Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மனைவியே சரணம்-7 | SudhaRaviNovels

மனைவியே சரணம்-7

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
மனைவியே சரணம்-7

தங்களின் அறையில் இருந்து வெளியில் வந்த அம்பிகா சமையலறையில் சுந்தரியின் குரலைக் கேட்டு நேராக அவரின் முன்னே சென்று நின்றாள். புது மருமகளிடம் முதல் நாளிலேயே தன்னுடைய மாமியார் அதிகாரத்தை காட்ட விரும்பாத காரணத்தால் "இப்பதான் எந்திரிச்சியாடா? உனக்கு காபியா இல்லை பாலா? எது வேணும்னு சொல்லு நான் போட்டு தர்றேன்", என தன் கொஞ்சும் குரலில் சுந்தரி பேசியதை மனைவியுடன் அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த சுதாகருக்கு மயக்கமே வந்துவிட்டது.

அவரது மனைவியின் இதுபோன்ற கொஞ்சல் குரல் எப்போதேனும் தன்னுடைய காதில் விழுந்துள்ளதா என தன் ஞாபக இடுக்கினை தட்டி பார்த்தபொழுது எதுவும் இல்லை என்ற உண்மை அவரது மண்டையில் உரைத்தது. இந்த ஆராய்ச்சி இப்பொழுது முக்கியமா என்னும் விதமாக தன் மனதை தானே சமாதானப் படுத்திக் கொண்டவர் அம்பிகாவையும், சுந்தரியையும் மாறி மாறிப் பார்த்தார்.

சுந்தரியின் பேச்சில் தன்னுடைய உதடுகளை நன்றாக இழுத்து வைத்து சிரித்த அம்பிகா "நீங்க எவ்வளவு ஸ்வீட்... உங்களை மாதிரி ஒரு நல்ல அம்மா, நல்ல மாமியார யாருக்காச்சும் கிடைக்குமா? உங்க மகனுக்கு நீங்க சொல்லிக் கொடுத்த புத்தியும் அதே மாதிரி வேற எந்த அம்மாவும் சொல்லித்தர முடியாது. எப்படி உங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் சொல்லித் தரணும்னு தோணுச்சு", எனக் கேட்டாள்.

அவள் பேசியது எதுவும் மறைமுக குத்தலோ என யோசித்த சுந்தரி இப்போதைய நிலையில் எதுவும் கூற விரும்பாமல் "என் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கத்தை மட்டும்தான் சொல்லித் தருவேன் அம்பிகா! அந்தக் கதையெல்லாம் நாம அப்புறம் பேசிக்கலாம். இப்ப உனக்கு என்ன வேணும்னு சொல்லு. நான் போட்டு தர்றேன்", என பதிலுரைத்தார்.

ஏற்கனவே அம்பிகா கூறியதில் தன்னுடைய நெஞ்சில் கையை வைத்து உட்கார்ந்திருந்த அரவிந்த் தன்னுடைய மாமியார் கூறிய பதிலில் அவ்விடத்திலேயே படுத்துவிட்டான். அவன் இருந்த நிலையை பார்த்த சுதாகர் வேகவேகமாக அருகில் வந்து "மாப்பிள்ளை! மயக்கம் வந்திருச்சா? இந்த மாதிரி மயக்கத்தை நாம நிறைய பார்க்க வேண்டியது இருக்கே.நீங்க இதுக்கே அசந்துட்டா எப்படி?", எனக் கூறினர்.

மாமனாரின் குரலைக் கேட்டவுடன் கண்களைத் திறந்த அரவிந்த் "மாமா! உங்களுக்கு தெரியுமா தெரியாதான்னு தெரியலை. என் கல்யாணத்துக்கு மறுநாள் இதே டயலாக்கை நான் என் மாமியார்கிட்ட சொன்னேன். சொன்னேன் அப்படிங்கறதை விட உங்க பொண்ணு என்னை சொல்ல வச்சா. கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு ராத்திரியே நாளைக்கு காலையில எந்திரிச்ச உடனே எங்க அம்மாகிட்ட போய் உங்க பொண்ணை நீங்க சூப்பரா வளா்த்திருக்கீங்க அத்தை.

உங்களை மாதிரி யாராலும் வளா்க்க முடியாது. நீங்கதான் உலகத்திலேயே சிறந்த அம்மான்னு சொல்லணும்னு எனக்கு கண்டிஷன் போட்டா.அதனால நானும் எந்திரிச்சு உடனே பல்லு கூட விளக்காம நேரா போய் உங்க வீட்டம்மாகிட்ட அந்த மாபெரும் பொய்யை சொன்னேன்", என வருத்தத்துடன் அரவிந்த் கூறியவுடன் சுதாகர் தன் கைகளைத் தூக்கி "மாப்பிள்ளை ஹை-ஃபைவ் கொடுங்க", எனக் குதித்தார்.

இந்த மனுசனுக்கு எதுவும் ஆயிடுச்சா என அவன் பார்த்த பார்வையை புரிந்து கொண்டவர் அவனது காதருகில் மிகவும் மெதுவாக "உங்களுக்கு நடந்தது எனக்கும் ஒரு வார்த்தை மாறாமல் அப்படியே நடந்துச்சு. நானும் நீங்க சொன்ன அத்தனை டயலாக்கையும் என் மாமியார்கிட்ட போய் சொன்னேன்", என அவர் கூறியவுடன் அரவிந்த் திடீரென முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான்.

" ஏன் மாப்பிள்ளை நான்தான் நம்ம கூட்டணியில் இருக்கேனே!அப்படியிருந்தும் நீங்க ஏன் சோகமா இருக்கீங்க?", என்ற சுதாகரிடம் "நீங்களும், நானும் கூட்டணியில் இருந்து என்ன பிரயோஜனம்? உங்க மகன் தப்பிச்சுட்டானே!", என பற்களைக் கடித்தவாறு கூறினான்.

"எனக்கென்னமோ அப்படி தெரியலை மாப்பிள்ளை! ஸ்டாா்ட்டிங் எல்லாம் அம்மா வீட்டு விருந்து மாதிரிதான் இருக்கு. ஃபினிஷிங் போகப்போக பொண்டாட்டி போடுற கருகுன ஸ்பெஷல் தோசையா மாறிடும்.
மருமக பேசுனப் பேச்சை பார்த்தா அவன் நிலைமை நம்மளை விட மோசம்ன்னு நான் நினைக்கிறேன். வெய்ட் பண்ணிப் பாப்போம்", என சுதாகர் கூறியவுடன் அரவிந்தின் முகத்தில் ஒரு ஒளி தென்பட்டது.

இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க தன் அறையில் இருந்து வெளியே வந்த ஷ்யாம் சோபாவில் அமர்ந்து கொண்டு சொந்த பந்தங்களை பார்த்தவன் சமையலறை நோக்கி "அம்பிகா! எனக்கு ஒரு காபி கொண்டு வா", எனக் கூறினான். அவனது குரலில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அரவிந்தும், சுதாகரும் இவன் என்ன வாத்தியார் மாதிரி பேசுறான் என ஒரு சேர மனதில் நினைத்தனர்.

ஆனால் ஷ்யாம் தான் கூறும் வேலைகளை தன் மனைவி செய்வாள் என்பதை நிரூபிப்பதற்காக செய்த செயல் சுந்தரிக்கு ஆத்திரத்தை கிளப்பியது. அம்பிகா அவன் குரல் கேட்டவுடன் ஏற்கனவே இருந்த டிகாஷனில் பாலை சேர்த்து பொழுது "அதை கொடு.அவனுக்கு பிடிச்ச மாதிரி நான் போடுறேன்", என வேகவேகமாக காபி கலந்து ஷ்யாமுக்கு எடுத்துச் சென்றார்.

அங்கே சென்று விருந்தினர்கள் இருப்பதை பார்த்தவர் தன் மகனிடம் காபியை நீட்ட "நீங்க ஏன் வேலை செய்றீங்க? நீங்க இந்த வீட்டோட ராணி. நீங்க உட்கார்ந்துக்கோங்க. என் பொண்டாட்டி எல்லா வேலையும் செய்வா", என மிகவும் பெருமையாக கூறியவுடன்தான் சுந்தரியின் மனம் ஆறுதல் அடைந்தது.

"கன்னுக்குட்டி நீ இந்த காபியை குடி", என மகனுக்கு காபி குடிக்க தந்தவர் அருகிலிருந்த சுதாகரையோ அரவிந்தையோ சற்றும் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் காபியை ஒவ்வொரு மிடறு விழுங்கிய பொழுதும் அரவிந்த் சுதாகரை எரித்து விடுவதைப் போல் பார்த்தான். "ஏன் மாப்பிள்ளை! இம்புட்டு பாசமா பார்த்து வைக்கிறீங்க?", என அவனின் பார்வை பார்த்து அவர் வினவியுடன்

"ராத்திரி எல்லாம் உங்க மகளோட புலம்பலைக் கேட்டுட்டு தூங்காம காலையிலதான் அசந்து தூங்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு நிம்மதியா ரொம்ப நேரம் தூங்கலாம்ன்னு நெனச்சிட்டு இருக்க போனை போட்டு வா மாப்பிள்ளை காபி தருவாங்க பாயாசம் தருவாங்கன்னு கூட்டிட்டு வந்து பச்சைத்தண்ணிக் கூட கண்ணுல காட்டலை. இதுல நான் இந்த வீட்டு மாப்பிள்ளை!

காண்டாமிருகம் மாதிரி வளர்ந்து இருக்கிற உங்க பையன் கன்னுக்குட்டின்னா நான் யாரு?", என அரவிந்த் சிலிர்த்துக்கொண்டு கேட்டவுடன் "இருங்க மாப்பிள்ளை ஷவானி எழுந்து வர்ற மாதிரி இருக்கு அவகிட்ட கேட்டுச் சொல்றேன்", என்ற பதிலைக் கொடுத்து சுதாகர் அவனை அந்த நிமிடத்திற்கு அமைதி ஆக்கினார்.

ஷ்யாம் காபி குடித்து முடிக்கும் வரை காத்திருந்த சுந்தரி அவனைத் தனியாக அழைத்துச் சென்று "சந்தோஷமா இருக்கியா? அம்மா உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கேனா? நீ சொல்ற பேச்சை கேட்குறாளா? இப்ப இருந்து அவளை உன் ஷர்ட் பாக்கெட்டுக்குள்ள முடிஞ்சு வச்சுக்கோ... இல்லைன்னா காலத்துக்கும் அடக்க முடியாம போய்டும்", என அவனது கன்னம் தடவியவாறு பேசிக் கொண்டிருந்தார்.

தன் தாய் பேசியதைக் கேட்டு அவன் ஆனந்தக் கண்ணீர் வடித்து "ரொம்ப சந்தோசமா இருக்கேன்மா! நீங்க செஞ்சது எனக்கு சந்தோஷம் இல்லாமல் இருக்குமா?", என பதிலுக்கு கொஞ்சினான். இதனை அந்த வழியாக வந்த அம்பிகா பார்த்துவிட்டு தனக்கு வந்த சிரிப்பை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கினாள். அதனை சுதாகரும் கண்டுவிட "என்னமா மருமகளே!", என்றவுடன்

"இல்லை இந்த டயலாக்கை எங்க அம்மா என்கிட்ட கேட்டு இருக்கணும் நான் பதிலுக்கு உங்க மகன் சொன்ன டயலாக்கை பேசிருக்கணும். இங்க எல்லாம் உல்டாவா நடக்குது மாமா", என்றவுடன் "ஒரே நாள்ல உலகத்தை புரிஞ்சுகிட்ட பாா்த்தியா! நீ பொழைச்சுப்ப மருமகளே", எனக் கூறியவர் ஏதோ கேட்க தயங்கினாா்.

"என்ன மாமா எதுவும் கேட்கணுமா?", என்றவுடன் "ஒரே ஒரு டம்ளர் காபி போட்டு கொடுத்தா நானும், அரவிந்தும் ஆளுக்கு பாதியாக் குடிச்சிக்கிறோம்", என மிகவும் பாவமாக கேட்டார். அவரது காபி கேட்டவுடன் ஐயோ பாவம் இது தானா என எண்ணியவள் "உங்களுக்கு ஸ்ட்ராங் டிக்காஷன் போட்டு தரட்டுமா?", என்றவுடன்

"அப்படி எல்லாம் எதுவும் வேண்டாம்மா. வழக்கமாக தா்ற கழனி தண்ணி தந்தாலே போதும். அந்த காபி உள்ளே இறங்காம நாளே ஆரம்பிக்க மாட்டேங்குது. பழகி தொலைச்சிட்டேன். என்ன செய்ய?", என அவர் அலுத்துக் கொண்டதும் அம்பிகா காப்பி தயாரிக்க கிச்சனுக்கு சென்றாள்.

அங்கிருந்த ஷிவானி "என்ன இவ்வளவு லேட்டா எந்திரிச்சு வர்ற? நான் காலைல நாலரை மணிக்கு எந்திரிப்பேன். இல்லன்னா என் மாமியார் உண்டு இல்லைன்னு செஞ்சிடுவாங்க", என பேசியதில் அரவிந்துக்கு மறுபடியும் மயக்கம் வந்து தொலைத்தது.

"உங்க மாமியார் அவ்வளவு மோசமா அண்ணி! என் மாமியார் சொக்கத்தங்கம்", என்ற அம்பிகா சுதாகருக்கு காபி தயாரிக்கும் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். அந்நேரம் மீண்டும் சமையல் அறைக்கு வந்த சுந்தரி மறுபடியும் யாருக்கு காபி போடுற என்றவுடன் "மாமாதான் கேட்டாங்க. அண்ணனுக்கும், மாமாவுக்கும் போட்டுகிட்டு இருக்கேன். சொந்தக்காரங்க எல்லாம் ஒவ்வொருத்தரா கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க.

அதனால நீங்க பிஸியா இருப்பீங்கன்னு உங்ககிட்ட சொல்லாம நானே செஞ்சிட்டேன் அத்தை", என்று அம்பிகாக் கூறியதும் "இந்த மனுசனுக்கு அவங்க அம்மா நல்லா நாக்கு நீளமா இழுத்து வச்சுருக்காங்க. காலங்காத்தால காபி குடிக்கலைன்னா என்ன வந்துச்சு. மகனுக்கு இன்னைக்குதான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு. அவனுக்கு இனி என்னென்ன தேவைனடனு பார்த்து செய்யணும்னு பொறுப்பு இருக்கா?", என சுந்தரி புலம்பிக் கொண்டிருக்கும் பொழுதே

"மாமாவுக்கு சேர்த்து நீங்க பெரும் பொறுப்பு பருப்பா மரு க் கி அவர் எதுக்கு இந்த இந்த தேவையில்லாத வேலையில எல்லாம் தலையிடனும். தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது.இந்த வீட்டோட தலை நீங்க. நீங்க இருக்குறப்ப நாங்கள்லாம் வாய மூடிட்டு இருக்கணும்", எனக் கூறிவிட்டு அம்பிகா காபி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

அவள் சென்றவுடன் "இவ என்னை பாராட்டுறாளா இல்லை குத்திக்காட்டுறாளான்னு காலையில இருந்து தெரிய மாட்டேங்குது ஷிவானி", என சுந்தரி யோசனையோடுக் கூற ஷிவானியும் "இவ சரி இல்லைம்மா. தம்பி பேச்சு ஒழுங்கான கேட்பதளா", என்றவுடன் சுந்தரி தன் மகன் கூறியவற்றை அப்படியே மகளிடமும் மறு ஒலிபரப்பு செய்தார்.

ஒவ்வொருவரும் தனது எண்ணங்களின் படி பேசிக்கொண்டிருக்க அம்பிகாவின் வீட்டில் இருந்தவர்கள் அவா்களை மறு வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்துவிட்டனர்.

மறு வீட்டிற்கு கிளம்பும் முன்னர் சுந்தரி தன் மகனை தனியாக அழைத்து அவனது கையில் ஆயிரம் ரூபாய் தந்து "உன் செலவுக்கு வச்சுக்கோ ராஜா! உனக்கு கடையில போய் ஏதாவது வாங்கணும்னா உன் மாமனார்கிட்ட சொல்லி போய் வாங்கிட்டு வாங்கன்னு அதிகாரமா சொல்லனும். புரிஞ்சதா? உன் மாமியார்கிட்ட உனக்கு என்னென்ன சாப்பிடும் ஆசை இருக்கோ அது எல்லாத்தையும் செஞ்சு போட சொல்லு.

அப்படி செஞ்சு போடலைன்னா அம்மாவுக்கு ஒரு போனை போடு. அந்த நிமிஷமே நான் அங்க வந்துடுறேன். உன் பொண்டாட்டி அவ அம்மா வீட்டுக்கு போனதுக்கப்புறமும் உன் முன்னாடி கையை கட்டிதான் நிக்கணும். இதெல்லாம் மனசுல வச்சுக்கோ", என நீளமான புத்திமதிக் கூறி அனுப்பி வைத்தார்.

சுந்தரி கூறியதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்த ஷ்யாம் அம்பிகாவின் வீட்டிற்கு செல்லும் வரை அதையே கடைபிடிக்க முயற்சி செய்தான். ஆனால் அவனது முயற்சிகள் பலவற்றை அம்பிகா டிவியில் நகைச்சுவை பார்ப்பது போன்றே பார்த்து புறந்தள்ளினாள்.

அம்பிகாவின் வீட்டிற்கு சென்ற பின்னர் அவளது உறவினர்கள் மற்றும் வீட்டின் அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து சென்ற பின்னர்தான் இருவருக்கும் சற்றேனும் ஓய்வு கிடைத்தது. ஆனந்தி தன் மகளை தனியாக அழைத்தவர் என்ன அம்பிகா என்றவுடன் "அம்மா! இந்த வழக்கமான அம்மாக்கள் கேட்குறகிற டயலாக்கை ஆரம்பிக்கவே ஆரம்பிக்காத. கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சுல்ல. அது பாட்டுல வாழ்க்கை போகும். நீ கேள்வி கேட்டு நான் பதில் சொல்லி உன் புத்திமதியைக் கேட்டு நான் நடந்து ஏறுக்குமாறா ஏதாவது நடந்துச்சுன்னா நல்லா இருக்காது. சந்தோஷமா இருக்கேன் அதோட முடிச்சுக்கோ", என ஆனந்தி பேசுவதற்கு முன்னரே படபடவென பொரிந்து தள்ளிவிட்டாள்.

"ஏன்டி என்ன சமைக்கலாம்ன்னு கேக்குறதுக்குதான் உன்னை கூப்பிட்டேன். அதுக்கு முன்னாடி நீ ஏன் இந்த பேச்சு பேசுற", என ஆனந்தி நிறுத்திக்கொண்டவுடன் அம்பிகா"விடும்மா அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே! உன்கிட்ட பேசாம சொப்பனசுந்தரிகிட்டயா நான் பேச முடியும்?", என்றாள்.

"அது யாரு சொப்பன சுந்தரி?", என ஆனந்தி பதறிப்போய் வினவ "எல்லாம் என் மாமியார்தான். சுந்தரியை நான் சொப்பனசுந்தரி ஆக்கிட்டேன்", என மிகவும் கூலாக சொல்லிவிட்டு அம்பிகா தன்னுடைய அறை நோக்கிச் சென்றாள். அதுவரை ஹாலில் அமர்ந்திருந்த ஷ்யாம் அவள் மட்டும் சென்றதை பார்த்தவுடன் அவனும் பின்னாடியே எழுந்து சென்றான்.

அம்பிகா தன் அறையில் நுழைந்தவுடன் தன் பின்னால் நுழைந்தவனை பார்த்து விட்டு "யாரைக் கேட்டு என்னோட ரூமுக்குள்ள நுழைஞ்ச?", என்ற ஒரு வினாவினை எழுப்பினாள். அவளது வினாவில் அதிர்ந்து போனவன் " என்ன நீ இப்படிப் பேசுற? எங்க வீட்ல எல்லாம் நீ இந்த மாதிரி மரியாதை இல்லாமல் பேசலையே! உங்க வீட்டுக்கு வந்த உடனே உனக்கு புத்தி மாறிடுச்சா?", என சற்று பதட்டமான குரலில் வினவினான்.

வீட்டில் இருந்தவரை சொல் பேச்சு கேட்டவள் இங்கு வந்தவுடன் ஏன் வந்தாய் என்று கேட்டால் பயம் வரத்தானே செய்யும்.அவனின் கேள்விக்கு பதிலாக "23 வருஷம் என்னோட வீட்டுல இளவரசியா வாழ்ந்து, மிச்சசொச்சமிருக்கிற காலத்தை எல்லாம் உங்களுக்கு வடிச்சு கொட்ட கல்யாணம்னு பல லட்சம் செலவழிச்சு, உங்க வீட்டுக்கு வாழவந்தா அங்க நான் நீங்க சொல்ற பேச்சுக்கெல்லாம் தலையாட்டனும் அப்படின்னு நீங்கதானே சொன்னீங்க", என அம்பிகா இமை குட்டி தன் இமைகளைப் படபடவென கொட்டி வினவினாள்.

அவள் வினாவில் "ஆமா என் பேச்சை கேக்கணும்னு சொன்னதுல என்ன தப்பு?", என ஷ்யாம் அப்பொழுதும் அவள் என்ன கூற வருகிறாள் என்பதுப் புரியாமல் தன் கேள்வியை எழுப்பினான். " சொப்பனசுந்தரியின் சோப்பலாங்கி மகனே! நான் சொல்ல வர்றது என்னன்னா இத்தனை வருஷம் உங்க அம்மாவோட கன்னுகுட்டி, காண்டாமிருகமா இருந்த நீங்க இப்ப என் வீட்டுக்கு வந்துருக்கீங்க.

அதுவும் என்னோட புருஷனாதான் என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க. அப்படின்னா இனிமே என் பேச்சை தான் நீங்க கேட்கனும். நான் உட்கார சொல்லாம உட்காரக்கூடாது.ரூமுக்குள்ள வாங்கன்னு சொல்லாம வரக்கூடாது. அப்படியே என்னோட பேச்சை கேட்கலைன்னா எங்க பக்கத்து வீட்டு சிசிடிவி பாட்டியை கூப்பிட்டு என் புருஷனும், மாமியாரும் என்னை கொடுமைப்படுத்துறாங்கன்னு ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும்.

பிபிசி நியூஸை விட வேகமா உங்களை பத்தி, உங்க அம்மாவை பத்தி இந்த ஊர் முழுக்க பரவிடும். எப்படி வசதி?", என அம்பிகாக் கேட்டவுடன ஷ்யாம் மிரண்டுதான் போனான். தான் மிரண்டுப் போனதை அவளுக்குக் காட்டாமலேயே ஷ்யாம் "இது உன் வீட்ல இருக்கிற வரைக்கும் மட்டும்தான். என் வீட்டுக்கு போயிட்டா நீ என்னோட சொல்பேச்சு தான கேட்கனும். நீ அப்படி கேட்டா மட்டும்தான் எங்க அம்மா நிம்மதியா இருப்பாங்க", எனக் கூறினான்.

அதற்கு அம்பிகா கூறிய பதிலிலேயே ஷ்யாமிற்கு தன் நிலைமை, எதிர்காலம் மிகவும் பிரகாசமாக தெரிந்தது. அம்பிகா ஷ்யாமின் சொல்பேச்சு கேட்டு நடந்திடுவாளா? சுந்தரியின் நிம்மதி நிலைத்திடுமா?