மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,850
2,040
113
 • " என்னமா நீ இப்படியெல்லாம் பேசுற? இந்த கார்த்தி பையன் ஹாஸ்பிடலுக்கு வர்ரதே அந்த மௌனிகா பொண்ணை பார்க்குறதுக்குத்தான்...... அந்த பொண்ணு மேல இவனுக்கு இஷ்டம் இருக்கு போல.... அதனாலதான் அவனை அவொய்ட் பண்ண நான் செஞ்சது உன்னை வருத்தப்படுத்திடுச்சு...... அதுக்காக இப்படியெல்லாம் நீ சொல்லலாமா?", என்று படபடவென அனைத்தையும் கொட்டிய மாறன் மனைவியின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியில் சற்று தன்னை நிலைப்படுத்தி கொண்டார்.
 • "நம்ம பையனை நான் குறைச்சு மதிப்பிடலை காந்தி..... அந்த பொண்ணு வாழ்க்கையிலே ஏகப்பட்ட கஷ்டத்தை அனுபவிச்சிடுச்சு", என்று பெருமூச்சுடன் நிறுத்திய மாறன் மனைவி தான் கூறுவதை கேட்கிறாளா என்று பார்வையில் உறுதிப்படுத்தி கொண்டு மேலே தொடர்ந்தார்.

  ஏறத்தாழ ஒரு மணி நேரம் செலவழித்து, மௌனிகாவின் கடந்து போன கசப்பான காலத்தை கூறியவர் "இதனாலதான் இது ஒத்து போகாதுன்னு நான் கார்த்திக்கை தடுக்குறேன்..... அவனுக்குமே இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சா தானே ஒதுங்கிடுவான்.... ஆனாலும் இதை அவன்கிட்ட சொல்றதுக்கு இஷ்டமில்லாம தான் இப்படி செஞ்சுகிட்டு இருக்கேன்....

  எனக்கு அவனோட விருப்பம் தெரியும்ங்கிறதை இந்த நிமிஷம் வரைக்கும் கார்த்திக் கிட்ட காட்டிக்கலை", என்று மாறன் கூறியது கேட்ட காந்திமதி எதுவும் கூறாமல் தன்னுடைய வழக்கமான வேலைகளை தொடர்ந்தார். மாறனுக்கு தான் மனம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது.

 • இருவரின் மனதில் ஏகப்பட்ட குழப்பங்களை கும்மியடிக்க செய்தவன், வேலை முடிந்து வீட்டுக்குள் குதூகலமான மனநிலையில் நுழைந்ததும் மாறனுக்கு தன்னுடைய செயல்கள் சரிதான் என்று தோன்றியது. அவரை பொறுத்தவரை கார்த்திக் தீராத விளையாட்டு பிள்ளை.......

  கார்த்திக்கும் மிகவும் சமத்தாக டிவி வால்யூமை குறைத்து வைத்து பாடல்களை கேட்பதும், தன் அம்மாவை பார்த்து அம்சமான புன்னகையை சிந்துவதுமாக இருந்தான். இதனை பார்த்த மாறனின் மைன்ட் வாய்ஸ் "பயபுள்ள ஏதோ கோக்குமாக்கு செய்ய போறான்.... காந்தி என்ன செய்ய போறாளோ?", என்று கவலையுடன் ரன்னிங் கமென்ட்டரி கொடுத்து கொண்டிருந்தது.

  காந்திமதி கிட்சேனில் இருந்து வந்து அமர்ந்ததும் அவரது அருகில் சென்றமர்ந்த கார்த்திக் "இப்ப சவுண்ட் ஓகேவாம்மா?", என்றுக் கேட்டு விட்டு "அடுத்த அப்பாயின்ட்மென்ட் எப்பன்னு சொல்லுங்கம்மா..... நான் லீவ்க்கு அப்ளை செஞ்சுடுறேன்", என்றுக் கூறியதில் அவனது முகத்தையே பார்த்து கொண்டிருந்த காந்திமதி

  "ஏன் கார்த்திக் மௌனிகாவை எப்படி மயக்குறதுன்னு இப்ப இருந்தே யோசிக்க தான் டேட் கேட்குறியா?", என்று நெத்தியடியாக கேட்டதில் கார்த்திக் மட்டுமில்லை மாறனும் எழுந்து நின்றுவிட்டார்.
 • தீபி
 
 • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Maatinada கார்த்தி நீ உன் அம்மா நெத்தி அடியா kettutaanga.... Ava life la அப்படி என்ன நடந்தது karthi oda appa vuku எல்லாம் therinji இருக்கு.... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
 
 • Love
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,850
2,040
113
அத்தியாயம் – 9

காந்திமதியின் அதிரடியில் அப்பாவும் பிள்ளையும் அதிர்ந்து போய் நின்றனர்.

“என்னடா திருட்டு முழி முழிக்கிற? எனக்கு காதுல தான் கோளாறு. கண்ணும், மூளையும் நல்லா தான் வேலை செய்யுது” என்றார் அதட்டலாக.

அதற்குள் சுதாரித்துக் கொண்டவன் “என்னம்மா இப்படி கேட்டுடீங்க? உங்க பிள்ளை ரோடு போடுறதுக்குள்ள நீங்க வீடே கட்டுறீங்க. கார்த்திக்கோட அம்மான்னா சும்மாவா?” என்று அன்னையின் கூற்றை மறுக்காமல் ஒப்புக் கொண்டான்.

மாறனுக்கு தான் மனைவியின் பேச்சில் வந்த அதிர்ச்சி நீங்கவில்லை. அமைதியாக அம்மாவையும், பிள்ளையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

“அதை விடு! நமக்கு நாளைக்கு விருந்தாளி வரப் போறாங்க. அவங்க வந்துட்டு போன பின்னாடி டாக்டர் கிட்ட போகலாம்”.

சந்தேகத்துடன் மனைவியைப் பார்த்த மாறன் “யாரு வரப் போறாங்க காந்தி?” என்றார்.

கார்த்திக்கும் “யாரும்மா?” என்றான்.

“அவங்களை உங்களுக்குத் தெரியாது. நம்ம சரசு மாமியோட ஒன்னு விட்ட அக்கா பேத்தியும், அவங்க பொண்ணும் தான் வராங்க” என்றார்.

அன்னை சொல்லிய சொந்தத்தில் தலை கிறுகிறுக்க அதைப் பற்றி யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.

மாறனோ “என்ன சொல்ற? ஒரு சொந்தமும் புரியல. அவங்க ஏன் நம்ம வீட்டுக்கு வராங்க?” என்றார் குழப்பத்துடன்.

“அவங்க ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே பூனால போய் செட்டில் ஆகிட்டாங்க. அவங்களோட பூர்வீக சொத்து ஒன்னு இங்க இருக்காம். அதை விக்கனுமாம். அதுக்கு தான் வராங்க. சரசு மாமி தான் பொம்மனாட்டிகளா தனியா வராங்க ஹோட்டலில் தங்காம நம்ம வீட்டில் தங்கிகட்டும்னு சொல்லிட்டாங்க. நானும் ஒன்னும் சொல்லல” என்றார்.

ஏற்கனவே அன்னை சொந்த சொந்தத்தில் குழப்பத்தில் இருந்தவன், தன்னுடைய தொமுகவை உடனடியாக பார்க்க முடியாத கடுப்பில் “அந்த ஒன்னு விட்ட பொம்மனாட்டிகளுக்கு கல்யாணம் ஆகிடுசாம்மா?” என்று கேள்வியை எழுப்பி அன்னையைத் திடுக்கிட வைத்தான்.

அவன் கேட்டது சற்று லேசாக காதில் விழுந்தாலும் கோபத்தோடு “என்னடா லூசு மாதிரி பேசுற? அம்மாவும், பொண்ணும் வராங்கன்னு சொல்றேன். கல்யாணம் ஆகிடுசான்னு கேட்கிற?” என்று எரிந்து விழுந்தார்.

“ஒரு வயசு பையனோட அம்மாவா யோசிக்க மாட்டேன்றீங்களே. எனக்கு அந்தம்மாவுக்கு கல்யாணம் ஆனா என்ன ஆகாட்டி என்ன? பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? அதைச் சொல்லுங்க?”.

அவனது கேள்வியில் பதட்டமாகி போன மாறன் “ஏண்டா! இப்போ தானே அந்த டாக்டர் பெண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்ன?” என்றார் டென்ஷனாக.

தந்தையை ஒரு மாதிரியாகப் பார்த்து “எப்பொழுதுமே செகண்ட் சாய்ஸ் ஒன்னு வச்சுக்கனும்ப்பா. நீங்க சொல்லிக் கொடுத்தது தான்” என்று அவரின் மீதே பழியை போட்டான்.

அதில் கடுப்பானவர் “டேய்! இது மாதிரி எல்லாம் தப்பா ஒருநாளும் சொல்ல மாட்டேன்” என்றார் மனைவியை பயத்துடன் பார்த்துக் கொண்டே.

அன்னையைப் பார்த்து கிண்டலாகச் சிரித்துக் கொண்டே “மா! சும்மா சொல்லக் கூடாது...அப்பாவை இப்படி மிரட்டி வச்சிருக்கீங்க?” என்றான்.

அவரோ மிகுந்த டென்ஷனுடன் “ஒழுங்கா சொல்லுடா? நானா செகண்ட் சாய்ஸ் வச்சுக்க சொன்னேன்?” என்றார்.

“ஆமாம் பா! பரீட்சைக்கு போகும் முன்னாடி எப்பவும் சொல்வீங்களே...எப்பொழுதும் செகண்ட் சாய்ஸ் வச்சுக்கனும்னு” என்றான் குறும்பு தவழும் புன்னகையுடன்.

அதில் சற்று ஆசுவாசமடைந்தவர் “லூசுப் பயலே! நான் எதுக்கு சொன்னேன்...நீ எதையும் எதையும் முடிச்சுப் போடுற” என்று சோபாவிளிருந்த குஷனால் அவனை அடித்தார்.

தந்தையும், மகனையும் பார்த்து சிரித்துக் கொண்ட காந்திமதி “கார்த்தி! அவங்க இருக்கிற வரை நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். உன் ரூமுக்கு அடுத்த ரூமை தான் அவங்களுக்கு கொடுக்கப் போறேன். அவங்க போகிற வரை உன் வாயை அடக்கி கிட்டு பொறுப்பா இரு” என்றார்.

இருக்கையில் இருந்து எழுந்து கொண்டவன் “இதெல்லாம் அநியாயம்மா. நம்ம வீட்டில் ப்ரீயா இருக்க எனக்குத் தடவா?” என்றவன் “உன் நிலைமை இப்படியாக வேண்டாம் கார்த்தி” என்று புலம்பிக் கொண்டே தனது அறைக்குச் சென்றான்.

அறை வாயிலுக்குச் சென்றவன் அன்னையிடம் “அந்த பொண்ணு பேரென்னம்மா?” என்றான்.
 
 • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,850
2,040
113
மாறனோ கோபமாக அவனை முறைக்க அதற்கு அலட்டிக் கொள்ளாமல் “செகண்ட் சாய்ஸ்” என்று கூறி சிரிப்பை அடக்கினான்.

“அவ பேர் மீனா” என்று கூறி விட்டு தங்களது அறைக்குச் சென்றார்.

கதவை சாத்திவிட்டு அதிலேயே சாய்ந்து நின்று கொண்டு “மீனுகுட்டி ரொம்ப அழகா இருப்பாளோ? அப்படி இருந்துட்டா என் சின்ன மனசு ரெண்டு பேருக்கும் நடுவில் தவிக்காதா?” என்று கேட்டு நெஞ்சைத் தடவிக் கொண்டான்.

சற்று நேரம் யோசித்து தலையசைத்துக் கொண்டு “என்ன இருந்தாலும் தொமுக தான் என் பியாரி” என்று கூறிக் கொண்டு படுக்கையில் விழுந்தான்.

இரவெல்லாம் ஒருபக்கம் மௌனியும், மற்றொரு பக்கம் மீனுவும் கனவில் வந்து டூயட் பாடினர். விடியலின் நேரம் நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனின் காதில் மோட்டார் பைக் ஓடும் சத்தமும், இன்னும் புரியாத ஒரு சத்தமும் நாராசமாய் அவனது காதை தீண்டியது.

ஏசி ஓடிக் கொண்டிருந்தாலும் அதையும் மீறி அறைக்குள் வந்த சத்தத்தில் எரிச்சலாகி எழுந்தவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். அங்கே ஹால் முழுவதும் கால் வைக்க இடமில்லாமல் பெட்டிகள் நிறைந்திருந்தது. அதோடு சமயலறையில் இருந்து சண்டை போடுவதை போல சத்தம் வந்ததது. பயந்து போய் அவசரமாக அங்கேச் சென்றான்.

அங்கிருந்த நிலைமையோ அவன் எதிர்பார்த்ததற்கு வேறுவிதமாக இருந்தது. சமையலறை மேடையின் மீது ஒரு அழகுப் புயல் மையம் கொண்டிருந்தது. அவனது மனம் அடித்துச் சொன்னது அவள் தான் மீனுகுட்டி என்று. அவளது அன்னை காந்திமதியிடம் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்.

இவனை பார்த்ததும் “என்ன கார்த்தி அதுக்குள்ள எழுந்துட்ட காப்பி வேணுமா?” என்றார் காந்திமதி.

“இல்லம்மா! இவங்க எல்லாம் வந்துருக்காங்களே ஜஸ்ட் ஒரு ஹாய் சொல்லலாம் என்று தான் வந்தேன்” என்றான் பார்வையை மீனுவின் மீது பதித்தபடி.

அவளும் அவனைப் பார்த்து மேடையின் மீதிருந்து குதித்து அவனருகே சென்று “ஹாய் நான் மீனா. இது எங்கம்மா. நாங்க உங்களுக்கு தூரத்து உறவு. இந்த ஊரை விட்டுப் போய் பல வருஷம் ஆச்சு. ரயிவே ஸ்டேஷனில் இறங்கினதும் அப்படியே அசந்து போயிட்டேன். செம ஹாட் வேற. எங்க ஊர் கிளைமேட் ரொம்ப நல்லா இருக்கும். இங்கே என்ன இப்படி இருக்கு. அதோட உங்க ஊர் ஆட்டோகாரங்க ரொம்ப பிரச்சனை பண்றாங்க. ஸ்டேஷனில் இருந்து இங்கே வரதுக்கு முன்னூறு ரூபா வாங்கிட்டாங்க. நாங்க ட்ரைன் டிக்கெட்டுக்கே அவ்வளவு தான் கொடுத்தோம். அவன் ஸ்டேஷனில் பேசினது ஒன்னு. இங்கே வந்து கேட்டது ஒன்னு” என்று அவள் பாட்டிற்கு சத்தமாக பேசிக் கொண்டே சென்றாள்.

கார்த்திக்கின் வாழ்நாளில் முதன்முறையாக ஒரு பெண் பேசுவதைக் கண்டு திகைத்து நின்றான். இன்னும் சற்று நேரம் அவளிடம் பேசினால் காதுவலி வரும் போல் தோன்றியது. பாவமான முகத்துடன் திரும்பி அன்னையைப் பார்க்க, அவரோ சிரிப்பை அடக்கியபடி காப்பியை கலந்து கொண்டிருந்தார்.

அவரின் உதவி கிடைக்காது என்று புரிந்தவன் மீனாவின் அன்னையைப் பார்த்தான். அவனது மனதை புரிந்து கொண்டது போல் “மீனு! இப்போவே தம்பி கிட்ட எல்லாத்தையும் பேசணுமா? நாம தான் இங்கே ஒரு மாசம் இருக்கப் போறோமே மெதுவா பேசிக்கலாம். அதுவும் தம்பி சாயங்கலாம் வந்த பின்னாடி பேசினா நிதானமா பேசலாம்” என்று மீனுவின் அன்னை என்பதை வளவளவென்று பேசி நிறுத்தினார்.

“எஸ் நீ சொல்றது கரெக்ட் தான் மா”என்றவள் அவன் பக்கம் திரும்பி “உங்க பேர் என்ன சொன்னீங்க? நாம பேசுவதற்கு இன்னும் டைம் நிறைய இருக்கு. இப்போ நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று மீண்டும் ஒரு பாராவிற்கு பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவர்களது பேச்சில் மொத்தமாக மண்டை காய்ந்து போனது. காப்பியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் ஆளை விட்டால் போதும் என்கிற எண்ணத்தில் அவசரமாக திரும்பியவனின் கரத்தில் காப்பி கப்பை கொடுத்து விட்டு “யான் பெற்ற இன்பம் பெருக என் மகன்” என்று கிண்டலடித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் காந்தி.

பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டே ஹாலில் இருந்த சோபாவில் சென்றமர்ந்தான். மறந்து பக்கத்து சோபாவில் அமர்ந்திருந்த மீனுவை பார்க்கவில்லை. எதிரே டீபாயிலிருந்த செய்தி தாளை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

அப்போது ரிமோட்டை எடுத்து டிவியைப் போட்டாள் மீனு. ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டே இருந்தாள். அதிலும் மிகுந்த சத்தமாக வேறு வைத்திருந்தாள். பேப்பரை படிக்க முடியாமல் டென்ஷனான கார்த்தி “ரெஸ்ட் எடுக்கப் போறேன்னு சொன்னீங்க? டிவி பார்த்திட்டு இருக்கீங்க?” என்றான் எரிச்சலை அடக்கியபடி.

அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து “இப்போ நான் என்ன பண்ணிட்டு இருக்கேன். ஏதாவது வேலை செஞ்சிட்டு இருக்கேன்னா இல்லையே? இதுக்கு பேர் ரெஸ்ட் இல்லாமல் வேறென்ன?” என்று கேட்டு வெறி ஏத்தினாள்.

அவள் பேசியதைக் கேட்டு எழுந்து சென்று சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் என்கிற ஆத்திரம் எழுந்தது. அதை செய்ய முடியாமல் “கொஞ்சம் சவுண்ட் கம்மியா வச்சு பாருங்க” என்றான் கடுப்போடு.

“நீங்க எப்படி ஆர்ஜேவாக இருக்கீங்க? உங்க ப்ரோபோஷனில் சத்தமும் ஓயாத பேச்சும் தானே முக்கியம்”.

தன்னைப் பற்றி அவளுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை விட அவளது பேச்சே வேப்பங்காயாக கசக்க “யார் நான் ஆர்ஜேவாக இருக்கேன்னு சொன்னது?” என்றான் கோபமாக.

டிவியை பார்த்துக் கொண்டே “அத்தை தான் சொன்னாங்க? நாம எல்லாம் ஒரே இனம் இல்லையா?” என்று குண்டைப் போட்டாள்.

அவள் பேசிய மற்ற அனைத்தையும் விட்டவன் “எங்கம்மா உனக்கு எப்படி அத்தையாவாங்க?” என்று மிக முக்கிய கேள்வியைக் கேட்டான்.

அவனை வித்தியாசமான பிறவியைப் பார்ப்பது போன்று “இதென்ன இப்படியொரு கேள்வி?கொஞ்சம் வயசில் பெரியவங்க எல்லோரையும் இங்கிலீஷில் ஆண்டின்னு சொல்லுவோம். அதை தான் நான் அத்தைன்னு தமிழில சொன்னேன்” என்றாள்.

“நீ ஆர்ஜேவா?” என்று அடுத்த கேள்விக்கு தாவினான்.

“ம்ம்...ஆமாம்! எனக்கு பூனால ஏகப்பட்ட விசிறிகள்” என்றாள் பெருமையாக.

அவனோ அதை கவனிக்காது வேகமாக அன்னையிடம் சென்றான்.

“மா! இதெல்லாம் உங்க ப்ளான் தானா?”

காதை அழுந்த தேய்த்துக் கொண்டவர் “உனக்கு நேரமாகலையா கார்த்தி” என்றார்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கம்மா?”

“நான் எதுவும் ப்ளான் போடல கார்த்தி. அந்த கடவுள் தான் உன் மேல அன்பு வச்சு இதை எல்லாம் நடத்தி இருக்கார்” என்று சிரித்துக் கொண்டே வேலையைப் பார்த்தார்.

முஷ்டியை மடக்கி ஓங்கி கதவில் குத்தி “நான் ஒரு மாசம் வெளில தங்கிக்கிறேன்” என்றான் கோபமாக.

அப்போது தங்களது அறைக்குப் பெட்டியை வைக்கச் சென்றிருந்த மீனாவின் அன்னை “என்ன தம்பி? வெளியூர் பயணமா?” என்றார் நேரம் காலம் அறியாமல்.

இவற்றை எல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த மாறன்...மகன் விருந்தாளிகளிடம் தனது கோபத்தை காட்டிவிடுவான் என்று பயந்து “கார்த்தி! உனக்கு நேரமாச்சு. கிளம்பு!” என்று விரட்டினார்.

தனது கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தவன், வீட்டிற்கு வந்திருப்பவர்களின் எதிரே எதையும் காண்பிக்க முடியாது தந்தையின் காதில் “ரெண்டு பேரும் சேர்ந்து சதியா செய்றீங்க? உங்களுக்கு இருக்கு” என்று கூறி நகர்ந்தான்.

மாறனோ சற்றும் அசராமல் “சதி இல்லை மகனே விதி. நாங்க எதுவுமே செய்யல. உண்மையை சொல்லனும்னா தானா நடந்தது தான் இது” என்று கூறி சிரிப்பை அடக்கியபடி அங்கிருந்து நகர்ந்தார்.

இவ்வளவு அமர்க்களமும் நடந்து கொண்டிருக்க, எதைப் பற்றியும் கவலைப்படாது டிவியில் மூழ்கி இருந்தாள் மீனா. அதைக் கண்டு தலையிலடித்துக் கொண்டு தனதறைக்குள் நுழைந்து கொண்டான்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து தனது வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்பி ஹாலிற்கு வந்தவன் அங்கே மீனா இல்லாததைக் கண்டு நிம்மதியடைந்தான்.

டைனிங்கில் அமர்ந்தவன் எப்பொழுதும் போல் அல்லாது மிக அமைதியாக உணவருந்த ஆரம்பித்தான். மாறனும், காந்தியும் தங்களுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தனர்.

அப்போது அவனது நிம்மதியை கெடுக்கும் வகையில் மீனாவும், அவள் அம்மாவும் தங்கி இருந்த அறைக்கதவு திறக்கப்பட்டது. இருவரும் உணவருந்த அமர்ந்தார்கள்.

அதுவரை தான் அவனுக்குத் தெரியும், ஏனென்றால் மீனா இட்லியையும், பொங்கலையும் பற்றி பேச ஆரம்பித்தாள் வாய் ஓயாது. இட்லியையே வெறுத்து ஓடும் அளவிற்கு பேசினாள்- பேசினாள் அப்படி பேசினாள். அவசரமாக தட்டிலிருந்த உணவை முடித்துக் கொண்டு வேகமாக அலுவலகத்திற்கு கிளம்பினான்.

அவளும் அந்த நேரம் பேச்சுடன் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு ஹாலில் வந்தமர்ந்தாள். அவளை நிமிர்ந்தும் பார்க்காது சாக்சைப் போட்டுக் கொண்டிருந்தவனை சத்தமாக அலறியப் பாடல் திடுக்கிட வைத்தது. அதோடு அவளும் பாடியதைக் கேட்டு கொலைவெறியானான்.

மை டியர் மச்சான் நீ மனசு வச்சா

நாம உரசிக்கலாம் நெஞ்சு ஜிகுஜிகுன்னு...

அவன் தன்னைப் பார்ப்பதை அறிந்ததும் “கித்னா அச்சா சாங் னா...சாரி எவ்வளவு நல்ல சாங்” என்றாள் பூரிப்புடன்.

எதுவும் பேசாமல் வேகமாக அங்கிருந்து வெளியேறினான். எதையோ கண்டு ஒடுபவனைப் போல ஓடியவனைக் கண்டு வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

அவன் திரும்பிப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், நடப்பவை அனைத்தும் தனக்கான ஏற்பாடு தான் என்று.

கார்த்திக் சென்றதுமே “என்ன ஆண்ட்டி உங்கப் பையன் இதுக்கே இந்த ஓட்டம் ஓடுறான்?” என்றாள் கேலியாகச் சிரித்து.

அவளது தலையில் குட்டி “வாலு! நீ இந்த பாடுபடுத்தினா ஓடாம என்ன செய்வான்?” என்றார் சிரிப்புடன்.

மாறனோ அதிசயமாக இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தவர் “காந்தி உண்மையைச் சொல்லு? இவங்க நமக்கு என்ன சொந்தம்?” என்றார்.

அவரைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன் “இவங்க நமக்கு சொந்தமில்லைங்க. உங்களுக்கு ஞாபகம் இருக்கா...நாம திருவான்மியூரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடி இருந்தோமே. அங்க பக்கத்து வீட்டில் ஒரு அம்மாவும், குழந்தையும் இருந்தாங்களே அவங்க தான் இது. ஒரு மாசம் சரசு அண்ணிக்கும் இவங்களைத் தெரியும். அவங்க இவங்களோட தொடர்பில் இருந்தாங்க இத்தனை வருஷமும். அவங்க தான் இங்கே வரதை பத்தி சொன்னாங்க. அதோட இந்த வாலு பார்க்கிற வேலையைக் கேட்டதும் நம்ம பையனுக்கு கொஞ்சம் பாடம் எடுப்போம்னு தான் நாங்க ப்ளான் பண்ணினோம். உங்களுக்கு கூட சொல்லக் கூடாதுன்னு ரகசியமா வச்சிருந்தோம்” என்றார்.

“ஆமாம் அங்கிள்! நாங்க எங்க வீட்டை விற்க வர வேண்டிய சூழ்நிலை. எங்க சொந்தகாரங்க யாரும் இங்கில்லை. அதனால எதேச்சையா சரசு பாட்டி மூலியமா ஆண்ட்டியை பிடிச்சாங்க அம்மா. அப்புறம் இந்த ஒரு மாசத்தில் பழைய கதைகள் எல்லாம் பேசி எங்க வீட்டிலேயே வந்து தங்குங்கன்னு சொன்னாங்க. அதோட ஒரு கண்டிஷனும் போட்டாங்க ஆண்ட்டி. என் பையன் இனிமே சத்தமா பேசக் கூட தயங்குற அளவுக்கு அவனை மாத்தணும்னு” என்றாள் சிரித்தபடி.

“நீங்க எல்லாம் நினைக்கிற அளவுக்கு என் பையன் அவ்வளவு சீக்கிரம் மாரிடுவானா என்ன? சாயங்காலம் வரும்போதே வில்லங்கத்தோட தான் வருவான் பாருங்க” என்றார் மாறன்.

சுதா ரவி
 
 • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,850
2,040
113
அத்தியாயம் -1௦

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்னு இதைத்தான் சொல்றங்களா? காந்திமதி செம்ம கடுப்பில் இருந்தார். மகனை வெறுப்பேற்ற இவர் ஒரு திட்டம் போட அவனோ அந்த திட்டத்தை தரை மட்டமாக்கிவிட்டான்.

கார்த்திக் மாலை வீட்டிற்கு வரும்போது அவனோடு அவனின் பிரெண்ட் அஜய்யும் கூட வந்தான். பேசியே அறுப்பதில் கார்த்திக் துண்டு பிளேட், மீனா ஹாக்ஷா பிளேட் என்றால்... இந்த அஜய்யோ ரம்பம்! சரியான கழுத்தறுப்பு.

“ம்மா! நம்ம சரசு மாமியோட ஒன்னு விட்ட அக்கா பேத்தியும், அவங்க பொண்ணும் அவங்க பூர்வீக சொத்தை விக்க தனியா கஷ்டப்பட கூடாதுன்னு நான் ஒரு நல்ல ஏற்பாட்டோட வந்திருக்கேன் ம்மா” வந்ததும் வராததுமாக நீட்டி முழக்கியவனை பார்த்த மாறன், ‘ஆரம்பிச்சிட்டான்! இதை தான் மகனே காலையில நான் நினச்சேன்’ கதைக் கேட்க வசதியாக அங்கிருந்த ஷோபாவில் சென்றமர்ந்தார்.

“ஹாய் ப்பா! எப்படி இருக்கீங்க?” கேட்ட அஜய்க்கு உரிய பதிலை தந்தவர் மகனின் ஆட்டத்தை பார்க்க ஆயத்தமானார்.

இப்படி கார்த்திக் அடிக்கடி அவனின் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவது எப்போதும் நடப்பதுதான் என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத காந்தி, அவன் வரும்போதே ஏதோ சொன்னானே அது என்னவாக இருக்கும் என நினைத்துக்கொண்டே அஜய்க்கு ஸ்நாக்ஸ் காபி கொடுத்து உபசரித்தார். சமயலறைக்கு செல்ல திரும்பியவரை,

“ம்மா! எங்க உங்க தூரத்து சொந்தம்?” எனக் கேட்டு அவரின் கையை பிடித்திழுத்து தன்னருகில் அமர்த்திக்கொண்டான்.

அவனின் கேள்விக்கு ஒரு முறைப்பை பதிலாய் தந்தவர் அவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றிருப்பதாகவும் இப்போது வரும் நேரம் தான் என்றும் கூறினார்.

“ம்மா! உங்க சொந்தக்காரங்களுக்கு இல்லல்ல உங்களுக்கு உதவி செய்ய அஜய் நம்ம வீட்ல தங்க வந்திருக்கான் ம்மா!” அசால்ட்டாய் பௌன்சர் வீசிய மகனை ஆவேன பார்த்துக்கொண்டிருந்தார் மாறன்.

என்ன சொல்ல வருகிறான் என சரியாக புரியாத போதும் அவனின் அன்னை என்பதை நிருபிக்கும் வகையில், ”டேய்... நான் உன்கிட்டே எந்த வீட்டு வேலையும் வாங்க மாட்டேன். இதுல இவன் கிட்ட எப்படிடா வாங்கறது?” என்றார் அப்பாவியாக.

‘ம்க்கும்! குசும்பு தான் இந்த காந்திமதிக்கு. காந்திமதின்னு பெயரு வச்சதும் இந்தம்மாக்கு கலைமாமணி காந்திமதின்னு நினைப்பு. நம்மகிட்டே ஆக்ட்டு தரதை பாரேன்!’ கடுப்பாய் எண்ணியவன்,

“எல்லாம் உங்க மனநிம்மதிக்காக தான் இந்த ஏற்பாடு. உங்க சந்தோசம் என் சந்தோசம். உங்க சோகம் என் துக்கம். நீங்க உங்க தூரத்து சொந்தக்காரங்களை பத்தி காலையில ரொம்ப கவலைப்பட்டு பேசினீங்களா.... “ என சொல்லிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட மாறன்,

“இது எப்போ?” என்றார்.

“காலையில தான் ப்பா!” பல்லைக் கடித்தவனை பார்த்தும் அடங்காது,

“நான் அங்க தானே ப்பா இருந்தேன். காந்தி அப்படி எதையும் சொல்லலையே கார்த்தி” என்றார் அழுத்தமாக.

“சொன்னாதானா ப்பா? இத்தனை வருஷம் அவங்க கூட வாழ்ந்த அனுபவம் இருந்தும்,என்னோட மனைவி எல்லாத்தையும் ஒன்னுக்கு நாலு தரம் சொன்னாத்தான் புரிந்துப்பேன்னு ஒரு ஹஸ்பன்ட்டா நீங்க சொல்லலாம். ஆனா ஒரு மகனா நான் அப்படி சொல்ல முடியாது ப்பா. சொல்லமுடியாது!” என்று தன் வலக்கையை கொண்டு சிவாஜி ஸ்டைலில் மார்பில் குத்திக்கொண்டு, வராத கண்ணீரை துடைத்துக்கொண்டவன்,

“எனக்கு அவங்க எதையும் சொல்லாமலேயே அவங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியும் ப்பா... தெரியும்! ஏன்னா நான் அவங்ககிட்ட பத்து மாசம் இருந்திருக்கேன்! பத்து மாசம் பெருசா.. முப்பது வருஷம் பெருசா ப்பா?” எல்கேஜி சிறுவன் போல் அப்பாவியாய் கேட்டவனை விழிபிதுங்கி போய் பார்த்தார் மாறன்.

‘நம்ம ஆட்டம் க்ளோஸ்! இதுக்கு மேல அவனை வம்பிழுத்தா அவங்க அம்மாவை என்பக்கம் திருப்பி விட்டுடுவான். இப்ப கொடுத்த அலெர்ட்ல, அலெர்ட்டா இருந்துக்கனும்...’ அவ்வளவு தான் இவ்வளவு நேரம் அவனை எதிர்த்து வாதித்துக்கொண்டிருந்த ஒரு ஜீவனும் வாய்தா வாங்கிடவே சோலோவாக பட்டையை கிளப்பினான் கார்த்திக்.

“ம்மா... நீங்கவேற உங்க சொந்தக்காரங்க, ரொம்ப வருஷம் முன்னாடியே நம்ம ஊரைவிட்டு போனவங்கன்னு சொன்னீங்களா.... அப்ப இருந்த ஊரு வேற.இப்ப இருக்கிற ஊரு வேற இல்லையா ம்மா? பொம்மனாட்டிகளா தனியா நல்ல ஹோட்டலில் தங்கறதுக்கே உங்க மனசு தாங்கல. இதுல ஒரு மாசம் அவங்க சொத்தை விக்க அங்கயிங்க அதே பொம்மனாட்டிகளா தனியா அலைய வேண்டிவந்தா உங்க மனசு தாங்குமா? கண்டிப்பா தாங்கவே தாங்காது. அதான் அவங்களுக்கு துணைக்கு நம்ம அஜயை அனுப்பலாம்னு கூட்டிவந்தேன்” என்றவனை உள்ளே வருமாறு கண்ணசைத்து சமயலறைக்கு சென்றார் காந்தி.

“ஒரு வயசு பொண்ணு இருக்கும் வீட்ல இவனை எப்படிடா தங்கவைக்கிறது! என்ன கார்த்தி இப்படி பண்ற?” எதையாவது சொல்லி அஜய்யை இங்கிருந்து ஓட்டிவிட காந்தி நினைத்தார்.
 
 • Love
Reactions: Chitra Balaji