அத்தியாயம் – 3
“சஞ்சு! ஒரு நிமிஷம்! நீ பேசறது சரின்னாலும் பாக்கி கிட்ட இனிமே அப்படி பேசாதே. பாவம் அவ வருத்தப்பட்டு அழுகிறாள் பாரு!” என வசந்தி சொன்னதும், சஞ்சு ஒரு மெல்லிய புன்னகையுடன் “அவங்களுக்குன்னு ஒரு லைப் இருக்கு. அவங்க புருஷன், அவங்க வீடு, அவங்க பசங்க இதெல்லாம்தான் அவங்களுக்கு முக்கியம். அதை அவங்க புரிஞ்சுக்கனும். நீங்க ஆதரவு காட்டுவதில் தப்பில்லை. ஆனா எங்க அண்ணாக்கும் தன் மனைவியோட இருக்கனும், வெளியே போகனும்னு ஆசை இருக்கும் இல்லையா? இவங்க வாரத்தில் ஐந்து நாள் இங்கேயே இருந்தா அவருக்கு வாழ்க்கையில் வெறுப்பு வந்துடாதா? உங்ககிட்ட அது வேணும், இதுவேணும்னு கேட்பதை போல எங்க அண்ணாகிட்ட கேட்டிருந்தா அவர் செய்திருக்கமாட்டாரா அக்கா? இல்ல... எங்க அண்ணாக்கு அந்த அளவுக்கு வசதி இல்லையா? அவங்க இங்க வந்து எல்லாத்துக்கும் நின்னா எங்க வீட்டுக்குதானே அசிங்கம்.நாம ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒன்னு. நமக்கு எல்லாம் தெரியும். ஆனா வந்துக்கா? அவங்க எங்க அண்ணாவீட்டை பத்தி என்ன நினைப்பாங்க? மனைவிக்கு சாப்பாடு போட வக்கில்லாதவங்கன்னு எங்க குடும்பத்தை அவங்க நினைச்சிட்டா... அது எங்க பெரியப்பாக்கு எவ்வளவு கேவலம். என்னமோ போங்க... நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றாள்.
அசால்டாக ஒரு விஷயத்தை அவள் சொல்லிச் சென்றதில் அதிர்ந்து தான் போனாள் வைதேகி. அவள் சொன்ன விஷயம் சரிதான் என்றாலும் பாக்கிக்கு இதை எப்படி உணர்த்துவது என்று மாமியாரும் மருமகளும் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருந்த வேளையில் அடுத்த கலவரத்தை கிளப்ப பாக்கி தயாரானாள்.
கோபித்துக் கொண்டு தன்னறைக்கு வந்த பாக்கி, கண்ணில் நீர்வடிவதை கூட பொருட்படுத்தாது உடைகளை பையில் திணித்துக் கொண்டிருந்தாள். சஞ்சனா சொன்னதில் இருந்த நியாயம் வைதேகியின் மனதை சுட்டதால் பாக்கியிடம் பக்குவமாக அதைப் பற்றி பேச எண்ணி அங்கு வந்த வைதேகிக்கு அதை பார்த்ததும் பேச வந்தது எல்லாம் மறந்துபோனது.
“பாக்கி! இப்படி ஆன்னா ஊன்னா கண்ணுல தண்ணி விடற பழக்கத்தை எப்ப நீ மாத்திக்கபோற? இன்னும் சின்ன பிள்ளையா நீ?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் கண்ணீரை துடைத்துவிட்டாள்.
“ம்ம்ம்... நீங்களும் என்னை குறை சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க இல்ல!” என குறைப்பட்டுக்கொண்டு அவளின் தோளில் சலுகையாய் சாய்ந்துக் கொண்டாள்.
“லூசு! உன்னை நான் அப்படி சொல்வேனா?” என்றவள், அவளின் பயணப்பையை ஒரு கண்ணில் பார்த்துவிட்டு,
“கண்டிப்பா இன்னைக்கு கிளம்பத்தான் போறியா?” எனக் கேட்டாள்.
“பின்ன? அவ அப்படி பேசின பிறகும் இங்க இருக்க நான் என்ன ரோஷம் கெட்டவளா?” என சீறினாள்.
பாக்கியின் கோபத்தைப் பார்த்த வைதேகி, “ இந்தமாதிரித்தான் பேசாதேன்னு சொல்றேன். யாரு அவ? உன்னோட அதை பொண்ணு. உன் குட்டி தம்பியோட பொண்டாட்டி. உன் வீட்டுக்காரரோட தங்கச்சி.இது எல்லாத்துக்கும் மேல நீ பார்த்து வளர்ந்தவ.அவளை பத்தி நான் சொல்லித்தான் உனக்கு தெரியனுமா? உனக்கு உங்க அண்ணன் பெருசுன்னா அவளுக்கும் அப்படிதானே! அடிக்கடி நீ அவங்க அண்ணனை தனியாவிட்டுட்டு இங்க வந்துடறேன்ற கோபத்தில் அவ அப்படி பேசறா. மத்தபடி நீ இங்க வர கூடாதுன்ற கெட்டபுத்தி எல்லாம் அவளுக்கு இல்ல. அது உனக்கும் தெரியும்தானே?” எனக் கேட்டாள்.
“ச்சேச்சே... அவ அப்படி எல்லாம் நினைக்கமாட்டா” என்றாள் பாக்கி பட்டென்று.
இதைக் கேட்ட வைதேகியின் மனம் அப்போதுதான் நிம்மதியடைந்தது. கூட்டுக் குடும்பத்தில் ஒரு சிறு பேச்சும் ஒருவரின் மனதில் நின்றுவிட்டால் அது அந்த குடும்பத்தின் ஆணிவேரையே அசைக்கும் வல்லமையுடையது என்பதை அறியாதவளா இவள்! சிறுசிறு சண்டைகள் இங்கே அடிக்கடி நிகழ்பவைதான்.அதனால் இதுவரை எந்த மனகஷ்டமும் குழப்பமும் யாருக்கும் வந்ததில்லை.
பெரியவள் தனலட்சுமியின் வருகை இங்கு அத்திப்பூத்தாற்போல நிகழும் ஒன்று. அப்போதும் அவள் பாக்கியைபோல யாரிடமும் நடந்துக் கொள்ளமாட்டாள். வைதேகியை போல பலவருட திருமண வாழ்க்கை அவளுக்கு பக்குவத்தை பரிசளித்திருந்தது.ஆனால்...
பாக்கிக்கும் சஞ்சனாவிற்கும் இன்று நடந்ததைப்போல அடிக்கடி முட்டிக்கொள்ளும்.அப்போது இவள் கோபித்துக் கொண்டு கிளம்புவதும், வைதேகி சமாதானப்படுத்துவதும் அதைக் கேட்காது இவள் முறுக்கிக்கொண்டு போவதும், அப்படி போன மறுவாரமே மீண்டும் இங்கு வந்திறங்குவதும் தொடர்கதை.அதனால் அவளின் புறப்பாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளாத வைதேகி, “உங்க பெரிய அண்ணா வரட்டும். நீ அவரோட உங்க வீட்டுக்கு போ!” என்றாள்.
“இல்ல அண்ணி! நான் ரகு இப்ப கிளம்புவான் இல்ல, அவன் கூட நானும் போய் எங்க வீட்டில் இறங்கிக்கிறேன்” என்றவளிடம், “அவங்க புருஷன் பொண்டாட்டி தனியா போகும் போது நீ எதுக்கு கூட போகற? இவர் வரட்டும். நீ இவர் கூட போ” என்றாள்.
“என்னண்ணி! நீங்களும் சஞ்சனா போலவே சொல்றீங்க? நான் என்ன அவங்க கூட ரிசப்ஷன் போறேன்னா சொன்னேன்? போற வழியில இறங்கிக்கிறேன்னுதானே சொன்னேன். என் தம்பிகிட்ட இதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா?” என இவள் மீண்டும் கண்ணை கசக்கவும் அங்கிருந்து தப்பித்தால் போதும் என எண்ணி வைதேகி சமையலறையில் தஞ்சமடைந்தாள்.
ரகு கதவை திறந்ததும் அங்கிருந்த பாக்கி, அவளும் இவர்களோடு வரப்போவதை சொல்லி சென்றாள். அதைக் கேட்ட ரகு தலையில் கையை வைத்துக் கொண்டு வந்தனாவைப் பார்க்க அவள் இவனை பார்வையில் எரித்து நின்றாள்.
“ஒரே ஒரு படம். அதை தியேட்டர் போய் பார்க்க எவ்வளவு அக்கப்போரு! ரெண்டு நாளா மூனு பேரு சேர்ந்து பிளான் பண்ணி, அதை நாலாவதா ஒருத்தர் மூலமா ப்ரோசீட் செய்து, அது சக்சஸ் ஆகுமா.. ஆகாதான்னு நொடிக்கு நொடி திக்கு திக்குன்னு காத்திருந்து கடைசியில எல்லாம் ஊத்தி முடியாச்சா?” என கடுப்படித்தவளை ஆயாசமாய் பார்த்தவன், “அதுக்குள்ள நீ இப்படி முடிவு பண்ணிடாத வந்து!இன்னைக்கு கண்டிப்பா நாம படம் பார்க்க போறோம்” என்று என சொல்லிக் கொண்டே அவளின் கைகளை பிடித்தான்.
அதை உதறியவள்,”அப்படியா... அப்ப போய் மொத்த குடும்பத்தையும் கிளம்ப சொல்லுங்க. தியேட்டர் முழுக்க நாமளே புக் பண்ணிடலாம். வீட்டிலிருக்கிற முறுக்கு, தட்டை எல்லாம் நான் போய் பாக் பண்றேன். நீங்க போய் ஒரு லாரி புக் பண்ணுங்க எல்லோரும் சேர்ந்து போகலாம்” என நையாண்டி பேசவும் அதுவரை பொறுமையாய் இருந்த ரகு,
“கூட்டுக் குடும்பத்துக்கு என்று சில முறைகள் இருக்கு. எல்லோரையும் அனுசரித்து போனால் தான் இங்கே எல்லாம் நல்லவிதமாக அமையும். இது கட்டாயமில்ல. அன்பினால கட்டப்பட்டது. இங்க நீ வந்து வருஷம் பல ஆனபோதும் இதை இன்னும் நீ புரிஞ்சுக்கலையே...” என்றான் சுதியேறிய குரலில்.
அப்போதும் அடங்காதவள்,”இன்னும் பல வருஷம் ஆனாலும் உங்க கூட்டு குடும்ப சித்தாந்தத்தை நான் எப்பவும் புரிஞ்சிக்க போறதில்லை.அதனால எனக்கு லெச்சர் கொடுக்கறதை விட்டுட்டு வேற வேலையை பாருங்க.நான் இன்னைக்கு எப்படியும் தல படத்தை பார்த்தே தீருவேன். உங்களுக்கு பத்து நிமிஷம் டைம் தரேன். அதுக்குள்ள என்கூட நீங்க வரலன்னா... எங்க கம்பனியில இருந்து அவசரமா கால் வந்ததுன்னு உங்க அண்ணிக்கிட்ட சொல்லிட்டு நான் போயிட்டேன் இருப்பேன்.ஜெயில்ல கூட பரோல் ஈஸியா கிடைச்சிடும் போல. இந்த வீட்டில் இருந்து வெளியே போறதுக்குள்ள எத்தனை பேருகிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு நிக்கனும். அப்பா... சாமி! முடியல” என்றவள் கட்டிலில் சட்டமாக அமர்ந்துக் கொண்டு போனை பார்க்க ஆரம்பித்தாள்.
அந்த வீட்டில் வைதேகியை தவிர மற்ற மருமகள்கள் இருவரும் தாங்கள் படித்த படிப்பை வீணடிக்காமல் அவரவருக்கு தெரிந்த துறையில் பணி செய்தனர். வந்தனா அவளின் தந்தையின் கட்டுமான தொழிலிலும், சஞ்சு தங்களின் கடைகளுக்கு நகைகளை வடிவமைத்து தரும் பணியிலும் பங்கெடுத்தனர்.
மனைவியின் மிரட்டலில் முழி பிதுங்கி நின்ற ரகு, வழக்கம் போல தன் தம்பியை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்ற அழைத்தான். அவனின் கைபேசி தொடர்ந்து பிசியாக இருக்கவே அடுத்து என்ன என்று கதிகலங்கிப் போய் நின்றான்.
“என்ன மாம்ஸ்! உங்க க்ரைம் பாட்னர் படத்துக்கு போறாங்க போல! ஏற்பாடு எல்லாம் தாங்கள் தானோ?” என்ற கிண்டல் குரலில் அதிர்ந்தவன், “உனக்கு எப்படிடி தெரியும்?” என்றான்.
“உன்னை நான் அறிவேன்... என்னையன்றி யாரறிவார்...” என அவள் பாட்டாகவே படிக்கவும்,எப்போதும் போல இப்போதும் அவளை ‘எமகாதகி’ என செல்லமாக மனதினுள் வைத்தவன், “என் சஞ்சுகுட்டி எப்படி இருக்காங்க? என் புஜ்ஜிகுட்டி எப்படி இருக்காங்க?” எனக் கொஞ்சினான்.
மூன்றுமாதக் கருவை சுமந்துக் கொண்டிருக்கும் சஞ்சனா, தன் வயிற்றை ஆசையாக தாவிக்கொண்டு,“உங்க ரெண்டு குட்டிங்களும் நல்லா இருக்காங்க. ஆனா... ரகு மாமாதான் இப்போ நல்லாவே இல்லை” என தொடங்கியவள் இங்கு வீட்டில் நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்.அதைக் கேட்டவன், ‘இந்த பாக்கி அக்காவை ஏன்தான் உள்ளூருல கல்யாணம் பண்ணிதந்தாங்கன்னு ஒரு நாளைக்கு ஒம்பது தடவை பீல் பண்ணவச்சிடுது!’ என எரிச்சலாக நினைத்தவன், சஞ்சுவிடம் அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி, தான் இப்போது சொல்வதை அப்படியே பாக்கியிடம் போய் சொல் என்று ஒன்றை சொன்னான்.
வந்தனா கொடுத்த பத்து நிமிடங்கள் முடிந்திருக்க அவள் கட்டிலை விட்டு எழவும் அவர்களின் அறைக்கதவு மீண்டும் தட்டப்பட்டது.அதைக் கண்டு ‘இப்போது என்ன வந்திருக்கிறதோ... என அரண்டுப்போன ரகு கதவை திறக்காமல் நின்ற இடத்திலேயே நிற்க,அவனை அலட்சியமாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே வந்தனா கதவை திறந்தாள்.
மீண்டும் அங்கே பாக்கிதான் நின்றுக் கொண்டிருந்தாள். தன முன்னே நிற்கும் வந்தனாவை ஒரு பொருட்டாய் பார்க்காது, அவளின் பின்னே பாத்து,”ரகு... நான் உன்கூட வரல. நீங்க எனக்காக வெயிட் பண்ணாம சீக்கிரமா கிளம்புங்க.நான் புதுசா திறந்திருக்கும் மாலுக்கு போகப் போறேன். இப்போதான் சதீஷ் போன் செய்தான். அவனோட பிரெண்ட் வினோ இருக்கான்ல... அந்த மால்ல கடை திறந்திருக்கானாம். என்னை கண்டிப்பா அவன் கடைக்கு வர சொன்னானாம்.இருக்காத பின்ன! சின்ன வயசுல இருந்தே அக்கா அக்கான்னு என்பின்னாடியே சுத்துவான்.அவன் அவ்வளவு ஆசையா கூப்பிடும்போது நான் போகலைன்னா நல்லாவா இருக்கும் சொல்லு? அதான் நான் பிள்ளைங்க எல்லோரையும் கூட்டிட்டு அங்க போகப்போறேன். எல்லாத்தையும் ரெடி செய்து, நாங்க கிளம்ப நேரம் எடுக்கும்.அதனால நீ வெரசா வந்தனாவோட புறப்படு” என பொரிந்து தள்ளியவள் அவசரமாக அங்கிருந்து சென்றாள்.
அதுவரை அவளையே அமைதியாக பார்த்துக்கொண்டு நின்றிந்த வந்தனா, அவள் சென்றதும் கதவடைத்து,”ஷப்பா... இன்னைக்கு நடந்த சம்பவங்கள் திரில்லர் படத்தை மிஞ்சிடும்.வாங்க... அடுத்து யாரும் வந்து குட்டைய குழப்பறத்துகுள்ள சீக்கிரமா ஓடிடலாம் வாங்க. போவோமா... போகமாட்டோமா... யோசிச்சு, யோசிச்சு அட்லாஸ்ட்.... நாம தலைய பார்க்க போகப்போறோம்.... ஹேய்...” எனக் கத்தினாள்.