Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript பாசப்பறவைகள் - கதை திரி | SudhaRaviNovels

பாசப்பறவைகள் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

சுதா ரவி, ராஜேஸ்வரி சிவகுமார் இருவரும் இணைந்து சக்தி ஸ்ரீ என்கிற பெயரில் இந்தக் கதையை தொடங்கவிருக்கிறோம். வாரம் ஒரு பதிவு மட்டுமே இப்போதைக்கு கொடுக்க இயலும். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தது கொள்ளுங்கள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் - 1


தாத்தா,பாட்டி,சித்தப்பா,பெரியப்பா,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை இப்படி அனைவரும் கூடி வாழும் குடும்பம் தான் கூட்டுக்குடும்பம் என்ற நிலை மாறி, ‘பெற்றோர் தங்களின் பிள்ளைகளோடு கூடிவாழ்ந்தாலே அது கூட்டுக்குடும்பம்தான்!’ என்ற நிலைக்கு காலம் முன்னேறியுள்ளது.


முன்பெல்லாம் பிள்ளைகளுக்கு திருமணமானால் தான் அவர்கள் பெற்றோரை விட்டு தனியே சென்று தனிக்குடித்தனம் இருப்பார்கள். ஆனால் இப்போதோ பிள்ளைகள் தங்களின் படிப்பின் நிமித்தமோ பணியின் நிமித்தமோ சிறுவயதில் இருந்தே ஹாஸ்டலில் தங்கவைக்கப்படுகின்றனர்.அப்படியில்லை என்றால் தாயும் தந்தையும் தனித்தனியே தங்களின் பிள்ளைகளின் வருங்கால முன்னேற்றத்திற்காக அவர்களுடன் தனிக்குடித்தனம் செய்கின்றனர்.


இப்படிப்பட்ட சூழல் நிலவிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் வசந்தமாளிகையில் அப்பா அம்மா மூன்று மகன்கள் அவர்களின் பிள்ளைகளுடன் சேர்த்து, நான்கு குடும்பங்கள் இணைந்து கூட்டாக குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


அந்த வசந்தமாளிகையின் அஸ்திவாரம் ஆறுமுகம் வசந்தி தம்பதி! ஆறுமுகம் தன் ஆசை மனைவிக்கு கட்டிய மாளிகைதான் இந்த வசந்தமாளிகை!


நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய பதினாறுவயதில் வசந்தி, ஆறுமுகத்தின் கரம் பிடித்து அவரின் வாழ்க்கையில் நுழைந்த நாள் தொட்டு அவரின் வாழ்க்கை ஏறுமுகமாகவே இருந்தது. முதலில் சிறு அளவில் இவர் வைத்திருந்த நகைக்கடை வசந்தி வந்த மூன்று ஆண்டுகளில் ஓரளவிற்கு பெரிய கடையாக உயர்ந்தது.


அதற்கு அடுத்த ஆண்டு மகன், அடுத்த இரண்டாண்டுகளில் மகள், அதற்கடுத்து சில பல ஆண்டு இடைவெளியில் இன்னொரு மகளும் இரண்டு மகன்களும் என அவரின் குடும்பம் பெருகியதை போல அவரின் தொழிலும் ஈரோட்டில் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்து நின்றது. ‘எல்லா வளத்தையும் தனக்கு அள்ளித்தரும் மகாலஷ்மி தன் மனைவி’ என்ற அசைக்கமுடியாத எண்ணம் ஆறுமுகத்தின் மனதில் ஆழப்பதிந்து அவருக்கு மனைவி சொல்லே மந்திரமானது.


இந்தாங்க அத்தை காபி! இதை குடிச்சிட்டு மெதுவா பின்பக்கம் போய் வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதான்னு பார்த்துக்கொண்டே நம்ம தோட்டத்தை ஒரு நாலு சுத்து சுத்திட்டு வாங்க. காலையில் கிடைக்கும் இந்த இளஞ்சூடு உடம்புக்கும் மனசுக்கும் தெம்பை தரும் சொன்னவளை பார்த்த வசந்தி,

வாக்கிங் போன்னு சொன்னா போகப்போறேன். அதுக்கெதுக்கு இப்படி சுத்திவளைச்சி சொல்லிட்டிருக்க என தன் மூத்த மருமகள் வைதேகியிடம் கேட்டார்.


ம்க்கும்! அப்படியே நான் சொல்றதை கேட்டுட்டுதான் நீங்க மறுவேலை பார்ப்பீங்க! உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா? வாக்கிங் போங்க, டயட்ல இருங்க, யோகா செய்யுங்க இப்படி எதை சொன்னாலும் அதை செய்யறது இல்ல சொல்லிக்கொண்டிருந்தவளை இடையிட்டு,


நீ சொன்னதை எல்லாம் நான் செய்யாம இருந்தா அப்படியே என்னை சும்மா விட்டுடறாமாதிரி புலம்பற? பேசி பேசியே என்னை இதையெல்லாம் செய்ய வச்சிடமாட்டியா? என்றவரின் குரலில் துளியளவும் கோபமோ வெறுப்போ இல்லை. மாறாக பெருமையே குடிக்கொண்டிருந்தது.


வசந்தியின் அண்ணன் மகள் தான் இந்த வைதேகி. இவளின் கணவன் மூத்தவன் ராஜாராமன்... பெற்றோரின் பேச்சைக்கேட்கும் அந்த தசரத ராமனின் மறுபிறப்பு. மனைவியை பார்த்துக்கொள்வதில் தந்தைக்கு தப்பாது பிறந்த தனையன்.


இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கடைசி பிள்ளைப்பேற்றின் போதே கர்பப்பையில் பிரச்சனை ஏற்பட்டு அது அடுத்துவந்த சில ஆண்டுகளில் பெரியதாக வளர்ந்து கர்பப்பையையே எடுக்கவேண்டிய சூழ்நிலை வசந்திக்கு வந்தது. ஆப்பரேஷன் செய்துக்கொண்டு படுத்துவிட்டால் குடும்பத்தின் நிலை?தனக்கு துணையாக குடும்பத்தை பார்த்துக்கொள்ள பெரிய மகளை அழைக்கலாமென்றளோ... அவள் ஆறுமாதம் முன்புதான் தலைப்பிரசவம் முடித்து மாமியாரின் வீட்டிற்கு சென்றிருக்கிறாள். இப்போது இன்னும் ஒரு ஆறுமாதத்திற்கு அனுப்ப சொல்லி அவளின் மாமியாரிடம் எப்படி கேட்பது... என வசந்தி தவித்துக்கொண்டிருந்தார்.


இரண்டும்கெட்டான் வயதில் இருக்கும் அடுத்த மகளையும் அதற்கடுத்து வளர்ந்தும் வளராமலும் இருக்கும் இரண்டு மகன்களையும் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாத காரணத்தால் அவர் அறுவைசிகிச்சையை தள்ளிப்போட்டுக் கொண்டே வர ஆறுமுகத்திடம் மருத்துவர் இப்படி காலம் கடத்திக்கொண்டே இருந்தால் கர்ப்பப்பையில் புற்றுநோய் வரவாய்ப்பு இருக்கிறது என சொல்லி குண்டைப் போட்டார்.அதில் இடிந்துப் போய் இருந்த குடும்பத்தை தாங்கும் தூணாய் வந்து நின்றவள் தான் வைதேகி!


அப்போதுதான் கல்லூரிப்படிப்பை முடித்து தந்தையின் தொழிலில் காலடி எடுத்துவைத்த இருபத்தியிரண்டே வயதான தன் மூத்த மகனுக்கு மணமுடித்து, வரும் மருமகளின் கையில் தன் குடும்பத்தை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக தனக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ளலாமென எண்ணிய வசந்திக்கு வைதேகிதான் முதலில் மனதினில் வந்தாள்.


தன் குடும்பத்தை தன்னிடத்தில் இருந்து பொறுப்பாக வழிநடத்த தன் அண்ணன் மகளால் முடியும் என்ற வசந்தியின் நம்பிக்கையை இன்னுவரை வைதேகி காப்பாற்றிக்கொண்டுவருகிறாள்.அந்த குடும்பம் இன்றும் கூட்டாக ஒரே கூட்டில் வாழ்ந்துக்கொண்டு வருவதற்கு இவள் மட்டுமே முழுமுதல் காரணம்.


நோயாளியான மாமியாருக்கும் தன்னைவிட மூன்று வயதே குறைந்த நாத்திக்கும்,தன்னுடைய சிறுவயது விளையாட்டு தோழனான மூத்த மைத்துனனுக்கும், பத்து வயது கூட நிரம்பாத கடைக்குட்டி மைத்துனனுக்கும் தாயாக வேண்டிய நிலைமை திடீரென வந்த போது அதை சாமார்த்தியமாக எதிர்கொண்டு சாமாளித்துக்காட்டினாள்.


சின்ன நாத்தனாரின் திருமணம், பெரியவளின் இரண்டாவது பிள்ளைபேறு, அதன் தொடர்ச்சியாய் சின்னவளின் பிரசவங்கள்...இதனிடையே இவளின் இருகுழந்தைகளின் பிறப்பு,பெரிய மைத்துனனின் கல்யாணம் கடைசியாய் போன ஆண்டு முடிந்த கடைக்குட்டியின் திருமணம்... இப்படி இவளுக்கு கல்யாணம் முடிந்த இந்த இருபது ஆண்டுகளில் இவள் கடந்து வந்த கடமைகள் தான் எத்தனை!


பொறுப்பேற்க பொருத்தமாய் ஆள்கிடைத்ததும் வசந்தி தன் பொறுப்பில் இருந்து ஓய்வெடுத்துக்கொண்டார். மூத்த மருமகள் வந்ததிலிருந்து தன் கணவனைக் கவனிப்பதும்,அன்றாடம் கடவுளை காக்கா பிடிப்பதும் மட்டுமே தன் கடமையாக குறுக்கிக் கொண்டார்.


ரகு! இன்னைக்கு சீக்கிரம் வரனும். நியாபகம் இருக்கில்ல? என்ற மிரட்டல் குரலில் அப்போதுதான் வெளியே செல்ல தங்களின் அறைக்கதவை திறக்க கைபிடியில் கைவைத்தவன்,


தனியா இருக்கும் போது மட்டும் பெயர் சொல்லிக்கூப்பிடு, மத்தவங்க முன்னாடி வேண்டாம்னு எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு விளங்காதா?எரிந்து விழுந்தான்.


இதற்கெல்லாம் அசந்துவிட்டால் அவள் வந்தனா ரகுராமனாக இருக்கமுடியுமா?


நான் இப்ப என்ன கூட்டத்துல மைக் போட்டா கூப்பிட்டேன்? ரூம்குள்ள இருக்கும் போதுதானே சொன்னேன்


அடியே அறிவுகொழுந்து! நான் கதவ திறக்கும்போது நீ இப்படி கூப்பிட்டு வைக்க,அது எங்கக்கா பாக்கி காதுல விழுந்து வைக்க... அதுக்கு அவ ஒரு பஞ்சாயத்தை ஆரம்பித்து வைக்க... தேவையா இதெல்லாம்? சலிப்புடன் கேட்டான் ரகுராமன்.


ராஜாரமனுக்கு பிறகு இரண்டு மகள்கள்... தனலட்சுமி, பாக்கியலட்சுமி என இரு லக்ஷ்மிகளுக்கு பிறகு பிறந்தவன் தான் இந்த ரகுராமன்.கலகலப்பாக எல்லோரிடமும் பேசும் வழக்கமில்லாதவன். மிகவும் அழுத்தக்காரன். அமைதியாக இருந்தே காரியத்தை சாதித்துக்கொள்வான். இவனின் திறமைக்கு இவனின் திருமணமே உதாரணம்.


வந்தனா... அந்த வீட்டின் கடைக்குட்டி சதிஷோடு கல்லூரியில் படித்தவள்.ரகுவும் அதே கல்லூரி என்பதால் தம்பியின் மூலம் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் இருவரிடையே அது காதலாக மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது.இம்மூவரை தவிர மற்றவர்களை பொறுத்தவரை இவர்களின் திருமணம் பெரியோர்களால் நிச்சயித்த திருமணம்.அவ்வளவு அழகாக ப்ளான் செய்து தன் திருமணத்தை முடித்துக்கொண்டான் ரகு
.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
வந்தனாவும் இவனுக்கு சளைத்தவள் இல்லை. தனது தேவைக்கு கூட மற்றவரிடம் வாயை திறக்காமல் அனைத்தையும் தன் கணவனைக் கொண்டே முடித்துக்கொள்வாள். அந்த வீட்டை பொறுத்தவரை இவள் ஒரு வாயில்லா பூச்சி. இவளின் கணவன் ஒரு அமைதிப்புறா.


கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல! சொன்னவளை ஆயாசமாக பார்த்த ரகு, முடிவு தெரியாமல் தன்னை இவள் வெளியே விடமாட்டாள் என்பதை புரிந்துக்கொண்டான்.


என்ன வந்து நீ! நைட் அவ்வளவு நான் சொல்லியும் அதை புரிஞ்சிக்காம இப்ப காலையில கடைக்கு கிளம்பற நேரத்துல தகராறு பண்ற? என்றவனிடம்,

என்ன சொன்ன நீ? எப்பவும் வழக்கமா அதெல்லாம் முடியாதுன்னு சொல்றதை தானே நேத்தும் சொன்ன! அதுக்கு நான் என்ன சொன்னேன்? அது உனக்கு மறந்து போச்சா? காட்டமாக கேட்டாள்.


பொய் சொல்லாதடி! நீ ஒன்னை கேட்டு நான் எப்ப முடியாதுன்னு சொல்லியிருக்கேன்? இப்ப சூழ்நிலை சரியில்ல, ஒரு ரெண்டு மூனு நாள் போகட்டும்னு தானே சொன்னேன்.நான் என்னமோ முடியவே முடியாதுன்னு சொன்னாமாதிரி இப்படி ஸீன் போடற”.


எப்போதும் மனைவியிடம் எதையும் மறுத்து கூறாதவன்,இப்போது அவனின் தமக்கை தன் பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் இவள் கேட்பதை எப்படி செய்வதாம்? ‘ஆள் வளர்ந்த அளவுக்கு இவளுக்கு அறிவு வளரல!’ சத்தமாக சொல்ல தைரியமற்று மனதினுள் சொல்லிக்கொண்டான்.

ரெண்டு மூனு நாளெல்லாம் என்னால பொறுத்துக்க முடியாது. இன்னைக்கே தான் நான் போகனும்!


பாக்கியும் அவ பசங்களும் இங்க இருக்கும் போது நாம மட்டும் போனா நல்லாவா இருக்கும் வந்து-ம்மா?என்றவனை பார்வையால் எரித்தவள்,

அவங்க வருஷத்துல பாதிநாள் இங்கதான் இருக்காங்க. அவங்களுக்காக நாம வெளிய போகாம இருக்கனும்னு நினைச்சா நாம ஆயுசுக்கும் எங்கயும் போகமுடியாது என்றாள் எகத்தாளமாக.


வீட்டின் கடைசி பெண்குழந்தை. அம்மா அண்ணியின் செல்லம் இந்த பாக்கியலட்சுமி. வாழ்க்கைப்பட்ட இடமும் உள்ளுராக இருக்கவே வாரத்தில் ஒரு ஐந்து நாட்கள் மட்டுமே இங்கு வந்து சீராடிவிட்டு போவாள். அதற்கு தான் இந்த பேச்சு வாங்குகிறாள் தன் தம்பியின் மனைவியிடம். இது மட்டும் அவள் காதில் விழுந்திருந்தால்... இந்நேரம் இந்த வசந்தமாளிகை அவளின் கண்ணீரில் கரை காணமுடியா தூரத்திற்கு மிதந்து சென்றிருக்கும்.


காதல் மனைவியே என்றாலும் தன் அக்காவை குறை சொல்வதை தாங்கிக்கொள்ளமுடியாத ரகு,அவ இங்கவரதுல உனக்கு என்ன கஷ்டம்? நீயா அவளுக்கு சேவகம் செய்யற! அவளை உக்காரவச்சி பாத்துகிறது எங்க அண்ணி.. இதுல உனக்கு எங்க குறைந்து போச்சு? வள்ளென எரிந்து விழுந்தான்.


அவன் சொல்வதில் இருந்த உண்மை இவளை சுட அந்த பேச்சை அப்படியே காற்றில்விட்டுவிட்டு, நான் ஐந்து மணிக்கு ரெடியா இருப்பேன். நீங்க கண்டிப்பா வந்துடனும்! எனக் கட்டளையிட்டாள்.


அவளுக்கு பிடித்த ஹீரோவின் படத்தை ரிலீஸான இன்றே பார்த்துவிட வேண்டும் என்று சிறு குழந்தை போல அடம் பிடிப்பவளை என்ன சொல்லி சமாளிப்பது, வெளியே கிளம்பும்போது இங்கு உள்ளவர்களுக்கு என்ன சொல்லி செல்வது... என தெரியாது முழிப்பிதுங்கி போய் நின்றிருந்தவனை ஆபத்தாண்டவன் போல சதீஷ் போன் செய்து காப்பாற்றினான்.


தம்பியின் போன் வந்ததும் போன உயிரே திரும்பிவந்ததை போல ஆசுவாசமானவன் மனைவியிடம் மேற்கொண்டு எந்த பேச்சையும் வளர்க்காது ஒரு சிறு தலையசைப்பில் அவளிடம் விடைப்பெற்றுக்கொண்டு வெளியே வந்தான்.கணவனின் கள்ளமனம் அறிந்த அவனின் துணைவியோ அவனை பின் தொடர்ந்தாள்.


அங்கு காத்துக்கொண்டிருந்த நண்பனைப் பார்த்ததும் கணவனை டீலில் விட்டுவிட்டு அவனிடம் போனவள்,

சதீஷ்! இன்னைக்கு தல படம் ரிலீஸ் எனக் காதைக் கடித்தாள்.


ஊரறிந்த ரகசியத்தை ஏன் இவள் இப்படி ரகசியமாக சொல்கிறாள் என புரியாது பார்த்தவன், அதான் எனக்கு தெரியுமே! என்றான்.


முதல் நாள் படம் பார்க்கறது என்னோட ரொம்ப நாள் பழக்கம்!


அதுவும்தான் எனக்கு தெரியுமே!


தான் சொல்ல வருவதை புரிந்துக்கொள்ளாமல் ஒருவரியில் பதிலளித்துக் கொண்டிருந்த நண்பனின் மேல் கோபப்பார்வையை வீசியவள், எரும! எல்லாம் உனக்கு தெரியுமா? இன்னைக்கு நான் பர்ஸ்ட்டே ஷோ பார்க்க முடியாது.உங்க அக்கா குடும்பம் இங்க இருக்கறதால உங்க அண்ணன் என்னை சினிமாவிற்கு கூட்டிட்டு போகமாட்டாராம். அதுவும் உனக்கு தெரியுமா? தன்னை மறந்து கத்தினாள்.


அதைக்கேட்ட சகோதரர்கள் இருவரும் அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே அவளின் வாயை அடைக்க அருகில் ஓடி வந்தனர். அவ்வீட்டில் இருப்பவர்களுக்கு வந்தனா சதீஷின் நெருங்கிய தோழி என்பதோ, இவன் தான் அவளின் கல்யாணம் ரகுவோடு நடப்பதற்கு முக்கிய காரணமாய் அமைந்தான் என்பதோ தெரியாது.


ரகுவிற்கு கல்யாணத்திற்கு பெண் பார்க்கும் சமயத்தில் தரகரிடம் ரகுவிற்கு பத்துபொருத்தமும் பொருந்தும்படி வந்தனாவின் ஜாதகத்தை மாற்றி கொடுத்து தன் தோழியின் கல்யாண ஆசையை நிறைவேற்றியவன் இந்த ஆசையை நிறைவேற்றமாட்டானா?


எல்லாம் முடியும் அவனால். அனைவரையும் பேசியே கவுக்கும் திறமை உடையவன். வைதேகியின் செல்லப் பிள்ளை இவன்.யாரைக்கண்டும் எதற்கும் அசராத இவனையே அசைத்துப்பார்க்கும் ஒரு ஆள் உண்டென்றால் அது இவனின் மனைவி சஞ்சனா தான்! இந்த வல்லவனுக்கு வில்லி அவள்!


வைதேகியின் ஃபுள் சப்போர்ட் இவனுக்கு இருக்கும் தைரியத்தால், வந்தனாவை எப்படியும் இன்று படம் பார்க்க அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில், நீ இன்னைக்கு படத்துக்கு போகறதுக்கு நான் கியாரண்டி. ஆனா உங்க பசங்க.... என சதீஷ் இழுத்ததும்,

உன்னோட அண்ணியும் என்னோட அண்ணியும் அவங்கள பார்த்துப்பாங்க! சட்டென்று இவள் பதிலளித்தாள்.


இப்ப மட்டும் என்னோட அக்கா தயவு வேணுமா உனக்கு? என பாய்ந்துக்கொண்டு வந்த கணவனுக்கு,
ம்ம்ம்... அவங்க என்ன எனக்கா சேவகம் செய்றாங்க? அவங்க தம்பி பிள்ளைங்களுக்கு செய்றாங்க என கூலாக பதில் சொல்லிவிட்டு மாலை எந்த உடையணியலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கிட தன்னுடைய அறைக்கு திரும்பினாள் வந்தனா
.
 
Status
Not open for further replies.