Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சமரசம் | SudhaRaviNovels

சமரசம்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அவன் ஒரு மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்தான். அவன் கைகளை மின் கம்பத்தின் பின்னே இழுத்து கட்டப் பயன்படுத்திய கயிரு அவன் வேட்டியை. மேல் சட்டையையும் நீக்கப்பட்டிருந்தது. அவனின் உள்ளாடை ஒன்றுதான் அவனுக்கு இப்போது மானம் காக்கும் மகத்துவம்.

உடல் முழுக்க வியர்த்திருந்தது. முகமெல்லாம் சிறு சிறு குருதிக்காயங்களோடு வீங்கியிருந்தது. சில நேரம் விசும்பலும், சில நேரம் அழுகையுமாக அநாதையாய் அழுதுகொண்டிருந்தான். இளையவர், பெரியவர், பெண்கள் என பலர் அவனை சூழ்ந்திருந்தனர்.

அனைவராலும் அவனது அழுகை ரசிக்கப்பட்டது... "அண்ணே எங்க அம்ம சத்தியமா இனிமே வரமாண்டேம்ணே. ப்ளீஸ் அவுத்து வுடுங்கணே..." எனக் கெஞ்சினான். சிலர் சிரித்தனர். சிலர் சினம் கொண்டனர்.... இரவு சுமார் 12 மணியிருக்கும். நாய்கள் குரைக்கும் ஒலி தெருவில் கேட்டது.

மக்களின் குரல்களும் லேசாக செவியை எட்டியது... 'என்ன இந்த நேரத்துல...' என வீட்டிலிருந்து கோட்டைச் சுவர் வழியாக எட்டிப்பார்த்தேன். இளைஞர்கள் பலர் கூடியிருந்தனர். வீட்டிற்கு சற்று தள்ளியுள்ள ஒரு கோவிலில் கொடை விழா. இரவு 12 மணிக்குதான் அங்கு உச்சி பூசை. சாமியாடும், சுடலை சுடுகாடு செல்வார். "இந்த நேரத்துல இந்த பயலுவ இங்க ஏன் நிக்கானுவ?" என்கிற கேள்வி எனக்குள். வெளியே வந்தேன். பையன் ஒருவனுடன் விசாரித்தேன்.

"என்னல இந்த நேரத்துல இங்கன நிக்குறிய..." ஒரு வீட்டைச் சுட்டி, "அந்த வூட்டுக்குள்ள கள்ளன் புகுந்துட்டாம்ணே" என்றான். அது என் நண்பனின் வீடு. அவன் வெளிநாட்டில் உள்ளான். சிறிது சங்கடமாக இருந்தது. திருடன் தப்பித்துவிடக் கூடாது என்பதால், அரண்மனைக் காவலர்கள் போல வீட்டைச் சூழ்ந்து அரணமைத்திருந்தனர் இளைஞர்கள். என்னைப் போன்றே சலசலப்புக்கு விழித்த பொதுமக்களும் கூடிவிட்டனர்.

வீட்டின் கதவு தட்டப்பட்டது. என் நண்பனின் மனைவி திறப்பதாக இல்லை. நண்பனின் அம்மா வீடு அருகில்தான். "நண்பனின் குடும்பம் மொத்தமும் கோவிலில்தான் இருக்கிறார்கள்" எவரோ சொல்ல அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் சகல வயதினரும் அடங்க அக்குடும்பமே ஆஜரானது.

மீண்டும் கதவு ஓங்கித் தட்டப்பட்டது, "ஏட்ட கதவ தொற..." உள்ளிருந்து அவள் குரல், "எத்தே இங்க கள்ளன் யாரும் இல்ல..." "சரி அத நாங்க பாக்கோம். வெளிய நாங்க எல்லோரும் நிக்கோம் ஒனக்கு கதவ தொறக்க என்ன தயக்கம்? தொறட்டீ..." குரல் ஓங்கியதும் நடை திறந்தது. அது ஒரு திக் திக் நிமிடம். சடசடவென இளைஞர்கள் தேடலானார்கள். "அய்யோ இங்கன யாரும் இல்லயே..." என்கிற கவலை தோய்ந்த குரல்கள் கேட்டது.

"அததானல நானும் சொல்லியேன்" என்றாள் நண்பனின் மனைவி... வெளியே மக்களிடம் முணுமுணுப்பு சத்தம் அதிகமாயிட்டு... உண்மை நிலையறிய ஓர் அக்காவிடம் "எக்கோ என்னதான் நடக்குவு இங்க?" என லேசாக இழுத்தேன். "அவன் கோயில்ல வில்லுப்பாட்டு பாத்திட்டிருந்தவன் போன பேசிட்டே ஒதுங்கியிருக்கான். அஞ்சாறு பயலுவ அவனயே கவனிச்சுட்டு இருந்துருக்கானுவ... அவன் அங்க ஒரு கோயில்ல பூசாரி. அவன் கோயிலுக்கு வர்ற பொம்பளையுளுட்ட ஒரு மார்க்கமா பேசுவானாம். வெறும் வெளங்காத பய.. இவன எப்டியாவது தூக்கணும்னுதான் அஞ்சாறு பயலுவ ஐடியா பண்ணி அவனயே கவனிச்சுருக்கானுவ. அவன் மறவா போயி போன பேசிட்டே காட்டு பாதையில நடந்திருக்கான். இவனுவளும் அவன் பின்னாலயே ஒளிச்சு வந்துருக்கானுவ... நேரா இந்த வீட்டுக்குள்ள கேட்ட தொறந்து போயிருக்கான். போனதும் உள்ள கதவு தொறந்து அடபட்டிருக்கு. பயலுவ 'கள்ளன் கள்ளன்'னு சத்தம் போட்டுட்டான். தெரிஞ்ச பயலுவளுக்கு போன் பண்ணி கூப்ட்டு ரவுண்டப் பண்ணிட்டானுவ..." என மூச்சிவிடாமல் ஒரு அக்கா சொல்லி முடித்தார்.

அருகில் முறுக்கிக்கொண்டு நின்ற ஒரு மானிட குல திலகம் ஒருவனை பிடித்து, "ஏல எவா வூட்டுக்குள்ள எவன் போனா ஒங்களுக்கு என்ன? அவன் என்ன சொவறு ஏறி குதிச்சா போனான்? கதவு தொறந்து உள்ள வுட்டுருக்கா அவா. இதுல ஒங்களுக்கு ஏம்ல எரியுவு?" என்று கேட்டேன். என்னைப் பொறுத்த வரை நியாயமானதொரு கேள்வி இது. அவனும் ஒரு நியாயமான பதிலை சொன்னான், "என்னணே லூசு மாதிரி பேசுறிய...?" "என்னாது லூசா... சரி அதவிடு நீ கதய சொல்லு" என்றேன். "இப்டிதாம்ணே. இதுக்கு முன்னாடி ஒரு நாளு, இவா வூட்டுக்குள்ள இருந்து எவனோ சொவறு ஏறி குதிச்சி பக்கத்து வீட்டுக்குள்ள விழுந்து மறுபடியும் ஏறி குதிச்சி ஓடிட்டான்.

இவா கிட்ட "யாரோ உன் வூட்டுலருந்து சாடி ஓடியான்',னு சொன்னதுக்கு, "என் வூட்டுக்குள்ள எவனும் வரல, ஒங்க வீட்டுவள்ள வந்துருப்பானா இருக்கும். என் வூட்டுக்கு வரதுக்கு எவனுக்கு தைரியம் இருக்கு? எவனாவது வந்தா அவன் சக்கரய அறுத்துற மாட்டேன்?"னு சொல்லி அண்டய வூட்ல சண்டய இழுத்து வுட்டுட்டாண்ணே. அதான் இன்னைக்கு இவள கரிகட்டி பிடிச்சுருக்கு" என்றான். எனக்கு பரிதாபமாக இருந்தது. இவள் மீதை விட இவள் கணவனான என் நண்பனின் மீது. "சரி சரி உள்ளதான் ஆளு இல்லயே எல்லோரும் எடத்த காலி பண்ணுங்கடே..." என சற்று பெருஞ்சத்தமெடுத்தேன். அதே நேரம் உள்ளிருந்து ஒரு குரல், "கள்ளன் பெட்ரூம் ஸ்லாப்ல படுத்துகெடக்கான்..." என்கிற ஒரு சிறுவனின் சத்தம்.

வெளியே நின்றிருந்த கற்புக்கரசர்கள் சடசடவென உள்ளே விழுந்தடித்து ஓடினார்கள். அவனை மேலிருந்து கீழே அப்படியே இழுத்து விழச் செய்து அடித்து வெளியே வராண்டாவிற்கு இழுத்து வந்தனர். இரண்டே அடிதான் அவன் சொல்லிவிட்டான், கையெடுத்து கும்பிட்டவாறே, அழுதவாறே, "அவா கூப்ட்டுதாம்ணே வந்தேன்..." அந்நேரம் அவள் முகத்தை பார்த்தேன், இது எங்கேயோ யாருக்கோ நடப்பதை போன்றதொரு முக பாவனையில் நின்றிருந்தாள். சற்று தடுமாறித்தான் போனேன்.

இவனை வெளியே இழுத்து போட்டு சுமார் பத்து பேர் இருக்கும் ஓங்கி ஓங்கி அடித்தார்கள். இடம், பொருள் பேதமில்லாமல் அடி. அவனிடமிருந்து அழுகை வேகமாக கேட்டது. "அய்யோ... அய்யோ..." என்கிற சத்தம். என்னை முற்றாக உடைப்பது போல் இருந்தது... உள்ளே பாய்ந்தேன், "லேய் செறிக்கி மக்கா செத்துகெடப்பாம்ல வுடுங்கல, வுடுங்கல..." என பிரித்து அவனை வெளியே உறுவினேன். வெளியே கொண்டு வந்த என் கையிலிருந்து வேறு சில கைகள் அவனை பிடிங்கிக்கொண்டர். அவன் சட்டை கிழித்து எறியப்பட்டுவிட்டது. அவன் கைபேசி எவர் கைகளிலோ அகப்பட்டிருந்தது. அவனுக்காக பேச அங்கு யாருமே இல்லை.

"ஏ போலீஸ்ல பிடிச்சு குடுங்கப்பா" என்கிற ஒரு குரல், "இல்லணே இவன இங்கயே கொன்னுருவோம்ணே" என ஒரு குரல், "இவன வுடப்புடாதுல அந்த போஸ்ட்ல கட்டி வைங்கல" என ஒரு குரல்... இறுதியில் அவன் மின் கம்பத்தில் கட்டிவிடப் பட்டான்.

காவல்துறைக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரம் கம்பமே கதியென்றிருந்தான். ஒரு மிடரு தேனீருக்கு ஒரு கடி வடை போல அவ்வப்போது அடி, உதை... அந்தோ பரிதாபம்தான். என்னை பார்த்து கரம் குவித்து, "மக்ளே ப்ளீஸ் வுட சொல்லுல..." நான் எதுவும் சொல்லும் நிலையில் இல்லை. சொன்னால் அத்தனை பேர் சந்தேகக்கண்களும் என் மீதும் படியும். இது ஒரு பெருந்தவறாகவே இருக்கட்டும். ஆனால் இருவரில் ஒருவர் மட்டுமே தண்டிக்கப்படுவதுதான் இங்கே விந்தை. எதுவும் தெரியாதது போல, எவர் வீட்டிலோ நடப்பதை போல அவள் நின்றுகொண்டிருப்பது கோபமாக வந்தது எனக்கு... 'என் நண்பன் இதை எப்படி எதிர்கொள்வான்?,

வளைகுடாவில் அவன் வதைபடும் வேளையில் இவள் இப்படி இருக்கிறாளே?, நாளை என்ன நடந்தது என்று கேட்பானே, என்ன பதிலை சொல்வது?" பல கேள்விகள் எனக்குள். முழுமையான சங்கடத்தில் உடைந்திருந்தேன். கம்பத்தில் கட்டப்பட்டிருந்தவனை பார்த்தேன்... விசும்பிக்கொண்டே இருந்தான்... சிறிது நேரத்தில் அவன் தம்பி வந்து சேர்ந்தான். அவன் ஒரு தத்தி. "எவம்லே கட்டி வச்சது என்கிற கேள்வியைதான் நல்ல ஆண் மகன் கேட்க வேண்டும். ஆனால் அவன், "ஏல இங்க யாம்ல நீ வந்தா?" என அழுதான்.

"நம்ம குடும்பத்துல யாருக்குமே இந்த பழக்கம் கெடயாதேல. நீ மட்டும் யாம்ல..." என தலையில் அடித்த வாறே அழுதான். அவன் தலையிலேயே நாலு போட வேண்டும் போல இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் அவன் மனைவி வந்தாள். அங்கிருந்தே ஆவசேமாக, வேகமாக நடந்தாள். அவள் நடை ஒரு துர்கையின் தீயைப் போன்றிருந்தது. தன் கணவனை சாத்தப் போகிறாள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இவனை பார்த்ததும், அவள் அப்படியே நொறுங்கிப் போனாள். "என்னங்க... ஒங்களுக்கா இந்த நெலம... மின் கம்பத்தோடு சேர்த்து அவனை அணைத்தாள். குழந்தை கையிலிருக்கும் பனிக்கூழைப் போல என் மனம் உருகிவிட்டிருந்தது.

உண்மையான அன்பின் அவள் அழுகை என் கண்ணிலும் நீரைச் சுரந்தது. அவன் "தெரியாம வந்துட்டேம்ட்ட..." என குலுங்கி குலுங்கி அழுதான். அவன் முகத்தை தொட்டு பார்த்தாள். அத்தனையும் காயம். உடல் முழுக்க வீக்கம். அவள் நிலைகுலைந்து போனாள். அறைக்குள்ளே அகப்பட்ட பூனையைப் போல திடீரென ஓர் அறச்சீற்றம் அவளிடம், "எந்த நாயில இவியள கட்டி வச்சது? அவுத்து வுடுங்கல நாசமா போறவனுவளா..." என சீறினாள்.

"இந்தாம்மா... உன் வூட்டுக்குள்ள நான் வந்தா நீ வுடுவியா?" என்றார் ஒருவர். மிக முக்கியமான கேள்வி இது. ஆனால் அதற்கு அவள் பதில் மிக எளிமையாய் வந்தது, "ஆமா நான் வர சொல்லி வந்தா எவன் என்ன செய்ய முடியும்? அவா கூப்டாமலா எங்க வூட்டுக்காரவிய வந்தாவ? பெட்ரூம் ஸ்லாபுக்கு அவா சம்மதம் இல்லாம எப்டி போவ முடியும்ங்குறேன்?" என்றாள் தேர்ந்த வழக்கறிஞரைப் போல... எவரோ அவளிடம் விவரமாக சொல்லி அழைத்திருக்கிறார் என்பது புரிந்தது. அவனும் தலையசைத்தான் "அவா கூப்ட்டுதான் வந்தேன்..." என்று கூறியவாறே... ஆதாரப் பூர்வமாக மேலும் தொடர்ந்தாள், "அவிய செல்போன எங்க? அத கொண்டாங்கல. அதுல அவிய யார்ட்ட பேசிருக்காவனு தெரிஞ்சுரும்" என்றாள்.

எவருமே வாய் திறக்கவில்லை... இப்படியாக பேசிக்கொண்டிருக்க காவல்துறை அதிகாரி ஒருவர் வந்து சேர்ந்தார். கூட்டம் லேசாக நழுவியது. "இவன அவுத்து வுடுங்க" என்றார். அவிழ்க்கப்பட்டான். மின் கம்பம் பெருமூச்சு விட்டிருக்கும். அவனை அழைத்துக்கொண்டு அவள் மனைவி கிளம்பினாள். அவள் பத்ரகாளியாய், அவன் தத்தி தத்தி நடந்தான். "சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்னனு தெரியுமா?" என்று காவல்துறை அதிகாரி குபீரென சிரித்தார். "சரி சரி காலையில ஸ்டேஷனுக்கு வாங்க மிச்சத்த பேசிக்கிடுவோம்..." என்று காவல்துறை தன் கடமையைச் செய்து திரும்பியது. கூடிக்கூடி கிசுகிசுத்த கூட்டம் கலைந்தது. சுமார் 2 மணியிருக்கும் இது நிறைவடைந்த போது. சுபம். மறுநாள் காலை எட்டு மணிக்கு விழித்தேன். கைப்பேசியை திறந்தேன். பகிரியில் என் நண்பன் பல முறை அழைத்திருந்தான்.

"எப்போது பார்த்தாலும் உடனே அழைக்கவும்" என குறுந்தகவல் அனுப்பியிருந்தான். அவனை எப்படி எதிர்கொள்வது? எதை சொல்வது? உண்மையைச் சொன்னால் அவன் தாங்குவானா? வேறேதும் விபரீத முடிவெடுத்துவிட்டால் என்ன செய்வது?" அவன் மனைவியை விட அதிகமாகவே திணறினேன் நான். நான் திரும்ப அழைக்கவில்லை. மெய்யாகவே அஞ்சினேன். மதியம் வரை அவன் பல முறை அழைத்திருந்தான். ஏற்கவேயில்லை. மதியம் சரியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். கைப்பேசி அலறியது. என் மகன் எடுத்து என்னிடம் தந்தான், அவன் அழைப்பை ஏற்றுத் தந்தான். சரியாக சிக்கிவிட்டேன், எப்படியோ சமாளித்து ஒருவழியாக "மக்கா சொல்லுல" என்றேன். எதிர்பாராதது நடந்தது.

 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
என்னை பேசவே விடாமல் அவனே பேசினான், "மக்கா நேத்து ராத்திரி பாத்ரூம்ல ஏதோ சத்தம் கேட்டிருக்கு... இவா பின் கதவ தெறந்து என்ன சத்தம்னு பாத்திருக்கா. சுத்தி சுத்தி தேடும் போது அந்த செறுக்கி மொவன் எப்டியோ உள்ள போயிருக்கான். இந்த மூதிக்கு அது தெரியாம கதவ பூட்டியிருக்கா. இவ்ளோதான் நடந்துருக்கு..." என்றான் ஒரே மூச்சாக...

பெருமூச்சிரைந்து, "ம்ம்ம்..." என்றேன். மேலும் தொடர்ந்தான், "வெளிநாட்டுக்காரன் பொண்டாட்டியளுக்கு ஈசியா பட்டம் சுமத்திடுறானுவ மக்கா. சவம் அந்த புள்ள பாவம் மக்கா" என்றான். "ஆமா மக்கா" என்று தலையசைத்தேன். புண்ணுக்குத் தடவிய களிம்பைப் போல ஆறுதலாக இருந்தது. பக்கத்து வீட்டு பாட்டி என் காதுபட பேசிக்கொண்டிருந்தார்,

"அடிபட்டவன பாக்கணும்னு அவன் வூட்டுக்கு போனேன், அந்த புள்ள பாவம்தான், "என்னத்தே செய்ய, நானும் எதாவது சொல்லி செத்துகித்து போயிட்டாவன்னா இந்த புள்ளயள யாரு பாப்பா? நான்தான் நீங்க ஏன் கவலபடுறிய? நீங்க ஆம்பள ஒங்களுக்கு ஒன்னுமே இல்ல, பேசாம பொழப்ப பாருங்கனு தேத்தினேன்"னு சொல்லுவு" என்றார். வாழ்வின் பேருன்னதம் யாதெனில் சிறு சிறு சமரசங்கள்தான் என்று இதை புரிந்துகொண்டேன்... அழகான காட்சிக்குப் பின்னே அற்புதமாக இசைக்கப்படும் புல்லாங்குழல் சத்தம் என் செவிகளை நிறைத்துக்கொண்டிருந்தது..
 
Need a gift idea? How about a dinosaur night light?
Buy it!