மனைவியே சரணம்-5

Kripnythaa

Moderator
Mar 26, 2018
447
125
63
மனைவியே சரணம்-5

நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் ஷிவானி செய்த முதல் வேலையில் அரவிந்தன் கதிகலங்கிப் போனான். ஆனால் அதனைப் பற்றி யாரிடமும் கூற இயலாமல் தன் மனதிற்குள்ளேயே அவன் நொந்து போய் இருந்த நிலையில் ஷ்யாம் அவனை அழைத்து "மாமா! ரிசப்ஷனுக்கு எனக்கு சூட் தைக்கக் கொடுக்கணும். நீங்க என் கூட வர முடியுமா?", என வினவினான்.

"ஓ! தாராளமா வர்றேன்", என்ற அரவிந்த் இவனிடமாவது அவனின் அக்கா செய்த வேலையை கூறலாமா என்ற யோசனையுடன் சென்றால் அங்கே இவனுக்கு முன்னதாக ஷிவானியும் ஷ்யாமுடன் நின்று கொண்டிருந்தாள்.

இவன் அக்காவை கூப்பிட்டுட்டு தான் என்னைக் கூப்பிட்டானா என மனதில் நினைத்தவாறு அவர்களின் அருகில் சென்று ஷிவானியைப் பார்த்து "நீ அப்பவே வந்துட்டியா கண்ணம்மா?", என வினவினான். "நீங்க எனக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருவீங்கன்னு பார்க்கதான் என் தம்பியை விட்டு போன் பண்ண சொன்னேன். அதான் போன் பண்ணுனான்.

நீங்க இருடா உன்னோட அக்காவையும் கூட்டிட்டு வர்றேன்னு சொல்லி இருந்தீங்கன்னா நானும் பெருமையில் பூரிச்சுப் போயிருப்பேன். எங்க எனக்குதான் அந்தக் கொடுப்பினை இல்லையே! என் தம்பியாச்சும் கல்யாணம் நிச்சயம் பண்ணியும் மாறாம அக்கா நீ வான்னு என்னைதான் முதல்லக் கூப்பிட்டான்", என ஷிவானி பேசிய நான்கு பக்க பேச்சில் அரவிந்த் இந்த கேள்வி உனக்கு தேவையாடா என தனக்குதானே நொந்துக்கொண்டான்.

இவர்களது பேச்சை கேட்டு ஓரமாக நின்று சிரித்துக் கொண்டிருந்த ஷ்யாமை பார்த்த அரவிந்துக்கு காந்தாரி மிளகாயை கால் கிலோ சமைக்காமல் சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படி வயிறு காந்தியது. இருப்பினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஷிவானியிடம் "நீ வந்து இங்க ரொம்ப நேரம் வெயிட் பண்ணுனா உன் கால் வலிக்குமே அப்படின்னுதான் நான் ஒன்னும் சொல்லலை. இல்லைன்னா உன்கிட்ட சொல்லாம நான் எந்த வேலையும் செய்வேனா?", என உடனடியாக சரணடைந்தான்.

'இந்த மனுஷன் விட்டா பேசிக்கிட்டே இருப்பாரு. நீ வா நாம போய் நம்ம வேலையை பார்க்கலாம்", என ஷிவானி ஷ்யாமை அழைத்துக் கொண்டு உள்ளேச் சென்றவள் அதற்கு அடுத்து தான் செய்த ஷாப்பிங்கில் மூட்டை தூக்கும் வேலையை மட்டுமே அரவிந்தனுக்குக் கொடுத்தாள்.

இரு வீட்டினரும் அவரவர் வேலைகளை மற்றவர்களிடம் எவ்வித கருத்து வேறுபாடும் கொள்ளாமல் தாங்களே முடித்துக் கொண்டதில் அனைத்து வேலைகளும் எவ்விதத் தேக்கமும் இன்றி விரைவாகவே நடந்து முடிந்தது.

ஆரம்பத்தில் பெண்ணின் பெயரை தன் தாயிடம் கேட்காமல்,பெண் பார்த்துவிட்டு வந்த பின்னரும் கேட்காமல் தனக்கு திருமண பத்திரிக்கை அடித்து வந்த பின்னர்தான் பத்திரிகையில் பெண்ணின் பெயரை பார்த்தான். இதனை அம்பிகாவிடமும் பெருமையாகக் கூற வேண்டும் என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கையில் அப்பக்கம் வந்த அரவிந்த் "என்ன மாப்பிள்ளை! தனியா சிரிச்சுக்கிட்டு இருக்க?", என்றவுடன் தான் அம்பிகாவிடம் கூறப்போகும் விஷயத்தைப் பற்றி விளக்க விரிவாக்கமாக பெருமையுடன் எடுத்தியம்பினான்.

அவன் கூறியதை கேட்டு தன் நெஞ்சில் கை வைத்துக்கொண்ட அரவிந்த் "மாப்பிள்ளை! இத மட்டும் சொல்லிடாத. கடைசி வரைக்கும் உங்க அப்பாக்கு கிடைக்கிற கழனி தண்ணி கூட உனக்கு கிடைக்காது.அதோட அன்னைக்கே உனக்கு வாழ்க்கையோட கடைசி நாளை பார்த்திடுவ", என தன் திருமண வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தின் காரணமாக ஷ்யாம் வேதனைப்படவேண்டும் என நினைத்ததை மறந்து போய் அவனுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அறிவுரை கூறினான்.

அரவிந்தன் கூறியது புாியாவிட்டாலும் அவனது அதிர்ச்சியிலேயே இதனை கூறினால் பெரிய பூகம்பம் வெடிக்கும் போல என்ற எண்ணத்தினால் ஷ்யாம் அதனை கூறக் கூடாது என உறுதி எடுத்துக் கொண்டான்.

அம்பிகாவின் வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் துரிதமான முறையில், நேர்த்தியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இடையிடையே தனக்கு பிடித்தமோ, பிடித்தமில்லையோ ஆனந்தி சுந்தரிக்கு அழைத்து "இதை எப்படி செய்யணும் அண்ணி! நீங்கதான் எங்களை வழிநடத்தனும். எனக்கு ஒண்ணுமே தெரியாது. இது சரியா? இது போதுமா? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?", என ஒவ்வொன்றிற்கும் அவரின் ஒப்புதலைப் பெற்றோ, இல்லை என்றால் ஆலோசனை கேட்டோ செய்தார்.

ஆனந்தியின் இந்தப் போக்கினை பார்த்த அம்பிகாவும், மூர்த்தியும் "நல்லாதானே இருந்த. உனக்கு என்ன ஆச்சு?", என ஒருமித்தக் குரலில் வினவினர். "இப்போவும் நல்லாதான் இருக்கேன். அதான் அப்பனுக்கும், மகளுக்கும் இல்லாத புத்தி எனக்கு ஓவரா வேலை செஞ்சு இந்த மாதிரி அவங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்", என ஆனந்தி அதிரடியாக பதிலடி தர அவர் பதிலில் சற்றும் புரியாமல் விழித்த மூர்த்தி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு "கொஞ்சம் தெளிவா சொல்லு ஆனந்தி!",எனக் கேட்டார்.

"நமக்குப் பிடிக்குதோ, பிடிக்கலையோ நம்ம பொண்ணு அந்த வீட்ல போய் வாழப்போறா. அப்படி இருக்குறபட்சத்தில் ஒவ்வொரு விஷயமும் அவங்களுக்கு நாம மரியாதை கொடுக்கணும்னு எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் எதிர்பார்ப்பாங்க. உங்க அம்மா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சாகுற வரைக்கும் என் வீட்டிலிருந்து எல்லாரும் வந்து கூழைக் கும்பிடு போடணும்னுதான் எதிர்பார்த்தாங்க. உங்க அம்மாவுக்கு ஒரு நியாயம். என் மகளோட மாமியாருக்கு ஒரு நியாயமா?", என ஆரம்பத்தில் தெளிவாக ஆரம்பித்த ஆனந்தி இடையில் தன் மாமியாரையும் இழுத்துவிட்டார்.

ஆனந்தியின் பேச்சைக் கேட்ட மூர்த்தி தன் அருகில் அமர்ந்திருந்த மகளிடம் "இப்ப எங்க அம்மா இந்த பேச்சுல எங்க வந்தாங்க?", என ஒரு சந்தேகத்தை வினவி வைத்தார். "இருங்கப்பா. அம்மாகிட்ட இதை கேட்டு சொல்றேன்", என அம்பிகா சிரித்துக்கொண்டேக் கூறியதில் தன் கையை எடுத்து வாயை இறுக மூடிக் கொண்டார்.

ஆனந்தி அவரின் பாவனையை பார்த்தவுடன் "என்ன? இல்லை என்னன்னு கேட்கிறேன். உங்க அம்மாவை சொன்னவுடனே ஏதாவது நீங்க வாயைவிட்டுடுவீங்கன்னு சொல்லிட்டு இறுக்க மூடியாச்சோ?", என அதற்கும் ஒருகாரணம் கண்டுபிடித்து மலையேறினார்.

"இல்லைம்மா. நான் அப்படி எல்லாம் நினைக்கவே இல்லை", என வாயை திறந்து மூர்த்தி பதில் அளித்ததும் ஆனந்தி மீண்டும் தன் விளக்க உரையை ஆரம்பித்தார். மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட இந்த எதிர்பார்ப்பு நார்மலாகவே இருக்கும். சொல்லப்போனால் எனக்கு நிறைய விஷயங்கள் தெரியலை. அப்படி இருக்குற பட்சத்தில் அவங்ககிட்ட கேட்டா அவங்களுக்கு தெரியாமல் இருந்தாலும் அக்கம் பக்கத்திலையோ, இல்லை அவங்க வீட்டு பெரியவங்ககிட்டயோ விசாரிச்சு நமக்கு சொல்லுவாங்க.

ஒரு பொண்ணு வச்சிருக்கோம். கல்யாணம் பண்ணி கொடுக்குறதுல குத்தம் குறை யாரும் கண்டுபிடிச்சுடக் கூடாது. அதற்காகதான் அவங்ககிட்ட கேட்குறேன். நியாயமா பார்த்தா நீங்கதான் இந்த பொறுப்பு எல்லாம் எடுத்திருக்கனும். உங்களுக்கு இங்கே குத்து பாட்டு போட்டு வீட்டில எப்ப பார்த்தாலும் டான்ஸ் ஆடிக்கிட்டு விதவிதமா பாட்டை கேட்டுட்டு இருக்கதான் உங்களுக்கு நேரம் இருக்கு.

மகளுடைய கல்யாணம்னு ஆடி ஓடி வேலை செய்ய நினைப்பிருக்கா?", என தன் விளக்க உரையை கூறிவிட்டு மூர்த்தியையும் தன் கைகளால் சாத்திவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றார்.

அதிலிருந்து ஆனந்தி என்ன செய்தாலும் மூர்த்தி பதில் பேசுவது இல்லை. பதில் பேசி செத்துப்போன அவருடைய அம்மா,பாட்டி, தாத்தா என்று அனைவரையும் திட்டு வாங்க வைக்க விருப்பம் இல்லாமல் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருந்தவரால் குத்துப்பாட்டு கேட்பதை மட்டும் தவிர்க்க இயலவில்லை.

திருமண வேலையின் காரணமாக ஷிவானி தினந்தோறும் தன் தாய் வீட்டிலேயே தங்கி விட தன் அம்மா வீட்டிற்கும் செல்ல முடியாமல், தானே சமைத்தும் சாப்பிட முடியாமல் அரவிந்தின் நிலைதான் மிகவும் மோசமாகிவிட்டது.

இதனை தன் மாமனாரிடம் பகிர்ந்த பொழுது சுதாகர் "ஏன் மாப்பிள்ளை! அரிசி,பருப்பு எல்லாம் வீட்ல இருக்குமே! அதை வச்சு நீங்க சமைச்சு சாப்பிடலாமே", என்ற ஒரு அரிய ஆலோசனையை வழங்கினார். "அச்சோ மாமா! அதெல்லாம் இருந்தா நான் சமைச்சு சாப்பிட மாட்டேனா. இந்த மாசம் நாங்க அரிசி பருப்பு வாங்கலை", என அரவிந்த் தலையில் கை வைத்தவாறு கூற அந்த பக்கமாக வந்த ஷ்யாம் "ஏன் மாமா வாங்கலை", என வினவினான்.

"இந்த மாசம் பட்ஜெட்டில் பெரிய போர்வையே விழுந்திருச்சு", என இருவருக்கும் பொதுவாக அரவிந்த் கூறியபொழுது சுதாகராலும் ஷ்யாமாலும் சற்றும் புரிந்துகொள்ள இயலாமல் அவனைப் பார்த்தனர். "அதுவாடா மாப்பிள்ளை! எல்லாம் உன்னாலதான் வந்தது. உன் கல்யாணத்துக்காக உங்க அக்கா முடியை ஸ்டெப் கட் பண்ணி ஹேர் கலரிங் பண்றதுக்காக இந்த மாசம் அரிசி பருப்பு எதுவும் வாங்க முடியாதுன்னு சொல்லிட்டா", என அரவிந்த் காரணத்தைக் கூறி முடித்தவுடன் சுதாகர் "ஏன் மாப்பிள்ளை ஹேர் கட், ஹேர் கலரிங் பண்றதுக்கு மிஞ்சி போனா ஒரு ஆயிரம் ரூபா ஆகுமா? அதுக்கும் அரிசி பருப்பு வாங்காம விட்டதுக்கும் என்ன சம்பந்தம்?", என மீண்டும் தன் கேள்விக் கணையை ஆரம்பித்தாா்.

அவரை கோபப்பார்வை ஒன்று பார்த்த அரவிந்த் "உங்களுக்கு விளக்க விரிவாக்கமாக சொன்னாதான் எல்லாம் புரியும். பாவம் எங்க மாமியார் நிலைமை", எனக் கூறிவிட்டு "நீங்க அருமை, பெருமையாய் பெத்து, வளர்த்து எனக்கு கட்டிவச்ச உங்க மக அவளோட தம்பிக்கு கல்யாணம் நிச்சயம் ஆன உடனே செஞ்ச முதல் வேலை டோனி அன்ட் கைய்ல(Tony &Guy) அப்பாயின்மென்ட் புக் பண்ணுனதுதான்.


அந்த அப்பாயின்மென்ட் நேத்துதான் முடிஞ்சது. அவ புக் பண்ணுனப்பவே இந்த மாசம் வீட்டுல எனக்கு கழனி தண்ணி கூட கிடைக்காதுனு இந்த ஊருக்கே தெரிஞ்ச விஷயம். பெத்த அப்பா உங்களுக்கு தெரியலையா மாமா?", என சடைத்துக் கொண்ட அரவிந்தன் மீண்டும் தன்னுடைய கதையை தொடர்ந்தான்.

சரிதான் சொல்லிட்டு நானும் அவ புக் பண்ண இடத்துக்கு கூடவே போனேன். போனப்ப நீங்களே செலக்ட் பண்ணுங்கன்னு சொல்லி என்கிட்ட அவங்க காட்டுன கேட்லாகை செலக்ட் பண்ணக் கொடுத்தா. அதுல ஒன்னு நான் செலக்ட் பண்ண போறப்ப ஏங்க இதுதானே உங்களுக்கு புடிச்சிருக்குன்னு தனக்குதானே ஒன்னை செலக்ட் பண்ணிட்டு என் வீட்டுக்காரருக்கு இதான் பிடிச்சிருக்கு. இதையே போட்டு விடுங்கன்னு சொன்னா. சொல்லிட்டு போய் உட்கார்ந்ததும் பில்லை கட்டிடுங்க அப்படிங்கற ஒரு குரலையும் கொடுத்தா.

போன தடவை போயிருந்தப்ப எட்டாயிரம் ரூபா வந்துச்சு. அந்த அளவுக்குதான் இப்போவும் இருக்குமுன்னு நானே இங்கே ஆயிரத்தை எண்ணி எடுத்து வைக்க அவங்களோ டாக்ஸோடடு சேர்த்து 25,000 பில்லை நீட்டினாங்க.எனக்கு அந்த இடத்திலேயே ஹார்ட் அட்டாக் வராத குறைதான். வேற என்ன செய்றது கட்டிக்கிட்ட பாவத்துக்கு இது அழுதுதான் தீரனும்னு 25 ஆயிரத்தை கட்டிட்டேன்.

அதோட உங்க மக ஹேர் கலரிங்கை முடிச்சுட்டு வரதுக்காக மொத்தம் ஆறு மணி நேரம் அந்த மாலுல வாட்ச்மேன் வேலை பார்த்திருக்கேன்", என தன் சோகத்தை அரவிந்த் கூறி முடித்த பொழுது ஷ்யாம் தீவிர சிந்தனையில் இருந்தான். "மாமா எல்லாரும் இப்படி தான் இருப்பாங்களா?", என தன் சிந்தனையை உதறியவன் சுதாகரையும் அரவிந்தையும் கேட்டு அவா்களை ஆர்வத்துடன் பார்த்தான்.

அவனின் பார்வையில் இருந்த ஆர்வத்தை உணர்ந்து கொண்ட இருவரும் ஒன்று போல் தங்களுக்குள் கண் ஜாடை செய்து கொண்டு "ஒரு சிலர் 25 ஆயிரத்துல முடிப்பாங்க. முடி நீளமாக இருந்தால் குறைந்தது ஐம்பதாயிரம் வரை கூட போகும். இப்ப உங்க அக்கா எங்கே போனா அப்படின்னு தெரிஞ்சா நாளைக்கு உனக்கு வரப்போற பொண்டாட்டியும் அங்கேதான் போவா", என அரவிந்த் தன்னால் முடிந்த உதவியாக ஷ்யாமிற்கு பீதியை ஏற்படுத்தினான்.

பீதி ஏற்பட்டாலும் தன் தாய் தனக்கு ஊட்டி வளர்த்த உன் மனைவி உனக்கு அடங்கி நிற்க வேண்டும் என்ற வார்த்தைகள் காதில் விழ "எனக்கு அந்த மாதிரி எல்லாம் நடக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை", என மார்தட்டி கூறிச் சென்றான். விதி வலியது என சுதாகரும், அரவிந்தும் தங்களுக்குள் ஹை-ஃபைவ் கொடுத்துகட கொண்டார்கள். இவர்கள் அனைவரின் கலாட்டாக்களுடனும், மூர்த்தியின் குத்துப்பாடல்களுடனும் ஷ்யாம், அம்பிகாவின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

திருமண சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்தவுடன் அன்றைய இரவில் தன்னுடைய அறையினுள் நுழைந்த அம்பிகாவை பார்த்த ஷ்யாம் சாதாரணமாக அமர்ந்திருந்தவன் உடனடியாக தன் கால் மேல் காலை தூக்கி போட்டுகொண்டு மிகவும் கெத்தாக இருப்பது போன்று காட்ட முயற்சித்தான்.

அவனது பாவனையில் அம்பிகாவிற்கு என்னவென்றுப் புரியாவிடினும் தன் கையில் கொண்டு வந்திருந்த ஃப்ளாஸ்க்கையும், வாட்டர் பாட்டிலையும் அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு அவனின் அருகில் அமர்ந்தாள்.

அவள் அமர்ந்தவுடன் பட்டென்று எழுந்து நின்ற ஷ்யாம அடுத்துக் கூறிய வார்த்தைகளில் அம்பிகா எதனை எதிர்பார்த்து வந்திருந்தாலும் அவனிடம் இதனை எதிர்பார்க்கவில்லை என்பதை அவளதுப் பார்வையே உணர்த்தியது.

ஷ்யாம் என்னதான் கூறினான்? அவன் கூறியதற்கு அம்பிகாவின் எதிர்வினைதான் என்ன? இத்திருமணம் நிலைத்திடுமா? இல்லையெனில் நிரந்தரமாகப் பிரிந்திடுமா?
 
  • Like
Reactions: Priyamadhavan