Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நந்தவனப் பூ | SudhaRaviNovels

நந்தவனப் பூ

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
சேலை கட்டும் பெண்ணுக்கொரு

வாசம் உண்டு கண்டதுண்டா

கண்டவர்கள் சொன்னதுண்டா?

பாடல் ஒலிக்க நாயகனும், நாயகியும் ஆடிக் கொண்டிருந்தார்கள். பழைய பாடலை ரீமிக்ஸ் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அதை பார்த்தபடியே கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்த பாக்கியாவிற்கு வெறுப்பாக இருந்தது. கவிஞனாக இருந்தாலும், சாதாரண மனிதனாக இருந்தாலும் அந்த சேலைக்கு பின்னிருக்கும் உடலை மட்டுமே பார்க்கின்றனர். அதனுள்ளிருக்கும் மனதை எவருமே பார்ப்பதில்லை என்றெண்ணிக் கொண்டாள்.

அவளது சிந்தனையை கலைப்பது போல “இந்தா பாகி இன்னைக்கு உனக்கு வேற ஷாட் இல்லேல்ல அப்புறம் இன்னும் ஏன் இங்கே இருக்க?” என்று கேட்டுக் கொண்டே அவளருகே வாணி வந்தமர்ந்தாள்.

“டைரெக்டர் வர சொல்லி இருக்கார் வாணி”.

“எதுக்காம்? ஓசியில காத்து வாங்குற பய அவன். ப்ரொடக்ஷன் காசுலேயே .....பார்ப்பானா?”

“ச்...சத்தம் போடாதடி. இன்னைக்கு போனா தான் அம்மாவுக்கு மருந்து வாங்க முடியும்”.

“போகட்டும் விடுடி. எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். உன்னை பெத்தது அது தானா? பெத்தவ மாதிரியா நடந்துக்குது? நீயும் அதுக்காக என்னவெல்லாம் பாடுபடுற?”

“நீ வேற அது இருக்கிறதுனால தான் கொஞ்சமாவது தூங்குறேன். சும்மாவே ராவெல்லாம் வந்து கதவை தட்டுரானுங்க”.

அவளை முழுவதுமாக ஆராய்ந்து “நினைச்சு நினைச்சு மாய்ஞ்சு போறேண்டி. எத்தனை அழகா பூ மாதிரி இருந்த? சிதைச்சுட்டானுங்களே-டி”.

“ம்ச்..பழசை பேசி என்னவாக போகுது? பாக்கப் சொல்லிட்டான். நான் கிளம்புறேன்”.

“பார்த்துடி இவன் ஒரு மாதிரி லூசுன்னு கேள்விபட்டேன். ஜாக்கிரதை”.

“அவன் கொடுக்கிற காசுக்கு குதறி வச்சாலும் கேட்க நமக்கு நாதி கிடையாது வாணி” என்றபடி கூட்டத்தோடு கூட்டமாக வெளியேறி வாயிலோரம் நின்ற ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள். டைரெக்டரின் கார் வெளியேறியதும், அதனை பின் தொடர்ந்தது ஆட்டோ. ஈஸிஆரிலிருந்த பங்களா ஒன்றிற்குள் கார் நுழைய, ஆட்டோ வாயிலில் நின்றது. அதிலிருந்த இறங்கி மெல்ல உள்ளே சென்றாள். ஆட்டோக்காரர் பங்களா வாயிலை விட்டு சற்றுத் தள்ளி ஆட்டோவை நிறுத்தி விட்டு பீடி குடிக்க ஆரம்பித்தார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நடக்கவே கஷ்ட்டப்பட்டு தள்ளாடியபடி பங்களாவை விட்டு வெளியே வந்தாள். அவளைப் பார்த்ததும் வேகமாக ஆட்டோவை எடுத்துக் கொண்டு வந்து அவள் முன் நிறுத்தினார். காலை தூக்கி ஆட்டோவில் வைக்கும் போது அடிவயிற்றில் எழுந்த வலியை உதடு கடித்து பொறுத்துக் கொண்டு ஏறி அமர்ந்தாள். அவள் முகத்தில் தெரிந்த வலியையும், வேதனையும் கண்டு கொண்ட ஆட்டோக்காரர் எதுவும் பேசாது ஒரு ஹோட்டல் முன் சென்று நிறுத்தினார்.

அவர் அந்த ஸ்டுடியோ வாசலில் பல வருடங்களாக ஆட்டோ ஓட்டுபவர். அங்கு நடிக்க வந்து செல்லும் அனைத்து துணை நடிக, நடிகையர்களை நன்றாக தெரிந்தவர். ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் புரிந்து கொண்டவர். அதிலும் பாக்கியாவை அவள் முதன்முதலாக ஸ்டுடியோவிற்குள் நுழைந்த அன்றிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவர்.

புத்தம் புது மலராக அன்று நுழைந்தவள் மெல்ல மெல்ல உதிர ஆரம்பித்து இன்று காய்ந்து சருகாகிக் கொண்டிருக்கிறாள். ஹோட்டலிலிருந்து காப்பியை வாங்கி வந்து அவள் கையில் கொடுத்தார். அவர் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காது “தேங்க்ஸ் பாபுண்ணா” என்றுரைத்து விட்டு மடக்மடக்கென்று காப்பியை உறிஞ்ச ஆரம்பித்தாள்.

அவள் குடித்து முடிக்கும் வரை தள்ளி நின்று கொண்டிருந்தவர், அவள் கையிலிருந்த கப்பை வாங்கி குப்பையில் போட்டுவிட்டு வண்டியை எடுத்தார்.

“எதாவது மருந்து கடையில் நிறுத்துங்க அண்ணா. அம்மாவுக்கு மருந்து வாங்கணும்”.

“சரிம்மா...அப்படியே உனக்கும் மருந்து வாங்கிக்கோம்மா” என்றார் பரிவாக.

“இல்லேன்னா! இருக்கிற காசுக்கு அம்மாவுக்கு மருந்து வாங்கவும், மளிகை கடைகாரருக்கு பாக்கியை கொடுக்கவும் தான் சரியா இருக்கும். எனக்கென்ன வெண்ணி ஊத்தி குளிச்சிட்டு படுத்தா சரியாகிடும் அண்ணா”.

அவள் சொன்னதைக் கேட்டு பாவமாக இருந்தது. இந்த வாழ்க்கை சிலருக்கு அனைத்தையும் கொடுத்து, பலருக்கு காயங்களையும் வடுக்களை மட்டுமே பரிசாக தந்திருக்கிறது. ஏதாவது ஒரு கட்டத்தில் இவர்களுக்கு விடுதலை கிடைக்குமா என்றால் மரணம் ஒன்று தான் அதற்கு ஒரே பதில். இப்படி எத்தனையோ குருத்துக்கள் மண்ணோடு மண்ணாக போயிருப்பதை பார்த்திருந்தவருக்கு மனம் வேதனையளித்தது. தன் வீட்டிலும் பெண் குழந்தைகள் உண்டு. அதிக வருமானம் இல்லா விட்டாலும் தாய், தந்தையின் அன்பான கவனிப்புடன் வளரும் அவர்களை எண்ணி பார்த்து விட்டு, பாகியை நினைத்தவருக்கு பரிதாபம் எழுந்தது.

அவள் கூறியபடியே மருந்து கடையில் சென்று மருந்தை வாங்கிக் கொண்டு அவள் வீட்டில் சென்று இறக்கி விட்டார். அவருக்கும் சேர்த்தே டைரெக்டர் காசு கொடுத்ததினால், அவளுக்கு சங்கடத்தை கொடுக்காமல் முகம் பார்க்காது “நல்லா சாப்பிட்டிட்டு தூங்குமா” என்று சொல்லி விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

அதுவொரு ஹவுசிங் போர்ட் குடியிருப்பு. தந்தை இருந்த காலத்தில் வாங்கி போட்டது. அதனால் வாடகை கொடுக்க அவசியமில்லாமல் இருக்க ஒரு நிழலாக இருந்தது. அவள் மாடியேறும் போது கீழ் வீட்டு அமுதா எட்டிப் பார்த்து “என்ன பாகி இன்னைக்கு ரொம்ப நேரமாச்சோ? உங்கம்மா கத்திகினு கிடந்துச்சு என்னன்னு பாரு?” என்றாள்.

“ம்ம்...அது என்னைக்கு தான் கத்தல” என்று சலிப்புடன் கூறிவிட்டு மாடியேறி கதவை தட்டினாள்.

அந்தப் பக்கமிருந்தும் எந்த சப்தமோ, அசைவோ இல்லை. சற்று நேரம் நின்று பார்த்தவள் மீண்டும் கதவை தட்டினாள். அப்போதும் கதவு திறக்கப்படாது போக, பயந்து போனவள் படபடவென்று கதவை தட்டினாள்.

அடுத்த நிமிடம் படாரென்று கதவு திறக்கப்பட்டு “நாயே! ஒரு மனுஷி போராடி இப்போ தான் தூங்கப் போறாலேன்னு கொஞ்சமாவது தோணுதா? கதவு திறக்கலேன்னா அப்படியே உட்கார வேண்டியது தானே? நாள் முழுக்க தெருவுல தானே திரியிற தெருநாய் கணக்கா. இப்போ மட்டும் என்ன வீட்டுக்குள்ள வரது?”

காலையிலிருந்து ஷூட்டிங்கில் நின்று கொண்டே இருந்தது, சரியான உணவில்லாமல் போனது, அடுத்து டைரெக்டர் வீட்டிற்கு சென்றது என்று நாள் முழுவதும் போராடி சோர்ந்து போய் வந்தவளுக்கு அங்கு கிடைத்ததோ வசவு மட்டுமே. அவளை இந்த வாழ்க்கையில் தள்ளி விட்டது காமாட்சி தான். அந்த குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாது மகளையே தூற்றும் அவரை உதாசீனப்படுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள்.

தன்னை அலட்சியப்படுத்தி விட்டு அவள் உள்ளே நுழைந்ததும் கதவு படாரென்று சாத்தப்பட்டு அவள் மேல் உள்ள கோபத்தை அதில் காட்டினார். அதோடு வசைமாரிகளை பொழிய ஆரம்பித்தார். அவளுக்கு தெரியும் இது இப்போதைக்கு முடியாதென்று. எதையும் காதில் வாங்காமல் வாங்கி வந்திருந்த மருந்து குப்பிகளை மேஜை மேல் வைத்துவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் கண்டு கொள்ளாமல் சென்றது மட்டுமல்லாமல் வெறும் மருந்து குப்பிகள் மட்டுமே வாங்கி வந்திருப்பதை கண்டு “இன்னைக்கு எவன் கூட போன? வெறும் மருந்து பாட்டில் வாங்கிட்டு வந்திருக்க? உங்க டைரெக்டர் .....அந்தப் பயலா? எனக்கு பசிக்குது வந்து ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வா” என்று ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தார்.

குளியலறைக்குள் புகுந்திருந்தவளோ தனது தேகத்தின் மீது நடந்திருந்த தாக்குதலின் வீரியத்தைக் கண்டு கலங்கிய கண்களுடன் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் இருந்தது போல அத்தனை வலியோ, வேதனையோ அந்தக் காயங்களில் இல்லை. உடல் மெல்ல மரத்து போக ஆரம்பித்திருந்ததை அது உணர்த்தியது.

இந்த சூழலில் வாழப் பழகியதிலிருந்து உணர்வுகள் மரத்துப் போய் பல வருடங்களாகி விட்டது. உணர்ச்சிகள் மட்டும் சற்று போராடிக் கொண்டிருந்தது. அதுவும் இப்போது குறைய ஆரம்பித்து விட்டது. இன்னும் எத்தனை நாட்கள் இந்த போராட்டம்? என்றைக்காவது எல்லோரையும் போல வாழ முடியுமா? ஒரு நாளாவது அந்த வாழ்க்கை கிடைக்குமா? என்று ஏங்கிய மனதுடன் தண்ணீரில் நின்றிருக்க, படபடவென்று குளியலறை கதவு தட்டப்பட்டது.

“இருக்கியா செத்துட்டியா மூதி”.

‘சாவு வர மாட்டேங்குதேம்மா’ என்றெண்ணிக் கொண்டவள் “வரேன்” என்றாள் மெல்லிய குரலில்.

ஓங்கி குளியலறைக் கதவில் ஒரு உதை விட்டு “இங்கே ஒருத்தி பசியில செத்துகிட்டு இருக்காளேன்னு கொஞ்சமாவது பொறுப்பிருக்கா? கண்டவனோட கொஞ்சி குலாவிட்டு வந்ததை ரசிச்சிட்டு நிக்கிறியா?” என்று அவள் மீது வார்த்தை எனும் விஷ அம்புகளை வீசினார்.

தலையிலிருந்த துண்டை எடுத்து துவட்டிக் கொண்டே வெளியே வந்தவள் “இன்னும் உசுரோட தானே இருக்க? செத்துடல இல்ல அப்புறம் என்ன?” என்று கேட்டுவிட்டு படுக்கையில் சென்றமர்ந்தாள்.

அவள் அப்படி கேட்டதும் மேலும் ஆத்திரம் கூடிப் போக “என்னடி தைகிரியம் கூடிப் போச்சா? என்கிட்ட வாங்கின அடியெல்லாம் மறந்து போச்சா?”

“வாழ்க்கையில வாங்கின அடிக்கு முன்னாடி உன்னோட அடியெல்லாம் பெருசில்ல” என்றபடி படுக்கையில் சாய்ந்து கொண்டாள்.

அவளின் பேச்சும், அலட்சியத்தையும் கண்டு கொதித்துப் போன காமாட்சி அவளது முடியை கொத்தாகப் பிடித்து “மரியாதையா போய் எனக்கு சாப்பாடு வாங்கிட்டு வா?” என்று உலுக்கினார்.

கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாது “நீ செத்தே போனாலும் எனக்கு கவலையில்லை. சோறு வேணும்னா நீயே போய் வாங்கு” என்று சொல்லிவிட்டு கண்களை அழுந்த மூடிக் கொண்டாள்.

அவளது உள்மனமோ அன்னையின் நடத்தையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தது. காலையிலிருந்து நாயாய் பேயாய் அலைந்து திரிந்து வந்திருக்கும் மகளுக்கு ஒரு வாய் உணவளிக்க கூட தோன்றாமல் சண்டை போட்டுக் கொண்டிருப்பவரை எண்ணி நொந்து போனாள். எனக்கு மட்டும் ஏன் இப்படியொரு அவல வாழ்க்கை?

அவளின் எண்ணங்கள் அங்கில்லை என்றாலும் அன்னையின் குரலில் குறைந்து கொண்டே வந்த வேகம் உரைத்தது அவரது பசியை. அதுவரை சோர்ந்து படுத்திருந்தவள் அவசரமாக எழுந்து பர்சை எடுத்துக் கொண்டு கதவை நோக்கிச் சென்றாள்.

காமாட்சியோ “இந்தாடி நான் பசியில கிடந்தது செத்துடுவேன் போல இருக்கு. நீ அடுத்த ஆளை பிடிக்க கிளம்பியாச்சா?” என்று மீண்டும் விஷத்தை தூவினார்.

கதவின் பிடியில் கை வைத்தவள் “உன் பசிக்குத் தானே முதன்முதலா என்னை கூட்டி குடுத்த. உன் வயிற்று பசி இந்த உடம்பை மொத்தமா தின்னட்டும். அப்போவாவது அடங்குதான்னு பார்ப்போம்” என்றாள் வெறுப்புடன்.

அவளின் பேச்சு காமாட்சியின் ஆத்திரத்தை சற்றே குறைத்தது. அதிசயத்திலும் அதிசயமாக காமாட்சிக்கு என்றாவது தனது செயலின் வீரியம் புரியும். அப்போதெல்லாம் அடங்கி அமைதியாக இருந்து விடுவார்.

அன்னை அமைதியானதும் மெல்ல கதவை திறக்க, அங்கே வாயிலில் இரு சாப்பாட்டு பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்ததுமே பாகியின் கண்களில் மளுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது. நிச்சயம் பாபு அண்ணனைத் தவிர வேறு யாரும் வைத்திருக்க முடியாது என்று தெரியும்.

இப்படியும் சில மனிதர்கள்!

மறுநாள் காலை வேகமாக எழுந்து தயாராகி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றாள். அன்றும் ஹீரோயினின் வீட்டில் வேலை செய்பவளாக, விருந்தினருக்கு காப்பி கொடுக்கும் ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார் டைரெக்டர். முதல்நாள் கரும்பு சாராக பிழிந்தேடுத்தப் பிறகு.

அந்த ஒரு காட்சியில் நடிக்க அன்று முழுவதும் தொண்டை வரண்டால் கூட தண்ணீர் கூட கிடைக்காது. ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் ஒரு மணி நேரத்திற்கொரு முறை ஜூஸ் போய் கொண்டே இருக்கும். ச்சே! என்ன பிழைப்பு என்று சற்று நேரம் அமர்ந்து விடக் கூடாது. அசிஸ்டன்ட்டிலிருந்து போகிறவர் வருபவர் எல்லாம் வந்து கத்திவிட்டு போவார்கள்.

சரியான வெயில் வேறு. மனம் வெறுத்து போய் அமர்ந்து கொண்டிருந்தவளின் பார்வையில் அந்தக் காட்சி விழுந்தது. சுமார் பதினைந்து பதினாறு வயது தான் இருக்கும் அந்த பெண்ணிற்கு. அவளது தாயுடன் வந்திருந்தாள் போலும். விகல்பமில்லா முகம். ஷூட்டிங்கை வியப்பாக பார்த்துக் கொண்டு நின்றது.

அந்தப் பெண்ணின் தாயாரோ டைரெக்டர், ப்ரொடியுசர் தங்களை பார்ப்பாரா என்று கவனித்துக் கொண்டிருந்தது. அந்நேரம் ஹீரோவின் பார்வை அந்த சின்ன பெண்ணின் மீது விழுந்தது. அவனது பார்வையினை கண்டு கொண்ட பாகிக்கு அருவெறுப்பாக இருந்தது. அந்தப் பெண்ணை பார்த்து அருகே வரும்படி கையசைத்தான் ஹீரோ.

ஹீரோ தன்னை அழைத்ததும் அந்தக் குழந்தைக்கு அத்தனை உற்சாகம். அன்னையின் கைகளைப் பற்றி உலுக்கி ஹீரோ அழைப்பதை கூறினாள். தாயாரின் கண்களில் அத்தனை மகிழ்ச்சி. உடனே இருவருமாக அவன் அருகில் சென்றார்கள். அந்தப் பெண்ணிடம் நன்றாக பேசி, இருவருக்கும் ஜூஸ் வரவழைத்துக் கொடுத்தான்.

அந்தப் பெண்ணின் அன்னை தேவையில்லாமல் வளைந்து, நெளிந்து ஜூஸை வாங்கிக் கொண்டாள். அந்தக் குழந்தையோ ஜூஸை விட ஹீரோவை கண்கொட்டாமல் பார்த்தாள். அவளுக்கு உலக அதிசயத்தை கண்டு விட்டார் போல அத்தனை உற்சாகம். அந்தக் குழந்தை அறியாமல் அதன் அன்னையிடம் ஏதோ கூறி அவளிடம் ஏதோ கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

அந்தக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த பாகிக்கு அதன் பின்னர் நடக்க போகும் காட்சிகள் கண்முன்னே வந்து போனது. தன்னையும் மீறி தாங்க முடியாமல் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

இந்த உலகத்தில் எல்லோரும் நல்லவர்களே என்று எண்ணும் வயதில் உள்ள குழந்தை. முதன்முதலாக மனித மிருகங்களை எதிர்கொள்ளும் போது அந்த மனநிலையை அனுபவித்த அவளுக்கு மட்டுமே தெரியும்.

ஒரே நாளில் அனைத்தும் மாறி போகும். தன் உடலையே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுவாள். ஒருவன் அத்துமீறிய பிறகு, அந்த குருத்திடம் பார்ப்பவனெல்லாம் விளையாடுவான். அதற்கு உடைந்தையாக அவளின் அன்னை. இந்த உலகம் அவளின் சதைக்காக அவளின் இறுதி வரை துரத்திக் கொண்டே இருக்கும்.

இன்று அவளது கண்களில் பறந்த பட்டாம்பூச்சி காணாமல் போய் விடும். அதற்கு பதில் வெறுமை வந்தமர்ந்து கொள்ளும். ஒரு கட்டத்திற்கு மேல் அலட்சியம் வந்தமர்ந்து கொள்ளும். இதற்கு மேல் என்ன? என்கிற எண்ணம் தான்.

இவற்றை எல்லாம் அணு அணுவாக அனுபவித்தவள் அவள். சரியாக பதினைந்து வயதில் ஆரம்பித்த இந்த வாழ்க்கை. இதோ முப்பது வயதாகி விட்டது. ஆரம்ப காலங்களில் படங்களில் காண்பது போல யாராவது நல்லவன் வந்து தன்னை இந்த வாழ்க்கையிலிருந்து கூட்டிச் செல்ல மாட்டானா என்று ஏங்கி இருக்கிறாள். ஆனால் அதெல்லாம் நாள் செல்ல செல்ல மறைந்து போனது.

பதின்ம வயதில் தன் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் எல்லாம் தன்னை இப்போது பார்க்கும் பார்வையில் இருக்கும் அர்த்தத்தை நன்றாக புரிந்து கொண்டாள். மனைவியோ, அம்மாவோ அருகே இருக்கும் போது அருவெறுப்பாக ஒதுங்கிக் கொள்கிறவர்கள், அவர்கள் இல்லாத போது அவளுடன் இருக்க வாய்ப்பு கிடைக்காதா? என்று தான் எதிர்பார்க்கிறார்கள்.

தன்னையும், அந்தப் பெண்ணையும் எண்ணி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவளின் தோளில் வாணியின் கைகள் விழ “என்ன புள்ள எதுக்கு அழுகுற? என்னாச்சு?”

முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டவள் “இப்போ ஒரு பொண்ணு அம்மாவோட வந்துச்சே. ஹீரோ கூட கூப்பிட்டு பேசினானே. அதை நினைச்சு தான் அழுதேன்”.

“அதுக்கு நீயேன் அழுகுற?”

“நானும் இப்படித்தானே வந்து இதுக்குள்ள விழுந்தேன்”.

“ம்ம்...ஒ..அதை சொல்றியா? பரவாயில்ல உனக்கு அழுகை எல்லாம் வருதா?”

“உணர்ச்சின்னு அது மட்டும் தான் இன்னும் உசுரோட இருக்கு”.

“எங்கே பார்த்தாலும் புரட்சி அது இதுன்னு பேசுறாங்களே. நம்மள ஒரு சாதாரண வாழ்க்கைக்கு கூட்டிட்டுப் போக இங்கே ஒரு ஆம்பளை கூட இல்லேல்ல?”

வெறுப்பாக உதடு சுழித்து “மாட்டாங்க வாணி! ஏன்னா இவர்களின் வக்கிரத்தை கொட்ட ஓரிடம் வேணும். நாமெல்லாம் ஊரைச் சுத்தி ஓடுகிற சாக்கடை மாதிரி. இருக்கிற கசடுகளை எல்லாம் அங்கே வந்து கூட்டிட்டு போயிட்டு நாங்க ஊரை சுத்தமா அழகா வச்சிருக்கோம்னு பெருமை பேசிக்குவாங்க”.

நந்தவனத்தில் பூக்கும் பூக்கள் எல்லாம் இறைவனின் பாதத்திற்கு போவதில்லை. சில பூக்கள் தடம் மாறி போனாலும் அவற்றின் வாசத்தை இழப்பதில்லை. பாக்கியலக்ஷ்மியும் அப்படியொரு நந்தவனப் பூ தான்.
 
  • Sad
Reactions: Anuya

Anuya

Well-known member
Apr 30, 2019
257
331
63
நந்தவனப் பூ அருமையான சிறுகதை சுதா மா... ஆனா, ரொம்ப கஷ்டமா ஆகிடுச்சி... பாவம் பாக்கி 😓😓. அவ அம்மாவை நினைச்சாளே கோபமா வருது... அவங்களோட சுகமான வாழ்க்கைக்கு பலியானது பாவம் இந்த சின்ன பொண்ணு... லா... புரட்சி அது இதுன்னு பேசுரவங்க உண்மையா அதை ஏன் பண்ணல... கொடுமை... நந்தவனப் பூ அருமை... வாழ்த்துக்கள் சுதா மா❤❤