Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சினிமா செய்திகள் | SudhaRaviNovels

சினிமா செய்திகள்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்?' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்
ரன்வீர் சிங்- தீபிகா படுகோனுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில், `திருமணத்துக்கு வருபவர்கள் பரிசு கொண்டு வரவேண்டாம்' என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர் இந்தக் காதல் ஜோடிகள்.



பாலிவுட்டின் முன்னணி ஜோடியான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் காதலித்து வரும் தகவல் சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருந்தது. இதுதொடர்பான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் அவர்கள் தரப்பிலிருந்து வெளிவரவில்லை. பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உட்பட பல படங்களில் இவர்கள் இணைந்து நடித்த இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.



இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் தங்களின் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறி கடந்த மாதம் தங்கள் திருமணப் பத்திரிகையை வெளியிட்டனர். காதலிப்பதைக்கூட உறுதிப்படுத்தாத இவர்கள் திடீரென திருமணப் பத்திரிகையை வெளியிட்டது அவர்களின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்த நிலையில், நாளை இத்தாலியில் திருமணமும் வரும் 28-ம் தேதி மும்பையில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கிடையே தங்கள் திருமணத்துக்கு வருபவர்களுக்கு ஓர் அன்பு கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது, ‘தங்கள் திருமணத்துக்கு வருபவர்கள் பரிசுப் பொருள்கள் எதுவும் கொண்டு வரவேண்டாம். அப்படி ஏதாவது கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தீபிகா நடத்திவரும் அறக்கட்டளைக்கு உதவித் தொகை வழங்குங்கள்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
'சீதக்காதி' கெட்டப்பில் ஃபேமிலி போட்டோ! - வைரலாகும் விஜய் சேதுபதி படம்
'சீதக்காதி' கெட்டப்புடன் விஜய் சேதுபதி தன் குடும்பத்துடன் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகிவரும் அந்தப் புகைப்படத்தைப் பலரும் ஆச்சர்யத்துடன் பகிர்ந்துவருகின்றனர். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம், 'சீதக்காதி'. இந்தப் படத்தில், விஜய் சேதுபதி நாடக நடிகராக நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக, விஜய் சேதுபதி வயதான தோற்றத்துடன் வித்தியாசமான மேக்கப் செய்திருக்கிறார். இந்த மேக்கப், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.



ஆஸ்கர் விருது வென்ற மேக்கப் மேன் கெவின் ஹேன்லி, விஜய் சேதுபதியின் இந்த மேக்கப்பை வடிவமைத்திருக்கிறார். இந்த மேக்கப்புடன் விஜய்சேதுபதி தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம், விஜய் சேதுபதியின் 15-ம் ஆண்டு திருமண நாளை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும், தியாகராஜன் குமாரராஜா எழுதிய பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இன்று மாலை படத்தின் இன்னொரு போஸ்டர் வெளியிடப்படும் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
எனக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது: ‘காற்றின் மொழி’ குறித்து வித்யா பாலன்
ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளார்.
இந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக் இது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்க, தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார்.
நாளை மறுநாள் (நவம்பர் 16) ‘காற்றின் மொழி’ ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், படத்தையும், அதில் பணிபுரிந்தவர்களையும் வாழ்த்தியுள்ளார் வித்யா பாலன்.
“எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது. இந்தியில் ‘துமாரி சுலு’ படத்தில் நான் பண்ண ரோல், தமிழில் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பண்ணியிருக்காங்க. ஜோதிகா, ராதாமோகன், தனஞ்ஜெயன் மற்றும் படத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆல் த பெஸ்ட்.
நான் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்களும் அதேபோல் காத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் வித்யா பாலன்.
1542287256383.png
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
தமிழக அரசை வம்புக்கு இழுக்கும் ‘எல்.கே.ஜி’ பொங்கல் வெளியீடு போஸ்டர்
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘எல்.கே.ஜி’. பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். தற்போது இப்படம் ‘பொங்கல் வெளியீடு’ என்பதுதான் அந்த அறிவிப்பு என படக்குழு புதிய போஸ்டரில் தெரிவித்திருக்கிறது.
சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்திதான் இக்கதையை உருவாக்கியிருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி. அரசியலில் எந்தவொரு முக்கியமான நிகழ்வுகள் நடந்தாலும், அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலோ அல்லது எதிர்ப்போ உடனடியாகத் தெரிவிப்பவர் ஆர்.ஜே. பாலாஜி.
‘எல்.கே.ஜி’ படத்தின் போஸ்டரிலும் அவருடைய கிண்டல் இருக்கிறது. ‘இலவச வேட்டி சேலையுடன் பொங்கலுக்கு வர்றோம்’ என்ற தலைப்புடன், ஆர்.ஜே. பாலாஜி அரசியல்வாதி கெட்டப்பில் வணங்குவது போன்று அமைந்திருக்கிறது.
மேலும், ஆர்.ஜே. பாலாஜியைச் சுற்றி இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், டிவி மற்றும் இலவச அரிசி ஆகியவை இருக்கிறது. அவை அனைத்திலுமே ஆர்.ஜே. பாலாஜியின் ஸ்டிக்கர் இடம்பெற்றிருக்கிறது.
‘சர்கார்’ படத்தில் இலவசப் பொருட்களைத் தீயில் போடும் காட்சிக்குத்தான் தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. தற்போது படத்தின் போஸ்டரிலேயே ‘எல்.கே.ஜி’ படக்குழு கிண்டல் செய்திருக்கிறது. இதனால், இப்படத்துக்கு கண்டிப்பாக எதிர்ப்பு வரும் எனத் தெரிகிறது.
ப்ரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி எடிட் செய்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
1542287404129.png
 
  • Like
Reactions: sudharavi

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
தீபிகா படுகோனே திருமணத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா: பாலிவுட்டைக் கலக்கும் நம்மூர் இனிப்பு
கோயம்புத்தூரைத் தலைமையகமாகக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவுக்கு அறிமுகம் தேவையில்லை. தற்போது பாலிவுட்டின் பிரபலமான நட்சத்திரங்கள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் சுவையை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரின் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் மிகப் பிரம்மாண்டமான முறையில் இத்தாலியிலுள்ள லேக் கோமா நகரில் நடைபெற்றது. முதல்நாள் கொங்கினி கலாச்சார முறைப்படியும் அடுத்த நாள் சிந்தி கலாச்சாரப்படியும் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.
பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தீபிகா படுகோன் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். சில வாரங்களுக்கு முன் தங்களது திருமணச் செய்தியை ரன்வீர் சிங்கும், தீபிகாவும் ட்விட்டரில் ஒரு சேர அறிவித்தபின்அவர்களது திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டன.
இந்நிலையில், சக திரையுலக நட்சத்திரங்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகளுக்கு புதுமணத் தம்பதிகளிடமிருந்து தனிப்பட்ட கடிதத்துடன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா இனிப்புப் பெட்டகமும் அனுப்பப்பட்டது. இந்தத் தகவலை பல பிரபலங்கள் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவின் சுவை பற்றியும் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.

மைசூர்பா இனிப்புப் பெட்டகமும், கடிதமும்

அவ்வாறு பதிவிடப்பட்ட ட்வீட்களில், “ரன்வீரும் தீபிகாவும் இந்த மைசூர்பாவுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்திருக்க வேண்டும். தீபிகா- ரன்வீரின் அன்பளிப்புக்கு நன்றி” என்றும் “அவர்களது திருமணப் புகைப்படங்களை விட, உடன் வந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாதான் இப்போதே வேண்டும்" என்றும் "மைசூர்பாவில் காணாமல் போன 'க்' பற்றிய எங்களது விளக்கம், அது மைசூர் பாக் என்று சொல்வதற்கு முன்னரே நாவில் கரைந்து மறைந்து விட்டது" என்றும் பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்கள்.
இதைப் பல நெட்டிசன்கள் பதிவிட்டும், பகிர்ந்தும் தமிழகத்தின் பெருமை இது எனக் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் எம். கிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "ஒரு முக்கியமான பிரபலத்திற்காக மைசூர்பா மொத்தமாகத் தேவை என எங்களது பெங்களூரூ கிளையினைத் தொடர்பு கொண்டு வாங்கினார்கள். அப்போது தீபிகா படுகோனே- ரன்வீர் தம்பதியின் திருமண கொண்டாட்டத்திற்குத்தான் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது.
திரை நட்சத்திரங்களும், முக்கியஸ்தர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புப் பெட்டகத்தையும் கடிதத்தையும் பகிர்ந்து வைரலான பிறகுதான் தெரிந்துகொண்டோம். அன்பைச் சொல்ல அழகான வழியைத் தேர்ந்தெடுத்த புதுமணத் தம்பதிகளுக்கு எங்கள் வாழ்த்துகள். எங்கள் மைசூர்பாவுடனான இனிய தருணங்களைப் பகிர்ந்து கொண்ட எங்கள் பிரியமுள்ள வாடிக்கையாளர்களுக்கு நன்றியும் அன்பும்" என்று தெரிவித்தார்.
1542381471976.png
 
  • Like
Reactions: sudharavi