Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஷெண்பா அவர்களின் "நின்னைச் சரணடைந்தேன்" கதை புதிய பதிப்பு இங்கு பதிவிடவிருக்கிறார். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
வணக்கம் தோழிகளே! நலமா!

இன்று முதல், நின்னைச் சரணடைந்தேன் தொடர்ந்து பதிவிடப்படும்.

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும், தொடர்ந்து தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் நபர்கள் இருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு எனது 3 (உங்கள் சாய்ஸ்) புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

முழு கதையும் முடிந்தபிறகு, ஒட்டு மொத்தக் கதைக்கும் விமர்சனம் அளிக்கும் மூன்று தோழிகளின் கருத்தை எனது அடுத்த புத்தகத்தில் பிரசுரிப்பதுடன், அந்தப் புத்தகமும் என்னுடைய 5 புத்தகங்களும் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

இது மட்டும் அல்லாமல் உங்களுக்கான தொடர் கதை விருந்தும் காத்திருக்கின்றது.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
நின்னைச் சரணடைந்தேன் - ஷெண்பா




வில்லின் மைந்தன்

விண்ணில் பறந்தே

விண்ணுலகம் சென்று

நீரான நெருப்பை

நிதானத்தில் நிரந்தரமாக்கிடா

நன்னுயிரில் நிழலாக்கி

சிந்தை கலங்கா சித்தார்த்தன்

மங்கையவளை

மணமேடை ஏற்றிடச் செய்து

நேசத்தின் சங்கமத்தில்

பிணக்கில்லா பந்தத்தில்

மதிமயங்கி மதுரமாக

மாறா மனமவனிடம் மிழற்றினாலே

நீங்கா உயிரென்றே

நின்னைச் சரணடைந்தேன்!



தீபிகா





முன்னுரை


தோழிகள் அனைவருக்கும் வணக்கம்!

இக்கதையை 2008ம் ஆண்டு, அமுதா ஃப்ரெண்ட்ஸ் என்ற இணையதளத்தில் எழுதினேன். அக்குழந்தையை, 2018ம் ஆண்டின் இறுதியில், மேலும் அழகுபடுத்தி அச்சு ஊடகத்தின் வாயிலாக உங்களுக்கு வழங்கி இருக்கிறோம்.

வாசகியாக இருந்த அதே தளத்தில் என்னையும் கதையெழுத வழிகாட்டிய எழுத்தாளர் எல்.பி (எழுத்தாளர் லக்ஷ்மி பிரபா) அவர்களுக்கும், எனக்குத் தளம் அமைத்துக் கொடுத்த அமுதா ஃப்ரெண்ட்ஸ் வேர்ட்பிரஸ்.காம் அமுதாவிற்கும், அமுதா பிளாகில் தொடர்ந்து எனக்கு ஊக்கமும், உற்சாகமும் வழங்கிய எனது தோழிகளுக்கும் நன்றி! நன்றி!

ஷெண்பா என்றால், நின்னைச் சரணடைந் தேன் ஷெண்பாவா! என்று இணையதளத்தில் கதை படிக்கும் பலர் என்கென்று கொடுத்த அடையாளம். அதில் எனக்கு மிகுந்த பெருமிதம் உண்டு. அப்படிப்பட்டக் கதை சிலரால் பல தளங்களில் தொடர்ந்து என் பெயர் இல்லாமலும், பிறர் பெயரில் தங்கள் கதைகள் போலவும் தொடர்ந்து வெளிவந்தது. பலரால் இக்கதையில் சில பகுதிகள் ஒருசிலரால் வேறு கதைகளில் எடுத்தாளப்பட்டும் இருக்கிறது.

இந்தக் கதைக்காக, ஆரம்பத்திலிருந்து என்னுடன் பயணித்தத் தோழிகள் இருவரைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். எனது இணையதள தோழிகளான, எழுத்தாளர் சம்யுக்தா மற்றும் எழுத்தாளர் வனிதா ரவிச்சந்திரன். இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

சக எழுத்தாளர்களாக இருந்த அமுதவல்லி கல்யாண சுந்தரம், விஜய லஷ்மி, மீனா குமாரி, கிருத்தி, ராஜி, ஹேமா, சுபஸ்ரீ கிருஷ்ணவேணி, சீதா லஷ்மி, ரேவதி அஷோக், வாணிப்ரியா, மற்றும் பல எழுத்தாளர்களும், கோதை சுரேஷ், சாரதா கிருஷ்ணன், கங்கா தேவி, ஸ்ரீப்ரியா, அரசி, சரளா, ஜாஸ்மின், இன்னும் பலப் பல வாசக தோழிகளின் பேராதரவும், ஊக்கமும், கட்டமைத்த விமர்சனங்களும் எனது எழுத்தை சீரிய நற்பாதையில் செல்ல வழிவகுத்ததென்றால் மிகையில்லை. இன்னமும் நான் இங்கே குறிப்பிடாமல் விடுபட்ட எழுத்தாளர், வாசக சகோதரிகள் இருக்கின்றனர். அவர்களுக்கும் எனது நன்றிகள் பல.

அத்துடன், இந்தக் கதை பத்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய எனது முதல் கதை என்பதால், கதையில் சிலபல குறைகளும் இருக்கும். கதையை அப்படியே வெளியிட எனக்குச் சுத்தமாக விருப்பம் இல்லை.

அதை இணையதள வாசக தோழிகளிடமும் பொதுவில் கேள்வியாக வைத்தேன். அனைவரது ஒட்டுமொத்தப் பதிலும், எங்களுக்கு எந்த எடிட்டிங்கும், இல்லாமல் அப்படியே கதை வேண்டும். ஒரு கதாபாத்திரத்தையும், நிகழ்வு களையும் எடுக்கக் கூடாது என்ற அன்புக் கட்டளையே இட்டனர்.

என்னுடைய பெரும்பான்மையான வாசக தோழிகளின் அன்பு வேண்டுகோளை ஏற்று, அவர்களது விருப்பத்திற்கு இணங்கி, கதையை எங்குமே குறைக்காமல், அப்படியே அவர்கள் கேட்ட படி அமேசான் கிண்டிலில் கொடுத்திருக்கிறேன்.

ஆனாலும், பத்து வருடங்களில் ஒரு கதையை எப்படி எழுத வேண்டும். எழுதிய கதையை எவ்விதம் மெருகேற்ற வேண்டும் என்ற வித்தையை ஓரளவிற்குக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதை இக்கதையில் பரிசோதித்தும் விட்டேன். கதையில் ஒரு சில பகுதிகள் புதிதாக இணைத்தும், சில இடங்களை மெருகேற்றியும், பலப்பல இடங்களில் தயங்காமல் வெட்டியும் இருக்கிறேன்.

இந்தக் கதையை, முதன்முதலில் தேவெழுதும் ஒரு மாணவியின் மனநிலையுடன் தான் எழுதி இருக்கிறேன். இப்போது முடிவிற்குக் காத்திருக்கும் மாணவியாகவும்... முடிவைச் சொல்லப்போகும் உங்கள் மேலான கருத்துக்களாகவும் காத்திருக்கிறேன்.

இந்தக் கதைக்கு அணிந்துரை எழுதிக் கொடுக்க முடியுமா மேடம்? என்று கேட்டதும் நிச்சயமாக என்றதுடன் இரண்டே நாட்களில் அணிந்துரையை எழுதி அனுப்பியதுடன், இந்தக் கதைக்கான விமர்சனத்தையும் எழுதிக் கொடுக்கிறேன் என்று பெருந்தன்மையுடன் சொன்ன எழுத்தாளர் திருமதி. காஞ்சனா ஜெயதிலகர் அவர்களுக்கு, சிரம் தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும்.

தானாக முன்வந்து வரவேற்புரை கொடுத்த எழுத்தாளர் திருமதி. சுதாரவி அவர்களுக்கும், விண்ணின் மைந்தன் கவிதை எழுதிக் கொடுத்த எழுத்தாளர் திருமதி. தீபிகா அவர்களுக்கும் நன்றி!

ஒவ்வொரு நாளும் கைப்பேசியில் அழைத்து அக்கா! இன்னைக்கு எத்தனைப் பக்கம் எழுதினீங்க? என்று அன்புத் தொல்லை கொடுத்த என் அன்புச் சகோதரி எழுத்தாளர் வேத கௌரி அவர்களுக்கு எனது அன்பான நன்றி!

வழக்கம் போலக் கதையைப் படித்துவிட்டு, உங்களுடைய மேலான கருத்துக்களையும் விமர்சனங்களையும் நம் பதிப்பக மின்னஞ்சல் முகவரிக்கோ, தொலைபேசி மூகமாகவோ தெரியப்படுத்தலாம்.

நன்றி!

ப்ரியமுடன்,

ஷெண்பா
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
அத்தியாயம் -1


அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருந்த சித்தார்த்தின் முகத்தில் ஆத்திரமும், கண்களில் கோபமும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இப்போது மட்டும் அவள், அவனெதிரில் வந்து நின்றிருந்தால் நிச்சயம் சாம்பலாகியிருப்பாள்.

‘எவ்வளவு திமிர் இவளுக்கு? ‘ராட்சசி!’ என்று கோபத்தில் குமுறிக்கொண்டிருந்தான்.

அன்று, அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இப்போதும், அவனது காதில் ஸ்பஷ்டமாக எதிரொலித்தது.

தன்னுடைய வாழ்நாளில், ‘யாரைப் பார்க்கவேகூடாது’ என எண்ணி இருந்தானோ, அவளைத் தனது அலுவலகத்திலேயே கண்டதும் திகைத்துப் போனான். அதைவிட, தன்னைக் கண்டதும் அதிர்ந்த பார்வையைச் சட்டென மாற்றிக் கொண்டு, இயல்பாகப் புன்னகைக்க முயன்றவளைக் கண்டவனுக்குக் கொலைவெறியே தோன்றியது.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவன்தான் சற்று திண்டாடிப் போனான். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ரணம் சிறிது சிறிதாக ஆறிவரும் நேரத்தில், மீண்டும் அங்கு கீறிவிட்டதைப் போல மனம் வலித்தது.

‘இவ்வளவு நாள்களாகச் சென்னைக்கு வரவே கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்ததை, அப்படியே செயல்படுத்தியிருக்க வேண்டும். தன்னையும் அலுவலகத்தில் ஒரு பங்குதாரனாகச் சேரச்சொல்லி வற்புறுத்திய ஜீவாவிடம், பிடிவாதமாக மறுத்திருக்க வேண்டும்!’ என்று நினைத்துக் கொண்டான்.

மனம் அதன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருக்க, மூளை எதிரே நிமிர்ந்து பார் என கட்டளையிட, தலையை உயர்த்திப் பார்த்தான். பார்வை, கண்ணாடித் தடுப்பிற்கு வெளியே, ஜீவாவுடன் பேசிக்கொண்டிருந்தவள் மீது படிந்தது.

நீள் விழிகளில், அதே அமர்த்தலான நேர்கொண்ட பார்வை. உதட்டில் எப்போதும் உறைந்திருக்கும் இளநகை. அழகான, அளவான சிறிய காதுகளில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் ஜிமிக்கி. தளரப் பின்னிய கூந்தலில் செருகியிருந்த ஒற்றை ரோஜா. அவள் அணிந்திருந்த ஆகாய நீலநிற சல்வார், அவளது வனப்பை மேலும் கூட்டிக்காட்டியது.

ஜீவா ஏதோ சொல்ல, சிரித்துக்கொண்டே நெற்றியில் புரண்ட கூந்தலை, காதின் பின்னால் வளைத்துவிட்டாள்.

அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவனது இறுக்கமான உதடுகளும் சற்று விடுதலை பெற்றது போல விரிந்தன. கைகள் தாமாக உயர்ந்து தலையைக் கோதியதும், தனது செய்கையில் திகைத்துப் போனான் சித்தார்த்.

தனது நிலையைக் குறித்து, அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தது. விரிந்த உதடுகள் பழைய நிலையை அடைய, இறுகிய முகத்துடன் இரண்டு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, வேடிக்கைப் பார்ப்பதுபோல ஜன்னலருகில் சென்று நின்றான்.

ஆனாலும், கொந்தளித்துக் கொண்டிருந்த மனம், அடங்க மறுத்துச் சீறிக்கொண்டிருந்தது.

“என்னடா! பலமான யோசனையா?" ஜீவாவின் குரலைக் கேட்டுத் திரும்பினான் சித்தார்த்.

"ஓ! இவ்ளோ சீக்கிரமா வந்துட்ட? அதுக்குள்ள எல்லா விஷயமும் பேசி, சிரிச்சி முடிச்சாச்சா?" என்றவனது குரலில் கேலி நிறைந்திருந்தது.

"ஏன்… உனக்கென்ன பொறாமை?” கிண்டலாகச் சிரித்தபடி, எதிர்க்கேள்வி ஒன்றைக் கேட்டான் ஜீவா.

அவனுக்குப் பதில் சொல்லாமல், வேக மூச்சுக்களை வெளியிட்டபடி அமர்ந்திருந்தான் சித்தார்த்.

“உனக்கு உடம்புக்கு எதுவும் இல்லையே…?” நண்பனின் முகத்தைப் பார்த்துவிட்டுச் சந்தேகத்துடன் கேட்டவனுக்கு, “ஒண்ணுமில்ல…” என்று விட்டேத்தியாகச் பதிலளித்தான்.

அவனது கோபத்திற்கான காரணம் புரியாமல், “ஆபீஸ் வொர்க் பத்தித்தான் பேசிட்டிருந்தோம்” என்றான் சமாதானமாக.

ஜீவாவின் தழைந்த குரலில் சற்று தெளிந்தவனாக, தலையை மட்டும் திருப்பி, அவனைப் பார்த்தான் சித்தார்த்.

“நம்புடா!” என்றான் அவன், பாவமாக.

"ஆபீஸ் நேரத்தில் இப்படிச் சிரிச்சிட்டு இருந்தா, உருப்படும்?" என்று முணுமுணுத்தான்.

“நாம என்ன ரோபோவா? மனுஷங்கடா. நீயும் கொஞ்சம் சிரிச்சிப் பழகிக்க. இல்லன்னா, உனக்கும்... இங்கேயிருக்கும் கம்ப்யூட்டருக்கும், வித்தியாசம் தெரியாமல் போயிடும்” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் ஜீவா.

“சரி சரி, வந்த முதல் நாளே, நாம எதுக்குச் சண்டை போடணும்?”

“நாம இல்லப்பா. நீ!" என ஜீவா திருத்திச் சொல்ல, சித்தார்த் அவனைப் பார்த்தபடியே வந்து இருக்கையில் அமர்ந்தான்.

"சரி, நான் மட்டும்தான்! வேலையைப் பார்ப்போமா” என்றான்.

புதிய ப்ராஜெக்ட் பற்றியும், அதற்காகச் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியும் இருவரும் கலந்தாலோசித்தனர். மதிய உணவு இடைவெளி வர, ஜீவா கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்தான்.

“மச்சான்! லஞ்சுக்கு எங்கே போகலாம்?” எனக் கேட்டான் ஜீவா.

"லஞ்சுக்கு உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டு வரச்சொல்லி அம்மாவோட உத்தரவு! கிளம்பு" என்றபடி எழுந்தான்.

“ஆஹா! வீட்டுச் சாப்பாடா! இன்னைக்கு ஒரு பிடி, பிடிச்சிட வேண்டியதுதான். ஐஞ்சே நிமிஷம்; நீ காரை எடுக்கறதுக்குள்ள வந்துடுறேன்...” என்றவன் அந்த அறையிலிருந்த இடைக்கதவு மூலமாக, தன்னுடைய அறைக்குச் சென்றான்.

அறையை விட்டு வெளியே வந்த சித்தார்த்தின் காதுகளில், பெண்களின் அரட்டைச் சப்தம் கேட்டது. அசட்டையாக அதை ஒதுக்கித் தள்ள நினைத்த நேரத்தில், தனது பெயர் காதில் விழவும், நின்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

கேபின் தடுப்பிற்குப் பின்னால் நின்றிருந்தவனைக் கவனிக்காமல், “நம்ம எம்.டீ.-ஸ் ரெண்டு பேருமே, ரொம்ப ஸ்மார்ட். அதுவும் சித்தார்த் சார்... ஹீரோவே தான்!” என்று சொல்லிவிட்டு ஒருத்தி பெருமூச்சுவிட்டாள்.

“ஹீரோன்னா... சாதாரண ஹீரோ இல்லடி. சூப்பர் ஹீரோ...!" என்று சொல்லிவிட்டுக் கிளுக்கென மற்றொருத்தி சிரிக்க, அங்கே வெள்ளிச் சலங்கைகள் கிணுகிணுத்ததைப் போலப் பெண்களின் சிரிப்பொலி எழுந்தது.

"போதும்! தேவையில்லாத பேச்செல்லாம் எதுக்கு? சீக்கிரம் சாப்டுட்டு வாங்க. வாங்கற சம்பளத்துக்கு, வேலையையும் பார்க்கணும்" என்றது அவளே தான்.

"இவ ஒரு சாமியார்டி...!" என முணுமுணுத்தவர்கள், மென்குரலில் தங்களது வம்பை மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

எரிச்சலும், அதட்டலுமாக ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரி யாரென, அவனுக்கு நன்றாகவே புரிந்தது. அவனது அகராதியில், திமிர்பிடித்தவள் என்ற சொல்லுக்கு நேராக எழுதியிருக்கும் பெயர். ஒருகாலத்தில் தன் மனத்திற்கு இனியவளாக, தேனாக இனித்த பெயர்.

‘மதுமிதா! - மது!’

கட்டுக்கடங்காத கோபமிருந்த போதும், இப்போதும் அந்தப் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம், மனத்திற்குள் ஏற்படும் இதம் மட்டும் சிறிதும் குறையவில்லை அவனுக்கு.

அதேநேரத்தில், "கிளம்பலாம்டா!" என்றபடி ஜீவாவும் வந்துவிட, கேபினைக் கடந்தவனது பார்வை, நெற்றிச் சுருங்க யோசனையுடன் அமந்திருந்தவளது மீது படிந்து, மீண்டது.

குனிந்து நெற்றியை நீவியபடி அமர்ந்திருந்த மதுமிதாவின் அருகில் வந்து அமர்ந்தாள் கீதா.

“மது! சாப்பிடலையா?”

நிமிர்ந்தவள், “ம்… பசியில்ல கீதா! நீ சாப்பிடு” என்றாள்.

இருவரும் கல்லூரி நாட்களிலிருந்தே இணைபிரியா தோழிகள். அலுவலகத்திலும் அது தொடர்ந்தது.

“ஏன்டி காலைலயிருந்து ஒரு மாதிரியிருக்க?” பரிவுடன் கேட்டாள்.

“நைட்டெல்லாம் சரியா தூக்கமில்ல…” என்றாள்.

“ஓ! அம்மாவுக்கு உடம்புக்கு ஏதாவது?”

“பிரச்சனை அவங்க உடம்புல இல்ல கீதா! மனசுலதான்” என்றாள்.

“அந்தப் பிரச்சனைக்கு, நீ மட்டும்தான் மருந்து போட முடியும்” என்றவளை வெறித்துப் பார்த்தாள் அவள்.

“சாரி மது! உன்னைக் கஷ்டப்படுத்தணும்னு சொல்லல. ஆனா…” என்றவள், தோழியின் முகத்தைப் பார்த்ததும் சொல்ல வந்ததைப் பாதியிலேயே நிறுத்தினாள்.

தோழியை இயல்பாக்கும் பொருட்டு, வேலையிலிருந்த சில சந்தேகங்களைக் கேட்டாள். அவளும் விரிவாக, அதற்கான விளக்கங்களைக் கொடுத்தாள்.

“வெரிகுட்! இப்படியே எழுந்து வந்து சாப்பிடுவியாம்…” பேசிக்கொண்டே லஞ்ச் பாக்ஸை எடுத்தவள், மதுவின் கரத்தைப் பற்றி எழுப்பினாள்.

“அதானே! என்னடா… உன் வேலையை இன்னும் காட்டலையேன்னு நினைச்சேன்” சரளமாகப் பேசிக்கொண்டே எழுந்து, தோழியுடன் நடந்தாள் மது.

பேசிக்கொண்டே உணவருந்தியவர்களது பேச்சு கல்லூரிக் காலங்களுக்குத் தாவ, இருவருமே புன்னகையுடன் சில விஷயங்களை நினைவுபடுத்திக் கொண்டனர்.

“ம், காலைலயே உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன்ப்பா!”

“எதைப் பத்தி?”

“நம்ம சித்தார்த் சாரைப் பத்தித்தான்…”

கீதா சொன்னதும், மது இமைகள் விரிய அவளைப் பார்த்தாள்.

“இதுக்கு முன்னாலேயே அவரை எங்கேயோ பார்த்தது போலவேயிருக்கு. எங்கேன்னு தான் தெரியலை. உனக்கு ஏதாவது நினைவிருக்கா?” என்று கேட்டாள்.

எந்தப் பதிலையும் சொல்லாமல், தோழியை வெறித்துப் பார்த்தாள்.

அவளது பார்வையைக் கண்டதும், “சரிசரி... நீ சாப்பிடு. நான் கையைக் கழுவிட்டு வந்திடுறேன்” என்று அங்கிருந்து நழுவினாள் கீதா.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
அத்தியாயம் – 2


“காஃபின்னா, அது ராஜீஸ் காஃபிதான்…” காஃபி கப்பை உயர்த்திக் காட்டி, தனது அத்தையைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினாள் மதுமிதா.

“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல. நேர்ல பார்த்தா அத்தை, சொத்தைங்க வேண்டியது. மத்த நேரத்துல, எங்க நினைப்பே உனக்கு வர்றதில்ல” நொடித்துக் கொண்டே காஃபி ட்ரேயுடன் ஹாலுக்குச் சென்றார் ராஜி.

“நீங்க சொல்றதைப் பார்த்தா, எனக்கு உங்கமேல பாசமே இல்லைன்னு நினைச்சிட்டு இருக்கா மாதிரி தெரியுதே” சொல்லிக்கொண்டே எழுந்து அவருக்குப் பின்னாலேயே நடந்தாள்.

“இருக்குன்னு நம்பச் சொல்றியா?” என்ற ராஜி, ஹாலில் அமர்ந்திருந்த மகனிடம் ட்ரேயை நீட்டியவர், “இப்போகூட, விமலா சொல்லித்தானே இங்கே வந்திருக்க...” என்றார்.

‘ஆஹா! அம்மா போட்டுக் கொடுத்துட்டாங்களா?’ என்று அசட்டுச் சிரிப்புடன் தலையைத் தட்டிக் கொண்டே, அத்தையைச் சமாளிக்கும் வழிதெரியாமல், ‘கொஞ்சம் ஹெல்ப்புக்கு வாயேன் அத்தான்!’ என்பதைப் போலத் தீபக்கைப் பார்த்தாள்.

சிரிப்புடன், ‘நீயே சமாளி’ என்பதைப் போன்ற பாவனையுடன், அன்னை கொடுத்த காஃபியை இரசித்துப் பருகிக் கொண்டிருந்தான் அவளது அருமை தாய்மாமாவின் மகன் தீபக்.

ராஜியின் அருகில் சென்று அமர்ந்தவள், “அத்தை! என்னைப் பாருங்களேன்” என்று அவரது முகவாயைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்பினாள்.

“நான் வேணும்னே அப்படிச் செய்வேனா? ஆஃபிஸ்ல, வேலை அதிகம். கல்யாணம் வேற நெருங்கிட்டிருக்கு. எப்படியும் ஒரு இருபது நாளாவது லீவ் போடணும்னு நீங்கதானே சொன்னீங்க. அதுக்குள்ள முடிக்க வேண்டிய வேலைகளைக் கொஞ்சம் சீக்கிரமா முடிக்கணுமில்ல” கொஞ்சலாகச் சொன்னாள்.

“அதுக்காக, போன் பேசக்கூட நேரமில்லையா உனக்கு?” என்றவரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

பொறுமையிழந்த தீபக், “ஏம்மா! பத்து நாள் கழிச்சி வீட்டுக்கு வந்திருக்கா. இந்தக் காச்சு காச்சறீங்க. இவ்வளவு பேசறீங்களே, நீங்க போய் அவளைப் பார்த்துட்டு வந்திருக்க வேண்டியது தானே” என்றான்.

“நீ என்னடா! எல்லாத்திலேயும் அவளுக்குச் சப்போர்ட்டா? நானும், என் மருமகளும் பேசிக்குவோம், சண்டை போட்டுக்குவோம் உனக்கென்ன? எங்கேயோ வெளியே போகணும்னு சொன்னியே கிளம்பு” என்று மகனை விரட்டினார் ராஜி.

“அதுசரி, இதுக்குத்தான் உங்களுக்கு நடுவில் நான் வர்றதே இல்லை” எனக் காட்டமாகக் கூறியவன், தன்னைப் பார்த்துச் சிரித்த மதுமிதாவை முறைத்தான்.

“மதும்மா! நைட் டிஃபனுக்கு உனக்கு என்ன டிஷ் வேணும்?” – ராஜி.

“எதைச் செய்தாலும் தின்னப் போறா… அப்புறம் என்ன கேள்வி?” கிண்டலாகச் சொன்னான் தீபக்.

“நீ இன்னுமா கிளம்பல?” அதட்டலாகச் சொன்னார்.

“கிளம்பிட்டேன் கிளம்பிட்டேன். உங்களுக்கு யாரையாவது மிரட்டிகிட்டே இருக்கற, மிரட்டல்ஃபோபியா போலம்மா! எதுக்கும், ஒரு நல்ல டாக்டரா பார்க்கணும்” தீவிர பாவத்துடன் சொல்ல, மது வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

“டேய்! உன்னை…” என்று அவர் எழுவதைப் போலப் பாவனை செய்ய, அவன் ஹெல்மெட்டுடன் வெளியே ஓடினான்.

சிரித்துக் கொண்டே, “வித்யா எங்கே அத்தை? ஆளையே காணோம்” எனக் கேட்டாள்.

“லைப்ரரி வரைக்கும் போய்ட்டு வரேன்னு போனா. வர்ற நேரம்தான்.”

“ம்ம், சொல்ல மறந்துட்டேன். நேத்து நைட் அண்ணா போன் பண்ணாங்க. வித்யாவை யூ.எஸ்க்குக் கூட்டிக்க, ஆஃபீஸ் மூலமா ஏதோ பேப்பர்ஸ் ரெடி பண்ணிட்டு இருக்கறதா சொன்னாங்க.”

பெருமூச்சு விட்ட ராஜி, “ஹும்! கூடப் பிறந்தவ இங்க இருக்குற. கட்டிக்கிட்டவளும் இங்கே இருக்கா. எல்லாத்தையும் விட்டுட்டு இந்தப் பிள்ளை அங்கே போய் வேலை பார்க்கணுமா? கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா இதே கதையைத் தான் ராஜேஷும் சொல்லிட்டிருக்கான். இப்படித் தனித்தனியா ஆளுக்கொரு இடத்துல இருக்கறதுக்கா, கல்யாணம் செய்து வச்சோம்!

ஆனா ஒண்ணு மதும்மா! நீ, உங்க அண்ணனுக்கு ஒரு நல்ல பதிலைச் சொல்ற வரைக்கும், அவன் இங்கே வரப்போறதில்லை. கல்யாணத்துக்கு வரேன்னு சொல்றதுகூட உனக்காகத்தானிருக்கும்” என்றவர் அங்கிருந்து எழுந்து செல்ல, அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள்.

‘ஒரு கேள்விக்கு, ஒரு பதில் தானே இருக்கும். ஏற்கெனவே முடிவாகத் தெரிந்த பதிலுக்கு, இன்னும் என்ன பதிலைச் சொல்வது?’ என்ற ஆயாசத்துடன் மௌனமாக அமர்ந்திருந்தாள்.

திடீரென, “ஹாய் நாத்தனாரே! எப்போ வந்த? வர்றேன்னு சொல்லவேயில்ல…” என்று கழுத்தைக் கட்டிக்கொண்ட வித்யாவின் தொடுகையில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

“என்னடி! இப்படி மலங்க மலங்க முழிக்கிற?” என்றபடி அவளருகில் வந்து அமர்ந்தாள் வித்யா.

“ம், ஒண்ணுமில்ல… லைப்ரரியிலிருந்து வந்துட்டியா?” என்றாள் சமாளிப்பாக.

“என்னடி ஆச்சு உனக்கு? வீட்டுக்கு வந்ததால தானே, உன்கிட்டப் பேசிட்டிருக்கேன்” என்று வித்யா சிரிக்க, அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

“இன்னைக்கு நீ ஆளே சரியில்ல. ஆமாம், உங்க புது எம்.டி வந்துட்டாரு போல…”

சட்டென நிமிர்ந்தவள், “ம், வந்துட்டாரு… உனக்கு யாரு சொன்னா?” எனக் கேட்டாள்.

“கீதாதான். அவளும் லைப்ரரிக்கு வந்திருந்தா. அவரைப் பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டு, எங்கேயோ பார்த்தா மாதிரியே இருக்குன்னு ஒரு பத்து நிமிஷம் மொக்கை போட்டுட்டா. போதும் தாயேன்னு அவளைக் கழட்டி விட்டுட்டு, ஓடி வந்துட்டேன்” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க, சிறு புன்னகையைக்கூட வெளிப்படுத்தாமல் அமர்ந்திருந்தவளை உற்று நோக்கினாள் வித்யா.

“மது! என்னாச்சு?” அவளது தோள்களைப் பற்றி உலுக்கினாள்.

“ஒண்ணுமில்ல. வந்ததுல இருந்து இங்கேயே உட்கார்ந்திருக்கேன். கொஞ்சம் ரிப்ரெஷ் பண்ணிகிட்டு வந்திடுறேன்” என்றவள், எழுந்து தன்னுடைய அறைக்கு விரைந்தாள்.

அவளையே ஆழ்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வித்யா. இதயம் கனத்தது! கண்களில் கண்ணீர்! அந்தக் கண்ணீரால், கடந்த காலத்தை உரு தெரியாமல் அழிக்க முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!

தனது அறையை ஒட்டிய மொட்டை மாடியில் வந்து நின்றாள் மது. அந்த வீட்டிலேயே அவளுக்கு மிகவும் பிடித்த இடம். அவளது அத்தனைச் சந்தோஷத்தையும், விருப்பத்தையும், துக்கத்தையும் பகிர்ந்து கொண்ட இடம்.

காற்றில் லேசாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள். கிறீச்சென ஒலியெழுப்பிய ஊஞ்சல், தன்னை நலம் விசாரிப்பதைப் போலத் தெரிய கம்பியை இறுக பிடித்தபடி, தலையை அதன்மீது சாய்த்துக் கொண்டாள்.

வானில் மின்னிய தாரகையும், வெட்டியெறிந்த நகத்தைப் போன்ற மூன்றாம் பிறையும், அவளது வரவை எதிர்பார்த்ததைப் போல மேகத்தினிடையிலிருந்து எட்டிப் பார்த்தன. குளிர்ந்த காற்று மேனியைத் தீண்ட, மனத்தின் இறுக்கத்திற்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது அவளுக்கு.

‘இன்று ஏன் என் மனம், இப்படிப் பரிதவிக்கிறது?’ கேள்விக்கான பதில் தெரிந்த போதும், அதை ஏற்றுக்கொள்ள ஏனோ, மனம் இடம் தரவில்லை.

ஏதேதோ நினைவுகளால் எண்ணங்களின் போக்கு, கட்டுக்கடங்காமல் பயணித்ததில் தவிப்பும், மனக்குழப்பமும் ஒன்றையொன்று விஞ்சி நின்றன.

கண்களை மூடி ஊஞ்சலில் சாய்ந்து அமர்ந்தாள். மனத்தின் அழுத்தமும், உடலின் சோர்வும் ஒன்று சேர, தன்னை மீறிக் கண்களை மூடினாள்.

திடீரென இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்க, (காற்றே இல்லாத) பிரபஞ்ச வெளியில் மூச்சுக் காற்றுக்குத் திணறுவதைப் போலத் தவித்தாள்.

அந்தரத்திலிருந்து நிலை தடுமாறி விழுந்ததவளை, கடல் அலை தனக்குள் சுருட்டி இழுக்க… உதவிக்காக கைகளைத் துழாவினாள்.

மூச்சுமுட்டி அவள் மூழ்கிய நேரம், வலிய கரம் ஒன்று அவளது கரத்தைப் பிடித்து நீருக்கு மேலே இழுத்துக் கொண்டு வர, அந்தக் கரத்திற்குச் சொந்தக்காரனைப் பார்த்தவள் திடுக்கிட்டுப் போனாள்.

‘சித்தார்த்!’

பட்டென கண்களைத் திறந்தவளது விழிகள் தன்னிச்சையாகக் கண்ணீரைப் பொழிந்தன.

******************​

இரவு உணவை முடித்துக் கொண்டு, சற்றுநேரம் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த சித்தார்த், தனது அறைக்கு வந்தான். குளித்துவிட்டு வார்ட்ரோபின் மேல் தட்டிலிருந்த குர்த்தாவை எடுத்த வேகத்தில், அதன் அடியிலிருந்த டைரி தரையில் விழ அதிலிருந்த போட்டோக்கள் சில தரையில் சிதறின.

மெதுவாகக் குனிந்து, அவற்றை எடுத்தான். புகைப்படத்திலிருந்த மதுமிதா அவனைப் பார்த்து அழகாகச் சிரித்துக்கொண்டிருக்க, அவனது இதயம் இரும்புக் குண்டை வைத்தது போலக் கனத்தது.

ஒர் இறுக்கத்துடன் மீண்டும், டைரிக்குள்ளேயே வைத்தான். மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. அவளை முதன்முதலில் பார்த்த நாள் நினைவில் வந்து அவனை இம்சித்தது.

பெருமூச்சுடன் டைரியை வார்ட்ரோபின் கீழ்த்தட்டில் போட்டான். உடையை மாற்றிக்கொண்டு படுத்தவனுக்கு உறக்கமே வரவில்லை. எழுந்து பால்கனியில் வந்து நின்றான். கடற்காற்று ஆவேசத்துடன் அவனை அணைத்துக் கொண்டது.

சற்றுநேரத்தில் உறக்கம் வருவதைப் போலிருக்க, கதவை மூடிவிட்டுப் படுத்தான். உறக்கம் அவனைத் தழுவிய அதேநேரத்தில் ஆழ்மனதிலிருந்தவள், அவனது கண்களுக்குள் வந்து நின்றாள். விழிகளில் பொங்கிய நேசத்துடன், அவனை நோக்கிக் கரத்தை நீட்டினாள்.

அவனும், அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான். அவளை நெருங்கச் சில அடிகளே இருந்த நிலையில், திடீரென புயல் காற்று வீச இருவரும் வெவ்வேறு திசையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

கண்களை விழித்துப் பார்த்த போது, தான் கடற்கரையில் இருப்பது தெரிய, மெல்ல எழுந்தான். மது, கடலை வெறித்துப் பார்த்தபடி அழுது கொண்டிருப்பதைக் கண்டதும், வேகமாக அவளை நெருங்கியவன் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவனது அணைப்பினால் உண்டான ஆறுதலில், அவளது அழுகை மெல்லக் குறைந்து, அவனைப் பார்த்துப் புன்னகை சிந்தினாள். வெட்கத்தில் சிவந்த அவளது கன்னத்தில், சித்தார்த் முத்திரையைப் பதிக்க, நாணத்துடன் விலகி ஓடினாள்.

உடல் அதிர தூக்கத்திலிருந்து விழித்தவனுக்கு, ஏசி குளிரையும் மீறி வியர்த்திருந்தது. மெல்லத் தன்னிலை அடைந்தவன், தனது மனம் போகும் போக்கை நினைத்து, அலைகழித்த மனத்துடன் தூங்காமலேயே அன்றைய இரவைக் கழித்தான்.


Comments :

 
Last edited: