Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி | SudhaRaviNovels

மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

இந்தக் கதை நால்வர் சேர்ந்து எழுதியது. தீபிகா, கோகிலா, ராஜேஸ்வரி சிவகுமார் மற்றும் சுதா ரவி எழுதியது. ஏற்கனவே தளத்தில் பதிவிடப்பட்ட கதை தான். மீண்டும் பதிவிடுகிறோம்.

அத்தியாயம் – 1

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபமென்றான் காதல் சொன்னான்

காற்றில் குழலோசை பேசும் பூமேடை மேலே

பாடலை ஒலிக்க விட்டு சாய்வாக நாற்காலியில் அமர்ந்தவன் கண்ணாடியே வழியே தெரிந்த நண்பனின் முகத்தை பார்த்து இருகைகளையும் அசைத்தான்.

அந்த பாடல் முடியும் வரை கண்களை மூடி அதன் வரிகளை அனுபவித்தான். இப்படியொருத்தி தன் வாழ்வில் வர வேண்டும் என்று கண்முன்னே இல்லாத காதலியின் உருவத்தை உருவகப்படுத்தி ரசித்துக் கொண்டிருந்தான்.

பாடல் முடிந்ததை உணர்ந்து ஹெட் போனை மாட்டிக் கொண்டு “நீங்க நான் ராஜா சாருடன் இணைவது உங்கள் கார்த்திக்” என்றான்.

“வணக்கம் கார்த்தி சார்”

எதிரே லைனில் இருப்பவனிடம் வளவளத்துக் கொண்டே அவனுக்கு தேவையான பாடலை போட்டு விட்டு கட்டை விரலை உயர்த்தி நண்பனுக்கு காண்பித்து ரெக்கார்டிங் அறையை விட்டு வெளியே வந்தான்.

“என்ன மச்சி இன்னைக்கு ப்ரோக்ராம் அசத்தல் போல” என்றான் கிரி கிண்டலாக.

தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் “கடைசில வந்தவன் விவகாரமான ஆள் மச்சி. அவன் ஆளுக்கு போட்ட பாட்டை பார்த்தே இல்ல. விடிய விடிய சொல்லித் தருவேன் கேட்டான் பாரு” என்று கூறி கண்ணடித்து விட்டு ஆபிசை விட்டு வெளியேறினான்.

பார்கிங்கில் நின்றிருந்த பைக்கை எடுத்துக் கொண்டு போக்குவரத்து குறைந்த சாலையில் பயணிக்க ஆரம்பித்தான்.

இரவு நேரம் ஈரப்பசையுடன் கூடிய காற்று உடலைத் தழுவ, மனமோ ராஜாவின் பாடல்களை அசைபோட்டபடி இருக்க, ஒருவித உற்சாகத்துடன் தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

காந்திமதி – மாறன் தம்பதியின் சீமந்த புத்திரன் தான் கார்த்திக். வீட்டின் ஒரே பிள்ளை ஆதலால் கவலைகளற்று வளர்ந்தவன். தாய், தந்தை இருவருமே வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள். அதனால் அவனும் எந்தவொரு பிரச்சனையையும் மனதில் வைத்து புழுங்காமல் அது தீரும்போது தீரட்டும் என்று எண்ணுபவன்.

அவர்களின் வீட்டில் எந்நேரமும் சிரிப்பும், கும்மாளமுமாகவே இருக்கும். சிறிது நாட்களாக காந்திமதி மட்டும் பழையபடி இல்லாது தனக்குள் சுருக்கி கொண்டது போல் தோன்றியது. அவரது செயல்பாடுகளில் ஒரு மந்தநிலை தெரிந்தது. அதை பற்றியே எண்ணிக் கொண்டு வந்தவன் வீடு வந்ததும் வண்டியை பார்க்கிங்கில் போட்டுவிட்டு லிப்ட்டில் ஏறி தங்களின் தளத்திற்கு வந்தடைந்தான்.

தனது வீட்டின் வாயிலுக்கு வந்தபிறகும் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு யோசனையுடனே பெல்லை அடித்தான். ரெண்டு மாதங்களுக்கு முன்பு வரை அவன் லிப்ட்டில் வரும் போதே கதவு திறக்கப்பட்டிருக்கும். சிரித்த முகத்துடன் அவனுக்காக காத்திருப்பார் அன்னை.

இப்போதோ மூன்று நான்கு முறை பெல்லை அடித்த பிறகே மெல்ல கதவு திறக்கப்பட்டது. கதவை திறந்தவரின் முகத்திலோ புன்னகை மருந்திற்கு கூட இல்லை. சோர்வாக நின்றிருந்தவரை கண்டவன் “என்னம்மா உடம்பு சரியில்லையா? ரொம்ப டல்லா இருக்கீங்களே?” என்றான்.

“ம்ச்...அதெல்லாம் இல்ல கார்த்தி...டிரஸ் மாத்திட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று உள்ளே செல்ல சென்றார்.

அவரின் கைகளைப் பற்றி நிறுத்தியவன் “நீங்க போய் தூங்குங்க. நான் சாப்பிட்டுகிறேன்” என்றான் அவரின் முகத்தை ஆராய்ந்தபடி.

சிறிது நேரம் அவன் முகத்தையே பார்த்திருந்தவர் “என்னை தூங்க சொல்றியா?” என்றார்.

“ஆமாம்மா!”

ஒன்றும் பேசாது சமயலறைக்குச் சென்று உணவை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டு “சாப்பிட்டிட்டு மீதம் இருக்கிறதை பிரிட்ஜ்ல வச்சிடு” என்று கூறி படுக்க சென்றார்.

யோசனையுடனே குளித்து முடித்து வந்தவன், உணவை முடித்துக் கொண்டு டிவியின் முன்பு அமர்ந்தான். சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தாலும் அன்னையின் நடவடிக்கையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்னவாயிற்று அம்மாவிற்கு? அவரின் உற்சாகம் எங்கு சென்றது? என்று மனதை போட்டு உழப்பிக் கொண்டிருந்தான்.

அப்போது அறைக் கதவு மெலிதாக திறக்கும் சத்தம் கேட்க, மெல்ல திரும்பி பார்த்தான். தந்தை தான் மெதுவாக வந்து அவன் அருகில் அமர்ந்தார்.

“என்னப்பா தூங்கலையா?”

அவனை கவலையுடன் பார்த்தவர் “அம்மாவை கவனிச்சியா கார்த்தி? ரொம்ப சோர்ந்து போயிருக்கிற மாதிரி இல்ல?” என்றார்.

அவசரமாக டிவியை அனைத்தவன் “ஆமாம்ப்பா! நானும் அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்றான்.

“அவளுக்கு சரியா காது கேட்கலையோன்னு தோணுது கார்த்தி” என்றார் கவலையாக.

“என்னப்பா சொல்றீங்க?” என்றான் அதிர்ச்சியுடன்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“நீ நல்லா கவனிச்சு பாரு கார்த்தி. நாம பேசி முடிச்சு ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு பிறகு தான் அவ பதில் சொல்றா. நம்ம கிட்ட அதை சொல்லாம மனசில் வச்சு தான் சோர்வா இருக்கான்னு தோணுது” என்றார்.

“ஆமாம் நானும் கவனிச்சேன் பா. உடனே பதில் சொல்லாம கொஞ்ச நேரம் கொடுத்து தான் பதில் சொல்றாங்க. இதில கவலைப்பட என்ன இருக்கு. இப்போ தான் மருத்துவ வசதிகள் நிறைய இருக்கு. டாக்டர் கிட்ட காண்பிச்சு சரி பண்ணிட்டா போச்சு” .

“ஒரு ரெண்டு நாள் கவனிச்சு பார்த்திட்டு முடிவுக்கு வருவோம் கார்த்தி. அவசரப்பட்டு டாக்டர் கிட்ட போக வேண்டாம்” என்றார்.

“சரிப்பா!” என்றவன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டு “போய் தூங்குங்க. அம்மாவுக்கு எதுவும் இருக்காது. அப்படியே இருந்தாலும் சரி பண்ணிடலாம்” என்று சமாதனப்படுத்தி அவரை அனுப்பி வைத்தான்.

விளக்குகளை அனைத்து வைத்து விட்டு அறைக்குள் சென்றவனின் சிந்தனை அன்னையை சுற்றியே ஓடியது.

வெகுநேரம் அதிலேயே உழன்று கொண்டிருந்து விட்டு விடியலின் நேரம் உறங்க ஆரம்பித்தான்.

மறுநாள் காலை எழுந்தவன் தனது பணிகளை செய்து கொண்டிருந்தாலும் கவனத்தை அன்னையின் மீது வைத்திருந்தான். அவர் பார்ப்பதற்கு சரியாக இருப்பது போல் தோன்றினாலும் மெல்லிய ஓசை அவரது காதை எட்டவே இல்லை. தந்தை பேசும்போது கூட மிகுந்த கவனம் வைத்தே புரிந்து கொள்ள முயன்றது போல் தோன்றியது.

அதற்கு அடுத்து வந்த நாட்களும் அவரை கண்காணிப்பதையே வேலையாக வைத்திருந்தான். அதில் அவன் புரிந்து கொண்டது என்னவென்றால், அவருக்கு கேட்பதில் குறைபாடு வந்திருக்கிறது. அதை வெளியே காட்டாவதாறு இருக்க அன்னை முயன்று கொண்டிருக்கிறார் என்பது தான்.

ஒருவாரம் சென்றிருந்த நிலையில் இரவு பணியில் இருந்து வந்தவன் தந்தையிடம் தான் கவனித்தவைகளை பகிர்ந்து கொண்டான்.

அவரும் சற்றே கவலையுடன் கூடிய குரலில் “நானும் பார்த்தேன் கார்த்தி! நம்ம கிட்ட சொல்லாம மறைக்கிறா” என்றார் துயரத்துடன்.

“டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் காண்பிச்சிடுவோம் பா” என்றான் யோசனையுடன்.

“ம்ம்..”

“நான் நாளைக்கு விசாரிச்சிட்டு வந்து சொல்றேன் பா. எந்த ஹாஸ்பிடல் போகலாம்னு. அதுக்கு பிறகு அம்மாவை கூட்டிட்டு போகலாம்”.

அவர் சற்று யோசனையுடன் “நம்ம ஈஸ்வரனோட மருமகள் மௌனிகா இஎன்டி ஸ்பெஷலிஸ்ட். அவன் கிட்ட சொல்லி அந்த பொண்ணு நம்பர் வாங்கி பேசி வச்சிருக்கேன். நாளைக்கு அம்மாவை அவங்க கிட்ட கூட்டிட்டு போய் காண்பிச்சிட்டு வந்துடுவோம்”.

“அம்மா ஒத்துக்குவாங்களாப்பா?”

“வெளில கூட்டிட்டு போகிற மாதிரி போயிட்டு அங்கே போயிடுவோம்” என்றார்.

“சரிப்பா! எனக்கு அம்மாவை இப்படி பார்க்க பிடிக்கல. நாளைக்கு போயிட்டு வருவோம்” என்று கூறி எழுந்து கொண்டான்.காலை எழுந்ததும் பிரஷ் செய்துவிட்டு காப்பிக்காக அன்னையைத் தேடி வந்தவன், குக்கர் விசிலடிப்பது கேட்காமல் காய் அறிந்து கொண்டிருந்தவரை நோக்கிச் சென்றான்.

அடுப்பை அணைத்துவிட்டு “அம்மா! இன்னைக்கு காலை டிபன் மட்டும் வீட்டில் செய்ங்க. மதியம் வெளில சாப்பிட்டுக்கலாம்” என்றான் அவரின் முகம் பார்த்து.

அவன் முகத்தை ஊன்றி கவனித்தவர் “இன்னைக்கு மார்னிங் ப்ரோக்ராம் இல்லையா கார்த்தி” என்றார் பாலை அடுப்பில் வைத்தபடி.

“இல்லம்மா! அதனால தான் நாம வெளில போகலாம்னு சொல்றேன்” என்றான்.

அவர் கலந்து கொடுத்த காப்பி கோப்பையை வாங்கிக் கொண்டு வந்தவன் சோபாவில் அமர்ந்தபடி நாளிதழை பார்க்க ஆரம்பித்தான். சிறிது நேரம் அதில் மூழ்கியவன், போர் அடிக்க டிவியை போட்டு சேனல்களை மாற்ற ஆரம்பித்தான்.

அப்போது ஒரு சானலில் அவனது விருப்பபாடல் வர, அதை வாயைத் திறந்து கொண்டு பார்க்க ஆரம்பித்தான்.

மை டியர் மச்சான்

நீ மனச வச்சா

நாம உரசிக்கலாம்

நெஞ்சு ஜிகு ஜிகுன்னு

அப்போது அங்கே வந்த அவனது தந்தை “என்னப்பா உன் பாட்டு வந்துடுச்சா? அதுதான் கீழ வரைக்கும் கேட்டுசேன்னு நினைச்சேன்” என்றார்.

அசடு வழிந்தபடி தந்தையை பார்த்துவிட்டு சமையலறையை பார்க்க, அன்னையோ டிவியின் சத்தம் அவரை எதுவும் செய்யவில்லை.

அதில் சற்று கலங்கி போனவன் “நான் போய் கிளம்புறேன் அப்பா. இன்னைக்கு டாக்டர் கிட்ட போயிட்டு வந்துடுவோம்” என்றான் அன்னையை பார்த்தபடி.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அவர்கள் பேசியது எதுவும் அவர் காதில் விழவில்லை. பெருமூச்சுடன் எழுந்த மாறன் “சரிப்பா” என்றார்.

சற்று நேரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பினர். ஒலாவில் பயணிக்கும் போது மெல்ல மகன் பக்கம் திரும்பியவர் “எங்கே போறோம் கார்த்தி” என்றார்.

அவர் கைகளை எடுத்து தன் கைகளில் வைத்துக் கொண்டவன் “அம்மா! உங்களை டாக்டர் கிட்ட காண்பிக்க தான் போயிட்டு இருக்கோம்” என்றான்.

ஒன்றும் புரியாமல் அவன் முகத்தையே பார்த்தவர் “என்ன சொல்ற?” என்றார்.

கைகளை வருடியபடி “கொஞ்சநாளா இந்த காந்திமதி நாங்க பேசுறது எல்லாம் கேட்காம நிம்மதியா இருக்காங்களாம். அவங்களை அப்படியே விட்டுடலாமா?” என்றான்.

அதை கேட்டதுமே சட்டென்று கண்கள் கலங்கி விட “உனக்கு எப்படி தெரியும்?” என்றார்.

“அப்பா தான் கவனிச்சு சொன்னாங்கம்மா. ஒன்னும் கவலைப்படாதீங்க. சின்ன பிரச்சனையாக தான் இருக்கும்” என்றான்.

கணவரையும், மகனையும் கண்கள் கலங்க பார்த்தவர் “ரொம்ப பயந்துட்டேன்” என்றார்.

அதை கேட்டு அவரது மூடை மாற்ற எண்ணியவன் “இங்க பாருங்க காந்திமதி. நீங்க இப்போ பேசிட்டு இருக்கிறது ஹலோ எப்எம்மின் ஆர்ஜே கார்த்தியோட. தொடர்ந்து என்னோட ப்ரோக்ராம்மை கேட்டீங்கன்னா உங்களோட காது நன்றாக கேட்க ஆரம்பிச்சிடும்” என்றான்.

அவன் பேசியது பாதி தான் அவர் காதில் விழுந்தது. மகன் தன்னை மாற்றவே முயற்சிக்கிறான் என்பதை உணர்ந்தவர் மெல்ல சிரித்து அவன் தலையை வருடினார்.

அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வர, தாயாரை இறக்கிவிட்டு டிரைவருக்கு பணத்தை கொடுத்தவன் ஆஸ்பத்திரியின் ரிஷப்ஷன் நோக்கி சென்றான்.

மாறனும், காந்திமதியும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, அவன் ரிஷப்ஷனிஸ்ட்டிடம் டாக்டர் மௌனிகாவை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

அவளோ “அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கீங்களா சார்?” என்றாள்.

அப்போது அதை கேட்டு எழுந்து வந்த மாறன் “நேத்தே அவங்க கிட்ட பேசி இருக்கோம்மா அவங்க தான் இந்த நேரத்திற்கு வர சொன்னாங்க” என்றார்.

பேஷண்டின் பேரை எழுதிக் கொண்டு அவர்களை அமர சொன்னவள், டாக்டர் வரும் முன்பு அவரின் அறையை சுத்தம் செய்ய சொல்லி பைல்களை எல்லாம் டேபிளின் மீது வைக்க கூறினாள்.

அன்னை, தந்தையை அங்கே அமர வைத்துவிட்டு காரிடாருக்கு வந்து நின்று அங்கு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றிருந்தான் கார்த்தி. அவன் நின்றிருந்த இடத்திற்கு அருகில் லிப்ட் இருந்தது.

காரை பார்க் செய்துவிட்டு லிப்டில் ஏறிய மௌனிகா மூன்றாம் தளத்தை அழுத்திவிட்டு கடிகாரத்தை பார்த்தவண்ணம் யோசனையில் நின்றிருந்தாள். சரியாக லிப்டின் கதவு திறக்கவும், கார்த்தியின் மொபைல் இசைக்க ஆரம்பித்தது.

ரா! நாம பீச்சு பக்கம் போத்தாம்

ஒரு டப்பாங்குத்து வேஸ்தாம்

நீ என்னுடைய ரவுடி பேபி!

என்று அலற ஆரம்பித்தது.

அந்த பாட்டின் ஓசையில் அதிர்ந்தவள், அவனை முறைத்து “மிஸ்டர்! இது ஹாஸ்பிடல்! இங்கே இப்படி சத்தமா பாட்டை அலற விட்டிருக்கீங்களே?” என்றாள் சிடுசிடுவென்று.

அவளை பார்த்த பின்பு அதிர்ச்சியில் பாட்டை அனைக்காமல் திகைத்து விழித்து கொண்டு நிற்க பாட்டு நிற்காமல் அலறிக் கொண்டிருந்தது.

அதில் மேலும் கடுப்பானவள் கோபத்தோடு அதிக சத்தமில்லாமல் ஆனால் அழுத்தமாக “மிஸ்டர்! பாட்டை ஆப் பண்றீங்களா” என்றாள்.

அப்போது தான் தன்னை சுதாரித்துக் கொண்டவன் “மிஸ்! இது பாட்டில்ல. ரிங்க்டோன்!” என்று கூறிவிட்டு போனை காதில் வைத்து “சொல்லுடா மச்சி” என்று நண்பனுடன் பேச ஆரம்பித்தான்.

திரும்பி நின்று பேசியவனின் முதுகை முறைத்துவிட்டு கோபத்தோடு தனதறைக்குச் சென்றாள்.

அவள் அறைக்குள் சென்றமர்ந்ததும் ஏற்கனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருந்தவர்களை ஒவ்வொருவராக அனுப்ப ஆரம்பித்தனர்.

சுமார் அரைமணி நேரம் சென்றிருக்க, பொறுமையிழந்த கார்த்தி ரிஷப்ஷனிஸ்ட்டிடம் “மிஸ்! உங்க டாக்டர் எப்போ எங்களை பார்ப்பாங்களாம்” என்றான் சற்று கோபத்தோடு.

அவளோ சங்கடத்துடன் “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார். நான் டாக்டர் கிட்ட கேட்டுட்டு வரேன்” என்று உள்ளே சென்றாள்.

வேறொரு பேஷண்ட்டை பார்த்து முடித்துவிட்டு அமர்ந்தவளின் முன் சென்று நின்ற ரிஷப்ஷனிஸ்ட் “மேம்! உங்க ரிலேடிவ் வந்திருக்காங்க. ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க. அனுப்பலாமா?” என்றாள் மெல்லிய குரலில்.

சற்று அயர்ச்சியுடன் “ம்ம்..சரி! அவங்களை வர சொல்லு” என்றவள் எதிரே இருந்த கண்ணாடி தம்ளரில் இருந்து தண்ணீரை குடிக்க ஆரம்பித்தாள்.

அவள் ஒப்புக் கொண்டதும் மூவரும் அவளின் அறையை நோக்கி சென்றனர். அறைக் கதவை திறந்து கொண்டு முதலில் சென்ற காந்திமதியை தொடர்ந்து கடைசியாக நுழைந்தவனைக் கண்டதுமே முகத்தில் ஒருவித எரிச்சல் பரவ, அதை முகத்தில் காண்பிக்காது அமைதியாக பார்த்தாள்.

அப்போது மீண்டும் கார்த்தியின் மொபைல் அலற ஆரம்பித்தது.

மை டியர் மச்சான்

நீ மனசு வச்சா

நாம உரசிக்கலாம்

நெஞ்சு ஜிகு ஜிகுன்னு

என்று அவளது நெஞ்சை பற்றி எரிய வைத்தது.

“உங்க மொபைலை ஆப் பண்ணிட்டு இங்கே இருக்கிறதுன்னா இருங்க. இல்லேன்னா தயவு செஞ்சு வெளியே போயிடுங்க” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

சட்டென்று மொபைலை ஆப் செய்து வைத்துவிட்டு அவளை பார்த்தவன் ‘பெரிய இவன்னு நினைப்பு! தொமுகவுக்கே( இஎன்டி – தொண்டை மூக்கு காது) இத்தனை அலப்பறை! ‘ என்று கழுவி ஊற்றிக் கொண்டே அன்னையைப் பற்றி தந்தை சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான்.

அவர் சொல்வதை கேட்டுக் கொண்டே காந்திமதியை சோதித்துக் கொண்டிருந்தாள். தந்தை சொல்வதில் சமாதானம் அடையாதவன் தனது வழக்காமான பாணியில் அன்னை எப்பொழுதும் என்னென்ன செய்வார் என்பதையும் இப்போதிருப்பதையும் கூறி முடித்தான்.

அமைதியாக நாற்காலியில் நன்றாக சாய்ந்தமர்ந்து அவன் சொல்வதை முழுமையாக கேட்டுக் கொண்டவள் “நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?” என்றாள்.

சம்மதமில்லாத அவளது கேள்வியை கண்டு விழித்தவன் “ரேடியோ ஜாக்கி “ என்றான்.

கைகளை இறுக கட்டிக் கொண்டவளின் பார்வை ‘அதானே பார்த்தேன்!’ என்று கூறியது.

“நீங்க தினமும் இப்படித்தான் உங்கம்மா கிட்ட பேசுவீங்களா? உங்க போனில் எப்பவும் இவ்வளவு வால்யும் வைப்பீங்களா?” என்றாள் நக்கலாக.

“என்ன சொல்றீங்க?” என்றவனை தடுத்தவள் “நீங்க கொஞ்ச நாளைக்கு பேசாம இருந்தாலே உங்கம்மாவுக்கு காது கேட்கும்னு தோணுது” என்றாள் அமைதியாக.

-சுதா ரவி.
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 2மௌனிகா சொன்னதைக் கேட்டதும் கடுப்பான கார்த்தி, “காது கேட்கலைன்னு உங்ககிட்ட வந்தா, பேஷன்ட் கூட வரவங்களை ஊமையாக்கி வீட்டுக்கு அனுப்புவீங்களா? ‘ஒன்னு வாங்கினா ஒன்னு ப்ரீ!’ இந்த கான்செப்ட் இப்போ ஹாஸ்பிடல்ல கூட ஃபாலோ பண்றீங்களா!”என்றான் கொஞ்சம் கோபமாக.

அது ஏனோ தெரியவில்லை மௌனிகாவிற்கு கார்த்திக்கை பார்த்த முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை. பிடித்தம் மட்டும் அல்ல.. பிடிக்காமையும் சிலருக்கு முதல் பார்வையிலேயே மின்னலாய் சட்டென்று வந்துவிடுகிறது.

இவள் முதலில் பார்த்தபோது, அவன் போனில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலா... அல்லது எப்போதும் நம் உள்ளுணர்வு பல நேரங்களில் நம்மை வழிநடத்துமே, அதைப்போன்று இவனால் இனி தொல்லைகள் வர வாய்ப்புக்கள் அதிகம் என்ற எண்ணம் தோன்றியதாலா.... எதனாலோ மௌனி, கார்த்திக்கை தன்னிடமிருந்து தள்ளியே வைக்க முடிவெடுத்தாள். இவளின் முடிவை அவ்வளவு சுலபத்தில் முடிக்க விட்டுவிடுவானா இவன்!

கார்த்திக்கின் கேள்வியில் எரிச்சலான மௌனி, ”பேஷன்ட்க்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் போது ஒருத்தர்தான் கூட இருக்கனும்.நிறைய பேர் இருந்து சும்மா சின்னபிள்ளைதனமா நச்சு பண்ணிட்டு இருந்தா என்னால வேலை செய்ய முடியாது!” என்றாள்.

‘கபாலத்தை ஓபன் பண்ணி ரிஸ்க்கான ஆபரேஷன் செய்யப்போறதைபோல பில்டப்பை பாரேன்! காதுல ஒரு மெஷினைமாட்டி என்னோட ஒரு மாச சம்பளத்தை பிடுங்க போறதுக்கு இவ்வளவு அலட்டல் ஆகாது சாமி! என்னை வெளியே விரட்டிவிட நீங்க போடற ப்ளானை எக்சிக்யுட் பண்ணவிட்டா என்னோட கெத்து என்னாகறது மிஸ்.தொமூகா?’ சிலிர்த்தவன்,

“அப்பா! நான் அம்மாகூட இருக்கேன் நீங்க வெளிய போறீங்களா... இல்ல, இல்ல. நீங்க வெளிய எல்லாம் போகவேண்டாம். நீங்க தான் சின்னபிள்ளைதனமா நச்சு பண்ணமாட்டீங்களே.... அதனால நீங்களும் இருக்கலாம். நோ ப்ராப்ளம்!” என்றான் பெருந்தன்மையாய்!

“சார்! நீங்க பேஷன்ட் கூட இருங்க!” என மாறனிடம் சொன்னவள், கார்த்திக்கிடம் ‘நீ வெளியே போ!’ என்றாள் பார்வையில்.

‘நானெல்லாம் மூஞ்சிக்கு நேரா வெளிய போன்னு சொன்னாலே அதை கொஞ்சம் கூட ரோஷம் இல்லாம ஒரு காதுல ப்ரீ என்ட்ரி கொடுத்து அடுத்த காதுல எக்சிட் பண்ற ஆளு. என்கிட்டயேவா? ’ என தன் திறமையை தற்பெருமையாய் எண்ணியவன்,

“நீங்க இங்க இருக்கறதுல மேடம்க்கு எந்த அப்ஜெக்ஷனும் இருக்காதுன்னு நான் தான் சொன்னேனே அப்பா!” என தந்தையிடம் சொன்னவன்,

“ஓகே மேடம்! நீங்க உங்க ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணுங்க.உங்க எல்லா கேள்விக்கும் நான் மட்டும்தான் பதில் சொல்வேன். இடையில எங்க அப்பா ஒன்னும் பேசமாட்டார்” என மாறனுக்கு க்யாரண்ட்டி கொடுத்தான்.

கார்த்திக்கின் வளவளப்பில் கடுப்பானவள்,”அங்கிள்! உங்க சன்னை வெளிய போகச் சொல்றீங்களா, ப்ளீஸ்... எனக்கு அடுத்த அப்பாயின்மென்ட்க்கு டைம் ஆகுது!” என்றாள் ஒரு மன்றாடல் பார்வையை மாறனிடம் செலுத்தி.

மௌனிகா தன் மகனின் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியே போக சொல்வதை பார்த்ததும், இங்கே வருவதைப்பற்றி அன்று பேசும் போது மகன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அழைக்காமலேயே அவரின் நினைவுக்கு வந்தது.அதனால் வந்த நமுட்டு சிரிப்புடன் அவர் மகனைப் பார்க்க, அவனும்அதே நினைவில் தான் தந்தையை முறைத்துக்கொண்டிருந்தான். என்ன ஆனாலும் சரி இங்கிருந்து நகரப் போவதில்லை என்ற முடிவுடன் கார்த்தி வாயை திறக்க,

அதுவரை அங்கு நடந்துக்கொண்டிருந்த பேச்சுவார்த்தைகள் சரிவர கேட்காத போதும் அங்குள்ளவர்களின் உடல் மொழியில் நடந்துக்கொண்டிருப்பதை புரிந்துக்கொண்ட காந்திமதி, “கார்த்திம்மா! அம்மா கூட அப்பா இருக்கட்டும்பா. நீ வெளிய இரு!” என்றார் தன் குரலில் கெஞ்சலையும் கொஞ்சலையும் கலந்து.

அன்னையின் பார்வையும் குரலில் வெளிவந்த அதே உணர்வை வெளிக்காட்டவே விருப்பமின்றி அவ்விடம் விட்டு வெளியேறினான் கார்த்திக்.

அன்று மாறன் இஎன்டி டாக்டரின் பெயராய் ஒரு பெண்ணின் பெயரை சொல்லவும் முகம் சுருக்கியவன்,

“அப்பா! இவ்வளவு பெரிய ஊர்ல உங்களுக்கு ஒரு பொண்ணு இஎன்டி தான் கிடைச்சாங்களா? அந்த பொண்ணுக்கு என்ன வயசுப்பா இருக்கும்?” என்று அவர்களின் பிரச்சனைக்கு சம்மந்தமில்லாத ஒரு கேள்வியை எதையோ யோசித்துக்கொண்டே கேட்டான்.

“என்னப்பா.. ஒரு இருபத்தியாறு இருக்குமா? சரியா தெரியலையேப்பா! அது ஏன் உனக்கு?” என சந்தேகமாய் மகனை பார்த்தார் மாறன்.

வயதைக் கேட்டதும் “சின்ன வயசு பொண்ணுன்னா இன்னும் பிரச்சனை அதிகம் பா!” என்றான் சீரியஸ்சாக.

“அப்பா... கார்த்தி! சத்தியமா நீ என்ன சொல்ல வரன்னே எனக்கு புரியலை ராசா! நீ எப்பவும் ரேடியோல பேசறதை போல பேசாம கொஞ்சம் புரியறாப்போல பேசுப்பா.உனக்கு புண்ணியமா போகும்” என்றார்.

அழுதுவிடுவதைபோல நின்றுக்கொண்டிருந்த மாறனை பார்த்தவன் இதற்கும் மேல் அவரை மண்டை காயவிடவேண்டாம் என்ற நல்லெண்ணத்தில்,

“என்னைப் பார்க்கவும் என்கிட்டே வழியவும் தான்பா அந்த இஎன்டி பொண்ணுக்கு நேரம் சரியா இருக்கும். அப்புறம் அவங்க எங்க அம்மாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து, சரிபண்றது? இதெல்லாம் வேலைக்கு ஆகாதுப்பா. வேற நல்ல இஎன்டியை நானே பார்க்கிறேன்பா!” என்றான் கறாராய்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“என்ன கார்த்தி விளையாடறியா? நான் அந்த பொண்ணுகிட்ட எல்லா விஷயமும் பேசி, அப்பாயின்மென்ட் வாங்கின பிறகு இப்ப வந்து இப்படி சொல்ற” கோபத்தில் பொரிந்தார் மாறன்.

“அப்ப நான் உங்க கூட ஹாஸ்பிடல் வரமாட்டேன்! எங்க போனாலும் இந்த பொண்ணுங்க பல்லை இளிச்சிக்கிட்டு பக்கத்துல வருவதை பார்த்து பார்த்து எனக்கு ஒரே எரிச்சலா இருக்குப்பா!” என்றவனைப் பார்த்த மாறன்,

“ஏன்பா... நீ என்ன அம்புட்டு பெரிய அப்பாடக்கரா?” உண்மையான ஆச்சரியத்தில் வாயை பிளந்தார்.

“பின்ன! இல்லையாப்பா? இப்போ எல்லா சோசியல் மீடியாவிலும் என்னை போல ஆர்ஜேஸ் பாப்புலர். எல்லா டீவி சேனல்களும் எங்களை வெளிச்சம் போட்டு காட்டுது.நான் வேற அந்த டிவியில ஒரு ஷோக்கு ஆங்கரா இருக்கேன் இல்லப்பா. அதனால போற இடத்தில் எல்லாம் பத்து பேராவது சூழ்ந்துக்கறாங்கபா. பல சமயம் பேமஸ்ஸா இருக்கறது பெருமையா இருந்தாலும் சில சமயம் சிலர் மேலவந்து விழுந்து பிடுங்கும் போது கொஞ்சம் வெறுப்பா தான்-ப்பா இருக்கு!” என்றவனின் வார்த்தைகளில் உண்மை இருந்ததால் அவனை ஏதும் எதிர்த்து பேசாது,

“இந்த பொண்ணுக்கிட்ட பேசும் போது அப்படி எல்லாம் மேல விழற டைப் போல தெரியல கார்த்தி. கட்டன்ரைட்டா பேசனதை போலதான் இருந்தது” என்றார்.

“உங்கமேல ஏன்ப்பா விழப்போறாங்க? என்னைப் பார்த்ததும் நிச்சயமா அதெல்லாம் நடக்கும்.அதனாலதான் நான் வரலைன்னு சொல்றேன்!” என்றவனிடம் அதற்க்கு மேல் வாதாட முடியாத மாறன் அவனிடம் சரியென சொல்லி தங்களின் அறைக்கு சென்றார்.

அதன் பிறகு ஹாஸ்பிடலுக்கு கிளம்பும் அன்று அன்னையை தந்தையுடன் தனியே அனுப்ப மனமில்லாத கார்த்திக், ’எவ்வளவோ பார்த்துட்டோம்! இந்த இஎன்டியை பார்க்க மாட்டோமா? நம்மை பார்த்ததும் கொஞ்சம் வழியறதை போல தெரிந்தால்... மூக்கை அப்படியே கட்பண்ணி விட்டுடலாம். அவங்கதான் தொமூகா ஆச்சே. மூக்கை என்னமோ செய்து சரி பண்ணிக்கட்டும்’ என எண்ணி அவர்களுடன் கிளம்பினான்.

இவன் நினைத்து வந்ததென்ன.. இங்கே நடப்பதென்ன...

மனதின் புழுக்கம், திரும்பும் திசையெங்கும் வீசிக்கொண்டிருந்த ஏசிக்காற்றை கூட உணரமுடியாது செய்தது. வெளியே வந்தவனால் அமைதியாக ஒரு இடத்தில் அமர முடியவில்லை.அவனின் இந்த ஐந்து ஆண்டு ஆர்ஜே வாழ்க்கை வரலாற்றில் இப்படி அவனை யாரும் நடத்தியதில்லை.இது வரை போகும் இடமெல்லாம் யாரவது அவனை அடையாளம் கண்டு அவனிடம் பேசவோ செல்பி எடுக்கவோ ஆர்வம் காட்டுவதையே பார்த்து பழகிவிட்டவனுக்கு மௌனியின் ‘எட்டி நில்லு எச்சரிக்கிறேன்!’ என்ற நடவடிக்கை அவனின் ஈகோவை சீண்டி வீறுகொண்டெழ வைத்துவிட்டது.

யாரென தன்னை அடையாளம் கண்டுக்கொண்டு தவிர்க்கிறாளா.. இல்லை தான் யார் என்றே தெரியாது இருக்கிறாளா... என்று குழம்பிப்போனான்.எதுவாக இருந்தபோதும் மௌனியின் ஒதுக்கம் இவனை அவளிடம் நெருங்க சொல்லியது.

முதன் முதலில் பார்த்த போது அவளின் கண்களில் ஒரு ஆச்சரியம்... பிரம்மிப்பு... இப்படி ஏதோ ஒன்று சில வினாடிகள் தோன்றி மறைந்திருந்தாலும் சும்மா இருந்திருப்பானோ என்னமோ, ஆனால் ஒரு ஹான்சம் பிகரை பார்த்ததும் தோன்றும் ஒரு சாதாரண பளிச் கூட அவள் கண்ணில் இல்லாது போகவே அவளை எப்படியேனும் தன்னை கவனிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தான்.

தள்ளிவைக்க அவள் முடிவெடுக்க, தன்னையே நினைக்கவைக்க இவன் முடிவெடுக்க... யாரின் முடிவு இறுதியில் வெற்றிப்பெறப்போகிறதோ?

அனைத்து பரிசோதனைகளும் முடித்து மாறன் தம்பதியினர் வெளியே வரவும் அடுத்த பேஷன்ட் உள்ளே செல்வதற்கு முன்,

“எக்ஸ்கியூஸ்மி!” என மௌனியிடம் சென்று நின்றான் கார்த்திக்.

திடீரென உள்ளே வந்து நின்றவனை புரியாது பார்த்தவளிடம்,”பேஷன்டை எக்ஸாமின் பண்ணும் போதுதான் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. இப்போ நான் பேசலாம்ல்ல?” என்றான்.

‘இனி பேச என்ன இருக்கு?’ என்று நெற்றியை சுருக்கியவள்,”நான் எல்லாத்தையும் உங்க அப்பாகிட்ட தெளிவா சொல்லிட்டேன்” என்று தன் பேச்சை சுருக்கி, அவனின் வெளிநடப்பிற்க்கு காத்திருப்பதை கண்ணில் காட்டினாள்.

தன் பேச்சை பெரிய கத்தரிக்கோல் கொண்டு அப்படியே வெட்டிவிட எண்ணுபவளைப் போல பேசியவளை,’ நான் பேசமாட்டேனான்னு அவனவன் மணிக்கணக்கா போனில் தவமிருக்கான். உனக்கு என் பேச்சைக்கேட்க கசக்குதா? அதுக்கு நான் ஒன்னும் செய்யமுடியாது. நான் பேசித்தான் ஆவேன், நீ அதைக் கேட்டுதான் ஆகனும்’ எண்ணிக்கொண்டே அவளைப் பார்த்தவன்,

“நீங்க தெளிவா சொல்லிட்டீங்க.ஆனா அதை அவர் எனக்கு தெளிவா சொல்லனுமில்ல.அது அவரால முடியாத காரியம். அதனாலதான் நான் அம்மாகூட இருக்கேன்னு சொன்னது.நீங்க அது தெரியாம என்னை வெளிய அனுப்பினதால இப்ப நீங்க மறுபடியும் எனக்கு எல்லாத்தையும் தெளிவா சொல்லிடறீங்களா?” என படுபவ்யமாய் கேட்டான்.

நோயாளிகளின் நிலையைபற்றி அவர்களின் உறவினர்கள் கேட்கும் போது, ஒரு மருத்துவராய் சொல்லமாட்டேன் என்று மறுக்கமுடியாத காரணத்தால்,”அம்மாக்கு சில டெஸ்ட் பண்ண சொல்லியிருக்கேன். இன்னும் ஒரு மூனு நாலு சிட்டிங் வந்தாதான் அவங்க ப்ராப்ளம் என்னன்னு ஒரு முடிவுக்கு வரமுடியும். சோ டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் வர சொல்லியிருக்கேன்” என செய்தி வாசிப்பவளை போல சொல்லி முடித்தாள்.

‘காது கேட்காததுக்கு என்ன டெஸ்ட் பண்வாங்க? அதுதான் நாம பேசும்போதே அவங்களுக்கு சரியாய் கேட்கலைன்னு தெரியுதே. இன்னும் என்ன டெஸ்ட் செய்வாங்க? அதுக்கு பிறகு மூனு நாலு சிட்டிங்கா... எல்லாம் காசுக்குதான். இவங்க சம்பாரிக்க நம்மை அலையவிடுவாங்க’ நினைத்தவன்,

“இன்னைக்கே காது மிஷினை மாட்டிவிட்டுட்டா போதாதா? அதுக்கு எதுக்கு எங்களை அலைய விடனும்?” மனதின் எரிச்சலை அப்படியே குரலில் காட்டினான்.

‘ஏன் எதுக்கு காது கேட்கலைன்னு கண்டுபிடிக்காம காதுல மெஷினை மாட்டிட்டா போதுமா? படிச்ச முட்டாள்! என எண்ணியவள், ”அப்படியெல்லாம் செய்ய முடியாது சார். எல்லாத்தையும் ப்ரோசிஜெர் படித்தான் செய்யனும்” என்றாள்.

“அதான்... அந்த ப்ரோசிஜெர்ஸ் தான் என்னன்னு கேட்கறேன்?” என்றான் இவனும் விடாப்பிடியாக.

“நீங்க இஎன்டி ஸ்பெஷலிஸ்ட்டா சார்?”

“ஹோ... ஸ்பெஷலிஸ்ட் கிட்டதான் பேசுவீங்களோ?”

என்ன சொன்னாலும் புரிந்துக்கொள்ளாது பேச்சை வளர்பவனை என்னதான் செய்வது எனப் பார்த்தவள்,

”அடுத்த பேஷன்ட்க்கு டைம் ஆகுது, ப்ளீஸ்... நீங்க என்ன கேட்கறதா இருந்தாலும் ரிஷப்ஷன்ல கேட்டுக்கோங்க.ப்ளீஸ்...” என்றாள்.

தங்களுடைய அப்பாயின்மென்ட் நேரம் வரும்வரை தான் கடுப்புடன் அமர்ந்திருந்தது இவனுக்கு நியாபகம் வர, தன்னைப்போல அடுத்தவர் அந்த கடுப்பை அனுபவிக்கக்கூடாது என எண்ணியவன்,

“ஓகே மிஸ்.இஎன்டி! மீண்டும் சந்திப்போம்!அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் கார்த்திக்!” என்று தன் வழக்கமான ஆர்ஜே ஸ்டைலில் விடைப்பெற்றான்.

‘இனிமே எங்க அம்மாகூட நான் தான் வருவேன். அப்ப நீ என்கிட்டே பேசித்தானே ஆகனும். அப்போ எப்படி என்னை நீ அவாய்ட் பண்றேன்னு பார்க்கிறேன்! பேசி பேசியே உன்காதுல ப்ராப்ளம் வரவைக்கல என் பெயர் கார்த்தி இல்ல! ’

‘உங்கள் கார்த்திக்....’ அவன் என்னமோ அதை யதார்த்தமாகத்தான் சொன்னான். ஆனால் அதை கேட்டவளுக்கு அது மனதின் வழியே நுழைந்து காதில் ரீங்காரித்துக் கொண்டே இருந்தது.

இனிமே தான் காதுல ப்ராப்ளம் வரவைக்க போறேன்னு அவன் அங்க சபதம் எடுக்கிறான். ஆனா இங்க ஆல்ரெடி இவளுக்கு வந்தாச்சு. இப்ப இவ காதுக்கு எங்க போய் வைத்தியம் பார்க்கறது!- ராஜேஸ்வரி சிவகுமார்!
 
  • Love
Reactions: Chitra Balaji
Need a gift idea? How about some novelty socks?
Buy it!