Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சூது கவ்வும் | SudhaRaviNovels

சூது கவ்வும்

Kripnythaa

Moderator
Mar 26, 2018
460
150
63
சூது கவ்வும்-1

இருள் பிரிந்து பொன்னிறக் கதிர்களை ஆதவன் சிதறச் செய்திடும் இனிய விடியலில் அவ்வீட்டின் நிசப்தத்தை கலைக்கும் விதமாக தன் அறையில் இருந்து வெளியேறிய ஏகே(AK) நேராக பால்கனியில் சென்று நின்றான்.

அவன் தங்கியிருந்த எட்டாவது மாடியில் இருந்து உட்லண்ட்ஸ் ஏரியா முழுவதையும் பார்த்தவன் மனதில் ஒருவித திருப்தியுடன் கூடிய மகிழ்ச்சி நிலவிக் கொண்டிருந்தது. பின்னே தமிழகத்தின் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத ஊரில் பிறந்து இன்று சிங்கப்பூரில் இருக்கும் மருந்துகள் தயாரிக்கும் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டிருக்கும் பொழுதே மீண்டும் ஒரு பொறுப்பை அவனுக்கு விரைவில் வழங்க இருக்கிறார்கள் என்னும் செய்தி மகிழ்ச்சியை தராமல் என்ன செய்திடும்?

தன் எண்ண ஓட்டத்தில் மகிழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே அவ்வீட்டின் மற்றொரு அறையில் தங்கியிருந்த போங் ஃபோர்டின்(Bong Fortin) வெளியில் வந்து "குட் மார்னிங் ஏகே! இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு நின்னு வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்க. ஆபீஸ்க்கு கிளம்பலையா? இப்ப கிளம்பினாதான் நீ கரெக்டான டைமுக்கு போய் சேர முடியும்", என காலை வணக்கத்துடன் ஏகேவின் பயண நேரத்தை பற்றியும் வினவினான்.

போங் பேசியதற்கு பதிலாக தன் பற்கள் அனைத்தையும் காட்டிய ஏகே "குட்டு மார்னிங் போங்! நான் இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பிடுவேன். நேத்து சமைச்ச சாப்பாடு மிச்சம் இருக்கு. அதனாலதான் சமையல்ல செலவழிக்கிற நேரத்தை இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கேன். நேத்திக்கு ராத்திரி அவ்வளவு மழை பெஞ்சது. ஆனா இங்க வந்து பாரு இப்ப ரோட்டில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை", என ஏகே தன் நிலையை விவரித்தான்.

ஏகே கூறிய குட்மார்னிங் என்ற வார்த்தையிலேயே சிரிக்க ஆரம்பித்திருந்த போங் "நீ என்னதான் இந்தியால இருந்து சிங்கப்பூர் வந்தாலும் இன்னும் சரியா இங்கிலீஷ் பேச மாட்டேங்குற. அது குட்டு கிடையாது. குட்னு மாத்தி பழகு. பேசுறப்ப இந்த மாதிரி தலையை ஆட்டிகிட்டே பேசாதே. நான் உனக்கு பலமுறை சொல்லிட்டேன். நீ இதெல்லாம் இன்னும் கத்துக்காம இருக்கியே ஏகே!", என அலுத்துக் கொண்டே போங்கும் ஏகே உடன் பால்கனியில் வந்து நின்று அவன் கூறிய சுற்றுப்புறத்தை உற்று நோக்கினான்.

"நீ சொன்னது கரெக்ட்தான் ஏகே! எங்களுக்கு பிலிப்பைன்ஸிலும் இந்த மாதிரி பார்க்க முடியாது. உங்க இந்தியாவும் அதே மாதிரிதான் இருக்கு. இங்க மக்கள்தொகை கம்மியா இருந்தாலும் அவங்களோட நாட்டை பாதுகாக்கனும், சுத்தமா வச்சிக்கனும்கிற எண்ணம் இருக்கு. நம்ம ரெண்டு பேரோட நாட்டிலேயும் அது சுத்தமா கிடையவே கிடையாது. சரி உன் கூட பேசிட்டே இருந்தா எனக்கு லேட் ஆகிடும். நான் கிளம்பறேன். இன்னைக்கு மார்னிங் நியூஸ் போட வேண்டியது என்னோட பொறுப்பு", என கூறிய போங் சிங்கப்பூரின் பிரபல நாளிதழான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில்(Straits times) வேலைப்பார்க்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவன்.

ஆனால் ஏகே போன்று வேலை பார்ப்பதற்கான விசாவில் இல்லாமல் அந்நாட்டின் பெர்மனன்ட் ரெசிடென்சி என்னும் பிஆர் பெற்று 15 வருடங்களாக அங்கே வாழ்ந்து கொண்டிருப்பவன்.போங் சென்றவுடன் அவனை பார்த்து பெருமூச்சு விட்ட ஏகே "இவனை மாதிரி எனக்கு எப்ப பிஆர் கிடைக்குமோ? பிஆர் கிடைக்காட்டாலும் பரவாயில்லை. அடுத்து வரப்போற பிரமோஷன்ல நான் இன்னும் மேலே போய்டுவேன்", என தனக்குள்ளேயே உரையாடலை நிகழ்த்திவிட்டு வேலைக்கு கிளம்புவதற்கு தயாரானான்.

வேலைக்கு கிளம்பி தயாரான ஏகே போங் இடம் உரைத்தது போன்றே முதல்நாள் சமைத்த உணவில் மிச்சம் இருந்ததை அதற்கான டப்பாக்களில் அடைத்துவிட்டு போங் மற்றும் மற்றொரு அறையில் தங்கியிருந்த ரிச்சா்ட் வருகிறார்களா என எட்டிப் பார்த்துவிட்டு அடுத்த வேலையை செய்தான். அது ஒன்றும் பெரிய வேலை இல்லை.

தான் எடுத்தது போக மிச்சமிருந்த உணவு வகைகளில் எவ்வளவு இருக்கிறது என்பதனை தன் கையில் வைத்திருந்த மாா்க்காினால்(Marker) யார் கண்ணுக்கும் புலப்படாதவாறும் அவனது கண்ணுக்கு மட்டுமே தெரியுமாறும் சிறு புள்ளிகளை வைத்து விட்டு சென்றான். அவன் அவ்வாறு செய்யவில்லை என்றாலும் மற்றவர்கள் யாரும் அவனது உணவினை எடுக்க மாட்டார்கள். ஆனாலும் ஏகே தன்னுடைய புத்தியை மாற்றிக்கொள்ளாமல் இந்த வேலையை செய்து கொண்டிருந்தான்.

தன்னுடைய பேக்கின் உள்ளேயே மதிய உணவிற்கான டப்பாக்களை அவன் எடுத்து அடுக்கி கொண்டிருந்த போது அங்கே வந்த போங் "என்ன ஏகே லன்ச் மட்டுமே எடுத்துட்டு போறியா? ப்ரேக்பாஸ்ட் எப்படி சாப்பிடுவ? சப்வே இல்லைன்னா மேக் டி போவியா?", எனக் கேட்டதற்கு ஏகே அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்து வைத்தான்.

அவனது சிரிப்பிலேயே அங்கெல்லாம் போய் காசை செலவழிக்க வேண்டுமா என்ற அர்த்தம் பொதிந்து இருந்ததை பாவம் சூதுவாது அறியாத போங் உணர்ந்து கொள்ளவில்லை. அவனுக்கு அவனது அவசரம். ஆகையால் ஏகேவின் பதிலை எதிர்பார்க்காமல் சரி சரி நான் கிளம்புறேன் பாய் டேக் கேர் எனக் கூறி சென்றுவிட்டான்.

அவன் சென்றவுடன்" கார் வெச்சிருக்கானே. வா நான் உன்னை கூட்டிட்டு போய் விடுறேன்னு ஒரு நாளாவது சொல்றானா? அவன் வேலையை மட்டும்தான் பார்க்குறான். அவனுக்கு மட்டும் சமைக்குறான்.கூட ஒரே வீட்டுல இருக்குறோமே என்னைக்காவது ஒரு நாள் நமக்கும் சேர்த்து சமைச்சு சாப்பிடுன்னு சொல்ல மாட்டேங்குறான். என்ன ஜென்மமோ?", என புலம்பியவாறு எம்ஆர்டியில் பயணிப்பதற்காக வீட்டிலிருந்து நடக்க ஆரம்பித்தவன் இந்தியாவில் இருக்கும் தன் வீட்டினருக்கு அலைபேசியில் அழைத்து பேச ஆரம்பித்தான்.

ஏகே அழைப்பு விடுத்தவுடன் மறுமுனையில் அவனது அழைப்பை ஏற்ற அவனின் மனைவி "சொல்லுங்கங்க, சுகமா இருக்கீகளா? சமைச்சுகிட்டிகளா? இல்ல நேத்து ரவைக்கு வச்சதுல சொச்சமிருந்ததை எடுத்துட்டு போறீகளா?", என அவனைப் பேச விடாமல் தன்னுடைய கேள்விக்கணைகளை அடுக்கினாள்.

மனைவியின் பேச்சில் சிரித்த ஏகே "இங்க பாரு இப்ப நம்ம ஸ்டேட்டஸ் பல மடங்கு உயர்ந்துடுச்சு. இன்னும் இந்த பட்டிக்காட்டுதனமாப் பேசாம கொஞ்சம் டீசண்டா பேச கத்துக்கோ. பிள்ளைங்க ஸ்கூலுக்கு கிளம்பிட்டாங்களா? நான் சாப்பாடெல்லாம் எடுத்துக்கிட்டேன்.

கூடிய சீக்கிரம் நான் கொடுக்குற டாகுமென்ட்ஸ் எல்லாம் வச்சு பாஸ்போர்ட் அப்ளை பண்ணி வாங்கிடுங்க. இந்த மாசம் கடைசிக்குள்ள இல்லைன்னா அடுத்த மாசம் ஆரம்பத்துல எனக்கு பிரமோஷன் வந்துடும். அது வந்ததுக்கப்புறம் குடும்பத்தோட உங்களை கூட்டிட்டு வர்றேன். நீங்க இங்க கிளம்பி வரதை பத்தி யார்கிட்டேயும் மூச்சு விடக்கூடாது", என மனைவி கேட்டக் கேள்விகளுக்கான பதிலுடன் தன்னுடைய எண்ணத்தினையும் ஏகே பகிர்ந்து கொண்டான்.

அவனின் பேச்சைக் கேட்ட அவனது மனைவி "என்ன இப்படி சொல்லிப்புட்டீக? மூச்சு விடுவேனா, சேதி தெரிஞ்சா எல்லாம் வவுறெறிஞ்சு செத்துடுங்க. நேத்திக்கு ரவைக்கு தலைவர் வீட்டுக்கு வந்திருந்தாரு.

நம்ம இடத்தை விட்டுட்டு டவுனுக்கு வந்து பொழைக்கிறது எல்லாம் சரிதான். ஆனா பழச மறக்கடிச்சுட்டு புதுசா வந்த பவுசுல புத்தி பேதலிச்சு திரியக்கூடாதுன்னு சொன்னாரு. அவர் பேசுனதைக் கேட்டு எனக்கு புசுபுசுன்னு வந்துச்சு. உமக்காக அடக்கிக்கிட்டேன்.

அதோட நின்னாரா மனுஷன்? சும்மாடு( தலையில் பாரம் சுமக்க உபயோகப்படுத்தும் வட்ட வடிவமான ஒரு பொருள்) வச்சு சுமை தூக்குற தலைக்கு சுமையோடு பாரம் தெரியாது.அது போல பதவி, காசுன்னு பவுசு வந்துட்டாலும் மனுச, மக்கா,ஞாய தருமம் தெரியாம போயிடும். அதான் டவுனுக்கு வாழ வந்தவுக மனசு. புத்தி தடுமாறாம பார்த்து சூதானமா இருந்துக்குங்க. நாள பின்ன ஏதாவதுன்னா கூட்டத்தை விட்டு ஒரேடியாக ஒதுக்கி வச்சுடுவோம் அப்படின்னு மிரட்டல் குடுத்துட்டு போறாரு", என தன் மனைவியின் பேச்சைக் கேட்ட ஏகே

"விட்டுத் தள்ளு நம்மளை மாதிரி வாழ முடியலைன்னு அவங்களுக்கு எல்லாம் பொறாமை பிடிச்சிருச்சு. என் தங்கச்சியும் அவ வீட்டுக்காரரும் வந்தாகளா?", என ஏகே கேட்டபொழுது அவனின் மனைவி

"ஏன் சாமி! நாம பேசற பாஷையை விட்டுட்டு புதுசு புதுசா பேசறீங்க. நீங்க பேசுறதை இந்த மரமண்டைல அவதானிச்சு பதில் சொல்றதுக்குள்ள தாமசம் ஆயிடுது. மன்னிச்சுடுங்க. யாரு என் நாத்தியை கேட்குறீகளா? அதெல்லாம் போன மாசம் வந்து வக்கனையா தின்னுட்டு அண்ணே காசு அனுப்புனா செத்த பணம் குடுங்க மதினினு கேட்டா.

போயி உன் அண்ணன்கிட்ட வாங்கிட்டு வான்னு உங்க அம்மாதான் சொல்லி அனுப்பி இருக்கு. ஒத்த பைசா இல்லைன்னு சொல்லிப்புட்டேன். நீங்க அங்க உசுர குடுத்து சம்பாதிக்க வாறவ போறவகளுக்கு எல்லாம் தூக்கி கொடுக்க முடியுமா என்ன? உங்ககிட்ட ஏதும் காசு கேட்டாலும் இல்லைன்னு சூதானமா சொல்லிடுக", என வழக்கமான அண்ணியாக அவதாரமெடுத்து பதில் கூறினாள்.

"அப்படியே சொல்லு. புது பாஷை எல்லாம் பேசலை. இங்க எல்லாம் இப்படி பேசுனாதான் மதிப்பாங்க. நாம எங்கிருந்து வந்தோம், நம்ம நிலமை எப்படியிருக்கும்னு எதுவும் தெரியாம பதவிசா, நறுக்கா பேசணும். உன்னை கூட்டிட்டு வர்றப்ப உனக்கும் தெரியும். சரி நான் இங்க ஸ்டேஷனுக்கு வந்துட்டேன். சாயங்காலமா பிள்ளைங்க வந்ததுக்கு அப்புறம் பேசுறேன்", என ஏகே தன்னுடைய அழைப்பை துண்டித்து விட்டு தன் பணியிடத்திற்கான பயணத்தைத் தொடர்ந்தான்.

ஏகே தங்கியிருக்கும் உட்லண்ட்ஸ் பகுதியிலிருந்து அவனது வேலை இடமான பெடாக்( Bedok) சப்வே மூலமாக சென்றடைய ஏறத்தாழ ஒரு மணி நேரம் பத்து நிமிடங்கள் பிடிக்கும். காலை நேர பரபரப்பில் எம்ஆர்டியில் பயணிக்கும் பலரும் நின்று கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலைதான் இருக்கும்.

ஆரம்ப காலங்களில் இவ்வாறு பயணிக்க சற்றே சிரமப்பட்ட ஏகே இரண்டு முறை டாக்ஸியில் சென்று அதற்கு கொடுத்த கட்டணத்தை பார்த்து பயந்து டாக்ஸியில் செல்வதை நிறுத்திவிட்டான். பஸ்ஸில் பயணித்தால் ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு குறைந்தது மூன்று மணி நேரமாவது பிடிக்கும். ஆகையால் இந்த ரயில் பயணத்திற்கு பழகிப் போன அவன் பாதி தூரம் கடந்த பின்னர் எங்கேனும் அமர இடம் கிடைத்தால் அமர்ந்து தூங்க ஆரம்பித்து விடுவான்.

அன்று ஏறிய பொழுதே இடம் உட்கார இடம் கிடைத்தாலும் ஏகேவின் வழக்கமான தூக்கம் அவனை சிறிதும் அண்டவில்லை. வரும் வளமான நாட்களை எண்ணிய கற்பனையிலேயே தனக்குள் சிரித்துக்கொண்டு தன்னைச் சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தான். அவரவர் வேலைக்கு செல்லும் அவசரத்தில் மற்றவர்களைப் பற்றி கவலை கொள்ளும் எண்ணம் இன்றி தங்களது அலைபேசியின் உள்ளே நுழைந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

இவங்களுக்கெல்லாம் வாழ்க்கையை ரசிக்கவே தெரியலை என்று அவர்களை பார்த்து எண்ணிக்கொண்ட ஏகே தானும் செலவழிக்க வேண்டிய நிலை வந்தால் எதனையும் மனதார ரசித்திட மாட்டான் என்பதை நொடியில் மறந்து போனான். பயண நேரம் முழுவதும் பலவித கற்பனைகளில் இருந்தவன் தான் இறங்க வேண்டிய பெடாக் ஸ்டேஷன் வந்தவுடன் வேகவேகமாக தன்னுடைய அலைபேசியை எடுத்து வேலை பார்க்கும் இடத்தில் தனக்கு நண்பனாக இருக்கும் மேத்யூ டிசோசாவிற்கு அழைப்பு விடுத்தான்.

மேத்யூ அழைப்பை ஏற்றவுடன் "உன்னோட ஆபீஸ்க்கு போயிடாத. வெயிட் பண்ணு. நான் வந்துட்டே இருக்கேன். கேஃபேடேரியா போய்ட்டு மேல போகலாம்", எனக் கூறியதும் மறுபுறம் இருந்த மேத்யூ "நாம எப்பவுமே கேஃபேடேரியா போயிட்டுதான் மேலே போவோம். சீக்கிரம் வா. லேட்டாகுறதுக்கு முன்னாடி வந்து சேர்", என பதில் கூறி அழைப்பை துண்டித்தான்.

ஸ்டேஷனில் இறங்கி மேலும் பத்து நிமிடங்கள் தொலைவில் அமைந்திருந்த தன்னுடைய அலுவலகத்திற்கு வந்த ஏகே நிறுவனத்தின் கேட்டில் அமர்ந்து இருந்த செக்யூரிட்டி பிரகாஷை பார்த்தவுடன் தன் வழக்கமான தொனியில் "குட்டுமார்னிங் பிரகாஷ்! இன்னிக்கு ஏதாவது செக்கிங் வந்தாங்கன்னா முதல்ல எனக்கு போன் பண்ணிட்டு அப்புறமா அவங்களை உள்ள விடு", எனக் கூறினான்.

பிரகாஷ் அதேக் கம்பெனியில் ஏறத்தாழ பதினைந்து வருடங்களாக செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து கொண்டிருக்கும் மலேசிய நாட்டைச் சேர்ந்தவன். ஏகேவின் குட்டுமார்னிங் என்ற வார்த்தைக்கு சிரித்துவிட்டு "கண்டிப்பா ஏகே! யாா் வந்தாலும் முதல்ல உங்களுக்குதான் கால் பண்ணுவேன்.மேத்யூ அப்பவே வந்தாச்சு. நீங்க இன்னும் போகலையா?", என சிறிது நக்கல் கலந்துக் கூறினான்.

பிரகாஷின் நக்கல் புரிந்தாலும் புரியாத மாதிரியே ஒரு சிரிப்பை கொடுத்த ஏகே இதோ போயிட்டேன் என வேக வேகமாக உள்ளே நுழைந்து பயோமெட்ரிக்ஸில் தன்னுடைய கை விரலை அழுத்தினான். அவர்களது கம்பெனியில் நேரம் தவறாமை மிக முக்கியமானதாக கருதப்பட்டது. பொது நேரத்தில் வேலைக்கு வருபவர்கள் எட்டு மணிக்கெல்லாம் பயோமெட்ரிக்ஸில் தங்களுடைய கைவிரல் வைத்து வருகையினை பதிவு செய்திருக்க வேண்டும்.

வேலை முடிந்து செல்லும் நேரத்தையும் அவ்வாறே பதிவு செய்ய வேண்டும். பயோமெட்ரிக்ஸ் சரியாக வேலை செய்யாத நாட்களில் மட்டுமே செக்யூரிட்டியிடம் யார் யார் எப்போது நுழைந்தார்கள் என்ற அறிக்கையை வைத்து கணித்துக்கொள்வார்கள். எப்பொழுதும் எட்டுமணி ஆகவும் நேரத்தில் தன்னுடைய வருகை பதிவு செய்துவிடும் ஏகே உடனடியாக தன் வேலையை பார்க்க ஆரம்பிக்க மாட்டான்.

நேராக கீழ்தளத்தில் இருக்கும் கேஃபேடேரியாவில் சென்று தன்னுடைய காலை உணவு, காபி என அனைத்தையும் வரிசை வைத்து முடித்த பின்னர்தான் அலுவலகத்தின் உள்ளே நுழைவான்.அன்றும் அது போலவே கேஃபேடேரியா செல்லும் வழியில் எதிர்ப்பட்ட அனீஷை பார்த்தவன் "குட்டு மார்னிங் அனீஷ்! இன்னைக்கு நான் திடீர்னு இன்டர்னெல் ஆடிட் பண்ணப் போறேன்னு டிபார்ட்மெண்ட்ல எல்லாருக்கும் சொல்லிடு. உன்னோட டிபன்பாக்ஸ் வழக்கமான இடத்துலதான வச்சிருக்க?", என முதலில் வேலையைப் பற்றி பேசியவன் பின்னர் அனீஷ் வீட்டில் இருந்து கொண்டு வந்த சாப்பாட்டை பற்றி வினவினான்.

மருந்துகள் தயாரிக்கும் கம்பெனி என்றாலும் அதில் பலவித துறைகள் இருக்கும் நிலையில் ஏகே தரக்கட்டுப்பாட்டு துறையில் இதுநாள் வரை அசிஸ்டண்ட் மேனேஜராக பணியாற்றி கொண்டிருக்கின்றான். அனீஷ் அவனுக்கு கீழே செயல்படும் சீனியர் குவாலிட்டி சூப்பர்வைசராக இருந்தான்.

ஏகே அசிஸ்டன்ட் மேனேஜராக இருந்தாலும் அவனைவிட அனீஷுக்கு அந்தக் கம்பெனியில் அதிக வருட அனுபவங்கள் இருந்தன. இருப்பினும் தன்னுடைய மேலதிகாரி என்ற காரணத்தினால் ஏகேவிடம் "எல்லார்கிட்டயும் நான் சொல்லிடறேன் ஏகே! நான் இன்னைக்கு டிபன் கொண்டு வரலை", எனக் கூறிவிட்டு அடுத்த வேலையை பார்க்க நகர்ந்து விட்டான்.

நகர்ந்து செல்லும் பொழுது "இவனுக்கு இதே பொழப்பாப் போச்சு. ஒன்னு காசு கொடுத்து வாங்கனும். இல்லை வீட்ல வச்சு சமைச்சுக் கொண்டு வரணும். எப்ப பார்த்தாலும் யாருகிட்டயாவது ஓசி வாங்கி திங்கறான். என்னதான் ஜென்மமோ? வாங்குற சம்பளத்தை கரைச்சு குடிக்கிறானோ?", என தனக்குள் புலம்பிக்கொண்டே நடந்தவன் எதிரில் தென்பட்ட ஆபீஸ் பாய் யாசினை அழைத்து ஏகேவிற்கு தெரியாமல் அவன் கொண்டு வந்த மதிய உணவை எங்கேயாவது மறைத்து வைக்கும்படி கூறி விட்டுச் சென்றான்.

தனக்காக காத்திருந்த மேத்யூவை கண்டவுடன் ஏகே வேகவேகமாக உள்ளே நுழைந்து தன்னுடைய பேக்கை அங்கிருந்த ஒரு சேரில் வைத்துவிட்டு "வெய்ட் மேத்யூ! க்ரீன் டீ எடுத்துட்டு வர்றேன்", என அங்கிருந்த வெண்டிங் மெஷின் நோக்கி நடந்தான்.

தனக்கான கிரீன் டீயை எடுத்துக் கொண்டு வந்தவன் தனது பேக்கில் இருந்த ஒரு குரோசண்ட்டை(croissant) எடுத்து அதனுடன் சேர்த்து டீயை பருக ஆரம்பித்தான். அப்போது அங்கே வந்த ஐடி டிபார்ட்மெண்ட்டை சேர்ந்த சத்யனை கண்டவுடன் அவரிடமும் காலை வணக்கத்தை கூறியவன் "சத்யன்! கம்பெனி எனக்கு இன்னும் இந்த வருஷத்துக்கு புது மொபைல் தரலை. அது தர்றப்ப எனக்கு ஃபேஸ் டைம் ஆப்ஷன் இருக்கிறமாதிரி ஐபோன் வேணும்", என்ற தன்னுடைய கோரிக்கையையும் வைத்தான்.

அவனது கோரிக்கையை கேட்ட சத்யன் "இதைப்பத்தி சலாம்கிட்ட பேசுங்க ஏகே! சலாம்தான் அப்ரூவல் கொடுக்கணும். நீங்க சலாம்கிட்டயும்,ரஞ்சன்கிட்டயும் பேசிட்டா எனக்கு ப்ராசஸ் பண்றதுல எந்தவித சங்கடமும் இல்லை", எனக் கூறி நகர்ந்து விட்டார்.

"இந்த சத்யன் மகாராஷ்டிராவில் இருந்து வந்ததுனால எப்பப் பாரு தமிழர்களுக்கு சப்போர்ட் பண்றது கிடையாது", என அலுத்துக் கொண்ட ஏகேவை ஒரு பார்வை பார்த்த மேத்யூ "நானும் கோவாவில் இருந்துதான் வந்துருக்கேன். நான் தமிழ் ஆள் கிடையாது. அதனால் என்னையும இப்படிதான் சொல்லுவியா?", என சிரித்துக்கொண்டே வினவினான்.

" உன்னை அப்படி சொல்வேனா மேத்யூ! நான் இங்க வந்த நாலு வருஷமா நீயும், ரஞ்சன் சாரும்தானே எனக்கு பக்கபலமா இருக்கீங்க", என உடனடியாக மேத்யூவிடம் சரணடைந்தான். ஏகே பணிபுரியும் நிறுவனத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், பாகிஸ்தான், பங்களாதேஷ் மலேசியா,எகிப்து என பல நாடுகளைச் சேர்ந்தவரும் பணிபுரிந்தனர்.

பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள் சூழ்ந்திருக்கும் நிலையில் அவ்வப்பொழுது மற்றவரைப் பற்றி குறை ஏதேனும் கூற வேண்டுமெனில் தங்களுக்கு தெரிந்த தாய்மொழியிலேயே யாரேனும் அருகில் இருப்பின் அவர்களைப் பற்றி குறை கூறிக் கொள்வார்கள். அது அந்நிறுவனத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து கொண்டிருந்த மேத்யூவிற்கும் நன்றாக புரிந்திருந்தாலும் உறவாடி கெடு என்னும் பழமொழிக்கு ஏற்பவே செயல் பட்டுக் கொள்வான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ஏகேவின் மொபைல் அவனுக்கு தன்னுடைய இருப்பை தெரிவித்தது. அதனை அட்டென்ட் செய்தவன் எதிர்முனையில் அவனது டிபார்ட்மென்ட்டை சேர்ந்த இஷாக் பேசியவுடன் "சாப்பிட்டுகிட்டு இருக்கேன். சாப்பிட்டு முடிச்ச உடனே நேரா டிபார்ட்மென்ட் வர்றேன். வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்", என தனக்கு தெரிந்த அரைகுறை இந்தியில் பேசி வைத்தான்.

அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மேத்யூ "உனக்குதான் ஹிந்தி பேசுறதுக்கு சரியா வரலைதானே! எப்பவும் போல இங்கிலீஷில் பேச வேண்டியதுதானே! ஏன் இப்படி தட்டுத்தடுமாறி தப்பு தப்பா பேசுற?", தன் நண்பனை கடிந்து கொண்டான். மேத்யூ பேசியதைக் கேட்ட ஏகே வாய்விட்டுச் சிரித்ததுடன் இல்லாமல்

"நான் தப்பு தப்பா பேசினாலும் எனக்கு ஹிந்தி தெரியும் அப்படின்னு சொல்லிட்டு அவன் ஹிந்தில என்னை பத்தி யார்கிட்டயும் குறை சொல்ல மாட்டான். அதுக்காகதான் நான் இப்படி பேசுறது", என தன்னுடைய திறமையை தானே பெருமையாக பேசியதும் மேத்யூ எதுவும் கூறாமல் எழுந்து தன்னுடைய அலுவலகத்தை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டான்.

"இந்த குண்டன் எப்பப் பார்த்தாலும் பேசற வரைக்கும் பேசிட்டு அவனுக்கு பிடிக்கலைன்னா உடனே எந்திரிச்சு போயிடுவான். மோசமான பயலுக. நான்தான் பார்த்து ஜாக்கிரதையா இருக்கணும்", என தனது மனதுக்குள் எண்ணிக் கொண்டு அவனும் அவனுடைய அலுவலகத்தை நோக்கிச் சென்றான்.

கீழிருக்கும் தளத்தில் ரிசப்ஷன், அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃபிஸ், எக்ஸ்டெர்னல் அஃபெயர்ஸ் அலுவலகம் மற்றும் குவாலிட்டி டிபார்ட்மென்ட் இவை அனைத்தும் மருந்து தயாரிக்கும் ஒரு பெரிய யூனிட்டுடன் இருந்தன. முதலாம் தளத்தில் பைனான்ஸ் டிபார்ட்மெண்ட் மற்றும் ஐடி டிபார்ட்மென்ட் அமைந்திருக்க இரண்டாவது தளத்தில்தான் மேனேஜர், அசிஸ்டன்ட் மேனேஜர், பிளானிங் மேனேஜர், ஃபேக்டரி மேனேஜர் என மற்றவர்களின் அலுவலகங்கள் அமைந்திருந்தன.

எதிா்பட்டவர்களையெல்லாம் நிறுத்திவைத்து ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டே மேலே வந்த ஏகே தன்னுடைய அலுவலகம் இருக்கும் காரிடாரில் நுழைந்தவுடன் முதலில் கண்டது பிளானிங் மேனேஜர் சுபாவை தான்.

சுபா கேரள மாநிலத்தை சேர்ந்தவள். ஆனால் சிங்கப்பூர் விசாவிற்காக அந்நாட்டைச் சேர்ந்த ஒரு வயதானவரை திருமணம் செய்துகொண்டு இப்பொழுது சிங்கப்பூர் பிஆர் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அதுமட்டுமின்றி அவர்களின் கம்பெனியில் ஆரம்பத்தில் டெலிபோன் ஆபரேட்டராக வேலைக்கு சேர்ந்தவள், பல தகிடுதத்தங்கள் செய்து இன்று பிளானிங் மேனேஜராக அனைவரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கின்றாள்.

ஆகையால் அவள் கண்டும் காணாமல் போனாலும் ஏகே அவளிடம் சென்று கூழைக் கும்பிடு போடுவதை எப்பொழுதும் தவிர்த்ததில்லை. இன்று சுபாவை பார்த்தவுடன் "மேடம்! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. இன்னைக்கு மீட்டிங்ல எல்லாருமே உங்களை புகழ்ந்து தள்ளப் போறாங்க பாருங்க", என காலையிலேயே தன்னுடைய ஜால்ரா அடிக்கும் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்திருந்தான்.

"ஏகே! எனக்கு இப்படி மூஞ்சிக்கு நேரா புகழ்றது சுத்தமா பிடிக்காது. உங்க டிபார்ட்மெண்ட் இந்த சண்டே புரொடக்ஷன் வைக்கிறதுக்கு ஒத்துழைக்கலை. அதைப் பத்திதான் இன்னைக்கு மீட்டிங்.சீக்கிரமா புரொடக்ஷன் மேனேஜர் ரூமுக்கு வந்து சேருங்க", என கூறிவிட்டு சுபா சென்றவுடன் இந்த கொடுமையெல்லாம் காலையிலேயே பேச வேண்டியதா இருக்கே என நொந்துகொண்டே ஏகே அடுத்து யாரேனும் தென்படுகிறார்களா என பார்த்துக் கொண்டே அவனது அலுவலகத்தை நோக்கி நடந்தான்.

அப்பொழுது ஃபேக்டரி மேனேஜர் ரஞ்சன் பன்சால் தன்னுடைய அறையிலிருந்து மீட்டிங் செல்வதற்காக வெளியே வருவதைக் கண்ட உடன் "குட்டு மார்னிங் சார்! ஹவ் ஆர் யூ சார்?", என தன்னுடைய தலையை பல தடவை ஆட்டி கேட்டதுடன் பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வைக்கும் சல்யூட் போன்ற ஒரு சல்யூட்டும் சேர்த்துவைத்தான்.

அவனது நடவடிக்கைகளை பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்ட ரஞ்சன் "என்ன ஏகே! இன்னைக்கு மீட்டிங்ல சுபா வச்சி செய்யப் போறாங்க போல இருக்கு. நீ எதுவும் கவலைப்படாதே! நான் இருக்கிற வரைக்கும் உன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. நேத்து எம்டிகிட்ட பேசுறப்ப உன்னை பத்தி சொல்லிருக்கேன். எம்டியும்,ஹெச் ஆா் டைரக்டர் ஷபானும் அடுத்த வாரம் ஃபேக்டரி விசிட்டுக்கு வர்றாங்க.

அவங்க வர்றப்ப எம்டி கார் கதவு திறக்கிறதுல இருந்து எல்லா வேலையும் நீதான் பொறுப்பா பார்த்துக்கணும். ஒரு குறிக்கோளை அடைய எந்த எல்லைக்கும் போக தயங்கக்கூடாது. அதனால இந்த மாதிரி வேலையெல்லாம் கீழ்த்தரமான வேலை அப்படின்னு நினைக்காம சந்தோசமா சிரிச்சுகிட்டே செய். அப்பதான் சுபா மேடம் மாதிரி நீயும் மேல வர முடியும்", என புத்திமதியை தெளித்துவிட்டு ரஞ்சன் சென்றுவிட அப்பொழுது இருந்தே தான் எவ்வளவு பணிவாக நடக்க வேண்டும் என்பதை தனது மனதிற்குள் ஏகே கணக்கிட ஆரம்பித்துவிட்டான்.

தன் சிந்தனையுடனே தன்னுடைய அறைக்குள் நுழையப் போனவன் தனது அறைக்கு முன்னர் இருந்த அந்த பெரிய அறையினையும் அந்தப் பெரிய அறையின் கதவினில் எழுதி இருந்த வார்த்தைகளையும் பார்த்தவாறு நின்று விட்டான். அந்த அறையும், அந்த அறையின் கதவும் பலவித எண்ணங்களை அவனுக்குள் அலை அடிக்கச் செய்து கொண்டிருந்த பொழுது அதில் எழுதியிருந்த வார்த்தைகளில் அவனது கண்கள் மீண்டும் பதிந்தன.

"வாழ்க்கை எதிர்காலத்திலோ அல்லது கடந்த காலத்திலோ இல்லை,
வாழ்க்கை இந்த தருணத்தில் மட்டுமே உள்ளது,
அதாவது இந்த தருணத்தின் அனுபவம் வாழ்க்கை"

என்ற பகவத்கீதையின் வரிகள் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டு அந்தக் கதவில் ஒட்டப்பட்டிருந்தன.

அந்த வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டிருந்த இந்த தருணத்தின் அனுபவம் வாழ்க்கை என்ற வரிகளை படித்தவுடன் ஏகேவின் இதழ்கள் இகழ்ச்சியுடன் நீ முடிஞ்சு போன உதவாத சேப்டர் என முணுமுணுத்தன.

ஏகேவின் இதழ்கள் முணுமுணுத்த அந்த முடிந்துபோன சேப்டர் மீண்டும் உயிர்த்தெழுந்தால் ஏற்படும் விளைவுகளை ஏகே அறிந்திடுவானா?