மாயா- கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
அத்தியாயம் - 13

பரபரப்பான மனநிலையுடன் இரண்டு நாட்களை கடத்துவது, பெரிதும் சிரமமாக இருந்தது மாயாவிற்கு. அவனை நேருக்கு நேராக எதிர்கொள்ள வேண்டியிருந்த தயக்கமே, அவளது இரண்டு நாள் அவகாசத்திற்கான காரணம். வீம்பிற்குச் சொல்லிவிட்டு, திக்திக்கென்ற மனநிலையுடன் இருப்பது அவஸ்தையாக இருந்தது.

மூன்றாம் நாள் காலையில் எழுந்தவளுக்கு, என்ன காரணம் சொல்லிவிட்டு தந்தையிடம் அரை நாள் விடுப்பு எடுப்பது? என்று கவலை ஏற்பட்டது. அப்படியே அவரிடம் ஏதேனும் சொல்லி விடுமுறை எடுத்துவிட்டாலும், என்னவென்று சொல்லி அவனிடம் பேசுவது? அதை, எப்படி எடுத்துக் கொள்வான்?

அவன் பேச வந்தபோது, முகத்திலடித்தைப் போல பேசிவிட்டு வந்ததைப் போல ஏதேனும் சொல்வானா? அன்றி, பேசுவானா? அவனிடம் பேசவேண்டும் என்று எண்ணினாலே நெஞ்சம் படபடக்கிறது. இதில் எப்படி அவனது கண்களைப் பார்த்து எல்லாவற்றையும் பேசுவது?’ என்று புரியாமல் குழப்பத்தினூடே காலை வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.

டைனிங் ஹாலுக்கு வந்தவள் அமைதியாக அமர, “குட் மார்னிங் மாயா” என்ற தந்தையின் குரலில் நினைவுலகிற்கு வந்தாள்.

“ஆஹ்! குட்மார்னிங் அப்பா” என்றவள், தட்டை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள். இரண்டு இட்லியை எடுத்து வைத்தவள், ஜக்கிலிருந்த தண்ணீரை கண்ணாடி டம்ளரில் ஊற்றாமல் தட்டில் ஊற்றினாள்.

மகளையே பார்த்துக் கொண்டிருந்த விஸ்வநாதன், “மாயா!” என்று அழுத்தமான குரலில் அழைத்தார்.

“ஆஹ்! அ.ப்.பா” என்றபடி நிமிர்ந்தாள்.

“என்னாச்சு உனக்கு? நேத்துல இருந்தே நீ ஆளே சரியில்ல” என்றார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லயே” என்றாள் பதட்டத்துடன்.

“டாக்டர்கிட்டப் போய்ட்டு வருவோமா?” என்று கேட்டார்.

“ஏம்ப்பா?” என்று திருதிருவென விழித்தாள்.

“என்ன செய்து வச்சிருக்க?” என்றார்.

குனிந்து தட்டைப் பார்த்தவள், ‘தான் செய்திருக்கும் செயலிற்கு என்ன சொல்லிச் சமாளிப்பது?’ எனப் புரியாமல் தவிப்புடன் பார்த்தாள்.

திரும்பி, “கிருஷ்ணம்மா! பாப்பாவுக்கு வேற ப்ளேட் கொண்டு வாங்க” என்று குரல் கொடுக்க, கிருஷ்ணம்மா வேறு தட்டுடன் வந்தார்.

அவர் டிஃபனை பரிமாறி விட்டுச் செல்லும் வரை, மௌனமாக இருந்த விஸ்வநாதன், “நீ இன்னைக்கு ஆஃபிஸ் வரவேணாம். சாப்டுட்டு ரெஸ்ட் எடு. சரண்யா வீட்லயிருந்தா வரச் சொல்லட்டுமா?” எனக் கேட்டார்.

“இல்லப்பா! வேணாம்” என்றாள்.

சாப்பிட்டு முடித்தவர், “முடிச்சிட்டு என் ரூமுக்கு வா” எனச் சொல்லிவிட்டுச் செல்ல, அவளுக்கு உள்ளுக்குள் உதறலெடுத்தது.

தந்தை சம்மதிக்க மாட்டார் என்ற அவநம்பிக்கை அவளுக்குச் சிறிதும் இல்லை. அவர் தகுதி பார்க்கும் ஆள் அல்ல. ஆனால், அவனது திறமையைச் சோதிப்பார். பாரம்பரியத்தைக் கேட்பார். நிச்சயம் சத்ய பிரகாஷை அவருக்குப் பிடிக்கும் என்று தெரியும்.

அதேநேரம், ‘தனக்கான வாழ்க்கைத் துணையை மகளே தேர்ந்தெடுத்துக் கொண்டாளே’ என்று வருத்தம் ஏற்படுமே என்ற அச்சம் தான் அவளுக்கு இருந்தது.

அறைக்கு வந்தவளை தன் அருகில் அமரவைத்து தலையைத் தடவிக் கொடுத்தவர், “என்ன குழப்பம் உனக்கு?” என்று அன்புடன் கேட்டார்.

அவள் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருக்க, “அப்பாகிட்டச் சொல்ல முடியாத விஷயமா?” என்று கேட்டார்.

இல்லை என்று தலையை அசைத்தவள், தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

“ஈவ்னிங் வரை டைம் கொடுங்கப்பா. ப்ளீஸ்” என்றாள்.

அவளையே இமைக்காமல் பார்த்தவர், “வெளியே போறதுன்னா நீ ட்ரைவ் பண்ணாத. செல்வத்தை அழைச்சிட்டுப் போ. நான் கிளம்பறேன்” என்றவர் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் செல்ல, அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது.

‘ஒரு வழியாக தந்தையிடமிருந்து உத்தரவு கிடைத்துவிட்டது. தனது மனநிலைக்கான காரணம் அவருக்குப் புரிந்திருக்கும். இனி, எல்லாம் தன் கையில் தான் இருக்கிறது’ என்று எண்ணிக்கொண்டு தனது அறைக்குச் சென்றாள்.

போனை எடுத்து, அவனது சென்னை அலுவலக கெஸ்ட் ஹவுஸிற்கு அழைத்தாள்.

*****************​

“சத்யா எப்படி இருக்க?” என்ற அன்னையின் விசாரணைக்கு, “நல்லா இருக்கேன்ம்மா! நீங்க எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தான்.

“நல்லாயிருக்கேன்ப்பா. இன்னைக்கு, அம்பாசமுத்திரம் வரேன்னு சொன்னியே?”

“ஆமாம்மா. ஆஃபிஸுக்கு லீவ் சொல்லிட்டேன். காலைல ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதையும் முடிச்சிட்டு, ஈவ்னிங் ட்ரெய்ன்ல கிளம்பிடுவேன்” என்றான்.

“சரிப்பா. நீ வந்ததும் பவித்ராவுக்கு வந்த வரனைப் போய்ப் பார்த்துட்டு வந்திடலாம்” என்றார்.

“எனக்கு என்னம்மா தெரியும்? நீங்க போய்ப் பார்த்துட்டு வாங்க” என்றான்.

“அதுவும் சரிதான். ஆனா, நீ வந்தா மாப்பிள்ளைப் பையனைக் கொஞ்சம் விசாரிப்ப. உனக்கு ஒரு ஒபீனியன் கிடைக்குமில்ல. எனக்கு இந்த வேலையைப் பத்திலாம் அவ்வளவா தெரியாதே. அவளை ஒரு நல்ல இடத்துல கட்டிக் கொடுத்துட்டா, நம்ம கடமை முடிஞ்சிடும்” என்றார்.

அவரது குரலில் கவலையுடன், செய்து முடிக்க வேண்டும் என்ற வைராக்கியமே தெரிந்தது.

“சரிம்மா. நான் வந்தது போய் வரலாம்” என்றான்.

“நீ பத்திரமா கிளம்பி வா. இங்கேயிருந்து, திரும்பச் சென்னை போகணுமா?”

“ஞாயிற்றுக் கிழமை நைட் அங்கேயிருந்து கிளம்பிடுவேன். திரும்ப புதன்கிழமை ஹைட்ராபேட் கிளம்பணும்” என்றான்.

“ட்ரெயின் ஏறினதும் எனக்கு ஒரு கால் பண்ணிடு. வைக்கட்டுமா?” எனக் கேட்டார்.

சரியென்று போனை வைத்தான்.

திருமணம் என்றதும், அவனுக்கு மாயாவின் நினைவு வந்தது. பவித்ராவின் திருமணம் முடிந்ததும், மாயாவைப் பற்றி அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவனது நினைவுகளைக் கலைப்பதைப் போல, அறையிலிருந்த தொலைபேசி ஒலித்தது.

“சார்! உங்களுக்கு ஒரு கால் வந்திருக்கு. மாயா விஸ்வநாதன்னு சொன்னாங்க” என்றார் ஆபரேட்டர்.

‘மாயாவா! என்னடி இப்படியெல்லாம் அதிர்ச்சி கொடுக்கற? திடீர்ன்னு வெயிலா காயற. எதிர்பார்க்காத நேரத்துல மழையா பொழியற’ என்று நினைத்துக் கொண்டு, “கனெக்ட் பண்ணுங்க” என்றான்.

“மேடம்! சார் லைன்ல இருக்காங்க பேசுங்க” என்றார் ஆப்பரேட்டர்.

ஹலோ என்றவளுக்கு, வார்த்தைகள் வராமல் காற்று தான் வந்தது.

அவளது தவிப்பை நினைத்து மனத்திற்குள் சிரித்துக்கொண்டு, “ஹலோ!” என்றான்.

இதற்கு மேலும் வாயை மூடிக்கொண்டிருந்தால் வேலையாகாது என்று எண்ணிச் சிரமப்பட்டு, “நா..ன் மா..யா!” என்றாள்.

உதட்டில் மலர்ந்த புன்னகையை மறைத்துக் கொண்டு, “சொல்லுங்க” என்றான்.

உதட்டை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு, “உங்ககிட்டப் பேசணும். அந்தக் காஃபி ஷாப் வரமுடியுமா? ஒரு ஹால்ஃப் அன் ஹார்…” என்றாள் தவிப்புடன்.

“என்ன விஷயமா?” என்றான் வேண்டுமென்றே.

“நேரில் சொல்றேனே” என்றாள்.

“போன்லயே இப்படித் தயங்கித் தயங்கிப் பேசறீங்க. நேர்ல எப்படி?” என்றவனுக்குப் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.

“ஹலோ இருக்கீங்களா?” என்றான்.

“ப்ளீஸ்!” என்றவளுக்குத் தொண்டை அடைத்தது.

“ஓகே! ஷார்ப்பா பதினோரு மணிக்கு வந்திடுறேன்” என்றதும் அவசரமாக, “தேங்க்ஸ்” என்று சொல்லி போனை வைத்தாள்.

பத்தரை மணிக்கெல்லாம், அந்தக் காஃபி ஷாப்பிற்குள் நுழைந்தவள், மூலையிலிருந்த டேபிளில் சென்று அமர்ந்தாள். பத்து நிமிடங்களைக் கடத்துவதே பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. அவளை வெகுநேரம் காக்க வைக்காமல், அடுத்த ஐந்து நிமிடங்களில் காஃபி ஷாப்பினுள் நுழைந்தான் சத்ய பிரகாஷ்.

அடர் நீல நிறச் சட்டையும், மணல் வண்ணப் பேன்ட்டும் அவனது கம்பீரத்திற்கு மேலும் அழகூட்டியது. தன்னைப் பார்த்துக் கொண்டே வந்தவனைக் காணவே தடுமாற்றமாக இருந்தது.

‘இந்த லட்சணத்தில் எப்படிப் பேசப் போகிறோம்’ என்று யோசிக்கும் போதே கண்ணைக் கட்டியது.

“ஹாய்! என்றபடி அவளெதிரில் வந்து அமர, “ஹாய்” என்றாள்.

வெயிட்டரை அழைத்து இருவருக்குமாக ஆர்டர் செய்தவன், “சொல்லுங்க என்ன பேசணும்?” என்று கேட்டான்.

சிறிதும் யோசிக்காமல், “ஐயம் சாரி” என்றாள்.

ஆச்சரியத்துடன், “எதுக்கு?” என்று கேட்டான்.

“அ..அது அன்னைக்கு நீங்க பேச வந்தப்போ…” என்று நிறுத்தியவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளுக்கு உள்ளுக்குள் எரிச்சலாக வந்தது. ‘கொஞ்சமாவது ஆமாம், அப்படியா! என்று ஏதாவது சொல்கிறானா பார்?’ என்று கடுகடுத்துக் கொண்டாள்.

அதற்குள், அவர்கள் ஆர்டர் செய்த காஃபி வந்துவிட அதைப் பருகியபடி, “ஓஹ்! அதுக்குத் தான் சாரியா? இட்ஸ் ஓகே. ஆக்சுவலி, இதே சாரியைக் கேட்கத்தான் அன்னைக்கு உங்ககிட்டப் பேச வந்தேன். ஆனா…” என்று புன்னகைத்தான்.

“எனக்கு எதுக்கு சாரி?” என்று கேட்பது அவளது முறையாயிற்று.

“முதல் தடவை பேச வந்தப்போ, உங்களைப் பேசவே விடாம நானே பேசிட்டு போய்ட்டேனா. அது தப்புன்னு அப்புறம் தான் பீல் பண்ணேன். அதுக்குத் தான் அந்தச் சாரி” என்றான் விவரமாக.

மிருதுவாகப் புன்னகைத்தவள், “அன்னைக்கு என்ன சொல்ல வந்தேன்னு இப்போ, கேட்க மாட்டீங்களா?” என்று கேட்டாள்.

யோசிப்பதைப் போல தாடையைத் தடவிக் கொண்டவன், “இப்போ அதுக்கு அவசியம் இல்ல. நான் சாரி சொல்ல நினைச்சேன். சொல்லிட்டேன்” என்று தோளைக் குலுக்கினான்.

“அப்போ, சாரி சொல்லத் தான் என்கிட்டப் பேச வந்தீங்களா?” என்று கேட்கும் போதே கண்ணோரம் கரிக்கத் துவங்கியது.

“ம்ம், ஆமாம்” என்று மீண்டும் தோளைக் குலுக்க, அவளது கண்கள் சட்டெனக் கண்ணீரைப் பொழிந்தன.

“எனக்காக, இவ்வளவு தூரம் சிரமம் பார்க்காமல் வந்ததுக்கு ரொம்பத் தேங்க்ஸ்!” என்றபடி எழுந்து அவனைக் கடந்தவளின் கரத்தைப் பற்றினான்.

அவள் கையை விடுவித்துக் கொள்ள முயல எழுந்தவன், “என் அழகான ராட்சஷியே! நான் உன்னை மனதாரக் காதலிக்கிறேன்” என்று அவள் காதோரம் கிசுகிசுக்க, விழிகள் விரிய அவனைப் பார்த்தாள்.அத்தியாயம் - 14

‘அவன் சொல்வது உண்மைதானா? இதெல்லாம் நிஜம் தானா?’ என்று புரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு அவள் நின்றிருக்க, “மாயா!” என்று அழைத்தான்.

அதற்குள் தன்னைச் சுதாரித்துக் கொண்டவள், “கையை விடுங்க” என்றாள் எரிச்சலுடன்.

“ஏன்? அதான் எல்லாம் சரியாகிடுச்சி இல்ல” என்றான்.

“எல்லாத்துக்கும் எனக்கு விளக்கம் கொடுக்கணும். அது தெரியாம என் கையைப் பிடிக்கக் கூட அனுமதிக்க மாட்டேன்” என்றவள் அவனிடமிருந்து கரத்தை இழுத்துக்கொண்டு ஏற்கெனவே அமர்ந்திருந்த இடத்தில் சென்று அமர்ந்தாள்.

அவளது கோபம் புரிய, “உனக்கு எல்லா விளக்கமும் கொடுக்கிறேன். ஆனா, இங்கே வேண்டாம். வெளியே போய்ப் பேசுவோம். என்னை நம்பி வரலாம்” என்றான்.

அவனை முறைத்தவள், “அநாவசியமா பேசாதீங்க” என்றவள் விறுவிறுவென வெளியே நடக்க, பணத்தைக் கொடுத்துவிட்டு அவனும் வெளியே வந்தான்.

அவன் வெளியே சென்றபோது, அவள் தனது டிரைவரிடம் காரை எடுத்துச் செல்லும்படிக் கூறிக்கொண்டிருந்தாள்.

“நான் பைக்ல தான் வந்திருக்கேன். பரவாயில்லையா?” என்று கேட்க, மீண்டும் அவனை முறைத்தாள்.

“வாழ்க்கையையே உன்னை நம்பி ஒப்படைக்கிறேன். உன்னோட வரமாட்டேனான்னு நீ கேட்காம கேட்கறது புரியுது” என்று அவன் பாவனையுடன் சொல்ல, இழுத்துப் பிடித்து வைத்திருந்த பிடிவாதத்தையும் மீறி, அவளுக்குப் புன்னகை அரும்பியது.

“தட்ஸ் பெட்டர். வா வா” என்றவன் அருகிலிருந்த காரை நோக்கி நடந்தான்.

எதுவும் சொல்லாமல் அவனைப் பார்க்க, “சும்மா” என்று கண்களைச் சிமிட்டியபடி கார்க் கதவைத் திறந்துவிட்டான்.

சற்றுநேர இருவருமே எதுவும் பேசவில்லை. மெல்ல அவனே ஆரம்பித்தான்.

“உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் மாயா! திடீர்ன்னு இல்ல. அவினாஷ் அப்பப்போ உன்னைப் பற்றிப் பேசுவான். அவனோட ஃபேமலி போட்டோஸ்ல, உன்னைப் பார்த்திருக்கேன். நேர்ல பார்த்தது அன்னைக்குத் தான்.

அப்போ உன்னைப் பிடிச்சிருந்தது. அவ்வளவு தான். நீ என்கிட்டப் பேச வந்தபோதும் ஈர்ப்போ, காதலோ நிச்சயமா இல்ல. அவினாஷ் மூலமா நீ என்னை வரவச்சேன்னு தெரிஞ்சதுமே எனக்குக் கோபம் வந்தது.

ஆஃபிஸ் ஒர்க்ல பிஸியா இருந்தவனை காஃபி ஷாப்ல காக்க வச்சிட்டு இருந்ததோட, அது உனக்காகன்னு தெரிஞ்சதும் இன்னும் கோபத்தைக் கொடுத்துச்சி. அதனால தான் நீ சொல்ல வந்ததைக் காது கொடுத்தே கேட்கல.

நீ சாதாரணமாகத் தான் என்னிடம் பேசறன்னு நினைச்சேனே தவிர, காதல்னெல்லாம் நான் நினைக்கல. அந்த வயசுல, அந்தச் சூழ்நிலையை எப்படி ஃபேஸ் பண்ணணுங்கறது எனக்குத் தெரியல. வீட்டுக்கு வந்து பொறுமையா யோசிச்ச போது, கொஞ்சம் நிதானமா சொல்லியிருக்கலாம்ன்னு தோணுச்சி. ஆனா, அதை நீ எடுத்துட்டு இருப்பியான்னு எனக்கு இன்னமும் சந்தேகம்” என்றவன், அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

அமைதியாக அவன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு, அதுவும் சரிதான் என்று தோன்றியது. அவன் நிதானமாகச் சொல்லியிருந்தால், மனத்திற்குள் ஒரு பிடிவாதம் வந்திருக்கும். அவன் பேசியது சரியே என்று இப்போது தோன்றியது.

அவனே தொடர்ந்தான்.

”இது மட்டும் இல்ல. எனக்குச் சில பொறுப்புகள் இருந்தது. அப்பாவோட வீடு அம்பாசமுத்திரத்தில் இருக்கு. அப்பாவோட அப்பா காலத்திலேயே வீட்ல ஏகப்பட்ட கடன். இழுத்துப் பிடிச்சி சமாளிச்சி ஓரளவு சரியாகி வரும்போது, அப்பா தன்னோட நண்பருக்காக ஜாமின் கையெழுத்துப் போட்டார்.

அவர் ஏமாத்திட்டு ஓடிட, அப்பா மேல அந்தக் கடன் வந்து சேர்ந்தது. திரும்ப வீடு கைவிட்டுப் போற நிலைமை. அப்போ நான் நைன்த் படிச்சிட்டிருந்தேன். அப்பாவுக்குப் பையனை நல்லா படிக்க வைக்கணும்னு ஆசை. இருந்த நிலைமைல நல்ல சாப்பாடே சாப்பிட முடியாத போது இதெல்லாம் எப்படி நடக்கும்ன்னு, அதே நினைப்போடே வேலையை முடிச்சிட்டு வரும்போது ட்ரெயின் வர்றதைக் கவனிக்காம ட்ராக்கைத் தாண்டினதில்…” என்றவனுக்குத் தொண்டையை அடைத்தது.

அவனைப் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது. தாய் இல்லாமல் தான் பட்ட அதே வேதனையை அவனும் அனுபவித்திருக்கிறான். அதிலும், தனக்குப் பின் பலமாக பணம், அந்தஸ்து இருந்தது. ஆனால், அவனுக்கு?’ என்று எண்ணியவள், தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டினாள்.

காரை ஓரமாக நிறுத்தியவன், வாங்கித் தொண்டையில் சரித்துக் கொண்டான்.

சில நொடிகளில் நிதானத்திற்கு வந்தவன், “தேங்க்ஸ்!” என்றான்.

“சாரி!” என்றாள் மென்குரலில்.

“அப்பாவைப் பத்திப் பேசும்போதெல்லாம் இப்படி ஆகிடும்” என்று புன்னகைத்தவன், “அம்மா தான் ரொம்ப இடிஞ்சி போய்ட்டாங்க. வேற வழியில்லாம அந்த வீட்டை விற்க வேண்டியதா போச்சு. அம்மாவோட அண்ணன் எங்களை அவங்க வீட்டோடு வச்சிக்கிட்டாங்க. மாமாவுக்கு மனசு இருந்தது. ஆனா, போதுமான அளவுக்குப் பணம் இல்ல.

மாமாவோட வைஃப் சின்ன வயசுலயே அவரைப் பிரிஞ்சிட்டாங்க. ஒரே பொண்ணையும் இவர்கிட்டயே விட்டுட்டு அவங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சிக்கிட்டாங்க. இப்படிப்பட்டச் சூழ்நிலைல வளர்ந்து வைராக்கியத்தோடு படிச்சேன். இன்னைக்கு எங்க அப்பாவோட வீட்டைத் திரும்ப வாங்கிட்டேன்.

அம்மாவோட உண்மையான சந்தோஷத்தை அன்னைக்குத் தான் பார்த்தேன். அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். உங்க அப்பாவுக்கு இதைப் பார்க்கக் கொடுத்து வைக்கலயே சத்யான்னு என்னைப் பிடிச்சிட்டு அழுதாங்க” என்றவனது இமைகளும் ஈரத்தில் பளபளத்தன.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் இமைகளும் நனைந்தன.

கஷ்டத்திலும், ஏழ்மையிலும் வளர்ந்தவன் இன்று வசதி வாய்ப்புகளுடன் நல்ல நிலையில் இருக்கும் மகனைப் பார்க்கும் போது எந்தத் தாய்க்குத் தான் மகிழ்ச்சி ஏற்படாது? அவளுக்கும் அவனை நினைத்து பெருமையாக இருந்தது.

‘அவனது திறமையும், உழைப்பும் மட்டுமே அதற்குக் காரணம்’ என்று எண்ணிக் கொண்டவள் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தாள்.

எனக்கும் என் ஃப்ரென்ஸோட சந்தோஷமா பேசிச் சிரிக்கணும் என்று ஆசையா இருக்கும். அப்புறம், அவங்களை வீட்டுக்குக் கூப்பிடணும். அவங்களுக்கு முன்னால நான் ரொம்பக் கீழ் நிலைல இருந்திருப்பேன். யாராவது ஒருத்தர் விளையாட்டுக்குக் கூட என் நிலைமையைச் சொல்லிச் சிரிச்சிட்டா என்ன செய்வதுன்னே யாரிடமும் ஒட்டாமல் இருந்தேன்.

முதல்ல என் அப்பாவோட ஆசையை பூர்த்தி செய்யணும். எங்க அம்மா தலை நிமிர்ந்து நடக்கணும். இதெல்லாம் தான் எனக்கு வாழ்க்கைல இலட்சியமா இருந்தது. அதுக்குத் தடையா வர்ற எதையும் ஏற்றுக்கொள்ளும் தைரியமும், தகுதியும் அப்போ எனக்கு இல்ல. இது மட்டும் தான் நான் உன்னை மறுக்கக் காரணம்” என்றான்.

அவள் மௌனமாகத் தலையைக் குனிந்து அமர்ந்திருந்தாள்.

கேட்க வேண்டிய கேள்விகள் அவளிடம் இன்னமும் இருக்கின்றன என்று உணர்ந்து, “வேற ஏதாவது கேட்கணுமா?” என்று கேட்டான்.

“அவினாஷோட கல்யாணத்துக்கு வரலன்னா, என்னை நீங்க வந்து பார்த்திருப்பீங்களா? உங்க காதலைச் சொல்லியிருப்பீங்களா? அவ்வளவு ஏன்? கல்யாணம் முடிஞ்சி இந்த நாலு நாளில் நீங்க என்னைச் சந்திக்க முயற்சி செய்தீங்களா? நானா வந்ததால் தானே இவ்வளவையும் என்னிடம் சொல்றீங்க” என்று காட்டத்துடன் கேட்டாள்.

“நிச்சயமா வந்திருப்பேன். அதுவும் இன்னைக்கே… உன் வீட்டுக்கே வந்திருப்பேன்” என்றான்.

“பொய்” என்றாள் அழுத்தமாக.

“என் கண்ணைப் பாரு. நான் சொல்வது உண்மைன்னு அது சொல்லும்” என்று அவளது மோவாயைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்பினான்.

“நிச்சயமா வந்திருப்பேன் மாயா. அம்மாகிட்டக் கூட முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு அதையும் முடிச்சிட்டு ஊருக்குக் கிளம்பி வரேன்னு சொன்னேன். அந்த முக்கியமான வேலை உன்கிட்டப் பேசறது தான்” என்றான் மென்மையான குரலில்.

படபடத்த விழிகளுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, “காஃபி ஷாப்ல பேசிட்டுப் போனேன். நான் செய்தது சரின்னு நினைச்சேன். அதுக்குப் பிறகும் பெரிசா நீ என்னைப் பாதிக்கல. அதற்குப் பிறகு, அவினாஷ் வீட்ல நடந்த எந்தப் பார்ட்டிக்கும், அவுட்டிங்கிற்கும் நீ வரல. அப்போ தான் உன்னைப் பத்தி நினைக்க ஆரம்பிச்சேன்.

அவினாஷ் அப்பப்போ பொதுவா உன்னைப் பற்றிப் பேசும் போது கேட்டுக்குவதோடு சரி. நானாக உன்னைப் பற்றி எதுவும் விசாரிச்சது இல்ல. அதனால அவன்கிட்டக் கேட்கத் தயக்கம். அப்படியும் ஒரு நாள் என்னைப் பார்க்க வந்தவன், நீ பாரின் போய்ட்டன்னு சொன்னான். அது கூட என்னைப் பாதிக்கல.

அவள் பாரின் போகக் காரணமே நீதான். அவளுக்குப் பாரினுக்குப் போய்ப் படிக்கணும்ன்னு ரொம்ப ஆசை. உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சதும் அவளுக்குப் பாரின் ரெண்டாம் பட்சமா ஆகிடுச்சி. நீ லவ்வை அக்செப்ட் பண்ணா, அந்த அப்ளிகேஷனைத் தூக்கிப் போடத் தயாரா இருந்தா. அதுக்காகத் தான் உன்னைப் பார்த்துப் பேச வந்தா. நீதான் அவளைப் பேசவே விடலன்னு சொன்னான்.

நானும் விட்டேத்தியா, எனக்காக அவளோட கனவை எதுக்காக கெடுத்துக்கணும். படிக்கிற வயசுல படிக்கட்டும்ன்னு சொன்னேன். ஆனா, அது எனக்கு நானே சொல்லிக்கிட்டச் சமாதானம்ன்னு எனக்கே மெதுவாகத் தான் புரிஞ்சிது. எனக்கும் ஹைத்ராபாத்ல நல்ல சேலரியோட வேலை கிடைச்சது. கிளம்பிட்டேன்.

அவினாஷை மீட் பண்றதே நின்னுபோச்சு. எப்போதாவது மெசேஜ் அனுப்புவான். இல்லனா போன் செய்து பேசிக்குவோம். எப்படியாவது உன்னைப் பார்க்க மாட்டோமா? மனசுல இருக்கறதைச் சொல்ல மாட்டோமான்னு காத்துட்டே இருந்தேன். நானும் அவினாஷ்கிட்ட ரெண்டு மூணு முறை உன்னைப் பத்தி விசாரிச்சேன். அவன் மழுப்பலா ஏதாவது சொல்லிட்டு போனை வச்சிடுவான்.

அந்த நேரத்தில் தான், அவினாஷோட கல்யாண இன்விடேஷன் வந்தது. பேச்சோடு பேச்சா நீயும், படிப்பை முடிச்சிட்டு வந்துட்ட. கல்யாணத்துக்கு வருவன்னு சொன்னான். அவன் எனக்காகத் தான் சொல்றான்னு புரிஞ்சது. உடனே, சாரியும் கேட்டுட்டு உன்கிட்ட லவ்வையும் சொல்லிடணும்ன்னு கிளம்பி வந்துட்டேன். இப்போ சொல்லிட்டேன்” என்றான்.

என்ன சொல்வதெனத் தெரியாமல் அவனைப் பார்க்க, “திரும்ப கல்யாணத்துக்கு நான் வரலன்னா என்ன செய்திருப்பன்னு கேட்காதே. அப்பவும் உன்னைத் தேடி வந்திருப்பேன்” என்று சிரித்தவனைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள்.

அவளது கரத்தைப் பற்றித் தனது நெஞ்சோடு வைத்துக் கொண்டவன், “கேள்வியின் நாயகியே! இன்னும் ஏதாவது கேள்வி பாக்கி இருக்கா?” என்று புன்னகையுடன் கேட்க, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள், “கல்யாணம் எப்போ மை லார்ட்?” என்று குறும்பாகக் கேட்டாள்.

அவளது கன்னத்தைத் தடவியபடி, “உன் அப்பாவும், என் அம்மாவும் சம்மதிச்சதும்” என்றான்.

சட்டென முகத்தை உயர்த்தியவள், “யாராவது ஒருத்தர் சம்மதிக்கலன்னா?” என்று கேள்வி எழுப்பினாள்.

அவன் சிறிதும் பதறாமல், “இன்னும் கொஞ்ச காலத்துக்கு லவ் பண்ணுவோமே. கல்யாணத்தை விட காதல்ல ரெஸ்பான்ஸிபிளிட்டி கொஞ்சம் கம்மி” என்றான் தீவிர பாவனையுடன்.

“இந்த நினைப்பெல்லாம் இருக்கா? இன்னும் மூணே மாசம் தான் உங்களுக்கு டைம். அதுக்குள்ள கல்யாணத்துக்கு நாளைக் குறிக்கணும். இல்ல, நானே என் மாமியாரை நேரா பார்த்துப் பேச வேண்டி இருக்கும்” என்றாள் தீர்மானமாக.

“அது சரி. நீ செய்தாலும் செய்வ” என்றவன் சிரித்துக் கொண்டே காரைக் கிளப்பினான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
அத்தியாயம் - 15​

தங்கள் காதலுக்குச் சம்மதம் கேட்டு, தனது காதலனுடன் வந்து நிற்கும் மகளை ஏற இறங்கப் பார்த்தார் விஸ்வநாதன்.

“உனக்கு அவனை எத்தனை நாளா தெரியும்? எத்தனை நாள் பழக்கம்? அவனைப் பத்தி என்ன தெரியும்?” என்று வரிசையாகக் கேள்விகளை அடுக்கினார் விஸ்வநாதன்.

“மனசுக்குப் பிடிக்க இத்தனை நாளா தெரியணும்ன்னு கால அவகாசம் இருக்காப்பா?” என்ற மகளை முறைத்துப் பார்த்தார்.

“அப்போ உன்னோட காதல் உயர்ந்ததுன்னு சொல்ற…”

“எங்களோட புரிதல் அதிகம்ன்னு சொல்றேன்” என்றாள் அழுத்தமாக.

“நான், இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கலன்னா?”

“சம்மதிக்கிற வரைக்கும் காதலிச்சிட்டே இருப்போம்” என்றாள் உறுதியான குரலில்.

“ஏன் நீ மட்டும் தான் பதில் சொல்வியா? அவர் சொல்ல மாட்டாரா?” என்றார் சிறு எரிச்சலுடன்.

“நான்தானே ஈவ்னிங் வரைக்கும் டைம் கேட்டிருந்தேன்” என்றாள் மென்குரலில்.

“அது, நான் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்ல நீ கேட்டிருந்த அவகாசம்” என்றார் அவரும் விடாமல்.

“அந்தப் பதிலைத் தான்ப்பா சொல்லிட்டிருக்கேன்” என்று தான் அவரது மகள் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தாள்.

மகளும், தந்தையும் மாற்றி மாற்றி விவாதித்துக் கொண்டிருக்க, அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த சத்ய பிரகாஷ், “எக்ஸ்க்யூஸ் மீ! நான் கொஞ்சம் பேசலாமா சார்!” என்று கேட்டான்.

“அதுக்குத் தானே வந்திருக்கீங்க” என்ற விஸ்வநாதன் தண்ணீரை எடுத்துக் குடித்தார்.

“என் பேர் சத்ய பிரகாஷ். நான், உங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவன். என்னைப் பற்றி உங்ககிட்டச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு” என்று தன்னைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னான்.

“இதுதான் என்னுடைய பின்னணி. வாழ்க்கைல கஷ்டப்பட்டு, உழைச்சி முன்னுக்கு வந்தவன். அடுத்தவங்களோட கஷ்ட நஷ்டத்தைப் புரிஞ்சிக்க முடியும். நடுத்தரக் குடும்பமா இருந்தாலும், என் மனைவியை, எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்க முடியும்” என்றான்.

“ம்ம், நீங்க சொல்றதெல்லாம் சரி. ஆனா, நீங்க சொல்ற வாழ்க்கைத் துணை உங்க குடும்பத்துக்குச் சரிசமமா இருக்கற குடும்பத்தில் பொண்ணு எடுத்தா சரிவரும். நீங்க ஆசைப்படுறது பரம்பரைப் பணக்காரனான விஸ்வநாதனோட பொண்ணை. பிறக்கும்போதே பல கோடிகளுக்கு வாரிசாகப் பிறந்தவளை” என்றார் அதிகாரமாக.

அதுவரை அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருந்தவனுக்கு அவரது பதில் கோபத்தை உண்டாக்க, “சார்! உங்க பணம் எனக்குத் தேவையில்ல. மாயாவோட அப்பாங்கற ஒரு காரணத்துக்காகத் தான் உங்களுக்கு விளக்கமும், பதிலும் சொல்லிட்டு இருந்தேன். உங்களை விட ஆயிரம் மடங்கு பாசத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்க என்னால முடியும். என்னோட நேசத்தால எதையும் சாதிக்க முடியும்” என்று வீராப்புடன் சொல்லிவிட்டு எழுந்தான்.

அவனது செயலைக் கண்ட மாயாவிற்குப் பயமாக இருந்தது.

“சத்யா! ப்ளீஸ்…” என்று கெஞ்சலாக அவனது கையைப் பற்றியபடி அவளும் எழுந்தாள்.

கண்ணாடியைக் கழற்றித் துடைத்தபடி, “அப்படியா? ஆனா, உங்க நேசம் என் மனசை மாத்தலையே. என் மகளோட வாழ்க்கை, எனக்கு ரொம்ப முக்கியம். அதுக்காக, என்னவேனாலும் செய்வேன்” என்றவர், மகளின் பக்கமாகத் திரும்பினார்.

“நான் சம்மதிக்கலன்னா, உன்னைக் கூட்டிட்டுப் போய்த் தாலி கட்டுவேன்னு மிரட்டராரும்மா நீ தேர்ந்தெடுத்தவர். அவருக்குப் புரியாத விஷயம் அப்பா, மகளோட பாசத்துக்கு முன்ன எல்லாமே எதுவும் இல்லாம போயிடும்ன்னு அவருக்குத் தெரியல. அனுபவம் இல்ல இல்லயா” என்று கிண்டலாகச் சிரித்தார்.

“அப்பா! நான் தப்பு செய்தேன்னு நினைச்சா, என்னை மன்னிச்சிடுங்க. நான் கேட்கறதுக்கு முன்னாலேயே எல்லாத்தையும் செய்தீங்க. என் கல்யாண விஷயத்துல மட்டும் ஏன்ப்பா?” என்றவளுக்கு அழுகை வந்தது.

மகளையே ஆழ்ந்து நோக்கியவர், தனது டேபிள் டிராயரைத் திறந்து ஒரு கவரை அவள் முன்பாகத் தூக்கிப் போட்டு, “உனக்காக எவ்வளவு தகுதியான ஒருத்தரை செலக்ட் பண்ணி வச்சிருக்கேன். ஆனா, நீ…” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு நெற்றியைப் பிடித்துக் கொண்டவர், “திறந்து பாரு” என்று உரக்கச் சொன்னார்.

நடுங்கும் விரல்களால் கவரை எடுத்தவள், சத்ய பிரகாஷைப் பார்த்தாள். இறுகிய முகத்துடன் நின்றிருந்தவனைக் காணவே, அவளுக்கு வேதனையாக இருந்தது. தனக்காகத் தான், தந்தையின் பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டு நிற்கிறான் என்று புரிந்தது.

அதேநேரம் தந்தையின் உத்தரவிற்கு அடிபணிந்து, கவரைப் பிரித்துப் பார்த்தாள். நம்பமுடியாத பார்வையுடன் அந்தப் பேப்பரை வெறித்தவளின் கண்கள் மளமளவெனக் கண்ணீரைப் பொழிய, “அப்பா…” என்றபடி அவரை அணைத்துக் கொண்டாள்.

சிரிப்புடன் மகளை அணைத்துக் கொண்டவர், “எப்படி அப்பாவோட நடிப்பு? ரொம்பப் பயந்து போய்ட்டியா?” என்றார் பிரியத்துடன்.

“கதிகலங்கிட்டேன்” என்றவளின் குரலில் பெரும் நிம்மதி தெரிந்தது.

மெல்ல விஷயம் புரிய ஆரம்பித்த சத்ய ப்ரகாஷைப் பார்த்த விஸ்வநாதன், “மாப்பிள்ளை!” என்று அவனை நோக்கிக் கையை நீட்டினார்.

இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தவன், அவரது கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.

“நீங்க எப்படியும் சம்மதிச்சிடுவீங்கன்னு தெரியும். ஆனா, இப்படி பயமுறுத்துவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல” என்று இலகுவாகச் சிரித்த மகளை அன்புடன் பார்த்தார்.

வருங்கால மாப்பிள்ளையிடம் சற்று அளவலாவியவர், “என்னோட சொத்தைவிட, பெரிய சொத்து என் பொண்ணு தான். அவளோட சந்தோஷம் தான் என்னுடைய சந்தோஷம். இன்னும் ரெண்டு நாள்ல நல்ல முகூர்த்த நாள் இருக்கு. நானே முறைப்படி வந்து அம்மாகிட்டப் பேசறேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.

அதன்பிறகு எல்லாம் அசுர வேகத்தில் நடந்தன.

அவர் தன் அம்மாவிடம் பேசும் முன்பே மாயாவைப் பற்றி வீட்டில் பேசினான். சந்தோஷமாக இருந்த போதும், வசதியான இடம் என்ற பயமும் அவருக்கு இருந்தது. அதுவும், விஸ்வநாதன் வந்து பேசிய பின்பு, சந்தோஷமாக மாறியது. அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்திற்கு நாள் குறித்துத் தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.

சத்ய பிரகாஷின் புகைப்படத்தை இணைத்து, நடந்த அனைத்தையும் குறிப்பிட்டு யுவனுக்கு மின்னஞ்சல் அனுப்பினாள். மின்னஞ்சலைப் படித்த அடுத்த நொடி அவளுக்கு வீடியோ கால் செய்து விட்டான்.

“ஏய் திருட்டுக்கோட்டு… எனக்கு இத்தனை நாளா பதிலே சொல்லல. கேட்டா, இன்னும் பேசலன்னு சொல்லியே காலத்தை ஓட்டுன” என்றான் போலியான கோபத்துடன்.

“உன்கிட்டச் சொல்ல வெட்கமா இருந்தது யுவன்” என்று வெட்கத்துடன் சொன்னவளைப் பார்த்து மனம் விட்டுச் சிரித்தான்.

“அவர் எப்படி இருக்காருன்னு சொல்லவே இல்லயே” என்றவள், ஆவலுடன் அவனது பதிலுக்காகக் காத்திருந்தாள்.

“உண்மையைச் சொன்னா உனக்குக் கோபம் வரும்” என்றான் வேண்டுமென்றே.

“சரியான அராத்து நீ” என்றாள் போலியான கோபத்துடன்.

சிரித்தவன், “ஸ்மார்ட்டா இருக்கார். அழகா இருக்கார். அதைவிட குடும்பத்து மேல ரொம்ப அக்கறையான மனுஷனா இருக்கார். மொத்தத்தில் உனக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கார்” என்றான் பாராட்டாக.

“தேங்க்யூ யுவன். உனக்குப் பிடிக்கணுமேன்னு உள்ளுக்குள்ள சின்ன பயம் இருந்தது. நௌ ஐயம் ஹேப்பி” என்றாள் உற்சாகத்துடன்.

“சரிசரி இதெல்லாம் பெரிசில்ல. சீக்கிரம் சமைக்க கத்துக்க. எல்லோரும் யுவன் மாதிரி இளிச்ச வாயா இருக்கமாட்டாங்க” என்றான் சிரிப்புடன்.

“ஹும்! பார்க்கத் தானே போறேன். இந்த யுவன் அவரோட பொண்டாட்டிக்குச் சமைச்சிப் போடப் போறதை” என்று பதிலுக்குக் கிண்டல் செய்ய என்று அவர்களது வீடியோ கால் அரட்டையில் முடிந்தது.

“அங்கிளுக்கும், ஆருவுக்கும் விஷயத்தைச் சொல்லு. நானும் கால் பண்றேன். கல்யாணத்துக்கு வரப் பாரு. நீ வரல கொன்னுடுவேன்” என்றாள்.

“அதெப்படி வராமல் இருப்பேன்? மாப்பிள்ளைத் தோழனே நான் தானே” என்று அவளைக் கலாய்த்துவிட்டு போனை வைத்தான்.

**************​

தினமும் போனில் பேசிக்கொண்டாலும், நேரில் சந்தித்துக் கொள்ள முடியாதது அவளுக்குச் சற்று கவலையைக் கொடுத்தது. மாதத்தில் ஒருநாள், அவளுக்காகவே சென்னைக்கு வந்தான். அன்றைய நாள் முழுதும் அவர்கள் இருவருக்காக மட்டுமே.

பெரும்பாலும் மாயாவின் வீட்டிலேயே இருவரும் சந்தித்துக் கொண்டனர். என்றாவது மறைமலை நகரில் இருக்கும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வான்.

அவளது வருங்கால மாமியார் மனோன்மணியும், அவனது மாமன் மகள் பவித்ராவும் அவளுக்குப் பார்த்துப் பார்த்து உபசரிப்பர். வேலையாட்களின் சமையலையே உண்டிருந்தவள், மாமியாரின் கைப்பக்குவத்திற்கு அடிமையாகிப் போனாள் என்றே சொல்லலாம்.

பவித்ராவும், அக்கா அக்கா என்று அவளிடம் மிகவும் அன்பாக இருந்தாள். ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்தவளுக்கு, இன்னொருத்தியுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதும், தனக்காக அவளும், அவளுக்காக இவளும் விட்டுக் கொடுத்துப் போவதும் இனிமையான அனுபவமாக இருந்தது மாயாவிற்கு.

திருமணம் முடிவானபோதே, திருமணத்திற்குப் பின் அலுவலகப் பொறுப்பை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனச் சொல்லியிருந்தார். அவனுக்கு அது ஏற்புடையதாக இல்லாத போதும், அன்னையின் அறிவுரையை ஏற்று சம்மதித்தான்.

அதற்கு ஏற்ப கல்யாணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன் தனது வேலையை இராஜினாமா செய்துவிட்டு, வருங்கால மாமனாரின் கம்பெனியில் எம்.டியாகப் பொறுப்பேற்றுக் கொண்டான்.

அவனது சென்னை வாசத்திற்குப் பிறகு, தினமும் அலுவலகத்தில் சந்தித்துக் கொள்வதுடன், வாரத்தில் நான்கு நாட்கள் வெளியே சுற்றுவதாக மாறிப்போனது. அவன் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், “கல்யாணம் முடியற வரைக்கும் ஆஃபிஸ் வரவேண்டாம் என்று விஸ்வநாதன் சொல்லிவிட, அவளது தினம் சந்திக்கும் நிகழ்ச்சி தடைபட்டுப் போனது.

ஒரு நாள் வீட்டிற்கு வந்தவனிடம், “நீங்க சென்னைக்கு வந்து என்ன பிரயோஜனம் ஆஃபிஸ் ஆஃபிஸ்ன்னு அங்கேயே சுத்திட்டு இருக்கீங்க. போன் கூட குறைஞ்சி போச்சு” என்றாள் தாங்கலுடன்.

“இப்பவே கொஞ்சம் ட்ரெயினிங் எடுத்துக்கிட்டா தானே கல்யாணத்துக்குப் பின்ன நாம கொஞ்சம் ப்ரீயா இருக்க முடியும்” என்று சமாதானமாகச் சொன்னவன், “உன் கவலை இது. ஆனா, என்னோட கவலையே வேற” என்று பெருமூச்சு விட்டான்.

“அப்படி என்ன கவலை உங்களுக்கு?” என்று அவன் மோவாயைப் பற்றிக் கொஞ்சியபடி கேட்டாள்.

“வேற என்ன? லவ் பண்ணோம். அதுக்கு ஒரு சின்ன எதிர்ப்புக்கூட இல்ல. ஒரு பிரச்சனை, கவலை, பிரிவு, அதுக்கு சொல்யூஷன்… இப்படில்லாம் நடந்து கடைசில கல்யாணம் வந்திருந்தா எவ்ளோ சுவாரசியமா இருந்திருக்கும்” என்று ரசித்து அனுபவித்துச் சொல்பவனை, கடுகடுவென பார்த்தாள்.

“முறைக்காதடீ! அப்படியெல்லாம் இருந்தாதான் லவ் நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும்” என்றான் குறும்புடன்.

“ஓஹ் அப்படியா! இப்பவே எங்க அப்பாவுக்குப் போனைப் போட்டு, இந்தக் கல்யாணம் எனக்கு வேணாம்னு சொல்லிடுறேன்” என்று வேகமாகப் போனை எடுத்தாள். “எங்க அப்பாவைச் சொல்லணும்… பெரிய இவருன்னு, உங்களை மாப்பிள்ளையாக்கிக்க சம்மதிச்சாரில்ல” என்றவளின் கையிலிருந்த போனைப் பிடுங்கினான்.

அவளைப் பற்றி அருகில் இழுத்தவன், “என்னை மாதிரி ஒரு மாப்பிள்ளை ஈசியா கிடைக்கிறான்னா, உங்க அப்பாவுக்குக் கசக்குதாக்கும்” என்று கிண்டலாகக் சொன்னான்.

சட்டென நிமிர்ந்தவள், அவனது புஜத்திலேயே ஒன்று போட்டாள்.

“என்ன சார்? மாப்பிள்ளை பந்தாவைக் காட்டுறீங்களா! எங்க அப்பா மாதிரி ஒரு மாமனார் கிடைக்க, நீங்க கொடுத்து வச்சிருக்கணும்” என்று உதட்டைச் சுழித்தாள்.

“இல்லைன்னு நான் எப்போ சொன்னேன்” என்று கிரக்கமாகச் சொன்னவன், அவளது கன்னத்தைப் பற்றியபடி அவளை நோக்கிக் குனிந்தான்.

அவனை வேகமாகப் பிடித்துத் தள்ளிவள், “முதல்ல என் கேள்விக்குப் பதில். மத்ததெல்லாம் அப்புறம்” கறாராகச் சொன்னாள்.

“மத்ததெல்லாம்னா…” சளைக்காமல் அவளது பதிலுக்கே எதிர் கேள்வி கேட்டான்.

முறைத்தவள், “நீங்க இப்படியே பேசிட்டு இருங்க. நான் கிளம்பறேன்” என வேகமாக எழுந்தவளை, இழுத்துத் தன்மீது சாய்த்துக் கொண்டான்.

அவளது கன்னத்தோடு இழைந்தவன், “ரொம்பத் தான் இந்த மூக்குக்கு மேல கோபம் வருதே! அதை எப்படிக் கண்ட்ரோல் பண்றதுன்னு எனக்குத் தெரியும்” என்றவன் அவளது இதழில் அமுதம் பருகத் துவங்கினான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
அத்தியாயம் - 16​

“ப்பா! ப்பா! என்று மகனின் மழலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சத்ய பிரகாஷ் மெல்லக் கண்விழித்தான்.

‘பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த தான் எப்போது, எப்படி உறங்கினோம்’ என்று அவனுக்கே தெரியவில்லை. மனத்தில் எழுந்த குற்ற உணர்ச்சியில் மனம் நைந்து போயிருந்தது. எழுந்து குழந்தையைத் தூக்கினான்.

தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுச் சிரித்த மகனின் முகத்தில், காதல் மனைவியின் முகத்தைக் கண்டவனுக்கு வேதனையாக இருந்தது. குழந்தையை, இறுக அணைத்துக் கொண்டவனின் நெஞ்சம் விம்மியது.

எவ்வளவு அழகான வாழ்க்கையை இழந்து, தங்களையும் தவிக்க விட்டுச் சென்றவள் மீது கோபம் எழுந்தது. அதேநேரம், அவள் மட்டும் இருந்திருந்தால் தங்களது வாழ்க்கை வர்ணஜாலத்துடன் எவ்வளவு இன்பமயமாக இருந்திருக்கும். இப்படி ஏமாற்றிவிட்டுச் சென்றுவிட்டாயே மாயா!’ என்று மனம் குமுறினான்.

“பப்பும்மா! அப்பாவை எழுப்பிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்த பவித்ரா, “மணி எட்டரை ஆகிடுச்சி அத்தான். அதான், குழந்தையை அனுப்பினேன்” என்றவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

தலையைக் கோதியபடி, அங்கிருந்து சென்றவனை யோசனையுடன் பார்த்தாள்.

“காஃபி கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.

“வேண்டாம்” என்றவன், குளியலறைக்குள் நுழைந்தான்.

நிமிர்ந்து கூடப் பார்க்காமல் செல்லும் அவனது செயலுக்கான காரணம் புரியாமல், அவனுக்கு மாற்றுடையை எடுத்து வைத்துவிட்டு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள்.

அவனுக்காக காலை உணவை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, ப்ரீஃப்கேஸுடன் ஷு ரேக்கை நோக்கி நடந்தான்.

வெளியேயிருந்து உள்ளே வந்துகொண்டிருந்த மனோன்மணி, “சாப்பிடலையா சத்யா? அதுக்குள்ள ஆஃபிஸ் கிளம்பிட்ட?” என்று கேட்டார்.

“ஆஃபிஸுக்கு நேரமாகிடுச்சிம்மா. பசியும் இல்ல” என்றவன், அவர் மேற்கொண்டு பேசும் முன்பாக வெளியே நடந்தான்.

அவனை, திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.

மருமகளின் அருகில் வந்த மனோன்மணி, “பக்கத்துல இருந்து கொஞ்சம் பார்த்துக்கக் கூடாதா பவி. பாரு அவன் சாப்பிடாமலேயே கிளம்பிட்டான்” என்றவர், “எல்லாம் நாமளே சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கு” என்று முணுமுணுத்துவிட்டுச் செல்ல, அவள் கடுப்புடன் பார்த்தாள்.

மனத்திற்குள் இருந்த எரிச்சலை வெளியே காட்டிக்கொள்ளாமல் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “ஏம்மா! காலைலயே சாப்பிடாம கிளம்பினானே. டிஃபனை டிரைவர்கிட்டக் கொடுத்து அனுப்பறது தானே. லஞ்ச்சையாவது சீக்கிரம் கொடுத்தனுப்பு” என்றார் மனோன்மணி.

‘பொண்ணா பிறந்தா, இந்த இம்சையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கு. நானா அவரைச் சாப்பிட வேண்டாம்ன்னு சொன்னேன்’ என மனத்திற்குள் புலம்பிக் கொண்டவள், அவர் சொன்னபடியே செய்தாள்.

மதியம், காலி டிஃபன் பாக்ஸ் மட்டும் வந்தது.

“அம்மா! சாருக்கு முக்கியமான வேலை இருக்காம்மா. நைட் வர லேட்டாகும்ன்னு சொல்லச் சொன்னாங்க. டின்னரும் முடிச்சிட்டு வந்திடுவாங்களாம்” என்று தகவல் சொன்னார் டிரைவர்.

சரி என்றவளுக்கு இன்னும் எதுவும் சரியாகவில்லை என்றே தோன்றியது.

இரவு உணவு நேரம் முடிந்து, குழந்தையும் உறங்கிவிட்டான். அவள் சாப்பிடாமல் அமர்ந்திருந்தாள்.

“அவன் தான் டின்னர் முடிச்சிட்டு வருவேன்னு சொன்னானே. நீ சாப்பிட வேண்டியது தானே” என்றார் மனோன்மணி.

“பசியில்ல அத்தை! கொஞ்ச நேரம் ஆகட்டும். நீங்க படுங்க நேரமாகுது” என்றாள்.

“வரவர நான் எது சொன்னாலும் நீ கேட்கறது இல்ல. அவன் வந்தா திட்டப் போறான்” என்றபடி எழுந்து அறைக்குச் சென்றார்.

‘திட்டா? அப்படி ஏதாவது செய்தாலும் என் மேல் இருக்கும் உரிமையைத் தெரிஞ்சிக்கிற சந்தர்ப்பமாவது கிடைக்கும்’ என எண்ணியவளுக்குப் பெருமூச்சு தான் வந்தது.

குழந்தையின் அருகில் சென்று படுத்தவள், கணவனின் வருகைக்காக விழித்திருந்தாள். இருந்த மன உளைச்சலில் அவளுக்குத் தூக்கமும் வரவில்லை. கொட்டக் கொட்ட விழித்திருப்பது எரிச்சலாக இருந்தது.

மணி பன்னிரெண்டானது. உள்ளுக்குள் அவன் இன்னும் வராதது பயத்தைக் கொடுத்தது. முன்பும், பார்ட்டிகளுக்குச் செல்வதென்றால் மாயா இல்லாமல் அவன் செல்வதென்பது மிகவும் அரிதானது.

அதேநேரம், “பத்தரை மணிக்கு மேல பார்ட்டில நமக்கெல்லாம் வேலையே கிடையாது” என்று வீட்டிற்கு வந்துவிடுவான்.

இவ்வளவு நேரம் அவன் வராதது அவளுக்குத் திகிலைக் கொடுத்தது. ‘நாடு இருக்குற நினைப்புல எதையும் யோசிக்கவும் பயமாக இருந்தது. அவனது மொபைலுக்கு முயன்றால், ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

திக்திக்கென்ற மனத்துடன், அறைக்குள்ளேயே நடந்தவளின் மனத்திற்கு நிம்மதி அளிக்கும் வகையில், வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. வேகமாக வந்து உறங்குவதைப் போலப் படுத்துக் கொண்டாள்.

கதவைத் திறப்பதும், பூட்டிவிட்டு மேலே வருவதையும் அவனது காலடி ஓசைகள் உணர்த்த, அசைவின்றி படுத்திருந்தாள்.

விளக்கைப் போடாமல் கட்டிலருகில் வந்தவன், மகனின் நெற்றியில் புரண்ட முடியை விலக்கி மென்மையாக முத்தமிட்டான். சில நொடிகள் நின்று இருவரையும் பார்த்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

அவன் வெளியே வர எடுத்துக் கொண்ட பதினைந்து நிமிடங்களையும் பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

தலையைத் துவட்டியபடி வந்தவன், விளக்கைப் போட்டுவிட்டு சோஃபாவில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான். அவளது விழிகளும் அவனையே வெறித்துக் கொண்டிருந்தன.

“தூங்கலையா?” என்றவன் தலையைத் துவட்டுவதைப் போலவே கட்டிலை நோக்கி நடந்தான்.

“மதியானம் சாப்டீங்களா?” என்றாள் நேராக.

“ம்ம்” என்றான் ஒற்றை எழுத்தில்.

“எந்த ஐட்டம் உங்களுக்குப் பிடிச்சிருந்தது?” என்றபடி அவனெதிரில் வந்து நின்றாள்.

அதுவரை அமைதியாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தவன், “என்ன?” என்றான் எரிச்சலுடன்.

“நீங்க மதியானம் சாப்பிடவே இல்ல. என்கிட்டப் பொய் சொல்றீங்க” என்றாள் ஆத்திரத்துடன்.

“ஆமாம். பொய்தான் சொன்னேன். என்ன இப்போ?” என்றான் கோபமாக.

“உங்களுக்கு என்னதான் பிரச்சனை? பிடிக்காம நடந்து போச்சு. அதுக்காக என்னை உதாசீனப்படுத்தறது போல நீங்க நடந்துக்கறது எனக்குச் சுத்தமா பிடிக்கல. உங்களுக்கு ஏதாவது கோபம்ன்னா அதை என்கிட்ட மட்டும் காட்டுங்க. நீங்க எந்த நேரத்துல எப்படி ரியாக்ட் பண்ணுவீங்கன்னு தெரியாம எனக்குத் தலை சுத்துது” என்றாள் கோபத்துடன்.

“இங்கே பார் பவித்ரா எனக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சனை இருக்கு. எல்லாத்தையும் உன்கிட்டச் சொல்லிட்டிருக்க முடியாது. புரிஞ்சிக்க” என்றான் சப்தமாக.

அவனது சப்தத்தில் குழந்தை புரண்டு படுக்க, ஓடிச் சென்று மெல்லத் தட்டிக்கொடுத்தாள். அவளது செய்கைகளைப் பார்த்தவன், கடுப்புடன் கை முஷ்டியை இறுக்கினான்.

“மாயா, ஒரு முறைகூட என்கிட்ட இப்படிப் பேசினது கிடையாது. என்னோட மனசுல இருக்கறதை நான் சொல்லாமலே புரிஞ்சிக்குவா. ஆனா, நீ…” என்று கோபத்தில் வார்த்தைகளை விட்டான்.

சட்டென அவனைத் திரும்பிப் பார்த்தவள், “மாயா மாதிரி நான், உங்களைக் காதலிச்சிக் கல்யாணம் செய்துக்கல. காதலிச்சவனையே கல்யாணம் செய்துகிட்டோம்ங்கற பூரிப்போட, அவங்க இருந்தது போல என்னால இருக்க முடியல. அவங்க வாழ்ந்த சந்தோஷமான வாழ்க்கையை நான் வாழல. நான் பவித்ரா. பவித்ரா, பவித்ராவா மட்டும்தான் இருப்பா” என்று மெல்லிய அதேநேரம் அழுத்தமானக் குரலில் சொன்னவளின் கண்கள் அருவியெனப் பொழிந்தன.

அவன் செய்வதறியாமல் அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

“சாரி பவித்ரா! ஏதோ ஒரு வேகத்துல… என் சூழ்நிலையைப் புரிஞ்சிக்க” என்றவனை திரும்பி முறைத்தாள்.

“போதும் சாமி! நீங்க எப்போ எப்படி மாறுவீங்கன்னு, உங்க மனசுக்குள்ள புகுந்து என்னால பார்த்துட்டிருக்க முடியாது. நாம சின்ன வயசுலயிருந்து ஒரே வீட்ல பல காலம் இருந்திருந்தாலும் எனக்கு, உங்களைப் பத்திப் பெரிசா தெரியாது. இதுபோல ஒரு சந்தர்ப்பம் வரும்ன்னு நான் கண்டேனா என்ன?

அப்படித் தெரிஞ்சிருந்தா, உங்களைப் புரிஞ்சிக்க நினைச்சிருப்பேனே. உங்களுக்கு, என்னைப் பிடிக்கலன்னா, என் எதிர்ல வராதேன்னு சொல்லிடுங்க. இதுதான் என் தலையெழுத்துன்னு, என் குழந்தையோடு நான் இருந்துக்கறேன். எல்லாம் சரியாகிடும்ன்னு நினைக்கிற நேரத்துல நீங்க பின்னால போறதும், நான் எதிர்பார்த்து ஏமாறாமலாவது இருந்துப்பேன்” என்றவள் கண்ணைத் துடைத்துக் கொண்டு தனது இடத்தில் சென்று படுத்தாள்.

சத்ய பிரகாஷின் நிலைமை பெரும் அவதியில் இருந்தது. அவளை மறக்கவும் முடியவில்லை; இவளை ஏற்கவும் முடியவில்லை. அதேநேரம், இவளது கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று மனம் பரபரக்கிறதே’ என்று தடுமாறினான்.

‘தேவையில்லாமல் மாயாவைப் பற்றிப் பேசி அவளது மனநிம்மதியை குலைத்துவிட்டேனே’ என்று தன்னையே நொந்து கொண்டவன், ‘அவளைச் சமாதானம் செய்யலாமா?’ என்று எழுந்த எண்ணத்தை அப்படியே அழித்தான்.

இப்போதைக்குத் தனது சமாதானம் நிலைமையை இன்னமும் மோசமாக்கும் என்ற உண்மையை உணர்ந்து மௌனமாகப் படுக்கையில் விழுந்தான்.

மாற்றம் ஏற்படும் என்று காத்திருப்பதை விட, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்புத் தான் தன்னை மாற்றும் என்ற உண்மை புரிய, ‘அதற்காகன முயற்சியில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்ற முடிவுடன் கண்களை மூடினான்.அத்தியாயம் - 17​

அடுத்து வந்த பத்து நாட்களும், பவித்ராவின் கையே ஓங்கியிருந்தது. கணவன் என்றொருவன், அந்த வீட்டில் இருக்கிறான் என்பதை, முற்றிலும் மறந்தவளைப் போன்று அவளது நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

குழந்தையைக் கவனிப்பது, அவனை ஸ்பீச் தெராபிக்கு அழைத்துச் செல்வது, வீட்டு வேலைகளைப் பார்ப்பது, கணவனுக்குத் தேவையானவற்றைச் செய்வது என்று, தன்னை எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக் கொண்டாள்.

‘இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிடும்’ என்று சத்ய பிரகாஷ் நினைத்துக் கொண்டிருக்க, எல்லாம் தலைகீழாகப் போய்க் கொண்டிருந்தது.

அவளிடம் சமாதானமாகப் பேச முயன்றபோதும், அவள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

“நல்லா டைம் எடுத்து யோசிங்க. இதுக்கு மேலேயும் உங்க உதாசீனத்தை, என்னால பொறுத்துக்க முடியாது. எனக்குன்னு சுயமரியாதை இருக்கு” என்று கராறாகச் சொல்லிவிட்டுச் சென்றவளை எப்படிச் சமாதானம் செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.

தான் ஏன் அவளிடம் இவ்வளவு தூரம் பொறுத்துப் போகிறோம்? என்று யோசிக்க மறந்தவனாக, தனது வேலையில் மூழ்கிப் போனான்.

அன்று, அலுவலக பிரச்சனை ஒன்றைக் குறித்து, வெகுநேரம் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். மகனும், மருமகளும் ஒரு வாரமாக முகம் கொடுத்துப் பேசிக்கொள்ளவில்லை என்பதை அறிந்திருந்த மனோன்மணிக்குக் கவலையாக இருந்தது.

தனது வேலைகளை முடித்துவிட்டு, கைகளைத் தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த மகனின் அருகில் வந்து அமர்ந்தார் மனோ.

“சத்யா!” என்று அழைத்த அன்னையின் குரலில் திரும்பி அவரைப் பார்த்தான்.

சிறிது தயங்கியவர், “நான் உனக்குச் சொல்லணும்ன்னு இல்ல… பவித்ரா சின்னப் பொண்ணு” என்று ஆரம்பித்த அன்னையை ஆயாசத்துடன் பார்த்தான்.

“ப்ளீஸ்ம்மா! அட்வைஸ் பண்றேன்னு, திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லாதீங்க. எனக்குப் புரியாம இல்ல. என் நிலைமையையும், கொஞ்சம் நினைச்சிப் பாருங்க. அன்னைக்கு இருந்த டென்ஷன்ல, மாயாவைப் பத்திப் பேசிட்டேன். அது தப்புன்னு, மன்னிப்பும் கேட்டுட்டேன். ஆனா, அதைக் கொஞ்சம் கூட மதிக்காம, அவளோட இஷ்டத்துக்கு இருக்கா.

நானும், மனுஷன்தானேம்மா. எனக்கும், மனசுன்னு ஒண்ணு இருக்கு. அவளுக்கு எப்படி இது எதிர்பாராத கல்யாணமோ, அதே போலத்தான் எனக்கும். தாலி கட்டுற நிமிஷம் வரைக்கும், என் மனசு பூரா மாயாதானேம்மா இருந்தா. என் சந்தோஷத்துல, கவலைல, கஷ்டத்துல அத்தனையுமா இருந்தவளை, எப்படிம்மா சட்டுன்னு தூக்கிப் போட்டுட்டு, இன்னொருத்தியை ஏத்துக்க முடியும்?” என்றவனுக்குக் கண்கள் பனித்தன.

அவர், “சத்யா!” என்று மகனின் கையைப் பிடிக்க, அவன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.

“பவித்ராவால மனசுவிட்டு அழவாவது முடியுது. என்னால…” என்றவனுக்குச் சலிப்பாக இருந்தது. “என்னைப் புரிஞ்சிக்க முயற்சியே செய்ய மாட்டேன்றா” என்றவன், “தப்புப் பண்ணிட்டனோன்னு தோணுது. நீங்க சொன்னதுக்காக, கல்யாணம் செய்துகிட்டது என்னோட மடத்தனத்தோட உச்சம்” என்று வேதனையுடன் சொன்னவன், தலையைக் கைகளில் தாங்கியபடி அமர்ந்துவிட்டான்.

மகனின் நிலையைப் பார்க்கப் பார்க்க, மனோன்மணிக்கு அடிவயிறு கலங்கியது. ‘இதற்காகவா அவனுக்குத் திருமணம் செய்து வைத்தேன்? மனைவியை இழந்தபோதும், மகனே போதும் என்று இருந்தவனை, சிக்கலில் மாட்டி வைத்தது நான் தானே!’ என்ற சுயபச்சாதாபத்தில் மனம் குமுறினார்.

‘என்னால் விளைந்த துன்பத்திற்கு, நான்தான் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டவர், ‘அப்பா திருவாலீஸ்வரா என் குழந்தைகளுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்காதே. அவனோட கவலையை முழுமையா தீர்க்க வேண்டியது உன் பொறுப்பு’ என்று மனதாரத் தனது குலதெய்வத்தை வேண்டிக்கொண்டார்.

உறங்கிக் கொண்டிருந்த மகனைத் தோளில் சுமந்தபடி, அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டபடி, படிக்கட்டில் நின்றிருந்தாள் பவித்ரா.

பவித்ரா குழப்பத்தில் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தாள். அவனுடைய மனப் போராட்டத்தைப் பற்றிச் சிந்திக்காமல் போன, தனது முட்டாள்தனத்தை எண்ணித் தன்னையே திட்டிக்கொண்டாள்.

‘சமாதானமாகப் பேச வந்தவரையும், முகத்திலடித்தாற் போலப் பேசி, அவருடைய நிம்மதியைக் குலைத்திருக்கிறேன். என்னுடைய சந்தோஷத்தை நினைத்தேன். அவருடைய கவலையைப் பற்றிச் சிறிதும் யோசித்துப் பார்க்காமல், அவரை மேலும் நோகடித்துவிட்டேனே!’ என்று மனத்திற்குள் புலம்பியவளுக்கு, அவன் பேசிய வார்த்தைகள் நினைவிற்குவர இதயம் கனத்தது.

எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாளோ, “பவி! ஏன் இருட்ல உட்கார்ந்திருக்க? நேரமாகுதே போய்ப் படுக்கறது தானே” என்றார் மனோன்மணி.

வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு மடியிலிருந்த குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு எதுவும் பேசாமல் அறையை நோக்கி நடந்தாள்.

அவள் மேலே சென்றபோது, சத்ய பிரகாஷ் மாடி ஹாலில் இல்லை. அறைக்குள் நுழைந்தவள், விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தவனைப் பார்த்தாள். குழந்தையை அவனருகில் படுக்க வைத்தவள், நிமிர்ந்து கணவனைப் பார்த்தாள்.

அவனோ, சிறிதும் அசையாமல் அப்படியே படுத்திருந்தான். பேசுவதற்கான நேரம் இது இல்லை என்று உணர்ந்தவளாக, படுக்கையில் சாய்ந்தாள்.

மறுநாள் காலையும், வழக்கம் போல மௌனத்தின் பிடியிலேயே சென்றது.

காலை உணவருந்திக் கொண்டிருந்தவனின் அருகில் வந்து அமர்ந்த மனோன்மணி, “சத்யா! இந்த வாரம் நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போய் வந்திடலாம்ப்பா” என்றார்.

அவன் எதுவும் சொல்லாமல் அன்னையைப் பார்த்தான்.

“போய் வந்தா எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு மனசு சொல்லுது” என்றவர் மகனின் பதிலுக்காகக் காத்திருந்தார்.

எழுந்து சென்று கையைக் கழுவிக்கொண்டு வந்தவன், “ரெண்டு நாள் போதுமா? அதுக்கேத்த மாதிரி ஆஃபிஸ்ல ஏற்பாடு செய்துட்டு வரணும்” என்றான்.

மகன் சொன்ன பதிலில் மகிழ்ந்து போன மனோன்மணி, சந்தோஷத்துடன் தலையை ஆட்டினார்.

”சரிம்மா நான் கிளம்பறேன்” என்று அவன் ஷூவை அணிய, குழந்தையுடன் அங்கே வந்தாள் பவித்ரா.

“என்னை சூப்பர் மார்க்கெட்டில் இறக்கி விட்டுடுறீங்களா?” என்று அவனிடம் கேட்க, நிமிர்ந்து பார்த்தவன், “ம்ம்” என்றான்.

“வரேம்மா என்று அவன் செல்ல, “அத்தை! தம்பியைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கோங்க” என்றவள் பூடகமாகச் சிரித்துவிட்டு வாசலை நோக்கி நடந்தாள்.

தனது வேண்டுதலுக்கான பலன் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டதைக் கண்ட மனோன்மணிசந்தோஷத்துடன் பேரனைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

அவன் காரைச் செலுத்திக் கொண்டிருக்க, சாலையை வெறித்தபடி அமர்ந்திருந்தவள் கணவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவர்களது பயணம் சற்றுநேரம் மௌனத்தில் கரைய, “சாரி” என்றாள்.

“நல்லா முடிவு செய்துட்டுத் தானே பேசற” என்று கேட்டவனின் குரலில் கிண்டலாக ஒலித்தது.

“நான் அப்படிப் பேசியிருக்கக்கூடாது. என்னைப் பத்தி யோசிச்சேனே தவிர, உங்க மனசைப் பத்தி யோசிக்கவே இல்ல. இனி, நமக்குள்ள எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னா, நாம மனசுவிட்டுப் பேசிக்கணும். அதுக்கு…” என்று இழுத்தவள், “ஃப்ரெண்ட்ஸ்” என்று அவனுக்கு முன்பாகக் கையை நீட்டினாள்.

கண்கள் இடுங்கப் பார்த்தவன், “சினிமா பார்த்து நிறைய யோசிக்கிற போல” என்றவனுக்கு அவனையும் அறியாமல் புன்னகை அரும்பியது.

அவனது புன்னகை, அவளுக்குச் சாமரத்தால் வீசியதைப் போல இருந்தது.

“இன்னும் நீங்க கையைக் கொடுக்கவே இல்ல…” என்றாள் சிணுங்கலாக.

“உன்கிட்டக் கையைக் கொடுத்துட்டு நான் என்ன செய்ய?” என்று தீவிர பாவனையுடன் சொல்ல, அவள் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.

“என்ன சத்தத்தையே காணோம்? கையை என்ன செய்றதுன்னு யோசனையா?” என்று குறும்பாகக் கேட்டான்.

இல்லையெனத் தலையை அசைத்தவள் குறுகுறு பார்வையுடன், “நீங்க இப்படிப் பேசி நான் பார்த்ததே இல்ல” என்றாள்.

மிருதுவாகப் புன்னகைத்தவன், “இப்போ கையைக் கொடுக்கவா வேண்டாமா?” என்று கேட்க மீண்டும் அவனிடம் கையை நீட்டினாள்.

லேசாகப் பற்றி விடுவிக்க, அவனது தொடுகை படபடப்பையும், இனிமையான உணர்வையும் உண்டாக்கியது. வெட்கமும், சிரிப்பும் போட்டிப் போட்டுக் கொண்டு வர, எங்கே சிரித்து வைத்துவிடுவோமோ என்ற பயத்தில் கீழுதட்டை அழுந்தக் கடித்தபடி வெளியே வேடிக்கைப் பார்க்கலானாள்.

தன்னை நினைத்தே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. நினைவு தெரிந்த நாளிலிருந்து அவனுடன் பேசியிருக்கிறாள். சிரித்திருக்கிறாள். ஆனால், இன்று தோன்றும் இந்த உணர்வு இதற்கு முன்பு தோன்றியதில்லை. அவ்வளவு ஏன் முன் தினம் இரவு கூட அப்படியொரு சிந்தனை தனக்குள் உருவாகவில்லை என்பதே உண்மை.

அவனது அன்பும், அரவணைப்பும் தனக்குக் கிடைக்குமா என்றே தெரியாமல், தனது தலையெழுத்து இதுதான் என்று வலிந்துத் திணிக்கப்பட்ட உறவாகத் தான் இந்த வாழ்க்கையை ஏற்றாள். ஆனால், அவனது பாராமுகமும், ஒதுக்கமும் இவன் என் கணவன் என்ற உரிமையை தானாக எடுத்துக் கொள்ள முனைந்த மனத்தை என்ன சொல்வது?

மனம் ஒரு குரங்கு என்பதா அன்றி, மஞ்சள் கயிறு தந்த உரிமை என்பதா? இதே உரிமைக்காக திருமண நாளன்று அவனிடம் பேசியதெல்லாம் நினைவிற்கு வர, எப்படித் தன்னால் அவ்வளவு தைரியமாகப் பேச முடிந்தது என்றே அவளுக்குப் புரியவில்லை. பதினைந்தே நாட்களில் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்தல்களை எண்ணி ஆச்சரியமுற்றாள்.

மனம் போனப் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தவளிடம், “ஃப்ரெண்டுன்னு சொல்லிட்டு நீ தனியா எதையோ நினைச்சிட்டு உட்கார்ந்திருக்க போல” என்றான்.

அவனது கேள்வியில் நினைவுலகிற்கு வந்தவள், “அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்று சமாளிப்பாகச் சிரித்தாள்.

“ம்ம், பொய் சொல்லி என்னோட வந்து சமாதானம் பேசியாச்சு. உன்னை இங்கேயே இறக்கி விடட்டுமா? இல்ல வீட்ல டிராப் பண்ணிடவா?” என்று கேட்டான்.

“ம்ம்” என்றாள் அவள்.

புன்னகைத்தவன், “ஆஃபிஸுக்கு வர்றியா?” என்று கேட்க, உற்சாகமாகத் தலையை ஆட்டினாள்.

அவளை அழைத்துக் கொண்டு விஸ்வநாதனின் அறைக்குச் சென்றான். இருவரையும் சேர்ந்து பார்த்தவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், மகளை நினைத்து ஒரு நொடி அவரது கண்கள் கலங்கின. நாசூக்காகக் கண்களைத் துடைத்துக் கொண்டவர், அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வர இருப்பதை அவன் கூற, “ஒரு வாரம் கூட இருந்துட்டு வாங்க. இங்கே எல்லாம் தன்னால நடக்கும்” என்று சந்தோஷத்துடன் சம்மதித்தார்.

அதற்குள் அவர்களுக்கு இனிப்பும், காரமும் வந்து சேர பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.

அந்தப் பெரிய அறையைச் சுற்றிப் பார்த்தாள். அவரது இருக்கைக்குப் பின்னால், தனது மனைவி, மகளின் புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தார். இருபது பேர் அமர்ந்து பேசக்கூடிய அளவில் மேஜையும், இருக்கைகளும் ஒரு பக்கம் இருந்தன.

“என்னம்மா உன்னை உட்கார வச்சிட்டு, கம்பெனி விஷயம் பேசிட்டு இருக்கறது போர் அடிக்குதா?” என்றார்.

“அதெல்லாம் இல்லப்பா!” என்றாள்.

சிரித்தவர், “நம்ம ஃபேக்ட்ரியைச் சுத்திக் காட்டுங்க மாப்பிள்ளை!” என்றார்.

“கண்டிப்பா மாமா!” என்றவன் தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

விஸ்வநாதனின் அறை அளவிற்குப் பெரிதாக இல்லாவிட்டாலும், அந்த அறையும் பெரிதாகவே இருந்தது. விஸ்வநாதனின் அறையில் இருந்ததைப் போலவே சத்யபிரகாஷின் அறையிலும் மாயாவின் புகைப்படம் ஒன்று அவனது மேஜையின் பக்கத்தில் சிறிய அளவில் இருந்தது.

அதைக் கண்டதும், அனிச்சம் மலராக அவளது இதயம் சுணங்கியது. தனது இந்த எண்ணப்போக்கு தவறு என்று புரிந்தாலும், அதைத் தவிர்க்க முடியவில்லை.

அவனும் அவளது முகம் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கண்டுகொண்டான்.

“சரி, கிளம்புவோமா?” என்றதும் மௌனமாகத் தலையை அசைத்தாள்.

அலுவலகத்தையும் ஃபாக்ட்ரியையும் சுற்றிக் காட்டினான்.

மணி பனிரெண்டு ஆக, “அரை நாள் ஆகிடுச்சி. நான் இன்னும் வீட்டுக்கு வரலன்னு அத்தை பதறிட்டு இருப்பாங்க” என்றாள் பதட்டத்துடன்.

“அதெல்லாம் அம்மாவுக்குத் தெரியும். லஞ்ச்சுக்கு வெளியே போகலாம். வேணும்னா, ஒரு போன் பண்ணு” என்று தன்னுடைய போனைக் கொடுத்தான்.

மாமியாருக்குத் தகவல் சொல்லிவிட்டு இருவருமாகப் புறப்பட்டனர். ஹோட்டலிலிருந்து அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றவன், உடையை மாற்றிக் கொண்டு மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

வேலையாட்கள் இருவருக்கும் ஆளுக்கொரு வேலையைச் சொல்லி வெளியே அனுப்பிவிட்டு, அசதியாக இருப்பதாகக் கூறி தனது அறைக்குள்ளேயே இருந்தார்.

கணவனின் பவித்ராவின் மனம் சந்தோஷத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தது. மாலையில் அவனுக்குப் பிடித்த பால் கொழுக்கட்டையையும், மிளகு வடையும் செய்து பரிமாறினாள்.

சிறிது நேரம் பொறுத்து வெளியில் சென்று வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பியவன் திரும்பி வரும்போது அம்மா, மனைவி இருவருக்கும் புடவையும், மகனுக்கு விளையாட்டுப் பொருட்களும் வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.

அனைத்தையும் அன்னையிடம் கொடுத்தவன், “உங்க மருமக எங்கே?” என்று கேட்டான்.

“லைப்ரரி வரைக்கும் போயிருக்கா” என்றார்.

அவள் வீட்டிற்கு வந்தபோது, ஹாலிலிருந்த சோஃபாவில் படுத்து மகனை நெஞ்சின் மீது அமர வைத்து அவனுடன் பேசிக்கொண்டிருந்தான் சத்ய பிரகாஷ்.

“அப்படியே உள்ளே போய் கையோட உன் வீட்டுக்காரனுக்குக் காஃபியாம் போட்டுக் கொண்டு வா” என்று அவளை சமையலறைக்கு அனுப்பிவிட்டு, “சத்யா! உன் கையாலேயே பவித்ராகிட்டக் கொடுப்பா” என்றார் மெல்லியக் குரலில்.

ஏதோ சொல்ல நினைத்தவன், சரியென்று புடவையை வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றான்.

“எங்கேத்தை அவரு?” என்று கேட்டாள்.

“ரூம்ல இருக்கான்” என்றவர், எழுந்து தனது அறைக்குச் சென்றார். அவரது மனம் குளிர்ந்திருந்தது.

குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல நினைத்ததுமே எல்லாம் கூடி வருவதாக நினைத்த மனோன்மணியின் நெஞ்சம் நெகிழ்ந்திருந்தது.

முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தவனிடம், “காஃபி” என்று கப்பை நீட்டினாள்.

வாங்கி டேபிள் மீது வைத்தவன், புடவையை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

விழிகள் விரிய பார்த்தவள், “எனக்கா?” என்று கேட்டாள்.

“எனக்குப் புடவை கட்டும் பழக்கம் இல்ல” என்று குறும்பாகக் கூறியவன், காஃபியை எடுத்துப் பருகினான்.

பிரித்துப் பார்த்தாள். ஆரஞ்சு நிறமும், பச்சை வண்ண மெல்லிய பார்டரில் கண்களைக் கொள்ளை கொண்ட புடவை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

“அழகா இருக்கு” என்றாள் மெல்லிய குரலில்.

அவளது வெட்கம் கலந்த சிரிப்பிற்கு எதிர்வினையாற்றியவன், தலையைக் கோதிக்கொண்டே எழுந்து சென்றான்.

நிறைந்த மனத்துடன் புடவையை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
அத்தியாயம் - 18

அம்பாசமுத்திரம் வந்த மறுநாள் காலையில், சுவாமிக்கு பொங்கல் இட்டு அபிஷேகமும், பூஜையையும் முடித்து வீட்டிற்கு வர மதியம் ஆகிவிட்டது.

சமைக்கிறேன் என்று கிளம்பிய பவித்ராவிடம், “நேத்து ஃபுல்லா ட்ராவல், காலைல நேரத்தோட கோயிலுக்குப் போய்ட்டு வந்துன்னு அலைச்சலா இருக்கும். போதாதுன்னு இந்தக் குட்டிப் பையன் பின்னால வேற ஓடிட்டு இருக்க” என்றபடி மகனை அள்ளியெடுத்துக் கொண்டவன், “நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் போய்ச் சாப்பாடு வாங்கிட்டு வரேன்” என்றான்.

“அதெல்லாம் வேணாம் அத்தான். பக்கத்து வீட்டுப் பெரியம்மாகிட்ட ஏற்கெனவே, மதிய சாப்பாட்டுக்குச் சொல்லிட்டேன்” என்றாள் பவித்ரா.

மகனை மடியில் இருத்திக் கொண்டு அவனுடன் விளையாடியபடி, “அதானே பார்த்தேன். எங்கே நான் சமைக்கிறேன்னு சொல்லப் போறியோன்னு நினைச்சேன்” என்றான் கிண்டலாக.

“சமைக்கலாம். இன்னைக்கு ஒரு நாளைக்காவது நீங்க நல்ல சாப்பாடு சாப்பிடுங்களேன்” என்றாள் அவளும் பதிலுக்கு.

வேண்டுமென்றே, “பார்த்தீங்களாம்மா! உங்க மருமகளுக்கு இருக்கிற வாயை” என்றான் அன்னையிடம்.

“நீ ஏடாகூடமா கேள்வி கேட்டா, பதிலும் அப்படித்தானே வரும்” என்ற அன்னையை சோர்ந்த முகத்துடன் பார்த்தான்.

மகனுடன் குத்துச் சண்டை இட்டுக்கொண்டிருந்தவன், “நான் அவுட். வெறும் அவுட் இல்ல நாக் அவுட்” என்று ஒரு பக்கமாகச் சாய, “அ..ப்பா! அ..வு..த்…” என்று வாயைத் திறந்து கூட்டிச் சொல்லிவிட்டு, முத்துப் பற்கள் தெரிய புன்னகைத்தான் மனு.

குழந்தையின் மழலைப் பேச்சைக் கேட்ட மூவரும் வியப்பும், திகைப்புமாகக் குழந்தையைப் பார்த்தனர்.

ஓடிச்சென்று குழந்தையை அள்ளிக் கொண்டவள், “மனு கண்ணா! திரும்பச் சொல்லுங்க, திரும்பச் சொல்லுங்க” என்று பவித்ரா கண்களில் கண்ணீர் மல்கக் கேட்க, “ஆ..வூ..த்” என்ற மகனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த, சத்யபிரகாஷின் முகம் இளகியது. ‘இதுதான் தாய்மையின் பெருமையா?’ தான் பெறாத மகனுக்காக தன்னை வருத்திக்கொண்டு, அவனது சிரிப்பில் தனது சந்தோஷத்தைக் காணும் அந்தப் பேரன்பு அவனைச் சிலிர்க்கச் செய்தது.

குழந்தையின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டவள், “என் தங்கம். அம்மா சொல்லு; அம்மா சொல்லுடி” என்று கெஞ்சலும் கொஞ்சலுமாகக் கேட்ட தாயின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்து, “ஆஅ..ம்மாஆஆஆ!” என்று ராகம் இழுத்த மகனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

அவளது முதுகு குலுங்கியது.

பனித்தக் கண்களைத் துடைத்துக் கொண்ட மனோன்மணி, “பவி! உன்னோட உழைப்புக்குப் பலன் கிடைச்சிருக்கு. சந்தோஷப்படு” என்றவர் மென்மையாக அவளது முதுகைத் தடவிக் கொடுத்தார்.

சமாளித்துக் கொண்டு எழுந்தவள், கணவன் இருந்த பக்கம் திரும்பவே இல்லை.

“நான் போய்ச் ஸ்வீட் பண்றேன்” என்று சமையலறைக்கு ஓடினாள்.

சிரித்த மனோன்மணி, “என்னவோ, இவளே பெத்தவ மாதிரி அவ்வளவு சந்தோஷம்” என்றார் மகனிடம்.

“ஏம்மா, அவதானே மனுவோட அம்மா” என்று சற்றும் யோசிக்காமல் சொன்ன மகனை வியப்புடன் பார்த்தார்.

ஒரு வேகத்தில் சொன்னவன், அன்னையின் பார்வையைக் கண்டதும் அசடு வழிய தலையைக் கோதியபடி எழுந்து அறைக்குச் சென்றான்.

பிள்ளைகளின் நல்வாழ்வைவிட, பெற்றவர்களுக்கு வேறென்ன சந்தோஷம் இருந்துவிட முடியும்? பூரித்த நெஞ்சுடம் அவர் அமர்ந்திருக்க, நெய்யும், முந்திரியும் மணக்க மணக்க கேசரியைத் தட்டில் கொண்டு வந்து மாமியாருக்குக் கொடுத்தாள்.

“மனு, எங்கே அத்தை?” என்று கேட்டாள்.

“பூட்டின வீட்டுக்குள்ள எங்கே போயிடப் போறான்? உன் வீட்டுக்காரன்கிட்ட இருக்கானான்னு பாரு” என்றார்.

விளையாடிக்கொண்டிருந்த அசதியில், தன் நெஞ்சின் மீதே சாய்ந்து தூங்கியிருந்த மகனின் தலையைக் கோதிக் கொடுத்துக் கொண்டிருந்தான் சத்யா.

“தூங்கிட்டானா? இருங்க நான் தூக்கிக்கிறேன்” என்றவள் கேசரியை மேஜை மேல் வைத்துவிட்டு, “நீங்க சாப்பிடுங்க” என்றபடி குனிந்து குழந்தையைத் தூக்கினாள்.

“நீ சாப்பிடலயா?”

“ம்ம் கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றாள்.

“எனக்கு இவ்வளவு வேணாம்” என்றவன் பாதிக் கேசரியைத் தள்ளி வைத்துவிட்டு உண்ண, ஏதோ புதுவித உணர்வு மனத்திற்குள் பரவ, பரபரவென இருந்தது.

மதிய உணவிற்குப் பின், அனைவருமே சிறு தூக்கம் போட்டனர். அவள் எழுந்த போது, சத்யன் வீட்டில் இல்லை. முகத்தைக் கழுவிக் கொண்டு விளக்கேற்றிவிட்டு, அவனது வருகைக்காகக் காத்திருந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் வந்தவன், “காஃபி கிடைக்குமா?” என்றான்.

அவள் கொண்டுவந்து கொடுக்க, “வாக் போயிருந்தேன். முல்லைப் பூ வித்துட்டிருந்தாங்க. உனக்குப் பிடிக்குமேன்னு, வாங்கிட்டு வந்தேன்” என்று அவளிடம் கொடுத்தான்.

நாணத்துடன் வாங்கிக் கொண்டு பூஜையறைக்குச் சென்றாள். இது எதுவுமே காதில் விழாததைப் போலப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் மனோன்மணி. பக்கத்து வீட்டுப் பெரியம்மா வர, அவருடன் பேசிக்கொண்டே எழுந்து வெளியே சென்றார் அவர்.

சென்னையில் இருக்கும்போது அவ்வளவு பெரிய வீட்டில் ஏதேனும் ஒரு வேலை இருவருக்குமே இருந்தது. அப்படி இல்லாவிடினும், அப்போதிருந்த மனநிலையில் அவர்கள் ஆளுக்கொரு மூலையில் இருக்க வீட்டில் இடமும் இருந்தது.

முப்பதடியில் மொத்த வீட்டையும் சுற்றி வந்து விடக்கூடிய அந்த வீட்டில், தனிமையான இடம் என்று எதுவும் இல்லை. தன்னையறியாமல் வெளிப்படும் சிரிப்பையும், முக மலர்ச்சியையும் யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற கூச்சத்தால் சமையலறைக்கும், பூஜையறைக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

இன்னமும் மனோன்மணி வீட்டிற்கு வரவில்லை. மணி ஏழாகியிருக்க, எழுந்து சமைக்கச் சென்றாள்.

லைட்டர் வேலை செய்யாமல் போக, தீப்பெட்டியை எடுக்கக் கீழே குனிந்தாள்.

“பவி!” என்றபடி சத்யன் உள்ளே வர, திடீரென கேட்டக் குரலில் தூக்கிப் போடத் திரும்பிப் பார்த்தாள்.

“ஹேய் நான்தான்” என்றான்.

தலையை உலுக்கிக்கொண்டவள், “திடீர்ன்னு பக்கத்துல குரல் கேட்கவும்…” என்றவள் அவனது பார்வையைக் கண்டதும் அடுப்பை ஏற்றுவதைப் போலத் திரும்பிக் கொண்டாள்.

முறுவலித்தவன், “முக்கியமான போன் பேசணும். இங்கே சிக்னல் கிடைக்கல. நான் மாடிக்குப் போறேன். குழந்தையைப் பார்த்துக்க” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

சற்றுநேரம் சோஃபாவில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, ஓட்டமும் நடையுமாகத் தனது குட்டிப் பாதங்களால், வீட்டை அளக்க ஆரம்பித்தான். குழந்தையின் மீது ஒரு கண்ணும், சமையலுமாக இருந்தவள், குழந்தை படிக்கட்டில் ஏறுவதைப் பார்த்தாள்.

“குட்டிப்பா! அங்கேல்லாம் தனியா போகக் கூடாது” என்று குரல் கொடுக்க, சமர்த்தாக திரும்பி வந்தான்.

மீண்டும் அவள் சமையலில் மும்முரமாகிவிட, ஹாலில் சப்தம் இல்லாமல் இருப்பதைக் கண்டதும் வேகமாக வெளியே வந்தாள். ஹாலிலிருந்து மாடிக்குச் செல்லும் வராண்டா வரையில் எண்ணெய் கொட்டியிருக்க, அதைக் கவனியாமல் வேகமாக வெளியே வந்தவள் வழுக்கிக் கீழே விழுந்தாள்.

அப்போதுதான் போன் பேசி முடித்தவன், அவளது அலறல் சத்தத்தைக் கேட்டு வேகமாகக் கீழே ஓடிவந்தான். அவள் விழுந்த வேகத்தில் கத்தியதில், என்னவோ என்று குழந்தையும் அழ ஆரம்பித்திருந்தான்.

எண்ணெய் பாட்டிலைத் தலைகீழாகப் பிடித்தபடி கீழிருந்து மூன்றாவது படியில் நின்றிருந்த மகனை ஓடிச் சென்று தூக்கினான். பாட்டிலிலிருந்து இன்னமும் எண்ணெய் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருந்தது.

“ஒண்ணுமில்லடா கண்ணா! அழக்கூடாது” என்று மெதுவாகக் கீழே இறங்கி மகனை இருக்கையில் அமரவைத்தவன், விழுந்திருந்தவள் எழ கையைக் கொடுத்தான்.

“பார்த்துப் பிடிச்சிக்கிட்டு எழுந்திரு பவி!” என்றான்.

அவனது கரத்தைப் பிடித்துக்கொண்டு எழ முயன்றவள், காலை ஊன்ற முடியாமல் தடுமாறி மீண்டும் விழுந்தாள்.

வலியுடன், “படிக்கட்டுக்குக் கீழே கோல மாவு இருக்கும் அதை எடுங்க” என்றாள் அவனிட்ம்.

“ஏய்! முதல்ல நீ எழுந்திரு. அப்புறம் துடைச்சிக்கலாம்” என்றவன், சட்டெனக் குனிந்து அவளை இருகைகளாலும் அள்ளிக்கொள்ள, பயத்திலும் வலியிலும் பல்லைக் கடித்துக் கொண்டு, அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

அவளைக் கட்டிலில் படுக்க வைக்க, “பெட்டெல்லாம் எண்ணெயாகிடும்” என்றாள் கவனமாக.

“ஆனா ஆகட்டும் படு பேசாம” என்று அதட்டலாகச் சொன்னவன், பயத்துடன் தங்களைப் பார்த்துக் கொண்டிருந்த மகனைத் தூக்கிக் கொண்டு அவளருகில் வந்தான்.

புரளவும் முடியாமல், எழவும் முடியாமல் வலியில் அவதிப்பட்டவளிடம், “எங்கே வலிக்குது?” என்று கேட்டான்.

“கால்ல…” என்றவளுக்கு வேதனையில் கண்கள் ஈரமாகியது.

அவளது கண்ணீரைக் கண்ட மனு, “அம்மா!” என்று அவளது முகத்துடன் முகத்தை வைத்து கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

“ஒண்ணுமில்லடா செல்லம்” என்றவள் சிரமப்பட்டு கண்ணீரைக் கட்டுப்படுத்தினாள்.

“கால்ல எங்கே வலிக்குது?” என்று கணுக்காலைப் பிடித்தான்.

அந்த நிலையிலும் வெட்கத்துடன், “நீங்க அத்தையைக் கூப்பிடுங்க” என்றாள் தவிப்புடன்.

“சும்மாயிருடி!” என்றவன், அவளது முழ்ங்காலைப் பற்றி, “இங்கேயா?” என்று கேட்க, கூச்சத்தில் நெளிந்தாள்.

வலி ஒருபுறம், கூச்சம் ஒருபுறம் என அவளை அலைகழிக்க, அது எதையும் உணராமல் அவரது வாழைத் தண்டு காலைப் பற்றியிருந்தான்.

“இங்கே இங்கேன்னு நானே கேட்கணுமா? எங்கேன்னு சொல்லேன்” என்றான் கோபத்துடன்.

உதட்டை அழுந்தக் கடித்துக்கொண்டு, “க்..கெண்டைக் கால்ல பிடிச்சிட்டிருக்கு” என்றாள்.

“இங்கேயா” என்று அவன் கெண்டைக்காலை நீவிவிட, வலி தாங்காமல் கூச்சலிட்டாள்.

நிமிர்ந்து அவளது முகச் சிவப்பையும், தவிப்பையும் கண்டதும் சட்டெனக் கையை எடுத்தவன், “அம்மாவைக் கூட்டிட்டு வரேன்” என்று விறுவிறுவென வெளியே சென்றான்.அத்தியாயம் - 19

இரண்டு நாட்கள் நடக்கச் சிரமப்பட்டவளுக்குத் துணையாக அவளருகிலேயே இருந்தான். இரண்டு நாட்கள் விடுமுறையில் வந்தவன் மேலும், நான்கு நாட்கள் தங்கி அவளது கால் சற்று குணமான பிறகே அவர்களை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தான்.

அவளைப் பார்க்க விஸ்வநாதன் வந்திருந்தார்.

“வாங்கப்பா” என்று எழுந்தவளை, “உட்காரும்மா” என்று அமரவைத்துவிட்டு அவளெதிரில் அமர்ந்தார்.

“இப்போ எப்படிம்மா இருக்கு? நடக்க முடியுதா?” என்று கேட்டார்.

“லேசா வலி இருக்குப்பா! ரொம்ப நேரம் நிற்க முடியல. மத்தபடி வீக்கம், வலி குறைஞ்சிருக்கு” என்றாள்.

“கோவிலுக்குப் போன இடத்துல, இப்படி ஆனது தான் மனசுக்குக் கொஞ்சம் வருத்தமா இருக்குங்கண்ணா!” என்றார் மனோன்மணி.

“நாம ஏன் எல்லாத்துக்கும் முடிச்சி போட்டுக்கணும். ஏதோ, நல்லநேரம். சின்ன அடியோடு போச்சேன்னு நினைச்சிங்க சம்மந்திம்மா! இதுக்கெல்லாம் மனசைக் குழப்பிக்காதீங்க” என்றார் அவர் ஆறுதலாக.

“ம்ம் உண்மைதான். குழந்தைக்குச் சுத்திப் போடணும்ன்னு சொல்லிட்டு இருந்தா. கடைசில இவளுக்குத் தான் முதல்ல சுத்திப் போடணும் போல” என்றார் மனோ.

“சுத்திப் போடணும்ன்னு சொல்லிட்டு, அவளே பூசணிக்கா மாதிரி விழுந்து எழுந்திருக்கா” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான் சத்யன்.

“வாங்க மாப்பிள்ளை” என்று வரவேற்ற விஸ்வநாதனிடம் பேசிக்கொண்டே பவித்ராவின் அருகில் அமர்ந்தான்.

“இவனுக்கு எப்பவும் அவளைக் கிண்டல் பண்ணிட்டே இருக்கணும். உன் கண்ணுதான்டா என் மருமகளுக்கு” என்றார் மனோன்மணி.

“அதுசரி. கடைசில என் மேலேயே போட்டாச்சா? நான் ஹார்ம்லெஸ். வேணும்னா, உங்க மருமகளையே கேட்டுப் பாருங்க” என்றவன், “ஏன் பவி உண்மை தானே!” என்று கேட்டுவிட்டு அவளைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தான்.

பெரியவர்கள் இருவரும் அவனது பேச்சைச் சாதாரணமாகச் எடுத்துக் கொண்டு சிரிக்க, அவனது வார்த்தைக்கான முழு அர்த்தத்தையும் உணர்ந்திருந்த பவித்ராவின் இதயம் படபடவென துடித்தது.

தந்தையைக் கண்டதும் ஓடிவந்து மடியைக் கட்டிக் கொண்ட குழந்தையை தூக்கி முத்தம் கொடுத்துக் கீழே விட்டதும், மீண்டும் ஓடிச் சென்று தாத்தா வாங்கி வந்திருந்த விளையாட்டுச் சாமான்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

பேச்சும் சிரிப்புமாக அன்றைய பொழுது கழிய, இரவு உணவிற்குப் பிறகு விஸ்வநாதன் கிளம்ப அவரை வழியனுப்ப இருவரும் சென்றனர்.

ஹாலில் மாட்டியிருந்த, மாயாவின் ஆளுயர புகைப்படத்திற்குக் கீழே ஏற்றி வைத்திருந்த குத்துவிளக்கில் எண்ணையில்லாமல் திரி கருகிக் கொண்டிருக்க, எழுந்து சென்று குளிர வைத்தாள்.

கீழே அமர்ந்திருந்த குழந்தை அவளது புடவையைப் பிடித்திழுத்து, தன்னைத் தூக்கும்படிச் சொல்ல, குழந்தையை தூக்க முயன்றாள்.

“ஏற்கெனவே, தாங்கித் தாங்கி நடந்துட்டு இருக்க. இதுல எதுக்கு அவனைத் தூக்கற?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் சத்யன்.

“நாலு நாளா அவனைத் தூக்கவே இல்ல. அதுல ஏங்கிட்டான்” என்று சொல்லிக்கொண்டே குழந்தையை தூக்கிய அடுத்த நொடி, “பவி!” என்று அலறியபடி அவளையும், குழந்தையையும் சேர்த்தணைத்து சத்யன் நகர, மாயாவின் புகைப்படம் கீழே விழுந்து கண்ணாடி உடைந்து வீடெங்கும் சிதறியது.

குழந்தை பயத்தில் அலற, அவ்வளவு பெரிய புகைப்படம் தங்கள் மீது விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று எண்ணிய பவித்ராவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

“பவி ரிலாக்ஸ்” என்று அவளை மேலும் தன்னுடன் இறுக அணைத்துக் கொண்டான்.

“ஐயோ! மனு” என்று அலறியபடி வந்த அன்னையை, “அம்மா! அங்கேயே இருங்க. கீழே கண்ணாடி” என்றவன் வேலையாளை அழைத்துச் சுத்தம் செய்யச் சொன்னான்.

“பவி இங்கேயே இரு. நகராதே” என்றவன், அவள் கையிலிருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு சுவரோரமாகக் கவனத்துடன் காலை வைத்துக் கடந்து சென்றான்.

அதற்குள் வேலையாட்கள் இருவரும் அந்த இடத்தைச் சுத்தம் செய்திருக்க, அவளது கரத்தைப் பிடித்து அழைத்து வந்தான்.

குழந்தை இன்னமும் அழுகையை நிறுத்தாமல் இருக்க, “ஒண்ணுமில்லடா ராஜா! நாம டிவி பார்க்கலாமா?” என்றவர் தனது அறைக்குச் சென்றார்.

“பவித்ரா, ரூமுக்குப் போ. நான் வரேன்” என்றவன் அவளைப் படிக்கட்டு வரை கைத்தாங்கலாகப் பிடித்துச் சென்றான்.

அவள் மெல்லப் படியேற, சுவரோரமாக இருந்த புகைப்படத்தைத் தூக்கினான். கீழே விழுந்த வேகத்தில் புகைப்படம் தனியாகவும், தேக்குச் சட்டம் தனியாகவும் வந்திருந்தது. அவளது புகைப்படத்தை ஆழ்ந்து பார்த்தவன், அதை தனது அலுவலக அறைக்குள் வைத்தான்.

அந்த இடத்தைச் சுத்தம் செய்த பின், ஒருமுறை வீட்டைச் சுற்றிப் பார்த்தவன், அன்னையின் அறைக்குச் சென்றான். பாட்டியின் கால்களில் கவிழ்ந்து படுத்து உறங்க ஆரம்பித்திருந்தான்.

மகனின் தலையைக் கோதிக்கொடுத்தவனிடம், “குழந்தையை நான் பார்த்துக்கறேன் சத்யா. நீ போ” என்று கட்டளையாகச் சொன்னார்.

சற்றுத் தயங்கியவன், விறுவிறுவென அங்கிருந்து சென்றான்.

உள்ளே வந்தவனிடம், “மனுவை கூட்டிட்டு வரலையா?” என்று கேட்க, எதுவும் சொல்லாமல் அவளருகில் அமர்ந்தான்.

இத்தனை நாட்கள் தங்கள் இருவருக்கும் இடையில் இருந்த குழந்தை மட்டுமல்ல, இடைவெளியும் இனி இல்லை என்பதை உணர்ந்தவளுக்கு உடல் சிலிர்த்தது.

அவளது கரத்தை அழுந்தப் பற்றியவன், “பயந்துட்டியா?” என்று மென்மையான குரலில் கேட்டான்.

இல்லை என்பதைப் போலத் தலையசைத்தவள் மெல்ல ஆமென்று மேலும், கீழுமாகத் தலையசைத்தாள்.

மெல்ல அவனது தோளில் தலைசாய்த்துக்கொண்டவள், “மனுதான் ரொம்பப் பயந்துட்டான்” என்றாள்.

அவளது சூடான கண்ணீர் அவனது சட்டையை நனைக்க, இடது கரத்தால் அவளது தோளை அணைத்தவன், மற்றொரு கரத்தால் அவளது கண்ணீரைத் துடைத்தான்.

கண்ணீரைத் துடைத்த அவனது கரம் இப்போது கன்னக் கதுப்புகளுக்கு இடம்பெயற, தோளில் சாய்ந்திருந்த அவளது வதனம் அவனது நெஞ்சில் குடிகொண்டது. அவனது மூச்சுக்காற்று அவளது காது மடல்களை சூடாகத் தாக்க, பவித்ராவின் உடலில் உஷ்ணம் கூடி, மூச்சுக் காற்றில் வெளிப்பட்டது.

அவளது முகவாயைப் பற்றி நிமிர்த்தியவன், நெற்றியில் அழுந்த முத்தமிட்டான். அடுத்து கண்கள், நாசி, என்று பயண இலக்கை மாற்றிக்கொண்டிருக்க, அவளது கரம் மாலையாக அவனது கழுத்தைச் சுற்றிக்கொண்டது.

இடைவெளி குறைந்து, தயக்கம் உடைந்து, நாணங்கள் விட்டு விலகியோட மோகத் தீயின் வெம்மையில், ஈருயிரும் ஓருடலாய் அங்கே உருமாறிக் கொண்டிருந்தது.

எந்த மோசமானச் சூழ்நிலையையும், நிகழ்வுகளையும், காயம்பட்ட மனத்தையும், மாற்றும் ஆற்றல் காலத்திற்கு உண்டு. அந்த நிலைதான் சத்ய பிரகாஷ், பவித்ராவின் மனத்தையும், வாழ்க்கையையும் இன்பமாக மாற்றிக்கொண்டிருந்தது. புரிதலை உருவாக்கி இருந்தது.

வீட்டிற்கு நல்ல மருமகளாக, விஸ்வநாதனின் வளர்ப்பு மகளாக, பெறாத மகனின் அன்னையாக, மாறாது என்று எண்ணிக்கொண்டிருந்த சத்யனின் மனத்தை அன்பாலேயே கொள்ளைக் கொண்ட தேவதையாக மாறியிருந்தாள்.

இரண்டு நாளில் வரவிருக்கும் மாயாவின் இரண்டாவது நினைவு நாளிற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள் பவித்ரா.

“அத்தை! எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். முதியோர் இல்லத்துக்கும், அநாதை இல்லத்துக்கும் முழு நாளைக்கும் நம்ம விருந்துன்னு சொல்லிட்டேன். காலைல ஒன்பது மணிக்கே ஐயர் வந்திடுவார்” என்று அவள் அடுக்கிக்கொண்டே செல்ல, மனோன்மணி பெருமிதத்துடன் அவளைப் பார்த்தார்.

மாமியாரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போக, அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

அவரது பார்வையைக் கண்டவள், “அத்தை!” என்றாள் போலியான முறைப்புடன்.

“சரி சரி, சத்யா கிளம்பிட்டானா பாரு?” என்றதும், “ம்ம்” என்று தங்கள் அறைக்குச் சென்றாள்.

அலுவலகத்தில் ஏதோ போர்ட் மீட்டிங், டின்னர் என்று இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தவன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். போதாதற்கு செல்ல மகனை நெஞ்சின் மீது போட்டு அணைத்தபடி படுத்திருந்ததைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள்.

இரவே, “நாளைக்குக் கட்டாயம் ஆஃபிஸ் போயாகணும். தூக்கிட்டாலும், எழுப்பிடு” என்று சொல்லிவிட்டே படுத்தான்.

மணி எட்டாகியிருந்தது. இனியும், தாமதிக்கக் கூடாது என்று எண்ணி, மெல்ல அவனது கரத்தை விலக்கி குழந்தையை அவனுக்குப் பக்கத்தில் கிடத்தினாள். அந்த அசைவில் திரும்பிப் படுத்தவனை உலுக்கினாள்.

அவன் எழாமல் இருக்க, “அத்தான் மணி எட்டு. ஆஃபிஸ் கிளம்ப வேணாமா?” என்றபடி அவனருகில் அமர்ந்தாள்.

அதற்காகவே காத்திருந்ததைப் போல அவளது மடியில் தலை வைத்தவன், “குட் மார்னிங்!” என்று இடையை அணைத்துக் கொண்டான்.

அவனது தலையைக் கோதியவள், “லீவ் போட்டுட்றீங்களா?” என்றாள்.

“சான்சே இல்லடா!” என்றவன் அவளது வெற்றிடையில் முத்தமிட்டான்.

பட்டென அவனது தோளில் தட்டியவள், “அழுக்கு மூட்டை! நான் குளிச்சிட்டேன்” என்றாள்.

அவளது முகத்தைப் பார்த்தவன், “அவ்ளோ சுத்தம் பார்க்கறவங்க, இப்படிப் பக்கத்துல வந்து உட்கார்ந்திருக்கக் கூடாது” என்றவன், மீண்டும் விட்ட வேலையைச் செய்ய, மீசை ஏற்படுத்திய குறுகுறுப்பில் நெளிந்தாள்.

“அத்தான்!” என்று அவள் சிணுங்கிய அதேநேரம் சத்யனின் செல்போனும் ஒலியெழுப்பியது.

அவனது தலையைக் கலைத்துவிட்டு எழுந்தவள், செல்போன் திரையில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததும் மனம் துணுக்குற்றது. மெல்ல கணவனிடம் போனைக் கொடுத்தாள்.

தலையைச் சரிசெய்து கொண்டே போனை வாங்கியவன், யுவனின் பெயரைக் கண்டதும் பவித்ராவின் முகத்தைப் பார்த்தான்.

“ஹலோ யுவன்!” என்றபடி கட்டிலை விட்டு இறங்கினான்.

“ஹாய் சத்யன் எப்படி இருக்கீங்க?” என்றான்.

“ஃபைன். நீங்க?” என்றவன் நெற்றியைத் தடவிக்கொண்டான்.

“சூப்பரா இருக்கேன் பாஸ். இப்போதான் லேண்ட் ஆனேன். இன்னும் ஒருமணி நேரத்துல, வீட்ல இருப்பேன்” என்றான்.

“ஹாங் வாங்க. முன்னாலயே சொல்லியிருந்தா கார் அனுப்பியிருப்பேனே” என்றான்.

“எங்கே லீவ் கிடைக்கவே பெரிய கஷ்டமாகிடுச்சி. அதான் நேரா இப்படியே வந்துட்டேன். நாளைக்கு ஈவ்னிங் ஹூப்ளி கிளம்பிடுவேன்” என்றான்.

“ஓகே நம்ம வீட்டுக்கு வந்திடுங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த பவித்ரா ஆதரவுடன் அவனது தோளைத் தொட்டாள்.

தலையைக் கோதிக்கொண்டு, “அவனை பேஸ் பண்ணவே சங்கடமா இருக்கு பவி!” என்றவனை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள்.

“என்னைக்கு இருந்தாலும் தெரிஞ்சி தானே ஆகணும்” என்றவள் அவனது முதுகில் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.

தன் மீதான யுவனின் காதலை அறிந்திருந்த பவித்ராவிற்கும், உள்ளுக்குள்ளே படபடவென இருந்தது. அவன் நேராக தன்னிடம் காதலைச் சொல்லாத போதும், அவனது நடவடிக்கைகளும், பேச்சும் அதைப் பகிரங்கமாக பறைசாற்றியதை அவள் உணர்ந்தவள் தானே.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
அத்தியாயம் - 20

கால் டாக்ஸிக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்த யுவனின் முகம், மாயாவின் நினைவில் ஒருநொடி சுருங்கினாலும், தன்னைச் சமாளித்துக் கொண்டான்.

ஹாலில் அமர்ந்திருந்த குழந்தையை பார்த்தவனின் விழிகளில், கனிவு பொங்கியது. மாயாவை அப்படியே உரித்து வைத்திருந்த குழந்தையை ஆசையுடன் பார்த்தான்.

“ஜுனியர்!” என்று அவன் குரல் கொடுக்க, குழந்தை அமைதியாகப் பார்த்தான்.

அவனது குரலைக் கேட்டு அறையிலிருந்து வந்த சத்யன், “வாங்க யுவன்!” என்று வரவேற்றவனின் குரலில் ஒருவித ஒதுக்கமே இருந்தது.

அதை உணராத யுவன், உற்சாகமாக உள்ளே வந்தான். அவனது குரலைக் கேட்டு வந்த மனோன்மணியும் அவனை வரவேற்றார்.

அவரிடம் விசாரித்தவன் சத்யனிடம், “சாரி! நீங்க ஆஃபிஸ் கிளம்பற நேரத்துல நான் வந்துட்டேன்” என்றான்.

“பரவாயில்ல. கொஞ்சம் லேட்டா வரேன்னு சொல்லிட்டேன். உங்களுக்காக மீட்டிங்கைக் கூட மதியத்துக்கு மாத்திக்கிட்டேன்” என்றான்.

“ரொம்பச் சாரி!” என்றான் அவன் உண்மையான வருத்தத்துடன்.

“வாங்க” என்றபடி அவனுக்குத் தண்ணீரைக் கொடுத்த பவித்ராவை அங்கே எதிர்பார்க்காதவனின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

வரவேற்பாக புன்னகைத்தவன், “நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா? ரொம்ப நல்லதா போச்சு” என்றபடி தண்ணீரை எடுத்துக்கொள்ள, குழந்தை அம்மா என்றழைத்தபடி அவளது புடவை முந்தானையைப் பிடித்துக் கொண்டான்.

நெற்றிச் சுருங்கப் பார்த்தவன், தண்ணீரைப் பருகச் சென்ற நேரத்தில், முன்பு மாயாவின் புகைப்படம் இருந்த அதே இடத்தில் குழந்தையுடன் சத்யனும், பவித்ராவும் இருந்த புகைப்படம் மாட்டியிருப்பதைப் பார்த்து விறைப்புடன் எழுந்தான்.

அவனது கண்கள், அப்பட்டமாக அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. அவனை அறியாமல், கையிலிருந்த தம்ளர் நழுவ, திரும்பிச் சத்யனைப் பார்த்தான். கை முஷ்டி இறுக, பற்களைக் கடித்தான்.

“சத்யா! என்ன இது?” என்றவனின் கரங்கள் அவனது சட்டையைப் பிடித்திருக்க, பவித்ரா அச்சத்துடன் அவர்களைப் பார்த்தாள்.

“தம்பி!” என்றபடி மனோன்மணி அவர்களை நெருங்க, சத்யன் அவனது கைகளை விலக்கினான்.

“யுவன்! உள்ளே போய்ப் பேசுவோம்” என்றான் நிதானமாக.

“பேச என்ன இருக்கு? மாயா, உன் மேலே எவ்வளவு பிரியம் வச்சிருந்தா. இவ்வளவு சீக்கிரமா அவளை மறந்துட்ட இல்ல. அவளுக்குத் துரோகம் பண்ணிட்ட இல்ல” என்று மீண்டும் சட்டையைப் பற்றினான்.

“யுவன்! உள்ளே போய்ப் பேசுவோம். நடந்ததை விளக்கமா சொல்றேன்” என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.

“என்ன விளக்கம் சொல்லப் போற? அந்த விளக்கமெல்லாம் உன்னை நியாயப்படுத்திக்கத் தானே தவிர, என்னைச் சமாதானப்படுத்தப் போறதில்ல. அவள் கொட்டிக் கொட்டிக் கொடுத்தக் காதலையெல்லாம் மறந்துட்டு, ரெண்டே வருஷத்துல புது மாப்பிள்ளையாகிட்ட. இல்லனா, இப்படி இன்னொருத்தியோட தோள்ள கை போட்டு சிரிப்போட போட்டோவுக்குப் போஸ் கொடுத்திருப்பியா?” என்று ஆத்திரத்துடன் கேட்டவனை, முறைத்துப் பார்த்தான்.

“என்னோட பொறுமைக்கும் அளவிருக்கு யுவன். என் மனைவியைப் பத்தி அநாவசியமா பேச உனக்கு எந்த உரிமையும் கிடையாது. மாயாவோட ஃப்ரெண்ட்ங்கற ஒரே காரணத்துக்காக உன்னைச் சும்மா விடுறேன்” என்று சத்யனும் தனது குரலை உயர்த்தினான்.

“சத்யா! அமைதியா இருப்பா” என்று மகனைக் கட்டுப்படுத்திய மனோ, யுவனிடம் திரும்பி, “தம்பி எல்லாமே எதிர்பார்க்காமல் நடந்து போச்சு. அதுக்கு, யாரும் பொறுப்பில்ல. விதின்னு தான் சொல்லணும்” என்றார் மன்றாடும் குரலில்.

அங்கே நடந்து கொண்டிருந்த களேபரத்தில் குழந்தை அழுதுகொண்டிருக்க, பவித்ரா மகனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

இரு கைகளாலும் தலையை அழுந்த கோதிக்கொண்டவன், சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு நின்றான். மனம் கொந்தளித்தது. கண்கள் கலங்கின. மிடறு விழுங்கித் தன்னைச் சமாளித்தான்.

எதுவும் பேசாமல் தனது உடமைகளை எடுத்தவன், “மாயாவோட போட்டோவுக்குக் கூட பஞ்சமாகிப் போன இந்த வீட்ல, தண்ணி குடிக்கிறது கூடப் பாவம்” என்றவன் தலையை உயர்த்தித் தன்னைப் பார்த்தக் குழந்தையை ஆயாசத்துடன் பார்த்தான்.

குழந்தையின் தலையைத் தொடப் போக, தந்தையிடம் சண்டையிட்டவனின் தொடுகையை இரசிக்காததைப் போல அந்தக் கரத்தைத் தட்டிவிட்டான் மனு.

“உன்னோட அம்மா இவதான்னு, இந்தக் குழந்தைக்காவது சொல்லுங்க. மாயாவோட ஆத்மா அதிலாவது சந்தோஷப்பட்டுக்கட்டும்” என்றவன் விறுவிறுவென வெளியேறினான்.

ஹோட்டல் அறையில் படுத்திருந்தவனுக்கு, தனது மனக்குமுறல் அடங்க, ஏதேனும் செய்ய வேண்டும் போலிருந்தது. ஆனால், என்ன செய்வதென்று தெரியவில்லை.

‘கதறி அழுதாலாவது மனம் ஒரு நிலைப்படுமா’ என்று எண்ணியவனால் அழக்கூட முடியவில்லை.

அவள் முதன்முதலில் சத்யனைப் பற்றிச் சொன்னபோது, அவளது முகத்தில் தெரிந்த சந்தோஷமும், தனது காதலை உதாசீனப்படுத்திவிட்டான் என்றபோது தோன்றிய ஏமாற்றமும், மூக்கு விடைக்க அழுதுவிடாமல் இருக்க, அவள் பட்ட அவதியையும் கண்ணால் பார்த்தவன்.

அவனை மறந்துவிட்டேன் என்று சொன்னாலும், ஒவ்வொரு நாளும் அவனுடைய நினைவுகளைச் சுமந்து கொண்டே திரிந்தவளை அவன் நன்றாகவே அறிந்திருந்தான்.

“அந்தச் சத்ய பிரகாஷ் உன் காதலுக்கு ஓகே சொன்னா என்ன செய்வ?” என்று கேட்ட போது, “சந்தோஷமா வாழ்வேன். அந்தத் திருப்தியிலேயே செத்திடுவேன்” என்று சொன்னபோது அந்தக் கண்களில் தெரிந்த கனவு, ஏக்கம், ஏமாற்றம் அனைத்தும் இப்போதும் அவனுக்கு நினைவில் இருந்தது.

“முட்டாள்தனமா பேசாதே மாயா” என்று அவளைத் திட்டினாலும், அவளது காதலின் ஆழம் அந்தப் பேச்சிலும், முகபாவத்திலும் தீவிரமாக வெளிப்பட்டது.

சத்ய பிரகாஷ் தனது காதலை ஏற்றுக்கொண்டான் என்று சந்தோஷத்துடன் வீடியோ காலில் சொல்லிவிட்டு, கதறி அழுததது இப்போதும் நெஞ்சைப் பிசைந்தது.

‘எனக்காகத் தானே மாயா நீ வந்த. அதனால தானே, அந்த விபத்தில் மாட்டின. இந்த உலகத்தை விட்டும் போன. நீ மட்டும் வாராமல் இருந்திருந்தால், ரெண்டு வார்த்தை திட்டோடு போயிருக்கும். ஆனால், இன்னைக்கு நீயே இல்லாமல் போய்ட்ட.

உன்னோட அன்பும் போச்சு. உன்னோ அக்கறையும் போச்சு. உன் குழந்தைக்கு, அம்மா இல்லாமல் போச்சு. இது எல்லாத்தையும் விட, உன்னை அம்மான்னு அவன் கூப்பிடுறதை கேட்கற பாக்கியம் இல்லாம போச்சே’ என்று இரு கைகளாலும் தலையைத் தாங்கிக் கொண்டு அமர்ந்தான்.

கிர்ரென அழைப்பு மணி ஒலிக்க, உறங்கிக் கொண்டிருந்த யுவன் எழுந்து அமர்ந்தான். எப்படி உறங்கினோம் என்று அவனுக்கே தெரியவில்லை. வெளியே இருட்டியிருந்தது. வயிறும் காந்தியது. காலை, மதியம் இருவேளையும் உணவோ, பானமோ எதுவும் அருந்தாமல் குழப்பத்திலும், உறக்கத்திலும் இருந்திருக்கிறான்.

மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க, தலையை சரிசெய்துகொண்டு கதவைத் திறந்தான். விஸ்வநாதன் நின்றிருந்தார். அவனது கோபம் அவரைப் பார்த்தப் பார்வையிலேயே வெளிப்பட்டது.

“வாங்க” என்று வழிவிட்டு நகர்ந்தான்.

கதவை மூடிவிட்டு, “உட்காருங்க” என்று சோஃபாவைக் காட்டினான்.

அவனை ஆழ்ந்து பார்த்தவர், “உன்னோட கோபம் அர்த்தமே இல்லாதது யுவன்” என்றார்.

“அங்கிள்! உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். ப்ளீஸ்! நீங்க எதுவும் சொல்ல வேணாம்” என்றான் எரிச்சலுடன்.

பெருமூச்சை வெளிப்படுத்தியவர், “சாப்டியாப்பா?” என்று கேட்டார்.

அவன் மௌனமாக இருக்க, அவரே ரிசப்ஷனுக்கு அழைத்தார்.

எழுந்து போனின் இணைப்பைத் துண்டித்தவன், “எனக்குத் தேவையான போது நானே பார்த்துக்கறேன்” என்றவனின் வயிறு கவாங் கவாங்கென்றது.

புன்னகைத்தவர், “உன்னை நினைச்சி எனக்குப் பெருமையா இருக்கு யுவன். மாயா மேல உனக்கு இருக்கற அக்கறை, பாசத்தைவிட எனக்கு அதிகமாவே இருக்கு” என்றார்.

அவன் மெல்ல கையை எடுக்க, ரிசப்ஷனுக்கு அழைத்து இருவருக்கும் பழச்சாறு கொண்டுவரச் சொன்னார். கண்ணாடியைக் கழற்றி டீபாய் மீது வைத்துவிட்டு முகத்தைத் துடைத்தவர், சிறு குழந்தையாக மாறிக் குலுங்கிக் குலுங்கி அழுதார்.

அதிர்ந்து போனவன், “அங்கிள்!” என்று ஆதரவாக அவரைப் பற்றிக் கொண்டான்.

அவர் அழ அழ, அவனது கண்களும் கண்ணீரைச் சுரந்தன. அவர் சமாதானம் ஆகும் வரை காத்திருந்தான். அவர் எழுந்து சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வர, இருவருக்கும் பழச்சாறும் வந்து சேர்ந்தது.

“சாப்பிடுங்க அங்கிள்!” என்று அவரது கைகளில் டம்ளரைத் திணித்தான்.

ஒரு மிடறு விழுங்கியவர், “என் பொண்ணு ரொம்பக் கொடுத்து வச்சவப்பா. ஆளுக்காகவே யோசிக்கிற உன்னை மாதிரி ஒரு ஃப்ரெண்ட். அவளோட மனசைப் புரிஞ்சிகிட்டு நடந்துகிட்ட மாப்பிள்ளை, தன்னோட பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்ட மாமியார், கூடப்பிறந்தவளா நினைச்சிப் பழகின பவித்ரான்னு, அவளைச் சுத்தி எப்பவும் அன்பும், பாசமும் தான் இருந்தது.

யாரோட கண்ணு பட்டுச்சோ? என் குழந்தை இவ்வளவு சீக்கிரம், எல்லோரையும் விட்டுட்டுப் போய்ட்டா. அவகிட்ட அந்தப் பிடிவாதம் மட்டும் இல்லாம இருந்திருந்தா, இன்னைக்கு தன் குடும்பத்தோடு சந்தோஷமா இருந்திருப்பா. போய்ட்டா. இனி, அதைப் பேசிப் பிரயோஜனம் இல்ல.

அவளுக்காக வருத்தப்படலாம். அவளோட வாழ்ந்த நாட்களை நினைச்சிப் பார்க்கலாம். ஆனா, கடைசில அது சோகத்திலும், கண்ணீரிலும் தானே முடியுது. மாப்பிள்ளைக்கு நாங்க கல்யாணம் செய்யணும்ன்னு, அப்போ நினைக்கல. காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்ன்னு தான் நினைச்சோம். ஆனா, பவித்ராவே அவருக்கு மனைவியா வந்தது, விதின்னு தான் சொல்லணும்” என்றவர் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தார்.

“என் மகள் இல்லாத வேதனையான காலங்கள்ல, பவித்ரா தான் என்னைக் கவனிச்சிக்கிட்டா. அவள் ரொம்ப நல்லப் பொண்ணுப்பா. நம்ம, மனு மேல உயிரையே வச்சிருக்கா. அவனுக்கு நிச்சயமா நல்ல அம்மாவா இருப்பா.

என் பொண்ணு வாழ வேண்டிய வாழ்க்கைன்னு சில சமயம் தோணினாலும், இவளும் என் மகள் தானேன்னு மனசைத் தேத்திக்குவேன். நான் இல்லனாலும் பவி உங்களைக் கவனிச்சிக்குவாப்பான்னு மாயா அடிக்கடி சொல்வா. அவள் எதை வச்சி அப்படிச் சொன்னாளோ! அதுவே நிஜமாகிடுச்சி.

வயசான காலத்துல பிள்ளைகளை இழக்கறது மட்டுமில்ல, மனைவியை இழக்கறது கொடுமை. என் பொண்ணு தான், தாய் இல்லாம வளர்ந்தா. என் பேரனாவது அம்மாவோட அன்பிலேயும், அரவணைப்பிலும் வளரட்டுமே” என்றவர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ஆழ்ந்து மூச்சுவிட்டவன், “நீங்க ஆயிரம் காரணங்கள் சொல்லலாம் அங்கிள். என்னால ஒத்துக்க முடியல. நீங்க மனைவி இல்லாமல் மாயாவை வளர்த்து ஆளாக்கலயா? எங்க அப்பா இல்லயா? நீங்க ரெண்டு பேரும், தனக்கு இன்னொரு மனைவி வேணும்ன்னு நினைக்கலயே” என்றான் ஆற்றாமையுடன்.

“யுவன்! சில விஷயங்களை, விதியோட கைலயே விட்டுடணும். எல்லாத்தையும் வளைக்க நினைக்கக் கூடாது” என்றார்.

அவன் மௌனமாக இருக்க, “என் பொண்ணு தான், என்னோடு இல்ல. அவளோட நினைவுகள் இன்னும் என்னோடு இருக்கு” என்றார்.

“நீங்க எத்தனை விதமா சமாதானப்படுத்தினாலும், மகளோட ஸ்தானத்தையும், தாயோட ஸ்தானத்தையும் யாராலும் ஈடுகட்ட முடியாது அங்கிள்” என்றான் அழுத்தமாக.

ஒரு கணம் அவனையே பார்த்தார்.

அவன் சொல்வதும் உண்மைதானே. மகளாக ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னாலும், பவித்ராவால் தனக்கு மாயாவைப் போன்று அன்பையும், பாசத்தையும் முழுமையாகக் கொடுக்க முடியுமா? இல்லை அந்த உரிமையை அவளுக்கு நான் கொடுத்துவிடுவேனா? என்று நினைத்தவருக்கு, விரக்தியில் புன்னகை உதித்தது.

“திரும்பவும் சொல்றேன் காலம் எல்லாத்தையும் மாத்தும். உன்னோட கோபத்தையும் மாற்றும். நீ கோபமா இருக்கலாம். அதுக்காக, என்னைக் கூடப் பார்க்காமல் வந்துட்டியேன்னு எனக்கு ரொம்பக் கவலையா இருந்தது. அதான், நானே உன்னைப் பார்க்க வந்துட்டேன்” என்றார்.

“சாரி அங்கிள்! அப்போ இருந்த நிலைல, என்னால யாரையும் பேஸ் பண்ண முடியல. என்னை மீறி ஏதாவது பேசிடுவேன்னு பயமா இருந்தது. மன்னிச்சிடுங்க” என்றான் உண்மையான வருத்தத்துடன்.

“பரவாயில்லப்பா! உனக்கு ஆட்சேபணை இல்லன்னா, நீ இங்கே இருக்கறேன்னு சொன்ன ரெண்டு நாளாவது என்னோடு இரேன். நாளன்னைக்கு மாயாவோட நினைவு நாள். அவளுக்காகத் தானே வந்த. அவள் இதெல்லாத்தையும் பார்த்துட்டுத் தானே இருப்பா” என்றார் பரிதாபமாக.

அவரது வேண்டுதலை அவனால் நிராகரிக்க முடியாமல், “வரேன் அங்கிள்! ஒரு பத்து நிமிஷம்” என்றதும் புன்னகையுடன் அவர் தலையசைத்தார்.

மறுநாள் காலையில் ஊருக்குச் செல்ல புக் செய்திருந்த விமான டிக்கெட்டை, நாளை மறுநாளுக்கு மாற்றும்படி ஏனெஜ்சிக்குக் கேட்டுக் கொண்டு, ரூமைக் காலி செய்து கொண்டு அவருடன் கிளம்பினான்.

அடுத்து வந்த இரு தினங்களும், மாயாவைப் பற்றிப் பேச இருவருக்கும் நிறைய விஷயங்கள் இருந்தன. அவளது நினைவு நாளுக்கு, அவருடன் ஹோமிற்குச் சென்று வந்தான். ஆனால், சத்ய பிரகாஷுடனோ, பவித்ராவிடமோ பேச முயற்சி கூடச் செய்யவில்லை.

தன்னிடம் வர மறுத்த குழந்தையை அவனுக்காக வாங்கி வந்திருந்த விளையாட்டுச் சாமான்களைக் காட்டிச் சமாதானப்படுத்தி தூக்கி முத்தமிட்டவன், கசிந்த கண்களைத் துடைத்துக் கொண்டான்.

விஸ்வநாதனுக்காக, மதிய உணவை அரைகுறையாக கொரித்துவிட்டு, அனைவரிடமும் விடைபெற்று அங்கிருந்தே விமான நிலையத்திற்குச் சென்றான். விஸ்வநாதனை அன்புடன் அணைத்துக் கொண்டவன், வரேன் அங்கிள்! நீங்க ஃபீனிக்ஸ் வந்து என்னோட தங்கினா சந்தோஷப்படுவேன்” என்றவனிடம், நிச்சயம் வருவதாகக் கூறி, அவனை வழியனுப்பி வைத்தார்.

‘சென்னையில், தனக்கென இருந்த நண்பனின் குடும்பம் இனி, தனக்கானதல்ல’ என்ற முடிவுடன் விமானம் ஏறியவனுக்கு, மீண்டும் ஒரு இக்கட்டான நிலையில் தான் ஓடி வரப்போவது அப்போது தெரியவில்லை.