்திக் கொள்ளலாம். அந்தச் செலவும் மிச்சம். ஏதேனும் முதியோர் இல்லத்தில் விருந்து கொடுக்கலாம்” என்று மாதேஷ் கூற, பெரியவர்கள் யோசனையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“நந்தினியோட கல்யாணத்தை கிராண்டா நடத்தணும்ன்னு நீங்க நினைச்சிருக்கலாம். பட், வீண் ஆடம்பரம் எதுக்கு? இந்த மாதிரி ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நடத்தினா அவங்களுக்கு ஒரு சேஞ்சா இருக்கும்” என்றான் இதமான குரலில்.

சற்று யோசித்த நந்தினியின் தந்தை, “எங்களுக்கு ஒரே குழந்தை. அவளோட கல்யாணத்தை விமர்சையாக நடத்தணும்ன்னு ஆசை இருக்கு. நீங்க சொல்றது நல்ல விஷயம்னாலும், இந்த ஒரு முறை இப்படிச் செய்றதால என்ன ஆகிடப் போகுது?” என்று கேட்டார்.

“இது மட்டும் இல்லங்க. என் பையன் ரெண்டு ஏழைக் குழந்தைகளோட முழு படிப்புச் செலவையும் ஏத்துட்டு இருக்கான்” என்று பெருமிதத்துடன் சொன்ன அவனது தந்தை, “எங்க பையனோட முடிவுதான் எங்க முடிவும். நீங்க யோசித்துச் சொல்றதுனாலும் சொல்லுங்க” என்றார் இறங்கிய குரலில்.

சட்டென இடைபுகுந்த நந்தினியின் அன்னை, “இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லங்க சம்மந்தி! நந்தினியும் பிளைண்ட் ஸ்கூல்க்கு எக்ஸாம் டைம்ல ஸ்க்ரைபரா போய் வருவா” என்று அவர்கள் அறியாத மகளின் குணத்தைப் பெருமிதத்துடன் சொன்னவர், “மாப்பிள்ளையோட விருப்பப்படியே கல்யாணத்தைப் பண்ணிடலாம். எல்லோரையும் கூப்பிட்டு ரிசப்ஷன் வச்சிடலாம். கல்யாணம் வொர்க்கிங் டேல வர்றதால, நெருங்கின சொந்தம் தவிர மத்தவங்க ரிசப்ஷனுக்குத் தான் வருவாங்க” என்றார் சமாளிப்பாக.

புன்னகைத்த மாதேஷின் பெற்றோர், “சரிங்க. அப்படியே பண்ணிடலாம்” என்றனர். திருமண நாளை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு நாள் மாதேஷின் பெற்றோர் நந்தினிக்கு நகை வாங்க வேண்டும் என்று அவளையும் அழைத்துச் செல்ல வந்திருந்தனர்.

“அத்தை! ஏற்கெனவே அம்மா எனக்காக ஏகப்பட்ட நகை சேர்த்து வச்சிருக்காங்க. மேலும், இப்போ எதுக்குத் தங்கத்துல இன்வெஸ்ட் பண்றது? அதுக்குப் பதிலா, ஓ.எம்.ஆர்ல நிறைய வில்லாஸ் சேல்ஸ்க்கு ரெடியா இருக்கு. உங்களுக்கு ஓகேன்னா, அந்தப் பணத்தை வீட்டுக்கு இன்வெஸ்ட் பண்ணலாமே. மீதி அமௌண்டை நானும், மாதேஷும் ஷேர் பண்ணிக்கிறோம்” என்றாள்.

மாதேஷின் அன்னைக்கு, மருமகளின் சாமர்த்தியத்தை எண்ணி உள்ளம் பூரித்தது. தன் மகனிடம் சொல்லிச் சொல்லிப் பெருமைபட்டுக் கொண்டார். இப்படியாக ஆரம்பம் முதலே இருவரும், தனது மாமியார் வீட்டின் செல்லப் பிள்ளைகளாகவே ஆகிவிட்டனர்.

பெரியோர்கள் ஆசியுடன், சீரும் சிறப்புமாக உறவற்ற அம்மூத்தோர்களின் ஆசியுடனும், அன்பான சுற்றங்களின் கலகலப்புடனும் அவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. அழகான இல்லறமும், அன்பான உறவுகளுமாக தங்கள் வாழ்க்கையைத் துவங்கினர். மறுவீடு, உறவினர்களின் விருந்து, உபசாரம் என்று முதல் பத்து நாட்கள் சென்றன. தனது வாழ்க்கையின் தேன்பாகாகத் தித்திக்கச் செய்தவளை, தேன்நிலவு கொண்டாட மாலத் தீவிற்கு அழைத்துச் சென்றான் மாதேஷ்.

பெரியோர்களால் நிச்சயித்த திருமணமாக இருந்தபோதும், இருவருக்கும் மனப் பொருத்தத்துடன், குணப் பொருத்தமும் இணைந்திருந்ததில் வாழ்க்கை அமுதமாக இருந்தது. ஒரு மாதத்திற்குப் பின்னர், வேலை, குடும்பம் என்று இருவரும் இயல்பு வாழ்க்கையில் தங்களைப் பொருத்திக் கொண்டனர். பிறந்த வீட்டின் சீராட்டலும், புகுந்த வீட்டின் அரவணைப்புமாக அவர்களது வாழ்க்கை மெல்லிய நீரோடையாகவே ததும்பிச் சென்றது.
 
Last edited:
  • Like
Reactions: saru and Dsk

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,546
1,114
113
ஆறு மாதங்கள் சென்றபின், இரு வீட்டு அன்னையருமே மெல்ல பேரன், பேத்தி பற்றிய விசாரணையை பேச்சுடன் பேச்சாகக் கேட்டனர். இருவரும், இரண்டு வருடம் செல்லட்டும் என்று முடிவெடுத்திருப்பதாகக் கூற, அதற்குமேல் அவர்களும் அந்தப் பேச்சை எடுப்பதே இல்லை. நந்தினி, மாமியார் மெச்சிய மருமகள் என்றால், மாதேஷ் மற்றுமொரு மகனாகவே தனது மாமனார் மாமியாரைப் பார்த்துக் கொண்டான்.

அதற்காக நந்தினிக்கும், அவளது மாமியாரும் ஏக ஒற்றுமை என்று அர்த்தமல்ல. சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள் திடீரென எதற்கு குரலை உயர்த்துகிறார்கள் என்று அங்கிருக்கும் ஆண்கள் இருவருக்குமே புரியாது. அதே போன்றே, எப்படி, எப்போது சமாதானம் ஆகிறார்கள் என்றும் விளங்காது. மொத்தத்தில், ‘தங்கள் தலை உருளாத வரை உத்தமம்’ என்று ஆண்கள் இருவரும் நினைத்துக் கொள்வர்.

அவர்களது முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாட, இரு குடும்பத்துடனும் டார்ஜிலிங் சென்று வந்தான் மாதேஷ். வரமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்த பெரியவர்களை, “நாங்க எப்போ வேணாலும் எந்த ஊருக்கு வேணும்னாலும் போய் வருவோம். ஆனா, நீங்கலாம் இது வரை போனதும் இல்ல. இனி, தனியாக போவதும் சாத்தியமில்ல. நாங்க என்ன ஹனிமூனா கொண்டாடப் போறோம். எல்லோரு சேர்ந்து வருஷத்துக்கு ஒரு முறை வெளியே போய் வந்தா, அந்தச் சந்தோஷத்திலேயே ஒரு வருஷத்தை ஓட்டிலாம். அதோடு, நமக்கும் எனர்ஜடிக்கா இருக்கும்” என்று அவர்களை வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.

அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலேயே மாதேஷின் பெற்றோருக்கும், எட்டு மாத இடைவெளியில் நந்தினியின் பெற்றோருக்கும் சஷ்டியப்தபூர்த்தி விழாவை அழகாக நடத்தி முடித்தனர் இருவரும். சந்தோஷமும், நிறைவுமாக இரண்டு ஆண்டுகள் சென்ற வேகம் தெரியவில்லை.

இந்த நிலையில் தான் நந்தினியின் அன்னை அவளது இரண்டாம் திருமண ஆண்டு முடிந்த அன்று அவளைத் தனியே அழைத்துப் பேசினார்.

“நந்தினி! உன் மாமனார், மாமியார் ரொம்ப நல்லவங்க. எல்லோருக்கும் இந்த அதிர்ஷ்டம் கிடைக்காதும்மா. அவங்க இவ்வளவு தூரம் நம்ம எல்லோரையும் அனுசரிச்சிட்டுப் போறாங்க. நீ அதைப் புரிஞ்சிக்கணும்” என்றார் சூசகமாக.

“ஏம்மா! நாங்க, அவங்களுக்கு எந்தக் குறையையுமே வைக்கலையே” என்றாள் புரியாமல்.

“நீங்க குறை வச்சிருக்கீங்கன்னு சொல்லலடா. ஆனா, அவங்களோட ஏக்கத்தைப் புரிஞ்சிக்க. அவங்களுக்கு தன்னோட பேரன், பேத்தியைக் கொஞ்சணும்ன்னு மனசு நிறைய ஆசை இருக்கு. உங்க வார்த்தைக்காக, எதுவும் பேசாம இருக்காங்க. ஆனா, உங்க கல்யாணம் நிச்சயமானதுமே அவங்க என்னிடம் பேசும்போதெல்லாம், அடுத்த வருஷம் பேரன் பேத்தியை என் கையால அள்ளிக் கொஞ்சணும் சம்மந்தி. அதுதான் என் ஆசை. ஆனா, பிள்ளைங்க என்ன நினைக்கிறாங்களோன்னு அடிக்கடி சொல்லிட்டு இருப்பாங்க. எல்லா பெத்தவங்களுக்கும் இருக்கும் நியாயமான ஆசைதானே அது” என்று அவளது அன்னை சொன்னபோது நந்தினிக்கு உள்ளுக்குள் எரிச்சல் மண்டியது.

அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “புரியுதுமா” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள்.

அவளது முகத்தின் பொலிவு குறைந்ததிலிருந்தே அவளது மனவோட்டத்தைப் படித்துவிட்டவர், “அவங்களோட ஆசை மட்டும் இல்ல நந்தினி! எங்களுக்கும் அதான் விருப்பம். உங்களுக்கும் வாழ்க்கைல ஒரு பிடிப்பு வர்றதுக்கும், குழந்தை முக்கியமான காரணமா இருக்கும்” என்றார் ஆதூரத்துடன்.

அவள் மௌனமாக இருக்க, இதற்கு மேல் பேசினால் வீணான மனக்கசப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தவராக, அங்கிருந்து சென்றார். ***** அடுத்து வந்த இரண்டு மூன்று நாட்கள் அவளால் சகஜமாக இருக்க முடியவில்லை. தனது மாமியாரிடமே, தேவையில்லாமல் இரண்டு மூன்று முறை எரிந்து விழுந்தாள். அவரோ, அவளுக்கு வேலையில் ஏதோ பிரச்சனை போலும் என்று எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தார். அதைக் கவனித்துக் கொண்டிருந்த மாதேஷ் தனிமையில் அவளிடன் விசாரித்தான். மெல்ல அவள் விஷயத்தைச் சொல்ல, மிருதுவாகப் புன்னகைத்தான்.

“நல்ல விஷயம் தானே பொண்டாட்டி! இதுக்கா மூணு நாளா டென்ஷனா சுத்திட்டிருக்க?” என்று அவளை இழுத்து அணைத்தான். அவனது கைகளில் அடங்கியவளாக, “அம்மா அப்படிக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சி” என்றாள் சிணுங்கலாக.

“அதுக்கு நீ என்ன சொன்ன?” என்று கேட்டான். “புரியுதுமான்னு சொன்னேன்” என்றாள் அவள்.

“அப்படித் தெரியலையே” என்று அவன் குறும்புடன் சொல்ல, “மாதூ!” என்று செல்லமாக அவனது தோளில் தட்டினாள். அவ்வப்போது இருவரும் பணிச் சுமையில் மூழ்கினாலும், நாட்கள் இனிமையாகவே நகர்ந்தன.

சில மாதங்களுக்குப் பிறகு, அலுவலக நேரத்தில் அவளை அழைத்த மேலதிகாரி சொன்ன செய்தியில் திக்குமுக்காடிப் போனாள். உடனே, கணவனுக்குப் போன் செய்து, தன்னை ஆறுமாதம் வெளிநாடு செல்லும்படி உத்தரவு வந்திருப்பதாகச் சொல்ல, அவன் பெரும் சந்தோஷத்துடன் அவளை வாழ்த்தினான்.

“நான் ஒன் ஹவர் பர்மிஷன் போட்டுட்டு வரேன். ரெண்டு பேரும் கோவிலுக்குப் போய்ட்டு, வெளியே எங்கேயாவது போய் வரலாம்” என்றான்.

சம்மதித்தவள், “நான் அத்தை, மாமாவுக்குப் போன் செய்து சொல்றேன்” என்றவள் அதன்படியே செய்தாள்.

அவர்களும் தங்களது ஆசியையும், வாழ்த்தையும் வழங்கினர். நந்தினியின் அன்னைக்குச் சிறு ஏமாற்றமாக இருந்தாலும், மகளை வாழ்த்தினார்.

முன்மாலைப் பொழுது சொன்னபடி மாதேஷ் அவளது அலுவலகத்திற்கு வந்துவிட, அவனுடன் கிளம்பினாள். சந்தோஷமாக கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்கிவிட்டு பிரகாரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“ரொம்ப நல்ல ஆப்பர்சூனிட்டி மாதூ! இந்த ஆன்சைட் நல்லபடியா முடிச்சிட்டு வந்து ஒரு எக்ஸாம் எழுதினா ப்ரமோஷன் வரும். என்னோட சீனியர்ஸ்லாம் இருக்க, எனக்குக் கிடைச்சது பெரிய பாக்கியம்ன்னு தான் சொல்லணும்” என்றாள் அவள் மகிழ்வுடன்.

“அது உன்னோட திறமைக்குக் கிடைச்ச அங்கீகாரம். அதை நல்லா யூஸ் பண்ணிக்க” என்றான் உள்ளார்ந்த அன்புடன்.

“ம், நிச்சயமா. ஆனா, ஆறுமாசம் உங்களையெல்லாம் விட்டுட்டுப் போகணுமேன்னு தான் கஷ்டமா இருக்கு” என்றாள் சிறு வருத்தத்துடன்.

“ஏம்மா! ஆறு மாசமாவது நாங்க கொஞ்சம் நிம்மதியா இருந்துக்கறோமே!” என்றான் அவன் குறும்பு ததும்ப.

“ஓஹ்! நான் தான் உங்க நிம்மதியைக் கெடுக்கறேனா? ஆறு மாசம் என்ன ஒரு வாரம் நான் இல்லாம இருந்து பாருங்க அப்போ தெரியும்” என்றாள் அவள் கிண்டலாக.

“கொஞ்சம் கஷ்டம் தான்…” என்று மெல்லியக் குரலில் சொன்னவனைக் காதலுடன் பார்த்தாள்.
 
  • Like
Reactions: saru and Dsk

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,546
1,114
113
“சரி, கிளம்புவோமா? பீச் போய்ட்டு அப்படியே டின்னரை முடிச்சிக்கிட்டு வீட்டுக்குப் போகலாம்” என்றபடி அவன் எழுந்தான்.

“ம்ம்” என்றபடி அவளும் எழுந்தபோது தலைசுற்ற சட்டென அப்படியே அமர்ந்துவிட்டாள். பதறிப்போன மாதேஷ் அவளை டாக்டரிடம் செல்ல அழைத்தான்.

“இல்ல மாதூ! சந்தோஷத்துல அப்படி ஆகியிருக்கும்” என்றாள் அவள்.

“ஏய் பைத்தியம்! உனக்கென்ன பிபியா? வா டாக்டர்கிட்ட” என்று அழைத்துச் சென்றான். கேள்விகளைக் கேட்டுவிட்டு அவளைப் பரிசோதித்த டாக்டர், “கன்கிராஜுலேஷன்ஸ்!” என்றதும் இருவருக்கும் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று உண்மையிலேயே தெரியவில்லை.

டாக்டர் சொன்னவற்றைக் கேட்டுக்கொண்டு, இருவரும் வெளியே வந்தனர். மணி எட்டரை ஆகியிருக்க, அருகிலிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். மாதேஷே உணவை ஆர்டர் செய்ய, குழம்பிய மனத்துடனே அதனைக் கொறித்துவிட்டு எழுந்தனர்.

“குழந்தையைக் கலைத்துவிடலாம்” என்று மாதேஷ் சொன்ன வார்த்தை, இப்போதும் அவளுக்கு மூச்சு முட்டுவதைப் போலிருந்தது. ***** “குட் மார்னிங் நந்தினி!” என்ற கணவனின் குரலில் எழுந்து அமர்ந்தாள். நன்றாக விடிந்திருக்க, மணியைப் பார்த்தாள்.

பத்தாகி இருக்க, பதறியபடி கட்டிலிலிருந்து இறங்கினாள்.

“ஹேய்! ரிலாக்ஸ். நான், ரெண்டு பேரோட ஆஃபிஸுக்கும் லீவ் சொல்லிட்டேன்” என்றவனை வெறுமையாகப் பார்த்தாள்.

“மாதூ நான்…” என்றவளை கையமர்த்தியவன், “நீ முதல்ல ரிஃப்ரெஷ் ஆகி வா” என்றான் அழுத்தமான குரலில்.

முகத்தைத் துடைத்தபடி வந்தவளிடம், இரண்டு துண்டுகள் பிரட் ஆம்லெட்டை தட்டில் வைத்து நீட்டினான். சாப்பிட்டு முடித்துக் கையை அலம்பிக்கொண்டு வந்தவள் கரத்தைப் பற்றித் தன்னெதிரில் அமர வைத்தான்.

அவளது கரத்தை தனது கைக்குள் பொத்திக் கொண்டவன், “நான் சொன்னது ஓகே தானே. நீ சரின்னு சொன்னா, டாக்டர்கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கிடலாம். என்ன சொல்ற?” என்று கேட்டான்.

தனது பெற்றோர், மாமனார், மாமியாரின் ஆசையைக் கொன்று புதைப்பதா, இல்லை தங்களுக்கு இன்னும் வயதிருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் ஏறிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தச் சுமை தேவை தானா?’ என்று பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால், கணவன் சொன்னதைப் போல வாழ்க்கையில் வரும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது’ என்ற எண்ணமே இறுதியில் வென்றது.

நிமிர்ந்து கணவனைப் பார்த்தவள், “டாக்டருக்குப் போன் பண்ணுங்க” என்றாள் நைந்த குரலில். “ஷுயூர் தானே…” என்று அவளது விழிகளையே இமைக்காமல் பார்த்தான். நல்லதொரு வாய்ப்பு. இரண்டு நாட்களில் வெளிநாடு செல்ல சம்மதம், அல்லது ஏன் என்ற தனது முடிவைச் சொல்ல வேண்டிய கட்டாயம் எல்லாமுமாகச் சேர்ந்து அவளை சரியென்று சொல்ல வைக்க, “ம்ம்” என்று தலையசைத்தாள்.

அவன், “ஓகே” என்றான் அமர்ந்த குரலில். சோர்வுடன் அவள் எழ, உடன் எழுந்தவன் அவளை அணைத்துக் கொண்டு, “இதுல எந்தத் தப்பும் இல்ல நந்து! நீ கில்டியா ஃபீல் பண்ணாத. இந்த நிமிஷத்தோட அதை மறந்திடு” என்று அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

மாதேஷ் கைப்பேசியில் டாக்டருக்கு முயன்றுகொண்டிருக்க, நந்தினி அசௌகர்யமான மனநிலையுடன் அமர்ந்திருந்தாள். கணவனிடம் சரியென்று தலையாட்டி விட்டாலும், மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. எந்த விஷயத்தையும் ஆராய்ந்து, நிதானமாக முடிவெடுப்பவள், இந்த விஷயத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாள். அது வெறும் தடுமாற்றம் மட்டுமல்ல, தான் செய்வது தவறு என்று மனசாட்சி உறுத்திக் கொண்டிருந்ததே உண்மை. ஆயினும், தேவையற்ற போலித்தனமான வாழ்க்கைக்கு அடிமையாகிக் கிடக்கும் இளைய தலைமுறையின் அறிவுதான் இக்குழப்பத்திற்குக் காரணம்.

“நந்து! நாளைக்குத் தான் அப்பாயின்மெண்ட் இருக்கு. உனக்கு ஓகேவா?” என்று கைப்பேசியைப் பார்த்தபடி சொல்லிக் கொண்டே அவளருகில் வந்தவன், எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவளின் தோளில் கை வைத்தான். நினைவிற்கு வந்தவள் திரும்பி அவனைப் பார்த்தாள். “டாக்டர்கிட்டப் பேசிட்டீங்களா?” என்று கேட்டவளது குரல் இறங்கி இருந்தது.

அவளை இமைக்காமல் பார்த்தவன், விஷயத்தைச் சொன்னான். “ஓஹ்! சரி” என்றாள். அவளது மனநிலை அவனுக்குமே புரிந்தது. ஒரு பெண்ணாக அவளால் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள முடியாவிடினும், புரிந்துகொள்வாள் என்று எண்ணியவன், “நந்து! எங்கேயாவது வெளியே போகலாமா?” என்று கேட்டான்.

”இல்ல மாதூ! எனக்கு மனசே சரியில்ல” என்றவள் கரத்தை அவன் பற்ற, “ப்ளீஸ்! நான் தனியா இருக்கணும்” என்றவள் அறைக்குச் சென்றாள். நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன், தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான். அனைத்து சேனல்களும் போட்டிப் போட்டுக்கொண்டு, நான்கு நாட்களுக்கு முன்னர் ஆழ்துளைக் கிணறுக்கான குழிக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் நிகழ்வை, நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.

நான்கு நாட்களாக மொத்தத் தமிழகத்தையும் ஆட்கொண்டிருக்கும் நிகழ்வு, அவர்களது அலுவலகப் பணியின் காரணமாக அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தீபாவளி அன்று கூட அவனது அன்னை, “எனக்கு மனசே சரியில்லடா! இந்த வருஷம் தீபாவளி இவ்வளவு மோசமா இருந்திருக்க வேணாம். ஏதாவதொரு அதிசயம் நடந்து, அந்தக் குழந்தையைப் பத்திரமா மீட்டு பெத்தவகிட்டக் கொடுத்துட்டா போதும்ன்னு பெருமாளை வேண்டிட்டு இருக்கேன்” என்று புலம்பியது நினைவிற்கு வந்தது.

“இந்த டீ.வியையே கட்டிட்டு உட்கார்ந்திருக்காதீங்கம்மா” என்று அன்னையின் மனத்தைத் திசைத் திருப்பினான். அதை நினைத்துக் கொண்டே டி.வியைப் பார்த்தான். குழந்தை பள்ளத்தில் விழுந்தவுடன் எடுத்த வீடியோவை ஒளிபரப்பினர்.

பயத்துடன் ஒலித்த அந்தப் பிஞ்சுக் குழந்தையின் குரலும், அச்சத்தில் நடுங்கிய அந்தக் கரங்களையும் கண்ட மாதேஷ் மனம் தாங்காமல் சட்டென தொலைக்காட்சியை நிறுத்தினான். சில நொடிகள் நிலைகொள்ளாமல் தவித்தான். அங்கே அமர்ந்திருக்க முடியாமல் எழுந்தவன், தனக்குப் பின்னால் அசைவை உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.

நந்தினி காலியான தண்ணீர் பாட்டிலுடன், உயிரிழந்திருந்த தொலைக்காட்சியைப் பார்த்தபடியே நின்றிருந்தாள். “நந்தினி!” என்று அவன் அழைத்ததும், உலுக்கியதைப் போல, “தண்ணி எடுக்க வந்தேன்…” என்றவள் சமையலறையை நோக்கி நடந்தாள்.

அவன் யோசனையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மீண்டும் மீண்டும் அந்தக் குழந்தையின் கதறலும், பிஞ்சுக் கைகளுமே அவனது எண்ணத்தைச் சுற்றிச் சுழல, அறைக்குள் நுழைந்தான். தண்ணீர் பாட்டிலுடன் நந்தினி உள்ளே வரவும், “வர வர மனுஷத்தன்மையே இல்லாம போயிடுச்சோன்னு இருக்கு” என்று வெறுப்புடன் சொன்னான்.

“உண்மைதான்” என்றவள் சற்றுப் பொறுத்து, “நமக்கு ஆனதைப் போல” என்றாள் இறுக்கமாக. இடுங்கிய விழிகளுடன், “என்ன சொல்ற?” என்றான் கேள்வியாக.

நிமிர்ந்து கணவனைப் பார்த்தவள், “மண்ணுல பிறக்கற எல்லா உயிரும், ஏதோவொரு காரணத்துக்காகவே படைக்கப்படுது. இந்தக் காரியத்திற்காகத்தான் நாம படைக்கப்பட்டோம்ன்னு அந்த உயிருக்குத் தெரியுமோ இல்லயோ! ஆனா, அந்த உயிர் எதுக்காக உருவாக்கப்பட்டுச்சோ அந்த நிகழ்ச்சி, உலகத்துல எங்கேயோ ஒரு மூலைல நடந்துட்டுத் தான் இருக்குன்னு சின்ன வயசுல எங்க பாட்டி சொல்லியிருக்காங்க.

அது எவ்வளவு உண்மைன்னு இப்போ புரியுது. ஆனா, ஒவ்வொரு விஷயத்திலும் ஏதேனும் ஒரு உயிர்ப் பலிதான் அந்த விஷயத்துக்குத் தீர்வாக அமையும் மோசமான சூழல்தான், இந்த உலகத்தோட சாபக்கேடு போல” என்றவளின் கண்கள் ஆறாகப் பெருக்கெடுத்தது.

“நந்தினி!” என்றான் சற்று அதிர்ந்த குரலில். “யாரோ ஒரு குழந்தை… அந்தக் குழந்தைக்காக நாம இப்படித் துடிக்கிறோம். ஆனா, நம்ம சந்தோஷத்துக்காக, நம்ம ஆசைக்காக, நம்முடைய வாழ்க்கைக்கு அஸ்திவாரமா இருக்கப் போற நம்ம குழந்தையை அழிச்சிட்டு அதோட கல்லறை மேல தானே நாம கற்பனையான வாழ்க்கையை அமைச்சிக்க நினைக்கிறோம்” என்றவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

எதுவும் சொல்லத் தோன்றாமல், இமைக்காமல் அவளைப் பார்த்தான். “நம்ம ரெண்டு பேராலயும் எப்படி இவ்வளவு மோசமான முடிவை எடுக்க முடிஞ்சது? கடைசி நேரத்துல அந்தக் குழந்தை என்ன நினைச்சிருக்கும்? எப்படித் தவிச்சிருக்கும்? நம்மை யாராவது காப்பாத்திட மாட்டாங்களா? நம்ம அப்பா, அம்மாவைப் பார்க்க மாட்டோமா? அண்ணனோட விளையாட மாட்டோமான்னு அது எவ்வளவு ஏங்கியிருக்கும்?

ஆனா, நடந்தது… இதே போலத் தானே நம்ம குழந்தையும் துடிக்கும். அது என்ன பாவம் செய்தது? நமக்குக் குழந்தையா, உருவானதைத் தவிர. எல்லாத்துக்கும் நாம தானே காரணம். எத்தனைப் பேர் குழந்தை இல்லாம தவிக்கிறாங்க? ஆனா, ஈசியா கிடைக்கிற எதுக்குமே மதிப்பும், மரியாதையும் இருக்கறது இல்லயே. முன்னபின்ன தெரியாத குழந்தைக்காக, நாம இவ்வளவு விசனப்படுறோம். ஆனா, நம்ம ரத்தத்துல உருவான உயிரைப் பார்க்காமலேயே அழிக்க நினைக்கிறோம். அப்போ நம்ம மனுஷத்தன்மை போலியானதா? இல்ல சுயநலமானதா? நம்ம சந்தோஷத்தை நினைச்சோமே தவிர, நம்ம குடும்பத்தோட நிம்மதியை நினைக்கல. அத்தைக்கும், அம்மாவுக்கும் தெரிஞ்சா என்னவாகும்? அவங்க நம்மள மன்னிப்பாங்களா? அவங்க பெருந்தன்மையா நடந்துகிட்டாலும், காலமெல்லாம் அந்த எண்ணமே நம்ம உயிரைக் கொஞ்சம் கொஞ்சமா குடிச்சிடாதா? கடவுள் கொடுத்த ஆசீர்வாதத்தை வேண்டாம்ன்னு ஒதுக்கவும், ஒரு உயிரைக் கொல்லவும் நமக்கு என்ன உரிமை இருக்கு?” என்று அவள் நிறுத்த, மாதேஷ் மௌனமாக அமர்ந்திருந்தான்.

“ஒருவேளை நம்ம தப்புக்குத் தண்டனையா, இன்னொரு குழந்தை உருவாகாமலே போயிட்டா?” அவள் விம்மலுடன் சொல்ல, மாதேஷ் குற்ற உணர்ச்சியுடன் தலையைக் கோதிக்கொண்டான்.

அவள் சொன்ன உண்மைகள் அவனது நெஞ்சைச் சுட்டன. “எனக்கு, நம்ம குழந்தை வேணும் மாதேஷ். நாம ஒரு நல்ல அப்பா, அம்மாவாக இருப்போம். தாத்தா, பாட்டியோட அன்போடும்; பண்போடும் வளரட்டும். எத்தனைக் குழந்தைகளுக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்க்கும்? அதை நாமே ஏன் தட்டி விடணும்? நம்ம குழந்தையை நல்லபடியா பெத்து வளர்க்கலாம் மாதேஷ்! அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” என்று கதறியவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

“சாரி நந்தினி! உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். வாய்ப்புங்கறது எப்பவும் வராதுன்னு சொன்ன நானே, நிரந்தரமான சந்தோஷத்தை அழிக்க நினைச்சேனே. என்னை நினைச்சி எனக்கே அவமானமா இருக்கு. இது நம்ம குழந்தை. அவனோ; அவளோ, நம்ம குழந்தையை நல்லபடியா வளர்த்து ஆளாக்குவோம்” என்று ஆழ்ந்த குரலில் சொன்ன கணவனை, மகிழ்ச்சியுடன் இறுக அணைத்துக் கொண்டாள்.
 
  • Like
Reactions: saru and Dsk