அத்தியாயம் - 44
சுமித்ரா குளித்துவிட்டு வெளியே வரும்போது வீடே பரபரவென இருந்தது. ஈரக்கூந்தலின் அடியில் முடிச்சிட்டு அதில் கொஞ்சம் பூவையும் வைத்துக்கொண்டு, புடவையை இழுத்துச் சொருகியபடி
வேலையாட்களை ஏதோ ஏவிக்கொண்டே திரும்பிய வித்யாவதி, மருமகளைக் கண்டதும் புன்னகைத்தார்.
“வா சுமி! கெட்டில்ல காஃபியிருக்கு. குடிச்சிட்டு தலையைத் துவட்டிக்கிட்டு இந்தப் பூவை வச்சிக்க” என்று குளிர்சாதனப் பெட்டியிலிருந்து கவரை எடுத்துக்கொடுத்தார்.
“நான் ஏதாவது ஹெல்ப் பண்றேன் அத்தை!” என்றாள்.
“ம், பூஜை ரூம்ல கொஞ்சம் வேலையிருக்கு. வா” என கையுடன் அழைத்துச் சென்றார்.
இருவரும் பூஜைக்கான ஏற்பாடுகளை முடித்துவிட்டு வெளியே வர, வீட்டிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக தயாராகி வந்தனர். அதன்பிறகு வீடே பரபரவென இருக்க, பூஜையை முடித்துவிட்டு அனைவரும் டைனிங்கில் அமர்ந்தனர்.
வெள்ளித் தட்டிலிருந்த சர்க்கரைப் பொங்கலை ஆர்வத்துடன் பார்த்தாள். நெய்யும், வெல்லமும் கலந்து நாவில் ருசிக்க, ஆசையுடன் உண்டாள்.
“எப்படியிருக்கு சுமி!” என்றார் வித்யா.
“சூப்பராயிருக்கு அத்தை!” என்று புன்னகைத்தாள்.
அருகில் அமர்ந்திருந்த இராமநாதன், “சுமிம்மா! பொங்கல் எதுக்குக் கொண்டாடுறாங்க தெரியுமா?” எனக் கேட்டார்.
அவள் பதில் சொல்வதற்குள், “பொங்கல் சாப்பிடத்தான்” என்றான் இந்தர்.
“டேய்!” என்றார் சிவராமன்.
“எஸ் டாட்!” என்றான் பவ்யமாக.
எதற்கும் அசராத அவனைப் பார்த்து தலையிலேயே அடித்துக்கொண்டார் அவர்.
“நல்ல நாளும் அதுவுமா ஏன் அவனைக் கோச்சிக்கிறீங்க?” என மகனுக்கு ஆதரவாகப் பேசினார் வித்யாவதி.
“நல்லாக் கேளுங்க மாம்!” என்றான் அன்னையிடம்.
வாயை மூடுடா!” என்று முறைத்தார் அவர்.
“வளர்ற பிள்ளையை இப்படி மிரட்டினா எப்படி?” எனக் கேட்டுக்கொண்டே திரும்பியவன், “வந்துட்டானே நம்ம எண்டர்டெயின்மெண்ட்” என முணுமுணுத்தவன், “சுமி! யார் வர்றா பாரு” என்றான் சிரிப்புடன்.
அங்கே வந்த ஆதி, இராமநாதன் காலைத் தொட்டு வணங்கியவன், “எல்லோருக்கும் ஹேப்பி பொங்கல்! என்றான்.
“வா வா அதுக்குத் தானே வந்திருக்க. வந்த அவசரத்துல புதுசா இருக்கற ஆளுகூட உன் கண்ணுக்குத் தெரியல” எனக் கிண்டலாகச் சொன்னான்.
அப்போதுதான் சுமித்ராவைக் கண்டவன், “ஹலோ மேடம்!” என்றான்.
அவளும் சிரிக்காமல், “ஹலோ!” என்றாள்.
இந்தரின் அருகில் அமர்ந்தவன், “என்னை ஏன்டா முறைக்கறாங்க?” எனக் கிசுகிசுத்தான்.
“பின்ன, நாமல்லாம் கூட்டுக் களவாணிங்க இல்லயா” என்றான்.
“கூட்டுக் களவாணின்னு என்னையும் ஏன்டா சேர்த்துக்கற. மெயின் களவாணியே அண்ணன் தானே” என்றான்.
உடனே அவன், “அண்ணா! என அழைக்க, பட்டென அவனுடைய வாயை மூடினான் ஆதி.
“டேய்! தெரியாத்தனமா இந்த ஜென்மத்துல உன் ஃப்ரெண்டா போயிட்டேன். அதுக்குப் பரிதாபப்பட்டாவது கொஞ்சம் பேசாம இரு” எனக் கெஞ்சலாகச் சொன்னான்.
அவனையே சில நொடிகள் பார்த்தவன், “போய்த் தொலை” என்றான்.
இராமநாதன் பேத்திக்குப் பொங்கல் பண்டிகையைப் பற்றி விளக்கிக் கூற, அவளும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டாள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலில் அமர்ந்திருக்க, பேச்சு எங்கெங்கோ சுற்றி கடைசியில் சமீபத்தில் இந்தியாவில் ஏற்பட்ட டீமானிடைசேஷனில் வந்து நின்றது. அதிலிருக்கும் சாதக பாதகங்களையும், அதனால் நாட்டில் உண்டான அவலங்களைப் பற்றியும், சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டதையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
“இன்னைக்கும் இதே பேச்சுதானா. இதைவிட முக்கியமான ஒரு விஷயத்தைப் பத்திப் பேசணும்னு இருக்கேன். பேசலாமா?” எனக் கேட்டார் வித்யாவதி.
“பேசேன். உன்னை யார் வேணாம்னு சொன்னது. இவ்வளவு நேரம் நாங்களெல்லாம் பேசினோம். இப்போ, நீ பேசு” என்றார் சிவராமன்.
பொதுவாக சிரித்தவர், “மாமா! எப்பவும் உனக்கு என்ன வேணும் கேளும்மான்னு சொல்லிட்டே இருப்பீங்க இல்ல. இன்னைக்கு நான் உங்ககிட்ட கேட்கப் போறேன். நீங்க முழுமனசோட சம்மதம் சொல்லணும்” என்றார் பூடகமாக.
“தாத்தா! அவசரப்பட்டு சரின்னு சொல்லிடாதீங்க. இந்த இராமாயணம் இருக்கே இராமாயணம்…” என ஆரம்பித்தவனை முறைத்தார் வித்யா.
“கொஞ்சம் நேரம் நீ சும்மா இரேன்டா! உனக்கு வாய் வலிக்குமா வலிக்காதா…” என்று திடீரென பொங்கினாள் பவித்ரா.
“சரிங்க மேடம்!” என்றான் பவ்யமாக.
“மாமா! அன்னைக்குக் காஞ்சனாவும், நானும் விளையாட்டா பேசின பேச்சை இன்னைக்கு நிஜமாக்கணும்னு நினைக்கிறேன்” என்றார் வித்யாவதி.
நெற்றிச் சுருங்கப் பார்த்தவர், “அப்படி என்னம்மா கேட்கப் போற?” எனக் கேட்டார்.
“உங்க பேத்தி சுமித்ராவை, இந்த வீட்டுக்கு மூத்த மருமகளா அனுப்பி வைங்கன்னு கேட்கறேன்” என்றார்.
திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்த சுமி, விஜய்மித்ரனைப் பார்த்தாள். அவளைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் குறும்பாகச் சிரித்தான் அவன்.
“வாவ்!” என்று இளையவர்கள் ஆர்ப்பரிக்க, இராமநாதன் புன்னகையுடன் மருமகளைப் பார்த்தார்.
“வித்யாம்மா! இது நான்மட்டும் முடிவு எடுக்கற விஷயம் இல்ல. என் பேத்தியும், பேரனும் மனசார சம்மதம்னு சொன்னா, எனக்கும் சம்மதம்” என்றார் அன்புடன்.
“மித்ரன்! முதல்ல நீ” என்றார்.
சுமித்ராவை ஓரப்பார்வை பார்த்தவன், “லேடீஸ் ஃபர்ஸ்ட் தாத்தா!” என்றான்.
சிரிப்புடன் பேத்தியைப் பார்த்தவர், “சுமி கண்ணா! உனக்குச் சம்மதம் தானே…” எனக் கேட்டார்.
நாணமும், சந்தோஷமுமாக சம்மதம் என்பதைப் போலத் தலையை ஆட்டினாள் சுமித்ரா.
“இன்னும் என்னப்பா! இப்போ நீதான் சொல்லணும்” என்றார் சிவராமன்.
“தாத்தாவுக்கு ஓகேன்னா, எனக்கும் ஓகே” என்றான் குறும்பாக.
“அண்ணி!” என்றபடி அவளை பவித்ரா அணைத்துக்கொண்டாள்.
சிறு புன்னகையை அவளுக்குப் பதிலாக்கிய சுமித்ரா குறுகுறுவென விஜய்மித்ரனைப் பார்க்க, மந்தகாசப் புன்னகையுடன் அவளை நோக்கினான் அவன்.
சலிப்புடன், “நாம ஏன் நல்லவனா பேர்வாங்க முடியலன்னு அடிக்கடி கேட்பியே… இதான்டா காரணம். எல்லாத்தையும் சப்தமில்லாம செய்துட்டு, கடைசில அப்படியே ப்ளேட்டை மாத்திப் போடுற டெக்னிக் நமக்கு வரமாட்டேன்னுதே” என்றான் இந்தர்.
“நான் எப்போடா கேட்டேன்?” என ஆதி சொல்ல, அவனை எரிச்சலுடன் முறைத்தான்.
“உன்னை மாதிரி அரிச்சந்திரனைக் கூட வச்சிருந்தா நான் உருப்பட்டுடுவேன். என் வாயே எனக்குச் சத்ரு!” எனக் கடுப்புடன் சொன்ன, நண்பனைப் பார்த்துச் சிரித்தான் ஆதி.
“அத்தை! நான் ரூமுக்குப் போறேன்” என சுமித்ரா எழுந்து செல்ல, “அப்பா! நான் என் ஃப்ரெண்ட்ஸுக்குப் போன் பண்ணிச் சொல்லப்போறேன்” என பவித்ராவும் எழுந்து ஓடினாள்.
மற்றவர்கள் மேற்கொண்டு கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, சந்தோஷ மனநிலையுடன் அறைக்குள் அமர்ந்திருந்தாள் சுமித்ரா. மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருக்க, உடலெல்லாம் பரபரவென இருந்தது. உண்மையான சந்தோஷம் என்பது என்ன என்று இப்போது அவளுக்குப் புரிந்தது.
பால்கனியில் நின்று உடலை ஊடுருவும் அந்தக் குளிர் காற்றையும், அதைத் தணிக்க வந்திருப்பது போல சூரியன் மெல்லிய சூட்டை எங்கும் பரவவிட்டுக்கொண்டிருந்தான். இதமான அந்தச் சீதோஷணத்தை அனுபவித்தபடி அவள் நின்றிருக்க, அவளருகில் வந்து நின்றான் விஜய்மித்ரன்.
அதுவரை உள்ளுக்குள் மறைந்திருந்த இருந்த சிறுகோபம் மெல்லத் தலைதூக்க, திரும்பி நின்று அவனைப் பார்த்தாள். அவனும் சாய்ந்து நின்று அவளைப் பார்த்தான்.
“உங்களை மாதிரி வீட்டுக்கு அடங்கின பிள்ளைய நான் பார்த்ததே இல்ல” எனக் கிண்டலாகச் சொன்னாள்.
“இது நல்லாயிருக்கே. நீ மட்டும் அப்பா சொல்ற மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லலாம். எங்க தாத்தா சொல்ற பொண்ணைக் கல்யாணம் செய்துக்க, நான் சம்மதம் சொல்லக்கூடாதா?” என்றான் குறும்புடன்.
சிறு சிணுங்கலுடன், “அதுக்கு… எல்லோர் முன்னாலயும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?” என்றாள் கொஞ்சலாக.
“ஒரு கிஸ் பண்ணா, உன் கோபமெல்லாம் போயிடும் பார்பி!” என தீவிர பாவனையுடன் சொன்னவனை விழியகல பார்த்தாள்.
“பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா!” எனப் பாடிக்கொண்டே அவளை அணைக்க முயல, சடாரென விலகினாள்.
“தொட்டா அடிதான் விழும்” என்றாள் கண்டிப்புடன்.
“ஹேய்! ரொம்ப மிரட்ற” சிரித்துக்கொண்டே சொன்னான்.
“ம்ம், அதெல்லாம் எனக்கும் தெரியும். முதல்ல இங்கேயிருந்து கிளம்புங்க. கல்யாணம் முடியற வரை இனிமே இப்படியெல்லாம் மீட் பண்ண அலௌட் கிடையாது” என்றாள்.
“எனக்கே ஒன் ஃபார்ட்டி ஃபோரா! நல்லா கேட்டுக்க. கிளம்பப் போறது நான் இல்ல; நீ! இன்னும் மூணு மாசத்துக்கு நினைச்சாலும் என்னை நேர்ல பார்க்க முடியாது” என்றபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனைப் புரியாமல் பார்த்தாள்.
“ம்ம், இந்தக் கதையெல்லாம் வேணாம்” என அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “அண்ணி!” என்றபடி வந்தாள் பவித்ரா.
அண்ணனும் அங்கே இருப்பதைக் கண்டதும், “சாரி! டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” எனக் கேட்டாள்.
“குட்டி ராட்சஷி! உனக்கு ரொம்ப வாய் ஆகிடுச்சி. வந்த விஷயத்தைச் சொல்லு” எனத் தங்கையில் தலையைச் சிலுப்பிவிட்டு விட்டுச் சென்றான்.
“ம், அண்ணா!” எனச் செல்லம் கொஞ்சியவள், “அம்மா, உங்களைக் கூப்பிடுறாங்க அண்ணி!” என்றாள்.
ஹாலுக்கு வந்தவளிடம், “சுமி! உன் மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிகிட்டு ரெடியாகு. நாளன்னைக்குக் காலைல நீ உதய்பூருக்குக் கிளம்பற. இதோடு, கல்யாணம் முடிஞ்சிதான் உன்னை இந்த வீட்ல சேர்ப்பாங்க. அதுவரைக்கும் தாத்தாவோட அரண்மனைல உட்கார்ந்து, அண்ணனோட கனவுல தான் நீ டூயட் பாடணும்” என்ற இந்தரின் தலையில் செல்லமாகத் தட்டினார் வித்யாவதி.
“நான் சொல்லமாட்டேனா முந்திரிக்கொட்டை!” என்றவர், “அவன் சொன்னதையே அவளிடம் சொன்னார்.
சரியென அமைதியாகத் தலையை ஆட்டிக்கொண்டாள். இருந்த உற்சாகமெல்லாம் சட்டென வடிந்தது போலானது. ஆனாலும், அனைவருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.
அதன்பிறகு, விஜய்மித்ரனிடம் தனியாகப் பேசவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவனது அறைக்குச் சென்று சந்திக்கவும் ஏனோ, தயக்கமாக இருந்தது. ஒருவேளை அவனாவது தன்னைத் தேடி வருவான் என்று நினைத்திருக்க, அதுவும் நடக்கவில்லை.
மறுநாள் மதிய உணவிற்குப் பிறகு, அவன் குடுகாவூனுக்குக் கிளம்பிவிட, மனச்சோர்வை மறைத்துக்கொண்டு அவனுக்கு விடைகொடுத்தாள்.
காரைக் கிளப்பும் முன் அவன் பார்த்த பார்வையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. அதுவரை சற்று சோர்வுடன் இருந்தவள் மெல்லிய முறுவல் ஒன்றை புரிய, அவனும் சின்னச் சிரிப்புடன் கிளம்பினான்.
அவளது மனநிலை அறிந்தோ என்னவோ, வித்யாவதி அவளைத் தனியாக விடவில்லை. தாத்தாவிற்கு என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன மருந்துகள் கொடுக்கவேண்டும் என வரிசையாகச் சொல்ல, அவளும் கவனமாகக் கேட்டுக்கொண்டாள்.
மறுநாள் காலையிலேயே இந்தருடன் தாத்தாவும், பேத்தியும் கிளம்பினர். திரும்பி வரும்போது பேச்சுத் துணைக்காக ஆதியும் அவர்களுடன் கிளம்பினான்.
இந்தரும், ஆதியும் இருந்ததால் அவளுக்கு ஆறு மணிநேர பயண தூரத்தைக் கடந்ததே தெரியவில்லை. இராமநாதனும், பேத்தியுடன் வந்ததால் இரயில் பயணத்தைத் தவிர்த்துவிட்டு வந்திருந்தாலும், அவர்களது பேச்சிலும், சிரிப்பிலும் களைப்பை உணரவே இல்லை.
ஆரவல்லி மலைக் குன்றின் அடிவாரத்தில் பச்சைப் பசேலென்ற அந்தச் சூழலில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் சிறு கோட்டையைப் போலக் காட்சியளித்த அந்த வீட்டைப் பார்த்துத் திகைத்துப் போனாள்.
பத்தடி உயரத்திற்கு மதிற்சுவர்களுடன் காட்சியளித்த அந்தப் பிரம்மாண்டமான வீட்டை நிமிர்ந்து பார்த்தாள். ரிமோட்டின் மூலம் திறக்கப்பட்ட கேட்டைத் தாண்டி உள்ளே சென்றதும் அயர்ந்து போனாள்.
நவீன கட்டமைப்புடன் இருக்கும் அரண்மனைக்குள் வந்ததைப் போன்று இருந்தது அவளுக்கு.
பச்சை நிற வெல்வெட்டை விரித்து வைத்திருந்ததைப் போல வீட்டின் முன்புறமிருந்த தோட்டமும், இரு மருங்கிலும் வளர்ந்திருந்த விதவிதமான செடிகொடிகளும், மனத்தைக் கொள்ளைக் கொண்டன.
“சுமிம்மா! இறங்கலாம்டா!” என்றார் இராமநாதன்.
“ம்” என்றவளுக்கு தாத்தாவின் செல்வநிலை தான், மந்த்ராவின் செயலுக்குப் பின்னாலிருக்கும் எண்ணத்தின் காரணம் எனப் புரிந்தது.
வீட்டிலிருந்த வேலையாட்கள் பத்து பேரையும், அலுவலக ஆட்கள் ஐந்து பேர், வீட்டைக் கவனித்துக்கொள்ளும் கேர் டேக்கர் மூவர் மற்றும் இவர்கள் அனைவரையும் கவனித்துக்கொள்ள மேனேஜர் இருவர் (வீடு, அலுவலகம்) என்று மொத்தம் இருபது பேர் இருந்தனர்.
அனைவரையும் அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
வேலையாட்கள் அவளது பெட்டிகளை மேலே அறைக்கு எடுத்துச் செல்ல, கிழேயிருந்த ஒரு அறையில் முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியில் வந்தவளுக்கு டவலுடன் ஒரு பெண்மணி காத்திருந்தார்.
“மேடம்! வீட்ல போட்டுக்கறதுக்கு உங்களுக்கு செப்பல்” என்று புத்தம்புது செருப்பு ஒன்றையும் கொடுத்துவிட்டுச் செல்ல, அமைதியாக வாங்கிக் கொண்டாள்.
மதிய உணவை மௌனமாகவே முடித்துக்கொண்டு எழுந்தாள்.
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கறியா சுமிம்மா!” எனக் கேட்டார்.
“இல்ல தாத்தா!” என்றாள் வேகமாக.
“அப்போ, சுமிக்கு வீட்டைச் சுத்திக் காட்டு இந்தர்!” எனப் பேரனுக்குப் பணித்தார்.
“ஏன்? நாங்கல்லாம் ரெஸ்ட் எடுக்க மாட்டோமா!” எனக் கிண்டலாகக் கேட்டான் அவன்.
“நீதானே” எனச் சிரித்துக்கொண்டே கேட்டவர், “கூட்டிட்டுப் போடா” என்றவர், தனது அறைக்குச் சென்றார்.
“அண்ணியார் அவர்களே வருகிறீர்களா!” என பவ்யமாகக் கேட்டவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“இந்தர் நீங்க என்னை இப்படி மரியாதையா கூப்பிடுறதுதான் என்னைக் கலாய்க்கிறது மாதிரி இருக்கு” என்றாள்.
“நான் மரியாதைக் கொடுக்கறதே அதிசயம். அதை வேணாம்னு சொல்லாதீங்க அண்ணி! ஏன்னா,” என்றவனை இடைமறித்து, “அண்ணின்னா அம்மா மாதிரி” என முடித்துவைத்தான் ஆதி.
புன்னகையுடன் அவனைப் பார்த்த இந்தர், “நண்பேன்டா!” என இறுக்கி அணைத்துக்கொள்ள, கலகலவென நகைத்தாள் சுமித்ரா.
ஐந்து அடுக்கு வீட்டின் ஒவ்வொரு தளத்திற்கும் சென்றுவர, லிஃப்ட் வசதி இருந்தது. கீழ்த் தளம் முழுவதும் ஹால், டைனிங், சமையல் அறை, அலுவலக அறை என்றிருந்தது.
“நாம நடந்து போவோம். அப்போதான் முழுக்க சுத்திப் பார்க்கலாம்” என்றவனைத் தொடர்ந்து சென்றனர்.
இரண்டாவது தளத்தில் நடுவில் மேலிருந்து ஹாலைப் பார்க்கும் வண்ணம் இருந்தது.
“இரண்டு பக்கமும் ஒரு பெரிய ஹால், அதுக்கு பிறகு இருக்கறது கெஸ்ட் வந்தா தங்கறதுக்கு ரூம்ஸ்” என்றவன் மூன்றாவது தளத்திற்கு அழைத்துச் சென்றான்.
“இந்தப் ஃப்ளோர் முழுக்க, சென்ட்ரலைஸ்ட் ஏசி. நம்ம வீட்டு ஆளுங்க தங்கறதுக்கு. இந்த ஹாலைச் சுத்தி மொத்தம் பதினாறு ரூம்ஸ் இருக்கு. பின்னால ஓபன் ஏரியா இருக்கு. ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். நைட்ல இங்கே உட்கார்ந்து பின்னால தெரியற மலையைப் பார்க்க, அருமையா இருக்கும். வெயில் காலத்துல எட்டு மணி வரைக்கும் வெளிச்சமிருக்கும். ஹில் ப்ளேஸ்ங்கறதால காத்துக்குப் பஞ்சமிருக்காது. சில நாள்கள்ல எங்க டின்னரே இங்கே தான் இருக்கும்” என்றான்.
அவன் சொல்வதையெல்லம் ஆழமாக உள்வாங்கிக் கொண்டாள். நான்காவது தளத்தில் ஜிம், விளையாட்டு அறை, ஹோம் தியேட்டர் அமைந்திருக்க, அதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல பின்னால் அமைந்திருந்த நீச்சல்குளம் அவளை வெகுவாகக் கவர்ந்தது. கச்சிதமான அளவில் அடியில் கடல்வாழ் உயிரினங்களின் படங்கள் வரையப்பட்டு அழகாக இருந்தது.
“பொதுவா நாங்க இங்கே வரமாட்டோம். பவி வந்தா பாதி நாள் இங்கேயே தான் இருப்பா. வீட்டுக்குப் பின்னால ஒரு பூல் இருக்கு” என்று அவளை அழைத்துச் சென்று காட்டினான்.
அது செவ்வக வடிவில் இல்லாமல், நடுவில் மரங்களும், இரண்டு ஹேமங்கும், அமர நான்கு கிரானைட் இருக்கை என சிறு தீவு போன்றும் அதைச் சுற்றி நீந்த ஏதுவாக அமைந்திருந்தது. ஒரு பக்கம் குன்றிலிருந்து அருவி விழுவது போல நீச்சல் குளத்தில் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.
“இதுக்கு மேல டெரஸ். முக்கியமான ஆஃபிஸ் பார்ட்டீஸ் அங்கே நடக்கும். அவங்கலாம் வர்றதுக்கு கார் பார்க்கிங் பக்கத்திலேயே லிஃப்ட் இருக்கு. சில சமயம் கீழே கார்டன்லயும் நடக்கும்” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு மூன்றாவது தளத்திற்கு வந்தவன், அவளது அறைக்கு அழைத்துச் சென்றான்.
அறை சற்று இருளாக இருக்க, விளக்கைப் போடாமல் மூடியிருந்த நீண்ட திரையை ரிமோட்டில் திறந்தான். எதிர் பக்கத்திலிருந்த ஃப்ரென்ச் விண்டோவின் வழியாக வெளியில் தெரிந்த காட்சியில் ஸ்தம்பித்துப் போனாள். கண்ணுக்குக் குளிர்ச்சியாக மலைத் தொடரும், ஏரியும் அவளது மனத்தைக் கவர்ந்தது.
“வாவ்! எவ்ளோ அழகு” என்றாள்.
சிரித்தவன், “இது அத்தையோட ரூம். அதையே தாத்தா உங்களுக்கும் கொடுக்கச் சொன்னார். அத்தை யூஸ் பண்ணின திங்ஸ் எதுவும் இப்போ இல்ல. இதெல்லாம் தாத்தா உங்களுக்காக ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி, ரெண்டு நாள்ல ரூமை ரீ ஃபர்னிஷ் பண்ணியிருக்காங்க” என்றான்.
சுமித்ராவின் விழிகள் தளும்பின.
“ஓகே. நீங்க ரெஸ்ட் எடுங்க. ஈவ்னிங் பார்க்கலாம். உங்களுக்கு ஏதாவது வேணும்னா இண்டர்காம்ல கூப்பிடுங்க. நம்பர்ஸ் இங்கே இருக்கு” என அவளுக்குத் தேவையான விஷயங்களைச் சொல்லிவிட்டு கதவருகில் சென்றவன், “பக்கத்து ரூம் அண்ணாவோடது” என கூடுதல் தகவல் ஒன்றையும் கொடுத்துவிட்டுச் சென்றான்.
ஜன்னலருகில் சற்றுநேரம் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவள், கட்டிலில் சாய்ந்தபடி கீழே அமர்ந்துகொண்டாள். ஏனோ, மனத்திற்குள் இனம்புரியா பயமும், குழப்பமும் மாறி மாறித் தோன்றியது.
“ஐ மிஸ் யூ விஜய்!” என்று முனகியவள், கட்டிலில் தலையைச் சாய்த்துக்கொண்டவள், அறையிலிருந்த இண்டர்காம் ஒலிக்க, திடுக்கிட்டு விழித்தாள்.
“அண்ணி! கொஞ்சம் கீழே வரீங்களா! உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு” என அழைத்தான் இந்தர்.
“இதோ வரேன்” என்றவள் மளமளவென முகத்தைக் கழுவி லேசாக பௌடரை ஒற்றிக்கொண்டு தலையை ஒதுக்கிக் கொண்டு கீழே வந்தாள்.
அப்போதுதான் தனக்கு யார் பார்சல் அனுப்பியிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டே வந்தவள் அங்கிருந்த பார்சலைப் பார்த்ததும் வாயைப் பிளந்தாள்.
“பார்சல்ன்னு சொன்னதும் நான் சின்னதா இருக்கும்னு நினைச்சேன். என் உயரத்திற்கு இருக்கு. போட்டோவா! யார் அனுப்பி இருக்காங்க” என இந்தரிடமே கேட்டாள்.
“பிரிச்சிப் பார்த்தா, உங்களுக்கே யாருன்னு தெரிஞ்சிடப்போகுது” என்றான்.
அந்தப் படத்தைச் சுற்றியிருந்த சிகப்பு நிற சாட்டின் ரிப்பனை அவிழ்த்துவிட்டு மூடியிருந்த வெல்வெட் துணியையும் பிரித்தவள், படத்தைப் பார்த்ததும் திகைப்புடன் கைகளால் வாயைப் பொத்திக் கொண்டாள். அவளது பெற்றோரின் புகைப்படம் ஆளுயரத்திற்கு வெள்ளியில் கோல்டன் டிப் ஃப்ரேமால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அவளது செய்கையைக் கண்ட இந்தர், “யாருன்னு தெரிஞ்சிடுச்சா! ஒரு பத்து நிமிஷம் உங்க ரூம்ல இந்த போட்டோவைச் செட் பண்ணிட்டு வருவாங்க” என்றவன் ஆதியுடன் வந்திருந்த வேலையாட்கள் இருவரையும் அனுப்பி வைத்தான்.
“சுமி கண்ணா! போய்ப் பாரு” என அனுப்பி வைத்தார் இராமநாதன்.
வந்தவர்கள் வேலையை முடித்துவிட்டுச் சென்றதும், வேலையாட்கள் அந்த அறையைச் சுத்தம் செய்துவிட்டு நகரும் வரை, சுவற்றில் மாட்டியிருந்த பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தவள் போனை எடுத்தாள்.
கஸ்டமரிடம் பேசிக்கொண்டிருந்த விஜய்மித்ரன், அவளது எண்ணைப் பார்த்ததும், “எக்ஸ்க்யூஸ் மீ!” எனக் கேட்டுக்கொண்டு பால்கனியில் வந்து நின்றான்.
“மித்ரா!” என்று அவளது பெயரை உச்சரித்து முடிக்கும் முன்பே, “ஐ லவ் யூ விஜய்!” எனத் தழுதழுத்தாள்.
“அதுதான் தெரியுமே” என்றவன், “ஓஹ்! போட்டோ வந்துடுச்சா!” என்று சிரித்தான்.
“ஏன் என்கிட்ட சொல்லல?” எனக் கேட்டாள்.
“சொல்லியிருந்தா என்ன செய்திருப்ப?” எனக் கொஞ்சலாகக் கேட்டான்.
“ஹுக்கும்! உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது” என்றாள் பதிலுக்கு.
சிரித்தவன், “நீ கொடுக்கணும்னு நினைக்கிறதை, மொத்தமா சேர்த்து வை. நான் வந்து வட்டியும் முதலுமா வசூல் பண்ணிக்கிறேன்” என்றான்.
“வட்டி, முதலெல்லாம் போட்டு கொடுக்க இது என்ன வட்டி பிஸ்னஸா! லவ்! அதெல்லாம் அப்பப்போ கணக்கு முடிஞ்சிடும்” என்றாள் குறும்புடன்.
“அப்போ, கணக்கை நீ எழுதி வை. வசூல் பண்ணிக்கிறதை, நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“அது உங்க சாமர்த்தியம்!”
“என்னோட சாமர்த்தியம் என்னன்னு உனக்கு இன்னும் முழுசா தெரியல பார்பி! அதுக்கான நேரம் வரும் போது ஐ வில் ஷோ யூ!” என்றான்.
சிரித்துக்கொண்டே, “இட்ஸ் மை பிளஷர்!” என்றாள்.
“ஓகே. என்னோட முதலாளி ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கார். கிளம்பறேன்” என்றான்.
“முதலாளியா?” என்றாள் கேள்வியாக.
“கஸ்டமர் தானே நமக்கு முதலாளி! ஓகேமா பார்பி! லவ் யூ! நைட் பேசறேன்” என்றான் .
“லவ் யூ டூ!” என்றவள் புன்னகையுடன் போனை அணைத்தாள்.
*************
பதினைந்து நாள்களுக்குப் பிறகு, அன்று உதய்பூரிலிருந்த இராமநாதனின் வீடு ஜெகஜோதியாக காட்சியளித்தது. இராமநாதன் உற்சாகத்துடன் வந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார்.
“வாழ்த்துகள் சார்! பேத்தியையும், பேரனையும் ஒண்ணு சேர்த்துட்டீங்க” என்று சிலர் சந்தோஷமாகவும், சிலர் சற்று புகைச்சலுமாகக் கூறினர்.
அனைவருக்குமே புன்சிரிப்புடன் தேவையான பதிலை வழங்கிக் கொண்டிருந்தார் இராமநாதன்.
சுமித்ராவின் தோழிகள் மூவரும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
“சுமி! நீ கல்யாண சாப்பாடு போடுற இல்ல. இப்போ நம்ம வன்யாவும், சங்கீயும் உனக்கு ஸ்வீட் நியூஸ் சொல்லப்போறாங்க என்றாள் நீத்து.
தோழிகளின் நாணச் சிரிப்பிலிருந்து விஷயத்தைப் புரிந்துகொண்டவளாக, “ஹேய்! இத்தனை நாளா மூணு பேரும் என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்கீங்க…” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.
“நீங்க மட்டும் என்ன மேடம்? விஷயத்தைச் சொன்னீங்களா?” என மாறி மாறி அவளை கிண்டல் செய்துகொண்டிருக்க, “இதுக்கு அது சரியா போச்சு” என்று சமாதானக் கொடி உயர்த்தினாள் சுமித்ரா.
“அதெல்லாம் போங்கு…” என அவளை சீண்டிக்கொண்டிருந்தனர்.
“சரி சொல்லாதது தப்புதான்” என கிண்டலுக்கு முடிவு கட்டியவள், “எனக்காக நீங்க மூணு பேரும் ஃபேமலியோட வந்ததுக்கு ரொம்பத் தேங்க்ஸ்!” என்றாள்.
“ஹேய்! சென்டிமெண்டா… ஆனாலும், நீ சொல்லாதது தப்புதான்” என ஆரம்பித்தாள் வன்யா.
“அடராமா!” என தலையிலடித்துக் கொண்டாள் சுமித்ரா.
அங்கு வந்த இராமநாதன், பேத்தியின் சிரிப்பைக் கண்குளிரப் பார்த்துக்கொண்டிருந்தார்.
குறிப்பிட்ட நல்ல நேரத்தில் தமிழ் மரபுபடி தாம்பூலம் மாற்றி, நிச்சயப் பத்திரிகை வாசித்து முடித்தனர். வந்திருந்த அனைவரும் ஆர்வத்துடன் விழாவைப் பார்த்துக்கொண்டிருந்தனர். மணமக்கள் இருவரையும் ஒன்றாக அமரவைத்து ஆரத்திச் சுற்றினார் வித்யாவதி.
“ஓகே! எங்க அண்ணா, அண்ணியோட நிச்சயதார்த்தத்துக்கு வந்திருக்கும் அத்தனைப் பேருக்கும் பெரிய தேங்க்ஸ். இதுவரைக்கும் சௌத் இண்டியன் ட்ரெடிஷனல் எங்கேஜ்மெண்டைப் பார்த்தீங்க. இப்போ நம்ம நார்த் ட்ரெடிஷனல் எங்கேஜ்மெண்ட்” என்று சப்தமாகக் குரல் கொடுத்தவன் தனது ஷெர்வானியின் பாக்கெட்டிலிருந்து ஒரு நகைப் பெட்டியை எடுத்துத் திறந்தான்.
“அண்ணா! ஃபர்ஸ்ட் நீங்க” என்று அவனிடம் நீட்டினான்.
வி என்ற ஆங்கில எழுத்தில் பொடிப்பொடி வைர கற்கள் பதித்த மோதிரத்தை சுமித்ராவின் விரல்களில் அணிவித்தான் விஜய்மித்ரன். அதே போல அவளும் எம் என்ற ஆங்கில எழுத்திலிருந்த மோதிரத்தை விஜய்மித்ரனின் விரலில் அணிவித்தாள்.
ஆதி ஒரு பெரிய கேக்கை அவர்களுக்கு முன்னால் வைக்க, அனைவரது கரகோஷங்களுக்கு இடையில் இருவருமாகச் சேர்ந்து வெட்டினர்.
தோட்டத்தில் பஃபே முறையில் உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, ஹாலிலிருந்த சுமித்ராவின் தோழிகளைச் சாப்பிட அழைத்த வித்யாவதி, “சுமி! நீ கொஞ்ச நேரம் உன் ரூம்ல இரும்மா. நான் கூப்பிடுறேன்” என அவளை அறைக்கு அனுப்பி வைத்தார்.
“மாலையைக் கழட்டிடட்டுமா அத்தை!” எனக் கேட்டாள்.
“இரு” என்றவர் மூத்த பெண்மணி ஒருவரை அழைத்துக் கழற்றச் சொல்லி அவளிடமே கொடுத்தார்.
“இதே புடவைல இரு மாத்திடாதே” எனச் சொல்லி அனுப்பினார்.
மாலையை பெற்றோரின் படத்திற்குக் கீழிருந்த டேபிள் மீது வைத்துவிட்டுத் திரும்பியவள், தன்னைச் சுற்றிவளைத்த வலிய கரங்களில் சிக்கிக்கொண்டாள்.
“விஜய்!” என்று காதலுடன் அழைத்தவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
“உன்னை நேர்ல பார்த்து முழுசா பதினேழு நாள் ஆச்சு. திரும்ப உன்னைப் பார்க்கணும்னா இன்னும் ஒரு மாசம் வெயிட் பண்ணணும். அதுக்குத் தான் நீ மேலே வர்றதைப் பார்த்துட்டு வேகமா வந்தேன்.”
அவனை ஆழ்ந்து பார்த்தவள், “பொய்!” என்றாள்.
“கண்டுபிடிச்சிட்டியா?” எனச் சிரித்தான்.
“உங்களை எனக்குத் தெரியாதா! அத்தையோட பர்மிஷனோட தான் நீங்க வந்திருக்கீங்க. என் ஃப்ரெண்ட்ஸ் இப்போதைக்கு வரமாட்டாங்கன்னு எனக்கும் தெரியும்” என்றாள்.
சிரித்தவன், “அது உண்மைதான். ஆனா, நான் எர்லி மார்னிங் கிளம்பிடுவேன்” என்றான்.
“ஈவ்னிங் தானே வந்தீங்க” எனப் பரிதாபமாகக் கேட்டாள்.
“கொஞ்சம் பிஸிம்மா! நிறைய எக்ஸ்போர்ட் ஆர்டர்ஸ். நம்ம கல்யாணத்துக்குள்ள அதையெல்லாம் ஷிப்பிங்ல போட்டு முடிச்சாதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கமுடியும்” என்றான்.
“ஓ!” என்றாள்.
“ம், அப்புறம்” எனக் கேட்டுக்கொண்டே சுவற்றில் சாய்ந்தவன் அவளையும் தன்னுடைய அணைப்பிலேயே வைத்திருந்தான்.
“ரொம்பத் தேங்க்ஸ் விஜய்! நீங்கமட்டும் இல்லன்னா…” என்றவள் அவனது நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்வ. இப்போ நீ உன்னோட வீட்ல இருக்க. சேஃபா இருக்க. அந்தச் சந்தோஷத்தோட இரு” என்று ஆறுதலுடன் கூறினான்.
“ம்ம். தாத்தா ரொம்பப் பாவம் விஜய்! இங்கே வந்த பின்னதான் தாத்தாவோட நிலைமை புரிஞ்சிது. என்ன இருந்தாலும், அம்மா அப்படி செய்யாம இருந்திருக்கலாம்” என்றாள் கவலையுடன்.
“ஹேய்! இருக்க இருக்க பழசையெல்லாம் தோண்டியெடுத்து கவலைப்படுவ போல…” என்றான் கேலியாக.
“கவலை இல்ல. ஆதங்கம்… அப்புறம், தாத்தாகிட்ட நான் சாரி கேட்டுட்டேன் தெரியுமா!” என்றாள்.
“தெரியுமே…” என்றான் இலகுவாக.
“தாத்தா சொன்னாங்களா!”
“கெஸ் பண்ணினேன். உன்னோட குணம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும் மித்ரா. தப்பை தப்புன்னு சொல்ல நீ தயங்கனது இல்ல. அதேபோல நீ புரியாமல் தெரியாமல் செய்த விஷயத்தைத் தப்புன்னு உணர்ந்தால் மன்னிப்பு கேட்கவும் செய்வன்னு தெரியும்” என்றான்.
“என்னைப் புரிஞ்சிகிட்டதுக்குத் தேங்க்ஸ்!” என்றாள்.
”எனக்கு இப்போ தேவை தேங்க்ஸ் இல்ல…” என அவன் விஷமமாகச் சிரித்தான்.
அவள் சுதாரித்து விலக முயல, அதற்கு அவன் அசைந்து கொடுத்தால் தானே…
“விஜய்!” என்று குழைந்தவளிடம், “பார்பி!” என அவனும் குழைந்தான்.