தீயினில் வளர் ஜோதியே

Anuya

Well-known member
Apr 30, 2019
263
286
63
அத்தியாயம் - 41

தூக்கத்தில் புரண்டு படுத்த விஜய்மித்ரனின் காதுகளில், எங்கோ ஒலிக்கும் அழைப்பு மணியில் ஓசை மெலிதாகக் கேட்டது. நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஆறாகியிருந்தது.

‘நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டோம்!’ என எண்ணிக்கொண்டே எழுந்தவன் மீண்டும் அழைப்புமணி ஒலிக்கும் சப்தம் கேட்டதும், வேகமாக எழுந்து கதவைத் திறந்தவன் உண்மையிலேயே ஆச்சரியத்தையும், திகைப்பையும் ஒருசேர அடைந்தான்.

தனது முகத்தைப் பார்க்காமல், எங்கோ பார்த்துக்கொண்டு நின்றிருந்த சுமித்ராவைக் கண்டதும், அவனுக்குச் சிரிப்புதான் வந்தது. அதுவரை அவள் மீதிருந்த கோபம் மறைந்து, நேசத்தின் ஆதிக்கம் மேலோங்க ஆரம்பித்தது.

கதவைத் திறந்தவன் நகராமல் கையைக் கட்டிக்கொண்டு நிலைப்படியில் சாய்ந்து நின்றவனைக் காண, அவளுக்கு எரிச்சல் உண்டானது.

தாத்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவரைப் பார்த்ததும் அதிர்ச்சி என்றால், விஜய்மித்ரன் தனது தாய்மாமா மகன் என்ற மறைக்கப்பட்ட உண்மை, அவளுக்குப் பேரதிர்ச்சியையும், சந்தோஷத்தைக் கொடுத்தது.

அந்த நிமிடத்தில்கூட தன்னுடைய விஜய்யை அவளால் தவறாக எண்ணமுடியவில்லை. ஆனால், ‘இதைத் தன்னிடமிருந்து மறைத்துவிட்டானே’ என்ற கோபம் மட்டும்தான் எழுந்தது.

கோபத்தில் எதைப் பேசினாலும், அது அர்த்தமற்றது மட்டுமல்லாமல் வார்த்தைகள் கொடுக்கும் வீரியத்தால் நிகழக்கூடிய பின்விளைவுகளை அவள் நன்கு அறிந்திருந்ததால், முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

விஜய் தொடர்ந்து தன்னை அழைத்தபோது, அவனது அழைப்பை நிராகரித்து குறுஞ்செய்தி அனுப்பியதற்கான காரணமும் அதுவே. அவனிடமிருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்தாள். ஆனால், வெகுநேரமாகியும் வராததால் மனம் சோர்ந்து போனது.

‘உங்களுக்கும் என்மேல கோபமா விஜய்! உங்க கோபத்தைக்கூட என்மேல் நீங்கள் காட்டும் அக்கறை என்று நினைத்துச் சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்’ என தனக்கே சொல்லிக்கொண்டாள்.

ஆனால், அவனது கோபத்தின் அளவு கூடிக்கொண்டே போனதே தவிர, அதற்கு முடிவு மட்டும் வரவில்லை. தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு அவனிடமிருந்து அழைப்போ, குறுஞ்செய்தியோ வரவில்லை என்றதும் மனம் தவித்தது.

திடீரென தோழிகள் தன்னிடம் பேசியதற்கான காரணத்தை ஊகிக்க இயலாத அளவிற்கு அவள் அசடல்லவே. தன்மீது இத்தனை அக்கறைக் காட்டுபவன் இன்னமும், தன்மீது கோபத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு இருப்பதை அவளால் தாள முடியவில்லை.

அதைப் பற்றி நினைத்துக்கொண்டு அவள் பூங்காவில் அமர்ந்திருக்க, தன்னைப் பார்க்க ஆள் வந்திருப்பதாகக் கூறியது, விஜய் தான் தன்னைத் தேடி வந்துவிட்டான் என்ற சந்தோஷத்துடன் ஆவலுடன் ஓடிவந்தாள். ஆனால், அங்கே அமர்ந்திருந்த வித்யாவதியைக் கண்டதும் சிறுஏமாற்றம் நெஞ்சில் பரவியபோதும், அத்தையின் அன்பில் மனம் கனிந்து போனது அவளுக்கு.

அதிலும், அவருடைய எளிமையான பேச்சும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கையும் கண்டு நெகிழ்ந்து போனாள். பெரிதாக எதையும் பேசாதபோதும், தான் சொல்ல வந்த செய்தியை அவர் எத்தனைச் சுலபமாக தெளிவுபடுத்திவிட்டார்’ என்று வியப்புடன் நினைத்துக்கொண்டாள்.

ஆயினும், அவர் சொன்ன செய்தியில் விஜய் தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறியதை மட்டும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதற்கு மேலும், முடியாது என்று நினைத்தவள், இரவு இரயிலிலேயே கிளம்பிவிட்டாள்.

‘இதோ, உன்னைத் தேடி வந்துவிட்டேன். இப்போது என்ன செய்வாய்!’ என்று இறுமாப்புடன் அவனைப் பார்த்தாள். ஆனால், தான் வந்திருப்பதைச் சந்தோஷத்துடன் வரவேற்காமல், இப்படி மரத்தோடு மரமாக நின்றிருந்தவன் மீது எரிச்சல் வந்தது.

“உங்களைத் தேடி வந்திருக்கேன். வான்னு கூப்பிடமாட்டீங்களா?” என்றவளை அசராமல் பார்த்தான்.

கடுகடுவென வர, “வழியை விடுங்க” என்று அவனைத் தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

கதவை மூடிவிட்டு உள்ளே வந்தவனிடம், “நான் ஃப்ரெஷ் அப் ஆகணும்” என்றாள்.

அவளுக்கு விருந்தினர் அறையைக் காண்பித்துவிட்டு, முறுவலுடன் சமையலறைக்கு வந்தான்.

இருபது நிமிடங்களில் அவள் குளித்துவிட்டு வருவதற்குள், இருவருக்குமாக காஃபியுடன் காத்திருந்தான்.

வேலைக்காரம்மா சமையலறையில் மும்முரமாக இருக்க, அதைக் கண்ணுற்றபடியே அவனுக்கெதிரில் வந்து அமர்ந்தாள்.

கெட்டிலில் இருந்த காஃபியை கப்பில் ஊற்றி அவளெதிரில் வைத்தான்.

தலையை உயர்த்தியவள் தனது ஈகோவை ஒதுக்கிவைத்துவிட்டு, “ஏன் விஜய் என்னை அவாய்ட் பண்றீங்க?” என மெலிந்த குரலில் கேட்டாள்.

காஃபியை ஒரு மிடறு விழுங்கியவன், “நீ சொன்னதை, செய்திருக்கேன். இதுல தப்பு சொல்ல என்னயிருக்கு?” என்றவன், அவள் ஏதோ சொல்ல வந்ததைக் கைநீட்டித் தடுத்தான்.

“காஃபியைக் குடிச்சி முடி. நாம உள்ளே போய்ப் பேசுவோம்” என்றவன் காஃபி கப்புடன் சமையலறைக்குச் சென்றான்.

வேலைக்காரம்மாவிடம் ஏதோ சொல்லிவிட்டுச் சிலநிமிடங்கள் கழித்து வந்தவன், அவளை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றான்.

“இப்போ சொல்லு” என்றான்.

“என்னோட சந்தோஷத்தையும், துக்கத்தையும் மனசுவிட்டுப் பகிர்ந்துக்க, நீங்க மட்டும்தான் இருக்கீங்க. அந்த நம்பிக்கையோட, உங்களைத் தேடி வந்திருக்கேன். என்னைப் புரிஞ்சிக்காம ஏன் விலக்கி வச்சிப் பேசறீங்க?” என்றவளுக்கு விழிகள் தளும்பின.

ஆனாலும், முயன்று தன்னை நிதானித்துக்கொண்டாள். துப்பட்டாவால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“நீங்களே எல்லாத்தையும் என்கிட்ட சொல்லியிருக்கலாமே. அதை நீங்க மறைச்சிட்டீங்க என்ற கோபம் எனக்கு இருந்தது உண்மை. அந்தநேரத்துல நாம் பேசியிருந்தா, என்னையும் மீறி ஏதாவது வார்த்தையை விட்டிருப்பேன். அப்புறம் காலமெல்லாம் மனசுக்குள்ள அந்த வார்த்தை உறுத்திகிட்டேதான் இருக்கும்.

அதனால தான் என்னை நிதானப்படுத்திக்க நேரம் கேட்டேனே தவிர, உங்ககிட்டயிருந்து விலகிப் போக இல்ல. எனக்குக் கனவிலேயும் அந்த நினைப்பு வராது. நான் சொன்னது உங்களைக் காயப்படுத்தியிருந்தா, என்னை மன்னிச்சிடுங்க. நான் வேணும்னே எதையும் செய்யல விஜய்!” என்றவள் தன்னையும் மீறி உடைந்து போனாள்.

கையைக் கட்டிக்கொண்டு அசையாமல் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவன், அவளது வார்த்தைகளில் இருந்த உண்மையிலும், கண்ணீரிலும் கரைந்து போனான்.

‘அவளுக்குப் புரியவேண்டும் என நினைத்துச் செய்த செயல், அவளை இந்த அளவிற்குக் காயப்படுத்தும்’ என்று அவன் நினைக்கவே இல்லை.

“மித்ரா! ரியலி சாரி! நம்ம ரிலேஷன்ஷிப் பத்தி உனக்குத் தெரியறதுக்கு முதல் நாள்தான் உறுதியா தெரிஞ்சது. ஊருக்குக் கிளம்பறதுக்கு முன்னால உன்கிட்ட பேசினபோது நீ தாத்தாவோட உறவே வேண்டாம் என்று பேசினதாலதான் நான் மேற்கொண்டு எதையும் சொல்லல. உன்கிட்ட மறைக்கணும்னு நான் நினைச்சதில்ல. கொஞ்ச நாள் ஆகட்டும்னு காத்திருந்தேன். உன்னுடைய உதாசீனம், தாத்தாவை எப்படிக் காயப்படுத்தும்னு உனக்குப் புரியவைக்க நினைச்சேனே தவிர, நான் உன்னைக் காயப்படுத்தணும்னு நினைக்கவே இல்ல” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.

சட்டென நிமிர்ந்தவள், “அது தெரியாத குழந்தை இல்ல நான். எனக்கு அப்பா மட்டும்தான்னு நினைச்சிட்டு இருந்தப்ப, அம்மா வழி இரத்த உறவும் எனக்கு இருக்குன்னு தெரிஞ்சதும், துள்ளிக் குதிக்கணும் போலயிருந்தது. என்கிட்ட முதன்முதல்ல தாத்தா பேசும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்ததுன்னு தெரியுமா உங்களுக்கு!

ஆனா, அவர் என்கிட்ட போன்ல பேசும்போது, உன் அப்பா, என் மகளை ஏமாத்தி கல்யாணம் செய்துகிட்டார். இனி, உனக்கு நான் இருக்கேன். என்னோட வந்திடு. என் சொத்தெல்லாம் உனக்குத்தான்னு, ஒரு பிஸினஸ் மேனாதான் அவர் பேசினார். அவர் கொஞ்சமாவது பாசத்தோட பேசியிருந்தா, நானும் அவரை தாத்தான்னு ஏத்துட்டிருப்பேன்.

எங்க அப்பாவைப் பத்தி அவருக்கு என்ன தெரியும்? அம்மா இறந்ததும், அவர் நினைச்சிருந்தா இன்னொரு கல்யாணம் செய்துட்டிருக்கலாம். அவர், எனக்காகவே தன்னோட வாழ்க்கையை வாழ்ந்தார். அப்படிப்பட்டவரை விட்டுட்டு, புதுசா உறவு கொண்டாடிட்டு வர்றவர் கூப்பிட்டதும், நான் எப்படி விஜய் போவேன்?” என்றவளுக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

சமாளித்துக்கொண்டு, “இன்னொன்னு தெரியுமா உங்களுக்கு! எங்க அப்பா ஒண்ணும் சொத்து சுகத்துக்கு ஆசைப்பட்டு, எங்க அம்மாவைக் கல்யாணம் செய்துக்கல. அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியாம நடுத்தெருவில் நிர்கதியா நின்னவங்களுக்குத்தான் வாழ்க்கைக் கொடுத்தார். ஆனா, ஒருநாள்கூட எங்க அப்பா, எங்க அம்மாவை விட்டுக்கொடுத்துப் பேசினதில்ல” என ஆக்ரோஷமாகப் பேசியவளைத் திகைப்புடன் பார்த்தான்.

சுமித்ராவின் வார்த்தைகளைக் கேட்டவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘என்ன சொல்கிறாள் இவள்!’ என்றுதான் நினைத்தான். ஆனால், அவளது முகத்தில் தெரிந்த வேதனை அதை உண்மை எனக் காட்டியது. தனது அன்னையின் மூலமாக அவன் அறிந்துகொண்டதும், மித்ரா சொல்வது வேறாக இருக்கும் போலிருக்கிறதே’ எனக் குழம்பினான்.

“மித்ரா! என்ன சொல்ற?” எனக் கேட்டான்.

எழுந்து சென்று சோஃபாவைப் பிடித்தபடி, “நீங்க நினைக்கறது போல, எங்க அப்பா அம்மா காதலிச்சிக் கல்யாணம் செய்துக்கல. சந்தர்ப்பச் சூழ்நிலை அவங்களைச் சேர்த்து வச்சிடுச்சி” என்றவள், சற்று நிதானித்தாள்.

“எங்க அப்பா உதய்பூர்ல கொஞ்சநாள் டீச்சரா வேலை பார்த்திருக்கார். அப்போ ஊர் பெரிய மனிதரான ந.. உங்க தாத்தாவோட குடும்பத்தோட பழக்கம் கிடைச்சிருக்கு. அப்பாவுக்குத் தமிழ் மேல ரொம்பப் பற்று இருந்ததும் அதுக்கு ஒரு காரணம். தாத்தா மிலிட்டரில இருந்ததால பாட்டிக்குத்தான் அப்பாகிட்ட நல்லப் பழக்கம்.

பழகினாலும், அப்பா கொஞ்சம் ஒதுங்கியே தான் இருந்திருக்காங்க. அம்மா அப்போதான் காலேஜ்ல சேர்ந்த புதுசு. அந்த வருஷம் அரையாண்டு எக்ஸாம் முடிஞ்சதும் அப்பா மும்பைலயிருந்த கேஷவ் அங்கிளைப் பார்க்கப் போயிருக்கார். திரும்ப வரும்போது அங்கிளும் அப்பாவோட ஊருக்கு வந்திருக்கார்.

சூரத் ஸ்டேஷன்ல வண்டி நின்னதும் திடீர்னு அவங்க கூபேல ஒரு பொண்ணு ஓடிவந்து ஒளிஞ்சிகிட்டாங்க. அவங்களைப் பார்த்த அப்பாவுக்கு அதிர்ச்சி. அவங்க எங்க அம்மா…” என்றவள் மேற்கொண்டு சொல்லமுடியாமல் தலையைப் பிடித்துக்கொண்டாள்.

அவனுக்குமே இது அதிர்ச்சியாக இருக்க, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

“அப்பா, விசாரித்தபோதுதான் அவங்க தன்னோட சீனியர் பையன் ஒருவனை நம்பி வீட்டைவிட்டு வந்துட்டதாக…” என்றவளுக்குத் தொண்டை அடைத்தது.

அவளது நிலையைக் கண்டவன், “விட்டுடு மித்ரா! உன்னைக் கஷ்டப்படுத்திக்காதே முடிஞ்சி போனதைப் பத்திப் பேசி என்ன ஆகப்போகுது! அதோட இது யாருக்கும் தெரியாமலேயே இருந்துட்டுப் போகட்டும்” என்றான் ஆறுதலாக.

“இல்ல இல்ல விஜய்! அவங்க வீட்டைவிட்டு வந்திருந்தாலும், நகையையும், பணத்தையும் மட்டும்தான் இழந்தாங்க. மத்தபடி” என்றவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.

“போதும் இதுக்கு மேல என்ன நடந்திருக்கும்னு என்னால புரிஞ்சிக்கமுடியுது. அத்தை வீட்டுக்குத் திரும்பி வர மறுத்திருப்பாங்க. அதனால மாமா அவங்களைத் தன்னோட கூட்டிட்டுப் போய் இருப்பார். அதானே…” என்றதற்கு நிமிராமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

“எங்க அப்பா நினைச்சிருந்தா என்னவேணும்னாலும் செய்திருக்கலாம். ஆனா, அவர் அப்படிச் செய்யல. அடைக்கலமா வந்தவங்களை தன்னோட வாழ்க்கைல இணைச்சிகிட்டார். இதுல அவரோட தப்பு என்ன இருக்கு சொல்லுங்க” என்றவள் அவனது மடியில் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.

அழுகையில் குலுங்கிய அவளது முதுகை, ஆதரவாகத் தட்டிக்கொடுத்தான். மனத்திலிருந்த அத்தனையையும் கொட்டிய நிம்மதியிலும், பயண அலுப்பிலும், தன்னவனது அருகாமை கொடுத்த இதத்திலும் மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்துவிட, அவளது தலைக்குத் தலையணையை வைத்துவிட்டு கதவை மூடிக்கொண்டு ஹாலுக்கு வந்தான்.

தனது அன்னைக்குப் போன் செய்தவன், நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூற, மறுமுனையிலிருந்த வித்யாவதி திக்பிரமையில் ஆழ்ந்ததைப் போல மௌனமாக இருந்தார்.

“எப்பேர்பட்டக் குடும்பத்துல பிறந்துட்டு, கடைசில அவள் தெரியாம செய்த தப்பால எல்லாமே தவறாகப் போயிடுச்சே!” என்றவருக்குத் தொண்டை அடைத்தது.

“இதை எப்படிம்மா தாத்தாகிட்ட சொல்றது?” கவலையுடன் கேட்டான்.

“சொல்லித்தான் ஆகணும். இல்லனா, ஒரு நல்ல மனுஷனை நாங்க எல்லோருமே வார்த்தையால மறைமுகமா வதைச்சிருக்கோமே. அதுக்குப் பிராயச்சித்தம் பண்ணியாகணுமே. கெட்டதிலேயும் ஒரு நல்லதா சுமி நம்மகிட்டயே வந்து சேர்ந்ததுதான். இதைப் பத்தின கவலை உனக்கு வேணாம். நான் பக்குவமா சொல்லிக்கிறேன். இந்த விஷயம் நம்ம நாலு பேரோட இருக்கட்டும் மித்ரன்!” என்றார்.

அவனும் புரிந்துகொண்டு சம்மதித்தான்.

“சரி, நீ கிளம்பி வரும்போது சுமியையும் கூட்டிட்டு வந்திடு. அவளைப் பத்திரமா பார்த்துக்க” என்றவர் போனை வைத்தார்.

சுமித்ரா உறக்கம் கலைந்து எழுந்துவந்த போது விஜய்மித்ரன் அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாராகியிருந்தான்.

கைக்குட்டையை மடித்துப் பாக்கெட்டில் வைத்தபடி ஹாலுக்கு வந்தவன், “ஹேய்! எழுந்துட்டியா? நானே எழுப்பணும்னு இருந்தேன். சாப்பிடலாமா?” எனக் கேட்டான்.

“ம்ம்” என்றாள்.

அமைதியாக உண்டு முடித்து எழுந்தனர்.

“நீ, தூங்கறதுன்னா தூங்கு. நான் ஒரு மணிக்கெல்லாம் வந்திடுவேன். லஞ்சுக்குப் போவோம். ஈவ்னிங் வரைக்கும் நான் ஃப்ரீதான். பேசுவோம்” என்றவன், அவளது கன்னத்தைத் தட்டிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

சற்றுநேரம் டி.வி பார்த்தாள், படுக்கையில் புரண்டாள் நேரம் விரைவேணா என்றது. எழுந்து வந்து ஃப்ரிட்ஜை ஆராய்ந்தாள். காய்கறிகள் இருப்பதைப் பார்த்ததும் இருவருக்குமாக சமைத்துக் கொள்ளலாம் என காய்கறிகளை எடுத்தாள்.

அவள் வேலையில் மும்முரமாக இருக்க, யாரோ வரும் அரவம் கேட்க எட்டிப் பார்த்தாள்.

புன்னகைத்த விஜய், “என்ன பண்ணிட்டிருக்க?” என்க் கேட்டான்.

“சமைச்சிட்டு இருந்தேன்” என்றவள் விட்டவேலையைத் தொடரலானாள்.

“நான்தான் வெளியே போய்ச் சாப்பிடலாம்னு சொன்னேனே” சொல்லியபடி சட்டைப் பட்டனைக் கழற்றிக்கொண்டே தனது அறைக்குச் சென்றான்.

“சும்மாதானே இருக்கேன்னு நானே சமைச்சிட்டேன்” என்றவள் சமைத்தவற்றை டைனிங்கில் அடுக்கினாள்.

“ம், வாசனையே பசியைத் தூண்டுதே… என்ன சமைச்சிருக்க?” என்றபடி அமர்ந்தான்.

“வெஜ் புலாவ், மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை, பூந்தி ராய்தா.”

“வாவ்! செம மெனுவா இருக்கே” என்றவன், ஒரு வாய் சுவைத்தான். “ம், சூப்பர்! உன் கையைக் கொஞ்சம் காட்டு” என்றான்.

அவளும் இயல்பாக கையை நீட்ட, “எல்லோரும் சமைச்ச கைக்கு வளையல் போடுவாங்க. நான் கொஞ்சம் வித்தியாசமா” என்றவன் அவளது உள்ளங்கையில் அழுந்த முத்தமிட்டான்.

மனத்திற்குள் மகிழ்ச்சி குமிழியிட்ட போதும், “ம், எச்சில். நான் திரும்பக் கையைக் கழுவணும்” என முகத்தைச் சுளித்தாள்.

“அத்தை மகளே! இதெல்லாம் சரியில்ல… ஏதோ நான் நல்ல மூட்ல இருக்கறதால தப்பிச்சிட்ட” என்றான்.

“ம், இல்லனா மட்டும்” என்றவள் நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

“ஏய்! ரொம்பச் சீண்டாதே… உனக்கு நல்லதில்ல” என்றான் மிரட்டலாக.

என்ன நினைத்தாளோ அவள் மௌனமான போதும் இரகசியச் சிரிப்பைச் சிந்தியபடி உணவருந்திக் கொண்டிருந்தவளை, கண்டும் காணாமல் இரசித்துக்கொண்டிருந்தான்.

அவள் பாத்திரங்களைக் கழுவி வைக்க, டைனிங்கை சுத்தம் செய்தான் மித்ரன். கையைத் துடைத்துக்கொண்டு அவள் திவானில் வந்து அமரவும், அவளது மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டான்.

“விஜய்! என்ன இது? எழுந்திருங்க” என்றவளைச் சிரிப்புடன் பார்த்தான்.

“முடியாது” என்றான் பிடிவாதமாக.

“ஏன் இப்படிப் படுத்தறீங்க?” எனச் சிணுங்கினாள்.

“நீகூட என் மடியில் தலை வச்சி படுத்திருந்த. அப்போ, நான் ஏதாவது சொன்னேன்…” எனக் கேட்டதும் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக்கொள்ள, அவன் எழுந்து அமர்ந்தான்.

“அதான் எழுந்துட்டேனே. இன்னும் ஏன் முகத்தை எங்கேயோ திருப்பிட்டிருக்க” கண்களில் குறும்பு தவழக் கேட்டான்.

முகத்தைத் திருப்பாமல் அவனிடம் ஒரு டைரியை நீட்டினாள்.

“என்ன இது?”

“அப்பாவோட டைரி” என்றாள்.

வாங்கி எதிரிலிருந்து சென்டர் டேபிள் மீது வைத்தவன், அவளது முகத்தைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்பினான்.

“பார்பி! போதும். திரும்பவும் இந்த விஷயங்களைப் பேசவேண்டிய அவசியம் இல்ல. இப்போ பேசவேண்டியது, தாத்தாவைப் பத்தித்தான்” என்றான்.

அவள் மௌனமாக இருந்தாள்.

“தாத்தா, உன்கிட்ட உணர்ச்சி வேகத்தில் அப்படிப் பேசியிருக்கலாம். ஆனா, அவர் ரொம்ப நல்லவர் மித்ரா! உன்மேல உயிரையே வச்சிருக்கார். உன் அப்பாவுக்காக, நீ எவ்வளவு பேசற. அதேபோலதானே தாத்தாவும் மகள்மேல பாசம் வச்சிருப்பார். அவரும், மனுஷன்தானே. அன்பு, பாசத்துக்குக் கட்டுப்பட்டவர் தானே. ஒரே பொண்ணு காதலிச்சி வீட்டைவிட்டுப் போயிட்டான்னு தெரிஞ்சபோது எப்படித் துடிச்சிப் போயிருப்பார்ன்னு நினைச்சிப்பாரு.

அதுவும் இத்தனைக் கம்பெனிகளுக்குச் சொந்தக்காரர். சமுதாயத்துல அவருக்குன்னு ஒரு அங்கீகாரமும், கௌரவமும் இருக்கு. அத்தனைப் பேரையும் நேருக்கு நேராகப் பார்க்கும்போது, அவருக்கு எவ்வளவு அவமானமா இருந்திருக்கும்னு யோசிச்சிப் பாரேன்…” என்று வரிசையாக அவன் பேசிக்கொண்டிருக்க தலையிடாமல் கேட்டுக்கொண்டாள்.

அவளது கரத்துடன் பிணைத்துக்கொண்டு, “உன்னை வருத்தப்பட வைக்கணும்னு சொல்லலடா! நிதர்சனத்தைப் புரிஞ்சிக்க. நம்ம தாத்தாவோட அன்பை புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. வயசான காலத்துல உன்னோட உதாசீனத்தால அவரை நோகடிச்சிடாதே” என்றான்.
அவனது கண்களை ஊடுருவியவள் , புன்னகையுடன் அவனது கரத்தை இறுக பற்றிக்கொண்டு தலையை அசைத்தாள்.

“தேங்க்யூ மித்ரா!” என்றவன் ஆசையுடன் அவளது கரத்தில் முத்தமிட்டான்.

“ஒரு சின்ன வேலையிருக்கு. நான் கிளம்பிப் போய்ட்டு வந்திடுறேன். ஈவ்னிங், சங்கீதா வீட்டுக்குப் போவோம். நைட் நீ அங்கேயே தங்கிடு. காலைல ஊருக்குக் கிளம்பும்போது, நான் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்” என்றவனுக்குச் சிரிப்பையே பதிலாக்கினாள்.
 
  • Like
Reactions: saru