Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மறந்து மறைந்த பெயர் | SudhaRaviNovels

மறந்து மறைந்த பெயர்

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
மறந்து மறைந்த பெயர்


"நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!"

என்ற வரிகளை சிவன் கோவிலில் அமர்ந்து நாகரத்தினம்மாளின் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தாலும் அவரின் மனமோ அன்றைய இரவு உணவுக்கு ஒவ்வொருவரும் கேட்டிருந்த பலகாரங்களை செய்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அடுப்பங்கரையில் இருக்கின்றனவா என்பதைதான் சிந்தித்துக் கொண்டிருந்தது.

அந்த சிந்தனையை கலைக்கும் விதமாக "ஏய் நீ நாகு தானே!", என்ற குரல் காதில் பாய்ந்தது. குரலுக்கு உரிய சொந்தக்காரர் யார் என்று திரும்பிப் பார்த்த நாகரத்தினம்மாள் சிறிது தனது நெற்றியை சுருக்கி யோசித்து விட்டு "ஆமா! நீ கலா ",என இழுத்தார்.

"அடப்பாவி! உன்னை பார்த்த உடனே நீ நாகுன்னு கண்டுபிடிச்சிட்டேன். நீ என்னை யோசிச்சு பார்த்து சொல்றியே! இது நியாயமா?", என்ற கலா நாகரத்தினம்மாவின் வயதினை ஒத்தவர் என பார்ப்பவர் யாராலும் கூற முடியாத அளவுக்கு முடியை குட்டையாக வெட்டிவிட்டு தொளதொளவென இருந்த பாளசோ பேண்ட் ஒரு குர்த்தி என மிகவும் ஸ்டைலாக இருந்தார்.

"நான் அடப்பாவி இல்லை. அப்பாவி மாதிரி இருந்த நீ இன்னைக்கு இவ்வளவு மாடா்னா இருந்தா என்னால எப்படி கண்டுபிடிக்க முடியும்? ஆளே மாறிட்ட கலா! எப்படி இருக்க?", என தோழியை இனம் கண்டுகொண்ட சந்தோசத்தில் நாகரத்தினம்மாளும் மகிழ்வுடன் பேச ஆரம்பித்தார்.

"இரு! இரு! சிவனுக்கு ஒரு வணக்கத்தை வச்சுட்டு வந்து உன் கூட மீதி கதையை பேசுறேன்", எனக் கூறிய கலா வேக வேகமாக சிவனை தரிசிக்க சென்றார். சிவனை தரிசிக்க தோழி சென்றால் இங்கு அமர்ந்திருந்த நாகரத்தினம்மாளுக்கு 45 ஆண்டுகளுக்கு முன்னரான தங்களது கல்லூரி பருவம் நினைவில் வந்து தொலைந்து போன நினைவுகளை மீட்டு எடுத்துக் கொண்டிருந்தது.

65 வயதில் தான் இருக்கும் தோற்றத்தையும் தன் தோழி இருக்கும் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தவர் அன்றைய காலகட்டத்தில் பாவாடை தாவணிவயுடன் கல்லூரிக்கு சென்று வந்ததையும் எண்ணிப் பார்த்தார். நாகரத்தினம்மாள் தன் எண்ணங்களுடனே அலைபாய்ந்து கொண்டிருக்கையில் சிவனை தரிசித்து விட்டு வந்த கலா "இப்பவும் நீ கனவுலகத்தில்தான் மிதந்துகிட்டு இருக்கியா?", என தோழியின் தோளில் இடித்தார்.

"கடைசி வரைக்கும் கனவு மட்டும்தான் நிலைச்சு நிக்கும்னு தெரியாம கல்லூரி படிக்கிறப்ப கனவு காண ஆரம்பிச்சது. இப்ப அதுவே நிரந்தரமாயிடுச்சு", என சிரித்த நாகரத்தினம்மாள் "நீ என்ன உன் பிள்ளைகளுக்கு போட்டியா இருப்ப போல இருக்கே", என மீண்டும் அவரது நடை உடை பாவனையில் தனது பார்வையை நிலைய விட்டாா்.

"போட்டியோ இல்லையோ! வாழ்க்கை டெல்லி போனதுக்கு அப்புறம் சுத்தமா மாறிப்போச்சு. இந்த மாதிரி இருக்கிறது சர்வசாதாரணமாயிடுச்சு", என சிரித்துக் கொண்டே கூறிய கலாவிற்கு அந்நேரம் அலைபேசி அழைத்தது. ஒரு நிமிஷம் நாகு என்றவர் தனக்கு வந்த அழைப்பை ஏற்று மிசஸ் ராகவன் ஹியர் என கூறிவிட்டு ஹிந்தியில் பட படவென பேச ஆரம்பித்தார்.

அவர் பேசி முடிக்கும் வரை அவரைப் பார்த்துக் கொண்டிருந்த நாகரத்தினம்மாளுக்கு கல்லூரி காலத்தில் வகுப்பில் ஆசிரியர் கேட்பதற்கு கூட சாதாரண ஆங்கிலத்தில் பதிலளிக்க திணறிய தன்னுடைய தோழியா என்ற எண்ணம் தான் அப்பொழுது இருந்தது. காலங்கள் எவ்வளவு வேகமாக மாறிவிடுகின்றன.

தனது பேச்சினை முடித்த கலா "நாகு! உன்கிட்ட ரொம்ப பேசணும். இப்ப நேரம் இல்லை. என் நாத்தனாரோட பொண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கு. வந்தே ஆக வேண்டிய கட்டாயம். அதனால்தான் நானும், அவரும் வந்தோம். எனக்கு உன்னோட அட்ரஸ் அனுப்பு. நான் உன்னை வீட்ல வந்து பாா்க்குறேன். ஒரு நாள் முழுக்க உன் கூட உட்கார்ந்து கதை பேசணும்", என தன்னுடைய அவாவை கூறியதும் நாகரத்தினமமாளும் எனக்கு உன் நம்பரை எழுதிக் கொடு. நான் வீட்ல போய் என் பேரன்கிட்ட சொல்லி உனக்கு அட்ரஸ் அனுப்பி வைக்கிறேன். எனக்கும் உன்கிட்ட பேச வேண்டியது நிறைய இருக்கு. என்னைக்கு உன்னால வர முடியும்? அதை இப்பவே சொல்லிடு. உனக்கு புடிச்ச எல்லாம் நான் ரெடி பண்ணி வைக்கிறேன்", என மகிழ்வுடன் தன்னுடைய பதிலை கூறினார்.

"நீ அதெல்லாம் எதுவும் பண்ண வேண்டாம், என்கூட உட்கார்ந்து பேசுறதுக்கு மட்டும் நேரம் செலவழி. வேற எதுவும் வேண்டாம்", என்று கூறிய கலா தன்னுடைய எண்ணை நாகரத்தினம் நீட்டிய ஒரு சிறு பேப்பரில் தனது கைப்பையில் இருந்த பேனாவை எடுத்து எழுதி கொடுத்தார். "என்ன நாகு! இப்ப பிறந்த குழந்தையே ஸ்மார்ட்போன் வச்சிக்கிட்டு இருக்கு. நீ இன்னும் பேப்பர்ல எழுதிட்டு போறியே என்றதற்கு நாகரத்தினம்மாள் சிரித்துக் கொண்டே "என்கிட்டயும் போன் இருக்கு. கோவிலுக்கு வர்றப்ப அது வேற சத்தம் போட்டுக்கிட்டே இருக்குன்னு வீட்ல வச்சுட்டு வந்துட்டேன். அதனால்தான் போன் எடுத்துட்டு வரலை. என் நம்பரை குறிச்சிக்கோனு சொல்றதுக்கு என் நம்பரும் எனக்கு மனப்பாடமா தெரியாது", என்றாா்.

நீ சொல்றது கரெக்ட்தான் என் நம்பரை கேட்டா எனக்கும் தெரியாது. இப்பக் கூட பார்த்து பார்த்துதான் எழுதி தர்றேன்", என்ற கலா தன்னுடைய எண்ணையும் எழுதி கொடுத்துவிட்டு தோழியிடம் வருகின்ற ஞாயிறு சந்திப்போம் எனக் கூறிவிட்டு நகர்ந்தார்.

தோழியை பல வருடங்கள் கழித்து சந்தித்த மகிழ்ச்சியில் வீட்டிற்கு வந்த நாகரத்தினம்மாள் சமையல் அறைக்கு செல்லும் முன்னர் தன் கணவரிடம் "ஏங்க என்கூட படிச்சான்னு சொல்லிட்டு இருப்பேனே கலானு அவளை இன்னைக்கு கோவிலில் பார்த்தேன். அவளுக்கு நம்ம அட்ரஸை கொஞ்சம் என் போன்ல இருந்து அனுப்பி விடுங்க. இந்தா இதுதான் அவ நம்பர்", என எந்த முகாந்திரமும் இல்லாமல் தன் கணவரிடம் நீட்டியதற்கு அவரோ "நான் முக்கியமான வேலையா இருக்கேன்னு தெரியலையா? போ! போய் எனக்கு ராத்திரிக்கு கொஞ்சம் சீக்கிரமா சமைச்சு கொடு. அப்பவே பசி எடுத்துச்சு", என தன்னுடைய பசியில்தான் குறியாக இருந்தார்.

என்ன முக்கியமான வேலை என நாகரத்தினம்மாள் அவரைப் பார்த்த பொழுது காலையில் படித்த பேப்பரை மீண்டும் ஒருமுறை படித்துக் கொண்டிருந்தார் அவரின் பதியான வேணு. பேப்பர் தயாரிக்குறவன் கூட இவ்வளவு படிச்சிருக்க மாட்டான் என மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டே ஹாலில் அமர்ந்திருந்த மகனிடமும் மருமகளிடமும் கேட்கலாமா என்று எண்ணியவர் அந்த எண்ணத்தை தவிர்த்து விட்டு தன் பேரனிடம் சென்றார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் பேரனிடம் சென்று "கண்ணா பாட்டிக்கு ஒரு ஒத்தாசை பண்ணுறியா?", என மிகவும் வேண்டுதலாகக் கேட்டார். தன்னுடைய மொபைல் போனிலிருந்து கண்ணை எடுக்காமலேயே "சொல்லுங்க பாட்டி முடிஞ்சா பண்றேன். இல்லை அப்படின்னா என்னால முடியாது. நீங்க தொந்தரவு பண்ணக்கூடாது", என அவன் கூறியதும் தன் தோழிக்கு தங்களது முகவரியை அனுப்ப வேண்டும் ச என அவனிடம் வேண்டுதல் வைத்தார்.

" இருங்க என் நம்பர்ல இருந்து உங்களுக்கு பார்வேர்ட் பண்றேன். ஃபார்வேர்ட் பண்ணிட்டு அதை அப்படியே அனுப்பிடலாம்", என்றவன் அதனை அப்படியே செய்தான். அவன் முகவரியை தன்னுடைய மொபைலில் இருந்து கலாவிற்கு அனுப்பும் முன்னர் அதுல நாகரத்தினம் அப்படின்னு என் பேரை போட்டு அனுப்பு. அப்படினாதான் அவளுக்கு தெரியும் என மிகவும் பெருமையாக கூறிய பாட்டியை ஒரு பார்வை பார்த்தவன் இந்த பேர்ல என்ன பெருமை இருக்கோ என்ன முணங்கியவாறு அவர் கூறியதை செய்தான்.

இன்னும் ஞாயிற்றுக்கிழமைக்கு மூன்று நாள் இருக்கே! அவளுக்கு பிடிச்சதா செய்யணுமே. அப்படியே சாப்பிடுறாளோ,இல்லை அதெல்லாம் வயசு ஆயிடுச்சுன்னு குறைச்சிட்டாளா? சுகர் இருக்கா இல்லையான்னு கேட்க மறந்துட்டேனே!", என சிந்தித்துக்கொண்டவாறே வீட்டில் இருக்கும் நான்கு உறுப்பினர்களுக்கு நான்கு விதமாக இரவு உணவை தயாரிக்கச் சென்ற நாகரத்தினம்மாள் அந்த வீட்டில் தானும் வசிக்கிறோம் என்பதை மறந்து விட்டு நாலு பேரும் முழுசா சாப்பிட்டா முடிக்க போறாங்க? கொஞ்சம் கொஞ்சம் வைப்பாங்க அதையே நாம சாப்பிட்டுக்கலாம் என்ற எண்ணத்துடன் தன்னுடைய பணியில் மூழ்கி விட்டார்.

நாட்களை எண்ணிக் கொண்டிருந்த நாகரத்தினம்மாள் ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணியிலிருந்து வாசலுக்கும், வீட்டினுள்ளும் அலைவதுமாக இருந்தார். ஏழு மணி போல எழுந்து வந்த அவரது மருமகள், மகன்,கணவர், பேரன் என ஒவ்வொருவரும் ஏன் இப்படி நடக்குற? வீட்டுக்குள்ளேயே இரு உன் பிரண்டு வந்தா கூப்பிட மாட்டாளா என அவரை கலாய்த்து கொண்டிருந்தனர்.

இவங்களை பாா்க்குறதுக்கு டெய்லி வீட்டுக்கு மனுசங்க வர்றாங்க.நான் ஏதாவது சொல்றேனா? என்னை பாா்க்க பல வருஷம் கழிச்சு ஒருத்தி வரப்போறா .பிறந்த வீட்டிலிருந்து வர்றதுக்கு ஒரு ஜனம் கூட இல்லை. நண்பின்னு ஒருத்தி வர்றா அதுகூட உங்களுக்கு பொறுக்கலையா என அதையும் மனதின் உள்ளே எண்ணிக் கொண்டிருந்த நாகரத்தினம்மாள் தானே போன் பண்ணி கேட்கலாம் என்ற எண்ணத்துடன் தோழி தனது எண்ணை குறித்து கொடுத்த பேப்பரை தேட ஆரம்பித்த பொழுது தான் அது தன் கையில் இல்லை என்பதை உணர்ந்தார்.

வேக வேகமாக பேரனிடம் சென்றவர் "டேய்! கண்ணா! அன்னைக்கு ஒரு பேப்பரை கொடுத்து ஒரு பாட்டிக்கு அட்ரஸ் அனுப்புனியே அந்த நம்பருக்கு போன் போட்டு குடுடா", என வேண்டுதல் வைத்த பொழுது அவனோ நான் என் நம்பரிலிருந்து உங்க நம்பருக்கு அனுப்பி தானே அனுப்பினேன் என மிகவும் கூலாக கூறினான். அதாண்டா என் நம்பர்ல அது என்ன நம்பர்னு பார்த்து எனக்கு போட்டு கொடு என வேண்டுதல் விடுத்த பாட்டியை சிரித்துக்கொண்டே நோக்கியவன் "ஐயோ பாட்டி! உங்ப ஃபோனை நான் நேத்திக்கு ரீசெட் பண்றேன்னு சொல்லி அதுல எல்லாமே டெலீட் ஆயிடுச்சு", என அவரது தலையில் ஒரு குண்டை எடுத்து போட்டான்.

"ஏன்டா இப்படி பண்ணுன? சரி அந்த பேப்பராவது எங்கடா என்நதற்கு அது அன்னைக்கே நான் குப்பையில தூக்கி போட்டுட்டேன். பேப்பரா வீடெல்லாம் சேர்த்து வச்சிட்டு இருக்க முடியுமா?", என்ற குரல் பேரனிடமிருந்து வருவதற்கு பதிலாக மருமகளிடமிருந்து வந்தது. எனக்கு தேவையானதுனத உங்களுக்கு எல்லாம் தேவையில்லாததா போயிடும் என எண்ணிய நாகரத்தினம்மாள் வேறு வழியின்றி கலாவிற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.


தன்னிடம்தான் கலாவின் எண் இல்லை ஆனால் கலாவே தன்னை அழைப்பாள் என அவருக்கு அந்நேரம் தோன்றாமல் போனதுதான் விதியோ? பாட்டியின் போனை ரீசெட் செய்த பேரன் அதில் சார்ஜ் இல்லாமல் அது ஸ்விட்ச் ஆஃப் ஆகி கேட்பாரற்று கிடப்பதை அவரிடம் கூற மறந்து போனானோ? மறைத்து விட்டானோ? யார் அறிவார்? நான்கு மணிக்கு எழுந்தவர் 12 மணி வரை அங்கும் இங்கு நடந்துவிட்டு வீட்டில் இருப்போருக்கு சமைத்ததுடன் இடையிடையில் தன் தோழிக்கு பிடித்த விதமாகவும் செய்து கொண்டிருந்தார்.

மதியம் கடந்து மாலையும் கடந்து விட்டது இரவும் கடந்து விட்டது. கலாவின் அழைப்பும் வரவில்லை. அச்சோ அவளுக்கு என்னாச்சுன்னு தெரியலையே என நாகரத்தினம்மாள் பதறியதற்கு மாறாக அவரது வீட்டினரோ டெல்லியில் இருந்து வந்தவங்களுக்கு வேற வேலையே இல்லையா? உன்னை இங்கு வந்து பார்க்கிறதுதான் வேலையா என்ன? பேசாம இருப்பியா? கோவிலில் பார்த்து ஒரு பேச்சுக்கு சொல்லி இருப்பாங்க. உடனே என்னை பாா்க்க வர்றா பாா்க்க வர்றான்னு என்ன குதி குதிச்சுட்டு இருந்த என்று ஆளுக்கு ஒரு பக்கமாக இடித்துரைத்ததில் நொந்து போனவர் எதுவும் கூறாமல் அமைதியாகி போனார்.

மறுநாள் திங்களன்று அதே சிவன் கோவிலுக்கு சென்ற நாகரத்தினம்மாள் எப்பொழுதும் அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டிருக்க அவர் கிளம்பும் நேரத்தில் எதிரில் வந்த கலா "நீ எல்லாம் ஒரு மனுஷியாடி?நான் உன் வீட்டுக்கு வர்றது பிடிக்கலை அப்படின்னா நேரடியா சொல்லி இருக்கனும். ஏன் தப்பான அட்ரஸை கொடுத்து என்னை நேத்து முழுக்க அலையவிட்ட? உன்னால என் கூட சேர்ந்து என் வீட்டுக்காரர், என் பிள்ளை எல்லாருமே அலைஞ்சாங்க. என் மானமே போச்சு", என முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு பொரிந்தார்.

"என்ன கலா! இப்படி சொல்ற? நீ வருவன்னு காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் நான் காத்துகிட்டு இருந்தேன். நீ என் மேலயே குறை சொல்ற. இல்லாத அட்ரஸ் எப்படி தருவேன்?இந்த கோவில் குருக்கள்கிட்ட கேளு. இதே கோயிலுக்குன்னு எத்தனை வருஷமா வந்துட்டு இருக்கேன்", என பதிலுக்கு கூற அவரோ "நான் இந்த தெருக்கடைசியில தான் இருக்கேன். அதனாலதான் இந்த கோயிலுக்கு இன்னைக்கு வந்தேன். இன்னைக்கு ராத்திரி எனக்கு ஃப்ளைட்", என கூறிவிட்டு "நேத்திக்கு முழுக்க நீ கொடுத்த அட்ரஸ்ல வந்து அங்க இஸ்திரி பண்ணிக்கிட்டு இருந்தவன், அந்த ஏரியால இருக்குற எல்லார் வீட்டு போர்டுனு ஒன்னு விடாம நான் பாா்த்துட்டேன். இஸ்திரி பண்ணறவா்கிட்ட நாகரத்தினம்மானு கேட்டா அப்படி ஒரு பேர்ல இங்க யாருமே இல்லையே! இங்க இதே தெருவுல தான் 15 வருஷமா நான் துணியை தேய்ச்சுகிட்டு இருக்கேன்.இந்த போ்ல யாரும் இல்லையே அப்படின்னு சொல்லிட்டாரு. தாயே இனிமே உன் நட்பும் வேண்டாம். உன் சகவாசமும் வேண்டாம். உன் வீட்டுக்கு நான் வரவும் வேண்டாம். இதோட விட்டுடு", எனக் கூறிவிட்டு கலா சிவனை தரிசிக்க சென்று விட்டார்.


கலா படபடவென புரிந்து விட்டு சென்றாலும் அவர் கூறியதில் இறுதி வார்த்தைகள் நாகரத்தினம்மாளுக்கு செவியில் அறைந்தது போல் இருந்தது. அதே இடத்தில் சிறிது நேரம் நின்றிருந்தவர் கலா தன் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கான காரணத்தை உணர்ந்தவராக கலா வெளியில் வந்தவுடன் "கலா! போனவாரம் உனக்கு ஒரு போன் வந்தப்ப எடுத்தவுடனே உன் பேரை சொல்லாம நீ மிசஸ் ராகவன் ஹியர் அப்படின்னு ஏன் சொன்ன?", என்ற ஒரு கேள்வியை வினவினார்.

இவளுக்கு மூளை குழம்பிடுச்சா என பார்த்த கலா இருந்தாலும் அதற்கு பதிலாக "பொதுவா எனக்கு கால் பண்றவங்க, என் கூட பேசுறவங்க எல்லாருமே மிசஸ் ராகவன் அப்படின்னுதான் கூப்பிடுவாங்க", எனக் கூறினார். "அதேதான் கலா! நாகரத்தினம் மறைஞ்சி மிஸஸ் வேணு மட்டும்தான் மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கு",எனக் கூறிவிட்டு "நான் அட்ரஸ் அனுப்புன நம்பருக்கு நீ ஒரு தடவை போன் பண்ணி பார்த்திருக்கலாம்", என ஆதங்கத்துடன் சொன்னார்.

"வேண்டாம் நாகு! எனக்கு வெறி ஏத்தாதே! உன் நம்பருக்கு நான் ஒரு நூறு தடவையாவது ட்ரை பண்ணி இருப்பேன். ஒண்ணுமே போகலை", எனக் கூறியவர் வேறு ஏதும் பேச விரும்பாமல் அவ்விடத்தை விட்டு நகா்ந்துவிட்டாா்.

வீட்டிற்கு வரும் வழி முழுவதும் தன் தோழி தன்னிடம் பேசிவிட்டு சென்றதை விட தான் அடுத்து செய்ய வேண்டியவை பற்றிதான் நாகரத்தினம்மாள் சிந்தை முழுவதும் சீராடிக். கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்த நாகரத்தினம்மாள் அன்றைய தினம் எதுவும் சமைக்காமல் நேரடியாக தங்களது அறைக்கு சென்று படுத்து விட்டார்.

வீட்டிலிருந்தவர்கள் ஆளாளுக்கு என்ன ஆச்சு ஏதாச்சு என்று அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனரே தவிர்த்து யாரும் அவரிடம் வந்து விசாரிக்கவில்லை. இறுதியில் அவரது கணவர் வேணுதான் உள்ளே வந்து "ஏய் நீ என்ன ராத்திரிக்கு சமைக்காம வந்து படுத்துட்ட? எல்லாரும் பட்டினி கிடக்க முடியுமா? மருமக வேலைக்கு போயிட்டு வந்து அலுப்பா உட்காா்ந்து இருக்காப்ல. நீ வீட்லதான இருக்க இது கூட செய்யாம என்ன படுத்துட்டு இருக்க?", என கேட்டதற்கு அவருக்கு ஒரு முறைப்பை மட்டும் செலுத்தி விட்டு மீண்டும் திரும்பி படுத்து கொண்டார்.

மறுநாள் பொழுது விடிந்த பின்னரும் எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்த நாகரத்தினம்மாளை பார்த்து அவரது மகன் "உனக்கு இப்ப என்னம்மா பிரச்சனை? உன் ஃபிரண்டு ஒரு நாள் வீட்டுக்கு வரலை அப்படின்னு மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்க.இத்தனை வருஷமா உன்னை பாா்க்க ஃப்ரெண்டெல்லாம் வீட்டுக்கு வந்துகிட்டுதான் இருந்தாங்களா? பார்க்க வேண்டிய வேலையை பாருமா. அவன் ஸ்கூலுக்கு போகணும், நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போகணும். இவ்வளவு இருக்கிறப்ப நீ பாட்டுக்கு போய் படுத்து தூங்கிட்டு இருக்க. என்ன பிரச்சனை? என்றவனை பார்த்து நிதானமாக பேச ஆரம்பித்தார்.

"வீட்டுக்கு முன்னாடி உங்க பேரு எல்லாத்தையும் போட்டு ஒரு போர்டு வச்சிருக்கீங்க இல்லையா, அந்த போர்டுல என் பேரையும் வைக்கணும்", என நதகரத்தினம்மாள் கூறியதை கேட்டு அவரது மருமகள் களுக்கென்று சிரித்து விட்டாள். அவளை ஒரு பார்வை பார்த்தவர் தன் கணவரிடம் திரும்பி "இனிமேல் ஏய்னு கூப்பிட்டால் பச்சை தண்ணி கூட உங்களுக்கு வராது. என் முழு பெயரை சொல்லி கூப்பிடுங்க. இல்லைன்னா சுருக்கி கூப்பிடுங்க. பேர் சொல்லிக் கூப்பிட்டா மட்டும்தான் நான் இனிமேல் எதுவும் செய்வேன்", என சிறு பிள்ளை போல அடம்பிடித்த தனது மனைவியை பார்த்த வேணு

"உனக்கு இப்ப என்ன ஆச்சு? இதுக்கு மேல உன்னை செல்ல பெயர் சொல்லியா கூப்பிட முடியும்? வயசாயிடுச்சு, பேரன் 10 படிக்கிறான். உனக்கு மனசுல அந்த எண்ணம் இருக்கா?", என்றதற்கு அதுவரை அமைதியாக பேசிக் கொண்டிருந்த நாகரத்தினம்மாள் பொங்கி விட்டார்.

"செல்லப்பேரு யார் கேட்டது? இங்க என் பேரைதான் நான் கேட்கிறேன். வாசலில் இருக்கிற போர்டுல என் பெயரை சேர்த்து வைக்க முடியுமா? முடியாதா? அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க", எனக் கூறினார். அவரது பேச்சை கேட்டதும்"உங்க அம்மாவுக்கு ஏதோ ஆகிடுச்சு. டிபன் ஆர்டர் பண்ணிடுங்க. நான் இன்னைக்கு ஆபீஸ் கேண்டின்ல சாப்பிட்டுக்கிறேன். நீங்களும் சாப்பிட்டுக்கோங்க. டேய் கண்ணா நீ ஸ்கூல் போறப்ப தாத்தாவை ஏதாவது வாங்கி தர சொல்லி சாப்பிட்டுக்கோ. இந்த வெட்டி விஷயத்துக்கு எல்லாம் என்னால உக்காந்து வேடிக்கை பார்க்க முடியாது", என்று கூறிய மருமகள் தன்னுடைய அலுவலகத்துக்கு கிளம்ப ஆரம்பித்து விட்டாள்.

அவருடைய மகனும் அது போல் சென்று விடவே அவரது கணவரோ பேரனுக்கு தேவையானவற்றை வாங்கிவிட்டு தனக்கும் வாங்கிக் கொள்ள வெளியே சென்றுவிட்டார். அன்றைய தினம் முழுவதும் எதுவும் செய்யாமல் தனக்கு பசித்த நேரத்தில் மட்டும் சமையலறை சென்றவர் தனக்கு மட்டுமாக உணவை செய்து கொண்டு சாப்பிட்டு கொண்டு அடமாக அமா்ந்திருந்தார்.

மகன் மருமகள் வேலைக்கு சென்ற பின்னரும் வேணுவும் தன் மனைவியிடம் பேசவும் இல்லை ,கேட்கவும் இல்லை. வழக்கம் போல் தன்னுடைய பேப்பர், டிவியில் தான் பார்க்கும் நிகழ்ச்சிகள் என அவரது நாள் எப்பொழுதும் போல் சென்றது. அன்றைய இரவு பொழுது மீண்டும் அவர் தன்னுடைய முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்க அவரது பேரன் "என்ன பாட்டி போர்டுல பேர் வைக்கணும்னு சொல்றீங்க.தாத்தா டீச்சரா இருந்து ரிட்டையர்டு ஆகி இருக்காரு. அதனால அவர் பெயர் இருக்கு. அம்மா வேலைக்கு போறாங்க, அதனால அவங்க பேர் இருக்கு. அப்பாவும் வேலைக்கு போறாரு அதனால தான் பேர் எல்லாம் போட்டு வச்சிருக்காங்க. நீங்க வேலைக்கு எதுவும் போகலையே! வீட்டுல தானே இருக்கீங்க. உங்க பேரு ஏன் போா்டுல வைக்கணும்", என்றதும் அவனை திரும்பி பார்த்துவிட்டு நாகரத்தினம்மாள் தன் கணவரிடம் திரும்பி உங்களுக்கு என் பேர் என்னன்னு தெரியுமா என வினவினார்.

"உனக்கும், எனக்கும கல்யாணம் முடிஞ்சு 47 வருஷம் ஆச்சு. இப்பதான் உனக்கு இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்கணும்னு தோணுதா? இந்த வயசுக்கு மேல எல்லாம் என்னால செல்ல பேர் சொல்லி கூப்பிட முடியாது", என அவர் கேட்டதற்கான பதிலை கூறாமல் தன் பதிலை மட்டுமே வேணு கூறினார்.

"இதுதான் எனக்கு பிரச்சனை. என் ஃபிரண்டு இந்த தெருவுல வந்து என்னை தேடி அலைஞ்சிட்டு போயிருக்கா. ஆனா இங்க இருக்கிற யாருக்குமே என்னோட பேர் தெரியலை. அதுக்கு காரணம் நீங்க எல்லாரும் சேர்ந்துதான் தெரியும் விடாம பண்ணிட்டீங்க",என நாகரத்தினம்மதள் கூறியருடன் அவருடைய மருமகள் இதென்ன லூசுத்தனமா இருக்கு என்ற ஒரு வார்த்தையை விட்டாள்.

" ஆமாமா லூசுத்தனமாதான் இருக்கு.நான் பிறந்த உடனே இன்னாருடைய மகள்னு சொன்னாங்க. பள்ளிக்கூடத்துக்கு போனப்பதான் என் பேரு சொல்லி கூப்பிட்டாங்க. எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவங்க மட்டும் தான் பேர் சொல்லி கூப்பிட்டாங்க. இதோ இருக்காரே உன் மாமனாரு கல்யாணமான புதுசுல அவங்க அம்மாவுக்கு தெரியாம ரெண்டு மூணு தடவை என் பேரை சொல்லி கூப்பிட்டு இருக்காரு. அவ்வளவுதான்.

வேற ஏதாவது வேணும்னாலும் எல்லார் முன்னாடியே ஏய் இங்க பைல் வச்சிருந்தேன் காணோம், ஏய் இந்த சட்டையை காணோம்னு தான் சொல்லுவாா். ஆனா அந்த "ஏய்"க்கும் நான் எல்லா வேலையும் செஞ்சேன்,செய்றேன். அதுக்கு அடுத்து வெளியில இவர் வாத்தியார வேலை பார்த்தாருன்னு வாத்தியார் வீட்டு அம்மா அப்படின்னு சொன்னாங்க. இவரோ இன்னைக்கு வரைக்கும் என்னை பேர் சொல்லி ஒரு மரியாதையா எங்கேயும் நடத்தலை. உன் புருஷன் இங்க நிக்கிறானே நெடுமாடு மாதிரி, இவன் பிறந்ததுல இருந்து இவனுக்கு அம்மான்னு சொல்லிதான் இந்த ஊர்ல சொன்னாங்க.

அதுக்கு அடுத்து நீ கல்யாணம் பண்ணி வந்து உன் மகன் பிறந்ததுக்கு அப்புறம் அவனுக்கு நான் பாட்டியாதான் இந்த ஊருக்கு அடையாளம் தெரியிறேன். வீட்டுக்கு முன்னாடி துணியை தேய்ச்சுக்கிட்டு இருக்குற அந்த இஸ்திரிகாரனுக்கு என் பேரு தெரியலை. நீ வேலைக்கு போறியே !வேலைக்கு போற இடத்துல உன்னை எப்படி கூப்பிடுறாங்க?", என தன் ஆதங்கத்தை கொட்டியவர் அவளிடம் ஒரு கேள்வியை வைத்தார்.

"நான் வேலை பார்க்கிறது எம் என் சி.அதுல எல்லாம் பேர் சொல்லி தான் கூப்பிடுவாங்க", என மாமியாருக்கு பதில் கூறியவளுக்கு அப்பொழுதுதான் தன் மண்டையில் உரைத்தது,மகனின் பள்ளிக்கு சென்றாலோ தன் வீட்டின் அருகில் இருப்பவர்களுக்கோ மகனின் பெயரை வைத்து அவனது அம்மா என்றுதான் அவளையும் இப்பொழுது அழைத்து வருகின்றனா். அவளது முகமாற்றத்திலேயே மருமகளுக்கு தான் கூற வருவது புரிந்து விட்டது என நாகரத்தினம் உணர்ந்து கொண்டார்.

" பிறந்தப்ப நாள் நட்சத்திரம் பார்த்து எனக்கு வச்ச பேரு கொஞ்சம் கொஞ்சமா மறந்து இன்னைக்கு மறைஞ்சே போச்சு. சாகுறப்பவாது நாகரத்தினமா சாகணும்னு ஆசைப்படறேன். இன்னாருடைய பொண்டாட்டி, இன்னாரோட அம்மா, இன்னாரோட பாட்டி அப்படிங்கிற பேர்ல சாக நான் ஆசைப்படலை. அதனால என் பேரையும் அந்த போர்டில் வையுங்க. நான் வேலை செய்றேன், செய்யலைங்கிறது இரண்டாவது விஷயம்.

இந்த வீட்டை சேர்ந்த ஒரு சக மனுசி அடையாளம் தொலைந்து வாழ்வதில் உங்களுக்கு எல்லாம் வருத்தம் இல்லையா?", என சிறிது அழுகையுடன் நாகரத்தினம்மாள் கேட்டதற்கு யாரும் அங்கு பதில் கூறுவார் இல்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து அவரது மகன் "அம்மா உன் பேரை மட்டும் வச்சு அடையாளம் தெரியனும்னா நீ பெரிய ஆளா சாதித்து இருக்கணும். எவ்வளவு பொம்பளைங்க இப்ப சாதிக்குறாங்க.அந்த மாதிரி சாதிச்சிருந்தா உன் பேரும் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்", என நக்கலாக பதில் கூறவும் அதுவரை அழுது கொண்டிருந்தவர் தனது அழுகையை நிறுத்திவிட்டு

"எல்லாம் சரிதான்டா எத்தனை பேரு சாதனை செஞ்சிருந்தாலும் பின்னாடி அந்த புருஷனோட குடும்ப பேரையோ இல்லைனா அப்பா வீட்டு குடும்ப பேரையோ போட்டுகிட்டுதானே இருக்காங்க. பெருசு பெருசா சாதிச்சவங்க பேரு மட்டும் சொன்னா உங்களுக்கு தெரிஞ்சுருமா?", என்றவுடன் "சொல்லிப் பாரு எங்களுக்கு தெரியுதா இல்லையான்னு உனக்கு நிரூபிக்கிறோம்.
சாதிச்சவங்க பேரு எப்படி தெரியாம போகும்", என அவரது கணவரும் பதில் அளித்தார்.

உடனே இந்திரா என நாகரத்தினம்மாள் ஒரு பெயரை கூறிய உடன் இதுவா தெரியாது இந்திரா காந்தி, நேருவோட பொண்ணு என அப்பாவும் மகனும் ஒருமித்த குரலில் கூறினார்கள்." காலையில எந்திரிச்சதிலிருந்து ராத்திரி தூங்க போற வரைக்கும் அந்த பேப்பரை பத்து வாட்டி படிக்கிறாரே உங்க அப்பா அவருக்கு இந்திரானு சொன்னவுடனே இந்திரா காந்திதான் ஞாபகம் வர்றாங்க. இந்திரா நூயின்னு ஒருத்தவங்க இருக்காங்க. அவங்க எல்லாம் ஞாபகத்துக்கு வரல. சாதிச்சாலும் சாதிக்கவில்லைனாலும் பின்னாடி ஒரு பேர் போட்டா மட்டும்தான் உங்களுக்கெல்லாம் அடையாளம் தெரியுது.

எனக்கு அந்த பின்னாடி போடுற பேர் வேண்டாம். என் பேரை மட்டும் போட்டு போர்டுல போட முடியுமா முடியாதா? நீங்க போட்டா தான் வீட்ல சமைப்பேன்", என்ற நாகரத்தினம்மாள் தனக்கான அடையாளத்திற்காக போராடுவது அங்கிருப்போருக்கு சற்றும் புரியவில்லை.வீராப்பாக கூறியவர் பேரன் பாட்டி பசிக்குது என்ற உடன் இப்ப மட்டும் தான் செய்வேன் என கூறிவிட்டு சமையல் அறைக்கு சென்றார்.

என்னப்பா ஆச்சி அம்மாவுக்கு என்ற மகனின் கேள்விக்கு பதிலாக வேணுவோ "விடுடா நாளைக்கே இதை மறந்துடுவா", என அசால்ட்டாக பதில் உரைத்தார். ஆம் அவர் மறந்து தான் விடுவார். அவரது பெயர் மறந்து மறைந்த பெயரானது போன்றே அவரது ஆசைகளும் கேள்விகளும் அனைவராலும் மறந்து மறைக்கப்பட்டு விடும்.

முற்றும்